31 அக்டோபர் 2005

தீபத்திருநாள் - வாழ்த்துக்கள்!

Image hosted by Photobucket.com

தீபத்திருநாளாம் தீபாவளி தமிழ்மணம் வலைப்பதிவாளர்கள் ஒவ்வொருத்தரின் வாழ்விலும் ஒளியும், மகிழ்ச்சியும் நிறைவாய் பொழியவேண்டும் என வாழ்த்தும்.

டி.பி.ஆர். ஜோசஃப்

22 அக்டோபர் 2005

பெண் குழந்தைகள் புறக்கணிப்பு

நான் என்னுடைய வங்கியின் மதுரைக் கிளையில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் மதுரையைச் சுற்றிலுமிருந்த கிராமங்களில் விவசாயக் கடன் பெற்றவர்களின் விவசாய மற்றும் ஆடு, கோழி வளர்ப்பு செயல்பாட்டினை மேற்பார்வையிடவும், வாராக் கடனை வசூலிக்கவும் மாதத்திற்கொருமுறை அக்கிராமங்களுக்கு சென்று வருவது வழக்கம்.

அதில் ஒன்று (கிராமம் என்றும் சொல்ல முடியாமல் பெரு நகரம் என்றும் சொல்ல முடியாமல் ஒரு இரண்டும் கெட்டான் நகரம். அதாவது சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்) உசிலம்பட்டி.

அப்போதெல்லாம் ஊர்வாசிகள் மத்தியில் அடிக்கடி பேசப்படும் ஒரு விஷயம் பெண் சிசுக்கொலை. பெண் குழந்தைகள் பிறந்தவுடனே நெற்கதிர்களை மூக்குத்துவாரங்களில் நிறைத்து கொடூர முறையில் கொலை செய்யும் பழக்கம் சர்வசாதாரணமாக நடந்துக்கொண்டிருந்த காலம் அது.

“பருவ மழை பொய்த்து, கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பாமர மற்றும் ஏழை விவசாயிகள் தங்களுடைய உயிரையே தக்க வைத்துக்கொள்ள ஒரு வேளை அரிசிக்கஞ்சியை நம்பியிருந்த நிலையில் பெண் குழந்தைகளை வீட்டின் தலைச்சுமையாய் நினைத்ததில் தவறென்ன?”

இத்தகைய கொடூரத்தை தடுத்த நிறுத்த உங்களால் இயலவில்லையா என்று ஊர் பெரியவர்களிடம் வாக்குவாதத்தில் இறங்க நான் முயற்சித்த வேளைகளிலெல்லாம் என் முன்னே எடுத்து வைக்கப்பட்ட வாதத்தைத்தான் மேலே மேற்கோள் காட்டியிருக்கிறேன்.

இத்தகைய நீசச்செயலை அடக்க காவல்துறையின் இரும்புக்கரத் துணையுடன் போராடித் தோற்ற பிறகுதான் அரசாங்கம் ‘தொட்டில் திட்டத்தை’க் கொண்டு வந்தது.

இப்போது, பெண்குழந்தைகளைத் தலைச்சுமையாய் கருதி வந்திருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் துவங்கியிருக்கிறதென்பதை மறுக்கவியலாது.

வேகமாய் மாறி வரும் இன்றைய சமுதாயத்தில் பெண்களின் பங்கு மிக முக்கியமானதாய் கருதப்படுகிறது.

ஆணாதிக்கத்தின் சுவடு தேய்ந்து, மறைந்துபோகும் காலம் வந்துவிட்டது என்று கூற இயலாவிடினும் வந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உறுதி!

ஆனால் வறுமைக் கோட்டிற்குக் கீழே வசிக்கும் மக்கள் மத்தியில் இத்தகைய இண பேதம் இன்றும் ஆட்டிப்படைத்துக்கொண்டுதானிருக்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டாய் நான் குடியிருக்கும் வீட்டின் அருகே நடந்துகொண்டிருக்கும் விஷயத்தை இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.

சென்னையில் மாடி வீடுகளுக்கருகிலேயே குடிசைவாசிகளும் வசித்து வரும் காட்சி சர்வ சாதாரணம்.

அப்படித்தான் நான் வசித்துவரும் பலமாடி குடியிருப்பிலிருந்து சற்று தள்ளி சுமார் நூறு குடிசைகள் அடங்கிய குடியிருப்பு உள்ளது. சுமார் மூன்று குறுக்கு தெருக்களை அடைத்துக்கொண்டு பரவியிருக்கும் அந்தப் பகுதி ஒரு குக்கிராமம் போன்றே காட்சியளிக்கும்.

அப்பகுதியைச் சுற்றிலும் அமைந்துள்ள பலமாடி குடியிருப்புகளில் வீட்டு வேலை செய்ய பெண்குழந்தைகளை அனுப்பிவிட்டு ஆண் குழந்தைகளைப் படிக்க அனுப்புவதைக் கண்கூடாகக் காணலாம்.

அந்த பகுதியில் தினந்தோறும் குடிநீர் வழங்கும் மாநகராட்சி குடிநீர் வாகனம் வந்து நின்றதும் பெண் குழந்தைகள் ஓடி வந்து தண்ணீரை போட்டி போட்டுக்கொண்டு பிளாஸ்டிக் குடங்களில் பிடிக்க இளைஞர்கள் ஹாயாக அருகிலிருக்கும் டீக்கடை பெஞ்சுகளில் அமர்ந்து கிண்டலடித்துக்கொண்டிருப்பதையும் தினசரி காணலாம்.

அரசாங்கம் என்னதான் விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டாலும் கடைநிலையிலுள்ள மக்களை அது சென்றடையும்வரை இத்தகைய இண பேதங்களும், பெண் குழந்தைகள் புறக்கணிக்கப் படுவதும் தொடர்ந்துக் கொண்டேதானிருக்கும்.

21 அக்டோபர் 2005

வலைப் பூக்களில் என்ன எழுதலாம், என்ன எழுதக்கூடாது!

வலைப்பூக்கள்!

என்ன அழகானப் பெயர்!

அழகான பூக்களைத் தொடுத்து, மாலையாக்கி வாசகர்களுக்கென கடை பரப்பி, முகர்ந்து பார்த்து இன்புறுங்கள் என்று தொடுத்து வழங்கிவரும் தமிழ்மணம் பதிவர்களின் சங்கமம்.

இதில் தொடுக்கப்பட்டுள்ள வலைப்பூக்கள் யாவுமே ஒரு எழுதப்படாத எல்லைகளுக்குட்பட்டே (Unwritten boundary) செயல்படவேண்டும் என்பது பொறுப்புள்ள பதிவர்கள் அறிந்திருக்க வேண்டிய நியதி.

எதை எழுதலாம், எழுதக்கூடாது என்பதை மன்றத்தை தோற்றுவித்தவர்களோ அல்லது தற்போது நிர்வகிப்பவர்களோ வரையறுத்துக் கூற உரிமையுள்ளதா இல்லையா என்பதுமட்டுமல்ல இப்போதைய பிரச்சினை.

இது என்னுடைய வீடு. இதில் குடியிருந்துக்கொள்ள பல அறைகளை பலருக்கும் ஒதுக்கியிருக்கிறேன். யார் வேண்டுமானாலும் இலவசமாக தங்கிக்கொள்ளலாம்.

ஆனால் ஒன்று! உங்களுடைய வாசம் (வசித்தல்) உங்களுடன் இவ்வில்லத்தில் உடன் வசிக்கும் யாருக்கும் இடைஞ்சல் தரும் விதத்தில் இருக்கலாகாது. அத்துடன் உங்களுக்கிருக்கும் குடியுரிமை இங்குள்ள மற்றெல்லாருக்கும் உள்ள உரிமைக்கு உட்பட்டதே.

அவ்வுரிமைக்கு பங்கம் விளைவிக்க நீங்கள் முட்படும் பட்சத்தில் உங்களுடைய குடியுரிமையை ரத்துச் செய்யும் அதிகாரம் எனக்குண்டு.

இதைத்தான் நாசூக்காக அதே சமயம் தெளிவாக

thamizmanam.com reserves the right to list any blog submitted based on its own norms of acceptance.

என்ற வாசகத்தின் மூலம் தமிழ்மணத்தில் பதிவு செய்ய விரும்பும் வலைப்பதிவாளர்களுக்கு துவக்கத்திலேயே அறிவுறுத்தப்படுகிறது.

****

நான் தமிழ்மணத்தில் இணைந்து ஒரு சில மாதங்களே கின்றன.

ஆயினும் இனைந்த நாள் முதல் என்னால் இயன்றவரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமிழ்மணத்தில் பதியப்பட்டுள்ள பல வலைப்பூக்களையும் வலம் வந்துள்ளேன். நாள்தோறும் பதியப்படும் பல பதிவுகளையும் வாசிக்கவும் செய்திருக்கிறேன்.

ஏதோ எனக்குத் தோன்றியவற்றையும் எழுதியிருக்கிறேன். பல ஆதரவு பின்னூட்டங்களும் சில அதிகப்பிரசங்கித்தனமான பின்னூட்டங்களும் எழுதப்பட்டுள்ளன. இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் கண்டுணரும் பக்குவம் எனக்குள்ளது.

இது ஒரு புதிய அனுபவம்தான்.

கடந்த மூன்று தினங்களாக அலுவலக நிர்பந்தம் காரணமாக கொச்சிக்கு செல்ல வேண்டியிருந்ததால் வலைப்பூக்களை வலம்வரவோ அல்லது பதிவுகளை வாசிக்கவோ எனக்கு நேரம் கிடைக்கவில்லை.

இன்று காலைத் திரும்பிவந்து தமிழ்மணம் வாசகர் பகுதியை அடைந்தபோதுதான் சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்தேன்.

இம்முடிவுக்கு பாதகமாகவும், சாதகமாகவும் பதிவாகியிருந்த பல பதிவுகளையும் பின்னூட்டங்களையும் பின்னர் இதுகுறித்து திரு. காசி எழுதிய பதிவையும் பார்த்தப்பிறகுதான் இப்பதிவை எழுத வேண்டும் என்று விரும்பினேன்.

காசி அவர்கள் தமிழ்மண திரட்டியிலிருந்து பதிவுகள் விலக்கப்பட்டுள்ளதன் காரணங்களில் நான்காவதாக குறிப்பிடப்பட்டுள்ள காரணம் ‘என் தனிப்பட்ட நம்பிக்கையில் திரட்டப்படத் தேவையில்லாதவை’ என்பதாகும்.

இதன் பின்னணி என்னவாயிருக்கும்?

*****

எழுதவொரு தளம் கிடைத்துவிட்டதென்ற நினைப்பில் தங்கள் மனம் போன போக்கில் எதைத்தான் எழுதுவதென்ற வரையறையில்லாமல் எழுதுவதையும் வாசித்திருக்கின்றேன். குசும்பு என்ற சொல்லின் பொருளறியாமல் எதைப்பற்றித்தான் குசும்படிப்பது என்றில்லாமலும் நாம் எழுதுவது யாருடைய மனதையாவது புண்படுத்த வாய்ப்பிருக்கிறதோ என்றெல்லாம் நினையாமலும் சிலர் எழுதியதையும் நானும் வாசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் இதைப்பற்றி மன்றத்தில் முறையிட்டாலென்ன என்றெல்லாம் தோன்றியுள்ளது.

அப்போதெல்லாம் போகட்டும் திருந்திவிடுவர் என்று நினைத்து விட்டு விடுவேன். ஆனால் நாளடைவில் நான் வாசிக்க நேர்ந்த பதிவுகள் காசியின் கண்ணோட்டத்தை ஒத்ததாகவே இருந்து வந்துள்ளது.

இத்தகையப் பதிவுகள் திரட்டப்பட தேவையுள்ளவைதானா என்பதே அது.

என்னுடைய தனிப்பட்ட நம்பிக்கையிலும் நீக்கப்பட்டுள்ள பல பதிவுகளும் (ஏன் நீக்கப்படாமல் உள்ள சில பதிவுகளும் கூட) திரட்டப்பட தேவையில்லாதவைத்தான்.

நீக்கப்பட்டவர்கள் எல்லாம் இம்முடிவை ஆதரிக்க வேண்டுமென்பதில்லை.

அவரவர்க்கு அவரவர் கருத்துக்களை எழுத எவ்வளவு உரிமையுண்டோ அதேபோல் அக்கருத்துக்களை நீக்கும் உரிமை திரட்டியின் உரிமையாளருக்கும் உண்டல்லவா?

உண்டு என்பதில் இரு வேறு கருத்தகளிருக்க வாய்ப்பில்லை.

ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது ஒரு இனத்தைப் பற்றியோ தரக்குறைவாகவோ, இழித்தோ, துவேஷத்துடனோ எழுத எனக்கு உரிமை உண்டு என்று நான் வாதிட்டால் அதை மற்றவர் வாசிக்காமலிருக்க தடுக்கும் உரிமை அதைப் பிரசுரிப்பவுருக்கு உண்டு என்பதையும் மறுக்கவியலாதே.

அதேபோன்ற உரிமை தமிழ்மணத்தைப் பொறுப்பேற்று நடத்தும் நிர்வாகிக்கு உண்டு என்றுதான் நினைக்கிறேன்.

அதை எதிர்ப்பதை தவிர்த்து நல்லவற்றை எழுதுங்கள் நாம் எல்லோரும் பயன்பெற உதவுங்கள்.

17 அக்டோபர் 2005

தனி மனித சுதந்திரமும் சமுதாயமும்

இந்திய நாட்டில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என பல சுதந்திரங்கள் இருக்கின்றன.

தனி மனிதன் ஒருவனின் பேச்சும், எழுத்தும், செயலும் சமுதாயத்தைப் பாதிக்குமாஎன்பது விடை காண முடியாத கேள்விக் குறி.

ஒரு சமுதாயத்தில் காலங்காலமாக நடைமுறைப் பழக்கமாக (Can we say Custom?) இருந்து வரும் ஒரு செயலை (அது எதுவாகவும் இருக்கலாம்) ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ யாராவது ஒரு தனிமனிதன் (ஆங்கிலத்தில் இரு பாலாருக்கும் பொதுவான Individual என்ற சொல்லை எளிதாகப் பயன்படுத்திவிடலாம்) பேசுவதாலோ, எழுதுவதாலோ சமுதாயம் பாதிக்கப் படும் என்று சொல்லிவிடமுடியுமா?

பலநூறு தனி மனிதர்களைக் கொண்டதுதான் சமுதாயம் என்பது உண்மைதான்.

ஆனால் சமுதாயத்திலுள்ள ஒருவனோ, ஒருத்தியோ அச்சமுதாயத்தையும், அதன் நடைமுறைப் பாவனைகளையும் விமர்சனம் செய்கையில் அது ஆதரவாய் இருக்கையில் ஏற்றுக்கொள்வதும் எதிர்க்கப்படுகையில் பொங்கி எழுவதும் அச்சமுதாயம் முழுவதுமாக வளரவில்லையென்பதையே காட்டுகிறது.

மேலை நாடுகளில் பெரும் பொக்கிஷமாய் பாதுகாக்கப் படும் தனிமனிதச் சுதந்திரம் சமீப காலமாக நம் நாட்டில் முக்கியமாய் நம் தமிழ்நாட்டில் துச்சமாய் கருதப்பட்டு நசுக்கப்படுவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்.

ஐந்தாண்டுகளுக்குமுன்வரை ஆளுங்கட்சியாயிருந்த ஒரு கட்சியின் குடும்பப் பத்திரிகை சமீப காலமாக சமுதாயக் காவலன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பத்திரிகைத் தர்மத்தையும், தனி மனித உரிமையையும் மீறி நடக்க ஆரம்பித்துள்ளது வேதனைக்குரிய விஷயம்.

அக்கூட்டணியின் அங்கத்தினர்களுள் ஒன்றான ஜாதிக் கட்சி சமீப காலம் வரை தன் எதிர்துருவமென கருதியிருந்த வேறொரு ஜாதிக் கட்சியுடன் தனிக் கூட்டணி அமைத்துக் கொண்டு தமிழ் சமுதாயத்தின் கலாச்சாரத்தைக் கட்டிக்காக்க புறப்பட்டிருக்கிறது புதுவிதமான ஆயுதங்களுடன்.

இவற்றிற்கெல்லாம் மகுடம் வைப்பதுபோல் ஒரு பெண்ணின் லீலா விநோதங்களில் சமீப காலம் வரைச் சிக்கித்தவித்த காவல்துறை இப்போது சமுதாயத்தைச் சீர்திருத்தப் புறப்பட்டிருக்கிறது.

நல்ல வேளை! சென்னை உயர்நீதிமன்றம் குறுக்கிட்டு காவல்துறையின் உணர்ச்சிபூர்வ நடவடிக்கையை முளையிலேயே கிள்ளியெறிந்து உணவகத்தின் உரிம ரத்தை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.

ஆனால் இத்தனைக்குப் பிறகும் நடிகையின் விஷயத்திலும் சரி, உணவு விடுதியில் நடந்ததாய் கூறப்பட்ட விஷயத்திலும் சரி, அதைத் தொடர்ந்து பின்னர் காவல்துறை எடுத்த நடவடிக்கையையும் கூட கண்டும் காணாததுபோல் இருக்கும் தமிழக முதல்வரின் மெளனத்தை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை.

நேற்றைய பத்திரிகைச் செய்தியொன்றில் சம்மந்தப்பட்ட நடிகை சகநடிகைகளுடன் முதல்வரைச் சந்தித்து நியாயம் கேட்கப்போவதாக குறிப்பிடப்பட்டுள்ளதை பார்க்கும்போது இனியாவது முதல்வர் அவர்கள் தன் மெளனத்தைக் கலைப்பார் என்று தெரிகிறது.

15 அக்டோபர் 2005

ஆண்களின் ஆதிக்கத்தை முறியடிப்பது எப்படி?

இப்பிரச்சினையை மேலோட்டமாக (Superficial) இல்லாமல் நிதர்சனமான (யதார்த்தமான) கோணத்திலிருந்து அணுகிப் பார்த்தால் எப்படியிருக்கும் என்று யோசித்ததன் விளைவே இப்பதிவு.

உலகம் படைக்கப்பட்ட நாள் முதலே, அதாவது ஆதாம், ஏவாள் காலத்திலிருந்தே இப்பிரச்சினை தலையெடுத்துவிட்டது என்றால் மிகையாகாது.

ஆதாமின் விலா எலும்புகளிலிருந்து ஒன்றை எடுத்து மண்ணால் (இன்றும் ஆணுக்கு பெண்ணைக் காட்டிலும் ஒரு விலா எலும்பு குறைவு என்பது விஞ்ஞான உண்மை) மூடி இறைவன் தன் ஆவியை அதனுள் ஊதி பெண்ணைப் படைத்ததாக பைபிள் கூறுகிறது.

ஆனால் அதற்கு முன்பே இந்து சமயம் இந்திய மண்ணில் தோன்றிவிட்டது என்கிறது சரித்திரம்.

சிவன் பெரிதா? பார்வதி பெரிதா? என்ற வாக்குவாதங்கள் இந்து மதத்திலும் எழுந்துள்ளன என்பதையும் மறுக்கவியலாது.

ஏன் இந்த பிரச்சினை?

ஆணால் எல்லாம் முடியும் என்றால் பெண்ணால் அதுவும் முடியும் அதற்கு மேலும் முடியும் என்பதுதான் நாம் சமீப காலங்களாக உணர்ந்துக் கொண்டிருக்கும் உண்மை.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற வாக்கிலிருந்தே பெண்ணால் எல்லாம் முடியும் என்பது தெளிவாகிறதே.

உடல் வலிமை (Physical Strength) என்ற அடிப்படையைத் தவிர்த்து வேறெந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஆணால் முடிகின்ற செயல்கள் யாவுமே பெண்ணாலும் திறம்பட (ஏன் ஒருப்படி மேலேயும் போய்) செய்ய முடியும் - இது இன்று யதார்த்த வாழ்க்கையில் நாம் காண்கின்ற உண்மை.

பெண்ணினம் ஒரு மெல்லினம் என்பதெல்லாம் இன்றைய உலகில் அடிபட்டுப்போன உண்மை. இன்று கணரக வாகனங்களை செலுத்தும் பெண்களையும், கணரகத் தொழிற்சாலைகளில் ஆண் செய்கின்ற அதே வேலையைச் திறம்படச் செய்யும் பெண்களையும் காண்கின்றோம்.

அதேபோல் பெண்ணியம் என்ற ஒரு இயக்கத்தின் தேவையும் நாளடைவில் அவசியமில்லாமல் போய்விடும்.

படைப்பிலிருந்தே ஆணும், பெண்ணும் (உடல் வலிமையைத் தவிர) எல்லா உடற்கூற்றிலும், முக்கியமாய் மனித உடலின் மூலதாரமான மூளையிலும், ஒத்திருந்ததிலிருந்தே தெரிகிறது படைத்தவனின் நோக்கம் என்னவாயிருந்ததென்று!

படைத்தவனின் எண்ணத்தில் அவனுடைய படைப்புகள் யாவுமே ஒன்றுதான் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

உலகிலுள்ள ஜீவராசிகளுள் மனிதப்பிறவியைத் தவிர, எல்லாம் இவ்வுன்னைமயைச் சரியாகப் புரிந்துவைத்திருப்பதால் அவற்றுள் ஆண் பெரிசு அல்லது பெண் சிரிசு என்கின்றபேதம் எழுந்ததேயில்லை.

இயற்கை ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும் விதித்துள்ள உரிமைகளையும் கடமைகளையும் கூடுதலாக சிந்திக்காமல் எல்லா ஜீவராசிகளும், முக்கியமாய் மனித இணம், உணர்ந்து நடந்துக்கொள்கிற பட்சத்தில் பிரச்சினை எங்கிருந்து வந்தது?

இங்கே கண்ணியம், கடமை, கட்டுப்பாடு என்பதும் கற்பு என்பதும் ஓரிணத்துக்கு மட்டுமே மற்றவருக்கில்லை என்பதிலிருந்துதான் பிரச்சினையே எழுகிறது.

இப்படியே போனால் இப்பிரச்சினை எங்கு சென்று முடியும் என்று நினைக்கிறீர்கள்? அநாச்சாரத்தில்தான். சந்தேகமேயில்லை.

ஆணும் பெண்ணும் சம தகுதியுள்ள நிலையில் பெண்களுக்கு மட்டும் நோபல் பரிசுக்கு தகுதியானவர்களைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து இங்கே அர்ஜுனா பட்டம் கொடுப்பதுவரை இந்த பாகுபாடு இப்போதும் ஆட்டிப் படைக்கிறதே!

எங்களுக்கு தனியிடம் வேண்டும், தனித்தொகுதி வேண்டும், எல்லாவற்றிலும் ஒதுக்கீடு, முன்னுரிமை வேண்டும் என்று கேட்டுக் கேட்டே பெண்கள் தாங்களாகவே சம தகுதியுள்ள ஆணுடன் சமுதாயத்தின் உதவியில்லாமல் போட்டியிட இயலவில்லை என்பதை ஏற்றுக்கொள்வதுதான் வேதனை!

எனக்கொன்றும் சமுதாயத்தின் கரிசனம் தேவையில்லை. என்னை எனக்கிருக்கின்ற தகுதிகளை வைத்து, சமுதாயத்தில் எனக்குரிய அந்தஸ்த்தை எனக்குக் கொடுத்தாலே போதும் என்று அவர்கள் வாதிடுவார்களானால் அதுதான் இந்த பாகுபாட்டை சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக, நிரந்தரமாக ஒழிக்க இயலும்.

செய்வார்களா?

செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய தேவை!

13 அக்டோபர் 2005

என் மும்பை புறநகர் ரயில்பயணம் - அனுபவம் 6

என்னுடைய மும்பை புறநகர் ரயில் பயணத்தை இதுவரை ஐந்து பதிவுகள் மூலமாக உங்களுடன் பகிர்ந்துக்கொண்டதில் மகிழ்ச்சியடைந்தேன்.

என்னுடைய வாழ்நாளில் அது ஒரு மறக்கவியலாத அனுபவமாயிருந்தது. ஆரம்ப காலத்தில் பலவித கஷ்டங்கள் இருந்தபோதிலும் நாளாக, நாளாக அதுவே பிடித்துபோய் மும்பையை விட்டு விட்டு வந்து சுமார் பத்துவருடங்களாகியும் அந்த நாட்களை நினைத்துக்கொள்ளும்போதெல்லாம் இப்போதும் என் உள்ளத்தில் ஒரு மகிழ்ச்சியே தோன்றுகிறது.

இன்றைய கடைசிப் பதிவில் (எத்தனை நல்லவையாயிருப்பினும் எதற்கும் ஒரு முடிவு வேண்டுமே.. இல்லையென்றால் என்னடா இவன் ராவுகிறானே, அல்லது பிளேடு போடுகிறானே என நினைக்கத்தோன்றும்?) ஆங்கிலத்தில் tidbits என்பார்களே, அதைப்போல் சில துணுக்குகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

துணுக்கு 1.

இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யாதீர்கள் என்பது முதலும் முக்கியமானதுமான Do’s என என் சக ஊழியர்கள் கூறியதாய் என்னுடைய அனுபவங்கள் (1) ல் எழுதியிருந்தேன்.

முதல் வகுப்பில் பயணக் கட்டணம் இரண்டாம் வகுப்புக் கட்டணத்தைப் போன்று சுமார் நான்கு மடங்கு கூடுதலாகும். இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது முதல் வகுப்பில் பயணம் செய்வோரின் எண்ணிக்கையும் ஏறத்தாழ நான்கு மடங்கு குறைவாயிருக்கும். ஆயினும் சில நாட்களில் (முக்கியமாக திங்கட்கிழமைகளில்) முதல் வகுப்பில் அளவுக்கதிகமான கூட்டம் இருக்கும். அதற்கு ஒரு காரணம் இரண்டாம் வகுப்பு பயணிகளும் முதல் வகுப்பில் ஏறிக்கொள்வதுதான்.
வழக்கமாய் முதல் வகுப்பில் பயணம் செய்வோர் அத்துமீறி முதல் வகுப்புப் பெட்டிகளில் ஏற முயலும் இரண்டாம் வகுப்பு பயணிகளை பார்த்த மாத்திரத்திலேயே இனம் கண்டுக்கொள்வர். ஆயினும் அவர்களை கீழே இறங்கச்சொல்ல மனமில்லாமல் (நமக்கேன் வம்பு) அவர்களுடைய தொல்லையையும் சகித்துக் கொண்டு மவுனமாயிருப்பர்.

எனக்கு ஆத்திர, ஆத்திரமாய் வரும். வாயிலில் நின்றுக்கொண்டிருக்கும் பட்சத்தில் அவர்களை ஏறவே விடமாட்டேன். அதன் காரணமாக சில சமயங்களில் தகராறு ஏற்பட்டதும் உண்டு. அப்போதும் எனக்காக பரிந்து பேசிக்கொண்டு யாரும் வரமாட்டார்கள். அப்படியே வந்தாலும் அவர்கள் தென்னிந்தியராகவே இருப்பார்கள்.


துணுக்கு 2

முதல் வகுப்பு பெட்டிகளின் அழையா விருந்தாளிகளில் முக்கியமானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்த அலிகள்.

முதல் வகுப்பு பயணச்சீட்டு இல்லாமலே சர்வசாதாரணமாய் முதல் வகுப்பு பெண்கள் பெட்டியில் இவர்கள் கூட்டம் கூட்டமாய் பயணம் செய்வது தவிர்க்கமுடியாத காட்சி.
இவர்களை டிக்கட் பரிசோதகர்கள்கூட கண்டுக்கொள்வதில்லை.

ஆனால் ஒன்று! இவர்கள் யாரும் இருக்கையில் அமர மாட்டார்கள். வாயிலருகே தரையில் அமர்ந்துக்கொண்டு அவர்களுக்குள்ளே உரத்தக்குரலில் பேசி, சிரித்துக்கொண்டு முகச்சுளிப்புடன் தங்களை நோக்கும் சகபயணிகளைக் கண்டுகொள்ளாமல் அவர்கள் உலகத்திலேயே மிதந்துக்கொண்டிருப்பர்.

சகபயணிகளில் யாராவது அவர்களை கீழே இறங்கவோ, பேசாதிருக்கும்படி கூறினாலோ அவ்வளவுதான். ‘தோடி வந்துட்டா குலுக்கிக்கினு, போவியா..’ என்று ஆரம்பித்து ஓரிரண்டு வசவு சொல்லையும் (unparliamentary words) எடுத்து விடுவார்கள். அதில் ஓரிரண்டு தமிழ் பெண்கள் இருந்து அர்த்தம் புரிந்து முகம் சுளிப்பதைப் பார்க்கும் மும்பை பெண்கள், ‘க்யா போலா வோ? போல்னா..’ என்று நச்சரிப்பார்கள்.

அவர்களோ ‘குச் நஹி ரே. சோட்தோ’ என்று சமாளித்து விட்டு வேறு பக்கம் திரும்பிக்கொள்வார்கள்.துணுக்கு 3

சீசன் டிக்கட் வாங்க வேண்டுமென்றால் நம்முடைய பாஸ்போர்ட் அளவு நிழற்படம் ஒட்டிய அடையாள அட்டையையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும், சீசன் டிக்கட்டைப் பரிசோதிக்க வரும் அதிகாரியிடம் அடையாள அட்டையையும் சேர்த்து காண்பிக்கவேண்டும் என்பதும் நியதி.

ஒருமுறை நான் அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தேன். வண்டி குர்லாவைக் கடந்து செம்பூர் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது..

குர்லா நிலையத்தில் வண்டியில் ஏறிய பயணச்சீட்டு பரிசோதகர் ஒருவர் பயணிகளின் பயணச்சீட்டை பரிசோதிக்க ஆரம்பித்தார். அப்போது ஒரே குழுவாய் பயணம் செய்துக்கொண்டிருந்த சில இளைஞர்கள் (அவர்களை நான் நாள்தோறும் அதே வண்டியில் பார்த்திருக்கிறேன். கூட்டமாய் அடித்துப்பிடித்து ஏறி பெருவாரியான இருக்கைகளைப் பிடித்துக்கொண்டு, சீட்டாட்டம் ஆடுவதோடு மட்டுமல்லாமல் கடி ஜோக்குகள் அடித்து சக பயணிகளைக் கடுப்படிப்பது வழக்கம்.) ஒருவையொருவர் பார்த்துக்கொண்டு தங்களுக்குள் ரகசியக் குரலில் பேசிக்கொண்டனர்.

பிறகு அதில் பாதி பேர் எழுந்து வாயிலருகில் போய் நின்றுக்கொண்டனர். இருக்கையிலிருந்த இளைஞர்கள் தங்களுடைய சீசன் டிக்கட் பரிசோதிக்கப்பட்டதும் வண்டியை விட்டு இறங்குவதுபோல் எழுந்து சென்று தங்களுடைய சீசன் டிக்கட்டுகளை தங்கள் நண்பர்களிடம் கொடுத்துவிட்டு ஒன்றும் அறியாததுபோல் நின்றுகொண்டனர். சீசன் டிக்கட்டை நண்பர்களிடமிருந்து பெற்றுக்கொண்டவர்கள் காலியான தம் நண்பர்களுடைய இருக்கைகளில் வந்தமர்ந்துக்கொண்டனர். என்னைப் போன்ற சக பயணிகள் இதையெல்லாம் கண்கூடாக பார்த்தும் நமக்கேன் வம்பு என்பதுபோல் இருந்து விட்டனர். ஆனால் எங்களுடன் பயணம் செய்துக்கொண்டிருந்த டர்பன் அணிந்திருந்த சர்தார்ஜி ஒருவர் (அவரை அன்றுதான் முதல் முறையாய் பார்க்கிறேன்.) விடவில்லை.

உடனே எழுந்து நின்று தன் கடமையே கண்ணாய் பரிசோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரியைத் தொட்டு கவனத்தை ஈர்த்தார். எரிச்சலுடன் ‘Yes?’ என்று அவரை நோக்கித் திரும்பியவரிடம் ‘Sir Please check the tickets of the boys who are about to get down. I feel some strange things are happening.’ என்றார்.

ஆனால் பரிசோதனை அதிகாரி அவரைக் கண்டுகொள்ளாமல் மீதமிருந்த பயணிகளிடம் (இருக்கையில் வந்தமர்ந்த இளைஞர்கள் உட்பட) அவரவர் பயணச் சீட்டைப் பரிசோதித்து முடித்துவிட்டு ‘செம்பூர்’ நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டார்.

அவர் இறங்குவதைப் பார்த்த சர்தார்ஜி கோபத்துடன் ‘இதர் க்யா ஹோ ரஹா ஹை?’ என்று எழுந்து அவரும் இறங்கி பரிசோதனை அதிகாரியின் பின்னே ஓடிப்போய் அவரைப் பிடித்து நிறுத்தி வாக்குவாதத்தில் இறங்க அவர்கள் இருவரையும் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது.

இந்த களேபரத்தில் முதல் வகுப்பு பெட்டியிலிருந்த இளைஞர் கூட்டம் வண்டியின் மறுபக்க வாயில் வழியாக ஒட்டுமொத்தமாய் குதித்திறங்கி ஓடிவிட இறங்கிச் சென்ற அதிகாரியை மீண்டும் வலுக்கட்டாயமாய் வண்டியில் ஏற்றிய சர்தார்ஜி இளைஞர் கூட்டத்தைக் காணாமல் பரிதாபமாய் விழித்துக்கொண்டு நின்றார்!

இதுபோன்று எத்தனையோ நிகழ்ச்சிகள்.

காதலர்களின் ஊடல், சாடல்கள், ஏறி இருக்கையிலமர்ந்தவுடன் உலகத்தை மறந்து உறக்கத்தில் ஆழ்ந்துவிடுபவர்கள், செய்தித்தாள், வார, மாத பத்திரிகைகள் (செம்பூரிலிருந்து ஏறும் பெரும்பாலான பாலக்காட்டைச் சார்ந்த ஐயர்களிடம், ஆண்களாயிருந்தால் ஹிண்டுவும் பெண்களாயிருந்தால் மங்கையர் மலர், குமுதம், கல்கி கண்டிப்பாய் இருக்கும்) சகிதமாய் வண்டியிலேறி இறங்கும் வரை அக்கம்பக்கம் நடப்பதைக் கண்டுகொள்ளாமல், படித்ததையே திருப்பி, திருப்பி படித்து நேரத்தைப் போக்குபவர்கள், அன்றைய பங்கு சந்தையில் ஏறிய, இறங்கிய பங்குகளைப் பற்றிய காரசாரமான விவாதங்கள், என பலதரப்பட்ட மனிதர்களைக் காணும் ஒரு அலாதியான அனுபவம் அது.

இவ்வனுபவத்தை கடந்து ஐந்து தினங்களில் என்னால் இயன்றவரை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன்.

பொறுமையாய் படித்து என்னுடன் தங்களுடைய அனுபவங்களையும் பின்னூட்டமிட்டு பகிர்ந்துக்கொண்ட அனைத்து தமிழ்மணம் நண்பர்களுக்கும் மீண்டும் நன்றி!

11 அக்டோபர் 2005

மும்பை புறநகர் ரயில்பயண அனுபவம் (5)

மும்பை புறநகர் ரயில்பயண அனுபவங்களை கடந்த சில நாட்களாக உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும்போது நானும் அந்த இனிமையான நாட்களை மீண்டும் நினைத்துக்கொள்கிறேன்.

நான் தமிழ்நாட்டில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் பெரும்பாலும் என்னுடைய சொந்த வாகனத்திலேயே பயணம் செய்து பழகிப்போயிருந்ததால் நேரத்தின் அருமை - அதாவது அலுவலகத்திற்கு சரியான நேரத்திற்கு சென்றடைய தினமும் குறிப்பிட்ட நேரத்திற்கு வீட்டிலிருந்து புறப்படவேண்டும் என்பது - தெரியாதிருந்தது.

நான் மும்பைக்கு செல்வதற்குமுன், அதாவது மதுரை, சேலம், தஞ்சாவூர் (ஏன், சென்னையிலும்கூட) போன்ற நகரங்களில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது நான் வசித்துவந்த இடம் அலுவலகத்திலிருந்து அதிகபட்சம் ஐந்து கி.மீ தூரத்திலேயே இருந்தது.

ஆதலால் பயண நேரம் அதிகபட்சம் பதினைந்திலிருந்து இருபது நிமிடம் மட்டுமே. போக்குவரத்து நெரிசல் அதிகமாயிருக்கும் நாட்களில்கூட அதிகபட்சம் அரைமணி நேரத்திற்கு மேல் ஆனதில்லை.

ஆனால் மும்பையில் என்னுடைய அலுவலகமிருந்த மும்பை ஃபோர்ட் பகுதியிலிருந்து ஐந்து, பத்து கி.மீ தூரத்தில் வசிக்கவேண்டுமென்றால் 2BHK குடியிருப்புக்கு குறைந்த பட்சம் ரூ15,000 லிருந்து 20,000 மாத வாடகைக் கொடுக்கவேண்டியிருக்கும்.

ஆதலால் வேறு வழியின்றி 30 கி.மீ தொலைவிலிருந்த ‘சான்பாடா’ போன்ற பகுதிகளில் வசிக்கவேண்டியிருந்த நிர்பந்தத்தில் நான் மட்டுமல்ல என்னைப் போன்ற நடுத்தர மக்கள் பலரும் இருந்தோம்.

மத்திய மற்றும் மேற்கு மார்க்கங்களைப் போலல்லாமல் ஹார்பர் மார்க்கத்தில் விரைவு வண்டிகள் இல்லையென்பதால் பயண நேரம் ஒரு மணியிலிருந்து - சிக்னல் தொல்லை அல்லது இடைவிடாத மழையால் - 1.30 மணி வரை எடுப்பதுண்டு. அலுவலகத்திற்கு சென்று வரவே தினமுனம் நான்கு மணி நேரம் போய்விடும்.

இச்சூழ்நிலையில் வீட்டிலிருந்து புறப்படும் நேரம் மிக மிக முக்கியம். சான்பாடாவிலிருந்து 7.16 புறப்படும் வண்டியைப் பிடித்தால்தான் 9.30க்குள் அலுவலகம் சென்றடைய வசதியாயிருக்கும்( வி.டி நிலையத்திலிருந்து என் அலுவலகத்தையடைய குறைந்தது இருபது நிமிட நேரமாவது நடக்கவேண்டும்). அந்த வண்டியை விட்டால் அடுத்த வண்டி வர இருபது நிமிடமாவத ஆகும் (பெரும்பாலும் குறிக்கப்பட்ட நேரத்திலிருந்து ஐந்து நிமிடத்திலிருந்து பத்து நிமிடங்கள் கழித்துவரும் என்பது எல்லோரும் அறிந்ததே).

ஆனாலும் ஒவ்வொரு வண்டியையும் குறித்தே பயணிகள் நிலையத்துக்கு வந்து சேர்ந்துக்கொண்டிருப்பர். 7.16 வண்டி பத்து நிமிடத்திற்கு மேல் தாமதித்தால் அடுத்த வண்டிக்கு வந்து சேரும் பயணிகளின் எண்ணிக்கையும் சேர்ந்துக்கொள்ளும், அப்படியே இரண்டு, மூன்று வண்டிகளின் எண்ணிக்கையையும் சேர்த்து சில தினங்களில் (முக்கியமாய் மழைக்காலங்களில்) ஒவ்வொரு நிலையத்திலும் கூட்டம் பிதுங்கி வழியும்.

ஆரம்ப காலங்களில் - குறிப்பாக முலன்டில் வசித்துக்கொண்டிருந்த நாட்களில் இந்த பிதுங்கி வழிந்த ஜனக்கூட்டத்தைப் பார்த்துவிட்டு அலுவலகத்திற்கு அரைதினம் லீவு போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றிருக்கிறேன். மதிய உணவிற்குப் பிறகு திரும்பி வந்து வண்டியைப் பிடிப்பேன்.

ஆதலால் தினமும் என்னுடைய வண்டி புறப்படும் நேரத்திற்கு குறைந்த பட்சம் பதினைந்து நிமிடத்திற்கு முன்னரே நிலையத்திற்கு வந்துவிடுவேன். தாமதமாய் வருகின்ற எதாவது வண்டியிலேறி செல்லலாமே என்ற எண்ணத்துடன்.

காலை நேரங்களில் மின்ரயில் நிலையங்களின் சுற்றிலுமிருந்த தெருக்களில ஆண்களும் பெண்களும் வேக, வேகமாய் நடப்பதைப் பார்த்தால் நமக்கு பிரமிப்பாயிருக்கும்! நாமும் அதே வேகத்தில் நடக்காத பட்சத்தில் நம்மைத் தள்ளிவிட்டு போய்க்கொண்டேயிருக்கும் அந்த ஜனக்கூட்டத்தோடு கூட்டமாய் போவது ஆரம்பத்தில் கடினமாயிருந்தாலும் நாளாக நாளாக பழகிப்போனது. இப்போதும் குடும்பத்தோடு நடக்கும்போதும் அதே பழக்கத்தில் நடந்து மனைவி மகள்களின் கோபத்திற்கு ஆளாயிருக்கிறேன்.

மும்பையில் ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும்கூட மிக முக்கியமானது என்பதை இப்போதும் இவ்வண்டிகளில் பயணம் செய்துக்கொண்டிருக்கும் நம் தமிழ்மணம் நண்பர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்.

ஆனால் ஒன்று, எத்தனை சோம்பல் உள்ளவர்களானாலும் அவர்களை மும்பை வாசம் மூன்றே மாதத்தில் மாற்றிவிடும் என்பது நிச்சயம். அதன் பிறகு எந்த ஊரில் பணியாற்ற வேண்டியிருந்தாலும் நேரத்திற்கு புறப்படவேண்டும் என்கின்ற பழக்கம் நம்மைவிட்டு போகவே போகாது!

இனி என்னுடைய பயணநாட்களில் நான் பதறிப்போன அனுபவம் ஒன்று!

நான் முலுன்டில் வசித்துக்கொண்டிருந்த சமயம். தூத்துக்குடியில் (அதுதான் என் மனைவியின் சொந்த ஊர்) வசித்துவந்த என் மனைவியும் என்னுடைய இரண்டாவது (கடைசியும்கூட) மகளும் (அப்போது அவள் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள்) காலாண்டு விடுமுறையில் மும்பை வந்திருந்தார்கள்.

திடீரென்று என் மகளுக்கு என்னுடைய அலுவலகத்தைப் பார்க்கவேண்டுமென்ற விபரீத ஆசை வந்தது! அதுவும் வாரநாள் ஒன்றில்!

‘உன்னால ரயில்ல அடிச்சி புடிச்சி பயணம் பண்ணமுடியாதுன்னு’ எத்தனைமுறை சொல்லியும் கேட்கவில்லை. என் மனைவியும் விவரம் புரியாமல் ‘ஆசைப்படுதில்லே, கூட்டிக்கிட்டு போங்களேன்’ என ஒத்தூத என் மகளின் பிடிவாதம் அதிகமானது.

‘சரி, வா.’ என்று அரைமனதுடன் தினமும் புறப்படும் நேரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு முன்பே வீட்டை விட்டு புறப்பட்டேன். எனக்கு ஏற்கனவே முதல் வகுப்பு சீசன் சீட்டு இருந்ததால் அவளுக்கு தனியாக போய், வர முதல்வகுப்பு பயணச்சீட்டை (பதினைந்து நிமிடம் வரிசையில் நிற்கவேண்டி வந்தும் என் மகளுக்கு அது ஒரு திரில்லிங் எக்ஸ்பிரீயன்சாகவே இருந்தது!) எடுத்துக்கொண்டேன். நல்லவேளையாக அன்று முதல் வகுப்பில் அத்தனைக் கூட்டம் இல்லை. ‘ஏம்ப்பா, என்னை அவாய்ட் பண்றதுக்கு சும்மானாச்சும் டூப் விட்டிங்களா? கூட்டத்தையே காணோம்’ என்ற மகளின் விமர்சனம் வேறு!

ஆனால் அடுத்தடுத்த நிலையங்களில் பயணிகள் ஏற, ஏற வண்டி ‘குர்லா’ நிலையத்தைக் கடக்கும்போது அமர்ந்திருந்தவர்கள் மூச்சு விடக்கூட முடியாத அளவுக்கு கூட்டம் நாலாபுறமும் அழுத்த என் மகள் அழும் நிலைக்கு வந்துவிட்டாள். பார்க்க பரிதாபமாயிருந்தாலும் ‘வேணும் உனக்கு. நான் சொன்னப்பவே கேட்டிருந்தா...’ என்பதுபோல் அவளைப்பார்க்க, ‘சாரிப்பா’ என்பதுபோல் தலைக் கவிழ்ந்துக் கொண்டவளிடம் ‘இன்னும் அரைமணி நேரம்தான். நாம் இறங்கும்போது இத்தனை கூட்டம் இருக்காது’ என்று சமாதானப் படுத்தினேன்.

வி.டி நிலையத்திற்கு முந்தைய நிலையமான ‘மஸ்ஜித்’ தில் பெரும்பாலான பயணிகள் இறங்கிவிட நாங்கள் வி.டியில் இறங்குவதில் பெரிய பிரச்சினையிருக்கவில்லை.

என்னுடன் வந்த என் மகளைக் கண்டவுடன் அலுவலகத்தில் பெரும்பாலானோர் (என் பாஸ் உட்பட) என்னைப் பார்த்து ‘என்ன சார், திரும்பிப் போகும்போது பயங்கர கூட்டமாய் இருக்குமே அப்போ என்ன பண்ணுவீங்க? பேசாம அரை நாள் லீவு போட்டு ரெண்டு மணிக்கே புறப்பட்டு போயிருங்க’ என்று வற்புறுத்தினர்.

ஆனால் எனக்கு என்ன தோன்றியதோ பிடிவாதமாக மாலை ஐந்து மணிவரை அலுவலகத்திலேயே இருந்துவிட்டுத்தான் புறப்பட்டேன். தினமும் சாதாரணமாக மாலை 7.00 மணிக்கு மேல் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ஓரிரண்டு வண்டிகளை விட்டுவிட்டு (அப்போதெல்லாம் ஓடும் வண்டியில் ஏறும் வித்தையைக் கற்றிருக்கவில்லை!) சாவகாசமாக வீடு திரும்புவது வழக்கம்.

ஐந்து மணிக்கு நிலையத்தை அடைந்தால் கூட்டம் அவ்வளவாக இருக்காது என்று நினைத்ததுதான் என் தவறு.

வி.டி. நிலையத்தை அடைந்தபோது அன்று வழக்கத்தை விடவும் கூட்டம் அதிகமாயிருந்தது. பகல் இரண்டு மணிக்கு ‘குர்லா’ பகுதியில் ஏற்பட்ட ஏதோ சிக்னல் கோளாறு காரணமாக வண்டிகள் தாமதமாகி வி.டி. நிலையத்தில் இரண்டு, மூன்று வண்டிகளுக்கான கூட்டம் பிளாட்பாரத்தை அடைத்துக்கொண்டு நின்றது.

திருவிழா நாட்களைத்தவிர (தூத்துக்குடியில் இருந்த கத்தோலிக்க ‘பனிமய மாதா’ ஆலயத்தில் நடைபெறும் வருடாந்தர தேர்த்திருவிழாவைக் காண மதுரை-திருநெல்வேலி வரையிலுமுள்ள அனைத்துக் கிராமங்களிலிருந்தும் வரும் ஜனத்திரளைப் பார்த்ததுண்டு) கூட்டத்தைக் கண்டிராத என் மகள் அதிர்ச்சியில் உரைந்துபோய் நின்றிருந்தாள்.

வி.டியில் ப்ளாட்பாரத்தில் நம் ஊர் நிலையங்களைப் போன்று இருக்கைகள் இல்லை. (நிற்கவே இடமில்லாதபோது இருக்கை வேற வேண்டுமா?). வரிசையாக ஐந்து வண்டிகள் போயும் கூட்டம் குறையவில்லை. நாங்கள் நிலையத்திற்கு வந்து சேர்ந்து ஒருமணி நேரமாகியும் எங்களால் வண்டிக்குள் ஏறவே முடியவில்லை.

நேரம் ஆக, ஆக என் மகள் பதற்றம் அடைய ஆரம்பிக்கவே அடுத்துவரும் வண்டியில் எப்படியாவது ஏறிவிடவேண்டும் என்று தீர்மானித்தேன். ஆனால் என் மகளையும் என்னுடனே ஆண்கள் பெட்டியில் ஏற்றாமல் முதல் வகுப்பு பெண்கள் பெட்டியில் ஏற்றிவிடலாம் என்று நினைத்து என் மகளிடம் ‘அப்பா உன்னை லேடீஸ் கோச்ல ஏத்திடறேம்மா. நான் அடுத்த பெட்டியிலதான் இருப்பேன். நீ கோச்சுக்குள்ள வரைஞ்சிருக்கற ரூட் மேப்பைப் பார்த்தா தெரியும். ‘பாண்டூப்’புன்னு ஒரு ஸ்டேஷன் வரும். அதுக்கடுத்தது நம்ம இறங்கவேண்டிய முலன்ட் வரும். அப்பா இறங்கிவந்து உன்னைக் கூப்பிட்டுக்கறேன், என்ன?’ என்றேன். என் மகள் என்ன நினைத்தாளோ உடனே சரியென்று தலையை அசைத்தாள்.

இருவரும் நிலையத்திற்குள் வந்துகொண்டிருக்கும் ‘தானே’ வண்டியில் ஏற தயாராக கூட்டத்தை முண்டியடித்துக்கொண்டு முன் வரிசையில் சென்று நின்றுக்கொண்டோம்.

ஆண்கள் அவர்களுடைய பெட்டியை நோக்கி ஓட பெண்கள் பெட்டிக்குமுன் நின்றுக்கொண்டிருந்த கூட்டத்தில் தமிழ் பெண்கள் யாராவது தென்படுகிறார்களா என்று தேடினேன். யாரும் இருக்கவில்லை. பிறகு வேறு வழியில்லாமல் என் மகளுடன் பெண்கள் பெட்டியில் ஏறினேன். அவ்வளவுதான். ‘ஹே பையா யே மஹிலோங்கா டிப்பா ஹை. உத்ரோ. ஜல்தி.’ (யோவ் இது பெண்களோட பெட்டியா. இறங்குங்க, சீக்கிரம்.) என்று ஆளுக்கு ஆள் கத்த நான் என்னுடைய அரைகுறை ஹிந்தியில் ஒரு நடுத்தர வயது பெண்ணிடம் (அந்த பெண்ணை முலன்ட் நிலையத்தில் ஒரு சில நாட்கள் பார்த்த ஞாபகம்) நிலைமையை விளக்கினேன். அதே நேரத்தில் என் மகளும் விசும்ப ஆரம்பிக்கவே அந்த பெண் மனமிறங்கி ‘டரோ மத் பேட்டி. மே ஹூன் நா’ என்று அனைத்துக் கொள்ள நான் மகளைத் ஆறுதலாய் தட்டிக்கொடுத்துவிட்டு பெட்டியிலிருந்து இறங்கவும் வண்டிபுறப்படவும் சரியாயிருந்தது.
நிலையத்திலிருந்த ஜனத்திரளைக் குறைக்க நினைத்து அன்று வண்டிகள் எல்லாம் ஐந்து, பத்து நிமிடங்களில் புறப்பட்டு செல்ல ஆரம்பித்திருந்ததை நான் கவனிக்கத் தவறியதுதான் காரணம்.

அடுத்த வண்டிக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த வண்டியில் (வண்டியின் பின்னாலிருந்த முதல் வகுப்பு பெட்டியாதலால் அதன் பிறகு மூன்று இரண்டாம் வகுப்பு பெட்டிகளே இருந்தன. அதிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததால்) எத்தனை முயன்றும் என்னால் ஏறமுடியவில்லை. அதைப் பார்த்த என் மகள் குரலெழுப்பி அழுதுக்கொண்டே இறங்க முயற்சிக்க நல்லவேளையாய் அந்த பெண்மணி என் மகளை இறுகப் பிடித்துக்கொண்டு ‘பதற்றப்படாதீர்கள், அடுத்த வண்டியைப் பிடித்துவாருங்கள்.’ என்று உரத்தக்குரலில் சொல்லிவிட்டு சென்றாள்.

ப்ளாட்பாரத்திலிருந்த பலருக்கும் விஷயம் லேசாக புரிந்துவிட விநோதமாகவும், பரிதாபமாகவும் என்னைப் பார்க்க அவமானத்திலும், கவலையிலும் சில நிமடங்கள் திகைத்துப்போனேன்.

சோதனைப்போல் முலன்ட் வழியாக செல்லும் அடுத்த வண்டி இருபது நிமிடம் கழித்துத்தான் வந்தது. ஒருவேளை என் மகளின் நச்சரிப்பு தாங்காமல் இடையில் எங்காவது இறங்கி என் மகளும் அந்த பெண்மணியும் எனக்காக காத்திருந்தால் அவர்களைக் கண்டுக்கொள்ள வசதியாயிருக்குமே என்ற எண்ணத்தில் இருக்கையில் அமராமல் வாயிலிலேயே நின்றுக்கொண்டேன்.

நான் நினைத்ததுபோலவே நடந்தது. என் வண்டி ‘மஸ்ஜித்’ நிலையத்தை அடையவும் ‘அப்பா’ என்ற உரத்த குரலுடன் என் மகள் என்னை நோக்கி கையை அசைப்பதை காண முடிந்தது. கூடவே அந்த பெண்மனியும்!

நான் வண்டியிலிருந்து இறங்க முயற்சித்ததைப் பார்த்த அந்த பெண் உடனே அடுத்திருந்த மகளிர் முதல் வகுப்பில் என் மகளுடன் ஏறிக்கொண்டு ‘Don’t get down. I’ll keep your daughter safely. You can collect her at Mullund.’ என்று என்னைப்பார்த்து அழகான ஆங்கிலத்தில் (இந்த ஆங்கிலம் மட்டும் நம் நாட்டில் இல்லையென்றால் நம் நாடு எப்போதே துண்டு துண்டாய் உடைந்து போயிருக்கும் ) கூறினார்கள். நான் என் மகளைப் பார்க்க, அவளும் புன்னகையுடன் ‘ஆமாம்பா’ என்பதுபோல் தலையை அசைக்க.. நானும் நிம்மதியுடன் ‘சரி’ யென்று தலையை அசைத்தேன்.

இருந்தாலும் முலன்டில் இறங்கி அப்பெண்மனிக்கு நன்றி கூறிவிட்டு என் மகளை அழைத்துக்கொள்ளும்வரை ஒவ்வொரு நிலையத்திலும் வண்டி நிற்கும்போதெல்லாம் வாயில் வரைசென்று என் மகள் இறங்குகிறாளா என்று பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

என்னுடைய மகள் அந்த நிகழ்ச்சியை சில மாதங்களுக்குமள் மறந்துவிட்டாலும் நானும் என் மனைவியும் இப்போதும் அந்த நாளை நினைத்துக்கொண்டு பதற்றமடைவோம்.

அடுத்த பதிவில் சந்திப்போம்!

10 அக்டோபர் 2005

மும்பை புறநகர ரயில்பயணம் - அனுபவம் (4)


இன்றைய பதிவில் என்னுடைய அனுபவங்களை எழுதுவதற்குமுன் மும்பையின் பிரசித்திப்பெற்ற ரயில் போக்குவரத்தைப் பற்றியும் அதன் விசாலத்தைப் பற்றியும் (Extent of Coverage) சுருக்கமாக எழுதலாம் என்று நினைக்கிறேன்.

மும்பையின் பரப்பரப்பான வாழ்க்கை முறை முதன் முதலில் அந்நகரத்தைப் பார்ப்பவர்களுக்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும்மும்பைவாசிகளின் வாழ்நாளில் பெரும்பாலான நாட்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து அலுவலகம் சென்றுவரவே செலவிடுகின்றனர் என்றால் மிகையாகாது!

இதற்கு முக்கிய காரணம் மும்பையின் அமைப்பு. மும்பை ஒரு தீவு மட்டுமல்ல. அது ஒரு நீளவாக்கில் அமைந்து ஒரு நீண்ட தாழ்வாரம் (Vernadha) போன்ற நிலபரப்பைக் கொண்டது. மும்பையின் நிலவடிவைக்காண:
நகர வரைபடம்


அத்துடன் மும்பையிலுள்ள பெரும்பாலான அலுவலகங்கள் மும்பை நகரத்தின் கீழ்க்கோடியிலுள்ள Fort ஏரியாவில்தான் அமைந்துள்ளதால் மும்பையின் நான்கு முனைகளிலும் வசிக்கும் மக்கள் ஒரே திசையை நோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. அதை தவிர்க்கும் நோக்கத்தில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் Bandra-Kurla Complex, அந்தேரி போன்ற மும்பையின் மத்திய மற்றும் மேற்கு பகுதிகளில் வணிக வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. னாலும் மும்பைவாசிகளின் Fort ஐ நோக்கிய தினசரி பயணம் கணிசமாக குறைய இனியும் இருபது, இருபத்தைந்து வருடங்களாவது பிடிக்கும்.


இந்தியாவின் பொருளாதார மற்றும் வணிகத்தின் தலைநகரமான மும்பை மா... ... நகரத்தின் பெருகிவரும் மக்கள் தொகையின் போக்குவரத்துத் தேவைகளை பெருமளவு பூர்த்தி செய்யும் பெருமை ங்கிலேயருடைய காலத்திலேயே மிகவும் நேர்த்தியாக திட்டமிடப்பட்டு நிர்மானிக்கப்பட்ட மும்பையின் பெருநகர மின்ரயில் இணையத்தைச் சார்ந்ததாகும் (Mumbai Metro Suburban Electrical Railroad Network).
ரயில் தட வரைபடம்


மும்பை நகரவாசிகளின் மொத்த தினசரி போக்குவரத்து 112 மில்லியன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதில் 58% அதாவது 6.5 மில்லியன் மும்பை புறநகர் மின்வண்டிகளில் செய்யப்படுகிறது!

சமீபத்திய கணிப்பின்படி மும்பை மத்திய மற்றும் மேற்கு ரயில் தடங்களில் (ரயில் டிராக்குகளின் மொத்த நீளம் சுமார் 68 கிலோ மீட்டர்) நாளொன்றுக்கு சுமார் 1000 வண்டிகள் (Units of Trains) இயக்கப்படுகின்றன!! சுமார் 2.5 மில்லியன் பயணிகள் பயணிக்கின்றனர்!!!


இருப்பினும் இத்தடங்களில் சுமார் 3 நிமிட இடைவெளிகளில் வண்டிகள் இயக்கப்பட்டும் இது மும்பை வாசிகளின் தேவையில் நான்கில் ஒரு பங்குதான்எனவும் அளவிடப்பட்டுள்ளது.


நான்கு வண்டிகளில் பயணம் செய்யவேண்டிய மக்கள் ஒரே வண்டியில் பயணம் செய்வதால்தான் ஒவ்வொரு வண்டியிலும் வாயிலிலும், சில சமயங்களில் மேற்கூரையிலும் தொங்கிக்கொண்டு பயணம் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.


இப்போது என்னுடைய அனுபவம்.


மேலே கொடுக்கப்பட்ட Suburban Railrouts ன் வரைபடத்தை மீண்டும் ஒருமுறை பாருங்கள்.


நான் சான்பாடாவில் (ஹார்பர் மார்க்கம்) வசிக்கத் துவங்கிய புதிதில் வி.டி நிலையத்திலிருந்து புறப்படும் ஒவ்வொரு முறையும் பதற்றத்துடனே இருப்பேன்.

(மும்பை வி.டி நிலையம்)

ஏனென்றால் வி.டி.யிலிருந்து மத்திய, மேற்கு மற்றும் ஹார்பர் மார்க்கங்களில் செல்லும் வண்டிகள் புறப்பட்டு செல்லும். இதில் நான் வசித்து வந்த ஹார்பர் மார்க்கத்தில் புறப்படும் வண்டிகளுக்கென இரண்டே ப்ளாட்பாரங்களே ஒதுக்கப்பட்டிருந்தன. முதல் ஒரு வாரத்தில் எனக்கிந்த ஏற்பாடு தெரியாததாலும் என்னுடைய பழைய இருப்பிடமான முலன்ட்டுக்கு செல்வதற்கான வண்டிகள் எல்லா ப்ளாட்பாரங்களிலிருந்தும் புறப்படும் என்பதாலும் நான் ஏதாவது (மொத்தம் சுமார் ஏழோ எட்டோ ப்ளாட்பாரங்களிருந்தன. அவற்றுள் சிலவற்றிலிருந்து விரைவு வண்டிகளும் சிலவற்றிலிருந்து சாதா வண்டிகளும் புறப்பட்டு செல்லும்.) ப்ளாட்பாரத்தில் நின்றுக் கொண்டிருப்பேன். கடைசி நிமிடத்தில் என்னுடைய மார்க்கத்தில் செல்லும் வண்டி வேறொரு ப்ளாடபாரத்தில் வருவதை அறிந்து கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஓடுவதற்குள் வண்டி புறப்பட்டு சென்றுவிடும். மூச்சு முட்ட ஓடியதுதான் மிச்சம்.

எங்கிருந்து வந்த வண்டிகள் வந்தாலும் அவைகளை எங்கு வேண்டுமானாலும், தேவையைப் பொறுத்து, திருப்பிவிடும் வகையில் எல்லாம் கணினி மயமாக்கப்பட்டிருந்ததால் பேலாப்பூரிலிருந்து ஹார்பர் மார்க்கமாக வரும் சாதா வண்டிகூட சில சமயங்களில் மத்திய தடத்திலுள்ள 'தானே', 'அம்பர்நாத்' என திருப்பிவிடப் படும். எல்லாம் கடைசி நிமிடத்தில்தான் நமக்கு தெரியவரும்.


இவை எல்லாம் வி.டி.யின் அடுத்த நிலையமான ‘மஸ்ஜித்’ நிலையத்தைக் கடந்தவுடன் முவ்வேறு திசைகளில் பிரிந்து செல்லும். மஸ்ஜித்தைக் கடந்து ஹார்பர் மார்க்கத்தில் அடுத்த நிறுத்தமான ‘சாந்தர்ஸ்த் சாலை’, பிறகு ‘டாக்யார்ட் சாலை’ நிறுத்தம் வருகிறதா என்று பார்த்துக்கொண்டேயிருப்பேன். அதுவரை நாம் எந்த பாதையில் போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே ஆரம்பத்தில் கண்டுபிடிக்க முடியாமல் தவிப்பாயிருக்கும்.


இதில் வேறொன்று சங்கடம், ரயில் நிலையங்களின் பெயர் பலகையை வாசிப்பதுதான். இருக்க இடம் கிடைத்தால்தான் இது சாத்தியம். இல்லையென்றால் குனிந்து பார்க்கக்கூட கூட்ட நெருக்கடியில் வசதியிருக்காது. இதற்காகவே வி.டியிலிருந்து புறப்படும் ஏதாவது ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு ‘மஸ்ஜித்’ வரை சென்று அங்கிருந்து வி.டி. வரும் வண்டிகளில் ஏறி திரும்பி வருவது உண்டு. அதுவும் சிலநேரங்களில் முட்டாள்தனமாகிவிடும். மஸ்ஜித்திலிருந்து வி.டி. வரும் ஹார்பர் மார்க்க வண்டியை மத்திய அல்லது மேற்கு மார்க்கத்திலிருந்து திருப்பிவிடப்பட்டால் வண்டிக்குள் அமர்ந்துக்கொண்டிருக்கும் நமக்கு அறிவிப்புப் பலகையையும் பார்க்கமுடியாத நிலையில் கடைசிநிமிட ஒலிபெருக்கி அறிவிப்புதான் ஒரே வழி. என்றாலும் இறுதியில் கிடைக்கும் ஒரு சில விநாடிகளில் அடித்துப்பிடித்து இறங்குவதற்குள் வண்டி புறப்பட்டுவிடும்.

முதல் வகுப்புகளில் பயணம் செய்யும் நடுத்தர மற்றும் மேல் மட்ட பயணிகளில் பெரும்பாலும் பிறருக்கு உதவிசெய்ய மனமில்லாதவர்களாகவே இருப்பர்.


‘யே வாஷி ஜாயேகானா?’ (இது வாஷி செல்லுமில்லையா?) என்று கேட்டாலும் காதில் விழாததுபோல் கையிலிருக்கும் செய்தித்தாளையோ, பத்திரிகையையோ வாசிப்பதில் கவனமாயிருப்பார்கள். (மும்பையில் பகல், மாலை, நேர பத்திரிகைகளான Midday, Afternoon பயணிகளிடையே மிகவும் பிரபலமானவை. ஒருமணி நேர பயண நேரத்தை செலவிட இவை பெரும்பாலும் உதவுவதால் அநேகமாய் முதல்வகுப்பு பயணிகள் எல்லோர் கையிலும் இவை காணப்படும்).


பல சமயங்களில் தவறான வண்டியில் ஏறிவிட்டு மூன்று, நான்கு நிலையங்களைக் கடந்தபிறகு கண்டுபிடித்து இறங்கி - சில சமயங்களில் பிடிபட்டு சென்னையிலிருந்தபோது எடுத்த டிரைவிங்க் லைசென்சைக் காண்பித்து அரைகுறை இந்தியில் (பெரும்பாலான அதிகாரிகள் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் ஹிந்தியில் பேசுவதையே விரும்புவர்) நான் மும்பைக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ளது என்றெல்லாம் விளக்கி தப்பித்திருக்கிறேன். (முதல் வகுப்பு சீசன் டிக்கெட்டும் என்னைப் பலமுறை இத்தகைய சங்கடங்களிலிருந்து தப்பிக்க உதவியுள்ளன!).

ஆனால் சில முரண்டு பிடிக்கும் அதிகாரிகள் பிடிவாதமாய் அபராதம் வசூலித்துவிடுவதும் உண்டு. இதனாலேயே ஆரம்ப காலங்களில் ஒவ்வொருநாளும் மாலை நேரங்களில் இப்படி வழிமாறிப் போய்(முக்கியமாய் சோதனை அதிகாரிகளிடம் பிடிபட்டு நொந்து நூலாகிவிடும் சமயங்களில்) வீடு திரும்ப இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிடுவதுண்டு. அலுவலகத்திலிருந்து மாலை 7.00 மணிக்குப் புறப்பட்டாலும் பல நாட்களில் சான்பாடாவிலிருந்த என் குடியிருப்புக்கு இரவு 9.00 மணிக்கு மணி மேல்தான் சென்று சேர முடிந்திருக்கிறது.


எட்டு மணிக்குள் சான்பாடா நிலையத்தில் வந்து சேரவில்லையென்றால் நிலையத்தின் வாயிலில் நின்றுக்கொண்டிருக்கும் ரிக்ஷாக்களின் (Auto) எண்ணிக்கை வெகுவாய் குறைந்துவிடும். அதனால்தான் வண்டி சான்பாடா நிலையத்தில் நுழைந்தவுடன் இறங்கும் முதல் இருபது, இருபத்தைந்து பயணிகளில் ஒருவராய் நாம் இருக்க வேண்டுமென்பதில் எல்லோரும் முனைப்பாயிருப்பர்.வண்டியிலிருந்து இறங்கியவுடன் ரிக்ஷாவைப் பிடிப்பதற்கு மின்னல் வேகத்தில் படியிறங்கி ஓடும் (ஆணும் பெண்ணும்) பயணிகளைப் பார்க்கவேண்டும்!

இவர்களை ஒலிம்பிக்கில் ஓட விட்டால் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் உறுதி!


நேரத்தின் அருமையை மும்பை புறநகர் பயணிகளிடம்தான் தெரிந்துக்கொள்ள வேண்டும்.


அதைப் பற்றி அடுத்த பதிவில்!

என் மும்பை புறநகர் ரயில்பயணம் - அனுபவம் 3

என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு என்னுடைய மும்பை ரயில்பயண அனுபவங்களைத் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கிறது.

ஓடும் ரயிலிலிருந்து ஏறி/இறங்கும் வித்தையைப் பற்றி எழுதியிருந்தேன். அதுதொடர்பாக நடந்த வேறொரு வேடிக்கையான சம்பவத்தை இன்று எழுதுகிறேன்.

என்னுடைய மும்பை வாசம் ஒருவருடத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் என்னுடைய வங்கியில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கென இரண்டு குடியிருப்புகள் (Flats) மும்பையில் வாங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் வங்கி குறிப்பிட்டிருந்த தொகையான Rs.15 - 20 lakhsக்குள் மும்பையில் மட்டுமல்ல அதன் புறநகர் பகுதிகளிலும் 1BHK ( ஒரு Bedroom+Hall+Kitchen - இப்படித்தான் மும்பையில் குடியிருப்புகளின் விசாலத்தை (Extent) குறிப்பிடுகிறார்கள்) கூட கிடைக்காததால் புதுமும்பை (Navi Mumbai) பகுதியில் ‘வாஷி’ நிலையத்துக்கு அடுத்தபடியான் ‘சான்பாடாவில்’ ஒரே Block ல் அமைந்திருந்த இரண்டு 2BHK (சுமார் 950 சதுரம்) குடியிருப்புகளை - எனக்காக ஒன்றும் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கேரளத்தைச் சார்ந்த வேறொரு Chief Manager க்கு ஒன்றும் - விலைக்கு வாங்கி குடியேறினோம்.

புதுமும்பை மும்பை ஹார்பர் தடத்தில் வருகிறது. மத்திய மற்றும் மேற்கு ரயில் தடங்களுடன் ஒப்பிடும்போது ஹார்பர் தளத்தில் அவ்வளவாக பயணிகள்கூட்டம் இருக்காது, முக்கியமாக முதல் வகுப்பில்.

நான் வசித்த 94 to 96 வருடங்களில் ‘சான்பாடா’ நிலையத்திலிருந்து முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களில் என்னையும் என் சக ஊழியரையும் சேர்த்து பத்தோ, பதினைந்து பயணிகள் மட்டுமே இருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் ‘பேலாப்பூர்’ - அன்றைய Starting Point for the Harbour Route Trains - ‘சான்பாடா’விலுருந்து மூன்றாவது Station னதால் என்னுடன் ஏறும் எல்லோருக்கும் இருக்கைகள் கிடைப்பதுண்டு. அத்துடன் ‘சான்பாடா’வுக்கு முந்தைய நிலையமான ‘வாஷி’ புதுமும்பையின் முதல் மற்றும் முக்கியமான நிலையமாயிருந்தது. அங்கிருந்து காலை நேரத்தில் மும்பை வி.டி நிலையத்திற்கு பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி புறப்படுவதால் பலரும் ‘பேலாப்பூ’ரிலிருந்து வரும் வண்டிகளுக்காகக் காத்திருக்கமாட்டார்கள்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் பெரும்பாலும் காலியாயிருக்கும். ஆனால் கடந்த மாதம் அலுவலக பணியாய் மும்பை சென்றிருந்தபோது ‘சான்பாடா’வில் இருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்று இரவு பத்து மணியளவில் இறங்கிய போதும் சரி, அவருடன் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் ஏறும்போதும் சரி, பயணிகளின் கூட்டம் பிதுங்கி வழிந்தது! சுமார் பத்துவருடங்களின் புதுமும்பையிலும் குடியிருப்புகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துவிட்டது என்றார் என் நண்பர்.

சரி, இப்போது ஓடும் வண்டியிலிருந்து ஏறி/இறங்கும் வித்தைக்கு வருவோம்.

மத்திய தடத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த சமயம் இத்த வித்தையை என்னால் கற்றுக்கொள்ளவே முடியவில்லை. மிக அதிக அளவிலான கூட்டமும், விரைவு வண்டியின் வேகமும் அதற்குக் காரணம்.

ஹார்பர் தடத்திலும் வண்டி ‘சான்பாடா’வை அடையும்போது முதல் வகுப்பில் பெரும்பாலான நாட்களில் அங்கு ஏறும் எல்லா பயணிகளுக்கும் இருக்கை இருந்தாலும் வசதியான இருக்கைகளுக்காக வண்டி நிலையத்தினுள் நுழையும்போதே அதில் பயணிகள் (ஒருவேளை பழக்கதோஷமும் காரணமாயிருக்கலாம்) ஓடி ஏறுவது வழக்கம்.

எனக்கு அப்போதும் ஏறுவதற்கு துணிவு வரவில்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்த நண்பரின் ஏளன பார்வையில் இருந்து தப்பிக்க நான் அந்த வித்தையைக் கற்பது என துணிந்து செயலில் இறங்கினேன்.

அதற்கு முதல் முயற்சியாக கையில் கைப்பெட்டியை எடுத்துச் செல்வதை நிறுத்தினேன். இரண்டு கைகளும் Free இருந்தால் ஒரு கை கைப்பிடியை விட்டு தளர்ந்தாலும் அடுத்த கையை வைத்துப் பிடித்துக்கொள்ளலாமே என்ற எண்ணம்.

முதல் இரண்டு நாட்களில் ஒரு கால் ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலும் மறுகால் ரயில்மேடையிலுமாகவும் தத்தளித்திருக்கிறேன். வாயிலிலிருந்த நடுக்கம்பியைப் பிடித்திருக்கும் கைகள் பயங்கரமாய் தந்தியடிக்கும். இருந்தாலும் சக நண்பரின் பார்வையில் நான் Adventurist க தென்படவேண்டும் என்ற ஆர்வத்தில் என்னுடைய Dangerous முயற்சிகளைத் தொடர நாளடைவில் ஓடும் வண்டியில் ஏறும் வித்தையில் Expert னேன். இறங்கும் வித்தையைக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் குறைந்தது மூன்று முறையாவது கீழே விழுந்து காலில் அடிபட்டுக்கொண்டிருக்கிறேன். நல்ல வேளையாக Serious க ஒன்றும் காமல் தப்பித்தேன்.

ஆக, ஒரு வழியாக நான் சரியானதொரு மும்பை ரயில் பயணியாக மாறினேன், இரண்டு, மூன்று மாத பயிற்சிக்குப்பிறகு.

இப்போது வேடிக்கைக்கு வருகிறேன்.

ஒருநாள் மும்பையிலிருந்த ‘செம்பூர்’ கிளையில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய நண்பரை (அவரும் தமிழர்தான். திருநெல்வேலி பக்கம்) என்னுடைய ‘சான்பாடா’ வீட்டிற்கு அழைத்திருந்தேன். நாங்கள் எல்லோரும் மனைவி, பிள்ளைகளை ஊரில் விட்டுவிட்டு Married Bachelors ஆக இருந்ததால் எங்களுடைய குடியிருப்புகளில் Apna, Apna Party (மொத்த சிலவைப் பகிர்ந்துகொள்ளுதல். அல்லது அவரவருக்கு விருப்பமானவற்றை அவரவரே கொண்டுவருதல்) அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.

நான் வி.டி. நிலையத்திலிருந்து புறப்படும் வண்டியின் நேரத்தை அவருக்கு Pager செய்வது என்றும் (அப்போதெல்லாம் கைத்தொலைப்பேசி எல்லோரிடம் இருக்கவில்லை) அவர் ‘செம்பூர்’ நிலையத்தை அடையும் நேரத்தைக் கணக்கிட்டுக்கொண்டு (சுமார் 40 நிமிடங்கள்) செம்பூர் நிலையத்தில் அதே முதல் வகுப்பில் ஏறிக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்தோம் (அவர் அன்றுதான் முதல் முறையாக என் வீட்டுக்கு வருகிறார் என்பதால் அவர் என்னோடு சேர்ந்து வந்தால்தான் அவரால் என் வீட்டை அடையாளம் கண்டுகொள்ள இயலும். அவருக்கு இந்தியும் சரளமாய் அப்போது வராது).

அதற்கு முன் ஒரு முக்கியமான Information.

மும்பை புறநகர் வண்டிகளில் முதல் வகுப்பு பெட்டிகள் வண்டியின் முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றும் இருக்கும். நான் சாதாரணமாக பின்புறமிருக்கும் பெட்டியில்தான் ஏறுவது வழக்கம். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வி.டி நிலையத்தில் ஏறும்போது அதிக தூரம் நடக்கவேண்டியதில்லை. இரண்டாவது நான் இறங்கும் நிலையமான ‘சான்பாடாவில்’ நிலையத்தைவிட்டு வெளியேறும் வழி பின்புறமிருக்கும் முதல் வகுப்பு பெட்டியின் மிக அருகிலேயே இருந்ததால் வண்டி நிலையத்திற்குள் நுழையும்போதே இறங்க முடிந்தவர்கள் (நானும் அவர்களில் ஒன்றாயிற்றே!) இரண்டாம் வகுப்பு பயணிகள் இறங்கி நடைபாதையை அடைத்துக்கொள்ளுமுன் நாம் எளிதாய் வெளியேறிவிடமுடியும் (அப்படியென்ன வெளியேறுவதில் அவசரம்? அதை அடுத்துவரும் பதிவுகளில் எழுதுகிறேன்.)

அன்று வழக்கத்திற்கு மாறாக முன்புறமுள்ள பெட்டியில் ஏறியதற்கும் காரணமிருந்தது. முன்புறம் பெட்டியில் இருந்தால் என் பெட்டி நிலையத்தை கடப்பதற்குள் என் நண்பர் நடைமேடையில் எங்கு நின்றுக்கொண்டிருந்தாலும் என்னால் கண்டுபிடித்துவிடமுடியுமல்லவா. ஆனால் அதுவே வினையாகிப்போனது. என் பெட்டி நிலையத்தினுள் புகுந்து நடைமேடை முழுவதையும் கடக்கும் வரை என் நண்பரை என்னால் காணமுடியவில்லை.

எப்போதும் இரண்டு, மூன்று நிமிடங்கள் தாமதமாய் வந்தடையும் வண்டி அன்று மிகச்சரியாய் வந்ததுதான் முக்கியமான காரணம். என் நண்பர் நிலையத்தை அடைந்த சமயம் என்னுடைய முதல் வகுப்பு பெட்டி நுழைவு வாயிலைக் கடந்து சென்று விடவே நானும் அவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியவில்லை.

இரண்டு பெட்டிகளுக்கும் இடையே சுமார் பத்து பெட்டிகள் இருந்ததால் நான் பெட்டியிலிருந்து இறங்கியும் அவரைக் காணமுடியவில்லை. அவரை விட்டுவிட்டு போகவும் முடியாது. எனவே வண்டி புறப்படும்வரைக் காத்திருந்துவிட்டு வண்டியை விட்டு இறங்கி அவருடைய பேஜரில் மெசேஜ் கொடுத்தேன். வண்டி நகர ஆரம்பித்துவிட்டது.

என் பெயரை யாரோ கூப்பிடுவதைக் கேட்ட நான் சட்டென்று திரும்பிப் பார்க்க என்னைக் கடந்துக்கொண்டிருந்த பின்புறமிருந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த என் நண்பரைப் பார்த்தேன். உடனே பேஜரை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு முதல் வகுப்பு பெட்டியை அடுத்த இரண்டாம் வகுப்பு பெட்டியில் தாவி ஏறினேன். ஆனால் அதைக்கவனியாத என் நண்பர் ஓடும் வண்டியிலிருந்து இறங்கிப் பழக்கமில்லாதிருந்தும் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் இறங்கி தாக்குப்பிடிக்கமுடியாமல் தடுமாற நல்லவேளையாய் அருகிலிருந்தவர்கள் பிடித்துக்கொள்ள கீழே விழாமல் தப்பித்துக்கொண்டார்.

அவர் கீழே விழாமல் தப்பித்துக் கொண்டதையே பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நான் இறங்க மறந்துபோய் சுயநினைவு பெற்று இறங்க முயற்சிப்பதற்குள் நான் பயணித்த பெட்டி நடைமேடையைக் கடந்திருந்தது.

‘கவலைப் படாதீர்கள். நான் அடுத்த வண்டியில் திரும்பி வருகிறேன்’ என்று சைகைக் காண்பித்தேன். ஆனால் அவருக்கு என்ன புரிந்ததோ அவர் பதினைந்து நிமிடம் கழித்து ‘செம்பூரை’ வந்தடைந்த ‘பேலாப்பூரை’ நோக்கிச் செல்லும் வண்டியில் ஏறிக் கொள்ள நான் என் வண்டி அடுத்த நிலையமான ‘கோவண்டியில்’ நின்றதும் இறங்கி அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்ற ‘செம்பூரை’ நோக்கிச் செல்லும் வண்டியிலேறி செம்பூரை நோக்கிப் பயணமானேன். எதிரும் புதிருமாக சென்றுக்கொண்டிருந்த இரண்டு வண்டிகளும் ‘கோவண்டிக்கும்’ ‘செம்பூருக்கும்’ இடையில் கடந்துசெல்ல இரண்டு வண்டிகளிலும் இருந்த நானும் என் நண்பரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் ஒரு சில நொடிகள் பார்த்துவிட்டு பிறகு சிரிப்பை அடக்க முடியாமல் இருவரும் உரக்கக்குரலில் சிரிக்க என் பெட்டியிலிருந்த பலரும் ‘இஸ்கோ க்யா ஹோகயா’ (இவனுக்கு என்னவாயிற்று) என்ற தோரணையில் விநோதமாய் பார்த்தனர்.

பின்னர் அவர் ‘கோவண்டியில்’ இறங்கி அங்கேயே எனக்காக காத்திருக்க நான் ‘செம்பூரில்’ இறங்கி அடுத்த பத்து நிமிடத்தில் வந்த வண்டியிலேறி கோவண்டியில் காத்திருந்தவரை அழைத்துக்கொண்டு ‘சான்பாடாவில்’ வந்து இறங்கினோம்.

ஒருமணி நேரத்தில் முடிந்திருக்கவேண்டிய எங்களுடைய பயணம் இந்த குளறுபடி காரணமாக இரண்டு மணிநேரம் எடுத்தது!

மற்றவை அடுத்த பதிவில்!

09 அக்டோபர் 2005

மும்பை ரயில் பயணம் - அனுபவம் (2)

முதல் பதிவில் கூறியிருந்தபடி இப்பதிவில் என்னுடைய வேடிக்கையான அனுபவங்களில் ஒன்றை உங்களோடு பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

மும்பை ரயில் பயணத்தில் மிகவும் கடினமான வித்தை, வண்டி ஓடிக்கொண்டிருக்கும்போதே ஏறி/இறங்குவதுதான்.

எனக்கு இதை முதலில் பார்த்தபோது நம்ப முடியாத வித்தையாகத் தெரிந்தது. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அநாயசமாக ஏறுவதையும் இறங்குவதையும் பார்க்கும்போது ஆச்சரியமாகவும் இருக்கும்.

முக்கியமாக, ஏறும்/இறங்கும் இடம் துவக்க/இறுதி நிலையமாக (Starting/Terminating Terminus) இல்லாத பட்சத்தில் வண்டி நின்ற பிறகுதான் ஏறுவது/இறங்குவது என்று பிடிவாதமாக இருந்தால் ஏற முடியாமல் பிளாட்பாரத்திலேயே நிற்க வேண்டியதுதான்.

ஏறும்/இறங்கும் இடம் Terminus க இருந்தாலும் பயணம் முழுவதும் ஹாயாக இருக்கையில் அமர்ந்து செல்லவேண்டுமென்றால் வண்டிநிலையத்துக்குள் நுழையும்போதே ஏறினால்தான் இருக்கை கிடைக்கும். அல்லது திபு திபு வென்று இறங்கும் கூட்டம் ஏற முயல்பவரைப் பின்னுக்குத் தள்ளி ஏறவே விடாது. இருக்கையும் போய்விடும். வசதியாக நின்றுக்கொள்ளக்கூட சிலசமயங்களில் (முக்கியமாக Peek hour நேரத்தில்) இடம் கிடைக்காமல் போய்விடும்.

அதே போன்று வண்டி இறங்கவேண்டிய நிலையத்தினுள் நுழையும்போதே இறங்க தவறினால் திபு திபுவென்று வண்டியினுள் ஏறும் கூட்டம் இறங்குபவரை இறங்க விடாது. அதையும் மீறி ஏறும் கூட்டத்தினூடே இறங்க முயற்சித்தால் உடை பாழாவதுடன் கையில் வைத்திருக்கும் பொருளும் நாசமாகும் (பழங்களாயிருந்தால் ஜூஸாகிவிடும். சிப்சாயிருந்தால் மிக்சராகிவிடும்.) சிலசமயம் இறங்குபவருடைய பர்சோ, அல்லது கைக்கடிகாரமோ காணாமல் போகிவிடவும் வாய்ப்புண்டு.

இப்போது மேற்கூறிய வேடிக்கையான சம்பவத்துக்கு வருகிறேன்.

அதற்கு முன் ஒரு விஷயம்.

மும்பை ஹார்பர் மார்க்கம் தவிர, மத்திய மற்றும் மேற்கு ரயில்வே மார்க்கங்களில் சாதா மற்றும் விரைவு தடங்கள் என்ற இருவிதமான தடங்கள் உள்ளன. விரைவு தடத்தில் செல்லும் வண்டிகள் சில குறிப்பிட்ட முக்கியமான நிலையங்களில் மட்டுமே நிற்கும்.

நான் குறிப்பிட்ட தினத்தன்று, அலுவலக வேலைக் காரணமாக ‘பாந்த்ரா’ செல்ல மேற்கு ரயில்வே மார்க்கத்தில் ‘சர்ச்கேட்’ நிலையத்திலிருந்து புறப்பட்ட விரைவு வண்டியிலேறி பயணம் செய்துக்கொண்டிருந்தேன். பகல் நேரமானதால் புறப்படும்போது அவ்வளவு கூட்டமில்லை. வண்டி தாதர் நிலையத்தில் நின்று புறப்படும்போது கூட்டம் பிதுங்கி வழிந்தது. அடுத்த நிறுத்தம் மாஹிம்.

வண்டி ‘மதுங்காவை’ நெருங்கிக்கொண்டிருக்க, வண்டியிலிருந்த ஒருவர் (இனிமேல் இவர் நம் நண்பர்) அருகிலிருந்தவரைப் பார்த்தார். மதுங்காவில் பிளாட்பாரம் எந்த பக்கம் வரும் என்று கேட்டார் (மும்பை ரயில் தடத்தில் இது ஒரு பெரிய தலைவலி. ஒவ்வொரு நிலையத்திலும் பிளாட்பாரம் வலது புறம், இடது புறம் என்று மாறி, மாறி வரும். அதைத் தெரிந்துக்கொண்டு இறங்கத் தயாரவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்). அவர் நம் நண்பரை வியப்புடன் பார்த்தார். ‘ஏ காடி தேஜி காடி ஹை பாய்! மதுங்கா மே நஹி ருக்கேகா, (இது விரைவு வண்டிங்க. மதுங்காவில் நிற்காது) என்றார்.

நம் நண்பரின் முகம் இருண்டு விட்டது. கையிலிருந்த மதுங்கா வரையிலான பயண்ச்சீட்டை பரிதாபமாக பார்த்தார். மதுங்காவில் இறங்க வேண்டியவர் அடுத்த நிலையமான ‘மாஹிம்’மில் இறங்கினால் துவக்க (Starting) நிலையமான ‘சர்ச்கேட்டி’லிருந்து வண்டி நிற்குமிடமான (Terminus) - ‘பயாந்தர்’ என்று நினைக்கிறேன் - வரை பயணக்கட்டணத்துடன் ஒரு கணிசமான தொகை அபராதமாக கறந்துவிடுவார்கள்.

அருகிலிருந்த வேறொரு பயணி ‘ ஃபிக்கர் மத் கரோ பாய்’ (கவலைப் படாதீங்க) என்றவாறு நம் நண்பருடைய தோளில் கைவைத்தார். ‘மதுங்காவை நெருங்கும்போது சிக்னல்ல சில சமயம் மெதுவாக போகும். நீங்க லேசாக வலதுகாலை பிளாட்ஃபாரத்தில் வைத்து குதித்து இறங்கி, கீழே விழாம இருக்கறதுக்கு வண்டி போற திசையிலேயே வேகமாக ஓடுங்க’ என்று ஓடும் வண்டியிலிருந்து இறங்கும் வித்தையை மிகச்சாதாரணமாக விஷயம்போல் ஒரு விஷமப்புன்னகையுடன் கூறினார். நம் நண்பரும் அவருடைய அறிவுரைப்படி (வேறு வழியில்லாமலும்) செய்வதற்கு அரைகுறை மனத்துடன் தயாரானார்!

அவருடைய அதிர்ஷ்டம், (துரதிர்ஷ்டம்னும் சொல்லலாம்) மதுங்கா நிலையத்தைக் கடக்கும்போது வண்டி மெதுவாக சென்றது. நம் நண்பர் சக பயணிகளின் உந்துதலால் அவர்கள் கூறியதுபோலவே வலதுகாலை மெதுவாக பிளாட்·பாரத்தில் வைத்து லாவகமாக குதித்து இறங்கி வண்டி சென்ற திசையிலேயே வேகமாக ஓட ரம்பித்தார். அவர் இதுவரை செய்ததைப் பாராட்டி வண்டியிலிருந்த சிலர் கரவொலி எழுப்பி பாராட்டினர் (இதுதான் மும்பையின் ஸ்பெஷாலிட்டி! அவரவருடைய வேலைகளையும் மறந்து ரயில் பயண நேரத்தில் ஜாலியாக நேரத்தை செலவிடுவார்கள். முக்கியமாக நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே இருப்பவர்கள். நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினர்தான் முகமூடி அணிந்தவர்களைப்போல் அக்கம்பக்கம் நடக்கும் எதையும் கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருப்பர்).

நம் நண்பர் அவருடைய அறிவுரையை மிகவும் சீரியஸாக எடுத்துக்கொண்டு வண்டியின் பாதையிலேயே வேகமாக ஓடியது சரிதான். ஆனால் ஒரு சில நொடிகளிலேயே ஓட்டத்தைக் குறைத்து நின்றிருக்க வேண்டும். அல்லது வண்டியை விட்டு சற்றுத்தள்ளி ஓடியிருக்க வேண்டும்.

இரண்டுமில்லாமல் நம் நண்பர் வண்டியின் வெகு அருகிலேயே வேகத்தைக் குறைக்காமல் ஓடவே அடுத்த கோச்சிலிருந்தவர்கள் அவர் வண்டியில் ஏறுவதற்குத்தான் முயற்சி செய்கிறார் என நினைத்து அவருடைய இடுப்பில் கைகொடுத்து அலாக்காக உள்ளே தூக்கி ஏற்றினர்!

அதைப் பார்த்த நானும் என்னுடன் பயணம் செய்தவர்களும் ஒருகணம் அதிர்ச்சியடைந்தாலும் மறுநிமிடம் குபீர் என்ற சிரிப்பொலி கோச் முழுவதும் எதிரொலித்தது!

மற்றவை அடுத்த பதிவில்.

07 அக்டோபர் 2005

மும்பை புறநகர் ரயில் பயணம் - ஒரு அனுபவம் (1)

மும்பையில் இதுவரை வசிக்காதவர்களுக்கும், மும்பையில் வசித்தும் அதன் புறநகர் மின்ரயிலில் பயணம் செய்யாதவர்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!
என்னுடைய ஏழு ஆண்டுகால மும்பை வாசத்தில் செம்பூரில் வசித்த மூன்று வருடங்கள் எப்போதாவதும், வாஷி மற்றும் முலண்டில் வசித்த மீதமுள்ள நான்காண்டு காலம் தினமும் இரண்டு முறையும் இந்த மின்வண்டியில் பயணம் செய்து கிடைத்த அனுபவங்களை என் வாழ்நாளில் மறக்கவே இயலாது.
அதில் இன்பமான, கசப்பான என பல அனுபவங்கள்..
அதை எல்லாம் எழுத ஆரம்பித்தால் எத்தனைப் பதிவுகள் வேண்டுமானாலும் எழுதலாம்.
ஆரம்ப காலத்தில் குறிப்பாக, மும்பை மத்திய லைனில் (Mumai Central Railway) உள்ள முக்கியமான புறநகர் பகுதியான வெஸ்ட் முலன்டில் வசித்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் பெரும்பாலும் கசப்பானவைதான்.
அதுவும் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருச்சி, தூத்துக்குடி, மதுரை போன்ற சிறுநகரங்களில் இருபதாண்டு காலம் ப்ணியாற்றிவிட்டு மும்பை மா.........நகரத்தில் அதுவும் அதன் பிரசித்திபெற்ற புறநகர் ரயிலில் காலூன்றி பயணம் செய்வதென்பது It is a terrific experience in itself.
முதல் நாள், முலுன்ட் ரயில் நிலையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்த என் வீட்டிலிருந்து காலை சுமார் 7.30 மணிக்கு புறப்பட்டு ரயில் நிலையத்தை அடைந்தேன்.
சீசன் டிக்கெட் இன்னும் எடுத்திருக்கவில்லை. மதுரையில் திரைப்பட அரங்குகளில் மட்டுமே காணக்கூடிய அளவுக்கு நீ....ண்ட வரிசைகள் பயணச்சீட்டு வாங்க. நம் ஊரிலிருப்பதுபோல் பெண்களுக்கென்று தனி வரிசைகளில்லை.. ஆனால் நம் ஊரில் நடப்பதுபோல் வரிசைகளுக்குள் அடாவடியாய் நுழைவதோ, மற்றவர்களுக்கு பயணச்சீட்டு வாங்கித் தருவதோ போன்ற நல்ல (கெட்ட?) பழக்கங்களோ அங்கு இல்லை. எல்லோரும் கையில் அன்றைய செய்தித்தாளோ அல்லது வார, மாத சஞ்சிகையையோ வைத்து வாசித்துக்கொண்டிருந்தனர்.
நின்றுக் கொண்டு படிப்பதை நம் ஊர்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் நடந்துக்கொண்டு, பஸ்சிலும், ரயிலிலும் தொங்க்கிக்கொண்டே படிப்பதை மும்பையில்தான் பார்க்க முடியும்!
ஒருவழியாக வரிசையில் பயணச்சீட்டைப் பெற்றுக்கொண்டு ரயில்மேடையை (Platform) அடைந்தால் கூட்டமோ கூட்டம். மூன்று, நான்கு ரயில்களில் இடம் கிடைக்க முயற்சி செய்து தோல்வி. பிறகுதான் புரிந்தது சூட்சுமம்! வந்து நிற்கும் வண்டியின் வாயிலருகே சென்று நின்றால் போதும் உள்ளே செல்ல முயலும் பயணிகளின் கூட்டமே நம்மை ஏற்றிவிடுகிற/ இறக்கிவிடுகிற மாஜிக்!
நான் சென்னையிலிருந்து பதவி உயர்வு பெற்று மும்பையில் உள்ள என்னுடைய வங்கிக்கிளைகளை கண்ட்ரோல் செய்யும் Zonal Officeல் Chief Manager ஆக சேர்ந்திருந்தேன். டிப்டாப்பாக உடையணிந்து டை கட்டிக்கொண்டு வரவேண்டும என்பது அலுவலக நியதி.
அப்படித்தான் முதல் நாள் Reymond's Pant + VanHuesan Shirt+Zodiac Tie+Odysee Briefcase என பந்தாவாக (முதல் நாளே என்னுடைய பாஸை இம்ப்ரஸ் பண்ணனுமே ) வீட்டிலிருந்து புறப்பட்டேன். மும்பை வி.டி (இப்போது அது சத்ரபதி சிவாஜி டெர்மினல்) யில் வந்து இறங்கியபோது என்னைப் நீங்கள் பார்த்திருக்கவேண்டும்.
Pantக்குள் Tuck செய்திருந்த Shirt முற்றிலுமாக கசங்கி Pant க்கு வெளியே, Zodiac Tye கஷ்டப்பட்டு கால்மணிநேரம் செலவழித்து இட்ட Knot முற்றிலுமாக அவிழ்ந்து தொங்க, Brylcream இட்டு Arrange பண்ண தலைமுடி கலைந்து (கையில் கட்டியிருந்த வாட்ச்சும், பிடித்திருந்த Briefcase மட்டும்தான் அப்படியே இருந்தன!) அலங்கோலமான கோலத்தில் Kaala Goda வில் இருந்த அலுவலகம் வந்து சேர்ந்தபோது, நல்ல வேளை அலுவலகத்தில் இருந்தவர்களெல்லாரும் என் கீழ் பணிபுரிவபரகளாயிருந்ததாலும் என்னுடைய பாஸ் இன்னும் வராததாலும் First day First Impressionல் இருந்து தப்பித்தேன்.
அன்று என்னுடைய கோலத்தைப் பார்த்து பரிதாபப்பட்ட என்னுடைய அலுவலக ஊழியர்கள் எல்லாரும் சேர்ந்து ரயில் பயணத்தில் செய்யவேண்டிய Do's & Don'ts ஐ ஒரு பெரிய பட்டியலே தயாரித்து கொடுத்துவிட்டனர்.
அவர்களுடைய பட்டியலில் இருந்தவைகளில் முக்கியமானவை
1. இரண்டாம் வகுப்பில் பயணம் செய்யலாகாது..
2. முதல் வகுப்பில் பயணம் செய்தாலும் முலன்ட் நிலையத்தில் ஏறவோ, இறங்கவோ கூடாது (ஞாயிற்றுக்கிழமைகளில் தவிர). முலன்டுக்கு அடுத்த நிலையமான தானே நிலையத்திற்கு Down செய்து அங்கிருந்து ஏறவேண்டும். Down என்றால் முன்னோக்கி செல்லாமல் பின்னோக்கி செல்லவேண்டும். மேலும் தானே ஒரு பெரிய சந்திப்பு நிலையமாகும் (Junction). வி.டி. சென்றடையும் பல புறநகர் வண்டிகள் காலையில் அங்கிருந்து புறப்படும் மாலையில் அங்கே நின்றுவிடும் (Terminate). ஆகவே மற்ற ரயில் நிலையங்களோடு ஒப்பிடும்போது நெரிசல் குறைவாயிருக்கும்.
3. தினசரி பயணச்சீட்டுக்கு பதிலாக சீசன் பயணச்சீட்டு எடுக்க வேண்டும். கட்டணமும் குறைவு, மூன்று மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும்.
என் நண்பர்கள் அளித்த பட்டியலில் மிகவும் முக்கியமானவை இந்த மூன்றையும் அன்றிலிருந்து கடைப்பிடிக்க ஆரம்பித்தேன்.
அன்றிலிருந்து என்னுடைய பயணம் ஓரளவுக்கு எளிதாய் அமைந்தது!
வேடிக்கையான அனுபவங்கள்.. அடுத்த பதிவில்!

06 அக்டோபர் 2005

வரதட்சிணைக்கு வக்காலத்து

ஆரம்பத்திலயே சொல்லிடறேன்.

இது வரதட்சிணைக்கு வக்காலத்து வாங்கற பதிவில்லை. தலைப்புல மட்டும்தான் வக்காலத்து.

வரதட்சிணைய நான் ஆதரிக்கறனா, எதுக்குறனாங்கறதல்ல பிரச்சினை. அது எப்படி, எதுக்காக நம்ம சமுதாயத்துல வேரூன்றி போயிருச்சின்னு ஒரு சின்ன ஆராய்ச்சி பண்ணி பார்த்தா என்னன்னு தோணுச்சி..

அதுக்கு முன்னால எப்பாவோ படிச்ச ஒரு கவிதைய இப்போ ரெஃபர் பண்ணலாம்னு தோணுது!


நாள் பாத்து
நல்ல நாள் பாத்து

நேரம் பாத்து
நல்ல நேரம் பாத்து

நடப்பதுதான்
திருமணம் என்ற
விதி மாறுமா

என்நேரமும்
பொன்நேரம்தான்
எந்த நாளும்
நல்ல நாள்தான்

என்ற நிலை
வருமா

அன்றுதான்
வரும்

வராத
திரும்பி வராத
தட்சிணையாம்
இந்த
வரதட்சிணை
சாவும் நாளும்!

இது சுமார் இருபது வருஷங்களுக்கு முன்னால ஏதோ தமிழ் வாரப்பத்திரிகையில படிச்சிருக்கேன்.

அப்போ நான் நினைச்சி பார்த்தேன். கண்டிப்பா இந்த கண்றாவி இருபது, இருபத்தஞ்சி வருஷத்துல இல்லாம போயிறும்னு.

ஆனா, என்னாச்சி? இண்ணைக்கும் இந்த நாள் பார்க்கறது, நேரம் பார்க்கறதுன்னு நடந்துக்கிட்டுத்தான் இருக்கு! இன்னொரு வெட்கக்கேடு சாந்திமுகூர்த்தத்துக்கும் நாளும் நேரமும் பாக்குறது!! இதுக்கெல்லாம் முன்னால நிக்கற பெண்கள் (பெண் மற்றும் பிள்ளையை பெற்றவர்களை சொல்லுறேன்) பெண்ணுரிமையைப் பத்தி பேசறது அத விட கொடுமை.

அப்புறம் வரதட்சிணை மாத்திரம் எப்படிங்க போகும்?

சரி, இந்த கொடுமை (அதாவது பொண்ண பெத்தவனுக்கு - பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைன்னுதான் சமுதாயம் சொல்லுது. ) நம்ம நாட்லமட்டும் தானா.. அப்படீன்னா இந்த வார்த்தை Oxford Dictionaryல ஏறியிருக்காது.

இந்த பழக்கம் நம்ம நாட்ல எப்படி வந்திருக்கும்னு நினைக்கறீங்க?

நம்ம இந்து திருமணத்துல கன்னிகாதானம்னு ஒரு சடங்கு இருக்கும்.

அந்த வார்த்தைய பிரிச்சிப் பாருங்க கன்னிகா+தானம்னு வரும். கல்யாணப் பொண்ணை தகப்பனோ அல்லது தகப்பனார் இல்லாத பட்சத்தில் குடும்பத்தில் மூத்த ஆண் தன் மடியில் அமர்த்தி தாரைவார்த்து கொடுக்கற வழக்கம் இன்னமும் நம் நாட்டுல இருக்கு.

நான் இதுவரைக்கும் இந்த வார்த்தைக்கி கன்னிப் பெண் ஒருத்தியை தானமாக குடுக்கறதுங்கறதுன்னு நான் நினைச்சிக்கிட்டிருந்தேன்.

ஆனா கீழ இருக்கற விளக்கத்தைப் பாருங்க!


"Dowry (Dahej/Hunda) as we all know is paid in cash or kind by the bride's family to the groom' s family alongwith the giving away of the bride (Kanyadanam). The ritual of Kanya-danam is an essential aspect in Hindu marital rites: Kanya = daughter, danam = gift. A reason for the origin of dowry could perhaps be that the groom and his family had to take up the 'onerous' responsibility of supporting the bride for the rest of her life. "

இந்த விளக்கம் ஒரு இணையதளத்துலருந்து சுட்டது!

சரி இந்து மதத்தைச் சாராத மற்ற மதங்களிலும் இந்த கொடுமை இருக்குதே.

நம்ம நாட்ல இந்துக்கள்தானே அதிகம்? அவங்கள சுத்தித்தான மத்த மதத்தவங்களும் வாழ வேண்டியிருக்குது.. அவங்ககிட்டருக்கற நல்லதயெல்லாம் விட்டுட்டு நாள் பாக்கற, நேரம் பாக்கற, வரதட்சிணை வாங்கற கெட்டத மட்டும் நல்லா புடிச்சிக்கிட்டாங்க.

அதாவது, கல்யாணமாகி எங்க வீட்டுக்கு வர்ற பொண்ணை நாங்க காலம் பூராவும் இருக்க இடம் குடுத்து, சாப்பாடு போட்டு, துணிமணி எடுத்து குடுத்து(முடிஞ்சா நகை, நட்டெல்லாம் பூட்டி) , கண் கலங்காம பாத்துக்கறோமில்லே? எங்களுக்கு எவ்வளவு செலவாகும்? அதுக்குத்தான் கல்யாணம் பண்றப்பவே அட்வான்சா வாங்கிக்கறோம்.

அப்ப்டீங்கறது ஆண்மகனைப் பெற்ற புண்ணியவான்களின் வாதம் .

இன்னைக்கி நாங்கதான் ஆண்களுக்கு ஈக்வலா படிக்கறோம், வேலைக்கி போறோமே அப்படீங்கறது இன்றைய பெண்களோட வாதம்.

ஆனா இன்னைக்கி இந்தியாவுல படிச்சி, வேலைக்கி போற பெண்கள் இந்தியாவுலருக்கற மொத்த பெண்கள்ல எத்தனை சதவிகிதம் இருக்கும்? பத்து, இல்லன்னா பதினைஞ்சி?


அதனால இந்த நிலமை என்றைக்கி மாறுதோ அன்றைக்குத்தான் நாங்களும் வரதட்சினண வாங்குறத நிறுத்துவோம்.

பிள்ளைய பெத்தவங்களோட இந்த வாதம் சரியா, தவறா..

சரிங்க, இதுக்கு என்னதான் வழி.. அதாவது சட்டத்துக்கு புறம்பா..

சொல்லுங்களேன்!

சட்டத்தால இன்னைக்கில்ல, என்னைக்கிமே ஒண்ணும் செய்ய முடியாது..

ஆணா, பெண்ணா - இன்றைய தேவை இதுவல்ல

இன்றைய ஹிண்டு (மெட்ரோப்ளஸ்) செய்தித்தாளில் ஆண், பெண் உறவினைப் பற்றி மிக அருமையான கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன.
இயற்கை, அதாவது Nature, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்துள்ளது.
வணவிலங்குகளின் வாழ்க்கை முறையை ஊன்றி பார்த்தவர்களுக்கு இந்த உண்மை தெளிவாகப் புரிந்திருக்கும்!
வணவிலங்குகளின் மன்னன் எனப்படும் சிங்கமாயிருந்தாலும் அல்லது மற்றெந்த வகை விலங்குகளானாலும் ஆணினம் மிக அரிதாகவே இரையைத்தேடி போகின்றது. பெண்ணினமே அந்த கடமையை ஏற்றுக்கொள்கிறது.
கருத்தாங்கியிருக்கும் சமயத்திலும் கூட தன் ஜோடியின் எந்தவித உதவியும் இன்றி பிரசவிக்கும்நேரம் வரும்வரை இரைத்தேடி அலையும் பெண் விலங்கு பிரசவம் முடிந்த அடுத்த நாளே மீண்டும் இரையைத் தேடி அலைய ஆரம்பித்துவிடுகின்றது.
தன் வீட்டையும் தன் குட்டிகைகளையும் எதிரிகளிடமிருந்து காப்பது ஆணினத்தின் கடமை . சுருக்கமாகச் சொன்னால் ஒரு வீட்டின் சுற்றுச்சுவரைப் போல தன் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு உறுதியளிப்பது ஆணினத்தின் கடமை!
இருப்பினும் இருபாலாரிலும் உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடோ அல்லது ஆணினம் பெண்ணினத்தை இழிவு படுத்துவது என்ற நிலையோ விலங்குகளிடையே இல்லை.
ஆனால் மனித இணத்தை எடுத்துக்கொண்டால் பெண்கள் தங்களுடைய இல்லங்களில் காலை கண்விழித்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் நேரம் வரையிலும் (பின் தூங்கி முன் எழுவாள் பத்தினி என்று சொல்லிச் சொல்லியே ஆண்கள் தப்பித்துக்கொள்வது வழக்கமாகிவிட்டது) செய்யும் வேலை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
அலுவலகப் பணிக்கு செல்லாத பெண்களை 'நீங்க என்ன பண்றீங்க' என்று கேட்டுப் பாருங்கள். 'சும்மாத்தான் இருக்கேன்' என்று பதில் வரும். அவர்களே தங்களுடைய வீடுகளில் செய்யும் வேலையை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் உணவகங்களில் சமையல் வேலை செய்யும் ஆண்கள் தங்கள் வீட்டில் சமைப்பதையோ அல்லது பியூட்டி பார்லரில் முடிஅலங்காரம் செய்யும் ஆண்கள் தங்களுடைய மனைவிக்கோ அல்லது தங்கள் பெண் குழந்தைக்கோ அலங்காரம் செய்வதை கேவலமாகவே நினைக்கிறார்கள்!
விலங்கினத்தில் இல்லாத வேறொன்று அகங்காரம் (Arrogance) மற்றும் வரட்டுக் கவுரவம் (Ego). இது இரண்டும் இல்லாததாலோ என்னவோ விலங்குளிடையே உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடும் இல்லை அவைகளுக்கிடையே தர்க்கங்களும், சச்சரவுகளுமில்லை..
வரட்டுக் கவுரவம் பெரும்பாலும் படித்தவர்களிடையேத்தான் காணப்படுகின்றது. எந்த ஒரு ஆணும் தன்னைவிட அதிகம் படித்த, அதிக திறமையுள்ள பெண்ணை தன் எதிரியாகவே பார்க்கிறான். அது தன் மனைவியாயினும்!
ஆணும் பெண்ணும் ஊதியம் ஈட்டும் பெரும்பாலான குடும்பங்களில் தன் கணவனைவிட அதிகம் ஊதியம் ஈட்டும் பெண்கள் தங்கள் கணவனுடைய வரட்டுக் கவுரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சோர்ந்துபோய் விவாகரத்துவரை செல்லுவதை இன்று மிகச்சாதாரணமாகக் காணமுடிகிறது.
கல்வியில் பெண்களுக்கு முன்னுரிமை என்ற மத்திய, மாநிலங்களின் கொள்கை இந்திய பொருளாதாரத்தில் பெருமளவு வளர்ச்சியை ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான். ஆனால் அதேசமயம் அது தனிமனித சந்தோஷத்தையும், குடும்பங்களில ஒற்றுமையையும் சீர்குலைத்து விட்டது என்பதையும் மறுப்பதற்கில்லை!
இதற்கு காரணம் ஆணா, பெண்ணா என்று தர்க்கிப்பதற்கு மாறாக, தவறு யார் பக்கம் இருந்தாலும் திருத்திக்கொள்வதுதான் இன்றைய தேவை.

03 அக்டோபர் 2005

நம் குணாதிசயங்கள் - ஒரு பார்வை

நான் யார்?

இது எனக்கே தெரியவில்லையென்றால் மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது?


ஆனால், நம்மில் பலருக்கும் இப்பிரச்சினை எப்போதுமில்லாவிட்டாலும் எப்போதாவது தோன்றத்தான் செய்கிறது.


என்னுடைய கடந்தகாலத்தில் ஒரு விடயத்தை நான் எப்படி அணுகினேனோ அதே விடயத்தை அதே அணுகுமுறையில் இன்றோ நாளையோ அணுகுவேனா என்பதை உறுதியாய் சொல்லவியலாது!

நேற்று அந்த அணுகுமுறையால் எனக்குக் கிடைத்த அனுபவம் என்னுடைய இன்றைய அணுகுமுறையை ஒருவேளை மாற்றியிருக்கலாம். அதன் பயனாக என்னுடைய இன்றைய முடிவு கடந்தகால முடிவிலிருந்து மாறுபடவும் வாய்ப்பிருக்கிறது.


A person's personality, though each one is destined to a kind of behaviour depending on his date and time of his birth, is subject to undergo a series of changes as he goes through his life!
நம்முடைய அடிப்படை குணாதிசயங்கள் (Basic Personality ) நம்முடைய பிறப்பு நட்சத்திரத்தையே (Birth Star) சார்ந்திருக்கிறது என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.


ஆனாலும் நம் வளர்ப்பு முறை, நம் அன்றாட வாழ்வில் நமக்கு கிடைக்கும் பலதரப்பட்ட அனுபவங்கள் நம்முடைய குணாதிசயங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.


நம்முடைய குணாதிசயங்களை நாமே கண்டு கொள்ள பல பரிசோதனைகள் உள்ளன. அச்சோதனைகள் அடங்கிய சில இணையத்தளங்களின் பெயர்களை கீழே கொடுத்துள்ளேன்.


இன்னும் இது போன்ற பல இணையத்தளங்கள் உள்ளன.


இச்சோதனைகளில் வினாக்கள் அடங்கிய சோதனைகள் நம்முடைய அடிப்படைக் குணாதிசயங்களை ஓரளவிற்கு துல்லியமாக அறிந்துக்கொள்ள உதவுகின்றன.


நான் இதை என்னுடைய வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் பயில வரும் ஊழியர்களின் குணாதிசியங்களை அறிந்துகொள்ள வெற்றிகரமாக பயன்படுத்தியிருக்கிறேன்.


அதே சமயம் ஒரே சோதனையை ஒரு ஆறு மாத கால இடைவெளியில் அப்போதைய மனநிலையில் எதிர்கொள்ளும்போது கிடைக்கக்கூடிய விளைவு (ரிசல்ட்) முந்தைய விளைவிலிருந்து மாறுபடுவதையும் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.


அதனால்தானோ என்னவோ இறைவனின் படைப்புகளில் அளவிடவியலாதது மனிதமனம்தான் என்று கூறுகிறார்கள்!
நீங்களும் உங்களுடைய குணாதிசயங்களை அறிந்துக்கொள்ள மேலே குறிப்பிட்டுள்ள இணையத்தளங்களை சென்று பாருங்களேன்!
இப்பதிவை வாசிப்பவர்கள் தங்களுடைய அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்துக்கொள்ளுமாறு அழைக்கிறேன்.

நன்றி!அன்புடன்
டி.பி.ஆர். ஜோசஃப்

குழந்தைகளாய் மாறுங்கள், குதூகலியுங்கள்!

நான் எங்கள் வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரிந்த நான்காண்டு காலத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்களில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

நான் அப்பதவியில் அமர்த்தப்படுவதற்கு முன் இந்தியாவிலுள்ள எங்களுடைய பல வங்கிக் கிளைகளில் மேலாளராகப் பணியாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் அலுவலகத்தில் நான் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு சிறிய பிரச்சினைக்கும் என்னால் மட்டுமே தீர்வு காணமுடியும் என்ற நினைப்பில் என் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளால் சுலபமாய் தீர்க்க முடிகிற விஷயங்களில் எல்லாம் தலையிட்டு தீர்வுகாணுகிறேன் பேர்வழி என்று எளிதாய் தீர்க்கக் கூடிய விஷயங்களையும் சிக்கலாகிவிடுவதுண்டு.

பயிற்ச்சிக் கல்லூரியில் முதல்வராய் சேர்ந்தபோது இதுவரை சந்தித்திராத பல அனுபவங்கள் என அகக்கண்களைத் திறந்துவிட்டது.

கல்லூரியில் முக்கியமான பணி எங்கள் வங்கியிலுள்ள இடைநிலை அதிகாரிகளுக்கு (Middle Management Officers) பயிற்சி வகுப்புகளை நடத்துவதுதான்.

ஒரு வருடத்தில் பயிற்ச்சி வகுப்புகள் சுமார் 30லிருந்து 40 வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு. ஒவ்வொரு பயிற்ச்சி வகுப்புக்கும் 30 இடைநிலை அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள்.

இடைநிலை அதிகாரி என்ற பதவியை அடைந்தவர்கள் குறைந்த பட்சம் 35 வயதைக் கடந்தவராக இருப்பர்.

இவ்வயதில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதென்பது மிகவும் கடினமான காரியம். வங்கிக் கிளைகளில் மேலாளராக சுமார் 25 ஊழியர்களை அதிகாரம் செய்துப் பழகிப்போனவர்களை ஒருவார காலம் மாணவர்களாய் அமரச்செய்து பயிற்புவிப்பது சாதாரண விஷயமல்ல!

அதுவும் முதல்நாள் முதல் வகுப்பை நடத்தி முடிப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். அதற்கெனவே பிரத்தியேகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தும் பெரும்பாலும் அவர்கள் பயிற்சிப் பெற வந்தவர்களுடைய வயதை ஒட்டியே இருப்பர். சிலர் பயிற்சி பெற வந்தவர்களிடமே முன்பு பணிபுரிந்தவர்களாயிருப்பர்.

அந்நேரங்களில் கல்லூரியின் முதல்வர் என்ற நிலையில் அவர்களுக்கு வகுப்புகளை நடத்தும் பணி என் தலைமேல் வந்து விழும்..

அந்நேரங்களில் கல்லூரி நூலகத்தில் இருந்த உளவியல் புத்தகங்களிலிருந்து படித்த சில குறிப்புகள எனக்கு மிகவும் உதவியுள்ளன!

முதல் வகுப்பிலேயே அவர்களை மாணவர் நிலைக்குக் கொண்டுவரும் உத்திகளில் ஒன்று அவர்களுக்குள்ளே இருக்கும் குழந்தைநிலையை (Child Level) வெளிக் கொண்டு வருவது..

நம் எல்லோரிலும் இத்தகைய குழந்தை மன நிலை மறைந்திருக்கிறது. இருப்பினும் நம்முடைய அன்றாட பணிகளுக்கிடையில் நம்மில் பலருக்கும் அதை வெளிக்ககொண்டு வர வாய்ப்பே கிடைப்பதில்லை.

நம்முடைய குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யமுடியும். தொலைக்காட்சியில் ஒரு கண் வைத்துக்கொண்டே தங்களுடைய ஹோம் வொர்க்கை செய்வார்கள், அதே சமயம் வீட்டில் பெரியவர்கள் யாராவது பேசிக்கொண்டிருந்தால் அதையும் ஒட்டுக் கேட்பார்கள். சமையலறையில் சமைப்பதையும் மோப்பம் பிடித்து, அவர்களுக்கு பிடித்த சமையலாயிருந்தால் ' அம்மா எனக்கு' என்று சமையலறையை நோக்கி ஓடுவார்கள்..

இதை நம்மாலும் செய்யமுடியும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

என் அனுபவத்தில், அலுவலகத்தில் என்னால் தீர்க்க இயலாத பல பிரச்சினைகளை பணிக்கு சேர்ந்து சில வருடங்களே ஆன ஊழியர்கள் மிக எளிதாய் தீர்த்துவிடுவதை நான் கண்கூடாய் கண்டிருக்கிறேன்.

அதாவது, பிரச்சினையை ஒரே கோணத்தில் காணாமால் முற்றிலும் மாறுபட்ட புதுக்கோணத்தில் காணும்போது அந்த பிரச்சினைக்கு மிக எளிதில் தீர்வுகாண இயலும். அதைத்தான் உளவியல் வல்லுனர்கள் ஆங்கிலத்தில் Out of Box Thinking என்பர்.

எங்களிடம் பயிற்சி பெற வரும் நடுத்தர வயதுடைய அதிகாரிகளை மாணவர் நிலைக்குக் கொண்டு செல்ல பலவிதமான Problem Solving Gamesஐ கொடுத்து தீர்வுகாண வாய்ப்பு கொடுப்பதுண்டு. சில நேரங்களில் அவர்கள் முன் வைக்கப்படும் பிரச்சினைகள் மிக மிக மடத்தனமாக (Silly) இருக்கும். இருப்பினும் Puzzles முறையில் அளிக்கப்படும் இப்பிரச்சினைகளுக்கு சிறு சிறு குழுக்களாக அமர்ந்து தீர்வு காண்கையில் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் அவர்களைப் பள்ளிப்பருவத்திற்கு இட்டுச் செல்வதை நான் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறேன்.


நீங்கள் குழந்தையாய் மாறாவிட்டால் மோட்ச ராச்சியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்கிறது பைபிள்.

ஆம்! குழந்தையாய் (சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்) மாறுங்கள்! குதூகலியுங்கள்!!

கீழே அளிக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் நாங்கள் உபயோகப்படுத்திய பல விளையாட்டுகளை கொண்டுள்ளன.

www.gamequarium.com/problemsolving.html
www.theproblemsite.com/games.asp
www.playkidsgames.com/problem_solveGames.htm


அன்புடன்
டி.பி.ஆர். ஜோசப்