கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

03 அக்டோபர் 2019

நடந்தது என்ன,,,? (நிறைவுப் பகுதி)

‘ஏங்க பாத்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க. இப்படியா எல்லாத்தையும் ஃபோன்லயே சேவ் பண்ணி வப்பீங்க? இது எப்படி இருக்குன்னா வீட்ட பூட்டிட்டு சாவிய பூட்டு வாயிலயே வச்சிட்டு போற மாதிரி இருக்கு..’ என்று கிண்டலுடன் தன் எதிரில் அமர்ந்திருந்த மாதவனை பார்த்தார் உதவி ஆய்வாளர் கோபால் ‘சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்கறீங்க?’

டிஆர் மாலுக்கு அருகில் இருந்த அந்த பகுதி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வந்த மாதவன் கடந்த அரை மணி நேரமாக உதவி ஆய்வாளர் கோபாலின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சிக்கி அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தான்.

‘ஒரு சேஃப்டிக்காகத்தான் சார்.... ரெண்டு மூனு பேங்க்ல அக்கவுண்ட் இருக்கு.... அத்தோட டெபிட் கார்ட்... அப்புறம் க்ரெடிட் கார்டுன்னு இருந்ததால....’

‘ஆமா.... பணம் நிறைய இருந்தா ரெண்டில்ல நாலு பேங்க்ல கூட அக்கவுண்ட் வச்சிக்கலாம்...எல்லா காரடையும் பர்சுல வச்சிக்கலாம்... அதுக்கு வேண்டிய பாஸ்வேர்ட் பின் நம்பர உங்கள மாதிரி செல்ஃபோன சேவ் பண்ணி வச்சிக்கலாம்.... இதுக்கு பதிலா அந்த கார்டுங்க பின்னாலயே எழுதி வச்சிருந்தீங்கன்னா திருடுறவனுக்கு இன்னும் ஈசியா இருந்திருக்கும்ல?’ கோபாலின் குரலில் இருந்த நக்கல் மாதவனை எரிச்சலடைய வைத்தது...

இதுக்குத்தான் இங்க வரவே கூடாதுங்கறது.... இவனுங்க கிட்ட மாட்டிக்கிட்டு அல்லாடுறதுக்குள்ள பேசாம வேற ஒரு ஃபோன வாங்கிகிட்டு போயிறலாம் போல...

‘என்ன மிஸ்டர் மாதவன்... என்ன பதிலையே காணம்?’

‘இல்ல சார் ஆஃபனவர் முன்னாலதான் செக் பண்ணேன் ஃபோன் ஸ்விட்சாஃப்னுதான் வந்துது...’

‘அப்படீன்னா அது அந்த மால்லதான் எங்கயாவது கிடக்குதோ என்னவோ? அங்க போய் கேட்டீங்களா?’

‘ஆமா சார்.. காலையில முதல் வேலையா அங்கதான் போனேன். மேனேஜர பார்த்து ஒரு கம்ப்ளெய்ண்ட் வேற குடுத்துட்டுதான் வ்ரேன்.’

‘மேனேஜர பாத்தீங்களா? அந்தாள் அடாவடிய பேசுவானே?’

நீங்க மட்டும் என்னவாம் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட மாதவன். ‘ஆமா சார்... எங்க கடையில ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டார்... ஆனா நீங்க கொஞ்சம் சிசிடிவி ஃபுட்டேஜ பாருங்க சார்னு கேட்டேன்...’

‘அதுக்கு அவர் என்ன சொன்னார்?’

‘ஒங்கக் கிட்டல்லாம் காட்ட முடியாது... நீங்க போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுங்க.. அவங்க வந்து கேட்டா காட்டறோம்னு சொல்லிட்டார்... எனக்கு வேற வழி தெரியல அதான் இங்க வந்தேன்...’

‘இருங்க நா ஃபோன் செஞ்சி கேக்கறேன்.’ என்று பதிலளித்த உதவி ஆய்வாளர் கோபால் தன் செல்பேசியை எடுத்து டயல் செய்தார். நீண்ட நேரம் கழித்து எதிர் முனையிலிருந்து மால் மேலாளரின் குரல் கேட்டது.... ;சொல்லுங்க சார்... ஒங்க ஃபோனத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன்..அந்தாள் அங்க வந்துருப்பாரே?

‘ஆமா.... சிசிடிவி ஃபுட்டேஜ்ல ஏதாச்சும் தெரிஞ்சிதா?’

‘ஆமா சார்... அந்தாளு மூளை இல்லாம செல்ஃபோன ட்ராலிக்குள்ள வீசி எறிஞ்சிருக்கான். அது கீழருக்கற ஹோல் வழியா தரையில விழுந்துருக்கு. அத கூட கவனிக்காம அந்தாள் அடுத்த செக்‌ஷனுக்கு போயிருக்கான்... கீழ விழுந்து கிடந்த ஃபோன ஒரு சின்ன பாப்பா எடுத்து பக்கத்துலருக்கற இருந்த கூடைக்குள்ள போடறது தெரியுது.. ஆனா அந்த கூடைய யார் எடுத்துக்கிட்டு போனார்ங்கறது மட்டும் ஃபுட்டேஜ்ல க்ளியரா தெரியல... அத ஒரு சிடியில காப்பி பண்ணி வச்சிருக்கேன்... நம்ம பையன் கிட்ட குடுத்து உடறேன்....’

‘சரி... அனுப்புங்க.’ இணைப்பை துண்டித்துவிட்டு மாதவனைப் பார்த்தார் கோபால்.. அந்தாள் காட்டு கத்தலா கத்தனத இந்தாளும் நிச்சயமா கேட்ருப்பாங்கறது இந்தாள் முகம் போற போக்க பாத்தால தெரியுதே..

‘அவர் சொல்றது ஒங்களுக்கு கேட்ருக்குமே?’

மாதவன் ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.

‘அப்போ ஃபோன் மாலுலருந்து வெளியில போயிருக்கு....ஒங்க நம்பர சொல்லுங்க... டயல் பண்ணி பாக்கலாம்...’

மாதவன் சொல்ல சொல்ல கோபால் டயல் செய்துவிட்டு காத்திருந்தார்.... check the number you have dialled... என்று வந்தது.....

கோபால் தன் எதிரில் அமர்ந்திருந்த மாதவனை எரிச்சலுடன் பார்த்தார். ‘என்னமோ switch off னு வந்துதுன்னு சொன்னீங்க?’

‘ஆமா சார்... அந்த மால் ஆள் கிட்டருந்து ஃபோன வாங்கி நாந்தான் டயல் பண்ணேன்.... இப்ப என்ன சொல்லுது சார்?’

‘அப்படி ஒரு நம்பரே இல்லேங்குது.... எடுத்தவன் சிம் கார்ட கழட்டினாத்தான் இப்படி பதில் வரும்...’

‘இருக்க முடியாது சார்... நா விட்டப்போ அது டெட் ஆகியிருந்தது... அந்த எரிச்சல்ல தான் ட்ராலிக்குள்ள போட்டேன்...’

‘சரி.. அது போவட்டும்.. ஒங்க ஃபோனோட IMIE நம்பர் தெரியுமா?’

மாதவன் திருதிருவென விழித்ததிலிருந்தே அது அவனிடம் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது... எழுந்து நின்றார்... ‘சரி.. நீங்க கிளம்புங்க... ஒங்க செல்லோட IMIE நம்பரோட சப்மிட் பண்ணாத்தான் புகாரையே ரிஜிஸ்டர் பண்ணிக்குவோம்... அது இல்லன்னா தலைகீழா நின்னாலும் ஒங்க ஃபோன ட்ரேஸ் பண்ணவே முடியாது... நீங்க போயி வீட்ல எங்கயாச்சும் எழுதி வச்சிருக்கீங்களான்னு பாருங்க... அப்புறமா வந்து கம்ப்ளெய்ண்ட் வாசல்லருக்கற ரைட்டர் கிட்ட குடுத்துட்டு போங்க...ஹூம்...’

மாதவனும் வேறு வழியின்றி எழுந்து நின்றான். அந்த நேரம் பார்த்து ஒரு காவலர் வந்து ‘சார் இந்த சிடிய டிஆர் மால் பையன் வந்து குடுத்துட்டு போனான் சார்...’ என்று ஒரு சிடியை நீட்ட கோபால் அதை வாங்கிக்கொண்டு மாதவனை பார்த்தார். ஒக்காருங்க என்று சைகை காட்டிவிட்டு மேசை மீதிருந்த தன் கணினியில் அதை இட்டு பார்த்தார்.

சற்று முன்னர் டிஆர் மாலின் மேலாளர் பார்த்த அதே காட்சிகள் திரையில் தெரிய....’இடியட்ஸ்... எத்தன தடவ சொன்னாலும் இந்த மால்காரங்க கேக்க மாட்டேங்கறானுங்களே... கடைக்குள்ள ஹெல்மெட், தொப்பி போட்டுக்கிட்டு வர விடாதீங்கன்னு எத்தன தடவ சொல்லியிருக்கோம்....’ என்று எரிச்சலுடன் பேசியவாறே மீண்டும் செல்பேசியை எடுத்து டயல் செய்தார்.

எதிர் முனையில் மால் மேலாளர் எடுத்ததும் ‘சார் எத்தன வாட்டி சொல்றது? இப்படி தொப்பியோடயோ இல்ல ஹெல்மெட்டோடயோ யாரையும் மாலுக்குள்ள அலவ் பண்ணாதீங்கன்னு.... இப்படி ஒரு சொத்த ஃபுட்டேஜ வச்சிக்கிட்டு நாங்க என்ன பண்றது’ என்று உரக்கவே இரைந்தார்.

‘நாங்க சொன்னாலும் கஸ்டமர்ஸ் கேக்க மாட்டேங்கறாங்க சார்..நீங்க ஒன்னு பண்ணுங்க...எனக்கு ரைட்டிங்ல ஒரு லெட்டர் அடிச்சி அனுப்புங்க... அத நாங்க கடை முழுசும் டிஸ்ப்ளே பண்ணிடறோம்.. இதுக்கு மேல எங்களால ஒன்னும் பண்ண முடியாது.. சாரி..’ என்றவாறு கோபாலின் பதிலுக்கு காத்திராமல் இணைப்பை துண்டிக்க... ‘சரியான அகராதி புடிச்சவன்...’என்றவாறு மாதவனை பார்த்தார். ‘இங்க வந்து பாருங்க... இந்தாள நேத்து பாத்த ஞாபகம் இருக்கா?’

மாதவன் எழுந்து உதவி ஆய்வாளரின் இருக்கைக்கு பின்னால் நின்று கணினி திரையை பார்த்தான். இவன் நம்ம பின்னால நின்னுக்கிட்டிருந்தவனாச்சே....’ஆமா சார்... இந்தாளு எனக்கு பின்னாலதான் நின்னுக்கிட்டிருந்தான்... என் ஃபோன கூட சூப்பரா இருக்கு என்ன மாடல்னு கேட்டான்... அப்ப இவன் கையிலதான் ஃபோன் இருக்கு போலருக்கு சார்..’``

‘இருந்து என்ன பண்ண? அவன் முகமே தெரியலையே... இதுக்குத்தான் படிச்சி படிச்சி சொல்றோம்... இந்த மாதிரி முகத்த மூடறா மாதிரி ஹெல்மெட்டோ தொப்பியோ போட்டுக்கிட்டு வர்றவங்கள உள்ள விடாதீங்கன்னு... கேட்டாத்தான?’

மாதவன் மீண்டும் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தான்... இவன் முன்னாலதான் நாம ஃபோனையே ஓப்பன் பண்ணி சாமான்க லிஸ்ட்ட பாத்தோம்... ஒருவேள எண்ட்ரி கோட அடிச்சதையும் கவனிச்சிருப்பானோ.... தெரியலையே....

‘என்ன மாதவன்... என்ன யோசனை?’

இவர் கிட்ட சொல்லி இன்னும் வாங்கி கட்டிக்கவா? ஒன்றும் இல்லை என்பது போல் தலையை அசைத்தான்.

‘அந்தாள் சிம் கார்ட ரிமூவ் பண்ணதிலருந்து என்ன தெரியுது?’

இல்லை என்பது தலையை அசைத்தான் மாதவன்.

‘அந்தாள் ஒங்க ஃபோன ரீசார்ஜ் பண்ணி ஓப்பன் செஞ்சிருக்கான்.... ஃபோன தொறக்கறதுக்கு வெறும் ஸ்வைப் மட்டுந்தான் வச்சிருந்தீங்களா.. இல்ல பேட்டர்ன் ஏதாச்சும் இருக்கா?’ என்றவர் அவருடைய கேள்விகளுக்கு அவரே பதிலும் அளித்தார். ‘வச்சிருந்தாலும் அதல்லாம் இப்ப மேட்டரே இல்ல...அத தொறந்து குடுக்கறதுக்குன்னே நிறைய பேர் அலையறானுங்க....’

என்ன பதிலளிப்பது என தெரியாமல் அமர்ந்திருந்த மாதவனை கோபாலின் அடுத்த கேள்வி உரைய வைத்தது.

‘மூனு பேங்க்ல அக்கவுண்ட்ஸ் வச்சிருக்கேன்னு சொன்னீங்களே... சுமாரா எவ்வளவு பேலன்ஸ் வச்சிருப்பீங்க?

இந்தாள் கிட்ட சொல்லி என்ன ஆவப்போவுது? லட்சத்துக்கு மேலன்னு சொன்னா... நம்ம கிட்டருந்து எவ்வளவு கறக்கலாம்னு நினைப்பானோ... வேணாம்.... இவன் கிட்ட சொல்லி... நாள பின்னால விசாரணைன்னு சொல்லி வீடு வரைக்கும் வந்து ஷாமிலிக்கி ஃபோன் தொலைஞ்ச விஷயம் தெரிஞ்சா காலாகாலத்துக்கு அத சொல்லி சொல்லியே சாவடிப்பா....

‘என்ன கேல்குலேட் பண்றீங்களா?’

‘பெருசா ஒன்னும் இல்ல சார்... மினிமம் பேலன்ஸ்தான் மூனுலயும் இருக்கும்... மிஞ்சி போனா பத்து பதினஞ்சி..’ 

அந்த  பொய்யால் எத்தனை பெரிய இழப்பு தனக்கு ஏற்படவுள்ளது என்பதை அப்போது அவன் உணர்ந்திருக்கவில்லை... ‘டெபிட் கார்ட் இல்லாம அவனால வித்ட்றா பண்ண முடியாதே சார்..’

‘அதுவும் சரிதான்.... நீங்க போயி ஒங்க ஃபோனோட IMIE நம்பர் இருக்கான்னு பாருங்க... இல்லன்னா கம்ப்ளெய்ண்ட் குடுக்கறதுல எந்த யூசும் இல்ல... இதனால ஒங்களுக்கு ஃபோன் போச்சேங்கறத தவிர மானிடரியா பெரிய லாஸ் எதுவும் இல்லாததால.... அவனெ ட்ரேஸ் பண்றதுல பெருசா எதுவும் கிடைக்க போறதில்ல.... என்ன சொல்றீங்க?’

மாதவன் அப்போதே அங்கிருந்து போய் தன்னுடைய வங்கி கணக்குகளின் இருப்பை செக் செய்தால் தேவலை என்று தோன்றவே எழுந்து நின்றான்.. ‘சரி சார்.. தேடி பார்த்துட்டு வரேன்...’

அவன் வாசலை கடந்து மறையும் வரை காத்திருந்த கோபால்....’டூப் அடிக்கிறான்.. பேலன்ஸ் பெரிசா வச்சிருப்பான்னுதான் நினைக்கேன்... இல்லன்னா அவன் மூஞ்சி அப்படி பேயறைஞ்சா மாதிரி இருக்காது...எங்க நம்ம கிட்ட ஆக்சுவல் பேலன்ஸ சொன்னா எதையாச்சும் கேப்பமோன்னு நினைச்சிருப்பான்.... எப்படியோ தொலையட்டும்....’

அவருக்கு அருகில் நின்றிருந்த காவலர்கள் அவருடைய பேச்சுக்கு எப்படி பதிலளிப்பது என்பது தெரியாதது போல் அவரை பார்த்தனர்...

‘இந்தாள் அவன் ஃபோனோட IMIE நம்பர் இல்லாம வந்தா புகார வாங்க கூடாது... என்ன புரியுதா?’

சரி சார் என்பதுபோல் காவலர்களை தலையை அசைத்தனர்....’வெளீயில நேத்து வந்த அந்த குடும்ப தகராறு ஆளுங்க வந்துருக்காங்க சார்.’என்றார் ஒரு காவலர்.

‘சரி வரச்சொல்லு... காலையில யார் முகத்துல முளிச்சனோ அந்தாளோட ரெண்டு மணி நேரம் வேஸ்ட்டா போயிருச்சி.... முட்டா பசங்க.. படிச்சவனுங்களே இப்படி முட்டாத்தனமா இருந்தா என்னத்த செய்யிறது?’ என்று முனகியவாறே தன் இருக்கையில் சென்று அமர்ந்தார் கோபால்.

*************

காவல் நிலையத்தை விட்டு வெளியேறி சிறிது தூரம் சென்ற மாதவன் சாலையின் எதிர்புறத்தில் இருந்த வங்கி ஏடிஎம் அறைக்குள் நுழைந்து பர்சை எடுத்து ஒவ்வொரு டெபிட் கார்டையும் பயன்படுத்தி இருப்பை சோதிக்கலானான்....

ஆனால் அவன் இருந்த பதட்டத்தில் அவனிடமிருந்த எந்த டெபிட் கார்டுடைய பின் நம்பரும் சரியாக நினைவுக்கு வரவில்லை... முதல் இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிய மூன்றாவது முறையும் தவறாக அடித்தால் அந்த அட்டை அன்று முழுவதும் முடக்கப்பட்டுவிடும் என்பது அவனுக்கு தெரியும் என்பதால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தான்.

அவனுடைய செல்பேசியில் சேமித்து  வைத்திருந்த கடவு எண்களின் கோப்பின் நகல் ஒன்றை மடிக்கணினியில் சேமித்து வைத்தது நினைவுக்கு வர ஏடிஎம் வாசலில் வேறு யாராவது காத்திருக்கிறார்களா என்று வாசல் கண்ணாடி வழியாக பார்த்தான்.

நல்ல வேளையாக யாரும் இல்லை. உடனே முதுகில் மாட்டியிருந்த பையில் இருந்த மடிக்கணினியை எடுத்து ஆன் செய்து தன்னை ஒரு நிமிடம் நிதானப்படுத்திக்கொண்டு தேடினான்... ஐந்தாறு நிமிடங்களுக்குப் பிறகு அந்த கோப்பைக் கண்டுபிடிக்க முடிந்தது.

பிறகு ஒவ்வொரு அட்டையையும் பயன்படுத்தி சோதிக்க துவங்கினான். முதல் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருப்பது தெரியவே பதட்டத்துடன் தன் கையில் மீதமிருந்த கார்டுகளையும் பயன்படுத்தி சோதனை செய்தான். இறுதியில் அவனுடைய மூன்று வங்கி கணக்குகளிலிருந்து மொத்தமாக எழுபத்தையாயிரம் எடுக்கப்படிருப்பதை பார்த்து அதிர்ந்தே போனான்..... அடப்பாவி.... காலையிலயே செக் பண்ணணும்னு தோனாம போச்சே....  நாம வேற மினிமம் பேலன்ஸ்தான் இருக்கும்னு சொல்லிட்டமே... இப்ப மறுபடியும் போலீஸ்ல போயி சொன்னா நம்புவாங்களா?

அதுவுமில்லாமல் டெபிட் கார்ட் இல்லாம எப்படி பணத்த எடுத்திருப்பான்? பேங்க் டு பேங்க் டிரான்ஸ்ஃபர் பண்ணியிருப்பானோ என்று நினைத்தவனுக்கு தன் செல்பேசியில் வங்கிகளின் மொபைல் பேங்கிங் ஆப்கள் இட்டு வைத்திருந்தது நினைவுக்கு வந்தது. எடுத்தவன் படா கேடியா இருப்பான் போலருக்கே.... எந்த பேங்குக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணியிருப்பான்..? இத எப்படி கண்டுபிடிக்கிறது? நெட் பேங்கிங் வழியா கண்டுபிடிச்சிறலாமே? ஆனா அதுக்கு நெட் கனெக்‌ஷன் வேணுமே?

அவனுடைய கணினியில் இணைய வசதி இல்லை... தன் செல்பேசியிலுள்ள இணைப்பை கணினியுடன் ஷேர் செய்துதான் இணையத்தை வலம் வருவான்.  அந்த செல்பேசி இல்லாத சூழலில் அலுவலகத்திற்கு சென்றால்தான் அது சாத்தியமாகும்... அப்படியே கண்டுபிடிச்சாலும்  போலீஸ் ஹெல்ப் இல்லாம அவனெ எப்படி புடிக்க முடியும்? நாம போய் கேட்டாலும் அந்த பேங்க் ஆளுங்க ஒரு இன்ஃபோவும் குடுக்க மாட்டானுங்களே....

கடவுளே எதுக்கு இந்த சோதனை எனக்கு? ரெண்டு லட்சமா சேர்ந்ததும் மொத்தமா ஊருக்கு அனுப்பி கல்யாண கடன அடைச்சிருங்கம்மான்னு சொல்லலாம்னு நினைச்சமே இப்படி அம்போன்னு பாதிய பறிகுடுத்துட்டு நிக்கறமே... இது மட்டும் ஷாமிலிக்கு தெரிஞ்சா என்ன ஆவறது....?

மேற்கொண்டு என்ன செய்வது என்பது தெரியாமல் அங்கேயே சிலையாய் நின்றான் மாதவன்...

டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு சொல்வாங்களே? அதுல போலீஸ்கிட்டயும் பொய் சொல்லக் கூடாதுன்னு சேத்துக்கணும் போல ....

அவன் காவல் ஆய்வாளரிடம் உண்மையை கூறியிருந்தால் எந்த கணக்குக்கு தொகை மாற்றப்பட்டிருந்தததோ அந்த கணக்கு விவரத்தை வைத்தே கள்வனை பிடித்திருக்கலாம்... எடுத்தவனுடைய தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தாலும் அவனுடைய புகைப்படம் நிச்சயம் அதிலிருந்து கிடைத்திருக்கும். .அதை வைத்தே சிறிது காலதாமதமானாலும் அவனை பிடித்திருக்கலாம்.

ஆனால் மாதவனுக்கு பணம் களவு போனதை விடவும் எங்கே அது தன் மனைவிக்கு தெரிந்துவிடுமோ என்கிற அச்சமே அதிகமாய் வாட்டி எடுத்ததால்...

போனது போட்டும்... சம்பாதிச்சிக்கலாம்... ஆனா ஷாமிலிக்கி மட்டும் தெரிஞ்சா நம்ம நிம்மதியே போயிரும்.... வாழ்நாள் முழுசும் இத சொல்லியே டார்ச்சர் பண்ணிருவா... வேணாம்... இது நமக்குள்ளவே இருக்கட்டும்..... எல்லாம் என் தலையெழுத்து என்று தன்னையே நொந்தவாறு சாலையில் இறங்கி நடந்தான் மாதவன்...

விநாச காலே விபரீத புத்தி அதாவது விதி  கெட்டுப்போனால் மதி கெட்டுப் போகும் என்பார்கள். மாதவனின் விஷயத்தில் அது உண்மையாகிப்போனது.

நிறைவு...

இந்த சிறுகதையின் முடிவுரை நாளை...

02 அக்டோபர் 2019

நடந்தது என்ன 5

‘சார்... நீங்க சொல்றா மாதிரி இங்க எதுவும் ஃபோன் கிடைக்கல சார்... நீங்க வேணா மேனேஜர் வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணி பாருங்க... அவர் நினைச்சா எங்க ஆளுங்க எல்லாரையும் கூப்ட்டு விசாரிப்பார்...’ என்றான் டிஆர் மால் கடை ஊழியர். 

‘அவர் எப்ப வருவார்?’ என்றான் மாதவன் எரிச்சலுடன்.

‘பத்து மணி ஆயிரும் சார்... எதுக்கும் நீங்க போய்ட்டு பத்து பத்தே காலுக்கு வந்து பாருங்க.’ கவுண்டரில் நின்றிருந்தவன் தன்னுடைய அலுவலை கவனிக்க துவங்கினான். மாதவன் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று சிந்திக்கலானான். அதுக்குள்ள போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வந்துறலாமா?

‘இந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷன் எங்க இருக்குன்னு தெரியுமா?’ என்றான் சற்று முன் தன்னிடம் பேசியவனிடம்.

‘இப்படியே நேரா போயி ரைட்ல திரும்பி கேளுங்க.. சொல்வாங்க.’

அதற்குள் மாதவனின் மனது இது வேணுமா என்றது... போலீஸ் ஸ்டேஷனுக்கு போனா உடனே எதுவும் ஆகப்போறதில்ல... இந்த மேனேஜரே பத்து மணிக்குத்தான் வருவான்னா... அங்க இன்ஸ்பெக்டர் நிச்சயம் அதுக்கப்புறம்தான் வரப்போறார்... எதுக்கும் வெய்ட் பண்ணி இவர பாத்துட்டே அங்க போவோம்... ஒருவேளை ஃபோன கடை ஆள் யாராச்சும் எடுத்து மேனேஜர் கிட்ட குடுத்திருந்தா போலீசுக்கு போறத அவாய்ட் பண்லாமே.... அங்க போயி தேவையில்லாம அவனுங்க கேக்கற அடாவடி கேள்விக்கு பதில் சொல்லிக்கிட்டு இருக்க வேணாமே...

சட்டென்று நினைவுக்கு வந்தவனாய்... கவுண்டரை நெருங்கி ‘ஒங்க ஃபோன்லருந்து என் செல்ஃபோனுக்கு டயல் பண்ண முடியுமா?’ என்றான்...

கவுண்டரில் நின்றிருந்தவன் எரிச்சலுடன் பார்த்தான். ‘இந்தாங்க நீங்களே டயல் பண்ணுங்க....’

மாதவன் பதட்டத்துடன் அதை வாங்கி அவசர அவசரமாக டயல செய்தான். ‘Switched off' என்று பதில் வந்ததும் நிம்மதியுடன் திருப்பிக் கொடுத்தான். ’நா இங்க விட்டுட்டு போனப்போ ஆஃபாயிருந்தா மாதிரியேத்தான் இப்பவும் இருக்கு.... அதனால இங்க எங்கயோதான் அது கெடக்கணும்... நா வேணா தேடி பாக்கலாமா?’

‘எங்கன்னு சார் பார்ப்பீங்க? மொத்தம் இருபதினாயிரம் சதுர அடி ஏரியா இது... வொர்க்கர்ஸ் எல்லாம் சாமான்கள அடுக்கிக்கிட்டு இருக்கற நேரம் வேற... இங்க இருந்துருந்தா காலையில க்ளீன் பண்ண ஹவுஸ் கீப்பிங் ஆளுங்க கையில கிடைக்காம இருந்துருக்காது... அவங்க எடுத்தாலும் ஒன்னும் செஞ்சிக்க முடியாது... ஏன்னா எல்லா ஏரியாவும் கேமரா கவரேஜ் இருக்கு....’

மாதவன் உடனே, ‘அப்படீன்னா நேத்து ஃபோன் விழுந்ததையும் ஏதாச்சும் ஒரு கேமரா கேப்சர் பண்ணியிருக்கலாம் இல்ல? அத பாக்க முடியுமா?; என்றான்.

‘அதுக்கு மேனேஜர் வரணும்... ஒன்னு வெளியில வெய்ட் பண்ணுங்க... இல்லன்னா போய்ட்டு அப்புறமா வாங்க...’ பணியாள் கோபத்துடன் தன் இருக்கைக்கு திரும்பிச் செல்ல மாதவன் வேறு வழியின்றி கடையிலிருந்து வெளியேறினான்.

********

ரவி மால் இயங்கிவந்த பகுதியை அடைந்தபோது பார்க்கிங் பகுதியில் வாகனங்கள் மிகவும் குறைவாக இருந்ததை கவனித்தான். ஆனாலும் அங்கு வாகனத்தை நிறுத்தாமல் மாலை ஒட்டியிருந்த சாலையில் திரும்பி வாகனத்தை நிறுத்தினான். அது ஒரு வர்த்தக பகுதியாக இருந்ததாலும் காலை பத்து மணிக்கு மேல்தான் பல கடைகளும் திறக்கப்படுவது வழக்கம் என்பதாலும் பல கடைகள் மூடிக்கிடந்தது அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. சாலையிலும் அவ்வளவாக ஆள்நடமாட்டாம் இல்லை. கண்காணிப்பு கேமராக்கள் ஏதும் உள்ளனவா என்று சாலையின் இருதிசையிலும் பார்வையை செலுத்தினான். ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற எவற்றிலும் காமரா பொருத்தபடாமலிருந்ததை கவனித்தான்.

காமரா பொருத்தப்படாமலிருந்த கடைகளில் ஒன்றின் படிகட்டுகளில் அமர்ந்து மாதவனின் செல்பேசியை எடுத்து ஆன் செய்தான். அவன் என்ன செய்ய போகிறான் என்பதை அறிந்த அவனுடைய மனது மீண்டும் அவனை எச்சரித்தது.

எதுக்கும் இன்னொரு தரம் யோசி.... நீ எந்த அக்கவுண்ட்டுக்கு மாத்தறியோ அதுல ஒன்னோட அட்றஸ் மட்டுமில்லாம ஒன்னோட செல்ஃபோன் நம்பரும் இருக்கும்.. வீட்ட மாத்திட்டே சரி.... ஃபோன் நம்பர என்ன பண்ணுவே...? யூஸ் பண்ணாம இருக்க முடியுமா ஒன்னால? அத வச்சே ஒன்னெ போலீஸ் புடிச்சிருவாங்களே? என்று குடைந்த மனதை அடக்கினான். ‘என் செல்போன யூஸ் பன்னாத்தான? அதான் ராஜி  போறப்போ ஒன் ஃபோன நீயே வச்சிக்கோன்னு எறிஞ்சிட்டு போய்ட்டாளே? கொஞ்ச நாளைக்கி அத யூஸ் பண்ணிக்குவோம்... எத்தன நாளைக்கி போலீஸ் தேடுவாங்க? மிஞ்சிப் போனா மூனு நாலு மாசம்... அதுக்கப்புறம் வேற கேஸ்ல அவங்க கவனம் போயிரும்.. 

தவறு செய்ய வேண்டும் என்று துணிந்தவர்கள் அதை நியாயப்படுத்த எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் என்பது ரவியின் விஷயத்தில் உண்மையானது. 

குடைந்ததெடுத்த மனசாட்சியை பொருட்படுத்தாமல் முந்தைய தினம் அவன் செய்ய நினைத்திருந்த காரியத்தில் முனைப்பாக இறங்கினான்.

அவன் நினைத்ததை செய்து முடிக்க சரியாக இருபது நிம்டங்கள் எடுத்தன. முந்தைய நாள் இரவில் அவனுடைய கணக்கு விவரத்தை பதிவு செய்துக்கொள்ள மறுத்த வங்கிகள் இப்போது எவ்வித இடைஞ்சலும் இல்லாமல் செய்துக்கொள்ள அனுமதித்தன.

IMPS (Immediate Payment Service)முறையில் பணத்தை அவனுடைய கணக்குகளுக்கு மாற்றினான். அடுத்த அரை மணி நேரத்தில் மூன்று வங்கிகளிலிருந்தும்  எழுபத்தையாயிரம் ரூபாய் வந்து சேர்ந்தது.

இத உடனே வித்ட்றா பண்ணணும்.... அது இந்த ஏரியாவுல வேணாம்... ஒருவேளை கேமராவுல நம்ம மொகம் தெரிஞ்சி அத வச்சி அக்கம்பக்கத்துல விசாரிச்சா எவனா ஒருத்தன் நம்ம ஹைட்ட (height) வச்சே அடையாளம் சொல்லிறுவான்... கொஞ்ச தூரம் போய் பாக்கலாம்..

***********

ஏறத்தாழ அதே நேரத்தில் மாலுக்குள் மீண்டும் நுழைந்த மாதவன் ‘மேனேஜர் வந்துட்டாருங்களா?’ என்றான் அவனை எதிர்கொண்ட முதல் பணியாளிடம்..

‘இப்பத்தான் வந்தார்.... ஆனா மால் முழுசும் ரவுண்ட்ஸ் போய்ட்டு பத்தரைக்கு மேலத்தான் கேபினுக்கு வருவார்... நீங்க வேணும்னா அஞ்சாவது மாடியில போய் வெய்ட் பண்ணுங்க...’

மாதவன் மணியை பார்த்தான். மணி பத்தரை ஆகியிருந்தது... என்ன ஆளுங்கடா.. என்று சலித்துக்கொண்டான்... வேறு வழியின்றி ஐந்தாவது மாடியை அடைந்து அங்கு அமர்ந்திருந்த பெண்ணிடம் மேனேஜரை பார்க்க வேண்டும் என்றான்...

‘ரவுண்ட்ஸ் போயிருக்காரு... வெய்ட் பண்ணுங்க..’

மாதவன் முனகியவாறே அங்கிருந்த இருக்கைகள் ஒன்றில் அமர்ந்து காத்திருந்தான்.

****

ரவி அங்கிருந்து கிளம்பி பத்து நிமிட தூரம் சென்றதும் மாதவன் கணக்கு வைத்திருந்த வங்கி ஏடிஎம்களை கண்டதும்.. இங்கயே நம்ம வேலைய முடிச்சிறலாம்... ஆனா ஒரு டைம்ல பத்தாயிரத்துக்கு மேல எடுக்க முடியாது போலருக்கே....எதுக்கும் ட்ரை பண்ணி பாக்கலாம்..

அவ்ன் நினைத்தது போலவே ஒரு தவணையில் பத்தாயிரம்தான் எடுக்க முடிந்தது. ஆனாலும்  இரண்டு வங்கிகளிலும் இருந்து ஒரு நாளுக்கு தலா முப்பதாயிரம் வரையிலும் எடுக்க முடியும் என்பது அவனுக்கு தெரியும். அந்த வங்கியின் ஏடிஎம்மில் அவனைத் தவிர வேறு யாரும் காத்திருக்காததும் அவனுக்கு வசதியாகப் போனது. சலிப்படையாமல், பதட்டப்படாமல் ஆறு முறை இரண்டு வங்கிகளின் டெபிட் கார்டுகளையும் பயன்படுத்தி அறுபதாயிரத்தை எடுத்துக்கொண்டான். அவன் எடுத்த தொகையின் பெரும் பகுதி இரண்டாயிரம் நோட்டுகளாகவே இருந்ததைக் கண்டதும் ‘வசதியா போயிருச்சி...’ என்று நினைத்தான்.. .

நல்ல வேளை, ஆளுங்க வர்றதுக்குள்ள நாம வேலைய முடிச்சிட்டோம் என்று எண்ணியவாறே தலையில் அணிந்திருந்த தொப்பியை முகம் மறையும் வரையிலும் இழுத்துவிட்டுக்கொண்டு விரைந்து சென்று வாகனத்தில் ஏறி அங்கிருந்து அகன்றான்....

வேறு எங்கும்  நிற்காமல் மேன்ஷனை அடைந்து அறையிலிருந்த தன்னுடைய பொருட்களில் ஒரேயொரு கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். வாகன சாவியை சுவரில் இருந்த ஆணியில் தொங்கவிட்டான். ‘ரிசெப்ஷன்ல குடுக்க வேணாம்... மோகன் வர்றப்ப இத பாத்து எடுத்துக்குவான்.’

நல்ல வேளையாக அவன் வாசலுக்கு வரும்போது ரிசப்ஷனில் யாரும் இல்லை.

ரவி சாலையில் இறங்கி சிறிது தூரம் நடந்து சென்று மாநகர பேருந்து நிறுத்ததில் காத்திருந்தான். இங்கருந்து ஆட்டோவுல போனா நாம எங்க போறோம்கறத போலீஸ் ஈசியா தெரிஞ்சிக்க வாய்ப்பிருக்கே...

தன்னால் முடிந்தவரை தன்னை பின்னால் காவல்துறை ட்ரேஸ் செய்ய முடியாமல் செய்துவிட்டோம் என்ற திருப்தியில் அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்ற பேருந்தில் ஏறினான்.

எங்கு செல்வது என்ற எவ்வித இலக்கும் இல்லாமல் துவங்கியது அவனுடைய பயணம்....

*******

‘சார் உங்கள மேனேஜர் வரச்சொன்னார்’

மாதவன் உடனே எழுந்து எதிரிலிருந்த மேலாளர் அறைக்குள் நுழைந்தான்.

‘என்ன விஷயமா என்னெ பாக்கணும்னு சொன்னீங்க?’ என்ற மேலாளரிடம் தான் வந்த விவரத்தை பதட்டத்துடன் சொல்லி முடித்தான்.

‘அப்போ எத்தன மணி இருக்கும்?’

‘ராத்திரி ஒன்பது மணி இருக்கும் சார்.’

‘சரி நா எதுக்கும் வொர்க்கர்ஸ் கிட்ட விசாரிச்சி வைக்கிறேன்... நீங்க எதுக்கும் போலீஸ்ல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துருங்க.’

மாதவனுக்கு எரிச்சல் வந்தது. ‘சார் ஒங்க கடையில இருக்கற சிசிடிவி ஃபுட்டேஜ பார்த்தா யாராச்சும் எடுத்திருந்தாலும் தெரியுமில்ல?’

மேலாளர் அவனுக்கு பதிலளிக்காமல் எழுந்து நின்றார். ‘அத நாங்க பாத்துக்கறோம்... நீங்க போலீஸ்ல கம்ப்ளெட்ண்ட் குடுக்கறதுதான் பெட்டர்... அவங்க வந்து விசாரிக்கறப்போ வீடீயோ ஃபுட்டேஜ காட்டிக்கறோம்.. வேணும்னா நீங்க ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதி வெளியில இருக்கற வொர்க்கர் குடுத்துட்டு போங்க...’

அவனுடைய பதிலுக்கு காத்திராமல் அவர் அறையை விட்டு வெளியேற வேறு வழியின்றி மாதவனும் எழுந்து வெளியில் வந்து அங்கு அமர்ந்திருந்த பணியாளிடமே ஒரு வெள்ளைத்தாளை பெற்று ஒரு புகாரை எழுதிக்கொடுத்துவிட்டு வெளியேறினான். 

******

அவன் மின்தூக்கியில் ஏறி மறைந்ததும் மால் மேலாளர் கண்காணிப்பு கேமாரா திரைகள் மேற்பார்வையிடும் அறைக்குள் நுழைய அங்கு பணியில் இருக்க வேண்டியவர்கள் இருக்கையில் இல்லாமல் இருப்பதை கவனித்ததும் எரிச்சலுடன் வெளியில் வந்து, ‘ஏன் இங்க யாரும் இல்ல?; என்று உரக்க கத்தினார்.

அடுத்த சில நொடிகளில் ஒரு அறையில் இருந்து இரண்டு பணியாட்கள் ஓடி வந்தனர்... ‘பாத்ரூம் போயிருந்தோம் சார்...’

‘ரெண்டு பேருக்கும் ஒன்னாவா வரும்?’ என்று எரிந்து விழுந்தார் ‘ எப்பவும் ஸ்க்ரீன் முன்னால ஒரு ஆளாவது இருக்கணும்னு சொல்லியிருக்கேன்ல?’

’சாரி சார்....’

‘இத சொல்லி சொல்லி கடுப்பேத்தாதீங்க போய் வேலைய பாருங்க... இன்னொரு தரம் இந்த மாதிரி நடந்துது.....’ என்றவாறு மீண்டும் காமரா திரைகள் இருந்த அறைக்குள் நுழைந்த மேலாளர்.... ‘நேத்து க்ரவுண்ட் ஃப்ளோர்ல ரிக்கார்ட் பண்ண சிடிய எடுத்துக்கிட்டு என் ரூமுக்கு ஒரு ஆள் வாங்க....’

பணியாள் ஒருவர் தயக்கத்துடன் அவரை பார்த்தான்..’டைம் ஸ்லாட் ஏதாச்சும் இருக்கா இல்ல ஃபுல்லா வேணுமா சார்?’

‘ராத்திரி ஒன்பது மணியிலருந்து கடை மூடற வரைக்கும் போதும்... க்விக்.’ அவர் வெளியேறி தன் அறையை நோக்கி சென்றார்.

‘என்னடா காலையிலயே மிலிட்டரி இந்த கத்து கத்துது?’ என்றவாறே இருவரில் ஒருவன் முந்தையை தினம் ரெக்கார்ட் செய்து சேமித்து வைக்கப்பட்டிருந்த சிடிக்கள் இருந்த ட்ராயரை திறக்க அடுத்தவன் சிரித்தவாறே ‘தெரியலையே’ என்றான்.

அந்த மாலில் இருந்தவர்கள் மேலாளரின் கண்டிப்பானவர் என்பதால் மிலிட்டரி என்று பெயர் வைத்திருந்தார்கள்.

*******

பணியாள் கொண்டு வந்து கொடுத்த சிடியை தன் கணினியில் இட்டு ஆய்வு செய்த மேலாளர்  சற்று முன்பு தன்னிடம் புகார் அளிக்க வந்தவர் தெரிகிறாரா என்று பார்த்தார்.

வாசலில் இருந்து ஒவ்வொரு பகுதியாக நகர்ந்தவர் பால், தயிர் இருந்த பகுதியில் மாதவனைப் போன்ற ஒரு உருவத்தைக் கண்டதும் ஜூம் செய்து பார்த்தார். ‘இந்த ஆள்தான்...’

மாதவன் தன் செல்பேசியை ஆன் செய்வதும் அதை தொடர்ந்து தன் அருகில் நின்றிருந்தவரிடம் உரையாடுவதும் பிறகு அங்கிருந்து நகர்ந்து அடுத்திருந்த மளிகை பொருட்கள் பகுதிக்குள் நுழைவதும் அங்கு தன்னுடைய செல்பேசியை ட்ராலிக்குள் எறிவதும் தெரிந்தது...

கேமராவை மீண்டும் ஜூம் செய்து பார்த்தார். மாதவன் வீசி எறிந்த செல்பேசி ட்ராலியின் அடியில் இருந்த ஒட்டை வழியாக தரையில் விழுவதும் தெரிந்தது. ஆனால் அதை யாரும் எடுக்கவில்லை என்பதையும் கவனித்தார். 

இந்த ஓட்ட ட்ராலிய மாத்துங்கடான்னு எத்தன தரம் அந்த சூப்பர்வைசர் கிட்ட சொல்லியிருக்கேன்.... ?அப்பவே மாத்தியிருநதா இப்போ இது விழுந்திருக்குமா? போலீஸ் வந்து ஏங்க முழுசா ஒரு செல்ஃபோன் கீழ விழற அளவு ஓட்டையா ட்ராலியில இருக்கும்னு கேட்டா நா என்ன பதில் சொல்றது? இவனுங்கள கட்டி மேய்க்க முடியலடா சாமி என்று நொந்தவாறே திரையில் தன்னுடைய பார்வையை தொடர்ந்தார்....

அடுத்த சில நொடிகளில் இரண்டு அல்லது மூன்று வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தரையில் கிடந்த செல்பேசியை எடுத்து அருகில் வைக்கப்பட்டிருந்த கூடையில் போடுவது தெரிந்தது... அடுத்து என்ன நடக்கிறது என்பதை கவனித்துக்கொண்டிருந்த மேலாளர் அந்த கூடையில் மீண்டும் சில பொஎருட்கள் வைக்கப்படுவதையும் அத்துடன் சேர்த்து தலையில் தொப்பி அணிந்திருந்த ஒருவர் அந்த கூடையுடன் அங்கிருந்து நகர்வதையும் கவனித்தார்.

அந்த மனிதரின் முகத்தை பார்க்கும் நோக்கத்துடன் காமராவை ஜூம் செய்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.... திரையை அடைத்துக்கொண்டு அந்த மனிதரின் தலையில் அணிந்திருந்த தொப்பி மட்டுமே தெரியவே எரிச்சலுடன் தன் காலடியில் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அழுத்திய வேகத்தில் அது அபாய மணி போல் அடித்து அந்த தளம் முழுவதும் ஒலிக்க அடுத்த நொடியே நான்கைந்து பணியாட்கள் அவருடைய அறைக்குள் நுழைந்தனர்.

‘இண்டர் காம்ல கூப்ட்டு க்ரவுண்ட் ஃப்ளோர் சூப்பர்வைசர வரச்சொல்லு....க்விக்.’

அவருடைய குரலிலிருந்த வேகம் அனைவரையும் தொற்றிக்கொள்ள அதில் ஒருவர் வராந்தாவிலிருந்த உள் தொலைபேசியில் விவரத்தை கூற அடுத்த சில நிமிடங்களில் தரைதளத்திற்கு பொறுப்பிலிருந்த சூப்பர்வைசர் மேலாளர் அறைக்குள் நுழைந்தார்.

‘நேத்து ராத்திரி ஒம்பது மணிக்கு நீங்க ட்யூட்டில இல்லையா:’

‘இருந்தேனே சார்.’

மேலாளர் ஜூம் செய்யப்பட்டிருந்த திரையை காட்டினார். ‘அப்ப இது என்ன? நம்ம மாலுக்குள்ள ஹெல்மெட்டோ இல்ல இந்த மாதிரி முகத்த மூடுறா மாதிரியான தொப்பியோ யாராச்சும் போட்டுக்கிட்டு வந்தா அத ரிமூவ் பண்ன சொல்லணும்னு சொல்லியிருக்கேன்ல?’

‘ஆமா சார்.... ஆனா?’

‘என்ன ஆனா?’

‘நிறைய கஸ்டமர்ஸ் சொன்னாலும் எடுக்க மாட்டேங்கறாங்க சார்... சண்டைக்கி வராங்க... எங்களால திருப்பி ஒன்னும் சொல்ல முடியறதுல்ல...

‘ஒடனே எங்கிட்ட சொல்ல வேண்டியதுதானையா? இப்ப போலீஸ் வந்து கேட்டா இத எப்படி காட்றது?’

‘போலீசா...? எதுக்கு சார்? ஏதாச்சும் பிரச்சினையா?’

‘ஆமாய்யா.... இப்பத்தான் ஒரு ஆள் வந்து என் செல்ஃபோன இங்கதான் விட்டுட்டு போனேன்னு கம்ப்ளெய்ண்ட் குடுத்திட்டு போயிருக்கார்... இந்த தொப்பிக்காரன் கூடையிலதான் அந்த ஃபோன் விழுந்திருக்கு... இவன் தான் அத எடுத்துக்கிட்டு போயிருக்கணும்... அவன ஐடி(ID)  பண்லாம்னு பாத்தா முகமே தெரியல... போலீஸ் வந்து இத பாத்தா காறி துப்ப மாட்டாங்க?’

சூப்பர்வைசர் முந்தைய நாள் இரவு ஒரு வாடிக்கையாளர் கூடையிலிருந்து கவுண்டரில் இருந்த ஒரு வொர்க்கர் ஒரு செல்பேசியை எடுத்து அந்த கூடையை வைத்திருந்த வாடிக்கையாளரிடம் கொடுத்ததை நினைவு கூர்ந்தார்.... அந்த ஆளும் தலையில தொப்பி போட்டுருந்தா மாதிரிதான் இருந்தது.... ஆனா அத இவர் கிட்ட சொல்ல போயி..... இவர் போலீசுக்கிட்ட சொல்லி... அந்த ஆள அடையாளம் காட்ட ஸ்டேஷனுக்கு வான்னு கண்ட நேரத்துலயும் இழுத்தடிச்சா என்னாவறது......? ஒன்னும் தெரியாத மாதிரி இருந்துருவோம்....

‘என்ன சைலண்டாய்ட்டீங்க..?’

‘இனிமே ஸ்ட்ரிக்டா சொல்லிடறேன் சார்...’ என்று பதிலளித்தான் சூப்பர்வைசர்.

‘இனிமே சரி... நேத்து ஏன் இத கவனிக்கல? அதுக்கு என்ன பதில்?’

‘அந்த நேரத்துல கடையில நல்ல கூட்டம் சார்.... கவுண்டர் கிட்டவே நிக்க வேண்டியதா போச்சி... அதான்....’

‘எதையாச்சும் சொல்லி சமாளிக்கறதுல இருக்கற புத்திசாலித்தானம் வேலையில இருக்கணுமில்ல? சரி சரி போயி வேலைய பாருங்க...’

அவர் அவசர அவசரமாக அறையிலிருந்து வெளியேற திரையில் தெரிந்த மனிதர் வேறு பகுதிக்கு எங்காவது சென்றிருந்தாரா என்று கவனித்தார். மேற்பார்வையாளர் கூறியிருந்ததுபோல முந்தைய நாள் இரவு கடை மூடும் சமயம் என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததை பார்க்க முடிந்தது.... கவுண்டர் ஏரியாவுல இன்னும் ரெண்டு மூனு காமரா வைக்கணும் போலருக்கு... பத்து கவுண்டருக்கு மூனு காமரா போதாது.... காமராவின் அருகிலிருந்த கவுண்டர்களைத் தவிர மற்ற கவுண்டர்களில் நின்றிருந்தவர்கள் எவர் முகத்தையும் ஜூம் செய்தாலும் சரியாக தெரியாததையும் கவனித்தார். அதனால்தான் காமராவில் இருந்து தொலைவிலிருந்த எட்டாவது கவுண்டரில் ரவியின் கூடையிலிருந்து செல்பேசியை எடுத்து ரவியிடம் கொடுத்தது சரியாக கேப்சர் செய்யபடாமல் போயிருந்தது....

சிடியை கணினியிலிருந்து எடுத்து தன் அருகில் நின்றிருந்த பணியாளிடம் கொடுத்தார். ‘ஒன்பது மணியிலருந்து கடை மூடற வரைக்கும் எடுத்த போர்ஷன மட்டும் தனியா ஒரு சிடி போட்டு எடுத்து கொண்டுக்கிட்டு வா....’

அவன் வாசலை நோக்கி நகர்ந்தான்,

‘டேய்... இத போயி எல்லார்கிட்டயும் தம்மட்டம் அடிக்காத... சீக்ரெட்டா போட்டு எடுத்து கொண்டுக்கிட்டு வா... சீக்கிரம்..’

இவருக்கு எல்லாமே சீக்கிரம்தான் என்று தனக்குள் முணகியவாறே பணியாள் கண்காணிப்பு திரைகள் இருந்த அறையை நோக்கி நகர்ந்தான். 

‘முட்டா பசங்க... இந்த சிடிய பாத்துட்டு போலீஸ்காரன் என்ன சொல்வான்னு தெரியலையே...’ என்று முணகியவாறு தன் அலுவலை தொடர்ந்தார் மேலாளர்.

நாளை நிறைவு பெறும்...

01 அக்டோபர் 2019

`நடந்தது என்ன 4

மாதவன் நிலைகொள்ளாமல் தன் படுக்கை அறைக்குள்ளேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தான். மனைவியின் செல்பேசியை எடுத்து மீண்டும் ஒரு முறை தொலைந்து போன தன்னுடைய செல்பேசி எண்ணை  டயல் செய்தான்.. ‘switched off' என்று வரவே சமாதானமடைந்தான்...

அப்போ வேற எவன் கையிலயும் நம்ம ஃபோன் சிக்கல.... என்று தனக்குள்ளே கூறிக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான். தன் செல்பேசி பத்திரமாக கடையிலேயே எங்கோ கிடக்கிறது போலும் என்ற நினைப்பே அவனுக்கு நிம்மதியான உறக்கத்தை அளித்தது.

*******

தரகர் கடையிலிருந்து புறப்பட்ட ரவி சிறிது தூரம் சென்றதும் சாலையின் ஓரத்தில் நின்று சாலையின் இருமருங்கிலும் பார்த்தான். மணி நள்ளிரவை நெருங்கிக்கொண்டிருந்ததால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலையில் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்து போயிருந்தது. 

செல்பேசியை எடுத்து ஆன் செய்தான். ’Insert SIM card' என்றது. அந்தாளோட சிம் கார்ட போடலாமா என்று ஒரு சில நிமிடங்கள் யோசித்தவன், ‘சரி போட்டு பாக்கலாம்... நடுராத்திரியாயிருச்சி...’ என்று நினைத்தவாறே சட்டைபையிலிருந்த மாதவனுடைய சிம்கார்டுகளை எடுத்தான்.. ஆனால் அடுத்த நொடியே இங்க வேணாம் என்று நினைத்தவாறு அங்கிருந்து கிளம்பினான்... மால் இருந்த ஏரியாவுலயே போய் செஞ்சிக்கலாம்... இங்க வச்சி திறந்து திருட்டு போனதுக்கப்புறம் இந்த ஏரியாவுலதான் முதல்ல ஆன் ஆயிருக்குங்கறத பின்னால போலீஸ் கண்டுபுடிச்சா இந்த ஏரியாலவுருக்கற எல்லா கடைகளையும் விசாரிச்சி தரகர் மாட்டிக்கிட்டா நமக்கும் பிரச்சினைதான்....

வாகனத்தை மீண்டும் உயிரூட்டி டிஆர் மால் இருந்த பகுதியை அடைந்து சாலையோரத்தில் மூடிக்கிடந்த கடைகள் ஒன்றின் வாசற்படிகளில் அமர்ந்து தரகர் அலுவலகத்திலிருந்து கொண்டு வந்த ஊசியை பயன்படுத்தி மாதவனின் இரண்டு சிம்களையும் அதில் சொருகி செல்பேசியை ஆன் செய்தான். 

அது உயிர்பெற்று நுழைவு சமிக்ஞை எண்ணை கேட்டதும்... அந்த ஆள் நமக்கு முன்னாலதான அடிச்சான்... என்று எண்ணியவாறு கண்களை மூடி யோசித்தான்.... பிறகு நினைவில் நின்ற எண்ணை தயக்கத்துடன் அடிக்க அவன் சற்றும் எதிர்பாராமல் செல்பேசி அதை ஏற்றுக்கொண்டு திறக்க ஏதோ ஜாக்பாட் அடித்ததுபோல் மகிழ்ந்துபோனான.

செல்பேசியில் ஏராளமான ஆப்கள் (Apps) நிறுவப்பட்டிருந்ததன.  அவற்றுள் மூன்று வங்கிகளின் மென்பொருளும் நிறுவப்பட்டிருப்பதை கவனித்தான். ஆனால் அவற்றை திறக்க பாஸ்வேர்ட் அல்லது பின் நம்பர் வேண்டுமே...? செல்பேசியில் இருந்த மற்ற மென்பொருட்களை ஒவ்வொன்றாக மேய்ந்தான்... இறுதி வரிசையில் அவனுடைய கவனத்தை Samsung Notes என்ற மென்பொருள் ஈர்த்தது. திறந்து பார்த்தான். அதில் நிறைய கோப்புகள் இருந்ததை கவனித்தான். 

இதுலருந்துதான அவன் சாமான்க லிஸ்ட்ட பாத்தான்... ? இது நம்ம செல்ஃபோன்லருக்கற மெமோ ஆப் மாதிரி போல...

ஒவ்வொரு கோப்பாக திறந்து பார்த்தான்.... நாலைந்து கோப்புகளுக்கு பிறகு திறந்த கோப்பில் இருந்தவற்றை பார்த்து அவனுடைய கண்கள் விரிந்தன. 

‘அடப்பாவி எல்லா பாஸ்வேர்டையும் இப்படியா ஒருத்தன் ஒரே ஃபைல்ல சேத்து வைப்பான்?’

இதுல எது பேங்கிங் ஆப் பாஸ்வேர்டா இருக்கும் என்ற சிந்தனையுடன் அந்த கோப்பில் இருந்த அனைத்து விவரங்களையும் ஒன்று விடாமல் வாசித்தான். இறுதியில் அவன் நினைத்தவாறே செல்பேசியில் நிறுவப்பட்டிருந்த மூன்று வங்கிகளுடைய மென்பொருளை பயன்படுத்த தேவையான பின் நம்பர்களும் அதில் சேமிக்கப்பட்டிருந்ததை கண்டு மகிழ்ந்தான். 

சுற்றும் பார்த்தான். ஓரிரண்டு வாகனங்கள் இடமும் வலமும் சென்றதை தவிர சாலை வெறிச்சோடி இருந்தது... ஆனால் மிக அருகாமையில்தான் புறநகர் மின்வண்டி நிலையம் இருந்ததால் அந்த நள்ளிரவிலும் சாலையில் ஆள் நடமாட்டம்  இருந்தது. தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு கோப்பிலிருந்த நுழைவு பின் எண்களை பயன்படுத்தி ஒவ்வொரு வங்கியிலும் மாதவன் வைத்திருந்து கணக்குகளுக்குள் நுழைந்து வெளியேறினான். அந்த மூன்று வங்கி கணக்குகளிலும் சேர்ந்து ஒரு லட்சத்திற்கும் மேல் இருப்பு இருந்ததை கவனித்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். 

அங்கிருந்து எழுந்து வாகனத்தில் ஏறி சற்று தூரம் சென்று பக்கவாட்டிலிருந்த குறுகிய சாலையில் நுழைந்து மூடிக்கிடந்த பெட்டிக் கடை வாசலில் அமர்ந்து யோசித்தான். தான் செய்ய போவதின் தீவிரம் அவனை மீண்டும் ஒருமுறை சிந்திக்க வைத்தது..... ஆனால் ஒரு சில நிமிடங்களில் அவன் சற்று முன்பு எடுத்த முடிவின் படியே செய்யலாம் என்று மீண்டும் முடிவு செய்து ஒவ்வொரு வங்கியிலிருந்தும் இருபத்தையாயிரம் ரூபாயை தன்னுடைய வங்கி கணக்குக்கு மாற்ற முடிவு செய்தான்.

வேணாம் ரவி... உன் கணக்குல உன்ன பத்திய எல்லா டீட்டெய்லும் இருக்குமே... ஆதார் ஒன்னே போறாது ஒன்னெ காட்டிக்குடுக்க? மாட்டிக்கிட்டா என்னாவறது...? ஒன் வய்ஃப நினைச்சி பாத்தியா? நீ மாட்டிக்கிட்டு ஜெயிலுக்கு போனா அவங்க என்ன பண்ணுவாங்க? என்று மனசாட்சி இடித்தது...

அதை புறக்கணித்துவிட்டு அவன் நினைத்ததை செய்து முடிக்க தீர்மானித்தான். ஆதார் கார்டிலிருந்து அவனுடைய அந்த சமயத்தில் அவன் குடியிருந்த வீட்டின் விலாசம்தான் கிடைக்கும் என்பது அவனுக்கு தெரியும்.... அந்த வீட்டிலிருந்து கடந்த இரண்டு வருடங்களில் இரண்டு வீடு மாறியிருந்தான். எந்த வீட்டு உரிமையாளருக்கும் அவன் மாறிச் சென்ற வீட்டின் விலாசம் தெரிய வாய்ப்பில்லை... ’அதனால அத வச்சி நம்மள ட்ரேஸ் பண்ண சான்ஸ் இல்ல....’

அப்போ மால்ல இருக்கற காமரா? அத ஒன்னெ காட்டிக்குடுத்துட்டா? என்றது மனசாட்சி...

அவனையுமறியாமல் அவன் உதடுகள் புன்னகையில் விரிந்தன. அதற்கும் அவனிடம் பதிலிருந்தது. பின்னந்தலையில் லேசாக விழத் துவங்கியிருந்த வழுக்கையை மறைக்க  எப்போதும் தலையில் அணிந்திருக்கும் ஸ்போர்ட்ஸ்  தொப்பி அவனை அத்தனை எளிதில் அடையாளம் காட்டிவிடாது என்று நினைத்தான்.... ’அதுவரைக்கும் நாம சென்னையில இருந்தாத்தான?’ எழுபத்தையாயிரம் ருபாய்க்காக காவல்துறை இத்தனை மெனக்கெடுமா என்றும் நினைத்தான்.... ’இந்த செல்ஃபோன கையில வச்சிருந்தாத்தான பிரச்சினை...? வேலைய முடிச்சிட்டு சிம் கார்ட டெஸ்ட்ராய் பண்ணிருவோம்... செல்ஃபோன switch off பண்ணிட்டு கூவத்துல தூக்கி போட்றுவோம்.... IMIE நம்பர வச்சிருந்தா கூட போலீசால என்ன பண்ண முடியும்? 

அவன் நினைத்தபடியே பணத்தை அவன் வங்கி கணக்குக்கு IMPS (Immediate Payment Service) முறையில் மாற்றுவதற்கு ஏதுவாக தன்னுடைய வங்கி கணக்கு விவரங்களை ஒவ்வொரு வங்கி மென்பொருளிலும் பதிவு செய்ய  முயற்சி செய்தான், ஆனால் முடியவில்லை. செல்பேசியில் டேட்டா இல்லையா அல்லது  இரவு நேரங்களில் இவற்றை செய்வதற்கு வங்கிகள் அனுமதிக்காதா என்று தெரியவில்லை.. வேறு வழியின்றி, காலையில் பார்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுடன் செல்பேசியை அணைத்து அங்கிருந்து புறப்பட்டு வழியில் திறந்திருந்த ஒரு சிற்றுண்டி உணவகத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு தங்கியிருந்த மேன்ஷனை அடைந்தான். .

அவன் அறையை சென்றடைந்த போது அவனுடன் குடியிருந்தவர்கள் அனைவருமே உறங்கிவிட்டிருந்ததால் உடையையும் மாற்றாமல் படுக்கையில் விழுந்தான். 

*** 

அடுத்த நாள் காலை மாதவனுக்கும் ரவிக்கும் வழக்கம் போல் மலர்ந்தது.

இருவரும் அந்த நாள் தங்களுக்கு மிக முக்கியமான நாளாக இருக்கப்போகிறது என்பதை உணர்ந்தனர். 

மாதவனுக்கு தொலைந்துபோன தன்னுடைய செல்பேசி தன்னுடைய மனைவிக்கு தெரிய வருவதற்குள் மீட்டு விட வேண்டும். ரவிக்கோ மாதவன் போலீசுக்கு செலவதற்கு முன்பு  அவனுடைய வங்கி கணக்குகளிலிருந்த  பணத்திலிருந்து தனக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு சென்னையை விட்டு வெளியேறிவிட வேண்டும்....

மாதவன் காலையிலேயே எழுந்து குளித்து உடைமாற்றிக்கொண்டு கிளம்பினான். ’மால் தொறக்கும்போதே நாம அங்க இருந்தாகணும். வேலை செய்றவங்க எல்லாரும் வர்றதுக்குள்ள நாம போயிறணும்.. அப்பதான் அங்க எங்கயாவது நம்ம ஃபோன் விழுந்துகிடந்தா எடுத்துக்க முடியும்.’

‘என்னங்க காலையிலயே கிளம்பிட்டீங்க? டிஃபன் கூட இன்னும் ரெடியாகலையே?’

‘இல்ல ஷாமிலி.. இன்னைக்கி ஆஃபீஸ்ல அர்ஜெண்டா ஒரு ப்ராஜக்ட முடிச்சி டெலிவரி குடுக்கணும்... காலையிலயே வந்துருங்கன்னு நேத்து ராத்திரியே டீம் லீடர் ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார்... எல்லாரும் போயி நா மட்டும் போகலின்னா நல்லாருக்காது... டிஃப்ன போற வழியில பாத்துக்கறேன்.’

‘சரி...போய்ட்டு வாங்க.’

இத்தோடு விட்டாளே என்று நினைத்தவனாய் மாதவன் ஹெல்மெட்டை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி விரைந்தான்...

சற்று தூரம் சென்றதும் தான் மனைவியின் செல்பேசியை வாங்காமல் வந்துவிட்டோமே  என்று தோன்றியது... ஆனாலும் திரும்பி வீடுவரை சென்று வந்தால் நேரமாகிவிடும் என்ற எண்ணமும் தோன்ற சரி பார்த்துக்கொள்ளலாம் என்று காலை நேர நெரிசலில் கலந்து டிஆர் மாலை நோக்கி வாகனத்தை முடுக்கினான். 

ஆனாலும் அவன் மாலை அடைந்தபோது மணி ஒன்பதைக் கடந்திருந்தது. 

******

ரவி கண் விழித்தபோது அவனுடைய அறை சகாக்களில் அவனுடைய நண்பனைத்தவிர மற்ற இருவரும் அலுவலகத்திற்கு சென்றுவிட்டிருந்தனர்.

‘என்னடா ரொம்ப சாவகாசமா எழுந்துக்கறே....’ என்ற நண்பன் ஏளனத்துடன் சிரித்தான். ‘சாருக்குதான் வேல வெட்டி எதும் இல்லையே....சரி...நேத்து இண்டர்வ்யூவுக்கு போனியே என்னாச்சி?’

ரவி படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான். ‘டேய்... மாசம் முழுசும் முக்கி முக்கி வேலை செஞ்சா ஒனக்கு எவ்வளவு கிடைக்கும்?’

’என்ன ஒரு பதினைஞ்சாயிரம் கிடைச்சா லாபம்... ஏன் எதுக்கு கேக்கற?’

‘ஐயாவுக்கு ஸ்டார்ட்டிங்லயே நாப்பதாயிரத்துல வேல கிடைச்சிருச்சி... இன்னும் ரெண்டு வாரத்துல ஜாய்ன் பண்ணணும்.. ரெண்டு நாள்ல ஆஃபர் லெட்டர் வந்துரும்...’

ரவியின் நண்பனுடைய கண்கள் வியப்பால் விரிந்தன. ‘எந்த கம்பெனிடா?’

‘சஸ்பென்ஸ்... ஆஃபர் லெட்டர் வந்ததும் காமிக்கறேன்... நீயே பாத்துக்கோ..’

‘சரிடா... நா கெளம்பறேன்... அப்ப இன்னைக்கி முழுசும் ஃப்ரீதானே?’

ரவி எழுந்து தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தான். ஒனக்கு என்ன வருதோ இல்லையோ நல்லா பொய் சொல்ல வருது என்றது அவனுடைய பிம்பம்.

‘இல்லடா... நானும் கிளம்ப வேண்டியதுதான்.... ஊருக்கு போயி வய்ஃப மறுபடியும் கூட்டிக்கிட்டு வரணும்.. ஆஃபர் லெட்டர பாத்தாத்தான் அவ நம்புவா. நா திரும்பி வந்ததும் ஒன்னெ வந்து பாக்கறேன்...’

‘அப்ப ஒன் பைக்?’

‘இங்கேயே இருக்கட்டும்... கொஞ்சம் பர்சேஸ் பண்ணணும்... நா போறப்போ சாவிய ரிசம்ஷன்ல குடுத்துட்டு போறேன்... நா வரற் வரைக்கும் நீ வேணும்னா யூஸ் பண்ணிக்கோ...’

‘சரிடா... நா கெளம்பறேன்.; 

நண்பன் அறையிலிருந்து வெளியேறியதும் ரவி பரபரப்படைந்தான்.... குளித்து உடைமாற்றிக்கொண்டு கிளம்பினான். இங்க வச்சி ஃபோன ஆன் பண்ண வேணாம்...மறுபடியும் மால் இருந்த ஏரியாவுக்கே போயிருவோம்... அவன் எப்படியும் காலைல எழுந்ததும் போலீசுக்குத்தான் போவான்... ஆனா பத்து பதினோரு மணிக்கு முன்னால அவன் கம்ப்ளெய்ண்ட் மேல ஆக்‌ஷன் எதுவும் எடுக்கறதுக்கு சான்ஸ் இல்ல.... 

அவன் மால் இருந்த பகுதியை அடைந்தபோது மணி ஒன்பதை கடந்திருந்தது..

தொடரும்..

30 செப்டம்பர் 2019

நடந்தது என்ன... 3


 டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும்...



மாதவன் தன் படுக்கையறையில் அமர்ந்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் செல்பேசியை தொலைத்து விட்டு வந்த டிஆர் மாலின் முன்பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில்  ரவியும் தன் கையிலிருந்த மாதவனின் செல்பேசியையே பார்த்தவாறு தன் இருசக்கர வாகனத்தில்அமர்ந்திருந்தான்.

அவன் வேறு யாருமில்லை.

'இது என்ன மாடல் சார். சூப்பரா இருக்கே?' என்று மாதவனைக் கேட்டு எரிச்சலடைய வைத்தவனே தான்.

மாதவனைப் போலவே பொருட்களுடன் பில் கவுண்டரை அடைந்து கையிலிருந்த ப்ளாஸ்டிக் கூடையை வைத்துவிட்டு பில் போடும்போதே அதில் வரும் தொகையை பார்த்துக்கொண்டு நின்றவனை, 'சார் ஃபோன்' என்ற குரல் ஈர்த்தது. பில் போடுபவனுக்கு அருகில் பொருட்களை பைகளில் அடுக்கிக்கொண்டிருந்த பணியாள் அவனை நோக்கி செல்பேசி ஒன்றை நீட்டுவதை பார்த்தான்.

'இத போயி சாமான்களோட வச்சிருக்கீங்க? யாராச்சும் எடுத்திருந்தா என்னாவறது? இந்தாங்க பிடிங்க.'

இது அந்தாளோட ஃபோன் ஆச்சே? இது எப்படி நம்ம கூடையில வந்துது?

சுற்று,ம் முற்றும் பார்த்தான். மாதவன் வாசலுக்கு வெளியே தன் இரு சக்கர வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் செல்வது தெரிந்தது.  அவனை கூப்பிட குரல் எழுப்ப நினைத்தவனை பில் கவுண்டரிலிருந்து வந்த குரல் இடைமறித்தது. சார்... 475/- ஆவுது கார்டா கேஷா?'

'கேஷ்தான்'  சட்டைப் பாக்கெட்டிலிருந்த ஐநூறு  ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.

மீதியை வாங்கிக்கொண்டு வெளியில் வந்தவன் அவசர அவசரமாக சாலையில் இறங்கி மாதவன் சென்ற திசையைப் பார்த்தான். மாதவன் சென்ற சுவடே தெரியவில்லை.

'சுத்த லூசா இருப்பான் போலருக்கே.... ஃபோன் காணலைங்கறது கூடவா தெரியாம இருக்கும்?' என்று நினைத்தவாறு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை நெருங்கி பையை தொங்க விட்டுவிட்டு சீட்டில் அமர்ந்து யோசித்தான்.

'இப்ப என்ன பண்றது?’கடையிலயே திருப்பி குடுத்துறலாமா? ஆனா அவனுங்களே வச்சிக்கிட்டானுங்கன்னா? வேணாம். ஆனா இந்த மாதிரி செல்ஃபோனுக்கு ஆசைப்பட்டுத்தானே நம்ம வேலையே போச்சி?

ஒன்னு பண்லாம்.இத தொறந்து பார்த்து அந்தாளோட விவரம் தெரியுதான்னு பாப்பம். அப்புறம் காண்டாக்ட் பண்ணி உங்க ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. வந்து வாங்கிக்கிருங்கன்னு சொல்லி குடுத்துருவோம். அதுக்கு முதல்ல இத ரீசார்ஜ் பண்ணணும்..' என்று நினைத்தவாறு  ரீசார்ஜ் செய்ய உதவும் துளையை பார்த்தான். அது சற்று அகண்டு இருந்தது.

இதை ரீ சார்ஜ் செய்வதற்கு அவனுடைய அறையில் இருந்த சார்ஜரால் முடியாது என்று தோன்றியது.  என்ன செய்யலாம்? புதுசா ஒரு சார்ஜர வாங்கணும்னா செலவு ஆகும். பர்சை திறந்து பார்த்தான். அதில் ஒரேயொரு ஐநூறு ரூபாய் தாள் அம்போ என்று நின்றிருந்தது. அவனுடைய வேலை பறிபோனதிலிருந்து அவனுடைய ஒரே வருமானம் செல்பேசிகளை வாங்கி விற்பதிலிருந்து தான் வந்துக்கொண்டிருந்தது. டி.எம்.இ வரை படித்திருந்தும் அவனுக்கு ஏற்ற வேலையாக ஒன்றும் கிடைத்தபாடில்லை. இருந்த ஒரு வேலையையும் அவனுடைய அவசரபுத்தியால் இழந்திருந்தான். அடுத்த வேலை எப்போது கிடைக்குமோ? பேசாமல் இந்த ஃபோனை கைமாத்திட்டா என்ன? ஆனால் இதுவரை அவன் ஸ்மார்ட் ஃபோன் எதையும் வாங்கி விற்றதில்லை.

ஐந்தாயிரம் வரை விலையுள்ள செல்பேசியை தொலைப்பவர்களோ அல்லது திருடு கொடுப்பவர்களோ அநேகமாக காவல் நிலையங்களுக்கு சென்று புகார் கொடுக்க மாட்டார்கள் என்பது இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள ரவி போன்றவர்களுக்கு தெரியும். ஆனால் எட்டாயிரத்துக்கும் அதற்கு மேலும் விலையுள்ள செல்பேசியை வைத்துள்ளவர்களுள் அநேகம் பேர் தங்களுடைய செல்பேசி திருடுபோய்விட்டால் அடுத்துள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுப்பார்கள். ஆனால் அவர்களுள் தங்களுடைய செல்பேசியின் IMIE ஏண்ணை தங்கள் புகாருடன் சமர்ப்பித்தால் மட்டுமே அதை காவல்நிலையத்தில் புகாரையே ஏற்றுக்கொள்வார்கள் என்பதும் ரவிக்கு தெரியும். ஏனெனில் செல்பேசியை திருடுபவர்கள் உடனே அதில் இருக்கும் சிம் கார்டை மாற்றிவிடுவார்கள். அந்த சூழலில் சம்மந்தப்பட்ட செல்பேசியின் IMIE ஏண் தெரிந்தால் மட்டுமே அதை ட்ரேஸ் செய்ய முடியும். ஆகவே அது இல்லையென்றால் காவல்நிலையத்தில் புகாரை வாங்கவே யோசிப்பார்கள். அப்படியே வாங்கினாலும் அதை கிடப்பில் போட்டுவிடுவார்கள்.

ரவி தன் கையில் இருந்த மாதவனின் செல்பேசியை மீண்டும் ஒரு முறை பார்த்தான். இது நிச்சயம் பத்தாயிரத்துக்கு மேல இருக்கும் பார்த்தா புதுசாவும் இருக்கு. அஞ்சாறு மாசத்துக்குள்ளதான் வாங்கியிருப்பான். பாத்தா படிச்சவன் மாதிரியும் இருக்கான். அதனால் இதனோட IMIE நம்பர நிச்சயம் வச்சிருப்பான். ஆனா மணி இப்பவே பத்தாயிருச்சி.  இந்த ராத்திரி நேரத்துல எந்த போலீஸ் ஸ்டேஷன்லயும் கம்ப்ளெய்ண்ட் வாங்க மாட்டாங்க.. அதே சமயம் அவனுக்கு நம்ம ஃபோன எவனோ எடுத்துக்கிட்டான்னு தோனாது. கடையிலதான் விழுந்துருக்கும்னுதான் நினைப்பான்.

ரவி இவ்வாறு யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவனுக்கு பின்னால் மாலின் முகப்பு விளக்குகள் அணைக்கப்படுவது தெரிந்தது. அவனைத் தவிர பத்து இருபது வாகனங்களே அந்த பார்க்கிங் பகுதியில் நிற்பதை கவனித்தான். அதுவும் கூட அந்த மாலிலுள்ள கடைகளில் பணியாற்றுபவர்களாக இருக்கக் கூடும்.

மீண்டும் அவனுடைய சிந்தனை இந்த செல்பேசியை என்ன செய்யலாம் என்பதை பற்றி எழுந்தது. திருப்பி குடுத்துரலாமா இல்ல வித்து காசாக்கிரலாமா? அவனால் நேரடியாக விற்க முடியாத செல்பேசிகளை அவனுக்கு தெரிந்த தரகரிடம் ஒப்படைத்துவிட்டு கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொள்வது வழக்கம். பேசாம அப்படி செஞ்சிரலாமா/ இதுக்கு எப்படியும் மூவாயிரம் நாலாயிரம் கிடைக்கும்.... ரெண்டு மூனு வாரம் ஓட்டிரலாம்.

அவனுடைய வேலை எதற்காக பறிபோனது என்பது தெரிய வந்ததுமே அவனுடைய மனைவி ராஜி குழந்தையுடன் அவனை விட்டு பிரிந்து தாய்வீடு சென்றுவிட்டிருந்ததால் அவன் தனியாகத்தான் வீட்டை காலி செய்துவிட்டு நண்பன் ஒருவனுடன் மான்ஷன் ஒன்றில் வசித்துக்கொண்டிருந்தான். அவன் குடியிருந்த வீட்டு உரிமையாளர் அவனுடைய வேலை பறிபோய்விட்டது என்பது தெரிந்ததுமே வீட்டை காலி செய்ய வைத்துவிட்டார். உடனே வீட்டிலிருந்த அனைஹ்து சாமான்களையும் மனைவி வீட்டு விலாசத்துக்கு லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டான்.

‘சார்... நேரமாச்சுது கிளம்புறீங்களா?’ என்ற குரல் கேட்டு தன்னுடைய நினைவுகளிலிருந்து மீண்ட ரவி தன் அருகில் நின்ற காவலாளியை பார்த்தான்.

‘இதோ கிளம்பிட்டேன்... சாரி’ என்றவாறு வாகனத்தை கிளப்பி சாலையில் இறங்கி சிறிது தூரம் சென்றதும் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தான். பிறகு தன்னுடைய செல்பேசியை எடுத்து அவனுக்கு தெரிந்த தரகரை அழைத்து தனக்கு செல்பேசி ஒன்று கிடைத்துள்ள விவரத்தை தெரிவித்துவிட்டு ‘இத பார்த்தா புது ஃபோன் மாதிரிதான் தெரியுது. சாம்சங் ஏ50 மாடல். ஆனா ஆஃபாயிருக்கறதால தொறந்து பாக்க முடியலங்க... ஒங்கள இப்ப வந்து பாக்கலாமா?’ என்றான்.

‘இப்பவா?’

‘ஆமா... எங்கிட்ட ஃபோன் வ்ந்து அரை மணி நேரம் ஆயிருச்சி... அவன் போலீஸ்க்கு போறதுக்குள்ள சிம் கார்ட மாத்திறணும்.... ஆனா சிம்ம எப்படி எடுக்கறதுன்னு தெரியல. அப்புறம் இத சார்ஜ் பண்ணி பாத்தா நல்லதுன்னு நினைக்கேன்.. உங்கக் கிட்டதான் எல்லா ஃபோனுக்கு ஏத்த சார்ஜர் இருக்குமே. அதான் கூப்ட்டேன். இன்னும் அரை மணிக்குள்ள இத தொறந்தாவனும்.. என்ன சொல்றீங்க? ஒங்களால முடியாதுன்னா சொல்லிறுங்க.. நா வேற ஏற்பாடு பண்ணிக்கறேன்.’

உண்மையில் அவனுக்கு வேறு எந்த தரகரையும் பரிச்சயமில்லை.. ஆனாலும் அவன் சொன்ன அந்த பொய் வேலை செய்தது. ‘சரி.. சரி... பத்து நிமிஷத்துல வர முடியுமா?’

அவர் குடியிருந்த வீடு பக்கத்தில்தான் இருந்தது. ‘சரி வரேன். கொஞ்சம் முன்ன பின்ன ஆவலாம்...பரவால்லையா?’

’சரி... அதிக பட்சம் கா மணி நேரம். அப்புறம் நா போயிருவேன்.’

‘அதுக்குள்ள வந்துருவேன்.’ என்று பதிலளித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டு அடுத்த பதினைந்து நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்தை அடைந்தான்.

தரகர் அவருடைய அலுவலக அறையின் வாசலில் நிற்பது தெரிந்தது.

‘எங்க ஃபோன குடுங்க பார்க்கலாம்?’

அவன் வாகனத்தை விட்டு இறங்குவதற்குள் அவனிடமிருந்த செல்பேசையை வாங்கிக்கொண்டு கடைக்குள் சென்று இருக்கையில் அமர ரவி அவரைப் பின்தொடர்ந்து சென்று எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.

அவரிடமிருந்த சார்ஜர்களில் ஒன்று மாதவனின் செல்பேசிக்கு பொருத்தமான ஒன்றை எடுத்து அதை செல்பேசியில் சொருக ரவி உடனே அவரை தடுத்து நிறுத்தினான். ‘இருங்க... முதல்ல சிம்ம கழட்டிறலாம்.’

தரகார் புன்னகையுடன் அவனை பார்த்தார். ‘பாய்ண்ட கரெக்டா புடிச்சிட்டய்யா.’

தன் மேசை டிராயரை திறந்து அதில் கிடந்த ஊசி போன்ற ஒன்றை எடுத்து செல்பேசியின் பக்கவாட்டிலிருந்து துளையில் இட்டு அழுத்த இரண்டு சிம் கார்டுகளுடன் ஒரு பலகை (Tray) வெளியில் வந்தது.

‘அது சரி... இதான் மேட்டரா? நா என்னடா சிம் கார்ட் ஓட்டையையே காணமேன்னு முழிச்சிக்கிட்டிருந்தேன்.” என்றான் ரவி. ‘எதுக்கும் இந்த ஊசி எங்கிட்டவே இருக்கட்டும்... நாளைக்கி திருப்பி தந்துர்றேன்.
.

அடுத்த ஒரு சில நொடிகளில் இரண்டு சிம் கார்டையும் நீக்கிவிட்டு சார்ஜரை செருகியதும் செல்பேசி உயிர்பெற்று ரவி சற்று முன் கூறியிருந்தது போலவே சாம்சங் ஏ50 என்றது அந்த செல்பேசி.

‘தொறந்து பாக்காமயே எப்படி மாடல கரெக்டா சொன்னீங்க?’ என்றார் தரகர்.

‘அந்த ஆள்தான் சொன்னான்.’ என்றான் ரவி புன்னகையுடன்.

‘என்னது ஓனரே சொன்னானா? உங்கக் கிட்டயா? எப்ப?’

தரகரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதிலாக தன்னிடன் அந்த செல்பேசி வந்து சேர்ந்த விவரத்தை சுருக்கமாக கூறினான் ரவி.

அவன் சொல்லி முடிப்பதற்குள் தரகரின் முகம் முற்றிலுமாக மாறிப்போனது.

‘இது வேலைக்கு ஆவாது ரவி...’

ரவி அவருடைய முகத்திலிருந்த கலவரத்தின் காரணம் தெரியாமல் குழம்பினான். ‘ஏன் எதுக்கு அப்படி சொல்றீங்க?’

‘இங்க பாருங்க ரவி... இந்த தொழில்ல போலீஸ்ல மாட்டாத வரைக்கும்தான் நாம் சேஃப். ஒருதரம் மாட்டிட்டோம்னு வைங்க... அதுக்கப்புறம் நம்ம ஏரியாவுல எங்க செல்ஃபோன் காணாம போனாலும் நம்ம வீட்டுக் கதவத்தான் போலீஸ் முதல்ல தட்டும்... இதுவரைக்கும் நா போலீஸ்ல மாட்டாம தப்பிச்சிக்கிட்டிருக்கேன்... அத கெடுத்துக்க நா விரும்பலைங்க...’

‘புரியலீங்க....’

‘இது ஒங்க கைக்கு வந்தது ஒரு பெரிய மால்ல... அங்க முக்குக்கு முக்கு கேமார இருக்கும். இந்த ஃபோனோட ஓனர், இத ஒங்க கூடையிலருந்து உங்ககிட்ட இத எடுத்து குடுத்த அந்த கடை பையன் ரெண்டு பேரும் உங்கள பாத்துருக்காங்க...அதனால கம்ப்ளெய்ண்ட் கிடைச்சவுடனே போலீஸ் அந்த மாலுக்கு போயி விசாரிச்சா நீங்க ஈசியா மாட்டிப்பீங்க.. அதனாலதான் சொல்றேன் இது வேலைக்கு ஆவாது... வேணும்னா கொஞ்ச நேரம் ஒக்காந்து சார்ஜ் பண்ணிக்கிட்டு போயிருங்க.... இத விக்கிற வேலை மட்டும் ஆவாது.... இல்லன்னா நீங்களே எவனாச்சும் இளிச்சவாயன் கிடைச்சா வந்த விலைக்கி தள்ளி விட்ருங்க...’

அவர் கூறிய வார்த்தைகளிலிருந்த உண்மை புரிந்ததும் ரவியும் ஒரு நிமிடம் கலவரமடைந்தான்.

எதற்கும் இங்கேயே ஒக்காந்து சார்ஜ் பண்ணிக்கிட்டு போயிருவோம்.. அப்புறமா தொறந்து பாத்துட்டு என்ன செய்லாம்னு டிசைட் பண்ணிக்கலாம் என்று நினைத்தவாறு எதிரில் அமர்ந்திருந்த தரகரை பார்த்தான். ‘நீங்க சொல்றதும் சரிதான். நா ஒன்னு பண்றேன். இதுக்குள்ள அந்தாளோட வீட்டு செல்ஃபோன் நம்பர் ஏதாச்சும் இருந்தா கூப்ட்டு சொல்றேன். இல்லன்னா மால் மேனேஜர் கிட்ட ஹேண்டோவர் பண்ணிடறேன்.. எதுக்கு வீணா வம்பு?’

‘சரி.... அப்படியே செஞ்சிருங்க. இல்லன்னா நீங்க மாட்டுறதும் இல்லாம இங்க வந்துதான் ஃபோன சார்ஜ் பண்ணீங்கன்னு போலீசுக்கு தெரிய வந்தா நானும் மாட்டிக்குவேன்.’ என்றவாறு எதிர் சுவரிலிருந்த கடிகாரத்தை பார்த்தார். ‘மணி இப்பவே பதினொன்னு ஆயிருச்சி... வீட்ல தேடுவாங்க... இந்த சார்ஜர வேணும்னா கொண்டு போய்ட்டு நாளைக்கி கொண்டு வாங்களேன்.’

அது சரிவராது என்று நினைத்தான் ரவி. இதை எடுத்துக்கொண்டு போவதால் பயன் ஏதும் இல்லை. ஏனெனில் அவன் தங்கியிருந்த மேன்ஷன் அறைகளில் ப்ளக் பாய்ண்ட் எதுவும் இருந்ததாக நினைவில் இல்லை. அதுவுமல்லாமல் அவனுடன் அறையில் குடியிருப்பவர்களும் இதை பற்றி கேட்டால் தேவையில்லாத தொல்லை ஏற்படும்... ‘இல்ல சார்... இன்னும் பத்து பதினஞ்சி நிமிஷம்.... பாட்டரி அம்பது பர்சண்ட் வந்தா போறும். காலையில அவங்கக்கிட்ட ஒப்படைக்கற வரைக்கும் சார்ஜ் நிக்கணுமே... அதான்....’

அவன் குரலில் இருந்த கெஞ்சல் தரக்ரை மீண்டும் இருக்கையில் அமர்த்தியது.

அடுத்த பதினைந்து நிமிடங்களில் செல்பேசியின் பாட்டரி ஐம்பது விழுக்காடை அடைய ரவி செல்பேசியை எடுத்துக்கொண்டு தரகரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான். அவனைத் தொடர்ந்து சாலையில் இறங்கிய தரகர், ‘இங்க பாருங்க ரவி... நீங்க இங்க வரலை... என்னெ பாக்கலை... சரிங்களா?’ என்றார்.

‘சரிங்க... கலவலைப்படாதீங்க.’

நாளை தொடரும்...

28 செப்டம்பர் 2019

நடந்தது என்ன - 2

ஆத்திரக்காரனுக்கு......

ரவியின் மனைவி ராஜி அவனிடமிருந்து செல்பேசியை பறித்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து சற்று முன் வந்த செல்பேசி எண்ணை டயல் செய்தாள்.

எதிர் முனையில் பெண் குரல் ஒன்று கேட்டதும், ‘மேடம், உங்க வீட்டுக்காரர் கடையில விட்டுட்டு போன ஃபோன் எங்கிட்டதான் இருக்கு. நாளைக்கி எங்க வந்து குடுக்கணும்னு சொல்லுங்க.’ என்றாள்.

எதிர்முனையில் சிறிது நேரம் பதில் வரவில்லை. அந்த பெண் கணவனுடன் பேசும் ஒலி மட்டும் லேசாக கேட்டது. 

‘ஹ்லோ..’ என்றாள் தயக்கத்துடன்.

‘சரிங்க. காலையில அந்த மாலுக்கே வர்றேன்னு சொல்றார். கூப்ட்டதுக்கு ரொம்ப தாங்க்ஸ்ங்க.’

‘பரவால்லைங்க.’ என்று அதற்கு மேல் பேச மனமில்லை இணைப்பை துண்டித்துவிட்டு செல்பேசியை சமையலறைக்குள் மறைத்து வைத்தாள்.

*****

’ஏங்க எங்கிட்ட என்ன சொன்னீங்க? செல்ஃபோன் டிஸ்ப்ளே சரியில்லை. ஃப்ரெண்டுக்கிட்ட குடுத்துருக்கேன்.. ரெண்டு நாள்ல வந்துரும்.... ஏங்க எப்படிங்க உங்களால மட்டும் இப்படி கோர்வையா டூப் அடிக்க முடியுது?’ என்றவாறு மாதவனை கடுப்புடன் பார்த்தாள் ஷாமிலி.’ஃபோன் தொலைஞ்சிருச்சின்னு சொன்னா ஒங்கள கடிச்சா தின்னுருவேன்?’

’உங்கிட்ட சொன்னா பேசியே கொன்னுருவியேன்னுதான் சொல்லலை...’ என்று முனுமுனுத்தவன் இவளிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று யோசித்தவாறு அமர்ந்திருந்தான். 

‘என்ன பதிலையே காணம்?’

’இல்லடி.. எதுக்கு வீணா ஒன்ன டென்ஷன் படுத்தணும்னுதான்....’

‘சரி... ஆனா ஒங்க ஃபோன் ஆஃபாயிருச்ச்ன்னு சொன்னீங்க? இப்ப எப்படி அதுக்கு உயிர் வந்துது?’

அதானே என்று நினைத்தான் மாதவன். செல்ஃபோன் ஆஃபாயிருச்சின்னுதான நாம ட்ராலியில போட்டோம்? இது எப்படி அந்த லேடிகிட்ட போச்சி?

‘தெரியலையே.. ஒருவேளை நாம யார்ங்கற டீட்டெய்ல்ஸ் தெரிஞ்சிக்கறதுக்காக சார்ஜ் பண்ணியிருப்பாங்களோ என்னவோ?’ என்று பதிலளித்த மாதவ்ன் சட்டென்று நினைவுக்கு வந்தவனாய் ‘அப்படீன்னா கூட ஃபோன் லாக்காகியிருக்குமே எப்படி திறந்தாங்க?’ என்றான் குழப்பத்துடன். ‘எனக்கென்னவோ இது அந்த லேடியோட வீட்லருக்கற ஆம்பள பண்ண வேலையாத்தான் இருக்கும்...’

ஷாமிலிக்கும் குழப்பமாகத்தான் இருந்தது, 

மாதவனும் யோசனையில் ஆழ்ந்தான். ஒருவேளை இந்த லேடியோட ஹஸ்பெண்ட்தான் அந்த ஆறடி ஆளா இருப்பானோ? அவந்தான் நம்ம பக்கத்துல க்ளோஸா நின்னுக்கிட்டிருந்தான். அவந்தான் நாம பின்ன (PIN) அடிச்சத பாத்துருப்பான்....... கரெக்ட் இது அவன் வேலையாத்தான் இருக்கும்... ட்ராலியிலருந்து விழுந்த ஃபோன எடுத்துருப்பான்.... அவன் பார்வையே சரியில்லை....

அவனுடைய சந்தேகத்தை அப்படியே மனைவியிடம் சொல்ல அது வேறொரு பிரச்சினையை கிளப்பியது.

‘ஒங்களுக்கு விவஸ்தையே கிடையாதுங்க.’ என்றாள் ஷாமிலி எரிச்சலுடன்...

‘ஆரம்பிச்சிட்டாடா.... நானே வாய குடுத்துட்டு மாட்டிக்கறனே... இதுக்குத்தான் இவ கிட்ட சொல்ல வேணாம்னு பாத்தேன்... எல்லாம் அந்த ராஸ்கலால வந்த வினை.... காலையில முதல் வேலையா ஸ்டேஷனுக்கு போயி ரெண்டு கான்ஸ்டபிள்ங்கள கூட்டிக்கிட்டு போயி அவன புடிச்சி குடுக்கணும்... முட்டிக்கி முட்டி தட்ட வச்சாத்தான் நம்ம ஆத்திரம் அடங்கும்....அவனா ஃபோன் பண்றதுக்கு பயந்துக்கிட்டு பொண்டாட்டிக்கிட்ட குடுத்து ஃபோன் பண்ண வைக்கிறான்... நாளைக்கி இருக்கு அவனுக்கு....

‘எந்த எடத்துடல எத எப்படி செய்யிறதுன்னு.... ஒரு..... புத்தி கெட்ட மனுஷன்.... இதுல நா டென்ஷனாவேன்னு எங்கிட்டருந்து மறைச்சாராம்...’ ஷாமிலி தொடர்ந்து புலம்ப மாதவன் காது கேளாதவன் போல் அமர்ந்திருந்தான்...

சிறிது நேரம் புலம்பி நிறுத்திய ஷாமிலி..’காலையில முதல் வேலையா போயி அத வாங்கிருங்க. ‘ என்றாள்.

‘சரி.. அத நா பாத்துக்கறேன்... நீ போய் படு... மணி ஒன்னாகப் போவுது...’

‘நாளைக்கி அவங்க கிட்ட எதுவும் ப்ராப்ளம் பண்ணாதீங்க...’ ஷாமிலி குழந்தைகள் படுத்திருந்த அறைக்குள் சென்று கதவை சாத்தினாள்.

’அத எடுத்தது நீயா? இருடே நாளைக்கி இருக்கு ஒனக்கு,,,,’ என்று அந்த ஆறடி உருவத்தை மனதுக்குள் கறுவியவாறு படுக்கையறைக்குள் நுழைந்து ஏசியை ஆன் செய்தான். 

உறக்கம் வந்தால்தானே.... அடுத்த நாள் காலை எழுந்ததும் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதுக்கு திட்டமிட்டவாறே படுக்கையில் உருண்டுக்கொண்டிருந்த மாதவன் தன்னையும்றியாமல் உறங்கிப்போனான்.

*****

அடுத்த நாள் காலையில் எழுந்ததும் மாதவன் தன் நண்பனை அழைத்து தான் அன்று அலுவலகத்திற்கு விடுப்பு என்று கூறிவிடுமாறு கேட்டுக்கொண்டு முந்தைய நாள் இரவு தீர்மானித்தபடி குளித்து உடை மாற்றிக்கொண்டு புறப்பட்டான். பத்து மணிக்கி முன்னால போயிரணும்.... இன்ஸ்பெக்டர் வரலைன்னாலும் எஸ்.ஐ யாராச்சும் இருப்பாங்களே....

அவன் அறையிலிருந்து வெளியில் வருவதற்கென்றே காத்திருந்தவள் போல்,’நீங்க அந்த மால் வாசல்லருக்கற காஃபி ஸ்டால்கிட்ட நிக்கணுமாம். அந்த லேடியோட ஹஸ்பெண்ட் வந்து குடுப்பாராம். அவர் ஒங்கள் நேத்து பாத்துருக்கறதால அடையாளம் கண்டுபிடிச்சிருவார்னு சொன்னாங்க.’ என்றாள் ஷாமிலி.

ஆக அவந்தான் ஃபோன எடுத்துருக்கான்.....வச்சிக்கறேன்... நேரா என்னெ கூப்டுருக்கலாமில்ல? தேவையில்லாம இவள கூப்ட்டு...

‘என்ன யோசிக்கிறீங்க? அவர் கிட்ட தகராறு பண்லாம்னுதான?’

‘இல்லடி... அதான் நேத்தே சொல்லிட்டியே... தகராறு பண்ணி என்ன ஆவப்போவுது? ஆனா...’

ஷாமிலி எரிந்து விழுந்தாள்.’ என்ன ஆனான்னு இழுக்கறீங்க?’

‘இல்ல தேவையில்லாமல் ஒனக்கு ஃபோன் பண்ணி......’

‘ஓ... இப்ப எனக்கு தெரிஞ்சி போச்சேன்னுதான் ஒங்க கவலை, இல்ல? ஏங்க இப்படி இருக்கீங்க? அவங்க எப்படி ஒங்க ஃபோன்ல கூப்ட முடியும்? அதுவே அவங்கக்கிட்டதான் இருக்கு. நீங்க என் ஃபோன்லருந்து கூப்ட்டீங்க. அதனால அதே ஃபோனுக்குத்தான் கூப்டுவாங்க? என் ஃபோன் அடிச்ச சத்தம் கேட்டதால நா ஓடி வந்து ஆன்ஸர் பண்ணனேன்... நீங்க அந்த நேரம் பாத்து பாத்ரூம் போனீங்க.. அதுவும் நல்லதுக்குத்தான் இல்லனா எனக்கு இந்த விஷயமே தெரிஞ்சிருக்காதே...’

அவள் கூறுவதும்தான் சரிதான் என்று நினைத்த மாதவன் பதிலளிக்காமல்... ‘டிஃபன் ரெடியால் இல்லன்னா... நா வெளிய பாத்துக்கறேன்...’ என்றவாறு பேச்சை திசை மாற்றினான்.

‘ஆமா... லேட்டா தூங்கனதால... காலையில எழுந்து டிஃபன் பண்ண முடியல.... மதியானத்துக்கும் கேண்டீன்லயே சாப்டுக்கங்க... ஃபோன் கிடைச்சதும். எனக்கு ஃபோன் பண்ணுங்க...சரியா?’ என்றவாறு ஷாமிலி வாசலை நோக்கி நகர மாதவன் சோபாவில் கிடந்த லேப்டாப் பையையும் பைக் சாவியையும்  எடுத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றான்.

*****

‘மறுபடியும், மறுபடியும் சொல்றேன்னு நினைக்காதீங்க.... அந்த ஆள பாத்ததும் ஜாஸ்தியா பேசிக்கிட்டு நிக்காம ஃபோன குடுத்துட்டு வந்துருங்க... இடையில புத்தி கெட்டு போயி எதாச்சும் தில்லு முல்லு பண்ணீங்க... அப்புறம் என்னெ மறந்துற வேண்டியதுதான்...சொல்லிட்டேன்...’என்ற ராஜியை பார்த்தான் ரவி...

அதான் கைக்கு எட்டுனத வாய்க்கு எட்டாம பண்ணிட்டியே..... இப்படி போயிருவேன் போயிருவேன்னு சொல்லியே என்ன இன்னும் எத்தன நாளைக்கித்தான் ப்ளாக்மெயில் பண்ணுவியோ தெரியல... இன்னும் ஒரு அரை மணி நேரம் கழிச்சி வந்திருந்தேன்னா ஒரு அம்பது ரூபாய என் அக்கவுண்டுக்கு மாத்திக்கிட்டிருப்பேன்.... 

‘என்ன பதிலையே காணம்?’ 

நினைவுகள் கலைக்கப்பட்ட ரவி திடுக்கிட்டு தன் மனைவியை பார்த்தான். ‘இல்ல ஒன்னுமில்ல... ஆனா....’

‘என்ன ஆணா....?’

‘அவன் போலீஸ் கீலிஸ்னு போயிருந்தா?’

ராஜியும் சிந்தனையில் ஆழ்ந்தாள்....’ஆமா நீங்க சொல்றதும் சரிதான்......’

‘நா வேணா நம்ம பாஸ்கர கூப்ட்டு விஷயத்த சொல்லவா?’

‘யாரு... லா டிகிரிய முடிக்காமயே லாயர்னு சொல்லிக்கிட்டு திரியற அந்த ஆளையா? வேற வினையே வேணாம்...’

‘இல்லம்மா.... அவன் வேலை பாக்கற லாயர் ரொம்ப சீனியர் தெரியுமா? அவர் கிட்ட வேலை செஞ்ச அவன் கிட்டத்தட்ட முழு லாயராய்ட்டான்... போலீஸ் ஸ்டேஷன்ல எல்லாரையும் தெரிஞ்சி வச்சிருக்கான்...அவனோட போனா அந்த ஆள் ஏதாச்சும் வில்லங்கம் பண்ணாலும் சமாளிச்சிறலாம்...’

‘சரி... என்னவோ செய்ங்க.... நீங்களா இழுத்து வச்சிருக்கற வில்லங்கத்த விடவா அந்தாளு வில்லங்கம் பண்னப் போறான்? சரி போலீஸ்க்கு போய்ட்டார்னே வச்சிக்குவம்.... நீ  எதுக்குய்யா கீழ கிடந்த ஃபோன எடுத்ததுமில்லாம அத திறந்து பாத்தேன்னு போலீஸ் கேட்டா என்ன பதில் சொல்வீங்க?”

’அத பாஸ்கர் கிட்ட விட்டுறலாம்... அவன் பாத்துக்குவான்... ஒருவேளை அந்த ஸ்டேஷன்ல கூட யாரையாச்சும் இவனுக்கு தெரிஞ்சிருக்கலாம்...’

‘சரி....பாத்து சூதானமா நடந்துக்குங்க.... லாயர்னு ஒருத்தர் கூட இருக்கற தைரியத்துல எதையாச்சும் பேசி விஷயத்த பெரிசாக்கிறாதீங்க.... என்ன நடந்தாலும் எங்கிட்டருந்து மறைக்காதீங்க... உடனே ஃபோன் பண்ணுங்க... என்ன நா சொல்றது கேக்குதா?

‘கேக்குது கேக்குது.... ஃபோன குடுத்ததும் ஒனக்கு ஃபோன் பண்றேன்...’ 

விட்டால் போதும் என்பதுபோல் உடனே அங்கிருந்து புறப்பட்டான்..... வழியில் தன் நண்பன் பாஸ்கரை அழைத்து விஷயத்தை கூறினான். 

‘சர்றா மச்சான்... டீ ஆர் மால் தான? நீ போய் சேர்றதுக்குள்ள நா அங்க இருப்பேன். நா வந்த பிறகு அந்தாள் கிட்ட பேசிக்கலாம்.. நீயா போய் மாட்டிக்காத..’

‘சரிடா.. வச்சிர்றேன்..’ இணைப்பை துண்டித்துவிட்டு பைக்கை டிஆர் மால் இருந்த திசையில் செலுத்தினான்.

காலை நேர வாகன நெரிசல் அவன் மாலை அடைந்த போது பத்து மணியை கடந்திருந்தது. மாலை நெருங்கியதும் வாசலை அடுத்திருந்த காஃபி ஸ்டாலை பார்த்தான். அங்கு யாரும் காத்திருக்கவில்லை.... ‘இன்னும் வரல போலருக்கு.... அவனும் ட்ராஃபிக்ல மாட்டியிருப்பான்.’

‘என்னடா நா நெனச்சதுக்கு முன்னாலயே வந்துட்டே’ என்றவாறு தன்னை நோக்கி வந்த பாஸ்கரை கவனித்தான். ‘மச்சான் இந்த ட்ரஸ்ல அசல் லாயர் மாதிரியே இருக்கேடா...’ என்றான் புன்னகையுடன்.

‘டேய்.... உண்மையிலயே நா லாயர்தாண்டா....’ என்றான் பாஸ்கர் புன்னகையுடன்.... ‘அட்லீஸ்ட் அப்படித்தான் எல்லாரையும் நம்ப வச்சிக்கிட்டிருக்கேன்.... நீதான் நம்ப மாட்டேங்கற..’

‘இல்லடா மச்சான்.....சும்மா தமாஷ்....’

‘சரி... அந்தாள் வந்துட்டானா? பாத்தியா?’

மீண்டும் ஒருமுறை காஃபி ஸ்டால் இருந்த திசையில் பார்த்தான்... ’இல்ல மச்சான். எங்கயாவது ட்ராஃபிக்ல சிக்கிக்கிட்டிருப்பான்.’

****

ஆனால் உண்மையில் மாதவன் வாகன நெரிசல் எதிலும் சிக்கவில்லை.. .

கடந்த ஒரு மணி நேரமாக காவல் நிலையத்தில் அங்கிருந்த உதவி ஆய்வாளர் கோபாலின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தான்.

‘ஏங்க பாத்தா படிச்ச ஆள் மாதிரி இருக்கீங்க. இப்படியா எல்லாத்தையும் ஃபோன்லயா சேவ் பண்ணி வப்பீங்க? இது எப்படி இருக்குன்னா வீட்ட பூட்டிட்டு சாவிய பூட்டு வாயிலயே வச்சிட்டு போற மாதிரி இருக்கு..’ என்று கிண்டலடித்த கோபால் ‘சரி இப்ப நாங்க என்ன பண்ணணும்கறீங்க?’ என்று வினவினார்.

‘இல்ல சார்... அந்த ஆள் என் பேங்க் அக்கவுண்ட்லருந்து ஏதாச்சும் எடுத்துருப்பானோன்னு ஒரு டவுட்...’

‘அத எப்படி அவ்வள்வு ஷ்யூரா சொல்றீங்க?’

‘காலையில பேங்க் சைட்ல போயி செக் பண்ணி பாத்துட்டுதான் சார் வரேன்... முழுசா இருபத்தையாயிரம் குறையறா மாதிரி தெரியுது..’ தான் சொல்வதில் துளியும் உண்மையில்லை என்பது தெரிந்தே சொன்னான் மாதவன். அவனுக்கு ஃபோனை எடுத்தவன் தன்னுடைய மனைவியிடம் தன்னை போட்டு கொடுத்துவிட்டானே என்கிற ஆத்திரம். 

‘மாதிரி தெரியுதுன்னா?’ கோபாலின் குரலில் தெரிவது கோபமா அல்லது கிண்டலா என்பது தெரியாமல் குழம்பினான் மாதவன்.

‘புரியல சார்..’ என்றான் தயக்கத்துடன்.

‘இல்ல... அக்கவுண்ட்ல பேலன்ஸ் குறையறா மாதிரி தெரியுதுன்னீங்களே அத கேட்டேன்.... மாதிரி தெரியுதா இல்ல உண்மையிலேயே குறைஞ்சி இருக்குதா? தெளிவா சொல்லுங்க.’

தான் சொல்வதில் இவருக்கு நம்பிக்கை இல்லை போலருக்கே.. நாம சொல்றது பொய்னு இவருக்கு தெரிஞ்சிருக்குமோ? அவசரப் பட்டுட்டமோ? இங்க வந்தே இருக்க வேணாம் போலருக்கே? நம்ம ஏரியா ஸ்டேஷனா இருந்தா நம்ம நலச் சங்க ஆளுங்கள யாரையாச்சும் கூட்டிக்கிட்டு போயிருக்கலாம். ;இல்ல சார் ஃபோன எங்க தொலைச்சீங்களோ அந்த ஏரியா ஸ்டேஷன்லதான் புகார் குடுக்கணும்.’ என்று தன்னை காலையில் அவனுடைய பகுதிகுட்பட்ட காவல் நிலையத்தில் தெரிவித்ததால் வேறு வழியின்றி இந்த நிலையத்திற்கு வந்தான்...

உதவி ஆய்வாளர் கோபால் கேட்ட கேள்விக்கு எப்படி பதிலளிப்பது என்று குழம்பியவாறு மாதவன் சில நொடிகள் அமர்ந்திருந்தான்.

‘இங்க பாருங்க சார்.. எங்களுக்கு நிறைய வேலை இருக்கு...’ என்று எரிந்து விழுந்தார் கோபால். ‘நீங்க தயங்கறதுலருந்தே நீங்க சொல்றது உண்மையில்லேன்னு தெரியுது. உங்க ஃபோன் போச்சேங்கற கவலைய விட அந்தாளு நம்ம ஃபோன தொறந்து பாத்துட்டானேங்கற ஆத்திரம் தான் ஜாஸ்தியா இருக்கறா மாதிரி தெரியுது.’

இந்த போலீஸ்காரங்களுக்கு இதெல்லாம் எப்படித்தான் தெரியுதோ தெரியல. நம்ம மனசுலருக்கறத அப்படியே சொல்றான் பார்.... 

‘இன்னொன்னையும் சொல்லிக்கறேன். False complaint குடுக்கறது எவ்வளவு பெரிய தப்புன்னு தெரியுமா? இதுக்குன்னே ஐபிசில ஒரு செக்‌ஷன் இருக்கு. செக்‌ஷண்ட் 182ல  இதுக்கு என்ன தண்டனைன்னு சொல்லியிருக்கு தெரியுமா? குறைந்த பட்சம் ஆறு மாசம் ப்ரிசன். அதனால யோசிச்சி சொல்லுங்க. உண்மையிலடே அந்தாளு உங்க அக்கவுண்ட்லருந்து பணத்த கையாடல் பண்ணியிருக்காரா இல்லையா?’ உதவி ஆய்வாளரின் குரல் அதிகார தோரணையில் உயர்ந்துக்கொண்டே போக உண்மையிலேயே அரண்டு போனான் மாதவன்.

அவனையுமறியாமல் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

‘என்ன எழுந்துட்டீங்க? உக்காருங்க.’ என்றார் உதவி ஆய்வாளர் கோபத்துடன். ‘நீங்க பாட்டுங்க வருவீங்க... பொய்யா ஒரு புகார் குடுப்பீங்க... அதுக்கு நாங்க FIR போட்டு விசாரணை பண்ணிக்கிட்டு கிடக்கணும்...அப்படித்தான?’

செய்வதறியாது தவித்தான் மாதவன்... ‘இல்ல சார்... ஃபோன் போன பதட்டத்துல.....’ அவனுடைய குரலில் இருந்த நடுக்கத்தை கவனித்த உதவி ஆய்வாளர் நாமளும் அதிகமா கோச்சிக்கிட்டமோ என்று நினைத்தார். .

அந்த நேரம் பார்த்து மாதவனின் கையிலிருந்து அவனுடைய மனைவியின் செல்பேசி ஒலிக்கவே, ‘எடுத்து யார்னு பாருங்க.’ என்றார் உதவி ஆய்வாளர். ‘அந்தாளா இருந்தா எங்கிட்ட குடுங்க.’

‘என்ன சார்... பத்து மணிக்கே வரேன்னீங்க?’ என்ற குரல் கேட்டதும் ‘அந்தாள்தான் சார்’ என்றவாறே உதவி ஆய்வாளரிடம் நீட்டினான்.

‘நீங்க எங்க இருக்கீங்க?’ என்றார் அதிகாரத்துடன்.

‘நீ யார்யா?’ என்று பதில் வந்ததும்.

‘டேய்....  நா நீங்க யார்னு மரியாதையா கேட்டா பதிலுக்கு நீ யார்யான்னு என்னையே கேக்கறியா? நா இந்த ஏரியா எஸ்.ஐ.. இன்னும் பத்து நிமிஷத்துல ஃபோனோட இங்க வரல....’

எதிர் முனையில் யாரோ இருவர் பேசிக்கொள்வது கேட்டது... அதை பொருட்படுத்தாமல் இனைப்பை துண்டித்துவிட்டு மாதவனிடம் செல்பேசியை திருப்பி அளித்தார் உதவி ஆய்வாளர். ‘பதினஞ்சி நிமிஷம் பார்ப்போம். இல்லன்னா கான்ஸ்டபிள அனுப்பி தேட வைப்போம். நீங்க போயி வாசல்ல வெய்ட் பண்ணுங்க. அந்த ஆள வாசல்ல பாத்தா ஒன்னும் பேசாதீங்க. நா விசாரிச்சி முடிச்சிட்டு ஒங்கள் கூப்டறப்போ மட்டும் வந்தா போதும்... வேணும்னா ஒரு டீ அடிச்சிட்டு வாங்க. என்ன?’

மாதவனுக்கும் பசி வயிற்றை கிள்ளியது. காலையில் டிஃபன் ஒன்றும் சாப்பிடாததும் உதவி ஆய்வாளரின் கிடுக்கிப்பிடி விசாரணையாலும் ஆடிப்போயிருந்த அவனுக்கு எதையாவது சாப்பிட்டால்தான் தெம்பு வரும் என்று தோன்றியது...

‘தாங்ஸ் சார்..’ என்றவாறு வாசலை நோக்கி நடந்தான். 

****

ரவி இணைப்பு துண்டிக்கப்பட்ட செல்பேசியையே பார்த்தவாறு நின்றிருந்தான். நாம நினைச்சது மாதிரியேத்தான் நடந்துருக்கு. நல்ல வேளையா பாஸ்கர வரச்சொன்னோம் என்று நினைத்தவாறு தன் அருகில் நின்றிருந்த தன்னுடைய நண்பனைப் பார்த்தான்.

‘என்னடா பேயறைஞ்சா மாதிரி ஆய்ட்டே?’ என்றான் பாஸ்கர். ‘யார் ஃபோன்ல?’

‘இந்த ஏரியா எஸ்.ஐடா... அவன் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுத்துட்டான் போலருக்கு. இன்னும் பத்து நிமிஷத்துல ஸ்டேஷன்ல இருக்கணும்னார்.... அதான் ஒரு செக்கண்ட் என்ன பண்ரதுன்னு தெரியாம.....’

பாஸ்கர் சிரித்தான். ’ஓ இதான் விஷயமா? கவலைய விடு. இந்த ஏரியா எஸ்.ஐ நமக்கு தெரிஞ்சவர்தான்...கொஞ்சம் அடாவடியா பேசுவார்... ஆனா கை சுத்தம்.. மத்த ஆளுங்க மாதிரி இல்ல.. வா பாத்துக்கலாம். ஒன்னோட வண்டியிலயே போயிரலாம். சாவிய குடு. என் வண்டிய வந்து எடுத்துக்கலாம்.’

இருவரும் அடுத்த ஐந்தாவது நிமிடம் காவல் நிலையத்தை அடைந்தனர். 

பாஸ்கரை பார்த்ததும் ஏளனத்துடன் புன்னகை செய்தார் உதவி ஆய்வாளர். ‘என்னய்யா பாஸ்கர், எங்க இவ்வளவு தூரம்? இவர் யாரு ஒன் ஃப்ரெண்டா?’

‘ஆமா சார்...கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஃபோன்ல பத்து நிமிஷத்துல இங்க இருக்கணும்னு மிரட்டுனீங்களே அவர் இவர்தான்.’ என்று பதிலளித்த பாஸ்கர் ரவியின் கையிலிருந்த செல்பேசியை வாங்கி அவரிடம் நீட்டினான். ‘இதான் உங்க கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணவரோட செல்ஃபோன்.’

அதை வாங்கி மேஎசையில் வைத்துவிட்டு ரவியை பார்த்தார் உதவி ஆய்வாளர். ‘இது எப்படிங்க உங்கக்கிட்ட வந்தது? எல்லாத்தையும் மறைக்காமல் சொன்னீங்கன்னா நல்லது.’

ரவி பதில் பேசாமல் தன்னருகில் நின்றிருந்த பாஸ்கரை பார்த்தான். 

‘சார் அது வந்து...’ என்று பாஸ்கர் இழுக்க... உதவி ஆய்வாளர் தலையை வேண்டாம் என்பதுபோல் அசைத்தார். ‘பாஸ்கர் நீங்க வெளியில இருங்க பளீஸ்... இவர நாங்க விசாரிக்கத்தான் கூப்ட்டோம்... இன்னும் அரெஸ்ட் பண்ணல.... போலீஸ் விசாரணையில குறுக்கிட கூடாதுங்கறது உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்.’

அவர் சொல்வதில் இருந்த நியாயத்தை உணர்ந்த பாஸ்கர் ரவியிடம், ‘டேய் பயத்துல எதையாவது உளறி வைக்காத... கேக்கற கேள்விக்கு மட்டும் பதில சொல்லு. பொய்யா மட்டும் எதையும் சொல்லாத. அப்புறம் என்ன நடந்தாலும் நா பாத்துக்கறேன். சரியா? நா இங்கதான் இருப்பேன்.’ என்று கிசுகிசுத்துவிட்டு வெளியிஏறினான். 

தயக்கத்துடன் நின்றுக்கொண்டிருந்த ரவியை யோசனையுடன் பார்த்தார் உதவி ஆய்வாளர்.... ஆள பாத்தா டவுட்டா எதுவும் தெரியலையே...அந்தாள் சொன்னா மாதிரி பேங்க்லருந்து பணத்த கையாடல் பண்ணியிருந்தா தைரியமா ஃபோன திருப்பி குடுக்க வரமாட்டானே? எதுக்கு விசாரிப்போம்.. அப்புறம் பாத்துக்கலாம்  என்று நினைத்தவாறு... அவனை அமரச்சொன்னார்.

‘உங்க பேரு?’

‘ரவி சார்.’ என்றான் தயக்கத்துடன். 

‘என்ன பண்றீங்க?’

வேலை செஞ்ச இடத்த சொன்னா அங்க விசாரிக்கணும்னு சொன்னாலும் சொல்வார்... அப்புறம் வேற வினையே வேணாம். ‘சொந்தமா பிசினஸ் பண்றேன்’

‘பிசினஸ்னா? கடை கிடை வச்சிருக்கீங்க:ளா? விவரமா சொல்லுங்க.’

‘அமேஜான்லருந்து மொத்தமா சாமான்கள வாங்கி வீடு வீடா போயி விப்பேன் சார்.... இருபதுலருந்து இருபத்தஞ்சி பெர்சண்ட் கிடைக்கும்....

‘அமேஜான் ஆன்லைன் ஷாப்லருந்தா?’

‘ஆமா சார்.’ இதுக்கு மேல கேக்காதீங்க சார்.. பொய்யா எதையும் சொல்லி வைக்காதே என்று பாஸ்கர் அறிவுறுத்தியது வேறு நினைவுக்கு வந்தது.

நல்லவேளையாக உதவி ஆய்வாளர் அவனுடைய பதிலில் திருப்தியடைந்துவிட்டதுபோலிருந்தது அவருடைய அடுத்த கேள்வி.

‘சரி.. இந்த ஃபோன் எப்படி உங்க கைக்கு வந்தது? அதச் சொல்லுங்க.’ 

ரவி முந்தைய தினம் நடந்தவற்றை கூறினான். ‘அது எப்படி என் பேஸ்கட்ல வந்துச்சிங்கறது சத்தியமா எனக்கு தெரியாது சார். நீங்க வேணும்னா கடையிலருக்கற சிசிடிவி ஃபுட்டேஜ் பாருங்க....கவுண்டர்ல பில் போடற பையன் எடுத்து குடுத்தப்பத்தான் எனக்கே தெரியும்.’

எவ்வித தடுமாற்றமும் இல்லாமல் அவன் கூறியதிலிருந்தே அவன் சொல்வது உண்மைதான் என்பதை உணர்ந்துக்கொண்ட உதவி ஆய்வாளர் மேலே தொடர்ந்தார்.

‘சரி ஃபோன அந்த கடை பையன் குடுக்கும்போதே அது எந்தில்லேன்னு சொல்லிற வேண்டியதுதான? எதுக்கு அத வாங்கி.... அத்தோட நிக்காம அத தொறந்து பாத்து அதுலருக்கற நம்பருக்கு ஃபோன் பண்ணி..... இப்படி இங்க வந்து நிக்கணுமா?’

இத்தனை கேள்விகளா? இதுல எதுக்கு முதல்ல பதில் சொல்றது என்று திணறினான் ரவி.

‘என்ன பதில காணம்?’ 

உதவி ஆய்வாளர் குரலில் இருந்த அதட்டல் அவனை மேலும் பதறவைத்தது. இது நமக்கு தேவையா? ஒரு லாபமும் இல்லாம...ச்சை என்று தன்னைத் தானே நொந்துக்கொண்டான். ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுவான்னு பாஸ்கர கூப்டுக்கிட்டு வந்தா இவர் அவனெ ஒரே வார்த்தையில விரிட்டிவிட்டுட்டார். 

‘என்னங்க?’ கோபால் விடுவதாக இல்லை.

‘இல்ல சார்.. கடை பையன்......

‘ஆட்டைய போட்ருவான்னு நினைச்சிருப்பீங்க. அப்படித்தானே?’

‘ஆமா சார்’ என்றான் ரவி அவசர அவசரமாக... அவன் சொன்ன நினைத்ததை உதவி ஆய்வாளரே சொன்னதில் அவனுக்கு ஒரு திருப்தி,’அதனாலதான்
அந்த ஃபோன வாங்கி அது யாரோடதுன்னு தெரிஞ்சிக்கிறலாம்னுதான்...

உதவி ஆய்வாளர் அட லூசுப்பயலே என்பதுபோல் அவனைப் பார்த்து ஏளனத்துடன் புன்னகைத்தார் கோபால். நீ இப்படி சொல்ற. அவன் நீ காச ஆட்டைய போட்டுட்டேன்னு புகார் குடுக்கறான்... 

சுவரில் இருந்த சுவர் கடிகாரத்தை பார்த்தார் கோபால்... ஐயையோ கோர்ட்டுக்கு வேற போவணுமே....ரெண்டு மூனு கேள்வியோட முடிச்சிக்கணும்....இது ஒரு ஒப்பேறாத கேஸ்

‘சரி.. நீங்க இப்படி சொல்றீங்க? புகார் குடுத்தவர் நீங்க அவர் பேங்க் அக்கவுண்ட்லருந்து காச எடுத்துட்டீங்கன்னு சொல்றாரே?’

ரவி திடுக்கிட்டு அவரை பார்த்தான். ‘சார்... சத்தியமா இல்ல சார்.... வேணும்னா இப்பவே உங்களுக்கு ஃப்ரூஃப் பண்ணி காட்றேன்.’

‘எப்படி?’  

அந்த ஃபோன ஒரு நிமிஷம் நா யூஸ் பண்லாமா சார் என்றவாறு மேசை மீதிருந்த செல்பேசியை எடுத்து அடுத்த பதினைந்து நிமிடத்தில் மாதவனின் மூன்று வங்கிகளுடைய ஆப்பையும் பயன்படுத்தி ஒவ்வொன்றிலும் இருந்து வங்கி கணக்கு புத்தக நகலை தரவிறக்கம் செய்து அதில் எதிலிருந்தும் தான் பணத்தை எடுக்கவில்லை என்பதை நிரூபித்தான். 

அவன் செயல்படுவதை அவனுடைய இருக்கைக்கு பின்னல் நின்று கவனித்துக்கொண்டிருந்த கோபால் அவன் செய்து முடித்ததும்....’ நீங்க பலே ஆள் போல இருக்குதே...’ என்று சிரித்தார். ‘அதெப்படிங்க ஒரு ஆளோட பேங்க் அக்கவுண்ட்டுக்க்ள்ள இவ்வளவு ஈசியா போய் வரீங்க? அதுக்கு வேண்டிய பாஸ்வேர்ட் எல்லாம் அந்த ஃபோன்ல இருக்கறதுங்கறத நேத்து ராத்திரி பூரா ஒக்காந்து மேய்ஞ்சிருக்கீங்க, இல்ல?’

அவர் குரலில் இருந்த கோபம் ரவியை குழப்பியது... இந்த ஆள்தான நா காட்டறேன்னு சொன்னப்போ சரிங்கறா மாதிரி ஃபோன குடுத்தாரு? இப்ப அதுவே விணையா போயிருச்சி போலருக்கே?

‘சரி.. சரி டென்ஷனாகாதீங்க.... எல்லாம் ஒரு க்யூரியாசிட்டி இல்ல? இத்தன பேங்க்ல கணக்கு வச்சிருக்கானே? அப்படி என்னத்தான் அதுல வச்சிருப்பான்னு பாக்கற ஆர்வம்... அப்படித்தான? அதுவும் நல்லதா போச்சி... இல்லன்னா அந்த ஆள் அப்படி ஒரு புகார் குடுத்தா ஒங்களால அது பொய்யின்னு ப்ரூஃப் பண்ணியிருக்க முடியாதே... குட்... நல்ல வேலை செஞ்சீங்க...’ என்ற உதவி ஆய்வாளர் எழுந்து நின்றார்... பிறகு எதிரில் நின்றிருந்த காவலரிடம், ‘யோவ் வெளியில அந்த லாயர் பாஸ்கர் வெய்ட் பண்ணிக்கிட்டிருப்பார் அவர உள்ள வரச்சொல்லு’

பாஸ்கர் அடுத்த நொடியே உள்ளே வந்தான். ‘என்ன சார்.. முடிச்சிட்டீங்களா?’

‘ஆமாய்யா.... ஒன் ஃப்ரெண்ட் பலே ஆள்தான்... ஆனா சுத்த ஏமாளி அவர் இருந்த இடத்துல வேற ஆளா இருந்தா பேங்க் பேலன்ஸ் முழுசையும் சுரண்டிட்டு ஃபோன குப்ப தொட்டியில வீசி எறிஞ்சிட்டு போயிருப்பான். இவர் என்னடான்னா ஃபோன் சொந்த காரன கூப்ட்டு குடுக்கலாம்னு..... அந்தாள் என்னடான்னா இவன் பணத்த ஆட்டைய போட்டுட்டான்னு கம்ப்ளெய்ண்ட் குடுக்கறான்....?’

பாஸ்கர் கோபத்துடன், ‘அப்படியா சொன்னான்...? அப்படி ஒரு கம்ப்ளெய்ண்ட் அந்தாள் குடுத்தா நாங்க ஐபிசி செக்‌ஷன் 182ல ஒரு கவுண்டர் (counter) கம்ப்ளெய்ண்ட் குடுத்தா எப்படி இருக்கும் சார்.. ?சும்மான்னாச்சும் ஒரு ஃபால்ஸ் கம்ப்லெய்ண்ட் குடுத்து ஒங்கள சுத்த விடற ஆள சும்மா விட கூடாது சார்.’

கோபால் சிரித்தார். ‘ரொம்ப ஷார்ப்பா இருக்கீங்க? கவுண்டர் கம்ப்ளெய்ண்ட்லாம் தேவையிருக்காது...அந்தாள ஏற்கனவே மிரட்டிதான் வச்சிருக்கேன். சரி... நீங்க வெய்ட் பண்ணிக்கிட்டிருந்தப்போ அந்தாள் வந்தாரா?’

‘இல்லையே சார்... வெளியில யாரும் இல்லையே?’ 

‘அப்படியா? அப்படியே ஓடிட்டானா?’ என்று சிரித்தார் கோபால். ‘பொய் புகார் குடுத்தா ஆறு மாசம் ஜெயில்னு ஒரு குண்ட போட்டேன்.. மனுஷன் பயந்துட்டார் போலருக்கு.....’

‘அப்ப நாங்க போலாமா சார்?’

‘தாராளமா....அந்தாள் புகார் எதுவும் ரைட்டிங்ல குடுக்கல... குடுத்தா பாத்துக்கலாம்...’ என்றவன் ரவியை பார்த்து புன்னகைத்தார்...’பாத்துங்க... எல்லாரும் என்னைய மாதிரி இருக்க மாட்டாங்க... புகார வாங்கிக்கிட்டு உள்ள தள்ளியிருப்பாங்க.... அப்புறம் நீங்க நிரபராதின்னு கோர்ட்லதான் ப்ரூஃப் பண்ணியிருக்கனும்...போய்ட்டு வாங்க... இனிமே இந்த மாதிரி சோஷியல் சர்வீஸ்லாம் பண்ணாதீங்க... என்ன புரியுதா?’

ரவி உடனே தலையை அசைத்தான்.... ‘தாங்ஸ் சார்...’ என்றவாறு பாஸ்கரை பார்த்தான். அவன் போகலாம் என்பதுபோல் தலையை அசைக்க இருவரும் காவல்நிலையத்தை விட்டு வெளியேறினர். 

அவர்கள் இருவரும் பேசியவாறே காவல்நிலையத்தை விட்டு வெளியேறியதை சாலையின் மறுபுறத்தில் நின்றுக்கொண்டிருந்த மாதவன் கவனித்தான். பிறகு அவர்கள் இருவரும் வாகனத்தில் ஏறி சென்று மறையும் வரை காத்திருந்துவிட்டு காவல்நிலையத்திற்குள் நுழைந்தான்.

அவன் வருவதை கவனித்த உதவி ஆய்வாளர் கோபால். ‘என்ன சார் எங்க போய்ட்டீங்க? அவங்கள நேரா மீட் பண்ற தைரியம் இல்ல... அப்படித்தான?’ 

என்ன பதிலளிப்பது என்று தெரியாமல் தலை கவிழ்ந்து நின்றான் மாதவன். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதுபோல் தான் அவசரப்பட்டு தேவையில்லாமல் சொன்ன பொய் தன்னை இப்படி நிற்க வைத்துவிட்டதே என்று நொந்துபோனான்.

‘இந்தாங்க உங்க ஃபோன்.... நியாயமா இத எடுத்து உங்கக்கிட்ட சேஃபா சேத்துறம்னு நினைச்ச ஆளுக்கு நீங்க ஏதாச்சும் ரிவார்ட் குடுக்கறது போயி... நீங்க சொன்ன ஒரு பொய் உங்கள அந்தாள் மூஞ்ச கூட பாக்க முடியாம பண்ணிருச்சி....’

ஆமாம் என்பதுபோல் தலையை அசைத்தான். ‘சாரி சார்... ஏதோ அந்தாள் மேலருந்த கோபத்துல....’

‘ஆமாங்க... இப்பவாச்சும் தெரிஞ்சிக்குங்க... கோபத்துல எடுக்கற எந்த முடிவும் சரியா இருக்காது....’ என்ற உதவி ஆய்வாளர் தொடர்ந்தார்..’அந்த மாதிரி பணத்த ஆட்டைய போடணும்னு நினைக்கற ஆள் எதுக்காக ஒங்கள கூப்டணும்.? அக்கவுண்ட்லருந்து எல்லாத்தையும் எடுத்துட்டு ஒங்க ஃபோன சிம் கார்ட எடுத்துட்டு தூக்கி எறிஞ்சிட்டு போயிருந்தா என்ன செஞ்சிருப்பீங்க? சரி ஒங்க ஃபோனோட IMEI நம்பரையாவது சேவ் பண்ணி வச்சிருக்கீங்களா?’

‘இல்ல சார்...’ 

உதவி ஆய்வாளர் எரிச்சலுடன் அவனை பார்த்தார். ‘முதல்ல அத செய்ங்க... அப்பத்தான் ஃபோன்ல வேற எந்த சிம் கார்ட போட்டாலும் ட்ரேஸ் (Trace) பண்ண முடியும்... அது இல்லேன்னா.... ஒன்னும் பண்ண முடியாது....’

மேசை மீதிருந்த செல்பேசியை எடுத்து அவனிடம் நீட்ட அதை பெற்றுக்கொண்டு ‘சாரி சார்... தாங்ஸ் சார்...’ என்று குளறியவாறு தலைகுணிந்தபடி காவல்நிலையத்தை விட்டு வெளியேறினான் மாதவன்...

*******

இது இப்படியும் முடியலைங்க...

அப்போ உண்மையில என்னதான் நடந்தது?

அதை திங்கட்கிழமை பாக்கலாம்...

இது வரைக்கும் புடிச்சிருந்தா மேலருக்கற ‘லைக்’ பட்டண அழுத்துங்க...



**********