26 ஆகஸ்ட் 2019

அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க.


’உங்களால ஏன் மத்தவங்களோட அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியல டிபிஆர்?’

இந்த கேள்விய என்னுடைய அலுவலக அதிகாரிகள் பலரும் கேட்டுள்ளனர்.

நானும் இதைப் பற்றி பலமுறை யோசித்து பார்த்திருக்கிறேன். ஏன் நம்மால் மட்டும் மற்றவர்களை அனுசரித்துச் செல்ல முடியவில்லை என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்த கேள்விக்கு எனக்கு விடை கிடைக்க சுமார் இருபது ஆண்டுகள் தேவைப்பட்டது. அதாவது என்னுடைய 45வது வயதில் எங்கள் வங்கியின் பயிற்சி கல்லூரியில் முதல்வராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததில் இருந்து...

என்னுடைய இந்த போக்கிற்கு என்னுடைய பிடிவாத குணமும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்பதை அனுபவம்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. இதற்கு இளம் வயதிலேயே (முப்பது வயது) ஒரு கிளையின் மேலாளராகக் கூடிய வாய்ப்பு கிடைத்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறது.

அதாவது உடன் பணியாற்றுபவர்களுடன் அனுசரித்து செல்வதில் அதிக அனுபவம் இல்லாமலேயே ஒரு கிளையின் மேலாளராகிவிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. கிளை மேலாளர் பதவி கிடைத்ததுமே ’என்னுடன் பணியாற்றுபவர்கள்’ என்கிற எண்ணம் போய் ’எனக்கு கீழே பணியாற்றுகிறவர்கள்’ என்கிற எண்ணம் மேலோங்கி நிற்க ஆரம்பித்துவிடுவதன் விளைவும் என்னுடைய பிடிவாத குணத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எனக்குத்தான் எல்லாம் தெரியும், நான் சொல்வதுதான் சரி என்கிற எண்ணம் நான் அறியாமலேயே என்னுள் ஏற்பட்டுவிட்டிருக்கலாம். என்னுடைய கிளையில் எனக்கு கீழே
பணியாற்றுபவர்கள் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் நான் சொல்வதைப் போலத்தான் அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற என்னுடைய குணம் மற்றவர்களை அரவணைத்துச் செல்ல இயலாவிட்டாலும் அனுசரித்தும் கூட செல்ல முடியாத ஒரு போக்கை என்னுள் வளர்த்துவிட்டிருந்தது.

இத்தகைய குணத்திற்கு இன்னொரு காரணம் எதையும் வேகமாக செய்து முடிக்கும் பழக்கமும் எனக்கு இருந்தது. என்னுடைய வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத என்னுடைய சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது என்னால் முடியாத காரியமாக இருந்திருக்கிறது. இதற்கு என்னுடைய அனுபவமின்மைதான் காரணமாக இருந்தது என்பதை அப்போது என்னால் உணர்ந்துக்கொள்ள முடியவில்லை.

இதற்கு நான் வளர்ந்த விதமும் ஒரு காரணம். நான் என்னுடைய பெற்றோர்களை விடவும் அதிக நேரம் செலவிட்டது என்னுடைய தாய் வழி தாத்தாவிடம்தான். அவர் அத்தனை கண்டிப்புக்காரர். பேசுவதிலும் எழுதுவதிலும் செயலாற்றுவதிலும் படு வேகம். பல சமயங்களில் அவர் சொல்வதை புரிந்துக்கொள்ளாமலே தலையை ஆட்டிவிட்டு பின்னால் குட்டுப்ப்ட்டதும் உண்டு. அதீத கோபத்திற்கு சொந்தக்காரர். அவருடைய நேரடி பார்வையில் நான் வளர்ந்ததும் என்னுடைய பிடிவாத குணத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். பேச்சில் செயலில் வேகம் இவையும் அவர் என்க்கு விட்டுச் சென்ற குணங்கள்.

அதன் பிறகு எட்டாவது முதல் பள்ளி இறுதி வகுப்பு வரை நான் வளர்ந்த போர்டிங் பள்ளில். கத்தோலிக்க பாதிரியார்களால் - என்னுடைய தந்தையின்
ஒன்றுவிட்ட சகோதரர் அங்கு துணை அதிபராக இருந்தார்  - நடத்தப்பட்ட பள்ளி. எதுவும் நேரத்திற்கு செய்ய வேண்டும் என்கிற கண்டிப்பான சூழல்.
மணியடித்தால் சாப்பாடு, விளையாட்டு, படிப்பு, தூக்கம் என்ற இயந்திரகதியான ஐந்து வருட வாழ்க்கை என்னை எதை செய்தாலும் வேகமாக, குரிப்பிட்ட காலக் கெடுவுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்கிற என்னுடைய குணத்திற்கு ஒரு காரணம்.

இத்தகைய குணம் நம்மில் பலருக்கு இருக்கலாம். நம்மை சுற்றிலும் இருப்பவர்களை அனுசரித்து செல்வது என்பது அத்தனை எளிதான காரியமல்ல. அதற்கு மிக அதிக பொறுமை வேண்டும். அது நம்மில் வெகு சிலருக்குத்தான் அமைய வாய்ப்புள்ளது.

நம்மை மாதிரியான சாமான்யர்களுக்கு மட்டுமல்ல. உலக சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் நாம் இதுவரை அறிந்துள்ள பல உலக தலைவர்களுக்கும் இந்த குணம் இருந்திருப்பதை காண முடிகிறது.

ஜியார்ஜ் வாஷிங்டன் துவங்கி இன்றைய ரஷ்ய தலைவர் புடின், அமெரிக்க தலைவர் டிரம்ப், வட கொரிய அதிபர், சீன அதிபர்... ஏன் நம்முடைய பிரதமர் என பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது. இதில் நம்மால் மறக்க முடியாத தமிழக தலைவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள். அவருடைய அமைச்சரவையில் அவரை அனுசரித்து செல்ல முடியாதவர்களில் பலருடைய பதவிக்காலம் ஒரு சில வாரங்களிலேயே கூட முடிந்திருக்கிறது.

இத்தகைய பிடிவாத குணம் இருப்பதால்தானோ என்னவோ அவர்களால் அவர்கள் நினைத்தபடி செயலாற்ற முடிகிறது என்று கூட தோன்றுகிறது. இது நல்லதா கெட்டதா என்பது அவரவர் கண்ணோட்டத்தைச் சார்ந்தது.

ஆனால் ஓரளவுக்கு பிடிவாதமும் ஓரளவுக்கு அனுசரித்துச் செல்லும் குணமும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளையெல்லாம் இப்போது அசைபோட்டு பார்க்கும் போது அப்போது நான் சந்தித்த பிரச்சினைகளை இப்போது சந்தித்திருந்தால் நிச்சயம் அவற்றை இன்னும் அறிவுபூர்வமாக (Matured) கையாண்டிருப்பேனோ என்று தோன்றுகிறது.

நம்முடைய இளம் வயதில் நாம் அறிவுபூர்வமாக அணுகுவதை விட உணர்வுபூர்வமாக அணுகியிருப்போம். அதுவே நம்மை மற்றவர்களிடமிருந்து விலக்கி வைத்திருக்கலாம். ஆனால் காலப் போக்கில் அதாவது அனுபவங்கள் கூட கூட நம்முடைய அணுகுமுறை மாற வேண்டும். அப்படி அல்லாமல் முப்பது வயதில் எத்தனை பிடிவாதம் இருந்ததோ அதே அளவு பிடிவாதம் அறுபதுகளை கடந்தும் தொடர்ந்தால் நாம் இப்போது காணும் பல உலக தலைவர்களைப் போலத்தான் நாமும் இருப்போம்.

இன்றைய உலகில் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர், அமெரிக்கா-ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் என இன்றைய உலகின் பல பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம் இத்தகைய தலைவர்களின் பிடிவாத குணம்தான். இந்த பிடிவாத குணம்தான் மற்றவர்களை அனுசரித்து செல்ல முடியாமல் தடுக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது நான் உன்னை விட பலம் வாய்ந்தவன் ஆகவே நீதான் என்னை அனுசரித்து செல்ல வேண்டும் என்கிற குணம்.

இதை நம்மில் பலரும் தவிர்த்தால் உலகத்தில் பிர்ச்சினைகளே இருக்காது.

*************

26 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா

    ///கிளை மேலாளர் பதவி கிடைத்ததுமே ’என்னுடன் பணியாற்றுபவர்கள்’ என்கிற எண்ணம் போய் ’எனக்கு கீழே பணியாற்றுகிறவர்கள்’ என்கிற எண்ணம் மேலோங்கி நிற்க ஆரம்பித்து விடுவதன் விளைவும் என்னுடைய பிடிவாத குணத்திற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம்///

    அற்புதமான வார்த்தை ஐயா தங்களை தாங்களே மதிப்பீடு செய்து மதிப்பெண் அளித்து இதை தவறு என்று உணர்ந்து முடிவில் வெட்கப்படாமல் இதை ஒத்துக் கொள்ளும் தங்களது மனதுக்கு எனது சிரம் தாழ்த்திய வணக்கம்.

    ///இத்தகைய பிடிவாத குணம் இருப்பதால்தானோ என்னவோ அவர்களால் அவர்கள் நினைத்தபடி செயலாற்ற முடிகிறது என்று கூட தோன்றுகிறது. இது நல்லதா கெட்டதா என்பது அவரவர் கண்ணோட்டத்தைச் சார்ந்தது///

    ஆம் இது அவரவர் கண்ணோட்டத்தை சார்ந்ததே...

    தங்களது குணத்தின் பெரும்பகுதி என்னையும் ஆட்கொண்டுள்ளது. அதாவது உடனடியாக அதை செய்து முடிக்கவேண்டும். அதையும் வெற்றிகரமாகவே....

    இந்த பிடிவாத குணம் (பிடித்தபடி வாழ்வது பிடிவாதமா?) எனக்கும் இன்னும் உண்டு.

    இதைக் களைய நான் நினைத்தாலும் மனம் என்ற குரங்கு அதனை விடுவதேயில்லை.

    இதை இனியெனும் தவிர்த்து இவ்வுலக மக்களிடம் இணங்கிப் போகும் பக்குவத்தை உங்களால் இனியாவது தீவிரப்படுத்துவேன்.

    எனது மனம் ஈர்த்த பதிவு இது மிக்க நன்றி ஐயா - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. நீளமான மிக அர்த்தமுள்ள கருத்துரை ஜி!

    மிக்க நன்றி ஜி!

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கண்ணோட்டம் ரசித்ததை விட அதிர வைத்தது...

    சிறப்பு ஐயா...

    தங்களிடமிருந்து இப்படி ஒரு பகிர்வை எதிர்ப்பார்க்கவேயில்லை... என்னைப் பொறுத்தவரை அது தான் உண்மை...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  4. உண்மை சில சமயங்களில் அதிர வைக்கும் என்பதும் உண்மை.

    பதிலளிநீக்கு
  5. சில சரியென்று நம்பும் கருத்துகளை அட்ஜஸ்ட் மெண்ட் என்னும் பெயரில் மாற்றுவது என்பது என்னாலும் இயலாது என்றே தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  6. அதனால் தான் இந்த குணம் நம்மில் பலருக்கும் உள்ளது என்றேன். ஆனாலும் சிலர் அதை ஒப்புக் கொள்வதில்லை.இதற்கும் ஒரு துணிவு வேண்டும். அது உங்களுக்கு உள்ளது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சார் எனக்கும் பிடிவாதம் அதிகம் இருந்தது, தற்போதும் இருக்கிறது ஆனால், ஒப்பீட்டளவில் மிகக்குறைவு.

    பிடிவாதத்தால் நான் இழந்தது அதிகம் ஆனால், என்னுடைய பிடிவாதம் என்னுடைய சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு மட்டுமே இருக்கும் மற்றவர் விஷயத்தில் பிடிவாதம் பிடிக்கமாட்டேன்.

    உங்களைப்போலவே சரியான நேரம், நேரத்தில் முடிக்க வேண்டியது, காலந்தவறாமை போன்றவை இயல்பாக வந்து விட்டதும் ஒரு விதத்தில் நல்லது என்றாலும் சில விஷயங்களில் நெருக்கடியும் கொடுத்தது.

    தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்வது எனக்கு விருப்பமானது என்பதால், என்னுடைய தவறுகளை எளிதாக உணர்ந்து கொள்ள முடிந்தது.

    சில தவறுகளின் பாதிப்பு மிக மோசமானதாகவும் அமைந்துள்ளது.

    அதைத் தற்போது நினைத்து நாம் அதைச் செய்யாமல் இருந்து இருக்கலாம் என்று நினைக்கும்போது ஏற்படும் இழப்பு, வலி ஈடு செய்ய முடியாதது.

    எல்லாமே அனுபவம் தான் சார். இதில் எவ்வளவு விரைவில் நாம் நம் தவறை உணர்ந்து கொள்கிறோம் என்பதிலேயே நம் வளர்ச்சி மற்றும் பக்குவம் உள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய கருத்துக்கள் அனைத்துமே என்னுடைய கண்ணோட்டத்துடன் ஒத்துப் போவதை காண்கிறேன். பிடிவாத குணம் ஓரளவுக்கு தேவைதான் .அது எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பது அவரவர் கணிப்பை பொறுத்தது.

      நீக்கு
    2. கிரி,
      உங்களுடைய தளத்தில் கருத்துக்களை பதிவு செய்ய முடியவில்லையே, ஏன்?

      நீக்கு
  8. நம்மால் மட்டும் மற்றவர்களை அனுசரித்துச் செல்ல முடியாததன் காரணங்களை சரியாக தொகுத்திருக்கிறீர்கள்.

    பிடிவாத குணமும், நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணமும், நம்மைப்போல் எல்லோரும் இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பும், இளம் வயதில் அறிவுபூர்வமாக அணுகுவதை விட உணர்வுபூர்வமாக அணுகுவதும் என்பதும் சரியே.

    ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தான் செய்வது சரி என்ற எண்ணம் ஆரம்பத்தில் இருக்கும் .அதனால் நாம் ஏன் விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவேண்டும் என்ற எண்ணம் வருகிறது என நினைக்கிறேன்.

    அதோடு அனுசரித்து போகாததற்கு தன்முனைப்பும் (Ego) ஒரு காரணம். ஆனால் காலம் எந்த ஒரு மனிதரையும் மாற்றிவிடும். இளம் வயதில் இருந்த பிடிவாத குணமும், எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அனுபவத்தின் காரணத்தால் வயதான பின் மறைந்துவிடும்.

    நான் உன்னை விட பலம் வாய்ந்தவன் ஆகவே நீதான் என்னை அனுசரித்து செல்ல வேண்டும் என்கிற குணம் வராமல் இருக்க இளம்வயதிலேயே பிள்ளைகளுக்கு விட்டுக்கொடுக்கும் குணத்தை பெற்றோர்களும் ஆசிரியர்களும் சொல்லித்தரவேண்டும்.

    அபப்டி நடக்குமானால் விட்டுக்கொடுத்து அனுசரித்து போவது என்பது ஒரு பழக்கமாக ஆகிவிடும்.

    பதிலளிநீக்கு
  9. எப்போதும் போலவே மிக அருமையான அலசல். என்னுடைய ego வை சிறிது சிறிதாக குறைத்து அதில் ஓரளவுக்கு வெற்றி கண்டுள்ளேன். மனதை இலேசாவும் வைத்துக் கொள்ள இப்போது முடிகிறது.

    பதிலளிநீக்கு
  10. "கிரி,
    உங்களுடைய தளத்தில் கருத்துக்களை பதிவு செய்ய முடியவில்லையே, ஏன்?"

    அப்படி எதுவும் பிரச்சனையில்லையே சார்.

    சார் உங்களுடைய கருத்துரை பகுதியில் தனி தனி பதிலாக அளிக்கும் படியாக மாற்றி வைத்து விட்டால், யாருக்கு நீங்கள் பதில் அளிக்கிறீர்கள் என்று எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

    அதாவது கருத்துரை இட்டவருக்கு தனியாகப் பதில் அளிக்கலாம்.

    உங்கள் கணக்கின் உள்ளே சென்று இதைச் செயல்படுத்த முடியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கூறியது உங்களுடைய தளத்தில் comment போடமுடியவில்லை. அதனால் தான் என்னுடைய பதிவில் அந்த கேள்வியை கேட்டேன்.

      நீக்கு
    2. சார் தனி தனி பதிலாகக் கொடுக்கும்படி மாற்றியமைக்க நன்றி.

      நீக்கு
  11. நம்மைப் போலவே மற்றவர்கள் வேலை செய்வார்கள் என்று எதிர்பார்ப்பு இருந்தால் ஏமாற்றம் தான். தில்லியில் இப்படி நிறைய அனுபவம் கிடைக்கிறது.

    நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  12. உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி நாகராஜ் அவர்களே.

    பதிலளிநீக்கு
  13. //அப்போது நான் சந்தித்த பிரச்சினைகளை இப்போது சந்தித்திருந்தால் நிச்சயம் அவற்றை இன்னும் அறிவுபூர்வமாக (Matured) கையாண்டிருப்பேனோ// உல்டாவாக ஏமாற்றமாகக் கூட அமைந்து விடலாம் என்பதை மறுக்கமுடியுமா சார்?

    வேலைசெய்தவங்கித்துறை சார்ந்து பதிவுகள் எழுதிக்கொண்டிருந்தவர் நீங்கள்! இப்படிப் பொத்தாம்பொதுவாக எழுதியதை விட இன்னும் கொஞ்சம் issue based ஆக எழுதியிருக்கலாம் என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா என்ன?!

    பதிலளிநீக்கு
  14. வங்கி அனுபவத்தைப் பற்றி விரிவாக எழதியிருக்கலாம். ஆனால் இந்த பதிவு ஈகோ மற்றும் பிடிவாத குணத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியது. ஒரு எடுத்துக்காட்டாக தான் என்னையே எடுத்துக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இந்தப்பதிவுக்கு என்னுடைய பின்னூட்டத்தின் முதல் பகுதியிலேயே பதிலைச் சொல்லிவிட்டேன் சார்! இரண்டாவதாகத்தான் துறைசார்ந்த பதிவுகளை எழுதிக்கொண்டிருந்தவர் நீங்கள், இப்போதெல்லாம் எழுதுவதில்லையே கேள்வியை உள்ளடக்கியதாக!

      இந்த ego, பிடிவாதகுணம் என்பதென்ன? ஸ்ரீ அரவிந்தர் கொஞ்சம் எளிமையாக Ego was the helper, Ego is the bar என்கிறார். விலங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியின் படிப்படியான நிலைகளில் விலங்கிலிருந்து வேறுபடுத்திக் கொள்ள மனிதனுக்கு இந்த ego உதவியாக இருந்தது. மனிதன் என்பது ஒரு இடைப்பட்ட நிலை, அதையும் தாண்டி வளர அதே ego தடையாக இருக்கிறது என்பது அவர் சொல்வது.

      நான் அப்போதும் , இப்போதும் சொல்ல வருவது, பொத்தாம்பொதுவாக சொல்லிவிட்டுப் போய்விடாமல் கொஞ்சம் கேள்வி சிந்தனையை விரிவு படுத்திக் கொள்ளலாமே என்பதுமட்டும் தான்!

      நீக்கு
    2. இது ஒன்றும் ஆராய்ச்சி கட்டுரை அல்லவே? பிடிவாத குணத்தால் கேடுதான் விளையும் என்பதை மேலோட்டமாக சொல்ல முயன்றிருக்கிறேன் அவ்வளவே.

      நீக்கு
    3. கிருஷ்ணமூர்த்தி சார், டிபிஆர்.ஜோசப் சார் சொல்லும் விளக்கம் ஏற்றுக்கொள்ளும்படியே உள்ளது.

      "இந்த பதிவு ஈகோ மற்றும் பிடிவாத குணத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றியது"

      இதையொட்டி தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து இருக்கிறார், அவ்வளவே.

      நீக்கு
  15. நானும் திரும்பிப் பார்த்தேன். சில சரியாகவும். பல தவறாகவும் தோன்றுகிறது. ஆனால் .. அது தான் நான்!

    பதிலளிநீக்கு
  16. 'அது தான் நான' இப்படி சொல்றதுலருந்து நான் மாறவே மாட்டேன்னு சொல்றா மாதிரி இருக்கே?

    பதிலளிநீக்கு
  17. திரும்பிப் பார்த்து தன்னை நேர்மையாக அலசுவதே அபூர்வம். அதிலும் அதை வெளிப்படையாகச் சொல்லி இருப்பது இன்னும் அபூர்வம்.
    என்னுடைய கெட்டபழக்கங்களில் ஒன்று என்று எனக்குத் தோன்றுவது ஒரு காரியத்தை மற்றவர்களிடம் விட நம்பிக்கையற்று இருப்பது....  நானே செய்வது...

    பதிலளிநீக்கு
  18. மெயில் சபஸ்க்ரிப்ஷன் இணைக்கலாமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி. செய்கிறேன். ஐடியாவுக்கு மிக்க நன்றி.

      நீக்கு