ஹிந்த்ராஃப் என்ற ஒரு அமைப்பு (Rights Action Force என்றால் அமைப்பு என்று பொருள் கொள்ளலாமா? தெரியவில்லை.) மலேசியாவில் இருப்பதே பல மலேசிய தமிழர்களுக்கு, குறிப்பாக இளையதலைமுறையினருக்கு, தெரிய வந்தது அவர்களுடைய சமீபத்திய சாலை மறியலின்போதுதான் என்றால் மிகையாகாது.
ஹிந்த்ராஃப் அமைப்பின் பூர்வீகத்தைப் பற்றி எந்தஒரு அதிகாரபூர்வ தகவலும் தளங்களில் இல்லை. மலேசிய வாழ் இந்துக்களின் உரிமைகளை பாதுகாப்பதே இதன் லட்சியம் என செயல்படும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கூட்டமைப்பு என்கின்றன சில வலைத்தளங்கள். இங்குள்ள மலேசிய தமிழர்களில் பலருக்கும் கூட அது ஒரு இந்துக்களின் சங்கம் என்கிற அளவில் மட்டுமே தெரிந்திருக்கிறது. அதன் தலைவர் திரு வைத்தா மூர்த்தி ஒரு தமிழ் ராணுவ வீரரை இந்து முறைப்படி அடக்கம் செய்ய மலேசிய இராணுவம் அனுமதிக்க மறுத்ததன் விளைவே இந்து மக்களின் உரிமைகளை பாதுகாக்க ஒரு அமைப்பை துவக்க தன்னை தூண்டியதாக ஒரு தமிழ் சஞ்சிகையின் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் என்று என்னுடைய முந்தைய இடுகையில் நண்பர் சிவா தன்னுடைய மறுமொழியில் தெரிவித்திருந்தார் (நான் அந்த பேட்டியை படிக்கவில்லை).
ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையோ தெரியவில்லை. அப்படி பார்த்தால் இதற்கு முன்பு தமிழ் இந்து இராணுவ வீரர்கள் எவரும் இறக்கவில்லையா அல்லது அவர்கள் அனைவருமே இந்து முறைப்படி அடக்கம் செய்யப்படவில்லையா?
அவர்களுடைய அடுத்த குற்றச்சாட்டு இந்திய மக்களினத்தை அடியோடு ஒழிக்க மலேசிய அரசாங்கம் முயல்கிறது என்பது. இந்த குற்றச்சாட்டை போராட்டத்தின் முக்கிய காரணமாக முன்வைத்தது பல மலேசிய தமிழ் இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்தது என்றும் கூட சொல்லலாம். நான் சந்தித்த சில இளைஞர்கள் சிரிக்கக் கூட செய்தனர். அதைவிட பெரிய வேடிக்கை - இதை முதிர்ச்சியற்ற செயல் எனவும் கூறுகின்றனர் - எலிசபெத் மகாராணிக்கு நஷ்ட ஈடு கேட்டு கடிதம் அனுப்பியது.
அடுத்தது ஹிந்து ஆலயங்களை அரசு முன்னறிவிப்பில்லாமல் இடித்து தள்ளுகிறது என்ற குற்றச்சாட்டு. அதாவது அரசு நிலத்தில் அல்லது தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த ஆலயங்களை மட்டுமே இடிக்கப்பட்டுள்ளதாக அரசில் பங்குபெற்றுள்ள இந்தியர்களின் அரசியல் கட்சியே பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளது. அதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக அறிவித்துவிட்டே இந்த ஆலயங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இரண்டு தினங்களுக்கு முன்னர் சென்னை வில்லிவாக்கம் பகுதியில் தங்களுக்கு சொந்தமில்லாத நிலத்தில் கட்டப்பட்டிருந்த மசூதியை இடித்து தரைமட்டமாக்கியதாக இங்குள்ள பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளதை பார்த்தபோது இதில் பெரிதாக தவறேதும் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அடாவடியாக பாபர் மசூதியை இடித்து தள்ளியதை விட்டுவிடுவோம்.
ஆனால் இடிக்கப்பட்ட சில ஆலயங்கள் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்துள்ளன என்றும் அந்த ஆலயங்களில் நடைபெற்ற விழாக்களில் இன்று அரசில் அமைச்சர்களாக இருக்கும் பல அரசியல் தலைவர்களும் பங்கு பெற்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதையும் அலட்சியப்படுத்துவது முறையல்ல. ஆகவேதான் இதன் தீவிரத்தை உணர்ந்த மலேசிய அரசு உடனே நடவடிக்கையில் இறங்கி அரசில் பங்குபெற்றுள்ள இந்தியர்கள் கட்சியான இ.ம.கா தலைவர் டத்தோஸ்ரீ சாமிவேலுவை இத்தகைய ஆலயங்களைப் பற்றிய ஒரு அறிக்கையை தயாரித்து தமக்கு சமர்ப்பிக்குமாறு பிரதமர் அவர்களே பணித்துள்ளார். அத்துடன் சம்பந்தப்பட்டவர்களை கலந்தாலோசிக்காமல் எந்த இந்து ஆலயங்களும் இடிக்கப்படலாகாது என்றும் அப்படி இடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுமானால் அவர்களுக்கு அரசே மாற்று இடம் ஒன்றை அளிக்க வேண்டும் என்றும் அரசு முடிவெடுத்துள்ளதாக இரண்டு தினங்களுக்கு முன்பு டத்தோஸ்ரீ சாமிவேலு அவர்களே அறிக்கையிட்டுள்ளார்.
அடுத்த குற்றச்சாட்டு தமிழ் பள்ளிகள் மூடப்படுகின்றன என்பது. இவர்கள் முன்வைக்கும் வாதம் நாடு சுதந்திரம் பெற்றபோது இயங்கிவந்த பள்ளிகளின் எண்ணிக்கையை இப்போது இயங்கிவரும் பள்ளிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கூடுவதற்குப்பதிலாக குறைந்துள்ளது என்பது.
ஆனால் அரசின் வாதம் இப்படி செல்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் ரப்பர் தோட்டங்களில் பணியாற்றிய பல இந்தியர்களுக்கும் நகரங்களில் குடியேறிவிட்டனர். ஆகவே அவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த பள்ளிகள் போதிய மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டன அல்லது அதற்கருகில் இயங்கிவந்த வேறு சில பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. பல தமிழ் பள்ளிகளில் தலைமையாசிரியர் இடங்கள் காலியாகவே உள்ளன என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இத்தகைய பள்ளிகள் பெரும்பாலும் கிராம மற்றும் தோட்டப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் என்றும் இந்த பள்ளிகளில் தலைமையாசிரியராக பணி நியமனம் பெறும் பல இளைஞர்கள் அதை ஏற்றுக்கொள்ள முன்வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
அரசு துறைகளில் இந்தியர்களுக்கு வாய்ப்பு இல்லை. இதுதான் இவர்களுடைய குற்றச்சாட்டுகளில் கவனிக்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் முழுக்க முழுக்க உண்மையும் கூட. சமீப காலமாக பல அரசு அலுவலகங்களிலும் இந்திய அலுவலர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்துள்ளது என்பதை அரசு வெளியிடும் புள்ளி விவரங்களே சுட்டிக்காட்டியுள்ளன. இதற்கு அரசு அலுவல்களுக்கு விண்ணப்பிக்கும் மலேசியரல்லாதவர்களின், அதாவது சீன மற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை ஐந்து விழுக்காடுகளுக்கும் குறைவே என்கிறார் சம்பந்தப்பட்ட அமைச்சர். ஆனால் இந்த அறிக்கையைக் குறித்து அரசில் பங்குபெறும் ம.இ.கா கட்சியே அதிர்ச்சியடைந்துள்ளது. இரு தினங்களுக்கு முன்பு மலேசியாவிலிருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையே தன்னுடைய தலையங்கத்தில் இதைக் குறித்து தங்களுடைய மனத்தாங்கலை வெளியிட்டுள்ளது.
அதில் அரசு அலுவல்களுக்கு மலேசியல்லாதோர் குறிப்பாக தமிழர்கள் விண்ணப்பிப்பதில்லை என்ற குற்றச்சாட்டில் எள்ளளவும் உண்மையில்லை எனவும் சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக விண்ணப்பித்து இன்னும் நேரகாணலுக்கும் அழைக்கப்படாதோர் பல்லாயிரக்கணக்கில் உள்ளதாக கூறுகிறது.
ஆக ஹிந்த்ராஃப் அணி முன் வைத்து போராட்டத்தில் இறங்கியிருக்கும் கோரிக்கைகளில் அரசு அலுவல்களில் இந்தியர்களுக்கு முக்கியத்துவம் அல்லது அவர்களுக்கென தனி விழுக்காடு (கோட்டா) ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்திருந்தால் அது அனைத்து மலேசிய இந்தியர்களின் ஆதரவையும் நிச்சயம் பெற்றிருக்கும் என்பதில் ஐயமில்லை. அதைவிட்டு விட்டு சமீப காலமாக இந்து ஆலயங்கள் முன்னறிவிப்பின்றி இடித்துத் தள்ளப்படுகின்றன என்றதைக் காட்டி இந்திய வம்சமே அழித்தொழிக்கப்படுகிறத என்ற எவ்வித அடிப்படை ஆதாரமுமில்லாத கோரிக்கையை முன்வைத்ததன் மூலம் அது ஒரு இந்திய இந்துக்களுடை உரிமையை பாதுகாக்கும் அணியாகவே தன்னை இனங்காட்டிக்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியவில்லை.
ஆனால் முந்தைய தலைமுறையினர், அதாவது அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் சிலருடைய பார்வையில் ஹிந்த்ராஃபின் அணுகுமுறை வற்ரு அதிகபட்சமாக தெரிந்தாலும் அது இந்திய மற்றும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க செய்யும் முயற்சியாகவே படுகிறது. அவர்களில் சிலர் - இங்கு நான் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றி குறிப்பிட்டால் அவர்களுடைய கருத்துக்கு வேறு வர்ணம் பூசிவிடுவீர்களோ என்ற அச்சத்தில் அதை தவிர்க்கிறேன் - இப்படியும் சிந்திக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. 'ஹிந்த்ராஃபின் நோக்கம் எல்லாமே இந்துக்களின் உரிமையை, காப்பதுதான். அதாவது அவர்களுடைய ஆலயங்களை அரசு சமீபகாலமாக இடித்துத்தள்ளுவதை முன்வைத்தே அவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஆகவே அதற்கு அரசு நல்லதொரு பரிகாரத்தை முன்வைத்தாலே அவர்கள் சமாதானமடைந்துவிடுவார்கள். அத்துடன் இப்போது சிறையிலடைத்து வைத்துள்ள அவர்களுடைய தலைவர்களை விடுவித்துவிட்டால் அவர்களுடைய ஒத்துழைப்பை தற்சமயத்திற்கு, அதாவது அடுத்த பொதுத்தேர்தல் வரை, பெற்றுவிடமுடியும்.'
சரி, ஹிந்த்ராஃபின் போராட்டத்தில் ஈடுபட்டதைக் காரணம் காட்டி அதன் முக்கிய ஐந்து தலைவர்களை உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத சிறையடைப்பு தேவைதானா?
உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தில் இதற்கு வகையுள்ளதா?
தொடரும்..