19 ஏப்ரல் 2006

ஒன்னு வாங்குனா ஒன்னு இனாம்!!

அரிசி வேணுமா அரிசி!!

ஒரு கிலோ வாங்கினா ஒரு கிலோ இணாமுங்க..

இன்றைய Financial Express நாளிதழில் Rice War in Tamilnadu என்ற ஒரு செய்திக் கட்டுரையைப் படித்ததும் ஏன் நாமும் இன்றைக்கு இதை எழுதி சிலரை வம்புக்கு இழுக்கக் கூடாது என்று நினைத்தேன்.  அதில் வந்திருந்த கார்ட்டூனையும் சேர்த்திருக்கலாம். ஆனால் முயன்றும் அதை lift செய்ய இயலவில்லை.

அது போகட்டும். விஷயத்துக்கு வருவோம்..

சில நாட்களுக்கு முன் Is D(MK) Desperate? என்ற ஒரு கட்டுரையை என்னுடைய ஆங்கிலப் பதிவில் இட்டு சிலருடைய கோபத்தை சம்பாதித்தேன். அதில் ஒருவர் 'ஏன் வேணும்னா ‘ஜெ’ விமரிசித்து எழுதுங்களேன்' என்பதுபோல் சவாலும் விட்டிருந்தார்.

அப்போது எனக்கு தேவையான தகவல்கள் கிடைக்கவில்லை. ‘ஜெ’ அவர்களே மனமுவந்து அதற்கு ஒரு சந்தர்ப்பத்தை நேற்று வழங்கியதன் விளைவே இக்கட்டுரை..

சரிங்க. மு.க. தான் ஆட்சியை எப்பாடு பட்டாவது பிடித்துவிடவேண்டும் என்று தனக்கு கனவில் தோன்றியவற்றையெல்லாம் மக்களுக்கு அளிப்பதாக வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார். ‘நான் ஆட்சியில் இல்லை அதனால் ‘எதை’ வேண்டுமானாலும் அறிவிக்கலாம்’ என்று அவரே ‘ஜெ’ வின் அறிக்கையை விமர்சித்து கூறியதிலிருந்து அவருடை வாக்குறுதிகள் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கோடியிட்டு காட்டியிருக்கிறார். ஆகவே அதை மறந்துவிடுவோம்..

ஒரு ஆளுங்கட்சியின் தலையான தலைவர்.. முதலமைச்சர், எப்படிங்க இப்படி ஒரு அறிக்கையை விடலாம்? அதுவும் தேர்தல் களத்தில்? கம்பை அவரே எதிர்கட்சிகளிடத்தில் கொடுத்துவிட்டு அடிங்கள் என்று குனிந்து கொடுப்பது போலல்லவா இருக்கிறது?

இதில் வை.கோவின் நிலைதான் பரிதாபம். அவர் ‘ஜெ’விடம் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தின்படி ஒழுங்காக தினமும் மு.க வின் வாக்குறுதிகளை அக்கு வேறு ணி வேராக கிழி கிழி என்று கிழித்துக்கொண்டிருக்கிறார். ‘ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கு இவர் குடுப்பாராம் நாம வாங்கிக்கணுமாம். ஏன்யா தெரியாமத்தான் கேக்கேன்..எங்களோட ஒப்பில்லா தலைவியின் தலைமையில் நடந்துக்கொண்டிருக்கிற மக்களாட்சியில் மூனு ரூவாய்க்கு குடுக்கறப்பவே 1300 கோடி துண்டு விழுதுங்கறாங்க. இதுல இவரு ஒரு கிலோ ரெண்டு ரூபாய்க்கு.. துண்டு விழுதறத சன் டிவிலருந்து குடுப்பாங்களா?’ என்று மேடைதோறும் முழங்கிக்கொண்டிருந்தவர் இனி என்ன செய்யப் போகிறார், பாவம்?

ஒரு துண்டு வாங்குனா ஒரு துண்டு இனாம்.. இல்லை.. ஒரு புடவை வாங்குனா ப்ளவுஸ் பீஸ் இனாம்.. பனியன் வாங்குனா ஜட்டி இனாம்னு கேட்டிருக்கோம்..

அது மாதிரி ஒரு கிலோ அரிசி வாங்குனா ஒரு கிலோ அரிசி இனாம்..

அது சரி.. இதுக்கெல்லாம் ஃபைனான்ஸ் பண்றது யாருன்னு நினைக்கறீங்க?

நீங்களும் நானுந்தாங்க..

என்ன பாக்கறீங்க? Deducted at source னு சொல்லிட்டு நம்ம மாத சம்பளத்துலருந்து பிடிச்சிக்கற வரிப் பணம்தான் இப்படி தேவையற்ற வாக்குறுதிகளுக்கு மூலதனம்...

இத எல்லாம் தெரிஞ்ச மத்திய ஃபைனான்ஸ் மினிஸ்டர் வேற ‘It is feasible’னு ஹார்வர்ட் ஸ்டைல்ல ஆமோதிக்கறார்..

அதாவது மு.க சொன்னா feasible. அதையே 'ஜெ' சொன்னா கேலி பண்ண வேண்டியது.. யார் என்ன கொடுத்தாலும் நாங்க வாங்கிக்க தயார்னு நிக்கற below poverty (!) வாக்காளர்கள். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இன்னும் என்னென்ன cess வரப்போவுதோன்னு திகைச்சி நிக்கற என்னைப் போன்ற மாச சம்பளக்காரர்கள்.

கேவலம்டா சாமி..

12 ஏப்ரல் 2006

இது பெற்றோர்களுக்கு!

நான் தினமும் காலையில் எழுந்து சுமார் நாற்பத்தைந்து நிமிடம் நடக்கச் செல்வதுண்டு.

அந்த நேரத்தில் பள்ளிக்கு செல்லும் ... LKG யிலிருந்து பள்ளி இறுதிவரைப் படிக்கும் மாணவ, மாணவியர்.. .. அவர்களுடைய கலர்ஃபுல்லான சீருடையில் பளிச்சென்று.. சில சிரித்துக்கொண்டு, சில எரிச்சலுடன் வேண்டாவெறுப்பாக, சில ரிக்ஷா மற்றும் பள்ளி வேன்களில், சில அப்பா, அம்மா, அண்ணன்மார்களுடைய வாகனத்தின் பின் சீட்டில் அமர்ந்தவாறு அன்றைய தேர்வுக்கான பாடங்களை படு சீரியசாக உதடுகள் முனுமுனுக்க மனப்பாடம் செய்துக்கொண்டு....

இதையெல்லாம் பார்த்துக்கொண்டே நடந்து செல்வது ஒரு தனி ஆனந்தம்தான்.

அப்படித்தான் நேற்றும்..

என்னுடைய வீடு இருக்கும் கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் பகுதி காலை நேரத்தில் அமைதியாக இருக்கும். சுமார் எட்டு குறுக்குத் தெருக்களைக் கொண்ட பகுதி. எட்டாவது குறுக்குத் தெருவில் நுழைந்து 7, 6, 5, என்று  முதல் குறுக்குத் தெருவில் வெளியேறும்போது  நாற்பத்தைந்து நிமிடங்கள் செல்வதே தெரியாது..

நான் தினமும் என்னுடைய நடை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் ஒரு பணக்காரத்தனமான குடியிருப்பிலிருந்து ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க மாணவன் ஒரு தனி ஆட்டோவில் ஏறிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அவரை வழியனுப்ப அவருடைய தாயாரும் வாசல்வரை வந்து நின்று ஆட்டோ அத்தெருமுனையில் திரும்பும்வரை நின்றுக்கொண்டிருந்துவிட்டு செல்வார்.

நேற்றும் வழக்கம்போல நான் அவ்வீட்டை நெருங்கினேன். சட்டென்று என்னுடைய வாக்கிங் காலணியின் வார் (Shoe lace) ஒன்று அவிழ்ந்திருந்ததைக் கவனித்த நான் சாலையோரத்திலிருந்த ஒரு குட்டிச் சுவரில் காலை வைத்து அதை சரிசெய்துக்கொண்டிருந்தேன்.

வழக்கம்போல சர்ரென்று அந்த ஆட்டோ வந்து குடியிருப்பின் வாசலில் நின்றுக்கொண்டிருந்த மாணவனின் அருகே நிற்க மாணவன் தன் தாயை நோக்கி கையைசைத்துவிட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தான். ஆட்டோவிற்குள் குனிந்து பார்த்த அவனுடைய தாயார் உடனே கிளம்பவிருந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சரமாரியாக ஆட்டோ ஓட்டுனரை வார்த்தைகளால் விளாச ஆரம்பித்தார்.

நான் சப்தம் கேட்டு திரும்பி பார்த்தேன்.

என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை..

‘ஏய்யா, எம் பையன் தனியா வசதியா போய்வரணும்னுதானே நீ கேட்டதுக்கும் மேல சொளையா குடுக்கறேன். ஒன்ன யாருய்யா வேற ஒரு ஆள அதுவும் அவனோட வயசுல ஒரு பொண்ண கூட கூட்டிக்கிட்டு போ சொன்னது? இன்னைக்கி ஆட்டோவுக்குள்ள குனிஞ்சி பார்த்ததுனால தெரிஞ்சது. டெய்லி இப்படித்தான் பண்றியா?’

ஆட்டோ ஓட்டுனர் பணிவுடன், ‘எம்மா.. டெய்லி இல்லம்மா. இந்த  பொண்ணும் பத்தாவதுதாம்மா. நம்ம தம்பியோட க்ளாஸ்தான். இன்னைக்கி பரீட்சைக்கு நேரமாயிருச்சின்னுதான் வழியில பார்த்து கையை காட்டிச்சுன்னு கூட்டியாந்தேன்.’ என்று கூற இதை மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த கணவர் ஓடிவந்து அவர் பங்குக்கு ஆட்டோ ஓட்டுனரை ஏச..  அதுவரை பொறுமையாயிருந்த ஆட்டோ ஓட்டுனரும் எதிர்த்து பேச அங்கே சில நிமிடங்களில் ரசாபாசாமாகிவிட்டது..

நான் அத்துடன் எழுந்து அங்கிருந்து புறப்பட்டேன்..

வரும் வழியெல்லாம் இதைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

அந்த மாணவனுடைய தாயும் தந்தையும் நடந்துக்கொண்டவிதம் சரிதானா?

எனக்கென்னவோ அந்த இரு குழந்தைகளுமே இவர்களுடைய நடத்தையால் மனத்தளவில் நிச்சயம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். நேற்றைய தேர்வை இருவருமே சரியாக எழுதியிருக்க முடியாதென்றே தோன்றுகிறது.

பெரியவர்கள் சச்சரவில் ஈடுபட்டிருக்கும்போது ஆட்டோவில் அமர்ந்திருந்த இருவருமே தலையைக் குனிந்துக்கொண்டு தங்களுடைய மடியில் இருந்த புத்தகப் பையையே பார்த்துக்கொண்டிருந்தைப் பார்க்க முடிந்தது.

அவர்களுடைய மனநிலை நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்.

முக்கியமாக அந்த மாணவன். அம்மாணவி பள்ளியைச் சென்றடைந்ததுமே அவனுடைய பெற்றோர் நடந்துக்கொண்டவிதத்தைப் பற்றி நிச்சயம் தன்னுடைய தோழிகளிடம் விவரித்திருப்பார்.  

கேவலம், ஒரே வகுப்பில் பயிலும் ஒரு மாணவனும் ஒரு மாணவியும் சேர்ந்து ஒரு வாகனத்தில் செல்வதை அவனுடைய பெற்றோர் இந்த அளவுக்கு பெரிதுபடுத்தியிருக்க வேண்டுமா? அவருடைய கேள்வியை மீண்டும் பாருங்கள்.. ‘அதுவும் அவனோட வயசுல ஒரு பொண்ண கூட’ எத்தனை கேவலமான மனது அந்த தாய்க்கு..

நேற்று மாலை கல்லூரியிலிருந்து திரும்பிய என்னுடைய இளைய மகளிடம் இந்நிகழ்ச்சியை விவரித்தபோது அவள் கூறியது: ‘பாவம்பா அந்த பையன்’

உண்மைதான். இச்சம்பவத்தால் மனத்தளவில் அதிகம் பாதிக்கப்படப்போவது அந்த மாணவன்தான்.

நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

11 ஏப்ரல் 2006

மு.க.வின் நோக்கம் என்ன?

Is (D)MK Desperate?

It appears that DMK or rather MK is desperate to win the forthcoming elections in TN.

What could be the reason?

மேலே

PS: Responses may be in any language. But responses in English would be preferred!!

09 ஏப்ரல் 2006

வாருங்கள் நண்பர்களே!

ஆங்கிலத்திலும் கதைக்கலாம்!!

திரு. காசி அவர்களின் முயற்சியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இரண்டாவது தளம் ‘ப்ளாக் தேசம்’ என்ற ஆங்கில வலைப்பதிப்பாளர்களின் சங்கமம்.

தமிழ்மணத்தில் இதைக் குறித்தான விளம்பரம் வந்தவுடனே பதிவு செய்த வலைப்பதிவார்களில் நானும் ஒருவன்.

தமிழ்மணத்தில் பிரபலாமாகவிருக்கும் பல நண்பர்களும் குறிப்பாக டோண்டு, தருமி (சாம் என்ற பெயரில்), பாஸ்டன் பாலா, பச்சோந்தி, குமரன், சிறில் அலெக்ஸ், இளா(ILA), மதி கந்தசாமி மற்றும் பலரும் தங்களுடயை ஆங்கிலப்பதிவுகளை பதிவு செய்திருப்பினும தொடர்ந்து எழுதுவது வெகு சிலரே. என்னால் முடிந்தவரை அதற்கென நேரம் ஒதுக்கி வாரத்தில் மூன்று, நான்கு இடுகைகளை இடுகின்றேன்.

இதைப் பார்க்கும்போது நமக்கு தமிழின் மீதான பற்று சற்று அதிகமாகிவிட்டதோ என்றுகூட தோன்றுகிறது. இல்லையென்றால் நேரமின்மையோ?

நேரமின்மைதான் காரணமென்றால் அதை எதிர்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வாரத்தில் இரண்டு நாட்களாக இதற்கென நேரம் ஒதுக்கி கதைக்க வாருங்கள்.

நம்மில் யாருமே உண்மையான ஆங்கிலத்தில் எழுதிவிடுவதில்லை. பெரும்பாலோனோர் நம்முடைய தாய்மொழியில் சிந்தித்து ஆங்கிலத்தில் வடித்தெடுப்பதால் நம்முடைய இங்க்லீஷ் தங்க்லீஷாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் மொழி என்பது நம்முடைய எண்ணங்களைப் பிறருடன் பகிர்ந்துக்கொள்ளும் ஒரு மீடியம்தானே. ஆகவே பெரிதாக பிரிட்டிஷ் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்பதில்லை. மற்றவர்கள் படிக்கும்போது புரிந்துக்கொள்ளக்கூடியவகையில் எளிமையான ஆங்கிலத்தில் எழுதினாலே போதுமானது.

என்னுடைய நான்காண்டுகால மும்பை வாசத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை Looking back என்ற தொடராகவும் சமீப காலமாக தவிர்க்க முடியாததாகி வரும் கணினி நம்முடைய அன்றாட வாழ்க்கையை எப்படி ஸ்வாரஸ்யமில்லாததாக ஆக்கிவருகிறது என்பதை நகைச்சுவை உணர்வுடன்
ITEFFECT எழுதிவருகிறேன்.

ஆனால் படிக்கத்தான் ஆளில்லை. தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரைத்த இடுகைகளின் பட்டியல் நீஈஈஈஈஈளமாக இருந்து நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ப்ளாக் தேசத்தில் பார்ப்பதற்கே பரிதாபமாக இரண்டோ அல்லது மூன்றோதான்

நான் வாரத்திற்கு மூன்று பதிவுகள் இட்டாலும் சில வேளைகளில் நான் இரண்டு மூன்று தினங்களுக்கு முன் இட்ட இடுகையும் முகப்பு பக்கத்திலேயே இருப்பதைக் கண்டிருக்கிறேன். நல்லவேளை, ‘என்ன சார் முகப்பு பக்கத்த நீங்களே பிடித்துக்கொள்கிறீர்களே’ என்று புகார் கூற அங்கு ஆள் இல்லை.


ஆங்கிலத்தில் எழுதுவதற்கு திறமையுள்ள (என்ன பெரிய திறமையிருக்குன்னு நீங்க எழுதறீங்கன்னு சில ஏளன குரல்கள் கேட்பது செவியில் விழுகிறது) நம்முடைய தமிழ்மண தளத்தில் பலர் இருக்கின்றனர் என்று எனக்குத் தெரியும்.

அவர்களையெல்லாம்தான் 'வாருங்கள் நண்பர்களே ஆங்கிலத்திலும் கதைக்கலாம்' என்று அழைக்கிறேன்.

வாருங்கள் நண்பர்களே, ஆங்கிலத்தில் கதைக்கிறோமோ இல்லையோ ஆங்கிலத்தை ஒருவழியாக்கலாம், வாருங்கள்.

குறைந்தபட்சம் காசி அவர்களின் முயற்சியை வெற்றியடையச் செய்த மகிழ்ச்சியாவது நமக்கு கிடைக்குமே...

07 ஏப்ரல் 2006

எல்லோருக்கும் நன்றி

அன்பு நண்பர்களே,

'வேண்டாம் நண்பர்களே' என்ற என்னுடைய கட்டுரையில் நான் தெரிவித்திருந்த கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்த மற்றும் எதிர்ப்பு தெரிவித்த எல்லாருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடைய கட்டுரை யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதவேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதப்பட்டதல்ல.

சமீப காலமாக சாதி, மொழி, இனம் இவற்றை மட்டுமே அல்ல ஆனால் மையமாக வைத்து அரசியல் ஆதாயம் தேடிவரும் சில தலைவர்களைப் பற்றியும் அவர்களுடைய கூட்டணியையும் ஆதரித்து சில நண்பர்களுடைய பதிவுகளில் வந்த கட்டுரைகளைக் கண்டு மனம் வெதும்பி எழுதியதுதான் அக்கட்டுரை. அதில் நான் காண்பித்திருந்த ஒரு கட்டுரையும் அதன் சம்பந்தப்பட்ட பதிவர்களும் ஒரு உதாரணத்துக்கு மட்டுமே.

திராவிடம் என்ற தராசில் வைத்து நம்முடைய ஆட்சியாளர்களை தரம் பார்க்காதீர்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.மு.கவை ஆதரிப்பது திராவிடத்தை ஆதரிப்பது என்றாகிவிடாது. அல்லது ஜெ. ஜெயித்துவந்தால் பிராமணீயம் செழித்து வளர்ந்துவிடும் என்பதும் சரியில்லை.

மு.கவும் சரி ஜெ.யும் சரி சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்தான். இவர்களுடைய செயல்பாடுகளில் யார் மேலானவர் என்றுமட்டும் பார்த்து அவரை ஆதரியுங்கள் என்றுதான் கேட்க விழைகிறேன்.

நான் திராவிடன் என்றோ அல்லது நான் தமிழன் என்றோ ஒரு குறுகிய வட்டத்திற்குள் இன்றைய படித்த, திறமைவாய்ந்த தலைமுறை சுருங்கிவிடக்கூடாது என்பது மட்டுமே என்னைப் போன்ற முந்தைய தலைமுறையினரின் ஆதங்கம்.

ஒரு குஜராத் அல்லது பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த மாவட்ட ஆட்சியாளர்களை நம்மால் ஏற்றுக்கொள்ள முடிகிறதல்லவா? அதே போல வட மாநிலத்தைச் சார்ந்தவரானாலும் அவர் திறமையுள்ளவராக இருந்தால் அவரையும் முதலமைச்சராகவும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வர வேண்டும்.

அப்போதுதான் நாம் உன்மையிலேயே முன்னேறிவிட்ட மக்களாக கருதப்படுவோம்.

என்னை ஆள்பவன் நான் பேசும் மொழி பேசுபவனாகவோ, என் இனம் மற்றும் குலத்தைச் சார்ந்தவனாகவோ இருக்கவேண்டும் என்பது நான் நினைத்தால் நான் ஒரு கிணற்றுத்தவளையாகத்தான் இருக்க முடியும்.

அன்புடன்,
டிபிஆர். ஜோசஃப்

வேண்டாமே நண்பர்களே!


இந்த சாதி அரசியல்!

என்னுடைய இருபதாண்டு கால அலுவலக வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்கள், அவர்கள் படித்தவர்களானாலும், பாமரர்களானாலும், செல்வந்தர்களானாலும், நடுத்தர வர்க்க மற்றும் வறியவர்களானாலும் அவர்களிடையே சாதி, மத, மொழி என்ற பாகுபாடுகளால் ஏற்பட்டிருந்த பிரிவினையையும் அதனால் ஏற்பட்டிருந்த சீர்கேடுகளையும் குறித்து என்னுடைய தி.பா தொடரில் எழுதுவதன் காரணமே எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இளைய தலைமுறைக்கு ஒரு பாடமாக இருக்கட்டுமே என்றுதான்.

ஆனால் சமீபகாலமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் களத்தில் நேரிடையாக மோதிக்கொள்ளும் அரசியல் கட்சிகளைப் பற்றி விமர்சிப்பதை விட்டு விட்டு அதில் சம்பந்தப்பட்டுள்ள அரசியல் தலைவர்களைக் குறித்து நம்முடைய தமிழ்மண பதிவுகளில் எழுதப்பட்டு வரும் கட்டுரைகளைப் படிக்க நேர்ந்தபோதெல்லாம் நான் சொல்ல நினைத்ததுதான் என்னுடைய இப்பதிவின் தலைப்பாய் தந்திருக்கிறேன்.

வேண்டாமே நண்பர்களே இந்த சாதி அரசியல்!

அரசியல் தலைவர்களைப் பற்றி, அவர்களுடைய ஆட்சித் திறமைகளைப் பற்றி, அவருடைய குணாதிசயங்களில் உங்களுக்கு பிடித்தவற்றையும் பிடிக்காதவற்றையும் எழுதுங்கள். அவர்கள் தலைமையில் இயங்கி வரும் கட்சியைப் பற்றியும், அவர்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளைப் பற்றியும் அவர்கள் செய்யாமல் விட்டவற்றைப் பற்றியும விமர்சிப்பதில் உங்களுடைய திறனைக் காட்டுங்கள்.

நம் எல்லோருக்குமே பிடித்த கட்சிகள், பிடித்த அரசியல் தலைவர்கள் இருக்கும், இருக்க வேண்டும்.

ஆனால் நான் திராவிடன் அதனால் எனக்கு இவரைப் பிடிக்கும், ஏனெனில் இவர்தான் உண்மையான திராவிடப் பிரதிநிதி என்றோ அவரை எதிர்ப்பவர் எவராகிலும் அவர் தமிழினத்துரோகி என்பது போலவும் அல்லது ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவர் என்பதுபோலவும் எழுதாதீர்கள்.

ஒரு படித்த இளம் வங்கி அதிகாரி நான் திராவிட ராஸ்கல் என்பதில் பெருமைக் கொள்கிறேன் என்று எழுதினால் வேறொரு படித்த மேலை நாட்டில் பணிபுரியும் ஒரு இளைஞர் நானுந்தான் என்று பெருமைப் பாராட்டிகொள்கிறார்.

வேறு சாதியைச் சார்ந்த ஒருவர் இது மட்டும் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைதான் என்று எதிர்கருத்து எழுதினால் நீர் அந்த சாதியைச் சார்ந்தவந்தானே அய்யா நீர் பிறகு எப்படி எழுதுவீர் என்று வேறொருவர் எழுதுகிறார்.

நண்பர்களே..

உங்களில் பலரும் கனவிலும் நினைத்திராத அவமானங்களை நான் நேரில் சந்தித்திருக்கிறேன்.

நான் காப்பி குடித்த தம்ளரை என் கண் முன்னரே கிடுக்கியால் பிடித்து எடுத்து சென்ற ஒரு மேற்குடி குடும்பத்தலைவியையும் கண்டிருக்கிறேன். அவருடைய செய்கையைக் கண்டு அவமானத்தால் சிறுத்துப் போய் அடுத்த நாளே என் அலுவலகத்திற்கு வந்து என் அறையிலிருந்த வேறு சில வாடிக்கையாளர்கள் முன்பாகவே இத உங்க காலா நினைச்சி மன்னிப்பு கேக்கறேன் சார் என்று என் கைகளைப் பிடித்து மன்னிப்புக் கோரிய அவருடைய கணவரையும் சந்தித்திருக்கிறேன்.

நீர் என்னவே? நம்ம சாதியா இருந்துக்கிட்டே நம்ம வீட்டுக்கு வந்து குடுத்த கடன திருப்பி அடைச்சாத்தான் ஆச்சின்னு வீட்டாளுங்கள மிரட்டுறீரு என்ற என்னை அவதூறு பேசி அவமானப்படுத்திய வாடிக்கையாளரையும் சந்தித்திருக்கிறேன்.

வேண்டாம் நண்பர்களே..

ஓட்டு வங்கிகளை மட்டும் கருத்தில் கொண்டு சாதி, மதம், இனம், மொழி என்ற அடிப்படையில் மக்களுடைய உணர்ச்சிகளை தூண்டிவிட்டு ஆதாயம் தேடும் சாதி அரசியல் என்ற தாழ்நிலை எங்களுடைய தலைமுறையோடு ஒழிந்து போகட்டும்..

உங்களைப் போன்ற இனிவரும் தலைமுறையாவது ஆரோக்கியமாக சிந்தியுங்கள்..

வேண்டாம் இந்த கேடுகெட்ட சாதி அரசியல்..

கேட்டால் நாயகன் கமலைப் போல அவன விடச் சொல்லு நான் விட்டுடறேன் என்று கூறாதீர்கள்..

நாம் முதலில் இதை விட்டுவிடுவோம்...