01 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 4

நேற்றைய பதிவில் மும்மொழிப் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு காராணமாக கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பற்றி எழுதியிருந்தேன்.

ஆனால் உண்மையில் அதுவல்ல காரணம் .

புதிய கொள்கை வரைவு அறிக்கையின் 82ம் பக்கத்தில் (பத்தி 4.5.4) குறிப்பிடப்பட்டுள்ள வாக்கியங்களை அப்படியே மொழிபெயர்த்து தருகிறேன்.

“ நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதலே ஆங்கில மொழியில் மட்டுமே புலமை வாய்ந்த (15 விழுக்காடு உள்ள) ‘மேல்தட்டு மக்கள்’ 55 விழுக்காடுக்கும் அதிகமாகவுள்ள ஹிந்தி பேசும் மக்களை தங்கள் ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர். இதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு புதிய கல்விக் கொள்கை தேவைப்படுகிறது .”

இதுதான் இந்த புதிய கொள்கையின் உண்மையான காரணம்.

அதாவது, இதுவரை ஒடுக்கப்பட்டிருந்த ஹிந்தி பேசும் பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வில் ஒரு புதிய ஒளி ஏற்றுவதுதான் இந்த கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மும்மொழிப் பாடத் திட்டத்தின் மூல நோக்கம் என்றாலும் மிகையாகாது!

அதே சமயம் கொள்கை வரைவில் எந்த இடத்திலும் மூன்றாவது மொழியாக இந்தியை மட்டுமே மாணவர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப் படவில்லை என்பதும் உண்மை. அதை தீர்மானிக்கும் உரிமையை மாணவர்களுக்கே விட்டுக்கொடுத்துள்ளது.

சரி, மாணவர்களின் விருப்பத்தை யார் முடிவு செய்வார்கள் என்று பார்த்தால் அங்குதான் சிக்கலே.

புதிய கல்விக் கொள்கையின் படி பள்ளிப் பருவ காலம் தற்போது நடைமுறையிலுள்ள 10+2 என்ற முறையிலிருந்து 5+3+3+4 ஆக திருத்தியமைக்கப்பட வுள்ளது.

இது

1. ஐந்து வருட அடித்தள நிலை (Foundation) - 3 வயதிலிருந்து 8 வரை - தற்போதைய மழலை வகுப்புகள், 1 & 2 KG, 1,2 வகுப்புகள்
2. மூன்று வருட ஆயத்த நிலை (Preparatory) 8 வயது முதல் 11 வயது வரை -
தற்போதைய 3 - 5 வகுப்புகள்
3. மூன்று வருட நடு நிலை = 11லிருந்து 13 வயது வரை - 6,7,8 வகுப்புகள்
4. நான்கு வருட மேல்நிலை கல்வி (High)- 14 முதல் 18 வயதுவரை - 9,10,11,12 வகுப்புகள்.

இவற்றுள் அடிப்படைக் கல்வி நிலையிலேயே அதாவது அடித்தள நிலையிலிருந்தே மும்மொழி கல்வி அறிமுகப்படுத்தப்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் மூன்று வயதிலிருந்து எட்டு வயது வரையிலும் குழந்தைகளுக்கு புதிய மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் எந்த மொழியையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்று ஆய்வறிக்கைகள் கூறுகின்றன’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 79).

இந்த வயதில் மூன்றாவது மொழிப் பாடமாக தெரிவு செய்யும் திறன் நிச்சயம் குழந்தைகளிடம் இருக்கப் போவதில்லை.

ஆகவே இதை தீர்மானிக்கப் போவது 1. பெற்றோர்கள் அல்லது 2. பள்ளி நிர்வாகம்.

ஒரு வகுப்பில் 40 மாணவர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் எந்த மொழியை அதிக மாணவர்கள் தெரிவு செய்கிறார்களோ அதைத்தான் மீதமுள்ள மாணவர்களும் தெரிவு செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள்.  ஏனெனில் ஒரு வகுப்புக்கு நான்கைந்து மொழிப்பாட ஆசிரியர்களை எந்த பள்ளி நிர்வாகத்தாலும் நியமிக்க முடியாது.

மேலும் மூன்றாவதாக இந்தியாவின் 8வது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள எந்த மொழியை வேண்டுமானாலும் மாணவர்கள் தெரிவு செய்துக்கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த மொழியை அதிக மக்கள் பேசுகிறார்களோ அல்லது எந்த மொழியை படித்தால் நம் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்குமோ அந்த மொழியைத்தான் பெற்றோர்களும் பள்ளி நிர்வாகமும் தெரிவு செய்வார்கள்.

அப்படிப் பார்த்தால் இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் பேசப்படும் மொழி இந்தி ஒன்றுதான். ஆகவே பெற்றோர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியை தெரிவு செய்யும் கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என்பது இந்த கொள்கையை தயாரித்தவர்களுக்கும் தெரியும் இப்போது மத்தியில் ஆட்சியிலுள்ளவர்களுக்கும் தெரியும்.

ஆகவே தான் இந்த மும்மொழிக் கல்வி திட்டமே எங்களுக்கு வேண்டாம் என்று குரலெழுப்ப துவங்கிய தமிழக எதிர் கட்சியாளர்களுடன் இணைந்து மக்களும் போராட்டத்தில் இறங்க வேண்டும் என்கிறேன்.

இது என்னை பாதிக்கப் போவதில்லை என்று ஒதுங்கியிராமல் தமிழக மக்கள் அனைவருமே விழித்தெழுந்து போராட வேண்டிய தருணம்.

நாளை இந்த கொள்கையால் கிராமப் புற மாணவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட் போகிறார்கள் என்பதை விவாதிக்கலாம்.


9 கருத்துகள்:

  1. தமிழக மக்கள் இதற்கெல்லாம் போராட மாட்டார்கள் ஐயா காரணம் கேட்டால் ? வேலைக்கு போனால்தானே சாப்பிடலாம் என்று அறிவாற்றலாக பதில் வரும்.

    அதேநேரம் எந்த நடிகையாவது கடையை திறந்து வைக்க வருகிறாள் என்றால் நாள் முழுவதும் வெயிலில் நிற்பார்கள் எருமை மாடு மாதிரி...

    தொடர்கிறேன் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.என்ன செய்வது? தனக்கென வரும் போது தான் இதன் தீவிரத்தை உணர்வார்கள்.

      நீக்கு
  2. இடுகையையே புரிந்து கொள்வ்து சிரமாயிருக்கும்போது திட்ட வரைவை எப்படித்தான் புரிந்து கொள்ள முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா. என்னுடைய தமிழாக்கம் குழப்பத்தை உண்டாக்கியிருக்கலாமோ? Let me go through it once again.

      நீக்கு
    2. என்னால் இயன்ற அளவு எளிமையாக்கியுள்ளேன். இப்போது படித்து பாருங்கள்.

      நீக்கு
  3. திணிப்பு எப்படி என்பதின் விளக்கம்...

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கு நன்றி நணபரே. இதில் இந்தி திணிப்பு என்பது மட்டுமல்ல பல குழப்பங்கள் உள்ளன.

    பதிலளிநீக்கு
  5. //ஹிந்தி பேசும் பெரும்பான்மை இந்தியர்களின் வாழ்வில் ஒரு புதிய ஒளி ஏற்றுவதுதான் இந்த கல்விக் கொள்கையில் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் மும்மொழிப் பாடத் திட்டத்தின் மூல நோக்கம் என்றாலும் மிகையாகாது! //

    சரியாய் கணித்திருக்கிறீர்கள். இது இந்தி பேசும் மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வரும் புதிய கல்விக்கொள்கை தான். இந்திய மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வரும் கொள்கை அல்ல.

    நீங்கள் சொல்வதுபோல் மூன்றாம் மொழியைத் தேர்தெடுக்கப்போவது மாணவர்களாக இருக்கப் போவதில்லை. எனவே இதை தீர்மானிக்கப் போவது பெற்றோர்கள் அல்லது பள்ளி நிர்வாகம் என்றாலும் பெற்றோர்கள் என்ன சொன்னாலும் பெரும்பாலும் பள்ளி நிர்வாகம் பல மொழி ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தாமல் நிர்வாக வசதி என்று சொல்லி இந்தி மொழி ஆசிரியரைத்தான் அமர்த்தும். எனவே நமது பிள்ளைகள் விரும்பாவிட்டாலும் இந்தியை கற்க மறைமுக கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

    இந்த நேரத்தில் தமிழகத்தில் உள்ள அனைவரும் (ஒரு சில ஆதரவாளர்களைத் தவிர) ஒன்று சேர்ந்து எதிர்த்து போராடினாலொழிய மும்மொழிக்கொள்கை என்ற இந்த மோசடிக்கு நம் பிள்ளைகள் இரையாகவேண்டி வரும்.

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் சார். இது மசோதாவாக பார்லியில் தாக்கல் படுவதற்கு முன்பு இதை தடுத்தாக வேண்டும். யார் எப்படி செய்யப் போகிறார்கள் என்பது தான் புரியாத புநிராக உள்ளது.

    பதிலளிநீக்கு