22 செப்டம்பர் 2008

உறவுகளும் நட்பும்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'கடந்து வந்த பாதை' என்ற தொடரில் என்னுடைய நெடுநாள் நண்பர் ராஜ் என்பவரைப் பற்றி எழுதியிருந்தேன்.

அதை படிக்காதவர்கள் இங்கு செல்லலாம்

பகுதி I

பகுதி II

கடந்த வாரம் சென்னையிலுள்ள ஒரு பிரபல கண் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. (Conjectivitis என்கிற கண் நோயால் இரு வாரங்களுக்கு மேலாக அவதிப்பட்டு இந்த மருத்துவமனைக்கு சென்றபிறகுதான் அதிலிருந்து விடுபட்டேன்.)

நான் மருத்துவரைக் காண வரவேற்பறையில் காத்திருந்தபோது எனக்கு எதிரிலிருந்த லிஃப்ட்டிலிருந்து ஒரு சக்கர நாற்காலியில் வய்தான ஒருவரை வைத்து ஒரு பெண் (அவரும் வயதானவர்தான்) தள்ளிக்கொண்டு வருவதைக் கண்டேன். அவர் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்திருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தேன். அவரை எங்கோ பார்த்ததுபோன்று தோன்றியது. ஆனால் எப்படி கேட்பது என்று தயக்கத்துடன் அவரையே பார்த்தேன்.

அவரும் என்னை பார்த்தவாறே அருகில் வந்ததும், 'Don't mistake me....நீங்க ஜோசஃப்தானே' என்றார். நான் தயக்கத்துடன் 'ஆமாம்.' என்றேன்.. 'தப்பா நினைக்காதீங்க...அடையாளம் தெரியல...'

அவர் புன்னகையுடன். 'எத்தன வருசமாச்சி பாத்து... எப்படி ஞாபகம் இருக்கும்? ராஜ்.... FCI...' என்றார்.

ராஜ்! சட்டென்று நினைவுக்கு வர அவருடைய கரங்களைப் பற்றியவாறே அவருக்கருகில் நின்றிருந்த பெண்ணை நோக்கினேன்...'நீங்க இவருக்கு....' என்று இழுத்தேன் தயக்கத்துடன். ஏனெனில் அவருடைய தோற்றமே - நல்ல சிவந்த நிறம் - என்னுடைய நண்பருக்கு உறவினராய் இருக்க முடியாது என்று கூறியது.

அவர் பதிலளிக்காமல் என்னுடைய நண்பரைப் பார்த்தார். அவர் ஒரு பெருமூச்சுடன் 'அது ஒரு பெரிய கதை ஜோசஃப்' என்றார். தொடர்ந்து, 'நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? கண்ணுல ஏதாச்சும் பிரச்சினையா?' என்றார்.

'ஆமா சார். ரெண்டு வாரமா கண்ணுல கொஞ்சம் ப்ராப்ளம். போன வாரம் வந்து டாக்டரை பார்த்தேன். இப்ப பரவாயில்லை.. இன்னும் மருந்த கண்டினியூ பண்ணணுமான்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.'

'நா வேணும்னா வெய்ட் பண்றேன். ரொம்ப நாள் கழிச்சி பாத்துட்டு இப்படியே போயிர முடியாது. உங்ககிட்ட பேசறதுக்கு நிறைய இருக்கு.' என்றார்.

'இன்னும் ஒரு பேஷண்ட்தான் அடுத்தது நாந்தான்னு சிஸ்டர் சொல்லியிருக்காங்க. மேக்சிமம் பத்து நிமிஷம் ஆகலாம்.'

ஆனால் அடுத்த நிமிடமே என்னுடைய பெயர் அழைக்கப்பட 'இருங்க இதோ வந்துடறேன்.' என்று மருத்துவர் அறையை நோக்கிச் சென்றேன். அவர் என்னுடைய கண்களைப் பார்த்துவிட்டு, 'இன்னும் ஒரு நாலஞ்சி நாளைக்கி கண்டினியூ பண்ணுங்க. அப்புறம் ஸ்டாப் பண்ணிறலாம்.' என்று விடைகொடுக்க வெளியில் வந்து என்னுடைய நண்பரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வாசலை அடைந்தேன்.

'என் கார்லயே போயிரலாம். பேசிக்கிட்டே போகலாம்.' என்றேன்.

அவர் சரியென்றாலும் அவருடன் வந்திருந்த பெண் சற்று தயங்குவதுபோல் தெரிந்தது. ராஜ் புன்னகையுடன். 'பரவால்ல பார்வதி. ஜோசப்புக்கு உன்னைப் பத்தியும் தெரியும்.' என்றார் என்னை பார்த்தவாறு.

நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆயினும் தயக்கத்துடன், 'இவங்க... உங்க பழைய பிராமின் ஃப்ரெண்ட்....' என்றேன்..

ஆமாம் என்றவாறு அவர் சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி நிற்க நான் அவரை பின்னிருக்கையில் அமர்த்திவிட்டு எதிர்ப்புற கதவை திறந்து அந்த பெண்ணை அமரச்செய்தேன்.

என்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து பிரதான சாலையில் கலக்கும் வரை காத்திருந்த அவர் மெள்ள பேச ஆரம்பித்தார். என்னுடைய கவனம் சாலையில் இருந்தாலும் அவர் கூறியதைக் கேட்டு மனம் நைந்துப் போனது. இப்படிப்பட்ட உறவுகள் தேவைதானா என்று தோன்றியது.

****

அவரைப் பற்றிய முந்தைய பதிவில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் தனியாக வசித்துவந்ததாக குறிப்பிட்டிருந்தேன்.

நான் அவரை சந்தித்த அடுத்த சில மாதங்களில் அவருடைய உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவருடைய இளைய சகோதரருக்கு தெரிவித்துள்ளனர். அவரும் வந்து பார்த்துவிட்டு என்னுடைய நண்பரின் நிலையைப் பார்த்துவிட்டு, 'என் கூடவே வந்துருங்கண்ணே.' என்று அழைத்துச் சென்றிருக்கிறார்.

'ஆனா என் கொழுந்தியாளுக்கு என்னெ வீட்ல வச்சிக்க விருப்பமேயில்ல ஜோசஃப். ரெண்டு மாசம் பல்ல கடிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நம்ம பழைய காலனிக்கே போயிரலமான்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்பத்தான் பார்வதி வீட்டுக்கு வந்தா.' என்றார் ராஜ்.

பார்வதிதான் என்னுடைய நண்பர் திருமணம் செய்துக்கொள்ள விரும்பிய பிராமண வகுப்பைச் சார்ந்த பெண். ஆனால் அவருடைய வீட்டில் சம்மதிக்காமல் போகவே வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டவர். அவருக்கு ஒரு மகனும் மகளும். இருவருக்கும் திருமணம் முடிந்து சென்னையில்தான் வாசம். பார்வதியின் கணவர் இறந்தபிறகு அவரால் மருமகளுடன் ஒத்துப்போக முடியவில்லை. மகனே ஒரு தனிவீட்டில் தன் தாயை குடி வைத்துவிட தனியாளாய் போனார் பார்வதி.

'மக கூட போய் இருந்திருக்கலாம். ஆனா அவ அவங்க மாமனார், மாமியாரோட இருக்கா. எப்பவாச்சும் ஒருதரம் போய் வந்தாலே அவங்க மாமியார் ஒரு மாதிரி பேசுவாங்க. அதனால அங்கயும் போய் இருக்க முடியலை. ஊருக்குள்ளயே இருந்தும் பேரப் பிள்ளைங்களக் கூட இருக்க முடியலையேன்னு தோனும். அதுவும் ரிட்டையர் ஆனதுக்கப்புறம் எதுக்குடா இந்த வாழ்க்கைன்னுல்லாம் கூட தோனும். அப்பத்தான் இவர் நினைப்பு வந்துது. இவர் என் நினைப்பாவே கல்யாணம் பண்ணிக்காம இருக்கார்னு தெரியும். இவர் ஆஃபீஸ்ல போய் கேட்டு இவர் விலாசத்த தேடிக்கிட்டு போய் பார்த்தேன். ஆனா நா அங்க போனதே இவருக்கு பெரிய பிரச்சினையா போயிருச்சி....' என்ற பார்வதி கண்கள் கலங்கிப் போய் மேலே தொடர முடியாமல்....

சிறிது நேரம் மவுனமாய் மூவரும் அமர்ந்திருந்தோம். பிறகு அவரே சுதாரித்துக்கொண்டு தொடர்ந்தார். 'இவர பாத்துட்டு வந்ததுலருந்தே எனக்கு மனசே சரியில்லைங்க. என்னாலதான் இவருக்கு இந்த நிலைமைன்னு நினைச்சி, நினைச்சி ஒரு வாரமா அவஸ்த்தைப்பட்டேன். சரி, வர்றது வரட்டும்னு மறுபடியும் இவர் தம்பி வீட்டுக்கு போனேன். இவர் அங்க இல்லை. ஆனா இவரோட தம்பி வய்ஃப் என்னெ ரொம்ப மரியாதையில்லாம பேசி அவர் எங்கருக்கார்னு எங்களுக்கு தெரியாது இங்க வந்து மானத்த வாங்காதீங்கன்னு சொல்லி அசிங்கப்படுத்திருச்சி. ஆனா பக்கத்து ஃப்ளாட்டுக்காரங்க இவரோட அட்றச குடுத்து 'நீங்களாச்சும் போய் அவருக்கு ஹெல்ப் பண்ணுங்கம்மா. உடம்பு சரியில்லாத மனுசன்னு சொன்னாங்க. நா அங்க போயி இவர் குடியிருந்த போர்ஷன பாத்தப்ப மனசு பதறிப்போச்சி. கட்டாயப்படுத்தி வீட்ட காலி பண்ண வச்சி எங்கூடவே கூட்டிக்கிட்டு போயிட்டேன். அதுவும் பிரச்சினையாத்தான் முடிஞ்சிது.' என்றவர் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு சிறிது நேரம் மவுனமாகிப் போனார்.

'பார்வதி என்னெ பாக்க வந்தது என் தம்பி குடும்பத்துக்கு புடிக்கல... நா இவளோட போய் இருந்தது இவளோட சன்னுக்கு புடிக்கல. 'இந்தாளூ இங்க இருக்கறதாருந்தா நா இந்த பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டான்.' என்று தொடர்ந்தார் ராஜ் சோகத்துடன். 'நா மட்டும் பட்டுக்கிட்டுருந்த கஷ்டம் பாவம், இவளையும்.....'

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒன்றும் சொல்ல முடியாமல் மனம் கணத்துப் போக பாதையில் கவனத்தை செலுத்தினேன்.

'அத்தோட நிக்கல அந்த பாவி.. நா அவன் சொன்னத கேக்கலேன்னுட்டு நா குடியிருந்த வீட்டுக்காரர உசுப்பேத்தி என்னை அங்கிருந்தே காலி பண்ண வச்சிட்டான். எங்கயும் வீடு கிடைக்காம இவர் தன்னோட ஆஃபீஸ்ல போயி கேக்க அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இப்ப நாங்க இருக்கற வீட்டை குடுத்தார். வாடகைன்னு பெருசா இல்லை. இப்ப ரெண்டு வருசமா அங்கதான் இருக்கோம்.' என்றவாறு பார்வதி விலாசத்தை கூற அடுத்த அரை மணியில் அங்கு சென்றடைந்தோம்.

தனி வீடு. சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. நடுத்தரத்துக்கும் சற்று உயர்ந்தவர்கள் குடியிருந்த சூழல் என்பதால் இவர்களுடைய விஷயத்தில் தலையிட யாரும் இருக்கவில்லை.

'நாங்க ரெண்டுபேருமே எங்க குடும்பத்துக்காகன்னு சொல்லி ஒருத்தர் மேல் ஒருத்தருக்கிருந்த அன்பைக் கூட சாக்ரிஃபைஸ் பண்ணோம். ஆனா ரெண்டு குடும்பங்களுக்குமே நாங்க இப்ப வேண்டாதவங்களா போய்ட்டோம். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எங்கள புரிஞ்சிக்கிட்ட அளவுக்குக் கூட எங்க குடும்பத்துலருக்கறவங்க எங்கள புரிஞ்சிக்கலையேங்கறத தவிர எங்களுக்கு எந்த வருத்தம் இல்லை ஜோசஃப்.' என்று நான் விடைபெற்றபோது ராஜ் கூறினாலும் அவருடைய குரலில் இருந்த சோகம் என்னை கஷ்டப்படுத்தியது.

உறவுகள் வேண்டாம் என்று ஒதுக்க அலுவலக நட்பு இவருக்கு துணை சென்றதை நினைத்துப் பார்க்கிறேன். உறவுகளைவிட நட்புதான் சிறந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தோன்றும் நட்புக்கு இணை எந்த உறவும் இல்லை.

ராஜும் பார்வதியும் இப்போதும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். இளம் வயதில் அவர்களைப் பிரித்து வைத்த விதி முதிய வயதில் அவர்களை இணைத்திருக்கிறது, நல்ல நண்பர்களாக... தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் துணையாக...

*********

12 செப்டம்பர் 2008

மலேசியாவில் இந்தியர்களின் அவல நிலை

சமீபத்திய மலேசிய பயணத்தில் எனக்கு கிடைத்த கசப்பான அனுபவங்களில் ஒன்று கே.எல். விமானநிலையத்தில் நடந்த இம்மிக்ரேஷன் என்ற பெயரில் மலேசியர்கள் நடத்திய கூத்து.

என்னுடைய விமானம் சென்றடைந்தபோது நேரம் காலை 4.45. அதிகம் போனால் நூறு பயணிகள். அந்த நேரத்தில் வேறெந்த விமானமும் வந்திருக்கவில்லை. ஆனால் இம்மிக்ரேஷன் முடிந்து வெளியில் வந்தபோது மணி ஏழு!

கடந்த வருடம் (டிசம்பர் மாதம்) சென்றபோது விமானத்திலேயே இம்மிக்ரேஷன் படிவம் வழங்கப்பட்டது. விமானத்திலிருந்து இறங்கி அதை பூர்த்தி செய்து கவுண்டரில் கொடுத்து அடுத்த நிமிடமே பாஸ்போர்ட்டில் முத்திரை பதித்து அனுப்பிவிட்டார்கள். ஆனால் இந்த முறை படிவம் ஏதும் வழங்கப்படவில்லை. கேட்டால் தேவையில்லை என்றார் விமான பணிப்பென். ஓஹோ இம்மிக்ரேஷன் முறையை எளிதாகிவிட்டனர் போலும் என்று நினைத்தேன்.

அதுதான் இல்லை என்பது எனக்கு முன்னால் நின்றிருந்த ஒவ்வொரு பயணிக்கும் நிகழ்ந்ததை பார்த்தபோதுதான் புரிந்தது. பய்ணிகளின் பாஸ்போர்ட் விவரத்தை கணினியில் நுழைத்து படு சீரியசாக ஆராய்வதும், ஒருசில பயணிகளின் கைபெருவிரல் ரேகைகளை பதிந்துக்கொள்வதும், அதிலும் திருப்தியடையாமல் மேலதிகாரியிடம் சென்று விவாதிப்பதுமாக ஒவ்வொரு பயணிக்கும் சுமார் கால் மணி நேரம் எடுத்தது.

என்னுடைய முறை வந்தது. என்னுடைய பாஸ்போர்ட்டையே துருவி, துருவி ஆராய்ந்த பணிப்பெண் சட்டென்று எழுந்து மேலதிகாரியிடம் சென்று என்னுடைய பாஸ்போர்ட்டைக் காட்டி ஏதோ சொல்ல அவர் அங்கிருந்து என்னை பார்வையால் துளைத்தார். அடடா டெரரிஸ்ட் என்று நினைத்துவிட்டார்களோ என்று நினைத்தேன். மேலதிகாரி சிறிது நேரத்தில் பாஸ்போர்ட்டை வாங்கி என்னுடைய பாஸ்போர்ட்டில் ஒரு பக்கத்தில் கையொப்பம் இட்டுவிட்டு தன்னுடைய முத்திரையையும் பதித்து திருப்பித்தர பணிப்பெண் திரும்பிவந்து தன் இருக்கையில் அமர்ந்து அடுத்த இருக்கையில் இருந்தவரிடம் மீண்டும் என்னுடைய விசாவைக் காட்டி ஏதோ கூற அவர் சிரித்தார்.

பிறகு பணிப்பென் என்னுடைய பாஸ்போர்ட்டில் அவர் மேசையிலிருந்த முத்திரையை பதித்தவாறே 'யூ ஆர் கமிங் டு மலேசியா ஃபார் தி செக்கண்ட் டைம் இன் சிக்ஸ் மந்த்ஸ் சார். யூ ஹேவ் எனிபடி ஹியர்?' என்றார். அத்தனை நேரம் பொறுமையுடன் நின்றிருந்த நான் சற்றே எரிச்சலுடன், 'என்னுடைய விசா ஒரு வருடம் செல்லுபடியாகும். எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லக் கூடியது. பிறகு ஏன் இந்த கேள்வி?' என்றேன்.

அவர் இதை எதிர்பார்க்கவில்லை போலிர்ந்தது. ஒரு நொடி என்னையே முறைத்துப் பார்த்துவிட்டு 'யூ மே கோ' என்றவாறு பாஸ்போர்ட்டை திருப்பியளித்தார். நான் அதைப் பெற்றுக்கொண்டு வெளிவாசலுக்கு செல்லும் வழியில் என்னுடைய பாஸ்போர்ட்டை ஆராய்ந்தேன். பிறகுதான் தெரிந்த்து எதற்காக அந்த பணிப்பெண் அதை மேலதிகாரியிடன் கொண்டு சென்றார் என்பது.

எனக்கு ஒரு வருட விசா அளிக்கப்பட்டது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10ம் தியதி. நான் கே.எல் சென்றடைந்தது டிசம்பர் 20ம் தேதி. திரும்பி மலேசியாவில் இருந்து புறப்பட்டது ஜனவரி 5ம் தியதி, அதாவது 05.01.2008. ஆனால் என்னுடைய பாஸ்போர்ட்டில் குறிப்பிட்டப்பட்டிருந்த தேதி 05.01.2007! அதாவது இம்மிக்ரேஷன் முத்திரையில் தியதியையும் மாதத்தையும் மாற்றியவர்கள் வருடத்தை மாற்ற தவறியிருக்கிறார்கள். ஆக டிசம்பர் மாதம் வழங்கப்ப்ட்ட விசாவில் நான் அவ்வருடத்திய ஜனவரி மாதத்திலேயே பயணித்திருக்கிறேன்.
இது ஒரு குமாஸ்தா தவறு (Clerical error). இதற்காக கால் மணிநேரம் செலவழித்திருக்க வேண்டுமா என்று நினைத்தேன். சரி என்னுடைய விஷயத்தில் குழப்பம் இருந்தது. ஆனால் எதற்காக அனைவருடைய பாஸ்போர்ட்டையும் இந்த அளவுக்கு துருவி, துருவி பார்க்கவேண்டும்? மலேசியாவுக்குள் நுழையும் அனைத்து இந்தியர்களையுமே டெரரிஸ்ட் என்றோ இம்மிக்ரேஷனை ஏமாற்றிவிட்டு நிரந்தரமாக தங்கிவிடுவார்கள் என்றோ மலேசியர்கள் நினைத்துவிட்டார்களோ?

கடந்தமுறை சென்றதற்கும் இந்த முறை சென்றதற்கும் இடைபட்ட காலத்தில் மலேசியாவில் இந்தியர்களின் நிலைமை மோசமாகத்தான் போயுள்ளது என்பதை உணரமுடிந்தது. மலேசியர்களிடமிருந்து இந்தியர்கள் வீடு வாங்க அனுமதிப்பதில்லை என்ற முடிவு, இந்தியர்களுடைய வியாபார ஸ்தலங்களில் இனியும் இந்தியர்களை வர அனுமதிப்பதில்லை என்கிற முடிவு என ஒவ்வொரு முடிவும் இந்தியர்களுக்கு எதிராகவே இருப்பதை என்னுடைய மலேசிய வாழ் உறவினர்கள் கூற கேட்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு மலேசிய பாராளுமன்றத்தில் ஒரு மலேசிய துணை அமைச்சர் 'இந்தியனையும் பாம்பையும் கண்டால் முதலில் இந்தியனைத்தான் அடிக்க வேண்டும்' என்றாராம் பகிரங்கமாக. உடனே அவையிலிருந்த இந்திய மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆட்சேபிக்க ஒப்புக்கு மன்னிப்பு கேட்டாராம்.

இந்தியர்களின் வளர்ச்சியைக் கண்டு மலாய் மக்கள் அஞ்சுவதால்தான் இப்படியெல்லாம் முடிவு எடுக்கப்படுகிறது என்பது மிகத்தெளிவாக தெரிந்தது.

*********

11 செப்டம்பர் 2008

அரசு அலுவலகங்களின் அவலநிலை

பல வருடங்கள் கழித்து ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று காத்து கிடக்க வேண்டிய அவலநிலை எனக்கு நேற்று எனக்கு ஏற்பட்டது.

சமீப காலமாக அரசு மான்யத்துடன் வினியோகிக்கப்படும் எரிவாயு குப்பிகள் குடும்ப அடையாள அட்டை (Ration Card) வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்பதில் எரிவாயு நிறுவனங்கள் தீவிரமாகியுள்ளனவாம். ஆகவே இரு நாட்களுக்கு முன்பு refill எரிவாயு குப்பி ஒன்றிற்கு பதிவு செய்ய தொலைபேசி செய்தபோது 'உங்களுடைய குடும்ப அட்டையுடன் வந்து பதிவு செய்தால் மட்டுமே குப்பி வழங்கப்படும்' என்றனர்.

நான் கேரளத்திலிருந்து மாற்றலாகி வந்தபோது அங்கு இருந்த குடும்ப அட்டையை சரண்டர் செய்து சான்றிதழ் பெற்றிருந்தாலும் அதை சென்னை உணவுப்பொருள் வழங்கு கழக (சிவில் சப்ளை கார்ப்பரேஷன் - சி.ச.கா) அலுவலகத்தில் சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டையை பெற பலமுறை முயன்றும் முடியவில்லை. என்ன காரணம் என்கிறீர்களா? எல்லாம் நம்முடைய வள்ளல் முதல்வர் அறிவித்த இலவச எரிவாயு அடுப்பு திட்டம்தான். அடுப்பு கிடைத்ததும் அடுத்த வேலை எரிவாயு இணைப்புதானே. கடந்த சில மாதங்களாக சென்னையிலுள்ள சி.ச.காபே அலுவலகங்களில் இத்தகையோரின் கூட்டம்தான். அதிகாலையிலிருந்தே நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய சூழல். எந்த ஒரு உணவுப் பொருளும் தேவையில்லை என்று கருதும் என்னைப் போன்றவர்களுக்கு தனியாக ஒரு வரிசை வைத்திருந்தால் எப்போதோ புதிய குடும்ப அட்டையைப் பெற்றிருக்க முடியும். அலுவலக நுழைவாயிலுக்குள் கூட புக முடியாத அளவுக்கு கூட்டம் அடைத்துக்கொண்டு நிற்பதை பார்த்துவிட்டு வெறுத்துப்போய் திரும்பிய நாட்கள் பல உண்டு.

ஆனாலும் இம்முறை எரிவாயு வினியோகி மிகவும் பிடிவாதமாக குடும்ப அட்டையோ அல்லது அதற்கு விண்ணப்பித்ததற்கான சான்றை சமர்ப்பிக்காவிட்டால் எரிவாயு குப்பி கிடைக்காது சார் என்று கையை விரித்துவிட வேறு வழியில்லாமல் சி.ச.கா அலுவலகத்திற்கு கடந்த செவ்வாய் கிழமை அன்று சென்றேன். இதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. செவ்வாய் கிழமை அன்று சென்றால் கூட்டம் அதிகமாக இருக்காது என்றார் என்னுடைய அலுவலக நண்பர் ஒருவர். ஏனென்றால் செவ்வாய் வெறுவாயாம்! அதாவது செவ்வாய் அன்று துவங்கும் எந்த காரியமும் உருப்படாதாம்!! ஆஹா, இதுதான் நமக்கு நல்லது என்று நினைத்து செவ்வாய் அன்று செல்வதென தீர்மானித்தேன்.

ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்றிருந்த சமயம் உப்புசப்பில்லாத விஷயத்துக்கு வாதிட துவங்கி அது பெரும் விவாதமாக மாறி அலுவலகத்திலிருந்து வெளியேறியது நினைவுக்கு வர வீட்டிலிருந்து புறப்படுவதற்கு முன்பே நாட்காட்டியில் இன்றைக்கு என்னுடைய ராசிக்கு என்ன போட்டிருக்கிறது என்று பார்த்தேன். இதிலெல்லாம் பெரிதாக நம்பிக்கையில்லாவிட்டாலும் முன்னெச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றுதான்! மகரத்திற்கு சாந்தம் என்று இருந்தது.

ஆஹா! நமக்கு தேவையான ஆலோசனைதான் என்று நினைத்துக்கொண்டேன். எந்த ஒரு சூழலிலும் நிதானத்தை இழந்துவிடலாகாது என்று தீர்மானித்துக்கொண்டேன். அப்படியே புறப்பட்டு சென்றிருக்கலாம். இதை என் மனைவியிடம் கூற 'சாந்தம்னா போட்டுருக்கு? உங்களுக்கும் அதுக்கும் ரொம்ப தூரமாச்சே இருங்க நானும் வரேன்' என்று ஒட்டிக்கொண்டார்.

சரி வேறுவழியில்லை என்று அவரையும் அழைத்துக்கொண்டு அரும்பாக்கம் சி.ச.கா அலுவலக வாசல்கள் திறக்கப்படுவதற்கு முன்பே சென்றடைந்தோம். என் நண்பர் கூறியதுபோலவே பத்து, பதினைந்து நுகர்வோர் மட்டுமே காத்திருந்தனர். அதில் பெரும்பாலோனோர் அலுவலக பணியாளர்கள் போல் இருந்தனர். ஆகவே இடிபடாமல் அலுவலகத்திற்குள் நுழைய முடிந்தது. வழக்கம்போலவே அலுவலக நேரம் துவங்கி அரைமணி கழிந்து பணியாளர்கள் ஒவ்வொருவராக வந்து சேர காத்திருந்த நுகர்வோர் கூட்டம் பொறுமையிழந்து 'விசாரணை' என்ற மேசைக்கு பின்னால் அமர்ந்திருந்தவரை மொய்க்க துவங்கியது. நான் அதில் கலக்காமல் என்ன நடக்கிறது என்று எட்ட நின்று கவனித்தேன். ஒருநாள் விடுப்பு எடுத்து வந்திருந்ததால் காத்திருந்து என்னுடைய பணியை முடித்துக்கொள்ளலாம் என்று நினைத்தேன். 'என்னங்க நீங்க. கூட்டத்தோடு கூட்டமா போய் நிக்காம...' என்று முனுமுனுத்த என் மனைவியை சமாதானப்படுத்தினேன். 'இவங்க இப்படி போய் மொய்க்கறது அந்தாளுக்கு பிடிக்காது. நீ வேணும்னா பார்.' என்று நான் சொல்லி முடிக்கவில்லை. எரிமலையாய் வெடித்தார் அவர். பதிலுக்கு அதிகாரி போல் உடையணிந்திருந்த ஒருவர் பொறுமையிழந்து பேச அடுத்த அரை மணி நேரத்திற்கு ஒரே களேபரம். 'நான் யார்னு தெரியாத பேசிட்டேயில்ல. எங்க போயி என்ன கம்ப்ளெய்ண்ட் குடுக்கணும்னு எனக்கு தெரியும்யா. நா யார்னு காமிக்கேன்.' என்றவரை அலட்சியத்துடன் பார்த்த அரசு பணியாளர் 'அதச் செய்ங்க முதல்ல.' என்று கூறிவிட்டு 'ஒவ்வொருத்தரா வந்தா அட்டெண்ட் பண்ணுவேன். இல்லன்னா இப்படியே நின்னுக்கிட்டிருக்க வேண்டியதுதான்.' என்று எரிந்துவிழுந்தார் மற்றவர்களிடம். 'பாத்தியா சொன்னேன்ல' என்றேன் மனைவியிடம் அத்துடன் அருகில் இடப்பட்டிருந்த மரப்பெஞ்சில் அமர்ந்துக்கொண்டு 'நீயும் உக்கார். அந்தாளு இவங்கள டிஸ்போஸ் பண்ணி முடிக்கட்டும்.' என்று அவரையும் அமரச்செய்தேன்.

அரை மணி நேரம் ஒரு மணி நேரம் ஆனது. வந்திருந்த ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஒவ்வொரு ஏச்சு. ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வந்தவர்களை விரட்டியடிப்பதில் இந்த அரசு ஊழியர்களுக்கு என்னதான் ஆனந்தமோ தெரியவில்லை. ஒரு இளம்பெண் (கேரளத்தைச் சார்ந்தவர். மலையாளம் கலந்த தமிழில் உரையாடினார்) கையில் குழந்தையுடன் 'காஸ் ஏஜன்சியில சிலிண்டர் குடுக்காதுன்னு சொல்லிட்டாங்க சார். ரேஷன் கார்டு வேணுமாம். ஓட்டர் கார்ட் இருக்குது.' என்றார்.

'இது இருந்தா போறுமா? கேரளாவுலருந்து சரண்டர் சர்டிஃபிக்கேட் கொண்டுவா, பாக்கலாம்.' என்னுடைய மனைவி என்னைப் பார்த்தார். 'நம்மக்கிட்ட சரண்டர் சர்ட்டிஃபிக்கேட் இருக்குல்ல. அப்ப நமக்கு பிரச்சினை இருக்காது.'

'அதெப்படி சார் அது எங்கப்பா பேர்லல்ல இருக்குது.' என்றார் அந்த இளம்பெண்.

'அதுல உன் பேர் இருக்கும்ல அத டெலிட் பண்ணி ஒரு சர்ட்டிஃபிக்கேட் வாங்கிட்டு வா பாக்கலாம்.'

'அதுக்கு ரொம்ப நாள் ஆவுமே சார். அதுவரைக்கு சிலிண்டருக்கு என்ன பண்றது?'

எரிந்து விழுந்தார் அரசு பணியாளர். 'அத இங்க வந்து சொல்லாத. சொல்ல வேண்டிய எடத்துல போயி சொல்லு. இப்ப என் டைம வேஸ்ட் பண்ணாத போ.'

அந்த பெண் இதை எதிர்பார்க்கவில்லை போலிருக்கிறது வசதியான வீட்டிலிருந்த வந்ததைப் போன்ற தோற்றம். கண்கள் கலங்கிப்போக குழுமியிருந்தவர்களை பரிதாபமாக பார்த்தது அந்த பெண். அனைவருமே திருப்பி பரிதாபமாக பார்ப்பதைத் தவிர ஒன்றும் செய்ய இயலாமல்..

'சாந்தம்' என்ற எச்சரிக்கையை மட்டும் படிக்காமல் வந்திருந்தால் நிச்சயம் அதை இழந்திருப்பேன். என் முகம் போன போக்கை கவனித்த என்ன்னுடைய மனைவி என்னுடைய கைகளை பிடித்து அழுத்தினார். 'பொறுமையாயிருங்க. நாம வந்த வேலைய மட்டும் பார்ப்போம்.'

வரிசையில் நின்றிருந்த ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையுமே இப்படி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி வெற்றிகரமாக விரட்டியடித்தார். வரிசை இரண்டு மூன்று பேராக குறைய என் மனைவி எழுந்து நின்றார். 'வாங்க. என்னதான் சொல்றார்னு பார்ப்போம்.'

முந்தைய நாளே சி.ச.கா
வலைத்தளத்திற்கு சென்று புதிய அட்டைக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து சென்றிருந்தேன். ஆனால் அதை ஏறெடுத்தும் பாராமல். 'சார் இந்த ஃபார்ம்லாம் போறாது. பக்கத்து ஜெராக்ஸ் கடையில விப்பாங்க. அத ஃபில் அப் பண்ணி ஒங்க ஃபோட்டோ ஒட்டி கொண்டாங்க.' என்றார்.

'சாந்தம், சாந்தம்' என்றார் என் மனைவி முனுமுனுத்தார். பதில் பேசாமல் அலுவலகத்தை விட்டு வெளியேறி இரண்டு கடைகள் தள்ளியிருந்த டீக்கடை மற்றும் ஜெராக்ஸ் கடைக்கு சென்றேன். என்னைப் பார்த்ததுமே 'என்ன சார் ரேஷன் கார்ட் அப்ளிகேஷனா. மூனு ரூபா.' என்றார். வாங்கி பார்த்தேன். என் கையிலிருந்த அதே படிவம்தான். 'சரி வாங்குங்க. என்ன பண்றது?' என்றார் என் மனைவி. நான் விடாமல் 'ஏங்க ஜெராக்ஸ் எடுக்கறதுக்கு ஒரு ரூபாதான் அதென்ன இந்த ஃபார்முக்கு மூனு ரூபா வாங்கறீங்க?' என்றேன். 'இவருக்கு ஒரு ரூபாதான் சார். மீதி ரேஷன் ஆஃபீஸ் ஸ்டாஃபுக்கு' என்றார் டீ அருந்திக்கொண்டிருந்த ஒருவர் ஏளனமாக.

'சார் ஃபோட்டோ ஒட்டறதுக்கு கம் வேணுமா?' என்றார் கடையில் நின்ற சிறுவன் புன்னகையுடன். 'சின்ன கம் பாட்டில் இருக்கு ஒரு ரூபாதான்.' இது அங்கு தினசரி வாடிக்கை போலிருந்தது.

கையிலிருந்த படிவத்தில் ஒட்டியிருந்த என்னுடைய புகைப்படத்தை எரிச்சலுடன் பிய்த்து எடுத்து புது படிவத்தில் ஒட்டி நான் கொண்டு வந்திருந்த படிவத்தில் நிரப்பியிருந்த தகவல்களையே மீண்டும் பூர்த்தி செய்து மீண்டும் அலுவலகம் நுழைந்து அதற்குள் குழுமியிருந்த நுகர்வோர் வரிசையில் நின்று சமர்ப்பிக்க. 'ஓட்டர் ஐடி கார்ட் இல்லையே.' என்றார். நான் நிதானமிழந்து 'டெலிஃபோன் பில் காப்பி இருந்தா போறும்னு அந்த ஃபார்ம்லயே இருக்கே.' என்றேன். 'அதுக்கு ஏன் சார் இந்த கத்து கத்தறீங்க?' என்றவர் 'சரி சரி அந்த கவுண்டர்ல போயி குடுத்து அக்னாலெட்ஜ்மெண்ட் வாங்கிக்கிருங்க.' என்றவாரு அலட்சியத்துடன் என்னிடமே அதை திருப்பித்தர எங்கே நான் பதிலுக்கு பேசிவிடுவேனோ என்று பயந்து என்னுடைய மனைவி என்னை இழுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தார்.

அவர் குறிப்பிட்டிருந்த கவுண்டருக்கு முன்னால் சுமார் இருபது பேர் அடங்கிய வரிசை.நிற்க கவுண்டரை அடைந்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆனது.

என்னுடைய மனைவியை வரிசையில் நிற்க வைத்துவிட்டு அந்த அலுவலகத்தை மெள்ள வலம் வந்தேன்.

சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பு அன்றைய தமிழக முதல்வரின் அலுவலக அவலத்தை நினைவுபடுத்தியது அந்த அலுவலகம். முப்பதாண்டுகள் என்பது எவ்வளவு நீண்ட காலம்! ஆனாலும் அன்று நான் கணட அதே அவலம் இப்போதும் நீடித்திருந்தது.

நிலத்தில் சமமாக நிற்க முடியாத மேசை, நாற்காலிகள். விசாரணை அதிகாரியின் மேசையின் ஒரு காலுக்கு கீழே நான்கைந்து கற்கள் முட்டுக்கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு குமாஸ்தாவின் இருக்கை சீட்டில் வலைப்பின்னல் சுத்தமாக கிழிந்து போயிருந்தது. அதன் மீது ஒரு மரப்பலகையை வைத்து அமர்ந்திருந்தார்! கவுண்டர்கள் என்ற பெயரில் அங்கங்கே ஓட்டைகளுடன் ஒரு பழைய காலத்து மரத்தடுப்பு. அதற்கு பின்னால் சாய்மானம் இல்லாத இருக்கைகள். எத்தனை நேரம்தான் இவர்களால் பின்னால் சாய்ந்து அமராமல் இருக்கமுடியும் என்று நினைத்தேன். பெண் குமாஸ்தாக்கள் எளிதில் ஏறி அமரமுடியாமல் இருந்தது அந்த இருக்கைகள். எங்கும் கணினிமயம் என்ற இந்த யுகத்தில் ஒரு கணினி கூட இருக்கவில்லை. குமாஸ்தாக்கள் அமர்ந்திருந்த இருக்கைகளைச் சுற்றிலும் தரையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கோப்புகள், புத்தகங்கள்.. எங்கும் எதிலும் ஒரே தூசி மயம். ஹைதர்காலத்து மின் விசிறிகள் மெதுவாக சுழல காத்திருந்த நுகர்வோர் தங்கள் கைகளிலிருந்து விண்ணப்பங்களை விசிறிக்கொண்டிருந்தனர். அப்படியிருக்க சுமார் பத்து மணி நேரம் அலுவகத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நிலை!

சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அந்த அலுவலகத்திலிருந்து வெளியேறும்போது இப்படிப்பட்ட அவலநிலையில் பணியாற்றும் ஊழியர்களின் மனநிலை வேறெப்படி இருக்கும் என்றுதான் எண்ணத் தோன்றியது.

மின்சாரமே இல்லாத இல்லங்களுக்கு வண்ணத் தொலைகாட்சி பெட்டி என்று கோடிக்கணக்கில் விரயம் செய்யும் இந்த் அரசு தன்னுடைய ஊழியர்களுடைய நலனில் அக்கறை காட்டாதிருப்பது ஏனோ?

*****

27 ஜூன் 2008

பணவீக்கமும் வீட்டுவாடகையும் நடுத்தர குடும்பங்களும்

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளிதழில் வெளிவந்த
கட்டுரை

நான் சென்னையில் 1980களில் பணியாற்றியபோது சுமார் 1100 ச.அடி மூன்று படுக்கையறை தனி வீட்டில் மாத வாடகை ரூ.750/-க்கு குடியிருந்தேன். அங்கிருந்து தஞ்சை, தூத்துக்குடி, மதுரை போன்ற நகரங்களில் பணியாற்றிவிட்டு 1987ல் திரும்பி வந்தபோது கே.கே. நகரில் இரண்டு படுக்கையறை குடியிருப்பின் ( flat) வாடகை ரூ.2250/- ஆக உயர்ந்திருந்தது. மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் மாற்றலாகி மும்பை சென்று 1997ல் திரும்பியபோது அதே அளவு குடியிருப்பு ரூ.3500/- 2002ல் நான் கொச்சிக்கு மாற்றலாகி சென்றபோது அதுவே ரூ.5000/- ஆக உயர்ந்திருந்தது. 2005ல் திரும்பி வந்தபோது ரூ.7000/- இப்போது நான் குடியிருக்கும் குடியிருப்புக்கு மாத வாடகை ரூ.12000/- பராமரிப்புக்கு தனியாக ரூ.1500/- இதுதான் நான் இதுவரையில் குடியிருந்த குடியிருப்புகளிலேயே மிகவும் சிறியது!

வாடகை உயர்வது ஒன்றும் சமீபத்திய நிகழ்வு அல்ல. ஆனால் இந்தியன் எக்ஸ்ப்ரஸ் ஏதோ சமீபத்தில் உயர்ந்த பணவீக்க விகிதத்தின் விளைவே இந்த வாடகை உயர்வு என்பதுபோல் சித்தரித்திருக்கிறது. அதுபோலத்தான் முதல் பக்கத்தில் வந்துள்ள கட்டுரையும்.

1980 மற்றும் 1990களில் சென்னையில் வீட்டு வாடகை உயர்வுக்கு காரணமாயிருந்தவர்கள் வங்கி ஊழியர்கள் என்றனர். இப்போது அது ஐ.டி. துறையில் பணியாற்றுபவர்களால் என்கின்றனர். இது ஓரளவுக்கு உண்மைதான். என்னுடைய கட்டடத்திலேயே நான் குடியிருக்கும் அதே அளவு உள்ள குடியிருப்புக்கு ஐ.டி. துறையில் பணியாற்றும் ஒரு இளம் ஜோடி ரூ.15,000/-க்கு சமீபத்தில் குடிவந்துள்ளனர்!. நான் இருப்பது 2ம் தளத்தில் அவர்கள் 8ம் தளத்தில். தளம் உயர, உயர வாடகையும் உயருமோ என்னவோ. அல்லது இருவரும் ஊதியம் ஈட்டுகின்றனர் என்பதாலோ. இதற்கு இடைத்தரகர்கள்தான் முக்கிய காரணம் எனலாம்.

இதற்கும் சமீபத்திய பணவீக்க விகிதம் உயர்ந்ததற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

இதுபோன்றே நாளிதழ்கள் தினமும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைப் பற்றி தெருவில் போவோர் வருவோர் மற்றும் குடும்பப் பெண்கள் இவர்களிடமெல்லாம் பேட்டி கண்டு விலைவாசி உயர்வைப் பற்றி அவர்களை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்று கேட்டு அதை பெரிதுபடுத்தி பக்கங்களை நிரப்புவதைக் காண்கிறோம். இதனால் தேவையற்ற பீதி மக்களிடம் பரவுகிறது என்பதுதான் உண்மை.

பணவீக்கமும் விலைவாசி உயர்வும் புதியதும் அல்ல, இப்போதைய விலைவாசி உயர்வு இந்தியாவில் மட்டுமே நிலவும் நிகழ்வும் அல்ல. உலகெங்கும் அனைத்து நாடுகளிலும் நிலவும் ஒரு பொது பிரச்சினை. இதை நாம் நினைத்தால் மட்டுமே சரிசெய்துவிட முடியாது. இதன் தொடர்பாக அமெரிக்க அதிபர் புஷ் சமீபத்தில் கூறியதுபோல இதை தீர்க்க யாரிடமும் மந்திரக் கோல் ஒன்றும் இல்லை. இடதுசாரி கட்சிகள் முறையிடுவதுபோல இது நம்முடைய பிரதமரின் பொருளாதார கொள்கைகள் மட்டுமே காரணமும் இல்லை. உலகமயமாக்கல் என்பது இன்று அனைத்து வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொதுவான பொருளாதார கொள்கை! அதிலிருந்து நாம் மட்டும் விலகி நிற்க இயலாது. இத்தகைய சூழலில் உலகில் மற்ற நாடுகளில் ஏற்படும் பிரச்சினை நம்மையும் பாதிக்கத்தான் செய்யும்.

இடதுசாரி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொல்லையால் ரிசர்வ் வங்கியும் பல அவசர நடவடிக்கைகளில் இறங்கி பிரச்சினையை மேலும் சிக்கலாகி வருகின்றது. வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய நிதியை கூட்டுவதன்மூலம் கடன் வட்டி விகிதம் நிச்சயம் உயரும். அது மேலும் விலைவாசியைக் கூட்டுமே தவிர குறைக்க நிச்சயம் வாய்ப்பில்லை. அவசரத்தில் எடுக்கும் முடிவுகள் அலங்கோலமாகவே இருக்கும் என்பார்கள். அதுதான் இப்போது நடக்கிறது.

25 ஜூன் 2008

இனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா?

இன்றைய பதிவுலகின் முதுகெலும்பே இந்த பின்னூட்டங்கள்தான் என்றால் மிகையாகாது.

ஒரு பதிவாளரின் எண்ணச் சிதறல்களை தாங்கி வரும் இடுகைகளை படித்து அதற்கு தங்களுடைய கருத்தை அது மாற்றுக் கருத்தாக இருப்பினும், ஆக்கப்பூர்வமான முறையில் (constructive) விமர்சனம் செய்ய இந்த பின்னூட்டங்கள் மிகவும் உதவுகின்றன.

எந்த ஒரு கருத்துக்கும் மாற்றுக் கருத்து உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த மாற்றுக் கருத்தையும் நேர்மையான முறையில் ஒருவர் முன் வைக்கும்போது பதிவாளர் அதை சரியான, அதாவது அதே நேர்மையான முறையில் எதிர்கொண்டு தன்னுடைய கருத்தை சார்ந்து வாதிடும்போது அந்த வாதமே சூடு பிடித்து மற்ற பதிவர்களுடைய கவனத்தையும் ஈர்த்து 'சூடான இடுகைகள்' பட்டியலில் இடம் பிடித்துவிடுகிறது. இதற்கு கருத்து எழுதுபவர்கள் (பின்னூட்டம் இடுபவர்கள்) தங்களை முழுமையாக அடையாளம் காட்டிக்கொள்வது மிக, மிக அவசியமாகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் ஒரு சிலர் இதை தவறாகப் பயன்படுத்தி அநாமதேயங்களாக வந்து பதிவாளரின் கருத்துக்களை விமர்சிப்பதை விட்டுவிட்டு அவரையே விமர்சித்தனர். மேலும் சிலர் தேவையில்லாத அதாவது சாதி, மத, இனம் சார்ந்த இடுகைகளை எழுதி பதிவர்களிடையே ஒருவித 'கலவர சூழலை' உருவாக்கினர் என்பதும் உண்மை.

அப்போதுதான் தமிழ்மணம் தலையிட்டு தங்களுடைய திரட்டியில் பதிவு செய்திருந்த பதிவர்களை ப்ளாகர் அளித்துள்ள பின்னூட்ட மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்திக்கொள்ள பரிந்துரைத்தது.

அந்த பரிந்துரை பயனளிக்கத் தவறியபோது மட்டுறுத்தல் வசதியை பயன்படுத்தாத பதிவுகளை நீக்கிவிடவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக வேண்டிவரலாம் என்ற சூழலும் எழுந்தது.

ஆகவே ஏறத்தாழ அனைவருமே தங்களுடைய பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தலை அறிமுகப்படுத்தினர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக தமிழ்மணத்தில் நிலவும் சூழல் ஒரு நட்புச் சூழலாகவே எனக்குப் படுகிறது. இடுகைகளும் சரி, அதற்கு பிறகு வரும் பின்னூட்டங்களும் சரி அமைதியானதொரு சூழலை காட்டுகிறது. இடுகைகளின் தரமும் சற்று உயர்ந்துள்ளது என்பதையும் மறுக்கவியலாது. துறைசார்ந்த பதிவுகள், படு ஜாலியான பதிவுகளுடன் கும்மியடிக்கும் பதிவுகளும் வந்தாலும் எவரும் எவருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக பதிவுகளோ அல்லது இடுகைகளோ வரவில்லை அல்லது வெகுவாக குறைந்துள்ளது என்பது உண்மை. உண்மைத் தமிழன் போன்றவர்களுடைய பின்னூட்ட அன்பு தொல்லையும் யாரையும் எந்தவிதத்திலும் சங்கடத்திற்குள்ளாக்கியதாக தோன்றவில்லை.

பின்னுட்டங்கள் வந்தவுடன் உடனுக்குடன் அறிந்துக்கொள்ள 'கூகிள்' மின்னஞ்சல் விலாசத்தை பதிவு செய்துக்கொண்டால் 'கூகிள் டாக்' வழியாக அவற்றை உடனுக்குடன் அறிந்துக்கொள்ளவும் தேவைப்பட்டால் விரும்பத்தகாத பின்னூட்டத்தை நீக்கிவிடவும் வசதியுள்ளதால் நான் மட்டுறுத்தல் வசதியை நீக்கிவிட்டேன். நாம் இடும் பின்னூட்டத்தை உடனடியாக பதிவில் காண்பதும் ஒரு மகிழ்ச்சியை அளிக்கத்தான் செய்கிறது! அநாமதேய ஆப்ஷனை நீக்கிவிட்டால் யாரும் தேவையில்லாத பின்னூட்டங்களை இட வாய்ப்பில்லை.

ஆகவே இனியும் இந்த பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையில்லை என கருதுகிறேன்.

தமிழ்மணமும் இதற்கு மறுப்பு தெரிவிக்காது என நம்புகிறேன்.

24 ஜூன் 2008

பதிவாளர்கள் எழுத்தாளர்களா?

ஒவ்வொரு காலக்கட்டத்துல ஒவ்வொரு விஷயம் பிரபலமா இருக்கும். சரியான சொல்லணும்னா craze ஆ இருக்கும்.

பதிவெழுதறதுதான் இப்ப craze. இதுக்குன்னு இலவசமா இடமும் (space) சூப்பரா வடிவமைச்ச பலகையும் (design templates) கிடைச்சிருது. அலுவலகத்தோட தயவுல கணினியும் வலை இணைப்பும் (Internet connection)கிடைச்சிருது.

அப்புறம் என்ன? ப்ளாக் ரெடி.

எழுதறதுக்கு (கிறுக்கறதுக்குன்னு சொல்றதுதான் சரி)விஷயம்?

அப்படீன்னு ஒன்னு தேவையே இல்லீங்க. கண்ணால பாக்கறது, காதால கேக்கறதுன்னு எதப்பத்தி வேணும்னாலும் கிறுக்கலாம்.

ஆனா அதெல்லாம் எழுத்தாயிருமா இல்ல நாமதான் நம்மள எழுத்தாளர்னு நினைச்சிக்கலாமா?

இதுதான் இன்றைய கேள்வி.

சிலரோட பதிவு தலைப்புல ஒரு mission statement இருக்கும்.

'இது என்னை ஒரு எழுத்தாளனாக்க நான் எடுத்துக்கொள்ளும் முயற்சி'

அதாவது இப்ப நான் எழுத்தாளன் இல்லை. ஆனா ஒரு காலத்துல எழுத்தாளனாயிருவேன். அதுக்காக இன்னையிலருந்து முயற்சி பண்ணப்போறேன்னு சொல்றாங்க.

இதுதான் நிதர்சனம்.

நம்ம எல்லார் மனசுக்குள்ளயும் இருக்கற ஒரு சின்ன ஆசை.

இந்த மாதிரி வந்து தினம் ஒரு பதிவு எழுதி ஆரம்பத்துல பிரமாத பேசப்பட்டு தன்னைத்தானே ஒரு பெரிய எழுத்தாளனா கற்பனை செய்துக்கிட்டு பிறகு அட்ரஸ் தெரியாம ஆன பதிவர்கள் ஏராளம், ஏராளம்.

இத்தகைய பதிவர்கள் அநேகம் பேர் அவங்க இடுகைகளுக்கு வர்ற பின்னூட்டங்களின் எண்ணிக்கையை வைத்து 'அட! இவ்வளவு பேர் நம்ம எழுத்த படிச்சி அவங்களோட கருத்த எழுதறாங்களே. அப்ப நம்ம எழுத்துலதான் ஏதோ இருக்கு போலருக்கு.'ன்னு நினைச்சி தங்களையும் எழுத்தாளராளர்களாக கற்பித்துக்கொண்டவர்கள்.

அதில் தவறேதும் இல்லை. ஆனா அத ரொம்ப சீரியசா எடுத்துக்குறக் கூடாதுன்னுதான்...

ஆயிரம் பதிவர்கள்ல ஒரு பத்து பேர் எழுத்தாளரா வரலாம்னு வேணும்னா சொல்லலாம். அதாவது தொடர்ந்து ஒரு பத்து வருசம் எழுதுனா. அதாவது வெறும் கும்மி பதிவா எழுதாம... பின்னூட்ட எண்ணிக்கைகளைப் பத்தியெல்லாம் கவலைப்படாம...

அதுக்கு ரொம்ப பொறுமை வேணும். நிறைய படிக்கணும் (ஒரு எழுத்தாளனுக்கு மிக முக்கியம் இந்த படிக்கும் ஆர்வம்), ஆய்வு செய்யணும், etc, etc. அதுக்கு நிறைய நேரம் வேணும். அதுதானே இப்ப பிரச்சினையே.

அதனால நா சொல்ல வர்றது என்னன்னா ஆஃபீஸ் நேரத்துல மட்டும் பதிவுல எழுதறவங்க எல்லாம் எழுத்தாளர்களாகி விட முடியாதுங்க.

வேணும்னா நாம எல்லாம் கத்துக்குட்டி எழுத்தாளர்ங்கன்னு வேணும்னா சொல்லிக்கலாம்.

ஆனா ஒன்னு. ஒரு முழுநேர எழுத்தாளனுக்கு இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கு. நாம எதப்பத்தி வேணும்னாலும், எப்படி வேணும்னாலும் எழுதலாம். ஒரு கட்டுப்பாடும் இல்லை.

அதனால எழுத்தாளன்னு எந்தவித pretensionம் (பாவனை செய்துக்கொள்ளாமல்) இல்லாம மனம்போன போக்குல எழுதி, தப்பு, தப்பு, கிறுக்கி தள்ளுங்க.

நம்ம பதிவுல நாம கிறுக்கறதுக்கு யார் பர்மிஷன் வேணும்?

எச்சரிக்கை: யாராவது உங்களை ஒரு எழுத்தாளனாக்குகிறேன் என்றால் அவர்கள் பின்னால் சென்றுவிடாதீர்கள். They will take your ideas, dress them up in such a way that you won't recognise your own work when it is published, would take the cake and give you only the crumbs. Beware of such parasites.

நாளைய பதிவு: இனியும் பின்னூட்ட மட்டுறுத்தல் தேவையா?

23 ஜூன் 2008

ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி துவக்கம்

இன்று மதிய உணவுக்கு சென்றிருந்த நேரத்தில் (ஆஃபீசும் வீடும் அடுத்தடுத்த பில்டிங்லங்க. நூறடி தூரம்தான்) இன்று கலைஞர் துவக்கி வைத்த ராஜ் தொலைக்காட்சியின் 24 மணி நேர செய்தி அலைவரிசையைப் பார்க்க நேர்ந்தது.

அதில் மு.க. அவர்களை அழகிரி கைத்தாங்கலாக அழைத்து வந்து இருக்கையில் அமர்த்த அவர் 'ஒரு காலத்தில் எங்களைப் பற்றிய செய்திகளை ஒளிபரப்ப எந்த தொலைக்காட்சியும் முன்வராதபோது தைரியமாக ஒளிபரப்ப முன்வந்தது ராஜ் தொலைக்காட்சி' என்றார்.

அப்படியொரு நிலமை மு.கவுக்கு வந்திருக்கிறதா என்ன?

அது சரி.. ஸ்டாலினை அந்த விழாவில் காணவில்லையே.

சுத்தமாக ஓரங்கட்டப்பட்டுவிட்டாரா என்ன?

க்விட் ப்ரோ க்வோ'

நான் சமீபத்தில் (1995ல்தான்) மும்பையில் பணியாற்றியபோது என்னுடைய வட்டார அலுவலகத்தில் உயர் அதிகாரியாய் இருந்தவர் படு ஜாலியான மனிதர். அவரால் பேசாமல் இருக்கவே முடியாது. அந்த அலுவலகத்தின் தலைவராக இருந்தவர் (வட்டார மேலாளர்) அவருக்கு நேர் எதிர். மனிதர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் நேராக தன்னுடைய அறைக்கு சென்றுவிடுவார். பிறகு பகலுணவு வேளையில் வெளியில் வருவார். அலுவலகத்திலுள்ளவர்கள் உண்பதற்கு அரை மணிக்கு முன்பு பொது உணவறைக்கு சென்று தனியாக அமர்ந்து உணவருந்திவிட்டு சென்றுவிடுவார். அவருக்கு 'சரியான முசுடு' என்ற பட்டப்பெயரும் உண்டு.

நான் குறிப்பிட்ட உயர் அதிகாரி அந்த அலுவலகத்தில் 2ம் ஸ்தானத்தில் இருந்தவர். ஆனால் ஒட்டுமொத்த அலுவலகமும் இவரைத்தான் தன்னுடைய தலைவராக ('தல' ன்னும் சொல்லலாம்) கொண்டிருந்தனர். அலுவலக விஷயங்களில் மட்டுமல்லாமல் 'வெளி' விஷயங்களிலும் அவர்களுக்கு அவர்தான் 'தல'. குறிப்பாக மாலை நேர 'தாக சாந்தி' நேரங்களில்.

அவருக்கு வேறொரு பழக்கமும் உண்டு. தனக்குக் கீழ் பணியாற்றுபவர்களிடம் மட்டுமல்லாமல் அவர்களுடைய குடும்பத்தினரிடமும் நெருங்கிப் பழகுவது. அதாவது சமயம் கிடைக்கும்போதெல்லாம் (வார இறுதி நாட்களில்) அவர்களுடைய வீடுகளுக்கு செல்வது அவருடைய வழக்கம். அப்போது அந்த அலுவலகத்தில் சுமார் பத்து கடைநிலை மற்றும் இடைநிலை அதிகாரிகள் இருந்தனர். நான் அங்கிருந்து சுமார் இருபது கி.மீ தொலைவிலிருந்த செம்பூர் கிளையில் மேலாளராக இருந்தேன். அவர் அந்த அலுவலகத்தில் வந்து இணைவதற்கு முன்பு வட்டார அலுவலகத்தில் பணியாற்றியிருந்ததால் நானும் அவர்களுடைய அலுவலகத்தின் அங்கமாகவே கருதப்பட்டேன்.

எனவே என்னையும் சேர்த்து பதினோரு குடும்பங்கள். இதற்கெனவே ஒரு டைரியும் வைத்திருப்பார். ஒவ்வொரு வாரம் ஒரு வீடு. அவரும் அவருடைய மனைவி மட்டுமே மும்பையில் இருந்தனர். மகள் மற்றும் மகன் கேரளத்தில் மாமியார் வீட்டில். ஆகவே தம்பதி சமேதராய்தான் விசிட்டுக்கு வருவார்கள். அவரைப் போலவே அவருடைய மனைவியும் கலகலப்பானவர் என்பதால் அவருடன் சேர்ந்துக்கொண்டு நன்றாக அரட்டையடிப்பார். புறப்படும்போது 'நான் வந்து அட்டெண்டன்ஸ் குடுத்தாச்சி' என்று கூறிக்கொண்டே விடைபெறுவார். அதாவது நாம் அவருடைய வீட்டுக்கு கூடிய விரைவில் செல்ல வேண்டும். அதற்குப் பிறகுதான் அவர் நம் வீட்டுக்கு மீண்டும் வருவார் என்று பொருள்!

இதைத்தான் quid pro quo என்றேன். அதாவது "Something for something; that which a party receives (or is promised) in return for something he does or gives or promises." இதுதான் பொருள்.

****

இது நம் பதிவுலகுக்கும் பொருந்தும். புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன். பின்னூட்ட ரகசியமும் இதுதான்.

நாளைய பதிவு: 'பதிவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா?'

19 ஜூன் 2008

இது அரசியல் கட்டுரை அல்ல!!

குறை கூறுவது மனித இயல்பு. நம்மில் குறை கூறாதவர்களே இல்லை எனலாம்.

இருவர் கூடிவிட்டாலே அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவதுதான் வாடிக்கை. ஏனெனில் அந்த இருவரே ஒருவரையொருவர் குறை கூற துவங்கினால் இறுதியில் கைகலப்பில்தான் முடியும் என்பதால் அங்கு இல்லாதவர்களைப் பற்றி பேசுவது இயல்பு.

ஆனால் நாம் எப்படி மற்றவர்களை குறை கூறுகிறோமோ அதேபோல் மற்றவர்களும் நம்மை குறை கூற வாய்ப்புள்ளது என்பதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்!

மற்றவர்களை குறை கூறுவதில் மகிழ்ச்சி காணும் நாம் நம்மை மற்றவர்கள் குறை கூற முயல்கையில் வெகுண்டு எழுகிறோம்.

இதுவும் மனித இயல்புதான்.

குறை கூறுவதும் ஒரு கலை. அதில் கற்று தேர்ந்தவர்கள்தான் தலைமை இடத்திற்கு வரமுடியும் போலிருக்கிறது.

அதாவது நமக்கு கீழே இருப்பவர்களை குறை கூறி, கூறி நம்முள் இருக்கும் குறைகளை நமக்கு மேலிருப்பவர்கள் உணராமல் செய்துவிடமுடியும்!

ஆனால் குறை கூறுவதும் தேவையான ஒன்றுதான்.

No pain no gain என்பார்கள். நம் உடம்பில் உள்ள குறைகளை நாம் கண்டுணர்வது வலியால்தான். சாதாரண வலி என்றுதான் மருத்துவரை அணுகுகிறோம். பிறகுதான் தெரிகிறது வலிக்கு பின்னால் இருக்கும் நோய் (சரிதானே ப்ருனோ?).

அதுபோன்று நம்முடைய செயல்களைக் குறித்து பிறர் விமர்சிக்கும்போதுதான் நம்மில் உள்ள குறை நமக்கே தெரிகிறது. இதை நம்மில் பலரும் மறந்துபோகிறோம்.

நமக்கு நெருங்கியவர்கள், நம்மில் அக்கறையுள்ளவர்கள் நம்மை குறை கூறுவதும் நமக்கு எதிரிகள் என்று நாம் கருதுபவர்கள் குறை கூறதும் ஒன்றல்ல. முன்னவர்களுடைய குறை கூறும் போக்கு அவர்களுக்கு நம் மீதுள்ள அக்கறையை, அன்பை, எதிர்பார்ப்பைக் காட்டுகிறது என்பதை நாம் நினைவில் கொள்வதில்லை.

'குறை கூறுபவர்களுக்கு எவ்வித தகுதியும் தேவையில்லை. அடிமுட்டாளும் குறை கூறுவான். ஆனால் அதை ஏற்றுகொள்ள அல்லது பொருட்படுத்தாமல் இருக்க அனைவராலும் முடிவதில்லை. It needs a strong character, willpower to put up with criticism especially when it is not constructive'

***

இதை நான் பா.ம.க தலைவருக்காகவோ அல்லது மு.கவுக்காகவோ எழுதவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

18 ஜூன் 2008

விட்டது தொல்லை!

கடந்த சில மாதங்களாகவே பலராலும் எதிர்பார்க்கப்பட்ட முறிவு இறுதியில் ஏற்பட்டுவிட்டது.

இதை 'விட்டது தொல்லை' என்று தி.மு.க தலைமையும் அதன் தொண்டர்களும் என நினைத்து மகிழலாம். அது ஓரளவுக்கு உண்மையும் கூட.

பா.ம.க தலைமையும் இதை 'ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்' என ஒதுக்கித் தள்ளியும் விடலாம்.

ஆனால் இந்த முடிவு சரியானதுதானா?

இந்த முடிவிற்குப் பின்னால் தி.மு.கவின் ஒட்டுமொத்த தலைமை நிற்கிறதா?

கட்சித் தலைவர்களில் ஒருவரும் மு.க.விற்குப் பிறகு முதல்வர் பதவியில் அமரக்கூடும் என பலராலும் கருதப்பட்ட ஸ்டாலின் ஊரில் இல்லாத சமயத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பதை வைத்துப் பார்த்தால்...

கடந்த வாரம் நடந்து முடிந்த தி.மு.க மகளிர் அணி மாநாட்டிலும் அவர் கலந்துக்கொள்ளாமலிருந்ததையும் மு.க. அழகிரிக்கும், அவருடைய மகள் மற்றும் கனிமொழிக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையும் வைத்து பார்த்தால்...

ஒருவேளை ஸ்டாலின் ஒதுக்கப்படுகிறாரோ என்கிற எண்ணமும் தோன்றத்தான் செய்கிறது...

இத்தகைய சூழலில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு சரியானதுதானா?

விட்டது தொல்லை என்று நினைத்து எடுக்கப்பட்ட முடிவே ஒரு பெருந்தொல்லையாகிவிடுமோ?

காலம்தான் பதில் சொல்லும்..

13 ஜூன் 2008

வேலியே பயிரை மேய்ந்தால்!



ஒரு விளையாட்டு வீரர் போதை மருந்து உட்கொண்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர் சாதித்த சாதனைகளை நிராகரித்துவிடுவார்கள்.

அதுபோன்று இந்த நீதிபதி மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் இவர் எழுதிய தீர்ப்புகளை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதுமா?

இவருடைய தீர்ப்பால் தில்லியில் எத்தனை நடுத்தர மற்றும் சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டனர்!

09 ஜூன் 2008

என்ன செய்யப் போகிறார் மு.க?

தங்களுக்கு நான் 10.மே.2006 அன்று எழுதிய கடிதத்தின் தொடர்ச்சி இது.


இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன...

இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்களும் உங்களுடைய அரசும் பலவற்றை சாதித்துள்ளன, மறுக்கவில்லை..

அவற்றுள் என்னுடைய கடிதத்தில் நான் பட்டியலிட்டு காட்டியிருந்த பல வேண்டுகோள்களில் கீழ் காணும் மூன்றும் அடங்கும்.

1. ரூ.2/க்கு ஒரு கிலோ அரிசி.

2. முந்தைய அரசு பணிநீக்கம் செய்த சாலை ஊழியர்களுக்கு மீண்டும் வேலை.

3. வறுமை கோட்டுக்குக் கீழே ?! உள்ளவர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி மற்றும் காஸ் அடுப்பு இத்யாதிகள்

ஆனால் அதிலும் பல குறைகள், ஊழல், கட்சித் தொண்டர்களுக்கு முன்னுரிமை, ரேஷன் அரிசி கடத்தல் என பல குற்றச்சாட்டுக்கள். குறிப்பாக வண்ணத் தொலைக்காட்சி வழங்குவதில்... ரேஷன் கடைகளில் எடை குறைவு, கையிருப்பு இல்லாமை என தொடரும் குறைபாடுகள்.

இன்னுமொரு நிறைவேற்றப்பட்ட வேண்டுகோள். முன்னாள் முதலமைச்சர் மற்றும் அவருடைய தோழி மீது அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்காமல் இருந்தது.

மற்றபடி என்னுடைய கடிதத்தில் நான் முன்வைத்த எந்த கோரிக்கைகளையுமே நீங்கள் நிறைவேற்றவில்லை என்பதுதான் வேதனை..

1. முடிவெடுக்கும் திறன்.

நாளுக்கு நாள் அது மோசமாகிக்கொண்டேதான் செல்கிறது. நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் எதிலாவது தெளிவாக முடிவெடுத்துள்ளீர்களா என்று தேடினால்... அது சேது சமுத்திர திட்டமானாலும், ஒகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டமானாலும், மணல் குவாரி, கல்லூரி கட்டண உயர்வு, என எந்த பிரச்சினையிலும் உங்களுடைய தடுமாற்றம் தெளிவாக தெரிகிறது.

2. வாரிசுகளுக்கு முன்னுரிமை

உங்களுடைய ஐம்பதாண்டு அரசியல் வாழ்க்கையில் இது உங்களுடைய வாரிசுகள் பொற்காலம் என்றால் மிகையாகாது. நீங்கள் இதுவரை முதல்வராக இருந்த எந்த காலத்திலும் உங்களுடைய குடும்பத்தினருக்கு அரசு விழாக்களில் மேடையில் இடம் அளித்ததில்லை. ஆனால் இப்போதோ.. ஒருவர் ஒரு விழா மேடையில் இருக்கை என்றால் மற்றவருக்கு இன்னொரு விழா மேடையில் இருக்கை. இது உங்களுடைய தனிப்பட்ட, குடும்பம் விவகாரம் என்று ஒதுக்கிவிட முடியவில்லை.

மு.க அழகிரி விஷயத்தில் நீங்கள் எடுத்த பல முடிவுகள் கட்சியினர் மத்தியில் பல சங்கடங்களை விளைவித்துள்ளதை நீங்கள் உணர்கிறீர்களா என்று தெரியவில்லை. அவருக்கு சாதகமாக, அல்லது அவருடைய அறிவுரையை நீங்கள் ஏற்பது, தயாநிதி மாறன் விஷயத்தில் நீங்கள் எடுத்த முடிவு, அதை மாற்றி அமைத்து அவர் எதிரணியினருடன் இணைந்துவிடாமல் இருக்க ஸ்டாலின் எடுத்த பல முயற்சிகளையும் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது.... உங்களுடைய இந்த போக்கு ஸ்டாலினையே ஓரங்கட்டும் விதமாக அமைந்துவிடுமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இளையவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு மூத்தவருக்கு இல்லை என்று மக்களே தெரிவித்ததாக ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டதை மனதில் வைத்துக்கொண்டு மாறன் சகோதரர்கள் மீது இன்னமும் காழ்ப்புணர்வு கொள்வது எந்த விதத்தில் அரசியல் புத்திசாலித்தனம் என்பது விளங்கவில்லை. கனிமொழியின் அரசியல் பிரவேசத்தைப் பற்றி... உங்களுடைய வாரிசுகளில் ஒருவர் என்பதைத் தவிர அவருக்கு வேறென்ன தகுதியுள்ளது?

3. மதுபானக் கடைகளை அரசு ஏற்று நடத்துவது

அரசின் பணி வணிகம் செய்வதல்ல, ஆகவே அதை முழுவதுமாக தனியாரிடம் விட்டுவிடுங்கள் என்ற கோரிக்கை வைத்திருந்தேன். இந்த இரண்டு ஆண்டுகளில் மேலும் சில வணிகங்களை அரசே ஏற்று நடத்துவதாக முடிவெடுத்துள்ளீர்கள். போதாதற்கு அரசு கேபிள் டிவி வேறு. இதே முடிவை முந்தைய அரசு எடுத்தபோது சன் டிவியின் ஆதிக்கத்தை குலைக்க எடுக்கப்படும் சதி என்றீர்கள். உங்களுடைய முடிவுக்கும் அதுதானே காரணம்? அதற்கும் கூட காத்திராமல் அதிரடியாக நுகர்வோரின் வீடுகளுக்கே சென்று SCV Set top boxஐ மாற்றி Hathway set boxஐ வைத்ததும் உங்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. சிறிய நிறுவனமான ஹாத்வே அதிக எண்ணிக்கையிலுள்ள நுகர்வோரின் இணைப்புகளை சமாளிக்க முடியாமல் சென்னையிலுள்ள என்னைப் போன்ற பல நுகர்வோர் கடந்த ஒரு மாத காலமாக படும் அவஸ்தையும் உங்களுக்கெ தெரிய வாய்ப்பில்லை. எதற்கு இந்த அவசர முடிவுகள்? ஒரு கடமையுணர்வுள்ள ஒரு அரசின் செயல்பாடுகளா இவை?

4. அண்டை மாநில அரசுகளுடன் சச்சரவு

முந்தைய முதலமைச்சரின் ஆணவப் போக்கே அண்டை மாநில அரசுகளுடன் சுமுக போக்கு இல்லாமல் போனதற்கு காரணம் என்றீர்கள். ஆனால் இப்போதும் அதே நிலைதானே? தமிழகத்தை சுற்றிலுமுள்ள எந்த மாநில அரசுடன் சுமுக உறவு உள்ளது?

5. இறுதியாக கூட்டணி கட்சியினரிடையில் ஒற்றுமையில்லாமை

பாமக தலைவரை விட்டுவிடுங்கள். அவரை யாராலும் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் சமீப காலமாக உங்களுடைய அரசு எடுத்த சில முடிவுகள் இடதுசாரியினரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது உண்மைதானே? குறிப்பாக தனியார் கல்லூரி கட்டண உயர்வு. கடந்த ஆண்டு அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல் அதிக அளவில் கல்லூரிகள் வசூலித்தனர் என்பதற்காக அரசே அதை உயர்த்தியுள்ளதாக நீங்கள் கூறுவது எந்தவிதத்தில் நியாயம்? திமுக கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதில்லை என்று குற்றச்சாட்டுக்கு இது கூட்டணி அரசு அல்ல, அரசை ஆள்வது திமுக என்கிறீர்கள். இதை உங்களிடமிருந்து உங்களுடைய தனிப்பட்ட அபிமானிகள் (என்னைப் போன்றவர்கள்) நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.

இந்த போக்கு நீடிக்குமானால் பா.ம.க மட்டுமல்ல தற்போது கூட்டணியிலுள்ள எந்த கட்சியும் அடுத்த தேர்தலில் உங்களுடன் இருக்கப்போவதில்லை.

காங்கிரசுடன் கூட்டு சேர்ந்தாலே போதும் தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என்று நீங்கள் கருதுவீர்களானால் அது நிச்சயம் பகற்கனவாய்த்தான் முடியும்.

என்னுடைய முந்தைய கடிதத்தில் இறுதியாக உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்திருந்தேன்.

அதாவது தங்களால் உடல்ரீதியாக என்றைக்கு முதலமைச்சராக திறம்பட பணியாற்ற இயலவில்லை என்று நீங்கள் உணர்கிறீர்களோ அன்றைக்கே, அந்த நிமிடமே தங்களுடைய கட்சி உறுப்பினர்களை சுதந்திரமாக, எவ்வித தலையீடுமின்றி ஒரு முதல்வரை தெரிவு செய்ய வழிவகுக்க வேண்டும் என்பது ...

அதற்கு சரியான தருணம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன்....

செய்வீர்களா?

29 மே 2008

பணவீக்கம் - காரணிகள் 2

விலைவாசி உயர்வு ஏன் ஏற்படுகிறது என்பதை சுருக்கமாகப் பார்த்தோம்.

அதாவது விலைவாசி உயர்வதற்கு நுகர்வோரின் தேவைகள் (Demand) அதிகரிப்பதும் ஒரு காரணம் என்று பார்த்தோம். ஆனால் அது மட்டுமே முழுமையான காரணம் அல்ல.

நுகர்வோர் தேவைப்படும் பொருட்கள் சந்தையில் சரிவர கிடைக்காமல் போனாலும் விலைவாசி உயரும்.

இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. தேவைப்படும் பொருளின் உற்பத்தி குறைந்துபோவது.

குறிப்பாக உணவுப் பொருட்கள். பருவமழையையே நம்பியிருக்கும் விவசாயம் பருவமழை பொய்த்தால் நலிந்துபோக நேருகிறது. அது அதீத மழையாலும் நேரிடலாம். அறுவடைக்கு காத்திருக்கும் நெற்பயிர் திடீரென்று கொட்டி தீர்க்கும் அடை மழையால் நீரில் மூழ்கிப்போவதும் வளர்ந்து கனி கொடுக்க காத்திருக்கும் வாழை, கரும்பு பேய்க் காற்றால் சரிந்துபோவதும் நம் நாட்டில் அவ்வப்போது காணும் நிகழ்ச்சிகள்.

2. வியாபாரிகளின் நேர்மையற்ற நடத்தைகள்.

பருவமழை, பேய்க்காற்று ஆகியவற்றையாவது முன்னறிவிக்க வளர்ந்துவரும் தொழில்நுட்பம் வகைசெய்கிறது. ஆனால் artificial shortage எனப்படும் மனித வக்கிரங்களால் ஏற்படும் பதுக்கல் மற்றும் cartel எனப்படும் கூட்டுக் களவானித்தனத்தை எப்படி முன்னறிவது? மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்களின் பதுக்கல் பெரும்பாலும் அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப்பொருட்களின் விலையைப் பாதிக்கிறது. தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் கூட்டு சேர்ந்து தங்களுடைய பொருட்களை குறிப்பிட்ட விலைக்கு கீழ் விற்பதில்லை என்று முடிவெடுத்துக்கொள்வது இரும்பு, சிமிட்டி போன்ற கட்டுமான பொருட்களின் விலையைப் பாதிக்கிறது.

இயற்கையின் இடையூறுகளால் ஏற்படும் தட்டுப்பாட்டை, குறிப்பாக உணவுப் பொருட்கள் தட்டுப்பாட்டை ஈடுகட்ட அரசு தங்களிடம் உள்ள கையிருப்பை உடனே சந்தையில் வினியோகிப்பதோ அல்லது இறக்குமதி செய்வதோ அவசியமாகிறது. இது ஒரு குறுகிய கால நடவடிக்கை. நீண்ட கால நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு, அவர்கள் மீண்டும் உணவு உற்பத்தியில் ஈடுபட சலுகை கடன் வசதிகள் ஆகிய நடவடிக்கைகளும் உணவுப்பொருள் உற்பத்தி மிகுதியாகும் காலங்களில் அவற்றை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து தேவைப்படும்போது சந்தையில் இறக்கி விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, உணவுப்பொருள் தட்டுப்பாடு உள்ள காலங்களில் அவற்றின் ஏற்றுமதியை தடைசெய்வது என பல்வகை நடவடிக்கைகளை எடுக்கும் கடமை அரசுக்கு உண்டு.

அதுபோன்றே தயாரிப்பாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களின் நடவடிக்கைகளால் ஏற்படும் செயற்கையான பற்றாக்குறையை நேர்மையுடனும், கண்டிப்புடனும் எதிர்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் அரசின் கடமையாகும். அரசின் கோரிக்கைக்கு செவிமடுக்க மறுக்கும் உற்பத்தியாளர்களை வழிக்குக்கொண்டு வர தங்களிடம் உள்ள அதிகாரத்தை அரசு தயங்காமல் பயன்படுத்த முன்வருவதன் மூலம் செயற்கையாக சந்தையில் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

இதைத்தான் supply side management என்கிறார்கள். அதாவது நுகர்வோரின் தேவைகளை ஈடுகட்ட (to meet the consumers’ demand) எடுக்கப்படும் நடவடிக்கைகள்.

நுகர்வோரின் அத்தியாவசிய தேவைகளுக்கு நிகரான பொருட்கள் சந்தையில் கிடைக்கச் செய்வது மத்திய/மாநில அரசுகளின் கடமை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் நுகர்வோரின் தேவைகள் தேவைக்கு மேல் ஏற்படும்போது என்ன செய்வது? அவர்களுடைய அதீத தேவைகளை நிவர்த்தி செய்வது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. ஆகவேதான் நுகர்வோரின் கைவசமுள்ள ரொக்கத்தை (Money) கட்டுப்படுத்தவும் அரசு முயல்கிறது.

நாட்டிலுள்ள மொத்த பணப்புழக்கத்தை அவ்வப்போது கண்கானித்து தேவைப்பட்டால் கட்டுப்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் எடுத்து வருகிறது.

நம் நாட்டிலுள்ள மொத்த பணப்புழக்கத்தை இந்திய ரிசர்வ் வங்கி எவ்வாறு கணக்கிடுகிறது?

1. நாட்டு மக்கள் கைவசமுள்ள ரொக்கம் (Currency with Public)
2. வங்கிகளில் உள்ள சேமிப்பு மற்றும் வைப்புநிதி திட்டங்களிலுள்ள தொகை (Deposits with commercial Banks)

இவற்றின் மொத்த மதிப்பே நாட்டின் மொத்த பணப்புழக்கமாக கணிக்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி இவ்விரண்டின் மொத்த மதிப்பு சுமார் ரூ.40,00,000 கோடிகள்!! இதில் நாட்டு மக்கள் கைவசமுள்ள ரொக்கம் மட்டும் ரூ.5,67,700 கோடி!

வங்கி சேமிப்பு திட்டங்களிலுள்ள தொகையை எப்போது வேண்டுமானாலும் ரொக்கமாக மாற்றிவிட முடியும் என்பதால் அதுவும் நாட்டின் மொத்த பணப்புழக்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவை இரண்டும் சுமார் 21% விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது சுமார் ரூ.8,00,000 கோடிகள் உயர்ந்துள்ளன!

இந்த அளவுக்கு நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்தால் விலைவாசி உயர்வதை எவ்வாறு தடுப்பது!!

நாட்டில் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுவது இவை இரண்டும்:

1. வங்கிகள் அரசுக்கு வழங்கியுள்ள கடன்கள் (Bank Credit to Govt)
2. வங்கிகள் வர்த்தகர்களுக்கு வழங்கியுள்ள கடன்கள் (Bank Credit to Commercial Sector)

வங்கிகள் அரசுக்கு வழங்கும் கடன் முழுவதும் அரசை நடத்திச் செல்லவும் மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் செலவிடப்படுவதால் அது நுகர்வோரின் கையிருப்பாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்துவது அத்தனை எளிதல்ல.

ஆனால் வங்கிகள் தயாரிப்பாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் வழங்கும் கடன் அவர்களுடைய தயாரிப்பு மற்றும் வர்த்தக திறனை அதிகரிக்கின்றன. இதன் விளைவாக சந்தையில் கிடைக்கும் பொருட்களின் அளவு மற்றும் அதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபமும் கணிசமாக உயர்கிறது.

மேலும் கடந்த ஓராண்டு காலத்தில் வங்கிகள் அரசுக்கு வழங்கிய கடன் தொகையில் எவ்வித மாற்றமும் இல்லையென்றாலும் வர்த்தகத்திற்கு வழங்கிய கடன் தொகை சுமார் ரூ.2,35,000 கோடிகள் உயர்ந்துள்ளன என்கிறது ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிக்கை.

ஆகவேதான் இத்தகையோருக்கு கடன் வழங்கும் வங்கிகளுடைய கடன் வழங்கு சக்தியை (Lending Power) முடக்கும் நோக்கத்துடன் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய தொகையின் அளவை 7.5%லிருந்து 8%ஆக (Cash Reserve) உயர்த்தியது. அதாவது வங்கிகளுடைய சேமிப்பு திட்டங்களிலுள்ள மொத்த தொகையில் 8 விழுக்காடு ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுவிடும். இது 31.3.07ல் 6% ஆக இருந்தது.

இதன் மூலம் வங்கிகள் கடன் வழங்கும் திறன் குறைக்கப்படுகிறது. தயாரிப்பாளர்கள்/ வர்த்தகர்கள் வங்கிகளிலிருந்து பெறும் கடனின் அளவும் கணிசமாக குறையும். இதன் விளைவாக தயாரிப்பு குறையும், கொள்முதல் குறையும், சந்தைக்கு வரும் பொருட்களின் அளவும் குறையும்.

ஆனால் இது விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்துமா?

அடுத்த பதிவில் பார்க்கலாம்.

தொடரும்..

20 மே 2008

பணவீக்கம் - காரணிகள்

பணவீக்கம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொதுவான ஒன்று. வளர்ந்த நாடுகள் எனப்படும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி போன்ற மேலை நாடுகளிலும் பணவீக்கம் மிக சகஜமாகிவரும் காலம் இது.

ஒரு குறிப்பிட்ட அளவு பணவீக்கம் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார சந்தையில் தவிர்க்க முடியாத ஒன்று என்பது மட்டுமல்ல தேவையான ஒன்றும் கூட. ஆங்கிலத்தில் இதை necessary evil என்பார்கள்.

ஆனால் அது ‘குறிப்பிட்ட’ அளவைத் தாண்டும்போதுதான் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாதார பிரச்சினையாக நின்றுவிடாமல் சமுதாய பிரச்சினையாகவும் உருவாகிவிடுகிறது. குறிப்பாக முதிர்ச்சியடையாத அரசியல் சூழலைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கம் ஒரு சிக்கலான மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினையாகவே மாறிவிடுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிவிரைவு பார்வையில் பயணிக்கும்போது அதன் விளைவாக ஏற்படும் பணவீக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. நாட்டில் உற்பத்தி திறன் அதிகரிக்க, உற்பத்தி அதிகரிக்கிறது. அதிகரிக்கப்பட்ட பொருட்களுக்கு உள்நாட்டில் தேவை (Demand) இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் விலை போகின்றன. அதன் விளைவு உற்பத்தியாளர்களுடைய வருமானம் மற்றும் லாபம் (Revenue Income and Profit) உயர்கிறது. உற்பத்தியாளர்களின் வருமானத்தில் ஒரு பங்கு பணியாளர்களின் வருமானமாக செல்கிறது. உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்களுடைய பணியாளர்களின் வருமானமும் உயர்கிறது. தனிநபர் வருமானம் உயர, உயர அவர்களுடைய வாங்கும் திறனும் அதிகரிக்கிறது. விளைவு? அவர்களுடைய தேவையும் அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார அல்லது தேவையற்றதாக கருதப்பட்டு வந்த கைப்பேசி, கணினி போன்ற பல பொருட்கள் இன்று ஒருவகையில் அத்தியாவசிய பொருட்களாக உருவெடுத்துள்ளனவென்றால் அதற்கு முக்கிய காரணியாக கருதப்படுவது தனிநபர் வருமான உயர்வு.

சந்தையிலுள்ள நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்கு (Collective demand of the consumers) நிகராக அவை சந்தையில் கிடைக்கும் அளவும் (Supply) சூழலில் சம்பந்தப்பட்ட பொருளின் விலை உயரத்தானே செய்யும்?


இதை பொருளாதார நிபுணர்கள் பல கோணங்களிலிருந்து ஆய்வு செய்து பல விளக்கங்களை அளித்துள்ளனர்.

1. தேவைகள் (Demand) அதிகரிப்பதால் ஏற்படும் உயர்வு.

ஒரு பொருளின் விலை அதன் நுகர்வோரால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது! அதாவது சந்தையிலுள்ள ஒட்டுமொத்த நுகர்வோரின் தேவை (Demand) மற்றும் அது சந்தையில் கிடைக்கும் அளவு (Supply or Availablity) ஆகியவற்றைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி ஒரு பொருளின் விலை சந்தையிலுள்ள நுகர்வோரின் தேவையையும் (Demand) அது கிடைக்கும் அளவையும் (supply) பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் ஒரு சில பொருட்கள் தவிர (அன்றாட உணவுப் பொருட்களான முட்டை, காய் கறி, மாமிசம்) பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசே நிர்ணயித்துவிடுவதால் அவற்றின் தேவை மற்றும் கிடைக்கும் அளவைப் பொருத்து அமைவதில்லை.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறியின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுவதை காண்கிறோம். காலை நேரத்தில் கட்டு ஒன்று ரூ.3.00 வீதம் விற்கப்படும் கொத்தமல்லி/புதினா மாலையில் ரூ.1க்கும் கிடைப்பதுண்டு. சில நாட்களில் கட்டு ஒன்று ரூ.5க்கும் கிடைப்பது அரிதாகிவிடும். வேறு சில நாட்களில் எதிர்பாராத விதமாக அதிக அளவிலான சரக்கு வந்து இறங்க கட்டு ஒன்று 50 காசுக்கும் வாங்க ஆளிருக்காது. தக்காளியும் அதேபோல்தான். சந்தையில் வந்திறங்கும் சரக்கின் அளவைப் பொருத்தே அன்றைய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் when the supply of a commodity does not keep pace with the demand the prices will rise.

இதைத்தான் தேவைகள் அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வு என்கிறார்கள் (demand pull inflation).

நுகர்வோரின் தேவைகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. வாங்கும் திறன் அதிகரிப்பு
2. நுகர்வோரின் ரசனையில் ஏற்படும் மாறுதல்கள்
3. விலைவாசி உயரக் கூடும் என்ற எண்ணம்
4. விலை வீழ்ச்சி

இத்துடன் கால மாற்றத்தால் ஏற்படும் குறுகிய கால தேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் (Seasonal demand).

கடந்த சில மாதங்களில் உலக உணவுப் பொருட்கள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம் இந்தியா மற்றும் சீன நடுத்தர மக்களின் தேவைகளின் அதிகரிப்பு என்று அமெரிக்க அதிபரும் உலக வங்கி தலைவரும் கூறியதைக் கண்டு நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் கொதித்துப் போனார்கள் என்றாலும் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இன்று சென்னையில் பல் அங்காடிகளை மொய்த்துக்கொண்டு நிற்பது கூப்பன் வாசிகள் எனப்படும் கணினித்துறை ஊழியர்கள்தான். இவர்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியாக வழங்கப்படும் கூப்பன்களை எப்படியாவது செலவழிக்க வேண்டும். மேலும் இதை பணத்திற்குப் பதிலாக ஏற்றுக்கொள்வது பல்பொருள் அங்காடிகள்தான். ஆகவே தேவை உள்ளதோ இல்லையோ இத்தகைய அங்காடிகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கிக் குவிப்பது இவர்களுக்கு வாடிக்கை.

கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் முளைத்துள்ள Mall கள் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், eateriers எனப்படும் உணவுப்பண்டம், பானங்கள் விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டு தங்களுடைய உபரி வருமானத்தை செலவிடும் இந்திய நடுத்தர மக்களின் வாங்கும் திறன் இன்றைய விலைவாசி உயர்வின் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

2. நுகர்வோரின் ரசனையில் ஏற்படும் மாற்றங்கள்.

காலப் போக்கில் ஏற்படும் ரசனை மாற்றங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை விளைவிப்பதில்லை. நம் நாட்டில் தொலைக்காட்சி அறிமுகமாகி சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன. துவக்கத்தில் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்த தொலைக்காட்சி நடுத்தர மக்களிடம் பரவி பிறகு அடித்தட்டு மக்களை வந்தடைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இதை காலப் போக்கில் ஏற்பட்ட ஒரு சாதாரண மாற்றம் எனலாம். ஆகவே தொலைக்காட்சி பெட்டியின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

ஆனால் கைத்தொலைபேசி நாட்டில் அறிமுகமாகி முழுமையாக பத்தாண்டுகள் நிறைவாறாத நிலையில் இன்று நாட்டிலுள்ள சுமார் முப்பது கோடி கைத்தொலைபேசி வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் USD 250மில்லியன் இந்த சேவைக்கென செலவழித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இத்தகைய ரசனை மாற்றத்தை எந்த வகையில் சேர்ப்பது?

3. விலைவாசி உயரக்கூடும் என்ற அச்சம்

இதற்கு முக்கிய உதாரணம் பெட்ரோல் விலை. இன்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடப்போகிறது என்ற ஊகம் மட்டுமே நுகர்வோரின் தேவையை பன்மடங்கு உயர்த்திவிடுகிறதே?

4. விலை வீழ்ச்சி

இது நம்முடைய நாட்டைப் போன்ற முதிர்ச்சியடையாத பொருளாதார சந்தையில் ஏற்படும் விசித்திரம். Reduction Sale அல்லது கழிவு விற்பனை. பண்டிகை வந்தால் பண்டிகை கழிவு. ஆடி மாதம் வந்தால் ஆடிக்கழிவு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். தேவையோ இல்லையோ கழிவு விலையில் வாங்கிக் குவிக்கும் அறியாமை!

இத்தகைய நுகர்வோரின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வைக் (Demand Pull Inflation) கட்டுப்படுத்த மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உதவியுடன் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடரும்...

15 மே 2008

இது அமைச்சர் பூங்கோதைக்கு வக்காலத்து அல்ல!

தமிழக அமைச்சர்களுள் ஒருவரான திருமதி பூங்கோதை அவர்களுடைய தொலைபேசி உரையாடலில் உறவினர் ஒருவருக்காக சிபாரிசு செய்யப் போக அது அவருடைய பதவியையே பறித்தது செய்தி!

ஆனால் இந்த தொலைபேசி உரையாடல் பதிவை வெளியிட்டு பூங்கோதை அவர்கள் தன்னுடைய அரசு பதவியை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று சுப்பிரயமண்யம் சுவாமி என்ற அரசியல் அயோக்கியர் கூப்பாடு போடுவதும் ஊழல் பேர்வழிகளான ஜெயலலிதாவும் அவருடைய முன்னாள் அமைச்சரவை சகாக்கள் ஒத்து ஊதுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

இதற்கு பதிலளித்து மு.க அவர்கள் ஏதோ இதுவரை தமிழ்நாட்டில் நடைபெறாத அக்கிரமம் நடந்துவிட்டதுபோல் அவமானம், அவமானம் என்று அங்கலாய்ப்பது அதைவிட வேடிக்கை.

இதன் பொருள் என்ன?

இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் எவருமே இத்தகைய சிபாரிசை அல்லது வேண்டுகோளை செய்யவில்லை என்றா?

அல்லது இப்படி கையும் களவுமாக பிடிபடவில்லை என்றா?

பூங்கோதை அரசியல் அனுபவம் இல்லாதவர் என்பதை மட்டும்தான் இது காட்டுகிறது.

இல்லையென்றால் அவசரப்பட்டு இது என்னுடைய குரல்தான் என்று ஒத்துக்கொள்வாரா?

நாட்டின் மிக உயர்ந்த உச்ச நீதி மன்றத்திலேயே தன் கையொப்பத்தை போலி என்று ஒரு முன்னாள் முதலமைச்சர் வாதிட்டதைப் போல அவரும் இது என்னுடைய குரல் அல்ல, மிமிக்ரி என்று வாதிட்டிருக்கலாம்.

அல்லது தன்னுடைய வாரிசுகளுடைய நிறுவனங்களில் பணிபுரியும் கோடானுகோடி ஊழியர்களுடைய நலனுக்காகத்தான் அந்த நிறுவனங்களுக்கு சிபாரிசு செய்தேன் என்ற மத்திய அமைச்சர் ஒருவர் சமீபத்தில் சமாளித்ததுபோல சமாளித்திருக்கலாம்.

அது வாரிசு இது உறவு அவ்வளவுதான் வித்தியாசம்!

என்னக் கேட்டால் பூங்கோதை செய்த விஷயம் ஒரு பெரிய விஷயமே அல்ல. நானும் என்னுடைய நண்பர்களுக்காக என்னுடைய வங்கியிலுள்ள விஜிலன்ஸ் அதிகாரிக்கு பலமுறை பரிந்துரைத்திருக்கிறேன்.

அதாவது என்னுடைய நண்பர் தவறிழைக்கவில்லை என்று நான் கருதும் சந்தர்ப்பத்தில், விசாரனை முடிவடைவதற்கு முன்பு, என்னுடைய கருத்தை விசாரணை அதிகாரியிடம் கூறுவதில் தவறேதும் இல்லை என்பதுதான் என்னுடைய வாதம்.

பூங்கோதையின் உறவினர் கையூட்டு பெறும்போது கையும் களவுமாக பிடிபட்டார் என்பது உண்மையானாலும் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளிவரும் வேளையில் விசரணை முடிவையே மாற்றியமைக்க வேண்டும் என்று பூங்கோதை பரிந்துரைத்திருந்தால் அது அயோக்கியத்தனம், பதவி துஷ்பிரயோகம், என்றெல்லாம் வாதிடலாம்.

ஆனாலும் அதை சுட்டிக்காட்டுவதற்கும் ஒரு யோக்கியதை வேண்டும். அது சுப்பிரமண்யம் சுவாமிக்கோ, அல்லது இன்று சட்டமன்றத்தில் கூப்பாடுபோடும் எதிர்கட்ட்சிகளுக்கோ அல்லது அரசு நிலத்தை ஆக்கிரமித்த கூத்தாடி நடிகருக்கோ எவ்வித அருகதையும் இல்லை.

பாவம் செய்யாதவன் முதல் கல்லை எறியட்டும் என்ற யேசுபிரானின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றன!

*******

08 மே 2008

வங்கிகளில் கணினி - புதிய முயற்சி

கடந்த பதினெட்டு மாத காலமாக எங்களுடைய வங்கி மற்றும் சென்னையைச் சார்ந்த லேசர் சாஃப்ட் (Laser Soft Infotech Chennai) மென்பொருள் நிறுவனத்தைச் சார்ந்த மென்பொருள் வல்லுனர் குழுவினரின் இடைவிடா முயற்சியில் உருவாக்கப்பட்ட மென்பொருள் (Centralised Banking Solution) கடந்த வாரம் எங்களுடைய வங்கியின் இரு சென்னைக் கிளைகளில் வெற்றிகரமாக சோதனை ஓட்டம் முடிந்து Live Run துவங்கியுள்ளது.

இது இந்திய வங்கி சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளது என்றாலும் மிகையாகாது என்றே கருதுகிறேன்.

ஏனெனில் இந்த மென்பொருள் பல ‘முதல்’ சாதனைகளை படைத்துள்ளது.

இதுதான்

1. இந்தியாவின் முதல் முழுமையான ஜாவா மொழியில் தயாரிக்கப்பட்ட வங்கி பரிவர்த்தனையில் தயாரிக்கப்பட்டுள்ள மென்பொருள்.
2. முதன் முறையாக ஒரு வங்கியும் ஒரு மென்பொருள் நிறுவனமும் இணைந்து தயாரிக்கப்பட்ட மென்பொருள்.
3. முதன் முறையாக ஒரு வங்கிக்கு தேவையான அனைத்து பரிவர்த்தனைகளையும் (Transaction Modules) உள்ளடக்கிய மென்பொருள் (Infosys, Iflex, TCS) போன்ற நிறுவனங்களுடைய மென்பொருள் பல வெளியார் நிறுவனங்களின் மென்பொருளுடன் Interface செய்யப்பட்டுள்ளது)

Oracle நிறுவனத்தின் உதவியுடன் நாட்டிலேயே முதன் முறையாக Oracle 10g Real Application Cluster (RAC) வெற்றிகரமாக நிறுவப்பட்டதும் ஒரு சாதனை எனலாம்.

இனி எங்களுடைய வங்கியின் மீதமுள்ள 350 கிளைகளிலும் இதை வெற்றிகரமாக நிறுவும் பணி துவங்கியுள்ளது.

ஒரு மென்பொருளை தயாரிப்பதை விடவும் பன்மடங்கு சிரமமானது அதை அனைத்து கிளைகளிலும் கொண்டு செல்வது. கிளைகளிலுள்ள ஒவ்வொரு பணியாளரையும் புதிய மென்பொருளை பயன்படுத்த பயிற்சிவிப்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கப்போகிறது.

பல இடைஞ்சல்களையெல்லாம் சந்தித்து வெளிவந்துள்ள இந்த மென்பொருள் இனி வரும் காலங்களில் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதுதான் இன்றைய ஆவல்.

மென்பொருளை வடிவமைத்து, தயாரித்து சோதனை செய்த காலங்களில் அனுபவித்த தடங்கல்கள், தோல்விகள், வெற்றிகள் எல்லாவற்றையும் முழுமையாக எழுத வேண்டும் என்று ஆவல்தான். ஆனால் அதற்கென நேரம் ஒதுக்குவது என்பது அடுத்த ஆறுமாத காலத்திற்கு இயலாதென்றே கருதுகிறேன்.

ஆனாலும் கடந்த சில மாதங்களாக இருந்த வேலைப்பளு சற்றே குறையும் என்று கருதுகிறேன்.

ஆகவே இப்போதுள்ளதுபோல் அல்லாமல் வாரம் இரு முறையாவது எழுதலாம் என்று நினைக்கிறேன்.

அடுத்து இப்போது பெரிய பிரச்சினையாக இருக்கும் விலைவாசி உயர்வு, இதை கையாள ரிசர்வ் வங்கி சமீபத்தில் எடுத்த முயற்சிகள் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஆவல்..

அடுத்த வாரம் திங்களன்று துவங்கி நான்கைந்து பாகங்களாக எழுதுகிறேன்.

******

இந்த பதிவுக்கு சம்பந்தமில்லாத ஒரு பி.கு: சமீப காலமாக குரலை உயர்த்தி சகட்டு மேனிக்கு அனைவரையும் குறை கூறி வரும் பா.ம.க. தலைவர் மருத்துவரே ஒரு பெரிய தலைவலியா என்ற ஒரு கருத்து கணிப்பை துவக்கியுள்ளேன். இதுவரை ‘ஆம்’ என்ற வாக்குகளே அதிகம் வந்துள்ளன.

உங்கள் வாக்கை தவறாமல் அளியுங்கள்.

16 ஏப்ரல் 2008

தடுமாறுகிறாரா மு.க?

காங்கிரஸ் கோமாளி அர்ஜுன் சிங்கைப் பற்றியும் அவருடைய இந்திராகாந்தி குடும்ப விசுவாசத்தைப் பற்றியும் நாடே அறியும்.

பல வருடங்களாகவே இ.காந்தி குடும்பத்தினரை அரசு தலைமைப் பதவிகளில் அமர்த்துவது என்ற ஒரே குறிக்கோளுடன் செயலாற்றி வருபவர் அவர். அவர் வேண்டுமானால் ராஹுல் காந்தியையோ அல்லது பிரியங்காவையோ நாட்டின் அடுத்த பிரதமராக கற்பித்துக்கொள்ளட்டும்.

நாட்டிலுள்ள காங்கிரஸ் அல்லாத தலைவர்களுள் எவரும் அர்ஜுன் சிங்கின் இந்த முட்டாள்தனமான ஆலோசனையைப் பொருட்படுத்தவே இல்லை.

ஆனால் மு.க? அதை வழிமொழிந்திருக்கிறார்.

இன்றைய தினம் காங்கிரசே அர்ஜுன்சிங்கின் இந்த பரிந்துரையில் கட்சிக்கு எவ்வித உடன்பாடும் இல்லை என்று அறிவித்துவிட்டது.

ஏற்கனவே ஹொகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை சோனியா காந்தி அவர்களுடைய அறிவுரையால்தான் நீங்கள் தள்ளி வைத்தீர்கள் என்று நாவடக்கம் இல்லாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் போட்டு உடைத்தார்.

அந்த விவகாரமே இன்னும் சூடு ஆறாத நிலையில் இப்படியொரு கோமாளித்தனமான பேச்சு உங்களிடமிருந்து.

மு.க., உங்களுக்கு இது தேவைதானா?

04 ஏப்ரல் 2008

வீட்டுக்கடன் - பிரச்சினைகள் (நிறைவுப் பகுதி)

அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் சப்-ப்ரைம் பிரச்சினை இந்தியாவையும் பாதிக்குமா என்றால் தற்சமயம் இருக்காது என்கின்றனர் பல பொருளாதார வல்லுனர்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்ட வீட்டுக் கடன்களில் நிலுவை விழுக்காடு சற்று ஏறுமுகமாகவே காணப்படுகிறது என்கின்றன வங்கிகள். மிக அதிக அளவில் வீட்டுக்கடன்கள் வழங்கும் பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ போன்ற வங்கிகள் தங்களுடைய மொத்த கடன்களில் 4 முதல் 5% விழுக்காடு வரை நிலுவையில் நிற்பதாக சமீபத்தில் தெரிவித்துள்ளன.

இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 2006-07ல் ஏற்பட்ட அதிரடி மாற்றங்கள்.

சமீபத்தில் வெளியான என்னுடைய
சந்தோஷமாக கடன் வாங்குங்க புத்தகத்தில் வீட்டுக் கடன்கள் என்ற தலைப்பில் வாடகை வீட்டில் வசிப்பதைவிட வங்கியிலிருந்து கடன் வாங்கி நமக்கென்று ஒரு வீட்டை வாங்குவது லாபம் என்று எழுதியிருந்தேன்.

உண்மைதான்.

குடியிருக்க ஒரு வீடு வேண்டும் என்பது நம் அனைவருடைய இலட்சியம் என்றால் மிகையாகாது. அதற்கு தேவையான தொகையை நம்முடைய மாத வருமானத்திலிருந்து சேமிப்பது என்று துவங்கினால் நம்முடைய ஆயுள் காலம் முழுவதும் போய்விடும் என்பதும் மறுக்கவியலாத உண்மை.

ஆனால் வங்கியிலிருந்து கடன் பெறுவதற்கு முன்பு நம்மால் மாதாமாதம் எவ்வளவு தொகை செலுத்த முடியும் என்பதை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.

நம்முடைய தகுதிக்கு மீறிய மாதத் தவணையை ஒப்புக்கொண்டுவிட்டால் சிக்கல்தான்.

ஆகவே கடனுக்காக வங்கியை அணுகுவதற்கு முன்பு நம்மால் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு மாதா மாதம் எவ்வளவு தொகையை இதற்கென ஒதுக்க முடியும் என்பதை கணிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு உங்களால் ரூ.15,000/- வரையிலும் மாதத் தவணையாக செலுத்த முடியும் என்று வைத்துக்கொள்வோம். 11% வட்டியுடன் கூடிய கடனை திருப்பிச் செலுத்த குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் தேவைப்படும். இந்த அடிப்படையில் எவ்வளவு கடன் கிடைக்கக் கூடும் என்று கணிக்க வேண்டும்.


இதற்கென இந்திய வங்கிகள் கழகத்தின்
வலைத்தளத்தில் ஒரு பிரத்தியேக கால்குலேட்டர் உள்ளது.

அதன்படி அதிகபட்ச கடனாக ரூ.15.30 லட்சங்கள் பெறலாம்.

சாதாரணமாக வங்கிகள் நம்முடைய நிகர மாத வருமானம் நாம் செலுத்தவிருக்கும் மாதத் தவணையை விட இரு மடங்கு இருத்தல் வேண்டும் என்று கூறுகின்றன. அதாவது மாதத் தவணை ரூ.15,000/- என்றால் நம்முடைய மாத நிகர வருமானம் குறைந்தபட்சம் ரூ.30000/- ஆக இருக்க வேண்டும். நிகர வருமானமே ரூ.30000/- இருக்க வேண்டுமென்றால் வருமான வரி மற்றும் இதர பிடித்தங்கள் சேர்த்து மாத வருமானம் குறைந்த பட்சம் ரூ.40,000/-லிருந்து ரு.50,000/- ஆவது இருக்க வேண்டும்.

இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் வட்டி விகிதம்.

முன்பெல்லாம் வங்கிகளுடைய வட்டி விகிதம் அவ்வப்போது மாறிக்கொண்டேயிருக்கும். அதாவது சந்தை நிலவரம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் கொள்கை மாற்றங்களுக்கேற்ப வட்டி விகிதங்கள் அதிகரிக்கவோ, குறையவோ வாய்ப்புண்டு. இதைத்தான் இப்போது floating rate என்கின்றனர்.

சமீபகாலமாக வங்கிகள் Fixed Rate என்கிற ஒரு புது முறையை அறிமுகப்படுத்தியுள்ளன. அதாவது விதிக்கப்படும் வட்டி விகிதம் குறிப்பிட்ட காலத்திற்கு மாறாது என்கின்றனர்.

ஆனால் இந்த ‘குறிப்பிட்ட காலம்’ என்பது வரையறுக்கப்படாத ஒன்றாக இருப்பதில்தான் சிக்கலே. அதாவது கடன் பெற்ற அடுத்த வருடமே கூட சந்தை நிலவரம் அடியோடு மாறிப்போகும் பட்சத்தில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வட்டி விகிதங்களை மாற்ற வேண்டிய நிர்பந்தத்திற்குள்ளாகின்றன வங்கிகள்.

இந்தியாவைப் பொருத்தவரை சந்தை நிலவரத்தை விட ரிசர்வ் வங்கியின் கொள்கை மாற்றங்கள்தான் கடன்களின் வட்டி விகிதத்தை அதிகம் பாதிக்கின்றன.

என்னுடைய மேற்கூறிய புத்தகத்தில் இந்திய வங்கிச் சந்தையில் ஏன் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விரிவாக விளக்கியுள்ளேன்.

சரி. வட்டி விகிதம் நிச்சயம் மாறித்தான் தீரும். அது நம்மால் கட்டுப்படுத்தவியலாத ஒன்று. அதை எப்படி எதிர்கொள்வது?

இன்று 9% லிருந்து 11% வரை கிடைக்கக் கூடிய கடன் அடுத்த இருபது ஆண்டுகளில் எந்த அளவுக்கு உயரும் என்பதை கணக்கிடுவதும் இயலாத காரியம். ஆனால் குறைந்தபட்சம் ஐந்தில் இருந்து ஆறு விழுக்காடுகள் வரையிலும் உயர வாய்ப்புண்டு என்று தோராயமாக கணிக்கலாம். அதாவது தற்போதைய வட்டி விகிதத்தில் 30லிருந்து 45 விழுக்காடு வரையிலும் உயரக்கூடும்.

அத்தகைய சூழலில் நாம் தற்போது செலுத்தும் மாதத் தவணையும் அதே விகிதத்தில் உயரக் கூடும். அதாவது மாதத் தவணை ரூ.15,000/-லிருந்து ரூ.19500/- முதல் ரூ.22,000/- வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதை நம்மால் சமாளிக்க முடியுமா என்பதை கணிக்க வேண்டும்.

தற்போதைய மாத வருமானத்தில் வீட்டுச் செலவுகள் போக மாதத் தவணையாக ரூ.15,000/- செலுத்திவிட முடியும் என்று கணித்து ரூ.15.00 லட்சம் கடன் பெறுவதில் தவறேதும் இல்லை.

ஏனெனில் நம்முடைய மாத வருமானம் கூடிக்கொண்டே போக வாய்ப்புள்ளது. குறிப்பாக கணினி துறையில் வருட வருமானம் 25லிருந்து 35 விழுக்காடு வரையிலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அந்த துறையிலுள்ளவர்களுக்கே வெளிச்சம்.

ஆனால் அத்தகைய வருமானம் உள்ளவர்களுடைய வாழ்க்கைத் தரமும் உயர்ந்துக்கொண்டே போகும் அல்லவா? மேலும் குழந்தைகளுடைய படிப்பு மற்றும் நம்முடைய மருத்துவ சிலவுகளும் உயரத்தானே செய்யும்!

சமீபத்திய கணிப்பின் படி நடுத்தர மற்றும் அதற்கு சற்றே உயர்ந்த குடும்பத்தில் (Middle and slightly upper middle class) எல்.கே.ஜியிலிருந்து கல்லூரி வரை ஒரு குழந்தைக்கு சராசரியாக குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் வரையிலும் தேவைப்படும் என்கிறார்கள். அதாவது மாதம் குறைந்தபட்சம் ரூ.7500/- இரண்டு குழந்தைகள் என்றால் ரூ.15000/-. இது பி.எ., பி.காம் போன்ற சாதாரண பட்டப் படிப்புக்கு மட்டும்தான். தற்போதைய நிலவரத்தில் நான்காண்டு பொறியியல் பட்டப்படிப்புக்கு மட்டும் சுமார் ரூ.5.00 லட்சம் தேவைப்படுகிறது என்றால். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு? நினைத்துப் பார்க்கவே மலைப்பாக உள்ளது. மருத்துவப் பட்டப் படிப்புக்கு, கேட்கவே வேண்டாம்.

ஆகவே வீட்டுக் கடன்கள் போன்ற நீண்டக்கால கடன்களை பெற நினைப்போர் நம்முடைய தற்போதைய நிதிநிலைமையை மட்டுமல்லாமல் கடனை வட்டியுடன் அடைத்துத் தீர்க்க வேண்டிய காலத்திற்குண்டான வரவு செலவையும் கணக்கிட்ட பிறகே எவ்வளவு தொகைக்கு கடன் பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இந்திய வீட்டுக்கடன் சந்தை விரிவடைந்து மூன்று நான்கு வருடங்களே ஆகியுள்ளன. அதாவது கணிசமான அளவு வீட்டுக்கடன்கள் 2004-05லிருந்துதான் வழங்கப்படுகின்றன. சுமார் 95% கடன்கள் இதுவரை சரிவர அடைக்கப்பட்டு வருகின்றன என்பதும் உண்மைதான்.

ஆனால் இதே நிலைமை தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகமே.

**********

02 ஏப்ரல் 2008

வீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள் 4

இந்தியாவில் வீடு வாங்க வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் பதினைந்து முதல் இருபத்தைந்து ஆண்டுகாலம் வரை நீடிக்கக் கூடியன.

இத்தகைய கடன்கள் கணிசமான தொகக்கு வழங்கப்படுவதால் உலகெங்கும் நீண்டகால கடன்களாகவே வழங்கப்படுகின்றன. அமெரிக்காவிலும் அப்படித்தான்.

ஆகவே இத்தகைய கடன்களில் மாதத்தவணைகள் சரிவர செலுத்தப்படாமல் இருக்கும் சூழலில் கடன் வழங்கியவர்கள் Foreclosure முறையில் கடனை வசூலிக்க முயல்கின்றனர். Foreclosure என்பது ஒரு கடனை அதன் காலத்திற்கு முன்பாகவே திருப்பி செலுத்த வேண்டும் என வங்கிகள் வாடிக்கையாளர் மீது எடுக்கும் சட்ட நடவடிக்கையாகும்.

ஒரு வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய மாதத் தவணையை ஒழுங்காக திருப்பிச் செலுத்தாத சூழலில் அவருடைய திருப்பிச் செலுத்தும் திறன் மீது (Repayment Capacity) சம்பந்தப்பட்ட வங்கி நம்பிக்கையிழந்துவிடும். அதாவது இனியும் காலம் தாழ்த்துவதால் வாடிக்கையாளரின் கடன் சுமை மேலும் அதிகரித்து கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்தின் மதிப்பிற்கு மேல் கடன் தொகை சென்றுவிடும் என்ற அச்சம் வங்கிகளுக்கு ஏற்படும் சூழலில் வேறு வழியில்லாமல் வங்கிகள் எடுக்கும் நடவடிக்கையே இது.

முன்பெல்லாம் இந்தியாவில் இந்த நடவடிக்கை அத்தனை விரைவில் எடுக்கப்படுவதில்லை. வாடிக்கையாளர்களுக்கு போதுமான கால அவகாசம் அளிப்பதுண்டு. ‘போதுமான கால அவகாசம்’ என்பது வாடிக்கையாளருக்கு வாடிக்கையாளர் வேறுபடும். ஒரு வாடிக்கையாளருடைய நிதிநிலைமை (Financial position), அவருக்கும் வங்கிக்கும் இடையிலுள்ள வர்த்தக உறவு (Business Relationship), கடன் தொகை (Loan Amount), நிலுவையிலுள்ள தொகை (Default Amount), இவ்விரண்டு தொகைகளுக்கும் இடையிலுள்ள விழுக்காடு (Percentage of the default to the loan amount/outstanding amount) என பல்வேறு விஷயங்களைப் பொருத்திருக்கும்.

இதற்கு முக்கிய காரணம் 2002ம் ஆண்டு வரை வங்கிகள் வழங்கும் கடன்களை வசூலிக்க நீதிமன்றம் சென்று வருடக்கணக்காக காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. உள்ளூரில் கடைநிலை நீதிமன்றத்திலிருந்து உயர்நீதிமன்றம் மற்றும் தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் வரையிலும் சென்று இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் வரையிலும் கடன் நிலுவையில் இருப்பதுடன் கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்படும் வீட்டை எவ்வித இடையூறும் இல்லாமல் கடந்தாரர் தொடர்ந்து அனுபவிக்கவும் முடிந்தது.

இதை தவிர்க்கும் முகமாக சொத்து மீதான கடன்களை (Secured Loans), அதாவது ஏற்கனவே செயலிழந்த கடன்கள் (Non performing assets) என கணிக்கப்பட்ட கடன்களை நீதிமன்ற தலையீடின்றி வசூலிக்க வகைசெய்யும் சட்டம் ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று வங்கிகள் இந்திய மத்திய அரசை கேட்டுக்கொண்டன.

வங்கிகளின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு 2002ம் ஆண்டு சர்ஃபேசி சட்டத்தை (Securitisation of Financial Assets and Enforcement of Security Interest Act) நடைமுறைப் படுத்தியது. இச்சட்டம் ஏற்கனவே செயலிழந்த கடன் என வங்கியின் புத்தகத்தில் கணிக்கப்பட்ட கடனை முழுவதுமாக திருப்பிச் செலுத்த சம்பந்தப்பட்ட கடந்தாரருக்கும் மற்றும் பிணைதாரர்களுக்கும் (Borrower and Guarantor) ஜப்தி அறிவிக்கை (notice) அனுப்பவும் அறிவிக்கை தியதியிலிருந்து அறுபது நாட்களுக்குள் அசல் மற்றும் வட்டித் தொகையை முழுவதுமாக திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் கடனுக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள சொத்தை வங்கி தன் பொறுப்பில் எடுத்துக்கொள்ளவும் வங்கிகளுக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக் கடன்களில் வீட்டுக் கடனும் அடங்கும். இச்சட்டத்தைப் பயன்படுத்தி தனிநபர் கடன்களை குறிப்பாக வீட்டுக் கடன்களை வசூலிப்பதில் ஏறக்குறைய எல்லா இந்திய வங்கிகளுமே முனைப்பாயுள்ளன என்றால் மிகையாகாது.

நாட்டின் மொத்த வங்கிகளில் எண்பது விழுக்காடு வங்கிகள் அரசு வங்கிகளாக இருக்கும் நம் நாட்டிலேயே இந்த நிலை என்றால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?

அமெரிக்காவில் Judicial Foreclosure, Nonjudicial Foreclosure என இருவகை நடவடிக்கைகள் உள்ளன.

சம்பந்தப்பட்ட அடகு பத்திரத்தில் (Mortgage Deed) கடனை முன்கூட்டியே வசூலிக்கும் உரிமை (Foreclosure rights) இல்லாதிருக்கும் பட்சத்தில் வங்கிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து, இறுதி தீர்ப்பு வரையிலும் காத்திருக்க வேண்டியிருக்கும். இதை Judicial Foreclosure என்கிறார்கள்.

மாறாக அடகு பத்திரத்தில் இத்தகைய உரிமை வங்கிக்கு வழங்கப்பட்டிருக்குமானால் சம்பந்தப்பட்ட வங்கி நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமலே சொத்தை ஏலத்திற்கு கொண்டு சென்றுவிடமுடியும். இதை Nonjudicial Foreclosure என்கிறார்கள்.

சாதாரணமாக சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வீட்டு அடகு பத்திரங்களும் நீதிமன்றங்களின் தலையீடு இல்லாமல் கடனை வசூலிக்கும் உரிமையை வங்கிகளுக்கு வழங்குவதாகவே இருக்கும்.

சாதாரணமாக வங்கிகள் இத்தகைய நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட கடந்தாரருக்கு அறிவிக்கைகளை அனுப்புவதுண்டு. அதாவது தொடர்ந்து மூன்று தவணைகள் நிலுவையில் நிற்கும் வரை வங்கிகள் தொடர்ந்து அறிவிக்கைகளை அனுப்புகின்றன. வங்கியிலிருந்து மூன்று அறிவிக்கைகள் கிடைத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு எதிராக மட்டுமே Foreclosure நடவடிக்கையில் வங்கிகள் இறங்குகின்றன.

இந்தியாவிலும் அப்படித்தான். தொடர்ந்து மூன்று தவணைகள் செலுத்தப்படாமல் இருக்கும் கணக்குகளே செயலிழந்த கணக்குகள் என கணிக்கப்பட்டு வசூல் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

Foreclosureஐ தவிர்ப்பது எப்படி?

இந்தியாவைப் பொருத்தவரை இது வங்கிக்கு வங்கி மாறுபடும். அரசுடமை வங்கிகள் மிக அதிக அளவிலான கடன்களை வழங்கி வருவததல் மூன்று தவணைகள் நிலுவையானதுமே வசூல் நடவடிக்கையில் இறங்கிவிடுவதில்லை. இதற்கு தகுதிவாய்ந்த மென்பொருள் (suitable software) இல்லாததும் அப்படியே இருந்தாலும் அதைக் கவனித்து உடனே நடவடிக்கை எடுக்கக் கூடிய ஆட்கள் (Manpower) இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.

ஆனால் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஒரு வங்கியின் அனைத்து வர்த்தகமும் கணினிமயமாக்கப்பட்டிருப்பதுடன் கடன் வழங்குவதைப் போன்றே நிலுவையில் நிற்கும் கடன்களை வசூலிக்கவும் அதற்கென பிரத்தியேக நிறுவனங்கள் இயங்கிவருவதால் அதிக காலதாமதமில்லாமல் வசூல் நடவடிக்கையை முடுக்கிவிட முடிகின்றது.

இந்த அதிரடி நடவடிக்கையை நிறுத்த முடியாவிடினும் சற்று தள்ளிப் போடுவதற்கு கடந்தாரர்களுக்கு சில வழிகள் இருக்கத்தான் செய்கின்றன.

அதில் மிகவும் பிரபலமானது Refinance முறை. சில சமயங்களில் நாம் எடுத்த கடனுக்குண்டான வட்டி விகிதமோ அல்லது காலக்கெடுவோ நமக்கு சாதகமில்லாமல் போகலாம். இத்தகைய கடன்களுக்காக வட்டி விகிதமும் மற்ற விதிகளும் நிரந்தரம் இல்லை என்பதால் நாம் கடன் எடுத்த பிறகு வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் அதை refinance முறையில் அதே வங்கியிலோ அல்லது வேறொரு வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ அதே சொத்தின் மீது புதிதாக கடன் பெற முயற்சிக்கலாம். ஏற்கனவே எடுத்த கடனில் திருப்பிச் செலுத்திய தொகையையும் சேர்த்தோ சேர்க்காமலோ புதிய கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்தியாவில் விதிக்கப்படும் வட்டி விகிதம் நாம் பெறவிருக்கும் கடன் தொகையைச் சார்ந்திருப்பதால் ஏற்கனவே செலுத்தியுள்ள தொகையைக் கழித்துவிட்டு மீதமுள்ள தொகைக்கு புதிய கடன் பெறுவதன் மூலம் வட்டிச் சுமையை கணிசமாக குறைக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் இதை takeover முறை என்கிறார்கள். அதாவது ஒரு வங்கி வழங்கியுள்ள கடனை வேறொரு வங்கி எடுத்துக்கொள்வது. ஆனால் takeover சமயத்தில் சம்பந்தப்பட்ட கடன் செயலிழந்த கடனாக இருக்கலாகாது. ஏற்கனவே வாராக்கடனாக கணிக்கப்பட்டிருப்பதை யாரும் எடுத்துக்கொள்ள முன்வரமாட்டார்கள்.

எத்தனை முயற்சித்தும் வேறொரு வங்கி/நிறுவனத்தில் கடன் எடுக்க முடியாத சூழலில் என்ன செய்யலாம்?

அமெரிக்க வங்கி சந்தையில் Mortgae Forbearance Agreement என்ற ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. அதாவது சம்பந்தப்பட்ட சொத்தை வங்கி எடுத்துக்கொள்ளாமலிருக்க வங்கி மற்றும் கடந்தாரருக்கு இடையில் ஒப்பந்தம் செய்துக்கொள்வது. கடந்தாரரின் நிதிநிலைமை விரைவில் சீரடைந்துவிடும் என்று வங்கி கருதுகிறபட்சத்தில் இத்தகைய ஒப்பந்தத்தை செய்துக்கொள்ள கடந்தாரர் சமர்ப்பிக்கும் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதுண்டு. ஆனால் இத்தகைய சலுகை சப்-ப்ரைம் கடந்தாரருக்கு கிடைப்பது மிகவும் அரிது.

இதுவும் சரிவரவில்லை. வங்கி நடவடிக்கை எடுத்தே தீர்வது என்ற முடிவில் இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட கடந்தாரர் Deed In Lieu of Foreclosure என்ற முறையை முயற்சிக்கலாம்.

அதாவது கடன் வழங்கிய வங்கிக்கே சொத்தை எழுதிக் கொடுத்துவிடுவது. இதன் மூலம் சொத்தை பொது ஏலத்திற்கு செல்ல விடாமல் தடுக்கலாம்.

இதனால் கடந்தாரருக்கு என்ன லாபம்?

1. வீட்டின் மதிப்பு சந்தையில் ரூ.1.00 கோடி என வைத்துக் கொள்வோம். அதன் மீதுள்ள கடன் வட்டியுடன் சேர்த்து ரூ.60 லட்சம் நிலுவையிலுள்ளது. வீட்டை பொது ஏலத்தில் கொண்டு வரும் வங்கி நிலுவையிலுள்ள தொகை மட்டும் கிடைத்தால் போதும் என்றே எண்ணும். மேற்கூறிய ஒப்பந்தம் வழியாக வங்கிக்கே சொத்தை மாற்றிக் கொடுக்கும் பட்சத்தில் சந்தை விலைக்கே அதை விற்க முடியும்.
2. நம்முடைய சொத்து பொது ஏலத்திற்கு வந்து அதன் மூலம் நம்முடைய பெயர் சந்தையில் கெடுவதை தவிர்க்க முடியும்.
3. சாதாரணமாக சொத்தை ஏலத்திற்கு கொண்டு செல்வதற்கான மொத்த செலவையும் வங்கிகள் கடந்தாரரிடமிருந்தே வசூலிக்கும். இதையும் தவிர்க்க முடியும்.
4. இறுதியாக வங்கி-வாடிக்கையாளர் இடையிலுள்ள உறவு சீராக இருக்கும் நிலையில் அதே சொத்தை வங்கியிடமிருந்து நீண்ட கால குத்தகைக்கு எடுக்கவும் வகையுண்டு (Long Term Lease).

இந்த சப்-ப்ரைம் நிலமை நம் நாட்டிலும் வர வாய்ப்புள்ளதா?

இதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்.

28 மார்ச் 2008

வீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள்

அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கிய பல பெரும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இன்று திவாலாவாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பிரச்சினை அமெரிக்க பொருளாதாரத்தையே பாதித்துள்ளது எனவும் கூறலாம்.

ஏன் இந்த நிலமை?

நம்முடைய நாட்டில் ஒரு வங்கி வழங்கியுள்ள வீட்டுக் கடன்கள் வாராக் கடன்களாகிவிடும் பட்சத்தில் அதன் விளைவாக ஏற்படும் இழப்பை சம்பந்தப்பட்ட வங்கி மட்டுமே ஏற்கவேண்டியிருக்கும். அதன் விளைவாக அந்த வங்கியில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள், சேமிப்பை இட்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களும் மறைமுகமாக பாதிக்கப்பட வாய்ப்புண்டு.

ஆனால் அமெரிக்கா மற்றும் பல மேலை நாடுகளில் இத்தகைய கடன்களை செக்யூரிட்டைசேஷன் (Securitisation) என்ற முறையில் விற்றுவிட முடிவதால் கடன்களை வசூலிக்க முடியாத நிலை ஏற்படும்போது கடன் வழங்கிய வங்கி/நிதி நிறுவனம் மட்டுமல்லாமல் அதை வாங்கிய அனைத்து நிறுவனங்கள்/முதலீட்டாளர்களுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

செக்யூரிட்டைசேஷன் என்றால் என்ன?

ஒரு வங்கி ரூ.10 லட்சம் வீதம் நூறு வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக் கடன் வழங்கியுள்ளது என வைத்துக்கொள்வோம். மொத்த கடன் தொகை ரூ.10 கோடி. சாதாரணமாக வீட்டுக்கடனுக்கு ஈடாக வாடிக்கையாளர் வாங்கிய வீடு அடகு வைக்கப்படும். அந்த வீட்டின் மதிப்பில் 75 முதல் 80 விழுக்காடு வரையிலுமே வங்கிகள் கடன் வழங்குவதுண்டு. ஆகவே ரூ.10 கோடி வீட்டுக் கடனுக்கு ஈடாக வைக்கப்பட்டுள்ள சொத்தின் மதிப்பு சுமார் ரூ.15 கோடி. அதாவது வழங்கப்பட்ட மொத்த கடன் தொகைக்கும் மேல் சொத்து அடகு வைக்கப்பட்டுள்ளது என்று பொருள்.

இந்த கடன்களை வழங்கியுள்ள வங்கி மேலும், மேலும் இத்தகைய கடன்களை வழங்க வேண்டுமென்றால் ஏற்கனவே வழங்கியுள்ள கடன்களிலிருந்து வசூலிக்கப்படும் தொகையை மட்டுமே சார்ந்திருக்க முடியும். உதாரணத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரூ.10 கோடி கடனில் மாதா மாதம் ரூ.50 லட்சம் வசூலித்தால் அதை மீண்டும் வேறு வாடிக்கையாளர்களுக்கு கடனாக வழங்க பயன்படுத்த முடியும். ஆனால் நாளடைவில் வழங்கிய கடன்களில் பெரும்பாலானவை வாராக் கடன்களாகிவிடும் சூழலில் வங்கி மேற்கொண்டு கடன் ஏதும் வழங்க முடியாமல் முடங்கிப் போய்விடும்.

ஆகவே ரூ.10 கோடி கடனையும் அதற்கெனவே இயங்கிவரும் பெரிய வங்கி/நிதி நிறுவனங்களுக்கு விற்று விட முயற்சி செய்யும். விற்பவர் Mortgage Originator என்றும் வாங்குபவர் Aggregator என்று அழைக்கப்படுவர். இந்த முறையில் With Recourse, Without recourse என்ற இருவகை வழிகள் உள்ளன.

With Recourse முறையில் கடன்களை வாங்கும் வங்கி (Aggregator) அந்த கடன்களை விற்ற வங்கியின் (Mortgage Originator) வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்க முடியாமல் போன தொகையை கடனை விற்ற வங்கியிடமிருந்து வசூலித்துவிட முடியும். இதன் மூலம் வாங்கியவர் இழப்பை தவிர்த்துவிடமுடியும்.

Without Recourse முறையில் வாங்கிய வங்கி இழப்பையும் சேர்த்து சந்திக்க நேரிடும்.

ஆகவே இரண்டாவது முறையில் கடனை விற்கும் வங்கி சற்று விலை குறைத்தே விற்க முடியும்.

அதாவது ரூ.10 கோடி கடனை முதல் முறையில் ரூ.9 கோடிக்கு விற்க முடியும் என்றால் இரண்டாவது முறையி. ரூ.7.50 கோடிக்கே விற்க முடியும்.

கடன்களை விற்கும் வங்கி அதன் மூலம் கிடைத்த தொகையை பயன்படுத்தி மீண்டும் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க முடியும்.

சரி. இந்த கடனை வாங்கிய வங்கியும் மொத்த கடன்களும் வசூலாகும் வரையிலும் காத்திருக்க முடியாதல்லவா?

ஆகவே Aggregator வங்கி இந்த கடன்களுடைய மொத்த மதிப்பிற்கு கடன் பத்திரங்களை (Bonds) தயாரித்து இதற்கென சந்தையில் இயங்கும் முதலீட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து முதலீட்டாளர்கள் சந்தையில் (Capital Market) விற்பனைக்கு அளிக்கும். இத்தகைய கடன் பத்திரங்களுக்கு (Mortgage Based Securities) பின்னால் மொத்த தொகைக்கு ஈடாக சொத்து அடகு வைக்கப்பட்டிருந்தால் மட்டுமே அவை சந்தையில் விலை போக வாய்ப்புள்ளது. வீட்டுக் கடன்களுக்கு ஈடாக அடகு வைக்கப்படும் சொத்தின் மதிப்பு சந்தையில் ஏறிக்கொண்டே போகும் என்பதால் இந்த பத்திரங்களில் முதலீடு செய்ய தனிநபர் மற்றும் முதலீடு நிறுவனங்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதுண்டு. அதாவது வீட்டுக் கடன்களை பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களுடைய கடனை சரிவர திருப்பிச் செலுத்திக்கொண்டிருக்கும் வரை!

சாதாரணமாக வங்கிகள் வழங்கும் மொத்த கடன் தொகையில் ஐந்திலிருந்து பத்து விழுக்காடுவரை திருப்பிச் செலுத்தப்படாமல் போனாலும் அதனால் சந்தையில் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் பத்திரங்களுக்கு அடிப்படையாக உள்ள கடன்களை பெற்ற வாடிக்கையாளர்களுள் பலர் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களாக இருந்து அதில் பெரும்பாலோனோர் தங்களுடைய மாதத் தவணைகளை செலுத்த தவறினால் கடன் பத்திரங்களுடைய மதிப்பும் பாதிக்கப்படும்.

ஏன்?

மேற்கூறிய உதாரணத்தில் ரூ.10 கோடி கடன்களை ரூ.9 கோடிக்கு வாங்கிய வங்கி ரூ.8 கோடிக்கு கடன் பத்திரங்களை விற்பனை செய்தது என வைத்துக்கொள்வோம்.

ரூ.10 கோடி கடனை பெற்ற வாடிக்கையாளர்களுள் 50 விழுக்காடு சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள். இதில் 40 விழுக்காடு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான நிலுவை நிற்கிறது, அதாவது சுமார் ரூ.4 கோடி. இந்த தொகைக்கு ஈடாக அடகு வைக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி மதிப்புள்ள வீடுகள் foreclosure முறையில் ஏலத்திற்கு வருகிறது. ஏலத்தில் நிச்சயம் ரூ.5 கோடி கிடைக்க வாய்ப்பில்லை. அப்போதுள்ள சந்தை நிலவரத்தில் ரூ.3 கோடி கிடைத்தாலே லாபம் என வைத்துக்கொள்வோம். ஆகவே வங்கிக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என இந்த கடன் பத்திரங்களை அவ்வப்போது மதிப்பிடும் நிறுவனம் (Rating Agencies) அறிவிக்கும். ரூ.4 கோடி கடனில் ரூ.1 கோடி இழப்பு என்றால் 25% இழப்பு என்று கணிக்கப்படும். இது சந்தையில் புழக்கத்திலுள்ள கடன் பத்திரங்களின் மொத்த மதிப்பில் 25% குறையும். அதாவது ரூ.1000 முதலீடு செய்த வாடிக்கையாளாருக்கு ரூ.250 இழப்பு! வாரக்கடன்களின் விழுக்காடு அதிகரிக்க, அதிகரிக்க பத்திரங்களின் மதிப்பு வீழ்ந்துக்கொண்டே போகும்.

அமெரிக்க சந்தையில் தற்போது புழக்கத்திலுள்ள இத்தகைய கடன் பத்திரங்களின் மொத்த மதிப்பு சுமார் $ 7.50 பில்லியன் டாலர்களாம்! இதில் 25% இழப்பு என்றால்!! இதில் பெரிய அளவில் முதலீடு செய்து இழப்பை சந்தித்ததில் சிட்டி பேங் நிறுவனங்களும் (Citi Bank Group) அடக்கம். இதன் விளைவாக சமீபத்தில் அந்த வங்கியின் தலைவரே பதவி இழக்க நேரிட்டது.

இதில் பெருமளவு முதலீடு செய்தவர்கள் வங்கிகளும் நிதி நிறுவனங்களும்தான். நம்முடைய வங்கிகளில் சிலவும் இவற்றில் முதலீடு செய்து பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன என்பது உண்மை. தன்னுடைய இழப்பை ஒரேயொரு புதிய தலைமுறை வங்கி மட்டுமே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளது.

இந்த வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் இழப்பு அவர்களுடைய பங்கின் விலையையும் (Share price) பாதிக்கும் அல்லவா? இதன் விளைவு பங்கு சந்தை சரிவு. இதன் விளைவு சம்பதப்பட்ட நாட்டின் பொருளாதார பாதிப்பு.

சரி. Foreclosure என்றால் என்ன, அதன் விளைவுகள் மற்றும் அதை எப்படி தவிர்ப்பது?

அதை அடுத்த இடுகையில் பார்க்கலாம்...

27 மார்ச் 2008

வீட்டுக்கடன் -சப் ப்ரைம் பிரச்சினைகள்

அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் பொருளாதாரத்தில் நடுத்தர மற்றும் அதற்குக் கீழே இருப்பவர்கள். இதில் பலர் கருப்பு இணம் மற்றும் பிற நாடுகளில் இருந்து குடியேறியவர்கள். இவர்களுள் இந்தியர்களும் அடக்கம்.

இவர்களுடைய வருமானம் இவர்கள் ஈட்டும் மாத ஊதியம் மட்டுமே. ஆகவே அங்குள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கணிப்பில் மிகக் குறைந்த creditworthiness உள்ளவர்கள் இவர்கள். நம்முடைய வங்கிகளும் மாத வருமானத்தை மட்டுமே நம்பியுள்ளவர்களை இப்படித்தான் கணிக்கிறார்கள்.

இத்தகையோர் தங்களுடைய கடன் தேவைகளுக்காக - குறிப்பாக வீட்டுக் கடன் வாங்க - நேரடியாக வங்கிகளை அணுகும் பட்சத்தில் வங்கி மேலாளர்கள் ஏதாவது ஒரு காரணம் காட்டி அதை நிராகரித்துவிட வாய்ப்புண்டு. மேலும் நம் நாட்டில் உள்ளதுபோன்று பிராஞ்ச் பேங்கிங் (Branch Banking) முறை அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் வழக்கத்தில் இல்லை. அதாவது தங்களுடைய வங்கித் தேவைகளுக்காக வங்கிக் கிளைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்களுடைய எண்ணிக்கை மிக, மிகக் குறைவு. அங்குள்ளோர் பெரும்பாலும் வலைத்தளங்கள் வழியாகவே (Internet Banking) தங்களுடைய வங்கிக் கணக்கில் பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்வது வழக்கம். அப்படியே பணம் தேவைப்பட்டாலும் இருக்கவே இருக்கிறது ATM வசதிகள். அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க Credit மற்றும் Debit cardகள்.

ஆகவே வங்கி மேலாளர்-வாடிக்கையாளர் சந்திப்புக்கு அவசியம் இருப்பதில்லை.

எனவேதான் பெரும்பாலான சப்-ப்ரைம் எனப்படும் நடுத்தர மற்றும் மாத ஊதிய வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து கடன் பெற இடைத்தரகர்கள் மற்றும் விற்பனையாளர்களை அணுக வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். இடைத்தரகர்களுடைய முழுநேர அலுவலே இத்தகைய வாடிக்கையாளர்களை தங்களுடைய பேச்சுத் திறமையால் மயக்கி கடன்பெற வைப்பதுதான். இவர்கள் பரிந்துரைக்கும் வாடிக்கையாளருக்கு கடன் வழங்கப்படும் பட்சத்தில் வங்கிகளிடமிருந்தும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரிடமிருந்தும் வழங்கப்படும் கடன் தொகையில் ஒரு கணிசமான விழுக்காடு கமிஷன் இவர்களுக்கு கிடைத்துவிடும் என்பதால் வாடிக்கையாளர் சம்மதிக்கும் வரை எத்தனைமுறை வேண்டுமானாலும் அவர்களை சந்திக்க தயங்கமாட்டார்கள். (இந்த போக்கு நம்முடைய நாட்டிலும் சமீபகாலமாக பரவி வருகிறது. என்னுடைய கைத்தொலைபேசியில் இன்று வந்த குறுந்தகவல் 'நீங்கள் 9% வட்டியில் ரூ.45,000/- கடன் பெற தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். செக்யூரிட்டி, ஜாமீன் ஏதும் தேவையில்லை. மேலும் தகவலுக்கு இந்த தொலைபேசி எண்ணை சுழற்றவும். T&C Applicable!!' தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசியை அழைத்தால்தான் தெரியவரும் அவர்களுடைய விதிமுறைகள். அதாவது அவர்களுடைய 'T&C'! இத்தகைய அழைப்பு குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேருக்கு சென்றிருக்கும். அதில் குறைந்தபட்சம் ஐந்தாயிரம் விழுந்தால் வங்கியின் நோக்கம் நிறைவேறிவிடும்.)

சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்கிற ஆவல் நம் அனைவருக்கும் இருக்கும் அல்லவா? இந்த ஆவலை தூண்டிவிடுவதுதான் இடைத்தரகர்களுடைய முதல் வேலை. அதற்காக உண்மைக்கு புறம்பாக பேசவும் வாக்குறுதிகளை அள்ளி வீசவும் இவர்கள் தயங்குவதில்லை.

உதாரணத்திற்கு முன்பெல்லாம் வங்கிகளுடைய கணிப்பில் ஒருவர் கடனுக்காக மாதாமாதம் செலுத்த வேண்டிய தவணை (Monthly Installment) அவருடைய நிகர வருமானத்தில் (Net Pay அல்லது Take Home Pay) ஐம்பது விழுக்காடுக்கு மேல் இருக்கலாகாது. அதாவது மாதத் தவணை ரூ.100 என்றால் நிகர மாத வருமானம் குறைந்தபட்சம் ரூ.200 ஆக இருக்க வேண்டும். சாதாரணமாக நம்முடைய நாட்டில் ஒருவர் திருப்பிச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை முதல் தவணை முதல் இறுதித் தவணை மாறவே மாறாது. ஒருவருக்கு வழங்கப்படும் கடன் தொகை (ரூ.10000/-) 12 விழுக்காடு வட்டியுடன் மூன்று வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்தப்படவேண்டும் என்று வைத்துக்கொள்வோம். ரூ.10000/- கடனுக்கு மூன்று வருடங்களுக்கு 12% வட்டி ரூ.3,600/-. அசலும் வட்டியும் சேர்த்து ரூ.13,600/-. இதை 36 தவணையில் திருப்பிச் செலுத்த வேண்டும். மாதம் ரூ.380/-. இது முதல் மாதம் முதல் 36வது மாதம் வரை மாறாது. 36வது மாதம் கணக்கில் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை மீதம் இருக்கும் பட்சத்தில் (இது பெரும்பாலும் தவணை குறிப்பிட்ட தியதிகளில் செலுத்த தவறும் பட்சத்தில் அபராத வட்டி (Penal Interest) விதிக்கப்படுவதால் வருவதுண்டு) அதை முழுவதுமாக திருப்பிச் செலுத்தி கணக்கை முடிக்க வேண்டியிருக்கும்.

ஆனால் ஒருவருடைய மாத வருமானம் வருடக் கணக்கில் அப்படியே இருக்க வாய்ப்பில்லை அல்லவா? வருமானம் உயர, உயர அவருடைய திருப்பிச் செலுத்தும் திறனும் (Repayment Capacity) அதிகரிக்கத்தானே செய்யும். ஆகவே சமீப காலமாக Adjustable Rate of Repayment (ARR) என்கிற முறை வங்கிகளில் பிரபலமாகி வருகிறது. இதன் அடிப்படையில் மாத வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க தவணையும் அதிகரித்துக்கொண்டே போகும். இந்த முறை சரிவர கடைபிடிக்கப்பட்டால் அல்லது இதிலுள்ள சிக்கல்கள் கடன் வழங்கப்படும் சமயத்தில் வாடிக்கையாளருக்கு முழுவதுமாக தெரிவிக்கப்பட்டால் எந்த ஒரு வாடிக்கையாளரும் பெரும் நெருக்கடிக்குள்ளாக வாய்ப்பில்லை.

இதை சற்று விளக்கமாக பார்ப்போம்.

எனக்கு தெரிந்த பல உறவினர், நண்பர்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சப்-ப்ரைம் சிக்கலில் தங்களுடைய வீடுகளை இழந்துள்ளார்கள். ஆகவே ஒரு அமெரிக்க வாழ் இந்திய தம்பதியரைப் பற்றியே பார்ப்போம்.

கணவர் அமெரிக்க கணினி நிறுவனம் ஒன்றில் கடந்த பத்தாண்டுகளாக பணியாற்றுகிறார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு சிறிய குடியிருப்பை வாங்கினார். அவருக்கு கடன் பெற உதவிய இடைத்தரகர் அவருடைய மாதத் தவணை (ARR) 'துவக்கத்தில்' மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையும் பிறகு 'சற்று கூடும்' என்றும் கூறியிருக்கிறார். துவக்க காலத்தில் செலுத்த வேண்டிய மாதத் தவணை அவருடைய நிகர வருமானத்தில் ஐம்பது விழுக்காடுக்கும் சற்று கூடுதல் என்றாலும் கணவர், மனைவி மற்றும் இரண்டு மாதக் குழந்தை என்ற சிறிய குடும்பத்திற்கு அது அத்தனை பாரமாக இருக்காது என்று நினைத்து மேற்கொண்டு எதையும் விசாரிக்காமல் கடனைப் பெற்று வீட்டில் குடியேறினார்.

பிறகுதான் தெரிந்தது 'துவக்கத்தில்' என்று தரகர் கூறிய காலம் இரண்டே வருடங்கள்தான் என்றும் 'சற்று கூடும்' என்றது மாதத் தவணை இரட்டிப்பாகும் என்பது. துவக்க மாதத் தவணையே அவருடைய நிகர ஊதியத்தில் சுமார் 60 விழுக்காடு என்றால் அது இரட்டிப்பானால்! கையில் கிடைக்கும் அனைத்தும் தவணை செலுத்தவே போய்விட்டது. கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய மீதமுள்ள பதினைந்து ஆண்டுகள் இனியும் எத்தனை முறை இது கூடுமோ என்று தெரியாமல் கதிகலங்கிப் போயிருக்கிறார் அவர்!!

அவருடைய கடன் விதிமுறைகளின்படி தொடர்ந்து மூன்று தவணைகள் செலுத்த முடியாமல் போனாலே அவருக்கு கடனளித்த நிறுவனம் foreclosure அறிவிக்கை அனுப்பிவிடும். அதுவரை அடைத்த தொகையையும் இழந்து, வீட்டையும் இழந்து நிற்க வேண்டிய சூழல் வராது என்று சொல்வதற்கில்லை.

இதுதான் சப்-ப்ரைம் சிக்கலில் தவிக்கும் பலருடைய சூழல்.

சரி இது எப்படி கடனளித்த நிறுவனங்களையே பாதிக்கும் அளவுக்கு இத்தனை பெரிய பிரச்சினையானது?


அடுத்த இடுகையில் பார்ப்போம்...

26 மார்ச் 2008

வீட்டுக்கடன் - பிரச்சினைகள்

அமெரிக்காவையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சப்-ப்ரைம் தொல்லை இந்தியாவையும் பாதிக்க வாய்ப்புள்ளது.

முதலில் இந்த சப்-ப்ரைம் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.

'ப்ரைம் (Prime)' என்றால் முதன்மை என்றும் பொருள்கொள்ளலாம். வங்கிகள் அவர்கள் வழங்கும் கடனை வட்டியுடன் குறித்த காலத்தில் முழுமையாக செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களை Prime Borrowers என்கிறார்கள். அதாவது கடன் வாங்க முழுத் தகுதியுள்ளவர்கள்! ஆங்கிலத்தில் இந்த தகுதியை creditworthiness என்கிறோம்.

இத்தகைய 'தகுதி' உள்ளவர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து எளிதில் கடன் பெறமுடியும் என்பது மட்டுமல்லாமல் சலுகை வட்டி விகிதத்தில் கடன் பெறவும் முடியும். மேலும் கடனைத் திருப்பிச் செலுத்த விதிக்கப்படும் நியதிகளும் அத்தனை கடுமையானதாக இருக்காது. இவர்களுக்கென நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம்தான் prime lending rate (PLR) எனப்படுகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் எல்லா வங்கிகளும் தங்களுடைய prime lending rateஐ தங்களுடைய வலைத்தளத்தில் பகிரங்கமாக அறிக்கையிடவேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் நியதிகளுள் ஒன்று.

வங்கிகள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களையும் (அதாவது கடன் பெறுபவர்களை) அவர்களுடைய நிதி நிலைமையை ஆய்வு செய்து வகைப்படுத்துவதுண்டு. மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் No.1 என்றும் சற்றே தரம் குறைந்தவர்களை No.2, No.3 என வகைப்படுத்துவார்கள். உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களை SBI 1ல் துவங்கி SBI 10 வரை வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கும் PLR +1, PLR +2, 3, 4 என நிர்ணயிக்கப்படும். மிக, மிக சிறந்த வாடிக்கையாளர்களுக்கு PLR விகிதத்திற்கு கீழேயும் வழங்கப்படுவதுண்டு, அதாவது PLR -1, PLR -2. ஒரு வங்கியின் அறிவிக்கப்பட்ட PLR 12 விழுக்காடு என்றால் இவர்களுக்கு 10 அல்லது 11 விழுக்காடு (PLR-2, PLR-1) என நிர்ணயிக்கப்படும். இதை below PLR அல்லது BPLR என்பார்கள். இத்தகைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மிகப் பெரிய நிறுவனங்களாகவே இருக்கும். ஒரு வாடிக்கையாளரின் கடன் பெறும் திறன் (creditworthiness) குறையக் குறைய அவருடைய தரம் (rating) குறைந்துக்கொண்டே போகும். அவருக்கு வழங்கப்படும் கடனின் வட்டி விகிதம் கூடிக்கொண்டே போகும்.

நம்முடைய நாட்டில் PLR +5 என வட்டி விகிதம் விதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் (உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியில் SBI 7 என்ற ரேட்டிங்குக்கு மேலுள்ளவர்கள்) கடன் பெறுவது மிகச் சிரமம். அப்படியே கிடைத்தாலும் அவர்களுக்கு விதிக்கப்படும் வட்டியும் குறைந்தபட்சம் 16 அல்லது 17% இருக்க வாய்ப்புண்டு. இத்தகையோருக்கு நீண்ட கால கடன்களும் கிடைக்க வாய்ப்பில்லை. இத்தகையோரைத்தான் அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள் என்கிறார்கள். உதாரணத்திற்கு BPLR மற்றும் PLR விகிதத்தில் கடன் பெறுபவர் மிகச் சிறந்த அல்லது மிக, மிகச் சிறந்த வாடிக்கையாளர் என்றால் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களை மோசமான, மிக மோசமான, மிக மிக மோசமான என வகைப்படுத்தலாம். ஒரு வங்கியின் PLR 12 விழுக்காடு என்றால் கடைநிலை வாடிக்கையாளர் எனப்படும் மிக, மிக மோசமான வாடிக்கையாளர் சுமார் 19 - 20 விழுக்காடு வரையிலும் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். மேலும் மிக, மிக சிறந்த வாடிக்கையாளர் ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை மிக, மிக மோசமான வாடிக்கையாளர் மூன்று வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். மிக மிகச் சிறந்த வாடிக்கையாளர் எவ்வித செக்யூரிட்டி மற்றும் தனிநபர் ஜாமீன் இல்லாமல் கணிசமான தொகையை கடனாக பெற முடியுமென்றால் மிகச் சிறிய கடனுக்கும் சொத்து மற்றும் தனிநபர் ஜாமீன் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பார் சப் ப்ரைம் வாடிக்கையாளர்.

அமெரிக்காவில் இத்தகையோர் வங்கியிலிருந்து கடன் பெற வேண்டுமென்றால் இடைத்தரகர்கள் வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது. இந்தியாவிலும் இந்த நிலை பரவி வருகிறது. குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகள் எனப்படும் ICICI, AXIS, HDFC இதற்கென்றே பிரத்தியேக விற்பனையாளர்களை (Selling Agents) நியமித்துள்ளன.

அமெரிக்கா போன்ற பல மேலைநாடுகளில் வங்கிகளுக்கு நிகராக பல பெரிய நிதிநிறுவனங்களும் Retail Lending அல்லது Personal Lending எனப்படும் தனிநபர் கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ளதால் இந்த நிறுவனங்களுக்கிடையில் கடும் போட்டி ஏற்படுவதுண்டு. மேலும் வீட்டுக் கடன் வழங்குவதற்கென பல பிரத்தியேக Mortgage Loan வங்கிகள்/நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்களால் நியமிக்கப்படும் இடைத்தரகர்கள் அல்லது விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் கவரும் விதத்தில் பேசுவதற்கெனவே பயிற்சிபெற்றவர்களாக இருப்பார்கள்.

இன்று அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் சப்-ப்ரைம் பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணம் இந்த இடைத்தரகர்கள்தான் என்றால் மிகையாகாது.

இதன் பின்னணியை அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

தொடரும்..

10 மார்ச் 2008

விவசாயக் கடன் தள்ளுபடி - விளைவுகள்

'குழந்தைகள், ஏட்டில் கணக்கை தவறாக எழுதினால் அதை அழித்து மாற்றிவிடுகிறோம். நோட்டில் கணக்கை தவறாக எழுதினால் ரப்பர் வைத்து அழித்து விடுகிறோம். அதே மாதிரி, விவசாயிகளின் கடன்களை ஒரு முறை அழித்துவிட்டு, அவர்களுக்கு புதுவாழ்வு தரக்கூடாதா?'

இது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் கேள்வி.

விவசாயிகளுக்கு புதுவாழ்வு தரவேண்டும் மத்திய அரசு நினைப்பதில் தவறேதும் இல்லை. அதுவும் தேர்தல் நெருங்கும்போது.

ஆனால் ரூ.60000/- கோடி சுமையை வங்கிகளின் தலையில் சுமத்த வேண்டுமா என்பதுதான் கேள்வி.

புதுவாழ்வு தர நினைப்பது அரசு. ஆகவே அதற்கு தேவையான தொகையையும் பட்ஜெட்டில் ஒதுக்கியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் வங்கிகளை நீங்கள் வழங்கிய கடனை உங்கள் புத்தகங்களிலிருந்து ரப்பர் கொண்டு அழித்துவிடுங்கள் என்றால் அது ஒரு பொறுப்பற்ற செயல் என்றே சொல்ல தோன்றுகிறது.

1980-90களில் லோன் மேளா நடத்தில சீரழிந்துப்போன வங்கிகளின் - குறிப்பாக இந்தியன் வங்கி போன்ற அரசு வங்கிகள் - முதலீட்டை மேம்படுத்த அரசே மான்யமாக ஆயிரம் கோடிக்கும் மேலாக ஒதுக்க வேண்டியிருந்ததை சிதம்பரம் அவர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. வாராக் கடனை எழுதி தள்ளி தங்களுடைய முழு முதலீட்டையுமே இழந்து நின்ற அரசு வங்கிகள் ஒன்று, இரண்டில்லை. க்டந்த பத்து ஆண்டுகளில் இதுவரை சுமார் ரூ.20000/- கோடிக்கு மேலாக அரசு வங்கிகளின் முதலீட்டை வலுப்படுத்த மத்திய அரசு ஒதுக்க வேண்டி வந்ததையும் சிதம்பரம் மறந்திருக்க வாய்ப்பில்லை.

அப்படியிருந்தும் இப்போது எழுதி தள்ளவேண்டிய ரூ.60000/- கோடி கடனை வங்கிகள் மீது சுமத்துவது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம் என்று விளங்கவில்லை.

எழுதித் தள்ளுவது என முடிவெடுத்துவிட்டு அதற்கு என்ன செய்யலாம் என்று இனிமேல்தான் திட்டமிடவேண்டும் என்றும் சிதம்பரம் அவர்கள் கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.

இவருடைய அறிவிப்பு வந்ததிலிருந்தே பங்கு சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு குறைந்துகொண்டே போகிறது. சரியாக திட்டமிடாமல் அடுத்து வரும் ஐந்தாண்டுகளில் தாங்கள் ஈட்டவிருக்கும் லாபத்திலிருந்து குறிப்பிட்ட விழுக்காடுவரை வங்கிகள் இந்த தள்ளுபடியை எழுதித்தள்ளலாம் (writeoff)என்பது போன்ற முடிவை அரசு எடுக்குமானால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். அத்தகைய 'எழுதித்தள்ளுவதற்கு' வருமான வரி விலக்கு என்ற ஒரு சலுகையையும் வங்கிகளுக்கு அரசு அளிக்க முன்வரலாம். ஆனால் அதுவும் ஒரு அரசுக்கு ஒருவகையில் இழப்பே.

எப்படியோ, கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதைதான் இதுவும்.

14 பிப்ரவரி 2008

தரமிறங்காதீர்கள்.

நான் கடந்த சில மாதங்களாகவே வேலைப்பளு காரணமாகவே பதிவுகள் எழுதுவதில் இருந்து விலகியிருக்க நேர்ந்தது.

என்னுடைய பணிகளை குறித்த நேரத்தில் துவங்கி குறித்த நேரத்தில் முடித்தே பழகிப்போன எனக்கு தற்போது என்னுடைய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ப்ராஜக்ட் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்த காலக்கெடுவை எல்லாம் கடந்து நீண்டுக் கொண்டிருப்பதில் ஏற்பட்டுள்ள மனச்சோர்வு எழுதும் மனநிலையை அளிக்காமல் இருப்பதும் இந்த விலகலுக்கு ஒரு காரணம்.

ஆயினும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் குறிப்பாக ப்ராஜக்டில் தொய்வு ஏற்படும்போதெல்லாம் விளையும் மனச்சோர்வை குறைக்க தமிழ்மணம் பக்கம் வந்து நம்முடைய நண்பர்களுடைய பதிவுகளை படித்துவிட்டு செல்வது வழக்கம். சில தரமுள்ள இடுகைகளில் பின்னூட்டம் இட்டு வாழ்த்திவிட்டு செல்வதும் உண்டு.

ஆனால் சமீப காலமாக சில பதிவர்களின் இடுகைகளைப் படிக்க நேர்கையில் மனச்சோர்வுடன் வரும் என்னைப் போன்றோர் மேலும் சோர்ந்து போக நேரிடுகிறது.

இந்த இழிநிலைக்கு யார் காரணம் அதாவது யார் இதை முதலில் துவக்கினார்கள் அல்லது யார் அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்கள் என்பதையெல்லாம் ஆய்வு செய்ய முயலாமல் இத்தகைய போக்கு தேவையா என்ற வினாவை மட்டும் உங்கள் முன் வைக்கிறேன்.

தமிழ்மணத்திற்கென்று ஒரு நிர்வாகக் குழு உள்ளது என்பது உண்மைதான். ஆனால் அவர்களுடைய பணி தணிக்கையாளர்களுடைய பணியல்லவே. பதிவர்களுடைய இடுகைகளை சேமித்து வழங்குவது மட்டுமே அவர்களுடைய பணி. சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு இடுகையையும் பரிசீலித்து அது வெளியிட தகுதியானவைதானா என்பதுபோன்ற ஆய்வில் இறங்குவது அவர்களுடைய பணியல்ல என்றுதான் கருதுகிறேன்.

சுயதணிக்கை என்பதை விட சுயகட்டுப்பாடு வேண்டும் என்று கருதுகிறேன்.

தேவையற்ற, கண்ணியமற்ற கருத்துகளை எழுதுபவர்கள் தங்களுடைய மனவக்கிரத்தை தங்களுடைய பதிவுகளில் எழுதி தங்களுடைய மனத்தாங்கலை தீர்த்துக்கொள்ளட்டும். அதில் தவறில்லை. ஆனால் அதை தமிழ்மணத்துடன் இணைத்து படிப்பவர்களுடைய மனத்திலும் வக்கிரத்தை விதைத்துவிடாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதையும் மீறி எழுதும் பதிவர்களை மற்றவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முன்வரவேண்டும். அதை விட்டு அவர்களுடைய பதிவில் 'உன்னை விட நான் தரமிறங்குகிறேன் பார்' என்ற எண்ணத்துடன் சில நல்ல தரமுள்ள பதிவர்களும் (அதாவது என்னுடைய பார்வையில்) இப்போதெல்லாம் பதிலுக்கு பதில் தரமில்லாத கருத்துகளை எழுதுவது வேதனையளிக்கிறது.

இதில் கூடுதல் வேதனை என்னவென்றால் சமுதாயத்தில் நல்லதொரு பதவிகளில் இருப்பவர்களும் இதே பாதையில் செல்ல முயல்வதுதான்.

இத்தகையோரை நான் வேண்டிக் கேட்டுக்கொள்வது ஒன்றுதான். போதும். மேலும் தரமிறங்கி உங்களுடைய பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்.

நல்ல சிந்தனைகளை எழுதுங்கள், ஊக்குவியுங்கள்.

சாதி, மத, இனம் சார்ந்த இடுகைகளை எழுதுவதில்லை என்று முடிவெடுங்கள். அத்தகைய பதிவர்களுடைய இடுகைகளை படிப்பதை தவிர்த்துவிடுங்கள். மாறாக அதைப் படித்து, அதனால் ஏற்படும் ஆதங்கத்தை பின்னூட்டமாக கொட்டித் தீர்ப்பதையும் தவிர்க்க முயலுங்கள்.

நம்மில் பலருக்கு எழுதுவது முழுநேர வேலையல்ல. இது ஒரு பொழுதுபோக்கு. நம்முடைய எண்ணங்களுக்கு வடிகால். பணியிடங்களில் ஏற்படும் மனச்சோர்வை ஆற்றிக்கொள்ள ஒரு புகலிடம். அதையும் சர்ச்சைகுரியதாக்குவது தேவைதானா?

சிந்தியுங்கள் நண்பர்களே..

03 ஜனவரி 2008

மலேஷியாவில் இருந்து... 5

ஆங்கிலேயர்களுடைய ஆட்சிகாலத்தில் ஆயுதம் தாங்கிய கலவரத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்டுகளை ஒடுக்கும் முகமாக 1948ம் ஆண்டு ஒரு இடைக்கால நிவாரணியாக பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டம்தான் சுதந்திரம் பெற்றபிறகு உள்நாட்டு பாதுகாப்பு சட்டமாக (இசா 1960) உருமாறியது. அன்று இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை எவ்வித விசாரணையுமின்றி ஒராண்டு காலம் சிறையிலடைக்க வழி வகுக்கப்பட்டிருந்தது. அது இப்போது இரண்டாண்டு காலமாக நீடீக்கப்பட்டுள்ளது.

ஒருவர் நாட்டின் பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் கருதினாலே போதும், அவரை எவ்வித விசாரணையுமின்றி சிறையிலடைக்க இச்சட்டத்தின் 8(1) பிரிவு வகை செய்கிறது. கைது செய்யப்பட்டவரை முதல் இரண்டு மாதங்களுக்கு தன்வசம் வைத்துக்கொள்ளவும் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாத காலத்தில் கைது செய்யப்பட்டவருக்கு தன்னுடைய உறவினரையோ அல்லது வழக்கறிஞரையோ கூட சந்திக்க வாய்ப்பு அளிப்பதில்லை. அதன் பிறகு உள்துறை அமைச்சரின் கணிப்பில் அவருடைய சிறைதண்டனை மேலும் இரண்டாண்டுகளுக்கும் நீட்டிக்கப்படவேண்டும் என்கிற பட்சத்தில் உறவினர்களை/வழக்கறிஞர்களை சந்திக்கும் உரிமை வழங்கப்படுவதுண்டு.

இச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படும் கைதிகள் எவ்வித விசாரணையுமின்றி சிறையிலடைக்கப்பட முடியும் என்பதால் அவர்களை சித்திரவதைக்கு உட்படுத்தி விசாரணை செய்ய வேண்டிய அவசியம் காவல்துறைக்கு இல்லை என்பது உண்மை. ஆனால் பல முன்னாள் கைதிகளும் காவல்துறையினரிடம் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் தாங்கள் பட்ட சித்திரவதைகளைப் பற்றி பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.

அடிப்படை மனித உரிமைகளை மீறும் இத்தகைய சட்டம் இன்றும் நடைமுறையிலுள்ள வெகுசில நாடுகளில் ஒன்று மலேசியா. இச்சட்டத்தை பின்வாங்க கூறி மலேசிய மனித உரிமைகள் சங்கம் மற்றும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளும் மலேசியாவை நிர்பந்தித்து வருகின்றன. ஆயினும் இன்றுவரை மலேசிய அரசு இதை பொருட்படுத்தாமல் இருந்ததுடன் சமீப காலங்களில் இச்சட்டத்தின் நிழலில் சர்ச்சைக்குரிய கைதுகளையும் செய்து வருகிறது.

இந்த சட்டத்தின் கீழ்தான் முன்னாள் உதவி பிரதமர் அன்வர் இப்ராஹிமும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பிறகு சோடிக்கப்பட்ட கேவலமான வழக்குகளில் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டு தண்டனை அனுபவித்த அவரை இப்போதைய பிரதமர் பதவியேற்ற பிறகுதான் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் முதல் பிரதமர் இந்த சட்டத்தை நாட்டின் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுத்தியபோது அளித்த வாக்குறுதியைப் நினைவு கூர்வது அவசியம்: 'இச்சட்டத்தின் கீழ் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் எந்த சூழ்நிலையிலும் தவறாக பயன்படுத்தாது என உறுதி கூறுகிறேன்.' அதாவது அரசுக்கு எதிராக எழும் நியாயமான குரலை அடக்கும் நோக்கத்துடன் இச்சட்டம் பயன்படுத்தப்படாது என்ற உறுதிகூறிய அரசு இப்போது அதைத்தான் செய்திருக்கிறது என்கின்றனர் எதிர்கட்சிகள்.

இச்சட்டத்தின் கீழ்தான் இப்போது ஹிந்த்ராஃபின் ஐந்து தலைவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதற்காக சமீபத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கெதிராக குடும்பத்தினர் ஹேபியஸ் கார்ப்பஸ் மனு சமர்ப்பித்துள்ளபோதிலும் இவர்கள் விடுதலையடையும் வாய்ப்பு தற்போதைக்கு இருப்பதாக தோன்றவில்லை.

இந்த சட்டத்தை மலேசிய அரசு எந்த நோக்கத்தில் அறிமுகப்படுத்தியதோ அதற்கு முற்றிலும் முரணான முறையில் ஹிந்த்ராஃபுக்கு எதிராக நடைமுறைபடுத்தியுள்ளது என்பதை மலேசிய இந்தியர்கள் மட்டுமல்லாமல் மலேசிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பலவும் குரலெழுப்பியுள்ளன. நான் கடந்த ஞாயிறன்று தேவாலயத்திற்கு சென்றிருந்தபோது அங்கு விற்பனைக்கு கிடைத்த ஆசிய கத்தோலிக்க செய்தி என்ற தலைப்பில் வெளியாகும் பத்திரிகையில் இதன் தொடர்பாக "சாலை மறியல்கள், போராட்டங்களை தடைசெய்ய வேண்டுமா?" என்ற தலைப்பின் கீழ் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையின் தமிழாக்க சுருக்கத்தை இங்கே தருகிறேன்:

"மலேசிய அரசியல் சட்டம் 10(1)(b) பிரிவின் கீழ் முன்னனுமதியின்றி அமைதியான முறையில் பொது இடத்தில் கூடுவதற்கு (assemble) முழு உரிமையுண்டு. அதாவது பிறருக்கு ஊறு விளைவிக்கும் எவ்வித ஆயுதங்களும் இன்றி. அதே சமயம் அத்தகைய கூட்டம் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கம் இருப்பதாக அரசு கருதும் பட்சத்தில் அதை தடைசெய்ய 10(2)(b) பிரிவு அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது.

மலேசிய காவல்துறை சட்டம் (27) பிரிவின் கீழ் பொது இடத்தில் கூடுவதற்கு சம்மந்தப்பட்ட மாவட்ட காவல்துறை அதிகாரியிடம் முன் அனுமதி பெற அதற்கெனவுள்ள விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதனை பரிசீலித்து அனுமதி வழங்கவோ அல்லது நிராகரிக்கவோ அவருக்கு உரிமை உண்டு. அவருடைய தடை உத்தரவை மீறி பொது இடத்தில் கூடும் எவரையும் கலைந்து செல்லுமாறு பணிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய இந்த உத்தரவை மீறும் எவரையும் கைது செய்து சிறையிலடைக்கவும் அதிகாரம் உண்டு என்பது உண்மைதான்.

சரி இனி இவ்வருடம் இதுவரை நடந்த சில பொதுக்கூட்டங்கள், பேரணிகள் சிலவற்றை பார்ப்போம்.

26.9.07 புதன்கிழமை நடைபெற்ற நடைபயணம் (Walk for Justice): இதன் பொறுப்பாளர்கள் மேற்கூறிய சட்டப்பிரிவின்படி காவல்துறையினரிடம் எவ்வித விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவில்லை. அவர்களுடைய நடைபயணத்தின் விவரத்தை மட்டுமே காவல்துறையினருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தனர். காவல்துறையினரும் அதை ஏற்றுக்கொள்ளவோ மறுக்கவோ இல்லை. நடைபயணம் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது.

10.10.07 செவ்வாய்கிழமை அன்று மயன்மார் அரசுக்கு எதிராக நடைபெற்ற மறியல்: மலேசிய இளைஞர்கள் கூட்டமைப்பின் சார்பில் மயன்மாரில் அமைதி மற்றும் கருத்து சுதந்திரம் கோரி அந்நாட்டின் தூதரகத்தின் முன் நடத்தவிருந்த போராட்டத்திற்கு அதன் பொறுப்பாளர்கள் காவல்துறையினரிடமிருந்து முறையான அனுமதிபெற்று நடத்திய மறியல் போராட்டமும் அமைதியான முறையில் நடந்தது.

10.11.07 சனிக்கிழமை மலேசியர்கள், சீன மற்றும் இந்தியர்கள் அனைவரும் கூட்டாக (BERISH) நடத்திய பேரணி: நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை நியாயமான முறையில் நடத்தக் கோரி அரசிடம் மகஜர் சமர்ப்பிக்க எண்ணி பொறுப்பாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்பத்தை காவல்துறை பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கக் கூடும் என்று கூறி நிராகரித்தது. அதை பொருட்படுத்தாமல் கொட்டும் மழையில் சுமார் 5000 பேர் ஜேமெக் மஸ்ஜித் சதுக்கத்தில் குழுமி அமைதியாக துவங்கிய மறியல் போராட்டம் காவல்துறையினரின் அத்துமீறிய தடியடி மற்றும் கண்ணீர் புகை வீச்சால் கலவரத்தில் முடிந்தது. சுமார் முப்பது பேர் கைது செய்யப்பட பலர் காயமடைந்தனர்.

25.11.07 ஞாயிற்றுக்கிழமை ஹிந்த்ராஃப் படையினரால் நடைபெற்ற சாலை மறியல்: அதற்கு முந்தைய BERISH போராட்டத்திற்கு அனுமதி மறுத்த நிலையில் ஹிந்த்ராஃப் படை சமர்ப்பித்த விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் நிர்பந்தம் காவல்துறையினருக்கு. அதை எதிர்த்து மறியலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஹிந்த்ராஃபுக்கு. சுமார் 30000 இந்திய தமிழர்கள் கூடி நடைபெற்ற போராட்டம் இறுதியில் காவல்துறையினரின் அத்துமீறல் காரணமாக கலவரத்தில் முடிந்தது. சுமார் 140 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் 88 பேர் மீது பொது இடத்தில் அனுமதியின்றி குழுமியது மற்றும் கலைந்து செல்ல காவல்துறையின் இட்ட உத்தரவை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

முதல் இரண்டு மறியல்களை அனுமதித்ததுபோல் நவம்பர் மாதத்தில் நடைபெற்ற BERISH மற்றும் HINDRAF மறியல்களையும் அனுமதித்திருந்தால் நிச்சயம் அவையும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்திருக்கும் ஆகவே இதற்கு முழு பொறுப்பும் மலேசிய காவல்துறையே ஏற்கவேண்டும் என்கிறது கட்டுரை.

ஆனால் அனைத்துதரப்பிலும் இருந்து எழுந்த இத்தகைய ஆட்சேபங்கள்தான் மலேசிய அரசை ஹிந்த்ராஃபின் மூத்த தலைவர்கள் ஐவரை இசா சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வைத்ததோ என்றுகூட எண்ணத்தோன்றுகிறது.

சரி, ஹிந்த்ராஃபின் சாலை மறியல் மலேசிய தமிழ் இளைஞர்களுடைய தனிமனித வாழ்க்கையை சாதகமாகவோ பாதகமாகவோ பாதித்துள்ளதா?

நாளை பார்ப்போம்..

தொடரும்..