13 டிசம்பர் 2019

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்!

உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.....

வாழ்க்கை  என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும் 

இதுதான் வாழ்க்கை. இதை ஏற்ருக்கொண்டால் நிம்மதி பிறக்கும். என்கின்றன இந்த திரைப்படப் பாடல் வரிகள்.

ஆனால் இது  தோல்வியை, இழப்பை ஏற்றுக்கொள் அதற்காக வருந்தாதே என்று நம்மை நாமே திருப்திப் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவது போலல்லவா உள்ளது?

அதையே இப்படி பாடிப் பார்த்தால்..

உனக்கும் மேலே உள்ளவர் கோடி 
உழைத்து உழைத்து  முன்னே செல்லு

என்றும் 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

ஆம்!

சாதிக்க வேண்டும் என்று நினைத்து முன்னே செல்வதுதான் இன்றைய தேவை.

நம்மால் முடிந்தால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்பதை என்னுடைய மேலாளர் வாழ்க்கையில்  ஒன்றும் இல்லாமையிலிருந்து தங்களுடைய அசுர உழைப்பால் மிக உன்னத நிலையை அடைந்த பல வாடிக்கையாளர்களை கண்டிருக்கிறேன். 

நான் முதல் முதலாக சென்னை கிளை ஒன்றில் மேலாளராக அமர்த்தப்பட்ட சமயம்.

சென்னை அமைந்தகரையில் 20க்கு 20 அடி பரப்பளவு மட்டுமே  இருந்த ஒரு சிறைய கடையில் ஐந்தாறு இரும்பு கட்டில்கள், மேசை மற்றும் கூரை மின் விசிறிகள், மடக்கும் இரும்பு நாற்காலிகள் என சுமார் பத்து பதினைந்து பொருட்களை மட்டுமே இருப்பு வைத்துக்கொண்டு தவணை முறையில் அவற்றை விற்பனை செய்து வந்த ஒருவரை என்னுடைய கிளை அருகில் அதே மாதிரியான ஆனால் சற்றே பெரிய அளவில் வணிகம் செய்துக்கொண்டிருந்த ஒரு வாடிக்கையாளர் அறிமுகப்படுத்தினார். எங்களுடைய வங்கியில் அ[போது வணிக கணக்கு (current account) துவங்க குறைந்தபட்சமாக ரூ. 500/- செலுத்தப்படுவதுடன் அதை இருப்பிலும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அந்த தொகை கூட அவரிடம் இருக்கவில்லை. ஆகவே முதலில் நீங்கள் உங்களுடைய பெயரில் சேமிப்பு கணக்கு துவங்குங்கள்.... வணிகம் சற்று பெருகியதும் வணிகக் கணக்கு துவங்கலாம் என்று அறிவுரை கூறி ரூ.100 மட்டும் செலுத்தி கணக்கு துவக்க வைத்தேன்.

அத்துடன் நில்லாமல் அடுத்த சில மாதங்களில் அப்போது பிரபலமாக இருந்த சிறு வணிகக் கடன் திட்டத்தில் (Small Loan Scheme) ரூ.10000/- ஓவர்டிராஃப்ட்டும் வழங்கினேன். அதற்கு ஈடாக அடகு வைக்கக் கூட அவரிடம் ஒன்றும் இருக்கவில்லை. அவரை அறிமுகப்படுத்தியவருக்கு அவருக்கு ஜாமீன் வழங்கவும் அவ்வளவாக விருப்பமில்லை. ஆனாலும் வேறொரு வாடிக்கையாளருடைய தனிநபர் ஜாமீன் இல்லாமல் கடன் கொடுக்கவும் வழியில்லை. ஆகவே அவரை நானே சமாதானப்படுத்தி ஜாமீன் வழங்க வைத்து கடனை வழங்கினேன்.

அவர் மீது நான் வைத்திருந்த நம்பிக்கை வீண் போகவில்லை. அவருடைய தன்னம்பிக்கையும் அயரா உழைப்பும் நான் அங்கிருந்த மாற்றலாகிப்போகும் சமயத்தில் அதாவது சுமார் இரண்டு ஆண்டு காலத்தில் அவருடைய ஒவர்டிர்ஃப்ட் லிமிட் ஒரு லட்சமாகவும் அவருடைய வருட வணிகம் சுமார் பத்து லட்சமாகவும் வளர்ந்திருந்தது. 

நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது  அந்த கிளையின் மிகப் பெரிய வாடிக்கையாளராக உயர்ந்துள்ளார் என்று கேள்விப்பட்டபோது வியந்துபோனேன். இப்போதும் அதே பகுதியில்தான் அவருடைய கடை உள்ளது சுமார் நாற்பதாயிரம் சதுர அடி பரப்பில்.... அதே சாலையில் அவருடைய இரு இளைய சகோதரர்களும் அதே மாதிரியான கடைகளை நடத்தி வருகின்றனர்.

ஆயினும் அதே எளிமையுடன் அவர் இருப்பதை பார்க்கும்போது எவ்வித பின்புலனும் இல்லாமல் தனி ஒருவர் நினைத்தால் தன்னுடைய அயரா உழைப்பால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை  உணர்ந்தேன்.

அதே போல் தூத்துக்குடியில் நான் மேலாளராக பொறுப்பேற்றபோது  மீன் ஏற்றுமதியாளர்களுக்கு ஐஸ் கட்டிகளை சிறிய அளவில் விற்பனை செய்துக்கொண்டிருந்த ஒருவரை சந்திக்க நேரந்தது. தூத்துக்குடியில் பிரதான தொழில் மீன்பிடி தொழில். அங்கு கிடைக்கும் சிங்க இறால்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. அவற்றை டண் கணக்கில் கொள்முதல் செய்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்றே கேரள மாநிலத்தைச் சார்ந்த பலர் அங்கு தொழிற்சாலைகளை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஐஸ் கட்டிகளை வழங்குவதற்கென்றே பல சிறிய நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயங்கி வந்தன. வருடத்தில் எட்டு மாதங்கள் சீசன் படு ஜோராக நடக்கும். 

என்னுடைய வாடிக்கையாளர் மிகவும் நலிந்த குடும்பத்திலிருந்து வந்தவர். வேறொரு நிறுவனத்தில் தினக்கூலிக்கு ஐஸ் வெட்டும் பணியில் இருந்தவர். அவருக்கும் இதே போன்று ஒரு தொழிலை சொந்தமாக துவங்கி தொழில் செய்ய வேண்டும் என்ற ஆவல். நான் செல்லும் தேவாலயத்துக்குத்தான் அவரும் வருவார். அப்போது தூத்துக்குடியில் சிறப்பாக செயல்பட்டு வந்த பல்நோக்கு சேவை மையத்திலிருந்த மேலாளர் இவரை பரிந்துரைத்ததால் அரசு செயல்படுத்தி வந்த திட்டத்தின் கீழ் ரூ.பத்தாயிரம் கடனாக கொடுத்தேன். அந்த திட்டத்தில் அரசு சார்பில் இருபத்தைந்து விழுக்காடு மானியமாக வழங்கப்பட்டது. 

நான் கடன் வழங்கியது 1985ம் வருடம். இன்று தூத்துக்குடியிலேயே பெரிய ஐஸ் கட்டி தொழிற்சாலை அவருடையதுதான். தனி ஆளாக தன்னுடைய உழைப்பால் மட்டுமே உயர்ந்த மனிதர் அவர்!

இதுபோல் சென்னை ராயப்பேட்டையில், புரசை வாக்கத்தில் மும்பை செம்பூரில் என என்னுடைய பல கிளைகளில் மிக நலிந்த பின்னணியிலிருந்து வந்த பல வாடிக்கையாளர்கள் சுமார் இருபது ஆண்டு கால இடைவெளியில் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து நிற்பதை பார்த்தபோது..

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் சாதனை இருக்கும்

என்கிற வரிகள் எத்தனை உண்மையானது என்பது புலப்பட்டது...

உழைப்பு, உழைப்பு, உழைப்பு இது மட்டுமே போதும்.... சரியான நேரத்தில் தேவைப்படும் மூலதனமும் கிடைத்துவிட்டால் வணிகத்தில் எட்டிவிட முடியாததே இல்லை எனலாம். 

***********



12 கருத்துகள்:

  1. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா.
    உங்களது மாற்று வரிகள் அருமையாக இருக்கிறது.

    உழைப்பே உயர்வுக்கு உறுதுணை.

    பதிலளிநீக்கு
  2. உழைப்பே உயர்வுக்கு உறுதுணை. //

    சரியாக சொன்னீர்கள் ஜி. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் சில பாடல்களின் சுயபரிதாப வரிகள் பிடித்தமானதாய் இருப்பதில்லை.   நீங்கள் மாற்றியுள்ள வரிகள் நன்றாய் இருக்கின்றன.  நீங்கள் சொல்லி இருக்கும் வெற்றி பெற்ற மனிதர்களும் சிறப்பானவர்கள் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  4. நீங்கள் சொல்லி இருக்கும் வெற்றி பெற்ற மனிதர்களும் சிறப்பானவர்கள் என்று தெரிகிறது.//

    உண்மை தான் ஸ்ரீராம். உயர்ந்த இடத்தை அடைந்த பின்பும் அதே எளிமையுடன் இப்போதும் இருப்பதுதான் அவர்களின் சிறப்பு.

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  5. நம்மை தேற்றிக் கொள்ள சில உந்துதல்கள்தேவை உழைப்பவரெல்லா முயர்ந்து விடுகின்றனராஎன்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மை தேற்றிக் கொள்ள சில உந்துதல்கள்தேவை //

      நீங்கள் கூறுவதும் மிகவும் சரியே. அதனால்தான் இறுதியில் சொன்னேன் உழைப்பும் தேவையான மூலதனமும் இருந்தா சாதிக்க முடியாதது இல்லை என்று. மூலதனம் தான் ஆதாரம் உழைப்பு ஒரு உந்துதல். முன்னேற வேண்டும் என்கிற ஆவல். இவை அனைத்தும் இருந்தால் சாதிப்பதற்கு தடையேதும் இல்லை.

      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்.

      நீக்கு
  6. பதிவை வாசித்தவுடன் இந்த ஞாபகம் வந்தது :- இன்றும் கூட எனது அப்பாவுக்கு உழைப்பு உழைப்பு உழைப்பு...

    சிறப்பான பாடல்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றும் கூட எனது அப்பாவுக்கு உழைப்பு உழைப்பு உழைப்பு...//

      உழைப்பின் அருமையை தெரிந்தவர்கள் எந்த வயதிலும் உழைத்துக் கொண்டேதான் இருப்பார்கள். உங்களுடைய தந்தையும் அந்த வகையை சார்ந்தவர் தான் போல.

      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி டிடி.

      நீக்கு
  7. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஸ்ரீ குமரகுருசுவாமிகள் எழுதிய நீதிநெறி விளக்கப் பாடலான

    தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
    அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினுங்
    கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
    எற்றே யிவர்க்குநா மென்று.

    என்ற பாடலின் கருத்தை அடியொட்டி ‘உனக்கும் கீழே உள்ளவர் கோடிநினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.....’ என்ற பாடலை எழுதியிருக்கலாம்.

    நீங்கள் சொல்வதுபோல் நம்மை நாமே திருப்திப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்தில் அவைகள் எழுதப்பட்டிருந்தாலும், நிம்மதி இழந்தோருக்கு சொல்லும் ஆறுதல் சொற்கள் அவை என்றே எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும் அவ்வாறு சொல்லாமல் உழைத்து முன்னேறு. சாதனை படைக்கலாம் என்ற எழுதியிருக்கலாம் என்ற தங்களின் கருத்தை நானும் வழிமொழிகின்றேன்.

    தாங்கள் வங்கியில் மேலாளராக பணியாற்றியபோது, உழைத்து முன்னேற விரும்பியோருக்கு தேவைப்படும் கடன் உதவியை சரியான நேரத்தில் தந்து அவர்களை கைதூக்கிவிட்டதால், நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு அவர்கள் உயர்ந்து இருப்பதை அறிந்து மிக்க மிகிழ்ச்சி. இதுபோன்ற வெற்றி நிகழ்வுகளை தாங்கள் பதிவிடலாமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவை அனைத்தையும் விரிவாக சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திரும்பிப்பார்க்கிறேன் என்ற தொடரில் எழுதி இருக்கிறேன் அதை எடிட் செய்து புத்தகமாக இடும் பணியில் இப்பொழுது மூழ்கி இருக்கிறேன். விரைவில் அவை வெளிவரும்.

      உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மிக்க நன்றி சார்.

      நீக்கு
  8. "வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்..." என்பவை என்ன முயற்சித்தும் வெற்றி கிடைக்காதவர்களுக்காக எழுதப்பட்ட வரிகள். ஆனால் அதை வைத்து நீங்கள் ஒரு நம்பிக்கை பதிவு எழுதியிருக்கிறீர்கள். உங்களை போலவே எங்கள் நண்பர் ஒருவர் வங்கிப் பணியில் சேர்ந்த புதிதில் கோவாவில் பணியாற்றினாராம் அங்கு எளிமையான மீனவர்கள் கைக்குட்டையில் பணத்தை சுற்றிக் கொண்டு வந்து கணக்கில் கட்டுவார்களாம். அப்படிப்பட்டவர்களுக்கு இவர் தன் மேலாளரிடம் சிபாரிசு செய்து மீன் பிடி வலை வாங்கவும், படகு வாங்கவும் கடனுதவி பெற்றுக் கொடுத்தாராம். அவர்கள் பின்னாளில் நல்ல நிலைக்கு வந்ததாக கூறுவார். 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் தன் மேலாளரிடம் சிபாரிசு செய்து மீன் பிடி வலை வாங்கவும், படகு வாங்கவும் கடனுதவி பெற்றுக் கொடுத்தாராம்.//

      இப்படி பல மேலாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.

      உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு