31 ஜூலை 2019

புதிய கல்விக் கொள்கை - 3

”உயர் கல்வியை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் நிலைத்து நிற்கக் கூடிய, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய, உயிரோட்டமுள்ள, அறிவுசார் சமூகமாக நம்முடைய நாட்டை மாற்றுவதற்கு   நேரடியாக பங்களிக்கக் கூடிய,  இந்தியாவை மையப்படுத்திய, கல்வி அமைப்பை தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது.”

இதுதான் விரைவில் நடைமுறைப் படுத்தப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் ‘தொலைநோக்கு பார்வை’ யாம்!!

இது இக்கொள்கையின் தமிழ் வரைவில்  முதல் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது இப்போதுள்ள இந்தியாவில் இத்தகைய கல்வி முறை இல்லையாம்!

இதில் இறுதி வாக்கியத்தில் வருகின்ற ‘இந்தியாவை மையப்படுத்தி’ என்ற சொற்களுக்கு பதிலாக ‘இந்தியை மையப்படுத்தி’ என்ற சொற்களை பயன்படுத்தியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

ஏனெனில் இந்த வரைவு கொள்கையின் ஆங்கிலப் பதிப்பின் 81ம் பக்கத்தில் இந்தியாவை மையப்படுத்துவது என்றால் என்ன என்பது சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இந்த கொள்கை விளக்கம் சுமார் இரண்டு பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதிப்பட்டுளதால் நான் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

“இந்தியாவிலுள்ள மொழிகள் பலவும் கலாச்சார மற்றும் அறிவியல் ரீதியாக பல சிறப்புகளைக் கொண்டிருப்பினும் இந்திய பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவது வேதனைக்குரியது. (எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அனைத்து பாடங்களும் தாய்மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகவே இருந்து வருகிறது. மத்திய அரசின் நேரடி பார்வையில் நடத்தப்படும் CBSC பள்ளிகளில்தான் அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன!)

இதற்கு காரணம்  இந்திய மக்கள் தொகையில் சுமார் 15 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள மேல்தட்டு மக்களின் (Elite) ஆங்கில மோகம்தான் என்றால் மிகையாகாது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் தங்களுடைய ஆங்கில புலமையை மட்டுமே பயன்படுத்தி அரசின் அனைத்து உயர் பதவிகளையும் ஆட்கொண்ட இந்த கூட்டம் ஆங்கிலம் எழுத, பேச தெரியாத ஆனால் இவர்களை விட அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரும்பான்மை இளைஞர்களை  தங்களுடைய ஏவலுக்கு அடிபணியும் பணியாளர்களாக மட்டுமே அடக்கி வைத்துள்ளனர்.

ஆகவே சமத்துவமான, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்றால் இத்தகையோரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

அதற்கு முதற் படியாக நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலையிலிருந்தே அவரவர் தாய்மொழியில் கற்பிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது என பரிந்துரைக்கப் படுகிறது.

அத்துடன் 1968ல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 1992ல் வலியுறுத்தப்பட்ட மும்மொழி கொள்கையை துவக்கப் பள்ளிகளிலிருந்தே அறிமுகப்படுத்துவது எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.

தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் மூன்றாவது மொழிப் பாடமாக ஏதாவது ஒரு  இந்திய மொழியை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அந்தந்த மாநில கல்வித் துறை தங்களுடைய பள்ளிகளில் நடைமுறைப் படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.”

இதுதான் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தப்படுவது ஏன் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம்.

ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகவும் தாய்மொழியை மற்ற அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்று மொழியாகவும் ஏற்றுக்கொள்வதில் எவ்வித பாதகமும் இல்லை. ஏனெனில் இப்போதும் அதுதான் அரசு பள்ளிகளில் நடைமுறையிலுள்ளது.

ஆனால் இத்தகைய தாய்மொழி வழி கல்வி நாட்டிலுள்ள அனைத்து கல்வி முறைகளிலும் (Streams) நடைமுறைப் படுத்தப்படுமா என்பதில் தெளிவில்லை.  உதாரணத்திற்கு, மத்திய அரசின் நேரடி பார்வயில் இயங்கிவரும் CBSC பள்ளிகளில் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? ஏனெனில் கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மேல்தட்டு, ஆங்கில மோகம் கொண்ட’ மக்களை உருவாக்குவதே இத்தகைய பள்ளிகள்தானே?

இதேபோன்று தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் CISCE, IGCSE பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கும் இது பொருந்துமா என்பதும் தெளிவில்லை.

இவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கிய ஒரு கல்விக் கொள்கையை மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற முடியுமே தவிர வெறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்விநிலையங்களுக்கு மட்டுமே ஒரு கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்பதே என்னுடைய வாதம்...

அடுத்ததாக, இந்த மூன்றாவது மொழியை எவ்வாறு தெரிவு செய்வது?

நாளை விவாதிக்கலாம்.

9 கருத்துகள்:

  1. அழகாக விளக்கி வருகிறீர்கள் ஐயா.

    //இந்திய மக்கள் தொகையில் சுமார் 15 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள மேல்தட்டு மக்களின் (Elite) ஆங்கில மோகம்தான் என்றால் மிகையாகாது//

    சரியாக சொன்னீர்கள் ஐயா இந்த 15 விழுக்காட்டினருக்காக ஒட்டு மொத்த மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள இயலாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை நான் சொல்லவில்லை கொள்கை வரையில் கூறியுள்ளாரகள். ஆனால் உண்மையில் இன்று ISRO வில் பணியாற்றும் பலரும் தமிழ் வழிகல்வியில் பயின்றவர்கள் தானே. நம்முடைய கலாம் அவர்கள் நானும் தமிழ் வழி கல்வியில் பயின்றவரே அல்லவா?

      நீக்கு
    2. 'கலாம் ஐயா அவர்கள் நானும் தமிழ் வழி கல்வியில் பயின்றவன் தான் என பல முறை கூறுவாரே. கல்வி கொள்கையில் இவ்வாறு குறிப்பிட வேறு காரணம் உள்ளது. இதை நாளை விவாதிக்கலாம்.

      நீக்கு
  2. நானும் எல்லாப் பாடங்களையும் தமிழில்தான் படித்தேன் எதுவும் குறைந்துபோகவில்லை கல்வியை மாநில அரசே தீர்மானிக்க வேண்டும் என்பதே என்கட்சி அதிலும் கல்வி எல்லோருக்கும் பொதுவாக சமமாகச் செய்ய வேண்டும் ஆண்டாண்டுகால மாக நம் சமுதாயத்தில் நிலவிவரும் ஏற்ற தாழ்வுகளை போக்க நான் ஆட்சிப்பொறுப்பில் இருந்தால்எல்லொருக்கும் குறைந்தப் பட்சம்பள்ளி இறுதி வரைகட்டாய இலவசக் கல்வி இலவச சீருடை இலவச மதிய உணவு கட்டாய மாக்கப்பட வேண்டும் ஏழைக்கல்வி பணக்காரக் கல்வி என்று ஏதும் இருக்கக் கூடாது இது பள்ளியில் படிக்கும் சிறார் மனதில் அனைவரும் சமம் என்னும் எண்ணத்தை உருவாக்கும் நாளாவட்டத்தில் ஏற்றதாழ்வுகள் மறைந்து போகும் கல்வியை வியாபாரமாக்கும் மக்களிடமிருந்துபெரும் எதிர்ப்பு வரும் சமாளித்தே ஆகவேண்டும் வேறுபாடு இல்லாத சமுதாயம் மலர வாய்ப்பு கூடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுருக்கமாக சூப்பராக சொல்லிட்டீங்க சார். இந்த அடிப்படையான விஷயம் ஆட்சியாளர்களுக்கு தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்!

      நீக்கு
  3. நல்லதொரு மாற்றம் வரும் என்று நம்புகிறேன்... வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே வேண்டுதல்தான் இந்திய மக்கள் அனைவருடைய மனதிலும் இருக்கும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  4. மத்திய அரசின் நேரடி பார்வையில் இயங்கிவரும் CBSC பள்ளிகள்
    இதேபோன்று தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் CISCE, IGCSE, Matriculation (Matriculation பள்ளிகளிலும் ஆங்கிலத்தில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.) அனைத்திலும் ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகவும் தாய்மொழியை மற்ற அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்று மொழியாகவும் ஆக்குவது கடினம் என்பதால் அதை விட்டுவிட்டார்கள் போலும்.

    அது சாத்தியமில்லாதபோது சமத்துவமான, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய வாய்ப்பு தர இயலாது . தாங்கள் சொன்னதுபோல் இந்தியை மையப்படுத்தத்தான் இந்த திட்டம்.

    மூன்றாவது மொழி என்று சொன்னாலும் அவர்கள் சொல்வது இந்தியைத்தான். இதை நமது மாநிலம் ஒத்துக்கொள்ளக்கூடாது.ஆனால் தற்போதைய மாநில ஆட்சியாளர்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்களா என்பது ஐயமே.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வது முற்றிலும் சரி சார்.

    பதிலளிநீக்கு