10 செப்டம்பர் 2019

வங்கிகள் இணைப்பின் பின்னணி என்ன?

1969 ஆம் ஆண்டு முதன் முறையாக நாட்டில் அப்போது இயங்கிவந்த  பதினான்கு பெரிய தனியார் வங்கிகள் (50 இலட்சத்திற்கும் அதிகமான வைப்பு நிதி (Deposit) கொண்டிருந்த) வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இதன் பின்னால் அரசியல்தான் இருந்ததே தவிர நாட்டின் பொருளாதாரம் உயர்வடைய வேண்டும் என்றோ அல்லது ஏழை எளிய மக்கள் எளிதாக கடன் பெற வேண்டும் என்ற எண்ணமோ இருப்பதாக தெரியவில்லை என அப்போதே பல எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதன் பிறகு பதினோரு ஆண்டுகள் கழித்து மேலும் ஆறு (அதாவது ரூ.200 இலட்சம் வைப்பு நிதி கொண்டிருந்த)வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. 

தேசியமயமாக்கப்பட்டபோது அரசால் முன்வைக்கப்பட்ட காரணங்களுள் மிக முக்கியமானது என்னவென்றால் கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்களும் எளிதில் கடன் பெற முடிவதுடன்  வங்கி சேவைகள் நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையும் என்பது. 

இந்த இரு நோக்கங்களும் பெரும்பாலும் நிறைவேறியுள்ளன என்பதை மறுக்க முடியாது.:

1. தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து அதாவது கடந்த ஐம்பது ஆண்டுகளில் நாட்டிலுள்ள மொத்த வங்கி கிளைகளின் எண்ணிக்கை சுமார் 8,500லிருந்து 1.45,000 ஆக உயர்ந்துள்ளது. இவற்றுள் சுமார் 90% கிளைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் என்றால் மிகையல்ல.



2. சுமார் 65000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு வங்கி கிளை என்ற 1969ம் வருட நிலையிலிருந்து சுமார் 14,000 வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிளை என்ற அளவுக்கு வங்கிகள் நாடு முழுவதும் பரந்து விரிந்துள்ளன. இவற்றுள் ஐம்பது விழுக்காடு கிளைகள் கிராம மற்றும் சிறிய நகர்ப்புறங்கிளில் செயல்படுகின்றன. 

3.1969ம் ஆண்டு வரை வசதிபடைத்தவர்களுக்கு மட்டும் வங்கிக் கடன் என்ற நிலை மாறி விவசாயம், சிறு, குறு தொழில்கள், சில்லறை வணிகம் என  நாட்டில் யார் வேண்டுமானாலும் வங்கிகளை அணுகி மிகுந்த சிரமம் இல்லாமல் கடன் பெற முடியும் என்ற நிலை உருவானது.

4. வங்கிகளில் கணக்கு துவங்கும் பழக்கமும் மிகப் பெரிய அளவில் பெருகிவருவதையும் பார்க்க முடிகிறது. கடந்த ஐம்பதாண்டுகளில்  வங்கி சேமிப்பு (DEPOSIT) தொகை ரூ.1,24,000 billion (1 Billion=100 crores) என்ற எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தொகையில் நீண்ட கால வைப்புத்தொகை (fixed deposits) ஐம்பது விழுக்காட்டிலிருந்து சுமார் தொன்னூறு விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. இது நாட்டிலுள்ள வங்கிகள் மீது குறிப்பாக பொது வங்கிகள் மீது மக்கள் வைத்திருக்கும் அபிரிமிதமான நம்பிக்கையை காட்டுகிறது எனலாம். 

5. இதே போன்று வங்கிகள் கடனாக வழங்கும் தொகையும்  ரூ.1,05,000 billion அளவுக்கு  உயர்ந்துள்ளது.




சுருக்கமாக கூற வேண்டுமென்றால் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு நாடு அடைந்த பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை வங்கிகள் பெருமளவு உதவிசெய்துள்ளன என்பது உண்மைதான். 

ஆனால் நாட்டுடமையாக்கப்படுவதற்கு முன்பு சிறிய அளவில் கட்டுப்பாடுடன் இயங்கிவந்த தனியார் வங்கிகளின் கிளைகள் கட்டுக்கடங்காத அளவுக்கு பெருகியதாலும் அதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய வணிக வளர்ச்சியாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டிய சூழலுக்கு வங்கிகள் தள்ளப்பட்டன என்பதும் உண்மை. இன்று பொதுத்துறை வங்கிகளில் பல பெரும் நஷ்டத்தில் இயங்கிவருவதற்கு இத்தகைய அபிரிதமான வளர்ச்சியும் ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகின்.றது.

மிகப் பெரிய அளவிலான விரிவாக்கம்  மிகப் பெரிய அளவிலான வைப்புத் தொகைகளையும் வங்கிகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து ஈட்டித் தந்தன. வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகைகளுக்கு நியாயமான அளவிலான வட்டி அளிப்பதற்கு அவற்றை அதிக அளவில் கடனாக வழங்க வேண்டிய அவசியமும் வங்கிகளுக்கு உருவானது. இலட்ச கணக்கில் கடன் வழங்கி வந்த வங்கிகள் கோடிக் கணக்கில் வழங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டன. இது மேலும் மேலும் பலுகிப் பெருகி இன்று ஒரே நிறுவனத்திற்கு ஆயிரம், இரண்டாயிரம் கோடிகள் என கடன் வழங்கும் நிலையை நாட்டுடமையாக்கப்பட வங்கிகள் அடைந்துள்ளன. 

கோடிகள் ஆயிரக் கணக்கில் பெருகி இன்று இலட்சம் கோடி என்ற பெரும் தொகைகயை நாட்டிலுள்ள வெகு சில கார்ப்பரேட் நிறுவனங்களை மிகப் பெரிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களாக இந்த வங்கிகள் உருவாக்கியுள்ளதை காணமுடிகிறது.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மிகச் சிறிய நிறுவனங்களாக இருந்த நிறுவனங்கள் பல இன்று உலக நிறுவனங்களாக  (multi-national ompanies) உருமாறியுள்ளன என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம் வங்கிகள் வழங்கிய கடன்களே என்றால் மிகையாகாது.

வங்கிகளிடமிருந்து எளிதாக பெற்ற கடன் தொகைகளை பெரும்பாலான நிறுவனங்கள் சரியாக பயன்படுத்தாத காரணத்தாலும், உலகளவில் பொருளாதாரம் சரிவை சந்தித்தாலும் பெரும்பாலான கார்ப்பரேட் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்திக்க துவங்கின. இதன் விளைவாக வங்கிக் கடன்களை திருப்பித் தர முடியாத சூழல் ஏற்பட்டது.

இதன் விளைவாக வங்கிகள் வழங்கிய கடன்கள் வாராக் கடன்களாக உருமாற வங்கிகளின் வருமானம் சரியத் துவங்கியது...

நாளையும் தொடரும்

16 கருத்துகள்:

  1. ஒரே... ஒரே... ஒரே...

    ஒரேடியாக அனைத்தும் ? - எளிது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டிடி.

      நீக்கு
  2. வங்கிகளை ஏமாற்றி பணம் பெறுவதும்பல பெரிய முதலீட்டாளர்களுக்கு எளிதாகி விட்டது கணக்கில்வாராகடன்கள் அதிகரித்து விட்டது நான்பெர்ஃபார்மிங் அச்செட்ஸ் அதிகமாகி விட்டது வங்கிகள் செயல்பாடுகள் பலவும் புரிவ்தில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கிகள் செயல்பாடுகள் பலவும் புரிவ்தில்லை//

      வங்கியில் சுமார் நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்த எனக்கே இப்போதைய வங்கிகளின் செயல்பாடுகளில் பலவும் புரிவதில்லை. தினம் தினம் புதிது புதிதாக மோசடிகள் நடக்கின்றன.

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜிஎம்பி சார்.

      நீக்கு
  3. நல்ல கட்டுரை. நாளை வெளிவரப் போகும் பதிவுக்கான காத்திருப்பில் நானும்...

    பதிலளிநீக்கு
  4. அறியாத பல விடயங்கள் அறிந்தேன் ஐயா

    2003-லிருந்து 2010-வரையில் துபாய், அபுதாபியில் இந்தியர்கள் அனைவருக்கும் விரட்டி, விரட்டி வங்கிகளில் கடன் கொடுத்தார்கள்.

    விடுவார்களா இந்தியர்கள் ? குறிப்பாக மலையாளிகள். அவனவன் தகுதிக்கு மீறி கோடிகள்வரை கடன் வாங்கினான்.

    ஆறு மாதம்கூட இல்லை மூன்று மாதங்கள் முறையாக தவணை கட்டினான் விடுமுறையில் இந்தியாவுக்கு வந்தார்கள் (கவனிக்கவும் விடுமுறையில் கேன்ஷலில் அல்ல) விடுமுறையில் வந்தவன் திரும்பவே இல்லை 99% வீதம் பேர்.

    நீங்கள் நினைக்கலாம் கம்பெனியில் சர்வீஸ் செய்த பணம் கிடைக்காதே... போனால் போகட்டுமே அதைவிட இருபது மடங்கு வங்கிகளில் வாங்கி விட்டோமே...

    சரி என்ன செய்வது ? சிங்கப்பூர், மலேஷியா மற்ற நாடுகளுக்கு பறந்து விட்டனர் சிலர் வேறு பாஸ்போட்டில் மீண்டும் துபாய்.

    உறங்கிய அரேபியன் விழித்தான் இனி இந்தியர்களுக்கு கடன் இல்லை.

    என்னை விரட்டி, விரட்டி அழைத்தார்கள் கடன் வாங்கச்சொல்லி வேண்டாம் என்ற எனக்கும் எச்சில் ஊறியது இந்திய மதிப்பீட்டில் நாற்பது லட்ச ரூபாய்வரை என்னை பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள் (நான் மத்திய அரசு அலுவலகத்தில் வேலை செய்தேன்) பலவாறு யோசித்து எனக்கு அவசியப்பட்ட 15 லட்ச ரூபாய் போதுமென்று கடன் வாங்கினேன். சரியாக ஆறு வருடங்கள் தவணைப்பணம் கட்டினேன். விடுமுறையில் வந்தாலும் மாத தவணையை வங்கியில் போட்டு வந்தேன். அம்பூட்டு யோக்கியன் நான்.

    சரியாக கட்டி முடித்தவுடன் உத்தமபுத்திரன் என்று சான்றிதழ் கொடுத்து பாராட்டினர் இந்தியர்களில் நான் நல்லவனாம். மீண்டும் நக்கலுக்காக வேண்டுமென்றே இந்திய ரூபாய்க்கு ஒரு லட்சம் கடன் கேட்டேன்.

    "ஸாரி இந்தியர்களுக்கு கடன் கிடையாது"

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி

      இந்தியர்களைப் பற்றி வெளிநாட்டுக்காரன் தெரிந்து வைத்திருக்கிறான். நம்முடைய வங்கிகளை நடத்துபவர்களுக்கு தெரியவில்லை.

      நீக்கு
    2. கில்லர்ஜி சொல்லியிருப்பது உண்மை. அந்த காலகட்டத்தில் எங்கள் கம்பெனியில் பலர் வங்கிகளில் கடன் வாங்கி சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு கம்பி நீட்டிட்டாங்க. அவனுங்க லாஜிக், ஓடிப்போனவனை தேடிக் கண்டுபிடிக்க நிறைய செலவழியும். அதற்குப் பதில் இதற்கு இன்ஷூரன்ஸ் கம்பெனிகளிடமிருந்து வசூல் பண்ணிடலாம் என்று.

      அதற்குப் பிறகு, கடன் வாங்கும் பணத்துக்கு இன்ஷூரன்ஸுக்கு ஆகும் செலவையும் சேர்த்து வாங்க ஆரம்பித்தார்கள். அட, நம்ம காணாமல் போனால் இவனுங்க கண்டுக்க மாட்டாங்க என்று நினைத்து அப்போவும் இந்தியர்கள் கடன் வாங்கி கம்பி நீட்டினார்கள்.

      உண்மையைச் சொல்லணும்னா, நாம நேர்மை, வாய்மை, தூய்மை என்று வாய் வார்த்தைகளில் வல்லவர்கள். ஆனா செய்கையில் அவை நம்மிடம் இல்லை.

      நீக்கு
    3. சொல்லணும்னா, நாம நேர்மை, வாய்மை, தூய்மை என்று வாய் வார்த்தைகளில் வல்லவர்கள். ஆனா செய்கையில் அவை நம்மிடம் இல்லை.//

      நம் தமிழ்நாட்டில் குறிப்பாக தமிழர்கள் பரவாயில்லை. வடக்கே குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தான் வாராக்கடன்கள் மிக அதிகம்.

      நீக்கு
  5. ///வங்கிகளை ஏமாற்றி பணம் பெறுவதும்பல பெரிய முதலீட்டாளர்களுக்கு எளிதாகி விட்டது///
    முதலீட்டாளர்களுக்கு ஐடியா கொடுப்பதே வங்கி நிர்வாகிகள்தானே என்ன அதற்காக அவ்ர்களுக்கு ஒரு பெரிய தொகை பினாமி பெயரில் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான் அதனால் முதலீட்டாளர்கள் ஏமாற்றுகிறார்கள் என்று மட்டும் சொல்லாமல் வங்கியில் பணி புரியும் நிர்வாகிகள்தான் ஏமாற்றுகிறார்கல் என்று சொல்லாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழரின் கருத்தும் உண்மை.

      நீக்கு
    2. ஆட்சியாளர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து உயர் பதவிகளுக்கு வரும் உயர் அதிகாரிகள் அதை மீட்க வேண்டாமா? பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடன்களின் அளவை தீர்மானிப்பது இத்தகைய உயர் அதிகாரிகள் தான். கிளைகளில் பணியாற்றும் அதிகாரிகள் அல்ல.

      நீக்கு
    3. ஆட்சியாளர்களின் தலையீடும் ஒரு மிக முக்கியமான காரணம்.

      நீக்கு
  6. இதற்கு முந்தையகட்டுரையையும், இதனையும் படித்தேன்.  வங்கிகளின் வராக் கடன்கள் பெரிய பிரச்னை. ஆட்சியாளர்களின் தலையீட்டை குறைத்தாலே பெருமளவு பிரச்னைகள் சரியாகலாம்.  அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியாக இல்லாமல் தனியார் வங்கியாக இருந்தால் கடன் வாங்கியவரால் ஏமாற்ற முடியுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனியார் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு முதலீடு குறையும்போது அதன் உரிமையாளர்கள் புதிய முதலீடு கொண்டு வர வேண்டுமே. பொதுத்துறை வங்கியென்றால் எத்தனை முதலீடு வேண்டும் என்றாலும் அரசு தருமே!?அதுதான் வங்கிகளின் மெத்தனத்திற்கு காரணம்.

      நீக்கு