30 ஜூலை 2013

கிரிமினல் அரசியல்வாதிகள்!

பணமும் பலாத்காரமும் தேர்தல்களில் மட்டும் வெற்றிபெற உதவுவதில்லை. அரசியலை பணம் பண்ணும் தொழிலாகவும் மாற்ற உதவுகிறது.

உச்ச நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு கிரிமினல் குற்றங்களில் சிறை சென்றவர்கள் நாட்டில் நடைபெறவிருக்கும் எந்த தேர்தல்களிலும் போட்டியிடும் தகுதியை இழந்துவிடுவார்கள் என்று தீர்ப்பளித்தது நினைவிருக்கலாம்.

நாட்டை ஆளும் நம் தலைவர்கள் எந்த அளவுக்கு செல்வந்தர்களாக,  கிரிமினல்களாக உள்ளனர் என்பதை சமீபத்தில் வெளியாகியுள்ள கணிப்பு ஒன்று மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த ஆய்வின்படி கடந்த பத்து ஆண்டுகளில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் மனுக்களுடன் சமர்ப்பித்த சொத்து விவரங்களின்படி அவர்களுள் 62,847  பேருடையை சராசரி சொத்து மதிப்பு சுமார் 1.37 கோடி!

ஆனால் அவர்களுள் ஏற்கனவே தேர்தல்களில் வெற்றி பெற்றவர்களுடைய சராசரி சொத்து மதிப்பு ரூ.3.83 கோடி!

இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல்: இவர்களுள் ஆள் கடத்தல், கொலை, கற்பழிப்பு போன்ற கிரிமினல் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக ரூ.4.38 கோடி!

அரசியல் மற்றும் க்ரிமினல் குற்றங்கள் மூலம் கோடிகளை சம்பாதிக்கும்  இத்தகைய வேட்பாளர்கள் மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை பெறுவதிலும் முன்னிலை வகிக்கின்றனர் என்பதும் உண்மை.

சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்ட தமிழ் திரைப்படம் ஒன்றில் நேர்மையுடன் செயல்படும் அமைச்சரைவிட தன் தந்தையிடமே கடத்தல் நாடகம் ஆடி பணத்தை கொள்ளையடிக்கும் அவருடைய மகனுக்கு கட்சித் தலைவரும் முதல்வருமானவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதுபோன்ற ஒரு காட்சி வைக்கபட்டிருந்தது.

நிஜ வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது என்கிறது இந்த ஆய்வு. நேர்மையாளர்கள் என்று பெயரெடுத்த வேட்பாளர்களை விட கிரிமினல்கள் என்ற குற்றத்தை சுமந்துக்கொண்டிருப்பவர்களுக்குத்தான் தேர்தலில் போட்டியிட மீண்டும் மீண்டும் வாய்ப்பளிக்கப்படுகிறதாம்!

2004ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட 62,847 வேட்பாளர்களில் 11,063 வேட்பாளர்கள் (18%) ஏற்கனவே கிரிமினல் வழக்குகளில் சம்மந்தப்பட்டிருந்தவர்கள். இவர்களுள் 5,253 வேட்பாளர்கள் (8%) கொலை, கொள்ளை போன்ற பயங்கர வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் என்கிறது இந்த ஆய்வு.

அதுமட்டுமல்ல. இவர்களுள் 4182 வேட்பாளர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றங்களை ஆய்வு செய்தபோது இவர்களுள் 1072 வேட்பாளர்கள் முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டபோதே அவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தன என்றும் இவர்களுள் 788 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோதும் கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருந்தன என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர்களுடைய முழு குற்றப் பின்னணியும் தெரிந்திருந்தும் இவர்களுக்கு தேர்தலில் மீண்டும் போட்டியிட அவர்கள் சார்ந்திருந்த கட்சிகளால் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதும் தெளிவாகிறது.

மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர்களுடைய சொத்து மதிப்பு முன்பிருந்ததை விட பலமடங்கு அதிகரித்துள்ளதாம்!

மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்ட 4181 வேட்பாளர்களில் 3173 வேட்பாளர்களுடைய சொத்து மதிப்பு சராசரியாக 2.34 கோடி உயர்ந்துள்ளதாம். அதில் கிரிமினல் குற்றச்சாட்டுகளை சுமந்துக்கொண்டிருப்பவர்களுடைய சொத்து மதிப்பு இரண்டு மடங்கும் 684 பேர்களுடைய சொத்து மதிப்பு ஐந்து மடங்கும் 317 பேர்களுடைய சொத்து மதிப்பு சுமார் பத்து மடங்கும் அதிகரித்துள்ளதாம்! (ஆச்சரியக் குறி போட்டு போட்டு கை அலுத்துருச்சிங்க.... ஆய்வு முடிவுகள் அனைத்துமே ஆச்சரியம் மட்டுமல்லாமல் அதிர்ச்சியும் அளிக்கின்றன என்றால் மிகையாகாது)

இத்தகையோரை மீண்டும் மீண்டும் தேர்தலில் போட்டியிட அனுமதித்த கட்சிகள் எவை என்று தெரிய வேண்டுமா?

இதோ பட்டியல்:

சிவசேனா: 2004லிருந்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களுள் 75% பேர் க்ரிமினல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.

RJD: 46%

JD: 44%

BJP: 31%

Cong: 22%

அங்கிங்கெனாதபடி அனைத்துக் கட்சிகளிலும் நிறைந்திருக்கும் கிரிமினல்களுக்கு எதிராக வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வரை இவர்களை சட்டம் ஒன்றும் செய்துவிட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

வேட்பாளர்கள் தங்களுடைய தேர்தல் மனுக்களுடன் சொத்து பட்டியலை மட்டுமல்லாமல் தங்களுக்கு எதிராக நிரூபணமான மற்றும் நிலுவையிலுள்ள கிரிமினல் வழக்குகளைப் பற்றிய பட்டியலையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தால் சட்டம் அவர்களை தண்டிக்காவிட்டாலும் மக்கள் அவர்களை இணம் கண்டுக்கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காமல் நிராகரிக்க முடியும்.

செய்யுமா தேர்தல் ஆணையம்?
22 ஜூலை 2013

என் முதல் கணினி அனுபவம் ((நிறைவுப் பகுதி)

இருந்தாலும் தனியா வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணுங்கற என்னோட ஆசை 1999லதான் நடந்துது. 

நாலஞ்சி வருசத்துக்கப்புறம் மும்பையிலருந்து டிரான்ஸ்ஃபர் ஆயி சென்னைக்கு வந்துட்டேன். 

மூத்த மகள் கல்லூரி முதலாம் ஆண்டில் நுழைந்திருந்தாள். 'என் ஃப்ரென்ட்ஸ் வீட்லல்லாம் கம்ப்யூட்டர் இருக்குப்பா' என்று நச்சரிக்க சரி வாங்கித்தான் பாப்போமேன்னு டிசைட் பண்ணி ஒவ்வொரு கம்ப்யூட்டர் கடையா ஏறி இறங்குனோம். 

அப்போ கொஞ்சம் பிரபலமா இருந்தது HCL Beanstalk. 1GB HDD. 32MB RAM. ஆச்சரியமா இருக்குல்லே? இப்ப இருக்கற கம்ப்யூட்டர் கான்ஃபிகரேஷனோட ஒப்பிட்டு பார்த்தா இது ஒன்னுமே இல்லேன்னு தோனும்.  இத வச்சிக்கிட்டு என்னத்த சார் செஞ்சீங்கன்னு கேக்க தோணும்.  அப்ப அதுவே ஜாஸ்தி. ஏன்னா அன்னைக்கி பெரும்பாலான கம்ப்யூட்டர்ல வெறும் 16mb RAMதான்! அதுக்கு இன்னொரு காரணமும் இருந்துது. அப்போல்லாம் வெறும் text based applicationsதான் யூஸ்ல இருந்ததால அதுவே போறுமா இருந்தது.    மானிட்டரோட ரெண்டு பக்கத்துலயும் அட்டாச்ட் ஸ்பீக்கர்ஸ்! தனியா வேணும்னாலும் கழட்டி வச்சிக்கலாம். ஒரு ஃப்ளாப்பி டிரைவ், ஒரு சிடி ட்ரைவ்ன்னு அன்னைக்கி அதுதான் லேட்டஸ்ட்! விலைய சொல்லணுமே.. ரூ.55,000/-! அந்த காசுல இன்னைக்கி ஒரு அட்டகாசமான லேப்டாப் வாங்கிரலாம். கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகமாக அதிகமாக விலை ஏறிடும்னு நினைச்சோம். அதுக்கு நேர் மாறா விலை பயங்கராம இறங்கிறும்னு அன்னைக்கி யாரும் நினைக்கல. 

பேங்க்ல வேலைங்கறதால லோன் போடறதெல்லாம் ரொம்ப ஈசி. ப்ரோஃபார்மா இன்வாய்ஸ் கொண்டு போய் கொடுத்தா போறும். இன்வாய்ஸ் வேல்யூல 90% லோன் கிடைச்சிறும். ஸ்டாஃப்ங்கறதால வட்டியும் கம்மி. 

பேசாம லோன போட்டு வாங்கியிருக்கலாம். ஆனா இடையில ஒரு சோதனை வந்துது. அப்போ க்ரெடிட் கார்டோட அறிமுக காலம். டெய்லி ஒரு பத்து ஃபோனாவது வரும். ஒரேயொரு பேங்க்லருந்து விடாம டார்ச்சர் பண்ண சரி வாங்கித்தான் பார்ப்பமேன்னு வாங்கினேன். பேங்க் மேனேஜர்ங்கறதால எடுத்த உடனே ரூ.50000/- க்ரெடிட் லிமிட்டோட வந்துது. சரி இதுல வாங்குனா முதல் நாப்பது நாள் வட்டி கிடையாதேன்னு நினைச்சி மொத்த லிமிட்டுக்கும் முதல் பர்சேஸே கம்ப்யூட்டர வாங்கிட்டேன். மீதிய கையிலருந்து குடுத்தேன். ஆனா இன்ஸ்டால்மென்ட்ல கட்டற ஐடியா ஏதும் இல்லை. கார்ட் பில் வரும்போது பேங்க்லருந்து லோன் போட்டுக்கிட்டா போறும்னு நினைச்சி வாங்கிட்டேன்.

அன்னையிலருந்து புடிச்சது தொல்லை. கார்ட வாங்கிக்குங்கன்னு டார்ச்சர் குடுத்த ஏஜன்ட் கார்ட்ல முதல் பர்ச்சேஸ்லயே மொத்த லிமிட்டையும் யூஸ் பண்ணிருவேன்னு நினைச்சிருக்க மாட்டார் போலருக்கு. இவன் ஒரு 420யாருப்பான் போலருக்கேன்னு நினைச்சிட்டார். டெய்லி ஒருதரம் ஃபோன்ல கூப்ட்டு ட்யூ டேட்ல கட்டிருவீங்களா சார், கட்டிருவீங்களா சார்னு டார்ச்சர் குடுக்க ஆரம்பிச்சார். அவரோட நிக்காம பேங்க் கார்ட் டிவிஷன்லருந்தும் கூப்ட ஆரம்பிச்சதும் கடுப்பாய்ட்டேன். இவனுங்கக் கிட்டருந்து தப்பிச்சா போறும்னு க்ரெடிட் பீரியட் முடியறதுக்குள்ளவே பேங்க்ல லோன போட்டு ட்யூ முழுசுக்கும் செக்க எழுதி அத்தோட அந்த பேங்க் க்ரெடிக் கார்டையும் நாலு துண்டா வெட்டி நீயும் வேணாம் ஒன் கார்டும் வேணாம்னு ஒரு லெட்டரையும் எழுதி ஒரு கவர்ல வச்சி ரிஜிஸ்தர் தபால்ல அனுப்பி வச்சேன். 

ஒரு வாரம் கழிச்சி அந்த ஏஜன்ட் என் ஆஃபீசுக்கே வந்துட்டார். என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க? நீங்களும் ஒரு பேங்க் மேனேஜர்தானே? குடுத்த கடன வசூல் பண்ண கஸ்டமர கேட்டதில்லையான்னு புலம்பி தள்ளிட்டார். இருக்கலாங்க. அதுக்காக இப்படியா? ராத்திரியும் பாக்காம எத்தன பேர் கூப்டுவீங்கன்னு திருப்பி திட்டி அனுப்பினேன்... அதுக்கப்புறம் கொஞ்ச நாள் க்ரெடிட் கார்ட் சமாச்சாரம் பக்கமே திரும்பலை.... அதாவது 2007 வரைக்கும். அதுக்கப்புறம் மறுபடியும் ஒரு வேவ் மாதிரி - அதாவது ICICI, UTI, IDBI மாதிரி தனியார் பேங்குங்க வந்ததுக்கப்புறம் - க்ரெடிட் கார்ட் விற்பனை வந்துதே அப்ப மறுபடியும் ICICI ஏஜன்ட் வலையில விழுந்தேன். ஆனா ஏற்கனவே ஒரு பாடம் படிச்சிருந்ததால இதுவரைக்கும் எந்த பிரச்சினையிலும் சிக்கிக்காம இருக்கேன். 

விஷயத்துக்கு வருவோம். 

கம்ப்யூட்டர் வீட்ல வேணும், வேணும்னு பிடிவாதம் புடிச்ச என்னோட டாட்டருக்கு கம்ப்யூட்டர் வந்ததும் சிடி டிரைவ்ல பாட்டு கேக்கறதுதான் முழு நேர வேலையாருந்தது. நல்லவேளையா அப்பல்லாம் இப்ப இருக்கறா மாதிரி கம்ப்யூட்டர் கேம்ஸ் எதுவும் பிரபலமாயிருக்கலை. அதனால ஆஃபீஸ்லருந்து word star காப்பி பண்ணிக்கிட்டு வந்து போட்டு டைப்ரைட்டிங் படிச்சிக்கப்பான்னு சொன்னேன்.. ஆனா கருப்பு பேக்ரவுன்டுல குச்சி, குச்சியா என்னப்பா இது நல்லாவே இல்லைன்னுட்டாங்க. அப்புறம் ஒரு ஃப்ரென்ட புடிச்சி திருட்டு MS Office போட்டேன்.  அவர் ரூ.500/- வாங்கிக்கிட்டு போட்டு குடுத்தார். MS word, Excel, Power Point மூனு மட்டுந்தான். வேர்டும், எக்சல்லும் யூஸ் ஆச்சோ இல்லையோ மூனு மாசத்துல விதம், விதமா PP slide பண்றதுக்கு படிச்சிட்டாங்க. அப்புறம் காலேஜ்லருந்து வந்ததும் அதுவேதான் வேலை. 

ரெண்டு பொம்பளை புள்ளைங்கள வச்சிக்கிட்டு அதுக்கு நகை, நட்டுன்னு வாங்காம 55000/- குடுத்து இத வாங்கினேன்னு அத பாக்கறப்பல்லாம் கேட்டாங்க எங்க அம்மா. ஆனா அந்த வயசுல என் மூத்த மகளுக்கு கிடைச்ச அந்த அனுபவம் பிற்காலத்துல ஒரு நல்ல டிசைன் ஆர்ட்டிஸ்டா வர்றதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்னு அப்போ நாங்க நினைச்சிக்கூட பாக்கல. 

எனக்கும் அது பிற்காலத்துல ரொம்பவும் யூஸ்ஃபுல்லா இருந்ததுங்கறதையும் சொல்லியே ஆகணும். சென்னையிலருந்து மறுபடியும் மாற்றலாகி எங்களோட வங்கி ஊழியர்கள் பயிற்சிக்கல்லூரிக்கு பிரின்சியா போனேன். அப்போ எங்களுடைய வங்கியின் பெரும்பாலான கிளைகள்ல கம்யூட்டர் இன்ஸ்டால் செஞ்சிருந்ததால ஊழியர்களுக்கு கம்யூட்டர் ட்ரெய்னிங் குடுக்கறதுக்கு இருபத்தஞ்சி கம்ப்யூட்டர், ஒரு சர்வர்னு (server) செட்டப்ப் பண்ணி கம்ப்யூட்டர் வகுப்ப நடத்தற அளவுக்கு எனக்கு தைரியம் குடுத்தது. அதுலருந்து முன்னேறி நாலஞ்சி வருசம் கழிச்சி எங்க வங்கியோட information technology டிவிஷன்னு ஒன்னு ஸ்டார்ட் பண்ணப்போ என்னோட லெவல்லருந்த மத்த அதிகாரிங்களுக்கு கம்ப்யூட்டர் அனுபவம் இல்லேங்கறதால அந்த டிவிஷனுக்கே headஆ வர்ற அளவுக்கு எனக்கு அது ஹெல்ப் செஞ்சிதுன்னு சொன்னா மிகையாகாது. 

இப்போ எல்லார் வீட்லயும் கம்ப்யூட்டர்ங்கறது ரொம்பவும் சகஜமா போயிருச்சி. ஆனா இருபது வருசத்துக்கு முன்னால அத ஒரு தேவையில்லாத செலவுன்னு பாக்காம வாங்கி யூஸ் பண்ணதால என் மகள்களுக்கு மட்டுமில்லாம என்னோட careerல வேகமா முன்னேறவும் அது ஒரு பெரிய ரோல் ப்ளே பண்ணிச்சின்னுதான் சொல்லணும். அதுக்கப்புறம் நாலஞ்சி தரம் கம்ப்யூட்டர மாத்தியாச்சின்னாலும் முதமுதல் வாங்குன கம்ப்யூட்டர வெறும் டைப்ரைட்டரா ரொம்ப நாள் யூஸ் பண்ணோம். அதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு 1GB ஹார்ட் டிஸ்க்கும் 32 mb RAM எதுக்குமே யூஸ் ஆகாதுல்ல? அப்புறம் கடைசியில ஒரு நெய்பரோட பையனுக்கு சும்மாவே குடுத்துட்டேன்... அம்பாதாயிரத்தோட மதிப்பு பத்து வருசம் கழிச்சி பூஜ்யம்தான்!

என்னுடைய அனுபவத்தை தொடர்ந்து என்னுடைய நெருங்கிய பதிவர் நண்பர்களான:

தருமியையும்  துளசியையும் அழைக்கிறேன். நா எழுதனத விட அவங்களோட அனுபவம் சுவாரஸ்யமா இருக்கும்னு நினைக்கிறேன்.
*********

19 ஜூலை 2013

என் முதல் கணினி அனுபவம்!எங்கும் கணினி எதிலும் கணினி என்றாகிவிட்ட கலியுகத்தில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு முதன் முதலாக கணினியை இயக்க கற்றதை மீண்டும் ஒருமுறை அசைபோட்டால் என்ன என்று தோன்றுகிறது. இதற்கு பதிவர் நண்பர் ராஜியும்  ஒரு காரணம்.

'இந்த மாதிரி இலக்கண சுத்தமா எழுதணுமா என்ன? சும்மா பேச்சு நடையில எழுதுங்க சார், இப்ப அதான் ஃபேஷன்!'

சரி, சரி... பழக்க தோஷம்... அவ்வளவு ஈசியா போயிருமா என்ன?

விஷயத்துக்கு வருவோம்...

இன்னைக்கி கம்ப்யூட்டர் இல்லாத துறையே இல்லேன்னாலும் இந்தியாவுல முதல் முறையா அதிக அளவுல computerisation நடந்தது வங்கிகள்லதான்னு நினைக்கிறேன். அதுக்கப்புறம்தான் ரயில்வே.

Banksla ஆட்டோமேட்டிக் லெட்ஜர் போஸ்ட்டிங் மெஷின்னு (ALPM) சொல்லி ஒரு பூதாகரமான மெஷின அறிமுகப்படுத்துனது எப்ப தெரியுமா? 1980! ஆச்சரியமா இருக்குல்ல? ஏறக்குறைய முப்பது வருசத்துக்கு முன்னால! அப்போ பெரும்பாலான அரசுத் துறை வங்கிகள்ல இந்த மெஷின அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களோட கணக்கு புத்தகத்த அழகா ஸ்டேட்மென்டா அடிச்சி குடுத்துருவாங்க. அதுதான் முதல் இயந்திரமயமாக்கல்.

அதுக்கப்புறம் படிப்படியா ஏறக்குறைய எல்லா வங்கி அலுவல்கள்லயும் கம்ப்யூட்டர் நுழைஞ்சி புது ரெக்ரூட்மென்டே இல்லாம செஞ்சிருச்சி. அப்போ இத எதிர்த்து எல்லா வங்கி ஊழியர்களும் சேர்ந்து போராட்டமெல்லாம் செஞ்சோம். ஒன்னும் நடக்கல. யூனியன் ஆளுங்கள சமாளிக்கறதுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அலவன்ஸ்னு கொண்டு வந்தாங்க... மாசம் ரூ.100/-நமக்கு அலவன்ஸ் கிடைச்சா போறும் புதுசா ஆள் எடுத்தா என்ன, எடுக்காட்டி என்னன்னு யூனியன் ஆளுங்களும் வாய மூடிக்கிட்டாங்க. ஆனா அதுக்கப்புறம் இருக்கற ஆளுங்களும் ரிட்டையர் ஆனதுக்கப்புறம் பிராஞ்சில இருக்கற கிளார்க் ஒவ்வொருத்தரும் இத்தன வவுச்சர் போஸ்ட் பண்ணித்தான் ஆவணும்னு ரூல் வந்தப்போ அடிச்சி, அடிச்சி கை சுளுக்குற அளவுக்கு வேலை. கணினிமயமாக்கல் வேலை பளுவை குறைக்கும்கறதெல்லாம் சும்மா. ஆரம்பத்துல வேலைப்பளு பல மடங்கு ஜாஸ்தியாருக்கும்கறத அனுபவிச்சி உணர்ந்தவங்க நாங்க.

எங்க வங்கியில முதல் முறையா கம்ப்யூட்டர் நுழைஞ்சது 1994-95ன்னு நினைக்கறேன். நான் அப்போ மும்பையில இருந்தேன். டெய்லி ஆப்பரேஷன computerise பண்ண முயற்சிகள் துவக்கப்பட்ட காலம். In-house டெவலப்மென்ட்டுன்னு சொல்லி நாலஞ்சி கத்துக்குட்டி பசங்க க்ளிப்பர்னு (clipper) ஒரு பழங்கால மென்பொருள்ல Integrated Banking software (IBS) ஒன்னெ செஞ்சி எடுத்துக்கிட்டு வந்து போட்டாங்க. அப்பல்லாம் விண்டோஸ் வரலை. எல்லாமே DOS commandலதான். மொத்த சாஃப்ட்வேரும் ஒரேயொரு ஃப்ளாப்பில (floppy) அடங்கிரும். A ட்ரைவ்ல போட்டு insன்னு சொன்னா போறும் இன்ஸ்டாலாயிரும்.

எங்க ஐடி டிவிஷன்லருந்து வந்த ஒருத்தர் - இவர் டெவலப்மென்ட் டீம சேர்ந்த ஆள் இல்ல. வெறும் இன்ஸ்டல்லேஷந்தான் - படு பயங்கர ஸ்பீட்ல இத இத இப்படி செய்யணும்... இத செய்யக் கூடாதுன்னு ஒரு ரெண்டு அவர்ல காமிச்சிட்டு போய்ட்டார். அப்போ என் கீழ இருந்த பத்து குமாஸ்தாங்கள்ல ரெண்டு பேர் மட்டும் தமிழ்காரங்க. மத்தவங்க எல்லாம் கேரளம். ஒரேயொரு ஆள் மும்பை. தமிழ் பசங்க ரெண்டு பேரும் பயங்கர சூட்டிகையான பசங்க. ஒடனே கப்புன்னு புடிச்சிக்கிட்டாங்க. அதுவரைக்கும் அவங்கள அவ்வளவா மதிக்காத கேரளமும் மும்பையும் அன்னையிலருந்து இவங்க ரெண்டு பேருக்கும் ஸ்டூடன்ஸாய்ட்டாங்க.

நானும்தான்.

ஆனாலும் பிராஞ்ச் மேனேஜர் ஆச்சே... கிளார்க்குங்களோட சேர்ந்து ஒக்காந்து படிக்கறதுக்கு கொஞ்சம் கூச்சம். அதனால அந்த ரெண்டு பேரையும் தாஜா பண்ணி (சாயந்தரம் ஆனா ரெண்டு பீர் பாட்டில் வாங்கி தந்துருவேன். அதான் கூலி!) மத்த கிளார்க்குங்க எல்லாம் வேலைய முடிச்சிட்டு போனதுக்கப்புறம் இது என்ன, அது என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குவேன். நான் ஏற்கனவே டைப்ரைட்டிங் தெரிந்து வைத்திருந்ததால, கீபோர்ட் எல்லாம் அத்துப்படி. மத்தவங்கள மாதிரி esc பட்டன் எங்கருக்கும் ctrl பட்டன் எங்கிருக்குன்னுல்லாம் கேனத்தனமா கேக்க வேணாம். ஆனாலும் dos கமான்ட் எதுவும் தெரியாது. அந்த பசங்க பொறுமையாத்தான் சொல்லி தருவாங்க. ஆனாலும் மண்டையில ஏறாது. என்னடா இவன் ஒரு ரோதனைங்கறா மாதிரி பாப்பாங்க. இருந்தாலும் மேனேஜர என்னத்த சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டு (சாயந்தரம் கிடைக்கப்பொற பீர் வேற ஒரு இன்சன்ட்டிவாச்சே) ரொம்பவுமே பொறுமையா சொல்லித் தந்தத மறக்க முடியாது. ஆனாலும் சாஃப்ட்வேற முழுசா ஆப்பரேட் பண்றது மட்டும் வரவே இல்ல. கீபோர்டே தெரியாத கிளார்க்குங்க எல்லாம் ரெண்டு மூனு மாசத்துல படிச்சிக்க முடியறப்போ நமக்கு ஏன் இது வரவேயில்லன்னு மாஞ்சி போயிருக்கேன். அப்புறம் ப்ளேன் (plane) ஓட்ட வேண்டியவன் சைக்கிள் ஓட்ட முடியலையேன்னு கவலைப்படக் கூடாதுன்னு (சும்மா ஒரு கெத்துதான்) நெனைச்சிக்கிட்டு நம்ம மேனேஜர் வேலைய மட்டும் பார்ப்போம்னு அத்தோட விட்டுட்டேன்.

அப்போ dosல வேர்ட் ஸ்டார்னு ஒரு ப்ராசர் இருந்துது. ஆஃபீஸ் லெட்டர்லாம் கம்ப்யூட்டர்லதான் எழுதணும்னு எங்க HO ஆர்டர் போட்டதும் இது என்னடா புது தலைவலின்னு இருந்துது. நல்லவேளையா நம்ம தமிழ்பசங்க மும்பை முழுசும் சுத்தி ஒரு கைட (guide) வாங்கிக்கிட்டு வந்து குடுத்தாங்க. சின்ன குழந்தைக்கு புரியறா மாதிரி சிம்பிளா ஒவ்வொரு கமான்டும் இருந்ததாலயும் எப்படியும் இத தெரிஞ்சிக்கிட்டுத்தான் மறுவேலைன்னு நினைச்சதாலயும் நாலஞ்சி வாரத்துல அதையும் படிச்சி நம்ம பசங்களே மெச்சற அளவுக்கு தேறிட்டேன்.

அப்புறம் 1995ல windows 3.1.வந்து dos உலகத்தையே அசைச்சி போட்டுது. அடுத்த நாலஞ்சி வருசத்துல கணினி இல்லாத வங்கி கிளையே இல்லேங்கறா மாதிரி விரிவடைஞ்சது.

இருந்தாலும் தனியா வீட்டுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணுங்கற என்னோட ஆசை 1999லதான் நடந்துது. அது ஒரு பெரிய கதை...

அத நாளைக்குச் சொல்றேன். 

18 ஜூலை 2013

இளவரசனின் மரணம் தற்கொலைதானாம்!

 "எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பரத்வாஜ், மில்லோடாமின், சுதீர்குமார் குப்தா உள்ளிட்டோர் கடந்த சனிக்கிழமை தருமபுரியில் மறு பிரேத பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை திங்கள்கிழமை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையில், இளவரசன் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார் என்றும், அவரை யாரும் தாக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன."

இது இன்றைய தினசரிகளில் வெளியாகியுள்ள செய்தி.

அப்படியானால் முதல் பிரேத பரிசோதனை அறிக்கையிலும் அதன் பிறகு பிரேதத்தை மீண்டும் ஆய்வு செய்த இரு மருத்துவர்கள் அளித்த அறிக்கைகளிலும் இதைத்தான் தெரிவித்திருந்தனரா?

அந்த இரு மருத்துவர்களும் வெவ்வேறு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததால்தானே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களை மீண்டும் ஆய்வு செய்ய அழைத்தனர்? அப்படியானால் அந்த இரு மருத்துவர்கள் சமர்ப்பித்த அறிக்கைககளில் காணப்பட்ட முரண்பாடுகள் என்னென்ன? ஒருவர் தற்கொலை என்றும் மற்றொருவர் ரயில் விபத்து என்றும் அறிவித்திருந்தனரா?

அதுதான் உண்மை என்றால் தற்கொலை என்று ஏன் ஒருவர் மட்டும் அறிவித்திருக்க வேண்டும்?

சரி, ரயில் விபத்துதான் காரணம் என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியிருந்தால் அந்த அறிக்கையின் முழுவிவரத்தையும் பத்திரிக்கைகள் வாயிலாக வெளியிட வேண்டாமா?. அப்போதுதானே இந்த விவகாரத்தில் உள்ள சர்ச்சை தீரும்?

இல்லையென்றால் திருமா முன்பே கூறியுள்ளதுபோன்று இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் இருக்க செய்யப்பட்ட நாடகம் என்பது உண்மை என்றாகிவிடக் கூடும்.

:இப்போது, இளவரசனின் இறப்பிலும் பா.ம.க.விற்கு எதிராக சிலர் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றனர். இளவரசனின் இறப்பால் வேதனையடைந்தோம். தனது சாவிற்கு யாரும் காரணமில்லை என்று அவர் எழுதி வைத்த பின்னரும் நீதிவிசாரணை கோரி வருகின்றனர்."

இது அன்புமணியின் அறிக்கை. எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் இருக்கிறது!

எது எப்படியோ, மூன்று மாத காலத்திற்கும் மேலாக தமிழகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் இந்த விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தால் அனைத்து தரப்பினருக்கும் நல்லது.

*********16 ஜூலை 2013

இன்னையிலருந்து விடுதலை...


அப்பாடா! ஒருவழியா விட்டது தொல்லை.

போகணும்னுதான் தோன்றது ஆனா எங்க போறதுன்னு தெரியலையேன்னு அன்னைக்கி மகன் சிவாஜி புலம்புனதும் அவர் ஒருவழியா போய்ட்டதுக்கப்புறம் பாலூட்டி வளர்த்த கிளின்னு அப்பா சிவாஜி கதறுனதும்...

அது மாதிரிதான்  இருந்துது என் பொழப்பும்.. நேத்து வரைக்கும்.

எத்தனை இணையதளங்கள்ல, பிளாகுகள்ல, முகநூல்ல எத்தன நண்பர்கள் என்னத்த எழுதுனாலும் நம்மால ஒன்னையும் ஒழுங்கா படிக்க முடியலையே ஈஸ்வரா, சாரி, கர்த்தாவேன்னு புலம்பிக்கிட்டிருந்த எனக்கு எங்க வேணும்னாலும் போவலாம் என்னத்த வேணும்னாலும் படிக்கலாம் எத்தன பின்னூட்டம் வேணும்னாலும் போடலாம்கற சுதந்திரம் கிடைச்சிருக்குறது.... ரொம்ப சந்தோசமா இருக்கு.

அதனால இன்னையிலருந்துதான் ஒரு நிஜ சுதந்திரத்தை அனுபவிக்கிறா மாதிரி ஒரு ஃபீலீங்.

எல்லாம் நம் நாடு, நம் அரசுன்னு நினைச்சிக்கிட்டு BSNL குடுக்கற இணைய இணைப்பைத்தான் யூஸ் பண்ணுவேன்னு பிடிவாதமா இருந்ததுதான் காரணம். சென்னையில இருந்தப்போ வரைக்கும் பரவால்லை. ஆனா ஆவடி மாதிரியான புறநகர்ல BSNL கனெக்ஷன் சுத்த வேஸ்ட். சாதாரணம் ஜிமெய்ல திறக்கறதுக்கே ஸ்லோவா சுத்திக்கிட்டே இருக்கும். கூகுள் டாக் திறக்கவே திறக்காது. Facebook மட்டும் போன போறதுன்னு திறக்கும். அதுக்கும் பத்து பதினஞ்சி நொடி காத்திருக்கணும்.

இந்த லட்சணத்துல மாசம் ஒரு பதிவு போடறதே ஜாஸ்தி. பதிவ save பண்றதுக்கே பத்து பதினஞ்சி நிமிஷமாயிரும். பப்ளிஷ் பட்டண அழுத்திட்டு சாவகாசமா போயி சாப்ட்டுட்டே வந்துறலாம். அவ்வளவு நிமிஷம் எடுக்கும்.

சரி, விட்டுத்தொலைங்களேம்ப்பா என்பாள் என் மகள். ஐய்யோ ஆயிரத்தைந்நூறு குடுத்து வாங்கினதாச்சே.. இந்த pen drive வேற கனெக்‌ஷனக்கு யூஸ் பண்ண முடியாதுல்லேம்பேன். அட, நீங்க வேற... நா வேணும்னா வாங்கித்தரேன்னு சொல்லி நேத்துதான் ரிலையன்ஸ் கனெக்‌ஷன வாங்கிட்டு வந்து குடுத்தாங்க...

BSNL மாதிரி pendrive deliveryக்கு ஒரு நாள். அப்புறம் install பண்ண ஒரு நாள்னு இழுத்தடிக்காம வந்து அஞ்சே நிமிஷத்துல install பண்ணி.... அடுத்த நொடியே பரபரன்னு லோடான இணையதள பக்கங்கள பாத்தப்போ உண்மையிலேயே சந்தோஷமாத்தாங்க இருந்துது. அதுவும் சர்வீஸ்ல இருந்த கடைசி அஞ்சி வருசத்துல 1MB லீஸ் லைன்ல பிரவுஸ் செஞ்சிக்கிட்டு இருந்தவனுக்கு போன மூனு வருசமா ஆமையா நகர்ந்துக்கிட்டிடுருந்த BSNL கனெக்‌ஷன்லருந்து விடுபட்டது ஒரு பெரிய விடுதலைநாள் மாதிரிதான் தெரியுது.

என்னோட பதிவுகள போடறதையே பெரிய விஷயமா நினைச்சிக்கிட்டிருந்த எனக்கு இன்னையிலருந்து மத்தவங்க போடற பதிவையும் ரொம்ப எளிதா படிக்க முடியுங்கறது ரொம்ப பெரிய விஷயம்தான்.

எப்பவாச்சிம் வந்துக்கிட்டிருந்தவன் இனி அப்பப்போ வருவேன்னு சொல்லிக்கறேன்...

*********

11 ஜூலை 2013

சாதிகள் உள்ளதடி பாப்பா!பாரதியார் சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடியதை வைத்து ஆண் ஜாதி, பெண் ஜாதி என்ற இரு சாதிகளைத் தவிர வேறு சாதிகள் இருக்கலாகாது என்று பொருள்கொள்ளலாகாது.

இந்த உலகம் உள்ளவரையில் இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில் சாதி இருக்கத்தான் செய்யும். சாதிகளுக்கிடையில் மோதல்களும் இருக்கத்தான் செய்யும்.

இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் ஆண், பெண் ஜாதிகள் மட்டுமல்லாமல் பகுத்துணரும் அடிப்படையில் படித்தவன்-படிக்காதவன் என்ற பாகுபாடும் பொருளாதார அடிப்படையில் பணக்காரன் - ஏழை என்கிற பாகுபாடும் இருக்கத்தான் செய்கிறது.

சாதி அடிப்படையில் மனிதர்களை இழிவுபடுத்துவதைத்தான் அன்றைய பாரதியாரும் அவருக்கு பின்னால் வந்த பல பகுத்தறிவுவாதிகளும் தவறு என்று உரைத்தார்கள்.

சாதி அடிப்படையில் மனிதர்களை பிரித்துப்பார்ப்பதும் இழிவான செயல் என்பதில் எனக்கு எவ்வித மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இருவேறு சாதிகளைச் சார்ந்த இருவர் இணைந்து வாழ்வது என்பது நடைமுறைக்கு சாத்தியம்தானா என்பதில்தான் எனக்கு கருத்து வேறுபாடு உள்ளது. இதைத்தான் என் கணவர் இளவரசனுடன் எனக்கு compatibility இல்லை ஆகவே அவருடன் இணியும் இணைந்து வாழ்வது சாத்தியாமாகாது என்றார் வித்யா. அவர் உணர்ந்துதான் இதை கூறினாரா அல்லது சாதீய வெறி பிடித்த சிலர் இதை ஒரு சாக்காக கூறுமாறு அவரை வற்புறுத்தினார்களா என்பது தர்க்கத்துக்குரிய விஷயம். அதைப்பற்றி தர்க்கிப்பதல்ல என்னுடைய நோக்கம்.

Compatibility என்ற ஆங்கில வார்த்தையை கருத்தொருமித்தல் என்று மட்டும் பொருள்கொள்வதில் அர்த்தமில்லை. அது இன்னும் பல உள்ளர்த்தங்களைக் கொண்ட வார்த்தை என்றும் கூறலாம். கருத்தில் ஒற்றுமை, அவற்றை செயல்படுத்தும் விதங்களில் ஒற்றுமை, பழக்க வழக்கங்களில் ஒற்றுமை,பேசும் விதங்களில் உள்ள ஒற்றுமை, அணுகுமுறையில் உள்ள ஒற்றுமை, பிறரை அனுசரித்துப் போவதில் உள்ள ஒற்றுமை என பல்வேறு விஷயங்களைக் கூறலாம்.

நட்பு அடிப்பைடையில் இரு வேறு சாதியினர் பழகுவது என்பது எளிதுநட்பிலும் கூட சாதீயத்தை புகுத்த எந்த சாதி கட்சிகளோ அல்லது சாதீய சமூக அமைப்புகளோ முயல்வதில்லை என்பதும் உண்மை.

ஒருவனை அல்லது ஒருத்தியை அவர்களிடமுள்ள நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்வது என்பது நட்பில் வேண்டுமானால் சாத்தியமாகலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ வேண்டும் என்கிற சூழலில் உடலளவில் மட்டுமல்லாமல் உள்ளத்தளவிலும் என்னுடன் ஒத்துப்போகவேண்டும் என்று நினைக்க எனக்கு எல்லாவித உரிமையும் உண்டு.

அப்படியானால் காதலிக்கும்போது இது தெரியவில்லையா என்று கேட்டால் நிச்சயம் எனக்கு தெரிந்திருக்கவில்லை என்றுதான் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பலரிடம் இருந்தும் பதில் வரும். காதல் என்பது யார், எவர் என்று புரிந்துக்கொள்ளும் முன்பே வருவது. இவன் இன்னான், இன்னாருடைய மகன் என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டு வருவதல்ல காதல்.

நம்முடைய தினசரி வாழ்க்கையில் பலரை சந்திக்கிறோம், பலருடன் பழகுகிறோம் ஆனால் ஒருவனை, ஒருத்தியைத்தான் திருமணம் செய்துக்கொள்கிறோம். பலருடன் பழகினாலும் ஒருசிலருடன்தான் நட்பு வைத்துக்கொள்கிறோம். அவர்களுள் ஒருசிலருடன்தான் நெருங்கிப் பழகி நம்முடைய சுக, துக்கங்களைப் பகிர்ந்துக்கொள்கிறோம். நட்பிலேயே இவ்வளவு பகுத்துப் பார்த்தல் தேவை என்கிறபோது என்னுடன் இணைந்து வாழ்கிறவன்/ள் என் கருத்துடன் மட்டுமல்லாமல், நடை, உடை, பாவனை, என அனைத்திலுமே ஒத்துப்போக வேண்டும் என்று நினைப்பதில் தவறேதும் இல்லையே.

இதற்கும் சாதிக்கும் என்ன உறவு என்கிறீர்களா?

நிச்சயம் உண்டு.

நான் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு வங்கி மேலாளராக பணியாற்றி பலதரப்பட்ட மக்களை சந்தித்திருக்கிறேன். பல சாதிகளைச் சார்ந்த வாடிக்கையாளர்களின் வீடுவரை சென்று பழகியிருக்கிறேன். உண்டு உறவாடியிருக்கிறேன். அவர்களுடைய திருமணங்களில், புகுமுனை விழாக்களில், ஈமச்சடங்குகளில் கலந்துக்கொண்டிருக்கிறேன்.

அந்த அடிப்படையில் சொல்கிறேன். ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு பிரத்தியேக குணம், பேச்சு, நடை, உடை, பாவனை என இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் பேசும் பாணியிலிருந்து, உண்பது, உறங்குவது, சிந்திப்பது ஆகியவற்றை  மட்டும் வைத்து இவர்கள் இன்ன சாதியைச் சார்ந்தவர்கள் என்பதை கூற முடியாவிட்டாலும் இன்ன சாதியைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதை கணிப்பது சாத்தியம்.

1. சில சாதிகளைச் சார்ந்தவர்கள் மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பார்கள். கோபம் என்பது அறவே வராது. தானுண்டு தன் வேலயுண்டு என்று இருப்பார்கள். தன் வீடு, தன் குடும்பம் என்பதில்தான் அவர்களுடைய சிந்தனை, சொல், செயல் எல்லாமே.

2. சில சாதிகளைச் சார்ந்தவர்களுக்கு எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும். பேசிக்கொண்டிருக்கும்போதே கையை நீட்டுவார்கள். பேசி தீர்க்கும் பேச்சுக்கே இடமிருக்காது. எல்லாவற்றிற்கும் வெட்டும் குத்தும் தான் தீர்வு.

3. இன்னும் சிலர் ஒழுங்கீனத்திற்கு பெயர்போனவர்கள். சொல்லிலும் ஒழுக்கம் இருக்காது செயலிலும் ஒழுக்கம் இருக்காது. வீடு, வாசலிலும் சுத்தம் இருக்காது. அவர்களுடைய வீட்டிற்குள் சென்றுவிட்டால் எது எங்கும் இருக்கவேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல் எங்கும் எதுவும் இறைந்து கிடக்கும்.

4. வேறு சிலர் சுத்தத்திற்கு பெயர்போனவர்கள். உள்ளத்தில் சுத்தம் உள்ளதோ இல்லையோ, இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வார்கள். அவர்களை பிற சாதியினர் தொட்டாலும் தீட்டு, அவர்களை இவர்கள் தொட்டாலும் தீட்டு என்பார்கள். பார்ப்பதற்கும் பாங்காக, சுத்தமாக இருப்பார்கள்.

இப்படி பலதரப்பட்ட குணாதிசயங்கள் அடைப்படையிலேயே இவர்கள் இன்ன சாதியைச் சார்ந்தவர்களாக இருக்க வாய்ப்ப்ள்ளது என கணித்துவிட அனுபவம் உதவுகின்றது.

இதில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் பிரிவினைச் சார்ந்தவர்களுக்கிடையிலோ அல்லது மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவினைச் சார்ந்தவர்களுக்கிடையிலோ  எந்தவிதத்திலும் compatibility (கருத்தொற்றுமை) இருக்கப் போவதில்லை என்பது நிச்சயம்.

காதலிக்கிற ஒருசில மாதங்களிலோ அல்லது ஒருசில வருடங்களிலோ தெரிந்துக்கொள்ள முடியாத இத்தகைய வேற்றுமைகளை திருமணம் முடிந்து இணைந்து வாழ்கிறபோதுதான் பலராலும் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. முந்தைய தலைமுறைகளில் இதைத்தான் 'வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்' என்றார்கள் போலிருக்கிறது. எள்ளளவும் கருத்தொற்றுமை இல்லாவிடினும் குடும்பம் பிளவுபடலாகாது என்பதை உணர்த்தத்தான் 'கண்ணாலானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்' அல்லது 'அடிக்கிற கைதான் அணைக்கும்' அல்லது 'கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்' என்ற பழமொழிகளையும் சொல்லி வைத்தார்கள் போலிருக்கிறது. இந்த பழமொழிகள் எல்லாமே ஆடவன் எத்தனை குணக்கேடுள்ளவன் என்றாலும் பெண் அதை பொருட்படுத்தலாகாது என்பதைத்தான் உணர்த்துகின்றன என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

இந்த வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் அனுசரித்துச் செல்வதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணுபவர்களும் நமக்காக இல்லாவிட்டாலும் நம் குழந்தைகளுக்காகவது இணைந்து வாழத்தான் வேண்டும் என கருதுபவர்களும் இந்த வேற்றுமைகளை பெரிதாக எண்ணாமல் தாம்பத்திய சிறையிலேயே அடைபட்டு கிடக்கின்றனர். அதெல்லாம் எங்களால் முடியாது என்று எண்ணுகிறவர்கள் compatibility இல்லை என்று எளிதாக கூறிவிட்டு பிரிந்துவிடுகின்றனர்.


அப்படித்தான் வித்யாவும் கூறினார் என்று நினைக்கிறேன். கணவன்-மனைவி இருவருக்கிடையில் திருமணத்திற்குப் பிறகு சாதி பேதத்தை விட தங்களுக்கிடையில் அன்றாடம் ஏற்படும் கருத்து பேதங்கள்தான் பெரிதாக தெரியும். இதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

ஆகவேதான் சொல்கிறேன். திருமணங்களைப் பொருத்தவரை 'சாதிகள் உள்ளதடி...' என்று. ஒரே சாதிக்குள் திருமணம் செய்துக்கொள்வதற்கே நாள்,நட்சத்திரம், பொருத்தம் என்றெல்லாம் பார்க்கிற இந்த சமுதாயத்தில் இருவேறு சாதியினர் திருமணம் செய்துக் கொண்டு அனுசரித்துச் செல்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமல்ல என்பதும் என்னுடைய கருத்து.

இன்று சமூக வலைத்தளங்களில் ஆர்ப்பரிக்கின்றவர்களும் தங்களுடைய சொந்த வாழ்க்கையை சிறிது நேரம் திரும்பிப் பார்த்தாலே போதும், இதை உணர்ந்துக்கொள்வார்கள். அன்றைய மேடைப் பேச்சாளர்கள் பேச்சில் ஒன்று செயலில் ஒன்று என்று வாழ்ந்ததைப் போன்றுதான் இன்றைய சமூகவலைத்தளங்களில் சாதீயம் இல்லை என்று கூப்பாடு போடுபவர்களும்
என்றாலும் மிகையாகாது. ஊருக்குத்தானடி உபதேசம் உனக்கில்லையடி கண்ணே என்பதுபோல்தான் இந்த அறைகூவல்களும்.

இதனால் மட்டுமே இன்றைய சாதீய கட்சிகளையும் அவர்கள் செய்யும் அக்கிரமங்களையும் சரி என்று ஏற்றுக்கொள்கிறவன் என்று முத்திரை குத்திவிடாதீர்கள்! கலப்பு திருமணத்தை குடும்பத்திற்குள்ளேயே நடைமுறைப்படுத்தியவன் நான் என்பது என்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும்.


*****