09 டிசம்பர் 2011

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு (நிறைவு)

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் உள்நாட்டு சிறு வணிகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்னும் வாதம் ஒரு மாயை.


இந்தியா போன்று வளரும் நாடுகள் இன்னும் அதி வேகத்துடன் வளர்வதற்கு உதவுவது அன்னிய முதலீடு மட்டுமே. கடந்த பத்தாண்டுகளில் இதைஏற்றுக்கொண்டு வளர்ந்த நாடுகளான சீனா, தைவான், இலங்கை போன்ற நாடுகள்தான் நமக்கு முன்னுதாரணம். இந்தியாவை விடவும் பிந்தங்கியிருந்த பல நாடுகள் கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முன்னேறி இருப்பதற்கு மூல காரணம் அந்நாட்டில் தடையில்லா அன்னிய முதலீட்டை அனுமதித்ததுதான்.

நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் இதற்கு வித்திட்டாலும் அதை தொடர்ந்து வந்த மத்திய, மாநில அரசுகள் அதை முழு மூச்சுடன் நடைமுறைபடுத்தியிருந்தால் நாம் எங்கோ சென்றிருப்போம். இந்தியா போன்ற நாடுகள்தான் இனி எதிர்வரும் காலத்தில் நம்முடைய முதலீட்டிற்கு
ஏற்ற நாடுகள் என மேற்கத்திய நாடுகள் கருதுவதன் நோக்கம் நம்முடைய மிக அதிக அளவிலான நடுத்தர மற்றும் அதற்கு மேலுள்ள நுகர்வோர் எண்ணிக்கையும் அவர்கள் கைவசமிருக்கும் செலவழிக்கக் கூடிய வருமானமும்தான் (disposable income).


ஒரு நாடு வேகமாக வளர்வதற்கு முதலீடு (Investment) எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அதன் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்களை நாட்டு மக்கள் வாங்கி பயன்படுத்துவது (consumption). நாட்டு மக்கள் ஈட்டிய வருமானத்தில் ஒரு கணிசமான தொகையை செலவு செய்தால்தான் சந்தையிலுள்ள பொருட்கள் விற்பனையாகும், அதன் தயாரிப்பாளர்கள்/வணிகர்களுக்கு அதிக விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபம் அவர்களை மேலும், மேலும் அத்தகைய பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகப்படுத்த ஊக்கப்படுத்தும். இதைத்தான் பொருளாதார நிபுணர்கள் 'Demand spurs more supply , increased supply creates more consumption and increased consumption creates more demand' என்கிறார்கள்.  இது ஒரு முடிவில்லா சுழற்சி. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த தொடர்ந்த ஓட்டம் மிகவும் அவசியம்.

ஒரு வளர்ந்து வரும் நாட்டின் சந்தையில் சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மட்டும் இருந்தால் போதாது. ஒரு ஆரோக்கியமான சந்தை வளர்ச்சிக்கு ஒருசில பெரிய மற்றும் மிகப் பெரிய வணிகர்களும் மிக அவசியம். அது அந்த நாட்டைச் சார்ந்ததா அல்லது அயல்நாட்டைச் சார்ந்ததா
என்பதல்ல முக்கியம். அனைவரும் சந்தையில் வாணிகம் செய்ய சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் (level playing ground) என்பதுதான் முக்கியம்.


அன்னிய நாட்டிலிருந்து வரும் சிந்தனைகள், யுக்திகள், முன்னேற்றங்கள் நமக்கு உகந்ததுதான் என்றால் அவற்றை கற்றுக்கொண்டு நாமும் நம்முடைய வணிகத்தில் செயல்படுத்தி முன்னேற முயல வேண்டுமே தவிர அவர்கள் நம்மை விடவும் தேர்ந்தவர்கள் அல்லது அதை நம்மால்
கற்றுக்கொள்ள முடியாது என்று அச்சத்துடன் அவர்களை வரவே விடாமல் தடுக்க முயல்பவர்கள் தன் தலையை நிலத்தில் புதைத்துக்கொள்ளும் நெருப்புக்கோழிக்கு சமம்.

எந்த கொம்பன் வந்தாலும் என்னால் சரியான போட்டியை அவனுக்கு கொடுக்க முடியும் என்கிற திமிர் இந்தியனுக்கு இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளில் நம் தமிழகத்தில் நுழைந்த பெரிய மற்றும் மிகப் பெரிய வட நாட்டு அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் எந்த தமிழக நிறுவனம்
திவாலானது அல்லது நொடித்துப் போனது? ரிலையன்ஸ் நிறுவனம் தமிழகமெங்கும் தன்னுடைய காய்கறி கடைகளை திறந்தபோது எத்தனை கூப்பாடு போட்டார்கள்? தெருமுனை காய்கறி கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிடும் என்றார்களே? அதுவா நடந்தது? இல்லை. நம்முடைய நாட்டில் 
ஒவ்வொரு வணிகருக்கும் அதற்கென்ற பிரத்தியேக வாடிக்கையாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ரிலையன்ஸ் வந்தது அதை தொடர்ந்து மோர், ஃபுட்வேர்ல்ட் என எத்தனை கடைகள் வந்துள்ளன? இருப்பினும் அனைத்திலும் லாபகரமான வணிகம் நடப்பதால்தான் இன்றும் அவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. அதுதான் இந்தியாவின் தனித்தன்மை. அண்டை மாநிலமானாலும் சரி அண்டை நாடானாலும் சரி. யார் வேண்டுமானாலும் இங்கு வந்து வணிகம் அல்லது தொழில் செய்யலாம். அதனால் உள் நாட்டு வணிகர்கள் பாதிக்கப்படப் போவதில்லை.

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தாலும் அப்படித்தான். அப்படியே ஒருவேளை பாதிப்பு ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் தெருமுனை சிறு வணிகர்கள் அல்ல. சமீப காலமாக புற்றீசல் போன்று ஊரெங்கும் பெரிய அளவில் வணிக வளாகங்களை திறந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். இத்தகையோருடைய எதிர்கால வளர்ச்சி விகிதம் ஒருவேளை பாதிக்கப்படலாம். வலிமையான பொருளாதாரம், சிறந்த வியாபார யுக்தி, நிர்வாகத் திறன் உள்ள நிறுவனங்கள் நிலைத்து நிற்கும். மற்றவை பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்படும்.

ஆனால் பன்னாட்டு நிறுவனங்களுடைய வருகையினால் கிடைக்கவிருக்கும் நன்மைகள் என்ன?

1. பன்னாட்டு நிறுவனங்களுடைய நேரடி கொள்முதல் விவசாயிகளை தங்களுடைய விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க உதவும்.

2. இடைத்தரகர்களுடைய ஆதிக்கம் குறையும் அல்லது நாளடைவில் அடியோடு ஒழிக்கப்படும்.

3. விலைவாசி, முக்கியமாக உணவுப் பொருட்களுடைய விலையில் ஒரு ஸ்திரத்தன்மை ஏற்படும்.

4. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இடையில் ஏற்படும் வியாபார போட்டி பொருட்களின் விலையை நிச்சயம் குறைக்கும்.

5. தரமான, சுத்தமான, கலப்படமில்லாத உணவுப் பொருட்கள் கிடைக்கும் (இப்போது உணவுப் பொருட்களில் கலப்பதற்கென்றே இயங்கிவரும் நிறுவனங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும்).

6. மேலைநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் பொருட்களால் விரயமாகும் அன்னிய செலவாணி மிச்சமாகும்.

7. அன்னிய முதலீட்டின் வருகையால் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு மேலும் அதிகரிக்கும்.

ஆகவே சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை 51 விழுக்காடு வரை அனுமத்திப்பது என்ற மத்திய அமைச்சரவையின் முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.

ஆனால் நாட்டின் வணிக சூழலில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இத்தகைய முடிவை சம்பந்தப்பட்ட அனைவரையும் முக்கியமாக எதிர்க்கட்சியினரையும் மாநில அரசுகளையும் கலந்தாலோசிக்காமல் இது ஒரு அதிகார முடிவுதான் (executive decision) என்று கருதி அவசர, அவசரமாக மத்திய அமைச்சரவை முடிவு எடுத்ததுதான் இத்தனை குழப்பங்களுக்கும் காரணம்.

ஒரு நல்ல நேர்மையான, திறமையுள்ள, பொருளாதார நிபுணத்துவமுள்ள பிரதமராக இருந்தால் மட்டும் போதாது, விவேகமுள்ள முக்கியமாக அரசியல் சாணக்கியம் தெரிந்த பிரதமராக இருப்பதும் அவசியம்  என்பதை எப்போதுதான் மன்மோகன்சிங் உணர்ந்துக்கொள்ளப் போகிறாரோ தெரியவில்லை.***********

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு 3

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டிலுள்ள சிறு மற்றும் நடுத்தர சில்லறை வணிகர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழக்க வாய்ப்புள்ளது என்பதுதான் இந்த திட்டத்தை எதிர்க்கும் பலருடைய வாதம்.
இது எந்த அளவுக்கு உண்மை?அன்னிய முதலீட்டுடன் இந்தியாவில் நுழைய விழையும் மேலை நாட்டு நிறுவனங்களால் வால்மார்ட்,டெஸ்கோ,மெட்ரோ தங்களுடைய முதன்மை நுகர்வோர்களாக கருதப்படுபவர்கள் நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கும் மேலுள்ள நுகர்வோர்களும் மேல்தட்டு மக்கள் எனப்படும் வசதிபடைத்த நுகர்வோர்களே தவிர இன்று நாட்டில் கிராம மற்றும் சிறு நகரங்களில் செயல்பட்டு வரும் தெருமுனை கடைகளை நம்பி வாழும் நடுத்தரத்திற்கும் சற்று கீழுள்ள அல்லது வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள வறிய நுகர்வோர்களை அல்ல.அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைய விரும்புவது பொது சேவை செய்வதற்காக அல்ல என்பதும் உண்மை. அவர்களுக்கு சமீப காலங்களில் தாராளமாக செலவு செய்ய விரும்பும், உபரி வருமானமுள்ள நடுத்தரத்திற்கு மேலுள்ள மற்றும் பணக்கார நுகர்வோர்களுடைய வசம் இருக்கும் உபரி வருமானத்தை ஈர்ப்பதன் மூலம் தங்களுடைய வணிகத்தை பெருமளவு பெருக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதால்தான் எப்படியாவது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என முன்வருகின்றனர்.அப்படி நுழைந்தவர்கள்தான் கோக்கோ கோலா, பெப்சி, கெண்டக்கி சிக்கன், மெக்டனோல்ட்,ஆதிதாஸ், ரீபோக்,சோனி போன்ற நிறுவனங்கள். அவர்கள் தங்களுடைய பெயரிலேயே கடைகளை திறக்க இன்றைய விதிமுறைகள் தடுப்பதால் இந்திய நிறுவனங்களுடைய இணைந்தனர். ஆக, இதுவும் ஒருமுறையில் அன்னிய முதலீடுதான். அதாவது மறைமுக முதலீடு.அப்போதெல்லாம் வாய் மூடி மவுனம் காத்த இன்றைய எதிர்க்கட்சிகள் இப்போது ஏன் கூப்பாடு போடுகின்றன என்பதும் இந்த உத்தியை ஆதரிப்பவர்களுடைய கேள்வி.தங்களுடைய முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை என்று கூறிவந்த காங்கிரஸ் நாடாளுமன்றத்தை நடத்த முடியாமல் போனதால் வேறு வழியின்றி இதை தாற்காலிகமாக நிறுத்தி வைப்பதென தீர்மானித்துள்ளது.இதனால் தாங்கள் ஏதோ பெரிதாக சாதித்துவிட்டதாக கருதும் எதிர்க்கட்சிகள் இதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்றும் கூறி வருகின்றன என்றாலும் அவர்களுடைய உண்மையான நோக்கம் அதுவல்ல. தமிழக முதல்வர் கூறியுள்ளதுபோன்று மைனாரிட்டி அரசை நடத்திவரும் காங்கிரஸ் எப்படி தங்களை கலந்தாலோசிக்காமல் இப்படியொரு முடிவை எடுக்கலாம் என்பதுதான். இது வெறும் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையிலுள்ள ஈகோ பிரச்சினையே தவிர இந்திய வணிகர்கள் மீதுள்ள பாசத்தாலோ அக்கறையாலோ அல்ல என்பது நாளடைவில் தெரிய வரும்.அன்னிய முதலீட்டை அனுமதிப்பதால் நாட்டுக்கு நல்லதல்ல என்றால் எதற்காக ஆசிய நாடுகளான சீனா, தைவான், மலேசிய போன்ற நாடுகள் இதை தாராளமாக அனுமதித்துள்ளன என்பது காங்கிரசின் கேள்வி. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் பதிலளிக்காமல் சமாளிக்கின்றன.இன்று நாட்டில் விலைவாசி உயர்வு விகிதத்தை (Inflation rate) மிகவும் பாதிப்பது உணவுப் பொருட்கள்தான் என்றால் மிகையல்ல. இதற்கு முக்கிய காரணம் விவசாயப் பொருட்கள் நேரடியாக நுகர்வோரை சென்றடைய விடாமல் தடுக்கும் இடைத்தரகர்கள்.உதாரணத்திற்கு நான் வசிக்கும் சென்னை புறநகர் பகுதியான ஆவடியை எடுத்துக்கொள்கிறேன். இந்த நகராட்சி சென்னையிலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இங்கு சென்னையிலும் கூட காணமுடியாத பெரிய காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சில்லறை காய்கறி கடைகள் மார்க்கெட்டிற்கு உள்ளும் வெளியிலும் இயங்கி வருகின்றன. இதற்கு நேர் எதிரிலில் இப்போதும் வீசை கணக்கில் காய்கறிகளை மொத்த விலைக்கு விற்கும் ஒரு சந்தையும் உள்ளது. இது ஆவடியை சுற்றிலும் அமைந்துள்ள கிராமங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தங்களுடைய விளை பொருட்களை நேரடியாக சிறு வியாபாரிகளுக்கு விற்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இங்கு நடப்பது அதுவல்ல. இங்கு கடை வைத்திருக்கும் இடைத்தரகர்கள் லாரிகளில் ஏற்றி வரும் காய்கறிகளை இடைமறித்து மொத்தமாக பேரம் பேசி வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதை காணலாம்.இதே பகுதியில் தனியார் நடுத்தும் நடுத்தர வணிக கடைகள் இரண்டும், பொன்னு ஸ்டோர்ஸ் எனப்படும் ஐந்து மாடி வணிக வளாகமும், ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கடையும் அமைந்துள்ளது.மொத்த சந்தையில் வீசை கணக்கில் சிறு வியாபாரிகளுக்கு விற்கப்படும் விலையை காட்டிலும் ஒரு கிலோவுக்கு நான்கிலிருந்து ஐந்து ரூபாய் குறைவாக ரிலையன்ஸ் நிறுவனத்தால் விற்க முடிகிறது என்றால் இதன் பொருள் என்ன? ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் நேரடியாக விவசாயிகளிடமிருந்தே மொத்தமாக கொள்முதல் செய்வதால் அவர்களுடைய லாபத்தையும் சேர்த்தாலும் சந்தை விலையை விடவும் குறைவாக விற்க முடிகிறது.ரிலையன்ஸ், ஃபுட் வேர்ல்ட் போன்ற நிறுவனங்களால் இந்த விலைக்கு விற்க முடிகிறதென்றால் இவர்களை விட பன்மடங்கு பொருளாதார பலமும் நிர்வாக திறனும் கொண்ட பன்னாட்டு நிறுவனங்களால் எவ்வளவு மலிவாக பொருட்களை வழங்க முடியும்? உணவுபொருட்களின் தட்டுப்பாட்டுக்கும் விலை உயர்வுக்கும் முக்கியமாக காரணமாக விளங்கும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க பன்னாட்டு நிறுவனங்களால் மட்டுமே முடியும்.தொடரும்...06 டிசம்பர் 2011

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு - 2

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு பாதிப்பை நிச்சயம் ஏற்படுத்தத்தான் செய்யும். நம்முடைய நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் எனப்படும் GDPயில் 44 விழுக்காடு, அதாவது ரூ.11 இலட்சம் கோடி சில்லறை வணிகத்தின் பங்கு என்கிறபோது அதில் அன்னிய முதலீடு நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்யும், மறுப்பதற்கில்லை. அதுவும் அன்னிய முதலீடு இல்லாமலேயே சில்லறை வணிகத்தின் வளர்ச்சி வருடத்திற்கு சுமார் 12 முதல் 15 விழுக்காடு வரையில் வளர்ந்துக்கொண்டே செல்கிறது என்றால் அன்னிய முதலீடும் இதை தீனி போட்டு வளர்க்க ஆரம்பித்தால் அதன் வளர்ச்சி எத்தனை அசுரத்தனமாக இருக்கும்!

சமீபத்திய கணிப்பின்படி இப்போது சுமார் 100 நபர்களுக்கு ஒரு சில்லறை கடை என்ற அடிப்படையில் நாட்டின் சில்லறை வணிகத்தை சார்ந்து மட்டும் சுமார் நான்கு கோடி தொழிலாளர்கள் இருக்கின்றனராம்! அதில் கார்ப்பரேட் மற்றும் தனிநபர்கள் நடத்தும் பெரிய வணிக நிறுவனங்களின் பங்கு மிகவும் சிறியதே.

ஆக, தெரு முனை துணி, மளிகை மற்றும் இதர கடைகள் (இதில் டீக்கடை உள்ளிட்ட உணவு விடுதிகள், பேக்கரி, ஃபேன்சி ஸ்டோர் மற்றும் குறிப்பிட முடியாத பொருட்களை விற்பனை செய்யும் நடைபாதை கடைகள்) ஆகியவை சுமார் நான்கு கோடி ஊழியர்களின் வாழ்வாதாரமாக உள்ளது! இது நாட்டின் மொத்த தொழிலாளர்களில் வெறும் 8 விழுக்காடுதான் என்றாலும் நான்கு கோடி ஊழியர்கள் என்பது கணிசமான எண்ணிக்கையல்லவா? அதுவும் இத்தகையோர் பெரும்பாலும் பொருளாதார அடிமட்டத்திலிருந்து வருபவர்கள் என்ற கோணத்தில் இருந்து பார்த்தால் அன்னிய முதலீட்டால் இவர்களுடைய வேலை பறிபோக வாய்ப்புள்ளது என்று இடதுசாரிகள் கூக்குரலிடுவது தவறில்லையே!

ஆனால் அன்னிய முதலீட்டின் நம் நாட்டிற்குள் நுழையவிருக்கும் நிறுவனங்கள் எவை, அவை என்னென்னவ்பொருட்களை விற்பனை செய்யவிருக்கின்றன என்பது இதை ஒட்டுமொத்தமாக தடுக்க வேண்டும் என்ற வாதிடும் சில்லறை வணிகர்களுக்கு தெரியுமா?

அன்னிய முதலீடு வழியாக நாட்டிற்குள் நுழைய விரும்பும் உலகின் பெரு வணிக நிறுவனங்களில் சில வால் மார்ட், டெஸ்கோ, மெட்ரோ. இத்தகைய வணிக நிறுவனங்கள் கையாளும் பொருட்களுக்கும் நம்முடைய சில்லறை வணிகர்கள் (அதாவது தெருமுனை கடைகளுக்கும்) எவ்வித சம்பந்தமும் இருக்கப் போவதில்லை. இப்போதும் கூட நம்முடைய நாட்டின் பெரு வணிக நிறுவனங்களான ரிலையன்ஸ், டாட்டா, பிர்லா, நிறுவனங்கள் நடத்து ஹைப்பர் ஸ்டோர்ஸ் எனப்படும் சூப்பர் மார்க்கெட் கடைகள் கையாளும் பொருட்கள் பலவும் தெருக்கடை வணிகர்கள் கையாளும் பொருட்களிலிருந்து வெகுவாக மாறுபட்டவை. அவை எதிர்நோக்கும் நுகர்வோர்களும் (targeted consumers) தெருக்கடைகளை சார்ந்திருக்கும் நுகர்வோர்கள் அல்ல. ஆகவே இத்தகைய வணிக நிறுவனங்களின் வருகையால் தெருக்கடை வணிகர்கள் நிச்சயம் நேரடியாக பாதிக்கப்படப் போவதில்லை.

அப்படியென்றால் இத்தகைய மேலை நாட்டு நிறுவனங்களின் வருகையை ஏன் சில்லறை வணிகர்கள் எதிர்க்கின்றனர்? இதனால் உண்மையில் நஷ்டமடையப் போவது இத்தகைய வணிகர்களா அல்லது நம்மைப்
போன்ற நுகர்வோரா?தொடரும்...

05 டிசம்பர் 2011

சிறு வணிகத்தில் அன்னிய முதலீடு.

கடந்த சில வாரங்களாக இந்திய நாடாளுமன்ற கூட்டத்தை சுமுகமாக நடத்த முடியாமல் மத்திய அரசு படும் அவஸ்தைக்கு சிறு வணிகத்தில் 51 விழுக்காடு வரை அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய
அமைச்சரவை எடுத்த முடிவுதான் முக்கிய காரணம்.

மத்திய அமைச்சரவை முடிவை பின்வாங்க போவதில்லை என காங்கிரசும் இந்த முடிவால் இந்தியாவிலுள்ள பல சிறு வணிகர்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அதை பின்வாங்கும் வரை நாடாளுமன்ற கூட்டத்தை நடத்த விடப்போவதில்லை என எதிர்க்கட்சிகளும் பிடிவாதம் பிடிக்கும் இச்சூழலில் ஒரு நடுநிலையான நுகர்வோன் என்ற கோணத்திலிருந்து இந்த அன்னிய முதலீட்டால் ஒரு சராசரி நுகர்வோனுக்கு கிடைக்கவிருக்கும் பலன்களையும் ஏன் எவரும் எண்ணிப் பார்க்க மறுக்கின்றனர் என்ற ஆதங்கத்துடன் அலச முடிவெடுத்ததன் விளைவே இந்த கட்டுரை.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இதே சில்லறை வணிகத்தில் பெரிய முதலீட்டாளர்களை, அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் எனப்படும் ரிலையன்ஸ், டாட்டா நிறுவனங்களை அனுமதிப்பது சரியா என்ற கேள்வி எழுந்தபோது அதில் தவறேதும் இல்லை என்ற கோணத்தில் நான் எழுதிய கட்டுரைக்கு சாதகமானஓரிரண்டு கருத்துக்களை விட எதிர்த்து வந்த கருத்துக்களே மிக அதிகம் என்பதும் என் நினைவுக்கு வருகிறது.

அப்போது ரிலையன்ஸ் நிறுவனம் தன்னுடைய 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்' கிளைகளை தமிழகமெங்கும் நிறுவ முற்பட்டிருந்தது. அதை எதிர்த்து பல எதிர்க்கட்சிகள், குறிப்பாக பா.ம.க., பல சாலை போராட்டங்களை டத்தியது. இத்தகைய நிறுவனங்கள் சில்லறை மற்றும் சிறு வணிகர்களுடைய பிழைப்பில் மண்ணைப் போட்டுவிடும் என்றெல்லாம் வாதிட்டார்கள். அப்போது இந்தியா போன்ற பல தரப்பு வருமானமுள்ள
நுகர்வோர் (Income Groups) உள்ள நாட்டில் எத்தனை பெரிய நிறுவனங்கள் வந்தாலும் அவற்றால் மற்ற சிறு வணிகர்களூக்கு பாதிப்பு ஏற்படாது என்று வாதிட்டேன். கடந்த சில ஆண்டுகளில் நான் கூறியதுதான் சரி என்பது எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபணமாகியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமல்லாமல் பல கார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்று சென்னையில் சில்லறை வணிகத்தை மட்டுமே நம்பி மிகப்பெரிய
அளவில் வணிக வளாகங்களை திறந்துள்ளபோதும் சிறு வணிகர்கள் எனப்படும் தெருமுனை கடைகள் எதுவும் மூடப்பட்டுவிடவில்லை. ஒவ்வொரு பகுதியிலுமுள்ள காய், கறி மார்கெட்டுகளும் முன்பை விட
சிறப்பாகவே நடக்கின்றன என்பதை மறுக்கமுடியாது.

அப்போது இந்தியாவிலுள்ள தெருமுனை கடைகளுக்கு முதல் எதிரியாக கருதப்பட்டவை இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள். ஆனால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அல்லது விளையும் பொருட்களை பெரிய அளவில் விற்பனை செய்யும் இத்தகைய நிறுவனங்களாலேயே சிறு வணிகர்களுடைய சந்தை பங்கை (market share) பாதிக்க முடியவில்லை என்றால் உலக சந்தையில் மிகப் பெரிய சில்லறை வியாபாரிகள் எனப்படும் நிறுவனங்கள் நுழைவதால் ஏற்படப் போவதில்லை என்பது நிதர்சனம்.

அதே சமயம் மத்திய அரசின் இந்த முடிவை ஏன் எதிர்க்கட்சிகளும் சிறு வணிகர்களும் எதிர்க்கின்றன என்பதையும் ஆராய வேண்டும் அல்லவா?

அன்று நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவை அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று முடிவு எடுத்தபோது அதனால் நேரடியாக பாதிக்கப்பட்ட பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களான டாட்டா,
பிர்லா நிறுவனங்கள் இதை பல வகைகளிலும் எதிர்த்ததை பார்த்தோம். உற்பத்தி துறையிலும், எலக்ட்ரானிக் மற்றும் தொலைதொடர்பு துறைகளிலும் கடந்த பத்தாண்டுகளில் நம் நாடு அடைந்த அசுர வளர்ச்சிக்கும் உலக சந்தையில் மிக சகஜமாக கிடைக்கும் பல நுகர்வோர் பொருட்களும் (consumer items) சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடனேயே ஏறக்குறைய அதே விலையில் இந்தியாவிலும் கிடைப்பதற்கும் அன்னிய முதலீட்டை இத்தகைய துறைகளில் அனுமதித்ததுதான் முக்கிய காரணம் என்பதை மறந்துவிட முடியாதே!

மேலும் கணினி துறையில் மட்டுமல்லாமல் தொலை தொடர்பு, எலக்ட்ரானிக், வாகன தயாரிப்பு போன்ற துறைகளில் நம் நாடு கண்ட அசுர வளர்ச்சியின் நேரடி விளைவாக கருதப்படுவது இந்தியர்கள் கையில்
உள்ள உபரி வருமானம் (disposable income). கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள நடுத்தர மற்றும் நடுத்தரத்திற்கு சற்று மேலேயுள்ளவர்களுடைய (middle and above middle income groups) மக்கள் தொகை 25% விழுக்காட்டிற்கு மேல் உயர்ந்துள்ளது என்கிறது சமீபத்திய கணிப்பு.

இத்தகைய உபரி வருமானத்தை செலவிட சந்தையில் வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட வேண்டுமல்லவா? எவ்வளவு காலத்திற்குத்தான் எதிர்காலத்திற்கு தேவை, தேவை என்று சேமித்து வைப்பது? செலவழிக்க
வழியில்லாமல் அனைவருமே தங்கத்தில் முதலீடு செய்ய முறப்பட்டதும் இன்று வானளவுக்கு உயர்ந்துள்ள தங்கத்தின் விலைக்கு காரணம்.

கடந்த சில ஆண்டுகளில், அதாவது 2005-06 முதல் 2008-09 ஆண்டுடன் முடிந்த காலத்தில் இந்திய நுகர்வோர் செலவிட்ட தொகையின் வளர்ச்சி விகிதமும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே சென்றுள்ளதை


கீழ்காணும் பட்டியலை பார்த்தால் விளங்கும்:

                                                                  2005-06 06-07 07-08 08-09 (விழுக்காடு வளர்ச்சி)

1. உணவு மற்றும் உணவு பொருட்கள் :11.7 11.1 13.0 14.4

2. ஆடை மற்றும் காலணி :                   18.0 25.0 27.7 22.0

3. வீட்டு உபயோக பொருட்கள் :             18.0 22.0 19.4 11.0

4. இதர செலவினங்கள் :                                  12.0 14.8 14.1 14.2இதர செலவினங்கள் வகையில் பெரும்பாலான விழுக்காடு பொழுதுபோக்கு, சுற்றுலா செலவினங்களே!

இதன் நேரடி விளைவுதான் இன்று சென்னை மற்றும் பெருநகரங்களில் எங்கு பார்த்தாலும் முளைத்துள்ள பலமாடி வணிக வளாகங்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் மலேஷியா சென்றபோது அங்கு நான்
பார்த்து மலைத்துப்போன வணிக வளாகங்களை என்று இந்தியாவில் காணப்போகிறோம் என்ற என்னுடைய கனவு இத்தனை விரைவில் நனவாகும் என்று நான் நினைக்கவில்லை. அதே சமயம் பல ஆண்டுகளாக நடந்துவந்துள்ள பல சிறிய சில்லறை வணிகர்களுடைய கடைகளும் இன்று வரையிலும் திறந்துதான் உள்ளன என்பதையும் பார்க்கும்போது சமீபத்திய முடிவால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றுதான் நினைக்கிறேன்..


இருப்பினும், பாதிப்பே இல்லை என்றும் கூறிவிட முடியாது...தொடரும்...


29 நவம்பர் 2011

கனிமொழியின் பிணை மனு - சில சந்தேகங்கள்!


பல முறை பிணை பெற முயன்று சோர்ந்து போயிருந்த கனிமொழிக்கு இறுதியாக பிணை வழங்கியுள்ள தில்லி உயர் நீதிமன்றத்தின் ஆணையை படித்து பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட சில சந்தேகங்கள்...."கனிமொழி மீதான குற்றச்சாட்டு பெரும்பாலும் ஆவணங்களை சார்ந்தே இருப்பதால் அவர் சாட்சியங்களை கலைக்கக் கூடும் என்ற ஐயம் உள்ளதாக கூறி அவருக்கு பிணை வழங்க மறுத்த சிபிஐ சிறப்பு மன்ற நீதிபதியின் உத்தரவு சரியில்லை...."இதுதான் உயர்நீதிமன்ற நீதிபதியின் கணிப்பு.அப்படியானால் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தலைவராக இருக்கும் நீதிபதியின் சட்ட அறிவில் குறை உள்ளது என கொள்ளலாமா? அல்லது அவர் வேண்டுமென்றே அதாவது சட்ட காரணங்களுக்காக அல்லாமல் வேறேதும் காரணங்களுக்காக அவர் கனிமொழியின் பிணை மனுவை நிராகரித்தாரா?ஒரு விசாரணைக்கு தீர்ப்பு வழங்கும்  பொறுப்பிலுள்ள நீதிபதி வழக்கு விசாரனையில் உள்ள சமயத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவர் - அவர் யாராக இருப்பினும் - குற்றவாளிதான் என்ற முடிவெடுத்துவிட்டால் அவருடையை தீர்ப்பில் எந்த அளவுக்கு நியாயம் அல்லது நீதி இருக்க முடியும்?கனிமொழி குற்றவாளிதானா அல்லது அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளனவா என்றெல்லாம் விசாரனையின் இறுதியில்தானே தெரியவரும்? அவருக்கு எதிராக திரட்டப்பட்டுள்ள ஆவண ஆதாரங்களை வைத்து மட்டுமே அவர் குற்றவாளை என்ற முடிவுக்கு ஒருவர் - இங்கு நீதிபதி - வந்துவிட முடியுமென்றால் பிறகு எதற்கு வழக்கை மேலும் நடத்தி அரசின் பணத்தை வீணடிப்பது?***31 அக்டோபர் 2011

சென்னை மாநகராட்சி அதிரடி!

சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு சீல்!
சென்னை மாநகராட்சியின் ஆட்சி பொறுப்பு கைமாறியபின் எடுக்கப்பட்ட முதல் அதிரடி முடிவு இது.இன்று அதிகாலையில் சென்னை தியாகராய நகரில் கட்டுமான விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள சுமார் 61 கடைகளுக்கு சீல் வைத்தது சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்ற செய்தி சென்னைவாசிகள் மத்தியில் நிச்சயம் வரவேற்பை பெறும்.தியாகராய நகரில் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் அதை சுற்றிலுமுள்ள துணை, இணை நகரங்களில் இத்தகைய முறையில் இயங்கிவரும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் மீதும் சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கட்சி பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்பதும் சென்னைவாசிகளின் கோரிக்கை.தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் இத்தகைய நிறுவனங்கள் இத்தனை ஆண்டுகள் எவ்வித இடைஞ்சலும் இன்றி இயங்கி வருவதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களை மட்டும் குறை கூறி பயனில்லை. அவர்களை ஆட்டிப்படைக்கின்ற வார்டு உறுப்பினர்களும், நகரமன்ற தலைவருமே முக்கிய காரணம்.சென்னையில் இயங்கிவரும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பலவற்றில் அடிப்படை தேவைகளான பார்க்கிங், விபத்து சமயங்களில் பயன்படுத்தக் கூடிய மாற்று வாயில்கள், லிஃப்ட் மற்றும் விசாலமான படிகட்டுகள் என எதுவுமே இல்லாதது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக தியாகராய நகர், பாண்டிபஜார், பனகல்பார்க் பகுதிகளில் கடந்த பத்தாண்டுகளில் பிரம்மாண்ட முகப்புகளுடன் துவக்கப்பட்ட பல கடைகளில் முகப்பிலுள்ள ஒரேயொரு குறுகிய வாயிலைத் தவிர விபத்து சமயங்களில் வெளியேற வேறு வழிகளே இல்லை என்பதுதான் உண்மை. மூன்று மாடிகளுக்கு மேல் கடை அமையும் பட்சத்தில் லிஃப்ட் வசதியுடன் விசாலமான படிகட்டுகளும் இருக்க வேண்டும் என்பது நியதி. ஆனால் இந்த பகுதியில் சமீபத்தில் துவக்கப்பட்ட ஒரு நான்கு மாடி துணிக்கடையில் ஐந்து நபர்கள் மட்டுமே பயணிக்கக் கூடிய ஒரு லிஃப்ட். படிகட்டும் மூன்றடிக்கும் குறைவான விசாலம்தான். கடந்த தீபாவளி விற்பனையின் போது கூட்டமிகுதியால் மூச்சுவிடக் கூட முடியாமல் படிகட்டில் மயங்கிவிழுந்த பெண்கள் பலரை என் கண்ணால் காண முடிந்தது. மயங்கி விழுந்த பெண்களை எழுந்திருக்கக் கூட விடாமல் முட்டி மோதி சென்ற வாடிக்கையாளர்களைப் பார்த்தபோது இப்படியெல்லாம் அவதிப்பட்டு பண்டிகைக்கு ஆடைகளை எடுக்க வேண்டுமா என்று தோன்றியது!இதே பகுதியில் ஒரு சில வாடிக்கையாளர்களுடைய வாகனங்களைக் கூட கடைகளுக்கு முன்பு நிறுத்த வசதியில்லாத கடைகள்தான் அதிகம். மாநகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகளை கபளீகரம் செய்து அடாவடியாக தங்களுடைய வாடிக்கையாளர்களுடைய வாகனங்களை நிறுத்த வளைத்துப்போட்ட கடைகளும் உண்டு. இப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தின் அடிப்பகுதியை முழுவதுமாக தங்களுடைய வாடிக்கையாளர்களுடைய வசதிக்கென அடைப்புகளை ஏற்படுத்தி அவ்வழியில் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தி வந்த ஒரு மிகப்பெரிய கடையும் இன்றைய சீல் வைக்கும் நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பது ஆறுதலை அளிக்கிறது.ஆனால் இதில் சென்னை மாநகராட்சி உறுதியாக நிற்குமா அல்லது கடந்த பதினைந்தாண்டுகளைப் போன்று சம்பந்தப்பட்ட வணிகர்களிடமிருந்து 'வசூலைப்' பெற்றுக்கொண்டு நடவடிக்கையை பின்வாங்கிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.09 ஆகஸ்ட் 2011

தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!


சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே நடைமுறைபடுத்துவது குறித்து அளிக்கப்பட்ட சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட தமிழக அரசின் மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று காலை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது!


உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்பு அம்மையாரைத் தவிர தமிழகத்தின் அனைத்து தரப்பினராலும் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதுதான். எப்போது உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து சமச்சீர் கல்வி பாடத் திட்ட புத்தகங்களை உடனே வினியோகிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதோ அப்போதே இத்தகைய ஒரு முடிவுக்குத்தான் உச்ச நீதிமன்றம் வரும் என்பது தெளிவாக தெரிந்தது. அப்போதே பெருந்தன்மையுடன் சமச்சீர்கல்விக்கென அச்சடிக்கப்பட்டு வினியோகிக்க தயார் நிலையிலிருந்த புத்தகங்களை வினியோகித்திருந்தால் தமிழக மக்களின் நன்மதிப்பை அம்மையார் பெற்றிருக்கலாம். ஆனால் பெருந்தன்மைக்கும் அம்மையாருக்கும் பொருத்தமேயில்லையே!உச்சந்தலையில் அடித்து கூறினால்தான் சிலருக்கு எதுவுமே புரியும். அந்த ரகத்தைச் சார்ந்தவர் அம்மையார். இனியாவது தன்னுடைய சுயகவுரவத்திற்காக வினியோகத்தை இழுத்தடிக்காமல் முடிப்பார் என நம்புவோம்.அம்மையாரின் பிடிவாத போக்கால் கடந்த இரண்டு மாத காலமாக கடும் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் அம்மையாருக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர ஏதேனும் வழியுள்ளதா?***********05 ஜூலை 2011

சமச்சீர் கல்வி கமிட்டி அறிக்கை தாக்கல்!

"சமச்சீர் கல்வி பாடத்திட்டம் குறித்த கமிட்டி தன் அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், தற்போது இருக்கும் பாடத்திட்டங்கள், நடப்பு வருடத்துக்கு பயன்படத்தக்க வகையில் இல்லை என்றும், பாடத்திட்டங்கள் முழுவதுமாக மறுசீரமைக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்றும் அந்தக் கமிட்டி தெரிவித்துள்ளது.


இதற்கிடையில், சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வி குறித்த வழக்கை 7ம் தேதிமுதல் தினமும் விசாரிக்கும் என்று தெரிகிறது."

செய்தி: தினமணி இணைய தளம்.இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதானே!அரசு தலைமைச் செயலர் தலமையில் தனியார் பள்ளிகளுடைய முதலாளிகளுடன் கூட்டு சேர்ந்து அமைக்கப்பட்டுள்ள ஒரு கமிட்டி வேறென்ன சொல்லும்?ஆனாலும் தமிழகமெங்கும் கல்வியாளர்களும், அரசியல் கட்சிகளும் ஏன், பள்ளி மாணவர்களும் கூட சமச்சீர் கல்வியை உடனே அமுல்படுத்த போராட்டங்களை நடத்தியதை பார்த்த பிறகும் இப்படியொரு அறிக்கையை தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க ஜெயலலிதாவுக்கு நிறைய நெஞ்சுறுதி வேண்டும்.யார் என்ன சொன்னாலும் எனக்கென்ன, என் வழி தனி வழி, அதில்தான் நான் பயணம் செய்வேன் என்கிற அம்மையாரின் பிறவிக் குணம் மாறவே மாறாது என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சியம் வேண்டும்?நடக்கட்டும், இன்னும் ஐந்தாண்டுகள் தானே!

13 ஜூன் 2011

சமச்சீர் கல்வியும் ஜெயலலிதாவும்.

சமச்சீர் கல்வி என்ற தத்துவம் ஜெயலலிதா போன்ற மேல்குடி மக்களுக்கு நிச்சயம் ஒவ்வாது என்பது தெரிந்ததே. சேரியில் வசிக்கும் குப்பனுக்கும் மாளிகையில் வசிக்கும் குமாருக்கும் ஒரே தரத்திலான கல்வியா என கேட்கத் தோன்றும்.  மேலும் இவர் 
மூதாதை ராஜாஜி வழிவந்த வம்சத்தை சார்ந்தவராயிற்றே. வண்ணான் மகன் வண்ணானாகவும் தோட்டி மகன் தோட்டியாகவும் நாவிதன் மகன் நாவிதனாகவும்தான் வரவேண்டும் என்று குலத்தொழிலின் மகத்துவத்தை எடுத்துரைத்தவரை சார்ந்தவர்களால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?

பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுனர்களைக் கொண்ட குழுக்களை அமைத்து தமிழகத்தை மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களிலுள்ள கல்வி நிலையங்களில் பயன்பாட்டிலுள்ள பாடத்திட்டங்களை அலசி, ஆராய்ந்து வடிவமைக்கப்பட்டு பிறகு மாணவ மற்றும் ஆசிரிய சமுதாயங்களுடைய ஒப்புதல் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களின் ஒப்புதல் என அனைத்தையும் கடந்து தமிழக அமைச்சரவையின் ஒப்புதலுடன் கடந்த ஆண்டு முதலாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் அறிமுகப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பினருடைய ஏகோபித்த (சாதி, சமூக மற்றும் பணத்தாசை போன்ற வெறிகளுக்கு ஆளான ஒரு சில பள்ளி நிர்வாகங்கள், அறிவுஜீவிகளேன் தங்களை வரித்துக்கொண்ட சில ஆசிரியர்களை தவிர்த்து)ஆதரவையும் பெற்ற சமச்சீர் கல்வி திட்டத்தை எவ்வித குழுக்களின் அடிப்படை ஆய்வும் இல்லாமல் ஒரே நாளில் புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சரவை ஒத்திவைக்கிறோம் என்ற சாக்கில் மறுத்திருக்கிறது.
பாடத்திட்டங்கள் உலகதரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் ஆகவே ஓராண்டுக்கு ஒத்தி வைக்கிறோம் என்பதெல்லாம் வெறும் கண்துடைப்பே. அப்படியானால் சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் இத்திட்டத்தை ஒட்டுமொத்தமாக குறை கூறி வாதிட்டதை என்ன சொல்வது? அவருடைய வாதத்தை கூட்டணியில் அங்கம் வகிக்கும் இடதுசாரி கட்சிகளும் கூட எதிர்த்தனவே. இருப்பினும் சமச்சீர் கல்வியை ஆதரித்து முழக்கமிட்டு வந்த நடிகர் வாய் மூடி இருக்க காரணம் வேறு. அவரை விட்டுத்தள்ளுவோம்.

முந்தைய தமிழக அரசு முடிவு செய்த பாடத்திட்டங்களில் என்ன குறைபாடுகள் இருப்பினும் அவற்றை இயன்றவரையிலும் சரிசெய்து அறிமுகப்படுத்துவதை விட்டுவிட்டு தரமே இல்லை என ஒட்டுமொத்தமாக ஒதுக்குவது நியாயமான காரணமாக தென்படவில்லை, இதற்கு உண்மையான காரணம் என்ன என்று உயர்நீதிமன்றம் கேட்டதே அதற்கு மேடத்தின் பதில் என்ன?

அப்படியானால் முந்தைய அரசு நியமித்த குழுக்கள் அனைத்துமே தரமற்றவைகளா? அவர்கள் முடிவு செய்த பாடத்திட்டங்களில் இன்னின்ன குறைபாடுகள் உள்ளன என உயர்நீதி மன்றத்தில் நீங்கள் பட்டியலிட்டிருந்தால் ஒருவேளை அதை ஏற்று நீதிமன்றம் உங்களுடைய முடிவுக்கு பச்சைக் கொடி காட்டியிருக்குமே? அதை ஏன் உங்களால் செய்ய முடியவில்லை?

ஏனெனில் அதுவல்ல காரணம். திமுகவையும் கலைஞரையும் புகழ்பாடி ஒரு சில பாடங்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அதையும் நீக்கிவிட உங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள்.

உங்களுடைய மனுவை அனுமதிக்காமல் தள்ளுபடி செய்துவிடும் என எதிர்பார்த்தேன்... ஏனோ தெரியவில்லை உச்சநீதிமன்றம் அதை விசாரனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடையுத்தரவு பிறப்பிக்காமல் இருந்தால் நல்லது. ஒருவேளை மனுவை விசாரிக்கும் சாக்கில் உங்களுடைய அரசு எடுத்த முடிவை குறுக்கு விசாரணை என்ற பெயரில் கடுமையாக விமர்சிக்க உத்தேசித்துள்ளதோ என்னவோ.. இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

ஆனால் என்னைப் போன்றோர்கள் மனதில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்படும் பாடத்திட்டங்கள் மாநகராட்சி மற்றும் அரசு/அரசின் உதவியுடன் நடத்தப்படும் பெரும்பாலான பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்ற ஐயப்பாடு இருந்ததென்னவோ உண்மைதான். நானே அறிமுக நிலையில் இந்த திட்டத்தை எதிர்த்து பதிவுகள் எழுதியுள்ளேன். ஏனெனில் அடிமட்ட மாணவனுடைய தரத்தை உயர்த்துகிறோம் என்று கூறிவிட்டு இன்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய தரத்தை குறைத்துவிடுவார்களோ என்று அச்சம் இத்தகைய பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்கள் மனதில் இல்லாமல் இல்லை. ஆனால் சமச்சீர் கல்வியின் திட்டத்தின் அடிப்படை நோக்கம் எல்லோருக்கும் கல்வி என்பது மட்டுமல்லாமல் எல்லோருக்கும் ஒரே கல்வி என்பதால் இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது தமிழகத்தில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய தரமும் ஒரே சீராக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் நானும் இந்த திட்டத்தை அறிமுக நிலையில் எதிர்த்தவர்களும் எங்களுடைய எண்ணத்தை மாற்றிக்கொண்டோம்.

எனக்கு தெரிந்தவரை சிபிஎஸ்சி பாடத்திட்டத்தோடு மெட்றிக்குலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டங்கள் அமுலில் இருப்பது தமிழகத்தில் மட்டும்தான். கர்நாடகா, ஆந்திரா,கேரளா ஏன் மஹாராஷ்டிராவிலும் கூட சிபிஎஸ்சியை விட்டால் மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்தான் அமுலில் உள்ளன. ஆனால் இந்த பாடத்திட்டங்கள் சிபிஎஸ்சி, மெட்றிக் மற்றும் ஆங்கிலோ இந்திய பள்ளிகளில் அமுலில் உள்ள பாடத்திட்டங்களை விட பல வகைகளில் சற்று தரம் குறைந்தவையே என்பதும் உண்மை. ஆனால் இந்த குறைபாட்டை  நாளடைவில் சரிசெய்து அனைத்து மாணவர்களும் கல்வியில் ஒரே தரம் உள்ளவர்களாக உருவாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக இத்தகைய சமச்சீர் கல்வி திட்டத்தை பின்பற்றுவது அவசியமாகிறது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டிலுள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் அமுல்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.

ஆகவே அறிமுக நிலையிலுள்ள இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஒத்திப்போடுவது பிறகு முழுவதுமாக கைவிடுவது என்கிற பாணியில் சிந்திக்காமல் உச்சநீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தாலும் இத்திட்டத்தை இவ்வாண்டிலேயே அனைத்து வகுப்புகளிலும் அமுல்படுத்துவதுதான் மேடத்திற்கு அழகு சேர்ப்பதாக இருக்கும். அதை விட்டுவிட்டு நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்தான் என்ற வீம்பில் திட்டத்தை அமுல்படுத்த தவறினால் மேடம் இனியும் மாறவே இல்லை என்று சிலர் கூறுவது உண்மைதான் என்றாகிவிடும்.

10 ஜூன் 2011

மு.க. என்ன செய்யப் போகிறார்?


இன்று பிற்பகல் திமுகவின் உயர்மட்டக் குழு கூடி அவசர ஆலோசனை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது?

இந்த அவசரக் கூட்டம் எதற்காக?

சில நாளேடுகள் திமுக தன்னுடைய மத்திய அமைச்சர்களை அமைச்சரவையிலிருந்து விலக்கிக் கொள்ளக் கூடும் என்கின்றன. அது அவர்களுடைய ஊகம் மட்டுமல்ல, விருப்பமும் கூட. மாநிலத்தில் ஆட்சியை இழந்த திமுக மத்தியிலும் ஆட்சியில் இல்லையென்றால் அது மக்கள் மனதிலிருந்து அறவே அழிந்து ஒழிந்து போகும், போக வேண்டும் என்பது இத்தகைய பத்திரிகைகளின் ஆவல்.

அந்த ஆவலை, எதிர்பார்ப்பை நிறைவேற்றி வைக்கப் போகிறாரா மு.க? இதைத்தான் சமீபத்தில் 'கூடா நட்பு தீதாய் முடியும்' என சூசகமாக கூறினாரா? அவருடைய அன்பு மகள் கனிமொழி இருமுறை முன்ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு இருக்கும் அவல நிலைக்கு மத்தியில் ஆட்சியிலிருக்கும் காங்கிரஸ்தான் மறைமுக காரணம் என்று அவர் கருதும் சூழலில் அவருக்கு அத்தகைய நட்பே வேண்டாம் என முடிவெடுக்க வாய்ப்புள்ளது. அவருடைய இப்போதைய மனநிலையிலிருக்கும் எவராலும் அப்படித்தான் முடிவெடுக்க முடியும் என்பதில் ஐயமில்லை. ஆனால்
அத்தகைய முடிவு அது எந்த வகையில் அவருடைய கட்சிக்கு பலனளிக்கப் போகிறது என்பதை விட எப்படியெல்லாம் மேலும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் நல்லது என கருதுகிறேன்.

அமைச்சரவையிலிருந்து விலகிக்கொள்ளலாம் என அவர் முடிவெடுக்க வேறொரு காரணமும் உண்டு. மத்திய அமைச்சர் திருத்தி அல்லது மாற்றி
அமைக்க வாய்ப்புள்ளது என பிரதமர் அவர்கள் சமீபத்தில் கூறினார். அத்தகைய சூழலில் தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ள தயாநிதி
மட்டுமல்லாமல் திமுகவை சார்ந்த வேறு அமைச்சர்களும் கூட பதவியை பறிகொடுக்கலாம் என தெரிகிறது. அப்படியொரு சூழல் ஏற்படுவதை
தவிர்க்க நாமாகவே அமைச்சரவையிலிருந்து விலகிக்கொண்டால் என்ன என்றும் முக நினைத்திருக்கலாம்.

காரணம் எதுவானாலும் அத்தகையதொரு முடிவு கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதையும் முகவும் கட்சியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது திமுக பல ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்த கொள்கை. ஆனால் மாநிலத்தில்
ஆட்சியில் இல்லாத சமயத்தில்தான் மத்தியில் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை மறந்ததன் விளைவுதான் இன்றைய திமுகவின் இழிநிலைக்கு முக்கிய காரணம்.

மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் காலத்தில் மத்தியிலுள்ள கூட்டாட்சியில் அங்கத்தினராக இருக்கும் பட்சத்தில் நாட்டின் ஒட்டுமொத்த நிலையை கருதி மத்தியிலுள்ள கூட்டணியரசு எடுக்கும் சில முடிவுகள் தாங்கள் ஆட்சியிலிருக்கும் மாநிலத்திற்கு எதிரானதாக இருக்க
வாய்ப்புள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை கடந்த ஐந்தாண்டுகளில் அடிக்கடி உயர்த்தப் பட்ட பெட்ரோல் விலை, சிங்கள அரசுக்கு சாதகமாக
மத்திய அரசு எடுத்த பல முடிவுகள், தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோதும் அந்த நாட்டுடனான பொருளாதார உறவில் விரிசல் ஏற்பட்டுவிடக் கூடாதே என்ற கவலையில் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருந்த நிலை.... இத்தகைய முடிவுகளுக்கு திமுக காரணம் இல்லை என்றாலும் மத்திய கூட்டணியில் இருந்ததால் பகிரங்கமாக எதிர்க்க முடியாத சூழல்....இன்று ராஜபக்ஷேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசு தைரியமாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுகிறதென்றால் அதற்கு மத்தியிலுள்ள ஆட்சியில் தங்களுக்கு பங்கில்லை என்கிற துணிவால்தான். இல்லையென்றால் மேடமும் வாயை மூடிக்கொண்டுதான் இருந்திருப்பார்!

மேலும், நாட்டின் மிகப் பெரிய ஊழலில் திமுக அமைச்சர்களில் சிலர் சிக்கிக்கொண்டதற்கு முழு காரணமே மத்தியில் கட்சியின் சார்பில்
அமைச்சர்களாக இருந்த ஒரு சிலரின் அரசியல் மற்றும் மேலாண்மை (Management) முதிர்வின்மையே காரணம். குறிப்பாக ராஜா. அவர் சட்டம்
படித்தவர்தான் என்றாலும் நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்கள் ஒருசிலர் மற்றும் அரசியல் தரகர்கள் சிலரின் வியாபார/அரசியல் தந்திர
வலையில் சிக்கி அவர்களுக்கு சாதகமாக முடிவெடுக்கக் வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார் என்றால் அதற்கு அவருடைய அனுபவமின்மையும்
ஒரு காரணம். எங்களுக்கு சாதகமாக நீங்கள் முடிவெடுங்கள்...கலைஞர் தொலைகாட்சியில் முதலீடு செய்கின்ற சாக்கில் உங்களுக்கும்
உங்களுடைய தலைவருக்கும் வேண்டிய தொகையை நாங்கள் தருகிறோம் என்பதுபோன்ற ஆசை வார்த்தைகளை நம்பி அவரும் வீழ்ந்து
கட்சியையும் வீழ்த்திவிட்டார். அதற்கு ஒத்து போன கனிமொழிக்கும் இத்தகைய அனுபவின்மையே காரணம்... திருடுபவனை விட கையும் களவுமாய் சிக்கிக்கொள்பவனுக்குத்தான் தண்டனையின் வீரியம் அதிகம் தெரியும்.... அதைத்தான் கனிமொழி இப்போது அனுபவித்து படித்துக்கொண்டுள்ளார்...இனி திருடுவார்... ஆனால் சிக்கிக்கொள்ள மாட்டார்... தற்போதைய தமிழக முதல்வரைப் போல....

என்னுடைய வங்கியிலும் கூட முதல் முதலாக மேலாளர் பதவிக்கு உயர்த்தப்படுபவர்கள் முதலில் மிகச் சிறிய கிராம கிளைகளில்
அமர்த்தப்படுவார்கள். மும்பை, கொல்கொத்தா, தில்லி போன்ற பெரு நகரங்களில் கிளை மேலாளராக பணிபுரிய திறமை மட்டுமே ஒருவருக்கு
போதாது. தொழிலில், வணிகத்தில் அனுபவம் மிகுந்த அதிபர்கள், முதலாளிகளின் வசிய வலையில் சிக்காமல் இருக்கக் கூடிய அனுபவமும் (work experience and maturity) மேலாளர்களுக்கு மிகவும் தேவை என்பதை அனுபவ பூர்வமாக உயர் அதிகாரிகள் அறிந்திருப்பதால்தான் தங்களைப்
போன்றே புதியவர்களும் இத்தகைய வலையில் சிக்கி சீரழிந்துபோய்விடக் கூடாது என்று கருதி கிராம, நகர கிளைகளில் தகுந்த அனுபவம் பெற்ற
பிறகே பெருநகர கிளைகளில் மேலாளர்களாக அமர்த்துவார்கள்.

மேலும்... இத்தகைய மாபெரும் ஊழலுக்கு திமுக மட்டுமே பொறுப்பு என்கிற வாதத்தையும் என்னால் ஏற்கவே முடியவில்லை. ஏனெனெலில் ஹிந்து தினத்தாள் ராஜாவுக்கும், பிரதமருக்கும் இடையே எழுதப்பட்ட பல கடிதங்களை வெளியிட்டிருந்தது. அதன்படி ராஜா மற்றும் அவருடைய
அமைச்சரகம் எடுத்த ஒவ்வொரு முடிவுக்கும் பிரதமர் மட்டுமல்லாமல் மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவும் (GoM) முழு பொறுப்பு
ஏற்கவேண்டும். பிரதமர் தனிப்பட்ட முறையில் நாணயஸ்தன், நேர்மையானவர் என்று கூறிக்கொள்வதில் பெருமையில்லை தன் கண் எதிரே
நடைபெற்றுக்கொண்டிருந்த ஒரு ஊழலை, முறை கேட்டை, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தக் கூடிய ஒரு செயலை கண்டும் காணாதவாறு இருந்ததன்
மூலம் ஒரு accomplice என்கிற நிலைக்கு உள்ளாகிறார். ராஜாவுக்கும் அவருடைய அதிகாரிகளுக்கும் சிறை என்றால் குறைந்தபட்சம் பிரதமருக்கும்
மூத்த அமைச்சர்களுக்கும் பதவி இழப்பாவது ஏற்பட வேண்டும்.. அதுதான் நியாயம்.

இந்த காரணத்திற்காகவே திமுக அமைச்சரவையிலிருந்து விலகாமல் பிரதமருக்கும் சோனியாவுக்கும் ராஜாவின் முடிவுகளுக்கு பங்கு உண்டு
என்பதை உரத்தக் குரலில் கூற வேண்டும். அரசியல் ரீதியாக அவர்களுடன் ஒத்துழையாமல் இருக்க வேண்டும். வேறு வழியின்றி பதவி விலகுவது
என்று தீர்மானிக்கும்பட்சத்தில் அரசுக்கு அளித்துவரும் ஆதரவையும் ஒருசேர விலக்கிக்கொள்ள வேண்டும். அமைச்சரவையில் பங்கில்லை ஆனால்
ஆதரவு வெளியிலிருந்து என்பதுபோன்ற அங்கும் இல்லை இங்கும் இல்லை என்பதுபோன்ற முடிவு எடுப்பதால் திமுகவுக்கு எவ்வித நன்மையும்
இல்லை.

இறுதியாக ஒன்று. இனியும் கனிமொழி, ராஜா போன்றவர்கள் நிரபராதிகள் என்கிற பத்தாம்பசலி போக்கை முக கைவிட்டுவிட வேண்டும்.
இருவருமே ஒருவேளை போதிய ஆதாரங்கள் இல்லை என்று உச்சநீதிமன்றத்தால் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படலாம்... டான்சி வழக்கில் ஜெயலலிதா தன் மனசாட்சிக்கு எதிராக தன்னுடைய கையொப்பத்தை தன்னுடையதல்ல என்று கூறியதால்தான் விடுவிக்கப்பட்டார். ஆனால் அவர் குற்றவாளி என்பது அவருக்கும் தெரியும் உச்சநீதிமன்றத்திற்கும் தெரியும். அதுபோன்று கலைஞர் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்ட தொகையில் கனிமொழியை சம்மந்தப்படுத்த எந்த ஆவணங்களும் இல்லை என்கிற அடிப்படையில் கனிமொழி விடுவிக்கப்பட வாய்ப்புண்டு. அதுபோன்றே ராஜா எடுத்த முடிவுகளால் மத்திய அரசுக்கு இத்தனை லட்சம் கோடி இழப்பு என்ற வாதத்தை மெய்ப்பிக்க சிபிஐயிடம் எவ்வித ஆவண ஆதாரமும் இல்லை... மத்திய அரசே இழப்பு ஏதும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மீண்டும் கூறவும் வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில் ராஜாவை விடுவிப்பதை தவிர வேறு வழியிருக்காது. ஆயினும் இருவருக்குமே தெரியும் தாங்கள் குற்றவாளிகள்தான் என்பது தெளிவாக தெரியும்...

எனவே இனியும் என் மகள் நிரபராதி, திமுகவை அழித்தொழிக்க காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை சதித்திட்டம் தீட்டப்படுகிறது என்றெல்லாம் முக புலம்புவதை தவிர்த்து இந்த சிக்கலில் இருந்து கட்சியை மீட்க என்ன வழி என்பதை ஆய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

18 மே 2011

கலைஞரின் பரிதாப நிலை!


1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கலைஞர் தலைமையிலான திமுக இத்தகைய மாபெரும் தோல்வியை தழுவியதில்லை!

அப்போதும் கூட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலை ஏற்படுத்திய அனுதாப அலைதான் ஜெயலலிதா தலைமியிலான கூட்டணி திமுக கூட்டணி வென்ற இரண்டு இடங்களை தவிர அனைத்து சட்டமன்ற இடங்களையும் கைபற்றி சட்டமன்றத்தில் எதிர்கட்சி என்ற ஒரு கட்சியே இல்லாமல் செய்தது.

அதற்கு முன்பும், பின்பும் முதலமைச்சர் அல்லது எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்தை கலைஞர் இழந்ததே இல்லை என்றே கருதுகிறேன்.

கலைஞரின் ஐம்பதாண்டு அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் இப்படியொரு பரிதாப நிலைக்கு அவர் தள்ளப்படவில்லை. அவருடைய ஐம்பதாண்டுகால அரசியல் வாழ்க்கையை நினைவுகூரும் விதமாகத்தான் அவரை ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற செய்தனர் போலும் அவருடைய சொந்த ஊரைச் சார்ந்த வாக்காள பெருமக்கள்!

கலைஞர் ஏன் இத்தகைய மாபெரும் தோல்விக்கு உள்ளாகி தனிப்பட்ட முறையிலும் கட்சி தலைவர் என்ற முறையிலும் அவமானத்திற்குள்ளானார்?

கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் அவர் வெற்றிபெற்று முதலமைச்சர் பதவியில் அமர்ந்தபோது அவருக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதியிருந்தேன்.

அதில் குடும்ப அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும், ஊழல் பேர்வழிகளுக்குஅமைச்சரவையில் இடமளிக்க வேண்டாம் என்றும், தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் சரியாக மக்களை சென்றடைவதில் கவனம் தேவை என்றெல்லாம் பத்து கோரிக்கைகளை வைத்திருந்தேன்.

நான் எதையெல்லாம் தவிர்த்தால் அவர் தமிழகத்தை வெற்றிப் பாதையில் செலுத்த முடியும் என்று கூறியிருந்தேனோ அதையெல்லாம் அவர் தவிர்க்க தவறியதன் விளைவுதான் இந்த வரலாறு காணாத மாபெரும் தோல்வி என்றால் மிகையாகாது என கருதுகிறேன்.

மேலும் 2001ல் திமுக தோல்வியை தழுவிய போதும் இப்போது 2011ல் தோல்வியை தழுவிய போதும் உள்ள கலைஞரின் போக்கில் நிறைய மாற்றங்களை நம்மால் காண முடிகிறது.
2001ல் ஜெயலலிதா பதவி ஏற்றுக்கொண்ட நாள் முதலே கலைஞர் அண்ணா அறிவாலய அலுவலகத்தில் தினமும் நிரூபர்களை சந்தித்து அன்றைய சட்டமன்றத்தில் நடந்தவற்றைப் பற்றி விமர்சித்து பேசி வந்ததை நாம் கண்டோம். சில சமயங்களில் அது சிறுபிள்ளைத்தனமாக தோன்றினாலும் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்கானிக்க ஒரு வலுவான எதிர்கட்சி இருந்ததை நம்மால் உணர முடிந்தது.

ஆனால் இப்போது?

தேர்தல் முடிவுகள் வெளியாகி சுமார் ஒரு வாரம் ஆகியும் கலைஞரிடமிருந்து எவ்வித அறிக்கையும் இல்லை. 'தமிழக மக்கள் எனக்கு ஓய்வு அளித்துவிட்டனர். வாழ்த்துக்கள்' என்ற சுருக்கமான அறிவிப்பைத் தவிர மவுனம், மவுனம், மவுனம்!!

தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுமார் ரூ 900 கோடியை வாரி இறைத்து கட்டப்பட்ட புதிய சட்டமன்ற வளாகத்தை ஜெயலலிதா வீம்புக்கு புறக்கணித்துவிட்டு முந்தைய கோட்டை வளாகத்தை புதுப்பிக்க இன்னும் சில கோடிகளை வீணடித்துக்கொண்டிருப்பதை சட்டமன்றத்தில் பிரதிநிதிகளே இல்லாத மதிமுகவும், திகவும் விமர்சிக்க கலைஞரிடம் இருந்து எவ்வித விமர்சனமும் இல்லை!

ஏன் இந்த ஆழ்ந்த மவுனம்?

தமிழக மக்களுக்கு உழைத்தது போதும் அவர்கள் எப்படியோ போகட்டும் என்று நினைத்துவிட்டாரா?

அல்லது தோல்வியின் தாக்கத்திலிருந்து அவர் இன்னும் விடுபடவில்லையா?

அரசியல் வாழ்க்கை போதும் என்று அவர் நினைத்துவிட்டால் அதைப்பற்றியாவது உடனடியாக அவர் அறிக்கையொன்றை வெளியிட வேண்டும். செய்வாரா?

**********

18 ஏப்ரல் 2011

மதுரை ஆட்சியர் சகாயம் அவர்களுக்கு....

திரு சகாயம் அவர்களே,

சமீப காலமாக உங்களுடைய பெயர் தினத்தாள்களில் அதிகம் அடிபடுகிறது. மத்திய அமைச்சர் ஒருவர் மீது நீங்கள் பொய் வழக்கு போடச் சொல்லி உங்களுக்கு கீழ் பணியாற்றிய ஒரு அதிகாரியை வற்புறுத்தியதாகவும் அதனால் அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு மனதாலும் உடலாலும் பாதிக்கப்பட்டு தன்னை தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கவேண்டும் என்று விண்ணப்பிக்க அவரை சஸ்பெண்ட் செய்ய தேர்தல் அதிகாரி தமிழக அரசுக்கு பரிந்துரைத்ததாகவும் அதற்கும் நீங்கள்தான் காரணம் என்பதுபோலவும் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

ஆனால் இரண்டு தினங்களுக்கு முன்னர் தினமலரில் வெளியான உங்கள் அலுவலக வாழ்க்கைப் பயண விவரங்களை படித்த பிறகு
உங்களைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரி ஒரு மத்திய அமைச்சர் மீது பொய் வழக்கு போடச் சொல்லும் அளவுக்கு தரமிறங்கியிருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.

மேலும் தினமலரில் வெளியாகியிருந்த அந்த கட்டுரையில் "இவர் பந்தாடப்பட்ட விதமே இவருடைய நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வாக்கியம்தான் என்னை உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத தூண்டியது.

இந்த வாக்கியம் என்னுடைய அலுவலக வாழ்க்கையில் நான் பட்ட பாட்டை நினைவுக்கு கொண்டு வருகிறது. நான் பணியாற்றிய வங்கியில் அதிகாரியாக பதவி உயர்வு பெற்ற நாளிலிருந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை அதாவது சுமார் இருபத்தைந்து ஆண்டுகளில் பத்துக்கும் மேற்பட்ட கிளைகளில்/அலுவலகங்களில் பணியாற்ற வேண்டியிருந்தது. நான் என்னுடைய இறுதி பத்தாண்டுகளில் கொச்சியில் நான்கு வருடங்களும் சென்னையில் ஆறு வருடங்களும் பணியாற்றிய காலத்தை இதிலிருந்து குறைத்துவிட்டு பார்த்தால் மீதமுள்ள பதினைந்து ஆண்டுகளில் எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் பணியாற்றியுள்ளது தெரியவரும். சாதாரணமாக ஒரு அதிகாரியை நான்காண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வேறொரு இடத்திற்கு மாற்றுவார்கள். ஆனால் நானோ ஒரு இடத்திலும் சராசரியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் இருந்ததில்லை அல்லது இருக்க அனுமதிக்கப்படவில்லை.

இதற்கு காரணம் நான் ஒரு நேர்மையான அதிகாரி என்பதால் மட்டுமல்ல. நான் மனமுதிர்வு இல்லாதவனாய், அவசரபுத்திக்காரனாய், அளவுக்கு மீறிய கண்டிப்புள்ளவனாய் இருந்ததும் ஒரு காரணம் என்பதை இப்போது உணர்கிறேன். நேர்மையான பல அதிகாரிகளும் செய்யும் தவறுதான் இது. ஏதோ நான் மட்டும்தான் நேர்மையானவன் என்றும் கண்டிப்புடன் நடந்துக்கொண்டால் மட்டுமே நமக்கு கீழே பணியாற்றுபவர்கள் நம்மைக் கண்டு அஞ்சி பணிபுரிவார்கள் என்றும் நான் நினைத்துக்கொண்டிருந்ததும் இதற்கு ஒரு காரணம். அதுமட்டுமல்லாமல் மேலதிகாரிகள் அனைவருமே நேர்மையற்றவர்கள் ஆகவே அவர்களுடன் எதிலும் ஒத்துப்போக தேவையில்லை என்று எண்ணியிருந்ததும் ஒரு காரணம். ஆகவேதான் எந்த ஒரு இடத்திலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு மேல் என்னால் நிலைத்து பணியாற்ற முடியவில்லை. இளம் வயதிலேயே அதிகாரியானதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதை இப்போது உணர்கிறேன்.

பதினைந்தாண்டு காலம் அதிகாரியாக பணியாற்றியபிறகுதான் என்னுடைய தவறுகளை என்னால் உணர முடிந்தது. என்னுடைய முன்கோபம், தேவையற்ற பிடிவாதம், கண்டிப்பு ஆகியவைகளை களைந்து மனப்பக்குவம் அடைந்த பின் என்னுடைய இறுதி பத்தாண்டுகளில் இரண்டு இடங்களில் நிலைத்து பணியாற்றி நிம்மதியுடன் ஓய்வுபெற்றேன்.

ஒரு சிறிய தனியார் வங்கியில் அதிகாரியாக பணியாற்றிய எனக்கே இந்த நிலை என்றால் அரசு அதிகாரியாக பணியாற்றுகின்ற உங்களுடைய நிலை?

அந்த கட்டுரையில் நீங்கள் தமிழக முதல்வருக்கு ஒரு கடிதம் எழுதி அதில் 'நேர்மையான அதிகாரிகள் புறக்கணிப்படுகின்றனர்' என்று குறிப்பிட்டதுடன் உங்களுடைய சொத்து விவரம், வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் குறிப்பிட்டு இதை தவிர வேறு ஏதாவது சொத்து இருப்பதாக தெரியவந்தால் என் மீது நடவடிக்கை எடுங்கள்' என்று முதல்வருக்கே சவால் விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது உங்களுடைய நேர்மையையும் துணிச்சலையும் விட உங்களுடைய மனமுதிர்வின்மையையே காட்டுகிறது. நாம் நேர்மையானவர்கள் என்பதை பிறர்தான் கூற வேண்டும். அதை நாமே பறைசாற்றிக்கொள்வது சிறுபிள்ளைத்தனம். நேர்மையானவன் என்பது பட்டமோ அல்லது நீங்கள் உங்கள் சட்டையில் அணிந்துக்கொண்டு செல்லும் 'பேட்ஜோ' அல்ல மிஸ்டர் சகாயம். மேலும் நேர்மை என்பது உங்களுக்கு மட்டுமே உள்ள ஒரு virtue அல்ல என்பதையும் நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். நீங்கள் நேர்மையானவர் என்பதாலேயே அரசு உங்களை தலை மீது தூக்கி வைத்து கொண்டாட வேண்டும் என்பதில்லை. அல்லது உங்களுடைய நேர்மைக்கு அங்கீகாரம் அளித்து கவுரவிக்க வேண்டும் என்றும் நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. உங்களை சுற்றிலுமுள்ள நேர்மையற்ற அதிகாரிகள் மத்தியில் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டீர்கள், அல்லவா? அதனுடைய பலனை அல்லது விளைவுகளை (consequence) எதிர்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். அடிக்கடி ஏற்படுகின்ற ஊர் மாற்றங்களால் நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடைய மனைவி, மக்களும் சிரமங்களை எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நேர்மையாக மட்டுமே இருப்பேன், எவருக்கும் அடிபணிய மாட்டேன் என்பது நீங்களாக தெரிவு செய்துக்கொண்ட நிலை. அந்த நிலைபாட்டால் நல்லது மட்டுமே நடக்க வேண்டும் என்பதில்லை... இந்த பத்து பதினைந்தாண்டுகளில் ஐஏஎஸ் அதிகாரி என்னும் அந்தஸ்த்தை எட்டிப் பிடித்துள்ளீர்களே அது உங்களுடைய நேர்மைக்கு கிடைத்த பரிசாக எடுத்துக்கொள்ளுங்களேன்.

தமிழக அரசியலில் மலிந்து கிடக்கும் ஊழலை அடியோடு ஒழிக்க அவதாரம் எடுத்தவன் நான் என்றும் கூட உங்களைக் கற்பித்துக்கொண்டு உங்களுடைய பதவிக்கு மீறிய செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதும் கூட இதுவரை நீங்கள் கடந்து வந்த அலுவலக வாழ்க்கை பாதையை பற்றிய குறிப்புகளை அந்த கட்டுரையில் காண முடிகிறது. கோவையிலுள்ள சைவ உணவு விடுதியில் அனுமதி பெறாமல் பதுக்கி விற்பனை செய்யப்பட்டு வந்த மதுபான சரக்குகளை அரசு அதிகாரி ஒருவர் நேரடியாக சென்று ரெய்டு நடத்தி பிடிப்பதும், மணல் திருட்டை தடுக்கப் போன இடத்தில் கொலை முயற்சி தாக்குதலுக்கு உள்ளாவதும்... ஒரு சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு உங்களை நீங்கள் கற்பனை செய்துக்கொள்வதை எடுத்துக்காட்டுகின்றன. இதெல்லாம் செய்துதான் ஒரு அரசு அதிகாரி தன்னுடைய நேர்மையை அல்லது யாருக்கும் எதற்கும் நான் அஞ்சாதவன் என்று காட்டிக்கொள்ள தேவையில்லை மிஸ்டர் சகாயம். சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தன்னுடைய பதவிக்கு உரிய அதிகாரத்தை மட்டும் பயன்படுத்தி சட்டத்தை நிலைநாட்டுவதுதான் ஒரு அதிகாரியிடமிருந்து அரசு எதிர்பார்க்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.

Playing to the gallery என்பார்களே அதுபோல மக்கள் நம்மை பாராட்ட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற தேவையற்ற வேலைகளில் நீங்கள் ஈடுபடுவதால்தான் உங்களுடைய மேலதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் பலருடைய பகைக்கும் நீங்கள் உள்ளாக வேண்டிய நிலையில் இருந்திருக்கிறீர்கள். நேர்மையான அதிகாரி என்றால் இப்படித்தான் செயலாற்ற வேண்டும் என்று நீங்கள் கருதுவது உங்களுடைய மனமுதிர்ச்சியின்மையையே காட்டுகிறது என்றால் தவறில்லை என கருதுகிறேன்.

மதுரை ஆட்சியராக உங்களுடைய சமீபத்திய செயல்பாடுகளால் பத்திரிகைகள் பாராட்டும் அளவுக்கு நீங்கள் புகழடைந்திருக்கிறீர்கள் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வரை தொடர்ந்து பணியாற்ற வேண்டியது இதே அரசியல்வாதிகளுக்கு கீழேதான் என்பதையும் நினைவில் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். எறும்பை எடுத்து காதுக்குள் விட்டுக்கொண்டு குத்துதே, குடையுதே என்று புலம்பும் நிலைதான் உங்களுடைய நிலை.

அரசு அதிகாரியாக பணியாற்றும் ஒருவர் நாட்டில் நிலவும் அரசியல் அமைப்புடன் இணைந்து அதன் துணையுடன் திறம்பட பணியாற்ற முயல வேண்டுமே தவிர அதை எதிர்த்துக்கொண்டு போராட முயல்வது சிறுபிள்ளைத்தனம். You should know how to use the SYSTEM for more effective functioning instead of fighting it. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் விதிமீறல்களை, ஊழலை ஒரே இரவில் ஒழித்துவிட முயல்வது சிறுபிள்ளைத்தனம் மட்டுமல்ல முட்டாள்தனமும் கூட என்பதை நீங்கள் உணர வேண்டும்.

ஒரு அரசு அதிகாரியின் பெயர் பத்திரிகைகளில் வந்து பிரபலமடைய வேண்டும் என்பது முக்கியமல்ல. அது அரசியல்வாதிகளுக்கு. திரை மறைவில் பணியாற்றுவது அதிகாரிகளுடைய கடமை. அவர்களுடைய திறமைக்கு கிடைக்கும் பரிசு? அரசியல்வாதிகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டு. அங்கீகாரமும் பாராட்டும் உங்களை தேடி வர வேண்டும். அது கிடைக்கவில்லை என்பதற்காக அந்த அமைப்பையே எதிர்கொண்டு போராடுவேன் என்று எல்லா அரசு அதிகாரிகளும் இறங்கினால் நாட்டின் நிலை என்னவாகும்?

இத்தகைய செயல்பாடுகளால் பொதுமக்கள் மற்றும் பத்திரிகைகளிடமிருந்து கிடைக்கும் பாராட்டுகளால் நீங்கள் பெறும் மகிழ்ச்சி சொற்ப காலத்திற்கு மட்டுமே நிலைத்திருக்கும். ஆனால் மனப்பக்குவத்துடன் உங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளையும் மற்றும் உங்களுக்கு கீழே பணியாற்றுபவர்களையும் அரவணைத்து செல்வதால் மட்டுமே அரசு இயந்திரத்தை திறம்பட கையாள முடியும். அதன் காரணமாக உங்களுடைய பணியிலும் நீங்கள் வெற்றியடைய முடியும். அதனால் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கிறதோ இல்லையோ நீங்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும்போது உங்களுக்கு நிம்மதியான மனதிருப்தி கிடைக்கும். அதுதான் நிரந்தரம்.

அன்புடன்,
டிபிஆர்.

12 ஏப்ரல் 2011

என் வாக்கு யாருக்கு, ஏன்?

முதலில் இந்த கட்டுரைக்கு 'என் கணிப்பு' என்று தலைப்பிடலாம் என்று நினைத்தேன். ஆனால் கருத்துக் கணிப்புகளுக்கு தடையுள்ளதே என்பது நினைவுக்கு வந்தது. இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஏதோ இப்போதுதான் தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்துவதுபோன்றல்லவா இப்போதைய தேர்தல் கமிஷன் இத்தகைய தடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது? ஆகவே நான் என்னுடைய அனுமானங்களை கணிப்பு என்று எழுதப்போக கமிஷன் என்னையும் 'சஸ்பெண்டோ' ஏன், கைதோ செய்துவிட்டால்? (நல்லவேளையாக சஸ்பெண்ட் செய்ய நான் அரசு ஊழியன் இல்லை.. ஓய்வுபெற்ற, வேலையற்ற பேர்வழி!!).

மற்றவர்கள் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை ஓரிரு விழுக்காடு வாக்காளகர்களை விசாரித்துவிட்டு அதன் அடிப்படையில் ஒட்டுமொத்த வாக்காளர்களும் இவர்களுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று கணித அடிப்படையில் 'கணிப்பு' என்ற பெயரில் தங்களுக்கு வேண்டப்பட்ட கட்சிகள்தான் இம்முறை வெற்றியடையும் என்கிற பம்மாத்து வேலைதான் (களவாணித்தனம் என்று எழுத மனம் வரவில்லை) இந்த கருத்துக்கணிப்புகள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துக்கொண்டிருக்கும் சமயத்திலேயே அஇஅதிமுக கூட்டணி பெருவாரியான இடங்களை கைப்பற்றிவிட்டதுபோன்றதொரு மாய சூழலை வடமாநில தொலைக்காட்சி நிறுவனங்கள் உருவாக்க அதை நம்பி தில்லி ஆறு நட்சத்திர விடுதி ஒன்றின் ஒரு சொகுசு தளத்தையே புக் செய்துவிட்டு தலைவி ஏமாந்து நின்றதை நான் பார்த்ததுதானே.

வாக்காளர்களுடைய மனதை எடைபோட, அதுவும் தமிழக வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் கணிப்பதற்கு 'கணித' அறிவு போதாது. அவர்களுடைய மனநிலையை அறிந்துக்கொள்ளக் கூடிய சூட்சுமம் தெரிந்திருக்க வேண்டும். அந்த கலை இன்றைய 'கணித மேதை'களுக்கு அது கைவரப்போவதில்லை. ஆகவே தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் முடிந்தபிறகு புற்றீசல் போன்று வரப்போகின்ற கணிப்புகளையும் நம்பத் தேவையில்லை. வருகின்ற மே மாதம் 13ம் தேதி நள்ளிரவு அல்லது 14ம் தேதி விடியற்காலைவரை காத்திருக்க வேண்டியதுதான் ஒரே வழி.

ஆனால் என்னுடைய ஓட்டு யாருக்கு என்பதை தெரிவிக்கக் கூடிய உரிமை எனக்கு உண்டு அல்லவா?

நானும் என்னுடைய குடும்பமும் பரம்பரை, பரம்பரையாகவே காங்கிரசுக்குத்தான் வாக்களித்திருக்கிறோம் என்பதை பலமுறை கூறியுள்ளேன். அந்த கட்சியின் வேட்பாளர் என்னுடைய தொகுதியில் நிற்கவில்லையென்றால் அந்த கட்சி சார்ந்திருக்கும் கூட்டணி எதுவோ அந்த கட்சியின் வேட்பாளருக்குத்தான் வாக்களித்து வந்திருக்கிறோம். ஆனால் எங்களுடைய துரதிர்ஷ்டம் நான் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஒரே வருடத்தில் இரண்டு முறை என்னுடைய குடியிருப்பை மாற்ற வேண்டி வந்ததால் இம்முறை எனக்கு வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. என்னுடைய முந்தைய விலாசத்தில் என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தும், பட்டியல் வெளிவந்ததும் என்னுடைய விலாச மாற்ற விண்ணப்பத்தை அடுத்திருந்த முனிசிபல் அலுவலகத்தில் சமர்ப்பித்திருந்தும் வழக்கம்போல அரசு இயந்திரம் தனக்கே உரிய தாமதத்துடன் இயங்கி என்னை 'வாக்கு' அற்றவனாக ஆக்கிவிட்டது!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை, தன்னுடைய இரு மகன்களுக்கும் புதிய பதவிகளை (ஒருவருக்கு துணை முதல்வர் பதவி மற்றவருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் பதவியாம்!) மட்டுமே பெற்று தந்திருக்கிறார் என்கிற அம்மையாரின் வாதத்தையோ அல்லது தன்னுடைய திருமண மண்டபம் பறிபோனதே என்கிற ஆதங்கத்தில் ஊழல் மன்னர் கலைஞர் என்கிற வெத்துவேட்டு நடிகரின் வாதத்தையோ என்னால் ஏற்க முடியவில்லை.

கலைஞரின் தலைமையிலுள்ள ஆட்சி என்னைப் போன்ற நடுத்தர மற்றும் உயர்நடுத்தர நகரவாசிகளுக்கு என்ன செய்ததோ இல்லையோ கீழ்நடுத்தர மற்றும் வருமைக்கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு என்ன செய்யவில்லை? இதுவரை இல்லாத அளவுக்கு அரசு கருவூலத்தில் இருந்து அவர்களுக்கு இலவச திட்டங்கள் என்ற பெயரில் தாரைவார்த்தது எத்தனை கோடிகள்? அது அனைத்தும் மக்கள் வரிப்பணம்தான் என்றாலும் அதை அனுபவித்தவர்கள் எவரும் வரி செலுத்துபவர்கள் இல்லை என்பதை மறந்துவிட முடியவில்லை. உள்ளவர்களிடமிருந்து எடுத்து இல்லாதவர்களுக்கு அளிப்பதுதான் அரசு திட்டங்கள். அதுவும் ஏழை எளியவர்களுக்கென்று கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு நிறைவேற்றிய பல இலவச திட்டங்கள் அதற்கு ஒரு படி மேலே சென்று ஏழை எளியவர்களுக்கு பல வசதிகளை செய்துக்கொடுத்துள்ளது இன்றைய அரசு. இதில் ஒன்றைக் கூட அம்மையாரின் பத்தாண்டு கால ஆட்சியில் செய்ததில்லை. கடந்த 2006 தமிழக தேர்தலில் திமுக இத்தகைய திட்டங்களை தேர்தல் அறிக்கையில் பட்டியலிட்டபோது இது சாத்தியமில்லை என்று எள்ளி நகையாடியவர்தானே இவர்?

ஆக இந்த ஒரு நல்ல காரியத்துக்காகவே திமுகவுக்கும் அவற்றை நிறைவேற்ற நிதியுதவி அளித்த மத்திய அரசு கூட்டணியின் மூத்த உறுப்பினரான காங்கிரசுக்கும் என்னுடைய ஓட்டு, இம்முறையும்.

மற்றபடி ஊழல் மலிந்துபோய் தமிழகத்தையே 2G மூலம் தலைகுணிய வைத்துவிட்டாரே கலைஞர் அவரை எப்படி மீண்டும் தெரிவு செய்வது என்றால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அவரை புறக்கணியுங்கள் என்பதுதான் என்னுடைய பதில்.

சட்டமன்ற தேர்தல் நடப்பது தமிழகத்தை யார் ஆளவேண்டும் என்பதற்காக, அதில் மத்தியில் நடந்தவற்றைப் பற்றி சிந்திப்பதில் பலனில்லை. இன்று தமிழக கிராமப்புறத்திலுள்ள வாக்காளர்கள்தான் அதிக அளவில் வாக்களிக்கின்றனர். அவர்களுக்கு தமிழக அரசு எங்களுக்கு என்ன செய்யப்போகிறது என்ற கவலைதானே தவிர 2Gயில் யார் எத்தனை கோடி சுருட்டினார்கள் என்ற கவலை இல்லை. அத்தகைய கவலை இன்று ஊடகங்களில் எழுதிக்கொண்டிருக்கின்ற படித்த மேதைகளுக்குத்தான். கடந்தமுறை நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழர்களை முன் வைத்து இந்த கூட்டணியை தோற்கடிக்கவேண்டும் என்று அணல் பறக்க எழுதிய கூட்டம்தானே இது. மக்களின் அன்றாட பிரச்சினைகள் முன்பு அடிபட்டுபோகிற பிரச்சினைகளை அவர்கள் முன் வைப்பதில் என்ன பயன்?

அதுபோன்ற பிரச்சினைதான் இந்த 2G பிரச்சினையும். அதைவிடவும் திமுகவின் வெற்றியை பாதிக்கக் கூடிய பிரச்சினைகள் பல உள்ளன. விலைவாசி உயர்வு (அதில் பெட்ரோல் விலையுயர்வை பற்றி பாமரன் கவலைப்படப் போவதில்லை), மின் தட்டுப்பாடு, நகரவாசிகளை அன்றாடம் பாதிக்கின்ற பழுதடைந்த சாலைகள் (சென்னைவாசிகளுடைய நிலமை எவ்வளவோ மேல்).... இவைகளை முன்வைத்து அம்மையாரோ அல்லது அவருடைய கூட்டணி தலைவர்களோ அவற்றை முழுமையாக தீர்த்துவிடுவோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதை விடுத்து கலைஞரும் அவருடைய குடும்பத்தாரும் கோடி, கோடியாக சுருட்டுகின்றனர் என்று ஒப்பாரி வைப்பதை கேட்டு, கேட்டு மக்களுக்கு வெறுப்புத்தான் வந்திருக்கும். இதை கிலோ கணக்கில் தங்க நகைகள், நூற்றுக் கணக்கில் காலணிகள், ஒரு அறை முழுவதும் 'சூட்கேஸ்கள்' என தன்னுடைய வீட்டில் அடுக்கி வைத்திருந்தவர் பேசினால் எப்படி எடுபடும்? இரு நூறு நபர்கள் தங்கக் கூடிய போயஸ் கார்டன் மாளிகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் 'உடன் பிறவா சகோதரி மற்றும் அவருடைய குடும்பத்தாருடன் ராஜபோக வாழ்க்கை அனுபவிக்கும் ஒருவர் சென்னை கோபாலபுரத்தில் எவ்வித வசதிகளும் இல்லாத, நடுத்தரவாசிகள் வாழும் பகுதியில் எவ்வித பந்தாவும் இல்லாமல் கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் கலைஞரை கோடி கோடியாய் சுருட்டுகிறார் என்றால்..... அந்த வீட்டையும் தன்னுடைய காலத்திற்குப் பிறகு ஏழை எளியவர்களுக்கென எழுதி வைத்தவர் கலைஞர். அவர் சுருட்டுவதாக கூறுகின்ற கோடிகள் அவர் எங்கு பதுக்கி வைத்திருப்பார் என எண்ண தோன்றுகிறதல்லவா?

இன்றை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் அரசியலில் பரவி இருப்பது ஊழல். அது இந்தியாவில் சற்று கூடுதல்தான். ஏனெனில் இங்கு கையூட்டு கொடுப்பதையே தவறு என்று உணராத மக்கள் இருப்பதுதான். பிறப்பு சான்றிதழிலிருந்து மரண சான்றிதழ் வரை ஒரு 'தொகை'யை கொடுத்துவிட்டு சான்றிதழை விரைவில் பெற்றுக்கொள்வதில் தவறில்லை என்று கருதும் மக்கள் வசிக்கும் சூழலில் கையூட்டு வாங்கும் பழக்கத்தை எப்படி ஒழிக்க முடியும்? அரசியல்வாதிகளை விட்டுவிடுங்கள், இந்திய மருத்துவ கழகத்தின் மெத்தப் படித்த தலைவரே ஆயிரம் கோடி வரை ரொக்கமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததைத்தான் சமீபத்தில் கண்டோமே. அவர் வளர்ந்த குடும்ப சூழலும், அவர் படித்த பட்டமும், ஆற்றிய மருத்துவ சேவைகளும் அவரை ஊழலில் இருந்து மீட்கவில்லையே. இன்று அரசு அதிகாரிகளில் 90 விழுக்காட்டுக்கு குறையாமல் இத்தகையோர்தாமே. பிறப்பிலிருந்தே ரத்தத்தில் ஊறிப்போயுள்ள இந்த 'கொடுக்கும்' மற்றும் 'வாங்கும்' பழக்கம் இன்றோ அல்லது நாளையோ மறையப் போவதில்லை.

ஆகவே எதிர்வரும் தேர்தலில் கூட்டணி கட்சிகளை தெரிவு செய்வது ஊழலின் அடிப்படையில் மட்டும் இருக்கலாகாது என்பதுதான் என்னுடைய வாதம். கடந்த ஐந்தாண்டு காலத்தை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் தமிழகத்தில் இப்போதுள்ள இரு முக்கிய திராவிட தலைவர்களான கலைஞர் மற்றும் ஜெயலலிதா ஆகியவர்களுடைய கடந்த கால ஆட்சி திறனை கணித்து வாக்களிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

அந்த அடிப்படையில் ஆட்சித் திறன், எந்த பிரச்சினையையும் பதறாமல் அணுகும் திறன், அனைத்து இனத்தவரையும் முக்கியமாக சிறுபான்மையினரையும் அணைத்து செல்கின்ற திறன், மத்தியிலுள்ள ஆட்சியாளர்களுடன் இணைந்து செயலாற்றுகின்ற திறண் ஆகியவற்றின் அடிப்படையில் கணிப்பிடுகையில் என்னுடைய ஓட்டு நிச்சயம் கலைஞர் தலைமையிலான கூட்டணிக்குத்தான்.

கூட்டணி அமைப்பதிலும் அவர்களை அரவணைத்து செல்வதிலும் நிதானத்தை இழந்து செயல்பட்டதை வைத்து பார்க்கையில் மீண்டும் ஆட்சி செய்யக்கூடிய மனப்பக்குவம் அம்மையாருக்கு வரவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து.

***************

23 மார்ச் 2011

தேர்தல் 2011 - இலவச திட்டங்களும் ஒருவகையில் லஞ்சம்தான்!

ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை தடுக்கும் முகமாக தேர்தல் கமிஷன் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கையில் அரசு
திட்டங்கள் என்ற பெயரில் வீட்டு உபயோக பொருட்களை இலவசமாக வாரி வழங்குவதாக தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிடுவது எந்த வகையில் நியாயம்?

கடந்த முறை திமுக அறிவித்திருந்த இலவச திட்டங்கள் மூலமாக தொலைக்காட்சி பெட்டி, எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு என அவற்றிற்கு
தகுதியற்ற பலரும் பயனடைந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை. என்னுடைய குடியிருப்புக்கு அருகாமையில் குடும்ப அடையாள அட்டை
வைத்திருப்போருக்கு தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்பட்டபோது நாற்சக்கர வாகனங்களில் வந்து அவற்றை பெற்றுக்கொண்டு சென்றவர்களையும் காண முடிந்தது!

அரசின் நலத்திட்டங்கள் அவற்றை பெற தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பது அடிப்படை நியதி. மக்களின் வரிப்பணத்திலிருந்து செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை குடும்ப அடையாள அட்டைதாரர்கள் அனைவருக்கும் செயல்படுத்துவது முட்டாள்தனம். குடும்ப அட்டை வழங்கப்படுகின்ற சமயங்களில் நிரந்தர வருமானம் உள்ள பல அரசு ஊழியர்களும் கூட தங்களுடைய நிஜ வருமானத்தை மறைத்து அல்லது குறைத்து குறிப்பிட்டு குடும்ப அட்டைகளை பெற்றுள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆகவே குடும்ப அட்டைதாரர்கள் என்ற அடிப்படையில் மட்டும் அரசு வழங்கும் இலவச பொருட்களை வினியோகிப்பது அரசு பணத்தை வீணடிப்பதற்கு சமம்.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது வாக்களித்திருந்த அனைத்து இலவச திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவிட்டது என பெருமை அடித்துக்கொள்ளும் தற்போதைய அரசு அதனால் அரசுக்கு மொத்தமாக எத்தனை கோடிகள் செலவிடப்பட்டன அவற்றை அரசு எவ்வாறு அல்லது
எங்கிருந்து திரட்டியது (Mobilised) என்பதையும் வெளியிடுவது அவசியம். மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களுக்கென
ஒதுக்கப்படும் நிதி இத்தகைய திட்டங்களுக்கு புறம்பான செலவினங்களாக (Non-Plan expenditure) வீணடிக்கப்படுகின்றனவா என்பதையும் மாநில
அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தேர்தல் சமயங்களில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் ஆகியவை வழங்கப்படுவது சட்டவிரோதம் என்று கூறும் தேர்தல் கமிஷன் இத்தகைய இலவச திட்டங்களை எப்படி தடைசெய்யப் போகிறது? இவை இரண்டிலும் உள்ள வேறுபாடு என்ன? வேட்பாளர் வழங்கும் பணம் அல்லது பொருட்களுக்கு தேவைப்படும் பணம் அவர்களுடைய சொந்த அல்லது கட்சிப்பணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆகவே அவற்றை தனிநபர்
செலவினங்கள் என்று விட்டுவிடலாம். ஆனால் எங்களுடைய கட்சி அரசமைக்க வாக்களித்தால் இவற்றை இலவசமாக வழங்குகிறோம் என்று ஒரு
அரசியல் கட்சி வாக்குறுதியளிக்கும்போது அது அரசு கஜானாவையே அல்லவா பாதிக்கிறது? முந்தையது சட்டவிரோத செயல் என்றால் பின்னது?

அதைவிட மோசமாயிற்றே?

சமீபத்தில் வெளியிடப்பட்ட திமுகவின் தேர்தல் அறிக்கையில் பட்டியலிடப்பட்ட இலவசங்கள், சலுகைகள் என்பவற்றை நீக்கிவிட்டு பார்த்தால்
உருப்படியாக எந்த நலத்திட்டங்களும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. போனால் போகிறது என்று 'மின் உற்பத்தியை பெருக்க மேலும் பல மின்
அணு நிலையங்களை நிறுவுவோம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சரி, கடந்த ஐந்தாண்டுகளில் ஏன் இவற்றை செயல்படுத்தவில்லை?

ஸ்ரீரங்கநாதசாமியின் பாதத்தில் வைத்து பூஜசெய்துவிட்டு வெளியிடப்படப்போகும் அதிமுக அறிக்கையிலும் இத்தகைய இலவச திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை அளிக்கப்படும் என்பதில் ஐயமில்லை. இடதுசாரி கட்சிகளின் அறிக்கையை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் (அவர்கள் எப்படியும் ஆட்சிக்கு வரப்போவதேயில்லை என்பது வேறு விஷயம்!) மற்ற அனைத்துக் கட்சிகளின் அறிக்கைகளுமே இதே பாணியில்தான் இருக்கப்போகிறது என்பதில் ஐயம் இல்லை.

இத்தகைய குறிக்கோளற்ற, கொள்கைகளற்ற அறிக்கைகளால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எவ்வித நீண்ட கால பயனும் கிடைக்கப்போவதில்லை. இலவசம் என்ற பெயரில் மக்களின் இன்றைய தேவைகளை மட்டும் நிறைவேற்றினால் போதும் என்ற நினைப்பில் அரசியல் கட்சிகள் செயல்படுகின்ற வரையில் நிலைமை இப்படித்தான் நீடிக்கும்.

இதுதான் தமிழக மக்களின் தலையெழுத்து!

தொடரும்..

21 மார்ச் 2011

தேர்தல் 2011 - அதிமுக கூட்டணி குழறுபடி தொடர்கிறது

என்னுடைய கடந்த பதிவில் குறிப்பிட்டிருந்த அதிமுக தொகுதி உடன்பாட்டில் ஏற்பட்ட குழறுபடி இன்னும் தீர்ந்தபாடில்லை.

'மேடம்' தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை வெளியிட, கொதிப்படைந்த அதிமுக தோழமை கட்சிகளில் இடது சாரி கட்சிகள் இரண்டும்தான் முதலில் போர்க்கொடி உயர்த்தின. அவர்களுடன் துக்கடா கட்சிகளான புதிய தமிழகம் போன்ற கட்சி தலைவர்கள் ஒட்டுமொத்தமாக 'கேப்டன்' அலுவலகத்திற்கு படையெடுத்துச் சென்று அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி மூன்றாம் அணியை உருவாக்குவதைப் பற்றி ஆராய அவரை அழைத்தனர். ஆனால் இத்தகைய முடிவு திமுகவுக்கு சாதகமாக அமையும் என்று கருதிய கேப்டன் அவர்களை சமாதானப்படுத்தி ஓரிரு நாட்கள் காத்திருக்கச் செய்தார். ஆயினும் மார்க்சிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் நிரூபர்கள் 'அதிமுகவுடன் சமரசம் செய்துக்கொள்வீர்களா?' என்று கேட்டபோது 'நீங்கள் வேண்டுமானால் முயற்சி செய்யுங்கள், நான் அதை செய்யப்போவதில்லை.' என்றார் காட்டமாக.

அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சை மீண்டும் துவங்குவதற்கு கேப்டன் மூன்று நிபந்தனைகள் முன்வைத்ததாகவும் செய்திகள் வெளியானது.

1. மதிமுகவை மீண்டும் கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.
2. தேதிமுக விரும்பிய தொகுதிகளை ஒதுக்க வேண்டும்.
3. தேர்தல் பிரச்சாரத்தை தங்களுடன் கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.

தனக்கு யாரும் நிபந்தனை வைப்பதை எப்போதும் விரும்பாத 'மேடம்' இவற்றை ஏற்றுக்கொண்டதுபோன்ற பாவனையை செய்து தன்னுடைய பிரச்சார கூட்ட சுற்றுப்பயணத்தை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். மதிமுகவை கூட்டணியில் சேர்ப்பதில்லை என்ற தன்னுடைய முந்தைய முடிவை ஒருபோதும் மறுபரிசீலனை செய்யப்போவதில்லை என்பதை மேடம் முடிவெடுத்திருந்தாலும் அதை வெளி காட்டிக்கொள்ளாமல், தன்னுடைய 'மூத்த' தலைவர்கள் குழுவை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தொடர அனுப்பிவைத்தார்.இடதுசாரிகள், புதிய தமிழகம், சமக மற்றும் இதர சிறு, சிறு கட்சிகளுக்கு அவை விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவர்களும் தங்களுடைய மூன்று நிபந்தனைகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு தாங்கள் விரும்பிய தொகுதிகள் கிடைத்துவுடன் மேடத்தை சந்தித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இடதுசாரிகளின் இந்த நடவடிக்கை ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். மதிமுகவை கூட்டணியில் இணைத்தால்தான் பேச்சுவார்த்தைக்கு வருவோம் என்றதெல்லாம் வெறும் கண்துடைப்பு.

மீதமுள்ள இரு கட்சிகளான தேமுதிக மற்றும் மதிமுக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அதில் தேமுதிகவுக்கு இருந்த ஓட்டு வங்கியை மனதில் வைத்து அவர்களுடன் தொடர்ந்து மணிக்கணக்காக பேச்சு வார்த்தை நடத்தி ஒருவழியாக அவர்கள் விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால் மதிமுகவுடன் ஒப்புக்கு பேச்சுவார்த்தை என்ற நாடகம் நடந்து வைகோ எப்படியும் ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்று தெரிந்தே அவர் கேட்டிருந்த 21 தொகுதிகளுக்கு பதில் 12 தொகுதிகளை ஒதுக்க மேடம் பெரிய மனதுடன் முன்வந்துள்ளார் என்றது அதிமுக குழு. 'கொடுத்தால் 21 இல்லையேல் கூட்டணியிலிருந்து விலகல்' என்றார் வைகோ பிடிவாதமாக. 'சரி சென்று வாருங்கள்' என்றார் மேடம் பதிலுக்கு. 'தேர்தலையே புறக்கணிக்கப்போகிறேன்' என்றார் வைகோ. 'உங்கள் முடிவுக்கு உங்களுடைய அன்பு சகோதரி என்ற பெயரில் வருந்துகிறேன்' என்று கடிதம் ஒன்றை எழுதி இனி பேசி பயனில்லை என்று முற்றுப்புள்ளி வைத்தார் மேடம்.

தாங்கள் முன்வைத்த மூன்று நிபந்தனைகளில் ஒரு நிபந்தனையைக் கூட மேடம் நிச்சயம் ஏற்கப்போவதில்லை என்று கேப்டனுக்கு தெரியாமல் இல்லை. அவர் நினைத்ததுபோன்றே மதிமுக விலகியதையும் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மதிமுக விலகிய செய்தி வெளியானதும் அவருக்கு வழங்கவிருந்த தொகுதிகளில் தங்களுக்கு சில தொகுதிகளை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. அதாவது எரிகிற வீட்டில் முடிந்தவரை கொள்ளிகளை பிடுங்கலாம் என்ற நினைப்பில். ஆக, மதிமுகவைப் பற்றி இந்த கட்சிகள் பேசியதெல்லாம் வெறும் வெளிவேஷம், வடித்ததெல்லாம் வெறும் முதலைக் கண்ணீர் என்பது வெட்டவெளிச்சமாகிறது.

கேப்டனின் மீதமுள்ள இரு நிபந்தனைகளையும் மேடம் நிச்சயம் ஏற்கப்போவதில்லையென்பது, பேச்சுவார்த்தைக்குப் பிறகு அதிமுக ஒதுக்கிய தொகுதிகளில் இப்போதும் தேமுதிக முழு திருப்தியடையவில்லை என்றும் இன்றும் தன்னுடைய பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்களுடன் கேப்டன் இறுதிகட்ட ஆலோசனை நடத்துகிறார் என்றும் வெளியாகியுள்ள செய்தியும் மீண்டும் உறுதிபடுத்துகின்றன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நான் ஏற்கனவே கூறியிருந்ததைப் போன்று இந்த கூட்டணி, குறிப்பாக தேமுதிக-அதிமுக கூட்டணி, அற்ப ஆயுளைக் கொண்ட கூட்டணி என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. இவ்விரு கட்சிகளின் தலைவர்களுமே ஒரே குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்பதால் இவர்களுக்குள் எந்த ஒரு விஷயத்திலும் ஒற்றுமை ஏற்படப் போவதில்லை என்பதும் தெளிவாகிறது.

தேர்தல் முடிவுகள் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை புரட்டிப் போடப் போவது என்னவோ உண்மை. திமுக மற்றும் அதிமுக கட்சிகளைத் தவிர கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் எந்த கூட்டணிக்கும் தாவலாம் என்பதும் உண்மை. ஆனால் ஜெயித்தாலும் உடையக் கூடிய ஒரே கூட்டணி அதிமுக-தேமுதிக கூட்டணிதான்.

அதிமுக 160 இடங்களில் போட்டியிட முடிவு செய்திருப்பதிலிருந்தே மாநிலத்தில் யாருடைய தயவும் இல்லாமல் தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்ற எண்ணத்துடந்தான். சட்டசபையில் சிம்பிள் மெஜாரிட்டி கிடைக்க தேவையான தொகுதிகளை தாங்களாக தனித்து பெற்றுவிடக்கூடிய சூழலில் கேப்டனை தூக்கியெறிய ஒரு நொடி கூட மேடம் தாமதிக்கமாட்டார் என்பதும் உறுதி!

தங்களுடைய நிழலுடனேயே ஒத்துப்போக முடியாதவர்கள் மேடமும், கேப்டனும். ஆகவே இவ்விரு கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒரு சந்தர்ப்பவாதி கூட்டணி என்பதை வாக்களர்கள் உணர வேண்டும்.

ஊழலற்ற ஆட்சி தேவைதான். ஆனால் அரசியல் நிச்சயமற்ற சூழல் தமிழகத்திற்கு தேவைதானா?

தொடரும்..

17 மார்ச் 2011

தேர்தல் 2011 - இன்று ஆலோசனை நாள்!

ஆலோசனை, ஆலோசனை, ஆலோசனை!!

சன் செய்தி தொலைக்காட்சியில் தினமும் காலை 11.00 மணிக்கு ஆலோசனை நேரம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவது வழக்கம். அதாவது மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி இது.

இன்று இந்த ஆலோசனை நேரம் ஒளிபரப்படுகின்ற நேரத்தில் திரையின் கீழ்ப்பகுதியில் அதிமுக தோழமை கட்சிகளான இடதுசாரிகள், விஜயகாந்தின் தேதிமுக ஆகிய கட்சிகள் தனித்தனியாக ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக நாடா செய்திகள் ஓடிக்கொண்டே இருப்பதால் மருத்துவ ஆலோசனை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ஏன் இந்த அவசர ஆலோசனை?

எல்லாம் அம்மா நேற்று அதிரடியாக வெளியிட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல்தான் காரணம்.

ஏழு மாவட்டங்களில் ஒரு தொகுதி கூட கூட்டணி கட்சிகளுக்கு அளிக்கப்படவில்லை. தோழமை கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள பல மாவட்டங்களில் தோழமை கட்சிகளுக்கு போனால் போகிறது என்று தலா ஒரு தொகுதி.

இதில் ஏறத்தாழ அம்மாவின் அனைத்து தோழமை கட்சிகளுமே பாதிக்கப்பட்டுள்ளதால் அனைவரும் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனவாம்!

அதாவது கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல்தான் இருக்கிறது இந்த ஆலோசனை!

மதிமுகவின் நிலையோ அதைவிடவும் பரிதாபம். நேற்று காலை கூட அம்மா அவர்கள் பெருந்தன்மையுடன் 9 தொகுதிகளை தர முன்வந்துள்ளார், மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்டு கையெழுத்திடுங்கள் என்று தூது அனுப்பிவிட்டு அவருக்கு ஆலோசிக்கக் கூட சமயம் அளிக்காமல் அவருக்கு அளிப்பதாக கூறியிருந்த தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது வைகோவின் முகத்தில் அடிப்பதற்கு சமம். இனியும் பொறுமையுடன் சனிக்கிழமை வரை காத்திருங்கள் என்கிறார் அவர்!

முதல் முறையாய் அமைத்த கூட்டணியில் இத்தகைய குழப்பம் ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தம் அடைந்துள்ளாராம் விஜயகாந்த்! ஆகவே தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர்களுடன் அவசர ஆலோசனையில் இன்று காலை ஈடுபட்டுள்ளாராம். அந்த கூட்டத்தில் பண்ருட்டியாரை அனுமதிக்காமல் இருந்தால் சுயகவுரவத்தை தக்கவைத்துக்கொள்ளும் அளவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கலாம். இல்லையென்றால் பாரத பிரதமரைப் போல கூட்டணி தர்மத்திற்காக அவமானத்தை சகித்துக்கொண்டு அம்மா தூக்கியெறியும் தொகுதிகளில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்.

இடது சாரிகளும் இன்று ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் பெரிதாக ஒன்றும் நடைபெறப்போவதில்லை என்பது உறுதி. அவர்களுக்கு என்றைக்கு மானம், ரோஷம் இருந்திருக்கிறது? கூட்ட முடிவில் ஏதாவது சமாதானம் கூறிக்கொண்டு கூட்டணியில் தொடர்வார்கள்.

இதற்கிடையில் 'மாபெரும் நடிகர்-தலைவர்' கார்த்திக் வைகோவுக்கு அதிமுகவை உதறிவிட்டு வாருங்கள் நாம் இருவரும் இணைந்து போட்டியிடலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். ஒருவேளை வைகோ பாஜகவுடன் இணைந்து போட்டியிடலாம் என்ற செய்தியும் வருகிறது. நடிகர் சரத்குமார் திருச்செந்தூர், தூத்துக்குடி தங்களுக்கு கிடைக்கும் என்று கருதியிருந்தார் போலும். அவரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார்.

இப்படி தன்னுடைய அனைத்து தோழமை கட்சிகளையும் விரோதித்துக்கொள்ள அம்மா எப்படி துணிந்தார்? வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைப்பதுபோன்ற வேலையில் ஏன் இறங்கியுள்ளார்?

அவருடைய ஆஸ்தான சோதிடர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக நீங்கள்தான் அமோக வெற்றிபெற்று முதல்வராக வருவீர்கள் என்று கூறியுள்ளனராம். அத்துடன் தென் இந்திய மற்றும் வட இந்திய பத்திரிகைகள் சிலவும் அதிமுகவின் அமோக வெற்றியை Predict செய்திருக்கிறார்களாம். ஆகவேதான் எதற்கு தேவையற்ற luggage என்று நினைத்து தோழமை கட்சிகளை கழற்றிவிட தீர்மானித்துவிட்டார் போலிருக்கிறது.

இனியாவது பாதிக்கப்பட்ட கட்சிகள் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கூட்டணியிலிருந்து விலகினால் தேர்தலில் தோற்றாலும் தன்மானத்துடன் அரசியலில் நிலைத்திருக்க முடியும். இல்லையென்றால் ஓரிரு இடங்களில் வெற்றிபெற்றாலும் போதும் என்று நினைத்து தன்மானத்தை விலைக்கு விற்க முன்வந்தால் எதிர் வரும் தேர்தல்களில் இருக்கும் இடம் தெரியாமல் போக வேண்டியதுதான்.

தொடரும்...

16 மார்ச் 2011

தேர்தல் 2011 - அம்மாவின் சாணக்கியம்!

தான் வெற்றிபெறாவிட்டாலும் பரவாயில்லை எதிராளி தோற்கவேண்டும் என்று நினைப்பவர்கள் சிலர். அதுபோன்றே குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பவர்களும் உள்ளனர். இவர்களுள் ஒருவர் நம்முடைய 'அம்மா' தலைவி! சமீபத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட இடைக்கால பிணக்கில் அவருடைய சாணக்கியத்தனமான நிழல் விளையாட்டு இதை மீண்டும் நிரூபித்துள்ளது. காங்கிரசை பாமகவையும் தன்னுடைய கூட்டணிக்கு இழுப்பதுபோல் ஒரு பாவனையை உண்டாக்கியதுதான் கலைஞரை இரு கட்சிகளுமே விரும்பிய தொகுதி எண்ணிக்கையை கொடுக்க வைத்தது என்றால் மிகையல்ல.

காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்குள் பிரச்சினை என்பதை கேள்விப்பட்டவுடனே தன்னுடைய தோழமை கட்சிகளான இடது சாரி மற்றும் மதிமுக கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளை தன்னிச்சையாக தள்ளிப்போட்டவர் அம்மா! ஒருவேளை காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்குள் ஏற்பட்ட இடைக்கால பிணக்கு தீர்க்க முடியாமல் போயிருந்தால் தனித்து விடப்பட்ட காங்கிரஸ் தன்னை அணுகும் சூழலில் தோழமை கட்சிகளுக்கு வழங்க உத்தேசித்திருந்த தொகுதிகளை காங்கிரசுக்கு தாரைவார்த்துவிட்டு இரண்டு இடது சாரி கட்சிகளையும் மதிமுகவையும் கழற்றிவிடவும் தயங்கியிருக்க மாட்டார் அவர். இதை முழுமையாக உணர்ந்திருந்தும் வேறு வழியின்றி அம்மாவின் அழைப்புக்காக காத்திருக்க வேண்டிய சூழலில் இருந்தன இந்த கட்சிகள்.

துவக்க முதலே காங்கிரசையும் பாமகவையும் தன்னுடைய கூட்டணிக்கு இழுக்க வேண்டும் என்ற எண்ணம் அம்மாவுக்கு துளியும் இருந்ததில்லை. அவருடைய நோட்டம் எல்லாம் கடந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் தன்னுடைய கட்சி வேட்பாளர்களை வெற்றிபெற விடாமல் வாக்குகளை சிதறடித்த தேமுதிகவை இம்முறை தன்னுடைய கூட்டணியில் இணைத்து அந்த கட்சியை, அல்லது அந்த கட்சி தலைவர் விஜயகாந்தை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிடுவதில்தான் இருந்தது. தன்னுடைய எண்ணத்தை விஜயகாந்தின் நம்பிக்கையை பெற்ற பண்ருட்டியாரை வளைத்துப்போடுவதன் மூலம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளார் அம்மா! அரசியலிலும் சரி அரசு செயல்பாடுகளிலும் சரி இனியும் அனா, ஆவன்னா கூட தெரியாத, அம்மாவின் சாணக்கியத்தனத்தில் அடிபட்டுப்போனதை கூட உணரமுடியாத, விஜயகாந்த் திமுக என்னும் பேயை ஏப்ரல் 13ம் தேதி தமிழகத்தை ஓட்டிக் காட்டுகிறேன் என்று மார்தட்டிக்கொள்வது அவருடைய அறியாமையைத்தான் காட்டுகிறது.

சாதாரணமாக, நான், எனது என்று தன்னைப் பற்றியே பெருமை பேசிக்கொள்வது அம்மாவின் தனி ஸ்பெஷாலிட்டி. இந்த குணாதிசயம் அப்படியே, சற்றும் குறையாமல், விஜயகாந்துக்கும் உள்ளது என்பதை அவருடைய இத்தகைய பேச்சுக்கள் காட்டுகின்றன. தமிழகத்தை ஐந்தாண்டு காலமாக ஆட்டிப்படைக்கும் தீய சக்தியான கருணாநிதியை ஒழித்துக்காட்டுவேன் என்றவர் அம்மா. தமிழகத்தை பிடித்திருக்கும் பேயை ஓட்டிக்காட்டுவேன் என்கிறார் நடிகர்! ஆக, இருவருமே தனியொரு ஆளாக தாங்கள் நினைத்ததை செய்துக் காட்டுவார்களாம். அதாவது தங்களுடைய தலைமையில் பணியாற்றும் கட்சி தலைவர்களோ, தொண்டர்களோ தேவையில்லை என்பதுபோல் இருக்கிறது இவர்கள் இருவருடைய தொனியும்.

இத்தகைய குணாதிசயம் கொண்ட இரு தலைவர்கள் எத்தனை காலம் இணைந்து, கருத்தொருமித்து செயல்பட முடியும் என்பது புரியாத புதிர். இவர்கள் இருவரையும் இணைத்தது இருவருக்கும் பொதுவான எதிரியான தீய சக்தி என்றாலும் மிகையாகாது. இருவருமே தனிப்பட்ட முறையில் கலைஞரால் பாதிக்கப்பட்டவர்கள். இருவருமே கலைஞரை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கட்டாயத்திலுள்ளவர்கள். மற்றபடி தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியும் இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கை தன்மீது சுமத்தி தன்னை அண்டை மாநிலங்களிலும் அவமானப்படுத்தியவர் கலைஞர் என்ற குரோதம் அம்மாவுக்கு. சென்னை கோயம்பேட்டிலிருந்த தன்னுடைய மிகப்பெரிய சொத்தான திருமண மண்டபத்தை வேண்டுமென்றே மேம்பாலம் கட்டுகிற சாக்கில் தன்னிடமிருந்து அபகரித்ததில் கலைஞருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்ற கடுப்பில் இருப்பவர் நடிகர்!

இருவருடைய கட்சிகளுமே சர்வாதிகாரத்திற்கு பெயர் போனவை. வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் கூட இது வெளிப்பட்டிருக்கிறது. திமுகவில் இருந்ததுபோன்று அதற்கென குழு ஒன்றும் இருந்ததாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அது வெறும் கண்துடைப்பாகவே செயல்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் (முதலில் மூன்று, பிறகு ஐந்து என்றார்கள்!) வேட்பாளர்களை தெரிவு செய்து அம்மாவின் பார்வைக்கு அனுப்ப அதிலிருந்து அவர் நேரடி நேர்காணல் மூலம் ஒருவரை தெரிவு செய்வாராம். அவருடைய நேர்காணலுக்காக நாள் கணக்கில் காத்திருந்துவிட்டு முடியாமல் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்றார் ஒரு பெண் வேட்பாளர்! அவருடைய வீட்டு முன் காத்திருந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவே ஒரு பெரிய போலீஸ் படையே வேண்டியிருந்தது.

நடிகர் கட்சியை எடுத்துக்கொண்டால் துவக்க முதலே 'வீட்டு அம்மா' வரைந்த கோட்டுக்குள்ளேயே வளைய வந்தவர் அவர். அவருடைய குடும்ப அங்கத்தினர்கள் வைத்ததுதான் சட்டம். எப்போதாவது நடைபெறும் கட்சி கூட்டங்களில் தன்னை எதிர்த்துபேசும் தலைவர்களை சினிமா பாணியில் கை நீட்டி அடிக்கவும் தயங்கியதில்லை நடிகர். அதிமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு சில நாட்கள் முன்பு அதிமுக தலைவியை என்று சந்திக்கப் போகிறீர்கள் என்ற நிரூபர்கள் கேட்டபோது 'நான் யாரையும் சந்திக்க போவதில்லை' என்று அலட்சியமாக பதிலளித்தவர். அதற்குப்பிறகு ஆந்திராவிலுள்ள தன்னுடைய குலதெய்வத்தை சந்தித்தப் பிறகு ஞானோதயம் ஏற்பட்டு - ஒருவேளை பண்ருட்டியாரின் அறிவுரையை தட்டமுடியாமல் இருக்கலாம் - வேண்டா வெறுப்பாக அம்மாவை அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார். அவர் அங்கு இருக்கையில் அமர்ந்திருந்த விதமே 'சந்தர்ப்ப சூழலால்தான் நான் இங்கு அமர்ந்திருக்கிறேன் என்னுடைய விருப்பப்படியல்ல' என்பதை தெளிவாக எடுத்துக்காட்டியது.

தன்னுடைய சாணக்கியத்தனத்தால் திமுக-காங்கிரஸ் ஒரு பொருந்தா கூட்டணி என்பதை தமிழகத்திற்கு எடுத்துக்காட்டிவிட்டதாக மார்தட்டிக்கொள்ளும் அம்மா அந்த முயற்சியில் தன்னுடைய கூட்டணியிலுள்ள மற்ற சிறிய தோழமை கட்சிகளின் வெறுப்பிற்கு ஆளானதை மறந்துவிட்டார் போலிருக்கிறது.

திமுக-காங்கிரஸ் கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி என்றால் அதை விடவும் பொருந்தா கூட்டணிதான் அம்மா-நடிகர் கூட்டணி. முதல் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் தோற்றாலும் நீடிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் பிந்தைய கூட்டணி தேர்தலில் தோற்றால் அல்ல வெற்றி பெற்றாலும் அடுத்த சில மாதங்களிலேயே உடைந்துவிடும் என்பது நிச்சயம்.

இவர்களை நம்பி இந்த கூட்டணிக்கு வாக்களிக்கப் போகும் வாக்காளர்கள் நிலையை நினைத்தால்தான்.....


தொடரும்

03 மார்ச் 2011

தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி

தேர்தல் 2011 - அஇஅதிமுக தேதிமுக கூட்டணி

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயன்று தோல்வியுற்ற நடிகர் விஜயகாந்த் இந்த தேர்தலில் அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்று இப்போது முடிவு செய்திருக்கிறார். அவருடைய தற்போதைய ஒரே குறிக்கோள் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதுதான். ஊழல் இல்லாத ஆட்சியை என்னால் மட்டுமே தரமுடியும் என்று நேற்றுவரை கோஷமிட்டுக்கொண்டிருந்தவர் வருமானத்திற்கு மீறி சொத்து குவித்த வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கியிருக்கும் தலைவியுடன் கூட்டு சேர்வது இன்றைய அரசியல் விநோதங்களில் ஒன்று.

தமிழகத்தில் நடைபெற்ற கடந்த சட்டமன்ற தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களில் தேதிமுக பெற்ற வாக்குகளை சம்பந்தப்பட்ட தொகுதியில் இரண்டாவதாக வந்திருந்த அஇஅதிமுக கூட்டணியின் வேட்பாளருடைய வாக்குகளுடன் சேர்த்து கணக்கிட்டால் வெற்றிபெற்றவர் நிச்சயம் தோற்றிருப்பார் என்கிறது இந்து தினத்தாளில் இன்று வெளியாகியுள்ள ஒரு ஆய்வறிக்கை.

உண்மைதான். அதுமட்டுமல்லாமல் பல தொகுதிகளில் பாமகவை, ஏன் சில தொகுதிகளில் அஇஅதிமுகவையும் கூட மூன்றாம் இடத்துக்கு தேதிமுக தள்ளியதும் உண்மை.

ஆனால் அந்த இரண்டு தேர்தல்களிலும் தேதிமுகவுக்கு கிடைத்த வாக்குகளில் பெரும்பாலானவை இரண்டு திராவிட கட்சிகள் மீதும் வெறுப்பு கொண்டவர்கள் மற்றும் நடுநிலையாளர்கள், குறிப்பாக படித்த இளைஞர்களின் வாக்கு என்பதை மறுக்கவியலாது. என்னைப் போன்ற உண்மையான காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய கட்சியினர் மீதே வெறுப்புகொண்டு அதை வெளிக்காட்ட அளித்த வாக்குகளும் இதில் அடக்கம். ஆகவேதான் இரண்டு தேர்தல்களிலும் எந்த ஒரு தொகுதியையும் (ஒரேயொரு சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றாலும் நடிகர் சட்டமன்ற கூட்டங்களுக்கே எத்தனை நாள் சென்றிருந்தார், என்ன பேசினார் என்பது அவருக்கு வாக்களித்த தொகுதி வாக்காளர்களை கேட்டால் தெரியும்!) கைப்பற்றவில்லை என்றாலும் தன்னுடைய கட்சி தனித்து நிற்பதையே வாக்காளர்கள் விரும்புகின்றனர் என்பது தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன என அறிக்கைவிட்டார் நடிகர்! அவருடைய அறிக்கையில் ஓரளவு உண்மையும் இருந்ததாக அப்போது நான் உணர்ந்தேன்.

ஆனால் ஊழலை ஊழலுக்கு பெயர்பெற்றவரால்தான் ஒழிக்க முடியும் என நினைத்தாரோ என்னவோ தங்களுடைய இரு கட்சிகளுக்கும் பொதுவான எதிரியான திமுகவை ஒழிக்க அஇஅதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தவறில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அவருடைய இந்த முடிவுக்கு இது மட்டும்தான் காரணமா அல்லது தமிழக அரசின் சில முடிவுகளால் தனிப்பட்ட முறையில் ஏற்பட்ட இழப்புகளுக்கு வஞ்சம் தீர்க்க இது ஒன்றுதான் வழி என்று நினைத்தாரா என்பதை காலம்தான் பதிலளிக்கும்.

தேர்தல் காலத்தில் கூட்டணி அமைத்து மக்களை சந்திப்பதில் தவறேதும் இல்லை. கொள்கை அளவில் இருதுருவங்களாக செயல்படும் பல கட்சிகள் தேர்தல் காலங்களில் தொகுதி உடன்பாடு வைத்துக்கொள்வதும் தேர்தலுக்குப் பிறகு தங்கள் வழியில் செல்வதும் அல்லது விடுதலை சிறுத்தைகள், பாமகவினரைப் போன்று தேர்தல் முடிந்த உடனேயே கூட்டணியிலிருந்து விலகி எதிர் அணியினருடன் சேர்ந்துக்கொள்வதும் சகஜம்தான். தேர்தல் தியதி அறிவிக்கப்படும்வரையிலும் வசைமாரி பொழிந்துக்கொள்வதும் தியதி அறிவிக்கப்பட்டவுடன் எந்த கூட்டணி அதிக தொகுதிகள் தருகின்றனரோ அந்த கூட்டணியில் இணைந்துக்கொள்வதும் தமிழகத்தில் மிக, மிக சகஜமாகிவிட்ட கூத்து.

ஆனால் இரண்டு திராவிடக் கட்சிகளுமே ஊழலின் பிறப்பிடங்கள் ஆகவே தமிழகத்தை அந்த கட்சிகளின் பிடியிலிருந்து காப்பாற்றவே நான் அவதாரம் எடுத்திருக்கிறேன் என்றெல்லாம் கூறிவந்த ஒருவர் அத்தகைய கட்சிகள் ஒன்றுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் அளவுக்கு தன்னுடைய கொள்கையிலிருந்து இறங்கி வந்திருப்பது வியப்பை அளிக்கிறது.

கொள்கை அளவில் மாறுபடும் இரு கட்சிகள் தேர்தலுக்காக இணைந்து செயல்படுவதே சற்று சிரமம்தான். தலைவர்கள் இணைந்தாலும் தொண்டர்கள் அத்தனை எளிதாக பகைமையை மறந்து இணைந்து தேர்தல் பணியாற்றுவது அதை விட சிரமம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரே மாதிரியான (அதாவது தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும், தன்னுடைய சொல்லுக்கு மறுசொல் இல்லை, தன்னை சுற்றியுள்ள அனைவருமே ஆமாம் சாமிகளாக இருக்க வேண்டும் என்ற) குணாதிசயங்கள் கொண்ட இரு தலைவர்கள் இணைந்து செயல்பட முடியுமா என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வது சுமுகமாக நடந்து முடிந்தாலும் தேர்தல் தியதிவரையிலும் கூட இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லாமல் இருக்குமா என்பது சந்தேகமே. பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுவது யாருடைய வீட்டில் அல்லது அலுவலகத்தில் என்பதில் கூட கருத்து ஒவ்வாமை இருக்க வாய்ப்புள்ளது. அதன் பிறகு பிரச்சாரம்... இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய முடியுமா? எதிரில் நிற்பவரை பொசுக்கிவிடக்கூடிய அளவுக்கு நெருப்பு நீரோடையாக பொங்கி பீறிவரும் தலைவியின் பேச்சுக்கு தட்டித்தடுமாறும் தலைவரின் பேச்சு ஈடுகொடுக்க முடியுமா? அல்லது எடுபடத்தான் செய்யுமா?

அதுவும் போகட்டும். தேர்தலில் வெற்றிபெற்றாகிவிட்டது என்றே வைத்துக்கொள்வோம். அஇஅதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றிபெற்று தேதிமுக ஓரிரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றால் (இதை உறுதி செய்ய தலைவி தன்னுடைய தொண்டர்களுக்கு நிச்சயம் கட்டளையிட்டிருப்பார்) தலைவி நடிகரை சீந்துவாரா என்ன? இதில் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் நடிகர் மருத்துவர் ஐயாவிடம் கேட்டு தெரிந்துக்கொள்வது நல்லது.

நடிகருக்கு ஒரு கோரிக்கை: எந்த ஒரு சூழலிலும் அஇஅதிமுக நீங்கள் அறிவித்த ஊழலற்ற ஆட்சியை தரப்போவதில்லை. தலைவி விரும்பினாலும் அவருடைய தோழியும் சுற்றியுள்ள சில்லறை தலைவர்களும் ஊழலை விடப்போவதில்லை. ஆகவே இப்போதே ஆட்சியைப் பிடிப்பதைப் பற்றி கவலைப்படாமல் கட்சியை வளர்ப்பதில் முனையுங்கள். இம்முறையும் தனித்து நின்று உங்களுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.

அதையும் மீறி திமுகவை வீழ்த்துவதுதான் இன்றைய தேவை என்ற முடிவுடன் விருப்பமில்லாத ஒரு கூட்டணியில் நுழைவது என்று முடிவெடுக்கும் பட்சத்தில் எதிர்கொள்ளவிருக்கும் அவமானங்களை தாங்கிக்கொள்ளக் கூடிய மனவுறுதியை அளிக்க உங்கள் குலதெய்வத்தை வேண்டிக்கொள்ளுங்கள்.

இந்த கூட்டனியில் தலைவி வீசியெறியும் எலும்புத்துண்டுகளுக்காக ஏங்கி நிற்கும் மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலை... பரிதாபம்! அவர்களுக்கும் திமுக என்கிற ஒரு பொது எதிரி இருப்பதால்தானே அனைத்து அவமானங்களையும் பொறுத்துக்கொள்ள முடிகிறது?

ஆகவே இந்த கூட்டணியை திமுக எதிர் அணி என்று குறிப்பிட்டாலும் தவறில்லை என்று கருதுகிறேன்.

தொடரும்...

02 மார்ச் 2011

தேர்தல் 2011 - திமுக காங்கிரஸ் கூட்டணி

தேர்தல்களம் 2011 களைகட்ட துவங்கிவிட்டது.

இதுவரை ஒரு கட்சி ஆட்சி என்றிருந்த தமிழகத்திலும் அண்டை மாநிலங்கள் சிலவற்றின் பாணியில் இனி கூட்டணி ஆட்சிதான் என்கிற சூழல்.

திமுக, காங்கிரஸ், பாமக கட்சிக, விடுதலை சிறுத்தை மற்றும் இதர கட்சிகள் ஒருபுறம் அஇஅதிமுக, தேதிமுக, இடதுசாரிகள் என மற்றொருபுறம்.

ஆயினும் எந்த ஒரு கூட்டணியும் இதுவரை தங்களுக்கிடையில் போட்டியிடக் கூடிய இடங்களை முழுவதுமாக தீர்மானித்தபாடில்லை.

இதில் காங்கிரஸ்-திமுக கட்சிகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைதான் அனைவருடைய கவனத்தையும் கவர்ந்துள்ளது. முதல் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் ஆட்சியில் பங்கு என்று தீர்க்கமாக அறிவித்த காங்கிரஸ் இன்றைய தினத்தாள் செய்திகளின்படி சற்று 'அடக்கி வாசிக்க' முடிவெடுத்துள்ளது!

இது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்.

காங்கிரசுக்கு தமிழகத்தில் தங்களுடைய செல்வாக்கு என்ன என்பது இப்போதும் தெளிவாக தெரியவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். நான் தலைமுறை தலைமுறையாக காங்கிரஸ்காரன் என்றாலும் இன்றைய தமிழக காங்கிரசின் பரிதாப நிலையை மறுக்க முடிவதில்லை. கட்சிக்குள்ளே சில்லறை தலைவர்களுக்கிடையில் அவ்வப்போது ஏற்படுகிற போட்டியும் பொறாமையும்தான் கட்சியின் இத்தகைய அவலநிலைக்கு காரணம் என்பதை தில்லியில் பொறுப்பில் இருப்பவர்களும் புரிந்துக்கொள்ளாமல் இருப்பது அதை விட வேதனை.

2G ஊழலில் சிக்கி திமுக சற்று சுருதி இறங்கிப் போயிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்காக காங்கிரசின் அடாவடி கோரிக்கைகளுக்கு பணிந்துபோக வேண்டிய நிலையில் திமுக இல்லை என்பதுதான் நிதர்சனம். இளங்கோவன் போன்ற தரங்கெட்ட தலைவர்களுடைய வெத்துவேட்டு பாவலாக்களை நம்பாமல் காங்கிரஸ் தமிழகத்தில் தன்னுடைய உண்மை நிலையை உணர்வது மிகவும் அவசியம். இன்றைய தலைவர்களில் பெரும்பாலான தொண்டர்களின் ஆதரவு பெற்றவர் என்ற பெருமைக்குரிய தலைவர் ஒருவர் கூட தமிழக காங்கிரசில் இப்போது இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆகவே காங்கிரசுக்கு என்று ஓட்டு வங்கி ஏதும் தமிழகத்தில் இல்லை. அவர்கள் இணைந்து போட்டியிடும் கட்சியின் செல்வாக்கைப் பொருத்துத்தான் அதன் வெற்றியும் தோல்வியும். ஆகவே அந்த கட்சியின் செல்வாக்கை குறைக்க முயல்வது தனக்குத்தானே குழி தோண்டிக்கொள்வதற்கு சமம் என்றால் மிகையாகாது.

எதிர்காலத்தில் எப்படியோ, இன்றைய சூழலில் திமுகவை அனுசரித்து தங்களுக்கு வழங்கப்படவுள்ள இடங்களை மறுப்பின்றி ஏற்றுக்கொண்டு திமுக தொண்டர்களுடன் இணைந்து முழுமூச்சுடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு முந்தைய சட்டமன்ற தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் வெற்றிபெற முயல்வதுதான் இன்றைய தேவை என்பதை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உணர்வது நல்லது. தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் - அதேசமயம் திமுகவுக்கு பாதகமாக, அதாவது முந்தைய தேர்தலைக் காட்டிலும் அவர்களுடைய பலம் குறைந்துவிடும் பட்சத்தில் - ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கை நிறைவேற வாய்ப்புள்ளது.

ஆகவே இனியும் திமுகவுடனான பேச்சுவார்த்தையை மூன்றாம், நான்காம் சுற்று என நீட்டிக்காமல் சுமுகமாக முடித்துக் கொள்வது அவர்களுக்கும் நல்லது கூட்டணிக்கும் நல்லது.

தொடரும்..