அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 டிசம்பர் 2019

நேரத்தை அறுவடை செய்தல்!

நேரத்தை அறுவடை செய்தல் (Harvesting time) என்ற வார்த்தை பயன்பாட்டை கேட்டிருக்கிறீர்களா?

சமீபத்தில் இணையதளம் ஒன்றில் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் இந்த சொல் பயன்பாட்டை படித்தேன். 

இதற்கு நேரத்தை மிச்சப்படுத்துதல் என்று சுருக்கமாக கூறிவிடலாம்.

ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றது என்பதை மும்பையில் சில ஆண்டுகள் வசித்தால் போதும், தெளிவாக தெரிந்துவிடும். 

நான் மும்பையில் இரு தவணைகளாக சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன். 

முதல் தவணையில் நான் பணியாற்றிய செம்பூர் கிளைக்கு அருகிலேயே குடியிருந்ததால் அலுவலகத்திற்கென்று போக-வர செலவிடும் நேரம் அதிகம் போனால் அரை மணி நேரம்தான். பெரும்பாலான நாட்களில் உடன் வசித்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து சென்றுவிடுவேன். 

ஆனால் இரண்டாவது தவணையில் நான் பணியாற்றிய இடம் காலா கோடா என்ற பகுதி மும்பையின் ஒரு கோடியிலும் நான் வசித்த இடமான வாஷி மறு கோடியிலும் இருந்ததால் போக-வரவே தினமும் சுமார் மூன்று மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும். அப்போது வாஷியிலிருந்து மும்பை வி.டி. ரயில் நிலையத்திற்கு விரைவு மின்வண்டியும் கிடையாது. 

வாஷி ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் வெவ்வேறு மார்க்கங்களில் மின்வண்டிகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கும். நான் செல்லவிருந்த மார்க்கத்தில் சுமார் ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வண்டிதான். அதாவது அதிகாலை 4..01 முதல் வண்டி என்று துவங்கி ஒவ்வொரு ஒன்பது மணித்துளிகளுக்கு ஒரு வண்டி என்று அடுத்த நாள் விடியற்காலை 1.00 மணி வரை தொடர்ந்து இரு மார்க்கங்களிலும் வண்டிகள் வரும், செல்லும். இடையில் சிக்னல் கோளாறு, எதிரில் வரும் வண்டிகளுக்கு இடம் விட்டு காத்திருத்தல் போன்றவைகளால் கால தாமதம் ஏற்படும் சமயங்களில் - இது பெரும்பாலும் எல்லா நாட்களிலும் நடக்கும் - அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் எதுவும் நடக்காது... ஒரு மணித் துளி காலதாமதமாக நாம் நிலையத்தினுள் நுழைந்தாலும் மின்வண்டியை தவறவிட்டுவிட்டு அடுத்த வண்டிக்காக காத்திருக்க வேண்டியதுதான்.

பெரும்பாலும் ஒரு வண்டி காலதாமதமானால் அடுத்த வண்டியில் பயணிப்பதற்கென வந்து சேரும் பயணிகளும் சேர்ந்துக்கொள்ள இரண்டு வண்டிகளுக்கான கூட்டம் நிலையத்தை அடைத்துக்கொண்டு காத்திருக்கும். நம்மால் அந்த பயணிகளுடன் போட்டி போட்டிக்கொண்டு வண்டியில் ஏற முடியவே முடியாது. அதை விட்டு விட்டு அடுத்த வண்டிக்கு காத்திருக்க வேண்டியதுதான். அப்போதுதான் ஒவ்வொரு மணித் துளியின் அருமையும் நமக்கு புரியும்.

சென்னையிலும் இதே அளவு என்றில்லாவிட்டாலும் புற நகர் வண்டிகளை பிடிப்பவர்கள் ஓடும் ஒட்டத்தை பார்த்தாலே தெரியும், நேரத்தின் அருமை!

இதைத்தான் கட்டுரையாளர் harvesting time என்று கூறியிருந்தார். நேரத்தை அறுவடை செய்தல்.

நேரத்தை மிச்சப்படுத்துதல் ஒரு கலை. அது அனைவருக்கும் கைவரும் என்று கூற முடியாது.

சிலர் எல்லாவற்றிலும் பரபரப்பாக இருப்பர். வேறு சிலர் எதிலும் நிதானமாக இருப்பர். 

ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருமே பரபரப்புள்ளவர்களாக இருந்தாலும் பிரச்சினைதான். அல்லது ஒருவர் பரபரப்பானவராகவும் ஒருவர் நிதானமானவராக இருந்தாலும் பிரச்சினைதான். இருவருமே நிதானமானவர்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.

பெரும்பாலான வீடுகளில் அலுவலகம் புறப்பட்டுச் செல்லும் சமயங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுவதே இந்த நேரப் பிரச்சினையால்தான். 

நேரத்தை மிச்சப்படுத்த பல எளிய வழிகள் உள்ளன. 

அவற்றில் சில:

1. மென்பொருள் தயாரிப்பவர்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பாக ஒரு Flow Chart தயாரித்துக்கொள்வார்கள். அதை நாமும் தினசரி அலுவல்களில் தயாரித்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததிலிருந்து எந்தெந்த அலுவல்களை அன்று செய்ய வேண்டும் என்பதை முந்தைய தின இரவே தயாரித்துக்கொள்ளலாம். 

2. எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது. நம்முடைய பெரும்பாலான நேரம் விரையமாவதே நமக்கு தேவையான பொருட்களை தேடுவதில்தான் என்றால் மிகையல்ல. 

3.வீட்டில் எந்த பொருள் அது பற்பசையானாலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களானாலும் அது இன்னும் இரண்டொரு நாட்களில் தீர்ந்துவிடப்போகிறது என்று தெரிய வரும்போதே அதை ஒரு புத்தகத்தில் (டைரி என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று கடைக்குச் செல்ல வேண்டுமோ அந்த தேதியிலேயே) குறித்துக் கொள்ளலாம். 

4. மார்க்கெட்டுக்கு செல்லும்போதும் மார்க்கெட்டின் அமைப்பை மனதில் வைத்துக்கொண்டு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும். கடை வாயிலிருந்து துவங்காமல் கடைக் கோடியிலிருந்து துவங்கி வாசல் வரை பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை மனதில் வைத்துக்கொண்டு பட்டியலை தயாரித்தால் நேரமும் மிச்சம் எதுவும் மறந்தும் போகாது. இப்போது பெரு நகரங்களில் மால்கள் தான் பிரசித்தம் என்பதால் அதன் வரைப்படத்தையும் மனதில் வைத்து பட்டியலை தயாரித்துக்கொள்ளலாம்.

5. சமையலில் தினமும் என்ன குழம்பு அல்லது கறிகாய் வைப்பது என்ற குழப்பத்திலேயே இல்லத்தரசிகள் நேரத்தை வீணடிப்பார்கள். என் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து அதற்கும் ஒரு அட்டவணை வைத்திருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாகவே அதாவது 2010லிருந்து வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவது என் வேலைதான். ஆகவே எந்த நாள் எந்த சமையல் என்பதையும் நானே தீர்மானித்துவிடுவேன். ஏழு நாட்களுக்கு ஏழு குழம்பு அதற்கு தேவையான கறிகாய் எல்லாம் அந்த அட்டவணைப்படிதான். அதிலேயே தினமும் பல மணித்துளிகள் மிச்சமாவதை உணர முடிகிறது. 

7. வெளியில் எங்காவது புறப்பட வேண்டுமென்றால் நான் மனதில் வைத்திருக்கும் நேரத்திலிருந்து குறைந்தது அரை மணி நேரம் முன்பாகவே புறப்பட வேண்டும் என்று வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிடுவேன். புறப்படும் நேரத்தில் ஏற்படும் டென்ஷனை இது பல மடங்கு குறைத்துவிடுவதுண்டு. 

8.எல்லாவற்றிற்கும் நேரம் என்று ஒன்று உண்டு என்பார்கள் நம் முன்னோர்கள். எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்து முடித்துவிட்டால் நேரத்திற்கு நேரமும் மிச்சம் தேவையில்லாத படபடப்பும் தேவைப் படாது என்பார்கள். அதை வேத வாக்காக எடுத்துக்கொள்வதும் நேரத்தை மிச்சப்படுத்தும். 

9. முடியாது என்ற வார்த்தையை தயங்காமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும்.  எல்லாவற்றிற்கும் சரி சரி என்று சொல்ல ஆரம்பித்தால் எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியாது.

10. நம்முடைய செல்பேசியிலுள்ள ‘நாட்க்காட்டி (Calendar) செயலி’யை பயன்படுத்தி ஒரு மாதம் முழுவதும் எந்தெந்த தேதியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் குறித்துக்கொண்டு அலாரமும் வைத்துவிட்டால் நேரம் வெகுவாக மிச்சப்படும், மறந்தும் போகாது. குறிப்பாக மின்கட்டணம், கடன் அட்டை பணம் செலுத்துதல் என்பன போன்ற முக்கியமான விவரங்களை அந்தந்த நாட்களில் குறித்து வைத்துக்கொண்டாலும்  தாமதக்கட்டணம் செலுத்துவதையும் தவிர்க்க முடியும். 

இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம். 

ஒரு பதிவை எழுத துவங்கும்போதே இதைத்தான் எழுத வேண்டும் என்று நாம் மனதில் குறித்துக்கொள்வதில்லையா? அதே போன்று அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரம் மிச்சம்தான்.

ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் போறமாட்டேங்குது என்பவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு திட்டமிடாமல் செயல்படுபவர்களே என்பது என் கருத்து. என் அனுபவமும் அதுதான். 

**********

13 டிசம்பர் 2019

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.....

வாழ்க்கை  என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் 

இதுதான் வாழ்க்கை. இதை ஏற்ருக்கொண்டால் நிம்மதி பிறக்கும். என்கின்றன இந்த திரைப்படப் பாடல் வரிகள்.

ஆனால் இது  தோல்வியை, இழப்பை ஏற்றுக்கொள் அதற்காக வருந்தாதே என்று நம்மை நாமே திருப்திப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலல்லவா உள்ளது?

அதையே இப்படி பாடிப் பார்த்தால்..

உனக்கும் மேலே உள்ளவர் கோடி 
உழைத்து உழைத்து  முன்னே செல்லு

என்றும் 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

ஆம்!

சாதிக்க வேண்டும் என்று நினைத்து முன்னே செல்வதுதான் இன்றைய தேவை.

நம்மால் முடிந்தால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை என்னுடைய மேலாளர் வாழ்க்கையில்  ஒன்றும் இல்லாமையிலிருந்து தங்களுடைய அசுர உழைப்பால் மிக உன்னத நிலையை அடைந்த பல வாடிக்கையாளர்களை கண்டிருக்கிறேன். 

நான் முதல் முதலாக சென்னை கிளை ஒன்றில் மேலாளராக அமர்த்தப்பட்ட சமயம்.

சென்னை அமைந்தகரையில் 20க்கு 20 அடி பரப்பளவு மட்டுமே  இருந்த ஒரு சிறைய கடையில் ஐந்தாறு இரும்பு கட்டில்கள், மேசை மற்றும் கூரை மின் விசிறிகள், மடக்கும் இரும்பு நாற்காலிகள் என சுமார் பத்து பதினைந்து பொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக்கொண்டு தவணை முறையில் அவற்றை விற்பனை செய்து வந்த ஒருவரை என்னுடைய கிளை அருகில் அதே மாதிரியான ஆனால் சற்றே பெரிய அளவில் வணிகம் செய்துக்கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர் அறிமுகப்படுத்தினார். எங்களுடைய வங்கியில் அ[போது வணிக கணக்கு (current account) துவங்க குறைந்தபட்சமாக ரூ. 500/- செலுத்தப்படுவதுடன் அதை இருப்பிலும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தொகை கூட அவரிடம் இருக்கவில்லை. ஆகவே முதலில் நீங்கள் உங்களுடைய பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குங்கள்.... வணிகம் சற்று பெருகியதும் வணிகக் கணக்கு துவங்கலாம் என்று அறிவுரை கூறி ரூ.100 மட்டும் செலுத்தி கணக்கு துவக்க வைத்தேன்.

அத்துடன் நில்லாமல் அடுத்த சில மாதங்களில் அப்போது பிரபலமாக இருந்த சிறு வணிகக் கடன் திட்டத்தில் (Small Loan Scheme) ரூ.10000/- ஓவர்டிராஃப்ட்டும் வழங்கினேன். அதற்கு ஈடாக அடகு வைக்கக் கூட அவரிடம் ஒன்றும் இருக்கவில்லை. அவரை அறிமுகப்படுத்தியவருக்கு அவருக்கு ஜாமீன் வழங்கவும் அவ்வளவாக விருப்பமில்லை. ஆனாலும் வேறொரு வாடிக்கையாளருடைய தனிநபர் ஜாமீன் இல்லாமல் கடன் கொடுக்கவும் வழியில்லை. ஆகவே அவரை நானே சமாதானப்படுத்தி ஜாமீன் வழங்க வைத்து கடனை வழங்கினேன்.

அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய தன்னம்பிக்கையும் அயரா உழைப்பும் நான் அங்கிருந்த மாற்றலாகிப்போகும் சமயத்தில் அதாவது சுமார் இரண்டு ஆண்டு காலத்தில் அவருடைய ஒவர்டிர்ஃப்ட் லிமிட் ஒரு லட்சமாகவும் அவருடைய வருட வணிகம் சுமார் பத்து லட்சமாகவும் வளர்ந்திருந்தது. 

நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது  அந்த கிளையின் மிகப் பெரிய வாடிக்கையாளராக உயர்ந்துள்ளார் என்று கேள்விப்பட்டபோது வியந்துபோனேன். இப்போதும் அதே பகுதியில்தான் அவருடைய கடை உள்ளது சுமார் நாற்பதாயிரம் சதுர அடி பரப்பில்.... அதே சாலையில் அவருடைய இரு இளைய சகோதரர்களும் அதே மாதிரியான கடைகளை நடத்தி வருகின்றனர்.

ஆயினும் அதே எளிமையுடன் அவர் இருப்பதை பார்க்கும்போது எவ்வித பின்புலனும் இல்லாமல் தனி ஒருவர் நினைத்தால் தன்னுடைய அயரா உழைப்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை  உணர்ந்தேன்.

அதே போல் தூத்துக்குடியில் நான் மேலாளராக பொறுப்பேற்றபோது  மீன் ஏற்றுமதியாளர்களுக்கு ஐஸ் கட்டிகளை சிறிய அளவில் விற்பனை செய்துக்கொண்டிருந்த ஒருவரை சந்திக்க நேரந்தது. தூத்துக்குடியில் பிரதான தொழில் மீன்பிடி தொழில். அங்கு கிடைக்கும் சிங்க இறால்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை டண் கணக்கில் கொள்முதல் செய்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்றே கேரள மாநிலத்தைச் சார்ந்த பலர் அங்கு தொழிற்சாலைகளை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஐஸ் கட்டிகளை வழங்குவதற்கென்றே பல சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன. வருடத்தில் எட்டு மாதங்கள் சீசன் படு ஜோராக நடக்கும். 

என்னுடைய வாடிக்கையாளர் மிகவும் நலிந்த குடும்பத்திலிருந்து வந்தவர். வேறொரு நிறுவனத்தில் தினக்கூலிக்கு ஐஸ் வெட்டும் பணியில் இருந்தவர். அவருக்கும் இதே போன்று ஒரு தொழிலை சொந்தமாக துவங்கி தொழில் செய்ய வேண்டும் என்ற ஆவல். நான் செல்லும் தேவாலயத்துக்குத்தான் அவரும் வருவார். அப்போது தூத்துக்குடியில் சிறப்பாக செயல்பட்டு வந்த பல்நோக்கு சேவை மையத்திலிருந்த மேலாளர் இவரை பரிந்துரைத்ததால் அரசு செயல்படுத்தி வந்த திட்டத்தின் கீழ் ரூ.பத்தாயிரம் கடனாக கொடுத்தேன். அந்த திட்டத்தில் அரசு சார்பில் இருபத்தைந்து விழுக்காடு மானியமாக வழங்கப்பட்டது. 

நான் கடன் வழங்கியது 1985ம் வருடம். இன்று தூத்துக்குடியிலேயே பெரிய ஐஸ் கட்டி தொழிற்சாலை அவருடையதுதான். தனி ஆளாக தன்னுடைய உழைப்பால் மட்டுமே உயர்ந்த மனிதர் அவர்!

இதுபோல் சென்னை ராயப்பேட்டையில், புரசை வாக்கத்தில் மும்பை செம்பூரில் என என்னுடைய பல கிளைகளில் மிக நலிந்த பின்னணியிலிருந்து வந்த பல வாடிக்கையாளர்கள் சுமார் இருபது ஆண்டு கால இடைவெளியில் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பதை பார்த்தபோது..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

என்கிற வரிகள் எத்தனை உண்மையானது என்பது புலப்பட்டது...

உழைப்பு, உழைப்பு, உழைப்பு இது மட்டுமே போதும்.... சரியான நேரத்தில் தேவைப்படும் மூலதனமும் கிடைத்துவிட்டால் வணிகத்தில் எட்டிவிட முடியாததே இல்லை எனலாம். 

***********



12 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் பின்னணி என்ன?

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களால் அறிவிக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே மிகவும் நலிவடைந்த வங்கிகளாகும். 

நிரவ் மோடியுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு வங்கி ஊழியர்கள் செய்துக்கொண்டிருந்த மோசடியை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளை இணைத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவாகப்போகிறது என்கிறார்கள்.  இந்த மூன்று வங்கிகளுடைய ஒட்டுமொத்த வைப்பு நிதி மற்றும் அவை வழங்கியுள்ள கடன் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்திய ஸ்டேட் வங்கிக்கு அடுத்த வங்கியாக உருவெடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவற்றின் ஒட்டுமொத்த வாராக்கடன்களின் அளவும் நாட்டிலேயே அதிகமானதாகத்தான் இருக்கும்.  இவை மூன்றுமே வட இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள வங்கிகளாகும். இவற்றை இணைப்பதன் மூலம் ஒரே நகரத்தில் ஏன் ஒரே சாலையில் கூட பல கிளைகளைக் கொண்டுள்ள வங்கியாகவும் மாறும் சூழல். 

அடுத்து தென் இந்தியாவைச் சார்ந்த அதுவும் ஒரே மாநிலத்தில் தலைமையலுவலகத்தைக் கொண்டிருக்கும் கனரா மற்றும் சின்டிகேட் வங்கிகள். மேலே குறிப்பிட்ட வட இந்திய வங்கிகள் அளவுக்கு மோசமான நிலைமையில் இவ்வங்கிகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரே மாநிலத்தைச் சார்ந்தவை என்பதால் பல கிளைகளை மூடவோ இடமாற்றம் செய்யவோ வேண்டியிருக்கும். 

மூன்றாவது வங்கி யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்ய தேவையிருக்காது. ஆனால் இதுவரை சுமாராக இயங்கி  வரும் யூனியன் வங்கியின் நிதிநிலமை மற்ற இரு வங்கிகளின் வாராக் கடன் மற்றும் அவற்றின் மோசமான நிதிநிலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இணைப்புக்குப் பிறகு யூனியன் வங்கி அதிகாரிகளின் கையே ஓங்கி நிற்கும். ஏனெனில் இதனுடன் ஒப்பிடுகையில் அனைத்து வகையிலும் மற்ற இரு வங்கிகளும் சிறியவை.

நான்காவது இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. ஒன்று மேற்கு வங்கத்தைச் சார்ந்தது. இன்னொன்று தமிழகத்தைச் சார்ந்தது.   ஆனால் அலகாபாத் வங்கியின் மிக அதிக அளவிலான வாராக்கடன்கள் இந்தியன் வங்கி ஈட்டக்கூடிய மொத்த லாபத்தையும் விழுங்கிவிடும் போலுள்ளது. 

இந்த பத்து வங்கிகளை இணைத்து வர்த்தக அளவில் நான்கு பெரிய வங்கிகளாக உருவாக்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் நடவடிக்கைகளில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் இந்திய வங்கித்துறையின் செயல்பாடுகளில் குறைகளாக உலக வங்கி குறிப்பிட்டுள்ள அனைத்தும்  இணைப்புக்குப் பிறகும் தொடரத்தானே போகிறது.

1. வங்கி செயல்பாடுகளில் ஆட்சியாளர்களின் தலையீடு.  இது என்றும் தொடரும் தொடர்கதையாகத்தான் இருக்கும்.

2. வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இந்திய வங்கிகளிடம் இல்லை . இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான வங்கி அதிகாரிகள்தானே இணைப்புக்குப் பிறகும் இந்த வங்கிகளை வழிநடத்தப் போகிறார்கள்? அப்படியானால் அவர்களுடைய கணிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்படவா போகிறது? வங்கிகள் பெரிதானால் அவர்களுடைய கடன் வழங்கும் திறன் பெருகும் வங்கிகளும் வலுவடையும் என்கிறார் நம்முடைய நிதியமைச்சர். 

நூறு ரூபாயை வைத்துக்கொண்டு இலாபம் ஈட்ட தெரியாதவனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தால் சரியாகிவிடும் என்பதுபோல் இருக்கிறது. மேலும்  கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வாணம் ஏறி வைகுண்டம் போறானாம் என்பார்களே அதுபோல் உள்ளது நிதியமைச்சரின் இந்த கணிப்பு.

ஆக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ள இரண்டு குறைபாடுகளுமே வங்கிகளின் இணைப்புக்குப் பிறகும் தொடரத்தான் போகின்றது.

வங்கிகளின் இணைப்புக்கு இது ஒரு காரணமாக நிதியமைச்சர் கூறினாலும் உண்மையான காரணம் அதுவல்ல என்று நினைக்கிறேன். இணைக்கப்படவுள்ள வங்கிகளுடைய சமீபத்திய நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்ததில் நான் கண்டது இதுதான். இவை வழங்கிய மொத்த கடன்களில் யாருக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை கீழேயுள்ள படத்தை  பார்த்தாலே புரிந்துவிடும்.



சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின் படி வங்கிகளிலுள்ள மொத்த வாராக்கடன்களில் கார்ப்பரேட் குறிப்பாக சேவைத் துறை மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள்தான் அதிகம் அதாவது 75 விழுக்காடு! இதையும் வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சுமார் 50 விழுக்காடு என்ற உண்மையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றை பொதுத்துறை வங்கிகளின் அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காரணம் என்பது தெளிவாக புரிகிறது.

சிறு சிறு வங்கிகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே விவசாயத்துக்கும் சிறு குறு தொழில்களுக்கும் 20 விழுக்காட்டுக்கும் குறைவாக கடன் வழங்கி வரும் இந்த வங்கிகள் இணைக்கப்பட்டு பெரும் வங்கிகளானால் யாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனறு நினைக்கிறீர்கள்? அது நிச்சயம் விவசாயம், சிறு குறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களாக இருக்க வாய்ப்பேயில்லை. இதே நிலைதான் தனிநபர் கடன்களுக்கும் ஏற்படும். 

தற்போது வங்கிகளுடைய முதலீட்டு தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் படி பார்த்தால் தனித்தனியாக குறைந்த அளவு முதலீட்டுடன் இயங்கி வரும் இந்த வங்கிகளால் பெரிய அளவில் கடன் தேவைப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஐந்தாயிரம் கோடி கடன் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.  இப்போதுள்ள சூழலில் அத்தனை பெரிய கடனை தனியாக வழங்க பெரும்பான்மையான வங்கிகளால் முடியாது. அந்த சூழலில் கார்ப்பரேட் நிறுவனம் பிரதான கணக்கு வைத்திருக்கும் வங்கி பிற வங்கிகளுடன் இணைந்து கூட்டாக அந்த கடனை வழங்க ஒரு அமைப்பை (consortium) ஏற்படுத்தும். மொத்த கடன் தொகையை தங்களுடைய தகுதிக் கேற்ப பிரித்துக் கொள்ளும். இதனால் கடன் வழங்குவதிலும் அதன் பிறகு கடனை நிர்வகிப்பதிலும் வசூலிப்பதிலும் இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டாக மட்டுமே எந்த முடிவையும் எடுக்க முடியும். இது கடன் வழங்கும் வங்கிகளுக்கும் கடன் பெறும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்  தனித்தனியாக இயங்கிவரும் சிறிய வங்கிகளை இணைப்பதன் மூலம் இந்த சிக்கல்களை முழுமையாக தவிர்க்க முடியும் என்பதாலும் இந்த வங்கி இணைப்பு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இதனால் வங்கிகளின் வர்த்தகம் வேண்டுமானால் படு வேகமாக வளரும். ஆனால் அந்த வர்த்தகம் வலுவானதாக பாதுகாப்பானதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. இதையே தான் பாதிக்கப்படவுள்ள வங்கிகளின் வங்கி ஊழியர் சங்கங்களும் கூறுகின்றன. 

மேலும் வளர்ந்துவிட்ட வங்கி முன்பு போல் விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன்களை வழங்குவதில் அக்கறை காட்டுமா என்பதும் கேள்விக்குறி.

மத்தியில் ஆளும் பாஜகவின் தேவையும் இதுவாக இருக்கலாம். ஏனெனில்  கடந்த தேர்தலுக்கு முன்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் சுமார் 90 விழுக்காட்டுக்கும் மேல் பாஜகவுக்குத்தான் வழங்கப்பட்டது என்பதை பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை கண்டிருப்பீர்கள். ஆகவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் விரும்புவார்கள். 

இதுதான் இந்த இணைப்பின் பின்னால் இருக்கும் உண்மையான காரணமாக இருக்கக் கூடும்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட போகிறவர்கள் வங்கி ஊழியர்கள். பத்து வங்கிகளை இணைத்து அதுவும் நாட்டின் ஒரே பகுதியில் இயங்கி வரும் வங்கிகள் இணைக்கப்படும்போது நிச்சயம் பல கிளைகள் ஒருங்கிணைக்கப்படுவதை தவிர்க்க வாய்ப்பே இல்லை. யாருக்கும் பணியிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் கூறினாலும் பணியிழப்பு ஏதாவது ஒரு வகையில். அது கட்டாய அல்லது விருப்ப ஓய்வாக இருக்கலாம், அல்லது மறைமுக பணியிழப்பு அதாவது வலுக்கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்படும் சூழலில் ஊழியர்களே பணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படலாம். பணியிழப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் அது இழப்புத்தானே?

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதத்தில் வங்கிகள் இணைப்பு வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் சிக்கலை ஏற்படுத்தலாம் ஆனால் மொதுமக்களுக்கு அது நல்ல பலனையே தரும் என்று பாஜக பேச்சாளர் கூறினார். இதுதான் அந்த கட்சி தலைமையின் நிலைப்பாடாக இருக்கலாம். 

ஆனால் எந்த ஒரு நிறுவனமும் நல்ல நிலையில் இயங்க வேண்டுமென்றால் முதலில் அதில் பணியாற்றும் ஊழியர்களுடைய நலனில் நிர்வாகம் அக்கறை காட்டவேண்டியது அவசியம், மன நிறைவு இல்லாமல் பணியாற்றும் ஊழியர்களால் பணியாற்றும் நிறுவனத்திற்கும் எந்த பலனும் கிடைக்காது அதனுடைய வாடிக்கையாளர்களுக்கும் சரியான சேவையை வழங்க முடியாது. நாட்டின் மிகப் பெரிய சேவை (srvices) நிறுவனங்களான பொதுத்துறை வங்கிகளின் எஜமானர்களான இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் இதை மறந்துவிடக் கூடாது.

இன்று இருக்கும் ஆட்சியாளர்கள் நாளை இருப்பதில்லை. அதில் பாஜகவும் விதிவிலக்கல்ல. சிறையில் தள்ளுபவர்களே பிற்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடுவதை கண்கூடாக காண்கிறோம்.

இதை உணர்ந்து இணைக்கப்படும் வங்கிகளை இணைப்புக்குப் பிறகு நிர்வாக பொறுப்பில் அமர்த்தப்படும் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் 

தலையீட்டுக்கு அஞ்சி வங்கிகளை பாதிக்கும் முடிவுகளை எடுக்கலாகாது. அது நாளை உங்களையே பாதிக்கலாம். நீங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு காரணமாயிருந்த அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ உங்களை காப்பாற்ற வரப்போவதில்லை.

இணைக்கப்படவிருக்கும் வங்கிகளில் யூனியன் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற ஏழு வங்கிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இவை சேர்த்து வைத்துள்ள வாராக்கடன்களால் இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த மற்ற மூன்று வங்கிகள் ஈட்டுகின்ற இலாபத்தை இணைக்கப்படவுள்ள வங்கிகள் முழுவதுமாக கரைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.

*********

11 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பின்னணி.

வாராக் கடன்கள் 

2001ம் ஆண்டு வரை ஒரு கடன் கணக்கில் பற்று வைக்கப்படும் வட்டித் தொகையானது அது வாடிக்கையாளரால் திருப்பி செலுத்தப்பட்டாலும் நிலுவையில் இருந்தாலும் அது வங்கியின் வருமானமாக கருதப்பட்டது. இதன் விளைவாக வங்கிகள் தங்களுடைய ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் காட்டி வந்த இலாப தொகைகள் உண்மையிலேயே ஈட்டப்பட்டதுதானா என்கிற ஐயம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட துவங்கியது. மேலும் பற்று வைக்கப்பட்ட வட்டித் தொகைகளை வசூலிப்பதில் வங்கிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி தங்களுடைய தணிக்கைகளில் கண்டுபிடித்தது.

இந்த குறையை போக்கும் நோக்கத்துடன் 31.3.2001ல் ஒரு சுற்றறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுப்பியது. அதில்  வட்டி, அல்லது தவணைத் தொகை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு செலுத்தப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் குறையுள்ள கணக்குகளாக I(Substandard)கருதப்பட வேண்டும் என்றும் அத்தகைய கணக்குகளில் பற்று வைக்கப்பட்ட வட்டி தொகைகள் வங்கியின் இலாப கணக்கில் வருவாயாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன.

இந்த அதிரடி உத்தரவால் நாட்டில் பல வங்கிகள் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுடைய உண்மையான நிதி நிலை வெட்ட வெளிச்சமானது. இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த  பல வங்கிகள் நஷ்ட கணக்கு காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. 

மேலும் இத்தகைய கணக்குகள் வாராக் கடனாக கருதப்பட்டு அவற்றில் நிலுவையிலுள்ள தொகைகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையை ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் தங்களுடைய இலாபத்தில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்படவே வங்கிகளின் நிதிநிலமை இன்னும் மோசமானது. பெரும்பாலான பொதுத்துறை  வங்கிகள் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவற்றின் முதலீடும் (capital) பெருமளவு சரியத் துவங்கியது.  வாராக் கடன்களின் அளவோ  2001 ஆண்டு இருந்த அளவிலிருந்து வளர்ந்து வளர்ந்து இப்போது ஒரு பூதாகரமான நிலையை அடைந்துள்ளதை கீழ்காணும் படத்தில் காணலாம்.  இத்தகைய கடன்களில் சுமார் 90 விழுக்காடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் என்கிறது ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை.


(1 trillion=1lakh crores)


அத்துடன் வங்கிகள் தங்களுடைய முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் நிபந்தனையும் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை வெகுவாக பாதிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து வங்கிகளின் வருவாய் ஈட்டும் திறனும் சரியத் துவங்கியது. விளைவு? வங்கிகளின் நஷ்டம் நாளுக்கு நாள் பெருகி சில வங்கிகளின் முதலீடு முழுவதுமாக கரைந்து போயின. 

இந்த சூழலிலிருந்து பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்கத்தான் மத்திய அரசு அவ்வப்போது மத்திய நிதியிலிருந்து ஒரு கணிசமான தொகையை வங்கிகளுக்கு முதலீடாக வழங்கத்துவங்கியது. துவக்கத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்ற நிலை இப்போது இலட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. அதாவது மக்கள் செலுத்தும் வரிப்பணம் இத்தகைய வங்கிகளுக்கு முதலீடாக சென்றடைகின்றன. இதன் விளைவாக வரியை நேர்மையுடன் செலுத்தும் மக்களுக்கு நேரிடையாக எவ்வித பலனும் கிடைப்பதில்லை. சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிக்கவோ அல்லது இயற்கை சீற்றத்தால் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய நிவாரணம் அளிக்கவோ அல்லது விவசாயக்கடன்களை ரத்து செய்யவோ போதிய நிதி இல்லை என்பதை காரணம் காட்டி புறக்கணிக்கும் மத்திய அரசு வங்கிகளின் முதலீட்டை கூட்டுவதற்கு லட்சோப லட்ச கணக்கில் வாரி இறைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?

கடந்த நிதியாண்டில் பல பொதுத்துறை வங்கிகள் நஷ்ட நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்தாலும் இது உண்மையான நிலை அல்ல என்று பல பத்திரிகைகளும் பொருளாதார நிபுணர்களும் எழுதி வருவதை காண முடிகிறது. வாராக்கடனாக ஏற்கனவே கணிக்கப்பட்ட கணக்குகளை மறுசீரமைப்பு (restructuring) என்ற பெயரில் மறுவாழ்வு அளித்து அவற்றை இன்னும் சில மாதங்களுக்கு அதாவது அடுத்த நிதியாண்டு வரையிலும் வங்கிகள் நீட்டித்து வருகின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இவற்றில் நிலுவையிலுள்ள வட்டியையோ அல்லது மாதத் தவணைகளையோ சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உண்மையிலேயே வசூலிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே. வங்கிகள் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பதை விட எழுதித் தள்ளுவதே அதிகம் என்பதை கீழுள்ள படத்தை பார்த்தாலே தெரியும்



இதுதான் இன்றை பொதுத்துறை வங்கிகளின் உண்மையான நிலமை.

ஜி20 நாடுகளில் இரண்டாவது மிகவும் மோசமான வங்கித் துறையைக் கொண்டிருப்பது இந்தியா என்கிறது உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை. பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியமான காரணங்களாக உலக வங்கி முன்வைப்பது வங்கிகளின் கடன் கொள்கைகள்தானாம். அதாவது இந்திய வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இல்லை என்றும் பெரும்பாலான வங்கி செயல்பாடுகளின் ஆட்சியாளர்களின் தலையீடு இருப்பதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. 

இது எனக்கு தெரிந்தவரை உண்மை தான். இன்று வங்கிகளில் உயர்பதவியில் அமர்ந்திருக்கும் பல அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தயவாலும் பரிந்துரையாலும் அந்த பதவியை அடைந்தவர்களே. ஆகவே ஆட்சியாளர்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது இப்போதைய ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. வங்கிகள் எப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டனவோ அப்போதிலிருந்தே மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரத்திலுள்ளவர்களின் தலையீடு இருந்து வந்ததை மறுப்பதற்கில்லை. 

இத்தகைய சூழலில் நலிவடைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலம் சரிவை சரிக்கட்டிவிட முடியும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பது வியப்பளிக்கிறது. 

அதை நாளை பார்க்கலாம்.....

10 செப்டம்பர் 2019

வங்கிகள் இணைப்பின் பின்னணி என்ன?

1969 ஆம் ஆண்டு முதன் முறையாக நாட்டில் அப்போது இயங்கிவந்த  பதினான்கு பெரிய தனியார் வங்கிகள் (50 இலட்சத்திற்கும் அதிகமான வைப்பு நிதி (Deposit) கொண்டிருந்த) வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் பின்னால் அரசியல்தான் இருந்ததே தவிர நாட்டின் பொருளாதாரம் உயர்வடைய வேண்டும் என்றோ அல்லது ஏழை எளிய மக்கள் எளிதாக கடன் பெற வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை என அப்போதே பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பிறகு பதினோரு ஆண்டுகள் கழித்து மேலும் ஆறு (அதாவது ரூ.200 இலட்சம் வைப்பு நிதி கொண்டிருந்த)வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 

தேசியமயமாக்கப்பட்டபோது அரசால் முன்வைக்கப்பட்ட காரணங்களுள் மிக முக்கியமானது என்னவென்றால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களும் எளிதில் கடன் பெற முடிவதுடன்  வங்கி சேவைகள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் என்பது. 

இந்த இரு நோக்கங்களும் பெரும்பாலும் நிறைவேறியுள்ளன என்பதை மறுக்க முடியாது.:

1. தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டிலுள்ள மொத்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை சுமார் 8,500லிருந்து 1.45,000 ஆக உயர்ந்துள்ளது. இவற்றுள் சுமார் 90% கிளைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் என்றால் மிகையல்ல.



2. சுமார் 65000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி கிளை என்ற 1969ம் வருட நிலையிலிருந்து சுமார் 14,000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளை என்ற அளவுக்கு வங்கிகள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளன. இவற்றுள் ஐம்பது விழுக்காடு கிளைகள் கிராம மற்றும் சிறிய நகர்ப்புறங்கிளில் செயல்படுகின்றன. 

3.1969ம் ஆண்டு வரை வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் வங்கிக் கடன் என்ற நிலை மாறி விவசாயம், சிறு, குறு தொழில்கள், சில்லறை வணிகம் என  நாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிகளை அணுகி மிகுந்த சிரமம் இல்லாமல் கடன் பெற முடியும் என்ற நிலை உருவானது.

4. வங்கிகளில் கணக்கு துவங்கும் பழக்கமும் மிகப் பெரிய அளவில் பெருகிவருவதையும் பார்க்க முடிகிறது. கடந்த ஐம்பதாண்டுகளில்  வங்கி சேமிப்பு (DEPOSIT) தொகை ரூ.1,24,000 billion (1 Billion=100 crores) என்ற எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தொகையில் நீண்ட கால வைப்புத்தொகை (fixed deposits) ஐம்பது விழுக்காட்டிலிருந்து சுமார் தொன்னூறு விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இது நாட்டிலுள்ள வங்கிகள் மீது குறிப்பாக பொது வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையை காட்டுகிறது எனலாம். 

5. இதே போன்று வங்கிகள் கடனாக வழங்கும் தொகையும்  ரூ.1,05,000 billion அளவுக்கு  உயர்ந்துள்ளது.




சுருக்கமாக கூற வேண்டுமென்றால் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை வங்கிகள் பெருமளவு உதவிசெய்துள்ளன என்பது உண்மைதான். 

ஆனால் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்பு சிறிய அளவில் கட்டுப்பாடுடன் இயங்கிவந்த தனியார் வங்கிகளின் கிளைகள் கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியதாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய வணிக வளர்ச்சியாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு வங்கிகள் தள்ளப்பட்டன என்பதும் உண்மை. இன்று பொதுத்துறை வங்கிகளில் பல பெரும் நஷ்டத்தில் இயங்கிவருவதற்கு இத்தகைய அபிரிதமான வளர்ச்சியும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகின்.றது.

மிகப் பெரிய அளவிலான விரிவாக்கம்  மிகப் பெரிய அளவிலான வைப்புத் தொகைகளையும் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டித் தந்தன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகைகளுக்கு நியாயமான அளவிலான வட்டி அளிப்பதற்கு அவற்றை அதிக அளவில் கடனாக வழங்க வேண்டிய அவசியமும் வங்கிகளுக்கு உருவானது. இலட்ச கணக்கில் கடன் வழங்கி வந்த வங்கிகள் கோடிக் கணக்கில் வழங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன. இது மேலும் மேலும் பலுகிப் பெருகி இன்று ஒரே நிறுவனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் கோடிகள் என கடன் வழங்கும் நிலையை நாட்டுடமையாக்கப்பட வங்கிகள் அடைந்துள்ளன. 

கோடிகள் ஆயிரக் கணக்கில் பெருகி இன்று இலட்சம் கோடி என்ற பெரும் தொகைகயை நாட்டிலுள்ள வெகு சில கார்ப்பரேட் நிறுவனங்களை மிகப் பெரிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களாக இந்த வங்கிகள் உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்த நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களாக  (multi-national ompanies) உருமாறியுள்ளன என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் வங்கிகள் வழங்கிய கடன்களே என்றால் மிகையாகாது.

வங்கிகளிடமிருந்து எளிதாக பெற்ற கடன் தொகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தாத காரணத்தாலும், உலகளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க துவங்கின. இதன் விளைவாக வங்கிக் கடன்களை திருப்பித் தர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் விளைவாக வங்கிகள் வழங்கிய கடன்கள் வாராக் கடன்களாக உருமாற வங்கிகளின் வருமானம் சரியத் துவங்கியது...

நாளையும் தொடரும்

26 ஆகஸ்ட் 2019

அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.


’உங்களால ஏன் மத்தவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியல டிபிஆர்?’

இந்த கேள்விய என்னுடைய அலுவலக அதிகாரிகள் பலரும் கேட்டுள்ளனர்.

நானும் இதைப் பற்றி பலமுறை யோசித்து பார்த்திருக்கிறேன். ஏன் நம்மால் மட்டும் மற்றவர்களை அனுசரித்துச் செல்ல முடியவில்லை என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு எனக்கு விடை கிடைக்க சுமார் இருபது ஆண்டுகள் தேவைப்பட்டது. அதாவது என்னுடைய 45வது வயதில் எங்கள் வங்கியின் பயிற்சி கல்லூரியில் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் இருந்து...

என்னுடைய இந்த போக்கிற்கு என்னுடைய பிடிவாத குணமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை அனுபவம்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. இதற்கு இளம் வயதிலேயே (முப்பது வயது) ஒரு கிளையின் மேலாளராகக் கூடிய வாய்ப்பு கிடைத்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

அதாவது உடன் பணியாற்றுபவர்களுடன் அனுசரித்து செல்வதில் அதிக அனுபவம் இல்லாமலேயே ஒரு கிளையின் மேலாளராகிவிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. கிளை மேலாளர் பதவி கிடைத்ததுமே ’என்னுடன் பணியாற்றுபவர்கள்’ என்கிற எண்ணம் போய் ’எனக்கு கீழே பணியாற்றுகிறவர்கள்’ என்கிற எண்ணம் மேலோங்கி நிற்க ஆரம்பித்துவிடுவதன் விளைவும் என்னுடைய பிடிவாத குணத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் சொல்வதுதான் சரி என்கிற எண்ணம் நான் அறியாமலேயே என்னுள் ஏற்பட்டுவிட்டிருக்கலாம். என்னுடைய கிளையில் எனக்கு கீழே
பணியாற்றுபவர்கள் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் நான் சொல்வதைப் போலத்தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற என்னுடைய குணம் மற்றவர்களை அரவணைத்துச் செல்ல இயலாவிட்டாலும் அனுசரித்தும் கூட செல்ல முடியாத ஒரு போக்கை என்னுள் வளர்த்துவிட்டிருந்தது.

இத்தகைய குணத்திற்கு இன்னொரு காரணம் எதையும் வேகமாக செய்து முடிக்கும் பழக்கமும் எனக்கு இருந்தது. என்னுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத என்னுடைய சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது என்னால் முடியாத காரியமாக இருந்திருக்கிறது. இதற்கு என்னுடைய அனுபவமின்மைதான் காரணமாக இருந்தது என்பதை அப்போது என்னால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை.

இதற்கு நான் வளர்ந்த விதமும் ஒரு காரணம். நான் என்னுடைய பெற்றோர்களை விடவும் அதிக நேரம் செலவிட்டது என்னுடைய தாய் வழி தாத்தாவிடம்தான். அவர் அத்தனை கண்டிப்புக்காரர். பேசுவதிலும் எழுதுவதிலும் செயலாற்றுவதிலும் படு வேகம். பல சமயங்களில் அவர் சொல்வதை புரிந்துக்கொள்ளாமலே தலையை ஆட்டிவிட்டு பின்னால் குட்டுப்ப்ட்டதும் உண்டு. அதீத கோபத்திற்கு சொந்தக்காரர். அவருடைய நேரடி பார்வையில் நான் வளர்ந்ததும் என்னுடைய பிடிவாத குணத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பேச்சில் செயலில் வேகம் இவையும் அவர் என்க்கு விட்டுச் சென்ற குணங்கள்.

அதன் பிறகு எட்டாவது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை நான் வளர்ந்த போர்டிங் பள்ளில். கத்தோலிக்க பாதிரியார்களால் - என்னுடைய தந்தையின்
ஒன்றுவிட்ட சகோதரர் அங்கு துணை அதிபராக இருந்தார்  - நடத்தப்பட்ட பள்ளி. எதுவும் நேரத்திற்கு செய்ய வேண்டும் என்கிற கண்டிப்பான சூழல்.
மணியடித்தால் சாப்பாடு, விளையாட்டு, படிப்பு, தூக்கம் என்ற இயந்திரகதியான ஐந்து வருட வாழ்க்கை என்னை எதை செய்தாலும் வேகமாக, குரிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்கிற என்னுடைய குணத்திற்கு ஒரு காரணம்.

இத்தகைய குணம் நம்மில் பலருக்கு இருக்கலாம். நம்மை சுற்றிலும் இருப்பவர்களை அனுசரித்து செல்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதற்கு மிக அதிக பொறுமை வேண்டும். அது நம்மில் வெகு சிலருக்குத்தான் அமைய வாய்ப்புள்ளது.

நம்மை மாதிரியான சாமான்யர்களுக்கு மட்டுமல்ல. உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் நாம் இதுவரை அறிந்துள்ள பல உலக தலைவர்களுக்கும் இந்த குணம் இருந்திருப்பதை காண முடிகிறது.

ஜியார்ஜ் வாஷிங்டன் துவங்கி இன்றைய ரஷ்ய தலைவர் புடின், அமெரிக்க தலைவர் டிரம்ப், வட கொரிய அதிபர், சீன அதிபர்... ஏன் நம்முடைய பிரதமர் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இதில் நம்மால் மறக்க முடியாத தமிழக தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள். அவருடைய அமைச்சரவையில் அவரை அனுசரித்து செல்ல முடியாதவர்களில் பலருடைய பதவிக்காலம் ஒரு சில வாரங்களிலேயே கூட முடிந்திருக்கிறது.

இத்தகைய பிடிவாத குணம் இருப்பதால்தானோ என்னவோ அவர்களால் அவர்கள் நினைத்தபடி செயலாற்ற முடிகிறது என்று கூட தோன்றுகிறது. இது நல்லதா கெட்டதா என்பது அவரவர் கண்ணோட்டத்தைச் சார்ந்தது.

ஆனால் ஓரளவுக்கு பிடிவாதமும் ஓரளவுக்கு அனுசரித்துச் செல்லும் குணமும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளையெல்லாம் இப்போது அசைபோட்டு பார்க்கும் போது அப்போது நான் சந்தித்த பிரச்சினைகளை இப்போது சந்தித்திருந்தால் நிச்சயம் அவற்றை இன்னும் அறிவுபூர்வமாக (Matured) கையாண்டிருப்பேனோ என்று தோன்றுகிறது.

நம்முடைய இளம் வயதில் நாம் அறிவுபூர்வமாக அணுகுவதை விட உணர்வுபூர்வமாக அணுகியிருப்போம். அதுவே நம்மை மற்றவர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கலாம். ஆனால் காலப் போக்கில் அதாவது அனுபவங்கள் கூட கூட நம்முடைய அணுகுமுறை மாற வேண்டும். அப்படி அல்லாமல் முப்பது வயதில் எத்தனை பிடிவாதம் இருந்ததோ அதே அளவு பிடிவாதம் அறுபதுகளை கடந்தும் தொடர்ந்தால் நாம் இப்போது காணும் பல உலக தலைவர்களைப் போலத்தான் நாமும் இருப்போம்.

இன்றைய உலகில் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர், அமெரிக்கா-ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் என இன்றைய உலகின் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் இத்தகைய தலைவர்களின் பிடிவாத குணம்தான். இந்த பிடிவாத குணம்தான் மற்றவர்களை அனுசரித்து செல்ல முடியாமல் தடுக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது நான் உன்னை விட பலம் வாய்ந்தவன் ஆகவே நீதான் என்னை அனுசரித்து செல்ல வேண்டும் என்கிற குணம்.

இதை நம்மில் பலரும் தவிர்த்தால் உலகத்தில் பிர்ச்சினைகளே இருக்காது.

*************

05 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை (நிறைவுப் பகுதி)

பொது (அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்) மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்துமே இக் கொள்கை வரைவில் குறிப்பிட்டப்பட்டுள்ள அனைத்து
ஒழுங்கு முறைகளுக்கும் கட்டுபட்டே இயங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. அப்படியானால் நாட்டின் மிகப் பெரிய பொது (மத்திய அரசின்  மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவதால் இதுவும் பொது
பள்ளியாக கருதப்படுகிறது)  பள்ளியான CBSE பள்ளி மற்றும் அரசு உதவிப் பெறாத தனியார் பள்ளிகளான ICSE போன்ற பள்ளிகளும் இந்த கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் படுமா என்பது தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இந்த CBSC பள்ளிகளில் மட்டும் எதற்காக பாடங்கள் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன என்று சிலர் கேட்கலாம். இந்த பள்ளிகள் மத்திய அரசு
அலுவலகங்களில் பணியாற்றுபவர்களின் வாரிசுகளுக்காகவே துவக்கப்பட்ட பள்ளிகளாகும். இத்தகைய பணியாளர்கள் குறிப்பாக அதிகாரிகள் நாட்டின் எந்த பகுதிக்கும் மாற்றப்படலாம் என்பதாலும் பல மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழியாக கருதப்படும் மொழிகள் கட்டாய பாடமாக இருப்பதாலும் இவர்களுடைய வாரிசுகளுக்கு படிப்பில் சிரமம் ஏதும் இல்லாமல் இருக்கவே இத்தகைய பள்ளிகள் அனைத்து மாநிலங்களிலும் துவங்கப்பட்டன.

ஆனால் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டும் வரும் அரசு நிதி உதவி பெறாத பல தனியார் பள்ளிகளும் இவர்களுடைய பாடத்திட்டத்தையே பின்பற்றுவதால் இத்தகைய ஆங்கில வழிக் கல்வி நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் பரவி கிடக்கின்றன. தமிழகத்திலும் சமச்சீர்கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் பல தனியார் பள்ளிகள் CBSC பாடத்திட்டத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஆகவே இத்தகைய பள்ளிகள் புதிய கல்விக் கொள்கையால் பாதிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

அதே சமயம் அரசிடமிருந்து நிதியுதவி பெறாத (புதிய)தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அத்தகைய பள்ளிகள் அரசின் ‘ஒழுங்குமுறை சுமைகளிலிருந்து’ (Regulatory burdens) விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கொள்கை வரைவில் குரிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு என்ன பொருள்?

கொள்கை வரைவில் இதுவரை நாம் கண்ட அனைத்து ஒழுங்குமுறைகளும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும்தானா?

இவை அனைத்தும் அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கு மட்டும் சுமைகளாக தெரிகின்றனவா என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அதாவது எதிர் வரும் காலங்களில் அரசின் ஒழுங்குமுறை அனைத்தும் இனி துவங்கவிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு பொருந்தாது போலுள்ளது.

எதை நோக்கி பயணிக்க இந்த விதிவிலக்கு? இத்தகைய தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டிலுள்ள மாணவர்களை முதல் தரம்,. இரண்டாம் தரம் என்று பிரிக்கத்தானோ?

புதிதாக துவங்கப்படும் தனியார் பள்ளிகளில் மும்மொழி கொள்கை என்கிற எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தற்போது CBSC போன்ற பள்ளிகளில்
நடைமுறையிலுள்ள ஆங்கில வழி கல்வியே தொடரும் என்பதால் அத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அறிவாற்றலிலும் திறனிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளீலும் பயிலும் மாணவர்களை விட சிறந்தவர்களாக திகழப்போவது நிச்சயம்.

நாட்டில் நடைபெறவிருக்கும் அனைத்து நுழைவு தேர்வுகளும் இத்தகைய அரசு உதவி பெறாத தன்னார்வ நிறுவனங்களால் நடத்தப்படும் பாடத்திட்டங்களின் அடிப்படையிலேயே நடத்தப்படப் போவதும் உறுதி,

இந்த அவலம்தானே சமீப காலமாக மத்திய அரசு நடத்தும் NEET போன்ற நுழைவுத் தேர்வுகளில் நடக்கிறது? மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் நடத்தப்பட்டு வந்த இத்தகைய தேர்வுகள் இனி பொறியியல் கல்லூரிகளுக்கும் சில வருடங்கள் கழித்து கலைக் கல்லூரிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர் கல்வி பயிலும் வாய்ப்பையே இழந்து பள்ளிக் கல்வியுடன் நிறுத்திக்கொள்ளும் காலம் வெகு விரைவில்
வரத்தான் போகிறது!

கல்வி மேலாண்மை

தற்போது தேசிய அளவில் கல்வி மத்திய அரசின் பொதுப் பட்டியலில் இருந்தாலும் மாநில அளவில் இதை ஒழுங்குப்படுத்தி மேலாண்மை செய்யும் பொறுப்பு மாநில கல்வி இயக்குனர் அலுவலகத்திடம் இருந்து வருகிறது. ஆகவேதான் 1968ல் இருந்தே நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் இருந்தாலும் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியை கட்டாய மொழிப் பாடமாக்காமல் இயங்க முடிந்தது. பள்ளிகளுக்கான கொள்கையை வகுத்தல், பள்ளிகளை மேற்பார்வை மற்றும் ஒழுங்குப் படுத்துதல் ஆகிய அனைத்தையும் இந்த அமைப்பே கவனித்து வந்தன.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பவிருக்கும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தேசிய அளவில் பள்ளிக் கல்வி மட்டுமல்லாமல்
உயர்கல்விக்கும் சேர்த்தே அளவிலா அதிகாரங்களைக் கொண்டஒரு ஆணையம் (தேசிய கல்வி ஆணையம் - ராஷ்ட்ரிய சிக்‌ஷா ஆயோக்!) அமைக்கப்பட்டு நாடு முழுமைக்கும் ஒரே ஆதார், ரேஷன் அட்டை என்பது போல் ஒரே கல்வி முறை அமலுக்கு வரும். இந்த தேசிய ஆணையம் இடும் அனைத்துக் கட்டளைகளையும் ஒவ்வொரு மாநில அளவிலும் அமைக்கப்படும் இவ்வாணையத்தின் அதிகாரமற்ற கிளைகளான மாநில கல்வி ஆணையம் செயல்படுத்த நிர்பந்திக்கப் படும்.

இந்த ஆணையத்தின் தலைவராக நம் பாரத பிரதமர் அவ்ர்கள் இருப்பார்.

இந்த ஆணையத்தின் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பேர்பெற்ற கல்வியாளர்கள், மாநில முதலமைச்சர்கள் அல்லது கல்வி அமைச்சர்கள் ஆகியோர் இடம் பெற்றிருப்பர். இந்த ஆணையம் நாட்டின் கல்வி சம்பந்தமான அனைத்திற்கும் முடிவு எடுக்கக் கூடிய அதிகாரம் பெற்றிருக்கும்.

இந்தியாவின் அனைத்து இயக்கங்களையும் ஒவ்வொன்றாக தன் நேரடி கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வந்திருக்கும் மத்திய பாஜக அரசு தற்போது கல்வியையும் தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

தற்போதும் கல்வி மத்திய அரசின் பட்டியலில்தான் இருந்து வருகிறது என்றாலும் மாநில அளவில் அந்தந்த மாநில கல்வி இயக்குனர்களுக்கு தங்களுடைய மாநில அளவில் தேவையான மாற்றங்களை செய்துக்கொள்ளக் கூடிய தன்னாட்சி அதிகாரம் இருந்தது.

அது இப்போது முழுமையாக பறிக்கப்பட்டு மத்திய கல்வி ஆணையத்தின் ஆணைகளை செயல்படுத்தும்  ஒரு கிளை ஆணையமாக மாற்றப்பட்டுள்ளது.

இப்படி பல குழப்பங்களையும் குறைபாடுகளையும் நடைமுறைக்கு சாத்தியமற்ற மாற்றங்களையும் உள்ளடக்கியுள்ள கல்வித் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மத்திய அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

மத்தியிலுள்ள இன்றைய ஆட்சியாளர்களுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள அசுர பலத்தின் உதவியுடன் இந்த வரைவு கொள்கை எதிர்கட்சிகளின் அனைத்து எதிர்ப்ப்புகளையும் மீறி சட்டமாக்கப்படுவது என்னவோ நிச்சயம்.

அப்படியொரு நிலை ஏற்படுமானால் தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப் புற ஏழை மாணவர்களுக்கு எதிர்வரும் காலம் ஒரு இருண்ட காலமாகத்தான் அமையப் போகிறது.



(நிறைவு)

03 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 6

2008-2009 கணக்கெடுப்பின் படி தமிழகத்தில்

Number of Districts: 30
Number of Educational Districts: 65
Number of Blocks: 385

Number of Schools

Primary School (1-5 only) 23395
Middle School (1-8) 7597
High School (6-10) 2176
Higher Secondary School (6-12) 2100
Grand Total 35268

அரசு பள்ளிகள் உள்ளன.

இவற்றுள் கிராமப் புற மற்றும் நகர்புறங்களில்

Primary and Middle Schools - 32648
Secondary Schools - 3997 உள்ளன

ஒட்டு மொத்த இந்தியாவை எடுத்துக்கொண்டால் 2016-17ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 28 விழுக்காடு அரசு துவக்க (Primary) பள்ளிகளிலும் 15 விழுக்காடு நடுநிலைப் பள்ளிகளிலும் (Upper Primary) 30 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளனராம்! மேலும் சுமார் 1.20 லட்சம் பள்ளிகள் ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாம்! இவற்றுள் சுமார் 95,000 பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை மட்டுமே உள்ள பள்ளிகள்!

இவ்வாறு தனித்து இயங்கும் சிறு, சிறு பள்ளிகளை நிர்வகிப்பதிலும் ஆசிரியர் நியமனங்களிலும் மிக அதிகம் சிரமங்கள் உள்ளது. ஆகவே இத்தகைய பள்ளிகள் அனைத்தும் அதாவது இருபது மாணவர்களுக்கும் குறைவாக பள்ளிகளை அவை எத்தகைய பள்ளிகளாக இருப்பினும் அருகாமையிலுள்ள பள்ளிகளுடன் இணைக்கப்பட வேண்டுமாம்!

தமிழகத்தைப் பொறுத்தவரை சமீபத்திய கணக்கெடுப்பின்படி 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள துவக்கப் பள்ளிகள் சுமார் 1000.

மீதமுள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் நூறு மாணவர்களுக்கும் குறைவாக உள்ளனராம்.

புதிய வரைவு கல்விக் கொள்கை 20 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளை, அவை எந்த வகையைச் சார்ந்த பள்ளியாக இருப்பினும், 2020 கல்வியாண்டுக்குள் அடுத்துள்ள  பள்ளிகளுடன் இணைத்துவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழக கல்வித் துறையோ ஐம்பது மாணவர்களுக்கும் குறைவாகவுள்ள கிராமப்புற துவக்கப்பள்ளிகளை மூடுவதற்கு அல்லது அடுத்துள்ள பள்ளிகளுடன் இணைப்பதற்கு உத்தரவு பிறப்பித்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

தற்போதுள்ள அரசு பள்ளிகள் சிலவற்றில் முதல் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரையிலும் இன்னும் சில பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரையிலும் இருப்பதை மேல் காணும் புள்ளி விவரங்களிலிருந்து  அறிந்துக்கொள்ள முடிகிறது. இந்த பள்ளிகள் பெரும்பாலும் கிராமப்புற/சிறு நகர்புறங்களில் இயங்கி வருகின்றன. இவை எவ்வாறு பிரிக்கப்படும். அப்படிப்பட்ட சூழலில் எத்தனை பள்ளிகள் மற்ற பள்ளிகளுடன் இணைக்கப்படும் அல்லது மூடப்படும் என்பது தெரியவில்லை.

பெரு நகரங்களான சென்னை, கோவை, மதுரை போன்றவற்றிலும் இத்தகைய குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தற்போது ஒரு பள்ளியிலிருந்து சுமார் ஐந்து கி.மீ. தூரத்தில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே அந்த பள்ளியில் சேர்க்கப்படுவார்கள் என்ற எழுதப்படா விதி கடைபிடிக்கப்படுகின்றது. புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தால் தற்போது மழலையர் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை வகுப்புகளைக் கொண்டுள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கதி என்னவாகும்?

ஆக, புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் தற்போது இயங்கிவரும் பள்ளிகள் பிரிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராம மற்றும் சிறு நகரங்களில் படிக்கும் மாணவர்கள்தான்

அகில இந்திய அளவில் சுமார் 1.25 இலட்சம் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மூடப்படவுள்ளது என்பதை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக உள்ளது!

இன்னும் சிலவற்றைப் பற்றி நாளை (திங்களனறு) விவாதிக்கலாம்






02 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 5

நேற்றைய பதிவில் கடந்த சுமார் நாற்பதாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் 10+2 என்ற பள்ளிக் கல்வி  முறை புதிய கல்வி திட்டத்தின் படி 5+3+3+4 ஆக அதிகரிக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதில் அடிப்படை ஆண்டுகள் (foundation years) எனப்படும் முதல் ஐந்து ஆண்டுகளில் முதல் மூன்றாண்டுகள் மழலையர் பள்ளி பருவத்தைச் சார்ந்தவை.

தற்போது எந்த அரசு பள்ளிகளிலும் இந்த வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. பெரும்பாலான அரசு பள்ளிகள் ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும் முறையை பின்பற்றி வருகின்றன.

குறிப்பாக கிராமப்புறங்களில் அங்கீகாரமில்லாத சில தனியார் பள்ளிகள் மட்டுமே இத்தகைய வகுப்புகளை நடத்தி வருகின்றன. இத்தகைய மழலையர் வகுப்புகள் அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டால் தற்போது இயங்கிவரும் இதகைய பள்ளிகளின் நிலை என்னவாகும்? இந்த மூன்று வகுப்புகளையும் தற்போதுள்ள அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அத்தனை எளிதான காரியமா?

மேலும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள  இந்த நான்கு பிரிவுகளுக்கென தனித்தனி பள்ளிகள் அமைக்கப்படுமா என்பதும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

அப்படி அமைக்கப்படும் பட்சத்தில் ஒரு பள்ளியிலிருந்து அடுத்த பள்ளிக்கு செல்வதற்கு மீண்டும் மீண்டும் பெற்றோர்கள் அலைய வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புண்டு. தற்போது பெரும்பாலான நகர்ப்புற பள்ளிகளில் மழலையர் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்து முடிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அத்தகைய பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு எவ்வித தொல்லையுமில்லாமல் படித்து முடித்துவிட முடிகிறது.

பொதுத் தேர்வுகள்

தற்போது மேல்நிலை பள்ளி முடிவில் அதாவது 10வது வகுப்புக்கும் அதன் பிறகு 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை நான்கு பள்ளிகளாக பிரிக்கப்படுவதால்  மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ப்ரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமா? இந்த வயதுகளில் குழந்தைகளை இத்தகைய மன அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டுமா?

மேலும் நான்காவது நிலையான மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நான்கு ஆண்டுகள் எட்டு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டு நான்காம் ஆண்டு இறுதியில் ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நடைமுறையிலுள்ள பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில் நடத்தப்படும் பொதுத்தேர்வும் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது?

அப்படியானால் இந்த நான்காண்டுகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படுமா? இவ்வாறு ஒவ்வொரு அரையாண்டிலும் செமஸ்டர் எனப்படும் பருவ தேர்வுகள் நடத்தப்படும்போது மேலும் இரண்டு பொதுத்தேர்வுகள் எதற்காக?

அடுத்த முக்கியமான பிரச்சினை பள்ளிகள் ஒருங்கிணைப்பு.

இதைப் பற்றி நாளை விவாதிக்கலாம்.







01 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 4

நேற்றைய பதிவில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு காராணமாக கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.

ஆனால் உண்மையில் அதுவல்ல காரணம் .

புதிய கொள்கை வரைவு அறிக்கையின் 82ம் பக்கத்தில் (பத்தி 4.5.4) குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்களை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்.

“ நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதலே ஆங்கில மொழியில் மட்டுமே புலமை வாய்ந்த (15 விழுக்காடு உள்ள) ‘மேல்தட்டு மக்கள்’ 55 விழுக்காடுக்கும் அதிகமாகவுள்ள ஹிந்தி பேசும் மக்களை தங்கள் ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது .”

இதுதான் இந்த புதிய கொள்கையின் உண்மையான காரணம்.

அதாவது, இதுவரை ஒடுக்கப்பட்டிருந்த ஹிந்தி பேசும் பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வில் ஒரு புதிய ஒளி ஏற்றுவதுதான் இந்த கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மும்மொழிப் பாடத் திட்டத்தின் மூல நோக்கம் என்றாலும் மிகையாகாது!

அதே சமயம் கொள்கை வரைவில் எந்த இடத்திலும் மூன்றாவது மொழியாக இந்தியை மட்டுமே மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப் படவில்லை என்பதும் உண்மை. அதை தீர்மானிக்கும் உரிமையை மாணவர்களுக்கே விட்டுக்கொடுத்துள்ளது.

சரி, மாணவர்களின் விருப்பத்தை யார் முடிவு செய்வார்கள் என்று பார்த்தால் அங்குதான் சிக்கலே.

புதிய கல்விக் கொள்கையின் படி பள்ளிப் பருவ காலம் தற்போது நடைமுறையிலுள்ள 10+2 என்ற முறையிலிருந்து 5+3+3+4 ஆக திருத்தியமைக்கப்பட வுள்ளது.

இது

1. ஐந்து வருட அடித்தள நிலை (Foundation) - 3 வயதிலிருந்து 8 வரை - தற்போதைய மழலை வகுப்புகள், 1 & 2 KG, 1,2 வகுப்புகள்
2. மூன்று வருட ஆயத்த நிலை (Preparatory) 8 வயது முதல் 11 வயது வரை -
தற்போதைய 3 - 5 வகுப்புகள்
3. மூன்று வருட நடு நிலை = 11லிருந்து 13 வயது வரை - 6,7,8 வகுப்புகள்
4. நான்கு வருட மேல்நிலை கல்வி (High)- 14 முதல் 18 வயதுவரை - 9,10,11,12 வகுப்புகள்.

இவற்றுள் அடிப்படைக் கல்வி நிலையிலேயே அதாவது அடித்தள நிலையிலிருந்தே மும்மொழி கல்வி அறிமுகப்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மூன்று வயதிலிருந்து எட்டு வயது வரையிலும் குழந்தைகளுக்கு புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் எந்த மொழியையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 79).

இந்த வயதில் மூன்றாவது மொழிப் பாடமாக தெரிவு செய்யும் திறன் நிச்சயம் குழந்தைகளிடம் இருக்கப் போவதில்லை.

ஆகவே இதை தீர்மானிக்கப் போவது 1. பெற்றோர்கள் அல்லது 2. பள்ளி நிர்வாகம்.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் எந்த மொழியை அதிக மாணவர்கள் தெரிவு செய்கிறார்களோ அதைத்தான் மீதமுள்ள மாணவர்களும் தெரிவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.  ஏனெனில் ஒரு வகுப்புக்கு நான்கைந்து மொழிப்பாட ஆசிரியர்களை எந்த பள்ளி நிர்வாகத்தாலும் நியமிக்க முடியாது.

மேலும் மூன்றாவதாக இந்தியாவின் 8வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் தெரிவு செய்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த மொழியை அதிக மக்கள் பேசுகிறார்களோ அல்லது எந்த மொழியை படித்தால் நம் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்குமோ அந்த மொழியைத்தான் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் தெரிவு செய்வார்கள்.

அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் பேசப்படும் மொழி இந்தி ஒன்றுதான். ஆகவே பெற்றோர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியை தெரிவு செய்யும் கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்பது இந்த கொள்கையை தயாரித்தவர்களுக்கும் தெரியும் இப்போது மத்தியில் ஆட்சியிலுள்ளவர்களுக்கும் தெரியும்.

ஆகவே தான் இந்த மும்மொழிக் கல்வி திட்டமே எங்களுக்கு வேண்டாம் என்று குரலெழுப்ப துவங்கிய தமிழக எதிர் கட்சியாளர்களுடன் இணைந்து மக்களும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்கிறேன்.

இது என்னை பாதிக்கப் போவதில்லை என்று ஒதுங்கியிராமல் தமிழக மக்கள் அனைவருமே விழித்தெழுந்து போராட வேண்டிய தருணம்.

நாளை இந்த கொள்கையால் கிராமப் புற மாணவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட் போகிறார்கள் என்பதை விவாதிக்கலாம்.


31 ஜூலை 2019

புதிய கல்விக் கொள்கை - 3

”உயர் கல்வியை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் நிலைத்து நிற்கக் கூடிய, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய, உயிரோட்டமுள்ள, அறிவுசார் சமூகமாக நம்முடைய நாட்டை மாற்றுவதற்கு   நேரடியாக பங்களிக்கக் கூடிய,  இந்தியாவை மையப்படுத்திய, கல்வி அமைப்பை தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது.”

இதுதான் விரைவில் நடைமுறைப் படுத்தப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் ‘தொலைநோக்கு பார்வை’ யாம்!!

இது இக்கொள்கையின் தமிழ் வரைவில்  முதல் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது இப்போதுள்ள இந்தியாவில் இத்தகைய கல்வி முறை இல்லையாம்!

இதில் இறுதி வாக்கியத்தில் வருகின்ற ‘இந்தியாவை மையப்படுத்தி’ என்ற சொற்களுக்கு பதிலாக ‘இந்தியை மையப்படுத்தி’ என்ற சொற்களை பயன்படுத்தியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

ஏனெனில் இந்த வரைவு கொள்கையின் ஆங்கிலப் பதிப்பின் 81ம் பக்கத்தில் இந்தியாவை மையப்படுத்துவது என்றால் என்ன என்பது சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இந்த கொள்கை விளக்கம் சுமார் இரண்டு பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதிப்பட்டுளதால் நான் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

“இந்தியாவிலுள்ள மொழிகள் பலவும் கலாச்சார மற்றும் அறிவியல் ரீதியாக பல சிறப்புகளைக் கொண்டிருப்பினும் இந்திய பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவது வேதனைக்குரியது. (எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அனைத்து பாடங்களும் தாய்மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகவே இருந்து வருகிறது. மத்திய அரசின் நேரடி பார்வையில் நடத்தப்படும் CBSC பள்ளிகளில்தான் அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன!)

இதற்கு காரணம்  இந்திய மக்கள் தொகையில் சுமார் 15 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள மேல்தட்டு மக்களின் (Elite) ஆங்கில மோகம்தான் என்றால் மிகையாகாது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் தங்களுடைய ஆங்கில புலமையை மட்டுமே பயன்படுத்தி அரசின் அனைத்து உயர் பதவிகளையும் ஆட்கொண்ட இந்த கூட்டம் ஆங்கிலம் எழுத, பேச தெரியாத ஆனால் இவர்களை விட அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரும்பான்மை இளைஞர்களை  தங்களுடைய ஏவலுக்கு அடிபணியும் பணியாளர்களாக மட்டுமே அடக்கி வைத்துள்ளனர்.

ஆகவே சமத்துவமான, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்றால் இத்தகையோரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

அதற்கு முதற் படியாக நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலையிலிருந்தே அவரவர் தாய்மொழியில் கற்பிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது என பரிந்துரைக்கப் படுகிறது.

அத்துடன் 1968ல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 1992ல் வலியுறுத்தப்பட்ட மும்மொழி கொள்கையை துவக்கப் பள்ளிகளிலிருந்தே அறிமுகப்படுத்துவது எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.

தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் மூன்றாவது மொழிப் பாடமாக ஏதாவது ஒரு  இந்திய மொழியை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அந்தந்த மாநில கல்வித் துறை தங்களுடைய பள்ளிகளில் நடைமுறைப் படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.”

இதுதான் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தப்படுவது ஏன் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம்.

ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகவும் தாய்மொழியை மற்ற அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்று மொழியாகவும் ஏற்றுக்கொள்வதில் எவ்வித பாதகமும் இல்லை. ஏனெனில் இப்போதும் அதுதான் அரசு பள்ளிகளில் நடைமுறையிலுள்ளது.

ஆனால் இத்தகைய தாய்மொழி வழி கல்வி நாட்டிலுள்ள அனைத்து கல்வி முறைகளிலும் (Streams) நடைமுறைப் படுத்தப்படுமா என்பதில் தெளிவில்லை.  உதாரணத்திற்கு, மத்திய அரசின் நேரடி பார்வயில் இயங்கிவரும் CBSC பள்ளிகளில் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? ஏனெனில் கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மேல்தட்டு, ஆங்கில மோகம் கொண்ட’ மக்களை உருவாக்குவதே இத்தகைய பள்ளிகள்தானே?

இதேபோன்று தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் CISCE, IGCSE பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கும் இது பொருந்துமா என்பதும் தெளிவில்லை.

இவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கிய ஒரு கல்விக் கொள்கையை மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற முடியுமே தவிர வெறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்விநிலையங்களுக்கு மட்டுமே ஒரு கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்பதே என்னுடைய வாதம்...

அடுத்ததாக, இந்த மூன்றாவது மொழியை எவ்வாறு தெரிவு செய்வது?

நாளை விவாதிக்கலாம்.

21 ஜூலை 2014

உன் சமையலறையில்..... இது திரை விமர்சனம் அல்ல!

கடந்த வாரம் 'உன் சமையலறையில்......' என்ற திரைப்படத்தை பார்த்தேன். 

அதில் கதாநாயகனும் கதாநாயகியும் தற்செயலாக  தொலைபேசி மூலம் அறிமுகமாகின்றனர். கதாநாயகன் 45 வயது இளைஞர்.  இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லையா அல்லது யாரும் இவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பவில்லையா என்பது  திரையில் சொல்லப்படவில்லை. கதாநாயகிக்கு 36 வயது இருக்கலாம். செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம! இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்கின்றனர். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் சந்திக்க விருப்பமில்லாமல் கதாநாயகன் தன் மருமகனையும் கதாநாயகி தன் தங்கையையும் அனுப்பி வைக்க 'அவர்கள் 'இருவரிடையிலும் காதல் மலர்கிறது. 

கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் தங்களை மற்றவருக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்கிற எண்ணம் இருந்தது போலும். இந்த எண்ணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு 'நீங்கள் அவருடன் வெளியில் சென்றால் ஒரு தந்தையும் மகளும் போவதுபோல தோன்றும்' என்று கதாநாயகனிடம் அவனுடைய மருமகனும் 'நீயும் அவரும் அக்கா தம்பி போல் இருக்கறீங்க' என்று கதாநாயகியிடம் அவருடைய தங்கையும் கூறி ஏமாற்றுகின்றனர். இறுதியில் உண்மை தெரிந்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இருவருக்குமே ஒருவரையொருவரை பிடித்துப்போகிறது! 

இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் கதாநாயகனின் மருமகன் கூறுவது: 'உங்களுக்கு அவரை பிடிக்குமான்னுதான் நீங்க கவலைப்படணும். அவங்களுக்கு உங்கள பிடிக்குமான்னு நீங்க கவலைப்படக் கூடாது மாமா.'

கதாநாயகன், கதாநாயகி இருவருமே இந்த எண்ணத்துடன்தான் தங்களுடைய முதல் சந்திப்பில் தங்களுக்கு பதிலாக முறையே மருமகன், தங்கையை அனுப்பி ஆள்மாறாட்டம் செய்கின்றனர். இது இருவருக்குமே தங்களுடைய வயதான உருவத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை என்பதை ஒரு இடத்தில் சூசகமாக தெரிவிக்கிறார்கள். 

உண்மைதான். 

இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு. 

இது எதனால் ஏற்படுகிறது?

இது ஒரு வகை மனோவியாதியா?

இது யாருக்கெல்லாம் ஏற்படுகிறது?

நாம் அனைவருமே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஏதாவது ஒருவகையில் அவர்களை விட தாழ்ந்தவர்களாக (inferior) இருக்க வாய்ப்புண்டு. அதாவது நம்முடைய மூளையின் அளவு அனைவருக்கும் ஒன்றுதான் என்றாலும் அதனுடைய திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதுண்டு. அதன் அடிப்படையில் நாம் அனைவருமே ஒரே திறனுள்ளவர்கள் அல்ல. அதே போன்றுதான் உருவத்திலும், நிறத்திலும், அழகிலும், செல்வத்திலும்...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஏதாவது ஒரு வகையில் நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகவும் (superior) மற்ற சிலரை விட தாழ்ந்தவர்களாகவும் (inferior) இருக்க வாய்ப்புள்ளது. 

இதற்கு நாம் மட்டுமே பொறுப்பல்ல. 

ஆனால் இத்தகைய தாழ்வுகளுக்கு (inferiority) தாங்கள்தான் பொறுப்பு என்று எப்போதும் மருகும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. நாம் மட்டும் ஏன் அவர்களைப் போல் இல்லை என்று நினைப்பு மேலோங்கி நம்மை எந்த காரியத்திலும் திறம்பட செயலாற்ற முடியாமல் போய்விடுகிறது.

இந்த எண்ணம் எப்போது எதனால் ஏற்படுகிறது?

தாழ்வு மனப்பான்மையால் அவதியுறும் சிலரை ஆய்வு செய்தபின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில உண்மைகள் இவை:

பெரும்பாலோனோருக்கு இந்த எண்ணம் அவர்களுடைய இளம் வயதில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால்தான் உருவாக்கப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே 'நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்', அல்லது 'உன்னால் முடியாது' என்றெல்லாம் கூறுவதும் 'அவனைப் பார்... இவனைப் பார்' என்று மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதிலிருந்தும்தான் 'நம்மால் ஒன்றும் முடியாது' என்ற எண்ணமும் 'நான் மற்றவர்களை விட தாழ்ந்தவன்' என்கிற எண்ணமும் நம்முடைய மனதில் விதைக்கப்படுகிறது. 

பெற்றோரின் இத்தகைய அறிவுறுத்தல்கள் அவர்களுடைய குழந்தைகளை நல்வழிப்படுத்தவோ அல்லது அவர்களை மேம்படுத்தவோ உதவுவதில்லை. மாறாக அவர்களுடைய மனதில்  தங்களைப் பற்றிய சுயமதிப்பை (self-esteem) இழக்கவே செய்துவிடுகிறது. இத்தகைய சுயமதிப்பு இல்லாதவர்கள்தான் நாளடைவில் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகிவிடுகின்றனர். 

ஆனால் இத்தகைய அறிவுறுத்தல்கள் சில குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும் உண்டு. அதாவது தங்களுடைய குறைகளை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயலில் இறங்கும் குழந்தைகள் காலப்போக்கில் சமுதாயத்தில் சாதனையாளர்களானதும் உண்டு. சரித்திரத்தில் இத்தகைய சாதனையாளர்கள் ஏராளம். பள்ளிப் பருவத்தில் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ பேர் எதிர்காலத்தில் உலகம் போற்றும் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்!

மாறாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலால் மனம் துவண்டு தங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுபவர்கள்தான் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மை என்ற மனநோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாழ்வு மனப்பான்மையில் இரு வகை உண்டு.

1. குழந்தை பருவத்தில் ஏற்படும் மனப்பான்மை. அதாவது தங்களுக்கு மற்றவர்களைப் போன்று திறமை அல்லது அறிவாற்றல் இல்லை கற்பனையான எண்ணத்தாலும் ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களாலும் விதைக்கப்படும் எண்ணத்தாலும் ஏற்படுவது.  

இதை ஓரளவுக்கு நிவர்த்தி செய்துவிட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. இப்போது நம்முடைய சுய-மேம்பாடு மற்றும் சுய-ஊக்குவிப்புகள் (self improvement and self motivation) ஆகியவைகளை அதிகரித்துக்கொள்ள பல புத்தகங்கள் கிடைக்கின்றன. பயிற்சி பாசறைகளுக்கும் (workshops) பஞ்சமில்லை. இவை ஒரு சில நாட்களில் நம்முடைய திறனை  மேம்படுத்திவிட வாய்ப்பில்லையென்றாலும் காலப்போக்கில் நம்முடைய தரத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு. அதாவது இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மால், நம்முடைய முயற்சிகளால் நிவர்த்தி செய்துக்கொள்ளக் கூடியது எனலாம். இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் இருக்கும் இருக்கவும் வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நம்மால் நாம் இப்போது இருக்கும் இடத்திலாவது நிலைத்து நிற்க இத்தகைய மனப்பான்மை அவசியமானதும் கூட! 

2. வாலிபப் பருவத்தில் அதாவது கல்லூரி காலத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை. 

இத்தகைய மனப்பான்மை பெரும்பாலும் நாமாகவே ஏற்படுத்திக்கொள்வது. இதற்கு அடிப்படையான குறைபாடு என்று நாம் கருதுவது பல சமயங்களில் மிகவும் அற்ப விஷயமாகக் கூட இருக்கக் கூடும். 

நான் உயரத்தில் குட்டை அல்லது நான் கருப்பு அல்லது என் முகம் பார்ப்பதற்கு அழகாக இல்லை அல்லது என் தலை மூடி அவளைப் போல நீளமாக இல்லை இது மாதிரியான உருவ ரீதியான குறைபாடுகளால் ஏற்படுவதுண்டு. 

இன்னும் சிலருக்கு தங்களுடைய ஏழ்மை மற்றும் தாங்கள் சார்ந்திருக்கும் சாதி கூட தங்களை மற்றவர்களை விட தாழ்ந்தவர்களாக கருத  வைத்துவிடுவதுண்டு. 

உண்மையில் பார்க்கப் போனால் இவை எதுவும் ஒரு குறைபாடே இல்லை என்பதும் இதனால் எல்லாம் யாரும் இவர்களை ஒதுக்குவதில்லை என்பதும் இவர்களுக்கு எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் தெரிவதில்லை. இவை ஏதோ தங்களுக்கு மட்டுமே உள்ள குறைபாடாக எண்ணி, எண்ணி மருகுவார்கள். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை நாளடைவில் இவர்களுடைய முன்னேற்றத்தையே பாதிக்கும் அளவுக்கு தீவிரம் அடைந்துவிடுவதுண்டு. 

மேலும் இத்தகைய மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றவர்களுடைய அதாவது தங்களை தாழ்ந்தவர்களாக கருதி ஒதுக்குபவர்களை (இதுவும் கூட இவர்களுடைய கற்பனைதான்) கவர்வதற்காகவே தங்களுடைய சக்திக்கு மீறியதை செய்து சாதிக்க விரும்புவார்கள். அதாவது தங்களை உயர்ந்தவர்களாக (superior) காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். 

இத்தகையோரை பல அலுவலகங்களிலும் பார்க்கலாம். இவர்களுள் பெரும்பாலும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு அலுவலிலும் வெற்றியடைந்தால் அதற்கு தாங்கள் மட்டுமே காரணம் என்றும் தோல்வியில் முடிந்தால் மற்றவர்கள்தான் காரணம் என்று கூறுவார்கள். 

இத்தகையோர் மற்றவர்களுடைய கவனத்தை தங்கள் பால் ஈர்க்க எத்தகைய தில்லுமுல்லுகளிலும் ஈடுபட தயங்க மாட்டார்கள். எப்போதும் பிறர் தங்களை மட்டுமே வஞ்சிப்பதாக எண்ணிக் கொள்வார்கள். எல்லா துயரங்களும் தங்களுக்கு மட்டுமே நடப்பதாக சொல்லி சொல்லி புலம்புவார்கள். பிறருடைய சிறிய தவறுகளுக்கும் அவர்களை குறை கூறுவதில் முனைப்பாய் இருக்கும் இவர்களால் தங்களை மற்றவர்கள் குறை கூறுவதை பொறுத்துக்கொள்ள  முடியாது. சொந்த சகோதரனைக் கூட தன்னுடைய போட்டியாளனாக கருதும் இவர்கள் வாழ்க்கை முழுவதையும் மற்றவர்களுடன் போட்டி போடுவதிலேயே கழித்துவிடுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தகைய மனப்பாங்கை துவக்கத்திலேயே கண்டுபிடித்து களையாவிட்டால் நாளடைவில் தீராத மன அழுத்தத்திற்கும் இவர்கள் ஆளாக வாய்ப்புண்டாம்!

தாழ்ச்சியும் (Humility) தாழ்வு மனப்பான்மையும் 

தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் பலரும் தங்களை தாழ்ச்சியுள்ளவர்களைப் போல் காட்டிக்கொள்வார்களாம். அதாவது மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என்று உள்ளூர நினைத்தாலும் தாங்கள் அத்தகைய புகழ்ச்சிக்கு ஏற்றவர்கள் அல்ல என்று வெளியில் காட்டிக்கொள்வார்கள். 

தங்களைத் தாங்களே முழுமையாக உணர்ந்துக்கொள்பவர்களால் மட்டுமே தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க முடியும் என்கிறார் நம்முடைய தேசப் பிதா மகாத்மா காந்தி அவர்கள். 'என்னை நானே தெரிந்து வைத்திருக்கவில்லையென்றால்...' அதாவது என்னுடைய பலம் எது பலவீனம் எது என்று எனக்கே தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் தாழ்ச்சியுள்ளவர்கள் தன்னை மட்டுமல்லாமல் தன்னுடன் பழகுபவர்களையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். இத்தகையோர் மற்றவர்களுடைய வலிமையையும் (positives) வலிவின்மையையும் (negatives) நன்கு அறிந்து வைத்திருந்து அவர்களுடைய வலிமையை பயன்படுத்திக்கொள்வதுடன் அவர்களுடைய வலிவின்மைகளை களையவும் உதவுவார்கள். தங்களுடைய சாதனைகள் அனைத்துக்கும் தங்களுடன் உழைத்தவர்களையும் சொந்தக்காரர்களாக்கும் பெருந்தன்மையும் இவர்களிடம் இருக்கும். 

இப்போதெல்லாம் இத்தகைய எந்த நற்குணங்களும் இல்லாத தாழ்வு மனப்பான்மையுள்ளவர்கள் தங்களையும் தாழ்ச்சியுடையவர்கள் போல் காட்டிக்கொண்டு நடப்பதை நம் அன்றாட வாழ்க்கையில் மிக அதிக அளவில் காண முடிகிறது. 

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் 'கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு' என்பதை நம்புவோர் தாழ்ச்சியுடையோர். இதற்கு நேர் எதிரான சிந்தனையுடையோர் தாழ்வு மனப்பான்மையுடையோர்!

********

08 ஜூலை 2014

தனிமையிலே இனிமை காண முடியுமா?

தனிமையும் (loneliness) பிறரால் வேண்டப்படாமையுமே (feeling of being unwanted) இன்றைய உலகின் மிகப் பெரிய கொடுமை என்றார் அன்னை திரேசா.

அதே சமயம் தனிமை என்பது மட்டுமே கொடுமையல்ல என்பதும் தனித்து இருப்பது மட்டுமே தனிமையல்ல என்பதும் உண்மைதான். 

நம்மைச் சுற்றி ஆயிரம் நபர்கள் இருக்கும் சூழலிலும் நம்மில் சிலர் தனித்து விடப்படுவதுபோல் உணர்கிறோமே அந்த தனிமைதான் கொடுமையான விஷயம். 

அதுவும் முதுமையில் வரும் தனிமை.... அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் வேதனை. 

நானும் என்னுடைய சர்வீசில் சுமார் பத்தாண்டு காலம் என் குடும்பத்தாரை விட்டு தனியாக இருந்திருக்கிறேன். 

மும்பையில் இருந்தபோது தனிமை ஒரு பாரமாக தெரியவில்லை. ஏனெனில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு பத்து மணி ஆகிவிடும். அதன் பிறகு எனக்கென எதையாவது சமைத்து உண்டுவிட்டு படுக்கச் செல்லும்போது நள்ளிரவாகிவிடும். நான் மேலாளராக இருந்த கிளையில் வேலைப் பளு அதிகம் என்பதால் வார இறுதி நாட்களில் கூட அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும். ஆகவே தனித்து இருக்கும் சூழல் மிகவும் அரிதாக இருந்தது. 

ஆனால் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து கொச்சியில் மீண்டும் தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது தனிமை என்ன வாட்டி எடுத்தது. ஏனெனில் நான் பணியில் இருந்த பயிற்சிக் கல்லூரியில் பணிச்சுமை அவ்வளவாக இல்லை. மேலும் என்னுடைய குடியிருப்பு கல்லூரி கட்டடத்திலேயே இருந்ததாலும் அந்த கட்டிடம் பஜாருக்கு நடுவில் இருந்ததாலும் அண்டை அயலார் என்று யாரும் இருக்கவில்லை. மாலை ஆறு மணிக்கு கல்லூரியிலிருந்து புறப்பட்டால் ஒரு சில நொடிகளில் குடியிருப்பை அடைந்துவிடலாம். அதிலிருந்து அடுத்த நாள் காலை பணிக்குச் செல்லும்வரை தனிமைதான். வார இறுதி நாட்களில் கேட்கவே வேண்டாம். சனிக்கிழமை பகலிலிருந்து திங்கட்கிழமை காலை பத்து மணி வரையிலும் பேச்சு துணைக்குக் கூட ஆள் இருக்காது. வீட்டில் ஒரேயொரு துணை தொலைக் காட்சிப் பெட்டிதான்! எனக்கு இன்னொரு துணையாக இருந்தவை புத்தகங்கள்.  எங்கள் கல்லூரிக்கு எதிரிலேயே ஆங்கில புத்தகங்களை வாடகைக்கு விடும் ஒரு நூலகம் இருந்தது. அங்கு தங்கியிருந்த நான்காண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருப்பேன். 

ஆனாலும் எத்தனை நேரம்தான் படித்துக் கொண்டிருக்க முடியும்? அல்லது தொலைக்காட்சியை பார்க்க முடியும்? சில சமயங்களில் எதிலுமே மனம் செல்லாமல் சென்னையில் இருக்கும் மனைவி மக்களையே மனம் சுற்றி வரும். இப்படியொரு வாழ்க்கை தேவைதானா என்றெல்லாம் தோன்றும். பதவி உயர்வு தேவையில்லை என்று இருந்திருந்தால் ஊரோடு இருந்திருக்கலாமே என்று தோன்றாத நாளே இல்லை எனலாம். 

அப்போதுதான் தனிமையின் தாக்கத்தை முழுவதுமாக உணர ஆரம்பித்தேன். 

இளம் வயதில் தனித்திருப்பது மனத்தளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதுவே முதிய வயதில் தாங்கொண்ணா துன்பமாக தெரிகிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் சென்னையில் ஒரு பலமாடி குடியிருப்பில் வசித்தபோது என்னுடைய குடியிருப்புக்கு எதிரில் ஒரு முதிர்ந்த தம்பதி குடியிருந்தனர். கனவருக்கு எண்பது வயதும் அவருடைய மனைவிக்கு எழுபத்தைந்து வயதும் இருக்கும். அவர்களுடன் அவருடைய மகனும் மருமகளும் ஒரு பேரனும் இருந்தனர். சில மாதங்களில் ஏதோ குடும்பத்தகராறில் மகன் தன் மனைவி மற்றும் மகனுடன் அவர்களை விட்டு பிரிந்து செல்ல தம்பதியினர் தனித்து விடப்பட்டனர்.  அந்த பிரிவே அவர்கள் இருவரையும் நோயில் தள்ளியது. அடுத்த ஆறு மாதத்தில் மனைவி மாரடைப்பால் மரித்துவிட மகனும் மகளும் திரும்பி வந்து தந்தையுடன் வசித்தனர். ஆனால் ஒரு சில மாதங்கள்தான். மீண்டும் பிரச்சினை. தள்ளாத வயதிலிருந்த தந்தையை மீண்டும் தனியே விட்டுவிட்டு மகன் சென்றுவிட முதியவர் தனிமையின் துயரம் தாளாமல் பல சமயங்களில் அழுவதை கேட்க முடிந்தது. மகன் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வார். ஆனாலும் முதியவரால் தனிமையின் பாரத்தை தாங்க முடியவில்லை. ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள் இரவு உறக்கத்திலேயே மரித்துப் போனார். அவர் மரித்த விவரமே இரண்டு தினங்கள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிந்தது. 

இதுதான் தனிமையின் விளைவு.

இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகளிலும் இதே பிரச்சினைதானாம். 

இங்கிலாந்தில் எழுபத்தைந்து வயதைக் கடந்த பலரும் இன்று தனிமையில்தான் வாடுகின்றனராம். தொலைக்காட்சி பெட்டி ஒன்றுதான் அவர்களுக்கு துணையாக உள்ளதாம். 

இந்த தனிமை நகர்ப்புறங்களில்தான் அதிகம். இதற்கு வளர்ந்துவரும் நாகரீகமும், நம்முடைய வாழ்க்கை முறையுமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 

தனிமை என்பதும் தனித்துவிடப்படுதல் என்பதும் வெவ்வேறு. 

நண்பர்கள் புடைசூழ இருக்கும் சூழல்களிலும் நம்மில் சிலர் தனித்துவிடப்பட்டுவிட்டதைப் போல் உணர்வதுண்டு. நானும் அதுபோல் உணர்ந்திருந்திருக்கிறேன். அதற்கு நம்முடைய அணுகு முறையும் ஒரு காரணம். நம்மில் சிலர் யாரையும் சட்டென்று நண்பர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. பிறரிடம் நாமாக சென்று பேசுவதில்லை. யாராவது வந்து நம்மிடம் பேசினால் நாமும் பதிலுக்கு பேசுவோம். அதுவும் அளவோடு. நானும் ஒருவகையில் அப்படித்தான். கொச்சியில் நான் குடியிருந்த கட்டிடத்திலேயே பல அலுவலகங்கள் இருந்தன. அதில் இயங்கிவந்த சில முக்கிய இலாக்கா அதிகாரிகளும் என்னைப் போலவே அதே கட்டிடத்தில்தான் தங்கள் குடும்பத்துடன் குடியிருந்தனர். ஆனாலும் என்னால் அவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. எங்களுக்குள் மொழி பேதம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் எனக்கும் மலையாளம் நன்றாக பேச வரும். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம். ஒதுங்கியே இருப்பேன். அவர்களாக வந்து பேசினால் பேசுவேன். 

இந்த மனநிலையிலுள்ளவர்கள்தான் தாங்கள் தனித்துவிடப்பட்டிருப்பதாக உணர்வார்கள் போலுள்ளது. இத்தகையோர் ஒரு கூட்டத்தில் இருந்தால் இவர்களுடைய மனநிலை அவருடன் இருப்பவர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது யாரும் உடன் இல்லாவிட்டால்தான் தனிமையாக தோன்றும் என்றில்லை. 

அதே சமயம் தனிமையில் இருப்பவர்கள் அனைவரும் தனிமையாக உணர்வார்கள் என்றும் இல்லை. தனிமையில்  இருப்பதை விரும்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக படைப்பாளிகள், ஓவியர்கள், இசைக் கலைஞர்கள்.... இவர்களுக்கு தனிமையில்தான் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தோன்றுமாம். 

உண்மைதான். சிறையில் இருந்த காலத்தில்தானே நேரு, அண்ணா போன்றவர்கள் தங்களுடைய மிகச் சிறந்த படைப்புகளை படைத்திருக்கின்றனர்!

ஆக தனிமை என்பது நோயல்ல. அதாவது தனிமையிலும் இன்பம் காண்கின்ற மனப்பாங்கு உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல. 

ஆனால் நண்பர்கள், உற்றார் உறவினர் தங்களைச் சுற்றிலும் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் தனித்து விடப்படும்போது அதாவது அவர்கள் பிறரால் வேண்டப்படாதவர்களாக கருதப்படும்போது அது அவர்களுடைய உயிரையே குடிக்கும் அளவுக்கு வேதனையாக மாறிவிடுகிறது. 

"Loneliness has also been described as social pain — a psychological mechanism meant to alert an individual of isolation and motivate him/her to seek social connections." என்கிறது ஒரு ஆய்வுக் கட்டுரை.

அதாவது தனிமை ஒரு சமுதாயம் ஒருவருக்கு அளிக்கும் துன்பம் என்றும் கூறலாமாம். ஒருவர் தன்னை சார்ந்தவர்களால் வேண்டுமென்றே தனிமைப் படுத்தப்படும்போது சம்மந்தப்பட்டவரால் அதை எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதாம். தனிமையின் துயரம் வயது ஆக, ஆக கூடிக்கொண்டே போகிறதாம். 

தனிமை என்பது மனிதனுக்கு புதிதல்ல. அவன் இவ்வுலகில் வரும்போதும் தனியாகத்தான் வருகிறான். உலகை விட்டு பிரியும்போதும் தனியாகத்தான் செல்கிறான். இதை உணர்ந்துக்கொள்பவர்களுக்கு தனிமை பழகிப்போய்விடும் என்கிறது இன்னொரு ஆய்வு.  

தனிமையிலே இனிமைக் காண முடியுமா என்றார் கண்ணதாசன். அது இரவினிலே சூரியனைக் காண நினைப்பதுபோலத்தான் என்கிறார். 

இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம் தனிமையை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நாம் அனைவருமே தனிமையை தனியாக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது நிச்சயம். ஆகவே அதை எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த தனிமை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். தினசரி அலுவகள் ஏதும் இல்லாத சூழல் மட்டுமல்லாமல் வளர்ந்துவிட்ட குழந்தைகள் தங்களுடன் இல்லை என்கிற உணர்வும் இத்தகைய உணர்வுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுதான் வாழ்க்கை, இதுதான் நிதர்சனம் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள் தங்களுடைய சிந்தனைகளை பல ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்தி தனிமையை எதிர்கொள்கின்றனர். ஆனால் நட்பு, சுற்றம், சூழல் என்று கலகலப்பாக இருந்து பழகிப் போனவர்களால் அதை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. 

இத்தகையோர் நட்பும் சொந்தமும் நம்முடைய வாழ்வின் இறுதிவரையிலும் உடன் வருவதில்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். தனிமை என்பது பிறரால் ஏற்படுவதல்ல. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் உணர வேண்டும். கடமைகளை செவ்வனே செய்து முடித்துவிட்ட நிம்மதியை தனிமையில்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். கடந்த கால சுகமான நினைவுகளை அசைபோடுவதே தனிமையை முறியடிக்க உதவும் நல்லதொரு ஆயுதம். அதை யாரும் நமக்கு மறுக்க முடியாதே. 

*********** 



27 ஜூன் 2014

நடிகரின் தற்கொலை - காரணம் என்ன?

இன்று காலையில் பத்திரிகையைத் திறந்ததுமே கண்ணில் பட்ட செய்திகளில் ஒன்று ஐம்பத்து நான்கு வயதே ஆன தமிழ் திரைப்பட நடிகர் பால முரளி மோஹனின் தற்கொலை!

அதே பகுதியில் வெளியாகியிருந்த இன்னொரு செய்தி சென்னை கோயம்பேட்டிலுள்ள தெற்காசிய விளையாட்டு சென்னையில் நடைபெற்றபோது வீரர்கள் தங்க கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்த ஐம்பது வயது கூட நிரம்பாத பெண் ஒருவர் அவருடைய குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை!

நான் குடியிருக்கும் பகுதியில் வசித்து வந்த ஒரு இளைஞர் (நாற்பது வயது கூட ஆகியிருக்கவில்லை) தற்கொலை செய்துக்கொண்ட இரண்டாம் வருட நினைவு நாள் நேற்று!

ஏன் இந்த நிலை?இதுபோன்ற செய்திகள் வெளிவராத நாளே இல்லை என்னும் அளவுக்கு தற்கொலைகள் பெருகிக்கொண்டே போவதைக் காண முடிகிறது.

இதற்கு என்ன காரணம்?


எல்லா புகைப்படங்களிலும் குழந்தைத்தனமான புன்னகையுடன் காட்சியளிக்கும் நடிகர் பால முரளி மோஹனா தற்கொலை செய்துக்கொண்டார்? இதற்கு கடந்த ஆறு மாதங்களாக நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லை என்ற காரணம் என்கிறார்கள்.

என்னுடைய பகுதியில் வசித்தவருடைய தற்கொலைக்கு அவருடைய அலுவலக தோழர்கள் பல காரணங்களை கூறினார்கள். ஒருவர் அவருக்கு பல வியாதிகள் இருந்தன என்றார். 'இன்னும் ரெண்டு நாள்ல அவருக்கு ஹெர்னியா ஆப்பரேஷன் இருந்துது சார்.' ஒரு ஹெர்னியா சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்துக்கொள்வாரா என்று வியந்துபோனேன். ஏனெனில் அவர் நல்ல திடகாத்திரமானவராகத்தான் தெரிந்தார். தினமும் பேட்மின்டன் விளையாடுவார். சரியான எடையுடன் வயதுக்கேற்ற உருவம் கொண்டவர். இன்னொருவர் 'அவருக்கு ட்ரிங்ஸ் ஹேபிட் இருந்துது சார். கொஞ்ச நாளாவே ஜாஸ்தியா குடிப்பார்.' இப்போது யாருக்குத்தான் இந்த பழக்கம் இல்லை என்று தோன்றியது.  

இதுபோன்ற காரணங்கள் எல்லாமே தற்கொலை செய்துக்கொண்டவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய நண்பர்களால்/உறவினர்களால் முன்வைக்கப்படுபவையே. இவை மட்டுமே ஒருவரை தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுமா என்று ஆய்ந்து பார்த்தால் வியப்புதான் மிஞ்சும்.

இது இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. இது நம்முடைய நாட்டை மட்டுமே ஆட்டிப்படைக்கும் விசித்திரமும் இல்லை. 

மனித குலம் தோன்றிய நாள் முதலே இருந்துவரும் பழக்கம்தான் இது. 

பண்டைக் காலங்களில் கிரேக்க நாட்டில் தற்கொலை செய்துக்கொள்பவரை புதைக்க இடம் வழங்க மறுக்கப்படுமாம். 

அத்தகையோரை ஊருக்கு வெளியே அனாதைப் பிணமாகத்தான் புதைப்பார்களாம். மற்ற கல்லறைகளில் வைக்கப்படுவதைப் போன்ற அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு அனுமதி இல்லையாம். 

இங்கிலாந்து நாட்டில் பதினேழாம் நூற்றாண்டில் தற்கொலை செய்துக்கொண்டவரின் உடலை கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று குப்பைகள் கொட்டும் இடத்தில் வீசி எறிந்துவிடுவார்களாம். 

ஆக, தற்கொலை ஒரு இழுக்கான செயலாகவே அன்று முதல் கருதப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. 

தற்கொலை செய்துக்கொண்டு மரிப்பவர்களுக்கு அவர்களுடைய துன்பங்களிலிருந்து, அவர்களுடைய கவலைகளிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் விடுதலை கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர்களுடைய அந்த முடிவுக்கு காரணகர்த்தாவாக சமுதாயத்தால் கற்பிக்கப்படும் அவர்களுடைய சொந்த பந்தங்கள் படும் அவமானத்திற்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அதுவே ஆரம்பமாகிவிடுகிறது. அதிலிருந்து விடுபட முடியாமல் அவர்கள் படும் அவஸ்தையை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். 

தற்கொலை யார், ஏன் செய்துக்கொள்கிறார்கள்?

சமீபத்திய ஆய்வுகளின்படி தற்கொலை செய்துக்கொள்பவர்களில் மிக அதிக அளவிலான விழுக்காடு இளம் வயதினராம். 

அதிலும் பெண்கள்தான் அதிக அளவில் இத்தகைய முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்களாம். 

இத்தகையோர் ஏன் இந்த முடிவுக்கு வருகிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள்?

இதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

இவற்றுள் முதலாவதாக கருதப்படுவது மன அழுத்தம் (Depression).

இன்றைய அதிவேக உலகில் மன அழுத்தம் இல்லாதவர்கள் இருக்க முடியுமா என்ன?

மன அழுத்தம் யாருக்குத்தான் இல்லை!

முன்பெல்லாம் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும்தான் மன அழுத்தம் ஏற்படும் என்பார்கள். 

பொருளாதார பிரச்சினையில் குறிப்பாக மிக அதிக அளவிலான கடன் தொல்லை உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. திருமண வாழ்க்கையில் பிரச்சினை. வேலையை இழந்துவிடுவதால் ஏற்படும் வேதனை, அவமானம். இவைகள்தான் ஒருவரின் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்பட்டு வந்தன. 

ஆனால் இந்த வட்டத்திற்குள் தற்கொலை விழுக்காடு மிக அதிக அளவில் உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் 15வயதிலிருந்து 30 வயதுக்குள்ளவர்கள் வருவதில்லையே?

உண்மைதான். 

தற்கொலை என்கிற திரும்பி வர முடியாத எல்லைக்கு (point of no return) இட்டுச் செல்ல மிக முக்கியமான காரணமாக கூறப்பட்டு வரும் மன அழுத்தத்திற்கு இதுவரை மிக மிக அற்பமான காரணங்களாக (silly reasons) கருதப்பட்டு வரும் பல நிகழ்வுகள்தான் இன்றைய இளைஞர்களுடைய தற்கொலைக்கு பிரதான காரணமாக பட்டியலிடப்படுகின்றன. 

1. பள்ளி, கல்லூரிகளில் சக மாணவர்கள் முன்பு ஏற்படும் அவமானம்.
2. சக மாணவர்களால் ஏற்படும் அவமானங்கள் (ragging)
3. தேர்வுகளில் ஏற்படும் தோல்விகள்,
4. ஒருதலைக் காதலில் தோல்வி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவி ஒருவர் சக மாணவிகளிடம் அனுபவித்த தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட செய்தி வெளிவந்திருந்ததே. அதில் தன்னை குளிக்க விடாமல் சீனியர் மாணவிகள் சிலர் தடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்தாராம்!

இக்கால இளைஞர்களுக்கு எதனால் எல்லாம் மன உளைச்சல் ஏற்படுகிறது பாருங்கள்! 

நான் தஞ்சையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு இயங்கிக்கொண்டிருந்த தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துக்கொண்டார்கள். அதற்கு அவர்கள் சமர்ப்பித்திருந்த ஆய்வுக்கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர் அற்பமான காரணங்களைக் காட்டி நிராகரித்து வந்ததுதான் முக்கிய காரணமாக கூறப்பட்டது! அதே போன்று நான் மும்பையில் பணியாற்றியபோது மும்பை பாபா அணு ஆராய்ச்சி கழகத்திலும் (Baba Atomic Reserce Centre- BARC) இத்தகைய தற்கொலைகள் சர்வ சாதாரணமாக நடப்பதை கேட்டிருக்கிறேன். பேராசிரியர்கள்-ஆராய்ச்சி மாணவர்களுக்கிடையிலுள்ள தலைமுறை இடைவெளிதான் (Generation Gap)இதற்கு முக்கிய காரணமாக அப்போது கூறப்பட்டது. அது இன்றும் விடை காண முடியாத பிரச்சினையாகத்தான் இருந்து வருகிறது என்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினரின் தற்கொலைக்கு மேற் கூறிய நான்கு காரணங்களுக்கு அடுத்ததாக கருதப்படுவது போதைப் பழக்கம். இந்த பழக்கத்திற்கு தங்களையும் அறியாமல் இழந்துவிடும் இளைஞர்கள் அதிலிருந்து மீள முடியாமல் இறுதியில் அதற்கு தற்கொலை ஒன்றுதான்  தீர்வு என்கிற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். 

ஆக ஒருவருடைய தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது மன அழுத்தம்தான் என்பது தெளிவாகிறது. 

அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

இதற்கு மன அழுத்தத்திற்கு உள்ளானவர் மட்டுமே முயற்சி செய்தால் போதாது. இதில் அவரைச் சுற்றியுள்ள குறிப்பாக அவருடைய நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை விட மிக முக்கியமானவர்களாகக் கருதப்படும் நண்பர்கள் ஆகியோரின்  பங்கு மிக, மிக முக்கியமானது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

ஆனால் இத்தகைய மன அழுத்தத்திற்கு தங்களுடைய குழந்தைகள் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை பல பெற்றோர்கள் கடைசி நிமிடம் வரையிலும் அறிந்துக்கொள்வதே இல்லை. பலருக்கு அது பாதிக்கப்பட்டவர்களுடைய தற்கொலைக்குப் பிறகே தெரிய வருகிறது என்பதுதான் வேதனை. இதற்கு குறுகி வரும் குடும்பங்களே முக்கிய காரணம். கணவன், மனைவி ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என சுருங்கிவிட்ட குடும்பங்களில் துயரங்களை பகிர்ந்துக்கொள்ள யாருக்கு  நேரம் இருக்கிறது? 'இவனுக்காகத்தானங்க நாங்க ரெண்டு பேரும் நாள் பூரா உழைக்கிறோம்? இதை ஏன் இவன் புரிஞ்சிக்காம போய்ட்டான்?' என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள்தான் இப்போது அதிகம். பணம் மட்டுமே தங்களுடைய குழந்தைகளின் துயரங்களை போக்கிவிடும் என்று நம்பும் பெற்றோர் அது மட்டும் போதுமா என்று பெற்றோரின் அன்புக்காக, அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்காக ஏங்கும் குழந்தைகள்..... இது ஒரு தீர்வு காண முடியாத பிரச்சினையாக உருவெடுப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துக்கொண்டுள்ளோம்?

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் அனைவருமே தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள் என்பது பொருளல்ல. ஆனால் அது முளையிலேயே கண்டறியப்பட்டு கிள்ளியெறியப்படாவிட்டால் அது தற்கொலையில் சென்று முடியுமாம். 

எதற்கெடுத்தாலும் தற்கொலைக்கு துணிபவர்கள் அதிகமாகி வரும் இன்றைய சூழலில் இதுதான் காரணம் என்று கண்டுக்கொள்வது அத்தனை எளிதல்ல என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஆனால் நம்மில் பலரும் நமக்கு நெருங்கியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என்று மிரட்டும்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 'இவர் எப்பவுமே இப்படித்தாங்க' என்று மனைவியே அலட்சியப்படுத்துவதை பார்க்கலாம். பெரும்பாலான சமயங்களில் புலி வருது, புலி வருது என்று கூறுவார்களே அத்தகைய மிரட்டலைப் போன்றதுதான் இதுவும் என்று பொருட்படுத்தாமல் இருந்துவிட்டு அதை நிஜமாகும்போதும் தங்களைத் தாங்களே குற்றவாளிகளாக கருதிக்கொள்வது சகஜமாகிவிட்டது. 

தற்கொலை செய்துக்கொள்பவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தங்களுடைய எண்ணத்தை தனக்கு நெருங்கியவர்களிடம் கோடிட்டு காட்டாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அவற்றை சரியாக நேரத்தில் இனம்கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகிறோம். குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். அதுபோல் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அடிக்கடி கூறுபவர்கள் அதை செய்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரு தவறான எண்ணமே பலருடைய தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. 

ஆகவே, விழிப்பாயிருப்போம். மன அழுத்தம் எந்த ரூபத்திலும் வெளிப்படலாம். அது நமக்கு நெருங்கியவர்களிடம் காணப்படும்போது அலட்சியப்படுத்தாமல் அவர்களுடைய குறைகளைக் கேட்போம். அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்க நம்மால் ஆனவற்றை செய்வோம்.  

************