31 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....4


3ம் பாகம்

ஜிஎஸ்டி வரி விதிப்பு உண்மையில் வரவேற்கப்பட வேண்டியதுதான். 

ஏனெனில் ஜிஎஸ்டி அமலாக்கப்படுவதற்கு முன்பு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களும் தங்கள் விருப்பப்படி விற்பனை வரி, நுழைவு வரி, மதிப்பு கூட்டு வரி, சேவை வரி என பல்வேறு வரிகளை வெவ்வேறு விகிதங்களில் வசூலித்துவந்தன. யூனியன் பிரதேசங்கள் எனப்படும் பாண்டிச்சேரி, தில்லி போன்ற மாநிலங்களில் மற்ற மாநிலங்களில் நடப்பில் இருந்து வந்த விகிதங்களை விட மிகவும் குறைவாக விற்பனை வரி  வசூலிக்கப்பட்டு வந்தன. இதனால்  அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் வசித்தவர்கள் கூட உண்மைக்கு புறம்பான தங்குமிட விலாசங்களை காட்டி விலையுயர்ந்த வாகனங்களுக்கு மிகக் குறைந்த விற்பனை வரி செலுத்தி வரி ஏய்ப்பு நடத்த வாய்ப்பளித்தது. அத்துடன் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகங்களுக்கு அந்தந்த மாநில விற்பனை வரியுடன் மத்திய அரசின் விற்பனை வரியையும் செலுத்தும் பழக்கமும் இருந்து வந்தது. இதனால் பல வணிகர்கள் வரிக்கு வரி செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டனர். 

இவ்வாறு மாநிலங்களுக்கிடையில் விற்பனை மற்றும் சேவை வரி வசூலிப்பத்தில் எவ்வித ஒற்றுமையும் இல்லாத சூழலில் நாடு முழுவதும் வசூலிக்கப்பட்டு வந்த பல்வேறு வகையான வரி விகிதங்களை ஒருங்கிணைத்து விற்பனை மற்றும் சேவை வரி என்ற ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. 

ஆனால் இதை அமல்படுத்துவதில் மத்திய அரசு காட்டிய அவசரம்தான் இப்போது நிலவும் அனைத்து குழப்பத்திற்கும் காரணம். 

மேலும் ஜிஎஸ்டிக்கு முன்பு மாநிலங்கள் வசூலித்து வந்த விற்பனை வரி விகிதங்கள் ஏழு விழுக்காட்டிலிருந்து அதிக பட்சமாக பதினான்கு விழுக்காடு வரை இருந்தன. தமிழகத்தை பொருத்தவரை அதிகபட்ச விற்பனை வரி 12.5 விழுக்காடாக இருந்தது. நாட்டில் எந்த ஒரு மாநிலத்திலும் விற்பனை வரி பதினெட்டு விழுக்காட்டிற்கு மேல் இருக்கவில்லை. மாநில எல்லையை தாண்டி நடக்கும் வர்த்தகத்திற்கு தமிழக விற்பனை வரியுடன் மத்திய அரசு விற்பனை வரி (அதிகபட்ச வரியாக ஆறு விழுக்காடு)யையும் சேர்த்தாலும் பதினெட்டு விழுக்காட்டை தாண்டியதில்லை.

ஆனால் இவற்றை ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியில் அதிகபட்ச வரியாக இருபத்தி எட்டு விழுக்காடு என நிர்ணையிக்கப்பட்டது. இதே போன்று எட்டிலிருந்து பத்து விழுக்காடு வரை மட்டுமே இருந்துவந்த பல பொருட்களின் வரி விகிதம் பதினெட்டு விழுக்காடு என்ற அளவுக்கு உயர்த்தி நிர்ணையிக்கப்பட்டது. அதாவது அத்தியாவசிய பொருட்கள் என மக்கள் கருதி வந்த பல பொருட்களின் மீது விதிக்கப்பட்டு வந்த விற்பனை வரி ஆறிலிருந்து பத்து விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதால் பொருட்களின் விலையும் உயர்ந்தன. இதன் விளைவாக மக்கள் அவற்றை வாங்குவதை குறைக்கவோ அல்லது வசதியில்லாதவர்கள் முற்றிலுமாக தவிர்க்கவோ செய்தனர். 

இதில் விசித்திரம் என்னவென்றால் மேல்தட்டு மக்கள் மட்டுமே அதிக அளவில் உண்ணும் பித்சா, பர்கர் போன்ற உணவு வகைகளுக்கு ஐந்து விழுக்காடு வரியும் பாமரர் வீட்டு குழந்தைகளும் உண்ணும் பிஸ்கட்டுக்கு பதினெட்டு விழுக்காடு வரி என்கிற அளவில் ஒரு வரைமுறை இன்றி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. பாமரர்களால் நினைத்தும் பார்க்க முடியாத ஆலிவ் எண்ணெய்க்கு ஐந்து விழுக்காடு வரி... ஆனால் பெரும்பாலோர் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்க்கு பண்ணிரண்டு விழுக்காடு வரி... பற்பசை தூளுக்கு பண்ணிரண்டு விழுக்காடு, பற்பசை மற்றும் பிரஷ்சுக்கு பதினெட்டு விழுக்காடு வரி... தீப்பெட்டிக்கு 12 விழுக்காடு, மண்ணெண்னை விளக்குக்கு (hurricane lamps) 18%

தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுபவர்கள் தங்களுடைய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி விகிதத்தை குறைக்கும்படி பலமுறை கோரிக்கை விடுத்தும் அது இன்னும் நிறைவேற்றப்படாமலேயே இருந்து வருகிறது.  இதனால் சிவகாசி மற்றும் கோவில்பட்டியில் இயங்கிவரும் பல சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டு பலர் வேலையிழந்து தவிப்பது நமக்கு தெரிகிறது. இன்றைய காலை செய்தியில் சாலையோரம் பல வருடங்களாக இயங்கிவந்த பல உணவகங்கள் நாள்தோறும் மூடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டது, . 

இத்தகைய நியாயமற்ற வரி விகிதங்களால் சிறிய அளவில் உற்பத்தியில் ஈடுபட்டு வந்திருந்த சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் அவர்கள் வாங்கும் ஒவ்வொரு மூலப்பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்தி வாங்க வேண்டிய சூழலில் அவர்களுடைய பொருட்களுக்கு அதுவரை அமலில் இருந்து வந்த வரி விகித உயர்வால் ஏற்பட்ட விற்பனை சரிவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு பல நிறுவனங்களும் மூடும் நிலையை அடைந்தன. தமிழகத்தில் இத்தகைய உற்பத்தி நிறுவனங்களுக்கு பேர்பெற்ற திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டதிலிருந்து மூடப்பட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்தை கடந்துவிட்டது என்கிறது சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள். 

இந்த திட்டம் அமலாக்கப்பட்டதிலிருந்து சுமார் முப்பது முறைகளுக்கு மேலாக வரி விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்தே இந்த திட்டம் எத்தனை அவசரகதியில் அமலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது. இன்னமும் இது முடிந்தபாடில்லை. இனி வரும் ஜிஎஸ்டி குழுவின் கூட்டங்களிலும் பல பொருட்களின் குறைக்கப்பட வேண்டிய சூழல் ஏற்படும். ஏனெனில் எவ்வித வரைமுறையும் ஆய்வும் இல்லாமல் நிர்ணயிக்கப்பட்ட வரி விகிதங்கள் இவை. ஏறத்தாழ கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் வரி விகிதங்கள் பல முறை குறைக்கப்பட்டாலும் அமலாக்கப்பட்ட காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட நியாயமற்ற வரி விகிதத்தால் விற்பனையை இழந்து மூடப்பட்ட நிறுவனங்களில் பல இன்னும் மூடிய நிலையிலேயே இருப்பதுதான் வேதனை.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு கொண்டுவரப் பட்டபோது மாதம் குறைந்தது ஒரு லட்சம் கோடி வருவாய் இருந்தால்தான் நாட்டின் மொத்த நிதிபற்றாக்குறையை(fiscal  deficit) சமாளிக்க முடியும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. துவக்க காலங்களில் அந்த இலக்கை அடைய முடிந்தாலும் கடந்த ஒரு வருடமாக சராசரியா எண்பதாயிரம் கோடியை தொடுவதே சிரமமாக உள்ளதாம்.

இது எதனால்?

நாட்டின் வரி வருவாயை அதிகரிக்க வேண்டுமானால் நாட்டின் உற்பத்தியை பெருக்கி அதன் விளைவாக  சந்தைக்கு வரும் பொருட்களை உடனே வாங்கும் அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறனையும் சேர்த்து அதிகரித்தால் விற்பனை  தொடர்ந்து உயரும். அதனால் நாட்டின் மறைமுக வரி வருவாயும் உயர்ந்துக்கொண்டே செல்லும்.

இந்த அடிப்படை பொருளாதார தத்துவத்தை உணராத ஆட்சியாளர்கள் வரியை மட்டும் உயர்த்தினாலே வருவாய் பெருகிவிடும் என்று நினைத்தது எத்தனை அறிவீனம்?. மத்தியிலுள்ள ஆட்சியாளர்களின் தவறான நடவடிக்கைகளால் விற்பனை சரிந்துக்கொண்டே இருக்கும்போது அதன் மூலமாக கிடைக்கும் வரி வருவாயும் குறையத்தானே செய்யும்? அதுதான் இப்போது நடக்கிறது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் அனைவருடைய கையிலுமிருந்த ரொக்கப் பணத்தை இல்லாமல் செய்தது. ஜிஎஸ்டியோ இந்த சூழலில் இருந்து மீண்டு வந்து உற்பத்தியை பெருக்கி இலாபம் ஈட்டலாம் என்று நினைத்திருந்த உற்பத்தியாளர்களின் எண்ணத்தை நிராசையாக்கிப் போட்டது எனலாம். 

இத்தோடு நிற்காமல் இன்னும் ஒரு முட்டாள்தனமான தீர்மானம் மூலம் நாட்டின் வாகன உற்பத்தியையும் முடக்கி போட்டது மத்திய அரசு. அதன் விளைவாக கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் காணாத அளவுக்கு வாகன விற்பனை சரிந்து அதன் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியையே பெருமளவு குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன. 

அதுதான் மாசுகட்டுப்பாட்டை மேலும் கடுமையாக்கும் பிஎஸ் ஆறு (BS 6) திட்டம். 

வாகன விற்பனை பெருமளவில் குறைந்ததற்கு காரணம் என்ன என்று மத்திய நிதியமைச்சரிடம் நிரூபர்கள் கேள்வி கேட்டபோது அவர் திருவாய் மலர்ந்து உதிர்த்த அபத்தமான பதில்: இப்போதெல்லாம் மக்கள் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களில் பயணிப்பதையே விரும்புகிறார்கள். வாகன விற்பனை  சரிவுக்கு இதுவும் ஒரு காரண்ம். இந்த பதிலுக்கு ஆங்கில பத்திரிகை ஒன்று அளித்த பதில் என்ன தெரியுமா? ’இப்படி ஒரு பதிலை அளிப்பதற்கு பதிலாக நிதியமைச்சர் எனக்கு தெரியவில்லை என்றே பதிலளித்திருக்கலாம். ’

மத்திய அரசு கடந்த ஆண்டு நாட்டில் தற்போது  நடைமுறையிலுள்ள Bharat Stage (BS) IV என்ற மாசுகட்டுப்பாட்டு விதிமுறை (Emission Norm) யிலிருந்து நேரடியாக BS VI மாற தீர்மானித்தது. இது ஐரோப்பாவில் நடைமுறையிலுள்ள Euro VI விதிமுறைக்கு சமமாக கருதப்படுகிறது. இந்த முடிவு நல்ல முடிவு என்பது உண்மைதான் என்றாலும் நாடு இப்போதுள்ள நிதி நிலமையில் இந்த முடிவு தேவைதானா என்ற கேள்வி எழுகிறது.

ஏனெனில் உலகில் பல வளர்ந்த நாடுகள் இன்னும் Euro IV என்கிற நிலையையே எட்டவில்லையாம்! இதற்குக் காரணம் இதற்கு வாகனங்களில் பல முக்கிய மாறுதல்களை செய்ய வேண்டியுள்ளது.   அதற்கு மிக அதிக அள்விலான முதலீடு தேவைப்படுகிறது. ஆகவே தான் வாகன உற்பத்தியாளர்கள் பலரும் தங்களால் இயன்றவரை இந்த திட்டத்தை இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டுமென்று மத்திய அரசுடன் போராடி பார்த்தார்கள். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தே தீரும் என்று அறிவித்துவிட்டது. 

ஆகவேதான் நாட்டிலுள்ள பல வாகன உற்பத்தியாளர்கள் தங்களுடைய உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த  வேண்டிய நடைமுறைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே BS IV மோட்டார் இயந்திரங்களை (Engines) கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள வாகனங்களை நுகர்வோர் யாரும் வாங்குவதற்கு முன்வராததால் வாகன விற்பனையும் வெகுவாக சரிந்து உற்பத்தியையே நிறுத்த வேண்டிய சூழலுக்கு உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டனர். 

மத்திய நிதியமைச்சர் தற்போது பயன்பாட்டிலுள்ள BS IV இயந்திரங்களுடன் இயங்கும் வாகனங்களுக்கு அதன் ஆயுட்காலம் வரை பயன்படுத்துவதற்கு ஏற்ற ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று உறுதியளித்திருந்தாலும் அவருடைய வாக்குறுதியை நுகர்வோர் நம்ப தயாராக இல்லை என்பதை வாகன விற்பனையின் தொடர் சரிவு உறுதி செய்கிறது. வாகனங்களை இயக்க பயன்படுத்தும் பெட்ரோலிய பொருட்களிலும் மாற்றங்கள் செய்யப்படவிருப்பதால் BS VI வாகனங்கள் விற்பனைக்கு வரும்போது அதை வாங்கிக்கொள்ளலாம் என்று நுகர்வோரும் தங்களுடைய முடிவை சற்று தள்ளிப்போட்டுவிட்டனர் போலும். 

இந்த மாற்றம் டீசல் இயந்திரத்துடன் இயங்கும் வாகனங்களைத்தான் மிக அதிக அளவில் பாதிக்கும் என்கிறார்கள். சரக்கு போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து கனரக வாகனங்களுமே டீசலைத்தான் பயன்படுத்துவதால் அத்தகைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருபவர்களும் தங்களுடைய புதிய வாகன தேவைகளை தற்போதைக்கு ஒத்திவைத்து விட்டனர். 

இதுதான் தற்போதைய வாகன உற்பத்தி நிறுத்தம் மற்றும் விற்பனை சரிவுக்கு உண்மையான காரணம். 

சரி இந்த பொருளாதார சரிவிலிருந்து எப்படி மீள்வது? இது யார் கையில் உள்ளது?

நாளை பார்க்கலாம்.

30 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு....3

2ம் பாகம்

1. பணப்புழக்கத்தில் வீழ்ச்சி

இந்திய வர்த்தகத்தை என்னதான் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு முயற்சித்தாலும் இன்று மட்டுமல்ல இனி எதிர்வரும் ஐம்பதாண்டு காலத்திற்கும் மொத்த வர்த்தகத்தில் சுமார் 96 விழுக்காடு கேஷ் அண்ட் கேரி (Cash and Carry) எனப்படும் ரொக்க வர்த்தகமாகத்தான் இருக்கும். இதுதான் இந்திய வர்த்தகத்தின் தனித்துவம். நாட்டில் எத்தனை பெரிய பல்பொருள் அங்காடிகள் (Super Stores, Hyper Stores, Malls) வந்தாலும் சாலையோர கடைகளில்தான் இந்தியாவின் பெரும்பான்மை வர்த்தகம் நடைபெறுகிறது... இனியும் நடைபெறும்.... இத்தகைய கடைகளில் நடக்கும் வர்த்தகம் அனைத்துமே ரொக்கத்தில்தான் நடைபெறுகின்றன. இத்தகைய கடைகளை நடத்துபவர்கள் கொள்முதல் செய்வதும் ரொக்க அடிப்படையில்தான். இதை மத்திய அரசு எத்தனை முயற்சித்தாலும் மாற்றுவது சாத்தியமில்லை. 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அறிவித்த பிரதமர் எதிர்வரும் காலங்களில் நாட்டின் பணப் பயன்பாடு பெருமளவு குறையும் என்று ஆரூடம் கூறினாலும் உண்மையில் நடந்தது என்ன? 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் துவக்க நாட்களில் கையில் பணமில்லாமல் அல்லாடிய சாமான்ய மக்கள் வேறுவழியின்றி வங்கி அட்டைகளை பெருமளவில் பயன்படுத்த துவங்கியது என்னவோ உண்மைதான். அந்த காலக்கட்டத்தில் மொத்த பணப் பயன்பாடு நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடுகையில் (curreny to GDP ratio) 12.01 விழுக்காடு என்ற நிலையிலிருந்து 8.8 விழுக்காடாக குறைந்தாலும் பணப்புழக்கம் அடுத்த சில மாதங்களில் சீரடைந்ததும் மீண்டும் 10.10 விழுக்காடு என்ற அளவுக்கு உயர்ந்து பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய கால அளவுக்கு மீண்டும் அடைந்தது என்பதுதான் உண்மை. 

மேலும் நம்முடைய நாட்டின் பொருளாதார நிலையை தீர்மானிப்பதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 90 விழுக்காடு உள்ள சாமான்ய மக்கள். அதாவது நடுத்தரத்திற்கும் சற்று கீழே உள்ளவர்கள். இவர்களுடைய வாங்கும் திறனை வைத்துத்தான் சந்தையில் எந்த ஒரு பொருளின் விலையும் நிர்ணயிக்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலோனோர் கிராமங்களில் வசிப்பவர்கள். இவர்களுடைய மாத வருமானத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை வைத்துத்தான் இந்திய பொருளாதாரத்தின் நிலை தீர்மானிக்கப்படுகிறதே தவிர. ஆன்லைனிலோ அல்லது பெரும் மால்களிலோ பொருட்களை வாங்கிக் குவிக்கும் மேல்தட்டு மக்களால் அல்ல.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் பணப்புழக்கம் முற்றிலுமாக ஸ்தம்பித்து நின்ற அறிமுக மாதங்களில் முதலில் முடங்கிப்போனது இத்தகையோரை சென்றடையும் வர்த்தகம்தான். இவர்கள் கைவசம் இருந்த அனைத்து ரொக்கத்தையும் வங்கிகளில் அடைத்துவீட்டதால் பணப்புழக்கம் வெகுவாக ஏன் முற்றிலுமாக குறைந்துபோய் அதிலிருந்து மீளவே முடியாமல் தாற்காலிகமாக அடைக்கப்பட்ட சிறு குறு வர்த்தக நிறுவனங்களுக்கு அளவே இல்லை. இதன் விளைவாக இவற்றிற்கு விநியோகம் செய்துவந்த மொத்த வணிகர்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர் என்பதும் உண்மை. ஆகவே தான் இந்த நடவடிக்கை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி அளவு மற்றும் அவற்றின் மொத்த மதிப்பு எனப்படும் GDP யும் கூட எதிர் வரும் ஆண்டுகளில் கணிசமான அளவு குறைய வாய்ப்புள்ளது என்று அன்றே முன்னாள் நிதி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல பொருளாதார வல்லுநர்கள், உலக வங்கி உட்பட கூறினார்கள்.

2. சரக்கு போக்குவரத்தில் சிக்கல்.

இத்தகைய வணிக நிறுவனங்களின் இடைவிடா தேவைகளையே சார்ந்திருந்த சரக்கு போக்குவரத்து நிறுவனங்களும் கைவசம் ரொக்கம் இல்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டன. இந்திய அளவில் சுமார் எட்டு லட்சம் சரக்கு வாகன ஓட்டுனர்கள் தங்களுடைய வாகனங்களுக்கு டீசல் கூட நிரப்ப முடியாமல் அவதியடைந்தனர். இவர்களில் எத்தனை பேரிடம் வங்கி அட்டைகள் இருந்திருக்க வாய்ப்புள்ளது? அன்றாடம் தேவைப்படும் டீசல் மற்றும் கைச்செலவுக்கு கூட ரொக்கம் இல்லாமல் அவதிப்பட்டதை மறுக்கமுடியுமா? இதன் விளைவு... வர்த்தக்ப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப்போனது. அதில் இருந்து மீண்டு வர முடியாமல் தொழிலையே தாற்காலிகமாக கைவிட்டவர்கள் எத்தனையோ பேர். 

3.பங்கு சந்தை வீழ்ச்சி

இந்த நடவடிக்கை ரொக்கத்தில் நடக்கும் வணிகம் மட்டுமல்லாமல் இந்திய பங்கு சந்தையையும் வெகுவாக பாதித்தது. பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நாளன்று தேசிய பங்கு சந்தை சுமார் 1,700 புள்ளிகளும் நிஃப்டி சுமார் 600 புள்ளிகளும் சரிந்தன. அன்றைய சரிவிலிருந்து மீண்டு வர சுமார் மூன்று மாதங்கள் தேவைப்பட்டன. 2016 ஜூலை மாதம் துவங்கி 2017 பிப்ரவரி வரையிலான இடைப்பட்ட காலத்தில் சரிவை சந்திக்காத நிறுவனங்களே இல்லை என்கிறது புள்ளிவிவரங்கள் பெரும்பான்மையான நிறுவனங்கள் இன்றுவரையிலும் அதிலிருந்து மீளவில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக ரொக்கத்திலேயே நடைபெற்று வரும் கட்டுமானத் தொழில், மோட்டார் வாகனம், சில்லறை வர்த்தகம், 

3. தொழில் உற்பத்தியில் சரிவு

நாட்டிலுள்ள பெரும் தொழில் நிறுவனங்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. ஏன்.. இவை தயாரிக்கும் பொருட்களில் பெரும்பாலான விழுக்காடு இந்திய சந்தையை நம்பியே தயாரிக்கப்படுகின்றன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் ஏற்படும் பணத்தட்டுப்பாடு எஸ்கலேட்டர் (Escalator)முறையில் நாட்டிலுள்ள அனைத்து பெரிய நிறுவனங்களின் உற்பத்தியையும் பாதித்தன. கடைநிலை வர்த்தக நிறுவனங்களில் தொடர் தேவையினால்தான் (continuous demand) இத்தகைய தொழில் நிறுவனங்கள் தொடர்ச்சியாக இயங்க முடிந்தன. சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முடக்கப்பட்டதன் விளைவு அவற்றையே நம்பியிருக்கும் பெரு நிறுவனங்களையும் பாதிக்கத்தானே செய்யும்?

4. விவசாய உற்பத்தியில் வீழ்ச்சி

கிராமங்களில் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த அனைத்து தொழில்களிலும் ரொக்கம்தான் பெருமளவில் பயன்படுகின்றன. விதை, உரம், வேலையாட்களுக்கு கூலி என எதிலும் ரொக்க பரிவர்த்தனைகள்தான் என்பதுதான் இன்றல்ல இனிவரும் காலங்களிலும் நடக்கும். அதை எந்த தொழில்நுட்ப முன்னேற்றமும் மாற்றிவிடப்போவதில்லை. விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் கூட ரொக்கம்தான் தேவைப்படுகிறது. எந்த விவசாயி பொருட்களை விற்றுவிட்டு வங்கியில் செலுத்தப்படும் தொகைக்காக காத்திருப்பான்? இப்போதும் அரசு கொள்முதல் மையங்களில் கொள்முதல் செய்யப்படும் பொருட்களின் மதிப்பு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்றால் விவசாயிகள் அதை ஏற்காமல் குறைந்த விலைக்கானாலும் உடனே ரொக்கம் தர தயாராக உள்ள இடைத்தரகரிடம் விற்பதையே விரும்புகின்றனர். மேலும் தங்களுடைய பொருட்களின் மொத்த மதிப்பும் வங்கியில் வரவு வைக்கப்படுமா என்கிற நிச்சயத்தன்மையும் இல்லாத சூழலில் இது முழுவதுமாக நடைமுறைக்கு வருவது சாத்தியமே இல்லை. சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக உள்ளது என இத்தகைய மையங்களில் பொருட்களை விற்கும் விவசாயிகள் குமுறுவது செய்திகளில் வருவதை பார்க்க முடிகிறது. 

5. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் (GDP) வீழ்ச்சி

சிறு, குறு மற்றும் பெரு என அனைத்து தொழில் உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தியில் ஏற்பட்ட சரிவின் விளைவு 15-16 ஆம் நிதியாண்டில் 9.00 விழுக்காடாக இருந்த நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியின் அளவு பணமதிப்பிழப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட 16-17 நிதியாண்டில் 5.5. விழுக்காடுக்கு சரிந்தது. அதிலிருந்து மெள்ள மெள்ள மீண்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் 6.5 விழுக்காடாக அதாவது கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு விழுக்காடு அளவுக்கே உயர்ந்துள்ளது. இப்படியே போனால் 15-16 நிதியாண்டில் நாடு அடைந்த 9.00 விழுக்காட்டை அடையவே இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ?6. வேலை வாய்ப்பில் இழப்பு

பணப்புழக்கம் அறவே முடக்கப்பட்டுவிட்ட நிலையில் குடிசை தொழில்கள் மற்றும் முறைசாரா தொழில் துறை (unorganised sector) நிறுவனங்களும் ஒவ்வொன்றாக மூடப்பட அதில் பணிபுரிந்த பெருவாரியான பணியாட்கள் பணி இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதில் பெருமளவு பாதிக்கப்பட்டவை கட்டுமான தொழில். இதில் அன்றாட கூலிக்கு பணிபுரிந்துவந்த லட்சக்கணக்கான பணியாட்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தங்களுடைய வேலைகளை இழந்து போயினர். கடந்த நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டது என்ற நிலை ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைதான் என்றாலும் மிகையாகாது.

இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட சரிவை மேல்காணும் படம் மிகத் தெளிவாக காட்டுகிறது. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை நடைமுறைப்படுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்தவர்களின் மனப்போக்கு எத்தகையதாக இருந்தது என்பது தெரியவில்லை. இத்தகைய நடவடிக்கையை தனிமனிதனாகவோ அல்லது ஒரு சிறு குழுவாகவோ தீர்மானித்து எடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்டவர்களின் பேச்சு திறமையாலும் அதன் எதிர்பாளர்கள் அதனால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளுக்கு மக்களிடத்தில் தகுந்த முறையில் எடுத்துரைக்க தவறியதாலும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பாராட்டப்பட்டு முன்பைவிட அதிக அளவு பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தப்பட்டதன் விளைவைத்தான் நாடு இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பாதிப்பில் இருந்து இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கு முன்பே மத்திய அரசு எடுத்த மற்றுமொரு அவசர முடிவு தான் ஒரே நாடு ஒரே வரி என்ற ஜிஎஸ்டி வரி அமலாக்கம்...

அதை நாளை பார்க்கலாம்

29 அக்டோபர் 2019

பாஜாகவின் சரிவு....2முதல் பாகம்

சந்தையில் ஒரு பொருளின் விலை அதன் விநியோகம் (supply) அந்த பொருளுக்கு சந்தையில் நுகர்வோர் தரப்பிலிருந்து வரும் தேவை (Demand)என இரண்டின் அளவை பொருத்தே நிர்ணயிக்கப்படுகின்றன என்பதை இன்றல்ல சுமார் எண்பது வருடங்களுக்கு முன்பே அதாவது 1930ல் வாழ்ந்த இங்கிலாந்து பொருளாதார மேதை ஜே.எம்.கெய்ன்ஸ் (John Maynard Keynes) தன்னுடைய ஆராய்ச்சி கட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். 

உதாரணத்திற்கு வெங்காயத்தின் விலையை எடுத்துக்கொள்வோம்.

சந்தையிலுள்ள மொத்த விநியோகம் ஒரு டண் என்று வைத்துக்கொள்வோம். அதை வாங்க அதே சந்தையில் உள்ள மொத்த நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். விநியோகத்தின் அளவில் மாற்றமில்லாமல் நுகர்வோரின் எண்ணிக்கை கூடும்போது.... அதாவது நுகர்வோரின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் அதிகரிக்கும் சூழலில் வெங்காயத்தின் விலை கூடும்... ஆயிரத்துக்கும் கீழே குறையும் போது அதாவது தேவை குறையும்போது வெங்காயத்தின் விலையை குறைக்காவிட்டால் அது விற்பனையாகாமல் தேங்கும் நிலை உருவாகும். ஆகவே வணிகர்கள் அதன் விலையை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

இதையே மாற்றி நுகர்வோரின் எண்ணிக்கை அதே ஆயிரம் என்ற நிலையில் வெங்காயத்தின் விநியோக அளவு ஒரு டண்ணுக்கும் கீழே குறையும்போது தேவை விநியோகத்தை விட அதிகம் என்பதால் வெங்காயத்தின் விலை கூடும். விநியோகத்தின் அளவு ஒரு டண்ணுக்கு மேல் அதிகரிக்கும்போது வெங்காயத்தின் விலை குறையும்...

இதுதான் ஒரு பொருளாதார சந்தையில் ஒரு பொருளின் விலை நிர்ணயிக்கப்படுவதின் அடிப்படை தத்துவம்.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நடவடிக்கைகள் தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள் என்றாலும் அது விநியோகம் மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன்களை ஒரே மாதிரியாக பாதித்ததால் இதுவரையிலும் பொருட்களின் விலை அதிக அளவில் உயரவில்லை என்பது உண்மை.

ஆனால் இந்த முடிவுகள் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை பாதித்துவிட்டதாக வல்லுநர்கள் கூறுவது எதனால்?

இதை ஆராய நான்  உலக பொருளாதாரத்தைப் பற்றி விவாதிக்கும் பல இணையதளங்களை உலாவி (Browse)திரட்டிய தகவல்களை இங்கே சுருக்கமாக அளித்திருக்கிறேன்.

முதலில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை.

இந்த நடவடிக்கை எதற்காக எடுக்கப்பட்டது என்பதை மத்திய அரசு அளித்திருந்த விளக்கம் என்ன?

1.இந்திய பணச்சந்தையில் கறுப்புப் பணத்தின் விழுக்காடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
2.கள்ள நோட்டுகளின் புழக்கம் மிக அதிக அளவில் அதிகரித்துவிட்டது. இது தீவிரவாதிகளின் செயல்பாடுகளுக்கு மிகவும் உதவுகிறது.
3.வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் 
4.நாட்டில் பணப்புழக்கம் குறையும். அதனால் விலைவாசி குறையும்.

ஆனால் உண்மையில் நடந்தது என்ன?

1. கறுப்பு பணம் அதிகரித்துவிட்டது/

மத்திய அரசின் மதிப்பீட்டின்படி இந்தியாவில் சுமார் மூன்று லட்சம் கோடி கறுப்புப் பணம் இருந்ததாம்! இந்த மதிப்பீட்டை யார், எந்த அடிப்படையில் செய்தார்கள் என்பதே ஒரு கேள்விக் குறி. உண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது புழக்கத்தில் இருந்த சுமார் ரூ.15.41 லட்சம் கோடியில் ரூ.15.30 லட்சம் கோடி அதாவது மொத்த பணத்தில் 99.3 விழுக்காடு பணம் வங்கிகளில் செலுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ள தொகையான ரூ.10,720 கோடி மட்டும்தான் கறுப்புப் பணம்.. இந்த அளவு குறைந்த தொகையை மீட்டெடுக்க இத்தனை விபரீதமான முடிவு தேவைதானா என்று பொருளாதார வல்லுநர்கள் கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவற்றை மீட்டெடுக்கத்தானே வருமான துறை என்ற ஒரு பெயரில் சர்வ அதிகாரம் படைத்த ஒரு அமைப்பு உள்ளது.? அவர்கள் ஒவ்வொரு ஆண்டும்  மீட்டெடுக்கும் தொகைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லையே என்றும் கூறுகின்றனர் என்கின்றனர் வல்லுநர்கள்.

மேலும் ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு அந்த நாட்டின் கறுப்புப் பணம் மட்டுமே காரணமாகிவிட முடியாது. ஏனெனில் இன்று உலகளவில் மிக அதிக அளவு கறுப்புப் பணத்தை கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ரஷ்யாவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன. இவை இரண்டுமே கடந்த இருபது ஆண்டுகளில் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சியை சந்தித்துள்ள நாடுகள். அதற்கு அடுத்தபடியாக மெக்சிகோ. அதன் பிறகுதான் இந்தியா வருகிறது. முதல் இரண்டு இடங்களில் உள்ள நாடுகளிலுள்ள கறுப்புப் பணத்தின் அளவோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள கறுப்புப் பணத்தின் அளவு ஐம்பதில் ஒரு பங்கு மட்டுமே. 

ஆக பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு அரசு முன்வைத்த முதல் காரணமே அடிபட்டுப் போகிறது. சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்கிறார்களே அப்போதெல்லாம் கறுப்புப் பணம் நாட்டில் இல்லையா? 

இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட காலக்கட்டத்தை இப்போது திரும்பிப் பார்க்கும்போது இதன் பின்னாலிருந்த மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படுவது: அப்போது நடக்கவிருந்த ஐந்து வட மாநில சட்டமன்ற தேர்தல்கள்.. குறிப்பாக, உத்தரப்பிரதேசத்தை தன் வசப்படுத்த நினைத்த மோடியும் அவருடைய கட்சியும் எதிர்கட்சிகள் வசமிருந்த கணக்கில் வராத பெரும் தொகை ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் தாள்களாகவே இருக்கும் என்றும் அதை செல்லாக் காசாக்கிவிட்டால் அவர்களுடைய மொத்த கஜானாவும் காலியாகிவிடும் எனறு எண்ணியிருக்கலாம். 

2. கள்ள நோட்டுகள் ஒழிக்கப்பட்டுவிடும்!

மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1000, தாள்கள்களுக்கு மாற்றாக அரசு அறிமுகப்படுத்திய ரூ.2000 தாளில் பல நகலெடுக்கவியலாத அம்சங்கள் உள்ளன என்று விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் அது அறிமுகப்படுத்தப்பட்ட வெகு சில மாதங்களிலேயே பாக்கிஸ்தானிலிருந்து எல்லையை தாண்டி ஊடுருவிய தீவிரவாதிகளிடமிருந்து கட்டுக்கட்டாக ரூ.2000த்தின் தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டபோது நாடே அதிர்ந்து போனது. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையின் படி 2017-2018 நிதியாண்டில் இந்திய வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகைகளில் மட்டும் சுமார் 5.04 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தனவாம்! அதில் 2000 ரூபாய் தாள் மட்டும் 1.80 லட்சம்! இதில் வியப்பு என்னவென்றால் புதிய ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு நூறு ரூபாய் மற்றும் ஐம்பது ரூபாய் தாள்களின் கள்ளப் பிரதிகள் அதிக அளவில் புழக்கத்தில் வந்துள்ளதாம்! . 

இரண்டாயிரம் ரூபாய் தாள்களின் கள்ள பிரதிகள் நாட்டில் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதால் அதன் பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த ஓராண்டில் அதை அச்சடிப்பதையே மத்திய ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டது!

ஆக இதிலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியையே சந்தித்துள்ளது 

3. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஆண்டை தொடர்ந்து வந்த நிதியாண்டில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை சுமார் பத்து மில்லியன் அதாவது ஒரு கோடி உயர்ந்தது என்பது உண்மைதான். ஆனால் இதில் பெரும்பாலோனோர் மாத வருமானம் பெறுவோர். அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில் சராசரியாக அதிகரித்த வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை விட இந்த அதிகரிப்பு ஒன்றும் அதிகம் இல்லை.. மேலும் எண்ணிக்கை அதிகரித்தாலும் வரி வசூலில் பெரிய அளவுக்கு ஏற்றம் இல்லை என்கிறது வருமான வரித்துறையின் அறிக்கை. அவ்வாறு அதிகரித்த தொகையிலும் பெருமளவு பணமதிப்பிழப்பு எடுக்கப்பட்ட துவக்க நாட்களில் மதிப்பிழந்த ரூபாய்களை அதாவது ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை வரி செலுத்துவதற்கு பயன்படுத்தலாம் என்ற அரசின் அறிவிக்கையை தொடர்ந்து செலுத்தப்பட்ட சுமார் ஐம்பதாயிரம் கோடியை கழித்துவிட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கு முன்புள்ள ஐந்தாண்டுகளில் சராசரியாக வசூலிக்கப்பட்ட தொகையின் அளவிலேயே இருந்துள்ளது. 

எனவே இந்த காரணமும் ஏற்புடையதல்ல.

4. நாட்டில் பணப்புழக்கம் குறையும் அதனால் விலைவாசி குறையும்

நான் ஏற்கனவே விளக்கியுள்ளப்படி விலைவாசி குறைய பணப்புழக்கம் ஒரு காரணமே தவிர அதுமட்டுமே காரணமல்ல.. விநியோகம் முந்தைய அளவிலேயே இருந்து பணப்புழக்கம் மட்டும் கணிசமான அளவு குறைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே விலை வாசி குறைய வாய்ப்புள்ளது. ஆனால் உற்பத்தியும் குறைந்து அதன் விளைவாக விநியோக குறைவும் நுகர்வோரின் வாங்கும் சக்தி குறைவும் சம நிலையில் இருக்கும்போதும் விலைவாசி ஏறாமல் இருக்கும் என்பதுதான் உண்மை. ஆகவே விலைவாசி ஏறாமல் இருந்திருக்குமானால் அதற்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை மட்டுமே காரணமல்ல.

ஆனால் இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட எதிர்மறை விளைவுகள் என்னென்ன?

நாளை பார்க்கலாம்...

28 அக்டோபர் 2019

பாஜகவின் சரிவு துவங்கிவிட்டது.....

சமீபத்தில் நடந்து முடிந்த மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் பாஜகவிற்கு அருதி பெரும்பான்மை கிடைக்காத அளவுக்கு வாக்களித்ததற்கு இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவும் அதனால் ஏற்பட்ட விளைவுகளால் மக்கள் பட்ட அவதியும் தான் முக்கிய காரணம் என்றால் மிகையாகாது. 

இரு மாநிலங்களிலும் பிரச்சாரத்தின்போது மோடியும் அமித்ஷாவும் காஷ்மீரில் 370வது பிரிவை நீக்கியதைப் பற்றியே பேசியது நினைவிருக்கலாம். ஆனால்  காஷ்மீரில் நடக்கும் பிரச்சினையைப் பற்றி எங்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தரப்பில் இன்னும் சிறிது ஒருங்கிணைப்பு சரியாக இருந்திருந்தால் ஹரியானாவில் நிச்சயம் ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். 

இந்த சூழலில் இந்திய பொருளாதாரத்தின் தற்போதைய நிலையை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப்படும் நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்துக்கொள்வது நல்லது. 

எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள பொருளாதார வல்லுனர்கள், முன்னாள் நிதியமைச்சர், இன்னாள் நிதியமைச்சரின் கணவர்.... இவ்வளவு ஏன், நோபல் பரிசுக்கு தெரிவு செய்யப்பட்டவர் வரையிலும் கடந்த ஆறு ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் சிறிது சிறிதாக நலிவடைந்து வந்துள்ளது என்பதை பல ஆதாரங்களுடன் எடுத்துரைத்துள்ளனர்.

ஆனால் அரசாங்கம்தான் இதை ஒப்புக்கொள்வதாக இல்லை.

இதில் தான் சிக்கலே....

தமிழக அரசு டெங்கு காய்ச்சல் விஷயத்தில் நடந்துக்கொள்வதுபோன்றுதான் மத்திய அரசும் பொருளாதார விஷயத்தில் self denial modeல் செயலாற்றிக்கொண்டிருக்கிறது.

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் இருப்பதும் அது வேகமாக பரவி வருவதும் உண்மைதான் என்பதை தமிழக அரசும் பொருளாதாரம் உண்மையிலேயே தேக்க நிலையை அடைந்திருப்பது உண்மைதான் என்பதை மத்திய அரசும் ஒப்புக்கொண்டாலே போதும், பாதி கிணறு தாண்டிய மாதிரிதான். 

இந்த நிலையிலிருந்து எவ்வாறு மீளலாம் என்பதை அதன் பிறகுதான் எடுக்க முடியும். நாட்டில் எவ்வித பொருளாதார நெருக்கடியும் இல்லை... அமேஜான் ஆன்லைன் ஸ்டோரில் ஒரே வாரத்தில் சுமார் இருநூறு கோடிக்கு செல்பேசிகள் விற்பனை ஆகியுள்ளன... கடந்த ஒரே மாதத்தில் மூன்று பாலிவுட் திரைப்படங்கள் முன்னூறு கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளன என்பன போன்றவற்றையெல்லாம் பாமரத்தனமாக சுட்டிக்காட்டி  இந்திய பொருளாதாரத்தில் எவ்வித தேக்கமும் ஏற்படவில்லை என்றெல்லாம் கூறிவருவதைப் பார்க்கும்போது இதே அமேஜானின் கடந்த வருட நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்த லாபத்தை சுட்டிக்காட்டி அமெரிக்காவில் பொருளாதரம் நலிவடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது தவறு என்ற அதிபர் டிரம்ப்புக்கும் நம்முடைய பிரதமர் மோடிக்கும் இடையில் எவ்வளவு ஒற்றுமை உள்ளது என்பது தெரிகிறது. 

இந்தியாவில் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது என்றால் உலகமெங்குமே இதே நிலைதான் என்று உலக வங்கியே கூறுகிறது என்கிறார் நிதியமைச்சர். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் நம்முடைய தமிழகத்தில் டெங்குவின் பாதிப்பு மிக, மிக குறைவு என்று நம்முடைய சுகாதார அமைச்சர் கூறுவது போல்தான் உள்ளது இது. நம்முடைய மத்திய மாநில அரசுகளிடத்தில்தான் எத்தனை ஒற்றுமை!

சில தினங்களுக்கு முன் பொருளாதாரத்தில் 2019ம் ஆண்டுக்கான  நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள அமெரிக்க வாழ் இந்திய பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி அவர்கள் கூறுகையில் இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஆறு ஆண்டுகளாகவே சரியான பாதையில் பயணிக்கவில்லை என கூறியிருந்ததை பத்திரிகைகளில் வாசிக்க முடிந்தது. அதாவது மோடி அவர்கள் பதவியேற்றதிலிருந்துதான் இந்த நிலை என்பதை சூசகமாக கூறியிருந்தார் அவர்.

இதையேத்தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு நம்முடைய மத்திய நிதியமைச்சரின் கணவரும் கூறியிருந்தார். அவர் தொடர்ந்து கூறுகையில் முந்தைய ஆட்சி காலங்களில் அதாவது நரசிம்மராவ் முதல் மன்மோகன் சிங் ஆகியோர ஆட்சி செய்த காலத்தில் அவர்கள் வழிநடத்திய முறையை பின்பற்றியிருந்தாலே இந்த சரிவை தவிர்த்திருக்க முடியும் என்றார்.

முன்னாள் மத்திய ரிசர்வ் வங்கி தலைவர் ராஜன் அவர்கள் கூறும்போது கடந்த மூன்று ஆண்டுகளில் எடுக்கப்பட்ட பல பொருளாதார சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மத்திய அரசால் எடுக்கப்பட்ட தவறான முடிவுகள்தான் இந்திய பொருளாதாரம் முடங்கிப்போனதற்கு முக்கிய காரணம் என்றார். 

அதென்ன முக்கிய சீர்திருத்தங்கள்?

முதலாவது 2016ஆம் ஆண்டு அவசர, அவசரமாக மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை.

அதன் பாதிப்பில் இருந்து நுகர்வோரும், சிறு, குறு வணிக மற்றும் தொழில் நிறுவனங்களும் மீள்வதற்கு முன்பே கடந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு சற்று முன்பு எடுக்கப்பட்ட .ஜி.எஸ்.டி வரி திட்டம்.

முதலாவது முடிவால் நுகர்வோர் கைகளில் இருந்த ரொக்கப்பணம் முழுவதுமாக பறிக்கப்பட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டது. அப்படி சேர்ந்த தொகையையும் முழுவதுமாக மக்களை எடுக்க விடாமல் ரேஷன் முறையில் அலைக்கழித்தது. இது மட்டுமா? வங்கிகளும் கூட இந்த பணத்தை முழுமையாக பயன்படுத்த ரிசர்வ் வங்கி அனுமதிக்காமல் அதில் பெரும் விழுக்காட்டை முடக்கிப் போட்டது. ஆக நுகர்வோர் பணம் சந்தையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டது. பொருளாதார வல்லுநர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால் சந்தையின் தேவைகளை (Market Demand) பெருமளவு குறைத்துவிட்டது. நுகர்வோரின் வாங்கும் சக்தியை குறைத்தாலே அவர்களின் தேவையும் குறைந்துவிடும் அல்லவா? இதுதான் பொருளாதார வீழ்ச்சியின் துவக்கம்..

இரண்டாவது முடிவு தொழில், வணிகம் செய்வோரை முடக்கிப்போட்டுவிட்டது. வல்லுநர்கள் பாஷையில் வணிக மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் விலையை இந்த புது வரி உயர்த்தியதால் ஏற்கனவே வாங்கும் திறனை இழந்திருந்த நுகர்வோரிடமிருந்து வரக்கூடிய மீதமிருந்த தேவையையும் குறைத்துவிட்டது. இதன் விளைவாக உற்பத்தி குறைந்து சந்தையில் பொருட்களின் வரத்து (Supply) குறைந்துபோனது. 

பொருளாதார வீழ்ச்சியிலும் விலைவாசி அதிக அளவில் உயராமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர் வல்லுநர்கள்.

எப்படி?

நாளை பார்க்கலாம்....