31 ஜூலை 2019

புதிய கல்விக் கொள்கை - 3

”உயர் கல்வியை அனைவருக்கும் வழங்குவதன் மூலம் நிலைத்து நிற்கக் கூடிய, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய, உயிரோட்டமுள்ள, அறிவுசார் சமூகமாக நம்முடைய நாட்டை மாற்றுவதற்கு   நேரடியாக பங்களிக்கக் கூடிய,  இந்தியாவை மையப்படுத்திய, கல்வி அமைப்பை தேசிய கல்விக் கொள்கை முன்வைக்கிறது.”

இதுதான் விரைவில் நடைமுறைப் படுத்தப்படவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் ‘தொலைநோக்கு பார்வை’ யாம்!!

இது இக்கொள்கையின் தமிழ் வரைவில்  முதல் பக்கத்தில் அளிக்கப்பட்டுள்ளது.

அதாவது இப்போதுள்ள இந்தியாவில் இத்தகைய கல்வி முறை இல்லையாம்!

இதில் இறுதி வாக்கியத்தில் வருகின்ற ‘இந்தியாவை மையப்படுத்தி’ என்ற சொற்களுக்கு பதிலாக ‘இந்தியை மையப்படுத்தி’ என்ற சொற்களை பயன்படுத்தியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.

ஏனெனில் இந்த வரைவு கொள்கையின் ஆங்கிலப் பதிப்பின் 81ம் பக்கத்தில் இந்தியாவை மையப்படுத்துவது என்றால் என்ன என்பது சூசகமாக குறிப்பிடப்பட்டுள்ளதை காண முடிகிறது.

இந்த கொள்கை விளக்கம் சுமார் இரண்டு பக்கங்களுக்கு விலாவாரியாக எழுதிப்பட்டுளதால் நான் சுருக்கமாக இங்கு தருகிறேன்.

“இந்தியாவிலுள்ள மொழிகள் பலவும் கலாச்சார மற்றும் அறிவியல் ரீதியாக பல சிறப்புகளைக் கொண்டிருப்பினும் இந்திய பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக பயன்படுத்தப்பட்டு வருவது வேதனைக்குரியது. (எனக்கு தெரிந்தவரை தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அனைத்து பாடங்களும் தாய்மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகவே இருந்து வருகிறது. மத்திய அரசின் நேரடி பார்வையில் நடத்தப்படும் CBSC பள்ளிகளில்தான் அனைத்துப் பாடங்களும் ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்படுகின்றன!)

இதற்கு காரணம்  இந்திய மக்கள் தொகையில் சுமார் 15 விழுக்காட்டிற்கும் குறைவாக உள்ள மேல்தட்டு மக்களின் (Elite) ஆங்கில மோகம்தான் என்றால் மிகையாகாது. இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் தங்களுடைய ஆங்கில புலமையை மட்டுமே பயன்படுத்தி அரசின் அனைத்து உயர் பதவிகளையும் ஆட்கொண்ட இந்த கூட்டம் ஆங்கிலம் எழுத, பேச தெரியாத ஆனால் இவர்களை விட அறிவிலும், ஆற்றலிலும் சிறந்து விளங்கும் பெரும்பான்மை இளைஞர்களை  தங்களுடைய ஏவலுக்கு அடிபணியும் பணியாளர்களாக மட்டுமே அடக்கி வைத்துள்ளனர்.

ஆகவே சமத்துவமான, அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கக் கூடிய ஒரு இந்தியாவை உருவாக்க வேண்டுமென்றால் இத்தகையோரின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

அதற்கு முதற் படியாக நாட்டின் அனைத்து பள்ளிகளிலும் துவக்க நிலையிலிருந்தே அவரவர் தாய்மொழியில் கற்பிக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது என பரிந்துரைக்கப் படுகிறது.

அத்துடன் 1968ல் அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர் 1992ல் வலியுறுத்தப்பட்ட மும்மொழி கொள்கையை துவக்கப் பள்ளிகளிலிருந்தே அறிமுகப்படுத்துவது எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.

தாய்மொழி, ஆங்கிலம் ஆகிய மொழிகளுடன் மூன்றாவது மொழிப் பாடமாக ஏதாவது ஒரு  இந்திய மொழியை மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப அந்தந்த மாநில கல்வித் துறை தங்களுடைய பள்ளிகளில் நடைமுறைப் படுத்தலாம் எனவும் பரிந்துரைக்கப்படுகிறது.”

இதுதான் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தப்படுவது ஏன் என்பதற்கு அளிக்கப்பட்டுள்ள விளக்கம்.

ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகவும் தாய்மொழியை மற்ற அனைத்துப் பாடங்களுக்கும் பயிற்று மொழியாகவும் ஏற்றுக்கொள்வதில் எவ்வித பாதகமும் இல்லை. ஏனெனில் இப்போதும் அதுதான் அரசு பள்ளிகளில் நடைமுறையிலுள்ளது.

ஆனால் இத்தகைய தாய்மொழி வழி கல்வி நாட்டிலுள்ள அனைத்து கல்வி முறைகளிலும் (Streams) நடைமுறைப் படுத்தப்படுமா என்பதில் தெளிவில்லை.  உதாரணத்திற்கு, மத்திய அரசின் நேரடி பார்வயில் இயங்கிவரும் CBSC பள்ளிகளில் இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்படுமா? ஏனெனில் கொள்கை வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மேல்தட்டு, ஆங்கில மோகம் கொண்ட’ மக்களை உருவாக்குவதே இத்தகைய பள்ளிகள்தானே?

இதேபோன்று தனியார் நிறுவனங்களால் நடத்தப்படும் CISCE, IGCSE பாடத்திட்டங்களில் பயிலும் மாணவர்களுக்கும் இது பொருந்துமா என்பதும் தெளிவில்லை.

இவ்வாறு நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளையும் உள்ளடக்கிய ஒரு கல்விக் கொள்கையை மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டால் மட்டுமே அனைவருக்கும் சமவாய்ப்பு அளிக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற முடியுமே தவிர வெறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்விநிலையங்களுக்கு மட்டுமே ஒரு கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்துவதால் எவ்வித பயனும் இல்லை என்பதே என்னுடைய வாதம்...

அடுத்ததாக, இந்த மூன்றாவது மொழியை எவ்வாறு தெரிவு செய்வது?

நாளை விவாதிக்கலாம்.

30 ஜூலை 2019

புதிய கல்விக் கொள்கை - 2

சமீபத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட புதிய வரைவு கல்விக் கொள்கையைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் இப்போது நடப்பில் உள்ள கல்விக் கொள்கை (1968ல் அறிமுகப்படுத்தப்பட்டது)யின் நகலை தரவிறக்கம் செய்து படித்துப் பார்த்தேன்.

வரைவுக் கொள்கையில் குறிப்பிடப் பட்டுள்ள மும்மொழிக் கொள்கை தற்போது அமலிலுள்ள கல்விக் கொள்கையிலும் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகளுடன் ஹிந்தியையும் கட்டாய பாடமாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்பதை மிகத் தெளிவாக கூறியுள்ளனர். அதுமட்டுமல்ல ஹிந்தியுடன் சம்ஸ்கிருத மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது!

1968ம் ஆண்டுக்கு முன், அதாவது நான் பள்ளியில் பயிலும்போதே (1966ல்) ஹிந்தி கட்டாய பாடமாகத்தான் இருந்தது.  பள்ளி இறுதி ஆண்டில் பொதுத்தேர்வில் ஹிந்தி பாடத்தில் தோற்றால் அனைத்து பாடங்களையும் மீண்டும் எழுதினால்தான் பள்ளி இறுதி சான்றிதழ் கிடைக்கும்!

அது 1968ல் அறிமுகப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கையிலும் தொடர்ந்துள்ளது. இந்த ஆண்டிலிருந்துதான் 11+1+3 என்றிருந்த கல்வி திட்டம் 10+2+3 என்று மாற்றப்பட்டது.

ஆக, இந்த மும்மொழிக் கல்விக் கொள்கை ஏதோ தற்போதுள்ள பாஜக ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூப்பாடு போடுவதில் அர்த்தமிருக்கிறதா என்கிற கேள்வியும் எழத்தானே செய்கிறது?

இதில் இருந்து என்ன தெரிகிறது? கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஷரத்துகளுமே அது அமல்படுத்தப்படுகையில் நடைமுறைக்கு வரும் என்பதில் நிச்சயமில்லை என்பதுதான்.

மும்மொழிக் கொள்கை சுமார் ஐம்பது ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தும் அது தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பதால் இனியும் அப்படித்தானே நடக்கும் என்று வாளாவிருந்திட முடியுமா?

கடந்த ஐம்பதாண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி மாநில உரிமைகளுக்கு எப்போதுமே மதிப்பளித்து வந்துள்ளது அல்லவா? ஆகவே கொள்கையளவில் இருந்த மும்மொழிக் கொள்கையை தமிழகம் போன்ற மாநிலங்களில் நடைமுறைப் படுத்துவதில் அத்தனை தீவிரம் காட்டவில்லை போலிருக்கிறது.

ஆனால் இனி அப்படி இருக்க வாய்ப்பில்லை என்பது சமீபத்தில் தபால்துறையில் நடத்தப்பட்ட தேர்வில் மாநில மொழிகள் புறக்கணிக்கப்பட்டதிலிருந்தே தெரிகிறது. திமுக போன்ற எதிர்கட்சிகளின் வலிமையான எதிர் குரலால்தான் அந்த தேர்வே ரத்து செய்யப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் மத்திய அரசால் நடத்தபெறவிருக்கும் பல தேர்வுகளிலும் மாநில மொழிகள் புறக்கணிக்கப்ப்ட வாய்ப்புள்ளது என்பதால் இப்போதே நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டியது மிக அவசியம் என்று எனக்கு தோன்றுகிறது.

நாளை தொடர்ந்து விவாதிக்கலாம்..

29 ஜூலை 2019

புதிய கல்விக் கொள்கை - எனக்கென்ன வந்தது?

மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள வரைவு கல்விக் கொள்கையைப் பற்றி பலரும் பேசி வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த வரைவு கொள்கையைப் பற்றி நடிகர் சூரியா பேசப்போய் ‘இவருக்கு இதைப் பற்றி என்ன தெரியும்?’ என்றெல்லாம் பாஜகவினர் கேலி செய்தது நினைவிருக்கலாம்.

இந்த வரைவுக் கொள்கையைப் பற்றி பேச இந்தியக் குடிமகனாக இருந்தாலே போதும் என்று திரைத்துறையைச் சார்ந்தவர்கள் அவருக்கு ஆதரவாக பேசியதையும் படித்தோம்.

இதைப் பற்றி எனக்கென்ன வந்தது என்று இருந்துவிடாமல் நாமும் இதிலுள்ள சாதக, பாதகங்களைப் பற்றி சுருக்கமாக எழுத வேண்டும் என்ற பல நாட்கள் சிந்தித்தேன்.

ஆனால் நான் வலையுலகில் இருந்து விலகி சுமார். ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய வலைப்பதிவை மீண்டும் கண்டுபிடிக்கவே பல நாட்கள் தேவைப்பட்டது. இந்த சூழலில் மீண்டும் ஒருமுறை பதிவுலகில் நுழைய வேண்டுமா என்ற எண்ணம் தோன்றாமலில்லை.

ஆனால் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்படும் இந்த கல்விக் கொள்கை நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்தில் ஒரு பெரிய தாக்கத்தை - அது சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இருக்கலாம். அது அவரவர் பார்வையைப் பொறுத்தது - ஏற்படுத்தக் கூடும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கொள்கையை ஏன் ஒரு அரசு இத்தனை அவசரத்துடன் செயல்படுத்த முனைய வேண்டும் என்பதுதான் என் மனதில் தோன்றிய முதல் கேள்வியாக இருந்தது. ஆகவே இதைப் பற்றி நம்மால் இயன்றவரை ஆய்வு செய்து நம்முடைய கருத்துக்களை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று நான் நினைத்ததன் விளைவே இந்த தொடர் பதிவு.

.அது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பது .வரைவுக் கொள்கையின் ஆங்கிலப் பதிப்பை (சுமார் 500 பக்கங்கள்) தரவிறக்கம் செய்து படித்துப் பார்த்தபோதுதான் தெரிந்தது.

இந்த வரைவுக் கொள்கையின் தமிழ் பதிப்பை (சுமார் 52 பக்கங்கள்) மேலோட்டமாக வாசித்த போது அதை இந்த அளவுக்கு பலரும் எதிர்க்கும் அளவுக்கு பாதகமான அம்சங்கள் இருப்பதாக தோன்றவில்லை. ஆனால் அது இந்த கொள்கையின் சாராம்சம் மட்டுமே என்பது அதன் ஆங்கிலப் பதிப்பை படித்துப் பார்த்தபோதுதான் இந்த கொள்கையை மத்திய பாஜக அரசு அறிமுகப்படுத்த முனைவதன் உண்மையான உள்நோக்கம் தெரிந்தது.

அது என்ன?

ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை ஒடுக்கி இந்திய மொழிகளை, குறிப்பாக இந்திய மக்கள் தொகையில் .சுமார் 54 விழுக்காடு மக்கள் பேசும் மொழியான இந்திக்கு முக்கியத்துவம் கொடுப்பது!

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியை அனைத்து பள்ளிகளிலும் பாலப் பருவத்திலிருந்தே திணிப்பது என்பதுதான் இக்கொள்கையின் முக்கிய ஆனால் மறைமுகான திட்டம்.

ஆகவேதான் இதை நாம் முழு மூச்சுடன் எதிர்க்க வேண்டும் என்கிறேன்.

இது என்னை நேரடியாக பாதிக்கப் போவதில்லை என்று நான் வாளாவிருந்துவிட்டால் அது என்னுடைய மனசாட்சிக்கு எதிரான, ஒவ்வாத விஷயம் என்பதால் ஐந்தாண்டுகள் வனவாசத்தில் இருந்த என்னை மீண்டும் இங்கு வரவழைத்துள்ளது.

இது சற்றி நீண்ட தொடர் பதிவாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் வரைவு கொள்கையின் ஆங்கிலப் பதிப்பின் நீளம் சுமார் 500 பக்கங்கள். அதில் இந்த திட்டத்தில் என்னவெல்லாம் செய்யப்போகிறோம். எதையெல்லாம் முடக்கப் போகிறோம் என்று மிகத் தெளிவாக ஆழமாக எழுதியிருப்பதைக் காண முடிகிறது. இது ஏதோ அவசர கோலத்தில் வரையப் பட்ட கொள்கையாக தெரியவில்லை. மிக ஆழமாக சிந்தித்து திட்டமிடப்பட்டுள்ள கொள்கை.  ஆகவே நம்முடைய ஆய்வும் சற்று ஆழமாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

இதில் ஆர்வமுள்ளவர்கள் படித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

நாளை தொடர்ந்து விவாதிக்கலாம்.

டிபிஆர். ஜோசப்