இன்று காலையில் பத்திரிகையைத் திறந்ததுமே கண்ணில் பட்ட செய்திகளில் ஒன்று ஐம்பத்து நான்கு வயதே ஆன தமிழ் திரைப்பட நடிகர் பால முரளி மோஹனின் தற்கொலை!
அதே பகுதியில் வெளியாகியிருந்த இன்னொரு செய்தி சென்னை கோயம்பேட்டிலுள்ள தெற்காசிய விளையாட்டு சென்னையில் நடைபெற்றபோது வீரர்கள் தங்க கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்த ஐம்பது வயது கூட நிரம்பாத பெண் ஒருவர் அவருடைய குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை!
நான் குடியிருக்கும் பகுதியில் வசித்து வந்த ஒரு இளைஞர் (நாற்பது வயது கூட ஆகியிருக்கவில்லை) தற்கொலை செய்துக்கொண்ட இரண்டாம் வருட நினைவு நாள் நேற்று!
ஏன் இந்த நிலை?இதுபோன்ற செய்திகள் வெளிவராத நாளே இல்லை என்னும் அளவுக்கு தற்கொலைகள் பெருகிக்கொண்டே போவதைக் காண முடிகிறது.
எல்லா புகைப்படங்களிலும் குழந்தைத்தனமான புன்னகையுடன் காட்சியளிக்கும் நடிகர் பால முரளி மோஹனா தற்கொலை செய்துக்கொண்டார்? இதற்கு கடந்த ஆறு மாதங்களாக நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லை என்ற காரணம் என்கிறார்கள்.
என்னுடைய பகுதியில் வசித்தவருடைய தற்கொலைக்கு அவருடைய அலுவலக தோழர்கள் பல காரணங்களை கூறினார்கள். ஒருவர் அவருக்கு பல வியாதிகள் இருந்தன என்றார். 'இன்னும் ரெண்டு நாள்ல அவருக்கு ஹெர்னியா ஆப்பரேஷன் இருந்துது சார்.' ஒரு ஹெர்னியா சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்துக்கொள்வாரா என்று வியந்துபோனேன். ஏனெனில் அவர் நல்ல திடகாத்திரமானவராகத்தான் தெரிந்தார். தினமும் பேட்மின்டன் விளையாடுவார். சரியான எடையுடன் வயதுக்கேற்ற உருவம் கொண்டவர். இன்னொருவர் 'அவருக்கு ட்ரிங்ஸ் ஹேபிட் இருந்துது சார். கொஞ்ச நாளாவே ஜாஸ்தியா குடிப்பார்.' இப்போது யாருக்குத்தான் இந்த பழக்கம் இல்லை என்று தோன்றியது.
இதுபோன்ற காரணங்கள் எல்லாமே தற்கொலை செய்துக்கொண்டவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய நண்பர்களால்/உறவினர்களால் முன்வைக்கப்படுபவையே. இவை மட்டுமே ஒருவரை தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுமா என்று ஆய்ந்து பார்த்தால் வியப்புதான் மிஞ்சும்.
இது இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. இது நம்முடைய நாட்டை மட்டுமே ஆட்டிப்படைக்கும் விசித்திரமும் இல்லை.
மனித குலம் தோன்றிய நாள் முதலே இருந்துவரும் பழக்கம்தான் இது.
பண்டைக் காலங்களில் கிரேக்க நாட்டில் தற்கொலை செய்துக்கொள்பவரை புதைக்க இடம் வழங்க மறுக்கப்படுமாம்.
அத்தகையோரை ஊருக்கு வெளியே அனாதைப் பிணமாகத்தான் புதைப்பார்களாம். மற்ற கல்லறைகளில் வைக்கப்படுவதைப் போன்ற அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு அனுமதி இல்லையாம்.
இங்கிலாந்து நாட்டில் பதினேழாம் நூற்றாண்டில் தற்கொலை செய்துக்கொண்டவரின் உடலை கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று குப்பைகள் கொட்டும் இடத்தில் வீசி எறிந்துவிடுவார்களாம்.
ஆக, தற்கொலை ஒரு இழுக்கான செயலாகவே அன்று முதல் கருதப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது.
தற்கொலை செய்துக்கொண்டு மரிப்பவர்களுக்கு அவர்களுடைய துன்பங்களிலிருந்து, அவர்களுடைய கவலைகளிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் விடுதலை கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர்களுடைய அந்த முடிவுக்கு காரணகர்த்தாவாக சமுதாயத்தால் கற்பிக்கப்படும் அவர்களுடைய சொந்த பந்தங்கள் படும் அவமானத்திற்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அதுவே ஆரம்பமாகிவிடுகிறது. அதிலிருந்து விடுபட முடியாமல் அவர்கள் படும் அவஸ்தையை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.
தற்கொலை யார், ஏன் செய்துக்கொள்கிறார்கள்?
சமீபத்திய ஆய்வுகளின்படி தற்கொலை செய்துக்கொள்பவர்களில் மிக அதிக அளவிலான விழுக்காடு இளம் வயதினராம்.
அதிலும் பெண்கள்தான் அதிக அளவில் இத்தகைய முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்களாம்.
இத்தகையோர் ஏன் இந்த முடிவுக்கு வருகிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள்?
இதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.
இவற்றுள் முதலாவதாக கருதப்படுவது மன அழுத்தம் (Depression).
இன்றைய அதிவேக உலகில் மன அழுத்தம் இல்லாதவர்கள் இருக்க முடியுமா என்ன?
மன அழுத்தம் யாருக்குத்தான் இல்லை!
முன்பெல்லாம் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும்தான் மன அழுத்தம் ஏற்படும் என்பார்கள்.
பொருளாதார பிரச்சினையில் குறிப்பாக மிக அதிக அளவிலான கடன் தொல்லை உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. திருமண வாழ்க்கையில் பிரச்சினை. வேலையை இழந்துவிடுவதால் ஏற்படும் வேதனை, அவமானம். இவைகள்தான் ஒருவரின் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்பட்டு வந்தன.
ஆனால் இந்த வட்டத்திற்குள் தற்கொலை விழுக்காடு மிக அதிக அளவில் உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் 15வயதிலிருந்து 30 வயதுக்குள்ளவர்கள் வருவதில்லையே?
உண்மைதான்.
தற்கொலை என்கிற திரும்பி வர முடியாத எல்லைக்கு (point of no return) இட்டுச் செல்ல மிக முக்கியமான காரணமாக கூறப்பட்டு வரும் மன அழுத்தத்திற்கு இதுவரை மிக மிக அற்பமான காரணங்களாக (silly reasons) கருதப்பட்டு வரும் பல நிகழ்வுகள்தான் இன்றைய இளைஞர்களுடைய தற்கொலைக்கு பிரதான காரணமாக பட்டியலிடப்படுகின்றன.
1. பள்ளி, கல்லூரிகளில் சக மாணவர்கள் முன்பு ஏற்படும் அவமானம்.
2. சக மாணவர்களால் ஏற்படும் அவமானங்கள் (ragging)
3. தேர்வுகளில் ஏற்படும் தோல்விகள்,
4. ஒருதலைக் காதலில் தோல்வி.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவி ஒருவர் சக மாணவிகளிடம் அனுபவித்த தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட செய்தி வெளிவந்திருந்ததே. அதில் தன்னை குளிக்க விடாமல் சீனியர் மாணவிகள் சிலர் தடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்தாராம்!
இக்கால இளைஞர்களுக்கு எதனால் எல்லாம் மன உளைச்சல் ஏற்படுகிறது பாருங்கள்!
நான் தஞ்சையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு இயங்கிக்கொண்டிருந்த தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துக்கொண்டார்கள். அதற்கு அவர்கள் சமர்ப்பித்திருந்த ஆய்வுக்கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர் அற்பமான காரணங்களைக் காட்டி நிராகரித்து வந்ததுதான் முக்கிய காரணமாக கூறப்பட்டது! அதே போன்று நான் மும்பையில் பணியாற்றியபோது மும்பை பாபா அணு ஆராய்ச்சி கழகத்திலும் (Baba Atomic Reserce Centre- BARC) இத்தகைய தற்கொலைகள் சர்வ சாதாரணமாக நடப்பதை கேட்டிருக்கிறேன். பேராசிரியர்கள்-ஆராய்ச்சி மாணவர்களுக்கிடையிலுள்ள தலைமுறை இடைவெளிதான் (Generation Gap)இதற்கு முக்கிய காரணமாக அப்போது கூறப்பட்டது. அது இன்றும் விடை காண முடியாத பிரச்சினையாகத்தான் இருந்து வருகிறது என்கிறார்கள்.
இன்றைய தலைமுறையினரின் தற்கொலைக்கு மேற் கூறிய நான்கு காரணங்களுக்கு அடுத்ததாக கருதப்படுவது போதைப் பழக்கம். இந்த பழக்கத்திற்கு தங்களையும் அறியாமல் இழந்துவிடும் இளைஞர்கள் அதிலிருந்து மீள முடியாமல் இறுதியில் அதற்கு தற்கொலை ஒன்றுதான் தீர்வு என்கிற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள்.
ஆக ஒருவருடைய தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது மன அழுத்தம்தான் என்பது தெளிவாகிறது.
அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?
இதற்கு மன அழுத்தத்திற்கு உள்ளானவர் மட்டுமே முயற்சி செய்தால் போதாது. இதில் அவரைச் சுற்றியுள்ள குறிப்பாக அவருடைய நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை விட மிக முக்கியமானவர்களாகக் கருதப்படும் நண்பர்கள் ஆகியோரின் பங்கு மிக, மிக முக்கியமானது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
ஆனால் இத்தகைய மன அழுத்தத்திற்கு தங்களுடைய குழந்தைகள் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை பல பெற்றோர்கள் கடைசி நிமிடம் வரையிலும் அறிந்துக்கொள்வதே இல்லை. பலருக்கு அது பாதிக்கப்பட்டவர்களுடைய தற்கொலைக்குப் பிறகே தெரிய வருகிறது என்பதுதான் வேதனை. இதற்கு குறுகி வரும் குடும்பங்களே முக்கிய காரணம். கணவன், மனைவி ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என சுருங்கிவிட்ட குடும்பங்களில் துயரங்களை பகிர்ந்துக்கொள்ள யாருக்கு நேரம் இருக்கிறது? 'இவனுக்காகத்தானங்க நாங்க ரெண்டு பேரும் நாள் பூரா உழைக்கிறோம்? இதை ஏன் இவன் புரிஞ்சிக்காம போய்ட்டான்?' என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள்தான் இப்போது அதிகம். பணம் மட்டுமே தங்களுடைய குழந்தைகளின் துயரங்களை போக்கிவிடும் என்று நம்பும் பெற்றோர் அது மட்டும் போதுமா என்று பெற்றோரின் அன்புக்காக, அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்காக ஏங்கும் குழந்தைகள்..... இது ஒரு தீர்வு காண முடியாத பிரச்சினையாக உருவெடுப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துக்கொண்டுள்ளோம்?
மன அழுத்தத்திற்கு உள்ளாகும் அனைவருமே தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள் என்பது பொருளல்ல. ஆனால் அது முளையிலேயே கண்டறியப்பட்டு கிள்ளியெறியப்படாவிட்டால் அது தற்கொலையில் சென்று முடியுமாம்.
எதற்கெடுத்தாலும் தற்கொலைக்கு துணிபவர்கள் அதிகமாகி வரும் இன்றைய சூழலில் இதுதான் காரணம் என்று கண்டுக்கொள்வது அத்தனை எளிதல்ல என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால் நம்மில் பலரும் நமக்கு நெருங்கியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என்று மிரட்டும்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 'இவர் எப்பவுமே இப்படித்தாங்க' என்று மனைவியே அலட்சியப்படுத்துவதை பார்க்கலாம். பெரும்பாலான சமயங்களில் புலி வருது, புலி வருது என்று கூறுவார்களே அத்தகைய மிரட்டலைப் போன்றதுதான் இதுவும் என்று பொருட்படுத்தாமல் இருந்துவிட்டு அதை நிஜமாகும்போதும் தங்களைத் தாங்களே குற்றவாளிகளாக கருதிக்கொள்வது சகஜமாகிவிட்டது.
தற்கொலை செய்துக்கொள்பவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தங்களுடைய எண்ணத்தை தனக்கு நெருங்கியவர்களிடம் கோடிட்டு காட்டாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அவற்றை சரியாக நேரத்தில் இனம்கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகிறோம். குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். அதுபோல் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அடிக்கடி கூறுபவர்கள் அதை செய்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரு தவறான எண்ணமே பலருடைய தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.
ஆகவே, விழிப்பாயிருப்போம். மன அழுத்தம் எந்த ரூபத்திலும் வெளிப்படலாம். அது நமக்கு நெருங்கியவர்களிடம் காணப்படும்போது அலட்சியப்படுத்தாமல் அவர்களுடைய குறைகளைக் கேட்போம். அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்க நம்மால் ஆனவற்றை செய்வோம்.
************
தற்கொலை செய்துக் கொள்ளும் மனதைரியத்தை வாழ்வதற்கு பயன்படுத்தியிருக்கலாம்:-(
பதிலளிநீக்குவாழ்ந்து சாதித்து காட்ட வேண்டியவர்கள் இப்படி ஏமாற்றத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது பரிதாபத்திற்குரியது!
பதிலளிநீக்குத ம 1
நல்ல கட்டுரை, உண்மை மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு நம்மால் ஆன ஆறுதல் அளித்து அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றுவோம்.
பதிலளிநீக்குஉடலில் குறையிருந்தால் வெளிப்படையாக தெரிகிறது. அருகில் இருப்பவர்களும் அதனால் ஓரளவுக்கு பரிதாபப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மனதில் குறையிருப்பவர்களிடம் யாரும் அதை ஒரு நோயாகப் பார்க்க முடிவதில்லை. உடலுக்கு காய்ச்சல் வருவதுபோல மனதுக்கும் உண்டு. சரியானபடி பார்த்துக்கொள்ளாவிட்டால் பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும். இந்த நூற்றாண்டில் மனநோய்தான் அதிகமானோரைப் பாதிக்குமாம். நாம் ஒரு சமூகமாக வாழ்வது குறைந்துகொண்டே வருகிறது. மனஅழுத்தம் உள்ளவர்கள் முதலில் பேசுவதைக் குறைத்துவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். தாங்கள் கூறியதுபோல நெருங்கியவர்கள் அலட்சியப்படுத்தாமல் மனக்குறைகளை ஆரம்பத்திலேயே கலைவதுதான் நல்லது. நன்றாக அலசியிருக்கிறீர்கள். மிகவும் அவசியமான பதிவு.
பதிலளிநீக்குஇதுபோன்ற செய்திகளை வாசிக்கும்போது, மனதுக்கு பாரம் கூடிப் போகுது:(
பதிலளிநீக்கு//தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அடிக்கடி கூறுபவர்கள் அதை செய்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரு தவறான எண்ணமே பலருடைய தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.//
பதிலளிநீக்குஉண்மைதான். எங்கள் கிராமத்தில் ஒருவர் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என சொல்லிவிட்டு. ஒரு ஸ்டூலில் ஏறி உத்திரத்தில் கயிற்றை மாட்டி கழுத்தில் எடுத்து மாட்டிக்கொள்வார். உடனே அவரது மனைவி சத்தம் போட்டு யாரையாவது கூப்பிட்டு அவரை காப்பாற்றிவிடுவார். இதுபோல் பல முறை நடந்ததுண்டு. ஒருதடைவை அவர் இவ்வாறு செய்தபோது அவர் மனைவி கூக்கிரலிட்டபோது யாரும் அதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாததால் காப்பாற்ற வரவில்லை. மனைவி இரண்டு பிள்ளைகள் இருக்க இறந்துபோனார்.
தற்கொலை செய்துகொள்பவர்கள் திடீரென முடிவெடுக்கிறார்கள் என்றும் உண்மையில் அவர்களுக்கு சாக விருப்பம் இருக்காது என உளநிலை ஆய்வு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த மன நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது அவர்கள் warning sign தருவார்கள் என்றும் அதைக் கண்டறிந்து அவர்களிடம் பேசியோ அல்லது ஒரு உளநோய் மருத்துவரிடம் அழைத்து சென்று counselling செய்து காப்பாற்றலாம் எனவும் சொல்கிறார்கள்.
பதிலளிநீக்குதிரு வே நடனசபாபதி கூறியது போல் தற்கொலை செய்து கொள்பவர்கள் சிந்தித்து முடிவெடுப்பதில்லை. அது ஒரு momentary முடிவே. ஒரு முறை தடுக்கப் பட்டால் இன்னொரு முறை முயல மாட்டார்கள். துயரங்களில் இருப்போருக்கு ஆறுதல் அளிக்கும் sos நிறுவனங்கள் இயங்குவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஜப்பானில் போர்ப்படையில் இருப்போர் honour க்காக harakiri தற்கொலை செய்து கொள்வார்களாம்
சிந்திக்க வேண்டியதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை அலசி இருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குகுறிப்பாக மாணவர்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை.
நல்ல பதிவு ஜோசப் சார்
பைத்தியக்காரத்தனம்...
பதிலளிநீக்குதற்கொலை என்பதை ஒவ்வொரு கேஷையும் தனியாக எடுத்து ஆராய வேண்டும். பொத்தாம் பொதுவா தற்கொலை கோழைத்தனம், தவறு என்பதெல்லாம் எவ்வலவு தூரம் சரி என்றெனக்குத் தெரியவில்லை. ஒரு சிலருக்கு மனவியாதி வந்துதான் அவர்கள் இப்படி செய்லபடுகிறார்கள்னு நெனைக்கிறேன்.
பதிலளிநீக்குஎனக்குத் தெரிய ஒரு கேஸ். இவனுக்கு ஒண்ணும் பெரிய பிரச்சினை இல்லை. இவன் விரும்பியவள் அவனைக்காதலிக்கவில்லை. ரெண்டு அவன் "ரிசேர்ச்" வொர்க் நன்றாகப் போகவில்லை. எனக்குத் தெரிய ரெண்டு பிரச்சினைகள்.
இவன் என் நண்பன் இல்லை. ஆனால் எனக்குப் பரிச்சயம் உண்டு. இவனுடைய ரூம்-மேட் எனக்கு நல்லாத்தெரியும். ரூம்-மேட் ஒரு சாதாரண சுயநலவாதி. அவனிப் பத்திதான் அவன் கவலிப்படுவான். மற்றவர்களை பத்தி அல்ல.
இவனுக்கு பிரச்சினை அதிகமாக ஆக, அவனோட பேசக்கூட முடியவில்லை. என்ன பேசினாலும் எரிந்து விழுவான். அவன் ரூம்-மேட், அதன் நம்ம சுயநலவாதி, "என்னடா இது எழவாப்போச்சு"னு இவ்னை டீல் பண்ண முடியாமல் தனியாக ஒரு ரூம் பார்த்து போயிட்டான். (இரண்டு வருடங்களுக்கு அப்புறம் தனி அறை கொடுக்கப்படும், இருவருக்கும் தனி அறைக்கு மாறலாம்னு ஒரு சூழல்).
நான் அப்போவே இவனிடம் சொன்னேன். "நீ தனியா அவனை விட்டுட்டுப் போன, அவன் தொங்கினாலும் தொங்கிடுவான்" னு. அதைப்பத்தி அவன் ரூம்மேட், நம்ம சுயலவாதி கவலைப்படவில்லை. அவன், அவனிடம் இருந்து தப்பிச்சு ஓடிட்டான். தற்கொலை செய்தவனும் தனி அறைக்கு போய்விட்டான். தனி அறைக்குப் போயி ஒரு 30 நாட்களில், ஃபேன்ல கைலியைக் கட்டி தொங்கிட்டான்." தான் கதாலித்த அழகி கிடைக்கவில்லை" "தன் ஆராய்ச்சி ஒழுங்காப் போகவில்லை" என்கிற தோல்விகளால்.
தனியாப்போனா, அவன் ஏதாவது பண்ணிக்குவான்னு ஓரளவுக்குத் தெரியும் எனக்கு.
ஒரு ஏழை தாய் தந்தையர்க்கு பிறந்தவன் இவன். கஷ்டப்பட்டு அவனை வளர்த்து ஆளாக்கினார்கள். ஆனால் மகரு இவருக்கு "இவர் காதலிசவ இவரைக் காதலிக்கலைனு இவருக்கு வாழப்பிடிக்கவில்லை. "
ஆராய்ச்சியில் இறங்கும் மாணவர்கள் ரிசல்ட் இல்லாமல் ரிசேர்ச் சூப்பர்வைசரிடம் வாங்கிக்கட்டிக்கொள்வது சாதாரணமாக நடப்பதுதான். கொஞ்ச நாளில் ரிசல்ட் வந்த பிறகு எல்லாம் மாறிவிடும்.
எனக்கென்னவோ சாகுறதுக்கு கொஞ்ச நாள் முன்பே அவனுக்கு மன் நோய் வந்துடுச்சுனு தோணுது. அவனை அனுக முடியவில்லை.
மேலும் அவன் அவனுக்கு ஆயிரம் பிரச்சினை. இவனை நம்ம வேலையை போட்டுவிட்டு கவனிக்க நமக்கும் நேரமில்லை என்பதே உண்மை.
Anyway, the loss is for his parents. I felt sorry for them! :(
ராஜி said...
பதிலளிநீக்குதற்கொலை செய்துக் கொள்ளும் மனதைரியத்தை வாழ்வதற்கு பயன்படுத்தியிருக்கலாம்:-(//
சரியாக சொன்னீர்கள். வாழ்வதற்கு வழியா இல்லை?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Bagawanjee KA said...
பதிலளிநீக்குவாழ்ந்து சாதித்து காட்ட வேண்டியவர்கள் இப்படி ஏமாற்றத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்வது பரிதாபத்திற்குரியது!
உண்மைதான். அதுவும் ஆறு மாத காலமாக வாய்ப்புகள் வரவில்லை என்பதற்காக உயிரையே விட்டுவிடுவதா?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கும்மாச்சி said...
பதிலளிநீக்குநல்ல கட்டுரை, உண்மை மனஅழுத்தம் உள்ளவர்களுக்கு நம்மால் ஆன ஆறுதல் அளித்து அவர்களை தற்கொலையிலிருந்து காப்பாற்றுவோம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Packirisamy N said...
பதிலளிநீக்குஉடலில் குறையிருந்தால் வெளிப்படையாக தெரிகிறது. அருகில் இருப்பவர்களும் அதனால் ஓரளவுக்கு பரிதாபப்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் மனதில் குறையிருப்பவர்களிடம் யாரும் அதை ஒரு நோயாகப் பார்க்க முடிவதில்லை. உடலுக்கு காய்ச்சல் வருவதுபோல மனதுக்கும் உண்டு. சரியானபடி பார்த்துக்கொள்ளாவிட்டால் பிரச்சனைக்கு வழிவகுத்துவிடும். இந்த நூற்றாண்டில் மனநோய்தான் அதிகமானோரைப் பாதிக்குமாம். நாம் ஒரு சமூகமாக வாழ்வது குறைந்துகொண்டே வருகிறது. மனஅழுத்தம் உள்ளவர்கள் முதலில் பேசுவதைக் குறைத்துவிடுவார்கள் என்று படித்திருக்கிறேன். தாங்கள் கூறியதுபோல நெருங்கியவர்கள் அலட்சியப்படுத்தாமல் மனக்குறைகளை ஆரம்பத்திலேயே கலைவதுதான் நல்லது. //
அருமையாக கூறியுள்ளீர்கள். மன நிம்மதியற்ற நிலையில் இத்தகைய எண்ணங்கள் வருவது மிகவும் இயல்பான விஷயம்தான். ஆனால் அதை செயல்படுத்துவது என்பது அத்தனை எளிதான விஷயமல்ல. அதற்கு எத்தனை சுயதயாரிப்பு வேண்டும்! எத்தனை துல்லியமாக திட்டமிட வேண்டும்! இறந்து போவதற்கு சற்று முன்பு வரையிலும் தொலைக்காட்சியில் கால்பந்தாட்ட போட்டியை பார்த்திருக்கிறார். பிறகு சகோதரியிடம் உறங்கச் செல்வதாக கூறி தன் படுக்கையறைக்குச் சென்று உத்தரத்தில் தொங்கிய மின்விசிறியை கழற்றி அறை ஓரத்தில் வைத்துவிட்டு அதில் ஒரு நைலான் கயிற்றைக் கட்டி தூக்கிலிட்டுக்கொண்டிருக்கிறார். இத்தனை ஏற்பாடுகளையும் செய்து முடிக்க குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது ஆகியிருக்குமே..... அந்த சமயத்தில் ஒரு நொடி தான் செய்யவிருக்கும் முட்டாள்தனத்தை எண்ணி பார்த்திருக்க மாட்டாரா? மனம் அந்த அளவுக்கு உடைந்து போயிருக்குமா? என்ன கொடுமை!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
துளசி கோபால் said...
பதிலளிநீக்குஇதுபோன்ற செய்திகளை வாசிக்கும்போது, மனதுக்கு பாரம் கூடிப் போகுது:(
ஆமாங்க. அதுவும் நமக்கு பரிச்சயம் உள்ளவர்கள் என்றால் மனம் உடைந்தே போகிறது. இரு ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய பகுதியில் குடியிருந்தவர் இவ்வாறு மரித்தபோது இப்படித்தான் உணர்ந்தேன். இப்போதும் அவருடைய வீட்டு மொட்டை மாடியை பார்க்கும்போதெல்லாம் அவர் உலாவிக்கொண்டிருப்பதுபோன்ற பிரமை ஏற்படும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வே.நடனசபாபதி said...
பதிலளிநீக்கு//தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அடிக்கடி கூறுபவர்கள் அதை செய்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரு தவறான எண்ணமே பலருடைய தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.//
தற்கொலை செய்துகொள்பவர்கள் திடீரென முடிவெடுக்கிறார்கள் என்றும் உண்மையில் அவர்களுக்கு சாக விருப்பம் இருக்காது என உளநிலை ஆய்வு வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த மன நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது அவர்கள் warning sign தருவார்கள் என்றும் அதைக் கண்டறிந்து அவர்களிடம் பேசியோ அல்லது ஒரு உளநோய் மருத்துவரிடம் அழைத்து சென்று counselling செய்து காப்பாற்றலாம் எனவும் சொல்கிறார்கள்.//
ஆமாம், நானும் படித்திருக்கிறேன். ஆனால் நான் என் கட்டுரையில் குறிப்பிட்ட என்னுடைய பகுதியில் குடியிருந்த ஒருவர் அப்படி செய்திருக்கவில்லை. தன்னுடைய முடிவை எடுத்த நாள் முதலே அவர் தன் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து வைத்திருந்தார். தான் முதலீடு செய்திருந்த அனைத்து பங்குகளையும் வந்த விலைக்கு விற்று வங்கியில் இட்டு வைத்திருந்தார். தன்னுடைய வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் அட்டை, அதனுடைய பின், வெளியில் வாங்கி வைத்திருந்த கைமாற்று விவரங்கள், நண்பர்களுக்கு கொடுத்திருந்த சிறு, சிறு கடன் விவரங்கள் அனைத்தையும் எழுதி வைத்துவிட்டு சாவகாசமாக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு அருகில் இருந்த இருப்புப் பாதையில் இடைவிடாமல் சென்றுக்கொண்டிருந்த மின்சார ரயில் வண்டிகளில் ஒன்று வந்துக்கொண்டிருக்கையில் அதன் எதிரே சென்று அருகிலிருந்த அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க தலைக்கு மேல் கைகளை கூப்பி என்னை மன்னித்துவிடு என்று கூறிவிட்டு கண்களை மூடி நின்றாராம்! இத்தனையும் செய்வதற்கு எத்தனை மனத்துணிச்சல் வேண்டும்?
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
G.M Balasubramaniam said...
பதிலளிநீக்குதிரு வே நடனசபாபதி கூறியது போல் தற்கொலை செய்து கொள்பவர்கள் சிந்தித்து முடிவெடுப்பதில்லை//
தற்கொலை செய்துக்கொள்ள முடிவெடுப்பவர்கள் அனைவரும் அப்படியல்ல. ஆனால் அநேகம் பேர் சட்டென்று முடிவெடுக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஆற அமர சிந்தித்து செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
பதிலளிநீக்குசிந்திக்க வேண்டியதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை அலசி இருக்கிறீர்கள்.
குறிப்பாக மாணவர்கள் விஷயத்தில் அதிக கவனம் தேவை.
நல்ல பதிவு ஜோசப் சார்
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
திண்டுக்கல் தனபாலன் said...
பதிலளிநீக்குபைத்தியக்காரத்தனம்...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வருண் said...
பதிலளிநீக்குதற்கொலை என்பதை ஒவ்வொரு கேஷையும் தனியாக எடுத்து ஆராய வேண்டும். பொத்தாம் பொதுவா தற்கொலை கோழைத்தனம், தவறு என்பதெல்லாம் எவ்வலவு தூரம் சரி என்றெனக்குத் தெரியவில்லை. ஒரு சிலருக்கு மனவியாதி வந்துதான் அவர்கள் இப்படி செய்லபடுகிறார்கள்னு நெனைக்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
படித்த மக்கள் வாழும் கேரளாவில்தான் தற்கொலை அதிகம் நடக்கிறது என்று சர்வே சொன்னாலும், அது தமிழ்நாட்டுக்குள்ளேயும் வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது !
பதிலளிநீக்குசாதித்துக் காண்ட வேண்டிய வயதில்
பதிலளிநீக்குசாவை நாடுவது கொடுமை
நண்பர்களும், குடும்பத்தாரும்
சிறிது கவனம் செலுத்தி
விழிப்புணர்வுடன்இருந்தாலே,
மன உலைச்சலைக் குறைத்திடலாம்,
தற்கொலையினை தவிர்த்திடலாம்
அருமையான பதிவு நண்பரே
நன்றி
வாழ எத்தனையோ வழியிருக்கும்போது தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து விட்டது. தினம் தினம் இது போன்ற செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. படிக்கவே பிடிப்பதில்லை.
பதிலளிநீக்குM Delete
பதிலளிநீக்குBlogger MANO நாஞ்சில் மனோ said...
படித்த மக்கள் வாழும் கேரளாவில்தான் தற்கொலை அதிகம் நடக்கிறது என்று சர்வே சொன்னாலும், அது தமிழ்நாட்டுக்குள்ளேயும் வந்தது ஆச்சர்யமாக இருக்கிறது !//
படித்தவர்களுக்குத்தான் தோல்விகளைக் கண்டதும் மிக எளிதில் ஏமாற்றம் ஏற்பட்டுவிடுகிறதுபோலும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குBlogger கரந்தை ஜெயக்குமார் said...
சாதித்துக் காண்ட வேண்டிய வயதில்
சாவை நாடுவது கொடுமை
நண்பர்களும், குடும்பத்தாரும்
சிறிது கவனம் செலுத்தி
விழிப்புணர்வுடன்இருந்தாலே,
மன உலைச்சலைக் குறைத்திடலாம்,
தற்கொலையினை தவிர்த்திடலாம்//
உண்மைதான். ஆனால் அவர்களுடைய மன உளைச்சலுக்கு குடும்பத்தாரே காரணமாகும்போது....? பெரும்பாலான தற்கொலைகளுக்கு குடும்பத் தகராறே காரணம் என்று சொல்லப்படுகிறது.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.
AM Delete
பதிலளிநீக்குBlogger வெங்கட் நாகராஜ் said...
வாழ எத்தனையோ வழியிருக்கும்போது தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து விட்டது. தினம் தினம் இது போன்ற செய்திகள் வந்த வண்ணமே இருக்கிறது. படிக்கவே பிடிப்பதில்லை.//
என்ன செய்வது? நான் இந்த கட்டுரை எழுதி பதிவு செய்த அன்றே ஒரு பள்ளி மாணவி பள்ளிக் கட்டிடத்திலிருந்தே குதித்து உயிரை மாய்த்துக்கொண்ட செய்தியைப் படிக்க நேர்ந்தது. இது ஒரு முடிவடையா தொடர்கதையாகி வருவது உண்மையிலேயே வருத்தப்பட வேண்டிய விஷயம்தான்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குவாழப்பிடிக்கவில்லை என்றால் செத்துவிடு
சாக துணிவிருந்தால்
வாழ்ந்து பார்.
ஸுவாமி விவேகானந்தரின் பொன்மொழிதான் ஞாபகத்திற்க்கு வருகிறது ஐயா.
வாழப்பிடிக்கவில்லை என்றால் செத்துவிடு
பதிலளிநீக்குசாக துணிவிருந்தால்
வாழ்ந்து பார்.
ஸுவாமி விவேகானந்தரின் பொன்மொழிதான் ஞாபகத்திற்க்கு வருகிறது ஐயா.
உங்கள் பதிவை நீங்கள் வெளியிட்ட அன்றே படித்து விட்டேன். ஆனாலும் இந்த பதிவிற்கு என்னால் சட்டென்று கருத்துரை கூற இயலவில்லை. காரணம், நானும் ஒரு சமயம் மனம் உடைந்து வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்ய முயன்றவன்தான்.
பதிலளிநீக்குத.ம.6
பதிலளிநீக்குBlogger தி.தமிழ் இளங்கோ said...
உங்கள் பதிவை நீங்கள் வெளியிட்ட அன்றே படித்து விட்டேன். ஆனாலும் இந்த பதிவிற்கு என்னால் சட்டென்று கருத்துரை கூற இயலவில்லை. காரணம், நானும் ஒரு சமயம் மனம் உடைந்து வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்ய முயன்றவன்தான்.//
இப்படியொரு எண்ணம் பலர் மனதிலும் அவ்வப்போது தோன்றுவதுண்டுதான். ஆனால் வெகு சிலரே அந்த எல்லையைத் தாண்டிவிடுகிறார்கள்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பதிலளிநீக்குBlogger KILLERGEE Devakottai said...
வாழப்பிடிக்கவில்லை என்றால் செத்துவிடு
சாக துணிவிருந்தால்
வாழ்ந்து பார்.
ஸுவாமி விவேகானந்தரின் பொன்மொழிதான் ஞாபகத்திற்க்கு வருகிறது ஐயா.//
என்ன அருமையான பொன்மொழி! தற்கொலை செய்துக்கொள்வதற்கும் மன உறுதி வேண்டும். ஆனால் அதே மன உறுதியை வாழ்வதில் காட்ட வேண்டும்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.