30 செப்டம்பர் 2006

கடந்து வந்த பாதை 5

சாம்பசிவம் ஐயாவுடைய குடும்பத்தை எனக்கு சுமார் முப்பது வருடங்களாகப் பழக்கம்.

நான் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த வீடுதான் அவர்களுடையது.

ஒரு சுவரைப் பொதுவாக வைத்து இரண்டு பங்கங்களிலும் அமைந்திருக்கும் ஓட்டு வீடுகளில் ஒன்று அவர்களுடையது மற்றொன்று எங்களுடையது.

அவர்களுடையது சொந்த வீடு.. எங்களுடையது வாடகை.. ஆனால் அப்பா நீண்ட கால லீசில் (ஒத்தி என்பார்கள் அப்போது) எடுத்திருந்தார்..

எங்களுடைய குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஏழு பேர்.. அவர்களுடையதோ பத்து!

இதெல்லாம் அந்த காலத்தில் மிகவும் சகஜம்.

ஐயாவுக்கு முதல் இரண்டு பெண்கள்.. 3,4,5,6 வரிசையாக ஆண்கள்.. கடைசியில்  இரண்டு பெண்கள் என எட்டு பிள்ளைகள்.

நாங்கள் அந்த வீட்டில் குடியேறியபோது முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் குடியிருந்தார்கள். மூன்றாவது மகனுக்கு புதிதாக திருமணம் நடந்து முடிந்திருந்தது. அவர் சென்னையில் இருந்த ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். பட்டதாரி..

சாம்பசிவம் ஐயா ஒரு காலத்தில் முட்டை மொத்த வியாபாரியாக இருந்து நொடித்து போயிருந்தார். கேரளத்திலிருந்து ரயிலில் கூடை, கூடையாக வரவழைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்றுக்கொண்டிருந்தாராம். சில்லறை வியாபாரிகளின் சில்லறைத் தனத்தினால் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்து குடியிருந்த ஒரு வீட்டைத் தவிர எல்லாவற்றையும் இழந்து பிள்ளைகளின் கையை எதிர்பார்க்கும் சூழலில் இருந்தார்.

முதல் இரு மகள்களுக்கு திருமணம் முடித்த போது செல்வாக்குடன் இருந்ததால் நல்ல செழிப்பு மிகுந்த இடத்தில் சம்பந்தம் செய்திருந்தார். ஆனால் இவர் நொடித்துபோனதுமே இரு சம்பந்திகளும் அவருடனான உறவையே துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்பிள்ளைகளில் மூத்தவருக்கும் (ஏகாம்பரம்) நல்ல வசதியான குடும்பத்திலிருந்துதான் பெண் எடுத்திருந்தார்கள்.

மருமகள் வீட்டிற்குள் நுழையவும் ஐயா நொடித்துப் போகவும் சரியாயிருந்திருக்கிறது.

ஐயாவின் மனைவியும் நல்லவர்தான். ஆனால் அக்கம்பக்கத்தினருடைய தூண்டுதல் அவரையும் பழியை புது மருமகள் மேல் போட வைத்தது.

மருமகள் தொட்டால் குற்றம்.. நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்ற அவர் தொல்லைப்படுத்த வசதியான குடும்பம் என்று நினைத்து வந்திருந்த மருமகளுக்கு தனிக்குடித்தனம் போனால் என்ற தோன்ற ஆரம்பித்தது..

நாங்கள் புதிதாய் குடியேயிருந்த காலம் அது. பொழுது விடிந்தால் பொழுது போனால் தினமும் சிறிய, சிறிய காரியத்துக்கெல்லாம் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை, சச்சரவு என்று அடுத்த வீட்டில் இருக்கவே முடியாது என்கின்ற அளவுக்கு நடந்துக்கொண்டிருந்தது..

இரு பெண்களை அடுத்து பிறந்திருந்த நான்கு ஆண் மகன்களுக்கும் இடையில் ஒன்றிலிருந்து, ஒன்றரையாண்டு வித்தியாசம்தான், வயதில்..

வந்த மருமகளுக்கோ கணவனை விட எட்டு வயது குறைவு.. ஆக அவர் மூன்று கொழுந்தன்மார்களுக்கும் இளையவராக இருந்தார்.

ஆகவே மாமியார் மருமகள் சச்சரவில் கொழுந்தன்மார்களும் தலையிட்டு தங்களுடைய தாயார் பக்கம் சேர்ந்துக்கொள்வார்கள்.. கடைக்குட்டி தங்கைகள் இரண்டும் பள்ளிப் பருவம்.. பயந்துபோய் ஒதுங்கியிருப்பார்கள்.

இவர்களுடைய சச்சரவில் ஐயாதான் பாவம்.. நொந்துப்போவார். அந்நேரங்களில் எங்கள் வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்துக்கொள்வார்.. சப்தம் ஓய்ந்து அமைதியானதும் வீட்டுக்கு திரும்புவார்.

இந்த கவலையிலேயே ஐயா ஒரு நாள் மாரடைப்பால் காலமானார். அன்றும் அதையொட்டி வந்த இருவாரங்களில்தான் எங்களுடைய குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மலர்ந்து ஒருவிதத்தில் நெருங்கிய உறவுக்காரர்களைப் போலானோம்..

ஐயா உயிருடன் இருந்த சமயத்தில் அவ்வப்போது சண்டை, சச்சரவும் என்று நடந்தாலும் சற்று நேரத்தில் அமைதியாகிப் போவார்கள்..

ஆனால் அந்த அமைதி புயலுக்கு முன் ஏற்படும் அமைதி என்பது பிறகுதான் புரிந்தது.

ஐயா எப்போது இறப்பார் என்று காத்திருந்ததுபோல முப்பதாம் நாள் சடங்கு கழியவும் ஏகாம்பரம் தன்னுடைய மனைவியின் வற்புறுத்தலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தனிக்குடித்தனம் போவதென தீர்மானித்தார்.

வீட்டுக்கு தெரியாமலே மும்முரமாக வீடு தேடும் படலத்தில் இறங்கினார்.. அவருடைய வீட்டுக்கு தெரிந்ததோ இல்லையோ எனக்கு என் நண்பன் ஒருவனுடைய வழியாக தெரிந்துவிட்டது.
ஆனாலும் நமக்கேன் வம்பு என்று நான் இருந்துவிட்டேன். என் தாயாரிடம் கூட கூறவில்லை.

ஏகாம்பரம் வீட்டை ஏற்பாடு செய்தபோதும் தன் தாயிடம் அறிவிக்காமல் சாமான்களை ஏற்றியனுப்ப ஏற்பாடு செய்த வாகனத்துடன் வீட்டில் வந்து இறங்கியபோதுதான் குடும்பத்தினருக்கு தெரியவந்தது..

பிறகென்ன.. ஒரே களேபரம்தான்.

கடைக்குட்டி பெண்கள் இரண்டுக்கும் முன்னரே ஏகாம்பரத்தின் மூன்று தம்பிகளும் அவரை வசைமாரி பொழிய மனிதர் ஆடிப்போய்விட்டார்.

இருப்பினும் தன்னுடைய முடிவில் உறுதியாய் நிற்கவே, அவருக்கு அடுத்தவர், ‘டேய்.. போறேன்னு முடிவு பண்ணதுலகூட எனக்கு வருத்தமில்ல.. ஆனா மாசம் முழுசும் பேசாம இருந்துட்டு இப்ப சம்பள தேதி அன்னைக்கி இப்படி எங்கள அம்போன்னு விட்டுட்டு போறியே இத என்னால மன்னிக்கவே முடியாது. எனக்கு வேல கெடச்சி கன்ஃபர்ம் கூட ஆகல.. என் ஒருத்தன் சம்பளத்துல நான் இந்த குடும்பத்த மேனேஜ் பண்ணணும். தங்கச்சிங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சி கல்யாணம் பண்ணி குடுக்கணும்.. இவ்வளவு இருக்கறப்ப ஒனக்கு எப்படிறா அண்ணிய கூட்டிக்கிட்டு போக மனசு வந்தது?’ என்று சரமாரியாக கேட்டும் ஏகாம்பரம் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை..

ஏகாம்பரத்தின் அம்மாவிற்கோ மனசு ஆறவில்லை.. ‘டேய் வேண்டாம்.. என் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டு போறே.. போ.. நீ என்ன ஆவப்போறேன்னு பாக்கத்தான போறேன்..’ என்று வாயில் வந்த வார்த்தைகளால் அர்ச்சித்தார். ஏகாம்பரம் அசரவில்லை.. தன்னுடைய மாமனார் சீதனமாக கொடுத்திருந்த சாமான்களை ஆட்களைக் கொண்டு அப்புறப்படுத்துவதிலேயே குறியாயிருந்தார்.

இறுதியில் அவருடைய தாய், ‘டேய்.. நாளை இல்லன்னா மராநாள் இங்க வந்து நின்னு என் பெஞ்சாதிக்கு பிரசவம்மா.. நீங்க வந்து பாக்கணும்னு வந்து நின்ன.. அப்புறம் தெரியும் சேதி..’ என்றார் ஆவேசத்துடன்..

ஏகாம்பரத்திற்கு என்ன தோன்றியதோ, ‘காச தூக்கிப் போட்டா நாலு களுத வந்து பிரசவம் பார்த்துட்டு போது.. இதுக்குன்னு போயி இங்க வந்து நிக்கப் போறனாக்கும்.. நீங்க வந்து அங்க நிக்காமருந்தா போறாது.. நீ வாடி...’ என்று தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு போயே போய்விட்டார்..

அன்று ஏற்பட்ட விரிசல்தான்.. இரு குடும்பமும் ஒரே ஊரில் இருந்தும் பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக சமாதானமே இல்லாமல் இருந்தது..

இதற்கிடையில் நானும் என்னுடைய பதவி உயர்வு மற்றும் ஊர் மாற்றம் காரணமாக சென்னையை விட்டு செல்ல அக்குடும்பத்துடனான நட்பு என்னைப் பொறுத்தவரை நின்றுபோனது. ஆனால் என்னுடைய தாயார் அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் எனக்கு எழுதும் எல்லா கடிதத்திலும் அந்த குடும்பத்தைப் பற்றி எழுதாமல் இருந்ததே இல்லை..

ஏகாம்பரத்தின் அடுத்த சகோதரர் குமார் குடும்பத்தின் முழு பொறுப்பையும் தன் தோள்மேல் சுமந்துக் கொண்டது, அவர்கள் இருந்த வீட்டிலேயே மேலும் இரு குடித்தனக்காரர்களை வைத்து அதில் வந்த வாடகைப் பணத்துடன் தன்னுடைய ஊதியத்தையும் சேர்த்து அதில் திறம்பட குடும்பத்தையும் நடத்தி தனக்கு அடுத்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரர்களுக்கும் படிப்பு முடிந்தவுடன் வேலை வாங்கிக் கொடுத்தது.. என அக்குடும்பத்தில் நடந்த எல்லாவற்றையும் எனக்கு தவறாமல் எழுதுவார்கள்..

அடுத்த சில ஆண்டுகளில் எங்களுடைய குடும்பமும் அந்த வீட்டிலிருந்து குடிபெயர்ந்து பெரம்பூர் பகுதிக்கு சென்றுவிட அக்குடும்பத்துடனான தொடர்பு அறவே நின்றுப்போனது.

நான் தஞ்சையில் மேலாளராக இருந்த சமயத்தில்தான் ஏகாம்பரத்தின் தாயார் இறந்துவிட்டதாக என்னுடைய தாயார் மூலமாக செய்தி வந்தது. என்னால் செல்ல இயலவில்லை..

இறுதிச் சடங்குக்கு சென்றிருந்த என்னுடைய தாயார் வழியாக கடந்த பத்தாண்டுகளில் அக்குடும்பத்தில் நடந்தவைகளைப் பற்றிய செய்தி எனக்கு கிடைத்தது.

‘குமாரும் சரி அவனோட தம்பிகளும் சரி இன்னவரைக்கும் கல்யாணமே செஞ்சிக்கலடா.. தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல் முடிச்சதுமே நல்ல எடத்துல கல்யாணம் செஞ்சி வச்சிட்டான் குமார்.. இப்ப மூனு பேர் மட்டும் தனியா பொங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்க.. வீட்ட இடிச்சி பெரிசா கட்டியிருக்கானுங்க.. ரெண்டு அக்காமார் இருந்தும் அவனுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும் தோனல பாரேன்.. என்ன பண்றது? எல்லாம் தலையெழுத்து.' என்று என் தாய் எழுதியிருந்தபோது மனசு லேசாக வலித்தது..

தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை என்று சுற்றிவிட்டு 1987ல் சென்னை வந்து சேர்ந்தபோது.. என் தந்தை எங்களுக்கு கோடம்பாக்கம் அசோக் நகரில் வீடு அமைத்துக் கொடுத்திருந்தார். அங்கு குடியேறி ஒரு வாரம் இருக்கும்.. நானும் என் மனைவியும் வடபழனி மார்க்கெட்டில் வைத்து ஏகாம்பரத்தையும் அவருடைய குடும்பத்தையும் சந்தித்தோம்..

அவர் சற்று தளர்ந்துபோயிருந்தார்.. ஆனால் அண்ணி (நானும் அவரை அண்ணி என்று அழைத்து பழகிப்போயிருந்தேன்) செழிப்பாக இருந்தார்கள்.. அவர்களைப் பார்த்தால் நல்ல செல்வ செழிப்புடன் இருப்பது தெரிந்தது.. இரண்டு மகன், இரண்டு மகள்கள்.. பிள்ளைகள் நால்வருமே அம்சமாக, அழகாக ஒரு வசதிபடைத்த குடும்பத்து பிள்ளைகள் போலிருந்தனர்...

இரண்டு ஆண்பிள்ளைகளில் மூத்தவன்  சென்னையில் சிறந்த பள்ளிகள் ஒன்றான எக்மோர் டான்போஸ்கோவில் படித்துக்கொண்டிருந்தான். படிப்பில் சுமாராயிருந்த அடுத்தவன் மைலாப்பூர் செயிண்ட் பீட்ஸ்.. பெண் பிள்ளைகள் இருவரும் சர்ச் பார்க் கான்வெண்டில் என்று பெருமையுடன் அண்ணி கூறியபோது எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. என் பெண் பிள்ளைகள் இருவரும் 'கோடம்பாக்கம் பாத்திமாவில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்றேன்..

அலட்சியத்துடன் அது காதில் வாங்காமல் ஏகாம்பரம்  அண்ணா நின்றிருந்தார். அண்ணியோ ‘ஏன் சூசை.. அது அவ்வளவு நல்ல ஸ்கூல் இல்லையே.. சர்ச் பார்க்ல சேர்த்திருக்கக் கூடாது?’ என்றபோது எப்போதும் அமைதியுடன் இருக்கும் என் மனைவிக்கே கோபம் வந்தது.. நான் கண்சாடைக் காட்டி அவரை அமைதிப் படுத்திவிட்டு.. ஏகாம்பரம் அண்ணாவிடம், ‘அண்ணே.. அண்ணி என்ன சொல்ல வராங்கன்னு எனக்கு புரியுது.. இருந்தாலும் என் சக்திக்குட்பட்டுதான என்னால செய்ய முடியும்? என்னவோ நல்லாருக்கீங்கல்லே.. அதுபோறும்..’ என்றேன்.. அவரோ நான் கூறியதை சட்டை செய்யாமல் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நகர்ந்தார்.

அதற்குப்பிறகு அவரை மீண்டும் நான் சந்தித்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு..

மனிதர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்..

என்னைக் கண்டதும் அதுவரையில்லாத பாசத்துடன் உரையாடினார்..

அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றபோது..

என்னுடைய மனதில் ‘இவருக்கு வேணும்’ என்ற சந்தோஷமும் இருந்தது..

இருந்தாலும் இப்படியொரு நிலை இவருக்கு வந்திருக்க வேண்டாம் என்ற வேதனையும் இருந்தது.

நாளை நிறைவுபெறும்..


24 செப்டம்பர் 2006

கடந்து வந்த பாதை - 4 ஆ

எதிர்பாராமல் என்னை சந்திக்க நேர்ந்ததை நினைத்து மகிழ்ந்துப் போய் என்னுடைய கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார். நான் அப்போது பெரம்பூரில் குடியிருந்தேன். அவரும் பெரம்பூரில்தானே இருப்பதாய் சொன்னார் என்பது நினைவுக்கு வர.. ‘என்ன ராஜ் இங்க நிக்கீங்க? பெரம்பூர் பஸ் அந்த ஸ்டாப்புலதான வரும்?’ என்றேன்.

அவர் அதே மென்மையான புன்னகையுடன், ‘நாங்க இப்ப வில்லிவாக்கத்துல இருக்கோம் ஜோசப். பெரம்பூர்ல நாங்க இருந்த வீடு போறல.. தம்பிக்கு கல்யாணம் ஆயிருச்சி. மூத்த தங்கையும் டீச்சர் வேலைக்கு போறா.. அதான் கொஞ்ச பெரிய வீடா பாத்து போய்ட்டோம்.. தம்பி பெஞ்சாதிக்காக பெல் வேலைய விட்டுட்டு இங்க வந்துட்டான் IDPLல டிராஃப்ட்ஸ் மேனா சேர்ந்திருக்கான். பெல் சம்பளம் இல்லன்னாலும் அவன் பெஞ்சாதியும் வேலைக்கு போறனதுனால இது போறும்னு வந்துட்டான்... நீ எப்படி இருக்கே.. கல்யாணம் எப்போ?’ என்றார்.

மூத்தவர் இருக்க இளையவருக்கு கல்யாணமா என்று எனக்கு தோன்றினாலும் அவரை எப்படி கேட்பது என்ற தயக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.

என்னுடைய பார்வையின் நோக்கம் அவருக்கு புரிந்திருக்க வேண்டும். ‘நல்ல எடமா வந்தது ஜோசப். அம்மாவுக்கும் பொண்ண ரொம்ப புடிச்சிருந்தது. நாந்தான் என்னெ என் போக்கிலேயே விட்டுருங்கம்மான்னு சொல்லி அவங்கள வற்புறுத்தி சம்மதிக்க வச்சேன்.’

‘அப்போ நீங்க அந்த பிராமின் பொண்ண மறக்கவே இல்லையா ராஜ்?’ என்றேன்.

அவரோ என் கேள்விக்கு பதில் சொல்லாமல் சாலைக்கு மறுபுறம் வீட்டுக்குச் செல்ல வேண்டுமே என்ற பரபரப்புடன் கடைகளை மூடிக்கொண்டிருந்த பணியாட்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மேற்கொண்டு ஏதும் கேட்க மனசில்லாமல், ‘ஒருநாள் ஒங்க ஆஃபீசுக்கு வரேன் ராஜ். நிறைய பேசணும்’ என்று விடைபெற்றுக்கொண்டு என்னுடைய நிறுத்தத்திலிருந்து புறப்படவிருந்த அன்றைய இறுதி பேருந்தை நோக்கி ஓடினேன்..

சுமார் இரு மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை பகல் அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, ‘ராஜா சாருக்கு ப்ரோமோஷனாயிருச்சி சார். ராஜாமுந்திரி டெப்போவுக்கு இன் சார்ஜா டிரான்ஸ்ஃபர் ஆயி போய்ட்டாரு.’ என்றார் அவருடைய அலுவலக நண்பர் ஒருவர். ஏன் என்னிடம் கூட சொல்லாமலே போய்விட்டார் என்று நினைத்தேன்.

அதற்குப் பிறகு எனக்கும் மேலாளர் பதவி உயர்வு வர ஊர் ஊராக சுற்றிவிட்டு 1997ம் வருடம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன்.. எனக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த கோடம்பாக்கத்தில் இருந்தேன்.

ஒரு நாள் நானும் என் மனைவி மற்றும் குழந்தைகள் பெரம்பூரிலிருந்த என் பெற்றோருடைய வீட்டிற்குச் சென்று விட்டு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சென்னைக் கீழ்பாக்கம் மருத்துவமனை கல்லூரி பஸ் நிறுத்தம் அருகில் வந்ததும் ஆட்டோ பழுதாகி நின்றுவிட அதிலிருந்து இறங்கி வேறொரு ஆட்டோ கிடைக்காதா என்று நின்றுக்கொண்டிருந்த நேரம் யாரோ என்னுடைய பெயரை கூப்பிடும் குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன்.

சட்டென்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்த ராஜாவைக் கண்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருடைய கோலத்தைப் பார்த்து ஒரு நொடி பதறிப்போனேன்.

அதே வெள்ளை உடுப்புதான். சுருட்டை முடி இருந்த இடம் தெரியாமல்போய் தலை முக்கால் வழுக்கையாகியிருந்தது. முகத்தில் இரண்டு நாள் தாடி, வெள்ளை வெளேன்ற உடைக்கு மேச்சாக. கண்ணில் பருத்த கண்ணாடி. முன்பே அணிந்திருந்ததுதான் என்றாலும் இப்போது மெலிந்து களைத்திருந்த முகத்தில் சற்றே பருமனாக தெரிந்தது.

‘உன் ஒய்ஃபும் பிள்ளைங்களுமா ஜோசப்? கல்யாணத்துக்குக் கூட கூப்பிட முடியாத அளவுக்கு என்னெ மறந்துட்டியா ஜோசப்?’ என்ற தழுதழுத்த அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, ‘என்ன ராஜ் அப்படி கேட்டுட்டீங்க? ஒங்க விலாசம் தெரியாம நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.’ என்றேன்.

‘உண்மைதான் ஜோசப். என்னுடைய பிடிவாத குணம் என்னைய ரொம்பத்தான் கஷ்டப்படுத்திருச்சி. ராஜாமுந்திரியில ஒரு கலெக்டர முறைச்சிக்கிட்டு.. நார்த்ல அஞ்சு வருசமா படாத பாடு பட்டுட்டேன்.’

‘அப்போ ஒங்க அம்மா, தங்கைகள்லாம்? இங்க தனியாவா இருந்தாங்க?’

அவர் அதைப் பற்றி பேச விரும்பாதவர்போல்.. ‘அதிருக்கட்டும் ஜோசப்.. ஒன்னெ பத்தி பேசு.. இப்ப நீ என்னவா இருக்கே.. ஒன் ஒய்ஃப் எந்த ஊரு?’ என்று பேச்சை மாற்றினார்.

என்னுடைய மனைவிக்கு முன்னால் அவருடைய குடும்பத்தைப் பற்றி பேச விரும்பவில்லையென்பதை உணர்ந்த நான் எனக்கு திருமணம் நடந்ததைப் பற்றியும், நான் சுற்றி வந்த ஊர்களைப் பற்றியும் சுருக்கமாகக் கூறிவிட்டு கிளம்பினேன்.

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறும் நேரத்தில் என் கையில் அவருடைய விசிட்டிங் கார்டை திணித்து, ‘டைம் கிடைக்கும்போது கூப்பிடு ஜோசப்.. சந்திக்கலாம்..’ என்றார்.

ஆட்டோ புறப்பட்டதும் கையிலிருந்த அட்டையைப் பார்த்தேன். அவர் அதே அலுவலகத்தின் சென்னை டெப்போவில் துணை மேலாளராக பதவி உயர்வைப் பெற்றிருந்ததைப் பார்த்ததும் என்னையுமறியாமல் ஒரு சந்தோஷம் மனதை நிரப்பியது.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததுமே அவருடைய வீட்டு தொலைப்பேசியில் அழைத்து நாளையே அவரை சந்திக்க விரும்புவதாகக் கூறினேன். ‘வீட்டுக்கே வந்திருங்க ஜோசப். தனியாத்தான் இருக்கேன். எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம்.’ என்றார்.

‘தனியாத்தான் இருக்கேன்..’ என்ற வாக்கியம் என்னை அன்று இரவு முழுவதும் சங்கடப்படுத்தியது.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் என் மனைவியிடம் கூறிவிட்டு காலையிலேயே அவருடைய வீட்டுக்கு சென்றேன்.

வீடு நல்ல வசதியுடன் அம்சமாக இருந்தது. வீட்டு முகப்பில் துணை மேலாளர், இந்திய உணவுக் கழகம் என்ற பளபளப்பான பலகை.. அதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

ஆனால், அவருடன் சுமார் மூன்று மணி நேரம் தங்கியிருந்து பேசிவிட்டு திரும்பியபோது மனது கணத்துப் போயிருந்தது..

என்ன உலகமடா என்று தோன்றியது..

அவர் சென்னையை விட்டு மாறிப் போனவுடனேயே அவருடைய இளைய சகோதரர் தன்னுடயை மனைவியின் வற்புறுத்தலால் வயதான தாயையும் இரு தங்கைகளையும் தனியே விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போயிருக்கிறார்.

வடநாட்டிலிருந்தவாறே அவர்களை வழிநடத்தியிருக்கிறார் என் நண்பர். தங்கையின் வருமானத்தை தொடாமல் மாதா மாதம் அவர் அனுப்பி வைத்த தொகையைக் கொண்டே அவருடைய தங்கைகளில் இளையவரும் கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்து பிறகு அவருக்கு தெரிந்த ஒரு தனியார் பள்ளியில் பி.டி அசிஸ்டெண்டாக பணியில் சேர்த்திருக்கிறார்.

இதற்கிடையில் ராஜாவின் தாயார் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவருடைய முகத்தைக் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை அவருக்கு. வட இந்தியாவிலிருந்து வண்டி பிடித்து வருவதற்குள் உடம்பு தாங்காது என்று உறவினர்கள் பெண்கள் இருவரையும் வற்புறுத்தி இறுதிச் சடங்கை நடத்தி முடித்திருக்கின்றனர். இளைய சகோதரர் பேருக்கு இறுதி சடங்கிற்கு வந்து போயிருக்கிறார்.

ராஜா தன் தங்கைகளின் ஊதியத்திலிருந்து சேமித்து வைத்த தொகையுடன் தன்னுடைய பி.எஃப், எல்.ஐ.சி பாலிசிகள் மீது கடன் பெற்று இரு தங்கைகளைக்கும் ஒரே பந்தலில் வைத்து திருமணத்தை முடித்திருக்கிறார். தங்கைகளின் திருமணத்திற்கு நல்ல வசதியுடன் இருந்த ராஜாவின் தம்பி பண உதவி ஒன்றும் செய்யாமல் இருந்ததுடன் தன்னை கவுரவித்து அழைக்கவில்லையென்பதைக் காரணம் காட்டி திருமணத்திற்கே வராமல் இருந்திருக்கிறார்.

‘தங்கச்சிங்க ரெண்டு பேரும் அவங்கவங்க மாமியார் வீட்டோட இருக்காங்க ஜோசப். தம்பி தனியாத்தான் இருக்கான். பேச்சு வார்த்தை இல்லை. கல்யாணத்துக்கு வராட்டியும் அவன் கிட்ட சமாதானம் செஞ்சிக்க என்னென்னவோ செஞ்சி பாத்துட்டேன்.. அவன் பெஞ்சாதி எதுக்குமே ஒத்து வரமாட்டேங்குறா.. சரி போடான்னு விட்டுட்டேன்.. இன்னும் ரெண்டு வருசம்.. ரிட்டையர் ஆயிருவேன்.. இது நம்ம ஆஃபீஸ் லீஸ்ல எடுத்து குடுத்த வீடு. ரிட்டையர் ஆய்ட்டா காலி பண்ணணும்.. ரெண்டு தங்கைங்க கல்யாணத்துக்கு வாங்கன கடன ரிட்டையர் ஆறதுக்குள்ள அடைச்சிர முடியும்னு தோனல.. பென்ஷன் பணத்துலருந்துதான் அடைக்கணும்னு நினைக்கேன்.. அப்புறம்? கடவுள் விட்ட வழி..’

அன்றைய சந்திப்புக்குப் பிறகு அவரை மீண்டும் சந்திக்கவே எனக்கு மனம் வரவில்லை.

இரண்டு வருடங்கள் கழித்து சைதாப்பேட்டை மின் ரயில் நிலையத்தில் தற்செயலாக அவரை சந்தித்தேன்..

அவர் வேண்டாம் என்று தடுத்தும் அவருடைய வீட்டுக்கு சென்றேன்..

நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் பத்துக்கு பத்து என்ற அறையில்.. மிகவும் எளிமையான நிலையில்..

பார்க்கவே மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. என் கண்கள் கலங்கிப் போயின.

அப்போதும் மனம் தளராமல் புன்னகையுடன், ‘என்ன ஜோசப் இப்படி எமோஷனல் ஆவறே.. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.. என்னால முடியறப்பல்லாம் என் தங்கச்சிங்கள, என் மருமகப் பிள்ளைங்கள போய் பாக்கேன்.. என் தம்பிதான்.. பாவி.. அப்படியே விலகி நிக்கான்.. இப்ப ரிட்டையர் ஆய்ட்டான். கார், பங்களான்னு வசதியோட இருக்கான். நா இருக்கற நிலையில அவனெ போயி பாக்கறது அவ்வளவா நல்லா இருக்காதுன்னு ஒதுங்கியே நிக்கேன்.. இங்க சுத்தி இருக்கறவங்க எல்லாருமே ஏழைங்கதான் ஜோசப்.. ஆனா உண்மையான மனுஷங்க.. எனக்கு ஒன்னுன்னா பதறிப்போயி நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு உதவுறாங்க.. எனக்கு இத விட வேற என்ன வேணும் ஜோசப்..’

அவருடைய அந்த அமைதியான விளக்கம் என்னை கண் கலங்க வைக்கிறது. அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘எங்கூட வந்து இருங்கன்னு சொன்னா ஒங்கள அவமதிக்கறதாயிரும்.. ஆனா சேத்துப்பட்டுல ஒரு ஆசிரமத்துல நான் வாலண்டியரா இருக்கேன் ராஜ். நான் சொன்னா அந்த மதர் சுப்பீரியர் கேப்பாங்க.. வர்றீங்களா ராஜ்?’ என்றேன்..

அதே புன்சிரிப்புடன் வேண்டாம் என்றார். ‘இல்ல ஜோசப்.. அது யாருமே இல்லாதவங்களுக்கு.. எனக்கு ஒன்னெ மாதிரி எத்தனெ பேர் இருக்காங்க. அத்தோட நா அங்க போய் இருக்கறது தெரிஞ்சா என் தங்கச்சிங்களோட மாமனார், மாமியார் வீட்ல என்ன நினைப்பாங்களோ.. என்னால என் தங்கைகளோட கவுரவம் போயிரக்கூடாது.. நா நல்லாத்தான் இருக்கேன் ஜோசப்.. நீ டைம் கிடைக்கறப்ப வந்து போயேன்.. உன் வீட்டுக்கு எப்பனாச்சும் கூப்பிடு.. வரேன்..’

கனத்த மனத்துடன் திரும்புகிறேன்..

திரும்பும் போது தற்செயலாக நிமிர்ந்து பார்க்கிறேன்.. ‘ராஜா..
துணை மேலாளர்.. இந்திய உணவுக் கழகம்.’ என்ற வர்ணம் உரிந்து நிற்கும் மரப் பலகை கண்களில் படுகிறது.. அந்த பலகையைப் போலத்தான் அவரும்..

அவரை என்னால் எப்படி மறக்க முடியும்?

**************

23 செப்டம்பர் 2006

கடந்து வந்த பாதை - 4

நான் என்னுடைய வங்கியில் குமாஸ்தாவாக பணிக்கு சேர்ந்திருந்த காலம்.

என்னுடைய வங்கியில் வாடிக்கையாளராகவிருந்த சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவருடன் பழக்கமாகி அது நாளடைவில் நட்பாக மாறியது.

அவருடைய பெயர் ராஜா (புனைப்பெயர்).

எனக்கும் அவருக்கும் சுமார் பதினைந்து வருட வயது வித்தியாசமிருந்தும் எங்களிடையே ஏற்பட்ட நட்பு ஒரு அலாதியான நட்பாக அமைந்தது என்றால் மிகையாகாது. வயதில் மூத்தவராயிருந்தும் தன்னைப் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்து சம்மதிக்க வைத்தார். ‘நீங்க என்ன அண்ணன்னு கூப்ட்டா நம்ம நட்புல ஒரு நெருக்கம் இருக்காது ஜோசப். You are so matured to your age.. அதனால சும்மா ராஜான்னு பேர் சொல்லியே கூப்டுங்க..’ என்பார்.

அவர் நான் குடியிருந்த வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால் நானும் அவரும் தினமும் காலையில் எங்களுடைய வீட்டுக்கருகிலிருந்த பஸ் நிறுத்தத்திற்கு நடந்து செல்லும் அந்த பத்து நிமிடத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமானது.

ராஜா அப்போது இந்திய உணவுக் கழகத்தில் (இ.உ.க) இடை நிலை அதிகாரியாக இருந்தார். துணை மேலாளருக்கு கீழுள்ள பதவி.

ராஜா படித்து முடித்து இளநிலை அதிகாரியாக பணியில் சேரவும் அவருடைய தந்தை ஓய்வு பெறவும் சரியாக இருந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சகோதரர், பள்ளி இறுதியாண்டிலும் எட்டாவது வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்த இரண்டு தங்கைகள்.. ஓய்வு பெற்ற தந்தை, தாயார் என ஆறு பேர் கொண்ட குடும்பம் இவருடைய சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல்.

‘அப்பா ரிட்டையர் ஆயி வந்து நின்னதுமே எனக்கு ஒன்னும் புரியல ஜோசப். அப்பாவுக்கு அவங்களோட கையாலாகாத்தனத்த நினைச்சி நினைச்சே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திருச்சின்னு நினைக்கேன். எப்பவும் எரிஞ்சி விழுந்து குடும்பத்துல அமைதியே போயிருது. அப்ப இருந்த மாதிரியே எல்லா வசதியும் வேணுங்கறார். சில சமயங்கள்ல என்ன பண்றதுன்னே தெரிய மாட்டேங்குது ஜோசப். நீ யார்கிட்டயாவது சொல்லி எனக்கு ஈவ்னிங் நேரத்துல ஒரு பார்ட் டைம் ஜாப் வாங்கித் தாயேன்.’ என்றார் ஒரு நாள்.

நான் வங்கியில் புதிதாய் சேர்ந்திருந்ததால் எனக்கு யாரையும் உதவியென்று கேட்க கூச்சமாக இருந்தது. ஆயினும் ராஜாவின் குடும்ப சூழலை நினைத்து ஒரு நாள் புரசைவாக்கத்தில் சிறியதாய் ஒரு ஜவுளிக் கடை வைத்திருந்தவரிடம் அவரைப் பற்றி சுருக்கமாய் கூறி ‘உங்களால் உதவி செய்ய முடியுமா’ என்று கேட்டேன். அவருக்கு என்ன தோன்றியதோ, ‘சரி நாளைக்கு சாயந்தரமா வரச் சொல்லுங்க பார்ப்போம்.’ என அடுத்த நாள் அவருடன் பஸ் நிறுத்தத்திற்குச் செல்லும் வழியில், ‘அவர பார்த்தா நல்லவரா தெரியுது ராஜ், நீங்க போய் பாருங்களேன்’ என்றேன்.

அவருக்கும் ஜவுளிக் கடை முதலாளிக்கும் பரஸ்பரம் பிடித்துப்போக அவர் எதிர்பார்த்ததுக்கும் மேலாகவே ஊதியமும் அமைந்தது. ராஜா பி.காம் பட்டதாரியானதால் கணக்கு எழுத வந்தது. மாலை நேரங்களில் அலுவலக நேரம் முடிந்ததும் வீட்டிற்குக் கூட செல்லாமல் ஜவுளிக்கடைக்கு பின்பக்கம் இருந்த முதலாளியின் வீட்டில் கை கால் அலம்பிக்கொண்டு கடையில் கல்லா பெட்டிக்கு அருகில் அமர்ந்து அன்றைய கணக்கை எழுதி முடித்துவிட்டு கடையை பூட்டும் நேரத்தில் வீடு திரும்புவார்.

ஆயினும் காலையில் அவரை சந்திக்கும்போது பளிச்சென்று இருப்பார். வாரத்தில் ஆறு நாட்களும் ஒரே மாதிரியான வெள்ளை பேண்டும் வெள்ளை சட்டையும்தான். முழுக்கை சட்டையை மடித்து அரைக்கையாய் ஆக்கியிருப்பார்.

அப்போதெல்லாம் காட்டன் துணிகள்தான். பாலிஸ்டர் புதிதாக அறிமுகமாகியிருந்த காலம் அது. ஆனால் அதன் அபிரிதமான விலை எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் எல்லைக்கப்பாலிருந்தது.

‘எதுக்கு ராஜ் வெள்ளை சட்டையவே போடறீங்க? சாமியார் மாதிரி இருக்கீங்க?’ என்பேன் கேலியுடன்.

அதற்கு அவர் அளித்த விளக்கம் இப்போதும் மனதில் கிடந்து நெருடுகிறது. ‘அதுக்கு ஒரு காரணம் இருக்கு ஜோசப். எனக்கு இருக்கற குடும்ப கடமைகள்லாம் முடியறவரைக்கும் காதல், கத்தரிக்காய்னு எந்த பந்தத்துலயும் மாட்டிக்கற எண்ணம் இல்லை. இந்த உடுப்பைப் பார்த்தா எந்த பொண்ணுக்காவது என் மேல காதல் வருமா, சொல்லு. இந்த காலத்து பசங்களுக்கு பகட்டா இருக்கற ஆம்பளைங்களத்தான பிடிக்குது? அதான்.. மெய்ட்டெய்ன் பண்ண கொஞ்சம் கஷ்டமாருந்தாலும்.. இது நானே தேர்ந்தெடுக்கிட்ட கோலம்..’

ஆயினும் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. ராஜா என்னதான் வெள்ளை நிற ஆடையை உடுத்தினாலும் அவருடைய நிறமும், களையான முகமும், மெலிந்த அளவான தேகமும், சுருட்டை முடியும் அக்காலப் பெண்களைக் கவராமல் இல்லை. நாங்கள் இருவரும்
செல்லும் அதே பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் வரும் ஒரு பிராமணக் குலத்தைச் சார்ந்த அழகான பெண் ஒருவருக்கு இந்த கோலம் மிகவும் பிடித்திருந்தது.

ஆரம்பத்தில் அவருடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்து அந்த பெண்ணின் முயற்சியை மறுதலித்த ராஜா நாளடைவில் காதல் வசப்பட்டுப் போனார். என் கண் முன்னரே சாதாரணமாக ஆரம்பித்த அவர்களுடைய நட்பு காதலாய் மலர்ந்து ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லையென்ற நிலையை அடைந்தபோது திடீரென்று அப்பெண் சுமார் ஒரு மாத காலம் காணாமல் போனார். நான் பதறிப் போனேன். ஆனால் ராஜாவின் நடத்தையில் பெரிதாய் எந்த மாறுதலும் இல்லை.

‘என்ன ராஜ்.. அவங்கள கொஞ்ச நாளா பஸ் ஸ்டாப்புல காணமேன்னு நான் தவிச்சி போறேன்.. நீங்க ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்கீங்க?’ என்றேன் ஒரு நாள்.

அவர் மெலிதாக சிரித்த வண்ணம் என்னைப் பார்த்தார். ‘அவங்களுக்கு போன வாரம்தான் கல்யாணம் நடந்தது ஜோசப்.’

நான் பதறிப்போய், ‘என்ன ராஜ் சொல்றீங்க? அதெப்படி ஒங்களுக்கு தெரியும்?’ என்றேன்.

அவர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார். பிறகு எந்தவித உணர்ச்சியும் இல்லாத குரலில் தொடர்ந்தார். ‘அவங்க வீட்ல அதுக்கு ஒத்துக்கல ஜோசப். ஆனா அவங்க (அந்த பெண்ணை மரியாதையுடன் அழைப்பார்) வீட்டை மீறி எங்கூட வந்துடறேன்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. எனக்கு அது சரின்னு படலை. எனக்கும் ரெண்டு தங்கைங்க இருக்காங்களே.. அவங்கள சமாதானம் செஞ்சி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சேன். நானும் கல்யாணத்துக்கு போய் வந்தேன். உன்கிட்ட சொன்னா நீ ஏதாச்சும் பிரச்சினை செஞ்சிருவியோன்னுதான் நான் சொல்லல.. அவங்க எடுத்த முடிவு தப்பானது ஜோசப். அதுமட்டும் நடந்திருந்தா என் குடும்பத்தோட கதி என்னாயிருக்கும்? அத்தோட அவங்க குடும்பத்தையும் நினைச்சிப் பாக்கணுமில்லே.. அதையெல்லாம் நினைச்சித்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். இனிமே நீ வேலைக்கு போவேணாம்னு சொல்லிட்டாராம்.. அவங்களோட ரிசிக்னேஷன் லெட்டரக் கூட நாந்தான் அவங்க ஆபீஸ்ல கொண்டு குடுத்துட்டு வந்தேன்.. எனக்கென்னவோ ஒரு தங்கையோட கல்யாணத்த நடத்தி முடிச்ச திருப்தி இருக்கு இப்ப..’

எப்படியொரு உயர்ந்த குணம்?

எங்களுடைய வங்கியின் புதிய கிளையொன்று சென்னை மிண்ட் தெருவில் திறக்கப்பட அங்கு மாற்றலாகிப் போனேன். என்னுடைய கிளையின் அலுவல் நேரமும் அவருடைய அலுவல் நேரமும் மாறிப்போனதால் அவருடனான என்னுடைய காலை நடை சற்று தடைபட்டுப் போனது. அவருடைய வீடு அருகாமையில் இருந்தும் அவருடைய வீட்டுக்கு நான் சென்றதே இல்லை. அப்போதெல்லாம் வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் அன்னியரை அழைக்கலாகாது என்ற ஒரு கொள்கை இருந்தது, முக்கியமாக நடுத்தர குடும்பங்களில்..

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிறு காலை அதே பஸ் நிறுத்தத்தில் நான் காத்திருந்தபோது அவரும் அங்கே வந்தார். அதே வெள்ளை நிற ஆடை. ஆனால் இன்னும் சற்று மெலிந்திருந்தார். என்னைக் கண்டதும் புன்சிரிப்புடன் நெருங்கி, ‘என்ன ஜோசப் எப்படியிருக்கே? பாக்கவே முடியல?’ என்றார் பாசத்துடன்.

நான் அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு ‘எப்படி இருக்கீங்க ராஜ்? உங்கள நினைக்காத நாளே இல்லை.. வீட்ல எல்லாரும் சவுக்கியமா? அப்பா எப்படியிருக்கார்?’ என்றேன் சரமாரியான கேள்விகளுடன்.

‘அப்பா காலமாயிட்டார் ஜோசப். ஒன்பது மாசமாச்சி. ஒனக்கு சொல்லணும்னு வீட்டுக்கு வந்திருந்தேன். நீ ஏதோ ட்ரெய்னிங்குக்கு போயிருக்கேன்னு அம்மா சொன்னாங்க. உங்கிட்ட சொல்லிரச் சொல்லிட்டு வந்தேன். சொல்லாம மறந்துருப்பாங்க. தம்பி காலேஜ் முடிச்சி திருச்சியில பெல்லுல இருக்கான். பெரிய தங்கைய டீச்சர் ட்ரெய்னிங் சேர்த்திருக்கேன். சின்னவ ஸ்கூல் ஃபைனல்.. இதான் இந்த ரெண்டு வருசத்துல நடந்தது.. அப்பா இறந்ததும் நாங்களும் வீட்ட ஷிஃப்ட் பண்ணிட்டோம் ஜோசப். இப்ப பெரம்பூர்ல இருக்கோம். அதான் ஒங்கள சந்திக்கவே முடியல. இன்னைக்கி எங்க ஆஃபீஸ் கொல்லீக் ஒருத்தருக்கு பக்கத்துல கல்யாணம்.. அதுக்காக வந்ததும் நல்லதாபோச்சி.. ஒன்னெ சந்திக்க முடிஞ்சதே’ என்றார் மென்மையான குரலில். அதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அவருடைய குரலை அருகில் எனக்குக் கூட கேட்காதவண்ணம் பேசுவார். சிரமப்பட்டுத்தான் கேட்க வேண்டும். பேச்சில் மட்டுமல்ல குணத்திலும் அப்படித்தான் பூவைப் போன்று மென்மையானவர். பெண்ணாய் பிறந்திருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரவர் பேருந்தில் ஏறி பிரிந்தோம். பிறகு அடுத்த சில மாதங்களில் நான் இளநிலை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று மும்பைக்கு மாற்றலாகிப் போனேன்.

அங்கு பதினெட்டு மாத காலம் இருந்துவிட்டு சென்னையில் முன்பு மிண்ட் சாலையில் இருந்து கடற்கரைச் சாலைக்கு மாற்றலாகியிருந்த கிளைக்கு உதவி மேலாளரக வந்தேன். அங்கிருந்து மிக அருகாமையில்தான் அவருடைய அலுவலகம் இருந்தது. ஒருநாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து இரவு கடைசி பேருந்துக்காக சென்னை பாரீஸ் கார்னர் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்தபோது வெள்ளை வெளேர் நிற உடையில் தூரத்தில் நின்றிருந்த ஒரு உருவத்தைப் பார்த்ததும் என்னுடைய நண்பரின் நினைவு வர அவரை நோக்கி விரைந்தேன்.

அவரேதான்..

நாளை நிறைவு பெரும்..