22 ஜூலை 2006

கடந்து வந்த பாதை 3

செல்வராணி டீச்சர்

ஹீரோ ஒர்ஷிப் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். என்னுடைய பள்ளி பருவத்தில் எனக்கு ஒருவர் மீது ஹீரோயின் ஒர்ஷிப் இருந்தது.

அவர்தான் என்னுடைய பள்ளி ஆசிரியை செல்வராணி. சகலகலாவல்லி.

அவருடைய பதவி என்னவோ ஓவிய ஆசிரியைதான். ஆனால் அவரில்லாமல் அந்த பள்ளியே அசையாது என்பதுபோன்ற ஒரு ஆதிக்கம்....

ஓவியம் வரைவது அவர் கற்றறிந்தது. ஆனால் கல்லாதது உலகளவு என்பார்களே அதுமாதிரி அவருக்கு கைவராத கலைகளே இல்லையெனலாம்.

பள்ளி ஆண்டு விழா, பெற்றோர் மற்றும் ஆசிரியர் தின விழா, தலைமையை ஆசிரியையின் பிறந்தநாள் விழா என எல்லா விழா கொண்டாட்டங்களையுமே அவருடைய ஈடுபாடில்லாமல் நடத்தவே முடியாது.

அதனால்தான் அவரை சகலகலாவல்லி என்றேன்.

நாடகங்களுக்கு கதை, வசனம் எழுதி தகுதியான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சியளித்து, இயக்கி வேண்டுமென்றால் அவரும் நடித்து கலக்கிவிடுவார்.

என்னுடைய அதே பள்ளியில் மெர்சி என்றொரு ஆசிரியையும் இருந்தார்.

என்னுடைய நாயகியான செல்வராணி என்னைப்போலவே கருத்த மேனியைக்கொண்டவர் என்றால் அந்த மெர்சி செக்கச் செவேல் என ஜொலிக்கும் கலரில்..

செல்வராணி தலித் இனத்தை சார்ந்த சராசரி பொருளாதாரத்தில் நடுத்தரத்துக்கும் சற்று தாழ்ந்த குடும்பத்தைச் சார்ந்தவர். குடும்பத்தில் மூத்தவர். இரு தங்கைகள், இரு தம்பிகள், உடல் ஊனமுற்ற தாய். தந்தையை இளம் வயதிலேயே பறிகொடுத்தவர் என்பதால் முப்பது வயதைக் கடந்தும் திருமணத்தைப் பற்றி சிந்திக்கக்கூட திராணியில்லாமல் இருந்தவர்.

மெர்சியோ நேர் எதிர். சென்னை வேப்பேரி வட்டாரத்திலேயே மிகப்பெரிய ஜவுளிக்கடை முதலாளியின் ஒரே வாரிசு. மேற்குடியினர் என்று என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன். அழகும் பணமும் அந்த காலத்திலேயே பட்டதாரி ஆசிரியை என்ற கர்வமும்..

அவரும் படு திறமைசாலிதான். அவருக்கும் செல்வராணி டீச்சருக்கிருந்த எல்லா திறமைகளும் இருந்தன. அவர் ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு ஆசிரியை. அந்த வகுப்பு மாணவர்கள் பங்குபெறும் நாடகங்களை மெர்சி டீச்சரே எழுதி இயக்கி தனக்கு பிடித்த நல்ல நிறமுள்ள, அம்சமான மாணவர்களை மட்டுமே தெரிந்தெடுத்து நடிக்கவைப்பார்.

அவருக்கு என்னைப்போன்ற கருத்த நிறமுள்ள மாணவர்களை ஏன் சக ஆசிரியர்களைக்கூட கண்டாலே பிடிக்காது. வெறுப்பை நேரே முகத்திற்கு முன்னரே காட்டுவார். ஆகவே நான் அவருடைய வகுப்பில் படித்தாலும் என்னை அவருடைய எந்த நாடகத்திலும் தேர்வு செய்யமாட்டார்.

நான் ஆறாவது படித்து முடிக்கும்வரை செல்வராணி டீச்சருக்கு செல்லப் பிள்ளையாக இருந்தேன். அவருடைய எல்லா நாடகங்களிலும் குறிப்பாக கிறித்துவ மத வேதபுத்தகத்திலிருந்து தயாரிக்கப்படும் நாடகங்களில் நிச்சயம் நான் இருப்பேன். ‘மேக்கப் போட்டுட்டா கருப்பென்ன செவப்பென்னடா.. நல்லா வசனம் பேசி நடிச்சா போறும்.’ என்பார். அவர் வசனம் பேசி, நடித்துக்காட்டுவதில் பாதியை செய்தாலே போதும்.. சமாளித்துவிடலாம். அப்படியொரு திறமையான நடிகை அவர். அவரே பாடல்களை எழுதி ஒரு ஆர்மோனிய பெட்டி மற்றும் தபேலா சகிதம்  இசையமைத்து, அவரே பாடவும் செய்வார். இனிமையான குரலுக்கும் சொந்தக்காரர் அவர்.

எனக்கு நினைவிலிருக்கும்வரை எங்களுடைய பங்கு தேவாலயத்தில் (எனக்கு திருமணம் நடந்ததும் இதே தேவாலயத்தில்தான். அத்தனை வருடங்கள் ஒரே பங்கில் இருந்தோம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!) செல்வராணி டீச்சர்தான் ஆர்மோனியத்தை வாசிப்பார். பாடகர் குழுவில் யார் வந்தாலும் வராவிட்டாலும் ஒற்றை ஆளாக இருந்து ஜமாய்த்துவிடுவார். பார்ப்பவர்களையெல்லாம் கடித்துக் குதறும் எங்களுடைய பங்கு குருவும் கூட செல்வராணி டீச்சரை தனி மரியாதையுடன் நடத்துவார்.

என்னுடைய பள்ளியில் ஆறாம் வகுப்புவரையிருந்த மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் ஒரு குழுவாகவும் அதற்குமேல் எட்டாவது வரை பயிற்றுவிக்கும் ஆசிரியைகள் வேறொரு குழுவாகவும் பிரிந்து நிற்பதை பார்த்திருக்கிறேன். ஏறத்தாழ மாணவர்களும் அப்படித்தான்.

பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டங்களும் கூட இவ்விரு பிரிவினருக்கும் வெவ்வேறு நாட்களில்தான் நடக்கும். முதல் குழுவினருக்கு செல்வராணி டீச்சர் தலைவி என்றால் மெர்சி டீச்சர் இரண்டாவது குழுவுக்கு தலைவி.

ஆறாம் வகுப்பு வரை செல்வராணி டீச்சரின் நாடகங்களில் எல்லாவற்றிலும் நான் இருந்தேன். ஏழாம் வகுப்புக்கு மாறியதும் மெர்சி டீச்சர் எனக்கு வாய்ப்பளிப்பார் என்று காத்து ஏமாந்தது இப்போதும் நினைவிருக்கிறது. ஒருநாள் ஏமாற்றத்துடன் நான் வகுப்பில் தனியாக அமர்ந்து அழுதுகொண்டிருந்தபோது செல்வராணி டீச்சர் வந்து என்னை அப்படியே அணைத்து ஆறுதலளித்து என்னை தேற்றியதும் இன்றும் நினைவில் நிற்கிறது. அன்று முதல் அவர்களுடைய நாடகங்களில் என்னையும் சேர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். அதுவே மெர்சி டீச்சருக்கும் அவருக்கும் இடையே இருந்த பகையை ஊதி பெரிதாக்கியது.

அவர்களுக்கிடையே அவ்வப்போது நடந்த சில்லறை தகராறுகளையும் வாக்குவாதங்களையும் இப்போது நினைத்து பார்க்கிறேன். வேடிக்கையாக இருக்கிறது..

நான் எட்டாவது முடித்து காட்பாடி செல்ல இதெல்லாம் மனதில் நீங்காத நினைவாக நின்றுபோனது..

அதன் பிறகு நான் படித்து முடித்து வேலையில் சேர்ந்தும் என்னுடைய பள்ளி இருந்த அதே சாலையில்தான் வசித்துவந்தோம். நாங்கள் சென்றதும் அதே தேவாலயம்தான்.

செல்வராணி டீச்சரை நான் பலமுறை சாலையில் நேருக்கு நேர் சந்திக்க நேர்ந்த போதெல்லாம் என்னை அவர் அடையாளம் தெரிந்தும் தவிர்க்க முயன்றதை பார்த்திருக்கிறேன். என்னுடைய பள்ளிப்பருவதில் நான் பார்த்த டீச்சரல்ல அவர். முகமெல்லாம் சோர்ந்துபோய், துள்ளல் இல்லாத நடையுடன் பார்ப்பதற்கே பாவமாக இருக்கும். அப்போதெல்லாம், ‘என்ன டீச்சர் என்னெ அடையாளம் தெரியலையா.. நாந்தான் டீச்சர் போஸ்கோ’ என்பேன்.

இந்த சந்தர்ப்பத்தில் என்னுடைய பெயரைப் பற்றி ஒரு இடைச்செருகல். என்னுடைய முழுப்பெயர் தாமஸ் போஸ்கோ ரொசாரியோ ஜோசஃப் ஃபெர்னாண்டோ (அப்பாடா முழுசா மூச்சுவிடாம சொல்லிட்டேன்) முதல் பெயர் என்னுடைய தந்தையுடையது. இரண்டாவது, என்னுடைய தாய் மாமன் (இரண்டாவது மாமா) மூன்றாவது, என்னுடைய சித்தியின் பெயர் (Our Lady of Rosaryயைக் குறிக்கிறது எனவும் கொள்ளலாம்) நான்காவது பெயர் என்னுடைய தாத்தா சூசை மாணிக்கம். ஐந்தாவது, என்னுடைய குலப்பெயர். என்னுடைய பள்ளியிறுதி மற்றும் பி.காம் பட்ட சான்றிதழ்களிலெல்லாம் இந்த முழுப்பெயரும் இருக்கும்.. குலப்பெயரைத் தவிர.. என்னுடைய தந்தை நல்லவேளையாக இந்த குலப்பெயரை ஆரம்பத்திலேயே தவிர்த்திருந்தார். நான் பணியில் சேர்ந்தபோதுதான் அதை சுருக்கி டி.பி.ஆர். ஜோசஃப் என்று வைத்துக்கொண்டேன். (ஆமா, இது ரொம்ப முக்கியம்!)

செல்வராணி டீச்சர் தயக்கத்துடன், ‘தெரியாமயா.. நீ பண மரம் மாதிரி வளர்ந்து நிக்கற.. ஒங்கிட்ட நின்னு பேசறதுக்கே தயக்கமாருக்கு.. ஒங்கப்பாக்கிட்டதான் ஒன்னைய பத்தி அப்பப்ப கேட்டுக்குவேன்..’ என்றவாறு கழன்றுக்கொள்வார்.

என்னுடைய திருமணம் தூத்துக்குடியிலும் பின்னர் சென்னையில் இதே பங்கு ஆலய வளாகத்தில் வரவேற்பும் (Reception) நடந்தபோதுகூட ‘வரமுடியவில்லை போஸ்கோ’ என்று தன் சகோதரருடைய பிள்ளைகள் மூலம் செய்தியனுப்பியது நினைவிருக்கிறது.

அப்போதுதான் பணியிலிருந்து ஓய்வுபெற்றிருந்தார் என்பதை அறிந்துக்கொண்டேன். பிறகு அவரை சந்திக்கவே முடிந்ததில்லை.

பிறகு நானும் பதவி உயர்வு பெற்று ஊர் ஊராக மாறிச் சென்று 1987ம் ஆண்டு மீண்டும் சென்னை கிளை ஒன்றிற்கு மேலாளராக திரும்பி வந்தேன். சென்னை கீழ்ப்பாக்கம் அன்னை பாத்திமா பங்கு தேவாலயத்துக்கு அருகில் குடியிருந்தேன். அதே வளாகத்தில்தான் மெர்சி ஹோம் இருந்தது (ரஜினிகாந்தும் குட்டி மீனாவும் நடித்த ‘அன்புள்ள ரஜினி’ திரைப்படத்தை இங்குதான் படம் பிடித்தனர்).

என்னுடைய அலுவலக விஷயமாக அந்த மெர்சி ஹோம் இல்லத்தின் தலைவியாகவிருந்த கன்னியரை ஒருமுறை சந்திக்க நேர்ந்தபோது, ‘ஒங்களுக்கு சேத்துப்பட்டுலருக்கற முதியோர் இல்லத்துல பார்ட் டைம் சோஷியல் ஒர்க்கரா வேல செய்யறதுக்கு விருப்பமா?’ என்றார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு சரி என்று சம்மதித்தேன். அவர் கொடுத்த கடிதத்தை எடுத்துக்கொண்டு அடுத்த நாள் மாலையே முதியோர் இல்ல தலைவியை சென்று சந்தித்து அந்த வார இறுதியிலிருந்தே என் பணியை துவக்கினேன்.

ஒவ்வொரு வாரமும் சனி மாலையும் ஞாயிறு காலையிலிருந்து நண்பகல் வரை சென்றால் போதும்.

இல்லத்திலிருந்த முதியோர்களுக்கு உணவூட்டுவது, அவர்கள் உடுத்த உதவுவது, சக்கர நாற்காலியில் தூக்கி வைத்து வளாகத்தினுள் மாலை உலா அழைத்து செல்வது இப்படிப்பட்ட சிறு, சிறு உதவிகளை செய்வதுதான் நம் பணியாக இருக்கும்.

இல்லத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட முதியோர்கள் இருந்தனர். அவர்களுடன் மாலை நேரங்களில் அமர்ந்து அவர்கள் கூறுவதை கேட்பதும் ஒரு பணியாகும். ஆனால் அதுதான் மிகவும் சிரமமான பணி. ஒவ்வொருவருடைய கதையும் ஒரு தனி சோகம். கேட்கவே மனம் தாங்காது. அங்கு பணியாற்றிய சுமார் இரண்டாண்டு காலத்தில் (அதன்பிறகு மாற்றலாகி சென்றுவிட்டதுதான் காரணம்) எத்தனை நாள் நிம்மதியாக உறங்கியிருப்பேன் என்பது கேள்விக்குறி. அவர்களுடைய அனுபவத்தை கேட்டு  நம்முடைய மனம் அப்படி  பதறிப்போகும்.. அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு புத்தகமாகவே கொண்டுவர வேண்டும் என்றெல்லாம் அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்..

அந்த இல்லத்திலேயே பலர் மரித்துவிடுவர். நாள்தோறும் ஒரு மரணமாவது இருக்கும். அந்த சமயங்களில் அவருடைய பிள்ளைகளும், சகோதர, சகோதரிகளும் போடும் நாடகங்களை நேரில் பார்க்கவேண்டும். என்ன உலகமடா இது என்று எண்ணத்தோன்றும்..

வாழ்ந்த காலத்தில் யாருக்கும் வேண்டப்படாதவர்களாகிவிடும் இவர்களுடைய மரணத்திற்குப்பிறகு சடலத்தை கொண்டு செல்ல துடிக்கும் துடிப்பு என்ன, மேள தாளத்துடன் அவர்களை அலங்கார ஊர்திகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வதென்ன..

அப்படி பல மரணங்களை சந்தித்து வெறுத்துப்போய் நாளடைவில் அந்த சம்பவங்களையே கண்டுகொள்ளாமலிருக்க ஆரம்பித்தோம் நானும் என்னைப் போன்ற சக ஊழியர்களும்.

ஆனால் அன்று ஏனோ தெரியவில்லை என்னால் அப்படி இருக்க முடியவில்லை..

அந்த மரணத்திற்கு வந்திருந்த பலரும் எனக்கு அறிமுகவானவர்களாக இருந்தனர். அதாவது என்னுடைய பள்ளி தோழர்கள், என்னுடைய பழைய வேப்பேரி தேவாலய நண்பர்கள், பாடகர்குழுவைச் சார்ந்தவர்கள் என ஏறத்தாழ எல்லோருமே எனக்கு பரிச்சயமான முகங்களாகவே இருந்ததும் ஒரு காரணம்..

என்னை அடையாளம் கண்டுகொண்டு புன்னகை செய்த என் பள்ளி தோழன் ஒருவரை அணுகி, ‘யார்றா.. ஒங்க ஒறவுக்காரங்க யாராச்சுமா?’ என்றேன்.

அவர் வியப்புடன், ‘என்னடா போஸ்கோ தெரிஞ்சிதான வந்திருக்கே.. அப்புறம் எதுக்கு கேக்கே?’ என்றார்.

‘இல்லடா.. நா இங்கதான் பார்ட் டைம் ஒர்க்கரா இருக்கேன். எல்லா வாரமும் சனி, ஞாயிறு இங்கதான் இருப்பேன். அதான் வந்தேன்.. யார்றா இறந்தது?’ என்றேன்.

‘நம்ம செல்வராணி டீச்சர்றா. இன்னைக்கி காலைலதான் இறந்துருக்காங்க. டீச்சருக்கு பிரதர்ஸ், சிஸ்டர்சுன்னு இருந்தும் யாருமே அவங்க குடுத்த விலாசத்துல இப்ப இல்லையாண்டா.. என்ன அநியாயம் பாத்தியா? அப்படியே இருந்தாலும் அதெப்படிறா நமக்கு தெரிஞ்சிருக்கறப்ப அவங்க யாருக்கும் தெரியாம இருக்கும்? ஆனா இதுவரைக்கும் யாருமே வரல பாரேன்.. அதான் இங்கருக்கற சாப்பல்லயே பூசைய வச்சிட்டு நாங்களே கீழ்பாக்கம் கல்லறையில அடக்கம் செஞ்சிரலாம்னு நிக்கோம்.’

நாமளும் போன ஒரு மாசமா இங்க வந்துக்கிட்டிருக்கோம். இவங்கள மிஸ் பண்ணிட்டோமே என்று மாய்ந்து போனேன். கூட்டத்தை விலக்கிக்கொண்டு தேவாலய பீடத்திற்கு முன்பு சவப்பெட்டியில் வைத்திருந்த உருவத்திற்கு அருகில் சென்று பார்த்தேன். ‘இவங்களா, இவங்களா என்னோட செல்வராணி டீச்சர்?’என்று கேட்கும் அளவுக்கு அவர்களுடைய உருவம் முற்றிலுமாக சீர்குலைந்து போயிருந்தது. இவர்களை நான் பலமுறை இதே இல்லத்தில் பார்த்திருக்கிறேன். ஆனால் அடையாளம் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று நினைத்தபோது மனம் ஆறவில்லை..

பிறகுதான் தெரிந்தது..

அவர் வளர்த்து ஆளாக்கிவிட்ட இரு சகோதரர்களும், சகோதரிகளும் நல்ல நிலையில் சென்னையிலேயே இருந்தும் யாரும் அவரை தங்களுடன் வைத்து காப்பாற்ற விரும்பவில்லை என்று..

‘பாவிப்பயலுக.. வாழ்ந்தபோது வராட்டாலும் சாவுக்காவது மூனாம் மனுசங்கபோல வந்து போகக்கூடாது?’ என்ற குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன். மரணத்துக்கு வந்திருந்த ஒரு வயதானவர்..

அதானே?********


17 ஜூலை 2006

மரணம் - ஒரு ஃப்ளாஷ்பேக் 2

தாய்ப்பாசம்.

நான் அப்போது தூத்துக்குடியில் பணிபுரிந்துக்கொண்டிருந்தேன்.

ஒரு நாள் என்னுடைய வாடிக்கையாளர்களுள் ஒருவரை சந்தித்துவிட்டு வீடு திரும்பினேன். இரவு சுமார் எட்டு மணி இருக்கும்.

என்றைக்கும் இல்லாமல் என்னுடைய வீட்டு வாசலிலேயே காத்திருந்த என்னுடைய மனைவியைப் பார்த்து வியந்து, ‘என்ன, யார பாக்கறே?’ என்றேன்.

பதில்கூறாமல் சற்று நேரம் நின்ற அவருடைய முகத்தைப் பார்த்ததுமே ஏதோ பிரச்சினை என்பதுமட்டும் புரிந்தது.

‘லாரன்ஸ் அண்ணன் ஃபோன் செஞ்சிருந்தாங்க. நம்ம வில்சன் திடீர்னு இறந்துட்டாராம். ஒங்கள ஒடனே புறப்பட்டு வரச்சொன்னாங்க.’

என்னுடைய வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு என்னுடைய செவிகளை நம்பமுடியாமல் என் மனைவியைப் பார்த்தேன். ‘என்ன சொல்ற? யாரு.. சரியா பேர கேட்டியா? வில்சனா? அவனுக்கு இப்பத்தான கல்யாணம் ஆச்சி! ஏன், எப்படின்னு ஏதாச்சும் கேட்டியா?’

எனக்கும் லாரன்சுக்கும் உள்ள நெருக்கம், அந்த குடும்பத்துடனான எனக்கு இருந்த பிணைப்பு எல்லாம் என் மனைவிக்கு நன்றாக தெரியும். எதிர்பாராத இந்த செய்தி என்னை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதும் அவருக்கு தெரியும்..

என்னுடைய குரலிலிருந்த பதற்றத்தைக் கண்டு என்னை நெருங்கி வந்து என் கைகளைப் பற்றினார். ‘ஒங்க வருத்தம் புரியுதுங்க. ஒடனே பொறப்பட்டு போங்க. நானும் ஒங்கக்கூட பொறப்பட்டு வந்துருவேன்.. ஆனா மூனு மாசங்கூட ஆவாத பாப்பாவ தூக்கிக்கிட்டு..’

ஆம். என் இரண்டாவது மகள் பிறந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. தூத்துக்குடியிலிருந்து திருத்துறைபூண்டிக்கு பேருந்தைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. இரவு நேரத்தில் பேருந்தில் கைக்குழந்தையை தூக்கிக்கொண்டு பயணம் செய்வது அத்தனை உசிதமல்ல என்று நினைத்தேன்.

‘வேணாம். நான் மட்டும் போறேன். நாம அடுத்த தடவ வேளாங்கண்ணிக்கு போம்போது ஒன்னெ அங்க கூட்டிக்கிட்டு போறேன்.. வா.. நான் குளிச்சிட்டு புறப்பட்டு போறேன்.’

அவசர, அவசரமாக குளித்து உடை மாற்றிக்கொண்டு ஓடுகிறேன். தூத்துக்குடியிலிருந்து நாகப்பட்டிணம் அல்லது தஞ்சாவூர் சென்று அங்கிருந்து வேறொரு பேருந்தைப் பிடித்து ஊர் போய் சேர எப்படியும் விடியற்காலை ஆகிவிடும்.

நல்ல வேளை நாகப்பட்டிணம் வண்டியே கிடைத்துவிடுகிறது. ஏறி அமர்ந்து கண்களை மூடுகிறேன்.

மூடிய கண்களுக்குள்ளே வில்சன்..

என்னைப் போலவே கருத்த நிறம். ஆனால் களையான முகம். அதிலும் ஒரு கவர்ச்சி. சிரித்தால் பளிச்சென்று வெளிச்சம்போட்டது போல் மலர்ந்துவிடும் ஒரு சிரிப்பு.

வீட்டில் கடைசிப் பிள்ளை. லாரன்ஸ் மூத்தவர். எனக்கு கடந்த சுமார் பத்து வருட பழக்கம்.

அப்போது நான் என்னுடைய சென்னை மத்திய கிளையில் துணை மேலாளராக பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

சென்னைத் துறைமுகத்தில் சிப்பந்தியாக (Peon) பணிபுரிந்து ஓய்வுபெற இன்னும் ஆறே மாதங்களிருந்த நிலையில் திடீரென மாரடைப்பால் மரணமடைந்த தன்னுடைய தந்தையின் அலுவலகத்திலிருந்து கிடைத்த காசோலையை மாற்றி தன்னுடைய கணக்கில் வரவு வைப்பதற்காக அவர் வந்தபோது என்னை சந்தித்ததை நினைத்துப் பார்க்கிறேன்.

காசோலை சற்றே அதிகமான தொகைக்கு இருந்ததால் கவுண்டரிலிருந்து என்னுடைய கணக்காளர் (Accountant) அதனை ஏற்றுக்கொள்ள தயங்கி லாரன்சை என்னுடைய அறைக்கு அழைத்து வந்திருந்தார்.

எனக்கு அவருடைய முகத்தைப் பார்த்ததுமே பிடித்துப்போனது. ஏன், எதற்கு சொல்லத் தெரியவில்லை. என்ன ஏது என்று மேற்கொண்டு எந்த விசாரணையுமில்லாமல் அவர் கொண்டுவந்திருந்த காசோலையை அதுவரை பெரிதாக எந்த வரவு செலவும் செய்யாதிருந்த அவருடயை கணக்கில் வரவு வைத்துக்கொள்ள நான் கையொப்பமிட்டு கொடுக்க என்னுடைய கணக்காளருக்கு அவ்வளவாக திருப்தியில்லையெனினும் என்னை மறுத்து பேச மனமில்லாமல் ஏற்றுக்கொண்டார்.

அன்று துவங்கிய நட்பு நாளடைவில் வளர்ந்து குடும்பத் தலைவனை இழந்து நின்ற அந்த குடும்பத்தில் எப்படியோ நானும் ஒருவனாகிப் போனேன்.

அவரும் சென்னைத் துறைமுகத்தில்தான் குமாஸ்தாவாக பணிபுரிந்துக்கொண்டிருந்தார். என்னுடைய கிளை அவருடைய அலுவலகத்திலிருந்து நடைதூரம்தான் என்பதால் என்னுடைய கிளைக்கு வரும்போதெல்லாம் என்னை சந்திக்காமல் செல்லமாட்டார்.

அவருடைய குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம். சொந்தமாக சிறியதொரு ஓட்டு வீடு சென்னை பெரம்பூர் பகுதியில். ஐம்பது வயதில் அம்மா, இருபது வயதில் ஒரு தங்கை மெர்சி. ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை தேடிக்கொண்டு.. அவருக்கு இரண்டு வயதுக்குக் கீழே கடைக்குட்டி வில்சன். பள்ளி படிப்பு முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் தெருமுனைகளில் நின்றுக்கொண்டு வம்படித்துக்கொண்டிருந்த வாலிபன். பொறுப்பற்றவன் என்று சொல்லமுடியாது. தாயின் அதிகபட்ச பாசத்தில் வாழ்க்கையில் ஒரு நோக்கமில்லாதிருந்தவன்..

லாரன்சுடைய வருமானத்தில்தான் குடும்பம் நடந்துக் கொண்டிருந்தது. ‘இவன நினைச்சாத்தான் கவலையா இருக்கு ஜோசஃப்.. . எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். மெர்சி ஸ்கூல் முடிச்சதுமே அப்பா டீச்சர் ட்ரெய்னிங் படிம்மான்னு சேர்த்துவிட்டார். அப்பாவுக்கு நிறைய ஃபாதர்ஸ் பழக்கம். எங்கயாவது டீச்சர் போஸ்ட் வாங்கிரலாம்னு நினைச்சார். அப்பா இப்ப இல்லன்னாலும் அவருக்கு தெரிஞ்ச ஃபாதர்ஸ் மூலமா அவளுக்கு வேல எப்படியும் கெடச்சிரும்னு நினைக்கேன். வேல கெடச்சதும் அப்பா இறந்ததும் கெடச்ச பணத்துல அவ கல்யாணத்த முடிச்சிருவேன். அப்புறம் அம்மாவ பாத்துக்கறதுக்கு நா இருக்கேன். ஆனா இவனத்தான் என்ன பண்றதுன்னு தெரியல. என்னாலதான் காலேஜ் போமுடியலை.. நீயாவது காலேஜ்ல சேர்ந்து படிடான்னா எவ்வளவோ சொல்லி பாத்துட்டேன். கேக்காம இப்படி ஊர் சுத்திக்கிட்டிருக்கான். எல்லாம் அம்மா குடுக்கற செல்லம்.’ என்று சொல்லி மாய்ந்தததை நினைத்துக்கொள்கிறேன்.

நான் துணை மேலாளர் பதவியிலிருந்து பதவி உயர்வுபெற்று சென்னை, தஞ்சை ஊர்களில் மேலாளராக இருந்துவிட்டு தூத்துக்குடி வந்திருந்தேன்.

இந்த ஏழெட்டு வருடங்களில் நான் சென்னை செல்லும்போதெல்லாம் லாரன்சையோ அவர் என்னையோ தொடர்புக்கொள்ளாமல் இருந்ததே இல்லை.

இந்த இடைபட்ட காலத்தில் அவருடைய தங்கை திருமணம் முடிந்தது. தபால்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருடைய கணவருக்கு நாகப்பட்டிணத்தை அடுத்திருந்த திருத்துறைபூண்டிக்கு மாற்றலாக நல்லவேளையாக சென்னையில் ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிருந்த கிறித்துவ பள்ளி கன்னியர்களுக்கும் அங்கு ஒரு கிளையிருக்க அவருக்கும் மாற்றல் கிடைத்தது என்று கேள்விப்பட்டிருந்தேன்.

லாரன்சுக்கும் பதவி உயர்வு கிடைத்து ஹைதராபாத் செல்ல அவருடைய தாயார் மெர்சியுடன் சென்னையில் வில்சனுடன் தனியாக..

அதன்பிறகு அந்த குடும்பத்துடனான என்னுடைய நெருக்கம் அற்றுப்போனது..

**

என்னுடைய பேருந்து நாகப்பட்டிணத்தை அடைந்தபோது காலை நான்கு மணி.. அங்கிருந்து திருத்துறைப்புண்டி அரைமணி நேர பயண தூரம் என்று தெரிந்தது.

திருத்துறைபூண்டி பேருந்து நிலையத்தில் இறங்கி லாரன்ஸ் தொலைபேசியில் கூறியிருந்த விலாசத்தை சைக்கிள் ரிக்ஷ¡ ஓட்டுனரிடம் காட்டியபோது, ‘நீங்க தம்பிக்கு யாருங்க? தங்கமான தம்பிங்க அவரு.. திடீர்னு இப்படி செஞ்சிக்குவார்னு யார்ங்க எதிர்பார்த்தா.. ஏறுங்க கொண்டுவிடறேன்..’ என வாயடைத்துபோய் அவரை பார்க்கிறேன்..

கிராமம் என்றும், நகரம் என்றும் சொல்ல முடியாமல் ஒரு ரெண்டுங்கெட்டான் சிற்றூர்..

‘திடீர்னு இப்படி செஞ்சிக்குவார்னு..’ என்ற வார்த்தைகள் என்னையே சுற்றி சுற்றி வந்தன.. நான் கேட்காமலே ரிக்ஷ¡வை மிதித்தவாறே அவர் தொடர்கிறார்.

‘அந்த தம்பி பஜார்ல பெட்டிய கடைய தொறந்தப்போ யார்றா நீ வெளியூர்காரன்னு எல்லாரும் எதுத்துக்கிட்டு நின்னோம்.. ஆனா இந்த ஆறே மாசத்துல எல்லாத்தையும் வளச்சி போட்டுருச்சுங்க.. அந்த மொகத்துல பளிச்சின்னு சிரிப்போட நிக்கறப்போ அதும்மேல யாருக்கும் கோவமே வராதுதாங்க..’

‘என்ன சொல்றீங்க? கடை வச்சிருந்தாரா? இங்கயா?

ரிக்ஷ¡ ஓட்டுனர் திரும்பி பார்க்கிறார். ‘என்னய்யா ஒங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னில்ல நினைச்சேன். அந்த தம்பியோட அக்கா டீச்சர் வீட்லதான அவரும் அவரோட அம்மாவும் இருக்காங்க?’

ஓ! என்று வியக்கிறேன்.

‘தோ.. வீடு வந்துருச்சுங்க.. இறங்கிக்குங்க.’

இறங்கி நான் கையில் வைத்திருந்த இருபது ரூபாய் பணத்தை அவர் கையில் திணிக்கிறேன். ‘ஐயையோ வேணாங்க.’ என்று மறுத்துவிட்டு செல்பவரை வியந்துபோய் பார்க்கிறேன்.

‘டேய்.. இவன் செஞ்சிட்டு போனத பார்த்தியாடா?’ என்ற குரல் கேட்டு திரும்புகிறேன். லாரன்ஸ். இரண்டு நாள் மீசை, தாடியுடனான கவலை தோய்ந்த முகம். மற்றபடி ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் பார்த்த அதே மெலிந்த தேகம். வாயை பொத்திய துவாலையுடன் என்னைப் பார்த்த அந்த முகத்தில் இந்த சாவுக்கே காரணம் நாந்தான்டா என்பதுபோன்ற ஒரு துயரம்..

‘எப்படிறா.. என்னடா ச்சி.. இப்பத்தானடா கல்யாணம் ஆச்சின்னு கேள்விப்பட்டேன்.. இவ்வளவு தூரம் பழகியும் நம்மக்கிட்ட சொல்லாமயே முடிச்சிட்டானேன்னு நான் மாஞ்சிபோய் ஆறுமாசங்கூட ஆகலையேடா.. ஒன்னையும் அவனையும் அடுத்த தடவ பாக்கற்ப்போ சண்டை போடணும் நான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.. அதுக்குள்ளே..’ என்று மேலே தொடரமுடியாமல் நின்றவனை தோளை அணைத்துக்கொண்டு சென்றவருடன் வீட்டுக்குள் செல்கிறார்.

நடுக்கூடத்தில் லாரன்சின் அம்மாவின் மடியில் கிட்த்தப்பட்டிருந்த வில்சனின் உயிரற்ற உடலைப் பார்க்கிறேன். அருகில் பெஞ்சில் திறந்து வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி.. ‘என்னடா இது?’ என்று கலக்கத்துடன் திரும்பி லாரன்சை பார்க்கிறேன்.

‘என்னெ என்ன பண்ண சொல்ற ஜோசப்.. அம்மா அவன மடியிலருந்து எறக்க விட மாட்டேங்கறாங்க.. நான், மெர்சி, மாப்பிள்ளை, அக்கம்பக்கத்துலருக்கறவங்க, ஸ்கூல் கன்னியாஸ்திரிங்கன்னு எல்லாரும் சொல்லி பார்த்துட்டோம். என் மடியில படுத்துக்கிட்டு என்னெ எழுந்து போயி மெர்சிக்கு ஃபோன் செய்யவிடாம இப்படி அநியாயமா போய் சேர்ந்துட்டான்டா.. இந்த பாவிய கோயிலுக்கு கொண்டு போறவரைக்கும் என் மடியிலயே வச்சிக்கறேண்டாங்கறாங்க..’

சற்று நேரம் நின்றுக்கொண்டிருந்துவிட்டு வெளியே வந்து வாசலில் கிடந்த இருக்கையில் நானும் லாரன்சும் அமர்கிறோம்..

அடுத்த அரை மணியில் லாரன்சும் மெள்ள மெள்ள அதுவரை நடந்ததை கூறுகிறார்.

‘நானும் மெட்றாஸ்லருந்து போனது வில்சனுக்கு தோதா போயிருச்சி ஜோசப். அவம்பாட்டுக்கும் இன்னும் ஜாஸ்தியா ஊர் சுத்த ரம்பிச்சிருக்கான். அப்போ ஒரு பொண்ணெ பாத்து, பழக ஆரம்பிச்சி.. அவங்க நடுவுல தப்பு நடந்துபோயிருக்கு. அந்த பொண்ணு வயித்துல பிள்ளையோட நிக்க.. என்ன பண்றதுன்னு தெரியாம அப்பத்தான் எனக்கு ஃபோன் செஞ்சி சொன்னான். நான் பதறிப்போயி ஓடிவந்தேன்.. ரெண்டு பேருக்கும் கல்யாணத்த செஞ்சி வச்சிரலாம்னுதான் நெனச்சேன். ஆனா அம்மாவுக்கு அந்த பொண்ண சுத்தமா பிடிக்கலடா..’

‘ஏன்டா?’ என்கிறேன்..

‘அது ஒரு தலித் பொண்ணுடா.. சேரியில இருந்துருக்காங்க.’

நான் என்ன சொல்வதென தெரியாமல் அவரையே பார்க்கிறேன்.

‘நீ ஏன் இப்படி பாக்கறேங்கறது புரியுது.. ஆனா பிடிவாதமா நின்ன அம்மாவ ஒன்னும் பண்ண முடியல. நாமளும் எம்.பி.சி தானமா.. நாமளேன்னு இப்படி நினைக்கலாமான்னு எவ்வளவோ சொல்லிபாத்தேன். டேய்.. நீ எதையாச்சி சொல்லி சப்பைக் கட்டாத.. நம்மளையும் அந்த சேரி பொண்ணையும் ஒப்பிட்டு பேசாதன்னு சொல்லிட்டாங்க. நான் சரின்னு சொல்லி நம்ம பங்கு சாமியார்கிட்ட போயி பேசினேன். அவர் ஒங்க தம்பியா இப்படி செஞ்சிட்டான்.. ஒங்கப்பாவுக்கு எவ்வளவு தெய்வ பக்தி.. வரச்சொல்லுங்க பேசி பாக்கேன்னார். ஆனா என்ன சொன்னாரோ தெரியலை வில்சன் அவரையே அடிச்சிட்டு வந்த கையோட என்னையும் அடிக்க வந்துட்டான். நானும் இனி பேசி பிரயோசனமில்லேன்னு நினைச்சி திரும்பி போய்ட்டேன். அவன் அந்த பொண்ண கூட்டிக்கிட்டு போயி ரிஜிஸ்டர் கல்யாணம் செஞ்சிக்கிட்டிருக்கான். அந்த பொண்ணு வீட்லயும் சேத்துக்கல.. தனியா இருந்து குடும்பம் நடத்தியிருக்கான். மெர்சி இத கேள்விபட்டு போயி அம்மாவ கூட்டிக்கிட்டு இங்க வந்துட்டு எனக்கு ஃபோன் செஞ்சா. நானும் அதுவும் நல்லதுக்குத்தான்னு இருந்துட்டேன்.’

இவ்வளவும் நடந்திருக்கிறதா என்று மலைத்து போகிறேன். திருமணம் நடந்த விஷயத்தை மட்டும் வேறொரு நண்பர் வழியாக கேள்விப்பட்டிருந்த நான் இந்த ஆறுமாதமாக நமக்கு சொல்லாமயே கல்யாணம் முடிச்சிருக்கான் பார்.. இவ்வளவு நாள் பழகுனதுக்கு இதான் அர்த்தம்போலருக்கு என்று மருகிக்கொண்டு இருந்திருந்தேன்.

'ஆனாலும் அம்மாவ விட்டுட்டு அவனால இருக்க முடியல. மெர்சி வீட்டுக்கு ஃபோன் செஞ்சி அம்மாக்கூட பேசணும் சொல்லியிருக்கான். ஆனா அம்மா ஒத்துக்கல போலருக்கு. நீ அந்த பொண்ண விட்டுட்டு வந்தாத்தான் உங்கூட பேசுவேன்னு சொல்லியிருக்காங்க.. நீ ஒங்க அம்மாதான் முக்கியம்னு போனேன்னா திரும்பி வராத, என்னெ மறந்துருன்னுருக்குன்னு அந்த பொண்ணு.. அம்மாவா பொஞ்சாதியான்னு வில்சன் திண்டாடியிருக்கான். அப்புறம் என்ன நெனச்சானோ தெரியல பொஞ்சாதிக்கிட்டகூட சொல்லிக்காம பஸ் பிடிச்சி இங்க வந்துருக்கான். இங்க வந்தவனுக்கு அம்மா பிடிவாதத்த தட்டமுடியாம மெர்சிதான் ஒரு பெட்டிக் கடைய வச்சிக்குடுத்து இந்த ஆறுமாசமா இங்கயே பிடிச்சி வச்சிருக்கா. ஆரம்பத்துல வில்சன் சந்தோசமாத்தான் இருந்துருக்கான். ஆனா ரெண்டு நாளைக்கு முன்னால அவனுக்கு மெட்றாஸ்ல குழந்த பிறந்த நியூஸ் வந்திருக்கு.. போய்ட்டு ஒரு வாரத்துல வந்துடறேன்னு கெஞ்சியிருக்கான். அம்மா நீ போறதுன்னா இந்த அம்மா இல்லேன்னுட்டு போன்னு சொல்லியிருக்காங்க. மெர்சியும், மாப்ளையும் அவன் போய்ட்டு வரட்டுமேன்னு சொல்லியிருக்காங்க. அம்மா பிடிவாதமா முடியவே முடியாதுன்னு நிக்க வில்சன் என்ன நினைச்சானோ தெரியல.. நேத்து கடைக்கு போற வழியில பயிருக்கு போடற உரத்த வாங்கி வச்சிக்கிட்டு பகல் வீட்டுக்கு சாப்ட வந்த எடத்துல குடிச்சிட்டு படுத்துருக்கான். கொஞ்ச நேரத்துல வாய்ல நொற தள்ளிக்கிட்டு வந்து அம்மா மடியில படுத்துக்கிட்டு நான் தப்பு பண்ணிட்டம்மான்னு கதறியிருக்கான்.. டேய் என் மடியிலருந்து எழுந்துருடா நான் மெர்சிக்கு ஃபோன் பண்ணட்டும்னு அம்மா கதறியிருக்காங்க. அவன் விடவேயில்ல போலருக்கு. அப்படியே அம்மா மடியிலயே துடிதுடிச்சி செத்து போயிருக்கான்டா.. அதான் அம்மா அவன மடியிலயே போட்டுக்கிட்டு ராத்திரியெல்லாம்..

நேத்து சாயந்தரம் ஆறு மணிக்கு எனக்கு ஃபோன் வந்து அரக்கபரக்க ஓடி வரேன். நல்ல வேளை ஆஃபீஸ் வேலையா ஒரு வாரமா மெட்றாஸ்லதான்.. இல்லன்னா இப்பக்கூட வந்திருக்க முடியுமான்னு...’ லாரன்ஸ் துவாலையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு குலுங்குகிறார். நான் அவரை எப்படி தேற்றுவதென தெரியாமல் சிலையாக அமர்ந்திருகிறேன்..

நேரம் ஆக, ஆக பஜாரில் கடைவைத்திருந்தவர்களின் கூட்டம்... மாலையும் கையுமாக..

அதில் ஒரு சிறுவன், ‘அண்ணா, விதி கேசட்ட எத்தன தடவ கேட்டாலும் போடுவியேண்ணா.. இப்படி அநியாயமா போய்ட்டியே..’ என்று கதறுவதைப் பார்க்கிறேன்..

வசனங்களுக்காகவே பரபரப்புடன் பேசப்பட்ட விதி படத்தின் ஒலிநாடா மிகவும் பிரபலாமாகவிருந்த காலம் அது..

மாலையானதும் வில்சனை வலுக்கட்டாயமாக அவனுடைய தாயாரின் மடியிலிருந்து எடுத்து குளிப்பாட்டி அவனுக்கு மிகவும் பிடித்த ஆடையையுடுத்தி சவப்பெட்டியில் கிடத்துகிறார்கள்..

அடுத்த அரைமணியில் கோவிலை நோக்கி அவனுடைய இறுதிப்பயணம் அந்த தெருவே திரண்டு வந்து பங்கெடுக்க புறப்படுகிறது..

ஆனால் யாருக்குமே அவனுடைய மனைவிக்கு தகவலளிக்கவேண்டுமென்று தோன்றவில்லையே என்று நினைத்துப் பார்க்கிறேன்..

அந்த மரணம்.. என் வாழ்வில் என்னை மிகவும் உலுக்கிய மரணங்களில் அதுவும் ஒன்று..

அவன் இருபத்தஞ்சு வருசம் வாழ்ந்த வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என்று இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன்!

அம்மாவா மனைவியா என்று வந்தபோது அம்மா என்று தேடி வந்த தன் மகனை அவனுக்கு பிறந்த பிள்ளையை பார்க்கக்கூட அனுப்பாத அந்த தாய்பாசத்தை நினைத்து கோபப்படுவதா..

பிறந்ததுமே அப்பாவை பறிகொடுத்து நின்ற அந்த பச்சிளம் குழந்தைய நினைத்து வருந்துவதா..

தன் தம்பியின் மரணத்துக்கு தானும் ஒரு பொறுப்போ என்ற வேதனையில் திருமணமே புரிந்துக்கொள்ளாமல் தனியாளாய்போனார் லாரன்ஸ்..

அதன்பிறகு அவரை இருமுறை சென்னையில்வைத்து சந்தித்ததோடு அந்த குடும்பத்துடனான தொடர்பு அற்றுப்போனது..

பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

*******

13 ஜூலை 2006

மரணம் - ஒரு ஃப்ளாஷ்பேக்

நான் அப்போது தஞ்சையில் பணிபுரிந்துக்கொண்டிருந்தேன்.

ஒருநாள் நால் அலுவலகத்தை சென்றடைந்து என்னுடைய அனுதின அலுவலில் ஆழ்ந்துப் போயிருந்த நேரம்.

வீட்டிலிருந்து தொலைப்பேசி. எதிர் முனையில் பதற்றத்துடன் என் மனைவி.

என்ன என்றேன்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஒரு பேய் காத்தோட மழையடிச்சி வீட்டுக்குள்ளாற எல்லாம் மழைதண்ணி வந்திருச்சிங்க. தூளியில படுத்திருந்த பாப்பாவும் சுத்தமா நனைஞ்சி போயிட்டா. பிள்ளை குளிர்ல நடுங்குது. நானும் அம்மாவும் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டிருக்கோம். உடனே புறப்பட்டு வாங்க.. சீக்கிரம்.’

கையிலிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு எதிர் கடையிலிருந்த நண்பரின் வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடுகிறேன்.

என்னுடைய வங்கியிருந்த பகுதியிலும் சரி, என் வீடு இருந்த பாதையிலும் சரி எங்கும் மழையின் சுவடுகள் இல்லை. ஆனால் என்னுடைய வீடு இருந்த பகுதியில் மட்டும் மழை பெய்திருந்தது.. ..

வீட்டையடைந்தபோது என்னுடைய பத்துநாள் மகளின் உடம்பு கொதித்து போயிருக்கிறது. என் மனைவி அழுத கோலத்தில். மூத்தவள் அந்த களேபரத்திலும் ஆழ்ந்த உறக்கத்தில்..

எனக்கு முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை.

சிறிது நேர ஆலோசனைக்குப் பிறகு என் மூத்த மகளை என்னுடைய மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு என் மனைவியை அழைத்துக்கொண்டு இளைய மகளை மருத்துவமனைக்கு எடுத்துக்கொகொண்டு ஓடுகிறேன்..

மருத்துவமனையில் என் மகளுடைய பிரசவம் பார்த்த மருத்துவரே இருந்ததால் உடனே அவளை மருத்துவமனையில் சேர்த்துக்கொண்டனர்..

இரண்டு மணி நேர போராட்டம்.

நானும் என் மனைவியும் மருத்துவமனை வராந்தாவில் தவிப்புடன் காத்திருக்கிறோம்..

அவசரப் பிரிவு பகுதியிலிருந்த என் மகளை இரு தாதிமார்கள் கொண்டுவந்து வேறொரு அறையில் கிடத்தியதைப் பார்த்துவிட்டு ஓடிச் செல்கிறோம்..

யாராவது ஒருத்தர் மட்டும் வந்து பார்க்கலாம் என்கின்றனர்.

‘என்னால முடியாதுங்க. நீங்க போய் பார்த்துட்டு வாங்க.’ என்கிறார் என் மனைவி.

நான் சென்று பார்க்கிறேன். அமைதியாய், ஒரு மென்மையான பூவைப்போல் கிடக்கிறாள் என் மகள். மேல் மூச்சு வாங்குகிறது. பஞ்சு போன்ற கைகளில் குளுக்கோஸ் ஊசி குத்திய இடமெல்லாம் சிவந்து போய்..

ஜுரத்தின் உச்சத் தாக்கத்தில் முகமெல்லாம் ரத்தச் சிவப்பாய்.. நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்களை லேசாய் திறந்து வலப்புறம் திரும்பி திறந்திருந்த ஜன்னல் வழியாக யாரையோ அல்லது எதையோ பாக்கிறாள். அடுத்த நொடி சந்தோஷத்துடன் ஒரு அழகிய புன்னகை அவளுடைய உதடுகளில்.. முகமெல்லாம் விளக்கொளிபோல் பளீரென்று வெளிச்சம் தோன்றி மறைகிறது..

நான் அதிசயத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே கண்கள் இரண்டும் மூடிக்கொள்கின்றன... சுவாசம் அடங்கிப் போகிறது..

பிறந்து சரியாய் பத்தாம் நாள் இந்த உலகை விட்டே போய்விட்டாள் என் மகள்..

அந்தப் பிறவியின் பொருள்தான் என்ன என்று அர்த்தம் புரியாமல்...

இதை நான் எப்படிப் போய் வெளியே பதற்றத்துடன் காத்திருக்கும் என் மனைவியிடம் அறிவிக்கப்போகிறேன் என்று மலைத்துப் போய் நிற்கிறேன்.

திரும்பிப் பார்க்கிறேன். இதை எதிர்பார்த்திருந்ததுபோல் என்னுடைய மருத்துவர் வருகிறார். குழந்தையைக் குனிந்து பார்த்துவிட்டு என்னைப் பார்க்கிறார். என் கண்களில் ததும்பி நின்ற கண்ணீரினூடே.. ‘How did this happen, Doctor?’ என்கிறேன்..

‘Sorry Mr.Joseph, It appears to be brain fever. Her fragile brain has already been damaged due to the high fever. I am sorry.’ என்றவாறு மெள்ள வெளியேறுகிறார்.

இதை அறை வாசலில் நின்றவாறு கேட்டுக்கொண்டிருந்த என் மனைவி ‘என்னங்க..’ என்று கண்ணீருடன் ஓடிவருவது தெரிகிறது. அப்படியே அவளை அணைத்துக்கொண்டு ஆறுதலிளிக்கிறேன்..

அதற்குப் பிறகு ஆக வேண்டிய காரியங்களையெல்லாம் எந்திரக் கதியில் செய்து முடிக்கிறேன்.

நண்பர்கள், என்னுடைய வங்கி வாடிக்கையாளர்கள் என நான் முற்றிலும் எதிர்பார்க்காத அளவு கூட்டம் என் வீட்டின் முன்னே ஏதோ ஒரு விஐபியின் மரணம் போல நடந்து முடிகிறது..

*********

08 ஜூலை 2006

கடந்துவந்த பாதை 3 a

அவரும் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டபோதுதான் அடையாளம் தெரிந்தது..

விஜயா!

கணக்குப்பிள்ளை கண்ணையாவின் இரண்டாவது மகள்!

உமா அக்காவின் தங்கை!

நான் திகைத்துப் போய் அமர்ந்திருக்க அந்த பெண் தன்னுடைய வேலையை முடித்துக்கொண்டு வெளியேறினாள்..

சுதாரித்துக்கொண்டு எழுந்த நான், ‘சார் ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன்..’ என்று என்னுடைய அதிகாரியிடம் கூறிவிட்டு அவர் பின்னால் ஓடினேன்..

நான் படிகளை நெருங்குவதற்குள் மின்னலென மறைந்துப் போனவரைக் காணாமல் வெறுத்துப் போய் இறங்கி நடைபாதையில் நின்று நாலா புறமும் பார்த்தேன்.. காணவில்லை..

சரி.. எங்க போயிருவா.. கொஞ்ச நேரம் நிப்போம்.. ஏதாவது கடைக்குள்ளத்தான் போய் ஒளிஞ்சிக்கிட்டிருப்பா என்றுநினைத்தவாறு நின்றேன்..

நான் நினைத்ததுபோலவே நடந்தது..

அவள் ஒரு கடையிலிருந்தவாறு சாலையின் இரு மருங்கிலும் பார்த்துவிட்டு தயக்கத்துடன் வெளியே வர நான் ஒளிந்துக்கொண்டேன்..

பிறகு அவள் சாலையில் இறங்கி நடக்க நான் சற்று தள்ளி அவளை பின் தொடர்ந்தேன்..

எங்களை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு அவளை நெருங்கி, ‘ஏய் விஜயா, நில்லு..’ என்றேன் மெள்ள, ஆதரவாக..

அவள் அப்படியே நின்றாள்.. ‘வேணாம் சூசை.. என்னை விட்டுரு.. ஒன்னும் கேக்காத.. நா அழுதுருவேன்..’

அவளுடைய தோள்கள் குலுங்குவதிலிருந்தே அவள் அழுவது எனக்கு புரிந்தது..

என்னுடைய வீடு என்னுடைய அலுவலகத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் இருந்தது.

‘இங்க பார் விஜயா.. ஒன்னைய இப்படியே போக விட்டுரமாட்டேன்.. நான் ஒரு ரிக்ஷஅ பிடிச்சி குடுக்கேன்.. நீ நம்ம வீட்டுக்கு போ.. நான் ஆபீஸ்ல சொல்லிட்டு ஒடனே வந்திடறேன்.. அதுவரைக்கும் அம்மாகிட்ட பேசிட்டிரு..’ என்று கூறிவிட்டு அவள் மறுப்பை பொருட்படுத்தாமல் ஒரு கை ரிக்ஷ¡வை அழைத்து அவளை அதில் வற்புறுத்தி ஏற்றி என்னுடைய வீட்டு விலாசத்தை ரிக்ஷ¡ இழுப்பவரிடம் கொடுத்து, ‘இவங்கள நான் சொல்ற வீட்லதான் எறக்கி விடணும்.. இடையில இவங்க சொன்னாலும் இறக்க கூடாது.’ என்று கண்டிப்பாய் உத்தரவிட்டு அனுப்பிவைத்துவிட்டு என்னுடைய அலுவலகத்திற்கு திரும்பி, ‘சார் ஒரு அரை நாள் லீவு வேண்டும்.’ என்று கெஞ்சி கூத்தாடி பெற்றுக்கொண்டு வீட்டையடைந்தேன்..

வீட்டு வாசலிலேயே நின்றிருந்த என் அம்மா, ‘எதுக்குடா அந்த பிள்ளைய நம்ம வீட்டுக்கு அனுப்பி வச்சே.. வந்ததுலருந்து அழுதுக்கிட்டே இருக்கு.. நா என்ன கேட்டும் பதில் வரமாட்டேங்குது.. நீயே வந்து கேளு..’ என ‘பாவம்மா அவ.. அவமானத்துல கூனி குறுகி போயிருக்கா.. நான் பேசறேன். நீங்க வாங்க..’ என்றவாறு வீட்டுக்குள் நுழைந்து முன் அறையை பார்த்தேன். அவளை காணவில்லை.

‘அவ எங்க இங்க இருக்கா.. கிச்சன்ல போய் பார்.. அங்க ஒக்காந்து அழுதுகிட்டிருக்கா.’

அடுக்களையில் தரையில் குத்திட்டு, தலைகுனிந்து அமர்ந்திருந்தவளை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று முன் அறையில் அமர்த்தி குடிக்க சூடாக ஒரு காப்பியை கொடுத்தோம். அதன் பிறகு சற்று தெளிந்து  மெள்ள, மெள்ள அழுகையினூடே அவள் கூறியது..

‘அப்பாவுக்கு ஒங்க தாத்தா செத்தது பெரிய அதிர்ச்சியா இருந்தது சூசை.. ஒடனே வீட்டை மாத்திக்கிட்டு போவோம்னு பிடிவாதமா மாத்திக்கிட்டு போனாங்க..  அதுக்கப்புறமும் ஒங்க தாத்தா கனவுல வராங்க, வராங்கன்னு ராத்திரியில புலம்பிக்கிட்டே இருந்தாங்கடா.. அப்புறம் திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியல..  ஒரு நா அவங்க புத்தியே பேதலிச்சி போச்சிரா.. என்ன ஏதுன்னு தெரியாம நாங்க அழுதுக்கிட்டு நின்னப்போ மாசிலாமணிதான் ஒரு ஜோசியர் அப்பாவுக்கு ஏதோ மருந்து, மாயம் பண்ணித்தான் இப்படியாயிருச்சி பரிகாரம் செஞ்சா சரியாப் போயிரும்னு சொன்னான். அம்மாவுக்கும் பாட்டிக்கும் அப்பாவுக்கு எப்படியாவது சரியா போனா போறுங்கற ஆசையில கையிலிருந்த பணத்தையெல்லாம் அந்த மாசிலாமணிக்கிட்டயே குடுத்து அப்பா மேலருக்கற மருந்த எடுத்துரச் சொல்லுரான்னு அனுப்புனாங்க.. அஞ்சாறு மாசம் பணம் தண்ணியா செலவழிஞ்சதுதான் மிச்சம்.. அப்பாவுக்கு சரியே ஆவலை.. அப்புறமா வேற வழியில்லாம ஆஸ்பத்திரியில கொண்டு சேத்தோம்.. அப்பா இன்னும் அங்கதாண்டா..’

நானும் என் அம்மாவும் திகைத்துப்போய் இப்படியும் நடக்குமா என்று அமர்ந்திருந்தோம்..

‘அந்த மாசிலாமணி ஒரு சரியான ஃப்ராடுன்னு தெரிஞ்சப்போ எங்ககிட்டருந்த பணமெல்லாம் காலியாயிருச்சி.. வீட்டு வாடகை கூட குடுக்க முடியாம தடுமாறுனப்பத்தான் உமா அப்பா செஞ்ச வேலைய நாமளே செய்யலாம்டின்னு என்னையும் ஸ்கூல்லருந்து நிறுத்திட்டு அப்பா கணக்கு எழுதிக்கிட்டிருந்த ஒவ்வொரு கடையா ஏறி இறங்குனோம்.. யாருக்குமே எங்க மேல நம்பிக்கை வரலை. அப்பாவுக்கு ரொம்ப தெரிஞ்ச நாலஞ்சு பேர் மட்டும் சரிம்மான்னு நம்ம அப்பா பேர்லருக்கற அனுதாபத்துல குடுத்தாங்க.. உமா அப்பாகூடவே இருந்து பார்த்திருந்ததால கணக்கு நல்லா எழுத வந்துது.. அப்பா மாதிரி இழுத்தடிக்காம சட்டுன்னு முடிச்சி குடுக்க அப்பாகிட்ட முன்ன கணக்கெழுத குடுத்துருந்தவங்க எல்லாம் மறுபடியும் ஒவ்வொருத்தரா வர ஆரம்பிச்சாங்க.. நாங்க மறுபடியும் கொஞ்சம், கொஞ்சமா நல்லா வந்துக்கிட்டிருந்தோம்டா..’

‘அப்படியா.. அப்புறம் ஏண்டி இந்த நிலமை?’ என்றேன். நானும் விஜயாவும் ஒரே வயதொத்தவர் என்பதால் நாங்களிருவருமே சிறுவயதில் சேர்ந்தே படிப்போம், விளையாடுவோம்.. அடா புடா என்றுதான் அழைத்துக்கொள்வோம்.

‘கொஞ்ச நாளைக்கு வீட்டுக்கு வராம இருந்த மாசிலாமணி நாங்க மறுபடியும் நல்லாய்ட்டோம்னு தெரிஞ்சதும் அம்மாக்கிட்ட கெஞ்சி கூத்தாடி மறுபடியும் வந்து ஒட்டிக்கிட்டான். அப்பாவ ஆஸ்பத்திரியில போய் பாக்குறதுக்கு துணையா அவன் இருக்கட்டுமேன்னு அம்மாவும் பாட்டியும் சேத்துக்கிட்டாங்க.. உமாவும் நானும் அவன தள்ளியே வச்சிருந்தோம்.. ஆனா நாளடைவில என்ன மாயம், மந்திரம் செஞ்சானோ உமா அவன்கிட்ட நெருங்கி பழக ஆரம்பிச்சி.. நாங்க கொஞ்சமும் எதிர்பாக்காத நேரத்துல அவங்கூட ஓடிப்போயி கல்யாணம் செஞ்சிக்கிட்டு வந்து நின்னாடா..’

‘அடிப்பாவி.. உமாவா.. சாதுவாட்டம் இருப்பாளே.. அவளா?’ என்ற என் அம்மாவை கண்சாடை செய்து ‘சும்மா இருங்கம்மா’ என்றேன்..

‘அம்மா அவள ஏத்துக்க தயாராத்தான் இருந்தாங்க.. ஆனா பாட்டிதான் இந்த கேடு கெட்டவள வீட்ல சேர்த்தே.. நான் சீம எண்ணெய ஊத்தி எரிச்சுக்குவேன்னு பயங்காட்டி அவள வீட்டுக்குள்ள விடாம.. வெரட்டி.. இப்போ மூனு நாலு வருசமாவுது.. இப்போ பாட்டியும் இல்ல.. அம்மாவும் இல்ல.. நான், ராஜேஸ்வரி, மாலா மட்டும் தனியா ஒரு ரூம்ல.. இப்படியெல்லாம் வேலை செஞ்சி..’ மேலே தொடர முடியாமல் அழுத அவளை எப்படி தேற்றுவதென தெரியாமல் நானு என் அம்மாவும் அமர்ந்திருக்க நேரம் போனதே தெரியவில்லை..

‘சரி.. உமா எங்கருக்கா? இங்கனதானடி இருக்கணும்.. தேடி பாக்கறதுதானே..?’ என்றார் என் அம்மா..

‘அவ இங்கதான் இருக்கா ஆண்ட்டி.. ஆனா.. அந்த மாசிலாமணிய நெனச்சி எங்கள சேர்த்துக்க பயப்படறா.. அவன் ரொம்பவும் மோசமாய்ட்டான்.. பொம்பள சோக்கு.. குடின்னு இல்லாத கெட்ட பழக்கமே இல்லை.. உமாவும் சந்தோஷமா இல்லை.. எங்க கதியும் இப்படி ஆயிருச்சி.. இதெல்லாம் ஒங்கிட்ட சொல்லி கஷ்டப்படுத்த வேணாமேன்னுதான் ஒன்னைய பாத்ததும் ஓடி ஒளிஞ்சேன்..’

இதை எழுதி முடித்தபோதே என் மனம் அவர்களை நினைத்து அங்கலாய்க்கும்போது அவள் எங்களிடம் இதையெல்லாம் விவரித்தபோது..

இப்படி மோசம் போனோமே என்ற ஆதங்கத்தில் அழுத அவளுடைய  முகம் தொடர்ந்து பல தினங்கள் என் கனவில் வந்து என்னை அலைக்கழித்ததை இன்னும் மறக்க முடியவில்லை என்னால்..

‘அடுத்த தடவ நீ ஒங்கப்பாவ பாக்க போகும்போது என்னையும் கூட்டிக்கிட்டு போறியா?’ என்ற என் கேள்விக்கு, ‘இப்பல்லாம் நாங்க அவர போயி பாக்கறதே இல்லைடா.. அவர பார்த்துட்டு வந்தா தொடர்ந்து பல நாள் எனக்கு தூக்கமே வராது.. அப்படி மாறி போயிருக்குது அவர் முகம்.. எங்கப்பான்னா எங்களுக்கு எவ்வளவு உசிருன்னு ஒனக்கு தெரியுமேடா.. நாங்க எப்படிறா அவர இந்த கோலத்துல.. அதான் கடவுள் பாத்துப்பாருன்னு இப்பல்லாம் போறதேயில்லை..’

நான் எத்தனை வற்புறுத்தி கேட்டும் தன்னுடைய வீட்டு விலாசத்தை கூற மறுத்த அவளை அன்று ரிக்ஷ¡வில் ஏற்றிவிட்டு வந்ததுதான், பிறகு பார்க்கவே இல்லை..

எப்படி வாழ்ந்த குடும்பம்.. என்று இப்போது நினைத்தாலும் மாய்ந்துபோகிறேன்..

கண்ணையன் மாமா அவருடைய வாடிக்கையாளர்களுடைய கண்களுக்கு எப்படியோ..

ஆனால் நான் அவருடைய வீட்டுக்கு செல்லும்போதெல்லாம் ‘வாடா கரியா.. கொஞ்சம் எட்டியே நில்லு.. ஒன் கறுப்பு ஒட்டிக்க போவுது..’ என்று வேடிக்கையாக கூறிவிட்டு தள்ளிவிடுவது எனக்கு இன்றும் நினைவிருக்கிறது..

‘ஆம்புள புள்ள இல்லேன்னுதாண்டா நீ ஒரு நா வராட்டியும் அந்த கரியன் எங்க காணம்னு கேட்டுக்கிட்டே இருப்பான்..’ என்ற அவருடயை தாயாரின் பேச்சையும் என்னால் மறக்கவே முடிந்ததில்லை..

கம்பீரமாக கூடத்தில் அமர்ந்திருக்கும் கண்ணையன் மாமா, எப்போதும் பெருமை பொங்கிய முகத்துடன் தெய்வீக களையுடன் வலம் வந்த அவருடைய மனைவி, உமா அக்கா, விஜயா இவர்களையெல்லாம் இப்போதும் நினைத்துக்கொள்கிறேன்..

அந்த குடும்பத்தினர் என் மீது வைத்திருந்த கள்ளங்கபடு இல்லாத அன்பு அப்படிப்பட்டது..

இனியும் வரும்..

07 ஜூலை 2006

கடந்து வந்த பாதை - 3

கணக்குப்பிள்ளை கண்ணையன் மாமா!
(கற்பனைப் பெயர்)

இந்த தொடரின் முதல் பதிவில் என்னுடைய வீடு சாலையிலிருந்து நூறடி உள்வாங்கி இருந்ததெனவும் என் வீட்டை அடைய ஒரு குறுகிய சந்து வழியாக செல்ல வேண்டும் எனவும் கூறியிருந்தேன்

அதற்கு காரணம் எங்களுடைய வீட்டிற்கு முன்னாலிருந்த இரண்டு பெரிய வீடுகள்தான்..

அந்த வீடுகளில் இடப்புறம், அதாவது எங்களுடைய வீட்டிற்கு மேற்கே, இருந்த வீட்டில் குடியிருந்தவர்தான் நம்முடைய இன்றைய கதாநாயகர் கணக்குப்பிள்ளை கண்ணையன்.. வீட்டு உரிமையாளர் வெளியூரில் இருந்ததால் தான்தான் வீட்டு உரிமையாளர் என்பதுபோல் நடந்துக்கொள்வார்.

அந்த காலத்தில், ஏன் கணினி படையெடுத்து இவர்களுடைய பிழைப்பில் மண்ணள்ளி போடும்வரை, இவரைப் போன்ற கணக்குப்பிள்ளைகளுடைய சேவை வணிகர்களுக்கு அத்தியாவசிய தேவைகளுள் ஒன்றாயிருந்தது.

நம்முடைய கணக்குப்பிள்ளை, சிறுவணிகர் பலருக்கும் அவர்களுடைய அன்றாட வரவு செலவுகளை கணக்கிட்டு ஆண்டு இறுதியில் விற்பனை வரித்துறை ஆய்வுக்கு அனுப்பும் கணக்கு புத்தகங்களை தயாரித்து கொடுப்பவர்.

அதாவது இப்போதைய மொழியில் கூறவேண்டுமென்றால் Chartered Accountant..

சொல்லப்போனால்  எல்லா CA க்களுமே ஒருவகையில் glorified கணக்குப்பிள்ளைகள்தானே..

அப்படித்தான் கண்ணையன் மாமாவும்..

நான் படிக்கும் நேரத்தைத் தவிர பெரும்பாலும் இருப்பது கண்ணையன் மாமா வீட்டில்தான்.. அடுத்த வீடு என்பதால் தாத்தாவும் கண்டுக்கொள்ள மாட்டார்.

செக்க செவேல் மேனியில் சட்டையேதும் அணியாமல் நடுக்கூடத்தில் அவருக்கென பிரத்தியேகமாக செய்யப்பட்ட (டேய் பையா, இது பர்மா டீக் வுட்ல செஞ்சதாக்கும்.. என்பார் அடிக்கடி) குறு மேசையில் அமர்ந்து நாள்தோறும் ஒரு தடி புத்தகத்தில் குனிந்து எழுதுவதும் அருகிலிருந்த சிறு, சிறு தாள்களை பார்த்துக்கொள்வதுமாய் இருந்த அவரை பார்க்கும்போதெல்லாம் இவர் என்ன பண்றாருன்னு கேக்க தோணும். ஆனால் அவரிடம் கேட்க தைரியம் வராது..

‘உமா அக்கா.. ஒங்கப்பா என்னத்த எப்ப பார்த்தாலும் எளுதிக்கிட்டேருக்காங்க..?’ என்பேன் அவருடைய மூத்த மகளிடம். உமா அக்காவையும் சேர்த்து அவருக்கு நான்கு பெண்கள்..

ஆண்பிள்ளை இல்லை.. ‘அடுத்தது ஆணா பொறக்கும், ஆணா பொறக்கும்னுதான் பாத்தோம்.. எல்லாமே பொட்டையா போயிருச்சி.. ஹ¥ம்..’ என்று அடிக்கடி அவர்களுடைய வீட்டு பாட்டி (கண்ணையன் மாமாவுடைய தாயார்) புலம்புவதை பார்த்திருக்கிறேன்..

உமா அக்கா பத்தாவது படிச்சிட்டு வீட்டோட இருந்தாங்க.. அவங்களோட மூனு தங்கைகளும் படிச்சிக்கிட்டிருந்தாங்க. அதுல விஜயா என் வயசு. அடுத்தது ராஜேஸ்வரி.. ரெண்டு வயசு சின்னது.. அதுக்கடுத்தது மாலா என்னை விட மூனு வயசு சின்னது..

உமா அக்கா என்னுடைய கேள்விக்கு பதில் தராமல் சிரிக்கும். ‘என்னக்கா சிரிக்கீங்க.. ஒங்கப்பா என்ன செய்யறாங்கன்னு ஒங்களுக்கே தெரியாதாக்கும்.’ என்பேன்..

‘அதில்லடா. ஒனக்கு சொன்னாலும் புரியாதுல்ல.. அதான்..’

எனக்கு ரோஷம் பொத்துக்கிட்டு வரும்.. ‘என்னக்கா அப்படி சொல்லிட்டீங்க? நான் எட்டாம்ப்பு படிக்கேன்.. கணக்குல புலியாக்கும்.. ஒங்கப்பா கணக்குதான போட்டுக்கிட்டுருக்கார்..’ என்பேன் பிடிவாதமாக..

‘அப்படித்தான் வச்சுக்கயேன்..’ என்றவாறு சிரித்து மழுப்பிவிடுவார் உமா அக்கா..

அவர் என்ன செய்தாரோ.. ஆனால் அவரைச் சந்திப்பதற்கு நாள் முழுவது ட்கள் வந்துக்கொண்டே இருப்பார்கள்..

அவர்களை வீட்டு வாசலில் இருந்த திண்ணையில் அமர்த்திவிட்டு உள்ளே வந்து அவரிடம் தெரிவிக்க என் வயதொத்த ஒரு சிறுவனை வைத்திருந்தார். அவன் பெயர் மாசிலாமணி..

என்னுடந்தான் படித்துக்கொண்டிருந்தான். அப்பா இல்லை.. அம்மா இட்லி சுட்டு விற்பார்.. படிச்சது போதும் என்று நினைத்தார்களோ என்னவோ திடீரென்று ஒருநாள் அவன் பள்ளிக்கு வருவதை நிறுத்திவிட்டான்..

அப்புறம்தான் தெரிந்தது கண்ணையன் மாமா வீட்டில் வேலை செய்கிறான் என்பது..

அவர் வீட்டு வாசலில் எங்களுடைய வீட்டிலிருந்ததைப் போலவே இரண்டு பெரிய திண்ணைகள் இருந்தன. அதில் கண்ணையன் மாமாவை காண வருவோரை இருத்திவைப்பான் மாசிலாமணி..

பிறகு வீட்டிற்குள் வந்து இன்னின்னார் காத்திருப்பதாக கூறுவான்..

மாமா சலிப்புடன், ‘சரிடா.. போய் ‘இன்னாரை’ அனுப்பு என்பார்.’ அவன் போய் அவரை மட்டும் அழைத்து வருவான்.

அவர் வந்தமர்ந்ததும் அவருடைய கணக்கு வழக்குகளில் மாமா கண்ட நிறை, குறைகளை புத்தகத்தையோ அல்லது அவர் அடிக்கடி refer செய்யும் சிறு தாள்களையோ (அவை எல்லாம் பில் புத்தகங்கள் என்பது பல மாதங்கள் கழித்து உமா அக்காவின் தங்கை விஜயா சொல்லித்தான் எனக்கு விளங்கியது) பார்க்காமல் சரளமாக மளமளவென்று எடுத்துரைப்பார். வந்திருப்பவர் அட.. எப்படிய்யா என்று வியந்துபோய்விடுவார்.

‘சரி இன்னும் ரெண்டு நாளைல ஒங்க கணக்கு ரெடியாயிரும்.. ஒரு நூறு ரூபாய உமாகிட்ட குடுத்துட்டு போங்க.’ என்பார்..

வந்தவர்.. ‘ஐயா இதுவரைக்கும்..--------- குடுத்துருக்கேனே.. மீதிய கணக்க முடிச்சி குடுத்துட்டு...’ என்பதுபோல் இழுப்பார். மாமா உடனே சிரித்துக்கொண்டு.. ‘எனக்கு தெரியாமயா இருக்கு.. நீர் பண்ணி வச்சிருக்கற தில்லுமுல்லுவையெல்லாம் சரி செய்ய வேணாமாய்யா.. அதுக்குத்தான்..’ என்பார்..

அவரும் தன் தலைவிதியை நொந்துக்கொண்டு முனகியவாறே கூடத்தின் வேறொரு மூலையில் இருந்த குறுமேசைக்கு முன் அமர்ந்திருக்கும் உமா அக்காவிடம் பணத்தை கொடுத்துவிட்டு செல்வார்.. உமா அக்கா உடனே ஒரு நோட்டு புத்தகத்தைப் புரட்டி அவர் கொடுத்த பணத்தை குறித்துக்கொள்வார்..

இது நாள் தவறாமல் நடக்கும்.. வந்து செல்லும் ஆட்கள்தான் மாறுபடுவர்.. மாமாவின் பேச்சென்னவோ ஒரே போல்தான் எனக்கு தோணும்.. ஆனாலும் வருபவர்களெல்லோரும் வியப்பில் வாய் திறந்திருப்பதுகூட தெரியாமல் அவர் கூறுவதையே கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பர். இறுதியில் அவர் பணம் கேட்டதும் அவர்களுடைய முகம் சுருங்கிப் போய்விடும். இருப்பினும் வேறு வழியில்லாமல் அவர் கேட்டதை உமா அக்காவிடம் கொடுத்துவிட்டு முனுமுனுத்தவாறே செல்வதை பார்த்திருக்கிறேன்..

எனக்கு ஒன்றும் விளங்காவிட்டாலும் மாமவும் அவர்களும் பேசுவதை வாய்க்குள் ஈ போவது தெரியாமல் பார்த்துக்கொண்டிருப்பேன்..

இருட்டியதும் உமா அக்கா தன்னிடமிருந்த பணத்தையெல்லாம் எண்ணி குறித்துவைத்திருந்த நோட்டுப்புத்தகத்துடன் சேர்த்து அவர்கள் வீட்டிலிருந்த ஒரு மர பீரோவில் வைத்து பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக்கொள்வார்..

சரி நாடகம் முடிந்தது என்று நானும் எழுந்து சென்றுவிடுவேன்..

இப்படியே தினமும் நடக்கும்..

என்னுடைய வீட்டில் தாத்தா கூறியபடிதான் சமையல் நடக்கும்.. என்றைக்கு என்ன சமைக்கலாம், என்றைக்கு மீன், என்றைக்கு கறி என்பதிலெல்லாம் தாத்தா வைத்ததுதான் சட்டம்..

வாரத்தில் ஒரு நாள் மீன்.. ஞாயிறானால் ஆட்டுக்கறி.. மற்ற நாட்களில் ப்யூர் வெஜிடேரியன்.. தினமும் உப்பு சப்பில்லாத காய்கறிகளைத் தின்று நாக்கு செத்துவிடும்..

ஆனால் கண்ணையன் மாமா வீட்டில் தினமும் நான் - வெஜிடேரியந்தான்..

மாமாவின் மனைவி கமலா மாமி சூப்பரான குக்.. அவங்க கைமணம் திண்ணைல ஒக்காந்திருக்கறவங்களையே அசத்தும்..

மாமிக்கு தாராள மனசு.. ஆறு பேர் அடங்கிய குடும்பத்துக்கு பத்து பேர் சாப்பிடறா மாதிரி செஞ்சிருவாங்க.. மீந்துதானே போவும்..? ராத்திரி படுக்க போறதுக்கு முன்னால மீந்திருக்கற அவ்வளவையும் கூசாம ரோட்லருக்கற குப்பைத்தொட்டியில கொண்டு கொட்டிருவாங்க.. ரோட்லருக்கற நாய், பன்றி என எல்லா காலநடைகளுக்கும் தினமும் விருந்து சாப்பாடு அவங்க புண்ணியத்துல..

‘அடிப்பாவி இப்படி எல்லாத்தையும் வீணாக்குறயே.. எம்புள்ள சம்பாதிக்கறதெல்லாத்தையும் தின்னே தீத்துருவ போலருக்கேடி..’என்று புலம்பும் மாமியாரை, ‘ஏ கெளவி வாய மூடிக்கிட்டு இருக்கறதானா இரி.. இல்லையா ஊர பாக்க போய் சேர்.’ என்பார் மாமி நிர்த்தாட்சண்யமாக..

மாமா தினந்தோறும் மாசிலாமணி வாங்கி வரும் பாட்டில்களிலிருந்த கலர், கலர் சர்பத்தை அருந்திவிட்டு மணக்க, மணக்க வெற்றிலை அணிந்துக்கொண்டு சிறிது நேரம் பிள்ளைகள் புடைசூழ அமர்ந்து ஜோக் அடிப்பார்..

மாமியும் நெற்றியில் ஒரு ரூபாய் நாணய சைசில் குங்குமப் பொட்டும் வீட்டுக்கே பட்டு புடவையுமாக தினமும் மாலையானால் தலை நிறைய பூவுடன் வலம் வருவார்..

இப்படித்தான் சென்றது அவர்களுடைய வாழ்க்கை..

நான் எட்டாவது வகுப்பின் முடிவில் காட்பாடி சென்றுவிட்டேன். அவர்களுடனான தொடர்பு அறுந்துப் போயிற்று..

நான் பள்ளி படிப்பு முடிந்து திரும்பி வந்தபோது அந்த வீடு விலைபோயிருந்தது..

கண்ணையன் மாமா குடும்பத்தினரைக் காணவில்லை..

என்னுடைய தாத்தாவும் அவரும் எதிர் துருவங்களாயிருந்தும் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.

என்னுடைய தாத்தாவின் திடீர் மரணம் அவரை மனதளவில் மிகவும் பாதித்ததாகவும் ஆகவே அந்த வீட்டில் இருக்க பிடிக்காமல் மாறிச் சென்றுவிட்டதாகவும் என் அம்மா தெரிவித்தார்..

அதன் பிறகும் எப்போதாவது மாசிலாமணியை பார்ப்பேன்..

கண்ணையன் மாமாவைப் பற்றி கேட்டால்.. ‘ஒன் வேலையை பாத்துக்கிட்டு போடா’ என்று கூறிவிட்டு சென்றுவிடுவான்..

அவனுடைய போக்கிலும் நிறைய மாறுதல் தெரிந்தது. பாக்கெட்டில் எப்போதும் பணம் புரண்டது.. கையில் வாட்ச்.. கூலிங் கண்ணாடி என்று ஜொலித்ததைப் பார்த்தபோது எனக்கு சந்தேகம் ஏற்பட்டாலும் அவனை கேட்பதால் பயனில்லை என்று அவனை எதிரில் கண்டால் ஒதுங்கி சென்றுவிடுவேன்..

பத்து வருடங்கள்..

நான் என்னுடைய வங்கியின் சென்னை புரசைவாக்கம் கிளையில் குமாஸ்தாவாக  பணிபுரிந்துக்கொண்டிருந்த நேரம்.

அப்போதெல்லாம் அலுவலகங்களிலிருந்த தொலைப்பேசிகளை முக்கியமாக ஒலிவாங்கியை வாசனை திரவியத்தில் நனைத்த பஞ்சால் துடைத்து செல்லவே நிறைய ஏஜென்சிகள் இருந்தன.. ஒரு தொலைப்பேசிக்கு ஐந்திலிருந்து பத்து ரூபாய் வரை வசூலிப்பார்கள். அப்படிப்பட்ட வேலையை செய்வதற்கு பெரும்பாலும் இளம் பெண்களையே நியமித்திருந்தனர்..

அப்படியொரு நாள் என்னுடைய கிளையிலிருந்த மூன்று தொலைப்பேசிகளை துடைத்து சுத்தம் செய்ய வந்திருந்த இளம் பெண்ணைப் பார்த்து திகைத்துப் போனேன்..

எனக்கு நன்கு பரிச்சயமாயிருந்த முகம்.. பெயர் நினைவுக்கு வரவில்லை...

அவரையே பார்த்தேன்.. எங்கோ பார்த்திருப்பதுபோல் தெரிந்தது..

அவரும் என்னைப் பார்த்துவிட்டு சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டபோதுதான் அடையாளம் தெரிந்தது..

விஜயா!

கணக்குப்பிள்ளை கண்ணையா மாமாவின் இரண்டாவது மகள்!

உமா அக்காவின் தங்கை!

நாளை நிறைவு பெறும்..

01 ஜூலை 2006

கடந்து வந்த பாதை- 2

அப்பளப்பூ சிறுவன் அண்ணாசாமி
(கற்பனைப் பெயர்)

நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்த சமயம்.

எங்களுடைய வீட்டுக்கு தினமும் மாலை நேரங்களில் என் வயதையொத்த ஒரு சிறுவன் வீட்டிற்கு அப்பளம் விற்க வருவான்.

என்னுடைய தாத்தாவுக்கு அஞ்சி திண்ணையை விட்டு தள்ளியே நிற்பான். எனக்கு அவனை மிகவும் பிடிக்கும். ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் பிடிக்கும்.

என்னுடைய பள்ளிக்கு செல்லும் பாதையில்தான் அவனுடைய வீடும் இருந்தது. ஒரு நாள் அவனுடைய வீட்டைக் கடக்கையில் அவனும் தலையில் புத்தக பையை மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து இறங்கியதைப் பார்த்து நின்று, ‘டேய் நீ எந்த ஸ்கூல்? எத்தனாம்ப்பு?’ என்றேன்.

அவன் என் வயதையொத்தவன் என்றாலும் என்னை விட இரண்டு வகுப்புகள் கீழே...

அவனுடைய வீடிருந்த அதே தெருவில் இருந்த ஒரு மாநகராட்சி பள்ளியில் படித்துக்கொண்டிருப்பதாக கூற அன்றிலிருந்து நான் அவன் வீட்டிலிருந்து இறங்கும் அதே நேரத்தில் அங்கு செல்வதில் குறியாயிருந்தேன்.

ஆனால் நான் என் சகோதரர்களுடன் தான் செல்லவேண்டும் என்பது என்னுடைய தாத்தாவின் நியதிகளுள் ஒன்று. எனக்கு மட்டுமல்ல என் சகோதரர்களுக்கும் தாத்தாவுடைய நியதியை மீறினால் என்ன தண்டனை என்பது நன்றாகவே தெரிந்திருந்ததால் அதை மீற துணியமாட்டோம்.

ஒவ்வொரு நியதி மீறலுக்கும் இரண்டு நிமிடம் என்று ஒன்றாக சேர்த்து வார இறுதியில் சனிக்கிழமை உச்சி வெயிலில் முற்றத்திலிருந்த கடப்பைக் கல் தரையில் முட்டியிட்டு இருக்க வேண்டும்..

அதே தவறை தொடர்ந்து செய்தால் தரையில் கல் உப்பை பரப்பி அதன் மேல் முட்டியிடவேண்டும்..

கால் முட்டி கொப்பளித்துப் போய்விடும். தாத்தாவை எதிர்த்து பேச வீட்டிலிருக்கும் பெரியவர்களுக்கே தைரியமிருக்காது. இந்த நிலையில் எங்களைப் போன்ற சிண்டுகளுக்கு என்ன செய்ய இயலும்?

ஆகவே அவன் அப்பளம் விற்க வரும்போது தாத்தாவின் முதுகுக்கு பின்னால் நின்றுக்கொண்டு அவனைப் பார்த்து புன்னகை செய்வதோடு எங்களுடைய நட்பு நின்று போனது. ஆனால் அதற்கு ஈடு செய்யும் வகையில் அவனிடமிருந்து அப்பளம் வாங்க என்னுடைய அம்மாச்சியை நச்சரிப்பேன். ‘எலேய் நேத்துதான வாங்குனோம்? தெனமுமா வாங்க முடியும்?’ என்ற அம்மாச்சியை கெஞ்சி கூத்தாடி தினமும் பத்து நயா பைசாவுக்காவது வாங்க வைத்துவிடுவேன். (பத்து நயா பைசா என்பது அப்போது எனக்கு பெரிய பணம்!! இருபத்தைந்து பைசாவுக்கு நான்கு உள்ளங்கையளவு வெங்காய பஜ்ஜி, ஒரு காப்பி குடிக்க முடிந்த காலம் அது!)

அத்துடன் அவன் கொண்டுவரும் குட்டி, குட்டியான அப்பளத்தை (அப்பளப்பூ என்பான், கேட்டால்) எப்படி செய்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆசை.

ஒருமுறை சனிக்கிழமை பகல் என்னுடைய தாத்தா உறங்கும்வரை காத்திருந்துவிட்டு ('உலகம் முடியப் போவுது தாத்தா' என்றாலும் 'இருலே ஒரு மணி நேரம் தூக்கம் போட்டுட்டு வந்துடறேன்' என்பார். அந்த அளவுக்கு சரியாக மதியம் 12.30 உண்டு முடித்தால் பிற்பகல் 2.00 மணி வரை கண்டிப்பாய் உறங்க வேண்டும் அவருக்கு) அவனுடைய வீட்டுக்கு ஓட்டமும் நடையுமாய் சென்றேன்.

அப்போதுதான் தெரிந்தது அவனுடைய குடும்ப நிலைமை. பாவமாக இருந்தது.

அப்பா ஒரு ஓட்டை ஒடசல் தையல் மிஷினை மிதித்துக்கொண்டிருந்தார். ஈர அப்பள பூக்களை அவனுடைய சித்தி உருட்டி, உருட்டி கொடுக்க என்னுடைய நண்பன் முற்றத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த கிழிந்த பெட்ஷீட்டில் ஒரு தட்டில் கொண்டு போய் வைத்துக்கொண்டிருந்தான்.

என்னைப் பார்த்ததும் ஒரு ஈர அப்பள பூவை எனக்கு கொண்டு வந்து கொடுக்க நான் ஆசையோடு வாங்கி வாயில் வைக்க லேசான சோடா மாவு கலந்து உளுந்தம்மாவு மற்றும் உப்பின் ருசி நாக்கைத் தாக்கியது இப்போதும் நினைவிருக்கிறது. ஈர மாவின் ருசி பொறித்த அப்பளத்தின் ருசியிலிருந்து மாறுபட்டிருந்ததையும் உணர முடிந்தது.

அவன் அப்பாவிடம் சொல்லிக்கொண்டு வர நானும் அவனும் வீட்டின் பின்பக்கமிருந்த ஒரு பொட்டல் தோட்டத்திலமர்ந்து பேசிக்கொண்டிருந்ததும் என் மனதில் இப்போதும் நிழலாக தெரிகிறது..

அவனுடைய தாயார் அவனுடைய சிறு வயதிலேயே இறந்துவிட காச நோயாளியான அப்பா இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டாராம். சித்திக்கு பிறந்ததோ ஐந்து குழந்தைகள்.. அதில் நான்கு பெண்கள்..

ஆனால் அந்த பிள்ளைகள் யாருமே அப்பள வேலையில் ஈடுபட்டிருந்ததாய் தெரியவில்லை. எல்லாமே என் நண்பந்தான். அதனால்தான் பள்ளியில் சேர இரண்டு வருடங்கள் தாமதமாயிருந்தது. இதை என்னிடம் விவரித்தபோதும் கூட அவன் உதடுகளில் ஒரு புன்னகை இருந்ததை என்னால் மறக்க முடியவில்லை.. சித்தியின் கொடுமையை அவன் ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை..

என்னையும் அவனையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் அவனுடைய நிலமை என்னை என்னவோ செய்ய நானும் அவனும் நெருங்கிய நண்பர்களாகிப் போனோம்.

நான் எட்டாவது முடித்ததும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக என்னை காட்பாடி போர்டிங் பள்ளியில் சேர்க்க அவனுடனான தொடர்பு விட்டுப்போனது.

நான் பள்ளி படிப்பு முடிந்து திரும்பி வந்தபோது அவனிருந்த வீடு பூட்டி கிடக்க.. அவனைப் பற்றி அண்டை வீட்டில் விசாரித்தும் பயனில்லாமல் போனது.

அதன் பிறகு பத்து வருடங்கள்..

நான் வங்கியில் குமாஸ்தாவாக பணியில் சேர்ந்தபிறகு அவனை திடீரென்று சாலையில் வைத்து சந்திக்க நேர்ந்தது..

ஆளே மாறிப்போயிருந்தான்.

‘எப்படிறாருக்கே..?’ என்ற என்னுடைய கேள்விக்கு அவனிடமிருந்து பதிலாக வந்தது அவனுடைய ட்ரேட் மார்க் பளிச் புன்னகை.

கிழிந்த அரைக்கால் சட்டை, கசங்கிய சட்டை.. வாராத தலை என்று அவனைக் கண்ட உருவத்துக்கும் இப்போது இளைஞனாய் என் முன்னே நின்ற உருவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை..

அவனை இழுத்துக்கொண்டு டவுட்டன் கார்னரில் இருந்த ரெஸ்டாரண்டுக்குள் நுழைந்தேன்..

நேரம் போனதே தெரியாமல் அவன் பேசுவதைக் கேட்க ஏதோ சினிமா பார்ப்பதுபோலிருந்தது எனக்கு..

அவனுடைய வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றம் ஏற்பட்டிருந்தது..!

படிப்பில் அவன் படுசுட்டி என்று முன்பே கேள்விப்பட்டிருந்தேன். மாநகராட்சி பள்ளியில் படித்தும் பதினோராவது வகுப்பில் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களிலிலேயே முதலாவதாக வந்திருக்கிறான்.

அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் சென்னையிலிருந்த பிரபல கல்லூரி ஒன்றில் பி.காம் முடித்து வங்கிகள் நடத்தும் தேர்வில் அகில இந்திய மெரிட் லிஸ்ட்டில் இடம் பிடித்து நாட்டிலேயே மிகப் பெரிய  அரசு வங்கியொன்றில் நேரடியாக பயிற்சி ஆஃபீசராக பணியில் சேர்ந்து அவனை நான் சந்தித்தபோது இரண்டு வருடங்களாகியிருந்தது.. தந்தை அவன் கல்லூரியில் இருந்தபோதும் சித்தி அவன் பணியில் சேர்ந்த முதல் வருடம் மரித்து போக அவனும் சித்தியின் பிள்ளைகளுமாக வீடு பிடித்து..

இளம் வயதிலேயே குடும்பஸ்தனாய்..

அவனும் சென்னையிலேயே பணியில் இருந்ததால் எங்களுடைய நட்பு தொடர்ந்தது...

நான் குமாஸ்தா பதவியிலிருந்து அதிகாரியாக பதவி உயர்வு பெற்றபோது அவன் மேலாளராக பதவி உயர்வு பெற்று சென்னையிலிருந்து மாற்றலாகிப் போனான்..

அதன் பிறகு மீண்டும் பத்து, பதினைந்து வருடங்களுக்கு தொடர்பு விட்டுப் போனது..

அதற்குப் பிறகு ஜூன் மாதம் 1999ம் வருடம்..

சென்னையிலிருந்து நான் ஏ.ஜி.எம் ஆக பதவி உயர்வு பெற்று எர்ணாகுளத்திலிருந்த என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரிக்கு தலவைராக செல்கிறேன்..

அவர் அவருடைய வங்கியின் மும்பை தலைமையலுவலகத்திலிருந்து சென்னை ரீஜியனல் ஹெட்டாக (ஜி.எம் பதவி) வருகிறார்..!

சென்னை ஏர்போர்ட்டில் வைத்து சந்திக்கிறோம்.. அதே ட்ரேட் மார்க் சிரிப்புடன் என்னை அடையாளம் கண்டுகொண்டு  அழைத்து பேசுகிறார்..

சித்தியின் பிள்ளைகள் எல்லோருக்கும் திருமணம் செய்துவிட்டு தான் மட்டும் திருமணம் ஏதும் செய்துக்கொள்ளாமல்.. ஒரு நல்ல அண்ணனாக, அவர்களுடைய பிள்ளைகளுக்கு நல்லதொரு மாமாவாக, பெரியப்பாவாக..

அன்று ஏர்போர்ட் லவுஞ்சில் வைத்து பார்த்ததுதான்..

ஐந்து வருடங்களுக்கும் மேல் ஆகிறது....

இப்போது ஏதோ ஒரு வடக்கத்திய மாநிலத்தில்.. பெரிய பதவியில்..

எப்படிப்பட்ட இமாலய சாதனை அவருடையது!

அவருடைய வெற்றிக்கு அவர் ஒருவர்தானே காரணம்..

முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை என்பதற்கு அவருடைய வாழ்க்கையொரு உதாரணம்..

அப்படியொருவனை நண்பனாக பெற்றது எவ்வளவு பெரிய பாக்கியம்.. என்று இப்போது நினைத்துப் பார்க்கிறேன்..

அப்பளப்பூ அண்ணாசாமியை என்னால் மறக்கவே முடிந்ததில்லை..

இனியும் வரும்...