21 பிப்ரவரி 2020

புதிய தமிழ் வலைத் திரட்டி இன்று முதல்....

புதிய வலைத் திரட்டி அறிமுகம்.

நம்முடைய (என்னுடைய என்றும் கூறலாம்) நீண்ட நாள் கனவு தமிழ்மணம் போன்று ஒரு தமிழ் வலைத்திரட்டி மீண்டும் துவக்கப்பட வேண்டும் என்பதாக இருந்தது. 

அது இன்று முதல் நனவாகிப் போனதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. 

நண்பர் நீச்சல்காரன் மற்றும் அவர்களுடைய நண்பர்களுடைய முயற்சியால் தமிழ்ச்சரம் என்னும் வலைத்திரட்டி இயங்க ஆரம்பித்துள்ளது என்ற அறிக்கையை வாசித்தேன். 

தமிழ்வலைப் பதிவகம் வாட்ஸப் குழு மூலமாக வலைப்பதிவுகளை அவ்வப்போது வாசிக்க முடிந்தாலும் அதில் அந்த குழுவில் உள்ளவர்களால் மட்டுமே வாசிக்க முடியும் என்று நினைக்கிறேன். தினந்தோறும் சுமார் பத்து பதினைந்து பதிவுகளை அதன் மூலம் வாசிக்க முடிந்தாலும் அது போறாது என்கிற எண்ணமே எனக்கு இருந்து வந்தது. தமிழ்மணம் சிறப்பாக செயல்பட்டு வந்தது. அது நிறுத்தப்பட்டு விட்டதும் நாம் எழுதும் பதிவுகளை ஒரு குறிப்பிட்ட குழுவினர் அல்லது நம்முடைய நண்பர்கள் மட்டுமே வாசிக்க வாய்ப்புள்ளது என்கிற எண்ணமே நம்மை அதிகம் எழுத தூண்டுவதில்லை. ஆனால் வலைத்திரட்டிகளில் வெளியாகும் பதிவுகளை வாசிக்க அந்த தளத்தின் அங்கத்தினராக இருக்க வேண்டும் என்றோ அல்லது நமக்கும் ஒரு வலைப்பதிவு வேண்டும் என்றோ கட்டாயம் இல்லை. திரட்டியின் இணைய விலாசம் கைவசம் இருந்தாலே போதும் எத்தனை பதிவுகளை வேண்டுமானாலும் வாசித்து கருத்துகளை பதிவு செய்யலாம். 

இந்த சமயத்தில் கருத்துகள் என்றதும் இதைச் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. தமிழ்மணம் செயல்பட்டுக்கொண்டிருந்த காலம் முதலே கருத்துரைகளை பதிவு செய்வது என்பது ஒரு சம்பிரதாயமாகவே கருதப்பட்டு வந்ததை கண்டிருக்கிறேன். அதாவது நீங்கள் என் பதிவில் வந்து கருத்துரை இட்டால்தான் நான் உங்கள் பதிவில் வந்து கருத்துரைகள் இடுவேன் என்கிற மனப்பான்மை பல பதிவர்களிடையில் காண முடிந்தது. இதற்காகவே குழுக்களாக பிரிந்து செயல்படுவதையும் கண்டிருக்கிறேன். அது இப்போதும் தொடர்கிறது என்பது உண்மை. 

நம்முடைய பதிவுகளுக்கு கருத்துரை வர வேண்டுமே என்கிற ஆதங்கத்தில் பல தரமற்ற பதிவுகளில் பெயருக்கு கருத்துரை இடுவது வாடிக்கையாக இருந்து வந்தது. நானும் அவ்வறு தேமே என்று கருத்துரை இட்டு வந்திருக்கிறேன். ஆனால் அது ஒரு சில மாதத்தில் வெறுத்துப்போய்விட்டது. நமக்கு கருத்துரை வராவிட்டாலும் நல்ல தரமான பதிவுகளை மட்டுமே எழுதுவது என ஒதுங்கியிருந்தேன். 

இப்போதும் தமிழ்வலைப்பதிவக குழுவில் வெளியாகும் பதிவுகள் பலவற்றில் ஒரு கருத்துரை கூட இல்லாமல் இருப்பதை காண முடிகிறது. உண்மையில் இது  நல்லதல்ல என்பது என்னுடைய கருத்து. ஆகவேதான் பல ஆங்கில வலைத்திரட்டிகளில் பட்டியலிடப்படும் ஆங்கில பதிவுகளை வாசிக்கும் போதும் அதில் தர்க்கிக்கப்படும் விஷயங்களை வாசிக்கும்போதும் நம்முடைய தமிழ் வலையுலகம் மட்டும் ஏன் தரத்தில் இவ்வளவு இறங்கியுள்ளது என்ற வேதனை ஏற்படுகின்றது. தமிழிலும் பல நல்ல பதிவுகள் வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஆங்கில பதிவுகளுடன் ஒப்பிடுகையில் அது மிக, மிக குறைவே.

தரம் என்பது அவரவருடைய பார்வைக்கு உட்பட்டது என்பது உண்மைதான். ஆனால் பதிவுகளை எழுதுவது வெறும் பொழுதுபோக்குக்காக என்றில்லாமல் நல்ல கருத்துக்களை அல்லது நல்ல நிகழ்வுகளைப் பற்றிய பதிவுகளாக அமையவேண்டும் என்ற நோக்கம் பதிவர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்பதே என்னுடைய ஆவல். 

தமிழ்ச்சரம் வலைத்திரட்டி மூலமாக என்னுடைய இந்த ஆவல் நிறைவேறும் என்று நம்புகிறேன்.

நீச்சல்காரன் மற்றும் அவருடைய நண்பர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி நிச்சயம் வெற்றிபெற வேண்டும் என்றும் வாழ்த்துக்கிறேன்.

இதில் என்னுடைய வருத்தம் என்ன தெரியுமா? அவருடைய இந்த அறிவிப்பு பதிவிலேயே இதுவரை என்னைத் தவிர வேறு எவரும் கருத்துரை இடவில்லை என்பதுதான். 

நட்புடன்
டிபிஆர்.