29 மே 2008

பணவீக்கம் - காரணிகள் 2

விலைவாசி உயர்வு ஏன் ஏற்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்த்தோம்.

அதாவது விலைவாசி உயர்வதற்கு நுகர்வோரின் தேவைகள் (Demand) அதிகரிப்பதும் ஒரு காரணம் என்று பார்த்தோம். ஆனால் அது மட்டுமே முழுமையான காரணம் அல்ல.

நுகர்வோர் தேவைப்படும் பொருட்கள் சந்தையில் சரிவர கிடைக்காமல் போனாலும் விலைவாசி உயரும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. தேவைப்படும் பொருளின் உற்பத்தி குறைந்துபோவது.

குறிப்பாக உணவுப் பொருட்கள். பருவமழையையே நம்பியிருக்கும் விவசாயம் பருவமழை பொய்த்தால் நலிந்துபோக நேருகிறது. அது அதீத மழையாலும் நேரிடலாம். அறுவடைக்கு காத்திருக்கும் நெற்பயிர் திடீரென்று கொட்டி தீர்க்கும் அடை மழையால் நீரில் மூழ்கிப்போவதும் வளர்ந்து கனி கொடுக்க காத்திருக்கும் வாழை, கரும்பு பேய்க் காற்றால் சரிந்துபோவதும் நம் நாட்டில் அவ்வப்போது காணும் நிகழ்ச்சிகள்.

2. வியாபாரிகளின் நேர்மையற்ற நடத்தைகள்.

பருவமழை, பேய்க்காற்று ஆகியவற்றையாவது முன்னறிவிக்க வளர்ந்துவரும் தொழில்நுட்பம் வகைசெய்கிறது. ஆனால் artificial shortage எனப்படும் மனித வக்கிரங்களால் ஏற்படும் பதுக்கல் மற்றும் cartel எனப்படும் கூட்டுக் களவானித்தனத்தை எப்படி முன்னறிவது? மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பதுக்கல் பெரும்பாலும் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலையைப் பாதிக்கிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கூட்டு சேர்ந்து தங்களுடைய பொருட்களை குறிப்பிட்ட விலைக்கு கீழ் விற்பதில்லை என்று முடிவெடுத்துக்கொள்வது இரும்பு, சிமிட்டி போன்ற கட்டுமான பொருட்களின் விலையைப் பாதிக்கிறது.

இயற்கையின் இடையூறுகளால் ஏற்படும் தட்டுப்பாட்டை, குறிப்பாக உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஈடுகட்ட அரசு தங்களிடம் உள்ள கையிருப்பை உடனே சந்தையில் வினியோகிப்பதோ அல்லது இறக்குமதி செய்வதோ அவசியமாகிறது. இது ஒரு குறுகிய கால நடவடிக்கை. நீண்ட கால நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு, அவர்கள் மீண்டும் உணவு உற்பத்தியில் ஈடுபட சலுகை கடன் வசதிகள் ஆகிய நடவடிக்கைகளும் உணவுப்பொருள் உற்பத்தி மிகுதியாகும் காலங்களில் அவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து தேவைப்படும்போது சந்தையில் இறக்கி விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, உணவுப்பொருள் தட்டுப்பாடு உள்ள காலங்களில் அவற்றின் ஏற்றுமதியை தடைசெய்வது என பல்வகை நடவடிக்கைகளை எடுக்கும் கடமை அரசுக்கு உண்டு.

அதுபோன்றே தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் செயற்கையான பற்றாக்குறையை நேர்மையுடனும், கண்டிப்புடனும் எதிர்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அரசின் கடமையாகும். அரசின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கும் உற்பத்தியாளர்களை வழிக்குக்கொண்டு வர தங்களிடம் உள்ள அதிகாரத்தை அரசு தயங்காமல் பயன்படுத்த முன்வருவதன் மூலம் செயற்கையாக சந்தையில் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இதைத்தான் supply side management என்கிறார்கள். அதாவது நுகர்வோரின் தேவைகளை ஈடுகட்ட (to meet the consumers’ demand) எடுக்கப்படும் நடவடிக்கைகள்.

நுகர்வோரின் அத்தியாவசிய தேவைகளுக்கு நிகரான பொருட்கள் சந்தையில் கிடைக்கச் செய்வது மத்திய/மாநில அரசுகளின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் நுகர்வோரின் தேவைகள் தேவைக்கு மேல் ஏற்படும்போது என்ன செய்வது? அவர்களுடைய அதீத தேவைகளை நிவர்த்தி செய்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. ஆகவேதான் நுகர்வோரின் கைவசமுள்ள ரொக்கத்தை (Money) கட்டுப்படுத்தவும் அரசு முயல்கிறது.

நாட்டிலுள்ள மொத்த பணப்புழக்கத்தை அவ்வப்போது கண்கானித்து தேவைப்பட்டால் கட்டுப்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் எடுத்து வருகிறது.

நம் நாட்டிலுள்ள மொத்த பணப்புழக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி எவ்வாறு கணக்கிடுகிறது?

1. நாட்டு மக்கள் கைவசமுள்ள ரொக்கம் (Currency with Public)
2. வங்கிகளில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்புநிதி திட்டங்களிலுள்ள தொகை (Deposits with commercial Banks)

இவற்றின் மொத்த மதிப்பே நாட்டின் மொத்த பணப்புழக்கமாக கணிக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி இவ்விரண்டின் மொத்த மதிப்பு சுமார் ரூ.40,00,000 கோடிகள்!! இதில் நாட்டு மக்கள் கைவசமுள்ள ரொக்கம் மட்டும் ரூ.5,67,700 கோடி!

வங்கி சேமிப்பு திட்டங்களிலுள்ள தொகையை எப்போது வேண்டுமானாலும் ரொக்கமாக மாற்றிவிட முடியும் என்பதால் அதுவும் நாட்டின் மொத்த பணப்புழக்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவை இரண்டும் சுமார் 21% விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது சுமார் ரூ.8,00,000 கோடிகள் உயர்ந்துள்ளன!

இந்த அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்தால் விலைவாசி உயர்வதை எவ்வாறு தடுப்பது!!

நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது இவை இரண்டும்:

1. வங்கிகள் அரசுக்கு வழங்கியுள்ள கடன்கள் (Bank Credit to Govt)
2. வங்கிகள் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்கள் (Bank Credit to Commercial Sector)

வங்கிகள் அரசுக்கு வழங்கும் கடன் முழுவதும் அரசை நடத்திச் செல்லவும் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் செலவிடப்படுவதால் அது நுகர்வோரின் கையிருப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல.

ஆனால் வங்கிகள் தயாரிப்பாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் வழங்கும் கடன் அவர்களுடைய தயாரிப்பு மற்றும் வர்த்தக திறனை அதிகரிக்கின்றன. இதன் விளைவாக சந்தையில் கிடைக்கும் பொருட்களின் அளவு மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபமும் கணிசமாக உயர்கிறது.

மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் வங்கிகள் அரசுக்கு வழங்கிய கடன் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றாலும் வர்த்தகத்திற்கு வழங்கிய கடன் தொகை சுமார் ரூ.2,35,000 கோடிகள் உயர்ந்துள்ளன என்கிறது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை.

ஆகவேதான் இத்தகையோருக்கு கடன் வழங்கும் வங்கிகளுடைய கடன் வழங்கு சக்தியை (Lending Power) முடக்கும் நோக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய தொகையின் அளவை 7.5%லிருந்து 8%ஆக (Cash Reserve) உயர்த்தியது. அதாவது வங்கிகளுடைய சேமிப்பு திட்டங்களிலுள்ள மொத்த தொகையில் 8 விழுக்காடு ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுவிடும். இது 31.3.07ல் 6% ஆக இருந்தது.

இதன் மூலம் வங்கிகள் கடன் வழங்கும் திறன் குறைக்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள்/ வர்த்தகர்கள் வங்கிகளிலிருந்து பெறும் கடனின் அளவும் கணிசமாக குறையும். இதன் விளைவாக தயாரிப்பு குறையும், கொள்முதல் குறையும், சந்தைக்கு வரும் பொருட்களின் அளவும் குறையும்.

ஆனால் இது விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்துமா?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்..

20 மே 2008

பணவீக்கம் - காரணிகள்

பணவீக்கம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொதுவான ஒன்று. வளர்ந்த நாடுகள் எனப்படும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி போன்ற மேலை நாடுகளிலும் பணவீக்கம் மிக சகஜமாகிவரும் காலம் இது.

ஒரு குறிப்பிட்ட அளவு பணவீக்கம் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார சந்தையில் தவிர்க்க முடியாத ஒன்று என்பது மட்டுமல்ல தேவையான ஒன்றும் கூட. ஆங்கிலத்தில் இதை necessary evil என்பார்கள்.

ஆனால் அது ‘குறிப்பிட்ட’ அளவைத் தாண்டும்போதுதான் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாதார பிரச்சினையாக நின்றுவிடாமல் சமுதாய பிரச்சினையாகவும் உருவாகிவிடுகிறது. குறிப்பாக முதிர்ச்சியடையாத அரசியல் சூழலைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கம் ஒரு சிக்கலான மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினையாகவே மாறிவிடுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிவிரைவு பார்வையில் பயணிக்கும்போது அதன் விளைவாக ஏற்படும் பணவீக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. நாட்டில் உற்பத்தி திறன் அதிகரிக்க, உற்பத்தி அதிகரிக்கிறது. அதிகரிக்கப்பட்ட பொருட்களுக்கு உள்நாட்டில் தேவை (Demand) இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் விலை போகின்றன. அதன் விளைவு உற்பத்தியாளர்களுடைய வருமானம் மற்றும் லாபம் (Revenue Income and Profit) உயர்கிறது. உற்பத்தியாளர்களின் வருமானத்தில் ஒரு பங்கு பணியாளர்களின் வருமானமாக செல்கிறது. உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்களுடைய பணியாளர்களின் வருமானமும் உயர்கிறது. தனிநபர் வருமானம் உயர, உயர அவர்களுடைய வாங்கும் திறனும் அதிகரிக்கிறது. விளைவு? அவர்களுடைய தேவையும் அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார அல்லது தேவையற்றதாக கருதப்பட்டு வந்த கைப்பேசி, கணினி போன்ற பல பொருட்கள் இன்று ஒருவகையில் அத்தியாவசிய பொருட்களாக உருவெடுத்துள்ளனவென்றால் அதற்கு முக்கிய காரணியாக கருதப்படுவது தனிநபர் வருமான உயர்வு.

சந்தையிலுள்ள நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்கு (Collective demand of the consumers) நிகராக அவை சந்தையில் கிடைக்கும் அளவும் (Supply) சூழலில் சம்பந்தப்பட்ட பொருளின் விலை உயரத்தானே செய்யும்?


இதை பொருளாதார நிபுணர்கள் பல கோணங்களிலிருந்து ஆய்வு செய்து பல விளக்கங்களை அளித்துள்ளனர்.

1. தேவைகள் (Demand) அதிகரிப்பதால் ஏற்படும் உயர்வு.

ஒரு பொருளின் விலை அதன் நுகர்வோரால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது! அதாவது சந்தையிலுள்ள ஒட்டுமொத்த நுகர்வோரின் தேவை (Demand) மற்றும் அது சந்தையில் கிடைக்கும் அளவு (Supply or Availablity) ஆகியவற்றைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி ஒரு பொருளின் விலை சந்தையிலுள்ள நுகர்வோரின் தேவையையும் (Demand) அது கிடைக்கும் அளவையும் (supply) பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் ஒரு சில பொருட்கள் தவிர (அன்றாட உணவுப் பொருட்களான முட்டை, காய் கறி, மாமிசம்) பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசே நிர்ணயித்துவிடுவதால் அவற்றின் தேவை மற்றும் கிடைக்கும் அளவைப் பொருத்து அமைவதில்லை.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறியின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுவதை காண்கிறோம். காலை நேரத்தில் கட்டு ஒன்று ரூ.3.00 வீதம் விற்கப்படும் கொத்தமல்லி/புதினா மாலையில் ரூ.1க்கும் கிடைப்பதுண்டு. சில நாட்களில் கட்டு ஒன்று ரூ.5க்கும் கிடைப்பது அரிதாகிவிடும். வேறு சில நாட்களில் எதிர்பாராத விதமாக அதிக அளவிலான சரக்கு வந்து இறங்க கட்டு ஒன்று 50 காசுக்கும் வாங்க ஆளிருக்காது. தக்காளியும் அதேபோல்தான். சந்தையில் வந்திறங்கும் சரக்கின் அளவைப் பொருத்தே அன்றைய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் when the supply of a commodity does not keep pace with the demand the prices will rise.

இதைத்தான் தேவைகள் அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வு என்கிறார்கள் (demand pull inflation).

நுகர்வோரின் தேவைகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. வாங்கும் திறன் அதிகரிப்பு
2. நுகர்வோரின் ரசனையில் ஏற்படும் மாறுதல்கள்
3. விலைவாசி உயரக் கூடும் என்ற எண்ணம்
4. விலை வீழ்ச்சி

இத்துடன் கால மாற்றத்தால் ஏற்படும் குறுகிய கால தேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் (Seasonal demand).

கடந்த சில மாதங்களில் உலக உணவுப் பொருட்கள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம் இந்தியா மற்றும் சீன நடுத்தர மக்களின் தேவைகளின் அதிகரிப்பு என்று அமெரிக்க அதிபரும் உலக வங்கி தலைவரும் கூறியதைக் கண்டு நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் கொதித்துப் போனார்கள் என்றாலும் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இன்று சென்னையில் பல் அங்காடிகளை மொய்த்துக்கொண்டு நிற்பது கூப்பன் வாசிகள் எனப்படும் கணினித்துறை ஊழியர்கள்தான். இவர்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியாக வழங்கப்படும் கூப்பன்களை எப்படியாவது செலவழிக்க வேண்டும். மேலும் இதை பணத்திற்குப் பதிலாக ஏற்றுக்கொள்வது பல்பொருள் அங்காடிகள்தான். ஆகவே தேவை உள்ளதோ இல்லையோ இத்தகைய அங்காடிகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கிக் குவிப்பது இவர்களுக்கு வாடிக்கை.

கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் முளைத்துள்ள Mall கள் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், eateriers எனப்படும் உணவுப்பண்டம், பானங்கள் விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டு தங்களுடைய உபரி வருமானத்தை செலவிடும் இந்திய நடுத்தர மக்களின் வாங்கும் திறன் இன்றைய விலைவாசி உயர்வின் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

2. நுகர்வோரின் ரசனையில் ஏற்படும் மாற்றங்கள்.

காலப் போக்கில் ஏற்படும் ரசனை மாற்றங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை விளைவிப்பதில்லை. நம் நாட்டில் தொலைக்காட்சி அறிமுகமாகி சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன. துவக்கத்தில் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்த தொலைக்காட்சி நடுத்தர மக்களிடம் பரவி பிறகு அடித்தட்டு மக்களை வந்தடைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இதை காலப் போக்கில் ஏற்பட்ட ஒரு சாதாரண மாற்றம் எனலாம். ஆகவே தொலைக்காட்சி பெட்டியின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

ஆனால் கைத்தொலைபேசி நாட்டில் அறிமுகமாகி முழுமையாக பத்தாண்டுகள் நிறைவாறாத நிலையில் இன்று நாட்டிலுள்ள சுமார் முப்பது கோடி கைத்தொலைபேசி வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் USD 250மில்லியன் இந்த சேவைக்கென செலவழித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இத்தகைய ரசனை மாற்றத்தை எந்த வகையில் சேர்ப்பது?

3. விலைவாசி உயரக்கூடும் என்ற அச்சம்

இதற்கு முக்கிய உதாரணம் பெட்ரோல் விலை. இன்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடப்போகிறது என்ற ஊகம் மட்டுமே நுகர்வோரின் தேவையை பன்மடங்கு உயர்த்திவிடுகிறதே?

4. விலை வீழ்ச்சி

இது நம்முடைய நாட்டைப் போன்ற முதிர்ச்சியடையாத பொருளாதார சந்தையில் ஏற்படும் விசித்திரம். Reduction Sale அல்லது கழிவு விற்பனை. பண்டிகை வந்தால் பண்டிகை கழிவு. ஆடி மாதம் வந்தால் ஆடிக்கழிவு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். தேவையோ இல்லையோ கழிவு விலையில் வாங்கிக் குவிக்கும் அறியாமை!

இத்தகைய நுகர்வோரின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வைக் (Demand Pull Inflation) கட்டுப்படுத்த மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உதவியுடன் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடரும்...

15 மே 2008

இது அமைச்சர் பூங்கோதைக்கு வக்காலத்து அல்ல!

தமிழக அமைச்சர்களுள் ஒருவரான திருமதி பூங்கோதை அவர்களுடைய தொலைபேசி உரையாடலில் உறவினர் ஒருவருக்காக சிபாரிசு செய்யப் போக அது அவருடைய பதவியையே பறித்தது செய்தி!

ஆனால் இந்த தொலைபேசி உரையாடல் பதிவை வெளியிட்டு பூங்கோதை அவர்கள் தன்னுடைய அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று சுப்பிரயமண்யம் சுவாமி என்ற அரசியல் அயோக்கியர் கூப்பாடு போடுவதும் ஊழல் பேர்வழிகளான ஜெயலலிதாவும் அவருடைய முன்னாள் அமைச்சரவை சகாக்கள் ஒத்து ஊதுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

இதற்கு பதிலளித்து மு.க அவர்கள் ஏதோ இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத அக்கிரமம் நடந்துவிட்டதுபோல் அவமானம், அவமானம் என்று அங்கலாய்ப்பது அதைவிட வேடிக்கை.

இதன் பொருள் என்ன?

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் எவருமே இத்தகைய சிபாரிசை அல்லது வேண்டுகோளை செய்யவில்லை என்றா?

அல்லது இப்படி கையும் களவுமாக பிடிபடவில்லை என்றா?

பூங்கோதை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பதை மட்டும்தான் இது காட்டுகிறது.

இல்லையென்றால் அவசரப்பட்டு இது என்னுடைய குரல்தான் என்று ஒத்துக்கொள்வாரா?

நாட்டின் மிக உயர்ந்த உச்ச நீதி மன்றத்திலேயே தன் கையொப்பத்தை போலி என்று ஒரு முன்னாள் முதலமைச்சர் வாதிட்டதைப் போல அவரும் இது என்னுடைய குரல் அல்ல, மிமிக்ரி என்று வாதிட்டிருக்கலாம்.

அல்லது தன்னுடைய வாரிசுகளுடைய நிறுவனங்களில் பணிபுரியும் கோடானுகோடி ஊழியர்களுடைய நலனுக்காகத்தான் அந்த நிறுவனங்களுக்கு சிபாரிசு செய்தேன் என்ற மத்திய அமைச்சர் ஒருவர் சமீபத்தில் சமாளித்ததுபோல சமாளித்திருக்கலாம்.

அது வாரிசு இது உறவு அவ்வளவுதான் வித்தியாசம்!

என்னக் கேட்டால் பூங்கோதை செய்த விஷயம் ஒரு பெரிய விஷயமே அல்ல. நானும் என்னுடைய நண்பர்களுக்காக என்னுடைய வங்கியிலுள்ள விஜிலன்ஸ் அதிகாரிக்கு பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.

அதாவது என்னுடைய நண்பர் தவறிழைக்கவில்லை என்று நான் கருதும் சந்தர்ப்பத்தில், விசாரனை முடிவடைவதற்கு முன்பு, என்னுடைய கருத்தை விசாரணை அதிகாரியிடம் கூறுவதில் தவறேதும் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.

பூங்கோதையின் உறவினர் கையூட்டு பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டார் என்பது உண்மையானாலும் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவரும் வேளையில் விசரணை முடிவையே மாற்றியமைக்க வேண்டும் என்று பூங்கோதை பரிந்துரைத்திருந்தால் அது அயோக்கியத்தனம், பதவி துஷ்பிரயோகம், என்றெல்லாம் வாதிடலாம்.

ஆனாலும் அதை சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும். அது சுப்பிரமண்யம் சுவாமிக்கோ, அல்லது இன்று சட்டமன்றத்தில் கூப்பாடுபோடும் எதிர்கட்ட்சிகளுக்கோ அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்த கூத்தாடி நடிகருக்கோ எவ்வித அருகதையும் இல்லை.

பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும் என்ற யேசுபிரானின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன!

*******

08 மே 2008

வங்கிகளில் கணினி - புதிய முயற்சி

கடந்த பதினெட்டு மாத காலமாக எங்களுடைய வங்கி மற்றும் சென்னையைச் சார்ந்த லேசர் சாஃப்ட் (Laser Soft Infotech Chennai) மென்பொருள் நிறுவனத்தைச் சார்ந்த மென்பொருள் வல்லுனர் குழுவினரின் இடைவிடா முயற்சியில் உருவாக்கப்பட்ட மென்பொருள் (Centralised Banking Solution) கடந்த வாரம் எங்களுடைய வங்கியின் இரு சென்னைக் கிளைகளில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்து Live Run துவங்கியுள்ளது.

இது இந்திய வங்கி சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது என்றாலும் மிகையாகாது என்றே கருதுகிறேன்.

ஏனெனில் இந்த மென்பொருள் பல ‘முதல்’ சாதனைகளை படைத்துள்ளது.

இதுதான்

1. இந்தியாவின் முதல் முழுமையான ஜாவா மொழியில் தயாரிக்கப்பட்ட வங்கி பரிவர்த்தனையில் தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள்.
2. முதன் முறையாக ஒரு வங்கியும் ஒரு மென்பொருள் நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்பட்ட மென்பொருள்.
3. முதன் முறையாக ஒரு வங்கிக்கு தேவையான அனைத்து பரிவர்த்தனைகளையும் (Transaction Modules) உள்ளடக்கிய மென்பொருள் (Infosys, Iflex, TCS) போன்ற நிறுவனங்களுடைய மென்பொருள் பல வெளியார் நிறுவனங்களின் மென்பொருளுடன் Interface செய்யப்பட்டுள்ளது)

Oracle நிறுவனத்தின் உதவியுடன் நாட்டிலேயே முதன் முறையாக Oracle 10g Real Application Cluster (RAC) வெற்றிகரமாக நிறுவப்பட்டதும் ஒரு சாதனை எனலாம்.

இனி எங்களுடைய வங்கியின் மீதமுள்ள 350 கிளைகளிலும் இதை வெற்றிகரமாக நிறுவும் பணி துவங்கியுள்ளது.

ஒரு மென்பொருளை தயாரிப்பதை விடவும் பன்மடங்கு சிரமமானது அதை அனைத்து கிளைகளிலும் கொண்டு செல்வது. கிளைகளிலுள்ள ஒவ்வொரு பணியாளரையும் புதிய மென்பொருளை பயன்படுத்த பயிற்சிவிப்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

பல இடைஞ்சல்களையெல்லாம் சந்தித்து வெளிவந்துள்ள இந்த மென்பொருள் இனி வரும் காலங்களில் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதுதான் இன்றைய ஆவல்.

மென்பொருளை வடிவமைத்து, தயாரித்து சோதனை செய்த காலங்களில் அனுபவித்த தடங்கல்கள், தோல்விகள், வெற்றிகள் எல்லாவற்றையும் முழுமையாக எழுத வேண்டும் என்று ஆவல்தான். ஆனால் அதற்கென நேரம் ஒதுக்குவது என்பது அடுத்த ஆறுமாத காலத்திற்கு இயலாதென்றே கருதுகிறேன்.

ஆனாலும் கடந்த சில மாதங்களாக இருந்த வேலைப்பளு சற்றே குறையும் என்று கருதுகிறேன்.

ஆகவே இப்போதுள்ளதுபோல் அல்லாமல் வாரம் இரு முறையாவது எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்து இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கும் விலைவாசி உயர்வு, இதை கையாள ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த முயற்சிகள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆவல்..

அடுத்த வாரம் திங்களன்று துவங்கி நான்கைந்து பாகங்களாக எழுதுகிறேன்.

******

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பி.கு: சமீப காலமாக குரலை உயர்த்தி சகட்டு மேனிக்கு அனைவரையும் குறை கூறி வரும் பா.ம.க. தலைவர் மருத்துவரே ஒரு பெரிய தலைவலியா என்ற ஒரு கருத்து கணிப்பை துவக்கியுள்ளேன். இதுவரை ‘ஆம்’ என்ற வாக்குகளே அதிகம் வந்துள்ளன.

உங்கள் வாக்கை தவறாமல் அளியுங்கள்.