02 ஆகஸ்ட் 2019

புதிய கல்விக் கொள்கை - 5

நேற்றைய பதிவில் கடந்த சுமார் நாற்பதாண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் 10+2 என்ற பள்ளிக் கல்வி  முறை புதிய கல்வி திட்டத்தின் படி 5+3+3+4 ஆக அதிகரிக்கப்படவுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன்.

இதில் அடிப்படை ஆண்டுகள் (foundation years) எனப்படும் முதல் ஐந்து ஆண்டுகளில் முதல் மூன்றாண்டுகள் மழலையர் பள்ளி பருவத்தைச் சார்ந்தவை.

தற்போது எந்த அரசு பள்ளிகளிலும் இந்த வகுப்புகள் நடத்தப்படுவதில்லை. பெரும்பாலான அரசு பள்ளிகள் ஐந்து வயது பூர்த்தியான குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்க்கும் முறையை பின்பற்றி வருகின்றன.

குறிப்பாக கிராமப்புறங்களில் அங்கீகாரமில்லாத சில தனியார் பள்ளிகள் மட்டுமே இத்தகைய வகுப்புகளை நடத்தி வருகின்றன. இத்தகைய மழலையர் வகுப்புகள் அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டால் தற்போது இயங்கிவரும் இதகைய பள்ளிகளின் நிலை என்னவாகும்? இந்த மூன்று வகுப்புகளையும் தற்போதுள்ள அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அத்தனை எளிதான காரியமா?

மேலும் புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிட்டுள்ள  இந்த நான்கு பிரிவுகளுக்கென தனித்தனி பள்ளிகள் அமைக்கப்படுமா என்பதும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

அப்படி அமைக்கப்படும் பட்சத்தில் ஒரு பள்ளியிலிருந்து அடுத்த பள்ளிக்கு செல்வதற்கு மீண்டும் மீண்டும் பெற்றோர்கள் அலைய வேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புண்டு. தற்போது பெரும்பாலான நகர்ப்புற பள்ளிகளில் மழலையர் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்து முடிக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆகவே அத்தகைய பள்ளிகளில் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு எவ்வித தொல்லையுமில்லாமல் படித்து முடித்துவிட முடிகிறது.

பொதுத் தேர்வுகள்

தற்போது மேல்நிலை பள்ளி முடிவில் அதாவது 10வது வகுப்புக்கும் அதன் பிறகு 11 மற்றும் 12வது வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவை நான்கு பள்ளிகளாக பிரிக்கப்படுவதால்  மூன்றாவது, ஐந்தாவது மற்றும் எட்டாவது வகுப்புகளுக்கும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ப்ரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது சாத்தியமா? இந்த வயதுகளில் குழந்தைகளை இத்தகைய மன அழுத்தத்திற்கு உட்படுத்த வேண்டுமா?

மேலும் நான்காவது நிலையான மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நான்கு ஆண்டுகள் எட்டு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டு நான்காம் ஆண்டு இறுதியில் ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இப்போது நடைமுறையிலுள்ள பத்தாவது மற்றும் பன்னிரண்டாவது வகுப்புகளில் நடத்தப்படும் பொதுத்தேர்வும் தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது?

அப்படியானால் இந்த நான்காண்டுகளில் நடத்தப்படும் செமஸ்டர் தேர்வுகள் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்தப்படுமா? இவ்வாறு ஒவ்வொரு அரையாண்டிலும் செமஸ்டர் எனப்படும் பருவ தேர்வுகள் நடத்தப்படும்போது மேலும் இரண்டு பொதுத்தேர்வுகள் எதற்காக?

அடுத்த முக்கியமான பிரச்சினை பள்ளிகள் ஒருங்கிணைப்பு.

இதைப் பற்றி நாளை விவாதிக்கலாம்.







8 கருத்துகள்:

  1. ஏதோவொரு நாடு ஐயா பெயர் மறந்து விட்டது குழந்தைகளை 12 வயது நிறைவடைந்தவுடன் பள்ளியில் சேர்க்கின்றனர்.

    காரணம் குழந்தைகள் அதுவரை சந்தோஷமாக சிறகடித்து பறக்கட்டும் என்பதற்காக...

    ஆக பள்ளியில் சேர்க்கும் பொழுதுதான் அவர்களுக்கு சுமை ஏற்றப்படுகிறது.

    தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 12 வயதிலா? அது சற்று அதிகம். தான். மலேஷியாவில் ஆறு வயதில் சேர்க்கிறார்கள்.

      நீக்கு
  2. /// மேலும் இரண்டு பொதுத்தேர்வுகள் ///

    தேர்வு தேர்வு தேர்வு...

    வருங்கால குழந்தைகளின் நிலையை நினைத்தாலே பயமாக இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள். இதை என்ன செய்தால் தடுத்து நிறுத்தலாம் என்று நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.

      நீக்கு
  3. aஐந்து வயடு வரைகுழந்தைகளை எழுதச் சொல்லக் கூடாது அதனல்தானோ என்னவோ அரசுபள்ளிகளில்முதல் வகுப்பில் சேரும் குழந்தைகளுக்கு ஐந்து வயதாய் தீர்மானித்தார்கள் எனக்கு விளங்காதஒன்று இந்த செமெஸ்டர் தேருவுகள் ஒரு செமெஸ்டரில் படித்தது அடுத செமெஸ்டரில் நினைவிருக்க வேண்டாமா பள்ளிகளில் தேர்வு ஓராண்டில் படித்ததை நினைவுக்கு கொண்டு வர அல்லவா நாங்கள் படிக்கும் போது ஃபோர்த் ஃபார்ம் ஃபிஃப்த்ஃபார்ம் சிக்ஸ்த் ஃபாற்ம் களில் படிட்த அனைதுபாடங்களிலும் பள்ளி இறுதியில் கேள்விகள்கேட்கப்படலாம் அதனாலேயே பாடங்களில் எழுபது எண்பதுமார்க்குகள் எடுப்பது கஷ்டம் இப்போதெல்லம் நூற்றுக்கு நூறு எளிதில் கிடைக்கிறது

    பதிலளிநீக்கு
  4. சமஸ்டர் முறையில் ஒரு செமஸ்டரில் படித்த பாடங்களிலிருந்து அடுத்த செமஸ்டரில் கேள்வி கேட்க கூடாது என்பது நியதி. இவர்கள் என்ன செய்வார்களோ தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  5. //10+2 என்ற பள்ளிக் கல்வி முறை புதிய கல்வி திட்டத்தின் படி 5+3+3+4 ஆக அதிகரிக்கப்படவுள்ளது//

    இப்போது உள்ள மழலையர் பள்ளி யில் படிக்கும் இரண்டு ஆண்டுகளையும் சேர்த்தால் தற்போது மாணவர்கள் 14 ( 2+10+2 ) ஆண்டுகள் படிப்பதை 15 ஆண்டுகளாக அதிகரிக்கும் திட்டம் இது. நாம் படித்த போதெல்லாம் பட்டப்படிப்புக்கு சேருமுன் பள்ளியில் 11 ஆண்டுகளும் கல்லூரியில் புகுமுக வகுப்பு ஒரு ஆண்டும் ஆக மொத்தம் 12 ஆண்டுகள் தான் படித்தோம். படிக்கும் ஆண்டுகளை கூட்டிக்கொண்டு போய் மாணவர்களை துன்புறுத்தவேண்டியதில்லை.

    மழலையர் வகுப்புகள் அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டால் தற்போது இயங்கிவரும் பள்ளிகளை மூடவேண்டிய நிலைதான் ஏற்படும். மேலும் தாங்கள் எழுப்பியுள்ள ‘இந்த மூன்று வகுப்புகளையும் தற்போதுள்ள அரசு துவக்கப்பள்ளிகளுடன் இணைக்க உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது அத்தனை எளிதான காரியமா?’ என்ற வினாவிற்கு தற்போது சாத்தியம் இல்லை என்பதே நிதர்சனம்.

    நான்கு பிரிவுகளுக்கென தனித்தனி பள்ளிகள் அமைக்கப்பட்டால் ஒரு பள்ளியிலிருந்து அடுத்த பள்ளிக்கு செல்வதற்கு மீண்டும் மீண்டும் அலைய வேண்டிய சூழலில் பெற்றோர்களுக்குக்கு நிச்சயம் மன உளைச்சல் ஏற்படும்.

    தேர்வுகளைப் பொறுத்தவரை எட்டாம் வகுப்பில் ஒரு பொதுத்தேர்வு மட்டும் வைத்தால் போதும். ஒன்பதாவது வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான நான்கு ஆண்டுகளில் உள்ள எட்டு செமஸ்டர்களில் 5 மற்றும் 7 ஆம் செமஸ்டர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வும் 6 மற்றும் 8 ஆம் செமெஸ்டெர் தேர்வுகளை பொதுத்தேர்வுகளாக நடத்தலாம்.

    இந்த குழப்பமான புதிய கல்வி திட்டத்தைப் பார்க்கும் போது நல்ல வேளை நாம் பிழைத்துக்கொண்டோம் என எண்ணத்தோன்றுகிறது. ஆனால் வருங்கால மாணவர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  6. இந்த மாற்றங்கள் அனைத்துமே நடைமுறைக்கு சாத்தியமில்லாதவை மாணவர்களுக்கு நன்மை பயக்காதவை என்பது நம்மை போன்ற பலருக்கும் தெரிந்திருக்கும்போது ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எப்படி தெரியாமல் போனது?

    பதிலளிநீக்கு