26 மே 2007

அட்டைக் கத்தி வீரரின் அடாவடி பேட்டி!

நம்முடைய அதிரடி நாயகன், அரசியல் தலைவர் விஜயகாந்த் அவர்கள் இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு அதிரடி (அடாவடி என்பதுதான் சரி) பேட்டி அளித்திருக்கிறார்.

அதிலிருந்து சில அடாவடிகள் மட்டும்...

அவருடைய திருமண மண்டபத்தை அரசு ஏற்றுக்கொண்டதைப் பற்றிய கேள்விக்கு பதில்:

"வேர்வை சிந்திச் சேர்த்த காசு. சில பேரு மாதிரி ஊரை அடிச்சு, உலையில போட்டுச் சம்பாதிச்சதில்லை. ஊழல் பண்ணி சேர்க்கலை. கடன்பட்டு, கஷ்டப்பட்டுக் கட்டி முடிச்ச மண்டபம்."

அப்படியா? அப்படியானால் அதே பகுதியில் தங்களுடைய வீடுகளையும், கடைகளையும் இழந்தவர்கள் ஊழல் செய்து, ஊரை ஏமாற்றி சம்பாதித்தார்கள் என்று சொல்கிறீர்களா? ஏதோ தானமாக கொடுத்துவிட்டத்தைப் போன்று அங்கலாய்க்கிறீர்களே? இழப்பீடு பெற்றுக்கொண்டுதானே கொடுத்தீர்கள்? அதில் உங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் இருந்த அனைவருக்குமேதான்.

ஆனால் சட்டப்படித்தானே நடக்குது என்று கேள்வி கேட்கப்படுகிறது.

"அப்படி நடந்தாத்தான் சந்தோஷப்படுவேனே" என்கிறார்.

அப்ப எதுக்கு உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்றீர்கள்? சட்டப்படித்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது, உங்களுக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்ட காலக்கெடு முடிவடையும் வரை நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை என்ற கேள்வி உங்கள் முன் உச்சநீதிமன்றம் வைத்ததே?

"நான் மாற்றுத் திட்டம் கொடுத்தேன்.. ஆனால் வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ளப்படவில்லை."

அதாவது அரசு திட்டங்கள் உங்களுடைய சவுகரியத்தைப் பொருத்து மாற்றப்படவில்லை என்கிறீர்கள். அப்படி பாதிக்கப்பட்ட வேறு யாராவது இப்படியொரு திட்டத்தை தர முன்வைத்து ஏற்றுக்கொள்ளப்பட்டு உங்களுடைய கோரிக்கை மட்டும் நிராகரிக்கப்பட்டிருந்தால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம்..

"இங்கே நடந்தது அதிகார துஷ்பிரயோகம். இதுக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். கிரிமினல் அரசியல்னா என்னன்னு எனக்கு கத்துக்குடுத்தீட்டீங்க. அதை வெச்சே என்னாலேயும் திருப்பியடிக்க முடியும்."

உங்களுக்கு கிரிமினல் அரசியல் கத்துக்கொடுத்தது யார் சார்? தி.மு.கவா? இல்லை வேறு எந்த கட்சியுமா? அதே வச்சே திருப்பியடிச்சிருவீங்களா? அதாவது ஆளும் கட்சியினருடைய சொத்துக்களை இடித்து தள்ளுவீர்கள் என்கிறீர்களா? அல்லது ஆட்களையே இடித்து தள்ளிவிடுவேன் என்கிறீர்களா? அதையாவது நீங்களே செய்வீர்களா அல்லது சினிமா பாணியில் டூப் போட்டு செய்வீர்களா?

அரசியலுக்கு வந்து ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை... ஐம்பதாண்டுகாலம் சட்டமன்ற அனுபவஸ்தரை மிரட்டுகிறீர்கள்...

உங்களையெல்லாம் ஆட்சியில் அமர்த்தினால்.... மக்களுக்கு இது தேவைதான்...

அடக்கி வாசிங்க சார்... அப்பத்தான் அரசியல்ல நிலைச்சி நிக்க முடியும்...

பேட்டி முழுவதுமே பேத்தல்தான்... ஒரு முதிர்ச்சியற்ற மனிதரின் பிதற்றல்கள்...

25 மே 2007

தலித் கிறிஸ்த்துவர்களுக்கு மறுக்கப்படும் சலுகைகள்

மதமாற்றம் ஒருவரின் அந்தஸ்த்தை மாற்ற முடியுமா?

தலித் இந்துவாக இருந்த ஒருவர் மதம் மாறி கிறிஸ்துவராகவோ அல்லது முஸ்லீமாகவோ மாறுவதன் மூலம் மட்டுமே அவருடைய தலித் அந்தஸ்த்தை இழந்துவிடுகிறாரா?

இந்த கேள்வியை கேட்டு கேட்டு கிறிஸ்துவ தலைவர்கள் வெறுத்துப் போய் இருக்கும் காலம் இது.

தேசப் பிதா எனப்படும் மகாத்மாவும், அரசியல் சாசனத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரான அம்பேத்காரும் மதம் மாறுவதாலேயே சமுதாயத்தில் இருக்கும் ஒருவருடைய சமூக அந்தஸ்த்து மாறிவிடுவதில்லை என்பதை மிகத் தெளிவாக உரைத்திருக்கிறார்கள். ஆகவே தலித் இந்துக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து சலுகைகளும் கிறிஸ்துவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தலித் கிறிஸ்துவர்களின் சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயியை டிசம்பர் மாதம் 1999 வருடம் சந்தித்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

இதே அமைப்பு அவருக்கு முந்தைய, பிந்தையை பிரதமர்களையும் பல காலக்கட்டங்களில் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் ஒன்றும் நடைபெறவில்லை.

நீதியரசர் ரங்கனாத் மிஸ்ரா கமிஷன் தலித் கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தலித் அந்தஸ்த்து தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என்று அறிவித்து பிற்படுத்தப் பட்டோருக்கு வழங்கப்படும் சலுகைகள் தொடர்வது தேவைதானா என்ற கேள்வியை உச்சநீதிமன்றம் முன்வைத்திருக்கும் இந்த சூழலில் தேசீய சிறுபான்மை கவுன்சிலின் காரியதரிசி ஆஷா தாஸ் மதம் மாறிய கிறிஸ்துவர்களுக்கு தலித் அந்தஸ்து வழங்கப்படுவது அவர்களுடைய மத விஷயத்தில் தலையிடுவது போலாகும் என்று கூறியிருப்பது உள்நோக்கம் கொண்டது என்று தேசீய ஒருமைப்பாடு கவுன்சில் அங்கத்தினர்களுள் ஒருவரான ஜான் தயால் கூறியிருக்கிறார்.

நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

இந்து தலித்துகளுக்கு இழைக்கப்படும் இழுக்கு கிறிஸ்துவ சமுதாயத்தில் இழைக்கப்படுவதில்லை. உண்மைதான். அவர்களுக்கென்று வழிபாட்டுத்தளங்களில் தனி இடமோ அல்லது சடங்குகளில் பங்குகொள்ளும் உரிமை மறுக்கப்படுவதோ இல்லைதான். ஆனாலும் சமுதாயத்தில் இவர்களுக்கு சம அந்தஸ்த்து என்பது இன்னும் நிறைவேறாத கனவாகவே இருந்து வருகிறது. ஆலயத்தினுள் வழங்கப்படும் சம அந்தஸ்த்து மட்டுமே அவர்களை வாழவைத்துவிட முடியாது.

நேற்றுவரை அரசாங்கத்திலிருந்து கிடைத்து வந்த சலுகைகள் மதம் மாறிய காரணத்தாலேயே மறுக்கப்படுவது எந்த அளவுக்கு நியாயம் என்பதுதான் அவர்களுடைய கேள்வியாக இருந்து வருகிறது.

இதைக் குறித்து முன்னொரு நாள் எழுத்தாளர் ஜெயகாந்தன் குமுதத்தில் எழுதிய ஒருபக்க கட்டுரை நினைவுக்கு வருகிறது. கிறிஸ்த்து + அவன் அல்லது அவள் என்பதுதான் கிறிஸ்த்தவன் அல்லது கிறிஸ்த்தவள் என்றானது. அதாவது ஒவ்வொரு கிறிஸ்த்துவனும் கிறிஸ்து என்றாகிறது. அப்படியிருக்க உயர்ந்த கிறிஸ்த்து, தாழ்ந்த கிறிஸ்த்து என்பது எப்படி சரியாகும்? கிறிஸ்த்துவனாக மாறிய எவனும் தான் கிறிஸ்த்துவன் என்று பெருமையுடன் கூறவேண்டும். அதை விடுத்து நான் இன்றும் தாழ்த்தப்பட்டவன் என்று கருதுவது கிறிஸ்த்துவுக்கே இழுக்காகும்.

அதாவது நான் கிறிஸ்த்துவன் என்று பெருமை பாராட்டிக் கொள்வதே என்னுடைய பசியை ஆற்றிவிடும் என்பதுபோலிருந்தது அவருடைய கூற்று. அவருடைய பல முரண்பட்ட கருத்துகளில் இதுவும் ஒன்று.

*****

22 மே 2007

காலம் மாறிப் போச்சு

பின் தூங்கி பின் எழுபவரா நீங்கள்? கவலையே வேண்டாம்.

உங்களைப் போலவே பலரும் உள்ளனர்.

சோம்பேறி, ஒன்றுக்கும் லாயக்கில்லாதவன், முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவன்... இப்படி எத்தனை பட்டங்கள்?

கவலைப்படாதீர்கள்.

டென்மார்க் நிறுவனம் ஒன்று சமீபத்தில் காலையில் எழுந்து எட்டுமணிக்கெல்லாம் அலுவலகங்களுக்கு செல்பவர்களுக்கெதிராக ஒரு இயக்கத்தையே துவக்கியுள்ளது.

B-Society என்ற இணையதளம் வழியாக முன்தூங்கி முன்எழுபவர்களுக்கு எதிராக ஒரு இயக்கத்தையே துவங்கியிருக்கிறது இந்த நிறுவனம்.

அதிகாலையில் எழுந்து எட்டு மணியிலிருந்து மாலை நான்கு மனி வரையிலும் வேலை செய்பவர்களுக்கும் காலையில் சாவகாசமாக எழுந்து பதினோரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை வேலை செய்பவர்களுக்கும் இடையில் பெரிதாக வித்தியாசம் இல்லை என்று வாதாடுகின்றனர் இதன் இயக்க உறுப்பினர்கள்.

உண்மைதானே!

இந்த இயக்கம் துவக்கப்பட்ட நான்கே மாதங்களில் 4,800 அங்கத்தினர்கள் சேர்ந்துள்ளனர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறது இந்த நிறுவனம்!

இதே இயக்கம் நம் நாட்டில் துவக்கப்பட்டால் இன்றைய ஐ.டி. தலைமுறை இதில் பெருமளவில் சேர முன்வருவார்கள் என்பதில் ஐயம் இல்லை.

டேனிஷ் குடும்ப நல அமைச்சர் கரீனா க்ர்ஸ்டென்சனும் இந்த இயக்கத்திற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறாராம். 'அலாரம் கடிகாரத்திற்கு அடிமையாக வாழ்ந்தது போதும். நம்முடைய வாழ்க்கை அமைதியாகவும் நம் விருப்பத்திற்கேற்பவும் அமைய இந்த விடுதலை நிச்சயம் தேவை.' என்கிறார் அவர்!

இந்த B-Society அமைப்பின் தலைவர் கமிலா க்ரிங் இந்த துறையில் ஒரு டாக்டர் பட்டத்தையே பெற்றிருக்கிறாராம்! அவருடைய இயக்கத்தில் இத்தகைய பள்ளியே இயங்கி வருகிறதாம். இங்கு வகுப்புகள் நண்பகலில்தான் துவங்குகிறதாம்!

இது டென்மார்க்கிலிருந்து ஸ்வீடன், ஃபின்லேண்ட் மற்றும் நார்வே போன்ற நாடுகளுக்கும் வேகமாக பரவுகிறதாம்!

இதை ஏன் நம்முடைய நாட்டிலும் துவங்கக் கூடாது?

அதிகாலையில் எழுந்து அழுது வடிந்த முகங்களுடன் பள்ளிக்கு செல்லும் நம்முடைய குழந்தைகளுக்கு நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்!

ஏன் நம்முடைய இளைஞர்களுக்கும்தான்! படித்து முடித்து பணிக்கு செல்லும் வயதிலும் என்னுடைய மகளை காலையில் ஏழரை மணிக்கு எழுப்ப எத்தனை பாடுபட வேண்டியிருக்கிறது!

ஆகவே இந்த இயக்கத்தை துவக்கிய கமிலா க்ரிங் அவர்களை இந்தியாவுக்கு வருகை தருமாறு ஒரு வேண்டுகோள் விடுத்தால் என்ன என்று தோன்றுகிறது:-)

19 மே 2007

செல்பேசியா தொல்லைபேசியா!

இரண்டு நாட்களுக்கு முன்பு உலக தொலைத்தொடர்பு தின விழாவில் கலந்துக்கொண்டு பேசிய அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் விஸ்வநாதன் அவர்கள் தொலைத்தொடர்பு சாதனங்களின் உபயோகத்தைப் பற்றி பேசுகையில் செல்பேசிகளின் தீமையைப் பற்றி மிக 'அருமையாக?' பேசினார்.

அதாவது அவருடைய பல்கலைக்கழக வளாகத்தில் செல்பேசிகளின் உபயோகத்தை நிறுத்தியதிலிருந்து மாணவர்கள் தேர்வில் வெற்றிபெறும் விழுக்காடு கணிசமாக உயர்ந்திருக்கிறதாம்! அத்துடன் மாணவர்களுடைய employability அதாவது வேலைக்கு 'லாயக்கான' மாணவர்களாக மாறிவிட்டனராம்!

அவர் தொடர்ந்து செல்பேசி இப்போதெல்லாம் தொல்லைபேசியாக மாறிவருகிறது. அது படிக்கும் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கிறது என்றும் கூறியிருந்தார்.
அதைப் படித்ததுமே சிரிப்புத்தான் வந்தது. எப்படி இத்தனை பொறுப்புள்ள பதவியிலுள்ளவர்களால் இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேச முடிகிறது?

இன்று அவருடைய கூற்றை மறுப்பதுபோல திரு.R.K. ராகவன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டி ராகிங் தொல்லையிலிருந்து மாணவர்கள் விடுபட செல்பேசிகள்தான் மிகவும் பயனுள்ள தொலைத்தொடர்பு கருவியாக பயன்படுகிறது என்று கூறியதாக செய்தி வந்துள்ளது!

அவரே தொடர்ந்து மாணவர்கள் வகுப்புகளில் செல்பேசியை பயன்படுத்தாமலிருக்க சம்பந்தப்பட்ட கல்லூரிகள் இப்போது சந்தையில் கிடைக்கும் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம் என்றும் கூறியுள்ளார்.

அதாவது தொலைத்தொடர்பு சாதனங்கள் மக்கள் பயன்படுத்தத்தான் உருவாக்கப்படுகின்றன. அதை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர் என்பதைக் காரணம் காட்டி அதை முழுவதுமாக தடைசெய்வது அறிவின்மை.

இதை உலகளவில் பிரசித்தமாயுள்ள ஒரு பல்கலைக்கழக தலைவரே செய்கிறார் என்பதுடன் அதனால் நன்மையே விளைந்திருக்கிறது என்பதுபோல் பேசி வருவதுதான் வேடிக்கை!

அதுவும் தொலைத்தொடர்பு தின விழாவில்!

அவருடைய உத்தரவின்பேரில் இப்போதெல்லாம் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரிக்குள் நுழையும் விருந்தாளிகளுடைய (guests) செல்பேசியும் வாசலிலேயே பறித்துக்கொள்கிறார்கள்!

இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய் மகளுடைய பட்டமளிப்பு விழாவுக்கு நானும் சென்றிருந்தேன். 'சார் செல்ஃபோன இங்கயே சரண்டர் பண்ணிட்டு ரிசிட் வாங்கிட்டு போங்க.. இல்லன்னா உங்கள உள்ள விடமாட்டோம்.' என்று வாசலிலேயே குண்டர் லெவலுக்கு நின்ற காவலாளி வழிமறித்தார். 'பாத்தீங்களா நா சென்னேன்லே.' என்று விஷமத்துடன் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை பார்த்துக்கொண்டிருந்தார் என்னுடைய மகள். வேறு வழியில்லாமல் தேமே என்று கொடுத்துவிட்டு சென்றேன்.

மாணவர்களை தடைசெய்ததுடன் நில்லாமல் அவர்கள் தேர்வில் வெற்றிபெற அவர்களுடைய வீடுகளிலும் இனி செல்பேசிகளை பயன்படுத்தலாகாது என்று அடுத்த விழாவில் அவர் கூறாமல் இருந்தால் சரி!

****

18 மே 2007

அத்வானியின் புது யோசனை!

புதுதில்லியில் நேற்று துவக்கப்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாடு மாநாட்டில் பா.ஜ.க தலிவர் அத்வானி அவர்கள் ஏற்கனவே குழம்பியுள்ள இட ஒதுக்கீடு பிரச்சினையை தன் பங்குக்கு ஒரு புதிய யோசனையை தெரிவித்து மேலும் குழப்பியுள்ளார்.

அதாவது உயர் ஜாதியைச் சேர்ந்த ஏழைகள் மற்றும் முஸ்லீம்களை மேம்படுத்த சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டுமாம். இதற்கு 'உயர் ஜாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைதரத்தை உயர்த்த முடியும்' என்று சமீபத்தில் மாயாவதி கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தடி சாக்கில் தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களில் ஏழை முஸ்லீம்களின் கல்விக்காக முஸ்லிம் தலைவர்கள் எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்று புகழாரம் சூட்டியுள்ளார். அதாவது தென்னிந்திய முஸ்லீம்கள் ஏற்கனவே முன்னேறிவிட்டார்கள் ஆகவே அவர்களுக்கு சலுகைகள் தேவையில்லை என்பதுபோல் இருக்கிறது அவருடைய பேச்சு..

ஏற்கனவே இந்திய அரசியல் சட்டம் 15வது பிரிவில் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு தேவையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் அதை திசை திருப்பும் நோக்கத்துடனேயே அத்வானி அவர்கள் இந்த புதிய யுக்தியைக் கையாண்டிருப்பதாக தெரிகிறது.

மேலும் தொடர்ந்து, 'ஜாதி, மதம், இனம் போன்றவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொரு இந்தியனும் மேம்பாடு அடையவேண்டும்.' என்கிறார்.

அதாவது ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர் மாத்திரம் மேம்பாடு அடைந்தால் போதாது. உயர் ஜாதியிலும் பிந்தங்கியோர் உள்ளனர். ஆகவே அவர்களும் மேம்பட சிறப்பு திட்டங்கள் வேண்டும் என்கிறார். இதற்கென்று இட ஒதுக்கீடும் கேட்பார்கள் போலிருக்கிறது.

இதை அப்படியே ஆதரிப்பதாக பாரதப் பிரதமர் அதே மாநாட்டில் தெரிவித்தாலும் பா.ஜ.கவின் உள்நோக்கத்தை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பதுதான் கேள்விக்குறி.

மேலோட்டமாக பார்த்தால் இந்த யோசனையில் தவறேதும் இருப்பதாக தெரியாது.

ஆனால் இந்த நேரத்தில் இதை முன்வைத்திருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?

உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்த நேரத்தில் இப்படியொரு யோசனை தேவைதானா?

அவருடைய இந்த யோசனையில் உயர்ஜாதியிலுள்ளவர்களைப் போலவே மற்ற ஜாதியிலுள்ளவர்களுக்கும் பொருளாதாரத்தில் பிந்தங்கியவர்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படவேண்டும் என்பதுபோன்ற தொனி ஒலிக்கிறதே?

12 மே 2007

தமிழகமும் அண்டை மாநிலங்களும்

தமிழக முதல்வர் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களின் சட்டமன்ற வாழ்க்கையின் பொன்விழா ஆண்டினை கொண்டாடும் முகமாக அவருக்கு சென்னையில் மாபெரும் விழா எடுக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம்.

அவரை வாழ்த்துவதற்காக மத்திய அரசு கூட்டணியில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடைய தலைவர்களும நேரில் வந்திருந்து வாழ்த்தியது அதைவிட மகிழ்ச்சிகரமான விஷயம். அதில் நம்முடைய தமிழக எதிர்கட்சித் தலைவர் பங்குகொள்ளாமலிருந்ததை விட்டுத்தள்ளுவோம்.

இவ்விழாவில் கருணாநிதி பேசுகையில் தன்னுடைய ஐம்பதாண்டுகால சட்டமன்ற வாழ்க்கையில் இன்னும் தீர்வு காண முடியாமல் பல விஷயங்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

அவற்றில் மிக முக்கியமாக குறிப்பிட்டது நதிநீர் பங்கீட்டு விஷயம். அவருடைய பேச்சுக்கிடையில் கூறிய ஒரு வாக்கியம் அவருடைய மனவேதனையை வெளிப்படுத்தியது. தற்போது தமிழகத்தை சுற்றிலுமுள்ள மாநில அரசுகள் விரோதமனப்பான்மையுடன் நடந்துகொள்வது என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது என்றார். அவர்கள் தமிழகத்தை நட்புடன் பார்க்க மறுக்கின்றன. நானும் இதுவரை பதினோரு கர்நாடக முதலமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளேன். நான்கு அல்லது ஐந்து மத்திய அமைச்சர்களுடன் இதைக்குறித்து பேசியிருக்கிறேன். காவேரி நதிநீர் பங்கீட்டு ஆணையத்தின் இறுதி தீர்ப்பும் வெளியாகிவிட்டது. ஆனால் இன்னமும் இது தீர்க்கமுடியாத பிரச்சினையாகவே இருந்து வருவது எனக்கு மிகவும் மனவேதனையை அளிக்கிறது என்றெல்லாம் ஆதங்கப்பட்டதை காண முடிந்தது.

மு.கருணாநிதி அவர்களுடைய அணுகுமுறையில் அவருடைய எதிரிகளும் கூட குறைகாண முடியாது. அந்த அளவுக்கு அவர் எதிரிகளையும் அனுசரித்துப்போகக் கூடியவர் என்பதை அவருடைய அரசியில் எதிரிகளும் கூட (ஜெயலலிதாவைத் தவிர) ஒத்துக்கொள்வர். ஆயினும் அவராலேயே ஒரு பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. என்னை சுற்றியுள்ள எல்லா மாநில முதல்வர்களுமே நம்மை ஒரு எதிரியைப் போன்று பார்க்கின்றனர் என்று ஆதங்கப்படுவது வேதனையாகத்தான் உள்ளது.

நம்முடைய சொந்த வாழ்க்கையிலும் கூட நம்மால் அனைவரையும் திருப்திய்படுத்த முடிவதில்லை. யாராவது நம்முடைய கருத்துக்கு எதிர்கருத்தைக் கொண்டிருப்பார்கள். இதை நம் அனைவர் வாழ்க்கையிலும் அனுபவித்திருக்கிறோம். ஆனால் நம்முடன் யாருமே ஒத்துப்போக மறுக்கும்போது நம்முடைய இயலாமையை வெளிப்படுத்துவதை தவிர்த்து ஒருவேளை நம்மிடம் ஏதேனும் குறையுள்ளதான் என்பதைக் குறித்து சிந்திக்கிறோம்.

அப்படிப்பட்ட கோணத்தில் மு.கருணாநிதி அவர்கள் கூறியதைப் பற்றி சிந்திக்க முனைந்தால் தமிழகத்தை அண்டை மாநிலங்கள் அனைத்துமே வெறுக்கின்றன என்றோ நட்பு கோணத்தில் அணுக மறுக்கின்றன என்றோ அர்த்தமா என்ன?

சமீபகாலமாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கிடையில் இருந்துவருகின்ற பூசல்கள் எல்லாமே நதிநீரை பங்கிட்டுக்கொள்வதில்தான் ஏற்பட்டுள்ளன. இதில் காவேரி நதிநீர் பிரச்சினை சுமார் ஐம்பதாண்டு காலமாகவெ இருந்து வரும் பிரச்சினை. 1924ம் ஆண்டு அப்போதைய மதறாஸ் மற்றும் மைசூர் பிரசிடென்சிகளுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தம் ஐம்பதாண்டு காலத்திற்கு மட்டுமே செல்லும். ஆகவே 1974ம் ஆண்டு முதல் காவேரி நீரை தமிழகத்துடன் பங்கிட்டுக் கொள்ள தேவையில்லை என்ற நிலையைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து ஆண்டு வரும் சகல கர்நாடகா அரசுகளுமே கூறிவருகின்றன. இந்த பிரச்சினை கர்நாடகத்திலும் சரி தமிழகத்திலும் சரி எந்த கட்சி பதவியிலிருந்தாலும் இருந்துக்கொண்டுதான் இருக்கும். திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்பு இரு மாநிலங்களிலுமே காங்கிரஸ்தான் ஆட்சியிலிருந்தது.

இவ்வளவு ஏன், நேற்று நடந்த பொன்விழா கூட்டத்தில் பாரத பிரதமரே என்ன பேசுகிறார்? மத்திய கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுத்தால் நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் தீர்வுகாணலாம் என்கிறார். ஆக கூட்டணியின் முக்கிய அம்சமான ஒத்துழைப்பே இல்லையென்றுதானே அர்த்தம்?

காவிரி நதிநீர் பங்கீட்டு விஷயத்தில் கர்நாடகாவுடன் மட்டும்தான் பிரச்சினை என்றிருந்தது. ட்ரிப்யூனலின் ஆணைக்குப் பிறகு கேரளாவுடனும் தகராறு.. போறாததற்கு கேரள மாநிலத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் முல்லை பெரியார் அணை விஷயத்திலும் பிரச்சினை. அங்கு நிலம் என்னுடையது அணை உன்னுடையது என்கிறார் கேரள முதல்வர். அவருக்கு சொந்த மாநிலத்திலேயே மதிப்பில்லை. அந்த தாழ்வு மனப்பான்மையில் நம்முடன் மோதுகிறார்.

இதில் திடீரென்று பாலாற்றில் அணை என்று புரளி கிளப்புகிறது ஆந்திர மாநிலம்.

எல்லோரும் அவரவர் மாநில மக்களின் நன்மைக்காகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள்.

இதில் யாரை நண்பன் என்பது அல்லது எதிரி என்பது?

ஐம்பதாண்டுகால சட்டமன்ற வாழ்க்கையில் தன்னால் இயன்றவரை அண்டை மாநிலங்களுடன் நட்பு பாராட்டி வந்தவர் மு.க. அவரே தன்னுடைய மாநிலத்தை சுற்றியுள்ளவர்கள் யாருமே நட்பு பாராட்டவில்லை என்றும் தமிழகம் ஒரு தீவாக மாறிவிட்டது போல் தமக்கு தோன்றுகிறது என்று பேச ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது?

வேதனைக்குரிய விஷயம்தான்...

*******

வால் செய்தி: மதுரையில் நடந்த கலவரத்திற்கு பொறுப்பேற்று முன்னாள் இன்னாள் மதுரை மேயர்கள் காவல்துறையில் சரணடைந்திருப்பதும்.. இதன் நாயகனாகக் கருதப்பட்ட மு.க. அழகிரி சென்னையில் பகிரங்கமாக தோன்றுவதும்..... தளபதி படத்தில் ரஜினிக்கு பதில் மம்மூட்டியின் ஆள் ஒருவர் சரணடைவதை நினைவுபடுத்துகிறது!

ஒன்னுமே புரியல ஒலகத்துல... என்னமோ நடக்குது மர்மமா இருக்குது... என்ற சந்திரபாபுவின் பாடலும் நினைவுக்கு வருகிறது...

**********

09 மே 2007

ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு...

ரிலையன்ஸ் கடைகளுக்கு எதிர்ப்பு... பா.ம.கவின் லேட்டஸ்ட் ஸ்டண்ட்!!


இப்போதெல்லாம் தமிழக சட்டசபையில் தினமும் ஒரு நகைச்சுவை காட்சியை அரங்கேற்றுவதென திமுகவின் தோழமைக் கட்சிகளில் ஒன்று இறங்கியிருக்கிறது. அது எந்த கட்சி என்று வெளிச்சம் போட்டக் காட்ட தேவையில்லையென்று நினைக்கிறேன்.

நேற்றைய தமாஷ்...

குறிப்பிட்ட கட்சித்தலைவர் எழுந்து ரிலையன்ஸ் கடைகளால் சிறு காய்கறி வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்களை சென்னையிலிருந்து மட்டுமல்லாமல் தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்.

அதைவிட வேடிக்கை... தமிழக முதல்வரின் பதிலுரை...

'ரிலையன்ஸ் கடைகளை மூடும் அதிகாரம் தமிழக அரசுக்கு கிடையாது. ஆகவே மத்திய அரசுக்கு பரிந்துரைப்போம். மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த விஷயத்தை எழுப்புவோம்.'

நல்லவேளையாக சட்டமன்றத்தில் நடந்த இந்த கூத்தை சன் டிவியில் மட்டுமே காண முடிந்தது. இன்றைய பத்திரிகைகள் எதுவும் அதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை... அதாவது ஆங்கில பத்திரிகைகள்...

நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன் என்பதால் கடந்த நாற்பதாண்டு காலத்தில் இங்கு ஏற்பட்டு வரும் பல மாறுதல்களையும் அதனால் சராசரி மனிதனின் தினசரி வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் உணரமுடிகிறது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் நகரமெங்கும் பெரும்பாலான கடைகள் செட்டியார் சமூகத்தைச் சார்ந்தவர்களின் கைவசமிருந்தது. பிறகு பெருந்தலைவர் காமராஜின் ஆட்சி காலத்தில் அது நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்களின் கைகளுக்கு மாறியது. காங்கிரசாரின் கைவசமிருந்த ஆட்சி திராவிடக் கட்சிகளுக்கு மாறிய ஆரம்ப காலத்தில் இவ்விரு சமூகத்தைச் சார்ந்தவர்களின் ஆதிக்கம் சற்றே தளர்ந்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் (இன்றைய தோழமைக் கட்சியைச் சார்ந்தவர்கள்) சென்னையை நோக்கி படையெடுத்து அங்கிங்கெனாதபடி எங்கும் பரவ ஆரம்பித்தனர்.

அதற்குப் பிறகு வடநாட்டைச் சார்ந்தவர்கள்... அடகுக் கடையிலிருந்து பாத்திரக் கடைகள், துணிக்கடைகள், பகட்டான ஷோ ரூம்கள் என இவர்களுடைய ஆதிக்கம்தான்...

பிறகு நம்முடைய அண்டை மாநிலமான கேரளத்தினரின் படையெடுப்பு.. இன்று சென்னையிலுள்ள டீக்கடைகள், பெட்டிக் கடைகள், பேக்கரி, ஃபேன்சி கடைகள் இவர்கள் கைவசம்... அவர்களைத் தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்தவர்கள்...

இன்று சென்னையிலிருக்கும் பல உணவகங்கள் இவர்களிருவர் கைவசம்...

இன்று சில்லறை வியாபாரிகள் அதாவது பலசரக்கு கடைகளை வைத்திருப்பவர்களும் கூட பலர் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள்தான்...

ஆக கடந்த முப்பதாண்டு காலமாக சென்னையில் தமிழகத்தைச் சார்ந்தவர்களை ஒதுக்கிவிட்டு ஆதிக்கம் செலுத்துபவர்கள் பிற மாநிலத்தவர்கள்தான்...

இதே காலக்கட்டத்தில் பல்நோக்கு அதாவது மல்ட்டி லெவல் ட்ரேடிங் நிறுவனங்கள் பல தோன்றி இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயின... ஸ்டாப் அண்ட் ஷாப் சங்கிலி ஷோ ரூம்கள் இதற்கு ஒரு நல்ல உதாரணம்..

இதில் இருபதாண்டு காலத்திற்கும் மேல் நிலைத்து நிற்பது நீல்கிரீஸ் கடைகள்.... அதற்குப் பிறகு வந்தது ஃபுட் வேர்ல்ட் கடைகள்... கடந்த ஆண்டு இவை ஸ்பென்சர் டெய்லி, ஃபுட் வேர்ல்ட் என இரண்டானது... இவ்விரண்டு நிறுவனங்கள் இன்று சுமார் நூறு பலசரக்கு மற்றும் காய்கறி கடைகளை நடத்துகின்றன... போறாததற்கு பழமுதிர்ச்சோலை என்ற பெயரில் சுமார் ஐம்பது கடைகள்...

ஆனால் இந்த கடைகளில் வாங்குபவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்...

ஜீன்சும் டீஷர்ட்டும் போட்ட கும்பல்தான்.. அவர்களுடன் ஐ.டி நிறுவனங்களில் ஊதியத்திற்கு பதிலாக கிடைக்கும் கூப்பன்வாசிகள், க்ரெடிட் கார்ட், டெபிட் கார்ட்வாசிகள்...

என்னுடைய இரு மகள்களும் இத்தகைய கடைகளுடைய வாடிக்கையாளர்கள்தான்.. மறுப்பதற்கில்லை..

ஆனால் நானோ அல்லது என்னுடைய மனைவியோ எப்போதாவது அத்திபூத்தாற்போல்தான் இத்தகைய கடைகளுக்குள் நுழைவோம்.. அதுவும் பலசரக்குக் கடைகளில் கிடைக்காத பொருட்களுக்காக... நிச்சயம் காய்கறி வாங்க நுழைவதில்லை..

நான் குடியிருக்கும் குடியிருப்பின் வாசலிலேயே ஃபுட் வேர்ல்ட கடையும் அங்கிருந்து பத்து கட்டடங்கள் தள்ளி ஸ்பென்சர் டெய்லி கடையும் உள்ளது... இதே தெருவில் நம்முடைய gool old காய்கறிக் கடைகளும் இருக்கின்றன...

அவர்களிடம் கேட்டால்... அட போங்க சார்.. இவனுங்கல்லாம் எத்தன நாளைக்கி... நா இந்த கடைய போட்டு பத்து வருசத்துக்கு மேல ஆவுது... நாங்க என்ன ஓடியா போய்ட்டோம்... ஆனா இவனுங்க இன்னைக்கி இருப்பானுங்க... நாளைக்கி? என்பார்கள் கூலாக...

இவர்களுக்காக அரசியல்வாதிகள் பரிந்துபேசிக்கொண்டு வருவதெல்லாம் வெறும் நாடகத்தனமான அதுவும் அமெச்சூரிஷான செயல் என்பது நமக்கு மட்டுமல்ல அவர்களுக்கும் மிக நன்றாகவே தெரிந்துதானிருக்கிறது...

ஆனால் ஒன்று இப்படி பேசுபவர்கள் காய்கறி வாங்குவது எங்கு என்று பார்த்தால்.... ஆங்கிலமே வேண்டாம் என்று சொல்லிக்கொண்டு தன்னுடைய பேரப் பிள்ளைகளை கான்வெண்ட் பள்ளிக்கு அனுப்புவதுபோலத்தான்...

*******

08 மே 2007

தயாநிதிமாறன் நம்பர் ஒன்!

கடந்த சில நாட்களாகவே சன் டிவியில் வெளியாகும் சர்வே முடிவுகள் (தினகரன் மற்றும் ஏசி நெயில்சன் இணைந்து நடத்தும்) வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

நேற்றைய சர்வேயில் தமிழகத்தைச் சார்ந்த மத்திய அமைச்சர்களை பற்றிய பொதுமக்களின்(!) கணிப்பில் தயாநிதிமாறன் முதலிடத்தையும் அவரைவிட சுமார் 30% வித்தியாசத்தில் அடுத்தபடியாக ப.சிதம்பரத்தையும் கணித்திருந்தார்கள். ப சிதம்பரத்தை குறைத்து மதிப்பிட்டதும் அத்தனை முக்கியமாக படவில்லை. ஆனால் அன்புமணியை ஒரேயொரு விழுக்காடு மக்கள் மட்டும் தெரிந்தெடுத்திருப்பதுதான் பெரிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அதாவது தமிழக முதல்வரே இத்தகைய சர்வேக்கள் தேவைதானா என கேட்கும் அளவுக்கு...

அதற்கு அவர் கூறியுள்ள காரணம் இத்தகைய கணிப்புகள் கூட்டணி கட்சிகயினருடைய மனதை சங்கடப்படுத்தி விடக்கூடிய வாய்ப்புள்ளன என்பதுதான்...

குறிப்பாக சமீபகாலமாக ஆட்சியை எதற்கெடுத்தாலும் குறை கூற துவங்கியிருக்கும் ஒரு கட்சித்தலைவரைப் பற்றித்தான் அவருடைய கவலையெல்லாம்...

சரி...இத்தகைய கணிப்புகளில் எந்த அளவுக்கு உண்மையிருக்க வாய்ப்புள்ளது. அல்லது அதை எந்த அளவுக்கு நம்பலாம்?

சாதாரணமாக பொதுமக்களுடைய கருத்துக் கணிப்பு எனப்படும் ஒரு முயற்சி உலகெங்கும் உள்ளதுதான்.

ஆனால் கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் கருத்தை விடவும் அதில் கருத்து கூறுபவர்களின் தரம்தான் மிகவும் முக்கியமானது. மேலை நாடுகளை எடுத்துக்கொண்டால் கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் கரு தேவையற்றது அல்லது அது அத்தனை பெரிய விஷயமல்ல என மக்கள் கருதும் பட்சத்தில் 'I have nothing to say' என்று பெரும்பாலோனோர் மறுத்துவிடுவார்கள். விருப்பமில்லாவிடினும் எதையாவது சொல்லி வைப்போமே என்று தங்களுடைய விருப்பத்திற்கு நேர் எதிராக சொல்லி வைப்பதில்லை. ஏனெனில் படித்தவர்கள், விஷயஞானம் உள்ளவர்களுக்கு தங்களுடைய கணிப்பின் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பது மட்டுமல்லாமல் அதனுடைய மதிப்பையும் நன்கு உணர்ந்திருக்கின்றனர். மேலும் அங்கு நடைபெறும் கருத்து கணிப்புகளில் மிகவும் வளர்ச்சியடைந்த அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்ட கணிப்பு முறைகள் (assessment tools) பயன்படுத்தப்படுகின்றன.

தினகரனுடன் இணைந்து செயல்பட்ட ஏசி நெயில்சன் நிறுவனம் பயன்படுத்திய கணிப்பு முறைகளில் குறை காணுவதில் பயன் இல்லை. ஆனால் அவர்கள் கணிப்புக்கு பயன்படுத்திய மக்கள் (target group) எந்த அளவுக்கு விஷயஞானம் உள்ளவர்கள் என்பதில்தான் ஐயம் உள்ளது.

தினம் ஒரு செய்தியுடன் மக்கள் முன் பரபரப்பை ஏற்படுத்தும் ஒருவரை சிறப்பாக செயல்படுகிறார் என கணிப்பது எவ்வளவு சரியில்லையோ அதைவிட தவறானது திரைமறைவில் அயாரது உழைப்பவரை, தன்னை மக்கள் முன் படம் பிடித்துக் காட்ட விரும்பாதவரை குறைவாக மதிப்பிடுவது.

மேலும் பொதுமக்களுடைய கருத்து என்பது நாட்டின் அல்லது தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் கருத்து அல்ல என்பதையும் நம்மவர்களுள் பலரும் உணர்வதில்லை. ஒரு பகுதியைச் சார்ந்த மக்களுள் ஒரு சிலரை random முறையில் தெரிவு செய்து அவர்களுடைய கருத்தை அடிப்படையாகக் கொண்டு அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களுடைய கணிப்பாக முடிவு செய்வதுதான் இத்துறையில் பிரபலமாக இருக்கும் ஏசி நெயில்சன் போன்ற சர்வதேச கருத்து கணிப்பு நிறுவனங்களின் வேலை.

அவர்கள் இதற்கு பயன்படுத்தும் கருவிகள் assessment tools or methods பல உள்ளன.

ஆனால் அதில் முக்கியமானது sample group.. அதாவது ஒரு கோடி ஜனத்தொகையில் நேரடியாக சந்தித்து கேள்விகளைக் கேட்க பயன்படுத்தும் மக்களின் தொகை (எண்ணிக்கை). இத்தகைய ஜனத்தொகையில் வெறும் ஆயிரம் பேரை மட்டும் சந்தித்து கேட்டுவிட்டு அதை மென்பொருளை பயன்படுத்தி ஒட்டுமொத்த ஒரு கோடி மக்களின் கணிப்பாக மாற்றுவதை ஏமாற்று வேலை என்று கூறுவதைத் தவிர வேறு வழியில்லை.

பிறகு யாரிடம் கேள்வி கேட்பது என்பது. அதாவது target group. இதற்கு சாதாரணமாக தொலைபேசி டைரக்டரியை சில நிறுவனங்கள் பயன்படுத்துவதுண்டு. இதன் நோக்கம் ஒரு பகுதியில் வசிப்பவர்களை மட்டுமல்லாமல் ஒரு நகரத்தில் வசிக்கும் சகலரையும் target செய்ய முடியும். அப்படியல்லாமல் தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள வாக்காளர் பட்டியலை ஆதாரமாக வைத்து தெரிவு செய்தால் ஒரே பகுதியில் அல்லாமல் சில சமயங்களில் ஒரே தெருவில் வசிப்பவர்களும் கூட அதிக அளவில் தெரிவு செய்துவிட வாய்ப்புள்ளது.

அடுத்தது பதில் சொல்பவர்களை lead செய்வது. அதாவது கருத்து கணிப்பில் ஈடுபட்டவர்களுக்கு என்ன தேவையோ அந்த பதில் வரும்வரை தொந்தரவு செய்வது. 'எனக்கு பதில் சொல்ல இஷ்டமில்லீங்க.' என்பவர்களையும், 'பரவால்லீங்க எதையாவது மனசுல பட்டத சொல்லுங்க. சரியா இருக்கணும்னு இல்லை.' என்று கேட்டு துளைப்பது. அவர்கள் 'விடமாட்டான் போலருக்கே... எதையாவது சொல்லி வைப்போம்.' என்று பட்டியலில் இருப்பவர்களில் எவரையாவது சொல்லி வைப்பார்கள்.

இறுதியாக கேள்விகளை கேட்கும் முறை. குறிப்பாக தினகரன் ஏசி நெயில்சர்ன் நிறுவன கணிப்பில் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். இதிலுள்ள எல்லா கேள்விகளையும் ஒரு குறிப்பிட்ட மக்களிடம் கேட்பதில் பயனில்லை. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியைக் கலைத்துவிடலாமா என்ற கேள்வியை கிராமவாசிகளிடமோ அல்லது தாத்தா பாட்டியிடமோ கேட்பதில் பயனில்லை. அதுபோலத்தான் மத்திய அமைச்சர்களின் செயல்பாட்டைக் குறித்த கேள்வியும். முதலில் மத்திய அமைச்சரவையில் இன்று தமிழ்நாட்டிலிருந்து எத்தனை அமைச்சர்கள் உள்ளனர் என்பதே எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை. அந்த முழுப்பட்டியலையும் கேள்வி கேட்டவர்களிடம் காண்பித்து கேள்வி கேட்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட அமைச்சரின் பெயரை மக்கள் முன்வைத்து கேட்டால் அவரைத்தான் பலரும் தெரிவு செய்வார்கள் என்பதும் உண்மைதான்.

இதற்கு உதாரணம் நம்முடைய தமிழ்மண பதிவாளர்கள் 'இவ்வருடத்திய சிறந்த பதிவுகள்' அல்லது 'சிறந்த பதிவாளர்கள்' என்று சகட்டுமேனிக்கு வெளியிடப்படும் பட்டியல்கள். இதை 'எனக்கு பிடித்த பத்து பதிவுகள்' என்றோ அல்லது 'படித்ததில் பிடித்தது' என்றோ பட்டியலிட்டாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் எனக்கு பிடித்தவை மற்றவர்களுக்கு பிடிக்காமல் போகலாமே..

ஆகையால் இத்தகைய கணிப்புகளுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு முதலமைச்சரோ அல்லது ஒரு குறிப்பிட்ட கூட்டணி கட்சி தலைவரோ ஆதங்கப்படுவது தேவையில்லாத ஒன்று என்பதுதான் என்னுடைய கருத்து. இதற்கும் மாற்று கருத்து இருக்கலாம். தவறில்லை.

*********

03 மே 2007

வங்கி தில்லுமுல்லுகள் 1

இந்திய வங்கிகளில் கடந்த மூன்றாண்டுகளில் நடைபெற்ற தில்லுமுல்லுகளின் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்:

வருடம் - எண்ணிக்கை - தொகை

2002 - 1744 - ரூ. 399.53 கோடி
2003 - 2207 - ரூ. 653.50 கோடி
2004 - 2660 - ரூ. 600.16 கோடி

இத்தகைய தில்லுமுல்லுகள் வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள்-வாடிக்கையாளர்கள் கூட்டணி என பலராலும் நிகழ்த்தப்படுகின்றன.

இங்கு நான் குறிப்பிட்டுள்ள தில்லுமுல்லுகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் கண்டுபிடிக்கப்பட்டவை.. கண்டுபிடிக்கப்படாமல் இருப்பவை எத்தனை மடங்கோ!

என்னுடைய முப்பதாண்டு வங்கி வாழ்க்கையில் நான் சந்தித்த அல்லது கேள்விப்பட்ட சில சுவாரஸ்யமான தில்லுமுல்லுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைத்ததன் விளைவே இத்தொடர்...

சமயம் கிடைக்கும்போதெல்லாம் எழுதுகிறேன்.

ரவி சர்மா ஒரு வணிகர். வடநாட்டைச் சார்ந்தவர், தமிழ்நாட்டில் குடியேறி பல வருடங்களாகியிருந்தன.

இதைத்தான் வாங்குவது விற்பது என்றில்லாமல் காலத்திற்கேற்றாற்போல் தன்னுடைய வணிகத்தை மாற்றிக்கொள்ளும் குணம் கொண்டவர். எப்படியாவது குறுகிய காலத்தில் லாபம் சம்பாதித்து செல்வந்தராக வேண்டும் என்பதுதான் அவருடைய குறிக்கோள். குறுகிய காலம், அதிக லாபம். இதை தன்னுடைய தாரக மந்திரமாக கொண்டிருந்தவர் ரவி.

சள, சளவென்று பேசக் கூடியவர். முதல் முறை சந்திப்பவர்களிடம் கூட வெகு எளிதில் ஒட்டிக்கொள்ளக் கூடியவர். ஆகவே அவர் குடியிருந்த பகுதியிலேயே வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு மாற்றலாகி வந்த மோகன் குமார் ஒரு வங்கி மேலாளர் என்பதை கண்டுபிடிப்பதில் அவருக்கு சிரமம் இருக்கவில்லை.

தன்னுடைய 'குறுகிய கால, அதிக லாப' திட்டத்திற்கு மோகன் தான் ஏற்ற ஆள் என்பதை கண்டுக்கொண்ட ரவி அவர் மாற்றலாகி வந்த சில நாட்களிலேயே வாயெல்லாம் பல்லாக சென்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். 'சார் நீங்க கவலையே படாதீங்க. ஒங்களுக்கு கேஸ் கனெக்ஷன் கிடைக்கறதுலருந்து ஒங்க பொண்ணுக்கு ஸ்கூல்ல அட்மிஷன் புடிச்சி குடுக்கற வரைக்கும் எல்லாத்தையும் நா பாத்துக்கறேன்.' என்றார் முதல் நாளே..

மோகன் மேலாளராக பதவி உயர்வு பெற்று முதன் முதலாக அந்த ஊரிலிருந்த கிளைக்கு பொறுப்பேற்க வந்திருந்தார். மொழிப் பிரச்சினை இல்லையென்றாலும் பழக்கமில்லாத ஊர். நகரங்களிலேயே படித்து வளர்ந்த அவருக்கு நகரம் என்றும் சொல்ல முடியாமல் கிராமம் என்று சொல்ல முடியாமலிருந்த அந்த ரெண்டுங்கெட்டான் ஊரில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோலிருந்தது. அப்படிப்பட்டவருக்கு ரவி சர்மா ஒரு ஆபத்பாந்தவனாய் தோன்றினார். 'ரொம்ப தாங்ஸ் சார்.' என்று அவருடன் ஒட்டிக்கொண்டார்.

பிறகென்ன? ரவியின் திட்டத்தின் துவக்கமே அட்டகாசமாக இருந்தது. அடுத்த சில வாரங்கள் யார் யாரையோ பிடித்து மோகனுக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்துக்கொடுத்தார்.

மோகன் குமாருடைய கிளை மிகவும் சிறியது. அவருக்கு கீழே ஒரு கணக்காளர் (accountant), ஒரு கேஷியர் மற்றும் ஒரு குமாஸ்தா.. அவர்களுக்கு உதவ ஒரு சிப்பந்தி... வாசலில் குர்க்கா... என அவருடைய வங்கியிலிருந்த சிறிய கிளைகளுள் ஒன்று அது. கிளை துவக்கப்பட்டு ஒரு வருடமே ஆகியிருந்தது. கிளையை துவக்கிய மேலாளருடைய செயல்பாடு திருப்திகரமாக இல்லையென்பதால் அவர் ஒரே வருடத்தில் நீக்கப்பட்டு அப்போதுதான் பதவி உயர்வு பெற்றிருந்த மோகன் அங்கு மாற்றப்பட்டார்.

ஆக அவருடைய சிந்தனை முழுவதும் கிளையின் வணிக அளவை உயர்த்துவதிலேயே இருந்தது. 'ரவி சார் நீங்க இந்த ஊர சேர்ந்தவர்தானே... அதுவுமில்லாம பிசினஸ் பண்றீங்க. அதனால ஒங்க கணக்க மட்டுமில்லாம ஒங்களுக்கு தெரிஞ்ச ஃப்ரெண்ட்சையெல்லாம் எங்க பேங்குக்கு ரெக்கமெண்ட் பண்ணணும்.' என்று ரவியிடம் கேட்டுக்கொண்டதும், 'அதுக்கென்ன சார் செஞ்சிட்டா போச்சி... ஒங்களுக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன்.. நீங்க முதல்ல ஒங்க பிராஞ்சுக்கு சார்ஜ் எடுங்க.. அப்புறம் ஒரு நாள் சாவகாசமா ஒங்க ஆஃபீசுக்கு வரேன்...' என்றார். எப்படியும் மீன் வலையில் விழுந்தாயிற்று. அவசரப்படாமல் காரியத்தில் இறங்கலாம் என்ற எண்ணம் அவருக்கு!

ஆனால் இரண்டு, மூன்று வாரங்கள் கழிந்தும் ரவி வராமலிருக்கவே ஒருநாள் மோகனே அவரைத் தேடிக்கொண்டு அவருடைய வீட்டிற்குச் சென்றார். வீடு உள்ளும் புறமும் அட்டகாசமாக இருந்தது. மூன்றே பேர் கொண்ட குடும்பத்திற்கு இத்தனை பெரிய வீடா என்று மலைத்துப்போனார் மோகன். 'பெரிய புள்ளிதான் போலருக்கு.. .இவரோட கனெக்ஷன் கிடைச்சதுக்கு உண்மையிலேயே நா குடுத்து வச்சவந்தான்.' என்று நினைத்து மகிழ்ந்துபோனார்.

'என்ன சார்... திடீர்னு இந்த பக்கம்?' என்றவாறு வரவேற்றார் ரவி சர்மா அவருடைய வருகையின் நோக்கத்தைப் பற்றி அறியாதவர் போல். மீன் தானாகவே வந்து வலையில் விழவேண்டும் என்று காத்திருந்தவராயிற்றே!

'இல்ல சார்... நம்ம பேங்க் பக்கம் வரேன்னு சொன்னீங்களே... அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.' என்றார் மோகன் அசடு வழிந்தவாறு.

ரவி பதில் பேசாமல் உள்ளே திரும்பி தன் மனைவியை அழைத்தார். ஒரு சினிமா துணை நடிகையைப் போல் ஒப்பனை செய்துக்கொண்டிருந்த அவர் ஹாலுக்குள் நுழைந்ததுமே நேரே மோகன் அமர்ந்திருந்த சோபாவில் அவருக்கு மிக அருகில் அமர்ந்து, 'என்ன சார் தனியா வந்திருக்கீங்க... ஃபேமிலிய கூட்டிக்கிட்டு வரலையா?' என்று உரிமையாக கேட்க மோகன் சங்கடத்தில் நெளிந்தார். அவர் தொடர்ந்து, 'என்ன சாப்பிடறீங்க?' என்று உபசரிக்கவும் அவருடைய சங்கடம் கூடியது. வேறு வழியில்லாமல் அவர்களுடைய சமூகத்தினருக்கே உரிய ஸ்பெஷல் இனிப்புகளை கெட்டியான லஸ்சியுடன் விழுங்கி வைத்தார்.

ஆனால் அவர் வந்த விஷயத்தைப் பற்றி பேசவிடாமல் வேண்டுமென்றே ரவியும் அவருடைய் மனைவியும் மற்ற உலக விஷயத்தையெல்லாம் பேசி அவரை கிறங்கடித்தனர். மோகன் விடவில்லை. 'சார் நம்ம பேங்க்ல கணக்கு துவங்கறத பத்தி....' என்றார் புறப்படும் நேரத்தில்.

ரவி அப்போதுதான் நினைவுக்கு வந்ததுபோல...'அட ஆமா சார்... மறந்தே போய்ட்டேன்... நீங்க வந்ததும் நல்லதாப்போச்சி... இன்னைக்கி காலைலதான் ஒரு பெரிய அமவுண்ட் கைக்கு வந்துது... இருங்க கொண்டு வரேன்...' என்றவாறு தன் மனைவியை கண்சாடைக் காட்டிவிட்டு உள்ளே சென்றார். அவர் உள்ளே சென்றிருந்த நேரத்தில் அவருடைய மனைவி ஒரு அழகான புன்னகையுடன், 'எங்க ஹஸ்பெண்ட் தங்கமானவர் சார்.. ஒங்களெ எப்படியோ அவருக்கு ரொம்ப புடிச்சி போயிருச்சி... இல்லன்னா இவ்வளவு பெரிய அமவுண்ட ஒங்க பேங்க்ல போடுவேன்னு சொல்வாரா? நீங்க குடுத்துவச்சவர் சார்...' என்றதும் மோகன் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விட்டார்.

சற்று நேரத்தில் கையில் ஒரு துணிப்பையுடன் திரும்பி வந்த ரவி அதிலிருந்து கற்றை, கற்றையாக கரன்சி நோட்டுகளை எடுத்து டீப்பாயில் வைக்க தான் எதிர்பார்த்ததற்கும் மேலேயே தொகை இருக்கும் போலிருக்கிறதே என்று மலைத்துப்போனார் மோகன். 'சார் ரெண்டு லட்சத்து பத்தாயிரம் இருக்கு.' அத்தோட அஞ்சு லட்சத்துக்கு ஒரு செக்கும் இருக்கு. மொதல்ல இந்த கேஷ வச்சி கணக்கு தொடங்கிருங்க... அப்புறம் ரெண்டு நாள் கழிச்சி இந்த செக்க போட்டுருங்க.. இத குடுத்தவர் ஒரு ரெண்டு நாள் கழிச்சி போட்டா நல்லாருக்கும்னு சொல்லிட்டுத்தான் குடுத்தார். அதனாலத்தான் சொல்றேன்.. அவர் ரொம்ப நாள் கஸ்டமர்... ஏதோ பணமுடை போலருக்கு... நமக்கு பணத்த விட பிசினஸ் ரிலேசன்ஷிப்தான் சார் முக்கியம்...' என்றவாறு பணப்பையையும் காசோலையையும் மோகனிடம் நீட்டினார். 'ஒங்கக் கிட்டவே கேஷ குடுக்கறேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க... நாளைக்கு எனக்கு முக்கியமான வேல இருக்கு... பக்கத்துல ------------ வரைக்கும் போறேன்... காலையில போனா ராத்திரி ஆயிரும்... அதான்... ஒங்களுக்கு ஏதாச்சும் அப்ஜெக்ஷன் இருந்தா நாளைக்கு நம்ம வய்ஃப் கிட்ட குடுத்துவிடறேன்...' என்றார்.

மோகன் பதற்றத்துடன், 'என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க... ஒரு ரசீதும் கேக்காம நீங்களே பணத்த என்னெ நம்பி குடுக்கறப்போ... பேசாம குடுங்க சார்... நாளைக்கு நானே அப்ளிகேஷன் ஃபார்ம் கொண்டு வந்து குடுக்கேன்... நமக்குள்ள ஃபார்மாலிட்டியெல்லாம் எதுக்கு?' என்றார். அவருக்கு எங்கே ரெண்டு லட்சம் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயம்.

'அப்பன்னா சரி சார்.' என்று பெருந்தன்மையுடன் துணிப்பையை அவரிடம் கொடுத்தார் ரவி. தொடர்ந்து 'சார் நா வேணும்னா ஒங்கள ஒங்க வீட்ல ட்ராப் பண்ணிரட்டுமா சார்... இந்த ராத்திரி நேரத்துல கைல பணத்தோட...' என்று மோகனை வற்புறுத்தி தன்னுடைய சொகுசு காரிலேயே கொண்டு வீட்டில் இறக்கிவிட்டு செல்ல மோகன் தன்னுடைய அதிர்ஷ்டம் இவருடைய நட்பு கிடைத்தது என்று தன் மனைவியிடம் சொல்லி மகிழ்ந்தார்.

அடுத்த நாள் பணத்தைக் கொண்டு ரவி எழுதிக்கொடுத்திருந்த நிறுவனத்தின் பெயரில் ஒரு கணக்கை திறந்து ரொக்கத்தை அதில் செலுத்திவிட்டு தன் உதவியாளரை அழைத்து, 'சார் இந்த செக்க ஒங்க கஸ்டடியில வச்சிக்குங்க... ரெண்டு நாள் கழிச்சி க்ளியரிங்ல அனுப்பனா போறும்...' என்று கூறிவிட்டு, 'ஒரு கரண்ட் அக்கவுண்ட் ஓப்பனிங் ஃபார்ம பேர மட்டும் எழுதி என்கிட்டு குடுங்க... நான் அவர் கிட்ட கையெழுத்த வாங்கிட்டு நாளைக்கு கொண்டு வந்து தரேன்.. அதுக்கப்புறம் செக் புக் எல்லாம் குடுத்தா போறும்னு சொல்லிட்டார். இந்த கேஷுக்கு ஒரு ரிசிட் மட்டும் போட்டு கொண்டாங்க.' என்று உத்தரவிட்டார்.

அன்று மாலையே மோகன் கையில் ஒரு இனிப்பு பெட்டியுடன் ரவியின் வீட்டிற்கு செல்ல அங்கு அவருடைய மனைவியும் பதினெட்டு வயது மதிக்கத்தக்க அவருடைய மகளும் மட்டுமிருந்தனர். 'அவர் இன்னும் வரலை சார்.. நீங்க குடுத்துட்டு போங்க.. அவர் கையெழுத்து போட்டு ஒங்க பேங்குக்கு வந்து குடுத்துடறேன்னு சொல்லியிருக்கார்.' என, 'பரவால்லை மேடம்... அவசரமில்லை.' என்ற பதிலுடன் திரும்புகிறார்.

அடுத்த நாளும் சரி அதற்கடுத்த நாளும் ரவி சர்மா கிளைக்கு வரவில்லை. ஆயினும் மோகன் அதைப் பற்றி கவலைப்படவில்லை. அவர் ரொம்பவும் பிசியாருக்கார் போலருக்கு என்றுதான் நினைத்தார். மூன்றாம் நாள், 'சார் அந்த செக்க இன்னைக்கி போட்டுருங்க.. எனக்கு நாளைக்கு கொஞ்சம் அமவுண்ட் தேவைப்படும்.' என போன் வருகிறது அவரிடமிருந்து. 'சரி சார்...' என்கிறார் மோகன்... பிறகு தொடர்ந்து, 'ஒங்களுக்கு செக் புக் ஏதும் வேணுமா சார்?' என்கிறார்.

'பின்னெ வேணாமா சார்? செக் புக் இல்லாம எப்படி பிசினஸ் பண்றது?' என்ற அட்டகாசமான சிரிப்பு எதிர் முனையிலிருந்து வருகிறது. 'நா நம்ம ஆஃபீஸ் பியூன அனுப்பறேன்... குடுத்து விடுங்க...'

அப்படியே அடுத்த அரைமணி நேரத்தில் கிளைக்கு வரும் சிப்பந்தியிடன் செக் புக்கை கொடுக்குமாறு தன் உதவியாளரிடம் பணிக்கிறார். அவரோ, 'சார் ஒப்பனிங் ஃபார்ம் இன்னும் வரலையே' என்கிறார். அதானே என்று நினைத்த மோகன் கிளைக்கு வந்தவரிடம் வினவுகிறார். 'சார் மொதலாளி ஒன்னும் சொல்லலையே... செக் புக் குடுப்பாங்க வாங்கிட்டு வந்துருங்கன்னுதான் சொன்னார். நா வேணும்னா போய் ஓப்பனிங் ஃபார்ம ஃபில்லப் பண்ணி குடுத்தாத்தான் செக் புக் கிடைக்குமாம்னு சொல்லிரட்டுமா சார்?' என்கிறார்.

மோகன் பதற்றத்துடன், 'அதெல்லாம் வேணாங்க... நீங்க செக் புக்க கொண்டு போங்க.. நா சாரோட வீட்டுல போயி ஃபார்ம வாங்கிக்கறேன்.' என 'அப்படீன்னா சரிசார்.' என்று வாயெல்லாம் பல்லாக செக் புக்கை வாங்கிக்கொண்டு செல்கிறார் வந்தவர்..

அதுதான் அவர் கடைசியாக அவரையோ அவருடைய முதலாளியையோ பார்த்தது.

இதில் என்ன தில்லுமுல்லு என்று நீங்கள் வியப்பது புரிகிறது.

முதலில் ரவி சர்மா, ரவி சர்மாவே அல்ல! அத்துடன் அவர் மோகனிடம் கொடுத்த காசோலையிலிருந்த நிறுவனத்திற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது எப்படி அவருடைய கைக்கு வந்தது என்பது இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

ஆனால் மோகனுடைய கிளை காசோலையை க்ளியரிங்கில் அனுப்பியபோது சம்பந்தப்பட்ட வங்கி எந்த மறுப்பும் தெரிவிக்காமல் அதை பாசாக்கி அனுப்பி வைக்க ரவி சர்மாமீது எவ்வித சந்தேகமும் இல்லாமலிருந்த மோகன் அந்த பணத்தை அவருடைய நிறுவனத்தின் கணக்கில் வரவு வைக்கிறார்.

அடுத்த நாளும் நிறுவனத்தின் ஓப்பனிங் ஃபார்ம் வராததால் அன்று இரவு வீட்டில் வந்து வாங்கிக்கொள்ளட்டுமா என்று ரவியை தொலைபேசியில் அழைத்து மோகன் கேட்க 'இதுக்கு எதுக்கு சார் நீங்க வீட்டுக்கு வரணும். இதோ குடுத்து விடறேன் சார்.' என்று ஒருவரிடம் கொடுத்து அனுப்புகிறார். அத்துடன் மோகன் திருப்தியடைந்துவிடுகிறார்.

அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த ஒரு வாரத்தில் கணக்கிலிருந்த ரூ.7.10த்தில் நூறு ரூபாயைத் தவிர எடுக்கப்பட்டுவிடுகிறது. அதில் எவ்வித சந்தேகமும் மோகனின் கணக்காளருக்கு ஏற்படாததால் அவர் மோகனிடம் கூறாமலிருந்துவிடுகிறார்.

ஒரு மாதம் செல்கிறது. ஒருநாள் திடீரென்று கிளை இயங்கிவந்த பகுதி காவல்நிலையத்திலிருந்து அதிகாரியொருவர் வருகிறார். 'சார் இந்த செக்க ஒங்க பேங்க்லருந்து கலெக்ட் பண்ணியிருக்கீங்க. யாரோட அக்கவுண்ட்ல க்ரெடிட் பண்ணியிருக்கீங்கன்னு சொல்றீங்களா?' என்று துவங்கி ரவிசர்மா தன்னுடைய நிறுவனம் என்று கூறி துவங்கியிருந்த கணக்கில் அதுவரை நடந்திருந்த வரவு செலவை ஆராய்கிறார்கள்.

'இவர ஒங்களுக்கு தெரியும்னு ஓப்பனிங் ஃபார்ம்ல நீங்களே கையெழுத்துப் போட்டிருக்கீங்க? எப்படி சார் தெரியும்?' என்ற காவல்துறை அதிகாரியின் கேள்விக்கு என்ன பதிலளிப்பது என தெரியாமல் தயங்கி பிறகு அவர் தான் மாற்றலாகி வந்த சமயத்தில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டதிலிருந்து கணக்கு துவங்கிய நாள்வரை நடந்தவைகளை கூறுகிறார். 'அவர் சொந்த வீட்லதான் குடியிருக்கார் சார். இப்பவே வேணும்னாலும் போய் பாக்கலாம், வாங்க.' என்று எழுந்து அவருடன் செல்கிறார். வீடு பூட்டிக் கிடக்கிறது. அடுத்த வீட்டுக்காரர், 'சார் அவர் ரெண்டு வாரத்துக்கு முன்னால வீட்ட காலி பண்ணிட்டு சொந்த ஊருக்கே போறேன்னு போய்ட்டாரே.' மோகன் அப்பாவித்தனமாக சார் 'இது சொந்த வீடுன்னு சொன்னாரே?' என்கிறார். அவர் சிரிக்கிறார். 'என்னது அப்படியா சொன்னார்? சார் அந்தாளு சரியான ஃப்ராடுன்னு நினைக்கிறேன். வீட்டு ஓனர் மெட்றாஸ்ல இருக்கார். நம்ம ஃப்ரெண்டுதான். நாந்தான் இந்த வீட்ட பாத்துக்கறேன். ஒரு ப்ரோக்கர்தான் இந்தாள கூட்டிக்கிட்டு வந்தார். வடநாட்டுக்காரராச்சேன்னு நானும் நெனச்சேன். ஆனா நா தமிழ்நாட்லயே பொறந்து வளந்தவன் சார், ஒங்களுக்கு எந்த பிரச்சினையும் வராதுன்னு சொன்னார். எவ்வளவு வாடகைன்னாலும் தரேன்னார். அதான் குடுத்தேன். ஆனா அந்தாளோட நடவடிக்கையெல்லாம் பார்த்தா சந்தேகமாத்தான் இருந்திச்சி. ரெண்டு நநளைக்கு முன்னால அந்தாளு கூட இருந்த ரெண்டு பொம்பளைங்களும் சண்டை போட்டுக்கிட்டு போயிருச்சிங்க. அப்புறம்தான் தெரிஞ்சது அந்த ரெண்டு பேருக்கும் அந்தாளுக்கும் ஒறவேயில்லங்கறது. சரியான ஃப்ராடு கும்பல் போலருக்கு. அதான் வீட்ட காலி பண்ணிருங்கன்னு சொல்லிட்டேன்.' என்றதும் மோகன் மயக்கமடையாத குறைதான்.

இப்படியும் ஒரு ஏமாளியா என்பதுபோல் அவரைப் பார்த்தார் காவல்துறை அதிகாரி.

ஆனால் சட்டம் தன்னுடைய வேலையை செய்யத்தான் செய்தது. காசோலைக்கு சொந்தக்காரர் மோகனின் வங்கி மீது வழக்கு தொடர்ந்தபோதுதான் அவருடைய மேலதிகாரிகளுக்கு விஷயம் தெரியவருகிறது. மோகனின் உதவியாளருடைய சாட்சியம் அவரை குற்றவாளியாக்குகிறது. அரசு வங்கி என்பதால் பதவியிறக்கம் மட்டுமில்லாமல், வேலையும் பறிபோகிறது. வங்கிக்கு பணம் நஷ்டம்.. மோகனுக்கு வாழ்க்கையே நஷ்டப்பட்டுப் போகிறது.

********