07 மே 2009

காங்கிரசுக்கு மாற்று இருக்கிறதா?

கடந்த சில நாட்களாக பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சோனியாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதைப் பற்றி பலவிதமாக எழுதி வருகின்றனர்.

சோனியா தனக்கு எதிராக நடைபெறவிருந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தை எதிர்கொள்ள விருப்பமில்லாததாலோ அல்லது அதனால் ஏற்படக்கூடிய சட்ட ஒழுங்கு பிரச்சினையை தவிர்க்க நினைத்தோ  இந்த பயணத்தைத் தவிர்த்திருக்கலாம்.  இதற்கு தன் உயிர் மீதான பயம் என்றோ அல்லது அவருடைய இந்த தவிர்ப்பு தமிழ் ஈழ போராளிகளுக்கு வெற்றி என்றோ கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்றே கருதுகிறேன்.

ஐநா, அமெரிக்கா உட்பட பல வல்லரசுகளுடைய வேண்டுகோளையெல்லாம் புறக்கணித்த இலங்கை அரசு இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று போர் நிறுத்தத்தை அமல்படுத்தும் என்று வாதிடுவதும் கூட சிறுபிள்ளைத்தனம் என்றே கூறுவேன்.

போர் நிறுத்தம் வேண்டாம் ஆனால் ஆயுதங்களையாவது வழங்காமல் இருந்திருக்கலாமே என்று வாதிடுபவர்களுக்கு.  நாம் ஆயுதங்களை வழங்குவதை நிறுத்திவிட்டால் மட்டுமே விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை இலங்கை நிறுத்திவிடப் போவதில்லை.

இந்தியா ஆயுதங்களை வழங்க மறுத்திருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள சைனா, இஸ்ரவேல் போன்ற நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.

இதில் வேறொரு கோணமும் உள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள சீனா,பாகிஸ்தான் ஏன் பங்களாதேஷ் போன்ற நாடுகள் கூட இந்தியாவை விரோத கண்கொண்டே பார்த்து வருகின்றன. இந்த சூழலில் மீதமுள்ள ஒரே அண்டை நட்பு நாடான இலங்கையையும் நாம் இழந்துவிடுமோ என்று கருதியே அவர்களின் கோரிக்ககயை ஏற்று ஆயுதங்களை இந்தியா வழங்கியது.

ராஜபக்ஷே மட்டுமல்ல இதற்கு முன்பு பதவியிலிருந்த அனனத்து ஜனாதிபதிகளுமே விடுதலைப் புலிகளள அழித்துவிடுவதில் குறியாகவே இருந்தனர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முயற்சியில் ராஜபக்ஷே சற்று அதிக முனைப்பாகவே இருக்கிறார் என்பதுடன் விடுதலைப் புலிகளின் அமைப்புக்குள்ளேயே பிரிவினைகளும், பூசல்களும் ஏற்பட்டுள்ளதும் அவர்களின் தொடர் தோல்விக்கு ஒரு காரணம்.

எந்த ஒரு போராட்டத்திற்கும் முடிவு என்று ஒன்று உண்டு. அதை பிரபாகரன் உணராததுதான் அவருடைய இன்றைய இழி நிலைக்கு காரணம். தனி ஈழம் என்பது ஒரு நிறைவேற இயலா கனவு என்பதை உணர்ந்து ஒரு ஃபெடரல் ஆளுமைக்கு தன்னை தயார் செய்துக்கொண்டு அந்த கோணத்தில் தமிழர்களின் சம உரிமைக்கு அவர் பாடுபட முனனந்திருக்கலாம். அந்த அமைப்பைச் சார்ந்த பல தலைவர்களுடைய அறிவுரையையும் புறக்கணித்ததோடல்லாமல் தன்னுடைய கருத்தைச் சார்ந்திராதவர் அனைவருமே தன்னுடைய அமைப்புக்கு எதிரிகள் என நினைத்து அவர் படுகொலை செய்த தமிழின தலைவர்கள் எத்தனை பேர். அவர்களுள் ஒருவரான பத்மநாபாவை சென்னைக் குடியிருப்புகளுள் ஒன்றில் புகுந்து ஈனத்தனமாக தாக்கியதை அதே பகுதியில் வசித்ததால் நேரில் கண்டவன் நான்.

அதையும் கடந்து என்னுடைய பிரதமர் ஒருவரை திட்டமிட்டு ஒரு பெண்ணை பயன்படுத்தி படுகொலை செய்தவர் அவர். அத்தகையவரை நண்பர் என்றும் அவர் போராளியல்ல என்றும் நம் நாட்டு தலைவர்கள் சொல்லித்திரிவது வேடிக்கை மட்டுமல்ல வேதனையும் கூட.

இன்று இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு மத்திய அரசு எந்த விதத்தில் பொறுப்பாகிறது என்பதும் விளங்கவில்லை. விடுதலைப் புலிகளை அழித்தே தீருவேன் என்ற முனைப்புடன் இலங்கை அரசு போரை துவக்கியது. விடுதலைப் புலிகள் வசம் இல்லாத கனரக ஆயுதங்களே இல்லையென்னும் அளவுக்கு அது பலம் வாய்ந்திருந்தது. தரையிலும்,கடலிலும், வானிலும் ஒரு நாட்டின் படைக்கு இணையாக போரிட பலம் பெற்றிருந்த ஒரு அமைப்பை அழிக்க நினைத்த அரசு அதே அளவுக்கு போரிடத்தானே வேண்டும். விடுதலைப் புலிகளைப் போன்ற அமைப்பு இந்தியாவில் இருந்து போராட்டத்தைத் துவக்கினால் நம்முடைய மத்திய அரசு கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்குமா என்ன?

சில மாதங்களுக்கு முன்பு செல்வி அவர்கள் கூறியதுபோன்று போர் என்று வந்தால் மக்கள் மரிக்கத்தானே வேண்டும்?

இலங்கை தமிழர்களுக்கு பிரதிநிதி என தங்களை முன்நிறுத்தும் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களை கேடயமாக பயன்படுத்துகிறது என்று இலங்கை அரசு மட்டுமல்லாமல் ஐ.நா உட்பட பல நாடுகள் குற்றம் சாட்டினவே? அதை சிறிதும் பொருட்படுத்தாமல் உயிருக்கு பயந்து தப்பிக்க நினைத்த மக்களை தடுத்தும் நிறுத்தும் விதமாக மண் சுவர்களை எழுப்பியது யார்? இலங்கை அரசா? அல்லது அதையும் மீறி மக்கள் தப்பித்துவிடக் கூடாதே என்று கடலோரங்களிலும் கன்னிவெடிகளள புதைத்து வைத்தது யார்? அதையும் மீறி பாதுகாப்பு பகுதியை நோக்கி ஓடிய மக்களை கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளியதாக தப்பித்து வந்த தமிழர்களே கூறுகிறார்களே அது பொய்யா?

இலங்கை தமிழர்களள காப்பாற்ற நினைக்கும் நம்முடைய தமிழக தலைவர்கள் வேண்டுமானால் பிரபாகரனுக்கும் அவருடைய சகாக்களுக்கும் தமிழர்களை கேடயமாக பயன்படுத்தாதீர்கள் என்று கூறட்டுமே.

அதை விட்டு விட்டு சோனியாவுக்கு கருப்புக் கொடி காட்டுவதில் என்ன பயன்? 

சரி. இன்றைய பதிவின் தலைப்புக்கு வருவோம்.

மத்திய அரசில் காங்கிரஸ் வேண்டாம் என்றால் மாற்றாக எந்த கட்சிக்கு வாக்களிப்பது? பிஜேபிக்கா?

நாம் காங்கிரசை தோற்கடிக்க வேண்டும் என நினைப்பதே இலங்கைவாழ் தமிழர்களின் பாதுகாப்புக்காகத்தானே. மத்திய அரசு இதில் நாம் விரும்பும் வகையில் பணியாற்ற வேண்டுமென்றால் பிஜேபி அமைக்கும் அரசில் தமிழகத்தைச் சார்ந்த ஒரு பலம் வாய்ந்த கட்சி அதில் பங்குபெற வேண்டும். ஆனால் பிஜேபி தமிழகத்தில் கூட்டு சேர்ந்திருப்பது யாருடன்? ஒரு முன்னாள் கதாநாயகன், மற்றொருவர் முன்னாள் வில்லன், இன்னாள் கதாநாயகன். 

தேர்தலுக்குப் பிறகு ஒரு தனிப்பெரும் கட்சியாக பிஜேபி வரும் சூழலில் நம்முடைய செல்வியும் (ஏன் மருத்துவரும் கூட) அவர்களுடன் சேருவார் என்றே வைத்துக்கொள்வோம்.

செல்வியின் தமிழ் ஈழ நிலைப்பாடு அப்படியே இருக்கும் என்று கருதுகிறீர்களா? நான் அப்படி நினைக்கவில்லை. அவருடைய சமீபத்திய நிலைப்பாடு தேர்தல் தந்திரம் மட்டுமே. அவருடைய ஒரேயொரு குறிக்கோள் தன்னுடைய பரம எதிரியான முகவை வீழ்த்துவது. அதன் முன்னால் மற்றதெல்லாம் வெறும் தூசு!

ஆகவேதான் சொல்கிறேன் காங்கிரசுக்கு மாற்று தற்போது இல்லை.

********

06 மே 2009

என்னுடைய ஓட்டு யாருக்கு, ஏன்?

என்னுடைய ஓட்டு இருக்கட்டும். நம் அனைவருடைய ஓட்டும் யாருக்கு என்று சிந்திப்போமே.

எதிர்வரும் பொதுத்தேர்தல் தமிழகம் என்றில்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் அடுத்த ஐந்தாண்டு கால தலைவிதியை நிர்ணயிக்கப் போகிற தேர்தல்.

இந்த தேர்தலில் எந்த பிரச்சினைகள் முக்கியம்?

1. ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி.

2. நாட்டின் பாதுகாப்பு. அதாவது நம்மைச் சுற்றியுள்ள தெரிந்த மற்றும் தெரியாத பகைவர்களிடமிருந்து (நாடுகள், போராளி அமைப்புகள்)  நமக்கு பாதுகாப்பு.

3. உள்நாட்டு பாதுகாப்பு. அதாவது நமக்குள்ளேயே புல்லுருவிகளாக இருந்து நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் அமைப்புகளிடமிருந்து பாதுகாப்பு. இதற்கு முக்கிய தேவை மத நல்லிணக்கம். சாதீய சாயமில்லாத நடுநிலையான சூழல்.

4. கடந்த ஐந்தாண்டுகளில் துவங்கப்பட்டு இன்றும் நிறைவுபெறாமல் நிற்கும் சேதுசமுத்திர திட்டம் போன்ற ஒட்டுமொத்த நாட்டுக்கும் நலமளிக்கக் கூடிய திட்டங்கள் நிறைவேறுதல்.

இவை மட்டுமே நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் நம்முடைய தலையாய தேவைகளாயிருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.

சமீப காலமாக சிலரால் முன்நிறுத்தப்படும் பிரச்சினைகள், பிரச்சினைகள்தான் என்றாலும் அவை இந்த பொதுத்தேர்தலுக்கு பொருத்தமில்லாதவை.

முதன்முதலாக இலங்கைத் தமிழர்களின் அவலநிலை.

உணர்ச்சிவசப்படாமல், அதாவது நான் ஒரு தமிழன் என்ற நிலையைக் கடந்து இந்தியன் என்ற நிலையில் இந்த பிரச்சினையை அணுகும்போது இப்போதைய மத்திய அரசுக்கு எதிராக நான் வாக்களிக்க ஒரு முக்கிய காரணமாக இது தென்படவில்லை.

அப்படியே அது இருந்தாலும் அதை தகுந்த முறையில் கையாளும் திறன் இப்போது மத்தியில் ஆளும் ஆட்சியாளர்களிடம்தான் உள்ளது. பலரும் நினைப்பதுபோன்று பாஜக ஆட்சி வருமானால் இப்போதைய நிலையைவிடவும் மோசமடையவே வாய்ப்புள்ளது. இன்று தமிழகத்தில் தமிழ் ஈழம், தமிழர்களுக்கு சம உரிமை என வாய் கிழிய பேசும் கட்சித்தலைவர்கள் வெற்றிபெற்றாலும் மத்தியில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் கட்சியுடன் (அது காங்கிரசாகவே இருந்தாலும்) இணைந்து தங்களுடைய கட்சிக்கு எத்தனை அமைச்சகங்களைக் கைப்பற்றி அடுத்த தேர்தலுக்குள் எத்தனை கோடிகளை சுருட்டலாம் என்பதில்தான் குறியாக இருப்பார்களே தவிர பல இளம் பதிவாளர்களும் கருதுவதுபோல் தமிழ் ஈழம் உருவாக்க உதவிபுரியும் கட்சிக்கு மட்டுமே ஆதரவளிப்போம் என முன்வரமாட்டார்கள். மருத்துவரையும், கேப்டனையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.

அடுத்து கலைஞரின் ஆட்சித்திறன்.

அதை முடிவு செய்ய இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன. ஜெ அவர்கள் வேண்டுமானால் இதையே சொல்லிக்கொண்டு ஊர், ஊராக ஹெலிகாப்டரில் சுற்றட்டும். மருத்துவர் கூறுவதையெல்லாம் தண்ணீரில் கரைத்துவிடலாம். கேப்டன் இந்த தேர்தலைப் பொருத்தவரை ஒரு பொருட்டே அல்ல.

ஆக இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலையையும், கலைஞரின் தவறுகளையும் தள்ளிவையுங்கள்.

இப்போது சொல்லுங்கள்? யாருக்கு நம்முடைய ஓட்டு?

என்னைப் பொருத்தவரை நாட்டின் பொருளாதார நிலை உலகிலுள்ள மற்ற வளரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிக நன்றாகவே உள்ளது. நாட்டின் வெளி மற்றும் உள் பாதுகாப்பும் மோசமாக இல்லை. முக்கியமாக பாஜக ஆளும் ஒருசில மாநிலங்களைத் தவிர்த்தால் மத நல்லிணக்கம் நன்றாகவே உள்ளது. சாதீய போராட்டங்களும் வெகுவாகவே குறைந்துள்ளன.

ஆகவே என்னுடைய ஓட்டு நிச்சயம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்குத்தான்.

இதை விடுத்து இலங்கைத் தமிழர்களின் எதிர்காலம்தான் முக்கியம் என்று இளைய தலைமுறை தீர்மானித்து வாக்களிக்குமானால் மத்தியில் இன்று தமிழகத்திற்கு இருக்கும் பங்கு குறையும். தமிழக அமைச்சர்களின் எண்ணிக்கை குறையும்.  தமிழகத்திற்கு கிடைக்கவிருக்கும் நலத்திட்டங்கள் குறையும். முதலீடுகள் குறையும். சேது சமுத்திரம் மட்டுமல்ல ஹொகனேக்கல் கூட்டு குடிநீர் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுவிடும்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நல்ல முடிவு கிடைக்கு வேண்டுமெனில் முதலில் தமிழகம் வலுப்பெற வேண்டும். தமிழகத்தை ஆளும் கட்சி மத்தியில் ஆளும் கூட்டணியில் மிக முக்கியமான, பலம் வாய்ந்த அங்கத்தினராக இருக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள்.

இன்றைய சூழலில் அது திமுகதான்.

05 மே 2009

பொதுத் தேர்தல் – பழைய நினைவுகள்!

 

வருகிற 13ம் தேதி தமிழகத்தில் பொதுத் தேர்தலாம்!!

சொன்னால்தான் தெரிகிறது.

கலைஞர், சன் மற்றும் ஜெயா தொலைக்காட்சிகள் மட்டும் இல்லையென்றால் தேர்தல் நடப்பதே பலருக்கும் நினைவில்லாமல் போயிருக்கும்.

இப்படியொரு மந்தமான தேர்தலைப் பார்க்கும்போது அந்தக்கால நினைவுகள் என்னையும் மீறி எழுகின்றன.

அப்போதெல்லாம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடந்து முடியும்வரை சாலையெல்லாம் கட்சி தோரணங்கள், தட்டிகள்,வளைவுகள் என சென்னையே விழாக்கோலம் பூண்டிருக்கும். சாலையோர சுவர்களில் ஓவியர்கள் அரசியல் தலைவர்களின் உருவங்களை வரைவதை பார்த்துக்கொண்டிருந்தாலே பொழுது போவதே தெரியாது.

பெருந்தலைவர் காமராஜ், ராஜாஜி,பக்தவத்சலம்,அண்ணா போன்ற தலைவர்களின் உருவப்படத்திற்கு பின்னால் சாயத்தைத் தடவி அதை அப்படியே சுவரில் வைத்து அவுட்லைனை முதலில் வரைந்து பிறகு சிறிது, சிறிதாக வண்ணங்களால் உயிர்க்கொடுப்பதை கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்போம். சில கைதேர்ந்த கையில் ஒரு சிறிய புகைப்படத்தை கையில் பிடித்துக்கொண்டு நேரடியாக சுவரில் வரைவதும் உண்டு.

தினமும் மாலையில் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் என்னைப் போன்ற மாணவர்களுக்கு இதை பார்ப்பதே ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு.

அதையடுத்து நள்ளிரவுவரை நடைபெறும் பிரசாரக் கூட்டங்கள்.

மணிக்கணக்கில் பேசும் கட்சித் தலைவர்கள் அப்போது சொற்பம்தான் என்றாலும் ஒவ்வொரு கூட்டத்திற்கு முன்பும் நடைபெற்ற வில்லுப்பாட்டும் தெருக்கூத்தும் கட்சி பேதம் இல்லாமல் அனைவரையும் கவர்ந்திழுப்பதுண்டு.

பிறகு தமிழகத்தில் பக்தவத்சலம் முதல்வராக இருந்த காலத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக மற்றும் அதன் தலைவர் அண்ணா அவர்களை தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒரு மாற்றாக முன் நிறுத்தியது.

அதுவரை சுவாரஸ்யமில்லாமல் இருந்த பிரசாரக் கூட்டங்கள் அண்ணா, நாஞ்சிலார்,ஈவிகே சம்பத் போன்றவர்களின் கவிதை நடையில் சரளமான அதே சமயம் நகைச்சுவை மிகுந்த மேடைப் பேச்சு பாமர மக்களையும் கவர்ந்திழுக்க துவங்கின.

தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டங்கள் வழியாக மட்டுமில்லாமல் வீட்டு கதவுகளையும் தட்ட துவங்கியது 1980களுக்கு பிறகுதான்.

புரட்சித்தலைவர் முதல்வராக தமிழகத்தைக் கைப்பற்றிய 1980 சட்டமன்ற தேர்தல் தேர்தல்தான் வாக்காளர் என்ற முறையில் என்னுடைய முதல் தேர்தல்.

அப்போதெல்லாம் வீட்டிலிருந்து ஒவ்வொரு குடும்பத்தையும் வாகனம் வைத்து ஓட்டுச்சாவடிக்கு அழைத்துச் செல்வார்கள். அதாவது ஓட்டுப் போட செல்லும்போது. திரும்பி வரும்போது ஒருவரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள். நடராசா சர்வீஸ்தான். . ஆனாலும் அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று கட்சியைச் சார்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாகனங்களை கொண்டு வந்து ஐயா வாங்க, அம்மா வாங்க என அழைக்கும்போது… ஓட்டுரிமைக்கு இருந்த மதிப்பு அப்போதுதான் தெரிந்தது!

ஆகவே ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்த பட்ச வாக்கு விகிதம் எழுபது விழுக்காட்டைத் தாண்டிவிடும். தெரிவு செய்யப்படும் ஒவ்வொரு வேட்பாளரும் அந்தந்த தொகுதியின் பெரும்பான்மை வாக்காளர்களின் பிரதிநிதியாகவே கருதப்பட்டார்.

சேஷன் தேர்தல் கமிஷனராக வந்தாலும் வந்தார். ஏதோ அதுவரை நடந்த தேர்தல்கள் எல்லாமே தவறு என்பதுபோலவும் இந்திய தேர்தல் நடைமுறையை தூய்மைப்படுத்த தன்னைத்தான்  கடவுள் படைத்தார் என்பதுபோலவும் தனக்குத்தானே கற்பித்துக்கொண்டு பொதுத்தேர்தலையே ஒரு சுவாரஸ்யமில்லாமல் ஆக்கிவிட்டார். அவர் எத்தனை பெரிய ‘யோக்கியர்’ என்பது பிறகுதானே தெரிந்தது!

Model Code of Conduct என்ற பெயரில் தேவையில்லாத சட்டதிட்டங்கள் தேர்தலை ஒரு சுவாரஸ்யமில்லாததாக ஆக்கிவிட்டன என்றுதான் சொல்வேன்.

இதனால்தானோ இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று கட்ட தேர்தல்களிலும் ஓட்டு விகிதம் ஐம்பதிலிருந்து அறுபது விழுக்காட்டுக்குள்ளாகவே உள்ளது.  ஒரு தொகுதியில் நூறு வாக்காளர்கள் என்றால் அதில் ஐம்பது வாக்காளர்களே வாக்களிக்கிறார்கள். அதில் முப்பது வாக்குகள் பெற்றவர் வெற்றிபெறுகிறார்! அதாவது மொத்த வாக்காளர்களில் எழுபது பேர் அவரை தெரிவு செய்யவில்லை என்றுதானே பொருள்? அவரை எப்படி மக்களின் பிரதிநிதி என அழைப்பது?

எந்த தேர்தலிலும் இந்த கட்சிக்குத்தான் வாக்களிப்பது என்று முன்கூட்டியே முடிவு செய்துவிடும் என்னைப் போன்ற வாக்காளர்கள் யாருடைய அல்லது எவ்வித தூண்டுதலும்  இல்லாமலே வாக்களித்துவிடுவர். ஆனால் தேர்தலில் வாக்களிக்கவே வேண்டுமா, வேண்டாமா என முடிவெடுக்க முடியாமல் அல்லது விருப்பமில்லாமல் இருப்பவர்களை ஒரு முடிவெடுக்கு வர துணை செய்வது கட்சி விளம்பரங்களும், பிரசார கூட்டங்களும்தான் என்றால் தவறில்லை.

அப்போதெல்லாம் சுவர் விளம்பரங்கள், சாலை முழுவதும் அலங்கரிக்கும் கட்சி தோரணங்கள் நீங்கலாக தேர்தலுக்கு முந்தைய தினத்தன்று  வீடு, வீடாக வாக்கு சீட்டு மாதிரிகளை கட்சித் தொண்டர்கள் வினியோகம் செய்து வாக்காளர்கள் எந்த ஓட்டுச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்பதையெல்லாம் விரிவாக சொல்வதுண்டு. தொண்டர்கள் வினியோகிக்கும் ஓட்டுச் சீட்டை காட்டினாலே சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வாக்களிக்க அனுமதிப்பார்கள். வாக்காளர் அட்டையோ, குடும்ப அட்டையோ எதுவும் தேவையிருக்கவில்லை.

ஆனால் இப்போது? தேர்தல் தினத்தன்று நம்முடைய பெயர் எந்த சாவடியில் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளவே மணிக்கணக்காகிறது! யார் பொறுமையுடன் தேடிப்பிடித்து வாக்களிப்பது என்று நினைப்பவர்கள்தான் அதிகம் பேர். ஆகவே இந்த தேர்தலிலும் வாக்கு விகிதம் ஐம்பது விழுக்காட்டைத் தாண்டினால் ஆச்சரியம்தான்!

சரி. இந்த தேர்தலில் என்னுடைய ஓட்டு யாருக்கு? ஏன்?

அடுத்த பதிவில் கூறுகிறேன்.