12 செப்டம்பர் 2019

பொதுத்துறை வங்கிகளின் இணைப்பின் பின்னணி என்ன?

சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களால் அறிவிக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துமே மிகவும் நலிவடைந்த வங்கிகளாகும். 

நிரவ் மோடியுடன் கூட்டு சேர்ந்துக்கொண்டு வங்கி ஊழியர்கள் செய்துக்கொண்டிருந்த மோசடியை பல ஆண்டுகளாக கண்டுக்கொள்ளாமல் இருந்ததன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியன்டல் பேங் ஆஃப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளை இணைத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய வங்கியாக உருவாகப்போகிறது என்கிறார்கள்.  இந்த மூன்று வங்கிகளுடைய ஒட்டுமொத்த வைப்பு நிதி மற்றும் அவை வழங்கியுள்ள கடன் தொகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் இந்திய ஸ்டேட் வங்கிக்கு அடுத்த வங்கியாக உருவெடுக்கும் என்பது உண்மைதான். ஆனால் இவற்றின் ஒட்டுமொத்த வாராக்கடன்களின் அளவும் நாட்டிலேயே அதிகமானதாகத்தான் இருக்கும்.  இவை மூன்றுமே வட இந்தியாவில் அதிக கிளைகளைக் கொண்டுள்ள வங்கிகளாகும். இவற்றை இணைப்பதன் மூலம் ஒரே நகரத்தில் ஏன் ஒரே சாலையில் கூட பல கிளைகளைக் கொண்டுள்ள வங்கியாகவும் மாறும் சூழல். 

அடுத்து தென் இந்தியாவைச் சார்ந்த அதுவும் ஒரே மாநிலத்தில் தலைமையலுவலகத்தைக் கொண்டிருக்கும் கனரா மற்றும் சின்டிகேட் வங்கிகள். மேலே குறிப்பிட்ட வட இந்திய வங்கிகள் அளவுக்கு மோசமான நிலைமையில் இவ்வங்கிகள் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஒரே மாநிலத்தைச் சார்ந்தவை என்பதால் பல கிளைகளை மூடவோ இடமாற்றம் செய்யவோ வேண்டியிருக்கும். 

மூன்றாவது வங்கி யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. இதில் மிகப்பெரிய அளவில் நிர்வாக சீர்திருத்தங்கள் செய்ய தேவையிருக்காது. ஆனால் இதுவரை சுமாராக இயங்கி  வரும் யூனியன் வங்கியின் நிதிநிலமை மற்ற இரு வங்கிகளின் வாராக் கடன் மற்றும் அவற்றின் மோசமான நிதிநிலையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இணைப்புக்குப் பிறகு யூனியன் வங்கி அதிகாரிகளின் கையே ஓங்கி நிற்கும். ஏனெனில் இதனுடன் ஒப்பிடுகையில் அனைத்து வகையிலும் மற்ற இரு வங்கிகளும் சிறியவை.

நான்காவது இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கிகளை இணைத்து உருவாக்கப்படவுள்ளது. ஒன்று மேற்கு வங்கத்தைச் சார்ந்தது. இன்னொன்று தமிழகத்தைச் சார்ந்தது.   ஆனால் அலகாபாத் வங்கியின் மிக அதிக அளவிலான வாராக்கடன்கள் இந்தியன் வங்கி ஈட்டக்கூடிய மொத்த லாபத்தையும் விழுங்கிவிடும் போலுள்ளது. 

இந்த பத்து வங்கிகளை இணைத்து வர்த்தக அளவில் நான்கு பெரிய வங்கிகளாக உருவாக்குவதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் நடவடிக்கைகளில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஏனெனில் இந்திய வங்கித்துறையின் செயல்பாடுகளில் குறைகளாக உலக வங்கி குறிப்பிட்டுள்ள அனைத்தும்  இணைப்புக்குப் பிறகும் தொடரத்தானே போகிறது.

1. வங்கி செயல்பாடுகளில் ஆட்சியாளர்களின் தலையீடு.  இது என்றும் தொடரும் தொடர்கதையாகத்தான் இருக்கும்.

2. வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இந்திய வங்கிகளிடம் இல்லை . இத்தகைய குற்றச்சாட்டுக்கு ஆளான வங்கி அதிகாரிகள்தானே இணைப்புக்குப் பிறகும் இந்த வங்கிகளை வழிநடத்தப் போகிறார்கள்? அப்படியானால் அவர்களுடைய கணிக்கும் திறனில் முன்னேற்றம் ஏற்படவா போகிறது? வங்கிகள் பெரிதானால் அவர்களுடைய கடன் வழங்கும் திறன் பெருகும் வங்கிகளும் வலுவடையும் என்கிறார் நம்முடைய நிதியமைச்சர். 

நூறு ரூபாயை வைத்துக்கொண்டு இலாபம் ஈட்ட தெரியாதவனிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்தால் சரியாகிவிடும் என்பதுபோல் இருக்கிறது. மேலும்  கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வாணம் ஏறி வைகுண்டம் போறானாம் என்பார்களே அதுபோல் உள்ளது நிதியமைச்சரின் இந்த கணிப்பு.

ஆக உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ள இரண்டு குறைபாடுகளுமே வங்கிகளின் இணைப்புக்குப் பிறகும் தொடரத்தான் போகின்றது.

வங்கிகளின் இணைப்புக்கு இது ஒரு காரணமாக நிதியமைச்சர் கூறினாலும் உண்மையான காரணம் அதுவல்ல என்று நினைக்கிறேன். இணைக்கப்படவுள்ள வங்கிகளுடைய சமீபத்திய நிதிநிலை அறிக்கைகளை ஆய்வு செய்ததில் நான் கண்டது இதுதான். இவை வழங்கிய மொத்த கடன்களில் யாருக்கு அதிக அளவில் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை கீழேயுள்ள படத்தை  பார்த்தாலே புரிந்துவிடும்.சமீபத்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கையின் படி வங்கிகளிலுள்ள மொத்த வாராக்கடன்களில் கார்ப்பரேட் குறிப்பாக சேவைத் துறை மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட கடன்கள்தான் அதிகம் அதாவது 75 விழுக்காடு! இதையும் வங்கிகளின் மொத்தக் கடன் தொகையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது சுமார் 50 விழுக்காடு என்ற உண்மையையும் ஒப்பிட்டு பார்க்கும்போது இன்றை பொதுத்துறை வங்கிகளின் அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் காரணம் என்பது தெளிவாக புரிகிறது.

சிறு சிறு வங்கிகளாக செயல்பட்டுக்கொண்டிருக்கும்போதே விவசாயத்துக்கும் சிறு குறு தொழில்களுக்கும் 20 விழுக்காட்டுக்கும் குறைவாக கடன் வழங்கி வரும் இந்த வங்கிகள் இணைக்கப்பட்டு பெரும் வங்கிகளானால் யாருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் எனறு நினைக்கிறீர்கள்? அது நிச்சயம் விவசாயம், சிறு குறு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களாக இருக்க வாய்ப்பேயில்லை. இதே நிலைதான் தனிநபர் கடன்களுக்கும் ஏற்படும். 

தற்போது வங்கிகளுடைய முதலீட்டு தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு வரையில் மட்டுமே கடன் வழங்க முடியும் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதன் படி பார்த்தால் தனித்தனியாக குறைந்த அளவு முதலீட்டுடன் இயங்கி வரும் இந்த வங்கிகளால் பெரிய அளவில் கடன் தேவைப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஐந்தாயிரம் கோடி கடன் தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.  இப்போதுள்ள சூழலில் அத்தனை பெரிய கடனை தனியாக வழங்க பெரும்பான்மையான வங்கிகளால் முடியாது. அந்த சூழலில் கார்ப்பரேட் நிறுவனம் பிரதான கணக்கு வைத்திருக்கும் வங்கி பிற வங்கிகளுடன் இணைந்து கூட்டாக அந்த கடனை வழங்க ஒரு அமைப்பை (consortium) ஏற்படுத்தும். மொத்த கடன் தொகையை தங்களுடைய தகுதிக் கேற்ப பிரித்துக் கொள்ளும். இதனால் கடன் வழங்குவதிலும் அதன் பிறகு கடனை நிர்வகிப்பதிலும் வசூலிப்பதிலும் இந்த வங்கிகள் அனைத்தும் கூட்டாக மட்டுமே எந்த முடிவையும் எடுக்க முடியும். இது கடன் வழங்கும் வங்கிகளுக்கும் கடன் பெறும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் பல சிக்கல்களை ஏற்படுத்தும்  தனித்தனியாக இயங்கிவரும் சிறிய வங்கிகளை இணைப்பதன் மூலம் இந்த சிக்கல்களை முழுமையாக தவிர்க்க முடியும் என்பதாலும் இந்த வங்கி இணைப்பு நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இதனால் வங்கிகளின் வர்த்தகம் வேண்டுமானால் படு வேகமாக வளரும். ஆனால் அந்த வர்த்தகம் வலுவானதாக பாதுகாப்பானதாக இருக்குமா என்பதுதான் கேள்வி. இதையே தான் பாதிக்கப்படவுள்ள வங்கிகளின் வங்கி ஊழியர் சங்கங்களும் கூறுகின்றன. 

மேலும் வளர்ந்துவிட்ட வங்கி முன்பு போல் விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன்களை வழங்குவதில் அக்கறை காட்டுமா என்பதும் கேள்விக்குறி.

மத்தியில் ஆளும் பாஜகவின் தேவையும் இதுவாக இருக்கலாம். ஏனெனில்  கடந்த தேர்தலுக்கு முன்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் சுமார் 90 விழுக்காட்டுக்கும் மேல் பாஜகவுக்குத்தான் வழங்கப்பட்டது என்பதை பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை கண்டிருப்பீர்கள். ஆகவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் விரும்புவார்கள். 

இதுதான் இந்த இணைப்பின் பின்னால் இருக்கும் உண்மையான காரணமாக இருக்கக் கூடும்.

இதனால் அதிகம் பாதிக்கப்பட போகிறவர்கள் வங்கி ஊழியர்கள். பத்து வங்கிகளை இணைத்து அதுவும் நாட்டின் ஒரே பகுதியில் இயங்கி வரும் வங்கிகள் இணைக்கப்படும்போது நிச்சயம் பல கிளைகள் ஒருங்கிணைக்கப்படுவதை தவிர்க்க வாய்ப்பே இல்லை. யாருக்கும் பணியிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்று நிதியமைச்சர் கூறினாலும் பணியிழப்பு ஏதாவது ஒரு வகையில். அது கட்டாய அல்லது விருப்ப ஓய்வாக இருக்கலாம், அல்லது மறைமுக பணியிழப்பு அதாவது வலுக்கட்டாயமாக பணியிட மாற்றம் செய்யப்படும் சூழலில் ஊழியர்களே பணியிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படலாம். பணியிழப்பு எந்த ரூபத்தில் வந்தாலும் அது இழப்புத்தானே?

சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதத்தில் வங்கிகள் இணைப்பு வங்கி ஊழியர்களுக்கு வேண்டுமானால் சிக்கலை ஏற்படுத்தலாம் ஆனால் மொதுமக்களுக்கு அது நல்ல பலனையே தரும் என்று பாஜக பேச்சாளர் கூறினார். இதுதான் அந்த கட்சி தலைமையின் நிலைப்பாடாக இருக்கலாம். 

ஆனால் எந்த ஒரு நிறுவனமும் நல்ல நிலையில் இயங்க வேண்டுமென்றால் முதலில் அதில் பணியாற்றும் ஊழியர்களுடைய நலனில் நிர்வாகம் அக்கறை காட்டவேண்டியது அவசியம், மன நிறைவு இல்லாமல் பணியாற்றும் ஊழியர்களால் பணியாற்றும் நிறுவனத்திற்கும் எந்த பலனும் கிடைக்காது அதனுடைய வாடிக்கையாளர்களுக்கும் சரியான சேவையை வழங்க முடியாது. நாட்டின் மிகப் பெரிய சேவை (srvices) நிறுவனங்களான பொதுத்துறை வங்கிகளின் எஜமானர்களான இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் இதை மறந்துவிடக் கூடாது.

இன்று இருக்கும் ஆட்சியாளர்கள் நாளை இருப்பதில்லை. அதில் பாஜகவும் விதிவிலக்கல்ல. சிறையில் தள்ளுபவர்களே பிற்காலத்தில் சிறைக்கு செல்ல நேரிடுவதை கண்கூடாக காண்கிறோம்.

இதை உணர்ந்து இணைக்கப்படும் வங்கிகளை இணைப்புக்குப் பிறகு நிர்வாக பொறுப்பில் அமர்த்தப்படும் அதிகாரிகள் ஆட்சியாளர்களின் 

தலையீட்டுக்கு அஞ்சி வங்கிகளை பாதிக்கும் முடிவுகளை எடுக்கலாகாது. அது நாளை உங்களையே பாதிக்கலாம். நீங்கள் பாதிக்கப்படும்போது அதற்கு காரணமாயிருந்த அரசியல்வாதிகளோ, அரசு அதிகாரிகளோ உங்களை காப்பாற்ற வரப்போவதில்லை.

இணைக்கப்படவிருக்கும் வங்கிகளில் யூனியன் வங்கி, கனரா வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற ஏழு வங்கிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. இவை சேர்த்து வைத்துள்ள வாராக்கடன்களால் இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த மற்ற மூன்று வங்கிகள் ஈட்டுகின்ற இலாபத்தை இணைக்கப்படவுள்ள வங்கிகள் முழுவதுமாக கரைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை.

*********

12 கருத்துகள்:

 1. நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடன் கொடுக்க என்றே இந்த இணைப்புகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.  என்ன ஆகுமோ.. 
   
  ஊழியர்கள் பாதிக்கப்படும்போது அதற்கு காரணமாயிருந்த அரசு முக்கியஸ்தர்கள் அவர்களைக் காப்பாற்ற வரப்போவதில்லையென்பது உண்மை.
  ஈ மெயில் சபஸ்க்ரிப்ஷன் இணைத்திருப்பதற்கு நன்றிகள். 

  சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்!

  பதிலளிநீக்கு
 2. என்ன ஆகுமோ//

  இப்போது இருப்பதை விட இன்னும் மோசமாகும்.

  சப்ஸ்கிரைப் செய்து விட்டேன்//

  மிக்க நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 3. எது எப்படியோ இதனால் அடித்தட்டு மக்களுக்கு பயனுண்டா ? இல்லையே...என்னமோ போங்க...நாலுபேர் நலம் வாழ! நாற்பதாயிரம் பேர் சாகுறான்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியாக சொன்னீர்கள். அதானி, அம்பானி, டாடா மற்றும் பிர்லா என நாலு பேர். இவர்கள் ஒரு மாதிரி தான். இவர்களைப் போல் இன்னும் நாற்பதுக்கும் மேல் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் பாஜகவுக்கு இப்போது முக்கியம்.

   நீக்கு
 4. விரிவான தகவல்கள். முன்னேற்றம் ஏற்படும் என்று தோன்றவில்லை.

  இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்த செய்தி - விவசாயிகளுக்கு வழங்கி வந்த நகைக் கடன் ரத்து செய்யப்படும்! விவசாயிகள் தவிர பலரும் இந்த நகைக் கடன் பெற்று வந்தார்கள். இனிமேல் இதுவும் கிடைக்காது என்று தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விவசாயக் கடன், தனிநபர் நகை கடன் மற்றும் குறைந்த வட்டிக்கு வழங்கப்பட்டு வந்த கடன்கள் ஒவ்வொன்றாக பெரிய வங்கிகளால் நிறுத்தப்பட்டு விடும். சிறிய தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக மட்டுமே இத்தகைய கடன்கள் வழங்கப்படும்.

   நீக்கு
 5. இருக்கும் நிலைமை மோசமாகுமே தவிர, வேறு எந்த பயனும் இருக்காது என்றே நினைக்கிறேன்...

  பதிலளிநீக்கு
 6. ஐயா எனது பதிவுகளின் இணைப்பு தங்களுக்கு வருகிறதா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஃபீட்லி ஆப் வழியாகத்தான் உங்கள் பதிவுகளுக்கு வருகிறேன். தனியாக சுட்டி எதுவும் வருவதில்லை.

   நீக்கு
 7. பொதுத்துறை வங்கிகள் நலிவடைந்ததன் காரணம், வங்கி செயல்பாடுகளில் ஆட்சியாளர்களின் தலையீடு, மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் தேவைகளை சரியாக கணிக்கும் திறன் இந்திய வங்கிகளிடம் இல்லை என்று தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

  அதோடு கொடுத்த கடனை திரும்பவ சூலிக்கும் தெம்பு திராணியும் அரசியல் கட்சிகளின் தலையீட்டால் வங்கி அலுவலகர்களுக்கு இல்லை என்பதையும் சேர்த்துக்கொள்ளவேண்டும்,

  மேலும் இன்றை பொதுத்துறை வங்கிகளின் அவல நிலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் முக்கிய காரணம் என்பது பாமரனுக்குக் கூட தெரியும். எனவே வங்கிகளை இணைத்தால் இன்னும் அதிகம் பயன் பெறப்போவது கார்ப்பரேட் நிறுவனங்கள்தான்.

  அரசின் முடிவுப்படி வங்கிகள் இணைக்கப்பட்டு பெரிதாக ஆகும் போது அவைகள் முன்பு போல் விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் கடன்களை வழங்குவதில் அக்கறை காட்டுமா என்ற கேள்விக்கு பதில் அக்கறை காட்டாது என்பதே பதிலாய் இருக்கும்.

  //கடந்த தேர்தலுக்கு முன்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் சுமார் 90 விழுக்காட்டுக்கும் மேல் பாஜகவுக்குத்தான் வழங்கப்பட்டது என்பதை பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டதை கண்டிருப்பீர்கள். ஆகவே அவர்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்கள் விரும்புவார்கள்

  இதுதான் இந்த இணைப்பின் பின்னால் இருக்கும் உண்மையான காரணமாக இருக்கக் கூடும்.//

  கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா என்ன? நிச்சயம் இந்த நன்கொடை இனி வருங்காலங்களில் விழுக்காடு 90 க்கு மேல் இருக்கும் என்பது உறுதி.

  //சேர்த்து வைத்துள்ள வாராக்கடன்களால் இதுவரை இலாபத்தில் இயங்கிவந்த மற்ற மூன்று வங்கிகள் ஈட்டுகின்ற இலாபத்தை இணைக்கப்படவுள்ள வங்கிகள் முழுவதுமாக கரைத்துவிடாமல் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய பிரார்த்தனை//

  உங்களுடைய வேண்டுதல் மட்டுமல்ல. நாட்டில் உள்ள ஒவ்வொருவருடைய வேண்டுதலும் அதுதான்.

  வங்கிகளில் அரசியல் தலையீடு இல்லாமல் இருந்தால்தான் வங்கிகள் வளர்ந்து இலாபம் ஈட்டமுடியும். ஆனால் அது இன்றைய இந்தியாவில் நடைபெற சாத்தியம் இல்லை என்பதே உண்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய முழு பதிவின் சாராம்சத்தை உங்கள் கருத்துரையில் சுருக்கமா அழகா சொல்லிட்டீங்க சார். வாழ்த்துக்கள்.

   நீக்கு