21 பிப்ரவரி 2020

புதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்....

புதிய வலைத் திரட்டி அறிமுகம்.

நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. 

அது இன்று முதல் நனவாகிப் போனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 

நண்பர் நீச்சல்காரன் மற்றும் அவர்களுடைய நண்பர்களுடைய முயற்சியால் தமிழ்ச்சரம் என்னும் வலைத்திரட்டி இயங்க ஆரம்பித்துள்ளது என்ற அறிக்கையை வாசித்தேன். 

தமிழ்வலைப் பதிவகம் வாட்ஸப் குழு மூலமாக வலைப்பதிவுகளை அவ்வப்போது வாசிக்க முடிந்தாலும் அதில் அந்த குழுவில் உள்ளவர்களால் மட்டுமே வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். தினந்தோறும் சுமார் பத்து பதினைந்து பதிவுகளை அதன் மூலம் வாசிக்க முடிந்தாலும் அது போறாது என்கிற எண்ணமே எனக்கு இருந்து வந்தது. தமிழ்மணம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அது நிறுத்தப்பட்டு விட்டதும் நாம் எழுதும் பதிவுகளை ஒரு குறிப்பிட்ட குழுவினர் அல்லது நம்முடைய நண்பர்கள் மட்டுமே வாசிக்க வாய்ப்புள்ளது என்கிற எண்ணமே நம்மை அதிகம் எழுத தூண்டுவதில்லை. ஆனால் வலைத்திரட்டிகளில் வெளியாகும் பதிவுகளை வாசிக்க அந்த தளத்தின் அங்கத்தினராக இருக்க வேண்டும் என்றோ அல்லது நமக்கும் ஒரு வலைப்பதிவு வேண்டும் என்றோ கட்டாயம் இல்லை. திரட்டியின் இணைய விலாசம் கைவசம் இருந்தாலே போதும் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் வாசித்து கருத்துகளை பதிவு செய்யலாம். 

இந்த சமயத்தில் கருத்துகள் என்றதும் இதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. தமிழ்மணம் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம் முதலே கருத்துரைகளை பதிவு செய்வது என்பது ஒரு சம்பிரதாயமாகவே கருதப்பட்டு வந்ததை கண்டிருக்கிறேன். அதாவது நீங்கள் என் பதிவில் வந்து கருத்துரை இட்டால்தான் நான் உங்கள் பதிவில் வந்து கருத்துரைகள் இடுவேன் என்கிற மனப்பான்மை பல பதிவர்களிடையில் காண முடிந்தது. இதற்காகவே குழுக்களாக பிரிந்து செயல்படுவதையும் கண்டிருக்கிறேன். அது இப்போதும் தொடர்கிறது என்பது உண்மை. 

நம்முடைய பதிவுகளுக்கு கருத்துரை வர வேண்டுமே என்கிற ஆதங்கத்தில் பல தரமற்ற பதிவுகளில் பெயருக்கு கருத்துரை இடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. நானும் அவ்வறு தேமே என்று கருத்துரை இட்டு வந்திருக்கிறேன். ஆனால் அது ஒரு சில மாதத்தில் வெறுத்துப்போய்விட்டது. நமக்கு கருத்துரை வராவிட்டாலும் நல்ல தரமான பதிவுகளை மட்டுமே எழுதுவது என ஒதுங்கியிருந்தேன். 

இப்போதும் தமிழ்வலைப்பதிவக குழுவில் வெளியாகும் பதிவுகள் பலவற்றில் ஒரு கருத்துரை கூட இல்லாமல் இருப்பதை காண முடிகிறது. உண்மையில் இது  நல்லதல்ல என்பது என்னுடைய கருத்து. ஆகவேதான் பல ஆங்கில வலைத்திரட்டிகளில் பட்டியலிடப்படும் ஆங்கில பதிவுகளை வாசிக்கும் போதும் அதில் தர்க்கிக்கப்படும் விஷயங்களை வாசிக்கும்போதும் நம்முடைய தமிழ் வலையுலகம் மட்டும் ஏன் தரத்தில் இவ்வளவு இறங்கியுள்ளது என்ற வேதனை ஏற்படுகின்றது. தமிழிலும் பல நல்ல பதிவுகள் வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஆங்கில பதிவுகளுடன் ஒப்பிடுகையில் அது மிக, மிக குறைவே.

தரம் என்பது அவரவருடைய பார்வைக்கு உட்பட்டது என்பது உண்மைதான். ஆனால் பதிவுகளை எழுதுவது வெறும் பொழுதுபோக்குக்காக என்றில்லாமல் நல்ல கருத்துக்களை அல்லது நல்ல நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகளாக அமையவேண்டும் என்ற நோக்கம் பதிவர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். 

தமிழ்ச்சரம் வலைத்திரட்டி மூலமாக என்னுடைய இந்த ஆவல் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

நீச்சல்காரன் மற்றும் அவருடைய நண்பர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்றும் வாழ்த்துக்கிறேன்.

இதில் என்னுடைய வருத்தம் என்ன தெரியுமா? அவருடைய இந்த அறிவிப்பு பதிவிலேயே இதுவரை என்னைத் தவிர வேறு எவரும் கருத்துரை இடவில்லை என்பதுதான். 

நட்புடன்
டிபிஆர். 

24 கருத்துகள்:

  1. நல்ல முயற்சி...தொடர வாழ்த்துக்கள்..(முன்பெல்லாம் கருத்துரை இடுவதில் எனக்கும் திண்டுக்கல் தனபாலனுக்கும் போட்டி என்பது போலவே உடன் பதிவிடுவோம்..அதை மீண்டும் தொடரும் எண்ணமிருந்தது..நிச்சயம் இந்தத் திரட்டியை அதற்கான நல்ல வாய்ப்பாகக் கருதுகிறேன்)

    பதிலளிநீக்கு
  2. பார்த்தீர்களா...? ஐயா அவர்கள் தான் என்றும் முதன்மை... இதில் எனக்கு வழிகாட்டியும்...

    இந்த திரட்டியால் வலைப்பூ மீளட்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதில் உங்கள் பங்கும் உண்டு என்று நினைக்கிறேன். பாராட்டுக்கள் டிடி.

      நீக்கு
  3. ஒரு சில தனிப்பட்ட காரணங்களால் பதிவுலகம் வராததால் பதிவுகளை படிக்க இயலவில்லை.திரு நீச்சல்காரன் மற்றும் அவரது நண்பர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி வெற்றிபெற வாழ்த்துவோம். நாமும் வலைசரத்தில் இணைவோம். பதிவுகளுக்கு கருத்திடுவது பற்றிய தங்களின் கருத்துடன் உடன்படுகின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த நிலை இனியாவது மாறும் என்று நம்புவோம்.

      நீக்கு
  4. வணக்கம் ஐயா
    இதை முதலில் வெளியிட்டது மதுரைத்தமிழன் நான் இணட்டாவது நபராக வாழ்து தெரிவித்தேன்.

    உங்களது கருத்து ஆணித்தரமாக இருக்கிறது நன்றி

    பதிலளிநீக்கு
  5. கருத்து அளிப்பதில் நான் உயர்தவன் என்று கருதும் வயது முதிர்ந்த பதிவர்களும் உண்டு.

    நான் எவ்வளவோ தரமான பதிவுகள் எழுதி இருக்கிறேன் அதற்கு வராத சிலர்...

    சிலரது அர்த்தமற்ற பதிவுகளுக்கு கருத்துரை தந்து தனது தரத்தை இழக்கின்றனர்.

    எனது பதிவுக்கு வராததால் தரம் இழந்ததாக சொல்வதாக அர்த்தமில்லை.

    நியாய, தர்மப்படி சொன்னேன். வயது முதிர்ந்ததால் பெரியோர் அல்ல!

    பதிலளிநீக்கு
  6. எனது பதிவுக்கு வராததால் தரம் இழந்ததாக சொல்வதாக அர்த்தமில்லை.//

    புரியல ஜி. நான் யாரையும் குறிப்பிட்டு கூறவில்லையே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அல்ல எனது பதிவுக்கு வராததால் நான் அப்படி சொன்னதாக யாரும் நினைக்க வேண்டாம் என்று குறிப்பிட்டேன் அவ்வளவுதான் ஐயா.

      மேலும் நான் யார் பதிவுக்கும் வரமாட்டேன் ஆனால் எனது பதிவுக்கு எல்லோரும் வரவேண்டும் என்று சூசகமாக பதிவு போட்டவர்களும் உண்டு ஐயா.

      நீக்கு
  7. என் பதிவு ஒன்றையும் தமிழ் சரத்தில் பார்த்தென்பதிவுகள் எவ்வாறு சரத்தில் இடம்பெறும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். இரண்டு மணி நேரத்தில் தானாகவே அதில் இணைந்துவிடுமாம்.

      நீக்கு
  8. சமீபத்தில்தான் இந்தத் திரட்டி பற்றிக் கேள்விப்பட்டேன்.  நல்லபடியாக உருவாகி வளர வாழ்த்துகள்.  இணைந்து வளர்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு நம்முடைய பங்கு எழுதுவதிலும் மற்றவர்கள் எழுதுவதை வாசிப்பதிலும் தான் உள்ளது. அதை நன்றாக செய்தாலே போதும்.

      நீக்கு
  9. வலைப்பதிவுகள் ஏராளமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அனைத்தையும் ஒன்றிணைப்பதில்தான் சிக்கல். அந்த சிக்கலை புதிய திரட்டிகள் போக்க வேண்டும். புதிய திரட்டிக்கு வாழ்த்துகள். நிற்க, நானும் புதிய திரட்டி ஒன்றை உருவாக்கி உள்ளேன். இந்த திரட்டியை விட அது வித்தியாசமாக இருக்கும். இது போட்டிக்கு ஆரம்பிக்கப்படவில்லை. ஆரம்பித்து ஒரு வாரமாகி விட்டது. அத்துடன், தமிழ்மணம், இன்ட்லி, தமிழ் 10 என பல திரட்டிகள் முன்னர் இருந்தன. அது போல இப்போதும் நாம் ஒற்றுமையாக செயற்படுவோம்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. வெற்றி பெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. நல்லதொரு முயற்சி. எனது சில பதிவுகளும் அங்கே பார்த்தேன். நானும் தொடர்ந்து அங்கே உள்ள பதிவுகளை வாசிக்கிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. மேலும் மேலும் வளர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. புதிய திரட்டி பலரை இணைக்கும் என்று நம்புகிறேன். தமிழ் மணம் இயங்கியதுபோல் பலருக்கு எம்முடைய பதிவுகளைக் கொண்டு சேர்க்கும்

    பதிலளிநீக்கு
  14. தமிழ்ச்சரம் வலைத்திரட்டி சிறப்பாக இயங்குகிறது.
    இந்த வலைத்திரட்டி முயற்சியில் பங்கெடுத்த எல்லோருக்கும்
    நன்றியும் பாராட்டும்

    கொரோனா தொற்றில் இருந்து முற்காப்பு எடு!
    http://www.ypvnpubs.com/2020/03/blog-post_15.html

    பதிலளிநீக்கு
  15. அருமை ... வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு