11 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பின்னணி.

வாராக் கடன்கள் 

2001ம் ஆண்டு வரை ஒரு கடன் கணக்கில் பற்று வைக்கப்படும் வட்டித் தொகையானது அது வாடிக்கையாளரால் திருப்பி செலுத்தப்பட்டாலும் நிலுவையில் இருந்தாலும் அது வங்கியின் வருமானமாக கருதப்பட்டது. இதன் விளைவாக வங்கிகள் தங்களுடைய ஆண்டு நிதிநிலை அறிக்கைகளில் காட்டி வந்த இலாப தொகைகள் உண்மையிலேயே ஈட்டப்பட்டதுதானா என்கிற ஐயம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட துவங்கியது. மேலும் பற்று வைக்கப்பட்ட வட்டித் தொகைகளை வசூலிப்பதில் வங்கிகள் போதிய அக்கறை காட்டுவதில்லை என்பதையும் இந்திய ரிசர்வ் வங்கி தங்களுடைய தணிக்கைகளில் கண்டுபிடித்தது.

இந்த குறையை போக்கும் நோக்கத்துடன் 31.3.2001ல் ஒரு சுற்றறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு அனுப்பியது. அதில்  வட்டி, அல்லது தவணைத் தொகை தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு செலுத்தப்படாமல் இருந்தால் அந்த கணக்குகள் குறையுள்ள கணக்குகளாக I(Substandard)கருதப்பட வேண்டும் என்றும் அத்தகைய கணக்குகளில் பற்று வைக்கப்பட்ட வட்டி தொகைகள் வங்கியின் இலாப கணக்கில் வருவாயாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்பட்டன.

இந்த அதிரடி உத்தரவால் நாட்டில் பல வங்கிகள் குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுடைய உண்மையான நிதி நிலை வெட்ட வெளிச்சமானது. இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த  பல வங்கிகள் நஷ்ட கணக்கு காட்ட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. 

மேலும் இத்தகைய கணக்குகள் வாராக் கடனாக கருதப்பட்டு அவற்றில் நிலுவையிலுள்ள தொகைகளில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையை ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் தங்களுடைய இலாபத்தில் இருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வங்கிகள் அறிவுறுத்தப்படவே வங்கிகளின் நிதிநிலமை இன்னும் மோசமானது. பெரும்பாலான பொதுத்துறை  வங்கிகள் பெருத்த இழப்பை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால் அவற்றின் முதலீடும் (capital) பெருமளவு சரியத் துவங்கியது.  வாராக் கடன்களின் அளவோ  2001 ஆண்டு இருந்த அளவிலிருந்து வளர்ந்து வளர்ந்து இப்போது ஒரு பூதாகரமான நிலையை அடைந்துள்ளதை கீழ்காணும் படத்தில் காணலாம்.  இத்தகைய கடன்களில் சுமார் 90 விழுக்காடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் என்கிறது ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை.


(1 trillion=1lakh crores)


அத்துடன் வங்கிகள் தங்களுடைய முதலீட்டில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரை மட்டுமே கடன் வழங்க முடியும் என்ற ரிசர்வ் வங்கியின் நிபந்தனையும் வங்கிகளின் கடன் வழங்கும் திறனை வெகுவாக பாதிக்க துவங்கியது. இதனை தொடர்ந்து வங்கிகளின் வருவாய் ஈட்டும் திறனும் சரியத் துவங்கியது. விளைவு? வங்கிகளின் நஷ்டம் நாளுக்கு நாள் பெருகி சில வங்கிகளின் முதலீடு முழுவதுமாக கரைந்து போயின. 

இந்த சூழலிலிருந்து பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்கத்தான் மத்திய அரசு அவ்வப்போது மத்திய நிதியிலிருந்து ஒரு கணிசமான தொகையை வங்கிகளுக்கு முதலீடாக வழங்கத்துவங்கியது. துவக்கத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் என்ற நிலை இப்போது இலட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. அதாவது மக்கள் செலுத்தும் வரிப்பணம் இத்தகைய வங்கிகளுக்கு முதலீடாக சென்றடைகின்றன. இதன் விளைவாக வரியை நேர்மையுடன் செலுத்தும் மக்களுக்கு நேரிடையாக எவ்வித பலனும் கிடைப்பதில்லை. சமூக நலத்திட்டங்களுக்கு செலவழிக்கவோ அல்லது இயற்கை சீற்றத்தால் விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய நிவாரணம் அளிக்கவோ அல்லது விவசாயக்கடன்களை ரத்து செய்யவோ போதிய நிதி இல்லை என்பதை காரணம் காட்டி புறக்கணிக்கும் மத்திய அரசு வங்கிகளின் முதலீட்டை கூட்டுவதற்கு லட்சோப லட்ச கணக்கில் வாரி இறைப்பது எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுவதில் என்ன தவறிருக்க முடியும்?

கடந்த நிதியாண்டில் பல பொதுத்துறை வங்கிகள் நஷ்ட நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளன என்று இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை தெரிவித்தாலும் இது உண்மையான நிலை அல்ல என்று பல பத்திரிகைகளும் பொருளாதார நிபுணர்களும் எழுதி வருவதை காண முடிகிறது. வாராக்கடனாக ஏற்கனவே கணிக்கப்பட்ட கணக்குகளை மறுசீரமைப்பு (restructuring) என்ற பெயரில் மறுவாழ்வு அளித்து அவற்றை இன்னும் சில மாதங்களுக்கு அதாவது அடுத்த நிதியாண்டு வரையிலும் வங்கிகள் நீட்டித்து வருகின்றன என்பதுதான் உண்மை. ஆனால் இவற்றில் நிலுவையிலுள்ள வட்டியையோ அல்லது மாதத் தவணைகளையோ சம்மந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து உண்மையிலேயே வசூலிக்கப்படுகின்றனவா என்பது சந்தேகமே. வங்கிகள் கடன்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிப்பதை விட எழுதித் தள்ளுவதே அதிகம் என்பதை கீழுள்ள படத்தை பார்த்தாலே தெரியும்இதுதான் இன்றை பொதுத்துறை வங்கிகளின் உண்மையான நிலமை.

ஜி20 நாடுகளில் இரண்டாவது மிகவும் மோசமான வங்கித் துறையைக் கொண்டிருப்பது இந்தியா என்கிறது உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை. பொதுத்துறை வங்கிகளின் இத்தகைய பரிதாபகரமான நிலைமைக்கு முக்கியமான காரணங்களாக உலக வங்கி முன்வைப்பது வங்கிகளின் கடன் கொள்கைகள்தானாம். அதாவது இந்திய வங்கிகளுக்கு வாடிக்கையாளரின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இல்லை என்றும் பெரும்பாலான வங்கி செயல்பாடுகளின் ஆட்சியாளர்களின் தலையீடு இருப்பதாகவும் உலக வங்கி சுட்டிக்காட்டுகிறது. 

இது எனக்கு தெரிந்தவரை உண்மை தான். இன்று வங்கிகளில் உயர்பதவியில் அமர்ந்திருக்கும் பல அதிகாரிகள் ஆட்சியாளர்களின் தயவாலும் பரிந்துரையாலும் அந்த பதவியை அடைந்தவர்களே. ஆகவே ஆட்சியாளர்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இது இப்போதைய ஆட்சியாளர்களை மட்டும் குறை சொல்வதில் பயனில்லை. வங்கிகள் எப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டனவோ அப்போதிலிருந்தே மத்தியிலும் மாநிலங்களிலும் அதிகாரத்திலுள்ளவர்களின் தலையீடு இருந்து வந்ததை மறுப்பதற்கில்லை. 

இத்தகைய சூழலில் நலிவடைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை இணைப்பதன் மூலம் சரிவை சரிக்கட்டிவிட முடியும் என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்திருப்பது வியப்பளிக்கிறது. 

அதை நாளை பார்க்கலாம்.....

13 கருத்துகள்:

 1. நல்லதொரு கட்டுரை. இது மிகப்பெரிய சுழலில் சிக்கிக் கொண்டிருக்கும் துறை.... சரியாக பல கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு யாரும் தயாரில்லை.

  தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால் அதற்கு யாரும் தயாரில்லை.//

   முதலில் இந்த பரிதாபகரமான நிலையை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். அதையே செய்ய மறுக்கிறார்களே? நோயுற்றவன் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று நினைத்தால்தானே மருத்துவம் பார்க்க முடியும்? வங்கிகள் நல்ல நிலையில்தான் உள்ளன என்கிறார் நிதியமைச்சர்.

   நீக்கு
  2. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நாகராஜ் அவர்களே.

   நீக்கு
 2. இன்றைய நிலை :- பொய்களை அள்ளி விடுபவர்களுக்கு, காரணங்கள் சொல்வதற்கு சிரமம் இருக்காது...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி.

   நீக்கு
 3. சரிவை சரிக்கட்டுவது என்றால் எப்படி ? இதன் சுமைகள் வாடிக்கையாளர்கள் மீது (மக்கள்) இறக்கப்படுமா ? தொடர்கிறேன் ஐயா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிவை சரிகட்ட இணைப்பு உதவப் போவதில்லை என்பதை அரசு உணரும் போது வங்கிகளின் சரிவு மீட்க முடியாத நிலையில் இருக்கப் போவது உறுதி. அப்போது ஆட்சியில் இருக்கப் போகிறவர்களுக்கு அது ஒரு பெரிய தலைவலியாக இருக்கும். ஆனால் மக்களுக்கு பெரிதாக பாதிப்பு இருக்காது.

   நீக்கு
 4. சில மதங்களுக்கு முன் ஒரு செய்தி இருந்தது பொதுமக்கள் வ்ங்கியில் இடும் தொகையை அதன் நஸ்ஆஊஊஈஈஊஸேஆ ஏஊஊஓள்ளலாம் என்று ருந்ததாக நினைவு பி அரசு அதை கைவிட்டதாகவு ம்நினைவு அடு குற்த்த வீடியோவைநாந்தேடவேண்டும் நினவுகள் சரியாக இல்லாமல் எக்ஸ்பிரெஸ் செய்ய இயலவில்லை

  பதிலளிநீக்கு
 5. நஷ்டத்தை ஈடு செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்ததாக நினைவு என்னிடமொரு வீடியோ இருந்தது எங்கு என்று தேட வேண்டும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது கிடைக்கும் போது பதிலிடுங்கள். வருகைக்கு மிக்க நன்றி சார்.

   நீக்கு
 6. பதினான்கு வங்கிகள் 1969 ஆம் ஆண்டு நாட்டுடைமை ஆக்கப்பட்டபோது என்ன ஐயம் ஏற்பட்டதோ அதே ஐயம் தற்போது பொதுத்துறை வங்கிகள் இணைப்பின் பின்னணியிலும் ஏற்பட்டிருக்கிறது என்பது உண்மை.

  அப்போது தனியார் வசம் இருந்த வங்கிகள் பெரும் முதலாளிகளுக்கு மட்டுமே உதவி புரிந்து வந்ததால் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வங்கி சேவை கிட்டுவதற்காக நாட்டுடைமையாக்கப் பட்டதாக சொல்லப்பட்டது.

  ஏழை எளிய மக்களுக்காக அவரவர் ஊர்களுக்கு அருகிலேயே வங்கி கிளைகள் திறப்பட்டதாலும், அரசின் கொள்கை முடிவின்படி வேளாண்குடிமக்கள், சிறு,குறு தொழில் முனைவோர் கைவினைஞனர்கள் போன்றோருக்கு வங்கிகள் கடன் உதவி செய்ததாலும் அவர்களின் வாழ்வில் சிறிது ஏற்றம் ஏற்பட்டது உண்மை. ஆனால் வாக்கு வங்கிக்காக அரசியல் வாதிகள் வங்கிகளில் தலையிட்டதால், வங்கிகள் கொடுத்த கடன்கள் வாராக் கடன்களாக மாறிவிட்டன.

  பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க அவைகளை இணைப்பதன் மூலம் சரிவை சரிக்கட்டிவிட முடியும் என அரசு நினைப்பது சரியிவில்லை. எனக்கென்னவோ திரும்பவும் நாம் 1969 ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கு முந்தைய நிலைக்கு செல்கிறோமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.

  எனது ஐயத்திற்கான விடை வரும் தங்கள் பதிவுகளில் தெரியும் என நம்புகிறேன். தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. எனக்கென்னவோ திரும்பவும் நாம் 1969 ஆம் ஆண்டு ஜுலை மாதத்துக்கு முந்தைய நிலைக்கு செல்கிறோமோ என்ற ஐயம் ஏற்படுகிறது...//

  இதையும் குறிப்பிட வேண்டும் என்று நான் நினைத்தேன். நீங்கள் கூறிவிட்டீர்கள்.

  வங்கிகளை இணைக்கப்பட்ட பின் அவற்றை தனியார்களிடம் விற்றுவிடாமல் இருந்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
 8. ஆனால் வாக்கு வங்கிக்காக அரசியல் வாதிகள் வங்கிகளில் தலையிட்டதால், வங்கிகள் கொடுத்த கடன்கள் வாராக் கடன்களாக மாறிவிட்டன.//

  அரசியல் தலையீடு இருந்தாலும் கொடுத்த கடனை வசூலிப்பதில் வங்கிகள் இன்னும் கொஞ்சம் அக்கறை காட்டியிருந்தால் வாராக்கடன்களின் அளவையாவது குறைத்திருக்கலாம். அரசியல்வாதிகளின் பெயரை பயன்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவர்களும் அடிமைகளாகிவிட்டதால் ஏற்பட்ட விளைவைத்தான் இப்போது நாம் காண்கிறோம்.

  வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி சார்.

  பதிலளிநீக்கு