29 ஜூன் 2007

எட்டுன்னு சொன்னா எட்டணுமில்ல?

ஆறு விளையாட்டுக்கப்புறம் இப்ப எட்டா?

அதென்னவோ இந்த மாதிரி அழைப்புகள் வரும்போதெல்லாம் வெளியூர்லயே இருக்கேன்..

முதலில் ராகவன், பிறகு மணியன், இறுதியாக உஷா....

அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி...

உடனே எழுத முடியாமல் போனதற்கு காரணம் வெளியூரில் இருந்ததுதான்.

எனக்குள் ஒருவன் என்று என்னுடைய வக்கிரங்களை அல்லது விசித்திரங்களை, எழுதியது ஒருவித மகிழ்ச்சியை அளித்தது......

அதன் பிறகு அழகுகள் ஆறு என என்னை ஈர்த்த அழகான நினைவுகளைப் பற்றி எழுதியது அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் ஒருமுறை அசைபோட்டு பார்க்க உதவியது...

ஆனால் சாதனைகள் எட்டு என்றால் சற்று மலைப்பாகத்தான்....

சாதனைகள் என்பதைவிட என்னுடைய வலிமைகள் (Strengths) என நான் நினைப்பதைப் பற்றி எழுதினால் சரியாயிருக்குமோ என்ற ஒரு எண்ணம்..

முயன்றிருக்கிறேன்...

சுயதம்பட்டம் அடிப்பதில் தவறில்லை என்று நினைப்பவன் நான் அல்ல!

அடக்கி வாசித்தே பழகிப்போனவன்...

ஆனால் இது சங்கிலித் தொடர் விளையாட்டல்லவா, ஆகவே ஆர்ப்பாட்டமில்லாமல் அடக்கமாய் சொல்லலாம் என்ற முடிவுடன்...

1. கர்மமே கண்ணாயிருப்பது...

சாதாரணமாக ஒரு வேலையையோ அல்லது பொறுப்பையோ ஏற்றுக்கொண்டால் அதை முடிக்காமல் விடுவதில்லை என்கிற ஒரு வைராக்கியம் சிறுவயது முதலே இருந்ததாக என் பெற்றோர்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன்... இப்போதும் அப்படித்தான்... ஒருவேளை அது என்னுடைய அறிவுக்கோ அல்லது திறமைக்கோ அப்பாற்பட்டதாக கூட இருந்திருக்கலாம்... ஆனால் நீயாச்சு, நானாச்சு என்கிற ஒருவித பிடிவாதத்துடன் எதையும் முயன்று பார்த்துவிடுவதுண்டு....

2. என்னுடைய வாய்ப்புக்காக காத்திருப்பது... பொறுமையுடன்..

நான் நட்ட செடி இன்றே பூக்கணும் என்கிற மனநிலையுடன் எதற்கும் அவசரப்பட்டதில்லை. இதை என்னுடைய பலஹீனம் என்று பலரும் சொன்னதுண்டு. ஆனால் எனக்கென்னவோ நமக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும் என்ற எண்ணம் எப்போதுமே மேலோங்கி நின்றதுண்டு. அது அலுவலக பதவி உயர்வாக இருக்கலாம்... அல்லது சொந்த வாழ்க்கையில் நான் கைகொள்ள நினைத்த சொத்துபத்தாக இருக்கலாம்.. எதையும் அடித்துபிடித்து அடைய முயன்றதில்லை...

3. பிறர் வம்புக்கு செல்லாமல் இருப்பது..

ஆனால் வந்த வம்பை விடுவதில்லையா என்று கேட்டால்... அதிலும் முயன்ற அளவுக்கு தவிர்க்கவே முனைந்திருக்கிறேன்... நான் அதீதமாக உணர்ச்சிவசப்படுபவன் என்கிற முத்திரை குத்தப்பட்டவன் என்பதாலும் இத்தகைய ஒரு மனப்பான்மையை சமீபகாலமாக வளர்த்துக்கொண்டிருக்கிறேன்...

4. சரி என்று கருதுவதற்காக இறுதிவரை போராடுவது...

என்னுடைய உள்மனதில் சரி என்று நினைப்பதில் உறுதியாய் நிலைத்திருப்பது ஒருவிதத்தில் பிடிவாதம் என்று பலருக்கும் தோன்றினாலும் அதில் தவறில்லை என்று நினைப்பவன் நான். இதனாலேயே பலருடைய வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்க நேர்ந்தாலும்... இது தொடர்கிறது.. கட்டையில் ஊறிப் போன ஒன்றாயிற்றே.. அதை எப்படி விடுவது?

5. வெற்றியையும் தோல்வியையும் ஒரே மனநிலையுடன் சந்திப்பது..

வெற்றியில் வானம் வரை மகிழ்வதிலும் தோல்வியில் பாதாளம் வரை வீழ்வதிலும் நம்பிக்கையில்லாதவன்... என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்துள்ள பல தோல்விகளும் என்னை அவ்வளவாக பாதிக்காமல் இருந்ததற்கு காரணம் இந்த மனப்பாங்குதான்... இது மரணம் வரை தொடர வேண்டும் என்று ஆசைதான்... உடலில் ஏற்படும் பலஹீனம் மனத்தளவில் வந்துவிடக் கூடாதே என்ற கவலையும் இருக்கத்தான் செய்கிறது... பார்ப்போம்... தள்ளாத வயதில் பிள்ளைகளும் கைவிட்டுவிட சோர்ந்துபோன பலரை நான் கடந்து வந்த பாதையில் சந்தித்ததன் விளைவோ என்னவோ அதற்கும் என்னை நானே தயார் செய்துக்கொள்கிறேன்...

6. எந்த ஒரு சூழலிலும் முடிந்த அளவுக்கு நிதானம் இழக்காமல் இருப்பது... (இதில் சமீபகாலமாக சற்று இறங்கி வந்துள்ளதை உணர்கிறேன்...)

இது கயிற்றின் மீது நடப்பதுபோலத்தான்.. சங்கடமான சூழலிலும் முகத்தில் அதை காட்டாமல் இருப்பது என்பது எளிதல்லவே... நானும் எல்லாவித ஆசாபாசங்களுக்கும் அடிமையாகிப்போனவன்தானே.. ஏன் எப்போதும் நிதானத்துடன் இருக்க வேண்டும் என்று உன்னை நீயே கட்டிப்போடுகிறாய் என்றெல்லாம் என் உள்மனது அவ்வப்போது இடித்தாலும் இன்றுவரை, இயன்றவரை நிதானம் இழக்காமல் இருக்கத்தான் முயல்கிறேன்... சிலமுறை என்னையுமறியாமல் இழந்ததுண்டு...

7. அலுவலகத்தையும் குடும்பத்தையும் அதனத்தன் இடத்திலேயே வைத்திருப்பது...

குறிப்பாக என்னுடைய அலுவலக தோல்விகள் என்னுடைய குடும்ப வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்காமல் இருப்பதில் முனைப்பாய் இருந்திருக்கிறேன்... அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்கு வரும் டிபிஆர் வெறும் ஒரு குடும்பத்தலைவனாக மட்டுமே இருந்திருக்கிறான். அலுவலகத்திற்கு வெளியில்தான் என்னுடைய உலகமே இருந்து வந்துள்ளது என்றாலும் மிகையாகாது... அதனால்தானோ என்னவோ தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சகோதரர்கள் என்ற எந்த உறவுகளையும் இழந்துவிடாமல் இருக்க முடிந்திருக்கிறது... நல்லநாள் பொழுதுகளில் உற்றார் உறவினருடன் அவர்களுள் ஒருவனாக கலந்துவிட முடிந்திருக்கிறது... அலுவலக அதிகாரத்தை குடும்பத்தில் காட்டாமல் இருக்க முடிந்திருக்கிறது...

8. இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைத்திருப்பது...

சிறுவயதில் தாத்தாவின் அரவணைப்பில், பிறகு மாணவப் பருவத்தில் குருமார்களின் வழிகாட்டுதலில், விடுதியில் வளர்ந்ததாலோ என்னவோ என்னுடைய உள்மனதில் இந்த இறை நம்பிக்கை வெகு ஆழமாக ஊன்றிப்போனது... என்னுடைய படிப்பும் அறிவு வளர்ச்சியும் அந்த நம்பிக்கையை எந்த அளவிலும் குறைத்துவிடவில்லை.. சொல்லப் போனால் அதை மேலும் வளர்த்துள்ளது என்பதுதான் உண்மை... இறை சிந்தனைகளை அறிவு பூர்வமாக சிந்திப்பதில் பயனில்லை என்பதில் வெகு ஆழமான நம்பிக்கையுள்ளவன் நான்... நான் சார்ந்திருக்கும் மதத்தின் அருமைகளை, அதன் உள்ளர்த்தங்களை உணர்ந்திருக்கும் நான் மற்ற மதங்களையும், அதன் நம்பிக்கைகளையும் உணர்வுபூர்வமாக மதிப்பதிலும் உறுதியாய் இருப்பவன். மதங்களை விட மனங்களே மேன்மையானவை என்பதில் நம்பிக்கையுள்ளவன்... அதனால்தானோ என்னவோ என்னுடைய வாழ்க்கையில் நான் சந்திக்க நேர்ந்த பல தோல்விகளையும், சோதனைகளையும், இன்னல்களையும் வெற்றிகொள்ளும் ஒரு சக்தி, ஒரு மன உறுதி எனக்குள் இருந்து வந்திருக்கிறது என்று கருதுகிறேன்...

இனி விளையாட்டு விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுப் பேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுப் பேரை அழைக்க வேண்டும்...

எல்லாம் சரி... இந்த மூனாவது விதிதான் இடிக்குதே.. யாரை அழைக்கிறது?

அதுவும் எட்டுப் பேரை?

அதிலும் இதுவரை இந்த தொடர் விளையாட்டில் பங்குபெறாதவர்களை...!

கடந்த இருவாரங்களாக தொடர்ந்து தமிழ்மணம் வர இயலாமற்போன இந்த சூழலில் கண்களை மூடிக்கொண்டு சில பெயர்களை பட்டியலிடுகிறேன்...

1. சிவஞானம்ஜி
2. மா.சிவக்குமார்
3. ஜோ
4. முத்து தமிழினி
5. வினையூக்கி
6. துளசி
7. ரஷ்யா ராமநாதன்
8. கோவி. கண்ணன்..


******

14 ஜூன் 2007

இந்த ரேட்டுல பார்த்தா....இந்த அடிப்படையில் பார்த்தால் கூட்டுக்கொள்ளை அடிக்கும் நம்முடைய அ.வாதிகளையும் அரசு அதிகாரிகளையும் எத்தனை நூற்றாண்டுகள் உள்ளே தள்ள வேண்டும்..

அரசனுக்கு ஒரு சட்டம் ஆண்டிக்கு ஒரு சட்டம்கறது சரியாத்தான் இருக்கு!

08 ஜூன் 2007

திராவிட மாயை...

இன்றைய தினமலரில் வெளியாகியுள்ள வாசகர் கடிதங்களுள் ஒன்று...

போதும் என்றுதான் தோன்றுகிறது...

திரைப்படங்களில் பிரம்மாண்டம் - நிறைவு

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த திரைப்பட தயாரிப்பாளர் பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர்.

அவருக்கு ஒரு சகோதரரும் உண்டு. அவரும் பிரபலமான இயக்குனர்தான். அவரும் பிரம்மாண்ட வெறி பிடித்தவர் எனலாம். அதாவது சில சமயங்களில் ridiculous லெவலுக்கு செல்வார். அவருடைய படங்களில் வரும் பாடல் காட்சிகளைப் பார்த்தாலே இது தெரியும். பாடலிலுள்ள ஒவ்வொரு வரிக்கும் (சில சமயங்களில் ஒவ்வொரு வார்த்தைக்கும் கூட) ஒவ்வொரு காட்சி இருக்கும். ஒரு வரியில் வயல்வெளி என்றால் அடுத்த வரி மலைக்கு மீது. ஒரு வரி காஷ்மீர் என்றால் அடுத்த வரி கன்னியாகுமரி என... எளிதாக சென்ற வெளியில் படப்பிடிப்பு நடத்தக்கூடிய காட்சிகளுக்கும் கூட செட்டுகளைப் போட்டு பணத்தை விரயம் செய்யக் கூடியவர்.

ஒவ்வொரு லொக்கேஷனுக்கும் ஒரு பெரிய கும்பலையே கூட்டிக்கொண்டு போய் ஸ்டார்ட் கேமரா என்று சொல்லி முடிப்பதற்குள் அந்த வரி முடிந்துவிடும். ஒருவேளை அந்த ஒரு வரிக்கே ஒரு வாரம் செலவழித்தாலும் வியப்பில்லை. அந்த வரி முடிந்தவுடன் மீண்டும் பேக்கப், பயணம், ஸ்டார்ட் கேமரா.... எத்தனை விரயம்?

நம்மில் யாராவது ஒரு படத்தில் இத்தனை பாடல்கள் வேண்டுமென்றோ அல்லது ஒவ்வொரு பாடலிலும் இத்தனை காட்சிகள் வேண்டுமென்றோ கேட்டிருக்கிறோமா? முன்பெல்லாம் ஒரு தோட்டத்தைக் கூட செட்டுக்குள்ளேயே நான்கைந்து தொட்டிகளையும் அதற்கு பின்னால் நிலாவை ஒரு திரையில் வரைந்து வைத்து படம் பிடித்தார்களே அப்போது திரைப்படங்களை மக்கள் பார்க்கவில்லையா?

கேட்டால் படம் ரிச்சாக இருக்க வேண்டும் என்பார்கள். லாஜிக்காக படும் எடுக்கிறேன் என்று தன்னைப் பற்றி கூறிக்கொள்ளும் அந்த இளைய சகோதரருடைய படங்களுடைய தயாரிப்பு செலவு மற்ற படங்களைக் காட்டிலும் நான்கு மடங்கு, ஐந்து மடங்கு இருக்குமாம். இயக்குனர் திலகம் என வர்ணிக்கப்படும் ஒரு இயக்குனருக்கு சொந்தமான நிறுவனம் இவரை வைத்து படம் எடுத்து நொந்துப்போய் இவருடைய மூத்த சகோதரரான - நேற்றைய பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த - தயாரிப்பாளரிடம் சென்று ஏகமாய் எகிறியிருந்த தயாரிப்பு செலவைப் பற்றி முறையிட்டாராம்!

தன்னுடைய இளைய சகோதரருடைய படங்களுக்கு ஆகும் செலவுகளை சமாளிக்க முடியாமல் இவர் ஊரெல்லாம் அசுர வட்டிக்கு கடன் வாங்கியதன் விளைவு சகோதரர்களுக்கிடையில் மனத்தாங்கல் ஏற்பட்டு பிரிந்து சென்றனர். இவர் வாங்கியிருந்த கடனுக்கு வட்டி, வட்டிக்கு வட்டி என இறுதியில் சமாளிக்க முடியாமல் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு குடும்பத்தினர் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இவருடைய நிறுவனத்திற்கு அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் ஒன்று மிகப்பெரிய அளவில் கடன் வழங்கியிருந்தது. (என்னுடைய கிளையிலிருந்த கடனை அடைக்க அவர் அளித்த காசோலை இந்த வங்கியிலிருந்த கணக்கிலிருந்துதான் வழங்கப்பட்டது.) அதன் கிளை மேலாளர் ஒரு சபலபுத்திக்காரர் என்பதை தெரிந்துக்கொண்ட இந்த தயாரிப்பாளருடைய கும்பல் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து அவருடைய மேலிடம் அனுமதித்திருந்த கடன் அளவுக்கு மேல் சுமார் மூன்று மடங்கு தொகையை பெற்றிருந்தார் என்பது பிறகுதான் தெரிய வந்தது. விளைவு? அவருடைய வங்கி அந்த கிளை மேலாளரைக் குறித்து காவல்துறையில் புகார் செய்ய அவர் சிறையிலடைக்கப்பட்டார். அவரும் என் வயதொத்தவர்தான். இன்னும் வெளியில் வந்தாரா என்பது சந்தேகமே.

இவர் கதை இப்படி முடிந்தது.

நான் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த இரண்டாமவர் கேரளாவைச் சார்ந்தவர்.

அவரும் என்னுடைய கிளையிலிருந்து கடன் பெற்றிருந்தவர்தான். நல்லவேளையாக அவருக்கு கடன் கொடுத்திருந்தது ஒரு படத்திற்காக மட்டும். அந்த படம் வெற்றிபெற்றதால் கடன் முழுவதையும் சிரமமில்லாமல் வசூலிக்க முடிந்தது. ஆனால் அதற்குப் பிறகு அவர் சமர்ப்பித்த விண்ணப்பத்தை என்னுடைய பரிந்துரையின் பேரில் அவருக்கு கடன் அளிக்க எங்களுடைய வங்கி மறுத்துவிட்டது. அப்போதே பெரிய அளவில் பந்தா செய்வார். வங்கி மேலாளர் அவருடைய வீட்டுக்கு வந்து கடன் பத்திரங்களில் கையொப்பம் வாங்க வேண்டும் என்று சொன்னவர்!

இவரும் அபத்தமான பிரம்மாண்டங்களுக்கு பெயர்போனவர். முதல் மூன்று படங்கள் அளித்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் பல கட்டிடங்களை விலைக்கு வாங்கியவர். ஆனால் இறுதியாக அவர் எடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொழிற்சங்கப் பிரச்சினை ஏற்பட்டு படம் பாதியில் நின்றுபோய்... பிறகு மீண்டும் துவங்கி... வெளியாகி ஒரே வாரத்தில் பெட்டிக்குள் திரும்பி...பெருத்த நஷ்டத்திற்கு உள்ளானவர்.

இப்போது அவர் குடியிருப்பது வாடகை வீட்டில் என்றால் நம்ப முடிகிறதா?

இவர்கள் இருவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லையென்றாலும் உங்களால் ஊகித்திருக்க முடியும் என்று நம்புகிறேன்.

இதுதான் பிரம்மாண்டத்தின் விளைவு.

இவர்கள் வரிசையில் வருபவர்தான் இப்போதைய ஷங்கர். மலைக்கு வர்ணம் பூசுவது, ஒரு சாலையையே சாயம் அடிப்பது, லாரிகளுக்கு கண், மூக்கு வைப்பது, அடுக்கு மாடிகளில் சென்று படம் எடுக்காமல் அதற்கென ஒரு பிரம்மாண்டமான செட் போடுவது, இதில்தான் இவருடைய கவனம் செல்கிறதே தவிர லாஜிக்கான கதையை புனைவதில் கவனம் இருக்காது. ரயில்வே காண்டீனில் இருக்கும் ஒரு இரும்புக் கடாயில் இருக்கும் கொதிக்கும் எண்ணெயில் ஒரு மனிதனையே மூழ்கடித்து கொல்லும் அளவுக்கு அபத்த மன்னன்!

வடிவேலுவை நம்பி படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டதுடன் விழித்துக்கொள்வார் என்று நினைத்தேன். ஊஹும்.... மேலும் அவருடைய பயணம் தொடர்கிறது.. காலம்தான் இவருக்கு பதில் சொல்லும். ஆனால் இவருடைய எக்ஸ்ட்ரீமுக்கு ஏவி.எம் போன்ற நிறுவனம் எப்படி சம்மதித்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. இந்த படத்திற்கு செலவழிக்கும் பணத்தை நஷ்டமில்லாமல் எடுப்பதற்கே குறைந்தபட்சம் நூறு நாட்கள் ஹவுஸ்ஃபுல்லாக ஓடவேண்டும் என்று தோன்றுகிறது. அதற்குப் பிறகு லாபம் எப்படி பார்ப்பது? கடவுளுக்கே வெளிச்சம்.

சினிமா ஒரு சூதாட்டம் என்பது சரியாகத்தான் இருக்கிறது. எத்தனை நஷ்டம் ஏற்பட்டாலும் அடுத்த படத்தில் விட்டதை எடுக்கலாம் என்ற நோக்கத்துடன் விட்டுக்கொண்டே இருப்பார்கள்..

சரியானதொரு திட்டமில்லாத வெறும் கனவு காணும் கும்பல் என்றாலும் மிகையாகாது.

ஆகவேதான் திரைப்படத்துறைக்கு கடன் வழங்க இன்னமும் வங்கிகள் முன்வருவதில்லை.

*****

07 ஜூன் 2007

திரைப்படங்களில் பிரம்மாண்டம்

இன்றைய குமுதத்தில் சிவாஜி திரைப்படத்தைப் பற்றி நடிகர் விக்ரம் கூறுகையில் இயக்குனர் சங்கர் அவர்களுடைய பிரம்மாண்ட யுக்திகளைப் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

திரைப்படங்களில் பிரம்மாண்டம் தேவைதான், ஓரளவுக்கு. ஆனால் அதையே ridiculous என்பார்களே அந்த அளவுக்கு கொண்டு செல்வதால் தயாரிப்பாளருக்கு ஏற்படும் விளைவுகளைப் - பொருளாதார விளைவுகள் - பற்றி இவர்களுக்கு கடன் வழங்கும் என்னைப் போன்ற வங்கி மேலாளர்களுக்கே தெரியும்.

நான் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு எங்களுடைய வங்கியின் சென்னைக் கிளையில் மேலாளராக பணியாற்றியபோது இரண்டு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் வழங்கிய அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

முதலாமவர் நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர். அப்போது தமிழ் திரையுலகில் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவர்.

நான் கிளைக்கு பொறுப்பேற்கும்போதே அவருக்கு எங்களுடைய கிளையிலிருந்து கடன் வழங்கப்பட்டிருந்தது. என்னுடைய காலத்தில் அதை புதுப்பிக்க வேண்டும். அதற்காக அவரிடமிருந்து ஒரு விண்ணப்பம் வேண்டியிருந்தது.

அதற்கே பலமுறை என்னுடைய பணியாளர்களுள் ஒருவர் நடையாய் நடக்க வேண்டியிருந்தது. பிறகு பெருந்தன்மையுடன் சரிவர பூர்த்தி செய்யப்படாத ஒரு விண்ணப்பத்தையும் அதனுடன் தணிக்கை செய்யப்படாத நிதியறிக்கைகளையும் சமர்ப்பித்திருந்தார்.

அவருடைய நிதியறிக்கைகளைப் பரிசீலித்தபோது அதில் sundry creditors பகுதியில் சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட திரையரங்குகளின் பெயரைக் காண முடிந்தது. ஏறக்குறைய இவர்கள் எல்லோருடைய பெயரும் sundry debtors பகுதியிலும். அதாவது நிறுவனத்திற்கு கடனும் கொடுத்திருக்கிறார்கள், அதே நிறுவனத்திலிருந்து கடனும் பெற்றிருக்கிறார்கள். இதில் ஏதேனும் வில்லங்கம் இருக்குமோ என்று நினைத்தேன்.

அப்போது அந்த தயாரிப்பாளர் இருந்த உச்ச நிலையில் அவரை அணுகி விளக்கம் கேட்பதென்பது முடியாத காரியம். அவருடைய அலுவலக மேலாளர் அதற்கும் மேல். தொலைப்பேசியில் அழைப்பது வங்கி மேலாளர் என்று தெரிந்ததும் இருந்துக்கொண்டே இல்லையென்று சொல்லும் ரகம். திரைப்பட நடிகர்கள் காட்டும் பந்தாவைவிட திரைப்பட தயாரிப்பாளர்களும் அவர்களுடைய உதவியாளர்களும் காட்டும் பந்தா மிக அதிகம்.

ஒருவழியாக பல தொலைபேசி அழைப்புகளுக்குப் பிறகு தயாரிப்பாளருடைய மேலாளரையும், தணிக்கையாளரயும் சந்திக்க முடிந்தது. என்னுடைய சந்தேகம் எல்லாம் எப்படி ஒருவரே கடன் பெற்றவராகவும், கடன் கொடுத்தவராகவும் தொடர்ந்து இருக்க முடியும் என்பதுதான்.

அதற்கு அவர்கள் அளித்த பதில். 'சார் நம்ம கம்பெனி கண்ட்ரோல்ல இருக்கற தியேட்டர்காரங்கதான் இவங்க. நாங்க தயாரிக்கற படாமாருந்தா ஒரு படத்துக்கு பூஜை போட்டதும் ஏரியா, ஏரியாவா வித்துருவோம். அதுக்கு அவங்க குடுக்கற அட்வான்ஸ் தொகை sundry creditor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம். அதுக்கப்புறம் படம் முடிஞ்சி ரிலீஸ் பண்ற நேரத்துல மீதி பணத்த அவங்களால ஒரே தவணையில குடுக்க முடியாமப் போயிரும். அவங்க குடுத்துருக்கற தொகைய கழிச்சிக்கிட்டு மீதி வரவேண்டிய தொகைய sundtry debtor அக்கவுண்ட்ல புடிச்சிருவோம்.'

எனக்கு அப்போதும் குழப்பம் தீரவில்லை. 'நீங்க சொன்னபடி பார்த்தா படம் ரிலீஸ் பண்ற நேரத்துல அவங்கக்கிட்டருந்து வாங்குன தொகைய கழிச்சிக்கிட்டுத்தான படத்த குடுக்கறீங்க? அப்போ sundry creditorல இருக்கற கணக்க முடிச்சிரணுமே. அதுக்கப்புறம் எப்படி அதுல பாலன்ஸ் இருக்கும்?' என்றேன்.

இது கூட தெரியாதா சார் உங்களுக்கு என்பதுபோல் இருவரும் என்னைப் பார்த்தனர். 'இது அடுத்த படத்துக்கான அட்வான்ஸ் சார்.. அதோட நாங்க வருசத்துக்கு கொறஞ்சது நூறு படங்கள வெளியாளுங்கக் கிட்டருந்து வாங்கி ரிலீஸ் பண்றமே? அதனால இது தொடர்ந்துக்கிட்டே இருக்கும் சார்.'

அதாவது சங்கிலித் தொடர்போன்று படங்கள் தயாரிக்கப்படுவதும், வெளியிடப்படுவதும் நடந்துக்கொண்டே இருப்பதால் நிறுவனத்துடன் தொடர்புக்கொண்டிருந்த திரையரங்குகளிடமிருந்து பணம் பெறுவதும் கொடுப்பதும் தொடர்ந்துக்கொண்டேதான் இருக்கும்.

'சரி சார். அப்படீன்னா ஒவ்வொரு படத்துக்கும் வர்ற லாபத்த எப்படி கணக்கு பண்ணுவீங்க? முழுத்தொகையும் வசூலாவறமாதிரியே தெரியலையே? நீங்க போன வருசத்துல காமிச்சிருக்கற லாபம் எந்தெந்த படங்கள்லருந்து வந்த லாபம்னு ஏதாவது கணக்கு இருக்கா? எங்க ஹெட் ஆஃபீஸ்ல கேப்பாங்களே?' என்றேன் சலிப்புடன்.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இந்த மாதிரி சின்னப் பசங்கள்லாம் பேங்க் மேனேஜரா வந்தா இதான் பிரச்சினை என்று அவர்கள் நினைப்பது எனக்கு நன்றாகவே விளங்கியது.

'சார்... இது நீங்க நினைக்கறா மாதிரி பிசினஸ் இல்லை. எவ்வளவு போட்டா எவ்வளவு லாபம் வரும்னெல்லாம் கணக்கு தெரியாம செய்யற பிசினஸ். ஒரு படத்துக்கு ஒரு கோடி செலவு செய்வோம்... பத்து கோடி லாபம் வரும்... பத்து கோடி இன்வெஸ்ட் பண்ணுவோம்.. படம் ஊத்திக்கும்.. இதுல இந்த படத்துக்கான காச கீழ வச்சாத்தான் அடுத்த பட ரிலீஸ் தருவோம்னு தியேட்டர்காரங்கக் கிட்ட சண்டைக்கு நின்னா... அவ்வளவுதான் நம்ம படத்த எவனும் ரிலீஸ் பண்ண முன்வரமாட்டான். நீங்க குடுக்கற --------லட்சத்துல நடக்கற கம்பெனியில்லசார் இது. வேணும்னா ஒங்க மொத்த பேலன்சையும் வட்டியோட இப்பவே செக்கா குடுத்து செட்டில் பண்ண சொல்றேன். வாங்கிக்கிறீங்களா?' என்றார் தணிக்கையாளர் எகத்தாளமாக.

அன்றைய தியதியில் அவர்களுக்கு அளித்திருந்த கடன் தொகை கணிசமானதுதான்... அந்த தொகையை உடனே வசூலித்துவிட்டால் அதன் மூலம் வங்கிக்கு கிடைத்துவரும் லாபம் உடனே போய்விடும். 'அவங்க நல்ல பார்ட்டியாச்சே எதுக்கு அக்கவுண்ட க்ளோஸ் பண்ணிட்டாங்க?' என்ற கேள்விகளும் என்னுடைய மேலிடத்திலிருந்து எழலாம்.

ஆயினும் நாம் வழங்கும் கடன் மட்டும் வேண்டும். ஆனால் நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்க விருப்பமில்லை என்பதுபோல் நடந்துக்கொள்ளும் வாடிக்கையாளர் நமக்கு தேவையில்லை என்று அப்போது தோன்றியது எனக்கு. ஒரு நொடி கூட தயங்காமல், 'சரி சார். குடுத்துருங்க.' என்றேன். இதை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லையென்பது அவர்கள் முகத்தில் தோன்றிய அதிர்ச்சியே காட்டிக் கொடுத்தது. ஆனால் இந்த சின்ன பையன் முன்னால நம்ம கவுரவத்தை இழந்துவிடவேண்டாம் என்று நினைத்தார்களோ என்னவோ உடனே காசோலையை கிழித்துக் கொடுத்துவிட்டார்கள். 'இது ப்ளாங்க் செக் சார்... வட்டியோட சேத்து ஃபில் அப் பண்ணிக்குங்க. பேங்க்ல போடறதுக்கு முன்னால அமவுண்ட மட்டும் போன் பண்ணி சொல்லிருங்க.' என்றவாறு எழுந்து நிற்க நானும் பெற்றுக்கொண்டு திரும்பினேன்.

ஒருவேளை என்னுடைய அனுபவமின்மையும் இத்தகைய முடிவுக்கு காரணமாயிருக்கலாம். ஆனால் அது என்னை எத்தனை பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றியது என்பது சுமார் பதினைந்து வருடங்கள் கழித்து தெரிந்தது...

அதைப்பற்றி நாளை கூறுகிறேன்....

01 ஜூன் 2007

அகாலமாய் இன்னும் ஒரு மரணம்...


மரணம் ஒரு கள்வனைப் போல் வரும்...

சொல்லாமால், கொள்ளாமல்... எவ்வித முன்னறிவுப்பும் இன்றி....

எத்தனை உண்மையான வார்த்தைகள் இவை...!

ஆம்!

அப்படித்தான் வந்தது... இன்னும் ஒரு மரணம்... அகாலமாய்...

மிக இளைய வயதில்.... குடும்பத்திலுள்ளவர்கள் எவரும் எதிர்பார்த்திராத நேரத்தில்...

தலைவலி, காய்ச்சல் என்று ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத....

அலுவலகமே தன்னுடைய வாழ்க்கை என்றிருந்த...

ஐம்பத்து மூன்று வயது மட்டுமே நிறைந்த...

என் அருமை நண்பர்களுள் ஒருவரின் அகால மரணம்...

கடந்த வாரத்தில் ஒருநாள்....

சென்னையிலிருந்த எங்களுடைய கிளைகளில் ஒன்று பரபரப்பாக இருந்த நேரம்...

'சார் கொஞ்சம் கிட்டினஸ் மாதிரி இருக்கு... டைனிங் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்...'

'தாராளமா தர்மலிங்கம்... போங்க.. ஒங்க சீட்ட நா பாத்துக்கறேன்...'

சென்று படுத்தவர் அடுத்த சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில்...

இடையில் சென்று பார்த்து வருகிறார் நண்பர்... ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரை எப்படி எழுப்புவது என்ற தயக்கம்... திரும்பி வந்து தன்னுடைய அலுவலில் மூழ்கிப் போகிறார்...

பகல் உணவு இடைவேளை...

மீண்டும் சென்று பார்க்கிறார்...

அப்போதும் அதே நிலை....

முகம் லேசாக வெளிறிய தோற்றம்... கலக்கத்துடன் தன்னுடைய மேலாளரை துணைக்கு அழைக்கிறார்...

அவருடன் கிளையிலிருந்த பலரும் விரைகின்றனர்....

ஒருவர் தட்டியெழுப்ப முயல்கிறார்... பதிலில்லை.... பதற்றத்துடன் மேலாளர்.... 'மூச்சு விடறா மாதிரி இருக்கே... மயக்கமாருக்கும்... கொஞ்சம் தன்னி தெளிப்பமா?' என்கிறார்...

ஊஹூம்... பலனில்லை... அள்ளிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்...

'சாரிங்க... சுமார் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால அவருக்கு ப்ரெய்ன் ஹெமரேஜ் ஆயிருக்கு.... ப்ர்ஷர் அளவுக்கு மீறி ஆச்சினாத்தான் இது பாசிபிள்... அவர் பி.பிய கண்ட்ரோல் பண்ணாம விட்டுருப்பார்.... Let us try... ஆனா இப்ப எதுவும் சொல்ல முடியாது...'

அவரை உறங்கச்சொல்லி அனுப்பியவர் கலங்கிப் போகிறார்... நானே இவரோட மரணத்துக்கு காரணமா போய்ட்டனோ...

சேச்சே... ஒங்களுக்கு எப்படி சார் தெரியும்... உடனிருந்தவர்கள் தேற்றுகின்றனர்...

மனைவி, மகன் மற்றும் மகள் என்ற சிறிய குடும்பம்.... மகன் ஒரு மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்து சில மாதங்கள்... மகள், முதல் வருடம் எம்.பி.பி.எஸ்சில்..

ஒரு வார போராட்டத்திற்குப் பிறகு கடந்த சனிக்கிழமை... இறுதி மூச்சு....

எப்போதும் புன்னகையுடன் தன்னுடைய பிரச்சினைகளை திரை போட்டு மறைக்கும் பழக்கமுள்ளவர்... அடிக்கடி தலைவலித்திருக்கிறது... 'டாக்டர போய் பாக்கலாம்...' என்று அறிவுறுத்தியிருக்கின்றனர் நண்பர்களும் குடும்பத்தினரும்....

'அதெல்லாம் ஒன்னுமில்ல.. ரெண்டு மாத்திர போட்டா சரியாயிரும்...'

'போன ஒரு வருசமா எப்படியும் ப்ரஷர் 180 வரைக்கும் போயிருக்கும்... அவர் கவனிச்சிருக்க மாட்டார்...' என்றனர் மருத்துவர்கள்...

நம்மில் பலரும் இந்த ரகம்தான்...

தலைவலி என்றால்.... மாத்திரை போட்டுக்கொள்வது... அதைத் தவிர வேறொரு நோயும் இருக்க வாய்ப்பில்லை என்கிற மெத்தனம்..

சிலருக்கு சோம்பல் என்றால் வேறு சிலருக்கு பணத்திற்கு எங்கே போவது என்கிற கவலை... சின்னதையெல்லாம் பெரிசாக்கி காச கறந்துருவாங்க என்கிற அர்த்தமில்லாத அச்சம்...

என்னுடைய நண்பர் ஒரு வங்கி அதிகாரி... சுமாருக்கும் சற்றே அதிகமான பொருளாதார வசதியுள்ளவர்.... 'ஆனா அப்பாவோட ஃபைனான்ஸ் மேட்டர்ஸ்... எங்க யாருக்கும் சரியா தெரியாது...'

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மரித்த என்னுடைய மற்றொரு நண்பரின் குடும்பத்தினர் கூறிய அதே புகார்... அதே ஆதங்கம்...

இதிலும் நம்மில் பலர் இவரைப் போன்றுதான்.. என்னையும் சேர்த்து...

என்னைத் தவிர குடும்பத்தில் வேறு யாருக்கும் பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாது என்கிற எண்ணம்... கர்வம் என்றும் சொல்லலாம்..

'என் வய்ஃபுக்கு ஒன்னும் தெரியாது சார்... எவ்வளவு வந்தாலும் செலவழிச்சிருவா...அவளுக்கு தெரியாம சேத்தாத்தான் உண்டு...'

நண்பர்கள் மத்தியில் இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்கிற ஆண்கள் எத்தனை பேர்... அதில் நீங்களும் இருக்கலாம்... நானும் இருக்கலாம்...

திட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்கிறது அரசு...

ஆனால் அந்த சிறிய குடும்பத்திலும்தான் எத்தனை ரகசியங்கள்... அவநம்பிக்கைகள்....

எத்தனை ரகசியங்கள் ரகசியங்களாகவே நிலைத்துப் போகின்றன!

இது தேவையா?

நாளை நடக்கவிருப்பதை யாரறிவார்?

நிச்சயமில்லாத அந்த நாளை எதிர்கொள்ள நம்மை மட்டுமல்லாமல் நம் குடும்பத்தாரிடமும் நம்மைப் பற்றிய ரகசியங்களை... குறிப்பாக நம்முடைய பொருளாதார ரகசியங்களை பகிர்ந்துக்கொள்வோம்...

நாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

இந்த வையகத்துடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.. குறைந்த பட்சம் நம் குடும்பத்தினரிடமாவது பகிர்ந்துக்கொள்வோம்..

நண்பர் தர்மலிங்கத்தின் அகால மரணம் யாருக்கு பாடம் புகட்டியுள்ளதோ இல்லையோ என்னைப் போன்ற, என் வயதொத்த நண்பர்களுள் பலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாய் ஒலித்திருக்கிறது...

அன்னாரின் ஆன்மசாந்திக்காகவும்... அவரை இழந்து தவிக்கும் மனைவி, மகன் மற்றும் மகளுக்காகவும் பிரார்த்திக்க உங்களை அழைக்கிறேன்......


***