31 டிசம்பர் 2010

மன்மதன் அம்பு - உண்மைத்தமிழனின் விமர்சனம் தவறில்லை!

நான் இப்போதெல்லாம் அதிகம் எழுதுவதில்லையென்றாலும் (ஏன் என்று பதிவின் இறுதியில் கூறுகிறேன்) எனக்கு பிடித்த பதிவாளர்களின் பதிவுகளை படிக்க தவறுவதில்லை. இதற்காகவே ப்ளாகரின் ரீடிங் லிஸ்ட்டில் பட்டியலிட்டு இத்தகையோர் எழுதும் பதிவுகளை படித்துவிடுவது வழக்கம்.

இவர்களில் உண்மைதமிழனும் ஒருவர். சமீபத்தில் அவர் எழுதிய மன்மதன் அம்பு திரைப்பட விமர்சனமும் அதற்கு வந்திருந்த பலதரப்பட்ட பின்னூட்டங்களும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன.

மிக, மிக சாதாரணமான ஒரு படத்தை (அதுவும் சொந்த சரக்கு அல்ல) எடுத்துவிட்டு அதிலுள்ள மிக, மிக, மிக சாதாரணமான பாடல்களுக்காக ஒரு பகட்டான (பூனை சூடு போட்ட கதையாக) வெளியீட்டு விழாவையும் நடத்திய உதார் நாயகனின் (என்னை பொருத்தவரை அவரை இப்போதெல்லாம் உலக நாயகனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை) படத்தைப் பற்றிய உண்மைத் தமிழனின் விமர்சனத்தை விமர்சிப்பதில் பொருளில்லை. அது 'என்னுடைய கருத்து' என்று அவரே கூறிவிட்டார்!

ஆனால் அதில் அவர் கூறியிருந்த கருத்துக்களில் ஒன்றைப் பற்றி மட்டும் சற்று விமர்சிக்கலாம் என்று நினைத்ததன் விளைவே இந்த பதிவு.

ஒரு திரைப்படத்திலுள்ள பாத்திரங்கள் பேசுகின்ற வசனங்கள் அந்த வசனகர்த்தாவின் கருத்துக்களாக கருதுவது சரியா?

உண்மைத்தமிழனின் கருத்துக்கு அவரை சிலர் கிண்டல் செய்திருந்தனர்.

ஆனால் அவருடைய கூற்று தவறில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

ஒரு சில உதாரணங்கள் மூலம் இதை விளக்கலாம் என எண்ணுகிறேன்.

பழம்பெரும் இயக்குனர் மற்றும் வசனகர்த்தா கே.எஸ். கோபாலகிருஷ்ணன் காலத்திலிருந்து பாலசந்தர், பாலு மகேந்திரா, விசு என சமீபத்திய மணிரத்தினம் வரையிலும் உண்மைத்தமிழனின் கருத்து சரிதான் என்பதை எடுத்துக்காட்டியுள்ளன.

கோபாலகிருஷ்ணன் மற்றும் விசு எழுதி இயக்கிய அனைத்து திரைப்படங்களில் வரும் பாத்திரங்கள் வளவளவென்று பேசுவார்கள். பாணி மட்டுமல்லாமல் அவர்கள் பேசும் வசனங்களில் தொனிக்கும் கருத்துக்களும் வசனகர்த்தாவைத்தான் முன் நிறுத்தும்.

பாலசந்தரும் அப்படித்தான். அவருடைய எண்ணங்களைத்தான் அனைத்து படங்களிலும் பாத்திரங்கள் வழியாக எடுத்துரைப்பார். அனைவருமே நாடக பாணியில், உரத்த குரலில், எதுகை மோனையுடன் பேசுவார்கள்.

பாலு மகேந்திரா படங்களில் பாத்திரங்கள் அதிகம் பேச மாட்டார்கள். புருவத்தை உயர்த்தி, தோள்களை குலுக்கி, உதட்டை பிதுக்கி, தலையை மேலும் கீழும் அசைத்து... இப்படி அதிகம் பேசாமல் முக, உடல் சேஷ்டைகள் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்துவர். 'நீங்கள் கேட்டவை' என்ற மசாலா படத்தில் அன்றைய சில இயக்குனர்களின் பாணியில் கதாபாத்திரங்கள் செயல்பட்டிருந்தாலும் வசனம் என்னவோ ஏறத்தாழ அவர் பாணியில்தான் இருந்தன.

மணிரத்தினம்? அவர் படங்களில் வரும் அனைத்து படங்களிலும் வசனம் ஒரே ஸ்டைலில்தான் இருக்கும். அவருடைய 'ஒருசொல்' வசன பாணியை 'தமிழ்படத்தில்' மிக அருமையாக கிண்டல் செய்திருப்பார்கள். பாணி மட்டுமல்லாமல் அவருடைய 'அடிதடியை நியாயப்படுத்தும்' நோக்கத்தில்தான் அவருடைய பெரும்பாலான படங்களில் வரும் வசனங்களும் இருந்துள்ளன.

இந்த வரிசையில் பாரதிராஜா மட்டுமே விதிவிலக்கு என கருதுகிறேன். இதற்கு அவருடைய திரைப்படங்களுக்கு வசனம் அவர் எழுதியதில்லை என்பதும் ஒரு காரணம்.

திரைப்படங்கள் என்றில்லை. சிறுகதைகளும், நாவல்களும் அப்படித்தான். ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஒரு பாணி இருக்கும். அதே பாணியை அவர்கள் புனையும் அனைத்து கதைகளிலும் காணலாம். அவர்களுடைய பெரும்பாலான கதைகளில் வரும் பாத்திரங்கள் வழியாக சமூகத்தைப் பற்றிய அவர்களுடைய பார்வையே வெளிப்பட்டு வந்துள்ளன. இதற்கு உதாரணமாக நான் மிகவும் மதித்துப் போற்றும் ஜெயகாந்தனை கூறலாம். அவருடைய பெரும்பாலான புனைவுகள் இலக்கியங்களாக போற்றப்பட்டாலும் இன்றைய எழுத்தாளர்களைப் போன்று பாமரனும் படித்து புரிந்துக்கொள்ளவோ அல்லது படிப்பதற்கு சரளமாகவோ அல்லது சுவையாகவோ அவருடைய எழுத்து இருக்கவில்லை. அவருக்கு தான் ஒரு இலக்கியவாதி என்கிற மமதை அவருடைய எல்லா கதைகளிலும் இழையோடுவதை காணலாம்.

அத்தகைய மமதை சமீபகாலமாக கமலுக்கும் ஏற்பட்டுள்ளது. தனக்கு தெரியாத விஷயம் இல்லை என்பதைப் போன்ற ஒரு எண்ணம். அவர் ஒரு நல்ல அற்புதமான நடிகர் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவர் ஒருபோதும் ஜனரஞ்சக நடிகராக முடியாது. அல்லது ஒரு திறமையான கதாசிரியராகவோ அல்லது வசனகர்த்தாகவோ ஆக முடியாது. அதை அவர் உணர்ந்துக்கொள்ளாமல் இருப்பதுதான் துரதிர்ஷ்டம். இபோதெல்லாம் அவர் பேசுகின்ற தமிழே புரிவதில்லை.

நடிப்பு மட்டுமே முழு நேர சிந்தனையாக அவருக்கு இருந்த காலகட்டத்தில் வந்த அவருடைய அனைத்து திரைப்படங்களும் அனைவராலும் ரசிக்கப்பட்டதுடன் வசூலையும் அள்ளி தந்தன. 'ஹே ராமில்' துவங்கிய அவருடைய இந்த 'மமதை' தசாவதாரம், மன்மதன் அம்பு என தோல்விகளாக தொடர்கின்றன.

இதை அவர் மட்டுமல்லாமல் அவருடைய தீவிர ரசிகர்களும் (இவர்களுள் பெரும்பாலானோரும் அறிவுஜீவிகள்தான்) உணர்வது நல்லது.

சரி இப்போது ஏன் அதிகம் எழுதுவதில்லை என கூறிவிடுகிறேன். கடந்த ஆறு மாதங்களாக எனது வலது தோள்பட்டையில் பயங்கர வலி. அப்போல்லோவில் சி.டி. ஸ்கேன் செயததில் தோள் எலும்பு தேய்ந்துவிட்டது என தெரிந்தது. இதற்கு பிசியோதெரப்பி மற்றும் தினசரி உடற்பயிற்சியை தவிர வேறு நிவாரணம் இல்லையாம். ஒரு ஆகவே வலது கையால் கீபோர்டை பயன்படுத்த முடியவில்லை.

இதற்கு முக்கிய காரணம் தினமும் தொடர்ந்து லேப்டாப் மவுஸ் பேடை பயன்படுத்தியதுதான் என்கிறார் எலும்பு மருத்துவர். நான் சுமார் பத்து ஆண்டுகளாக தினமும் எட்டு மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்தியதன் விளைவு!

ஆகவே நண்பர்களே, லேப்டாப் பயன்படுத்துபவர்களும் தனியாக ஒரு எக்ஸ்டேர்னல் எலிக்குடியை பயன்படுத்துவது நல்லது. மேலும் எலிக்குட்டியை இடது கையிலும் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். அரைமணிக்கு ஒருமுறை கையை மாற்றி பயன்படுத்துவது நல்லதாம்.

அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்!