30 செப்டம்பர் 2005

DRESS CODE IN ENGINEERING COLLEGES

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஒரு புதுமையான ஆணையைப் பிரப்பித்தார் என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.
அதன்படி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் எல்லா பொறியியல் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்கள் கல்லுரி வளாகத்திற்குள் கைத்தொலைப்பேசிகளை (மொபைல்) வைத்துக்கொள்ளக் கூடாது, பாலுணர்ச்சியைத் தூண்டும் வகையில் மாணவர்கள் (யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என ஒரு விளக்கம் பின்னர் தரப்பட்டது) உடையணிந்து வரக்கூடாது..
மாணவர்களிடையே இவ்வாணையைப் பற்றி இரண்டு வித கருத்துகள் நிலவின. கைத்தொலைப்பேசி விஷயத்தில் பெரும்பாலான மாணவர்களும், அவர்களுடைய பெற்றோர்களும் ஆணையை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆனால் ஆடை அணியும் விஷயத்தில் மாணவர்களிடையில் மட்டுமல்லாமல் கல்வி ஆய்வாளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆயினும் பெரிய அளவில் எதிர்ப்புகள், ஆர்ப்பாட்ட அளவில் வெளிப்படாத நிலையில் அதுவும் ஒருவழியாய் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது.
ஆனால் இன்றைய ஹிண்டு நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியைப் படிக்கும்போது துனணவேந்தரின் ஆணையை நினைத்துக்கூட பார்க்கவியலாத நிலைக்கு சென்னையிலுள்ள ஒரு பொறியியல் கல்லூரி கொண்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது!
அந்த செய்தியின் நகலை மொழிபெயர்க்காமல் தந்துள்ளேன்.
(மாணவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது)
"CHENNAI: Anna University's dress code for students bans T-shirts and jeans. But an engineering college at Thorapakkam near Chennai `improved' upon it and, on Wednesday, pulled up a first-year student for donning a dark-coloured shirt. ..... of MNM Jain Engineering College, who wore a red shirt and black trousers to college, was "detained" for questioning by five faculty members and the Principal. "Six persons in the room kept on asking me whether my dress conformed to the code. How could I say no? When I agreed, I was told to give a written undertaking accepting my `mistake', and agreeing not to breach the code in future," he recalled. pleaded that he be allowed to go, as the college bus was about to leave. It was brushed aside. He took another bus that dropped him near Adyar. Though hailing from Chennai, claimed he did not know the way to his house on St. Mary's Road in Alwarpet. He went round and round and ended up at Royapettah police station. His father filed a complaint with the Royapettah police seeking action against those who "harassed'' his son. The college authorities said it was the third time was "caught breaking the code," which says boys should wear only light-coloured shirts and dark trousers, must shave and keep their hair short. " நன்றி: ஹிந்து
இந்த நிகழ்வில் முக்கியமான மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளன
1. ஆடை அணிவதில் கட்டுப்பாடு
2. மாணவன் தன் வீட்டையே அடையமுடியாமல் தவிப்பு
3. மாணவனின் தந்தை கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக போலீசில் குற்றச்சாட்டு
இதில்
1. ஆடை அணிவதில் கட்டுப்பாடு :
இது தேவையா இல்லையா என்பதை தீர்மானிப்பது ஒரு நம்மால் முடிவு செய்ய இயலாத விஷயம். சம்மந்தப்பட்ட மாணவர்களோ, அல்லது அவர்களுடைய பெற்றோரோ நினைத்தாலும் அத்தனை எளிதில் தீர்வு காண இயலாது. ஆகவே அதை நம்முடைய விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விட்டு விடுவோம்.
2. மாணவன் தன் வீட்டையே அடைய முடியாமல் தவிப்பு
பத்திரிகைச் செய்தியின்படி சம்மந்தப்பட்ட மாணவர் சென்னையைச் சார்ந்தவர். பள்ளி படிப்பு முழுவதும் சென்னையில் படித்தவராயிருக்க வேண்டும். முதலாம் ஆண்டு படிப்பவராதலால் கண்டிப்பாய் பதினெட்டு வயதைக் கடந்திருக்க வேண்டும். கல்லூரிகள் துவங்கி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இத்தகைய நிலையில் சென்னை அடையாறு வரை வர முடிந்தவர் அங்கிருந்து அருகிலிருந்த ஆல்வார்பேட்டைக்கு செல்ல வழி தெரியாமல் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்தார் என்பதை நினைக்கும்போது வியப்பாயிருக்கிறது.
அடையாறிலிருந்து வழி தெரியவில்லையென்றாலும் ஒரு ஆட்டோ எடுத்துக்கொண்டு வீட்டை சென்றடையாமல் நிலைத் தடுமாறி நின்ற பத்தொன்பது வயது இளைஞனை என்னவென்று சொல்வது! கையில் பணம் இல்லாவிட்டாலும் வீடு வந்து சேர்ந்த பிறகு ஆட்டோவிற்கு பணத்தை பெற்றோரிடமிருந்து பெற்று தந்திருக்க முடியாதா என்ன?
I feel that there is something seriously wrong in the way they boy has been brought up by his parents!
இது பெற்றோர்களின் வளர்ப்பு முறையிலுள்ள குறையைத்தான் காட்டுகிறது!
3. மாணவனின் தந்தை போலீசில் குற்றப்பதிவு செய்வது!
மாணவனின் தந்தையின் இச்செயல் பிரச்சினைக்கு விடிவு ஏற்படுத்துமா?
இது போன்றதொரு பிரச்சினை கல்லூரி முதல் ஆண்டு படித்துக்கொண்டிருக்குகையில் என்னுடைய இரண்டாவது மகளுக்கும் நடந்தது. அவளுடைய HOD க்கும் அவளுக்கும் ஒரு சிறிய விஷயத்தில் வாக்குவாதமும், அபிப்பிராய வேறுபாடும் ஏற்பட்டது. தன்னை மதிக்கவில்லை என்று HOD யும் நான் ஒரு தவறும் செய்யாதபோது சக மாணவர்கள் முன்பு என்னைத் தகாத வார்த்தைகளால் பேசினார் என என் மகளும் வாதிட விஷயம் கல்லூரி நிர்வாகி வரை சென்றது..
நான் அப்போது சென்னையிலில்லை.. என்னுடைய வங்கியின் பயிற்சி கல்லூரியின் முதல்வராக கொச்சியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.
என் மகள் என்னைத் தொலைபேசியில் அழைத்து நான் உடனே புறப்பட்டு வந்து கல்லூரி முதல்வரை சந்திக்கவில்லையென்றால் தான் ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படுவேன் என்று கூறினாள்.
நடந்த விஷயத்தை முழுவதுமாக அறிந்துக்கொண்டு மகளிடம் மறுநாள் கல்லூரிக்கு சென்று HOD யிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னேன். என் மகள் முதலில் மறுத்தாலும் பிறகு சம்மதித்தாள். நான் கூறியவாறே அவள் செய்தபிறகும் கல்லூரி முதல்வர் பிடிவாதமாக நான் நேரில் வந்து இனி இதுபோன்ற சம்பவம் நடைபெறாது என உத்தரவாதம் அளிக்கவேண்டும் என்றார்.
நான் அவருடைய தொலைப்பேசி எண்ணை பெற்றுக்கொண்டு என் மகளிடம் நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன் பிறகு என்ன நடக்கிறதென்று பார்க்கலாம் என்று கூறிவிட்டு கல்லூரி முதல்வரை தொலைப்பேசியில் அழைத்தேன். முதல் மூன்று அழைப்புக்கு பதிலளிக்க மறுத்த முதல்வர் என்னுடைய தொடர்ந்த முயற்சிக்குப் பிறகு பேசினார். நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு என் மகள் சிறு குழந்தையல்ல வென்றும் அவளுடைய நடத்தைக்கு அவளே பொறுப்பேற்றுக்கொள்ளும் வயது அவளுக்கு இருப்பதால் அவளுடைய நடத்தையில் தவறேதும் இருப்பின் அவளைத் தாராளமாய் இடைநீக்கம் செய்யலாம் என்றும் இந்த சிறிய விஷயத்துக்காக என்னால் லீவு எடுத்து வர இயலாது என்று கூறிவிட்டேன்.
முதல்வர் என்ன செய்தாரோ தெரியாது என் மகளை அழைத்து HOD யிடம் மன்னிப்பு கேட்க சொல்லி இனி இப்படி நடக்காலாகாது என்று எச்சரிக்கை செய்து விட்டுவிட்டார். சில மாதங்களுக்குள் HOD க்கும் என் மகளுக்கும் இடையிலிருந்த கசப்புணர்ச்சி சரியாகி அவருடைய பரிந்துரையினாலேயே கடந்த மூன்று வருடங்களாக CSC Students' Associationன் செயலாளராக இருக்கிறாள்.
நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் மாணவர்கள் தங்கள் கல்லூரியில் நடக்கின்ற சிறு சிறு விஷயங்களைத் தாங்களாகவே துணிச்சலுடன் எதிர்கொள்ள தயாராயிருக்க பெற்றோர்கள் பயிலுவிக்க வேண்டும்.
இந்த மாணவன் விஷயத்தில் தந்தையின் தலையீட்டால் மாணவனின் அடுத்த நான்காண்டு கல்லூரி வாழ்க்கை நிச்சயம் பிரச்சினையாகத்தா னிருக்கும். எந்த ஒரு கல்லூரி நிர்வாகமும் தங்களுடைய நடத்தை தவறானதென்று ஒத்துக்கொள்ளாது.. எந்த நேரத்திலும் மாணவனை பழிவாங்க காத்துக்கொண்டேயிருக்கும்..
என் மகளுடைய விஷயத்திலும் இந்த பழிவாங்கல் நடந்தது.. இரண்டாவது செமஸ்டரில் இன்டெர்னல் மதிப்பெண்கள் எல்லா பிரிவிலும் பத்துக்கு கீழ் அளித்து HOD தன்னுடைய அதிகாரத்தைக் காண்பித்தார். அப்போதும் நான் தலையிட மறுத்து என் மகளை பல்கலைக்கழகத் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுத்து அதற்கு ஈடுகட்டிக்கொள் என்று கூறிவிட்டேன்..
இத்தகைய பழிவாங்கல்கள் நிச்சயம் இந்த மாணவனின் விஷயத்திலும் நடக்கும். ஒவ்வொரு முறையும் பெற்றோர்கள் தலையிட்டு தீர்வு காண்பதென்பது இயலாது. இதை பெற்றோர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
டி.பி.ஆர். ஜோசஃப்

29 செப்டம்பர் 2005

எங்கே போகிறது இந்த தலைமுறை?

சுத்தமாய் புரியவில்லை எனக்கு!

ஒருவேளை, வயசாகிவிட்டதோ!

நான் கோவலனாய்த்தான் இருப்பேன் நீ கண்ணகியாய் இரு என்று ஆணும், ஏன் நீ கோவலனாய் மாறும்போது நானும் மாறக்கூடாதா, என்று பெண்ணும்..

என்ன வாக்குவாதம் இது?

கேட்டால் மேலைநாட்டில் பெண்களுக்கு இந்த சுதந்திரம் இருக்கிறதே, ஏன் இங்கு மட்டும் இந்த பாசாங்குத்தனம் ( hypocrisy)? என்ற கேள்வி.

இதற்கு என்ன பதில் சொல்லமுடியும்? தெரியவில்லை.

என்னுடைய பணியிலே இதுவரை இந்தியாவில் ஒன்பது மாநிலங்களில் பணிபுரிந்திருக்கிறேன்.. சுமார் 23 வருடங்கள்.. பெரும்பாலும் மனைவி, மற்றும் குழந்தைகள் இல்லாமல்..

பலதரப்பட்ட மக்கள், கலாச்சாரங்கள்..

முக்கியமாய் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் எனப்படுகிற மும்பையில் ஏழு வருடங்கள்..

பொருளாதரத்திலும் சரி, வாழ்க்கை முறையிலும் சரி தமிழகத்திலிருந்து வெகுவாய் மாறுபட்ட நகரம்..

இருபத்துமூன்று வருட வனவாசத்திற்குப் பிறகு இப்போதுதான், கடந்த ஒரு வருடங்களாக, சென்னையில் மனைவி, மகள்களோடு சந்தோஷமாய்...

ஓய்வு நேரங்களில் தமிழில் எழுதிப் பார்ப்போமே என்று விளையாட்டாய் துவங்கியது இதோ இளைஞர்களோடு இளைஞனாய் தமிழ்மணம் வலைப்பூக்களின் குழுவிலே பதிவு செய்துக்கொண்டு உங்களைப் போன்ற நண்பர்களோடு உரையாடுவதில் ஒரு தனி இன்பம்..

இரவு நேரங்களில் தமிழ்மன்றம் தளத்தில் பதிவாகியுள்ள பதிவுகளை உலாவருவது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு..

நல்ல இலக்கிய சிந்தனைகளை தமிழில் நயத்தோடு எழுத இன்றைய இளைஞர்களுக்கு (ஆனெண்ண, பெண்ணென்ன எல்லோரும் இளைஞர்கள்தானே)எத்தனை இலகுவாய் வருகிறது!

ஆனால் கடந்த சில நாட்களாக, முக்கியமாய் ஒரு நடிகையின் சர்ச்சைக்குரிய பேட்டிக்குப்பிறகு, நம்மில் சிலர் தடம் புரண்டு போகிறோமோ, முக்கியமாய் இளம் பெணகள், என்ற ஐயப்பாடு ..

அதைத்தான் 'புரியவில்லை எனக்கு' என்று மேலே ஆரம்பித்தேன்..

பெண்ணியம் என்கின்ற வாக்கு இதையா உணர்த்துகிறது?

பத்து, பதினைந்து கேள்விகளைக் கேட்டுவிட்டு இதில் உனக்கு அதிக 'ஆம்' என்று வந்தால்தான் நீ பெருந்தன்மையான ஆண், இல்லையென்றால்..

அதை ஆதரித்து பலரும், எதிர்த்து சிலரும்...

எங்கே செல்கிறது இந்தத் தலைமுறை?


உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இன்றைய நிஜவாழ்க்கையிலே பெரும்பாலான குடும்பங்களில் (வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களைத் தவிர) பெண்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், முக்கியமாய் நடுத்தரக் குடும்பங்களில்..

எனது தகப்பனார் மற்றும் தாய்வீட்டு குடும்பங்கள் மிகப்பெரிய்வை..

எனக்கு பத்துக்கும் மேற்பட்ட மாமன்மார்களும், பெரியம்மா, சித்தி, சித்தப்பா என.

என் மனைவி வீடும் அப்படித்தான்..


வெட்கத்தை விட்டு சொல்கிறேன்,என் குடும்பம் உட்பட எல்லா குடும்பங்களிலும் மனைவி வைத்ததுதான் சட்டம்!

நான் மேலே சொன்ன பதிவில் கேட்டிருந்த பதினைந்து கேள்விகளில் ஒன்று உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?

எந்த உலகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்?


இப்போதெல்லாம் மனைவிக்குத் தெரியாமல் கணவன் தன் பெற்றோருக்கு பணம் அனுப்புவதுதான் கடினம்!


நடைமுறை விதிகளுக்கு நேர் மாறாக சிந்திப்பதுதான் பெண்ணியம் என்றால் I simply do not know what to say!!


பெண்களைப் போன்று நீங்களும் தாலி அணிந்துக் கொள்வீர்களா என இனியொரு கேள்வி..


பொதிகையில் தமிழில் செய்திகள் வாசிக்கும் ஒரு பிரபல பெண் இப்போதெல்லாம் தாலியே அணிவதில்லையாம். படுக்கும்போது குத்துகிறது என்று கழற்றி வைத்தார்களாம் பிறகு நாளடைவில் தாலி அணிவதையே நிறுத்திவிட்டார்களாம்..

பகிரங்கமாய் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி இது..

தமிழகப் பெண்கள் அசுரவேகத்தில் கலாச்சார மாற்றங்களைக் கொண்டு வருகின்ற இவ்வேளையில் அயல் நாட்டில் வசித்து வரும் இளம் பெண்கள் இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டு...

நல்ல இலக்கிய சிந்தனைகளையும், கருத்துக்களையும், உலகிலுள்ள நாடுகளில் நடைபெறும் விஞ்ஞான மற்றும் பொருளாதார வளர்ச்சிகளைக் குறித்து எழுதுங்கள்..

அதை விட்டுவிட்டு...

அன்புடன்
டி.பி.ஆர். ஜோசஃப்

27 செப்டம்பர் 2005

இந்தியாவில் தற்கொலைகள் - WHO கணிப்பு

தற்கொலை - பதறவைக்கும் கணிப்பு!

உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டுள்ள 1997 வருடத்தில் இந்தியாவில் நடந்த தற்கொலை விகிதாசாரத்தைப் பார்க்கும்போது நெஞ்சு பதறுகிறது!

இந்தியாவிலேயே மிக அதிக அளவிலான தற்கொலைகள் தென்னிந்திய மாநிலங்களான தமிழகம், கேரளா, கர்நாடகாவில்தான் (15 க்கும் மேல்) - அகில இந்திய விகிதம்: 10.
அதற்கு அடுத்தபடியாக 10 - 15 விகிதம் ஆந்திராவில்!
இந்த கணிப்பின்படி 14 வயது முதல் 30 வயது வரை ஆண், பெண்பாலார் இருவரும் ஒரே விகிதாசாரமுறையில் (19.8) தற்கொலை செய்துக்கொள்கிறார்கள். அதற்குப் பிறகு ஆண்களே அதிக அளவில்!
30 வயதிலிருந்து 45 வயதுக்குள் சுமார் 20.8 விழுக்காடு ஆண்களும் 14 விழுக்காடு பெண்களும் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள்.
இதற்கு விளக்கமான காரணங்கள் கணிப்பில் வெளியிடப் படவில்லை என்றாலும் மாறிவரும் சமுதாய சூழ்நிலையும் அளவுக்கதிகமான் சுகாதாரமில்லாத போட்டிகளும் ,எதிர்பார்ப்புகளுடைய வாழ்க்கை முறையுமே காரணம் எனலாம்.
14 வயதிலிருந்து 30 வயதுக்குள் சுமார் 20 விழுக்காடு பேர் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்தியாகும். இன்றைய இளையத் தலைமுறையிடமிருந்து பெற்றோரின் வரைமுறையில்லாத எதிர்பார்ப்புகளின் ஆதிக்கமே இத்தகைய விளைவுகளின் காரணம் எனக் கூறலாம்.
தங்களுடைய வாழ்க்கையில் சாதிக்க இயலாமற்போனவைகளை தங்களுடைய பிள்ளைகள் வழியாக சாதித்துவிடவேண்டுமென்ற பேராசையை பெற்றோர்கள் விட்டுவிட வேண்டும். எல்லோருமே சாதித்துவிட்டால் சாதனை என்ற வார்த்தைக்கே பொருள் இல்லாமல் போய்விடும் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து செயல்படுகின்றவரை இத்தகைய அவலங்கள் தொடரத்தான் செய்யும்.
டி.பி.ஆர். ஜோசஃப்

குஷ்புவின் பேட்டி

ஓட்டை வாய் குஷ்பூவும் பொறுப்பில்லா பத்திரிகைகளும்!

தமிழ் சஞ்சிகைகளில் ஒன்றில் சமீபத்தில் வெளிவந்த குஷ்பூவின் நேர்காணலில் அவர் தெரிவித்த சில கருத்துகள் கடந்த சில நாட்களாக தமிழகத்தில், குறிப்பாக வேலையில்லா சில அரசியல்வாதிகள், மற்றும் அவர்களுடைய கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை நாள்தோறும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

குஷ்புவின் சர்ச்சைக்குரிய கருத்துகள் வெளியான தமிழ் பத்திரிகை சாதாரணமாக மேல்மட்ட தமிழர்கள் மட்டுமே வாசிக்கக்கூடிய பத்திரிகையாகும். அதில் எழுதப்படும் தமிழை பாமர மக்களால் ஒருபோதும் புரிந்துக்கொள்ள இயலாது!

அத்தகைய பத்திரிகையில் வந்த இந்த கருத்து ஒட்டுமொத்த தமிழகமும் அறியச் செய்த பெருமை அரசியல்வாதிகளையும் பொறுப்பற்ற பத்திரிகைகளையுமே சாரும்.

குஷ்பு தெரிவித்தக் கருத்துக்கள் அவருடைய சொந்தக் கருத்து. அதுவும் அவருடைய பதிலை ஆழ்ந்து கவனித்தால் அவரிடம் திருமணத்துக்கு முன் உறவு (Premarital sex) சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பொருத்தமான பதிலைத்தான் தந்திருக்கிறார். அவருடைய கருத்து ஒட்டு மொத்த தமிழின பெண்களையே இழிவு படுத்திவிட்டது என்று வாதிடுவதோ அல்லது அவரைத் தமிழ்நாட்டை விட்டே விரட்டிவிட்டுத்தான் மறுவேலை என்று விளக்குமாறையும், வாரியலையும், காலணிகளையும் தூக்கிக்கொண்டு அவர் வீட்டின் முன் கோஷமிடுவதென்பது அதிகபட்ச ரியாக்ஷன் என்றே படுகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்மீது இ.பி.கோ 499 மற்றும் 500 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதுதான்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்பதே கேள்விக்குறி. அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டாலும் எந்த ஒரு தனிநபரையும் குறிப்பிட்டு குற்றம் சாட்டாத பட்சத்தில் இந்த வழக்கு வெறும் பிரசாரத்திற்கு வேண்டுமானால் பயனளிக்குமே தவிர குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிக்க பயன் தருமா என்பதும் கேள்விக்குறியே.

இதில் முக்கியமாக தண்டிக்கப்பட வேண்டியவை சிறிய விஷயத்தையும் ஊதி, ஊதி பெரிதாக்கி தங்களுடைய கற்பனைகளையும் சேர்த்து எழுதும் பொறுப்பற்ற பத்திரிகைகள்தான். இதுபோன்ற பத்திரிகைகள் உலகெங்கும் உள்ளன என்றாலும் நம்நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் சற்றே கூடுதல்தான்.
சில வாரங்களுக்கு முன் திரைப்பட இயக்குனர் தங்கர்பச்சான் பேட்டி ஒன்றில் திரைப்பட நடிகைகளைப் பற்றி தரக்குறைவாக பேசினார் என்று குரல் கொடுத்தவர்களுள் முதன்மையாயிருந்த குஷ்புவே இப்போது தன்னுடைய பொறுப்பற்ற பேச்சால் சிக்கலில் மாட்டிக்கொண்டு விழிப்பது இன்னொரு வேடிக்கை.

தன்னுடைய கருத்துகள் யார் மனதையும் புண்படுத்தவேண்டுமென்று கூறப்பட்டவையல்ல என குஷ்பு அறிவித்துள்ள சூழ்நிலையில் இவ்விஷயத்தை இனியும் பெரிது படுத்தாது விட்டு விடுவதுதான் அழகு.

டி.பி.ஆர். ஜோசஃப்

26 செப்டம்பர் 2005

பேச்சுத்திறன்

நன்பர்களே,

போட்டிகள் நிறைந்த இன்ன்றைய உலகில் பேச்சுத்திறமை ஒரு இன்றியமையாத தேவையாகிறது.


முக்கியமாக, நாம் பணிபுரியும் அலுவலகங்களில் நம்மைப் பற்றி, நம்முடைய திறமைகளைப் பற்றி நம்முடைய அதிகாரிகளோ, அல்லது நம்முடைய சக ஊழியர்களோ அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் பேச்சுத்திறமை மிக, மிக அவசியம்.


பேச்சுத்திறன் என்பது மேடைப் பேச்சல்ல. மாறாக, மற்றவர்களுடன் பேசும் திறன். ஆங்கிலத்தி கூறவேண்டுமென்றால் (Communication Skill).


பேச்சுத்திறமை எந்த ஒரு சூழ்நிலையிலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள பெரிதும் உதவிபுரியும். ஒரே அடிப்படைப் படிப்பும், திறமையுமுள்ள மற்றும் ஒரே நாளில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களுள்ள ஒரு குழுவிலிருந்து வெகு சிலர் மட்டும் கிடு கிடுவென பதவி உயர்வோ அல்லது ஊக்கத்தொகையோ பெறுகிறார்களென்றால் அது அவர்களைத் தனியே எடுத்துக்காட்ட உதவிய பேச்சுத்திறனே.


ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு மட்டும் காம்பஸ் ரெக்ரூட்மன்டில் வேலை கிடைப்பதும் பேச்சுத்திறனால் தான்.

இவ்வருட சென்னை அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்ட நேர்காணலில் 50:1 என்ற விகிதத்தில் மட்டுமே தெரிந்தெடுக்கப்பட்டனர் என்ற செய்தி நம்முடைய மாணவர் சமுதாயம் பேச்சுத்திறனில் எத்தனை பின்தங்கியிருக்கின்றனர் என்பதையே காட்டுகிறது.


இந்தியாவின் நம்.1 மென்பொருள் நிறுவனம் என்று பெயர் பெற்ற டிசிஎஸ் நிறுவனத்தின் அதிகாரியின் கூற்றுப்படி "A student's employability is decided primariy on his ability to communicate with the recruiting authority."

ஆகவே பள்ளிப் பருவத்திலிருந்தே மாணவர்கள் இத்திறனை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்தல் வேண்டும்.

அன்புடன்,

டி.பி.ஆர்.

24 செப்டம்பர் 2005

இந்த தடுமாற்றம் தேவைதானா?

இந்த தடுமாற்றம் தேவைதானா?
ஒரு நகரத்தின் பெயரில் என்ன இருக்கிறதென்று இந்த அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்?
Madras என்பதை சென்னை என்றும், Bombay என்பதை மும்பை என்றும், Trivandrum என்பதை திருவனந்தப்புரம் என்றும் மாற்றி தமிழ, ஹிந்தி, மலையாளம் அறியாத மக்களின் நாக்கை சுளுக்க வைத்தார்கள் (பெரும்பாலும் அயல் நாட்டவரை).
இதெல்லாம் போதாதென்று இப்போது பல்கலைக் கழகங்களையும் பெயர் மாற்றம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
Madras University என்பதை சென்னைப் பல்கழகம் என மதறாஸ் மாநகரம் சென்னை மாநகரமானதிலிருந்தே மக்கள் தாங்களாகவே மாற்றிக்கொண்டார்கள். ஆனால் பல்கலைக்கழக அலுவலக வாயிலில் உள்ள பெயர்ப்பலகை இப்போதும் மதறாஸ் யூனிவர்சிட்டி என்றுதான் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.
தமிழக அரசு இரண்டு நாட்களுக்கு முன் இதை வெகு முக்கிய விஷயமாக கருத்தில் கொண்டு ஆராய்ச்சி செய்து சென்னை பல்கழகத்தின் பெயரை மீண்டும் மதறாஸ் பல்கலைக்கழகம் என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்யும் நோக்கத்துடன் எதிர்க்கட்சிகளுடைய பெரும் எதிர்ப்புகளிடையில் மசோதா ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றியது!
எதிர்க்கட்சிகளின் கருத்துகளுக்கு என்றும் மதிப்புத் தராத தமிழக அரசு (ஜெயலலிதா என கொள்க) திடீரென்று அடுத்த நாளே நிறைவேற்றப்பட்ட மசோதாவை வாபஸ் பெற்றுக்கொண்டது!
தமிழகத்தில் உள்ள எத்தனையோ முக்கியமான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க நேரமில்லாத அரசுக்கு சென்னைப் பல்கழகத்தின் பெயர் மாற்றம்தான் தலைப்போகக்கூடிய விஷயமாகிவிட்டது!
என்னத்தைச் சொல்ல! அரசியல்வாதிகளைப் புரிந்துக்கொள்ள நம்முடைய சிறிய மூளைக்கு திறனில்லை!
வாழ்க இந்திய அரசியல்!
அன்புடன்,டி.பி.ஆர்

பெண்களே அனிமீக்காக இருக்கின்றீர்களா?

அன்புள்ள ...

பெண்களே அனிமீக்காக இருக்கின்றீர்களா?

சமீபத்தில் நடைபெற்ற கருத்து கணிப்பில் கல்லூரி, மற்றும் அலுவலகங்களுக்குச் செல்லும் பெரும்பாலான பெண்கள நேரமின்மைக் காரணமாக காலை சிற்றுண்டியை புறக்கணிக்கிறார்கள் என்று அறியப் பட்டிருக்கின்றது!

கல்லூரி மற்றும் பள்ளி செல்லும் மாணவிகளில் பெரும்பாலோர் காலையில் உண்ண முடியாமல்போன உணவிற்கு ஈடு செய்யும் முகமாக மதிய வேளையில் கணமான உணவை - அதிலும் பெரும்பாலானோர் சாட் ·புட் மற்றும் ·பாஸ்ட் ·புட் எனப்படும் பிஸ்ஸா, ஹாம்பர்கர், சாண்ட்விச் - உண்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.

அலுவலகம் செல்லும் பெண்களோ அதிலும் மோசம். எளிதில் செய்யக்கூடிய தயிர் சாதம், புளி சாதம், சிப்ஸ் போன்றவைகளை உண்டே மதிய உணவை முடித்துவிடுகிறார்கள்!

அலுவலக வேலைப் பளுவிற்கிடையில் அடிக்கடி காபி குடிப்பது தென்னிந்திய பெண்களிடையே அதிக அளவில் காணப்படுகிறது என்றும் அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பெரும்பாலோனோர், படித்தவர்கள் உட்பட, அறிந்திருப்பதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது!

இதைப் பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?

இத்தகைய உணவு முறை பெரும்பாலோரை, முக்கியமாக குடும்பத்தலைவிகளை, அனிமீக்காக மாற்றிவிடுகிறதென்றும் வயதான காலத்தில் ஏற்படும் எலும்பில் பலவீனம், ஆர்தரைடீஸ் எனப்படும் மூட்டு வலி போன்ற நோய்களுக்கும் வித்திடுகிறது.

ஆகவே பெண்களே!

எத்தனை வேலையிருந்தாலும் காலை உணவை புறக்கணிப்பதை இனியாவது நிறுத்துங்கள்.

இரவு நாம் உண்ணும் உணவு அதிக பட்சம் நான்கு மணியளவில் முழுவதுமாய் சீரணித்துவிடுவதால் காலை உணவு மிக அத்தியாவசியமாகிறது!

முதல் நாள் ஒன்பது மணிக்கு உண்டுவிட்டு அடுத்த நாள் பகல் ஒரு மணி வரை வெறும் வயிரோடு இருப்பது மிகவும் ஆபத்து என்பதை உணர்ந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்,
டி.பி.ஆர்


இன்றைய இந்தியா - ஒரு பார்வை

இன்றைய இந்தியா - ஒரு பார்வை
நாள்தோறும் பத்திரிகைகளிலும், செய்தித்தாள்களிலும் தவறாது நாம் காண்பது இந்தியாவின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றித்தான். இந்தியாவின் அசுர வளர்ச்சி பலநாடுகளையும், முக்கியமாக சைனா, கனடா போன்ற நாடுகளை கவலைக் கொள்ள வைத்திருக்கின்றன..
இந்தியா பி.பி.ஓ மற்றும் மென்பொருள் சேவைத் துறையில் உலகிலேயே முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது என்பதுதான் இன்றைய பிரதான செய்தி.
இதற்கு அடுத்தபடியாகத்தான் சைனா, கனடா, போலந்து, அயர்லாந்து போன்ற நாடுகள்.
இந்தியாவின் இச்சாதனைக்கு வல்லுனர்கள் பட்டியலிட்டிருப்பதென்ன?
1. குறைந்த ஊதியம்,2. சிறந்த மற்றும் திறம்வாய்ந்த (Matured) சேவை,3. திறம்படைத்த ஊழியர்கள்,4. அடிப்படை வசதிகள் (Infrastrcture),5. ஊக்குவிகள் (அரசாங்க உதவி, ஸ்திரத்தன்மை)
அத்துடன் இந்திய வல்லுனர்களின் ங்கிலப் புலமை.
இந்தியாவின் பலநூற்றாண்டு கால அடிமைவாழ்வின் ஒரு பலன் என்றுக்கூட இதைக் கூறலாம். இன்றைய இளையத் தலைமுறையின் ங்கிலப் புலமைக்கு மற்றொரு காரணம் நம் நாட்டின் பல்மொழி கலாச்சாரம்.
இந்திய மக்கள்தொகை பல்வேறு மொழிகளைப் பேசி, எழுதும் மக்களைக் கொண்டுள்ளதால் ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் மற்ற மாநில மக்களுடன் பேசிப் பழகவே ங்கிலத்தின் துணை தேவைப்படுகிறது.
ங்கிலத்தில் Blessing in Disguise என்று கூறுவதுபோல நம்முடைய நேற்றைய பலவீனமே இன்றைய பலமாக மாறி வருகின்றது..
நம் நாட்டின் உயர்ந்துவரும் கல்வித்தரமும் ஒரு காரணம் என்பதை வல்லரசு நாடுகளே ஒத்துக்கொண்டுள்ளன.
நம்மவர்களின் அயராத உழைப்பு, மற்றவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்வதில் முனைப்பாய் நிற்கும் குணம், ஊதியத்தின் அளவைப் பாராமல் முழு ஒத்துழைப்பையும் அளிக்கும் நம் பண்பு இவையெல்லாம்தான் நம் நாட்டை இத்தகைய உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றிருக்கின்றன என்றால் மிகையாகாது..
உழைப்போம், முன்னேறுவோம் என்பதுதான் இன்றைய இந்தியாவின் சூளுரை..
அன்புடன்,டி.பி.ர். ஜோச·ப்

இன்று புதிதாய் பிறந்தேன்!

நண்பனே, நண்பியே,

முதன் முதலாய் ஒரு புதிய உலகத்தில் பிரவேசித்த ஒரு புத்துணர்ச்சி! ஒரு சந்தோஷமான சந்தோஷம்!!

நண்பர்களே, என் தாய்மொழி தமிழில் எழுதி அதை உலகெங்கும் என் மொழி பேசும் உங்களுக்கு என் உலகத்தை, அதில் உள்ளவற்றை திறந்து காண்பிக்க எனக்கு ஒரு வாய்ப்பு!

இதை செயல்படுத்தத்தான் எத்தனை பாடு! உலகிலுள்ள எல்லா இணைய தளங்களையும் சுற்றித் திரிந்து, பல நூறு நண்பர்களின் தளங்களில் தேடி, அப்பப்பா, ஒரு இமாலய சாதனையை நடத்தி முடித்த நிறைவு இன்று என் மனதில்!

ஆம், நண்பர்களே! இனி, என் உலகத்தில் நடப்பதையெல்லாம் உங்களிடம் பகிர்ந்துக்கொள்ள முடியுமே!

அத்துடன் என்னுடைய சிந்தனைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதையும் அறிந்துக்கொள்ள முடியுமே! 

இன்று மீண்டும் புதிதாய் பிறந்துவிட்டதுபோன்ற ஒரு சந்தோஷம்..!

இனி என்ன! எழுத வேண்டியதுதான்!

தினமும், இல்லாவிட்டால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சந்திப்போம்..

அன்புடன், 
டி.பி.ர். ஜோசப்