நேரத்தை அறுவடை செய்தல் (Harvesting time) என்ற வார்த்தை பயன்பாட்டை கேட்டிருக்கிறீர்களா?
சமீபத்தில் இணையதளம் ஒன்றில் ஒரு ஆங்கிலக் கட்டுரையில் இந்த சொல் பயன்பாட்டை படித்தேன்.
இதற்கு நேரத்தை மிச்சப்படுத்துதல் என்று சுருக்கமாக கூறிவிடலாம்.
ஒவ்வொரு மணித்துளியும் பொன் போன்றது என்பதை மும்பையில் சில ஆண்டுகள் வசித்தால் போதும், தெளிவாக தெரிந்துவிடும்.
நான் மும்பையில் இரு தவணைகளாக சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளேன்.
முதல் தவணையில் நான் பணியாற்றிய செம்பூர் கிளைக்கு அருகிலேயே குடியிருந்ததால் அலுவலகத்திற்கென்று போக-வர செலவிடும் நேரம் அதிகம் போனால் அரை மணி நேரம்தான். பெரும்பாலான நாட்களில் உடன் வசித்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே நடந்து சென்றுவிடுவேன்.
ஆனால் இரண்டாவது தவணையில் நான் பணியாற்றிய இடம் காலா கோடா என்ற பகுதி மும்பையின் ஒரு கோடியிலும் நான் வசித்த இடமான வாஷி மறு கோடியிலும் இருந்ததால் போக-வரவே தினமும் சுமார் மூன்று மணி நேரம் செலவிட வேண்டியிருக்கும். அப்போது வாஷியிலிருந்து மும்பை வி.டி. ரயில் நிலையத்திற்கு விரைவு மின்வண்டியும் கிடையாது.
வாஷி ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் வெவ்வேறு மார்க்கங்களில் மின்வண்டிகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கும். நான் செல்லவிருந்த மார்க்கத்தில் சுமார் ஒன்பது நிமிடங்களுக்கு ஒரு வண்டிதான். அதாவது அதிகாலை 4..01 முதல் வண்டி என்று துவங்கி ஒவ்வொரு ஒன்பது மணித்துளிகளுக்கு ஒரு வண்டி என்று அடுத்த நாள் விடியற்காலை 1.00 மணி வரை தொடர்ந்து இரு மார்க்கங்களிலும் வண்டிகள் வரும், செல்லும். இடையில் சிக்னல் கோளாறு, எதிரில் வரும் வண்டிகளுக்கு இடம் விட்டு காத்திருத்தல் போன்றவைகளால் கால தாமதம் ஏற்படும் சமயங்களில் - இது பெரும்பாலும் எல்லா நாட்களிலும் நடக்கும் - அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில் எதுவும் நடக்காது... ஒரு மணித் துளி காலதாமதமாக நாம் நிலையத்தினுள் நுழைந்தாலும் மின்வண்டியை தவறவிட்டுவிட்டு அடுத்த வண்டிக்காக காத்திருக்க வேண்டியதுதான்.
பெரும்பாலும் ஒரு வண்டி காலதாமதமானால் அடுத்த வண்டியில் பயணிப்பதற்கென வந்து சேரும் பயணிகளும் சேர்ந்துக்கொள்ள இரண்டு வண்டிகளுக்கான கூட்டம் நிலையத்தை அடைத்துக்கொண்டு காத்திருக்கும். நம்மால் அந்த பயணிகளுடன் போட்டி போட்டிக்கொண்டு வண்டியில் ஏற முடியவே முடியாது. அதை விட்டு விட்டு அடுத்த வண்டிக்கு காத்திருக்க வேண்டியதுதான். அப்போதுதான் ஒவ்வொரு மணித் துளியின் அருமையும் நமக்கு புரியும்.
சென்னையிலும் இதே அளவு என்றில்லாவிட்டாலும் புற நகர் வண்டிகளை பிடிப்பவர்கள் ஓடும் ஒட்டத்தை பார்த்தாலே தெரியும், நேரத்தின் அருமை!
இதைத்தான் கட்டுரையாளர் harvesting time என்று கூறியிருந்தார். நேரத்தை அறுவடை செய்தல்.
நேரத்தை மிச்சப்படுத்துதல் ஒரு கலை. அது அனைவருக்கும் கைவரும் என்று கூற முடியாது.
சிலர் எல்லாவற்றிலும் பரபரப்பாக இருப்பர். வேறு சிலர் எதிலும் நிதானமாக இருப்பர்.
ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவருமே பரபரப்புள்ளவர்களாக இருந்தாலும் பிரச்சினைதான். அல்லது ஒருவர் பரபரப்பானவராகவும் ஒருவர் நிதானமானவராக இருந்தாலும் பிரச்சினைதான். இருவருமே நிதானமானவர்களாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
பெரும்பாலான வீடுகளில் அலுவலகம் புறப்பட்டுச் செல்லும் சமயங்களில் வாக்குவாதங்கள் ஏற்படுவதே இந்த நேரப் பிரச்சினையால்தான்.
நேரத்தை மிச்சப்படுத்த பல எளிய வழிகள் உள்ளன.
அவற்றில் சில:
1. மென்பொருள் தயாரிப்பவர்கள் தயாரிப்பில் இறங்குவதற்கு முன்பாக ஒரு Flow Chart தயாரித்துக்கொள்வார்கள். அதை நாமும் தினசரி அலுவல்களில் தயாரித்துக்கொள்ளலாம். காலையில் எழுந்ததிலிருந்து எந்தெந்த அலுவல்களை அன்று செய்ய வேண்டும் என்பதை முந்தைய தின இரவே தயாரித்துக்கொள்ளலாம்.
2. எடுத்ததை எடுத்த இடத்திலேயே வைத்துவிடுவது. நம்முடைய பெரும்பாலான நேரம் விரையமாவதே நமக்கு தேவையான பொருட்களை தேடுவதில்தான் என்றால் மிகையல்ல.
3.வீட்டில் எந்த பொருள் அது பற்பசையானாலும் சமையலுக்கு பயன்படும் பொருட்களானாலும் அது இன்னும் இரண்டொரு நாட்களில் தீர்ந்துவிடப்போகிறது என்று தெரிய வரும்போதே அதை ஒரு புத்தகத்தில் (டைரி என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என்று கடைக்குச் செல்ல வேண்டுமோ அந்த தேதியிலேயே) குறித்துக் கொள்ளலாம்.
4. மார்க்கெட்டுக்கு செல்லும்போதும் மார்க்கெட்டின் அமைப்பை மனதில் வைத்துக்கொண்டு வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும். கடை வாயிலிருந்து துவங்காமல் கடைக் கோடியிலிருந்து துவங்கி வாசல் வரை பொருட்கள் கிடைக்கும் பகுதிகளை மனதில் வைத்துக்கொண்டு பட்டியலை தயாரித்தால் நேரமும் மிச்சம் எதுவும் மறந்தும் போகாது. இப்போது பெரு நகரங்களில் மால்கள் தான் பிரசித்தம் என்பதால் அதன் வரைப்படத்தையும் மனதில் வைத்து பட்டியலை தயாரித்துக்கொள்ளலாம்.
5. சமையலில் தினமும் என்ன குழம்பு அல்லது கறிகாய் வைப்பது என்ற குழப்பத்திலேயே இல்லத்தரசிகள் நேரத்தை வீணடிப்பார்கள். என் வீட்டிலும் அப்படித்தான். ஆனால் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றதிலிருந்து அதற்கும் ஒரு அட்டவணை வைத்திருக்கிறேன். கடந்த பத்து வருடங்களாகவே அதாவது 2010லிருந்து வீட்டிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவது என் வேலைதான். ஆகவே எந்த நாள் எந்த சமையல் என்பதையும் நானே தீர்மானித்துவிடுவேன். ஏழு நாட்களுக்கு ஏழு குழம்பு அதற்கு தேவையான கறிகாய் எல்லாம் அந்த அட்டவணைப்படிதான். அதிலேயே தினமும் பல மணித்துளிகள் மிச்சமாவதை உணர முடிகிறது.
7. வெளியில் எங்காவது புறப்பட வேண்டுமென்றால் நான் மனதில் வைத்திருக்கும் நேரத்திலிருந்து குறைந்தது அரை மணி நேரம் முன்பாகவே புறப்பட வேண்டும் என்று வீட்டிலுள்ளவர்களிடம் கூறிவிடுவேன். புறப்படும் நேரத்தில் ஏற்படும் டென்ஷனை இது பல மடங்கு குறைத்துவிடுவதுண்டு.
8.எல்லாவற்றிற்கும் நேரம் என்று ஒன்று உண்டு என்பார்கள் நம் முன்னோர்கள். எதை எதை எப்போது செய்ய வேண்டுமோ அதை அப்போதே செய்து முடித்துவிட்டால் நேரத்திற்கு நேரமும் மிச்சம் தேவையில்லாத படபடப்பும் தேவைப் படாது என்பார்கள். அதை வேத வாக்காக எடுத்துக்கொள்வதும் நேரத்தை மிச்சப்படுத்தும்.
9. முடியாது என்ற வார்த்தையை தயங்காமல் சொல்ல கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் சரி சரி என்று சொல்ல ஆரம்பித்தால் எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க முடியாது.
10. நம்முடைய செல்பேசியிலுள்ள ‘நாட்க்காட்டி (Calendar) செயலி’யை பயன்படுத்தி ஒரு மாதம் முழுவதும் எந்தெந்த தேதியில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் குறித்துக்கொண்டு அலாரமும் வைத்துவிட்டால் நேரம் வெகுவாக மிச்சப்படும், மறந்தும் போகாது. குறிப்பாக மின்கட்டணம், கடன் அட்டை பணம் செலுத்துதல் என்பன போன்ற முக்கியமான விவரங்களை அந்தந்த நாட்களில் குறித்து வைத்துக்கொண்டாலும் தாமதக்கட்டணம் செலுத்துவதையும் தவிர்க்க முடியும்.
இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு பதிவை எழுத துவங்கும்போதே இதைத்தான் எழுத வேண்டும் என்று நாம் மனதில் குறித்துக்கொள்வதில்லையா? அதே போன்று அனைத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரம் மிச்சம்தான்.
ஒரு நாளைக்கு இருபத்தி நாலு மணி நேரம் போறமாட்டேங்குது என்பவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு திட்டமிடாமல் செயல்படுபவர்களே என்பது என் கருத்து. என் அனுபவமும் அதுதான்.
**********
எனது பல கருத்தை சார்ந்து தங்களது எண்ண ஓட்டங்கள் இருப்பது அறிந்து மகிழ்ச்சி ஐயா.
பதிலளிநீக்குஎனக்கும் கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய தலைமுறை தான் இதை கருத்தில் கொள்வதே இல்லை. பிறகு பார்க்கலாம் பிறகு பார்க்கலாம் என்று கடைசி நிமிடம் வரை தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள்.
நீக்குநேரத்தைப் பற்றி 2/3 பதிவுகள் எழுதிய ஞாபகம் வருகிறது...
பதிலளிநீக்குஅப்படியா? நீங்கள் அதன் அருமையை உணர்ந்து இருப்பதால் தான் ஒரே நேரத்தில் பல வேலைகளை உங்களால் செய்ய முடிகிறது.
நீக்கு'காலத்தின் அருமையை உணர்ந்தே.. வாழாவிடில் மண்ணில் சுகமேது' என்கிற ஒரு எஸ் பி பி பாடல் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குஉண்மைதான் காலத்தின் அருமையை உணர்ந்து செயல்படாவிட்டால் தினம்தினம் வேதனைதான் மிஞ்சும். வீணடிக்கப்பட்ட காலத்தை மீண்டும் பெறவும் முடியாது.
நீக்குநேர முகாமைத்துவம்
பதிலளிநீக்குவாழ்வில் வெற்றிக்கு வழி
பயனுள்ள வழிகாட்டல்
உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி யாழ்பாவாணன் அவர்களே.
நீக்குஇரவு ப்டுக்கப் போகும்போது அடுத்தநாள் செய்ய வேண்டியடை மனதில்பதித்து விடுவோம் பொருட்களை தேட செலவு செய்யும்நேரம் குறைக்க அது அதற்கு அந்தந்த இடம் என்று இருத்தல் அவசியம்
பதிலளிநீக்குமிகச் சரியாக சொல்லி விட்டீர்கள். இந்த இரண்டையும் சரிவர செய்தாலே நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தி விடலாம்.
நீக்குVery useful post in time management. I followed almost all these points before my retirement. A place for everything and everything in its place is the golden rule I am following even now.
பதிலளிநீக்குThanks for your visit and valuable comment.
நீக்குகிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குநேர மேலாண்மை (Time Management) சரியாக கையாண்டால் நேரத்தை கண்டிப்பாக அறுவடை செய்யமுடியும். தங்களின் ஆலோசனைப்படி ஒவ்வொரு செயலையும் அட்டவணைப்படுத்திக்கொண்டால் நேரம் போதவில்லை என்ற குறை இருக்காது.
பதிலளிநீக்குநான்கூட ஊருக்கு போகும்போது கூட என்னென்ன எடுத்து செல்லவேண்டும் என்பதை எழுதிக்கொண்டு அதன்படி பொருள்களை எடுத்து செல்வதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
நேரத்தை மிச்சப்படுத்த தாங்கள் தந்துள்ள ஆலோசனைகளுக்கு நன்றி! எல்லோருக்கும் பயனுள்ள பதிவு இது !
பதிலளிநீக்குநான்கூட ஊருக்கு போகும்போது கூட என்னென்ன எடுத்து செல்லவேண்டும் என்பதை எழுதிக்கொண்டு அதன்படி பொருள்களை எடுத்து செல்வதை நான் வழக்கமாகக் கொண்டுள்ளேன்.//
ஆமாம் இதுவும் நல்ல யோசனை தான். இல்லையென்றால் புறப்படும்போது நேரம் வீணாகும். ஊர் போய் சேர்ந்ததும் இது கொண்டு வரவில்லை அதை கொண்டு வரவில்லை என்று குழப்பமும் ஏற்படும்.
நேரத்தை மிச்சப்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன அதில் நான் மிகச் சிலவற்றையே குறிப்பிட்டுள்ளேன்.
உங்கள் வருகைக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி சார்