29 நவம்பர் 2006

வம்பு சொம்பு பண்ணாதீங்க - நகைச்சுவை தினம்

வடிவேலு டீக்கடையொன்றில் அமர்ந்து டீயை அனுபவித்து பருகிக் கொண்டிருக்கிறார்.

சுற்றிலும் பெஞ்சில் பலரும் தினத்தந்தி செய்தித்தாளைப் படித்தவாறு அமர்ந்திருக்கின்றனர்.

அதில் சிலர் சற்று தூரத்தில் மடித்துக் கட்டிய லுங்கி, மைனர் பனியன், கழுத்தில் மைனர் செயின், வாயின் ஓரத்தில் ஊஞ்சலாடும் துண்டு பீடி சகிதம் சாவகாசமாக வந்துக்கொண்டிருந்த பார்த்திபனைப் பார்த்துவிட்டு தங்களுக்குள் ‘டே.. அங்க பாரு.. அடாவடி ஆளு வரான்.. வாங்கடா’ என்றவாறு ‘எஸ்கேப்’ ஆக, வடிவேலு மட்டும் நெருங்கி வந்துக்கொண்டிருந்த ஆபத்தை உணராமல் டீயை உறிஞ்சுகிறார்.

பார்த்திபன் ‘எஸ்கேப்’ ஆன ட்களைப் பார்த்துவிட்டு தனக்குள் சிரித்துக் கொள்கிறார்.. ‘அத்த்த்து’ என்று அலட்சியத்துடன் வளைகிறது அவரது உதடுகள்..

பார்த்திபன் கடையை அடைந்ததும் மீதமிருந்த ஒரு சில இளைஞர்களும் மரியாதையுடன் எழுந்து மடித்துக் கட்டியிருந்த லுங்கியை அவிழ்த்துவிட்டு நிற்க அவர் வந்ததை கவனியாமல் டீயில் லயித்திருந்த வடிவேலுவை ஒரக்கண்ணால் பார்த்துவிட்டு அவர் அமர்ந்திருந்த பெஞ்சை எட்டி ஒரு உதை விட கையிலிருந்த சூடான காப்பியுடன் தரையில் சாய்கிறார் வடிவேலு..

அருகிலிருந்தவர்கள் வாயைப் பொத்திக்கொண்டு சிரித்தவாறே பார்த்திபனை ஓரக் கண்ணால் பார்க்கின்றனர்...

வடி: எ..எ... எவண்டாவன்.. சுத்த கபோதியாருப்பான் போ.. (நிமிர்ந்து பார்த்திபனைப் பார்த்துவிட்டு தனக்குள்) இ.. இவனா.. இவன் எங்க வந்தான்? படுபாவிப்பய நிம்மதியா ஒக்காந்து ஒரு டீ கூட குடிக்கக விடமாட்டறான்யா.. இன்னைக்கி இவனெ எப்படி சமாளிக்கப் போறேன்னு தெரியலையே.. யப்பா சாமி... இன்னைக்கி யார் முகத்துல முளிச்சேன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குதே..

பார்: டேய்.. என்ன கீழ புதையல் இருக்கான்னு பாக்கறியா.. எந்திர்றா..

வடி: (சட்டை மீது சிந்தியிருந்த டீ கறையைப் பார்க்கிறார். சட்டென்று வந்த கோபத்தில் பேச வாய் திறந்து.. பிறகு மூடிக்கொள்கிறார். தனக்குள் புலம்புகிறார்) எதுக்குடா வம்பு.. வேணாம்.. டீக் கறைய வேணா ஆத்தா ரெண்டு சத்தம் போட்டுட்டு வெளுத்து வெள்ளையாக்கிரும்.. ஆனா இவங்கிட்ட அதுக்காக வம்பு வளக்க போனே..நீ தொலைஞ்சே..

பார்: டேய்.. என்ன ஒனக்கு நீயே பேசிக்கிட்டிருக்கே.. எந்திர்றா

வடி: (தட்டு தடுமாறி எழுந்து கறையாகிப் போன தன்னுடைய சட்டையைக் பொருட்படுத்தாமல் டீக்கடைக்காரனைப் பார்க்கிறார்) யோவ்.. பாதி டீயதான் குடிச்சிருக்கேன்.. எவ்வளவு குடுக்கணுமோ அத கணக்குல எளுதிக்க.. (நகர்கிறார்)

டீக்கடைக்காரர் (பார்த்திபனைப் பார்க்கிறார்) பாத்தீங்களா தம்பி.. இவன் குடிக்கறதே நாலணா டீ.. இதுல பாதிய தரானாம். அதையும் கணக்குல எளுதிக்கறவாம்.. நா என்ன பேங்கா வச்சிருக்கேன்.. நீங்களே கேளுங்க தம்பி..

பார்(நகர்ந்துக்கொண்டிருந்த வடிவேலுவின் ஜிப்பா கழுத்தை எட்டிப் பிடிக்கிறார்) டேய் நில்றா.. அவர் கேட்டதுக்கு பதில் சொல்றா.

வடி: (ஜிப்பாவை சரிசெய்துக் கொண்டு எரிச்சலுடன் டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) யோவ்.. காசு கொண்டு வரலேன்னுதான கணக்குல வச்சிக்கன்னு சொல்றேன்.. அதுக்கெதுக்கு அந்தாள பஞ்சாயத்துக்கு கூப்புடறே.. பிச்சாத்து நாலணா.. அதுல பாதி.. ரெண்டனா.. அதுக்குக் கூட பொற மாட்டானாய்யா இந்த வடிவு....

(டீக்கடைக்காரர் பார்த்திபனைப் பார்க்கிறார்.)

பார்: டேய்.. டீ குடிக்க வர தெரியுதுல்ல.. காசில்லாம ஏண்டா வர்றே..

வடி: (திரும்பி பார்த்திபனைப் பார்க்கிறார்) யோவ்.. ஒன்கிட்ட நா பேசினனா.. இல்ல பேசினனான்னு கேக்கேன்..

பார்: (அலட்சியத்துடன் சிரிக்கிறார்) தோ பார்றா.. ஒனக்கு கோவம்லாம் கூட வருமா.. குடிச்சது இருபத்தஞ்சு பைசா டீ.. அதுல பாதிக்குத்தான் காசு தருவேங்கற.. இதுல கனக்குல எழுதிக்கய்யான்னு ஜம்பம் வேற.. வரும்போதே காச கொண்டு வர வேண்டியதுதானடா..

வடி: ஏய்யா யோவ்.. ஒன் கண்ணு என்ன பொட்டையா? இது என்ன?

பார்: (வடிவேலுவின் கையிலிருந்த பித்தளை செம்பைப் பார்க்கிறார்.மூக்கைப் பொத்திக்கொள்கிறார்) கர்மம்.. கர்மம்.. போறியா.. இல்ல போய்ட்டு வரியா..? இந்த நாத்தம் நாறுது..

வடி: யோவ்.. இவ்வளவு நேரம் அடிக்காம இப்ப அடிக்குதா.. போய்யா.. நீயும்.. ஒன்.. காலங்கார்த்தால வந்துட்டான் பஞ்சாயத்து பண்றதுக்கு.. (டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) யோவ்.. நீ அடிச்ச கூத்துக்கு அந்த ரெண்டனாவும் கிடையாது.. என்ன செய்யணுமோ செஞ்சிக்கோ.. (விரைப்புடன் போகிறார்)

பார்: (எரிச்சலுடன்) சரியான சாவுக்கிராக்கி.. (கடைக்காரரிடம்) யோவ்.. ஏலக்கா டீ இருக்கா?

டீக்கடை: (பணிவுடன்) இருக்குண்ணே..

பார்: போடு.. (தொலைவில் செல்லும் வடிவேலுவைப் பார்க்கிறார்) போடா.. டேய்.. போய்ட்டு.. இந்த பக்கந்தான வருவே.. வச்சிக்கறேன்.. (டீயைக் குடித்தவாறு செய்தித்தாளை மேய்கிறார்..) இன்று நகைச்சுவை தினம்.. அட.. இங்க பார்றா.. இதுக்கெல்லாம் கூட தினமா.. வர வர நாட்டுல எதுக்குத்தான் தினம்னு ஒரு விவஸ்தை இல்லாம போயிருச்சு..

டீக்கடை: (பணிவுடன்) அண்ணே இன்னைக்கி நம்ம என்.எஸ். கேயோட பிறந்தநாள்... அதான்..

பார்: (அலட்சியத்துடன்) யோவ்.. எனக்கு தெரியாமயா? வேலைய பாருய்யா.. (தொடர்ந்து படிக்கிறார்)

(டீக்கடைக்காரர் முகத்தை சுளித்துக்கொண்டு தன் வேலையைத் தொடர்கிறார்)

சிறிது நேரம் செல்கிறது..

(டீக்கடைக்காரர் வடிவேலு வருவதைப் பார்க்கிறார்.)

டீ: (குரலை இறக்கி) அண்ணே அதோ அவன் வரான்.. விடாதீங்க..

பார்: (டீக்கடைக்காரர¨ எரிச்சலுடன் பார்க்கிறார்) ஏன்? ஒனக்கென்ன அதுல அவ்வளவு அக்கற?

டீ: (அசடு வழிந்தவாறு) இல்லன்னா.. இன்னைக்கி நகைச்சுவை தினம்.... அதான்.. கொஞ்சம் ஜாலியா சிரிக்கலாமேன்னு..

பார்: யோவ்.. ஒருத்தன் அவஸ்த்தையில ஒங்களுக்கு சிரிப்பா.. என்.எஸ்.கே அப்படியாய்யா செஞ்சார்? அவர் காலத்துல யாரையாவது அழ வச்சிருக்காறாய்யா.. இப்ப மாதிரியா இவன் அவனெ அடிக்கறதும்.. அவன் இவனெ ஒதக்கறதும்.. இதெல்லாம் ஒரு பொழப்பாய்யா..

டீ: (முனகுகிறார்) சந்தடி சாக்குல கவுண்டமனி செந்தில் ஜோடியத்தான சொல்றீங்க.. நீங்க மட்டும் என்னவாம்..

பார்: டேய் மொனகாத.. நாங்க அப்படியாடா? கையால என்னைக்காச்சும் இவனெ (வடிவேலுவை காட்டுகிறார்) அடிச்சிருக்கேனடா..

டீ: (முனகுகிறார்) கையால அடிச்சாத்தானா?

(வடிவேலு நெருங்கவே வாயை மூடிக்கொள்கிறார்.)

(வடிவேலு வரும்போதே பார்த்திபனைப் பார்த்து திடுக்கிட்டு ‘இந்த பய இங்கனயேதான் இருக்கானா.. வாண்டாம்டா சாமி என்று முனகியவாறு தலையைக் குணிந்தவாறே கடையைக் கடந்து போகிறார்)

டீ: (பதற்றத்துடன்) அண்ணே.. போறார் பாருங்க..

பார்: (குரலை இறக்கி) போகட்டுண்டா.. பாவம்.. (உரத்த குரலில்) பொளச்சி போ.. இன்னைக்கி நம்ம என்.எஸ்.கே தெனமாம்லே.. அதான்..

வடி: (சட்டென்று நின்று திரும்பிப் பார்க்கிறார்) என்னது? நம்ம தலைவர் தெனமா? எங்க போட்டுருக்கு, காட்டு? (ஆவலுடன் திரும்பி வருகிறார்)

பார்: (நக்கலுடன் டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) மாட்னான் பாத்தியா.. (திரும்பி வடிவேலுவைப் பார்க்கிறார்) டேய்.. அந்த கர்மத்தோட இங்க வராத..

வடி: (திடுக்கிட்டு தன் கையிலிருந்த பாத்திரத்தைப் பார்க்கிறார்) எது? ஓ! இதா.. இனி இது நாளைக்குத்தான வேணம். இங்கயே இருக்கட்டும்.. (சாலையின் வைத்துவிட்டு ஓடிச் சென்று ஆவலுடன் பார்த்திபனின் கையிலிருந்த பத்திரிகையை வாங்கி பக்கம் பக்கமாகத் தேடுகிறார்) எங்கய்யா.. எங்க..?

பார்: டேய்.. என்னத்த தேடறே?

வடி: (பத்திரிகையை தேடியவாறு) அதான்யா.. நம்ம கலைவாணரப் பத்தி ஏதோ சொன்னியேய்யா.. அதத்தான் தேடறேன்..

பார்: ஒங் கண்ணுக்கு அதெல்லாம் தெரியாது.. அங்க வச்சிட்டு இங்க என்னெ பார்.. நா சொல்றேன்..

(வடிவேலு பத்திரிகையை மடித்து கைக்கு இடையில் வைத்துக்கொள்ள பார்த்திபன் பறித்து பெஞ்சில் எறிகிறார்) டேய்.. இதான் சாக்குன்னு பேப்பரெ தள்ளிக்கிட்டு போயிரலாம்னு பாக்க பாத்தியா..? இப்படி ஒக்கார்... இன்னைக்கி என்ன நாளுன்னு சொன்னேன்?

வடி: (சிணுங்குகிறார்) யோவ்.. போய்க்கிட்டிருக்கறவனெ கூப்ட்டு ஒக்காத்தி வச்சி ரப்ச்சர் பண்ணாத.. கலைவாணர்னா நமக்கு உசுருய்யா.. அது போட்டிருக்காங்காட்டியும்னு திரும்பி வந்தா.. (எதிர் பெஞ்சில் தொப்பென்று அமர்கிறார்) சொல்லுய்யா.. இப்ப என்ன வேணும் ஒனக்கு..?

பார்: உண்மைய சொல்லு.. கலைவாணர்னா ஒனக்கு உசுருன்னு சொன்னே இல்லே..

வடி: ஆமா.. அதுக்கென்ன இப்ப?

பார்: எப்படி உசுரு?

வடி: எப்படின்னா? (தனக்குள்) என்னடா இவன் வெவரங்கெட்டவானாருக்கானே.. (உரக்க) உசிருன்னா உசிருதான்..

பார்: சரி.. அத விடு.. அவர் படத்த நீ பாத்திருக்கியா?

வடி: (எகத்தாளமாக) பின்னே.. பாக்காமயா?

பார்: சரி.. பாத்தே.. என்னென்ன படம் பாத்துருப்பே.. சொல்லு கேப்போம்..

வடி: (தனக்குள்) வச்சாண்டா ஆப்பு.. ச்சும்மா ஒரு பேச்சுக்குச் சொன்னா.. (சமாளித்தவாறு) யோவ்.. பேரெல்லாம் சட்டுன்னு கேட்டா.. நான் இத்தனூண்டு இருக்கறப்ப பாத்தது (தரையிலிருந்து அரையடி உயரத்தைக் காட்டுகிறார்)..

பார்: (டீக்கடைக் காரரையும் அருகிலிருந்தவர்களையும் பார்க்கிறார். ஒருவரிடம்) ஏண்ணே.. நீங்க இத்தனூண்டு இருக்கறப்போ ஒங்களுக்கு எத்தன வயசுருக்கும்?

(அவர் இதில் ஏதோ வில்லங்கம் இருக்குமோ என்று பதிலளிக்காமல் தயங்குகிறார்)

பார்: ச்சும்மா சொல்லுங்கண்ணே.. என்னா ஒரு அஞ்சு வயசு இருக்குமா?

ச்சேச்சே.. என்ன தம்பி நீங்க? நெலத்துலருந்து அரையடி ஒயரத்துல அஞ்சு வயசா.. என்னா மிஞ்சிப் போனா ஒரு ஆறு மாசம் இருக்கும்.. எந்திச்சி ஒக்கார முடியாம தவழ்ந்துக்கிட்டிருக்கறப்பன்னு வச்சிக்குங்களேன்..

பார்: பார்த்தியாடா.. அவருக்கே ஆறு மாசந்தான் இருக்கணும்னா பனமரம் மாதிரி நீ இப்ப இருக்கற ஒயரத்துக்கு.. நீ மூனு மாசங் கூட இருந்துருக்க மாட்ட.. அப்பப் பாத்தது இப்ப நினைவுல நிக்குதா..

வடி: (கிலு, கிலு என்ற சப்தத்துடன் சிரிக்கிறார்) அட என்னண்ணே நீங்க.. அரையடின்னா அரையடியா..சும்மா ஒரு பேச்சுக்கு கைய காட்டுனா..

பார்: அதென்ன பேச்சுக்கு சொன்னேன்.. பேசாம சொன்னேன்னுட்டு.. இப்படி பேசாதேன்னு எத்தன தரம் சொல்லியிருக்கேன்.. சொல்லு.. எத்தன படம் பாத்துருப்பே..

வடி.. (யோசிக்கிறார்) என்ன.. ஒரு அஞ்சாறு இருக்கும்..

பார்: சரி.. படத்தோட பேர் வேணாம்.. ஏதாச்சும் ஒரு சீன் ஞாபகம் இருக்குமில்ல? அதாண்டா நீ ரொம்ப ரசிச்சி சிரிச்சிருப்பியே.. அதுல ஏதாச்சும் ஒன்னெ சொல்லு.. இன்னைக்கி நகைச்சுவை தினம்டா.. நாங்களும் கொஞ்சம் சிரிக்கணுமில்ல..

வடி: (தனக்குள்) நாசமா போச்சு.. வேணும்.. வேணும்.. ஒனக்கு வேணும்.. பேசாம சொம்ப தூக்கிக்கிட்டு போயிருக்கலாமில்லே.. ஒன்னுத்தையுமே பாக்கலையேடா.. இப்ப என்னத்த சொல்லி.. சரி.. வாயில வந்தத எதையாவது சொல்லி வைப்போம்.. இவனுங்களுக்கு மட்டும் தெரிஞ்சிருக்கவா போவுது.. எல்லா பயலுவளும் நம்மள விட ச்சின்னதாவுல்ல இருக்கானுவோ.. ஆனா இந்த எடக்கு புடிச்ச பயதான்.. நம்மளவிட பெரியவனாச்சே.. இவன் தலைவர் படத்த பாத்துருக்கறா மாதிரி தெரியுதே.. என்னடாயிது.. எளவா போச்சுதே..

பார்: டேய்.. என்னத்த மொனவுற? சீக்கிரம் சொல்லு.. நேரமாவுதுல்ல..

வடி: (எரிச்சலுடன்) அட இருய்யா.. யோசிக்க வேணாமா.. எப்பவோ பாத்தது.. ஒன்னா ரெண்டா.. டைலாக்கையெல்லாம் அப்படியே அவர் மாதிரியே சொல்லணுமில்லே..

பார்: (நக்கலுடன்) யார் நீ..? டைலாக்க..? அவர் மாதிரியே..?

(குழுமியிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். வடிவேலு முறைக்கிறார்)

வடி: (பல முறை வாயைத் திறந்து பேச வந்து மூடிக்கொள்கிறார்) ஒன்னுமே யாபகத்துக்கு வரமாட்டேங்குதேய்யா..

பார்: பாத்தாவுல்லடா ஞாபகத்துக்கு வரும்?

வடி: (முறைக்கிறார்) யோவ்.. வாணாம்.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய்) ஆங்! அந்த சர்வர் சுந்தரம் படத்துல ரெண்டு கைலயும் கப்புகள அப்படியே எல்.ஐ.சி பில்டிங் சைசுக்கு அடுக்கி வச்சிக்கிட்டு வருவாரே.. அந்த சீன் ஒன்னு போறாது..?

(பார்த்திபனைத் தவிர குழுமியிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்கிறார்கள்)

வடி: (பெருமையுடன் அனைவரையும் பார்க்கிறார்) பாத்தியாய்யா.. என்னமோ சொன்னியே.. அய்யா சீன சொன்னவுடனே இவிங்க எப்பிடி சிரிக்கிறானுவ.. அதான்யா வடிவு.... இன்னும் ஏதாச்சும் சீன் சொல்லவா?

பார்: டேய்.. எரிச்சல கெளப்பாத.. சர்வர் சுந்தரம் நாகேஷ் சார் நடிச்சது.. சிரிக்காம பின்னெ வேறென்ன செய்வாய்ங்கெ..

வடி: (குரலை இறக்கி தனக்குள் பேசிக்கொள்கிறார்)அட பாவமே.. நம்ம தலைவர் நடிச்ச சீன பழுவடியும் எடுத்துட்டானுவளோ.. நா நம்ம கலைவாணர் நடிச்சில்ல பாத்ததா ஞாபகம்? இந்த மாதிரி திருட்டெல்லாம் அப்பவே இருக்குதா?

பார்: டேய்.. அவங்க யாரும் திருடல.. நீதான்.. இங்கருந்து திருடி அங்க சொருகறே. உண்மைய சொல்லிரு.. நீ என்.எஸ்.கே படத்துல ஒன்னையாவது பாத்திருக்கியா இல்லையா?

(வடிவேலு தலையைக் குனிந்துக்கொள்கிறார்)

பார்: சொல்றா.. இல்லல்லே..

வடி: இல்லய்யா..

பார்: பின்னே எதுக்கு பாத்தேன்னு சொன்னே?

வடி: ச்சும்மா.. ஒரு இதுக்குத்தான்..

பார்: இதுக்குன்னா, எதுக்கு?

வடி: ஒரு தமாசுக்குத்தான்.. நீதானய்யா சொன்னே..

பார்: நானா.. என்னன்னு?

வடி: இன்னைக்கி நகைச்சுவை தெனம்னு..

பார்: அதுக்கு?

வடி: நாஞ் சொன்னதும் ஒங்க எல்லாருக்கும் சிரிப்பு வந்துதா இல்லையா?

(மீண்டும் எல்லோரும் சிரிக்கின்றனர்,பார்த்திபனைத் தவிர)

பார்: டேய்.. இதுக்கு பேர் சிரிப்பில்லை.. நக்கல்..

வடி: சரி ஏதோ ஒன்னு.. (எழுந்து திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.. 'யோவ் சொம்பு..' என்கின்றனர் கூட்டத்தினர்) அட போங்கய்யா.. ச்சொம்பாம்.. ச்சொம்பு.. இந்தாளோட வம்புலருந்து தப்பிச்சது போறாது..?

(அனைவரும்.. சிரிக்கின்றனர்)
******
















17 நவம்பர் 2006

ஒங்க செல்ஃபோன பாருங்க!

இது சமீபத்தில் மலேசியாவில் நடந்த உண்மைச் சம்பவம்!


என்னுடைய மூத்த மகள் குடியிருக்கும் குடியிருப்பில் வசிக்கும் ஒருவரின் (மலாய் பெண்) கைப்பையை ஷாப்பிங் மால் ஒன்றில் தவற விட்டுவிட்டிருக்கிறார். அதில் அவருடைய, ATM Debit Card, Credit Card மற்றும் கைத்தொலைப்பேசி ஆகியவை இருந்துள்ளன.

ஷாப்பிங் முடித்துவிட்டு வெளியே வரும் நேரத்தில்தான் அதைக் கவனித்திருக்கிறார். உடனே தன்னுடைய கணவரை அழைத்து விவரத்தைக் கூறி 'காவல்துறையினரிடம் புகார் அளிக்க வேண்டும். உடனே புறப்பட்டு வாருங்கள்' என்றாராம்.

அதற்கு அவருடைய கணவர் ‘நீ சற்று முன்னர்தானே நம்முடைய வங்கி PIN எண்ணை SMS மூலம் கேட்டாய். நானும் உடனே SMS வழியாக அதை அனுப்பினேனே.’ என்றாராம்.

‘ஐய்யோ நா அனுப்பலீங்க.’ என்று மனைவி பதற கணவரும் மனைவியும் தங்களுடைய வங்கிக்கு விரைந்திருக்கின்றனர்.

அந்த பெண்மனியுடைய கைப்பையை எடுத்தவன் அவர்களுடைய வங்கிக் கணக்கிலிருந்த அனைத்தையும் எடுத்திருக்கிறான்.

எப்படி?

அம்மணியின் கைத்தொலைப்பேசியில் கணவருடைய கைத்தொலைப்பேசியின் எண் ‘கணவர்’ என்ற பெயரில் சேமிக்கப்பட்டிருந்ததால் கள்வனால் எளிதாக அவருக்கு SMS செய்து PIN எண்ணைக் கேட்டறிய முடிந்திருக்கிறது.

படிப்பினை:

நம்முடைய உறவினர்களுடைய செல்ஃபோன் எண்ணை கணவர், மனைவி, மகன், மகள் என்ற உறவு முறையில் கைத்தொலைப்பேசியில் சேமிக்கலாகாது!

நானும் என்னுடைய மகளிடமிருந்து கிடைத்த இந்த மயிலைப் படித்தவுடனே செய்த முதல் காரியம் என்னுடைய செல்ஃபோனில் சேமித்திருந்த எண்களுடைய உறவுமுறையை மாற்றியதுதான். அவரவர் பெயரிலேயே எண்களை சேமித்துவைப்பது உத்தமம்.

ஒங்க செல்ஃபோன்ல எப்படிங்க.. பாருங்க!!

***

27 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 9

பரிமளா அவர்களை நான் முதியோர் இல்லத்தில் சந்தித்தபோது அவருக்கு சுமார் ஐம்பது வயதிருக்கும்.

மூளையில் ஏற்பட்டிருந்த ரத்தக் கசிவால் ஒரு கை, ஒரு கால் செயலிழந்துபோயிருந்த நிலையில் பேச்சில் தெளிவில்லாமல் பார்க்கவே பரிதாபகரமான நிலையில் நான் அவரை சந்தித்தேன்...

அவருக்கு வாரம் இருமுறை உடற்பயிற்சி அளிக்க வந்து சென்ற ஒரு மருத்துவருடைய ஆலோசனைப்படி அவருக்கு பயிற்சிகளை செய்ய உதவுவது, அவருடைய பேச்சுத் திறனை மீண்டும் முந்தைய நிலைக்கு கொண்டுவருவது.. இதுதான் என்னுடைய அலுவல்..

அத்தனை சிறிய வயதில் இனியும் நான் வாழ்ந்தென்ன பயன் என்ற மனநிலையில் இருந்த பரிமளாவை உற்சாகப்படுத்தி என்னுடைய முயற்சிகளில் வெற்றியடைய மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

பரிமளா சென்னையிலேயே பிறந்து வளர்ந்த ஒரு உயர் நடுத்தர குடும்பத்தைச் சார்ந்தவர். படித்த பட்டதாரி. பெற்றோருக்கு ஒரே மகள். தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரி. தாய் ஒரு துவக்கப் பள்ளி ஆசிரியர்.

பரிமளா பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் அவர் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவரை துரத்தி, துரத்தி காதலித்த வாலிபனை தன்னுடைய பெற்றோருடைய சம்மதமில்லாமல் திருமணம் செய்துக்கொண்டார்.

தன்னுடைய குடும்ப அந்தஸ்த்துக்கு முற்றிலும் ஏற்ற குடும்பத்திலிருந்து வந்தவர்தான் தன்னுடைய கணவர் என்று தெரிந்தும் அவரை தன்னுடைய பெற்றோர் வெறும் சாதி வித்தியாசத்தைக் காட்டி ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனரே என்ற ஏக்கம் மனதில் இருந்தும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தன்னை அன்புடன் ஏற்றுக்கொண்ட கணவர் குடும்பத்துடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார் பரிமளா.

ஆனால் திருமணம் முடிந்த முதல் வருட முடிவிலேயே ஒரு அழகான பெண் குழந்தைக்குத் தாயான அவருடைய வாழ்க்கையில் விதி விளையாடியது.

அலுவலக விஷயமாக வெளியூர் சென்றிருந்த கணவர் உயிரற்ற சடலமாக திரும்பி வந்தபோது அதுவரை அவர்மேல் அன்பாய் இருந்த கணவர் குடும்பம் ராசியற்றவள் என வெறுத்து ஒதுக்கியது. எல்லாம் வேலையற்ற ஒரு ஜோஸ்யர் பரிமளாவின் ஜாதகத்தைப் பார்த்து ‘இந்த ஜாதகப்படிதாம்மா நடந்திருக்கு.’ என்று கூறியதுதான் காரணம்!

கணவர் வீட்டுக் கொடுமைகளை மேலும் தாக்குப் பிடிக்க முடியாமல் கைக்குழந்தையுடன் வெளியேறிய பரிமளாவுக்கு அவருடைய பெற்றோரும் அடைக்கலம் தர முன்வராததுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆனாலும் மனந்தளராத பரிமளா தன்னுடைய கணவர் பணியாற்றிய நிறுவனத்தினர் பெருந்தன்மையுடன் நஷ்ட ஈட்டுடன், அவருடைய படிப்புக்கு தகுந்த வேலையையும் அளிக்க தனியாய் தன்னுடைய வாழ்க்கையைத் தொடர்கிறார்.

பரிமளாவின் புத்திக்கூர்மையும், அயராத உழைப்பும் துணைக்கு வர அடுத்த சில வருடங்களில் பதவியும், வசதிகளும் உயர அவருடைய வாழ்க்கையில் மீண்டும் சந்தோஷம்..

பரிமளாவை அப்படியே உரித்துவைத்தவள் போலிருந்தாள் அவருடயை மகள் சியாமளா..

ஆனால் பரிமளா மிகவும் ஜாக்கிரதையாய் தன் மகளைக் கண்கானித்தாள். தான் பட்ட அவஸ்தையை தன் மகளும் படக்கூடாது என்பதில் ஆரம்ப முதலே கவனமாயிருந்தார்.

சியாமளாவின் கல்லூரி படிப்பு முடிந்ததுமே அவளுக்கு தகுந்த ஜோடியை தேர்ந்தெடுப்பதில் முனைந்தார்..

நல்ல வரனும் அமைந்தது. நிச்சயம் முடிந்து திருமணத்திற்கு நாள் குறித்தபோதுதான் வந்தது குழப்பம்.

‘நம்ம கல்யாணம் முடிஞ்சதுக்கப்புறம் ஒங்கம்மா வந்து நம்ம கூட இருக்கக் கூடாது.’ என்ற நிபந்தனையை மாப்பிள்ளை தன்னுடைய பெற்றோருடைய தூண்டுதலில் அவள் முன் வைத்தபோது சீறியெழுந்தாள் சியாமளா..

ஒரே வார்த்தையில் நிச்சயத்தையே முறித்துவிடுவதாகக் கூறிவிட்டு வந்து தன்னுடைய தாயிடம் தெரிவிக்கிறாள்..

பதறிப் போகிறார் பரிமளா..

சியாமளாவுக்குத் தெரியாமல் சம்பந்திகளுடைய வீட்டிற்குச் சென்று அவள் சார்பில் மன்னிப்பு கேட்டு, மாப்பிள்ளையை சம்மதிக்க வைக்கிறார்.

சியாமளா எத்தனை தடுத்தும் கேளாமல் அவரை நிர்பந்தம் செய்து திருமணத்தை முடித்து வைக்கிறார்.

ஆனால் திருமணம் முடிந்த கையுடன் சியாமளா தன் சுயரூபத்தை காட்டுகிறார்.

‘நான் ஒங்களுக்கு வேணும்னா நீங்க எங்கம்மா இருக்கற வீட்டுல வந்து இருங்க. இல்லன்னா நீங்களும் வேணாம், நீங்க கட்டுன தாலியும் வேணாம்..’ என்று கூறிவிட்டு தன் தாய் வீட்டுக்கு திரும்புகிறார்.

பரிமளா எத்தனை தடுத்தும் கேட்க மறுக்கிறாள் சியாமளா. அடுத்த சில மாதங்களிலேயே தனக்கென ஒரு வேலையையும் தேடிக்கொள்கிறாள்..

பரிமளா தினமும் கண்ணீருடன் தன் மகளுடன் போராடுகிறார்.

சம்பந்தி வீட்டார் தன் மகனுக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கப் போவதாக மிரட்ட ஏற்பட்ட மன அதிர்ச்சியில் அவருக்கு Brain Stroke ஏற்படுகிறது.

அவருடைய இடப்பக்கம் முழுவதும், பேச்சும் செயலிழந்துபோகிறது. இரு வார மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புகிறாள்.

தன் தாய்க்கு நேர்ந்ததை காணச் சகியாமல் தன் தாய்க்கு துணையாய் நிற்க வேண்டிய நேரத்தில் தன்னால் தானே தன் தாய்க்கு இந்நிலை என்ற சுய பச்சாதாபத்துக்கு ப்லியாகி தற்கொலை செய்துக் கொள்கிறாள் அந்த முட்டாள் பெண் சியாமளா..

கதைகளில் நடப்பதுபோன்று நடைபெற்ற இச்சம்பவங்களால் நிலைகுலைந்து கவனிப்பார் யாருமின்றி அவருடைய மருத்துவருடைய பரிந்துரையால் இல்லத்தில் சேர்க்கப்படுகிறார் பரிமளா..

***

‘இத்தனை நடந்தும் என்ன ஏதுன்னு கேட்காத பரிமளாவின் பெற்றோரை என்னன்னு சொல்றது மிஸ்டர் ஜோசப். அவங்க சென்னையிலேயாதான் இப்பவும் இருக்காங்கன்னு பரிமளா சொல்லித்தான் எங்களுக்கே தெரியும்.. அவங்க எழுதிக்கொடுத்த விலாசத்துக்கு ஆளனுப்பியும் வரவேயில்லை.. என்னன்னு சொல்றது?’ என்று இல்லத்தில் இருந்த கன்னியர்களுள் ஒருவர் என்னிடம் கூறியபோது..

என்ன உலகமடா இது.. என்று தோன்றியது..

14 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - ராமு 2

ராமுவின் திருமணத்தன்று எனக்கு தஞ்சையில் முக்கியமான அலுவல் இருந்ததால் என்னால் அவருடைய திருமணத்திற்கு செல்ல இயலவில்லை. வாழ்த்துத் தந்தியும் ஒரு சிறு அன்பளிப்பும் மட்டுமே அனுப்ப முடிந்தது.

அதன் பிறகு அவரை மறந்தே போனேன்.

தஞ்சையில் சுமார் இரண்டாண்டுகள் இருந்துவிட்டு தூத்துக்குடிக்கு மாற்றலாகிப் போனேன்.

தூத்துக்குடியில் பணிக்கு சேர்ந்து ஒரு வாரம் இருக்கும். என்னுடைய தலைமையலுவலகத்திலிருந்து வந்திருந்த சுற்றறிக்கை என்னை அதிர்ச்சியுறச் செய்தது.

சாதாரணமாக ஊழியர் ஒருவர் ஓய்வு பெறுகையில் அவர் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன் அல்லது பிடித்தம் ஏதாவது வசூலாகாமல் எந்த கிளையிலாவது நிலுவையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுவது வழக்கம். இத்தகைய சுற்றறிக்கை ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டாலு, மரித்தாலும் வருவதுண்டு.

அன்று வந்திருந்த சுற்றறிக்கையில் எங்களுடைய பாலக்காடு கிளையில் சிப்பந்தியாகவிருந்த ராமு என்பவர் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவருக்கெதிராக நிலுவையிலுள்ள தொகை பற்றிய விவரங்களை உடனே தெரிவிக்கும்படியும் குறிப்பிட்டிருந்தது.

நான் அதிர்ந்துபோய் என்னுடைய உதவி மேலாளரை அழைத்து நாந்தான் ராமுவை பணிக்கு அமர்த்திய மேலாளர் என்பதைக் கூறி மாய்ந்து போனேன்.

உடனே அவர், ‘சார் நம்ம ஹென்றி பாலக்காடு ப்ராஞ்சிலருந்து டிரான்ஸ்ஃபர் ஆயி போன மாசந்தான் வந்தார். அவர கேட்டா இவரபத்தி ஏதாச்சும் தெரியும் சார். நான் போயி அவர அனுப்பட்டுமா?’ என்றார்.

‘அப்படியா.. சரி இப்ப வேணாம் சாயந்திரமா கூப்ட்டு கேக்கேன். இப்ப கஸ்டமர்ஸ் வர்ற நேரம்.’ என்று அவரை அனுப்பிவிட்டு அன்றைய அலுவலில் மூழ்கிப்போனேன்.

அன்று மாலை அன்றைய பணிகள் யாவையும் தீர்த்தபின் என்னுடைய குமாஸ்தாக்களில் ஒருவரான ஹென்றியை அழைத்து விசாரித்தேன்.

அவர் கூறிய விவரங்களை நம்பவும் முடியாமல் நம்பாமலும் இருக்க முடியாமல் நெடுநேரம் என் இருக்கையிலேயே அமர்ந்திருந்தேன்..

****

ராமுவின் வாழ்க்கையின் லட்சியமே தன்னுடைய சித்தி மகளை நல்ல இடத்தில் திருமணம் முடித்துக் கொடுப்பதுதான்.

சித்தி மகள் பார்ப்பதற்கு சிவப்பாக, லட்சணமாக இருந்தும் இந்த சமூகத்தினரிடையில் பரவலாக பரவி நின்ற வரதட்சணை என்னும் சாத்தான் இதற்கு தடையாயிருந்தது.

கடைசியாக பார்த்த இடத்தில் பெண் கொடுத்து பெண் எடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களுடைய குடும்பத்து பெண்ணுக்கு வரதட்சணை கேட்காத பட்சத்தில் நம் வீட்டு பெண்ணையும் வரதட்சணை இல்லாமல் எடுத்துக்கொள்வதாகவும் கூறுவதாக கடிதம் வந்தவுடனே ராமு மகிழ்ச்சியுடன் ஊருக்கு கிளம்பிச் சென்று அந்த பெண்ணைப் பார்க்காமலே ஒத்துக்கொண்டு தங்கைக்கு நிச்சயதார்த்தத்தை முடித்து இரு ஜோடிகளுக்கும் திருமணத்திற்கு நாள் குறித்த கையுடன் சென்னைக்கு திரும்பி பெரும்பாடுபடு திருமணத்திற்குத் தேவையான பணத்தைப் புரட்டியிருக்கிறார்.

அவருடைய பழைய முதலாளி, என்னுடைய வங்கி ஊழியர்கள், சில வாடிக்கையாளர்கள் என்பவர்களுடன் நிறுத்திக்கொள்ளாமல் அசுர வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடமும் கடன் பெற்று தங்கையின் திருமணத்தை முடித்திருக்கிறார். தங்கையின் திருமணத்தன்றும்  தனக்கு முடிக்கப் போகும் பெண்ணைக் காணாமல் போகவே தன்னுடைய சித்தி, சித்தப்பாவிடம் சாடை மாடையாக கேட்டிருக்கிறார். ‘இல்லடா ராமு அவளுக்கு ஏதோ காய்ச்சலாம்.. அதான் ஆத்துலயே விட்டுட்டு வந்திருக்கா.. இன்னும் ஒரு வாரத்துல நோக்கும் அவளுக்கும் கல்யாணமோன்னா.. அதான் ரெஸ்ட் எடுத்துக்க  ஆத்துலயே இருக்கா போலருக்கு. நீ வேணுன்னா போய் பார்த்துட்டு வாயேன்.’ என்று பதிலளிக்க, ‘சேச்சே.. அதெல்லாம் வேணாம்.. கல்யாணத்தன்னிக்கே பார்த்துண்டா போறது..’ என்று இருந்திருக்கிறார் ராமு..

பாவம் அவர்.. கள்ளங்கபடமில்லா மனிதர். தன்னை வளர்த்து ஆளாக்கிய சித்தியும் சித்தப்பாவும் தனக்கு கேடு நினைக்க மாட்டார்கள் என்ற நினைப்பில் திருமண தேதி வரை பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற தோன்றவே இல்லை.

மணவறைக்கு பெண்ணை இரண்டு மூன்று பேர் கைத்தாங்கலாக அழைத்து வந்ததைப் பார்த்ததும் லேசான சந்தேகம் எழுந்தது. ஆனால் அதற்கும் ஒரு சாக்கு வைத்திருந்தார் சித்தி, ‘இல்லடா ராமு அவோ ரெண்டு வாரமா ஜுரத்துல வீக்காயிருப்பாளோன்னோ.. அதான் தோளைப் பிடிச்சி கூட்டியாறா..’

தாலி கட்டி முடித்து முதல் ராத்திரி..

‘இன்னைக்கி நாள் நல்லால்லையாண்டா ராமு.. ஒரு வாரம் பத்து நாள் போட்டும்னு சொல்றாராம் ஜோஸ்யர்.. வா நாம நம்மாத்துக்கு போலாம்.. பொண்ணும் வீக்காருக்காளாம்.. அப்புறம் பாத்துக்கலாம்.. எங்க போய்ட போறது..’ என்ற சித்தியின் வாதத்தை நம்பி அவர்களுடன் தன் வீட்டுக்கு திரும்புகிறார்.

ஒரு வாரம் போனது.. பெண்ணைக் காட்டுவதாக தெரியவில்லை. லேசான சந்தேகம் மனதில் துளிர்க்க எதையும் தவறான கண்ணோட்டத்துடன் பார்த்தறியாத ராமு தன்னுடைய கிளையிலிருந்த சக நண்பர்களிடம் தெரிவிக்கிறார்.

அதில் ஒருவர் அடுத்த சில தினங்களில் ரகசிய விவசாரனையில் இறங்குகிறார். விஷயம் தெரியவருகிறது. ஆனால் ராமுவிடம் எப்படி இதைத் தெரிவிப்பதென தெரியாமல் தயங்கி நேரே அவருடைய சித்தி, சித்தப்பாவை எதிர்கொள்கிறார்.

‘எப்படி சார் இப்படி ஒரு அநியாய காரியத்த செஞ்சீங்க? ஒங்க மக நல்லாருக்கணுங்கறதுக்காக ஒங்கள தெய்வமா நினைச்சிக்கிட்டிருக்கற ஒரு அப்பாவி பையனோட வாழ்க்கைய இப்படி நாசமாக்கிட்டீங்களே.. இதுக்கு ஒங்களுக்கு எப்படி சார் மனசு வந்தது?’ என்று வாதிட்டிருக்கிறார்.

‘எல்லாம் அந்த பகவானோட விளையாட்டுப்பா.. எங்கக்கிட்டருந்தும் மறைச்சிட்டா பொண்ணு வீட்டுக்காரா.. ராமுவோட தங்¨கைக்கு நிச்சயம் பண்ணதுக்கப்புறந்தான் எங்களுக்கே தெரிய வந்துது.. அப்பவும் சொல்லியிருக்கலாம்..நிச்சயம் பண்ண கல்யாணத்த நிறுத்து வேண்டி வந்தா அப்புறம் எங்க பொண்ணுக்கு இந்த ஜன்மத்துல கல்யாணம் நடக்காதேப்பா.. நீ சொன்னா மாதிரி சுயநலந்தான்.. ராமு நல்லவன்.. புத்தி பெசகுன பொண்ணுன்னு அவள தள்ளி வச்சிரமாட்டான்னு நினைச்சித்தான் வாய மூடிண்டோம்.. அவளுக்கு அமாவாசை, பெளர்ணமி வந்தாத்தான் இப்படி ஆவும்னு சொன்னா..ஆனா இப்ப பார்த்தா..’

ஆனால் ராமு இதைக் கேள்விப்பட்டபோது எந்தவித அதிர்ச்சியையும் காட்டாமல் இருந்ததுதான் நண்பர்களுக்கு பெருத்த வியப்பாயிருந்திருக்கிறது.

‘இதுக்குத்தான் ஜோஸ்யர் சொல்லிருக்கார்.. கல்யாணம் ப்ராப்தம் இல்லேன்னுட்டு.. நாந்தான் அத எதுத்துக்கிட்டு செஞ்சேன்.. இதுல நல்ல காரியம்னு ஒன்னு நடந்துருக்கே அதுவே போறும். சித்தப்பா, சித்தி என்ன பண்ணுவா பாவம்..’

அத்துடன் நிற்கவில்லை அந்த சதிகார குடும்பம். ராமுவின் தங்கைய¨ மேலும் சீர் கொண்டு வா, பணம் கொண்டு வா என்று துன்புறுத்தியிருக்கிறது.

ராமு ஏற்கனவே திருமணத்திற்கென வாங்கியிருந்த அசுர வட்டிக்கு கடன் கொடுத்தவர்களின் கடித மற்றும் தொலைப்பேசி மிரட்டலுக்கு என்ன பதில் சொல்வதென தெரியாமல் திகைத்துப்போயிருக்க ஒரு நாள் அவருடைய தங்கையை நாத்தனாருடைய வைத்திய செலவுக்கு ரூ.50000/-த்தை உடனே கொண்டு வா என்று விரட்டியடிக்க செய்வதெறியாத ராமு அன்று மாலை வங்கியிலிருந்த பணத்தை இரும்பு அறைக்குக் (Safe Room) கொண்டு செல்லும் நேரத்தில் சில கரன்சி கற்றைகளை எடுத்து வேட்டியில் சொருக.. கையுள் களவுமாய் பிடிபடுகிறார்.

ஆயினும் அவருடைய நிலைமையை கருத்தில்கொண்டு அவரை மன்னித்து விட்டுவிட மேலாளர் தயாராயிருந்தும் காசாளராயிருந்த தொழ்ற்சங்க தலைவர் சம்மதிக்கவில்லை. ‘சார்.. ஏற்கனவே போன ரெண்டு மாசமா ஆயிரம், ரெண்டாயிரம்னு கேஷ்ல குறையறப்பவே ஒங்கக்கிட்ட கம்ப்ளெய்ன் செஞ்சிருக்கேன்.. நீங்க என்னோட கவனக்குறைவுக்கு பேங்க் பொறுப்பேக்க முடியாதுன்னு சொல்லிட்டீங்க.. இப்ப இவன கையும் களவுமா பிடிச்சி குடுத்துருக்கேன்.. எனக்கென்னவோ இவந்தான் அந்த திருட்டுக்கும் காரணம்னு நினைக்கேன். இவனெ இப்பவே போலீஸ்ல பிடிச்சி குடுக்கணும்.. நீங்களா செஞ்சா நல்லது இல்லன்னா..’ என்ரு மிரட்ட வேறு வழிதெரியாமல் ராமுவை போலீசில் பிடித்துக்கொடுத்திருக்கிறார்.

‘கல்யாணம் செஞ்சதுலருந்தே ராமு பழைய ராமுவா இல்ல சார்.. எப்பவும் எதையோ பறிகொடுத்தா மாதிரி.. கொஞ்ச, கொஞ்சமா குடிக்கவும் ஆரம்பிச்சிட்டார்.. குடி போதையில் ரோட்டோரத்துல படுத்து கிடந்தத நாங்களே பார்த்துட்டு நிறைய நாள் வீட்ல கொண்டு சேர்த்திருக்கோம்.. அப்பல்லாம் இவனால எங்காத்து மானமே போய்ட்டுதுன்னு அவங்க சித்தி குத்தம் சொல்வாங்களே தவிர இதுக்கெல்லாம் காரணம் அவங்கதான்னு உணரவே மாட்டாங்க.. பாவம் ராமு பெய்ல்ல கூட வழியில்லாம ஜெயில்லதான் இப்பவும் இருக்கார்னு கேள்வி சார்..’  என்றார் ஹென்றி..

என்ன கொடுமை?

யாருக்கும் எந்த தீங்கும் செய்யாத அந்த நல்ல ஆத்மாவுக்கு இப்படியொரு சோதனையா என்று மாய்ந்துபோனோம் நானும் என் மனைவியும்..

அத்துடன் முடியவில்லை அவருடைய கதை..

இரண்டு வாரங்கள் கழித்து  அவருடைய தங்கையின் மாமனார் வீட்டார் திருடனுக்கு தங்கை என்ற பட்டப்பெயரை சூட்டி வீட்டிலிருந்து விரட்டி விட கண்ணீரும் கம்பலையுமாக அவரை சிறையில் பார்க்க சென்ற நேரத்தில் அடக்க மாட்டாமல், ‘எனக்கு வாழ்க்கைய உண்டாக்கி குடுத்துட்டு நீயே அத பறிக்கவும் செஞ்சிட்டியேண்ணா..’ என்று கதற வெறுத்துப்போன ராமு தன் வாழ்வை முடித்துக்கொள்ளும் நோக்கத்துடன் அடுத்த நாள் காலை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் அவருடன் சென்ற காவலர் அசந்திருந்த நேரத்தில் வாகனத்திலிருந்து குதித்து.. பின்னால் வந்துக்கொண்டிருந்த லாரியொன்றில் அடிபட்டு..

தற்கொலைதான்.. என்று கேசை முடித்தார்கள் என்று கேள்விப்பட்டபோது....

தனக்காக வாழத் தெரியாத ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்வில் இறைவன் இத்தனை விளையாட வேண்டுமா என்ன?

விடை கிடைக்காத கேள்விதான் இது..

நிறைவு..

13 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 7

நான் சென்னை கிளைகளில் ஒன்றில் மேலாளராக பணியாற்றிய காலத்தில் ஒரு நாள் காலை குளித்து முடித்து அலுவலகத்திற்கு புறப்பட்டுக்கொண்டிருந்த நேரத்தில் வாசலில் அழைப்பு மணி ஒலிக்க சென்று கதவைத் திறந்தேன்.

சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வாசலில் கையில் ஒரு உறையை வைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்தேன். அவர் என்னைக் கண்டதும் பணிவுடன் வணக்கம் செலுத்திவிட்டு தான் இன்னாரிடத்திலிருந்து வருவதாக கூறினார்.

அவர் குறிப்பிட்ட நபர் என்னுடைய கிளையின் வாடிக்கையாளர்களுள் முக்கியமானவர் என்பதால் நான் அவரை உடனே வரவேற்று இருக்கையளித்தேன்.

அவர் கொண்டு வந்திருந்த கடிதத்தில் இக்கடிதத்தைக் கொண்டுவருபவர் தனக்கு மிகவும் பரிச்சயமான நண்பர் ஒருவரின் அலுவலகத்தில் தாற்காலிக ஊழியராக பணிபுரிகிறார் என்றும் முடிந்தால் என்னுடைய வங்கியில் அவருக்கு ஒரு வேலை கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் அவரை மேலும் கீழும் பார்த்தேன். அவருடைய தோற்றம் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வருவதை எனக்கு உணர்த்தியது. அவர் பார்ப்பதற்கு உற்சாகத்துடன் இருந்தாலும் அவருடைய கண்களில் நான் கண்ட ஒரு இனம் தெரியாத சோகம் ஏனோ என்னை அவர் மீது அனுதாபம் கொள்ள வைத்தது.

அன்றைய காலத்தில் என்னைப் போன்ற மேலாளர்களுக்கு யாரை வேண்டுமானாலும் தாற்காலிக சிப்பந்தி பணிக்கு நியமிக்கும் அதிகாரம் இருந்தது. தாற்காலிக பணியாளரின் வேலை திருப்தியளிக்கும் பட்சத்தில் அவரை நிரந்தர பணியாளராக ஆகவும் என்னுடைய தலைமையலுவலகத்திற்கு பரிந்துரை செய்தாலே போதும் என்ற நிலை.

அவரை பரிந்துரைத்திருந்த என்னுடைய வாடிக்கையாளர் மிகவும் நம்பத்தகுந்தவராகவும் அவரால் பரிந்துரைக்கப்பட்டிருந்த அந்த வாலிபரும் நல்ல அடக்க ஒடுக்கமுள்ளவராயும், எளிய குடும்பத்திலிருந்து வந்தவர் போல் தோன்றியதாலும் நான் அவரை ஒரு தாற்காலிக சிப்பந்தியாக பணியில் அமர்த்த தீர்மானித்தேன்.

ஆகவே அன்றே அவரை என்னுடைய அலுவலகத்திற்கு வருமாறு பணித்துவிட்டு நான் உடை மாற்ற சென்றேன்.

அப்படி பணியில் அமர்ந்தவர்தான் ராமு.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சார்ந்தவர் என்பதால் தமிழும் மலையாளமும் சரளமாக வந்தது. அத்துடன் சென்னையில் சரக்குகளை கையாளும் ஒரு போக்குவரத்து அலுவலகத்தில் ஓராண்டுகாலம் புக்கிங் குமாஸ்தாவாக பணியாற்றிய அனுபவமும் இருந்தது. பத்தாவது வரை படித்திருந்தார். சுமாரான ஆங்கில அறிவும் இருந்தது.

ஆனால் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றியவரால் திடீரென்று அந்நிலையிலிருந்து இறங்கி வந்து மற்ற குமாஸ்தாக்களுக்கு ஏவல் பணிசெய்யும் ஒரு சிப்பந்தியாக அவரால் செயலாற்ற முடியுமா என்று ஆரம்பத்தில் எனக்கு ஒருவித தயக்கம் தோன்றியது.

‘அதெல்லாம் நான் பாக்க மாட்டேன் சார். எனக்கு அப்பா, அம்மா இல்ல சார். எனக்கு ஒரேயொரு சித்தப்பாவும், சித்தியும்தான். அவங்கதான் என்னெ வளர்த்து ஆளாக்கினாங்க. நல்லா வாழ்ந்த குடும்பம். இப்போ நொடிச்சி போயி என் சம்பளத்த நம்பி இருக்காங்க. அவங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கு. கல்யாணம் பண்ணணும்.. அதுக்கும் நாந்தான் பொறுப்பு. நா இப்ப வேலை செய்யற எடத்துல இப்போதைக்கு தேவையான அளவு சம்பளம் கெடச்சாலும் வேல நிரந்தரமில்ல சார்.. அதான் நம்ம முதலாளி ஐயாகிட்டவே வேற எங்கயாவது ரெக்கமெண்ட் பண்ணச் சொல்லி கேட்டேன். அவர்தான் இப்ப லெட்டர் குடுத்த ஐயா கிட்ட சொல்லி விட்டார். நீங்களோ இல்ல இந்த ப்ராஞ்ச்லருக்கற யார் என்ன சொன்னாலும் செய்வேன் சார். என் கையும் வாயும் சுத்தம் சார். நீங்க என்ன தைரியமா சேர்த்துக்கலாம் சார்.’ என்று வார்த்தைக்கு வார்த்தை சார் போட்டு பேசியதில் திருப்தியடைந்து நான் அவரை அன்றே பணியில் சேர்த்துக்கொண்டேன்.

அடுத்த ஒரு மாதத்திலேயே அவருடைய சாமர்த்தியம், பணிவு என்னை மட்டுமல்லாமல் என் கிளையில் இருந்த அத்தனை பேரையும் கவர்ந்ததுடன் கிளைக்கு வரும் வாடிக்கையாளர்களையும் ‘எங்க சார் ராமுவ காணம்?’ என்று கேட்கும் வகையில் இருந்தது.

எனக்கு அவருடைய திறமையில் மிகவும் கவர்ந்தது வாய்ச் சாலகம்தான். பேசுவதில் பயங்கர சமர்த்து. எந்த வெளி காரியத்திற்கும் அவரை அனுப்பினால் வெட்டிக்கிட்டு வா என்றால் பறித்துக்கொண்டு வந்தார் என்பார்களே அந்த ரகம்.

வேலையிலும் படு சுறுசுறுப்பு. அத்துடன் ஒரு வங்கிக் கிளையில் சிப்பந்தியாக பணியாற்றுபவருடைய கையும் படு சுத்தமாக இருக்க வேண்டும். பணம் புரளும் இடமல்லாவா? ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் அன்று வாடிக்கையாளர்கள் செலுத்திய கரன்சி நோட்டுகளை கற்றையாக, கற்றையாக அடுக்கி அதற்குரிய ஸ்டேப்ளர் இயந்திரத்தில் நூறு நோட்டுகளைக் கொண்ட ஒவ்வொரு கற்றையையும் ஸ்டேப்பிள் செய்து கட்டு கட்டாக கட்டி ஆள் உயரத்திற்கு அடுக்கி வைத்திருப்பார் காசாளர்.

வங்கியில் பணி புரியும் பணியாளர்களைப் பொறுத்தவரை அவை வெறும் காகிதங்களே. அப்படியல்லாமல் இவ்வளவு பணம் இருக்கிறதே ஸ்டாப்ளர் செய்யும் நேரத்தில் ஒன்றிரண்டை உருவி எடுத்துக்கொண்டால் தெரியவா போகிறது என்று ஒரு சிப்பந்தி நினைத்துப் பார்க்க துவங்கிவிட்டால் வந்தது ஆபத்து. அதுவே ஒரு போதைபோலாகிவிடும். கையும் களவுமாக பிடிபட்டால் வேலை போவதுடன் கைது செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

ஆகவேதான் ஒருவரை, அதுவும் சிப்பந்தி வேலைக்கு, பணிக்கு அமர்த்துமுன் அவருடைய பூர்வீகத்தையே தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ராமுவின் நேர்மையில் எனக்கு எந்தவித ஐயப்பாடும் இருந்ததில்லை.

ராமுவிடம் என்னை மிகவும் கவர்ந்த மற்றொரு அம்சம் அவருடைய எளிமை. அவர் முதல் நாள் யார் என்ன வேலை சொன்னாலும் செய்வேன் சார் என்றபோது பணிக்கு சேரும் புதிதில் எல்லோரும் சொல்லும் ஒரு வாக்கியம் என்றே நினைத்தேன்.

ஆனால் ராமுவைப் பொருத்தவரை அது உண்மையாகவே இருந்தது. என்னுடைய வீட்டுக்கும் வந்து உரிமையுடன் சகல வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்.

நான் சென்னையிலிருந்த சமயத்தில் என் மைத்துனர் கப்பலிலிருந்து விடுமுறையில் இந்தியா வந்திருந்தார். துத்துக்குடி செல்லும் வழியில் சென்னை வந்து ஒருவார காலம் தங்கியிருப்பேன் என்று அவருடைய கடிதம் வந்ததுமே ராமு பரபரப்பாகிவிட்டார். அவர் விமான நிலையத்தில் வந்து இறங்கிய நேரம் நள்ளிரவு. அப்போதும் என்னுடனும் என் மனைவியுடனும் அவரும் வந்து சாமான்களையெல்லாம் காரில் ஏற்றி, வீடு வந்ததும் இறக்கி வைத்துவிட்டுத்தான் வீடு திரும்பினார். ‘எதுக்கு ராமு நீங்க..’ என்று என் மனைவி தடுத்தபோது ‘என்னெ ஒங்க வீட்டாள நினைச்சிக்குங்க மேடம்.’ என்றார்.

என் மைத்துனர் ஒரு சினிமா பிரியர். அதுவும் இரண்டாண்டுகள் தொடர்ந்து கப்பலில் பணியாற்றிவிட்டு எப்போதுடா தாயகம் வந்து சேர்வோம் என்று ஆவலுடன் சென்னை வந்திறங்கிய அவர் எங்களுடன் தங்கிய அந்த ஒரு வாரத்தில் சென்னையிலுள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் அனுமதி சீட்டு வாங்கிக் கொடுத்து அவருடைய நட்பையும் சம்பாதித்துக் கொண்டார். 'என்ன மச்சான் ராமு ஒங்களுக்காக இப்படி உருகுறார்.' என்று என் மைத்துனர் வியப்புறும்படி நடந்துக்கொண்டார் ராமு.

எனக்கு மட்டுமல்ல என்னுடைய உதவி மேலாளர் துவங்கி என் கிளையிலிருந்த குமாஸ்தா, காசாளர் என எல்லாருக்குமே அவர்தான் பெர்சனல் சேவகர் என்றால் மிகையாகாது.

அப்போது என்னுடைய பணியாற்றிய அனைவருமே, அதாவது சிப்பந்திகளைத் தவிர, பெண்கள், உதவி மேலாளர் உட்பட. அவர்கள் அனைவருக்குமே ராமு உற்ற நண்பன் எனலாம். அந்த அளவுக்கு எல்லோருக்கும் அவரை பிடித்திருந்தது.

நான் சென்னையிலிருந்து மாற்றலாகி தஞ்சைக்கு செல்லும் நேரத்தில் என்னுடைய வீட்டுப் பொருட்களை பேக்கிங் செய்து அவர் முன்பு பணியாற்றிய போக்குவரத்து நிறுவனத்தின் லாரிகளில் ஒன்றை அவரே மலிவாக அமர்த்தி கூடவே லாரியில் தஞ்சைவரை வந்து எல்லா பொருட்களையும் பொருப்புடன் இறக்கி கொடுத்த காட்சி இப்போதும் என் கண் முன்னே விரிகின்றது.

நான் மாற்றலாகும் முன்பே அவரை நிரந்தர பணியாளராக்கியிருந்தேன். சுமார் ரூ.3000/- வருமானத்தில் நிரந்தர நியமன உத்தரவு வந்த தினத்தன்று ஒரு தட்டு நிறைய பூ, பழங்களுடன் என் வீட்டுக்கு வந்து என்னையும் என்னுடைய மனைவியையும் சேர்த்து நிற்க வைத்து முப்பது வயது கூட நிறைந்திராத என்னுடைய காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி கண்களில் ததும்பி நின்ற கண்ணீருடன் நன்றி செலுத்திய நல்ல, விகல்பமில்லாத, குழந்தை மனதுடையவர் ராமு.

‘சார் நீங்க செஞ்ச இந்த உதவி எனக்கு மட்டுமில்ல சார். என்னையே நம்பி ஊர்லருக்கற என் சித்தி, சித்தப்பா, தங்கச்சி.. இவங்க எல்லாருக்குமே செஞ்ச உதவி சார்.’ என்றார்.

‘இந்த வருமானத்துல நாலு பேர் அடங்கிய குடும்பத்த எப்படி ராமு சமாளிப்பே. அதுவும் அவங்க ஊர்ல இருக்காங்க. இங்க ஒன் செலவுக்கு போக ஒன்னால அவங்களுக்கு அப்படி எவ்வளவு குடுக்க முடியும்?’

அவர் சிரித்தார். ‘என்ன சார் நீங்க. சுமார் பதினஞ்சி மணி நேரம் வேல செஞ்சி ஆயிரம் ரூபா வாங்கிக்கிட்டிருந்த எனக்கு இந்த சம்பளம் புதையல் மாதிரி சார். நா இப்பவும் ராத்திரியில லாரி ஷெட்லதான் சார் போய் படுத்துக்குவேன். ஒங்கள மாதிரியே என் பழைய முதலாளியும் சொக்கத் தங்கம் சார். நீங்க எனக்கு கூட பொறக்காத அண்ணா மாதிரினா அவர் எனக்கு அப்பா மாதிரி. இங்க வேல முடிஞ்சதும் நேரா அங்கதான போறேன். ராத்திரில எல்லா வண்டியும் பொறப்பட்டு போனதும் ஷெட்லருக்கற சில்லறை வேலைய பார்த்துட்டு படுக்கப் போவேன். காலையில டீ, பலகாரம் பக்கத்துலருக்கற டீ கடையில முடிச்சிக்குவேன். அதுக்கு பணம் குடுக்க வேணாம். முதலாளி கணக்கு. பகல்ல நம்ம ஸ்டாஃப் எல்லாருமா அவங்க கொண்டு வர சாப்பாட்டுல எனக்கு ஒரு ஷேர் குடுத்துருவாங்க. ராத்திரிக்கும் ஷெட்ல பக்கத்துலருக்கற டீக்கடைதான். அது யாராச்சும் ஒரு லாரி டிரைவர் பாத்துக்குவார். அப்புறம் என்ன சார். ஒரு நூறு ரூபா மாத்திரம் என் கைச் செலவுக்கு வச்சிக்குவேன். ரெண்டாயிரத்த ஊருக்கு அனுப்பிருவேன். மீதிய நம்ம பேங்க்லயே வச்சிருவேன். தங்கச்சிக்கு ரெண்டு வருசத்துல கல்யாணத்த முடிச்சிரணும்..’ என்றார் மூச்சு விடாமல்.

என் மனைவி கேலியுடன், ‘என்ன ராமு. ஒங்க கல்யாணம் எப்ப? இப்பவே கல்யாண வயசு தாண்டிட்டா மாதிரி தெரியுதே?’ என்பார். ராமுவின் உருவம் அப்படித்தான் இருந்தது. 25 வயதிலேயே தலை முடியில் பாதிக்கு மேல் கொட்டி, ஒட்டிய கன்னங்கள், உள் வாங்கிய கண்கள் என முப்பது வயதுக்கும் கூடுதல் உருவத்தில் சில சமயங்களில் பார்க்கவே பாவமாக இருக்கும்.

‘எனக்கா கல்யாணமா? என்ன மேடம் தமாஷ் பண்றீங்க. தங்கச்சிக்கு கல்யாணத்த முடிச்ச கையோட சார் தயவுல எனக்கு நம்ம பாலக்காட்டு பிராஞ்சுக்கு டிரான்ஸ்ஃபர் குடுத்துட்டாங்கன்னா என்னையே மலையா நம்பியிருக்கற என் சித்தி, சித்தப்பாக்கூட அவங்க கடைசி காலம் வரைக்கும் இருந்து காப்பாத்தணும்னு நினைச்சிக்கிட்டிருக்கேன்.. எனக்கு கல்யாண ப்ராப்தம் இல்லன்னு ஜோசியரே சொல்லியிருக்கார் மேடம்.’ என்றார்.

அப்படி கூறியவரிடமிருந்து நான் தஞ்சையிலிருந்த சமயத்தில் ஒரு நாள் தொலைப்பேசி வந்தது.

‘சார் எனக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்கு சார். நீங்க எப்படியாச்சும் எனக்கு பாலக்காட்டுக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிக் குடுத்தா நல்லாருக்கும் சார்.’ என்றதும் நான் ஆச்சரியத்துடன், ‘என்ன ராமு திடீர்னு. எனக்கு கல்யாண ப்ராப்தமே இல்லேன்னு சொன்னீங்க?’ என்றேன்.

அவர் சிரித்தார். அந்த சிரிப்பில் சந்தோஷம் இல்லையே என்று ஒரு நொடி தோன்றினாலும் அது வெறும் பிரம்மை என்று நினைத்து, ‘சரி ராமு நான் நம்ம எச். ஆர் ஹெட் கிட்ட பேசி ஏற்பாடு பண்றேன். ஒங்களுக்கு ஆர்டர் வர்ற வரைக்கும் ஒங்க மேனேஜருக்கு தெரிய வேணாம்.’ என்றேன். ஏனெனில் என்னைத் தொடர்ந்து மேலாளராக வந்திருந்தவருக்கும் எனக்கும் லேசான அபிப்பிராய பேதம் இருந்தது.

அப்போது எங்களுடைய வங்கியின் எச்.ஆர் ஹெட்டாக இருந்தவர் என்னுடைய முன்னாள் மேலாளர் என்பதால் என்னுடைய பரிந்துரையை ஏற்று அடுத்த ஒரு வாரத்தில் ராமுவுக்கு பாலக்காடு கிளைக்கு மாற்றம் கொடுத்தார்.

ஆனால் நான் செய்த மிகப்பெரிய தவறு அது என்று அடுத்த ஐந்தாறு மாதங்களிலேயே தெரிந்தது.

நாளை நிறைவு பெறும்..

09 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - ப்ரேம் 2

ப்ரேம் எப்போதுமே எளிதில் உணர்ச்சிவசப்படாதவர். நான் அப்படியல்ல. அதற்கு நேர் எதிர்.

அவர் எந்த அளவுக்கு தன்னுடைய மனைவியின் மேல் உயிராயிருந்தார் என்பது எனக்கு தெரியும்.

அப்படிப்பட்ட பெண் தன்னைவிட்டு பிரிந்துபோனார் என்று சர்வ சாதாரணமாக, எந்தவித உணர்ச்சியும் இல்லாத குரலில்...

‘என்னடா சொல்றே?’ என்ற என்னுடைய சற்றே உரத்த குரல் கான்டீனில் சிற்றுண்டியருந்திக் கொண்டிருந்த சிலரை என்னை திரும்பி பார்க்க வைத்தது. அதற்கு மேலும் அங்கு அமர்ந்து உரையாட முடியும் எனக்கு தோன்றாததால், ‘டேய் ப்ரேம் ஹாஃப் டே லீவ் போட்டுட்டு வாயேன்.. நாம முந்தி போவோமே அந்த பார்க்ல போய் ஒக்காந்து பேசலாம்.. வா’ என்று அவனை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு புறப்பட்டேன்.

இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிந்துக்கொண்டிருந்த சமயத்தில் மாலை நேரங்களில் சில நாட்கள் அங்கு சென்று அமர்ந்து பேசிக் கொண்டிருப்பது வழக்கம். ப்ரேம் பெற்றோருக்கு ஒரே மகன் என்றாலும் அவனுடைய தந்தையின் குடும்பம் பெரியது. இந்துக்  கூட்டுக் குடும்பம் (HUF) என்பார்களே அந்த ரகம். பிரச்சினைகளுக்கு கேட்கவா வேண்டும்..

ஊரைவிட்டு வந்து தனி அறை பிடித்து பணியாற்றிக் கொண்டிருந்தவனை சில நூறு கி.மீ. துரத்திலிருந்த குடும்பப் பிரச்சினை அவ்வப்போது வரும் கடிதங்கள் மூலம் காதில் விழும். அப்போதெல்லாம் மன ஆறுதலுக்காக அவற்றை என்னுடன் பகிர்ந்துக்கொள்வான். அதே பார்க் இப்போதும் அவனுடைய பிரச்சினையை என்னுடன் பகிர்ந்துக்கொள்ள உதவியதை வேதனையுடன் நினைத்துப் பார்த்தேன்.

‘டேய்..ப்ரேம்.. அப்போ ஒங்கப்பா அனுப்புன கடிதங்கள இங்கன வச்சி படிச்சிக் காட்டி.. இதுக்கு ஏதாச்சும் ஐடியா சொல்லுறான்னு கேப்பியே ஞாபகம் இருக்கா..’ என்றபோது அவனால் லேசாக புன்னகை மட்டுமே செய்ய முடிந்தது.

நாங்களிருவரும் எப்போதும் அமரும் அந்த சிமெண்ட் பெஞ்ச் அதே கோலத்தில் காலியாய் இருக்க எங்களையுமறியாமல் அதிலேயே அமர்ந்தோம்..

அடுத்த சுமார் இரண்டு மணி நேரத்தில் அவன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் இப்போது மீண்டும் நினைவுக்கு வர என்னையுமறியாமல் கண்கலங்கிப் போகிறேன்.

அவனுடைய குரலில் பெரிதாய் எந்த வருத்தமும் தெரியவில்லையென்றாலும் என் மனம் வலித்தது. அந்த வேதனையை என்னால் எழுத்தில் வடித்தெடுக்க முடியுமா என்பது சந்தேகமே..

***

லதா திருமணமான புதிதில் ஒரு சராசரி மனைவிக்குண்டான கோபம், தாபம், பொறாமையுடன் இருந்தாள். சிறிய ஊரில் பிறந்து வளர்ந்து சட்டென்று சென்னையைப் போன்ற ஒரு பெரு நகரத்தில் வாழ வந்த ஒரு பெண்ணின் சுபாவத்தைத் தவிர வேறெந்த விசித்திர குணத்தையும் வெளிக்காட்டவில்லை..

ஆனால் நாளடைவில் ப்ரேமுடன் வெளியில் செல்லும்போதெல்லாம் அவள் தன்னை மறைமுகமாக கண்கானிப்பதை அவன் உணர்ந்தான். ஆரம்பத்தில் தன்னுடைய கணவன் பார்க்க கவர்ச்சியானவன் என்று அவள் கொண்டிருந்த  கர்வம் மெள்ள, மெள்ள சந்தேகமாக மாறத் துவங்கியதை அவனால் உணர முடிந்தது.

‘இங்க பாருங்க.. இனிமே நா ஒங்கக் கூட வெளியில வரமாட்டேன்.. இந்த பட்டணத்துல இருக்கறவளுங்களுக்கு வெவஸ்த்தையே இல்ல போலருக்கே.. இப்படி விளுங்கறா மாதிரி பாக்கறாளுங்க.. அதுவும் கட்டுன பொண்டாட்டி கூட போறப்ப?’ என்பாள் வீட்டுக்கு திரும்பியதும்.

ஆரம்பத்தில் ப்ரேம் அதை மனைவியருக்கே உரிய பொறாமை என்று நினைத்து சிரிப்புடன், ‘ஏய் லதா.. என்ன ஒன்னையுந்தான் ஆம்பளைங்க விழுங்கறாமாதிரி பாக்கானுங்க.. நா ஏதாச்சும் சொல்றேனா என்ன? பாக்கறவன் பாக்கத்தான் செய்வான்.. நம்ம மனசுதான் சுத்தமாருக்கணும்..’ என்பான்..

ஆனால் லதா ஒத்துக்கொள்ள மாட்டாள்.. ‘அதெப்படிங்க.. ஆம்பளைங்க பொண்ணுங்க அழகாருந்தாத்தான்னு இல்ல.. எல்லா பொண்ணுங்களையுந்தான் பாப்பாங்க.. எங்க ஊர்லயும் அப்படித்தான்.. சின்ன வயசுலருந்தே எங்க வீட்ல, ‘ரோட்ல போகும்போது தரைய பாத்துத்தான் நடக்கணும்.. ரோட்ல போற வர ஆம்பளைங்க பாக்கத்தான் செய்வாங்க.. அத நீங்க பாத்தீங்கன்னாதான் பிரச்சினை.. பின்னாலயே வருவாங்க’ன்னு சொல்லித்தான் எங்கள வளர்த்தாங்க. அதனால அது ஒரு பெரிய பிரச்சினையில்ல.. ஆனா இது அப்படியில்ல..’ என்பாள்..

சில நேரங்களில் ப்ரேம் சலிப்புடன், ‘சரி இப்ப என்ன பண்ணலாம் சொல்லு.. என் மூஞ்சில ஆசிட ஊத்திக்கவா?’ என்பான்..

‘ஆன்னா, ஊன்னா.. இதையே சொல்லி சமாளிங்க..’ என்று அத்துடன் அந்த விஷயத்தை முடித்துவிடும் லதா நாளடைவில் அவனுடன் வெளியில் வருவதையே நிறுத்திவிட ப்ரேம் இவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றால் என்று சிந்திக்கலானான்..

திருமணம் முடிந்து முதல் வருடத்திலேயே ஒரு பெண்குழந்தை, இருவரையும் தூக்கி சாப்பிட்டுவிடக் கூடிய கலருடனும் அழகுடனும் பிறக்க லதா தன் கவலையை மறந்து அந்த குழந்தையுடனேயே ஐக்கியமாகிப் போக ப்ரேம் அவளை மருத்துவரிடம் கொண்டு செல்லவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைத்து சமாதானமடைந்தான்.

குழந்தை பிறந்து ஒரு வருடம் பூர்த்தியாகவிருந்த சமயத்தில், ‘மாப்பிள்ளை, பிள்ளைக்கு மொட்ட போட்டு காது குத்தணும். நம்ம குலதெய்வத்துக்கு குடும்பத்தோட வர்றதா லதா அம்மா நேந்திருக்காளாம். அதனால ஒரு நாலு நாள் லீவ் போட்டுட்டு லதாவ கூட்டிக்கிட்டு வந்தீங்கன்னா..’ என்று ஊரிலிருந்து வந்த கடிதத்தைப் பார்த்ததும் தன் நண்பனுடைய நாற்சக்கர வாகனத்தை ஏற்பாடு செய்துக்கொண்டு கிளம்பினான்..

ஆறேழு மணி நேர பயணத்தில் அடைந்துவிடக்கூடிய தூரம் என்பதால் உச்சி வெயிலுக்கு முன்பு ஊர் சேர்ந்து போய்விட வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னையிலிருந்து விடியற்காலை நான்கு மணிக்கு புறப்பட்டான்..

குழந்தை உறக்கத்திலிருந்ததால் லதாவும் குழந்தையும் காரின் பின் சீட்டில் அமர ப்ரேம் தன் நண்பனுடைய ஓட்டுனரின் அருகில் அமர்ந்துக்கொண்டான்.

மார்கழி மாத விடியற்காலை நேரம்.. பனிமூட்டம்.. ஹெட்லைட்டை முழு வீச்சில் இட்டுக்கொண்டு வாகனங்கள் சர், சர்ரென்று தங்களைக் கடந்து செல்வதைப் பார்த்த ப்ரேம்.. ‘கொஞ்சம் மெதுவாவே ஓட்டுங்க டிரைவர்.. அவசரம் ஒன்னுமில்ல..’ என்று எச்சரித்து வாய் மூடுவதற்குள் எதிரில் கண்மூடித்தனமாக வந்த லாரியொன்றிலிருந்து தப்பிக்க ஓட்டுனர் தன் முழு பலத்தையும் உபயோகித்து வாகனத்தைத் திருப்ப சாலையோரத்திலிருந்த மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானது.

பின் சீட்டிலிருந்த லதாவும் குழந்தையும் அதிர்ஷ்டவசமாக லேசான சிறாய்ப்புகளுடன் தப்பினர்.

ஓட்டுனர் படுகாயமடைய அவருக்கருகில் முன் சீட்டில் அமர்ந்திருந்த ப்ரேமுக்கு முன் கண்ணாடி சுக்குள் நூறாக உடைந்து தெறித்ததில் முகத்தில் ஐந்தாறு இடங்களில் கீறல்.. சில சற்று ஆழமாகவே..

நல்லவேளையாக விபத்து சென்னைக்கு மிக அருகிலேயே ஏற்பட்டதால் இருவரையும் உடனே அருகிலிருந்த தனியார் மருத்துவமனையொன்றில் சேர்த்து சிகிச்சையளிக்க முடிந்தது.

செய்தியறிந்து ப்ரேமுடைய பெற்றோரும்.. லதாவின் பெற்றோரும் ஊரிலிருந்து ஓடி வர ப்ரேம் இரு வார மருத்துவமனை வாசத்திற்கு பிறகு வீடு திரும்பினான். ஓட்டுனரோ சிகிச்சை பலனளிக்காமல் மரித்துப் போனார்.

‘நானும் அந்த விபத்துலயே செத்துப் போயிருக்கலாம்டா.. பொழச்சி வந்து இந்தமாதிரி அவஸ்த பட வேண்டியிருக்காதுல்லே..’ என்ற என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் நான் அமர்ந்திருந்தேன்..

‘அந்த ஆக்சிடெண்டுலயா ஒன் மொகம் இப்படியாயிருச்சி?’ என்றேன்.

‘இல்லடா.. ஒரு அஞ்சாறு வடு மட்டுந்தான் இருந்தது. அதுல ரெண்டு மூஞ்சிக்கு குறுக்கே கொஞ்சம் நீளமா.. ஆனா இதுல லதாவுக்கு என்னவோ நிம்மதியாருந்தா மாதிரி.. எங்க ரெண்டு பேர் குடும்பத்துக்குமே அவளோட அந்த ஒரு மாதிரி கவலைப்படாத குணம் அதிர்ச்சியாருந்தது. ஆனா நா அத பொருட்படுத்தல.. எப்படியோ அவளோட நச்சரிப்புலருந்து விடுதல கிடைச்சிதேன்னு நினைச்சேன்..’ என்று நிறுத்திய ப்ரேம் மீண்டும் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைக்க, ‘என்னடா இது நீ பாட்டுக்கு ஊதி தள்ளிக்கிட்டே இருக்கே.. முந்தியெல்லாம் நீ இவ்வளவு குடிக்க மாட்டியே?’ என்றேன்.

ஆனால் அவன் அதைக் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்தான்.

‘ஆனா என் குழந்தையே என் முகத்த பார்த்து பயந்து அலற ஆரம்பிச்சப்போதான் வீட்ல மறுபடியும் பிரச்சினை வந்தது ஜோசப். லதா ஒரு நாள் ‘என்னங்க நான் சொல்றனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க.. நீங்க இந்த மூஞ்சோட பிள்ளையோட மொகத்துல விழிக்காதீங்க. இனிமே அவ தூங்கனதுக்கப்புறம் வாங்களேன்.. இல்லன்னா மூஞ்சிக்கு ஏதாச்சும் வைத்தியம் பாருங்க.. குழந்தைக்கென்ன எனக்கே ஒங்க மொகத்த பாக்க சகிக்கல.. இந்த முகத்துக்கா ஏங்கிப் போய் நின்னேன்னு நினைச்சால அருவருப்பாருக்குன்னு’ சொன்னப்போ எனக்கு நேரா போய் தற்கொல பண்ணிக்கலாம்னு கூட தோனிச்சி.. ஆனா எங்கம்மா அப்பா மொகத்துக்காக பொறுத்துக்கிட்டேன். என் ஆஃபீஸ்ல என் ஃப்ரெண்ட்ஸ்கிட்டருந்து எனக்கு கிடைச்ச  ஆறுதல்கூட என் வீட்ல கிடைக்கலேன்னு நினைச்சப்போ பேசாம டைவர்ஸ் பண்ணிட்டா என்னன்னு கூட தோனிச்சி. ஒனக்குதான் தெரியுமே எங்க குடும்பம் HUFனு.. கல்யாணத்துக்கு நின்ன சித்தப்பா பொண்ணுங்க, அத்தை பொண்ணுங்கன்னு எதையாவது காரணம் காட்டி என் விருப்பத்த நிறைவேத்திக்கவே முடியாதுன்னு போயிருச்சி.’

‘டேய் ப்ரேம்.. லதா சொன்னா மாதிரி இதுக்கு ஏதாச்சும் ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட் கிட்ட காட்டித்தான் பாரேன்னு அப்பா சொன்னாரேன்னு நானும் போய் காட்டுனேன்.. அந்த டாக்டர் ப்ரஸ்க்ரைப் பண்ண க்ரீம வாங்கி ஒரு ரெண்டு வாரத்துக்கு தடவியிருப்பேன்.. அது எனக்கு ஒத்துக்கல போலருக்கு.. ஒரு மாசத்துக்கப்புறம்தான் இந்த ராஷஸ் வந்துது.. அதுக்கப்புறம் தோலெல்லாம் திட்டு திட்டா கருப்பா இப்பருக்கற மாதிரி...’ சொல்ல வந்ததை தொடர முடியாமல் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு சூனியத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவனிடம் என்ன பேசுவதென தெரியாமல் நான் அமர்ந்திருந்தேன்..

‘கீறல் வடு இருந்ததுக்கே வீட்டுக்கு இருட்டனதுக்கப்புறம் வாங்கன்னு சொன்னவளாச்சே.. இனி கேக்கணுமா? அஞ்சாறு மாசம் கழிச்சி ஒரு நாள் நான் ஆஃபீஸ் விஷயமா வெளியூர் போய்ட்டு ஒருவாரம் கழிச்சி வரேன்.. வீடு பூட்டிக் கிடக்கு.. எங்க அப்பார்ட்மெண்ட்ல இருந்தவங்க ஒருத்தர் வந்து ‘சார் ஒங்க வய்ஃப் குழந்தைய தூக்கிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போறதா சொல்லிட்டு போய்ட்டாங்க.. நீங்க வந்ததும் ஃபோன் பண்ணுவீங்களாம்..’என்று என்னுடைய வீட்டு சாவியைக் கொடுத்துவிட்டுபோனார்றா.. நா வீட்ட தொறந்து பாக்கேன்.. முன் ரூம்லயே ஒரு லெட்டர்..  இனிமே ஒங்கக் கூட என்னால வாழ முடியாது. நான் போறேன்.. என்னோட மனசுக்கு புடிச்ச ஒருத்தர் கூட, என்னோட என் குழந்தையையும் ஏத்துக்க தயாராருக்கறவரோட போரேன்.. எங்க வீட்டுக்கு தெரிய படுத்தி, என்னெ தேட முயற்சி செஞ்சீங்கன்னா.. நீங்க என்னெ கொடுமை படுத்துனதா போலீஸ்ல கம்ப்ளெய்ண்ட் பண்ணுவேன்னு லெட்டர்ல.. ஆனா அடுத்த நாளே நான் பொறப்பட்டு அவங்க ஊருக்கு போனேன்.. லெட்டர காட்டினேன்.. அவங்க அதிர்ச்சியில என்ன பேசறதுன்னே தெரியாம நிக்க.. நான் எங்க ஊருக்கு போய் அப்பா, அம்மாட்ட சொன்னேன்.. அப்பாவால தாங்க முடியல.. நான் ஊருக்கு திரும்பி வந்து சேர்றேன்.. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்குன்னு தந்திவருது.. வீட்ல சித்தப்பா, அத்தை எல்லாருமா சேர்ந்து பேசியிருக்காங்க.. அப்பாவால தாங்க முடியல.. மாசிவ் அட்டாக். எவ்வளவோ முயற்சி செஞ்சும் அடுத்த நாளே..' தொடர்ந்து பேச முடியாமல் சற்று நேரம் மவுனமாகிறான்.. நானும் எதிரே சாலையில் படுபிசியாய் இருந்த போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறேன்...

எத்தனை நேரம் போனதோ அவனாகவே தொடர்கிறான். 'அதுக்கப்புறம் அம்மாவ கூட்டிக்கிட்டு இங்க வந்துட்டேன்.. லதா எங்க போனா, யாரோட போனா.. ஒரு விவரமும் இல்லை.. அந்த அப்பார்ட்மெண்ட்லயே எல்லாரும் கேள்விப்பட்டப்போ நம்ப முடியாம என்னையே சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க.. அதுல ஒருத்தர் போலீஸ்ல புகார் பண்ணி.. அவங்க வந்து என்னெ ஸ்டேஷனுக்கு கூப்ட்டுட்டு போயி.. அடுத்த நாள் பேப்ப்ரல எல்லாம் வந்து.. எங்க ஆஃபீஸ்லயே என்னெ சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டாங்க.  என் மேல ஒரு தப்பும் இல்லன்னு விடற வரைக்கும் நா பட்ட அவஸ்தை இருக்கே... வார்த்தையால சொல்ல முடியாதுறா.. விஷயத்த கேள்விப்பட்டு எங்க சித்தப்பாமார்ங்கல்லாம் வந்து அம்மாவ குடும்ப மானமே என்னால காத்துல போயிருச்சிங்கறா மாதிரி பேசு, பேசுன்னு பேசி.. அந்த டென்ஷன் தாங்காம அம்மாவுக்கும் அட்டாக் வந்து ஒரு பக்கம் கை, கால் விளங்காம போயிருச்சி.. இப்ப அம்மாவும் நானுந்தான்..’

அந்த சந்திப்புக்குப் பிறகு வாரம் ஒருமுறையாவது அவனுடைய வீட்டுக்குச் செல்வதென தீர்மானித்தேன்.. ஆனால் என்னுடைய எந்த முயற்சியும் அவனை அவனுடைய சோகத்திலிருந்து விடுவிக்கவில்லை..

அதன் பிறகு நான் மீண்டும் பதவி உயர்வு பெற்று மும்பைக்கு செல்ல எங்களுடனான சந்திப்பு நின்றுபோனது....

ஐந்து வருடங்கள் கழித்து நான் மீண்டும் சென்னை வந்த பிறகு அவன் பணியாற்றிய நிறுவனத்திலிருந்தும் ராஜிநாமா செய்துவிட்டான் என்று கேள்விப்பட்டேன்.. வீட்டுக்குச் சென்று விசாரித்தபோது அவனுடைய தாயார் இறந்த கையோடு ப்ரேம் வீட்டையும் காலி செய்துவிட்டு சென்றுவிட்டான் என்று தெரிந்தது..

நான் மும்பைக்கு செல்வதற்கு முன் அவனை ஒரு முறை சந்தித்தபோது அவன் கூறிய இந்த வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில்.. ‘என் மொகத்த பார்த்து வர்ற எந்த பொண்ணையும் கட்டறதில்லேன்னு தீர்மானமா இருந்தேனே.. ஆனா லதா என்னெ கட்டுனதே இந்த மொகத்துக்காகத்தான்னு அப்புறந்தான்டா தெரிஞ்சது.. இப்ப சொல்றேன்.. நாம விரும்பற பொண்ணத்தான் ஜோசப் கட்டிக்கணும்.. நம்மள விரும்பற பொண்ணையில்ல.. ஏன்னா லதா மாதிரி வெறும் தோலுக்காக கட்டுறாங்களா இல்லையான்னு நம்மளால தெரிஞ்சிக்க முடியாதுல்லே..’

சத்தியமான வார்த்தை.. அதனால் பாதிக்கப்பட்டவனாயிற்றே.. அதில் உண்மை இருக்கத்தான் செய்யும்..

நிறைவு..

07 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை - 6

என்னுடைய திருமணம் தூத்துக்குடியில் நடந்தது. திருமணம் முடிந்து சென்னையில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

என்னுடைய வங்கி நண்பர்களுக்கென தனியாக ஒரு விருந்து கொடுத்துவிடலாம் என்ற நோக்கத்தில் எனக்கு மிகவும் நெருக்கமாயும் என்னுடன் நீண்ட காலம் பணியாற்றிய அலுவலக மற்றும் வெளியிலுள்ள நண்பர்களை மட்டும் என்னுடைய உறவினர்களுடன் சேர்த்து வரவேற்புக்கு அழைத்திருந்தேன்.

அவர்களுள் ஒரு ஜோடிதான் பிரேம் மற்றும் லதா தம்பதியினர். அவர்களுக்கும் திருமணமாகி ஒரு மாதமே ஆகியிருந்தது.

நம் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள்தான். என்றாலும் கேரள மாநிலத்திற்கே உரிய கலரில் சினிமா கதாநாயகன், கதாநாயகி போலிருந்ததை வரவேற்புக்கு வந்திருந்த அனைவருமே கவனித்தனர்.

மேடையிலிருந்த திருமண ஜோடியைவிட விருந்தினர் வரிசையிலிருந்த இவர்கள்தான் எல்லோரையும் கவர்ந்தனர் என்றால் மிகையாகாது.

நான் வங்கியில் குமாஸ்தாவாக பணிக்கு சேருவதற்கு முன் சென்னையில் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் பணியாற்றியிருந்தேன். அவற்றுள் ஒன்றில் எனக்கு அறிமுகமாகி நாளடைவில் நெருங்கிய நண்பரானவர் பிரேம். தென் தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாவட்டத்தைச் சார்ந்தவர்.

நானும் அவரும் சேர்ந்து சாலையில் செல்லும் நேரத்தில் அவர் மீது படாத இளம் கண்களே இல்லையெனலாம். அவ்வளவு அம்சமாக, செக்கச் செவேலென்ற கலரில் அப்போதிருந்த சிவக்குமாரைப் போல் இருப்பார்.

‘தோடா ப்ளாக் அண்ட் ஒய்ட் ஜோடி’ என என்னையும் அவரையும் சேர்த்து சிலர் கமெண்ட் அடித்தது இப்போதும் நினைவில் நிற்கிறது.

அவரை கணவராக அடையும் பெண் நிச்சயம் அவரை சந்தேகித்தே தன்னுடைய வாழ்க்கையை நரகமாக்கிக் கொள்வார் என்று  எங்களுடைய நண்பர்களுடைய வட்டத்தில் அப்போது வேடிக்கையாக சொல்வதுண்டு. அத்தனை பெண் விசிறிகள் இருந்தனர்.

ஆனாலும் ப்ரேம் அவற்றையெல்லாம் கண்டுக்கொள்ளவே மாட்டார். ‘டேய் ஜோசப் இதெல்லாம் வெறும் தோல்டா. இதுக்கு மட்டும் ஆசைப்பட்டு வர எந்த பொண்ணையும் நா ஏறெடுத்துக்கூட பாக்க மாட்டேன்.. எங்க வீட்ல பாத்து வைக்கற பொண்ணத்தான் கட்டிக்குவேன்.’ என்பான்.
அப்படித்தான் நடக்கவும் செய்தது.

நானும் அவனும் பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனத்தில் என்னுடைய வேலை நிரந்தரமாகவில்லை. இரண்டு வருடங்கள் அப்ரெண்டிஸ் கணக்கராக வைத்திருந்துவிட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ‘டேய் நீ மட்டும் இந்துவாருந்திருந்தா ஒன்னையும் கன்ஃபர்ம் செஞ்சிருப்பாங்களாம். நம்ம செக்ஷன் ஹெட் இன்னொருத்தர் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தார். எனக்கு ச்சேன்னு யிருச்சி.. நானும் பேசாம இந்த வேலைய விட்டுட்டு உங்கூடவே வேற வேலைய தேடிக்கலாம்னு பாக்கேன்.’ என்றான் நான் வேலையிலிருந்த இறுதிநாளன்று.

எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் கத்தோலிக்க கிறிஸ்துவனாயிருந்தது என்னுடைய தவறா என்ன? இரண்டு வருடங்கள் மாடு மாதிரி உழைத்தேனே? என்றெல்லாம் எண்ணி மருகினேன். இருப்பினும் என்னுடைய நண்பனிடம், ‘டேய்.. எனக்காக நீ வேலைய விடறதா? எனக்கு வேற வேலை கிடைக்காம போகாதுறா.. நீ வேணா பாத்துக்கிட்டேயிரு இன்னும் ஒரு மாசத்துக்குள்ள எனக்கு இத விட நல்ல வேலையா கிடைக்கும். அதுக்குத்தான் இந்த வேலையோ போச்சோ என்னவோ? நான் இந்த ஆஃபீச விட்டுப் போனாலும் நம்ம நட்பு தொடரணும்..’ என்று சமாதானப்படுத்தினேன் என் ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டு.

கடவுள் ஒரு கதவை மூடினால் மற்றொரு கதவைத் திறப்பார் என்பதில் எனக்கு திடமான நம்பிக்கை இருந்தது.

அதே போல் ஒரே மாதத்தில் இப்போது நான் பணியாற்றும் வங்கியில் குமாஸ்தாவாக வேலை கிடைத்தது.

நாங்கள் இருவருமே சென்னையில் இருந்ததால் எங்களுடைய நட்பு தடையில்லாமல் தொடர்ந்தது. மாதம் ஒருமுறையாவது நேரில் சந்திக்காமல் இருந்ததில்லை.

எனக்கு திருமணமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான்  அவருடைய திருமணம் அவர் கூறியிருந்தபடியே பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அவருடைய சொந்த ஊரில் நடந்தது. அவருக்கு பெண் கொடுக்க நீ, நான் என்று அவருடைய தாய் மற்றும் தந்தை வீட்டு உறவினர்கள் முயற்சித்தும் இரண்டு வீடுகளுக்கும் உறவு இல்லாத ஒரு குடும்பத்தில்தான் அவருக்கு பெண் அமைந்தது.

பெண் பார்ப்பதற்கு என் நண்பரை விட நல்ல கலரும், லட்சணமும் கொண்டவராய் இருந்தது அவருடைய பெற்றோரை விட என்னைப் போன்ற நண்பர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஏனெனில் எங்கள் இருவருடைய நண்பர்கள் வட்டத்திலும் ப்ரேமுக்கு எப்படிப்பட்ட பெண் அமையும் என்பதில் ஒரு விவாதமே நடந்திருக்கிறது. ஆகவே நாங்கள் அனைவருமே எதிர்பாராத அழகுடன் பெண் அமைந்தது எல்லோருக்கும் பரம திருப்தி. ‘டேய் ப்ரேம் நீ எங்கள மாதிரி எந்த பொண்ணுங்க பின்னாலயும் போகாம, யார் வலையிலயும் விழாம அப்பா, அம்மா பார்த்து வச்ச பொண்ணையே கட்டுன பாரு.. நீ உண்மையிலயே க்ரேட்தாண்டா..’ என்று நண்பர்கள் சிலர் திருமணத்தன்று பாராட்டியபோது, ‘டேய் பசங்களா போறும் நீங்களே கண்ணு வச்சிராதீங்க.’ என்று அவருடைய தாயார் எங்களை அடக்கியது இப்போதும் நினைவில் நிற்கிறது..

அவர் வாய்க்கு சர்க்கரைதான் போட வேண்டும்..

சாரி.. நல்லது நடந்தாத்தான் இப்படி சொல்வார்கள் இல்லையா?

நடந்தது நல்லதல்லவே..

ஆனால் அவர் அன்று சொன்னது சரிதான் போலிருக்கிறது என்பதை சில வருடங்கள் கழித்து நான் அவனை மீண்டும் இதே சென்னையில் சந்தித்தபோதுதான் தெரிந்தது.

நான் மேலாளராக பதவி உயர்வு பெற்று பல இடங்களுக்கும் சென்று சென்னைக்கு மீண்டும் திரும்பியபோது சுமார் ஐந்தாறு வருடங்கள் கடந்திருந்தன.

சென்னையிலிருந்து மாற்றலாகிச் சென்றபோதும் என்னையும் என் மனையையும் வழியனுப்ப என் உறவினர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ப்ரேமும் ஒரு சில நண்பர்கள் மட்டுமே ரயில் நிலையம் வந்திருந்தனர்.

அதன் பிறகு முதல் வருடத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் மாதம் ஒருமுறையாவது கடிதம் எழுதிக்கொள்வோம். அது மூன்று, நான்கு மாதத்திற்கு ஒரு முறை என்று நீண்டு நாளடைவில் நின்றுபோனது.

நான் மதுரையிலிருந்து மீண்டும் சென்னைக்கு மாற்றலானபோது ப்ரேமின் நினைவு மீண்டும் வர என்னிடமிருந்த அவனுடைய கடைசி விலாசத்திற்கு கடிதம் எழுதி சென்னை வந்ததும் அவனை வந்து சந்திப்பதாக அறிவித்தேன். ஆனால் நான் சென்னைக்கு புறப்படும் வரை அவனிடமிருந்து பதிலே வரவில்லை.

இருப்பினும் நான் அதை பெரிதுபடுத்தாமல் சென்னை வந்து சேர்ந்தபின் ஒரு வாரம் கழித்து அவனுடைய அலுவலகத்திற்கு சென்றேன். வரவேற்பறையிலிருந்த ரிசெப்ஷனிஸ்ட்டிடம் என்னுடைய விசிட்டிங் கார்டைக் கொடுத்தனுப்பிய பத்து நிமிடத்தில் என் எதிரே வந்து நின்ற ப்ரேமைக் கண்டு பேச்சற்று போய் அவனையே சில நிமிடங்கள் பார்த்துக்கொண்டிருந்தேன்.

‘என்னடா ப்ரேம்.. இது என்ன கோலம்?’ என்று நான் அதிர்ச்சியில் சற்று உரக்கவே கேட்டுவிட்டேன் போலிருக்கிறது.. தன்னுடைய பணியில் ஆழ்ந்திருந்த ரிசெப்ஷனிஸ்ட் பெண் என்னை முறைத்தார்.

ப்ரேம் ஒரு வரட்டுப் புன்னகையுடன், ‘எப்படிறா இருக்கே.. பாத்து எவ்வளவு நாளாச்சி.. வா வெளிய போய் பேசலாம்.’ என்றவாறு என் முன்னே நடக்க நான் மாறாத அதிர்ச்சியுடன் அவன் பின்னே சென்றேன்.

அவனுடைய அலுவலக காண்டீனை நோக்கி அவன் நடக்க நான் அவனை பிந்தொடர்ந்தேன்.

காலியாய் கிடந்த கான்டீன் இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து அமராமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்த என்னைப் பார்த்து, ‘ஒக்கார்றா.. நீ என்ன கேக்க வரேன்னு புரியுது.. சொல்றேன்.. அதுக்கு முன்னால நீ எப்படி இருக்கே.. அதச் சொல்லு.. என் கதை பெரிய கதை.. ஆரம்பிச்சா ரெண்டு நாளைக்கு சொல்லலாம்..’ என்றான்..

அவனுடைய குரலில் இருந்தது கேலியா இல்லை சுயபச்சாதாபமா என்று எனக்கு விளங்கவில்லை.

அவனுக்கெதிரில் இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்து என்னைப் பற்றிய விவரத்தை சுருக்கமாகக் கூறி முடித்தேன். ‘ரெண்டு பொண்ணுங்க ப்ரேம்.. மூத்தவ மூனாவது படிக்கிறா.. சின்னத இனிமேத்தான் சேக்கணும்.. தூத்துக்குடியில சின்னதா ஒரு வீட்டைக் கட்டி முடிச்சதுதான் இந்த அஞ்சு வருசத்துல நான் செஞ்ச பெரிய சாதனை.. இப்ப சொல்லு என்ன இது கோலம்? ஒன் மொகத்துக்கு என்ன ஆச்சி....நீ இருந்த இருப்பு என்ன? என்ன கோலம்டா இது?’

மன்மதன் மாதிரி இருந்த அவனுடைய முகம் முழுவதும் ஸ்கின் கேன்சர் என்பார்களே அப்படியிருந்தது, முடிச்சு முடிச்சாக. காது மடல்களிலும் மூக்கின் தண்டு மீது, நெற்றியில் என.. தோலும் கருத்துப் போய்.. தலை நிறைய சுருள், சுருளாக அடர்த்தியாக இருந்த அவனுடைய முடி போன இடமே தெரியாமல் பாதி வழுக்கையாய்.. முப்பது, முப்பத்தைந்து வயதில் அரை கிழவனாக..

‘சொல்றா லதா எப்படி இருக்காங்க? பிள்ளைங்க எத்தன பேர்?’ என்றெல்லாம் கேட்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்.. ஆனால் அவன் கையிலிருந்த சிகரெட் விரல் நுனியை சுடுகிறது என்ற நினைவும் இல்லாமல் எங்கோ பார்த்துக்கொண்டிருந்ததை பார்த்த எனக்கு அதை கேட்க துணிவில்லாமல்...

சிறிது நேரம் கழித்து சிகரெட்டை அணைத்துவிட்டு மேசையின் குறுக்கே கரங்களை நீட்டி என்னுடைய கரங்களைப் பற்றியவாறு, ‘லதா இப்ப எங்கூட இல்லடா.. போய்ட்டா.’ என்றான் எந்த ஒரு உணர்ச்சியும் இல்லாமல்.. ‘சிம்பிளா சொல்லணும்னா ஓடிப்போய்ட்டாடா.. என் குழந்தையையும் தூக்கிக்கிட்டு..’

நாளை நிறைவு பெறும்..




03 அக்டோபர் 2006

கடந்து வந்த பாதை 5ஆ

இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏகாம்பரத்தை சென்னை அடையாறு கடற்கரையில் வைத்து தற்செயலாக சந்தித்தேன்..

அவர் மெலிந்து அடையாளமே தெரியாத அளவுக்கு தளர்ந்து போயிருந்தார். அவராக என்னை அடையாளம் தெரிந்துக்கொண்டு, ‘சூசை.. என்னை தெரியுதாடா?’ என்று என்னை நெருங்கியபோது இவரை எங்கோ பார்த்திருக்கிறேனே என்று நினைக்கத் தோன்றியதே தவிர ஏகாம்பரத்தின் நினைவு வரவே இல்லை..

யார் நீங்க என்று வாயெடுக்க நினைத்தபோதுதான் அவரே ‘நாந்தான் சூசை.. ஏகாம்பரம் அண்ணன்..’ என்றார்.

எனக்கு ஒரு நிமிடம் தூக்கி வாரிப் போட்டது. அந்த அளவுக்கு மனிதர் மாறிப்போயிருந்தார்.

சுத்தமான உடுப்பு என்றாலும், தேய்க்கப்படாமல், சுருக்கங்களுடன் இருந்தது.. முழுவதுமாய் வழுக்கையாகிப்போன தலை.. காலில் சாதாரண ரப்பர் செருப்பு.. கையில் ஒரு பழைய துணிப்பை.. முகத்தில் அளவில்லா சோகம்..

‘என்னண்ணே ஆளே மாறிப் போய்ட்டீங்க?’ என்றதும் கண்கள் கலங்கிப் போய் சற்று நேரம் தூரத்தில் தொடுவானத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.

பிறகு கடந்த ஆண்டுகளில் நடந்தவற்றை கூற ஆரம்பித்தார்.

ஏகாம்பரம் குமாஸ்தாகவிருந்து செக்ஷன் அதிகாரியாக (Section Officer.. சுருக்கமாக SO என்பார்கள் அவருடைய அலுவலகத்தில்) பதவி உயர்வு பெற்று பின்னர் அரசு அலுவலகங்களில் தணிக்கை செய்யும் அதிகாரியாக பரீட்சை எழுதி தேர்வு செய்யப்பட்டார்..

அரசு தணிக்கை அதிகாரி என்ற பதவி பணத்தை பலவகையிலும் அள்ளித்தரும் பதவி என்பது தெரிந்ததுதான்..

ஒரேயொரு தொல்லை.. ஊர் ஊராக சுற்ற வேண்டும்..

அவருக்கு எப்படியோ அண்ணிக்கு பணம் என்றால் கொள்ளைப் பிரியம். யார் கொடுத்தாலும் கையை நீட்ட தயங்க மாட்டார்.

‘அவங்க அப்படித்தான்.. எதையும் கேக்க மாட்டாங்க.. குடுத்தா வாங்கிப்பாங்க.. நீங்க ஏன் அவர போய் பாக்கீங்க.. நேரா வீட்டுக்கு வந்திட வேண்டியதுதானே..’ஏன்பார் அண்ணி..

இப்படியாக அண்ணன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்க.. அண்ணி பணம் வசூலிப்பதிலேயே குறியாயிருந்திருக்கிறார்.

பிள்ளைகள் நால்வருமே கேட்பாரின்றி பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு சினிமா, டிராமா,  என்பதில் நாட்டம் செலுத்த மூத்த மகனைத் தவிர மற்ற மூன்றுமே பள்ளி இறுதி பரீட்சையில் தோற்றுப் போய்..

மகள்களில் மூத்தவள் மெட் ரிக்குலேஷன் பரீட்சையில் இரண்டு பாடங்களில் தோற்றுப் போக டுட்டோரியலில் சேர்த்துவிட்டு ஏகாம்பரம் பாண்டிச்சேரியில் ஆடிட்டுக்காக போயிருக்கிறார். வீட்டில் அவர் இல்லாவிட்டால் பிள்ளைகள் தாய்க்கு பயப்படவே பயப்படாது..

அண்ணிக்கு டிவியிலயும், டெக்குலயும் மாறி, மாறி சினிமா பார்க்கவும் அக்கம்பக்கத்து தோழிகளுடன் அரட்டையடிக்கவுமே நேரம் போதாது..

மூத்த மகள் டுட்டோரியிலில் படித்துக் கொண்டிருந்த ஒரு சக வயது மாணவனிடம் தன் கற்பைப் பறிகொடுத்துவிட்டு வயிற்றில் குழந்தையுடன் வந்து நின்றபோதுதான் அண்ணி  விழித்திருக்கிறார்.ஏகாம்பரம் ஊரிலிருந்து பதறியடித்துக்கொண்டு வந்து காதும், காதும் வைத்ததுபோல் அந்த பையனுடைய வீட்டுக்கும் தெரியாமல் ரிஜிஸ்தர் திருமணம் செய்துவைக்கப்போக விஷயம் அறிந்து  வந்த பையனுடைய குடும்பம் போலீஸ் வரை போக.. ஒருவழியாக சமாதானம் செய்து வைத்து..

அதன் கதை அப்படியானதும் அண்ணன் அடுத்த மகளை பதினெட்டு வயதிலேயே அண்ணியுடைய நெருங்கிய குடும்பத்தில் சம்பந்தம் பேசி முடித்து வைத்திருக்கிறார்..

மூத்தவன் குடும்பத்தில் நடந்த எதையும் காண சகியாமல் துபாய் பக்கம் வேலை தேடிப் போய் திரும்பி பல ஆண்டுகளாயும் திரும்பி வரவில்லை..

கடைசி மகன் மோகன் பள்ளி இறுதி பரீட்சையில் பெற்ற தோல்விக்குப் பிறகு வேலை தேடி அலுத்துப்போய் தகாத நண்பர்களுடைய சகவாசத்தால் கெட்டு சீரழிந்து.. குடியும்.. வேறென்னவோ சொல்வார்களே அதில் சிக்கி.. ஏற்கனவே திருமான ஒரு தகாத பெண்ணிடம் மீளமுடியாத பந்தத்தில் அகப்பட்டுக்கொண்டு..

ஆக குடும்பம் சின்னாபின்னாமாகி..

என்னுடைய செவிகளையே நம்பமுடியாமல் கேட்டுக்கொண்டிருந்தேன்..

‘என்னண்ணே சொல்றீங்க.. குமார் அண்ணனும் மத்த எல்லாரும் கல்யாணம் கூட பண்ணிக்காம இருக்காங்கன்னுல்ல அம்மா எழுதியிருந்தாங்க.. நீங்க அவங்கக் கிட்ட போய் ஹெல்ப் கேட்டிருக்கலாமேண்ணே.. இவ்வளவு நடந்திருக்கு.. அதெப்படி யாருமே கண்டுக்காம இருந்துட்டாங்க..?’

அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு.. ‘குமாரப் பத்தியும் தம்பிங்கள பத்தியுந்தான் ஒனக்கு தெரியுமே சூசை.. இன்னைக்கி வரைக்கும் அவனுங்க மூனு பேருமே என்னெ மன்னிக்கவே இல்லடா.. இல்லன்னா இப்ப நானும் அண்ணியும் இருக்கற நிலமையுலயும் வீட்டு பக்கம் வராதீங்கன்னு சொல்வானுங்களா நீயே சொல்லு?’ என்று கண் கலங்கியபோது எனக்கு பார்க்க பாவமாக இருந்தது.

‘அப்புறம் சொல்லுங்க.. மூத்தவன் எங்கருக்கான் இப்ப?’

‘இருக்கான்யா.. .இங்கதான் இருக்கான்.. அவனாவே பாத்து ஒரு நல்ல குடும்பத்து பொண்ண கட்டிக்கிட்டான். கல்யாணத்துக்கு ரெண்டு நாளைக்கு முன்னால வந்து பேருக்கு கூப்ட்டான்.. அண்ணி வரமாட்டேன்னுட்டா.. நா மட்டும் போயிருந்தேன்.. நல்ல பொண்ணு.. பாசமா நடந்துக்கறா.. ரெண்டு பிள்ளைங்க.. போனா.. தாத்தான்னு ஒட்டிக்கிதுங்க..’

‘அப்புறம் என்னண்ணே.. அவங்கூட போய் இருக்க வேண்டியதுதானே?’

அவர் என்ன நினைத்தாரோ கையிலிருந்த துணிப்பையால் முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டார்.

நான் என்ன செய்வதென தெரியாமல் அவர் அழுது ஓயும் மட்டும் காத்திருந்தேன்..

‘சாரிடா சூசை.. இத்தன வருசம் கழிச்சி ஒன்னைய பார்த்துட்டு ஒன்னெ பத்தி கேக்காம நான் பாட்டுக்கு என் சோக கதைய சொல்லிக்கிட்டிருக்கேன்.. நீ எப்படி இருக்கே..’ என்று அவர் பேச வந்ததை சொல்வதா வேண்டாமா என்று நினைத்து பேச்சை திசை மாற்ற முயல்கிறார் என்பது தெரிந்தது..

நானும் என்னுடைய கடந்த இருபதாண்டு கால வாழ்க்கையை சுருக்கமாக சொல்லிவிட்டு, ‘போன மாசம்தான் மூத்தவளோட கல்யாணம் நடந்ததுண்ணே.. மாப்பிள்ளை மலேசியாவில பிறந்து வளர்ந்தவர்.. கோலாலம்பூர்ல இருக்காங்க..’ என்று சொல்லி முடித்தேன்..

‘இப்ப சொல்லுங்க.. ஏன் மூத்தவனோட போயி இருக்க மாட்டேங்கறீங்க?’

‘எல்லாம் இந்த மோகனாலத்தான் சூசை.. இப்பவும் மாசம் ஒன்னாந் தேதியான என் பென்ஷன் பணத்துல பாதிய குடுன்னு வந்து நிக்கான்.. குடிச்சிப் போட்டு வந்து பாத்திரத்தையெல்லாம் தூக்கி வீசறான்.. அண்ணிய அடிச்சி போட்டுடறான்.. ஏண்டா இப்படி அநியாயம் பண்றேன்னு கேட்டா என்னையவே அடிக்க வரான் சூசை.. இவனெ நினைச்சித்தான் மூத்தவனோட போய் இருக்க யோசிக்கேன்..’

நான் அதிர்ந்து போய் அவரையே பார்த்தேன்.. ‘ஏன் அவன் வேலைக்கு போறான் இல்லே?’

அவர் சோகத்துடன் தலையைக் குனிந்துக் கொண்டார்.. ‘ஆட்டோ ஓட்டறான் சூசை.. அவனெ எப்படி வளர்த்தேன்.. எவ்வளவு பெரிய ஸ்கூல்ல சேர்த்து படிக்க வச்சேன்.. இப்ப அவன் ஆட்டோ ஓட்டறாண்டா.. எங்க போய் சொல்லிக்கறது? நீங்க இங்க வந்து இருக்கறதுல எனக்கு ஆட்சேபணையில்லப்பா ஆனா அவன் இங்க வந்து கலாட்டா பண்ணக்கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டான் மூத்தவன்.. அவனெ போலீஸ்ல புடிச்சி குடுங்கன்னு சொல்றான்.. எப்படிறா சூசை.. என் பையன நானே எப்படி போலீஸ்ல..’ மீண்டும் அடக்க மாட்டாமல் அழ.. எனக்கு அவரை பார்க்கவே பாவமாயிருந்தது..

எப்படியிருந்த மனுஷன்? ஹும்.. எல்லாம் தலையெழுத்து..

அன்று பார்த்ததுதான்.. பின்னர் அவரை நினைத்தாலே மனசு கனத்துப்போகிறது..

அன்று இளம் வயதில் தன்னுடைய மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு தன்னுடைய சகோதரர்களையும் சகோதரிகளையும் நிராதரவாக விட்டுவிட்டுச் சென்றபோது சபித்த தாயின் சாபனையா இதெல்லாம்?

ஒரு தாய் சபித்து இப்படி ஆகியிருக்குமா?

பெத்த வயிறு பித்து பிள்ள மனம் கல்லும்பாங்களே..

30 செப்டம்பர் 2006

கடந்து வந்த பாதை 5

சாம்பசிவம் ஐயாவுடைய குடும்பத்தை எனக்கு சுமார் முப்பது வருடங்களாகப் பழக்கம்.

நான் குடியிருந்த வீட்டுக்கு அடுத்த வீடுதான் அவர்களுடையது.

ஒரு சுவரைப் பொதுவாக வைத்து இரண்டு பங்கங்களிலும் அமைந்திருக்கும் ஓட்டு வீடுகளில் ஒன்று அவர்களுடையது மற்றொன்று எங்களுடையது.

அவர்களுடையது சொந்த வீடு.. எங்களுடையது வாடகை.. ஆனால் அப்பா நீண்ட கால லீசில் (ஒத்தி என்பார்கள் அப்போது) எடுத்திருந்தார்..

எங்களுடைய குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஏழு பேர்.. அவர்களுடையதோ பத்து!

இதெல்லாம் அந்த காலத்தில் மிகவும் சகஜம்.

ஐயாவுக்கு முதல் இரண்டு பெண்கள்.. 3,4,5,6 வரிசையாக ஆண்கள்.. கடைசியில்  இரண்டு பெண்கள் என எட்டு பிள்ளைகள்.

நாங்கள் அந்த வீட்டில் குடியேறியபோது முதல் இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் குடியிருந்தார்கள். மூன்றாவது மகனுக்கு புதிதாக திருமணம் நடந்து முடிந்திருந்தது. அவர் சென்னையில் இருந்த ஒரு அரசு அலுவலகத்தில் குமாஸ்தாவாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். பட்டதாரி..

சாம்பசிவம் ஐயா ஒரு காலத்தில் முட்டை மொத்த வியாபாரியாக இருந்து நொடித்து போயிருந்தார். கேரளத்திலிருந்து ரயிலில் கூடை, கூடையாக வரவழைத்து சில்லறை வியாபாரிகளுக்கு விற்றுக்கொண்டிருந்தாராம். சில்லறை வியாபாரிகளின் சில்லறைத் தனத்தினால் மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்கு வந்து குடியிருந்த ஒரு வீட்டைத் தவிர எல்லாவற்றையும் இழந்து பிள்ளைகளின் கையை எதிர்பார்க்கும் சூழலில் இருந்தார்.

முதல் இரு மகள்களுக்கு திருமணம் முடித்த போது செல்வாக்குடன் இருந்ததால் நல்ல செழிப்பு மிகுந்த இடத்தில் சம்பந்தம் செய்திருந்தார். ஆனால் இவர் நொடித்துபோனதுமே இரு சம்பந்திகளும் அவருடனான உறவையே துண்டித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆண்பிள்ளைகளில் மூத்தவருக்கும் (ஏகாம்பரம்) நல்ல வசதியான குடும்பத்திலிருந்துதான் பெண் எடுத்திருந்தார்கள்.

மருமகள் வீட்டிற்குள் நுழையவும் ஐயா நொடித்துப் போகவும் சரியாயிருந்திருக்கிறது.

ஐயாவின் மனைவியும் நல்லவர்தான். ஆனால் அக்கம்பக்கத்தினருடைய தூண்டுதல் அவரையும் பழியை புது மருமகள் மேல் போட வைத்தது.

மருமகள் தொட்டால் குற்றம்.. நின்றால் குற்றம், உட்கார்ந்தால் குற்றம் என்ற அவர் தொல்லைப்படுத்த வசதியான குடும்பம் என்று நினைத்து வந்திருந்த மருமகளுக்கு தனிக்குடித்தனம் போனால் என்ற தோன்ற ஆரம்பித்தது..

நாங்கள் புதிதாய் குடியேயிருந்த காலம் அது. பொழுது விடிந்தால் பொழுது போனால் தினமும் சிறிய, சிறிய காரியத்துக்கெல்லாம் மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை, சச்சரவு என்று அடுத்த வீட்டில் இருக்கவே முடியாது என்கின்ற அளவுக்கு நடந்துக்கொண்டிருந்தது..

இரு பெண்களை அடுத்து பிறந்திருந்த நான்கு ஆண் மகன்களுக்கும் இடையில் ஒன்றிலிருந்து, ஒன்றரையாண்டு வித்தியாசம்தான், வயதில்..

வந்த மருமகளுக்கோ கணவனை விட எட்டு வயது குறைவு.. ஆக அவர் மூன்று கொழுந்தன்மார்களுக்கும் இளையவராக இருந்தார்.

ஆகவே மாமியார் மருமகள் சச்சரவில் கொழுந்தன்மார்களும் தலையிட்டு தங்களுடைய தாயார் பக்கம் சேர்ந்துக்கொள்வார்கள்.. கடைக்குட்டி தங்கைகள் இரண்டும் பள்ளிப் பருவம்.. பயந்துபோய் ஒதுங்கியிருப்பார்கள்.

இவர்களுடைய சச்சரவில் ஐயாதான் பாவம்.. நொந்துப்போவார். அந்நேரங்களில் எங்கள் வீட்டு திண்ணையில் வந்து அமர்ந்துக்கொள்வார்.. சப்தம் ஓய்ந்து அமைதியானதும் வீட்டுக்கு திரும்புவார்.

இந்த கவலையிலேயே ஐயா ஒரு நாள் மாரடைப்பால் காலமானார். அன்றும் அதையொட்டி வந்த இருவாரங்களில்தான் எங்களுடைய குடும்பத்தினருக்கும் இடையே நட்பு மலர்ந்து ஒருவிதத்தில் நெருங்கிய உறவுக்காரர்களைப் போலானோம்..

ஐயா உயிருடன் இருந்த சமயத்தில் அவ்வப்போது சண்டை, சச்சரவும் என்று நடந்தாலும் சற்று நேரத்தில் அமைதியாகிப் போவார்கள்..

ஆனால் அந்த அமைதி புயலுக்கு முன் ஏற்படும் அமைதி என்பது பிறகுதான் புரிந்தது.

ஐயா எப்போது இறப்பார் என்று காத்திருந்ததுபோல முப்பதாம் நாள் சடங்கு கழியவும் ஏகாம்பரம் தன்னுடைய மனைவியின் வற்புறுத்தலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் தனிக்குடித்தனம் போவதென தீர்மானித்தார்.

வீட்டுக்கு தெரியாமலே மும்முரமாக வீடு தேடும் படலத்தில் இறங்கினார்.. அவருடைய வீட்டுக்கு தெரிந்ததோ இல்லையோ எனக்கு என் நண்பன் ஒருவனுடைய வழியாக தெரிந்துவிட்டது.
ஆனாலும் நமக்கேன் வம்பு என்று நான் இருந்துவிட்டேன். என் தாயாரிடம் கூட கூறவில்லை.

ஏகாம்பரம் வீட்டை ஏற்பாடு செய்தபோதும் தன் தாயிடம் அறிவிக்காமல் சாமான்களை ஏற்றியனுப்ப ஏற்பாடு செய்த வாகனத்துடன் வீட்டில் வந்து இறங்கியபோதுதான் குடும்பத்தினருக்கு தெரியவந்தது..

பிறகென்ன.. ஒரே களேபரம்தான்.

கடைக்குட்டி பெண்கள் இரண்டுக்கும் முன்னரே ஏகாம்பரத்தின் மூன்று தம்பிகளும் அவரை வசைமாரி பொழிய மனிதர் ஆடிப்போய்விட்டார்.

இருப்பினும் தன்னுடைய முடிவில் உறுதியாய் நிற்கவே, அவருக்கு அடுத்தவர், ‘டேய்.. போறேன்னு முடிவு பண்ணதுலகூட எனக்கு வருத்தமில்ல.. ஆனா மாசம் முழுசும் பேசாம இருந்துட்டு இப்ப சம்பள தேதி அன்னைக்கி இப்படி எங்கள அம்போன்னு விட்டுட்டு போறியே இத என்னால மன்னிக்கவே முடியாது. எனக்கு வேல கெடச்சி கன்ஃபர்ம் கூட ஆகல.. என் ஒருத்தன் சம்பளத்துல நான் இந்த குடும்பத்த மேனேஜ் பண்ணணும். தங்கச்சிங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சி கல்யாணம் பண்ணி குடுக்கணும்.. இவ்வளவு இருக்கறப்ப ஒனக்கு எப்படிறா அண்ணிய கூட்டிக்கிட்டு போக மனசு வந்தது?’ என்று சரமாரியாக கேட்டும் ஏகாம்பரம் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இல்லை..

ஏகாம்பரத்தின் அம்மாவிற்கோ மனசு ஆறவில்லை.. ‘டேய் வேண்டாம்.. என் வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டு போறே.. போ.. நீ என்ன ஆவப்போறேன்னு பாக்கத்தான போறேன்..’ என்று வாயில் வந்த வார்த்தைகளால் அர்ச்சித்தார். ஏகாம்பரம் அசரவில்லை.. தன்னுடைய மாமனார் சீதனமாக கொடுத்திருந்த சாமான்களை ஆட்களைக் கொண்டு அப்புறப்படுத்துவதிலேயே குறியாயிருந்தார்.

இறுதியில் அவருடைய தாய், ‘டேய்.. நாளை இல்லன்னா மராநாள் இங்க வந்து நின்னு என் பெஞ்சாதிக்கு பிரசவம்மா.. நீங்க வந்து பாக்கணும்னு வந்து நின்ன.. அப்புறம் தெரியும் சேதி..’ என்றார் ஆவேசத்துடன்..

ஏகாம்பரத்திற்கு என்ன தோன்றியதோ, ‘காச தூக்கிப் போட்டா நாலு களுத வந்து பிரசவம் பார்த்துட்டு போது.. இதுக்குன்னு போயி இங்க வந்து நிக்கப் போறனாக்கும்.. நீங்க வந்து அங்க நிக்காமருந்தா போறாது.. நீ வாடி...’ என்று தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு போயே போய்விட்டார்..

அன்று ஏற்பட்ட விரிசல்தான்.. இரு குடும்பமும் ஒரே ஊரில் இருந்தும் பத்து பதினைந்து வருடங்களுக்கும் மேலாக சமாதானமே இல்லாமல் இருந்தது..

இதற்கிடையில் நானும் என்னுடைய பதவி உயர்வு மற்றும் ஊர் மாற்றம் காரணமாக சென்னையை விட்டு செல்ல அக்குடும்பத்துடனான நட்பு என்னைப் பொறுத்தவரை நின்றுபோனது. ஆனால் என்னுடைய தாயார் அடுத்த ஐந்தாறு ஆண்டுகளில் எனக்கு எழுதும் எல்லா கடிதத்திலும் அந்த குடும்பத்தைப் பற்றி எழுதாமல் இருந்ததே இல்லை..

ஏகாம்பரத்தின் அடுத்த சகோதரர் குமார் குடும்பத்தின் முழு பொறுப்பையும் தன் தோள்மேல் சுமந்துக் கொண்டது, அவர்கள் இருந்த வீட்டிலேயே மேலும் இரு குடித்தனக்காரர்களை வைத்து அதில் வந்த வாடகைப் பணத்துடன் தன்னுடைய ஊதியத்தையும் சேர்த்து அதில் திறம்பட குடும்பத்தையும் நடத்தி தனக்கு அடுத்து கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த இரண்டு சகோதரர்களுக்கும் படிப்பு முடிந்தவுடன் வேலை வாங்கிக் கொடுத்தது.. என அக்குடும்பத்தில் நடந்த எல்லாவற்றையும் எனக்கு தவறாமல் எழுதுவார்கள்..

அடுத்த சில ஆண்டுகளில் எங்களுடைய குடும்பமும் அந்த வீட்டிலிருந்து குடிபெயர்ந்து பெரம்பூர் பகுதிக்கு சென்றுவிட அக்குடும்பத்துடனான தொடர்பு அறவே நின்றுப்போனது.

நான் தஞ்சையில் மேலாளராக இருந்த சமயத்தில்தான் ஏகாம்பரத்தின் தாயார் இறந்துவிட்டதாக என்னுடைய தாயார் மூலமாக செய்தி வந்தது. என்னால் செல்ல இயலவில்லை..

இறுதிச் சடங்குக்கு சென்றிருந்த என்னுடைய தாயார் வழியாக கடந்த பத்தாண்டுகளில் அக்குடும்பத்தில் நடந்தவைகளைப் பற்றிய செய்தி எனக்கு கிடைத்தது.

‘குமாரும் சரி அவனோட தம்பிகளும் சரி இன்னவரைக்கும் கல்யாணமே செஞ்சிக்கலடா.. தங்கச்சிங்க ரெண்டு பேருக்கும் ஸ்கூல் முடிச்சதுமே நல்ல எடத்துல கல்யாணம் செஞ்சி வச்சிட்டான் குமார்.. இப்ப மூனு பேர் மட்டும் தனியா பொங்கிச் சாப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்க.. வீட்ட இடிச்சி பெரிசா கட்டியிருக்கானுங்க.. ரெண்டு அக்காமார் இருந்தும் அவனுங்களுக்கு கல்யாணம் செஞ்சி வைக்கணும் தோனல பாரேன்.. என்ன பண்றது? எல்லாம் தலையெழுத்து.' என்று என் தாய் எழுதியிருந்தபோது மனசு லேசாக வலித்தது..

தஞ்சாவூர், தூத்துக்குடி, மதுரை என்று சுற்றிவிட்டு 1987ல் சென்னை வந்து சேர்ந்தபோது.. என் தந்தை எங்களுக்கு கோடம்பாக்கம் அசோக் நகரில் வீடு அமைத்துக் கொடுத்திருந்தார். அங்கு குடியேறி ஒரு வாரம் இருக்கும்.. நானும் என் மனைவியும் வடபழனி மார்க்கெட்டில் வைத்து ஏகாம்பரத்தையும் அவருடைய குடும்பத்தையும் சந்தித்தோம்..

அவர் சற்று தளர்ந்துபோயிருந்தார்.. ஆனால் அண்ணி (நானும் அவரை அண்ணி என்று அழைத்து பழகிப்போயிருந்தேன்) செழிப்பாக இருந்தார்கள்.. அவர்களைப் பார்த்தால் நல்ல செல்வ செழிப்புடன் இருப்பது தெரிந்தது.. இரண்டு மகன், இரண்டு மகள்கள்.. பிள்ளைகள் நால்வருமே அம்சமாக, அழகாக ஒரு வசதிபடைத்த குடும்பத்து பிள்ளைகள் போலிருந்தனர்...

இரண்டு ஆண்பிள்ளைகளில் மூத்தவன்  சென்னையில் சிறந்த பள்ளிகள் ஒன்றான எக்மோர் டான்போஸ்கோவில் படித்துக்கொண்டிருந்தான். படிப்பில் சுமாராயிருந்த அடுத்தவன் மைலாப்பூர் செயிண்ட் பீட்ஸ்.. பெண் பிள்ளைகள் இருவரும் சர்ச் பார்க் கான்வெண்டில் என்று பெருமையுடன் அண்ணி கூறியபோது எனக்கும் பெருமையாகத்தான் இருந்தது. என் பெண் பிள்ளைகள் இருவரும் 'கோடம்பாக்கம் பாத்திமாவில் படித்துக்கொண்டிருக்கிறார்கள்' என்றேன்..

அலட்சியத்துடன் அது காதில் வாங்காமல் ஏகாம்பரம்  அண்ணா நின்றிருந்தார். அண்ணியோ ‘ஏன் சூசை.. அது அவ்வளவு நல்ல ஸ்கூல் இல்லையே.. சர்ச் பார்க்ல சேர்த்திருக்கக் கூடாது?’ என்றபோது எப்போதும் அமைதியுடன் இருக்கும் என் மனைவிக்கே கோபம் வந்தது.. நான் கண்சாடைக் காட்டி அவரை அமைதிப் படுத்திவிட்டு.. ஏகாம்பரம் அண்ணாவிடம், ‘அண்ணே.. அண்ணி என்ன சொல்ல வராங்கன்னு எனக்கு புரியுது.. இருந்தாலும் என் சக்திக்குட்பட்டுதான என்னால செய்ய முடியும்? என்னவோ நல்லாருக்கீங்கல்லே.. அதுபோறும்..’ என்றேன்.. அவரோ நான் கூறியதை சட்டை செய்யாமல் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு நகர்ந்தார்.

அதற்குப்பிறகு அவரை மீண்டும் நான் சந்தித்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு..

மனிதர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்..

என்னைக் கண்டதும் அதுவரையில்லாத பாசத்துடன் உரையாடினார்..

அவருடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு விடைபெற்றபோது..

என்னுடைய மனதில் ‘இவருக்கு வேணும்’ என்ற சந்தோஷமும் இருந்தது..

இருந்தாலும் இப்படியொரு நிலை இவருக்கு வந்திருக்க வேண்டாம் என்ற வேதனையும் இருந்தது.

நாளை நிறைவுபெறும்..


24 செப்டம்பர் 2006

கடந்து வந்த பாதை - 4 ஆ

எதிர்பாராமல் என்னை சந்திக்க நேர்ந்ததை நினைத்து மகிழ்ந்துப் போய் என்னுடைய கரங்களை இறுகப் பற்றிக்கொண்டார். நான் அப்போது பெரம்பூரில் குடியிருந்தேன். அவரும் பெரம்பூரில்தானே இருப்பதாய் சொன்னார் என்பது நினைவுக்கு வர.. ‘என்ன ராஜ் இங்க நிக்கீங்க? பெரம்பூர் பஸ் அந்த ஸ்டாப்புலதான வரும்?’ என்றேன்.

அவர் அதே மென்மையான புன்னகையுடன், ‘நாங்க இப்ப வில்லிவாக்கத்துல இருக்கோம் ஜோசப். பெரம்பூர்ல நாங்க இருந்த வீடு போறல.. தம்பிக்கு கல்யாணம் ஆயிருச்சி. மூத்த தங்கையும் டீச்சர் வேலைக்கு போறா.. அதான் கொஞ்ச பெரிய வீடா பாத்து போய்ட்டோம்.. தம்பி பெஞ்சாதிக்காக பெல் வேலைய விட்டுட்டு இங்க வந்துட்டான் IDPLல டிராஃப்ட்ஸ் மேனா சேர்ந்திருக்கான். பெல் சம்பளம் இல்லன்னாலும் அவன் பெஞ்சாதியும் வேலைக்கு போறனதுனால இது போறும்னு வந்துட்டான்... நீ எப்படி இருக்கே.. கல்யாணம் எப்போ?’ என்றார்.

மூத்தவர் இருக்க இளையவருக்கு கல்யாணமா என்று எனக்கு தோன்றினாலும் அவரை எப்படி கேட்பது என்ற தயக்கத்துடன் அவரைப் பார்த்தேன்.

என்னுடைய பார்வையின் நோக்கம் அவருக்கு புரிந்திருக்க வேண்டும். ‘நல்ல எடமா வந்தது ஜோசப். அம்மாவுக்கும் பொண்ண ரொம்ப புடிச்சிருந்தது. நாந்தான் என்னெ என் போக்கிலேயே விட்டுருங்கம்மான்னு சொல்லி அவங்கள வற்புறுத்தி சம்மதிக்க வச்சேன்.’

‘அப்போ நீங்க அந்த பிராமின் பொண்ண மறக்கவே இல்லையா ராஜ்?’ என்றேன்.

அவரோ என் கேள்விக்கு பதில் சொல்லாமல் சாலைக்கு மறுபுறம் வீட்டுக்குச் செல்ல வேண்டுமே என்ற பரபரப்புடன் கடைகளை மூடிக்கொண்டிருந்த பணியாட்களையே பார்த்துக்கொண்டிருந்தார்.

மேற்கொண்டு ஏதும் கேட்க மனசில்லாமல், ‘ஒருநாள் ஒங்க ஆஃபீசுக்கு வரேன் ராஜ். நிறைய பேசணும்’ என்று விடைபெற்றுக்கொண்டு என்னுடைய நிறுத்தத்திலிருந்து புறப்படவிருந்த அன்றைய இறுதி பேருந்தை நோக்கி ஓடினேன்..

சுமார் இரு மாதங்கள் கழித்து ஒரு சனிக்கிழமை பகல் அவருடைய அலுவலகத்திற்கு சென்றபோது, ‘ராஜா சாருக்கு ப்ரோமோஷனாயிருச்சி சார். ராஜாமுந்திரி டெப்போவுக்கு இன் சார்ஜா டிரான்ஸ்ஃபர் ஆயி போய்ட்டாரு.’ என்றார் அவருடைய அலுவலக நண்பர் ஒருவர். ஏன் என்னிடம் கூட சொல்லாமலே போய்விட்டார் என்று நினைத்தேன்.

அதற்குப் பிறகு எனக்கும் மேலாளர் பதவி உயர்வு வர ஊர் ஊராக சுற்றிவிட்டு 1997ம் வருடம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன்.. எனக்கு மிகவும் பரிச்சயமாயிருந்த கோடம்பாக்கத்தில் இருந்தேன்.

ஒரு நாள் நானும் என் மனைவி மற்றும் குழந்தைகள் பெரம்பூரிலிருந்த என் பெற்றோருடைய வீட்டிற்குச் சென்று விட்டு ஆட்டோவில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சென்னைக் கீழ்பாக்கம் மருத்துவமனை கல்லூரி பஸ் நிறுத்தம் அருகில் வந்ததும் ஆட்டோ பழுதாகி நின்றுவிட அதிலிருந்து இறங்கி வேறொரு ஆட்டோ கிடைக்காதா என்று நின்றுக்கொண்டிருந்த நேரம் யாரோ என்னுடைய பெயரை கூப்பிடும் குரல் கேட்க திரும்பிப் பார்த்தேன்.

சட்டென்று அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போயிருந்த ராஜாவைக் கண்டதும் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருடைய கோலத்தைப் பார்த்து ஒரு நொடி பதறிப்போனேன்.

அதே வெள்ளை உடுப்புதான். சுருட்டை முடி இருந்த இடம் தெரியாமல்போய் தலை முக்கால் வழுக்கையாகியிருந்தது. முகத்தில் இரண்டு நாள் தாடி, வெள்ளை வெளேன்ற உடைக்கு மேச்சாக. கண்ணில் பருத்த கண்ணாடி. முன்பே அணிந்திருந்ததுதான் என்றாலும் இப்போது மெலிந்து களைத்திருந்த முகத்தில் சற்றே பருமனாக தெரிந்தது.

‘உன் ஒய்ஃபும் பிள்ளைங்களுமா ஜோசப்? கல்யாணத்துக்குக் கூட கூப்பிட முடியாத அளவுக்கு என்னெ மறந்துட்டியா ஜோசப்?’ என்ற தழுதழுத்த அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு, ‘என்ன ராஜ் அப்படி கேட்டுட்டீங்க? ஒங்க விலாசம் தெரியாம நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும்.’ என்றேன்.

‘உண்மைதான் ஜோசப். என்னுடைய பிடிவாத குணம் என்னைய ரொம்பத்தான் கஷ்டப்படுத்திருச்சி. ராஜாமுந்திரியில ஒரு கலெக்டர முறைச்சிக்கிட்டு.. நார்த்ல அஞ்சு வருசமா படாத பாடு பட்டுட்டேன்.’

‘அப்போ ஒங்க அம்மா, தங்கைகள்லாம்? இங்க தனியாவா இருந்தாங்க?’

அவர் அதைப் பற்றி பேச விரும்பாதவர்போல்.. ‘அதிருக்கட்டும் ஜோசப்.. ஒன்னெ பத்தி பேசு.. இப்ப நீ என்னவா இருக்கே.. ஒன் ஒய்ஃப் எந்த ஊரு?’ என்று பேச்சை மாற்றினார்.

என்னுடைய மனைவிக்கு முன்னால் அவருடைய குடும்பத்தைப் பற்றி பேச விரும்பவில்லையென்பதை உணர்ந்த நான் எனக்கு திருமணம் நடந்ததைப் பற்றியும், நான் சுற்றி வந்த ஊர்களைப் பற்றியும் சுருக்கமாகக் கூறிவிட்டு கிளம்பினேன்.

வழியில் வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறும் நேரத்தில் என் கையில் அவருடைய விசிட்டிங் கார்டை திணித்து, ‘டைம் கிடைக்கும்போது கூப்பிடு ஜோசப்.. சந்திக்கலாம்..’ என்றார்.

ஆட்டோ புறப்பட்டதும் கையிலிருந்த அட்டையைப் பார்த்தேன். அவர் அதே அலுவலகத்தின் சென்னை டெப்போவில் துணை மேலாளராக பதவி உயர்வைப் பெற்றிருந்ததைப் பார்த்ததும் என்னையுமறியாமல் ஒரு சந்தோஷம் மனதை நிரப்பியது.

வீட்டிற்கு வந்து சேர்ந்ததுமே அவருடைய வீட்டு தொலைப்பேசியில் அழைத்து நாளையே அவரை சந்திக்க விரும்புவதாகக் கூறினேன். ‘வீட்டுக்கே வந்திருங்க ஜோசப். தனியாத்தான் இருக்கேன். எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம்.’ என்றார்.

‘தனியாத்தான் இருக்கேன்..’ என்ற வாக்கியம் என்னை அன்று இரவு முழுவதும் சங்கடப்படுத்தியது.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் என் மனைவியிடம் கூறிவிட்டு காலையிலேயே அவருடைய வீட்டுக்கு சென்றேன்.

வீடு நல்ல வசதியுடன் அம்சமாக இருந்தது. வீட்டு முகப்பில் துணை மேலாளர், இந்திய உணவுக் கழகம் என்ற பளபளப்பான பலகை.. அதைப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.

ஆனால், அவருடன் சுமார் மூன்று மணி நேரம் தங்கியிருந்து பேசிவிட்டு திரும்பியபோது மனது கணத்துப் போயிருந்தது..

என்ன உலகமடா என்று தோன்றியது..

அவர் சென்னையை விட்டு மாறிப் போனவுடனேயே அவருடைய இளைய சகோதரர் தன்னுடயை மனைவியின் வற்புறுத்தலால் வயதான தாயையும் இரு தங்கைகளையும் தனியே விட்டுவிட்டு தனிக்குடித்தனம் போயிருக்கிறார்.

வடநாட்டிலிருந்தவாறே அவர்களை வழிநடத்தியிருக்கிறார் என் நண்பர். தங்கையின் வருமானத்தை தொடாமல் மாதா மாதம் அவர் அனுப்பி வைத்த தொகையைக் கொண்டே அவருடைய தங்கைகளில் இளையவரும் கல்லூரி படிப்பை முடித்து ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்த்து பிறகு அவருக்கு தெரிந்த ஒரு தனியார் பள்ளியில் பி.டி அசிஸ்டெண்டாக பணியில் சேர்த்திருக்கிறார்.

இதற்கிடையில் ராஜாவின் தாயார் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்கிறார். அவருடைய முகத்தைக் கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை அவருக்கு. வட இந்தியாவிலிருந்து வண்டி பிடித்து வருவதற்குள் உடம்பு தாங்காது என்று உறவினர்கள் பெண்கள் இருவரையும் வற்புறுத்தி இறுதிச் சடங்கை நடத்தி முடித்திருக்கின்றனர். இளைய சகோதரர் பேருக்கு இறுதி சடங்கிற்கு வந்து போயிருக்கிறார்.

ராஜா தன் தங்கைகளின் ஊதியத்திலிருந்து சேமித்து வைத்த தொகையுடன் தன்னுடைய பி.எஃப், எல்.ஐ.சி பாலிசிகள் மீது கடன் பெற்று இரு தங்கைகளைக்கும் ஒரே பந்தலில் வைத்து திருமணத்தை முடித்திருக்கிறார். தங்கைகளின் திருமணத்திற்கு நல்ல வசதியுடன் இருந்த ராஜாவின் தம்பி பண உதவி ஒன்றும் செய்யாமல் இருந்ததுடன் தன்னை கவுரவித்து அழைக்கவில்லையென்பதைக் காரணம் காட்டி திருமணத்திற்கே வராமல் இருந்திருக்கிறார்.

‘தங்கச்சிங்க ரெண்டு பேரும் அவங்கவங்க மாமியார் வீட்டோட இருக்காங்க ஜோசப். தம்பி தனியாத்தான் இருக்கான். பேச்சு வார்த்தை இல்லை. கல்யாணத்துக்கு வராட்டியும் அவன் கிட்ட சமாதானம் செஞ்சிக்க என்னென்னவோ செஞ்சி பாத்துட்டேன்.. அவன் பெஞ்சாதி எதுக்குமே ஒத்து வரமாட்டேங்குறா.. சரி போடான்னு விட்டுட்டேன்.. இன்னும் ரெண்டு வருசம்.. ரிட்டையர் ஆயிருவேன்.. இது நம்ம ஆஃபீஸ் லீஸ்ல எடுத்து குடுத்த வீடு. ரிட்டையர் ஆய்ட்டா காலி பண்ணணும்.. ரெண்டு தங்கைங்க கல்யாணத்துக்கு வாங்கன கடன ரிட்டையர் ஆறதுக்குள்ள அடைச்சிர முடியும்னு தோனல.. பென்ஷன் பணத்துலருந்துதான் அடைக்கணும்னு நினைக்கேன்.. அப்புறம்? கடவுள் விட்ட வழி..’

அன்றைய சந்திப்புக்குப் பிறகு அவரை மீண்டும் சந்திக்கவே எனக்கு மனம் வரவில்லை.

இரண்டு வருடங்கள் கழித்து சைதாப்பேட்டை மின் ரயில் நிலையத்தில் தற்செயலாக அவரை சந்தித்தேன்..

அவர் வேண்டாம் என்று தடுத்தும் அவருடைய வீட்டுக்கு சென்றேன்..

நினைத்துக்கூட பார்க்க முடியாத இடத்தில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் பத்துக்கு பத்து என்ற அறையில்.. மிகவும் எளிமையான நிலையில்..

பார்க்கவே மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.. என் கண்கள் கலங்கிப் போயின.

அப்போதும் மனம் தளராமல் புன்னகையுடன், ‘என்ன ஜோசப் இப்படி எமோஷனல் ஆவறே.. நான் சந்தோஷமாத்தான் இருக்கேன்.. என்னால முடியறப்பல்லாம் என் தங்கச்சிங்கள, என் மருமகப் பிள்ளைங்கள போய் பாக்கேன்.. என் தம்பிதான்.. பாவி.. அப்படியே விலகி நிக்கான்.. இப்ப ரிட்டையர் ஆய்ட்டான். கார், பங்களான்னு வசதியோட இருக்கான். நா இருக்கற நிலையில அவனெ போயி பாக்கறது அவ்வளவா நல்லா இருக்காதுன்னு ஒதுங்கியே நிக்கேன்.. இங்க சுத்தி இருக்கறவங்க எல்லாருமே ஏழைங்கதான் ஜோசப்.. ஆனா உண்மையான மனுஷங்க.. எனக்கு ஒன்னுன்னா பதறிப்போயி நீ, நான்னு போட்டி போட்டுக்கிட்டு உதவுறாங்க.. எனக்கு இத விட வேற என்ன வேணும் ஜோசப்..’

அவருடைய அந்த அமைதியான விளக்கம் என்னை கண் கலங்க வைக்கிறது. அவருடைய கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘எங்கூட வந்து இருங்கன்னு சொன்னா ஒங்கள அவமதிக்கறதாயிரும்.. ஆனா சேத்துப்பட்டுல ஒரு ஆசிரமத்துல நான் வாலண்டியரா இருக்கேன் ராஜ். நான் சொன்னா அந்த மதர் சுப்பீரியர் கேப்பாங்க.. வர்றீங்களா ராஜ்?’ என்றேன்..

அதே புன்சிரிப்புடன் வேண்டாம் என்றார். ‘இல்ல ஜோசப்.. அது யாருமே இல்லாதவங்களுக்கு.. எனக்கு ஒன்னெ மாதிரி எத்தனெ பேர் இருக்காங்க. அத்தோட நா அங்க போய் இருக்கறது தெரிஞ்சா என் தங்கச்சிங்களோட மாமனார், மாமியார் வீட்ல என்ன நினைப்பாங்களோ.. என்னால என் தங்கைகளோட கவுரவம் போயிரக்கூடாது.. நா நல்லாத்தான் இருக்கேன் ஜோசப்.. நீ டைம் கிடைக்கறப்ப வந்து போயேன்.. உன் வீட்டுக்கு எப்பனாச்சும் கூப்பிடு.. வரேன்..’

கனத்த மனத்துடன் திரும்புகிறேன்..

திரும்பும் போது தற்செயலாக நிமிர்ந்து பார்க்கிறேன்.. ‘ராஜா..
துணை மேலாளர்.. இந்திய உணவுக் கழகம்.’ என்ற வர்ணம் உரிந்து நிற்கும் மரப் பலகை கண்களில் படுகிறது.. அந்த பலகையைப் போலத்தான் அவரும்..

அவரை என்னால் எப்படி மறக்க முடியும்?

**************