நான் பணியில் இருந்த காலத்தில் பயங்கர கோபக்காரன் என்று பெயர் எடுத்தவன். எதற்கெடுத்தாலும் கோபம் வரும். அப்படி நடந்துக்கொண்டால்தான் பிறர் நம்மைக் கண்டு அஞ்சுவார்கள் என்ற எண்ணம். ஒரு அதிகாரி என்றால் கண்டிப்பும் கறாருமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மற்றும் நம்முடைய கோபத்தால் மட்டுமே நமக்குக் கீழே பணியாற்றுபவர்கள் நமக்கு அஞ்சுவார்கள் என்ற எண்ணமுமே இதற்கு முக்கிய காரணம். அது ஓரளவுக்குத்தான் உண்மை என்பதை புரிந்துக்கொள்ள பல காலம் பிடித்தது. இந்த அதீத கோபம் என்னை பல சமயங்களில் தனிமைப்படுத்தியுள்ளது.
என்னுடைய வங்கி தலைவர்களுள் ஒருவர் 'நண்பர்களையும் விரோதிகளாக்கிவிடும் திறமை உனக்கு சற்று அதிகமாகவே உள்ளது' என்றார் ஒருமுறை கேலியுடன். ' As you go up in the ladder you should know how to manage your anger.'என்றார் தொடர்ந்து.
நான் மும்பையில் கிளை மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒருமுறை புறநகர் மின்வண்டியிலிருந்து இறங்கும்போது தலைசுற்றி பிளாட்பாரத்தில் விழுந்துவிட்டேன். யாரோ என்னைப் பின்னாலிருந்து பிடித்துத் தள்ளியதுபோலிருந்தது. மும்பை புறநகர் மின்வண்டிகளிலிருந்து இறங்கும்போது நம்மை தொடர்ந்து இறங்க முயலும் கும்பல் முன்னாலிருப்பவர்களை தள்ளிவிடுவது சகஜம்தான் என்றாலும் அன்று நான் விழுந்ததற்குக் காரணம் அதுவல்ல என்பது நண்பர்கள் சிலர் உதவியுடன் என் கிளைக்கு அருகிலிருந்து மருத்துவரைச் சந்தித்தபோதுதான் தெரிந்தது. என் தலைசுற்றுக்குக் காரணம் என்னுடைய உயர் இரத்த அழுத்தம் அபாய எல்லையை நெருங்கியிருந்ததுதான். 'இவ்வளவு ப்ரஷர வச்சிக்கிட்டு எப்படி நீங்க மேனேஜ் பண்ணிக்கிட்டிருந்தீங்க?' என்றார் மருத்துவர். எனக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்ததே அப்போதுதான் தெரிய வந்தது. 'குறைஞ்சது ஒரு வாரம் கம்ப்ளீட் ரெஸ்ட் எடுக்க வேண்டும்' என்றவர் 'கொஞ்ச நாளைக்கி மாசம் ஒரு முறை BP செக் பண்ணிக்குங்க சார்' என்று எச்சரிக்கையும் செய்து அனுப்பினார். அன்று துவங்கிய மருத்துவம் இன்றும் தொடர்கிறது.... அதாவது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக!
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான் அதீத கோபம் வருகிறதா அல்லது அதீத கோபம் கொள்பவர்களுக்குத்தான் உயர் இரத்த அழுத்தம் வருகிறதா என்ற கேள்வி கோழியிலிருந்து முட்டை வந்ததா முட்டையிலிருந்து கோழி வந்ததா என்று கேட்பது போன்றது.
ஆனால் உண்மையில் உயர் இரத்தம் அழுத்தம் உள்ளவர்களுக்குத்தான் கோபம் வரும் என்பதில்லை. கோபம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். பச்சிளம் குழந்தைக்கும் கோபம் வரும். அதை வெளிக்காட்டிக்கொள்ளத்தான் அது அழுகிறது. தொட்டிலில் சிறு நீர் கழித்து நெடு நேரம் ஆகியும் அதனுடைய அரைக்கச்சையை (nappy) மாற்றாவிட்டால் வீரிட்டு அழுவது கோபத்தின் வெளிப்பாடுதான். மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் மிருகங்களுக்கும் கூட கோபம் வருவது சகஜம்.
கோபம் என்பது நம்முடைய உணர்வுகளின் வடிகால் என்றும் கூறலாம். உணர்ச்சி உள்ள அனைவருக்குமே கோபம் வரும், வர வேண்டும். கோபம் வராத மனிதன் இல்லவே இல்லை என்றும் கூறலாம். சிலர் அதை உடனே வெளிக்காட்டிவிடுவார்கள். இவர்களைத்தான் கோபக்காரர் என்கிறோம்.
வேறு சிலர் கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் இழக்காமல் இருப்பதைப் போல் காட்டிக்கொள்வார்கள். இவர்களை சாது என்றோ அல்லது கோழை என்றோ குறிப்பிடுகிறோம். சாது போல் இருப்பவர்களுக்கு எப்போதாவது வரும் கோபம் கோபக்காரர்களுக்கு அடிக்கடி வரும் கோபத்தை விட பயங்கரமானது. அதனால்தானோ என்னவோ சாது மிரண்டால் காடு கொள்ளாது என்கிறார்கள். இதை யானையை எடுத்துக்காட்டாக கூறுவார்கள்.
கோபம் வருவதில் தவறில்லை ஆனால் அது நியாயமான காரியங்களுக்கு வர வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் அநீதிகளைக் காணும்போது வரும் கோபம் நியாயமான கோபம். அதாவது மற்றவர்களுடைய நலனுக்காக நாம் கோபப்படும்போது அதை ஆக்கபூர்வமான கோபம் எனலாம். நமக்கு தேவையானவற்றை கேட்டுப் பெறுவதற்கு ஏற்படும் கோபமும் நியாயமான கோபம்தான். தொழிலாள வர்க்கத்தினரின் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு எதிராக ஏற்படும் கோபத்தின் வெளிப்பாடுகளே. இவற்றில் தவறில்லை. அழுகிற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும் என்பார்கள்.
ஆக கோபம் அனைவருக்குமே வரும். அதில் தவறில்லை. ஆனால் அதை எவ்வாறு வெளிக்காட்டுகிறோம் என்பதில்தான் நம்மில் சிலர் மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறோம். சாது அல்லது கோபக்காரன் என்று முத்திரைக் குத்தப்படுவது நம்முடைய கோபத்தை வெளிக்காட்டும் முறையால்தான். சில குழந்தைகள் பசி வந்துவிட்டால் அழுது ஊரையே கூட்டிவிடுவார்கள். வேறு சில குழந்தைகளோ பசித்தாலும் தேமே என்று இருக்கும். அதுபோலத்தான் நம்முடைய கோபத்தின் வெளிப்பாடும்.
ஆனால் கோபத்தை வெளிக்காட்டிவிடுவதுதான் நம்முடைய ஆரோக்கியத்திற்கு நல்லது என்கின்றனர் மருத்துவர்கள். அதை அடக்குவதால் அது நம்முடைய இரத்த அழுத்தத்தை உயர்த்தக் கூடுமாம்.
ஆனால் அதீத கோபமும் ஆபத்தான விஷயம்தான். ஆகவே இவ்விரு துருவங்களுக்கும் இடையிலுள்ள நிலையில் நம்மை வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. அதாவது நம்முடைய கோபத்தை ஓரளவுக்கு திறம்பட கையாள்வது. அதை ஆக்கப்பூர்வ உணர்வாக (constructive expression) வெளிப்படுத்துவது. நம்முடைய எதிர்ப்பை, ஏமாற்றத்தை அல்லது சலிப்பை பிறர் புரிந்துக்கொள்ளும் வகையில் வெளிப்படுத்துவது.
ஏனெனில் நம் உள்ளத்தில் ஏற்படும் இத்தகைய உணர்வுகளை வெளிக்காட்டுவதன் மூலம் மட்டுமே இத்தகைய உணர்வுகளுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு நம்முடைய உணர்வை உணர்த்த முடியும்.
கோபத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் அதை அடக்க முயல்வதும் இருவேறு விஷயங்கள். Anger Management என்பதும் Anger Control என்பதும் ஒன்றல்ல. கோபத்தை கையாள்வது (Managing one's anger) என்பது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. அது அனுபவத்தால் மட்டுமே வரக்கூடியது.
ஏனெனில் நம் உள்ளத்தில் ஏற்படும் இத்தகைய உணர்வுகளை வெளிக்காட்டுவதன் மூலம் மட்டுமே இத்தகைய உணர்வுகளுக்கு காரணமாக இருப்பவர்களுக்கு நம்முடைய உணர்வை உணர்த்த முடியும்.
கோபத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும் அதை அடக்க முயல்வதும் இருவேறு விஷயங்கள். Anger Management என்பதும் Anger Control என்பதும் ஒன்றல்ல. கோபத்தை கையாள்வது (Managing one's anger) என்பது அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. அது அனுபவத்தால் மட்டுமே வரக்கூடியது.
கோபம் வராமல் இருக்கவே முடியாது. ஏனெனில் அது நம் கையில் மட்டும் இல்லை. சாலையில் பயணிக்கும்போது விபத்து ஏற்படாமல் இருப்பது எவ்வாறு நம் கையில் மட்டும் இல்லையோ அதுபோலத்தான் இதுவும்.
காலையில் எழுந்தவுடன் 'இன்று முழுவதும் நான் யாரிடமும் கோபப்பட மாட்டேன்.' என்ற உறுதிமொழியுடன் வீட்டிலிருந்து சாலையில் இறங்கியதுமே நாம் கோபப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதுண்டு. நம் கண்ணெதிரிலேயே சாலை விதிகளை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளையோ அல்லது சாலையை கடக்கும் பாதசாரிகளையோ கணும்போது நம்மையுமறியாமல் கோபம் எழலாம். மேலும் பேருந்து நிறுத்தத்தில் வேண்டுமென்றே நிற்காமல் செல்லும் பேருந்து ஓட்டுனர், பேருந்தில் இடமிருந்தும் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு நம்மை பேருந்தில் ஏறவிடாமல் தொல்லைதரும் பயணிகள் என நாம் கோபம் கொள்வதற்கு என்று பல காரணிகள் உள்ளன.
இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் போகிறவர்கள்தான் அதிகம். ஆனால் ஒரு சிலருக்கு இதை பொறுத்துக்கொள்ள முடியாது. இது அவரவர்களுடைய மனநிலையைப் பொறுத்தது. வளர்ப்பு முறையைப் பொறுத்தது.
- -
எதற்கெடுத்தாலும் சினம் கொள்பவர்களை - அதாவது அதை வெளிக்காட்டிக்கொள்பவர்களை - சில வாரங்கள் தொடர்ந்து கண்கானித்து வந்ததிலிருந்து கண்டுபிடித்த சிலவற்றை பட்டியலிட்டுள்ளனர் மனநல ஆய்வாளர்கள்.
1. எதை செய்தாலும் இதை இப்படித்தான் செய்ய வேண்டும்,
2. எதையும் என்னால் மட்டுமே சரியாகச் செய்ய முடியும்,
3. என்னுடன் ஒத்துப் போகாத அனைவரும் என்னுடைய எதிரிகள்,
4. நான் சொல்வதைத்தான் மற்ற அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற பிடிவாத எண்ணம் கொண்டவர்கள் அதாவது எதற்கும் எந்த காலத்திலும் எவருக்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள மறுப்பவர்கள்.
இத்தகைய மனநிலை உள்ளவர்கள்தான் பெரும்பாலும் அதிக சினம் கொள்பவர்களாம்.
ஆனால் இவர்களுள் அனைவருமே தங்களுடைய கோபத்தை அப்படியே வெளிக்காட்டுபவர்கள் என்று கூறிவிட முடியாது. கடுகடுவென்ற முகபாவனையுடன் உள்ளவர்களை இவர்கள் கோபக்காரர் என்று எளிதில் இனம் கண்டுக்கொள்ள முடிகிறது. ஆனால் இதே மனப்போக்கு உள்ளவர்களும் தங்களை மற்றவர்கள் இனம் கண்டுக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடன் சாது வேடம் போடுபவர்களும் உண்டு. முன்னவர்களை விட இவர்கள்தான் மிகவும் அபாயகரமானவர்கள். நான் திருடன் என்பதை ஒப்புக்கொள்பவனை விட நல்லவனைப் போல் வேடமிட்டுக்கொண்டு கொள்ளையடிப்பவனைப் போன்றவர்கள் இவர்கள்.
கோபம் வரும்போது அதை வெளிக்காட்டிவிட வேண்டும் இல்லையென்றால் அது நம்முடைய உடல் நலத்தை பாதிக்கக் கூடும் என்று கூறினேன். இதற்கு என்னுடைய நெருங்கிய நண்பரும் அவருடைய மனைவியுமே உதாரணம்.
என்னுடைய நண்பர் சினம் கொண்டு நான் பார்த்ததே இல்லை. எந்த சூழலிலும் தன்னுடைய நிதானத்தை இழக்க மாட்டார். அவருடைய மனைவி அவருக்கு நேர் எதிர். எதற்கெடுத்தாலும் கோபம் வரும். மனைவியின் கோபம் நண்பரை பாதிக்கவில்லை என்பதை அவருடைய முகத்தை பார்த்தாலே தெரியும். அருகிலேயே அமர்ந்திருந்தாலும் எதுவும் நடக்காததுபோல் இருப்பார். அதுவே அவருடைய மனைவியின் கோபத்தை அதிகரிப்பதை பார்த்திருக்கிறேன். 'நா கரடியா கத்தறேன், எப்படி ஒக்காந்துருக்கார் பாருங்க? இவர் இப்படி இருக்கறதாலத்தான் எனக்கு கோபமே வருதுங்க.' என்பார் மனைவி. எப்படி நண்பரால் இப்படி இருக்க முடிகிறது என்று நானும் பல சமயங்களில் வியந்திருக்கிறேன். ஆனால் சில வருடங்கள் கழித்து அவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் தெரிந்தது அவர் கோபத்தை எந்த அளவுக்கு அடக்கி வைத்திருந்தார் என்பது. தன்னுடைய அதீத கோபம்தான் தன்னுடைய கணவருக்கு மாரடைப்பு ஏற்பட காரணம் என்பதை அறிந்தபோது நொருங்கிப் போனார் அவருடைய மனைவி.
சிலர் வேண்டுமென்றே கோபப்படுவார்கள். இத்தகையோருக்கு அது தங்களுக்கும் தங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் அதை கண்டுக்கொள்ளாதவர்கள் போல் இருப்பார்கள். இத்தையோரை திருத்தவே முடியாது. இவர்களுக்கு யோகா போன்றவைகள் கூட பலனளிக்காது. அது அவர்களுடைய குணநலன் (character).
வேறு சிலர் தங்களையுமறியாமல் கோபப்படுவார்கள். தாங்கள் செய்வது தவறு என்று தெரியும். ஆனால் தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள். கோபம் வரும்போதெல்லாம் அதை தவிர்ப்பதற்கு முயல்வார்கள். ஆனால் முடியாமல்போய்விடும். பிறகு தங்களுடைய கோபத்திற்கு வருத்தம் தெரிவிப்பார்கள். இவர்கள் தங்களுடைய கோபத்தை தவரிக்கவோ அல்லது ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்துக்கொள்ளவோ முயற்சி செய்யலாம்.
கோபத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?
1. கோபத்திற்கு காரணமாகவுள்ள நபர்களிடமிருந்தோ அல்லது அந்த இடத்திலிருந்தோ விலகிச் சென்றுவிடலாம்.
2. கோப மன நிலையில் உள்ளபோது பேசாமல் இருந்துவிடலாம்.
3. மனதை சாந்தப்படுத்த உதவும் உடற் பயிற்சிகள் அல்லது யோகா போன்றவைகளில் ஈடுபடலாம்.
இப்படி எத்தனையோ வழிகளில் கோபத்தை எல்லை மீறி செல்லாமல் கையாள (Manager) முயற்சி செய்யலாம்.
இதையும் மீறி கோபம் வரும்போது அதை உள்ளுக்குள்ளேயே வைத்து புழுங்காமல் வெளியில் காட்டிவிடுவதுதான் நல்லது. ஆனால் அதையும் ஒரு எல்லைக்குள் வைத்துக்கொள்ள பயிற்சி செய்ய வேண்டும்.
சினம் கொள்ளாம் இருப்பது முற்றும் துறந்த துறவிக்கே சாத்தியமாகும். ஆகவே கோபத்தை திறம்பட கையாள்வது எப்படி என்பதை மட்டுமே நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
இது ஒரு நாளில் கைவந்துவிடும் கலையல்ல. காலப் போக்கில் அனுபவமும் விவேகமும் கூட கூடத்தான் இது சாத்தியமாகும்.
சினம் கொள்வதைப் பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் என்பதை இணையத்தில் ஆராய்ந்தபோது என் கண்ணில் பட்டவற்றை கீழே கொடுத்துள்ளேன்.
குறள் 303:
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.
கலைஞர் உரை:
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.
குறள் 304:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
கலைஞர் உரை:
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.
குறள் 305:
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.
கலைஞர் உரை:
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம்,
அவனை அழித்துவிடும்
குறள் 307:
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
கலைஞர் உரை:
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.
குறள் 310:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
கலைஞர் உரை:
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.
இன்று மனநல ஆய்வாளர்கள் ஆய்ந்து கண்டறிபவைகளை சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வைத்துள்ளார் வள்ளுவர்!! தமிழின் பெருமையை இதற்கு மேலும் பறைசாற்ற வேண்டுமா என்ன?
**********