21 ஜூலை 2014

உன் சமையலறையில்..... இது திரை விமர்சனம் அல்ல!

கடந்த வாரம் 'உன் சமையலறையில்......' என்ற திரைப்படத்தை பார்த்தேன். 

அதில் கதாநாயகனும் கதாநாயகியும் தற்செயலாக  தொலைபேசி மூலம் அறிமுகமாகின்றனர். கதாநாயகன் 45 வயது இளைஞர்.  இவருக்கு திருமணத்தில் விருப்பமில்லையா அல்லது யாரும் இவரை திருமணம் செய்துக்கொள்ள விரும்பவில்லையா என்பது  திரையில் சொல்லப்படவில்லை. கதாநாயகிக்கு 36 வயது இருக்கலாம். செவ்வாய் தோஷம் என்பதால் எந்த வரனும் கூடி வரவில்லையாம! இந்த நூற்றாண்டிலும் இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? சில நாட்கள் கழித்து இருவரும் சந்தித்துப் பேச முடிவு செய்கின்றனர். ஆனால் இருவருமே ஒருவரையொருவர் சந்திக்க விருப்பமில்லாமல் கதாநாயகன் தன் மருமகனையும் கதாநாயகி தன் தங்கையையும் அனுப்பி வைக்க 'அவர்கள் 'இருவரிடையிலும் காதல் மலர்கிறது. 

கதாநாயகன், கதாநாயகி இருவருக்கும் தங்களை மற்றவருக்கு பிடிக்காமல் போய்விடுமோ என்கிற எண்ணம் இருந்தது போலும். இந்த எண்ணத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு 'நீங்கள் அவருடன் வெளியில் சென்றால் ஒரு தந்தையும் மகளும் போவதுபோல தோன்றும்' என்று கதாநாயகனிடம் அவனுடைய மருமகனும் 'நீயும் அவரும் அக்கா தம்பி போல் இருக்கறீங்க' என்று கதாநாயகியிடம் அவருடைய தங்கையும் கூறி ஏமாற்றுகின்றனர். இறுதியில் உண்மை தெரிந்து இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இருவருக்குமே ஒருவரையொருவரை பிடித்துப்போகிறது! 

இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் கதாநாயகனின் மருமகன் கூறுவது: 'உங்களுக்கு அவரை பிடிக்குமான்னுதான் நீங்க கவலைப்படணும். அவங்களுக்கு உங்கள பிடிக்குமான்னு நீங்க கவலைப்படக் கூடாது மாமா.'

கதாநாயகன், கதாநாயகி இருவருமே இந்த எண்ணத்துடன்தான் தங்களுடைய முதல் சந்திப்பில் தங்களுக்கு பதிலாக முறையே மருமகன், தங்கையை அனுப்பி ஆள்மாறாட்டம் செய்கின்றனர். இது இருவருக்குமே தங்களுடைய வயதான உருவத்தினால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை என்பதை ஒரு இடத்தில் சூசகமாக தெரிவிக்கிறார்கள். 

உண்மைதான். 

இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் உண்டு. 

இது எதனால் ஏற்படுகிறது?

இது ஒரு வகை மனோவியாதியா?

இது யாருக்கெல்லாம் ஏற்படுகிறது?

நாம் அனைவருமே மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஏதாவது ஒருவகையில் அவர்களை விட தாழ்ந்தவர்களாக (inferior) இருக்க வாய்ப்புண்டு. அதாவது நம்முடைய மூளையின் அளவு அனைவருக்கும் ஒன்றுதான் என்றாலும் அதனுடைய திறன் மனிதனுக்கு மனிதன் வேறுபடுவதுண்டு. அதன் அடிப்படையில் நாம் அனைவருமே ஒரே திறனுள்ளவர்கள் அல்ல. அதே போன்றுதான் உருவத்திலும், நிறத்திலும், அழகிலும், செல்வத்திலும்...... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஏதாவது ஒரு வகையில் நாம் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகவும் (superior) மற்ற சிலரை விட தாழ்ந்தவர்களாகவும் (inferior) இருக்க வாய்ப்புள்ளது. 

இதற்கு நாம் மட்டுமே பொறுப்பல்ல. 

ஆனால் இத்தகைய தாழ்வுகளுக்கு (inferiority) தாங்கள்தான் பொறுப்பு என்று எப்போதும் மருகும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது. நாம் மட்டும் ஏன் அவர்களைப் போல் இல்லை என்று நினைப்பு மேலோங்கி நம்மை எந்த காரியத்திலும் திறம்பட செயலாற்ற முடியாமல் போய்விடுகிறது.

இந்த எண்ணம் எப்போது எதனால் ஏற்படுகிறது?

தாழ்வு மனப்பான்மையால் அவதியுறும் சிலரை ஆய்வு செய்தபின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த சில உண்மைகள் இவை:

பெரும்பாலோனோருக்கு இந்த எண்ணம் அவர்களுடைய இளம் வயதில் அவர்களுடைய பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால்தான் உருவாக்கப்படுகிறது.

குழந்தைப் பருவத்திலிருந்தே 'நீ ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன்', அல்லது 'உன்னால் முடியாது' என்றெல்லாம் கூறுவதும் 'அவனைப் பார்... இவனைப் பார்' என்று மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவதிலிருந்தும்தான் 'நம்மால் ஒன்றும் முடியாது' என்ற எண்ணமும் 'நான் மற்றவர்களை விட தாழ்ந்தவன்' என்கிற எண்ணமும் நம்முடைய மனதில் விதைக்கப்படுகிறது. 

பெற்றோரின் இத்தகைய அறிவுறுத்தல்கள் அவர்களுடைய குழந்தைகளை நல்வழிப்படுத்தவோ அல்லது அவர்களை மேம்படுத்தவோ உதவுவதில்லை. மாறாக அவர்களுடைய மனதில்  தங்களைப் பற்றிய சுயமதிப்பை (self-esteem) இழக்கவே செய்துவிடுகிறது. இத்தகைய சுயமதிப்பு இல்லாதவர்கள்தான் நாளடைவில் தாழ்வுமனப்பான்மை கொண்டவர்களாகிவிடுகின்றனர். 

ஆனால் இத்தகைய அறிவுறுத்தல்கள் சில குழந்தைகளை நல்வழிப்படுத்துவதும் உண்டு. அதாவது தங்களுடைய குறைகளை உணர்ந்து அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் செயலில் இறங்கும் குழந்தைகள் காலப்போக்கில் சமுதாயத்தில் சாதனையாளர்களானதும் உண்டு. சரித்திரத்தில் இத்தகைய சாதனையாளர்கள் ஏராளம். பள்ளிப் பருவத்தில் எதற்கும் லாயக்கற்றவர்கள் என்று ஆசிரியர்களால் புறக்கணிக்கப்பட்ட எத்தனையோ பேர் எதிர்காலத்தில் உலகம் போற்றும் சாதனையாளர்களாக உருவெடுத்துள்ளனர்!

மாறாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுறுத்தலால் மனம் துவண்டு தங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிடுபவர்கள்தான் பிற்காலத்தில் தாழ்வு மனப்பான்மை என்ற மனநோய்க்கு ஆளாகிவிடுகின்றனர்.

தாழ்வு மனப்பான்மையில் இரு வகை உண்டு.

1. குழந்தை பருவத்தில் ஏற்படும் மனப்பான்மை. அதாவது தங்களுக்கு மற்றவர்களைப் போன்று திறமை அல்லது அறிவாற்றல் இல்லை கற்பனையான எண்ணத்தாலும் ஆசிரியர், பெற்றோர் போன்றவர்களாலும் விதைக்கப்படும் எண்ணத்தாலும் ஏற்படுவது.  

இதை ஓரளவுக்கு நிவர்த்தி செய்துவிட முடியும். இதற்கு பல வழிகள் உள்ளன. இப்போது நம்முடைய சுய-மேம்பாடு மற்றும் சுய-ஊக்குவிப்புகள் (self improvement and self motivation) ஆகியவைகளை அதிகரித்துக்கொள்ள பல புத்தகங்கள் கிடைக்கின்றன. பயிற்சி பாசறைகளுக்கும் (workshops) பஞ்சமில்லை. இவை ஒரு சில நாட்களில் நம்முடைய திறனை  மேம்படுத்திவிட வாய்ப்பில்லையென்றாலும் காலப்போக்கில் நம்முடைய தரத்தை மேம்படுத்த வாய்ப்புண்டு. அதாவது இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மால், நம்முடைய முயற்சிகளால் நிவர்த்தி செய்துக்கொள்ளக் கூடியது எனலாம். இத்தகைய தாழ்வு மனப்பான்மை நம்மில் பலருக்கும் இருக்கும் இருக்கவும் வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். போட்டிகள் நிறைந்த இந்த உலகில் நம்மால் நாம் இப்போது இருக்கும் இடத்திலாவது நிலைத்து நிற்க இத்தகைய மனப்பான்மை அவசியமானதும் கூட! 

2. வாலிபப் பருவத்தில் அதாவது கல்லூரி காலத்தில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை. 

இத்தகைய மனப்பான்மை பெரும்பாலும் நாமாகவே ஏற்படுத்திக்கொள்வது. இதற்கு அடிப்படையான குறைபாடு என்று நாம் கருதுவது பல சமயங்களில் மிகவும் அற்ப விஷயமாகக் கூட இருக்கக் கூடும். 

நான் உயரத்தில் குட்டை அல்லது நான் கருப்பு அல்லது என் முகம் பார்ப்பதற்கு அழகாக இல்லை அல்லது என் தலை மூடி அவளைப் போல நீளமாக இல்லை இது மாதிரியான உருவ ரீதியான குறைபாடுகளால் ஏற்படுவதுண்டு. 

இன்னும் சிலருக்கு தங்களுடைய ஏழ்மை மற்றும் தாங்கள் சார்ந்திருக்கும் சாதி கூட தங்களை மற்றவர்களை விட தாழ்ந்தவர்களாக கருத  வைத்துவிடுவதுண்டு. 

உண்மையில் பார்க்கப் போனால் இவை எதுவும் ஒரு குறைபாடே இல்லை என்பதும் இதனால் எல்லாம் யாரும் இவர்களை ஒதுக்குவதில்லை என்பதும் இவர்களுக்கு எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் தெரிவதில்லை. இவை ஏதோ தங்களுக்கு மட்டுமே உள்ள குறைபாடாக எண்ணி, எண்ணி மருகுவார்கள். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை நாளடைவில் இவர்களுடைய முன்னேற்றத்தையே பாதிக்கும் அளவுக்கு தீவிரம் அடைந்துவிடுவதுண்டு. 

மேலும் இத்தகைய மனப்பான்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றவர்களுடைய அதாவது தங்களை தாழ்ந்தவர்களாக கருதி ஒதுக்குபவர்களை (இதுவும் கூட இவர்களுடைய கற்பனைதான்) கவர்வதற்காகவே தங்களுடைய சக்திக்கு மீறியதை செய்து சாதிக்க விரும்புவார்கள். அதாவது தங்களை உயர்ந்தவர்களாக (superior) காட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். 

இத்தகையோரை பல அலுவலகங்களிலும் பார்க்கலாம். இவர்களுள் பெரும்பாலும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு அலுவலிலும் வெற்றியடைந்தால் அதற்கு தாங்கள் மட்டுமே காரணம் என்றும் தோல்வியில் முடிந்தால் மற்றவர்கள்தான் காரணம் என்று கூறுவார்கள். 

இத்தகையோர் மற்றவர்களுடைய கவனத்தை தங்கள் பால் ஈர்க்க எத்தகைய தில்லுமுல்லுகளிலும் ஈடுபட தயங்க மாட்டார்கள். எப்போதும் பிறர் தங்களை மட்டுமே வஞ்சிப்பதாக எண்ணிக் கொள்வார்கள். எல்லா துயரங்களும் தங்களுக்கு மட்டுமே நடப்பதாக சொல்லி சொல்லி புலம்புவார்கள். பிறருடைய சிறிய தவறுகளுக்கும் அவர்களை குறை கூறுவதில் முனைப்பாய் இருக்கும் இவர்களால் தங்களை மற்றவர்கள் குறை கூறுவதை பொறுத்துக்கொள்ள  முடியாது. சொந்த சகோதரனைக் கூட தன்னுடைய போட்டியாளனாக கருதும் இவர்கள் வாழ்க்கை முழுவதையும் மற்றவர்களுடன் போட்டி போடுவதிலேயே கழித்துவிடுகிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இத்தகைய மனப்பாங்கை துவக்கத்திலேயே கண்டுபிடித்து களையாவிட்டால் நாளடைவில் தீராத மன அழுத்தத்திற்கும் இவர்கள் ஆளாக வாய்ப்புண்டாம்!

தாழ்ச்சியும் (Humility) தாழ்வு மனப்பான்மையும் 

தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் பலரும் தங்களை தாழ்ச்சியுள்ளவர்களைப் போல் காட்டிக்கொள்வார்களாம். அதாவது மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என்று உள்ளூர நினைத்தாலும் தாங்கள் அத்தகைய புகழ்ச்சிக்கு ஏற்றவர்கள் அல்ல என்று வெளியில் காட்டிக்கொள்வார்கள். 

தங்களைத் தாங்களே முழுமையாக உணர்ந்துக்கொள்பவர்களால் மட்டுமே தாழ்ச்சியுள்ளவர்களாக இருக்க முடியும் என்கிறார் நம்முடைய தேசப் பிதா மகாத்மா காந்தி அவர்கள். 'என்னை நானே தெரிந்து வைத்திருக்கவில்லையென்றால்...' அதாவது என்னுடைய பலம் எது பலவீனம் எது என்று எனக்கே தெரிந்திருக்க வேண்டும். 

மேலும் தாழ்ச்சியுள்ளவர்கள் தன்னை மட்டுமல்லாமல் தன்னுடன் பழகுபவர்களையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார்கள். இத்தகையோர் மற்றவர்களுடைய வலிமையையும் (positives) வலிவின்மையையும் (negatives) நன்கு அறிந்து வைத்திருந்து அவர்களுடைய வலிமையை பயன்படுத்திக்கொள்வதுடன் அவர்களுடைய வலிவின்மைகளை களையவும் உதவுவார்கள். தங்களுடைய சாதனைகள் அனைத்துக்கும் தங்களுடன் உழைத்தவர்களையும் சொந்தக்காரர்களாக்கும் பெருந்தன்மையும் இவர்களிடம் இருக்கும். 

இப்போதெல்லாம் இத்தகைய எந்த நற்குணங்களும் இல்லாத தாழ்வு மனப்பான்மையுள்ளவர்கள் தங்களையும் தாழ்ச்சியுடையவர்கள் போல் காட்டிக்கொண்டு நடப்பதை நம் அன்றாட வாழ்க்கையில் மிக அதிக அளவில் காண முடிகிறது. 

சுருக்கமாக கூற வேண்டுமென்றால் 'கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு' என்பதை நம்புவோர் தாழ்ச்சியுடையோர். இதற்கு நேர் எதிரான சிந்தனையுடையோர் தாழ்வு மனப்பான்மையுடையோர்!

********

08 ஜூலை 2014

தனிமையிலே இனிமை காண முடியுமா?

தனிமையும் (loneliness) பிறரால் வேண்டப்படாமையுமே (feeling of being unwanted) இன்றைய உலகின் மிகப் பெரிய கொடுமை என்றார் அன்னை திரேசா.

அதே சமயம் தனிமை என்பது மட்டுமே கொடுமையல்ல என்பதும் தனித்து இருப்பது மட்டுமே தனிமையல்ல என்பதும் உண்மைதான். 

நம்மைச் சுற்றி ஆயிரம் நபர்கள் இருக்கும் சூழலிலும் நம்மில் சிலர் தனித்து விடப்படுவதுபோல் உணர்கிறோமே அந்த தனிமைதான் கொடுமையான விஷயம். 

அதுவும் முதுமையில் வரும் தனிமை.... அதை அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும் அதன் வேதனை. 

நானும் என்னுடைய சர்வீசில் சுமார் பத்தாண்டு காலம் என் குடும்பத்தாரை விட்டு தனியாக இருந்திருக்கிறேன். 

மும்பையில் இருந்தபோது தனிமை ஒரு பாரமாக தெரியவில்லை. ஏனெனில் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பவே இரவு பத்து மணி ஆகிவிடும். அதன் பிறகு எனக்கென எதையாவது சமைத்து உண்டுவிட்டு படுக்கச் செல்லும்போது நள்ளிரவாகிவிடும். நான் மேலாளராக இருந்த கிளையில் வேலைப் பளு அதிகம் என்பதால் வார இறுதி நாட்களில் கூட அலுவலகம் செல்ல வேண்டி இருக்கும். ஆகவே தனித்து இருக்கும் சூழல் மிகவும் அரிதாக இருந்தது. 

ஆனால் சுமார் பத்து ஆண்டுகள் கழித்து கொச்சியில் மீண்டும் தனித்து இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோது தனிமை என்ன வாட்டி எடுத்தது. ஏனெனில் நான் பணியில் இருந்த பயிற்சிக் கல்லூரியில் பணிச்சுமை அவ்வளவாக இல்லை. மேலும் என்னுடைய குடியிருப்பு கல்லூரி கட்டடத்திலேயே இருந்ததாலும் அந்த கட்டிடம் பஜாருக்கு நடுவில் இருந்ததாலும் அண்டை அயலார் என்று யாரும் இருக்கவில்லை. மாலை ஆறு மணிக்கு கல்லூரியிலிருந்து புறப்பட்டால் ஒரு சில நொடிகளில் குடியிருப்பை அடைந்துவிடலாம். அதிலிருந்து அடுத்த நாள் காலை பணிக்குச் செல்லும்வரை தனிமைதான். வார இறுதி நாட்களில் கேட்கவே வேண்டாம். சனிக்கிழமை பகலிலிருந்து திங்கட்கிழமை காலை பத்து மணி வரையிலும் பேச்சு துணைக்குக் கூட ஆள் இருக்காது. வீட்டில் ஒரேயொரு துணை தொலைக் காட்சிப் பெட்டிதான்! எனக்கு இன்னொரு துணையாக இருந்தவை புத்தகங்கள்.  எங்கள் கல்லூரிக்கு எதிரிலேயே ஆங்கில புத்தகங்களை வாடகைக்கு விடும் ஒரு நூலகம் இருந்தது. அங்கு தங்கியிருந்த நான்காண்டு காலத்தில் நூற்றுக்கணக்கான புத்தகங்களை படித்திருப்பேன். 

ஆனாலும் எத்தனை நேரம்தான் படித்துக் கொண்டிருக்க முடியும்? அல்லது தொலைக்காட்சியை பார்க்க முடியும்? சில சமயங்களில் எதிலுமே மனம் செல்லாமல் சென்னையில் இருக்கும் மனைவி மக்களையே மனம் சுற்றி வரும். இப்படியொரு வாழ்க்கை தேவைதானா என்றெல்லாம் தோன்றும். பதவி உயர்வு தேவையில்லை என்று இருந்திருந்தால் ஊரோடு இருந்திருக்கலாமே என்று தோன்றாத நாளே இல்லை எனலாம். 

அப்போதுதான் தனிமையின் தாக்கத்தை முழுவதுமாக உணர ஆரம்பித்தேன். 

இளம் வயதில் தனித்திருப்பது மனத்தளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அதுவே முதிய வயதில் தாங்கொண்ணா துன்பமாக தெரிகிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நான் சென்னையில் ஒரு பலமாடி குடியிருப்பில் வசித்தபோது என்னுடைய குடியிருப்புக்கு எதிரில் ஒரு முதிர்ந்த தம்பதி குடியிருந்தனர். கனவருக்கு எண்பது வயதும் அவருடைய மனைவிக்கு எழுபத்தைந்து வயதும் இருக்கும். அவர்களுடன் அவருடைய மகனும் மருமகளும் ஒரு பேரனும் இருந்தனர். சில மாதங்களில் ஏதோ குடும்பத்தகராறில் மகன் தன் மனைவி மற்றும் மகனுடன் அவர்களை விட்டு பிரிந்து செல்ல தம்பதியினர் தனித்து விடப்பட்டனர்.  அந்த பிரிவே அவர்கள் இருவரையும் நோயில் தள்ளியது. அடுத்த ஆறு மாதத்தில் மனைவி மாரடைப்பால் மரித்துவிட மகனும் மகளும் திரும்பி வந்து தந்தையுடன் வசித்தனர். ஆனால் ஒரு சில மாதங்கள்தான். மீண்டும் பிரச்சினை. தள்ளாத வயதிலிருந்த தந்தையை மீண்டும் தனியே விட்டுவிட்டு மகன் சென்றுவிட முதியவர் தனிமையின் துயரம் தாளாமல் பல சமயங்களில் அழுவதை கேட்க முடிந்தது. மகன் மட்டும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு செல்வார். ஆனாலும் முதியவரால் தனிமையின் பாரத்தை தாங்க முடியவில்லை. ஓரிரு மாதங்கள் கழித்து ஒருநாள் இரவு உறக்கத்திலேயே மரித்துப் போனார். அவர் மரித்த விவரமே இரண்டு தினங்கள் கழித்துத்தான் எங்களுக்குத் தெரிந்தது. 

இதுதான் தனிமையின் விளைவு.

இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல. உலகெங்கும் குறிப்பாக பொருளாதாரத்தில் முன்னேறிய பல நாடுகளிலும் இதே பிரச்சினைதானாம். 

இங்கிலாந்தில் எழுபத்தைந்து வயதைக் கடந்த பலரும் இன்று தனிமையில்தான் வாடுகின்றனராம். தொலைக்காட்சி பெட்டி ஒன்றுதான் அவர்களுக்கு துணையாக உள்ளதாம். 

இந்த தனிமை நகர்ப்புறங்களில்தான் அதிகம். இதற்கு வளர்ந்துவரும் நாகரீகமும், நம்முடைய வாழ்க்கை முறையுமே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. 

தனிமை என்பதும் தனித்துவிடப்படுதல் என்பதும் வெவ்வேறு. 

நண்பர்கள் புடைசூழ இருக்கும் சூழல்களிலும் நம்மில் சிலர் தனித்துவிடப்பட்டுவிட்டதைப் போல் உணர்வதுண்டு. நானும் அதுபோல் உணர்ந்திருந்திருக்கிறேன். அதற்கு நம்முடைய அணுகு முறையும் ஒரு காரணம். நம்மில் சிலர் யாரையும் சட்டென்று நண்பர்களாக ஏற்றுக்கொள்வதில்லை. பிறரிடம் நாமாக சென்று பேசுவதில்லை. யாராவது வந்து நம்மிடம் பேசினால் நாமும் பதிலுக்கு பேசுவோம். அதுவும் அளவோடு. நானும் ஒருவகையில் அப்படித்தான். கொச்சியில் நான் குடியிருந்த கட்டிடத்திலேயே பல அலுவலகங்கள் இருந்தன. அதில் இயங்கிவந்த சில முக்கிய இலாக்கா அதிகாரிகளும் என்னைப் போலவே அதே கட்டிடத்தில்தான் தங்கள் குடும்பத்துடன் குடியிருந்தனர். ஆனாலும் என்னால் அவர்களுடன் சகஜமாக பழக முடியவில்லை. எங்களுக்குள் மொழி பேதம் ஏதும் இருக்கவில்லை. ஏனெனில் எனக்கும் மலையாளம் நன்றாக பேச வரும். ஆனாலும் ஏதோ ஒரு தயக்கம். ஒதுங்கியே இருப்பேன். அவர்களாக வந்து பேசினால் பேசுவேன். 

இந்த மனநிலையிலுள்ளவர்கள்தான் தாங்கள் தனித்துவிடப்பட்டிருப்பதாக உணர்வார்கள் போலுள்ளது. இத்தகையோர் ஒரு கூட்டத்தில் இருந்தால் இவர்களுடைய மனநிலை அவருடன் இருப்பவர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள். அதாவது யாரும் உடன் இல்லாவிட்டால்தான் தனிமையாக தோன்றும் என்றில்லை. 

அதே சமயம் தனிமையில் இருப்பவர்கள் அனைவரும் தனிமையாக உணர்வார்கள் என்றும் இல்லை. தனிமையில்  இருப்பதை விரும்புவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக படைப்பாளிகள், ஓவியர்கள், இசைக் கலைஞர்கள்.... இவர்களுக்கு தனிமையில்தான் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் தோன்றுமாம். 

உண்மைதான். சிறையில் இருந்த காலத்தில்தானே நேரு, அண்ணா போன்றவர்கள் தங்களுடைய மிகச் சிறந்த படைப்புகளை படைத்திருக்கின்றனர்!

ஆக தனிமை என்பது நோயல்ல. அதாவது தனிமையிலும் இன்பம் காண்கின்ற மனப்பாங்கு உள்ளவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே அல்ல. 

ஆனால் நண்பர்கள், உற்றார் உறவினர் தங்களைச் சுற்றிலும் இருந்து பழக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் தனித்து விடப்படும்போது அதாவது அவர்கள் பிறரால் வேண்டப்படாதவர்களாக கருதப்படும்போது அது அவர்களுடைய உயிரையே குடிக்கும் அளவுக்கு வேதனையாக மாறிவிடுகிறது. 

"Loneliness has also been described as social pain — a psychological mechanism meant to alert an individual of isolation and motivate him/her to seek social connections." என்கிறது ஒரு ஆய்வுக் கட்டுரை.

அதாவது தனிமை ஒரு சமுதாயம் ஒருவருக்கு அளிக்கும் துன்பம் என்றும் கூறலாமாம். ஒருவர் தன்னை சார்ந்தவர்களால் வேண்டுமென்றே தனிமைப் படுத்தப்படும்போது சம்மந்தப்பட்டவரால் அதை எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதாம். தனிமையின் துயரம் வயது ஆக, ஆக கூடிக்கொண்டே போகிறதாம். 

தனிமை என்பது மனிதனுக்கு புதிதல்ல. அவன் இவ்வுலகில் வரும்போதும் தனியாகத்தான் வருகிறான். உலகை விட்டு பிரியும்போதும் தனியாகத்தான் செல்கிறான். இதை உணர்ந்துக்கொள்பவர்களுக்கு தனிமை பழகிப்போய்விடும் என்கிறது இன்னொரு ஆய்வு.  

தனிமையிலே இனிமைக் காண முடியுமா என்றார் கண்ணதாசன். அது இரவினிலே சூரியனைக் காண நினைப்பதுபோலத்தான் என்கிறார். 

இதில் உண்மை இல்லாமல் இல்லை. அதே சமயம் தனிமையை எவராலும் தவிர்க்க முடியாது என்பதும் உண்மை. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் நாம் அனைவருமே தனிமையை தனியாக சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவது நிச்சயம். ஆகவே அதை எதிர்கொள்ள பழகிக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு இந்த தனிமை உணர்வு சற்று அதிகமாகவே இருக்கும். தினசரி அலுவகள் ஏதும் இல்லாத சூழல் மட்டுமல்லாமல் வளர்ந்துவிட்ட குழந்தைகள் தங்களுடன் இல்லை என்கிற உணர்வும் இத்தகைய உணர்வுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதுதான் வாழ்க்கை, இதுதான் நிதர்சனம் என்று ஏற்றுக்கொள்கிறவர்கள் தங்களுடைய சிந்தனைகளை பல ஆக்கப்பூர்வமான வழிகளில் செலுத்தி தனிமையை எதிர்கொள்கின்றனர். ஆனால் நட்பு, சுற்றம், சூழல் என்று கலகலப்பாக இருந்து பழகிப் போனவர்களால் அதை அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியவில்லை. 

இத்தகையோர் நட்பும் சொந்தமும் நம்முடைய வாழ்வின் இறுதிவரையிலும் உடன் வருவதில்லை என்கிற யதார்த்தத்தை புரிந்துக்கொள்ள வேண்டும். தனிமை என்பது பிறரால் ஏற்படுவதல்ல. நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது என்பதையும் உணர வேண்டும். கடமைகளை செவ்வனே செய்து முடித்துவிட்ட நிம்மதியை தனிமையில்தான் முழுமையாக அனுபவிக்க முடியும். கடந்த கால சுகமான நினைவுகளை அசைபோடுவதே தனிமையை முறியடிக்க உதவும் நல்லதொரு ஆயுதம். அதை யாரும் நமக்கு மறுக்க முடியாதே. 

*********** 27 ஜூன் 2014

நடிகரின் தற்கொலை - காரணம் என்ன?

இன்று காலையில் பத்திரிகையைத் திறந்ததுமே கண்ணில் பட்ட செய்திகளில் ஒன்று ஐம்பத்து நான்கு வயதே ஆன தமிழ் திரைப்பட நடிகர் பால முரளி மோஹனின் தற்கொலை!

அதே பகுதியில் வெளியாகியிருந்த இன்னொரு செய்தி சென்னை கோயம்பேட்டிலுள்ள தெற்காசிய விளையாட்டு சென்னையில் நடைபெற்றபோது வீரர்கள் தங்க கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருந்த ஐம்பது வயது கூட நிரம்பாத பெண் ஒருவர் அவருடைய குடியிருப்பின் மொட்டை மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை!

நான் குடியிருக்கும் பகுதியில் வசித்து வந்த ஒரு இளைஞர் (நாற்பது வயது கூட ஆகியிருக்கவில்லை) தற்கொலை செய்துக்கொண்ட இரண்டாம் வருட நினைவு நாள் நேற்று!

ஏன் இந்த நிலை?இதுபோன்ற செய்திகள் வெளிவராத நாளே இல்லை என்னும் அளவுக்கு தற்கொலைகள் பெருகிக்கொண்டே போவதைக் காண முடிகிறது.

இதற்கு என்ன காரணம்?


எல்லா புகைப்படங்களிலும் குழந்தைத்தனமான புன்னகையுடன் காட்சியளிக்கும் நடிகர் பால முரளி மோஹனா தற்கொலை செய்துக்கொண்டார்? இதற்கு கடந்த ஆறு மாதங்களாக நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லை என்ற காரணம் என்கிறார்கள்.

என்னுடைய பகுதியில் வசித்தவருடைய தற்கொலைக்கு அவருடைய அலுவலக தோழர்கள் பல காரணங்களை கூறினார்கள். ஒருவர் அவருக்கு பல வியாதிகள் இருந்தன என்றார். 'இன்னும் ரெண்டு நாள்ல அவருக்கு ஹெர்னியா ஆப்பரேஷன் இருந்துது சார்.' ஒரு ஹெர்னியா சிகிச்சைக்கு பயந்து தற்கொலை செய்துக்கொள்வாரா என்று வியந்துபோனேன். ஏனெனில் அவர் நல்ல திடகாத்திரமானவராகத்தான் தெரிந்தார். தினமும் பேட்மின்டன் விளையாடுவார். சரியான எடையுடன் வயதுக்கேற்ற உருவம் கொண்டவர். இன்னொருவர் 'அவருக்கு ட்ரிங்ஸ் ஹேபிட் இருந்துது சார். கொஞ்ச நாளாவே ஜாஸ்தியா குடிப்பார்.' இப்போது யாருக்குத்தான் இந்த பழக்கம் இல்லை என்று தோன்றியது.  

இதுபோன்ற காரணங்கள் எல்லாமே தற்கொலை செய்துக்கொண்டவருடைய மரணத்திற்குப் பிறகு அவருடைய நண்பர்களால்/உறவினர்களால் முன்வைக்கப்படுபவையே. இவை மட்டுமே ஒருவரை தற்கொலைக்கு அழைத்துச் சென்றுவிடுமா என்று ஆய்ந்து பார்த்தால் வியப்புதான் மிஞ்சும்.

இது இன்றோ நேற்றோ தோன்றியதல்ல. இது நம்முடைய நாட்டை மட்டுமே ஆட்டிப்படைக்கும் விசித்திரமும் இல்லை. 

மனித குலம் தோன்றிய நாள் முதலே இருந்துவரும் பழக்கம்தான் இது. 

பண்டைக் காலங்களில் கிரேக்க நாட்டில் தற்கொலை செய்துக்கொள்பவரை புதைக்க இடம் வழங்க மறுக்கப்படுமாம். 

அத்தகையோரை ஊருக்கு வெளியே அனாதைப் பிணமாகத்தான் புதைப்பார்களாம். மற்ற கல்லறைகளில் வைக்கப்படுவதைப் போன்ற அறிவிப்பு பலகைகள் வைப்பதற்கு அனுமதி இல்லையாம். 

இங்கிலாந்து நாட்டில் பதினேழாம் நூற்றாண்டில் தற்கொலை செய்துக்கொண்டவரின் உடலை கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று குப்பைகள் கொட்டும் இடத்தில் வீசி எறிந்துவிடுவார்களாம். 

ஆக, தற்கொலை ஒரு இழுக்கான செயலாகவே அன்று முதல் கருதப்பட்டு வருகிறது என்பது தெரிகிறது. 

தற்கொலை செய்துக்கொண்டு மரிப்பவர்களுக்கு அவர்களுடைய துன்பங்களிலிருந்து, அவர்களுடைய கவலைகளிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் விடுதலை கிடைத்துவிடுகிறது. ஆனால் அவர்களுடைய அந்த முடிவுக்கு காரணகர்த்தாவாக சமுதாயத்தால் கற்பிக்கப்படும் அவர்களுடைய சொந்த பந்தங்கள் படும் அவமானத்திற்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் அதுவே ஆரம்பமாகிவிடுகிறது. அதிலிருந்து விடுபட முடியாமல் அவர்கள் படும் அவஸ்தையை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும். 

தற்கொலை யார், ஏன் செய்துக்கொள்கிறார்கள்?

சமீபத்திய ஆய்வுகளின்படி தற்கொலை செய்துக்கொள்பவர்களில் மிக அதிக அளவிலான விழுக்காடு இளம் வயதினராம். 

அதிலும் பெண்கள்தான் அதிக அளவில் இத்தகைய முடிவுகளுக்கு தள்ளப்படுகிறார்களாம். 

இத்தகையோர் ஏன் இந்த முடிவுக்கு வருகிறார்கள் அல்லது தள்ளப்படுகிறார்கள்?

இதற்கு பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள்.

இவற்றுள் முதலாவதாக கருதப்படுவது மன அழுத்தம் (Depression).

இன்றைய அதிவேக உலகில் மன அழுத்தம் இல்லாதவர்கள் இருக்க முடியுமா என்ன?

மன அழுத்தம் யாருக்குத்தான் இல்லை!

முன்பெல்லாம் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்களுக்கு மட்டும்தான் மன அழுத்தம் ஏற்படும் என்பார்கள். 

பொருளாதார பிரச்சினையில் குறிப்பாக மிக அதிக அளவிலான கடன் தொல்லை உள்ளவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. திருமண வாழ்க்கையில் பிரச்சினை. வேலையை இழந்துவிடுவதால் ஏற்படும் வேதனை, அவமானம். இவைகள்தான் ஒருவரின் மன அழுத்தத்திற்கு காரணமாக கூறப்பட்டு வந்தன. 

ஆனால் இந்த வட்டத்திற்குள் தற்கொலை விழுக்காடு மிக அதிக அளவில் உள்ளது என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் 15வயதிலிருந்து 30 வயதுக்குள்ளவர்கள் வருவதில்லையே?

உண்மைதான். 

தற்கொலை என்கிற திரும்பி வர முடியாத எல்லைக்கு (point of no return) இட்டுச் செல்ல மிக முக்கியமான காரணமாக கூறப்பட்டு வரும் மன அழுத்தத்திற்கு இதுவரை மிக மிக அற்பமான காரணங்களாக (silly reasons) கருதப்பட்டு வரும் பல நிகழ்வுகள்தான் இன்றைய இளைஞர்களுடைய தற்கொலைக்கு பிரதான காரணமாக பட்டியலிடப்படுகின்றன. 

1. பள்ளி, கல்லூரிகளில் சக மாணவர்கள் முன்பு ஏற்படும் அவமானம்.
2. சக மாணவர்களால் ஏற்படும் அவமானங்கள் (ragging)
3. தேர்வுகளில் ஏற்படும் தோல்விகள்,
4. ஒருதலைக் காதலில் தோல்வி.

கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட ஒரு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவி ஒருவர் சக மாணவிகளிடம் அனுபவித்த தொல்லைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட செய்தி வெளிவந்திருந்ததே. அதில் தன்னை குளிக்க விடாமல் சீனியர் மாணவிகள் சிலர் தடுத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டதாக தன்னுடைய கடிதத்தில் எழுதியிருந்தாராம்!

இக்கால இளைஞர்களுக்கு எதனால் எல்லாம் மன உளைச்சல் ஏற்படுகிறது பாருங்கள்! 

நான் தஞ்சையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது அங்கு இயங்கிக்கொண்டிருந்த தமிழ் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்துக்கொண்டார்கள். அதற்கு அவர்கள் சமர்ப்பித்திருந்த ஆய்வுக்கட்டுரைகளில் ஒரு குறிப்பிட்ட பேராசிரியர் அற்பமான காரணங்களைக் காட்டி நிராகரித்து வந்ததுதான் முக்கிய காரணமாக கூறப்பட்டது! அதே போன்று நான் மும்பையில் பணியாற்றியபோது மும்பை பாபா அணு ஆராய்ச்சி கழகத்திலும் (Baba Atomic Reserce Centre- BARC) இத்தகைய தற்கொலைகள் சர்வ சாதாரணமாக நடப்பதை கேட்டிருக்கிறேன். பேராசிரியர்கள்-ஆராய்ச்சி மாணவர்களுக்கிடையிலுள்ள தலைமுறை இடைவெளிதான் (Generation Gap)இதற்கு முக்கிய காரணமாக அப்போது கூறப்பட்டது. அது இன்றும் விடை காண முடியாத பிரச்சினையாகத்தான் இருந்து வருகிறது என்கிறார்கள்.

இன்றைய தலைமுறையினரின் தற்கொலைக்கு மேற் கூறிய நான்கு காரணங்களுக்கு அடுத்ததாக கருதப்படுவது போதைப் பழக்கம். இந்த பழக்கத்திற்கு தங்களையும் அறியாமல் இழந்துவிடும் இளைஞர்கள் அதிலிருந்து மீள முடியாமல் இறுதியில் அதற்கு தற்கொலை ஒன்றுதான்  தீர்வு என்கிற முடிவுக்கு தள்ளப்படுகிறார்கள். 

ஆக ஒருவருடைய தற்கொலைக்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது மன அழுத்தம்தான் என்பது தெளிவாகிறது. 

அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம்?

இதற்கு மன அழுத்தத்திற்கு உள்ளானவர் மட்டுமே முயற்சி செய்தால் போதாது. இதில் அவரைச் சுற்றியுள்ள குறிப்பாக அவருடைய நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை விட மிக முக்கியமானவர்களாகக் கருதப்படும் நண்பர்கள் ஆகியோரின்  பங்கு மிக, மிக முக்கியமானது என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.

ஆனால் இத்தகைய மன அழுத்தத்திற்கு தங்களுடைய குழந்தைகள் உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை பல பெற்றோர்கள் கடைசி நிமிடம் வரையிலும் அறிந்துக்கொள்வதே இல்லை. பலருக்கு அது பாதிக்கப்பட்டவர்களுடைய தற்கொலைக்குப் பிறகே தெரிய வருகிறது என்பதுதான் வேதனை. இதற்கு குறுகி வரும் குடும்பங்களே முக்கிய காரணம். கணவன், மனைவி ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் என சுருங்கிவிட்ட குடும்பங்களில் துயரங்களை பகிர்ந்துக்கொள்ள யாருக்கு  நேரம் இருக்கிறது? 'இவனுக்காகத்தானங்க நாங்க ரெண்டு பேரும் நாள் பூரா உழைக்கிறோம்? இதை ஏன் இவன் புரிஞ்சிக்காம போய்ட்டான்?' என்று அங்கலாய்க்கும் பெற்றோர்கள்தான் இப்போது அதிகம். பணம் மட்டுமே தங்களுடைய குழந்தைகளின் துயரங்களை போக்கிவிடும் என்று நம்பும் பெற்றோர் அது மட்டும் போதுமா என்று பெற்றோரின் அன்புக்காக, அவர்களுடைய வழிகாட்டுதல்களுக்காக ஏங்கும் குழந்தைகள்..... இது ஒரு தீர்வு காண முடியாத பிரச்சினையாக உருவெடுப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்துக்கொண்டுள்ளோம்?

மன அழுத்தத்திற்கு உள்ளாகும் அனைவருமே தற்கொலைக்கு முயற்சி செய்வார்கள் என்பது பொருளல்ல. ஆனால் அது முளையிலேயே கண்டறியப்பட்டு கிள்ளியெறியப்படாவிட்டால் அது தற்கொலையில் சென்று முடியுமாம். 

எதற்கெடுத்தாலும் தற்கொலைக்கு துணிபவர்கள் அதிகமாகி வரும் இன்றைய சூழலில் இதுதான் காரணம் என்று கண்டுக்கொள்வது அத்தனை எளிதல்ல என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஆனால் நம்மில் பலரும் நமக்கு நெருங்கியவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளப் போகிறேன் என்று மிரட்டும்போது அதை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. 'இவர் எப்பவுமே இப்படித்தாங்க' என்று மனைவியே அலட்சியப்படுத்துவதை பார்க்கலாம். பெரும்பாலான சமயங்களில் புலி வருது, புலி வருது என்று கூறுவார்களே அத்தகைய மிரட்டலைப் போன்றதுதான் இதுவும் என்று பொருட்படுத்தாமல் இருந்துவிட்டு அதை நிஜமாகும்போதும் தங்களைத் தாங்களே குற்றவாளிகளாக கருதிக்கொள்வது சகஜமாகிவிட்டது. 

தற்கொலை செய்துக்கொள்பவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தங்களுடைய எண்ணத்தை தனக்கு நெருங்கியவர்களிடம் கோடிட்டு காட்டாமல் இருக்க வாய்ப்பில்லை என்பதுதான் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. ஆனால் அவற்றை சரியாக நேரத்தில் இனம்கண்டுக்கொள்ளாமல் இருந்துவிடுகிறோம். குரைக்கிற நாய் கடிக்காது என்பார்கள். அதுபோல் தற்கொலை செய்துக்கொள்வேன் என்று அடிக்கடி கூறுபவர்கள் அதை செய்துக்கொள்ள மாட்டார்கள் என்ற ஒரு தவறான எண்ணமே பலருடைய தற்கொலைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது. 

ஆகவே, விழிப்பாயிருப்போம். மன அழுத்தம் எந்த ரூபத்திலும் வெளிப்படலாம். அது நமக்கு நெருங்கியவர்களிடம் காணப்படும்போது அலட்சியப்படுத்தாமல் அவர்களுடைய குறைகளைக் கேட்போம். அவர்களுடைய மன அழுத்தத்தைப் போக்க நம்மால் ஆனவற்றை செய்வோம்.  

************  

09 ஜூன் 2014

நினைவுகள் சுகமானவை!

கடந்த கால நிகழ்வுகளை அசைபோடுவதே ஒரு சுகமான விஷயம்தான். அதுவே சுகமான் நிகழ்வுகள் என்றால் கேட்கவே வேண்டாம். 

மனித மூளை சுகமான நிகழ்வுகளை மட்டுமே நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்துக்கொள்ளுமாம்! உதாரணத்திற்கு ஒரு பயணம் செய்துவிட்டு திரும்பியதும் அந்த பயணத்தில் நாம் பார்த்து ரசித்த இடங்களும் வழியில் நாம் சந்தித்து உரையாடிய நண்பர்களும்தான் நம் நினைவில் நீண்ட காலம் நிலைத்திருக்குமாம். பயணத்தில் ரயிலுக்காகவும், விமானத்திற்காகவும் பேருந்துகளுக்கும் காத்திருந்து வீணடிக்க நேர்ந்த நேரம், மிக சுமாரான உணவு, வசதியில்லாத தங்குமிடம் என்ற அசவுகரியங்கள் அனைத்துமே நாம் அனுபவித்த சுகமான நினைவுகளால் அடிபட்டுப் போயிவிடுமாம். 

இது இயற்கையாக நமக்கு அமைந்துவிட்ட குணநலன்கள். ஆனால் இதற்கு விதிவிலக்கும் இல்லாமல் இல்லை. 

தங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சோகமான நினைவுகளையே நினைவில் வைத்திருந்து அதிலேயே உழன்றுக்கொண்டிருப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். 

மிகச் சிறிய பின்னடைவுகளையும் கூட ஏதோ தங்களுக்கு மட்டுமே ஏற்படுவதாக கருதுவார்கள். 'எனக்கு மட்டும் ஏங்க எப்ப பார்த்தாலும் இப்படியே நடக்குது? இப்படித்தாங்க பத்து வருசத்துக்கு முன்னால.....' என்று என்றோ நடந்த சோகக்கதையை ஆரம்பித்துவிடுவார்கள். 'மறுபடியும் புலம்ப ஆரம்பிச்சிட்டார்யா....' என்றவாறே அவருடைய சோகத்தை வேறு வழியின்றி கேட்க நேர்ந்த சோகத்தில் இருப்பார் அவருடைய நண்பர். 

என்னுடைய நண்பர் ஒருவர் அலுவலகத்தில் வேலையே இல்லாத நாட்களிலும் கூட இரவு ஒன்பது மணிக்கு முன்னால் கிளம்பமாட்டார். அப்படியே என்றாவது ஒருநாள் அலுவலகமே பூட்டப்பட்டாலும் நேரே வீட்டிற்குச் செல்லாமல் நண்பர்களை சந்திக்க சென்றுவிட்டுத்தான் வீடு திரும்புவார். இதை பல முறை கவனித்து வந்த நான் ஒருநாள் பொறுக்க மாட்டாமல் அவரிடம் 'எதுக்கு சார் பத்து மணிக்கு மேலதான் வீட்டுக்குதிரும்பணும்னு ஏதாச்சும் வேண்டுதலா?' என்று கேட்டேன்.

'அது ஒன்னுமில்ல சார். சீக்கிரமா போனா என் மனைவி எதையாவது சொல்லி புலம்பிக்கிட்டே இருப்பா, அதான்....' என்று இழுத்தார். 

எனக்கு வியப்பாக இருந்தது. ஏனெனில் அவர்களுக்கு பொருளாதார குறைவு ஏதும் இருக்கவில்லை. ஒரேயொரு மகள். அவளும் பார்க்கவும் அழகு படிப்பிலும் படுசுட்டி. அவருடைய மனைவியும் நன்கு படித்தவர். வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர். அப்படியிருக்க அவருடைய மனைவி எப்போதும் புலம்புவதற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று நினைத்தேன். 

'நாங்க இப்ப வசதியா இருக்கோம்கறது உண்மைதான் சார். ஆனா எங்களுக்கு மேரேஜ் ஆன புதுசுல கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கோம். என் குடும்பத்துக்கு செய்ய வேண்டியது நிறைய இருந்திச்சி. அதையே இப்பவும் சொல்லி சொல்லி புலம்பிக்கிட்டே இருக்கறதுதான் என் மனைவியோட பழக்கம். இப்போ நல்லாத்தான இருக்கோம்னு சொன்னா அப்படியெல்லாம் நீங்க பணத்த வேஸ்ட் பண்ணாம இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கலாமேன்னு சொல்றாங்க. அதச் சொல்லி, சொல்லியே இப்ப இருக்கற சந்தோஷத்தையும் கெடுத்திக்கிறியேன்னு சொன்னாலும் கேக்க மாட்டாங்க. அதான் நமக்கு எதுக்கு டென்ஷன்னு அவங்க தூங்குனதுக்கப்புறம் போவேன்....'

ஒரு பெரிய இலாக்காவின் தலைவர் பொறுப்பில் இருந்தவருடைய நிலமை அப்படி!

இத்தகையோர் நம் குடும்பத்திலோ அல்லது நண்பர், உறவினர் வட்டத்திலோ இருக்கக் கூடும். கலகலப்பான இடத்தில் இத்தகையோர் ஒருவர் இருந்தால் போதும் அந்த இடத்தில் அதுவரையிலும் இருந்த மகிழ்ச்சி நொடிப் பொழுதில் பறந்துவிடும். 

கடந்து போனவைகளைப் பற்றி வருத்தப்படுவதில் எவ்வித பயனும் இருக்கப் போவதில்லை என்பதை இத்தகையோர் உணர்வதே இல்லை. ஆனால் கடந்த காலத்தில் நாம் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் அலசிப் பார்ப்பதால் அவை சரியாகிப் போய்விடுவதில்லை என்பதை இவர்கள் உணராமல் இல்லை. ஆனாலும் அதிலேயே உழன்று தங்களையும் வருத்திக்கொண்டு தங்களைச் சுற்றியுள்ளோரையும் வருத்துவார்கள். இதை அவர்கள் வேண்டுமென்றே செய்வதாக கூறிவிட முடியாது. துவக்கக் காலத்தில் சிறிதாக தோன்றும் இந்த குணநலன் நாளடைவில் பெரிதாகி அவர்களுடைய மனநலத்தையே பாதிக்கக் கூடும் என்பதை அவர்களும் அவர்களுடன் இருப்பவர்களும் உணர்வதில்லை. அல்லது அவர்கள் உணரும் சமயத்தில் அது எளிதில் தீர்வு காண முடியாத அளவுக்கு தீவிரமடைந்திருக்கும். 

இவ்வாறு கடந்த காலத்தைப் பற்றிய வருத்தங்களில் உழல்வோரில் இரண்டு வகை உண்டாம்!

1. கடந்தகாலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வருந்துவோர்.
2. பிறருடைய தவறுகளால் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை நினைத்து வருந்துவோர்

இவர்களுள் முதல் ரகத்தைச் சார்ந்தவர்களாவது பரவாயில்லை. கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து வருந்துவது அவற்றை மீண்டும் செய்யாமலிருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிந்தனையில் சென்றடைந்து  அத்தகைய தவறுகளை தவிர்க்கும் முயற்சியில இறங்க வாய்ப்புள்ளது. 

ஆனால் பிறருடைய தவறுகளால் தங்களுக்கு நேர்ந்த இன்னல்களை நினைத்து நினைத்து வருந்துவோரால் அதிலிருந்து மீளவே முடியாதாம். நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளைப் பற்றி நினைத்து நினைத்து மருகுவதால் நமக்கு எந்த பயனும் இல்லை என்பதை அவர்களால் புரிந்துக்கொள்ளவே முடிவதில்லை. ஆகவே அந்த நினைவுச் சக்கரத்திலிருந்து இவர்களால் மீண்டு வர முடிவதில்லை, அதாவது அவரை சுற்றியுள்ளவர்களுடைய உதவி இல்லாமல்..

இத்தகைய கவலைகளிலிருந்து விடுபட நமக்கு 'மிருக குணம்' வேண்டும் என்கின்றனர் சில மன நல ஆய்வாளர்கள். 

அது என்ன மிருக குணம்?

நம்மைச் சுற்றி வாழும் வீட்டு விலங்குகளான நாய், பூனை, ஆடு, மாடு, கோழி எதுவுமே கவலைப் படுவதில்லை. ஏனெனில் அவை நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கின்றன. நடந்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளவோ அல்லது நடக்கப் போவது என்ன என்று சிந்திக்கவோ அவற்றிற்கு தெரிவதில்லை. 

ஆகவேதான் 'Live for the present' என்கிறார்கள். நேற்று நடந்தவைகளைப் பற்றியும் நாளைக்கு நடக்கவிருப்பதைப் பற்றியும் கவலைப்பட்டு இன்றைய தினத்தை ஏன் வீணடிக்க வேண்டும்? நேற்றைய தோல்விகளைப் பற்றியே சிந்தித்து இன்றைய தினத்தை வீணடித்துவிட்டால் நாளையும் இதே கவலைதான் நம்மை ஆட்டிப் படைக்கும். 

இரவும் பகலும் சேர்ந்ததுதான் ஒரு நாள் என்பது எவ்வளவு நிச்சயமோ அதுபோலத்தான் கடந்த கால நினைவுகளும். சுகமும் இருக்கும் சோகமும் இருக்கும். சோகமான சிந்தனைகளைப் பற்றி நினைத்துக்கொண்டிருப்பதால் சோகம் குறையப் போவதில்லை. ஆனால் சுகமான நினைவுகளை அசைபோடும் போது மகிழ்ச்சி கூடும். அதே போன்ற நினைவுகள் மீண்டும் அதே போன்ற சாதனைகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கும். 

ஆகவே சுகமான நினைவுகளை உள்ளத்தில் வைத்திருக்க முயல்வோம். முயன்றால் முடியாதது உண்டா என்ன? 


********* 

03 ஜூன் 2014

ரசிகனும் விமர்சகனும்


ரசனை உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் எதுவுமே கசக்காது என்பார்கள். வாழ்க்கையில் வெற்றிகள் கிடைத்ததும் வானளாவ மகிழ்வதும் துயரங்கள் வந்ததும் துவண்டுவிடுவதும் ரசனை உணர்வு உள்ளவர்களிடம் காண்பது அரிது. அரை கப் பானத்தை பார்த்ததும் இவ்வளவுதானா என்ற  நிராசையும் இவ்வளவாவது கிடைத்ததே என்று திருப்தியும் ஏற்படுவது இந்த ரசனை குணத்தால்தான். எந்த விஷயத்திலும் செயலிலும் உள்ள நிறைகளை மட்டுமே காண்பவர்களுக்கு எதையும் ரசிக்கும் குணம் அல்லது பண்பு அதிகம் உள்ளது என்று எடுத்துக்கொள்ளலாம். எதிலுமே குறையை மட்டுமே காண்பவர்களுக்கு இது சற்று குறைவாக உள்ளது என்றும் கூறலாம். 

விளையாட்டு மற்றும் திரைப்படங்களை ரசிகனும் விமர்சகனும் ஒரே கண்ணோட்டத்துடன் அணுகுவதில்லை. ஒரு விளையாட்டு வீரராகட்டும் அல்லது ஒரு திரையுலக கதாநாயகனாகட்டும் அவர்களுடைய செயல்பாடுகளில் நிறையை மட்டுமே காண்பவர்கள் அவர்களுடைய ரசிகர்கள். ஒருவரை ரசிகர்களுக்குப் பிடித்துவிட்டால் அவர்களுடைய செயல்பாடுகளில் குறைகள் இருந்தாலும் அவற்றை மறந்து நிறைகளை மட்டுமே கண்டு போற்றுவார்கள். ஆனால் விமர்சகர்கள் அப்படியில்லை. இவர்களிலும் கூட இருதரப்பான விமர்சகர்கள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. நல்ல ஆக்கபூர்வமான விமர்சகர்கள் (constructive critics) குறைகளை சுட்டிக்காட்டி விமர்சிப்பதுடன் நிறைகளையும் எடுத்துக்காட்டி பாராட்ட தயங்கமாட்டார்கள். ஆனால் குறை காண்பதற்கெனவே பிறவி எடுப்பதுபோல் விமர்சிப்பவர்கள் நிறைகளை மூடி மறைப்பதில் சூரர்கள். இவர்களை destructive critics எனலாம். இத்தகையோரின் விமர்சனத்திற்கு பின்னால் ஒரு வகை காழ்ப்புணர்வு தென்படுவதைக் காணலாம். 

இவர்களுடைய பின்புலத்தை சற்று ஆராய்ந்தால் இவர்களுக்கு தங்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற மனப்போக்கு இருப்பதை உணர்ந்துக்கொள்ள முடியும். இந்த பூமியில் இவர்களுக்கு தெரியாத விஷயமே இல்லை என்பதுபோல் எல்லாவற்றை பற்றியும் விமர்சிப்பார்கள். இவர்கள் சார்ந்திருக்கும் துறையை மட்டுமல்லாமல் எல்லாவற்றையும் பற்றி எழுது தங்களுடைய மேதாவிலாசத்தை காட்டிக்கொள்வதில் முனைப்பாய் இருப்பார்கள். கண்ணில் தெரிபவர்களைப் பற்றியெல்லாம் சகட்டுமேனிக்கு விமர்சிக்கும் இவர்களுடைய விமர்சனத்தை யாராவது எதிர்த்துவிட்டால் போதும் பொங்கியெழுந்துவிடுவார்கள்.

சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தங்களுடைய அணி ஜெயித்து அரையிறுதிக்குள் நுழைந்ததும்  அந்த அணி ஏதோ இந்திரலோகத்தையே வென்றுவிட்டதுபோல் பாராட்டி மகிழ்ந்ததையும் ஆனால் அதே அணி இறுதியாட்டத்திற்குள் நுழைய முடியாமல் தோற்றதும் அதற்கு அந்த அணியின் தலைவரை (captain) மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்ததையும் பதிவுலகிலும், முகநூல், மற்றும் ட்விட்டரில் கடந்த ஒரு வார காலமாகவே காண முடிகிறது. இத்தகைய கீழ்த்தரமான விமர்சனத்தில் இறங்கியவர்களுள் ஒருவராவது இந்த விளையாட்டை விளையாடியிருப்பார்களா என்றால் இல்லை என்றுதான் பதில் வந்திருக்கும். ஒருநாள், இருபதுக்கு இருபது போட்டிகளில் உலக கோப்பை வெற்றி , சாம்பியன்ஸ் கோப்பையில் வெற்றி என பல வெற்றிகளை குவித்த இந்திய அணியையும் ஏழு முறை நடந்த ஐபிஎல் போட்டிகளில் ஐந்து முறை இறுதிப் போட்டிக்கும் அவற்றில் இரண்டு முறை கோப்பையையும் வெல்ல வைத்த சென்னை அணியையும் தலைமையேற்று நடத்திய தோனியை ஒன்றுக்கும் பயனற்றவர் (useless) என்று விமர்சித்தவண்ணம் இருந்தார் ஒரு மெத்த படித்த மேதாவி. அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்னும் அளவுக்கு அவர் எழுதுவதை பார்த்திருக்கிறேன். ஆனால் இவர் எழுதுவதை யாராவது எதிர்த்து எழுதிவிட்டால் போதும் இவர் மட்டுமல்லாமல் இவருடைய அடிவருடிகளும் ஒருசேர இணைந்து அவரை தாக்கி உருக்குலைத்துவிடுவார்கள். 

இதுபோலவே பதிவுலகிலும் திரைப்படங்களை விமர்சிப்பவர்களைப் பார்த்திருக்கிறேன். ஒரு காலத்தில் தமிழ்வாணன் என்றொருவர் இருந்தார். அவர் விமர்சிக்காத திரைப்படமே இல்லை எனலாம். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அவரே ஒரு படத்தை எடுத்தார். அதுதான் அவருக்கு முதலும் இறுதியுமான படம். ஒரு வாரம் கூட ஓடாமல் சுருண்ட படம் அது. அத்தனை கொடுமையாக எடுத்திருந்தார். 

இதுபோல்தான் பல விமர்சகர்களும். இப்போதெல்லாம் பத்திரிகைகளிலும் இணையங்களிலும் வெளிவரும் விமர்சனங்களை நம்பி திரைப்படங்களுக்கு செல்ல முடிவதில்லை. ஏனெனில் எந்த விமர்சனமும் பாரபட்சமற்றதாக இருப்பதில்லை. விமர்சிப்பவரின் மனம் கவர்ந்த இயக்குனரோ அல்லது நாயகனோ நடித்திருந்தால் அதை ஆகா ஓகோ என்று பாராட்டி எழுதுவார்கள் இல்லையென்றால் கிழி கிழி என்று கிழித்தெறிந்திருப்பார்கள். தயாரிப்பாளருடைய  sponsorsed விமர்சகர்களும் உண்டு. 

விமர்சிக்கப்படுபவரைக் காட்டிலும் திறம்பட செயல்பட முடிபவர்தான் விமர்சனத்தில் இறங்க வேண்டும் என்பதில்லை. யாருக்கும் எவரையும் விமர்சிக்க உரிமை உண்டு. ஆனால் எந்த உரிமையும் (right) அதற்கு இணையான பொறுப்பையும் (responsibility) கொண்டுள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்துவிடுகிறோம். பொறுப்பற்ற விமர்சனம் யாருக்கும் எவ்வித பயனையும் அளிப்பதில்லை. மாறாக மனக்கசப்பையே விளைவிக்கிறது. 

ஆகவே விமர்சியுங்கள். ஆனால் விமர்சனம் என்பது குறையை மட்டுமே சுட்டிக்காட்டுவதாக அமைந்துவிடக் கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள். விமர்சகர்கள் தங்களுடைய மேதாவிலாசத்தை காட்டும் எண்ணத்துடன் செயல்படுவதைத் தவிர்க்கவேன்டும்.  நடுநிலைமையுடன் செய்யப்படும் விமர்சனம் விமர்சகருக்கு மட்டுமல்லாமல் அவரால் விமர்சிக்கப்படுபவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

********


23 மே 2014

இது மோடியின் ராஜதந்திரமா இல்லை சுய விளம்பரமா?

அந்த காலத்தில் ஒரு நாட்டில் புதிதாக மன்னர் முடிசூட்டப்படும்போது அந்த நாட்டைச் சுற்றியுள்ள நாடுகளின் மன்னர்களை அந்த முடிசூட்டும் விழாவுக்கு அழைப்பார்களாம். அவற்றிற்கு இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். 

முதலாவது உங்களுடைய நட்பும் ஆதரவும் எனக்கு தேவை என்பதைச் சுட்டிக்காட்டுவது. 

இரண்டாவது நானும் ஒரு அரசன் என்ற அங்கீகாரம் அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணம். 

இதற்கும் நம்முடைய நாட்டின் பதினான்காம் பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடி அந்த விழாவுக்கு தெற்காசிய நாட்டுத் தலைவர்களை எல்லாம் அழைத்ததற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ ? 

யாரும் சற்றும் எதிர்பார்த்திராத அவருடைய இந்த நடவடிக்கைக்கு நான் மேற் கூறிய இரண்டாவது காரணம்தான் உண்மையான காரணம் என்று நினைக்கின்றேன். உள்நாட்டில் இன்னும் என்னை பலரும் பிரதமராக ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். ஆகவே நீங்கள் என்னுடைய பதவி ஏற்பு விழாவிற்கு வருகை தருவதன் மூலமாக அந்த அங்கீகாரத்தை எனக்கு தாருங்கள், அதனால் உள்நாட்டில் எனக்கு மதிப்பு கூடும் என்கிற எண்ணம்.

இவர் ஒரு இஸ்லாமிய விரோதி ஆகவே இவர் பிரதமரானால் நமக்கு மட்டுமல்லாமல் இந்திய துணைக்கண்டத்திற்கே ஒரு அச்சுறுத்தலாக இருப்பார் என்று தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் கூட பாக்கிஸ்தானில் இருந்து கருத்து வெளியிடப்பட்டது. ஏனெனில் மோடிக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள் பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடலாம் என்று பாஜக தலைவர் ஒருவரே வெளிப்படையாக கூறியது நினைவிருக்கலாம். இதிலிருந்து என்ன தெரிகிறது? மோடியை விரும்பாதவர்கள் இஸ்லாமியர்கள் மட்டுமே என்றுதானே? ஆகவேதானே இஸ்லாமிய நாடான பாக்கிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்ற எச்சரிக்கை விடப்பட்டது! இப்படிப்பட்ட சூழலில் நானே பாக்கிஸ்தான் பிரதமரை என்னுடைய பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தால் என்னைப் பற்றி இதுவரை வெளிவந்துள்ள எண்ணத்தை மாற்றி விடலாம் என்பதுடன் இந்த ஒரேயொரு செயல்பாட்டால் மேற்கத்திய நாடுகளிடம் என்னைப் பற்றி நிலவி வரும் எண்ணத்தையும் மாற்றிவிடலாம் என்றும் மோடி கருதியிருப்பார். ஆனாலும் வெறுமனே பாக்கிஸ்தான் அதிபரை மட்டும் அழைத்தால் இந்த தன்னுடைய எண்ணத்தை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாதே என்ற நினைப்பில் அவருக்கு தோன்றிய மாற்று உத்திதான் தெற்காசிய கூட்டமைப்பிலுள்ள அனைத்து நாட்டுத் தலைவர்களையும் அழைப்பது என்ற முடிவு. 

கடந்த ஆண்டு பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் (POK) பாக்கிஸ்தான் இராணுவத்தினர் ஒரு இந்திய வீரரின் தலையைத் துண்டித்துவிட்ட செய்தி வெளியான தினங்களிலிருந்து ஒரு சில வாரங்கள் கழித்து பேச்சு வார்த்தைக்காக அந்த நாட்டு வெளியுறவு அதிகாரிகள் குழு நம் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தது. அப்போது 'நம்முடைய நாட்டு வீரரின் தலையைக் கொய்தவருக்கு தில்லியில் பிரியாணி பரிமாறப்படுகிறது' என்று பொதுக்கூட்டம் ஒன்றில் எள்ளி நகையாடியவர்தான் இந்த மோடி. இப்போது என்ன நடக்கிறது? தேர்தல் முடிவுகள் வெளிவந்த அடுத்த நாளே அதே எல்லைப் பகுதியில் பாக்கிஸ்தான் இராணுவம் எல்லை மீறி புகுந்ததால் ஏற்பட்ட மோதலில் ஒரு இந்திய இராணுவ அதிகாரி உயிரிழந்தார். அதற்கு இன்னமும் பாக்கிஸ்தான் வருத்தம் தெரிவிக்காத நிலையில் அந்த நாட்டு பிரதமருக்கு அழைப்பு செல்கிறது.

இந்திய மீனவர்கள் வடக்கே பாக்கிஸ்தான் கடற்படையினராலும் தெற்கே இலங்கை கடற்படையினராலும் துன்புறுத்தப்படுவதற்கு முக்கிய காரணம் மத்தியிலுள்ள வலுவற்ற ஆட்சியாளர்களே என்று கூறிவந்த மோடி இப்போது பாக்கிஸ்தான் பிரதமரை மட்டுமல்லாமல் இலங்கை அதிபரையுமல்லவா அழைத்திருக்கிறார்?

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் மோடியை வாழ்த்துவதற்காக அவரை சந்திக்கச் சென்ற பாஜகவின் கூட்டாளி கட்சிகளில் ஒன்றான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே நீங்கள் எதைச் செய்தாலும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை மட்டும் இந்தியாவுக்குள் விளையாட அனுமதிக்கலாகாது என்று ஒரு வேண்டுகோளை வைத்தார். அப்போதே மோடி நான் இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்க வேண்டிய தேவையில்லை என்பதை இவருக்கு காட்ட வேண்டும் என்று எண்ணி அவர்களுடைய கிரிக்கெட் அணியை என்ன அவர்களுடைய பிரதமரையே அழைக்கிறேன் பார் என்று முடிவெடுத்திருக்க வேண்டும். 

இலங்கை அதிபரை அழைக்கவும் இதே எண்ணம் தான் காரணம். ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவர் மீது சர்வதேச விசாரணை நடத்த இந்தியா முன்நின்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதுவரை இலங்கையை ஒரு எதிரி நாடாக கருத வேண்டும் என்று தமிழக சட்ட்மன்றத்திலேயே தீர்மானம் நிறைவேற்றியதையும் தமிழகத்திலுள்ள கட்சிகள் எதில் உடன்படுகிறார்களோ இல்லையோ ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக கருதுவதில் தங்களுடைய அனைத்து வேற்பாடுகளையும் மறந்து ஒன்றுபட்டு நிற்பதையும் மோடி அறியாதவரா என்ன? முந்தைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்களுடைய ராஜபக்சே வெறுப்பை கண்டுக்கொள்ளவில்லை ஆனால் பாஜக அப்படியல்ல என்று அவருடன் கூட்டு வைத்து அவருக்காகவே வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த தமிழக கட்சிகள் விரும்புவது என்ன என்பதையும் மோடி அறியாதவரா? இருப்பினும் அவர் இப்படியொரு முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? உங்களுடைய எண்ணங்கள் எனக்கு முக்கியமில்லை நான் என் வழியிலேயேதான் செல்வேன் என்று சொல்லாமல் சொல்கிறார். அதுதான் உண்மை. இதை அவர் தூக்கியெறிய விருக்கும் துணை/இணை அமைச்சர் பதவிகளுக்காக காத்திருக்கும் தமிழக கட்சிகள் புரிந்துக்கொண்டால் நல்லது. 

அவருடைய நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்று அவரை எதிர்த்து நான் எழுதி வந்துள்ள பல பதிவுகளிலும் கூறியிருக்கிறேன். இது அவருக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால்தானோ என்னவோ  ஒரேயொரு இடத்தைத் தவிர மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அவரை புறக்கணித்தார்கள். அன்புமணி ஜெயித்தது சாதியின் அடிப்படையில் மட்டுமே என்பதால் அதைப்பற்றி இங்கு பேசுவதில் எந்த பயனும் இல்லை. ஆக மோடியின் செயல்பாடுகளைப் பற்றி அறியாமல் இருந்தது அவருக்கு துணை சென்ற தமிழக கட்சிகள் மட்டுமே. இவர்கள் தலைகீழாக நின்றாலும், ஏன் அவருடைய பதவி ஏற்பு விழாவையே புறக்கணித்தாலும் மோடியின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அவருடைய தாரக மந்திரம் நாட்டின் பொருளாதார மேம்பாடு (economic development) மட்டுமே. `அதற்கு அண்டை நாடுகளுடன் நட்புறவு மிக, மிக அவசியம் என்பது அவருக்கு தெரியும். அதுதான் சரியான தீர்வும் கூட.

தெற்காசிய நாடுகள் மட்டுமல்லாமல் அவற்றைக் கடந்து அண்டை நாடுகள் எனப்படும் சீனா,  கிழக்கேயுள்ள ஜப்பான், தென் கொரியா போன்ற ஆசிய நாடுகளுடனான நட்புறவும் நமக்கு அவசியம். மேலும் தன்னை உள்ளே வரவேண்டாம் என்று பல  ஆண்டுகள் விசா அளிக்க மறுத்து வந்த அமெரிக்காவை நம்புவதை விட அதற்கு செக் மேட் வைக்கக் கூடிய நாடுகளான, ஐநா பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பு நாடுகளான, சீனா மற்றும் ரஷ்யா நாடுகளின் நட்புறவு மிகவும் அவசியம் என்பதும் மோடிக்குத் தெரியும். மோடி குஜராத் மாநில முதலமைச்சரானதும் முதலில் விஜயம் செய்த நாடுகள் ஜப்பானும் சீனாவும்தான். இவர் சீனாவுக்கு சென்று வந்த பிறகுதான் அங்கு பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வந்திருந்த குஜராத்தி வைர வியாபாரிகளில் பலர் விடுதலை செய்யப்பட்டனர். 

இதுதான் மோடியின் பின்புலம். சீனாவோடு நட்புறவை வளர்த்துக்கொண்டால் பாக்கிஸ்தானின் அத்துமீறல்கள் மட்டுமல்லாமல் இலங்கையின் அட்டூழியங்களும் குறையும் என்பது அவருடைய நம்பிக்கை. அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்தியத் துணைக்கண்டத்தில் அடாவடி செய்துக்கொண்டிருக்கும் இவ்விரு நாடுகளும் அமெரிக்காவை விட சீனாவுக்குத்தான் அஞ்சுகின்றன என்பதும் சீனாவின் தயவில்தான் இந்த நாடுகளின் பொருளாதாரம் உள்ளன என்பதும் நம்மவர்களுக்கு தெரிகிறதோ இல்லையோ மோடிக்கு மிக நன்றாகவே தெரிந்துள்ளது. இது காங்கிரசுக்கும் தெரியும், முந்தைய பிரதமர் மன்மோகனுக்கும் தெரியும். ஆனால் துணிந்து நடவடிக்கையில் இறங்க முடியாத அளவுக்கு கூட்டணி கட்சிகளின் நெருக்குதல் அவர்களுக்கு தடையாக இருந்தது. ஆனால் மோடிக்கு அந்த தடை இல்லை. 

இந்தியாவின் பொருளாதாரம் அசுர வேகத்தில் முன்னேற வேண்டுமென்றால் அன்னிய நாட்டின் முதலீடு எவ்வளவு முக்கியமோ நம்முடைய நாட்டு நிறுவனங்கள் அன்னிய நாடுகளுக்குச் சென்று முதலீடு செய்வதும் அங்கு தங்களுடைய வணிகத்தைப் பெருக்குவதும் முக்கியம். இதை மோடி உணர்ந்திருக்கிறாரோ என்னமோ தெரியாது ஆனால் அவருக்காக கோடிக் கணக்கில் வாரி இறைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தியுள்ள வர்த்தக முதலாளிகளுக்கு மிக நன்றாகவே தெரியும்.  எனக்கு இஸ்லாமிய சிங்கள நாடுகளின் செயல்பாடுகளில் உடன்பாடில்லை என்றால் என்ன அவர்களுடனான வர்த்தக தொடர்புக்கு மதிப்புள்ளதாயிற்றே? நாய் விற்ற காசு குரைக்கவா செய்யும்? இதுதான் மோடியின் தத்துவம். அதை மக்கள் உணர்ந்திருந்ததால்தான் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும் அவருக்கு வாக்களித்து சரித்திரம் கண்டிராத வெற்றியை அவருக்கு அளித்துள்ளனர் என்பதை அவருடன் கூட்டு வைத்துள்ள கட்சிகள் உணர்ந்துக்கொண்டு செயல்பட்டால் நல்லது. அதை விட்டு விட்டு எங்கோ இருக்கும் தமிழனின் நலன்தான் முக்கியம் என்று வாய் கிழிய பேசிக்கொண்டிருந்தால் தங்களுக்கு கிடைக்கவிருக்கும் வாய்ப்புகளையும் பறிகொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிடுவார்கள். 

எங்கோ இருக்கும் தமிழனைப் பற்றிய கவலையை விடுங்கள் எங்களுடைய மீனவர்கள் அநியாயமாக கொல்லப் படுகிறார்களே அதற்கு என்ன பதில் என்று கேட்கிறீர்களா? அதற்கும் கூடிய விரைவில் ஒரு வழி பிறக்கும். இந்திய கடல் எல்லைகளில் நம்முடைய கடற்படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்படும். இதன் மூலம் தவறுதலாகக் கூட எல்லை தாண்டிச் செல்லும் நம்முடைய மீனவர்கள் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இது ஒன்று மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக இருக்கும். மேலும் இத்தகைய இடையூறுகளுக்கு பின்புலமாக இருக்கும் சீனாவின் செயல்பாடுகளும் மோடியின் சீனாவுடனான நட்புறவால் முடிவுக்கு வரும்.

ஆனால் ஆங்கிலத்தில் One should not bite more than one can chew என்பார்கள். அதாவது மென்று விழுங்க முடியாத அளவுக்கு உணவை எடுத்துக்கொள்ளக் கூடாதாம்! இதை ஏன் சொல்கிறேன் என்றால் அரசியலிலும் கூட ஆற அமர தீர்க்கக் கூடியவைகளை அவசரப் பட்டு ஒரே சமயத்தில் தீர்க்க முயலக் கூடாது.  இது மோடியின் விஷயத்தில் உண்மையாகிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

*********** 


20 மே 2014

தேர்தல் 2014 - விசித்திரமான முடிவுகள்!

நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் பல சுவாரஸ்யமான தகவல்களை தருகின்றன.

ஒரு கட்சி பெறும் இடங்களை விட அது பெறும் வாக்கு விழுக்காடே (vote percentage) அது மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு மதிப்பை பெற்றுள்ளது என்றோ அல்லது ஒரு தேர்தலில் வாக்களித்தவர்களில் எத்தனை விழுக்காடு வாக்காளர்கள் அந்த கட்சியை ஆதரித்தார்கள் என்றோ காட்டுகிறது என்பார்கள். 

இந்த அடிப்படையில் பார்த்தால் ஒரு கட்சி தேர்தலில் பெறும் வாக்கு விழுக்காட்டுக்கும் அது வெற்றி பெறும் இடங்களுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்க வேண்டும் அல்லவா? 

ஆனால் கடந்த இரு பொதுத் தேர்தல் முடிவுகளை ஒப்பிடும்போது சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் பல விசித்திர முடிவுகளை அளித்துள்ளதைக் காண முடிகிறது. 

கீழ்காணும் பட்டியலைப் பாருங்கள்:


கடந்த, அதாவது 2009ல் நடந்த தேர்தலில் 22.90 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்த அஇஅதிமுக இம்முறை அதை இரட்டிப்பாக்கியுள்ளது, அதாவது 44.30 விழுக்காடு வாக்குகளை பெற்றுள்ளது. இதன் அடிப்படையில் 2104ல் அது வெற்றிப் பெற்ற இடங்களின் எண்ணிக்கையும் 9லிருந்து 18 ஆக அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அது பெற்ற இடங்களோ நான்கு மடங்கு. அதாவது 2009ல் ஒன்பதாக இருந்த அதன் இடங்கள் 2014ல் 37 ஆக உயர்ந்துள்ளது.

திமுகவை எடுத்துக்கொண்டால் 2009ல் 25.10 விழுக்காடாக இருந்த அதன் வாக்கு விழுக்காடு 2014ல் வெறும் 1.50 விழுக்காடு குறைந்து 23.60 விழுக்காடாக இருந்தது. இதன் அடிப்படையில் 2009ல் 18ஆக இருந்த அதன் இடங்கள் சுமார் இரண்டு இடங்கள் குறைந்து 16ஆக இருந்திருக்க வேண்டும். ஆனால் 2014ல் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

இந்திய அளவிலும் இதே போக்குதான் காணப்படுகிறதுஇதற்கு என்ன காரணம்?

உலகிலுள்ள பல நாடுகளிலும் கட்சிகள் மட்டுமே போட்டியிடுகின்றன. தேர்தலின் முடிவில் கட்சிகள் பெற்றுள்ள வாக்கு விகிதங்களின் அடிப்படையில் நாட்டின் ஆட்சி மன்றங்களில் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 

ஆனால் இந்தியாவில் நாடு முழுவதும் சிறு, சிறு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் அதிக வாக்குகள் பெறுபவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இது winner take all என்ற அடிப்படையில் அமைகிறது எனலாம். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் 44.30 விழுக்காடு வாக்காளர்கள் மட்டும் வாக்களித்த ஒரு கட்சிக்கு மொத்தமுள்ள இடங்களில் 90 விழுக்காடுக்கும் மேல் இடங்கள் கிடைத்துவிட்டது. அப்படியானால் அவரை எதிர்த்து வாக்களித்த மக்களின் வாக்குகள் அனைத்தும் செல்லாக் காசாகி விட்டன என்பதுதானே பொருள்?

இந்திய அளவில் பார்த்தால் வெறும் 31.00 விழுக்காடு வாக்காளர்களால் ஆதரிக்கப்பட்ட ஒருவர் அவரை எதிர்த்து வாக்களித்த 69.00 விழுக்காடு வாக்காளர்களுக்கும் பிரதமராகிறார்! 

ஆகவேதான் இந்த முறை மாற்றப்பட்டு கட்சிகள் பெறும் வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நாடாளுமன்றத்தில் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இல்லையென்றால் தேர்தலின் நோக்கமே கேலிக்குறியதாகிவிடும் என்பது என்னுடைய கருத்து.

******

தமிழக தேர்தல் முடிவுகளை இன்னும் ஆழமாக ஆய்வு செய்தால் 2009 தேர்தலிலும் சமீபத்தில் நடந்த தேர்தலிலும் அஇஅதிமுக பெற்ற வாக்கு விழுக்காடு இரட்டிப்பாக அதிகரித்ததற்கு முக்கிய காரணம் அதை எதிர்த்து நின்ற கட்சிகள் இழந்த அனைத்து வாக்குகளும் அதிமுகவுக்குச் சென்றுவிட்டன என்பதை உணரமுடிகிறது. 

இதற்குக் காரணம் அதிமுகவை எதிர்த்து முந்தைய தேர்தலில் கூட்டணி அமைத்து களம் இறங்கிய கட்சிகள் இம்முறை தனித்தனியாக நிற்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன என்பதுதான். அதாவது அதிமுகவுக்கு எதிராக விழுந்துள்ள 56 விழுக்காடு வாக்குகள் நாலாபுறமும் சிதறியதாலேயே அதிமுகவால் நினைத்தும் பார்க்க முடியாத அளவு இடங்களைக் கைப்பற்றியுள்ளது. 

இதுமட்டுமேதான் அதிமுகவின் வரலாறு காணாத வெற்றிக்குக் காரணம். 

அதை விடுத்து எங்களுடைய கடந்த மூன்றாண்டு கால மக்கள் நலத் திட்டங்களுக்கு மக்கள் அளித்த பரிசு இது என்று அதிமுக கூறிவருவது சரியல்ல. 

மேலும் காங்கிரஸ் கட்சியின் கடந்த பத்தாண்டு கால அலங்கோல ஆட்சியால் வெறுப்புற்று போயிருந்த மக்கள் அதனுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி செய்த திமுகவையும் தண்டித்தே ஆகவேண்டும் என்ற மனநிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனாலும் திமுகவுக்கு எப்போதும் இருந்து வந்துள்ள வாக்கு வங்கியில் பெரிதாக ஏதும் தாக்கம் ஏற்படவில்லை என்பது அது பெற்றுள்ள வாக்கு விழுக்காடிலிருந்து தெரிகிறது. இவ்விரண்டு தேர்தல்களிலும் அது பெற்றுள்ள வாக்கு விகிதத்தில் 1.50 விழுக்காடு மட்டுமே சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை என்றால் அது தேர்தல் நடத்தும் விதத்திலுள்ள குறைபாடே அல்லாமல் வேறில்லை. மேலும் மொத்த முள்ள 39 தொகுதிகளில் பாஜக மற்றும் பாமக வெற்றிபெற்றுள்ள இரண்டு தொகுதிகளைத் தவிர மற்ற அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தைப் பெற்றது திமுகதான். ஆகவே அன்புமனி ராமதாஸ் பீற்றிக்கொள்வதைப் போல திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படவில்லை என்பதுதான் உண்மை.

******

மேலும் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் இந்த தேர்தலை அணுகிய முறையிலும் பெருத்த வித்தியாசத்தை காண முடிகிறது.

திமுக தன்னுடைய பலன் எது என்று உணராமல் கூட்டு சேர வந்த காங்கிரசை உதறியது. தேதிமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்தாலாவது சில இடங்களை  தேற்றியிருக்கலாம். அதையும் அவராக வந்தால் பார்க்கலாம் என்று பேசிப் பேசியே காலத்தை வீணடித்துவிட்டனர்.  இடையில் அழகிரி வேறு சச்சரவை ஏற்படுத்தி கட்சியின் உள்பூசலை அம்பலமாக்கிவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் தங்கள் கட்சியை எதற்காக மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று பேசாமல் ஜெயலலிதாவை கிண்டலடிப்பதிலேயே குறியாயிருந்தனர். அதுவும் கூட மக்களை வெறுப்படையச் செய்திருக்கலாம். 

ஆனால் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தனித்துத்தான் போட்டியிடுவது என்று அஇஅதிமுக தீர்மானித்தது. இதற்கு முக்கிய காரணம் கடந்த மூன்றாண்டுகளில் எதையும் பெரிதாக நாம் சாதிக்கவில்லை, ஆகவே மக்களின் ஏகோபித்த ஆதரவு நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்பதை அந்த கட்சி உணர்ந்திருந்தது. இருந்தும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் நமக்கு எதிராக விழக்கூடிய வாக்குகளை சிதறடிக்க வேண்டும் என்று ஜெயா மிகச் சரியாக ஊகித்தார். மேலும் திமுகவுடனோ அல்லது காங்கிரசுடனோ எந்த கட்சியும் கூட்டு வைத்துக்கொள்ள முன்வராது என்பதையும் மீதமுள்ள கட்சிகள் பாஜகவுக் இணைந்து போட்டியிட்டாலும் அதனால் சொல்லக் கூடிய அளவுக்கு தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதையும் அவரால் கணிக்க முடிந்தது. ஆகவேதான் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதென முடிவு செய்தார்.

அதல்லாமல் மத்தியில் ஆட்சி செய்யவுள்ள அரசில் அங்கம் வகிக்கும் கட்சியாக தனது கட்சியை தெரிவு செய்ய வேண்டும் என்று ஜெயா  முழங்கி வந்தது எல்லாம் வெறும் ஜாலவித்தையே. கடந்த பத்தாண்டுகளாக திமுக மத்தியில் அங்கம் வகித்திருந்தாலும் மத்திய அரசு தமிழகத்தில் கொண்டு வந்த பல நலத்திட்டங்களை அந்த காலத்தில் சுமார் ஏழு ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த அஇஅதிமுகவின் ஒத்துழைப்பின்மையால் பெரிதான தாக்கம் எதையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. மத்திய அரசில் அங்கம் வகித்திருந்த திமுகவின் முயற்சியால் பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைத்தும் அதை முழுமையாக செயலாக்காமல் தடுத்து நிறுத்தியது அஇஅதிமுக அரசுதான் என்றால் மிகையாகாது.

இதை ஏன் சொல்கிறேனென்றால் கடந்த தேர்தலில் நரேந்திர மோடியின் அலை உணரடப்படாத ஒரு சில மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நரேந்திர மோடி பிரதமானால் அதை செய்வார், இதை செய்வார் என்றும் இந்தியர்கள் வெளி நாடுகளுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்கு செல்ல விசா வாங்க வரிசையில் காத்திருந்ததுபோல வெளி நாட்டவர்கள் இந்தியாவுக்கு வர காத்திருக்கும் நிலை வரும் என்றெல்லாம் இங்குள்ளவர்கள் தினந்தோறும் கூறி வருகிறார்கள். ஆனால் அத்தகைய நல்ல திட்டங்களை மத்திய அரசு தீட்டினாலும் அவற்றை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டுமென்றால் இங்குள்ள மாநில அரசு மத்திய அரசுடன் தோழமையுடன் செயல்பட வேண்டும். மத்திய அரசு கொண்டு வரும் எந்த நல்ல திட்டமும் மாநிலத்தில் செயல்படுத்துவதற்கு மாநில அரசால் மட்டுமே முடியும். பறக்கும் சாலைத் திட்டத்தை கிடப்பில் போடுவதற்கு மாநில அரசு செய்ததுபோல் இனி வரும் மத்திய திட்டங்களுக்கும் மாநில அரசு முட்டுக்கட்டை போடுமானால் மத்திய அரசின் எந்த நலத்திட்டங்களும் தமிழகத்திற்கு பலனளிக்காமல் போய்விடும். 

நம்முடைய முதலமைச்சருக்கும் புதிய பிரதமர் மோடிக்கும் இடையே நல்ல நட்பு உள்ளது என்றும் ஆகவே அவர் பிரதமராவதற்கு இவர் ஆதரவு தெரிவிப்பார் என்று கூறிய ஒரே காரணத்திற்காக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மலைச்சாமியை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் கட்சியின் அடிப்படைத் தொண்டர் நிலையிலிருந்தே தூக்கியெறிந்தவர் ஜெயலலிதா. இதன் மூலம் அவர் தெரிவிக்க விழைந்தது என்ன? மோடி பிரதமராவதல்ல கட்சியினுடைய விருப்பம் என்பதுதானே? பாஜகவுக்கு இந்த அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்று அவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. ஒருவேளை மூன்றாம் அணியினருக்கு பெரும்பான்மை கிடைத்தால் முன்பே மமதா கூறியதுபோன்று தமக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைக்கக் கூடும் என்று எண்ணியிருப்பாரோ? இருக்கும். இல்லையென்றால் அத்தனை மூர்க்கத்தனமாக மயில்சாமியை கட்சியைவிட்டே தூக்கியெறிந்திருக்க மாட்டார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் இவருடையது மட்டுமல்லாமல் தன்னுடன் கூட்டணி வைத்திருந்த எந்த கட்சியின் தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு மோடிக்கு பெரும்பான்மை கிடைத்துவிட்டது என்பதை அறிந்ததும் உடனே அவருக்கு வாழ்த்துக் கூறி கடிதம் எழுதிவிட்டார். மோடியும் கடிதம் கிடைத்ததும் பதில் கடிதம் போடாமல் உடனே தொலைபேசியில் அழைத்து மத்திய அரசின் அனைத்து ஒத்துழைப்பும் மாநில அரசுக்கு இருக்கும் என்று கூறிவிட்டார் போலிருக்கிறது.

இனிவரும் காலங்களில் இதே நட்பு நிலையை கடைபிடித்து மத்திய அரசின் நலத்திட்டங்களின் பயன்களை அனைத்து மக்களுக்கும் சென்றடையும் வகையில் மாநில அரசு செயல்படுமானால் அடுத்த சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் மோடி மத்தியில் பிரதமராக இருக்கும் வரையில் இங்கும் அஇஅதிமுக தொடர்ந்து ஆட்சி செய்ய வாய்ப்பு உள்ளது. அதை விடுத்து தேவையில்லாத ஈகோவுடன் இப்போதுள்ள அதே மனநிலையுடன் செயல்படுவாரேயானால் அடுத்த தேர்தலிலேயே ஆட்சியை இழந்துவிட வாய்ப்புள்ளது.

இந்த தேர்தல் இன்னொரு அருமையான தீர்ப்பையும் அளித்துள்ளது எனலாம். அதாவது தனிநபர்களை மட்டுமே நம்பியிருக்கும் கட்சிகளுக்கு இனி வாய்ப்பில்லை என்பது. இத்தகைய துக்கடா கட்சிகளால் தங்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் மிகத் தெளிவாக தெரியப்படுத்திவிட்டார்கள். மத்தியில் காங்கிரசும் பாஜகவும் இருபெரும் கட்சிகளாக இருப்பதுபோன்று தமிழகத்தில் திமுக, அஇஅதிமுக என இரண்டு கட்சிகள் போதும். காங்கிரசும் பாஜகவும் கூட இனி இங்கு வேரூன்ற வாய்ப்பில்லை போலுள்ளது. அவர்கள் இருவருமே தமிழகத்தின் இரு பெரும் கட்சிகள் ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்வதைத் தவிர இனி வேறு வழியில்லை. 

**********

  

25 ஏப்ரல் 2014

தேர்தல் குளறுபடிகள் (நேற்றைய பதிவின் தொடர்ச்சி)

நான் நேற்றைய தினம் இட்டிருந்த 'தேர்தல் குளறுபடிகள்' என்ற பதிவில் கருத்துரை இட்டிருந்த பலரும் 'கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க உங்களுடைய பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை இணையதளத்தில் தேடிப் பார்த்திருக்கலாமே' என்று கூறியிருந்தனர். அவர்களுக்கெல்லாம் என்னுடைய பதிலிலேயே விளக்கமளித்திருந்தாலும் அதை பலரும் படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் ஒரு சிறிய விளக்கப் பதிவு.

நான் வசிக்கும் பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட பகுதி ஆகும். இதில் மொத்தம் ஐந்து தெருக்கள் உள்ளன. நான் இந்த தெருக்களின் பெயர்களைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் கூறியுள்ளேன். ஏனெனில் இவை யாவுமே நாட்டின் பிரபல நதிகளின் பெயர்களைக் கொண்டுள்ளன. நகரின் பிரதான தெருவின் பெயர் யமுனா தெரு. அதிலிருந்து இரண்டு தெருக்கள் பிரிகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே மகாநதி தெரு மற்றும் காவேரி தெரு. காவேரி தெருவில் இடம் வலமாக இரண்டு தெருக்கள் பிரிகின்றன. இவற்றின் பெயர்கள் முறையே பவானிதெரு, பொன்னி தெரு. நான் குடியிருப்பது பவானி தெரு. இந்த தெருவில் பத்து வீடுகள் உள்ளன. என்னுடைய வீட்டைத் தவிர்த்தால் மற்ற அனைத்தும் ஐந்து வருடங்களுக்கு மேல் அங்கு உள்ளவை. நான் இங்கு புதுவீடு கட்டி குடிவந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகின்றன.

இதில் விசித்திரம் என்னவென்றால் தேர்தல் ஆணையத்திலுள்ள பட்டியல்களில் இந்த தெருக்களின் பெயர்களே இல்லை. அதில் சிந்து நகர் மெயின் ரோடு, சிந்து நகர் முதல் சாலை, சிந்து நகர் இரண்டாவது சாலை என்றே குறிப்பிடப்பட்டுள்ளன. வீட்டு எண்களும் இப்படித்தான். வீட்டு வாசல்களில் குறிப்பிடப்பட்டுள்ள வீட்டு எண்களுக்கும் வாக்காளர்கள் பட்டியலிலுள்ள எண்களுக்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. என்னுடைய மனைவிக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டிலும் கூட  (Booth slip) என்னுடைய வீட்டு இலக்கம் காலியாக விடப்பட்டிருந்தது. இந்த தெருக்களிலுள்ள பல வீடுகள் ஐந்து, பத்து வருடங்களாக உள்ளன என்கிறார்கள். ஆகவே இங்கு நிரந்தரமாக வசிக்கும் பலருக்கும் Voter ID உள்ளது. ஆனால் அவற்றிலும் கூட வீட்டு இலக்கம் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. 'இதையெல்லாம் பூத்ல யாரும் செக் பண்ணப் போறதில்லை சார். இவ்வளவு ஏன், பூத் ஸ்லிப்புல இருக்கற ஃபோட்டோவுல இருக்கற ஆள்தானா நாமன்னு கூட அங்க யாரும் பாக்க மாட்டாங்க.' என்றார் என்னுடன் வாக்களிக்க வந்திருந்த ஒருவர். வாக்களித்துவிட்டு வந்த என்னுடைய மனைவியும் இதையேத்தான் சொன்னார். 'யாருமே ஃபோட்டோவையெல்லாம் பாக்கலீங்க. லிஸ்ட்ல கையெழுத்த மட்டும் வாங்கிக்கிட்டாங்க' என்றார். வீட்டு வரி ரசீது மற்றும் மின் கட்டண ரசீது மற்றும் தபால் நிலைய பதிவேடுகளில் தெருக்களின் பெயர்களும் வீட்டிலக்கங்களும் சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கும்போது தேர்தல் இலாக்காவில் மட்டும் ஏன் இந்த குளறுபடிகள்? இதற்கு யார் காரணம்? 

இனி என்னுடைய பெயர் விடுபட்ட விஷயத்திற்கு வருவோம். நான் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வேறொரு விலாசத்தில் இருந்ததாலும் என்னுடைய வீட்டு கட்டிடப் பணிகள் முடியும் தருவாயில் இருந்ததாலும் புதுவீட்டுக்கு சென்ற பிறகு பதிவு செய்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு (9.3.2014) புதிய வாக்காளர்களுடைய பெயர்களை பதிவு செய்துக்கொள்ள ஒரு சிறப்பு முகாம் எல்லா வாக்குச் சாவடிகளிலும் நடைபெறவுள்ளது என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கையை கேட்டதும்தான் நானும் என்னுடைய மனைவியும் என்னுடைய தெருவில் புதிதாக குடிவந்திருந்த இன்னும் சிலரும் எங்கள் பகுதி வாக்குச் சாவடிக்குச் சென்று படிவம் எண் 6ஐ சமர்ப்பித்தோம். எங்களுடன் சேர்ந்து அன்றைய தினம் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் அந்த வாக்குச் சாவடியில் விண்ணப்பித்தோம்.

அன்றிலிருந்து சுமார் ஒரு மாதம் கழித்து திருத்தப்பட்ட துணை வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளிவரும் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றார்கள். ஆனால் தேர்தல் தியதி வரையிலும் அவை வெளியிடப்படவே இல்லை. வாக்குச் சாவடிக்கு செல்லும் தினத்தன்றும் காலை எழுந்ததும் இணையதளத்தை ஆராய்ந்தேன். ஆனால் அதே நேரத்தில் பலரும் இதே வேலையை செய்துக்கொண்டிருந்தார்களோ என்னவோ தேர்தல் ஆணைய தளம் முடங்கிப் போயிருந்தது. சரி வாக்குச் சாவடிக்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று சென்றோம். வாக்குச் சாவடிக்கு அருகே அதிமுக, திமுக கட்சியினர் வாக்காளர் பட்டியல் சகிதம் காத்திருந்தனர். அவர்களிடம் விண்ணப்பம் சமர்ப்பித்ததற்கு சான்றாக எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த ரசீதைக் காண்பித்து கேட்டோம். ஆனால் 'இந்த புது லிஸ்ட் எங்கக்கிட்ட இல்ல சார் பூத்தில் கேட்டுப்பாருங்கள்.' என்று கூறவே வேறு வழியின்றி வாக்குச் சாவடிக்குச் சென்றோம். அங்கு ஒரு மாதத்திற்கு முன்பு எங்களிடம் புது விண்ணப்பங்களைப் பெற்ற அதே பணியாளர்கள் (உண்மையில் அவர்கள் மூவரும் அருகிலிருந்து அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களாம்!) அன்றும் பணியில் இருந்தனர். அவர்களிடம் அவர்கள் அளித்திருந்த ஒப்புதல் சீட்டைக் காட்டி எங்க பேர் லிஸ்ட்ல இல்லையே என்றோம். அவர் 'இதுல இருக்காதுங்க. இன்னைக்கி காலையிலதான் எங்களுக்கு வேற ஒரு அடிஷனல் லிஸ்ட் குடுத்துருக்காங்க. அதுல இருக்கான்னு பாக்கறேன்' என்று கூறிவிட்டு தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்த புதிய திருத்தப்பட்ட பட்டியலை எடுத்தார். அதில் ஐந்தாறு பக்கங்களே இருந்தன. அதாவது 9.3.14 அன்று அதே வாக்குச்சாவடியில் புதிதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களுடைய பெயர்களைக் கொண்ட துணைப்பட்டியல்!

அதை வாங்கிப் பார்த்தபோதுதான் தெரிந்தது என்னைப் போலவே அன்று படிவங்களை சமர்ப்பித்த பலருடைய பெயரும் விடுபட்டுப்போயிருந்தது. பலருக்கும் அவர்களுடைய குடும்பங்களில் யாராவது ஒருவர் அல்லது இருவருடைய பெயர்கள் விடுபட்டுப் போயிருந்தன. என்னுடைய விஷயத்தில் என்னுடைய மனைவி பெயர் இருந்தது. என்னுடைய பெயர் இல்லை. எனக்கு அடுத்த வீட்டில் இருந்தவருடைய பெயரும் அவருடைய மகனுடைய பெயரும் இருந்தது. மனைவியின் பெயர் இல்லை. ஏன் என்று கேட்டால் 'எங்களுக்கே புரியலையே சார்' என்ற பதில்தான் மீண்டும், மீண்டும் வந்தது. அவர்களையும் குறை சொல்வதில் பயனில்லை. ஏனெனில் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட படிவங்களை தாலுக்கா அலுவலகத்தில் சமர்ப்பிப்பதுடன் அவர்களுடைய அலுவல் முடிவடைகிறது. ஆனாலும் அவர்களுடன் ஏமாற்றமடைந்த வாக்காளர்கள் சிலர் தேவையில்லாமல் கோபப்பட அவர்களும் பதிலுக்கு கோபப்பட்டனர். பிறகு அங்கு பணியில் இருந்த காவலர்கள் வந்து சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. 

எனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் புதிதல்ல. பணியின் நிமித்தம் நான் பல ஊர்களில் பணியாற்ற வேண்டியிருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அந்தந்த ஊரில் பதிவு செய்துக்கொண்டு வாக்களிப்பது வழக்கம். மும்பையில் இருந்தபோதும் வாக்களித்துள்ளேன். அப்போதெல்லாம் கணினிகளும் இருக்கவில்லை. இருந்தாலும் இந்த அளவுக்கு பிரச்சினை இருக்கவில்லை. சென்னையிலும் கூட இருமுறை வாக்களித்துள்ளேன். இந்த முறை எனக்கு மட்டுமல்லாமல் பலருக்கும் பெயர்கள் விடுபட்ட அனுபவம் ஏற்பட்டுள்ளது. இன்றைய செய்தியில் மும்பையில் ஒரே விலாசத்தில் பல ஆண்டுகள் வசித்து வரும் பிரபல குற்றவியல் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானியின் பெயரே விடுபட்டுப் போயுள்ளது என்ற செய்தியை படித்தபோது அவருக்கே இந்த நிலை என்றால் நாம் எம்மாத்திரம் என்று நினைத்துக்கொண்டேன்.

இம்முறையும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போதும்தான் இத்தகைய குழப்பங்கள் பல இடங்களிலும் ஏற்பட்டுள்ளதாம். இதற்கு முக்கிய காரணம் எவ்வித முன்னனுபவமோ ஆள் பலமோ (Manpower)இல்லாத ஒரு தனியார் நிறுவனத்திடம் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியை ஒப்படைத்ததுதான் முக்கிய காரணம் என்கிறார்கள். இவர்களுடைய cut and paste வேலைதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணமாம். ஒரே விலாசத்தில் பல ஆண்டுகள் வசித்துவந்தவர்களுடைய விஷயத்தில் இவ்வித குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. என்னைப் போன்று புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படும்போதுதான் இவை நிகழ்கின்றன போலும். மேலும் இம்முறை தேர்தலுக்கு ஒரு மாதம் இருக்கும்போதுதான் புதிதாக வாக்காளர்களைச் சேர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டன. இம்முறை தமிழகத்தில் மட்டும் ஆறு லட்சம் புதிய வாக்காளர்கள் 9.3.14 அன்று நடத்தப்பட்ட முகாம்களில் விண்ணப்பத்திருந்தனராம். இவர்களுடைய பெயர்கள்தான் பெரும்பாலும் விடப்பட்டுவிட்டன என்கின்றனர். 

இதில் இன்னுமொரு செய்தியையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நேற்றைய தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில் எப்போதும் இல்லாத அளவுக்கு வாக்கு விகிதம் உயர்ந்திருப்பதைப் பார்க்கும்போது Bogus voting நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவே எண்ணுகிறேன். ஏனெனில் பூத் ஸ்லிப்பில் இருக்கும் புகைப்படத்தை வாக்குச்சாவடியில் அமர்ந்திருக்கும் பணியாளர்கள் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. பூத் ஸ்லிப்பிலோ அல்லது வாக்குச்சாவடியிலுள்ள பட்டியலிலோ வாக்காளர்களின் கையொப்ப நகல் ஏதும் இல்லை. ஆகவே யார் வேண்டுமானாலும் யாருடைய பூத் ஸ்லிப்பை வேண்டுமானாலும் கொண்டு சென்று வாக்களிக்க முடியும் என்றே தோன்றுகிறது. ஆண் பெயரிலுள்ள வாக்காளருக்கு யாராவது ஒரு ஆணும், அதே போன்று பெண் வாக்காளர் பெயரில் யாராவது பெண்ணும் சென்றால் போதும். குறிப்பாக கிராமப் புறங்களில் இம்முறையில் வாக்குகள் தவறுதலாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்றே எண்ணுகிறேன். இதற்கு மோடி அலையோ லேடி அலையோ அல்லது டாடி அலையோ தேவையில்லை. கேடிகள் அலையே போதும். இவர்களுக்கு முன்னால் வாக்குச் சாவடிகளில் எவ்வித ஈடுபாடும் இல்லாமல் பணியாற்றும் அரசு ஊழியர்கள் எம்மாத்திரம்?


**********

24 ஏப்ரல் 2014

தேர்தல் குளறுபடிகள்!


இந்தியா போன்றதொரு நாட்டில் தேர்தல் அதுவும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என்றால் மிகவும் சிரமமான காரியம்தான். ஆகவே அங்கும் இங்குமாக சிறு, சிறு தவறுகள் குறைபாடுகள் ஏற்படுவது சகஜம்தான்.
 
இன்று காலையிலேயே சென்னையில் பல வாக்குச் சாவடிகளில் ஓட்டு இயந்திரங்கள் சரிவர இயங்கவில்லை என்றும் அவற்றில் சில வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது என்றும் கூறப்படுகிறது. எப்போது சரியாகும் என்ற வாக்குறுதியும் அறிவிக்கப்படாததால் வரிசையில் காத்திருந்த பல வாக்காளர்கள் வாக்களிக்காமலே திரும்பிச் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
 
வாக்கு இயந்திரங்கள் பழுதடைவது ஒரு குறைபாடு என்றால் முந்தைய தேர்தல்களில் வாக்களித்தவர்களுடைய பெயர்களும் வாக்காளர் பட்டியிலிருந்து காணாமல் போவது இன்னொரு குறைபாடு. நானும் என்னுடைய மனைவியும் ஒரே நேரத்தில் பதிவு செய்தும் என்னுடைய மனைவி பெயர் மட்டுமே பட்டியலில் இருந்தது. ஏன் என்று கேட்டால் பதிலளிக்க அங்கிருந்த அரசு ஊழியர்களால் முடியவில்லை. அவர்களையும் குறை கூறுவதில் பயனில்லை என்றே தோன்றுகிறது.. அவர்கள் இருப்பதற்கு சரியான இருக்கைகள் இல்லை. கழிப்பறைகளோ, குடிநீர் வசதியோ செய்துத் தரப்பட்டிருக்கவில்லை. விடியற்காலையிலிருந்து வாக்குச்சாவடிகளில் பணியில் இருக்கும் இவர்கள் கையோடு காலை உணவு கொண்டு வந்திருந்தும் அதைக் கூட உண்ண முடியாமல் படும் அவஸ்தையைக் கண்டபோது வாக்காளர்கள் தங்களுடைய பெயரைக் காணாமல் எரிச்சலடையும்போதும் அவர்களும் திருப்பி கோபப்படுவதில் தவறேதும் இல்லையென்றே தோன்றுகிறது.
 
சுமார் ஆயிரத்து ஐந்நூறு வாக்காளர்களைக் கொண்ட என்னுடைய வாக்குச் சாவடியில் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாக்காளர்களுடைய பெயரைக் காணவில்லை. 'உங்க ஓட்டர் ஐடி நம்பர நெட்ல அடிச்சி பாருங்க சார்' என்ற பதிலையே திருப்பி திருப்பிச் சென்று சமாளிப்பதையே பார்க்க முடிந்தது. நான் தவீட்டுக்கு திரும்பியதும் தமிழக தேர்தல் அதிகாரியின் தளத்துக்குச் சென்று பார்த்தால் அதில் எந்த தொடுப்பும் (link) வேலை செய்யவில்லை. வாக்களிக்க வந்தவர்களை விட பெயர் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றவர்களே அதிகம் பேர் இருந்தனர்.
 
இதன் அடிப்படையில் பார்த்தால் மொத்தமுள்ள வாக்காளர்களில் குறைந்தபட்சம் பத்து விழுக்காடு வாக்காளர்களுடைய பெயர்களாவது விடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என்பது தெளிவாகிறது. ஒவ்வொரு தொகுதியிலும்  பல்முனை போட்டி நடைபெறுகின்ற இந்த சூழலில் பெருமளவிலான எண்ணிக்கையில் வாக்காளர்கள் விடுபட்டு இருப்பது முடிவுகளில் கணிசமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
 
 
 
 

22 ஏப்ரல் 2014

பாஜகவின் விளையாட்டு ஆரம்பம்!

 
பாஜக RSSன் முகமூடி என்பதையும் பிரதமர் வேட்பாளர் RSS இயக்கத்தின் பிரதிநிதி என்பதையும் இதுவரை மறுத்து வந்தவர்களை கடந்த இரண்டு தினங்களில் பாஜகவின் கிரிராஜ் சிங் மற்றும் RSSன் டொக்காடியா ஆகியோருடைய பேச்சு சிந்திக்க வைத்துள்ளது.
 
அப்படி என்ன சொல்லிவிட்டார்கள் இவர்கள்?
 
பீஹார் மாநிலத்தில் பாஜக வேட்பாளராக களத்தில் உள்ள கிரிராஜ் சிங் நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பாக்கிஸ்தானுக்குத்தான் செல்ல வேண்டும் என்று பகிரங்கமாக பேசியுள்ளார். இவருக்கு எதிராக பீஹார் போலீசாரால்  பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கைக்கு மறுமொழியாக ' நான் இஸ்லாமியர்களை குறிப்பிடவில்லை.  நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களைத்தான் குறிப்பிட்டேன்.' என்று இவர் அளித்துள்ள பதில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததுமே அதை எதிர்த்த அத்வானியையும் சேர்த்துத்தான் இவர் குறிப்பிட்டிருப்பார் என்று  பலரும் கிண்டலடித்துள்ளனர். இவருடைய பேச்சுக்கு ட்விட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் பாஜக இவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

 
நரேந்திர மோடியின் பால்ய சிநேகிதர் டொக்காடியோவோ ஒருபடி மேலே சென்று ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இஸ்லாமியர்கள் சொத்து வாங்குவதை நாமே சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு தடுக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். ஆனால் இவருடைய பேச்சை கிரிராஜ் சிங்கின் பேச்சைப் போல் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில் இவர் ஒரு தீவிர RSS பேர்வழி. ஒரு காலத்தில் இவரும் நரேந்திர மோடியும் RSSன் அடிப்படை உறுப்பினர்களாக இருந்த காலத்தில் இணைபிரியா தோழர்களாக இருந்தவர்கள். ஆனால் சமீப காலமாக, அதாவது மோடி குஜராத் முதலமைச்சரான காலத்திலிருந்து, இவர்களுக்கிடையில் நல்லுறவு இல்லை என்றும்  ஆகவே இவர் மோடி பிரதமராவதை விரும்பாமல்தான் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய சர்ச்சைக்குரிய கருத்தை பேசியுள்ளார் என்கின்றனர் மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்கள்.
 
ஆனால் இவ்விருவர்களுடைய பேச்சு தேர்தலுக்குப் பிறகு நடக்கவிருக்கும் மதக்கலவரங்களுக்கு ஒரு முன்னோடியாகவே காண்பதாக  பாதிக்கப்படவுள்ள இஸ்லாமிய தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
இதை இஸ்லாமிய சமுதாயத்தினரின் panic reaction என்று கூறி ஒதுக்கிவிட முடியாது என்பதும் உண்மை.
 
நரேந்திர மோடிக்கு எதிராக பேசுபவர்களை, எழுதுபவர்களை நீ கிறிஸ்த்துவன் ஆகவே நீ சோனியாவின் அடியாள் அல்லது நீ இஸ்லாமியன் ஆகவே நீ பாக்கிஸ்தானுடைய கையாள் என்றெல்லாம் விமர்சித்து எழுதும் அநாமதேய ஞான சூன்யங்கள் நம்முடைய பதிவுலகிலும் உள்ளனர் என்பது என்னுடைய கடந்த சில பதிவுகளுக்கு வந்த கருத்துரைகள் உணர்த்துகின்றன.
 
அதாவது படித்த இளைஞர்கள் மத்தியில் கூட இத்தகைய உணர்வுகள் வேரூன்றியுள்ளபோது அரசியல்வாதிகளைக் குறை கூறுவதில் என்ன பயன்?
 
**********
 
சில தேர்தல் கேலிக் கூத்துக்கள்.
 
மேற் கூறிய இருவரின் பேச்சு எதிர்வரும் மதக் கலவரங்களை கோடிட்டு காட்டுகின்றன என்றால் நம்முடையவர்களின் தேர்தல் பேச்சுக்கள் சிரிப்பை வரவழைக்கின்றன.  தமிழர்கள் நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள் என்பதையும் இவை மீண்டு நிரூபிக்கின்றன.
 
'நாட்டின் மிகச் சிறந்த முதலமைச்சர் மோடி அல்ல, இந்த லேடிதான்.' இது நம்முடைய முதலமைச்சரின் அறை கூவல். இது ஏதோ வேத மொழி என்பதுபோல் இதே வாக்கியத்தை மீண்டும், மீண்டும் ஒலிபரப்பிக் கொண்டுள்ளது ஜெயா டிவி.
 
இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கலைஞரிடம் கேட்டதற்கு அவர் அடித்த கிண்டல். 'அவர் நிலைக்கண்ணாடியில் முன் நின்றுக்கொண்டு சொல்லியிருப்பார்.'
 
'இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் கூட்டம் பாசத்துக்காக வந்த கூட்டம். க்வாட்டருக்கோ இல்ல பிரியாணிக்கோ வந்த கூட்டமல்ல.' கேப்டனின் மனைவி.
 
'இவங்க வீட்டுக்காரரையே க்வாட்டர் குடுத்துத்தான் கூட்டிக்கிட்டு வராங்க.' நாம் தமிழர் சீமான்!!
 
'மத்த கட்சி தலைவர்களைப் போல் கூட்டத்திற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு பிறகு வராமல் மக்களை ஏமாற்றும் தலைவனல்ல நான். இன்று எனக்கு கடுமையான காய்ச்சல். இருந்தும் மாத்திரைகளைப் போட்டுக்கொண்டு உங்களை சந்திக்க வந்துள்ளேன்.' சென்னை அண்ணா நகர் கூட்டத்தில் ஜெயலலிதா.
 
'என்னுடைய நலனை விட நாட்டு மக்களின் நலனையே நான் பெரிதாக கருதுகிறேன். ஆகவேதான் உடல் நிலை குறைவிலும் மக்களைச் சந்திக்க தமிழகத்தில் பல பகுதிகளிலும் சென்று பேசி வருகிறேன்.' ஆவடி பொதுக்கூட்டத்தில்.
 
இவ்விருவருடைய நாட்டுப் பற்று மெய்சிலிர்க்க வைக்கிறது!
 
'இவங்க குடுக்கற மிக்சி, க்ரைன்டருக்கெல்லாம் கரண்டே வேணாம். தானாவே ஓடும்!' பாமக நிறுவனர் இராமதாஸ்.
 
'தேர்தல் நேரத்துல நடக்கற மின் தடைக்கு சிலருடையே சதியே காரணம்!' ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு.
 
'போலீஸ் இலாக்காவை தன் கையிலேயே வைத்திருந்தும் சதியை கண்டுபிடிக்க முடியாத ஜெயலலிதா உடனே பதவி விலக வேண்டும்.' ஸ்டாலின்.
 
'ப. சிதம்பரம் ஒரு ரீக்கவுன்ட் (Recount) அமைச்சர்'  சிவகங்கை கூட்டத்தில் நரேந்திர மோடி.
 
'நரேந்திர மோடி ஒரு என்கவுன்டர் (Encounter) முதலமைச்சர்'  ப. சிதம்பரத்தின் பதிலடி.
 
'இது வெறும் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரப்போகும் தேர்தல் அல்ல. எதிரிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற உதவும் தேர்தல்.' ஜெயலலிதா. இவர் எதிரிகள் என்பது இவருடைய சொந்த எதிரிகளான ப. சிதம்பரம் போன்றவர்கள்தான் என்பது அனைவருக்கும் தெரியும்.
 
இப்படி எழுதிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு காமடி செய்துள்ளனர் நம்முடைய அரசியல்வாதிகள்.
 
***********
 
இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைகிறது. இதுவரை இல்லாமல் முதல் முறையாக தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன.  ஆனால் கட்சித் தொண்டர்களுக்கு தேவையான சரக்கை ஏற்கனவே டோர் டெலிவரி செய்தாயிற்றாம்!!
 
மட்டன்/சிக்கன் பிரியாணி சமையல்காரர்களுக்கும் பயங்கர கிராக்கியாம். எட்டு கிலோ பிரியாணி செய்ய ஐநூறு ரூபாய் கேட்டு வந்த பிரியாணி சமையல்காரர்கள் இப்போது இரண்டாயிரம் ரூபாய் கேட்கிறார்களாம்!
 
அதனாலென்ன? ஆளுங்கட்சி வட்டச் செயலாளர் வீட்டு முற்றத்திலேயே சுடச்சுட பிரியாணி தயாரிக்கப்பட்டு வினியோகமும் செய்தாயிற்று. 
 

 
இங்கு நடப்பது தேர்தல் அல்ல. தீபாவளி தமாக்கா என்பார்களே அதுபோலத்தான். சிலருக்கு இது சீரியஸ் பிசினஸ். லட்சக் கணக்கில் முதல் போட்டு கோடிக் கணக்கில் லாபம் எடுக்கும் மொத்த வணிகம்.
 
***********
 
நீங்க என்ன சொன்னாலும் அது செவிடன் காதுல ஊதுன சங்கு போலத்தாங்க. நாங்க மோடிய தேர்ந்தெடுக்கறதுன்னு முடிவு பண்ணியாச்சி. எதுக்கு வீணா எழுதி உங்க டைம வேஸ்ட் பண்றீங்க என்று ஒரு சில தீவிர மோடி ஆதரவாளர்கள் கூறுவது காதில் விழுகிறது.
 
சரிங்க. போடறதுன்னு தீர்மானிச்சாச்சி. மக்களவையில சிம்பிள் மெஜார்ட்டிக்கு தேவையான 272 இடங்கள் பாஜகவுக்கு கிடைக்கறா மாதிரி செஞ்சிருங்க. இல்லன்னா மறுபடியும் கூட்டணி ஆட்சின்னு பழைய குருடி கதவ திறடிங்கறா மாதிரி ஆயிரும்.
 
கடைசியா ஒரு விஷயம்.
 
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்தால்தான் மத்திய அரசின் திட்டங்களை திறம்பட செயல்படுத்த முடியும் என்று பல மாநில ச்ஆட்சியாளர்கள் கூறிவருவதைக் கேட்டிருக்கிறோம். அப்படியானால் மொத்தமுள்ள 29 மாநிலம் மற்றும் எட்டு யூனியன் பிரதேசங்களில் ஐந்தே ஐந்து மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்யும் பாஜக எவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் தங்களுடைய திட்டங்களை செயல்படுத்தப் போகிறது? நரேந்திர மோடி கொண்டு வர நினைக்கும் மாற்றம் மத்திய அரசோடு நின்றுவிடுமோ? 
 
மத்தியில் அமையவுள்ள ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சியாக  நம்முடைய கட்சி இருக்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தேவையானவற்றை நம்மால் கேட்டுப் பெற முடியும் என்று ஜெயலலிதா கூறிவருவது எந்த அளவுக்கு உண்மை? அப்படியொரு சூழல் ஏற்படவில்லை என்றால் தமிழகத்தின் கதி அதோகதிதானா?
 
***************

18 ஏப்ரல் 2014

நரேந்திர மோடி சுய ஒழுக்கம் இல்லாதவர்!

தனி மனித ஒழுக்கத்தில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது உறவுகளை மதித்தல், காத்தல் மற்றும் அவற்றை பேணுதல்.
 
தனி மனித உறவுகளில் மிக முக்கியமானதாக கருதப்படுவது தாய்-பிள்ளை உறவு. அதற்கு அடுத்தபடியாக வருவது கணவன் - மனைவி உறவு. தாய்க்குப் பின் தாரம் தானே!
 
அத்தகைய முக்கியமான, புனிதமான உறவைக் கூட மதிக்கத் தெரியாதவர் அல்லது மறுத்தவர்தான் நம்முடைய அடுத்த பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி.
 
நரேந்திர மோடியின் திருமண விவகாரம் இன்று நாடு முழுவதும் பேசப்படுவதற்குக் காரணம் அதை அவர் இதுவரை அங்கீகரிக்காமல் இருந்ததுதான். தேர்தல்களின் போது சமர்ப்பிக்கப்படும் வேட்பாளர் மனுவில்  அவர் திருமணமானவர் என்பதை மறைக்கவில்லை குறிப்பிடாமல் மட்டுமே விட்டுவிட்டார் என்று வாதிடுபவர்களைப் பார்த்து ஒரு கேள்வி. ஒருவர் தான் திருமணமானவர் என்பதைக் கூடவா குறிப்பிட மறந்துவிடுவார்? அதுவும் நாடே போற்றும் அளவுக்கு நிர்வாகத் திறமை உள்ள ஒருவர்! அவருக்கு அதை வெளியிட மனமில்லை அவ்வளவுதான். அதுதான் உண்மை.
 
எதற்காக அவர் திருமணமானவர் என்பதை குறிப்பிட  மனமில்லாமல் இருந்திருப்பார்? மனைவி ஒருவேளை அழகில்லையோ? அல்லது அவருக்கு இணையாக படித்திருக்கவில்லையோ? அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்திருப்பாரோ? சாதாரணமாக இத்தகைய காரணங்களுக்காகத்தான் சிலர் தங்களுடைய மனைவியை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தாமல் இருப்பது வழக்கம்.
 
ஆனால் நரேந்திர மோடியை விடவும் எவ்விதத்திலும் குறிப்பாக, அழகில்  குறைந்தவர் அல்ல அவருடைய மனைவி யசோதபென் என்பது அவர்களுடைய இந்த திருமணப் புகைப்படத்தைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.
 
 
படிப்பை எடுத்துக்கொண்டால் நரேந்திர மோடியும் திருமணமான காலத்தில் பள்ளி இறுதி வகுப்பைக் கூட தாண்டாதவர்தான். அவருடைய மனைவி ஏழாம் வகுப்பு மட்டுமே. இதிலும் பெரிதாக எந்த குறைபாடும் தோன்றவில்லை. பொருளாதார அந்தஸ்த்திலோ என்றால் நரேந்திர மோடிக்கு அந்த வயதில் சுயமாக எந்த வருமானமும் இல்லை. அவரே தன்னுடைய மூத்த சகோதரருடைய டீக்கடையில் பணியாற்றி வந்திருந்தவர்.
 
 
பின் எதற்காக இந்த பிரிவு?
 
யசோதாபென் திருமணமானபோது ஏழாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்ததால் அவருடைய பள்ளிப் படிப்பை தொடரட்டுமே என்றுதான் திருமணமான ஒரு சில மாதங்களிலேயே அவரை தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தாராம் மோடி.  மோடியின் அன்பைப் பெற வேண்டுமே என்ற உறுதியுடன் பள்ளி இறுதி வகுப்பு  முடித்து அதே கிராமத்திலேயே இயங்கிவந்த ஒரு ஆரம்ப சுகாதார பள்ளியில் ஆசிரியராகவும் சேர்ந்தார் யசோதா.
 
ஆனால் மோடி?
 
எந்த வித வேலைக்கும் செல்லாமல் மனம் போன போக்கில் இமயமலை அடிவாரத்தில் ஒரு சன்னியாசியைப் போல இரண்டு வருடங்கள் சுற்றித் திரிந்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினாராம். பிறகு மீண்டும் தன்னுடைய சகோதரர் நடத்திவந்த டீக்கடையில் பணியாற்றிவந்திருக்கிறார். அதன் பிறகு RSSன் சித்தாந்தத்தால் கவரப்பட்டு அவர்களுடன் தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார். பள்ளியில் மிகவும் ஆவரேஜ் மாணவர் என்று கருதப்பட்டவருக்கு அப்போதே சிறந்த பேச்சாற்றலும் வாதத் திறனும் இருந்துள்ளது (நம்முடைய திராவிட தலைவர்களும் இவ்வாறு பேசி, பேசித்தானே தமிழகத்தை பிடித்தார்கள்!!).
 
ஆக, இவருடைய மனைவி இவரை விட எவ்விதத்திலும் தாழ்ந்தவர் இல்லை என்பது தெளிவாகிறது. பாஜக இதற்கு இன்னுமொரு மொக்கை வாதத்தையும் எடுத்து வைக்கிறது. அதாவது மோடிக்கு நடந்தது பால்ய திருமணமாம்! அதாவது விவரம் தெரியாத வயதில் நடந்த திருமணமாம், உண்மையில் மோடிக்கு அப்போது பதினெட்டு வயது. அவருடைய மனைவிக்கு பதினேழு வயது. ஏழு அல்லது எட்டு வயதில் நடந்திருந்தால்தான் அது பால்ய திருமணம்!
 
 
மேலும் தன்னுடைய மனைவியின் வருமான வரி அடையாள எண் (PAN) என்னவென்றோ அல்லது அவருடைய சொத்து விவரங்களோ தமக்கு தெரியாது என்றும் மோடி தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். ஏனெனில் அவருடன் இப்போது எந்த தொடர்பும் இல்லையாம்.
ஆனால் உண்மையில் அவருக்கு தன்னுடைய மனைவி எங்கிருக்கிறார், என்ன வேலை பார்க்கிறார், எந்த சூழலில் வசிக்கிறார் என்றெல்லாம் மிக நன்றாக தெரியும். ஒரு சாதாரண பத்திரிகை நிரூபரே அவரைத் தேடிப்பிடித்து பேட்டி எடுக்க சென்றபோது அடுத்த சில மணி நேரங்களில் அவர் பணியாற்றிக்கொண்டிருந்த பள்ளிக்கே தன்னுடைய அடியாட்களை அனுப்பி மிரட்டியவர்தான் இந்த மோடி.
 
 
அவரை பேட்டி எடுக்கச் சென்ற ஒரு பெண் நிரூபர் கூறுவதை கேளுங்கள்:
 
"நான் அவர் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருந்தவர்களிடம் அவரைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த ஊரில் வெளியாகிக்கொண்டிருக்கும் ஒரு துக்கடா பத்திரிகையின் ப்ரகாஷ் பாய் என்ற நிரூபர் வந்து என்னை உடனே இங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று மிரட்டினார்.
 
ஆனால் அதை நான் பொருட்படுத்தாமல் அங்கேயே நின்றுக்கொண்டிருந்தேன். பிறகு அவர் வசித்துக்கொண்டிருந்த, தகரத்தால் நாற்புறம் வேயப்பட்டிருந்த ஒரு அறை மட்டுமே உள்ள வீட்டை தேடிக் கண்டுபிடித்தேன்.  அங்கு கழிப்பறையோ, குளியலறையோ எதுவுமில்லை.  அவருடைய கணவர் என்கிற மோடி அப்போது அந்த மாநிலத்தின் முதலமைச்சராக மாளிகையில் வசித்துக்கொண்டிருக்கும்போது இவர் அதே மாநிலத்தின் ஒரு கோடியில் இப்படியொரு சூழலில் வாழ்ந்துக்கொண்டிருப்பது எனக்கு வருத்தத்தை அளித்தது.
 
ஒரு துவக்க பள்ளி ஆசிரியராக மாதம் பத்தாயிரம் ஈட்டிக்கொண்டிருந்தாலும் தன்னை மற்றவர்களிடமிருந்து மறைத்துக்கொள்ளவே இப்படியொரு வாழ்க்கையை அவர் வாழ்ந்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவர் பணியாற்றிய பள்ளியிலும் அவர் வசித்து வந்த பகுதியிலும் அவர்தான் மோடியின் மனைவி என்பதை அனைவரும் அறிந்து வைத்திருந்தார்கள்.
 
பிறகு அவர் பணியாற்றிய பள்ளிக்கு சென்று அங்கு அவரை சந்திக்க விரும்புவதாக ஒரு பணியாளரிடம் கேட்டேன். அடுத்த சில நிமிடங்களில் யசோதாபென் தன் முகத்தை சேலை தலைப்பால் மூடியவாறு வந்து என்ன கேட்கப் போகிறீர்கள் என்றார் தயக்கத்துடன். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஏன் முகத்தை மூடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றேன். என்னை நீங்கள் புகைப்படம் எடுக்க மாட்டேன் என்று உறுதியளித்தால் முகத்துணியை அகற்றுகிறேன் என்றார்.  ஏன் இப்படி அஞ்சுகிறீர்கள் என்றதற்கு எனக்கு இந்த வேலையை விட்டால் வேறு வழியில்லை. நான் உங்களுக்கு பேட்டியளித்தது 'அவருக்கு' தெரியவந்தால் எனக்குத்தான் ஆபத்து என்று தட்டுத் தடுமாறி சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அவர் உணவு இடைவேளையின்போது வெளியில் வரும்போது மீண்டும் சந்திக்கலாம் என்று நான் வெளியில் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது சர், சர்ரென்று நான்கைந்து கார்கள் வந்து பள்ளி வளாகத்தில் நின்றன. அதிலிருந்து இறங்கிய சில அடியாட்கள் தலைமையாசிரியர் அறைக்குள் சென்று பேசிவிட்டு அடுத்த பத்து நிமிடங்களில் அங்கிருந்து சென்றார்கள்.  அவர்கள் சென்றதும் ஒரு பணியாள் என்னிடம் வந்து தலைமையாசிரியர் உங்களை இங்கிருந்து உடனே சென்றுவிட கூறுகிறார். ஆகவே சென்றுவிடுங்கள் என்று கெஞ்சினார்."
 
இதிலிருந்து என்ன தெரிகிறது?
 
நரேந்திர மோடிக்கு தன் மனைவி எங்கிருக்கிறார், என்ன செய்துக்கொண்டிருக்கிறார், அவருடைய வருமானம் எவ்வளவு என்பதெல்லாம் மிக நன்றாகத் தெரியும். இருந்தும் வேண்டுமென்றே அவரைப்பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்பதுபோல் மனுவில் குறிப்பிடுவதும் தனக்கு குடும்பம் இல்லை என்று பொதுக்கூட்டங்களில் பேசுவதும் சிதம்பரம் சொல்வதுபோல் அவர் ஒரு compulsive lier என்பதை தெளிவாக்குகிறது.
 
மேலும் ஒருவருடன் தானும் வாழாமல் வேறு எவருடனும் வாழவிடாமல் செய்வதற்கு பெயர் என்ன தெரியுமா? வக்கிரமம்!
 
Denial of conjugal rights என்பது சட்டப்படிக் குற்றம்.  இந்து திருமணச் சட்டம் பிரிவு ஒன்பது என்ன சொல்கிறது?
 
தாம்பத்திய உரிமைகளைத் திரும்பக் கோருதல்:
 
கணவனோ அல்லது மனைவியோ எவ்வித தகுந்த காரணமும் இல்லாமல் அந்த உறவிலிருந்து பிரிந்து வாழ்ந்தால் அதனால் பாதிக்கப்படும் நபர் அந்த உரிமைகளைத் தனக்கு திரும்ப அளிக்குமாறு நீதிமன்றத்தை அணுகலாம்.
 
Section 9 in The Hindu Marriage Act, 1955
9. Restitution of cojugal right. 1[ When either the husband or the wife has, without reasonable excuse, withdrawn from the society of the other, the aggrieved party may apply, by petition to the district court, for restitution of conjugal rights land the court, on being satisfied of the truth of the statements made in such petition and that there is no legal ground why the application should not be granted, may decree restitution of conjugal rights accordingly.
 
தன்னுடைய வாழ்க்கையில் உடன் வாழ வந்த பெண்ணை அவருக்கு உரிமையுள்ள தாம்பத்திய வாழ்க்கையைக் கூட  ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் மறுத்து வரும் ஒரு நபரை எப்படி அப்பழுக்கில்லாதவர் என்று ஏற்றுக்கொள்வது?
 
சிந்தியுங்கள் நண்பர்களே!
 
****************