இது ஒரு partly-nonfiction தொடர் என்றாலும் இதில் நடக்கும் சம்பவங்களும், சம்பாஷனைகளும் கற்பனையே. அப்படியே ஏதாவது வகையில்
ஒற்றுமை தோன்றினாலும் அது தற்செயலே என்பதை கூறிக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் நிச்சயமாக இல்லை.
என்னுடைய அனுபவங்களை, அதன் மூலம் நான் கற்றுக்கொண்ட பாடங்களை, ஒரு கற்பனை குடும்பத் தலைவர் மூலம் கூறலாம் என்று நினைத்தேன். அந்த நபர் வலைப்பதிவர்கள் மத்தியில் இன்று பிரபலமாக இருக்கும் ஒருவராக இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில்தான் ராகவன் என்ற பெயரைத் தெரிந்தெடுத்தேன். இதில் அந்த பெயருக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் ஆட்சேபம் ஏதும் இல்லையெனினும் நண்பர் சிவஞானம்ஜி இதை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அவருடைய யோசனையை மறுதலிக்க நான் அவருடைய மாணவர் இல்லையே! ஆகவே அவருடைய விருப்பத்திற்கேற்ப குடும்பத்தலைவரின் பெயரை ராகவன் என்பதிலிருந்து ராகவேந்தர் என மாற்றியுள்ளேன்.
ராகவேந்திரனுக்கு அதிகாலையில் (அதாவது ஆறு மணி!) எழுந்துவிடும் பழக்கம் உண்டு.
Restless sleeper என்பார்களே அந்த ரகம். இரவு முழுவதும் தூக்கம் வராமல் உருண்டு, புரண்டுக்கொண்டிருப்பார்.
'என்னங்க நீங்க.. ஒங்கக் கூட பெரிய ரோதனையாப் போச்சி... ஒங்களால என் தூக்கமும் போவுது.' இது அவருடைய அருமை(!) மனைவி கற்பகத்தின் தினசரி புலம்பல். 'பேசாம நீங்க ஒரு ரூம்ல நான் ஒரு ரூம்ல படுத்துக்கணும்னு நினைக்கறேன்... இப்படியே போனா நான் ஆவி மாதிரி நடுராத்திரியில எழுந்து அலைய வேண்டியதுதான்.' என்றார் ஒருநாள் பொறுக்கமாட்டாமல் .
ஏற்கனவே மூன்று படுக்கையறைகளைக் கொண்ட அந்த வீட்டில் ஒரு அறையில் அவரும் கற்பகமும், இன்னொரு அறையில் அவர்களுடைய வாரிசுகளான கமலனும், கமலியும் (கமலனோட படுக்கை வடப்புற சுவருக்கருகிலும் கமலியின் படுக்கை தென்புற சுவருக்கருகிலும் சுமார் பத்தடி இடைவெளியில்..) மூன்றாவது படுக்கையறையில் ராகவனின் தந்தையும் தாயும்...
ராகவேந்தர்: 'இதுக்கு மேல நாலாவது படுக்கையறையா? என் தலைமேலதான் கட்டணும்.'
கற்பகம்: 'ஏன் கட்டுங்களேன்... மாடியில ஒரு ரூம் எடுங்க... அங்க படுக்கறதுக்கு மட்டுமில்லாம நீங்க ஆஃபீஸ்லருந்து வந்ததுமே போய் ஒக்காந்துக்குங்க... நாங்களாவது கொஞ்சம் நிம்மதியா இருப்போம்.'
அட ராமா என்று நினைத்தார் ராகவேந்தர்.
'எப்படி இருக்கு பாருங்கப்பா. நா வீட்டுக்கு வர்றதே பிரச்சினைங்கறா மாதிரி சொல்றா பாருங்க.' என்றார் தந்தையிடம்.
'கற்பகம் சொல்றதுலயும் நியாயம் இருக்கு போலருக்கேடா.... நீ வீட்ல இருந்தாலே பிரச்சினையாத்தான வருது... நின்னா குத்தம், ஒக்காந்தா குத்தம்கற.. பிள்ளைங்கள நிம்மதியா ரேடியோ கேக்க விடறயா? இல்ல ஒங்கம்மாவத்தான் டிவி சீரியல் பாக்க விடறயா? சரி, பகல் பொழுதுலதான் இந்த பிரச்சினைன்னா ராத்திரிலயும் அவள தூங்கவிடாம... அவள கட்டில்லருந்தே உருட்டி விட்டுடறியாம? பகலெல்லாம் வீட்டு வேலை செய்யற
பொம்பளைய நிம்மதியா தூங்கவிடாம இருந்தா அவ பின்னெ என்னடா சொல்வா?'
தேவையா இது என்று நொந்துப்போனார். 'ஒங்கக்கிட்ட வந்து சொல்ல வந்தேன் பாருங்க.. எனக்கு வேணும்..' என்று முனுமுனுத்தவாறு அந்த மாதமே ஒரு எஞ்சினியரைப் பிடித்து அவர் மூலமாக ஒரு மேஸ்திரியை பிடித்து மேல்தளத்தில் ஒரு விசாலமான - சுமார் ஐந்நூறு அடியில் - ஒரு அறையை அமைத்தார். அதில் குளியலறையுடனான படுக்கையறை, ஒரு சிறிய ஹால் (ஏன் கிச்சனையும் போட்டுருங்களேன் என்று கற்பகம் நக்கலாக சொல்ல.. அட! இதுவும் நல்ல ஐடியாவருக்கே என்ற நினைப்பில்) ஒரு குட்டி சமையலறை என போட்ட பட்ஜெட் எகிறியது.
'இது தேவையா?' என்று மீண்டும் முறையிட்ட தந்தையை முறைத்துப்பார்த்தார். ஆனால் எதிர்த்து பேச துணிவில்லை.
இது எங்க தலைமுறையோட தலைவிதி .. இந்த வயசுலயும் அப்பா, அம்மாவை எதிர்த்து பேச முடிய மாட்டேங்குது. ஆனா இந்ததலைமுறைய பாருங்க. கமலனையும் கமலியையும் ஏதாச்சும் சொல்ல முடியுதா... உடனே 'எங்களுக்கு தெரியும் டாட்' னு பதில் வந்துருது...
சில சமயங்களில் ராகவேந்தர் நினைத்துக்கொள்வார்...
ஏன் நம்ம ஜெனரேஷனுக்கு மட்டும் இந்த நிலை... சின்ன வயசுல அப்பா, அம்மாவுக்கு மட்டுமா, தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, பெரியப்பா, சித்தப்பா ஏன் அவங்க ஃப்ரெண்ட்சுக்கும் பயந்து செத்தோம்.. ஒக்காருன்னா ஒக்காரணும், நில்லுன்னா நிக்கணும், ஓடுன்னா ஓடணும்... வீட்டுக்கு வர்றவங்கள புடிக்குதோ இல்லையோ பல்லெல்லாம் தெரியறாப்பல வாங்கன்னு சொல்லணும், தாத்தா, பாட்டி கால அமுக்கி விடணும், தாத்தாவுக்கு
பொடி, பாட்டிக்கு வெத்தலை பாக்கு வாங்கிட்டு வந்து குடுக்கணும். இதல்லாம் போறாதுன்னு ஸ்கூலுக்கு வேற போய் வரணும்...
அன்னைக்கும் நாங்கதான் பெரியவங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனோம்... இன்னைக்கும் நாங்கதான் எங்க பிள்ளைங்களுக்கு அட்ஜ்ஸ்ட் பண்ணிக்கிட்டு போறோம்... எங்க ஜெனரேஷன் மட்டும் என்ன பாவம் பண்ண ஜென்மங்களா.. சொல்லுங்க..?
'ஏங்க வர்றவங்கக்கிட்டல்லாம் இதையே புலம்பணுமா?' இது கற்பகம்..
இதான் எங்க ஜெனரேஷனோட பொம்பளைங்களோட ஸ்பெஷாலிட்டி. பலவீனம்னு கூட சொல்லலாம். குடும்பத்துக்குள்ள என்னதான் பிரச்சினை என்றாலும் யாரிடமும் சிலவேளைகளில் தங்களுடைய கணவர்களிடம் கூட பகிர்ந்துக்கொள்ளாமல் ஆற்றாமைகளை மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து...
சரி திருமணத்தில்தான் சுதந்திரம் இருந்ததா என்றால் இல்லை.... பெண் பார்க்கவே மாப்பிள்ளையை கூட்டிக் கொண்டு போக தேவையில்லை என்று நினைத்தார்கள் அன்றைய பெரியவர்கள்... 'நீ என்னடா தனியா வந்து பாக்கறது? எல்லாம் நாங்க பாத்துட்டு வந்து ஃபோட்டோவ காமிக்கோம்.. அது போறும்...'
அதுவும் குடும்பத்தில் கடைகுட்டியான ராகவேந்தர் விஷயத்தில் அந்த புகைப்பட சான்சும் கிடைக்கவில்லை. தாலிகட்டி முடித்த பிறகுதான் கற்பகத்தை முதன்முறையாக (அதாவது முழுமையாக, அதாவது முகத்தை!!) பார்க்க முடிந்தது!
ஆண்களுக்கே இந்த கதி என்றால் பெண்களூக்கு?
வயசுக்கு வந்துட்டா போறும்.. கல்யாணம், கல்யாணம்னு பொண்ணுக்கு சமைக்க தெரியுமா, துணி துவைக்க தெரியுமா, ஏன் ஒரு குடும்பத்த நடத்தவோ சுயமா சிந்திச்சி ஒரு முடிவெடுக்கவோ தெரியுமான்னுல்லாம் கவலைப்படாம சாதி சனம் சொல்லுதேன்னு கல்யாணத்த செஞ்சி வச்சிருவாங்க...
கற்பகம் திருமணமாகி வந்தபோதும் இதே நிலைதான்.
முதல் முதலாக ராகவேந்தர் தன் மனைவியுடன் ஜாலியாக(!) வெளியில் சென்றுவரலாம் என்று நினைத்து கற்பகத்தை ரகசியமாக சிக்னல் செய்து அழைத்தார். 'ஐயே ஒங்களோடவா, தனியாவா? பாக்கறவங்க என்ன நெனைப்பாங்க? இங்கனல்லாம் ரோட்டுலயே ஆம்பளைங்க ஒரு சைடு பொம்பளைங்க ஒரு சைடுன்னுதான் போவோம்...' என்று தயங்க நொந்துப்போனார்.
இந்த லட்சணத்துல முதல் இரவு என்பதே பத்து, பதினைந்து இரவுகள் கழித்துத்தான்....
காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை ராகவேந்தருக்கு....
ஆனால் அந்த நிலையிலும் திருமணமாகி வீட்டுக்கு வந்த முதல் நாளே, 'டேய் ராகு, என்ன அவ பாட்டுக்கு உள்ளாற போய் ஒக்காந்துட்டா... வீட்டு வேலையெல்லாம் யார் பாக்கறது... இங்க வந்து இத அம்மியில அறைச்சி குடுக்கச் சொல்லு... ஊர் போய் வந்ததுல எல்லா
துணியையும் நனைச்சி வச்சிருக்கேன்.. யார் துவைக்கறது?' என்ற தாயையும் 'என்னங்க வந்து ஒரு நா கூட முழுசா ஆகல, இப்படி சொல்றாங்க?' என்றவாறு பரிதாபமாக தன்னைப் பார்த்த மனைவியையும் வெறித்துப் பார்ப்பதை தவிர வேறொன்றும் செய்ய முடியவில்லை.
தினமும் கற்பகம் வேலையையெல்லாம் முடித்துவிட்டு கைகளை சேலை தலைப்பால் துடைத்துக்கொண்டு படுக்கையறையை அடையும்போதே நள்ளிரவை நெருங்கியதுண்டு. கணவனை மட்டுமல்லாமல் அவனுடைய குடும்பத்தாரையும் அனுசரித்து போகவேண்டிய சூழலில் கர்பகத்தைப் போலவே கூலியில்லாத வேலைக்காரியாய் உழன்ற பெண்களின் கதைகள் எத்தனை, எத்தனை?
அதற்கும் 'நாங்கல்லாம் இப்படியாடா? வீட்லருக்கற பெரியவங்கள்லாம் படுத்துட்டாங்களான்னு பாத்து பட்டும் படாம இருந்தோம்.. இலை மறைவு காய் மறைவா குடும்பம் நடத்துனோம்.. புள்ளைகள பெத்துக்கிட்டோம்... இப்ப என்னடான்னா...' என்ற தன் தாயின் வார்த்தைகளை நினைத்துக்கொண்டார்.
ஆமாம், அதான் டஜன் கணக்குல பெத்தீங்களோன்னு கேக்கத்தான் தோன்றும். முடியாது.
ராகவேந்திரனுக்கு ஐந்து சகோதரர்கள் ஐந்து சகோதரிகள். இவர்தான் கடைக்குட்டி!!
அதுலயும் எங்க ஜெனரேஷந்தான் பாதிக்கப்பட்டோம்... கூட்டுக்குடும்ப தொல்லைகள் போறாதென்று ஒவ்வொரு குடும்பத்திலும் பத்துக்கும் மேல் குழந்தைகள்...
இந்த தொல்லைகளை நம்முடைய பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாம் என்று நினைத்தே அதிகம் போனால் இரண்டு அல்லது மூன்று என்று நிறுத்திக்கிட்டோம்...
ஆனால் அதுலயும் சந்தோஷம் கிடைச்சிதான்னு பார்த்தா....
தொடரும்...
நல்வரவு!
பதிலளிநீக்குவாழ்க்கைச் சக்கரம் சுழலத் தொடங்கீருச்சா. நல்லாயிருக்கு அறிமுகம். ஒங்க எழுத்தப் பத்தி என்ன சொல்றது! அதெல்லாம் தானா வர்ரது.
பதிலளிநீக்குஅறிமுகம் இப்பதான் தொடங்கீருக்கு. இனிமேதான் இந்தப் பாத்திரங்கள் செய்யப்போற சேட்டைகளை ரசிக்கப் போறோம். காத்திருக்கிறோம்.
மிக்க நன்றி சிஜி!
பதிலளிநீக்குராகவேந்தரின் ஆதங்களைப் பற்றி ஏதாவது கமெண்ட் அடிப்பீர்கள் என்று நினைத்தேன்.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குஇந்தப் பாத்திரங்கள் செய்யப்போற சேட்டைகளை....//
இந்த தொடரில் ஒவ்வொரு குடும்பத்திலும் நடைபெறும் பல பிரச்சினைகளை அலசப் போகிறேன். முக்கியமாக நேற்றைய, இன்றைய, நாளைய தலைமுறையினரிடையே நடைபெறும் அபிப்பிராய பேதங்களை.
அதை இன்றைய தலைமுறையினர் என்ற முறையில் உங்களுடைய தரப்பு வாதங்களை எடுத்து வைப்பீர்கள் என்று கருதுகிறேன்.
இந்த தொடரைப் பொறுத்தவரை நேற்றைய தலைமுறையினர்: 40லிருந்து அறுபது வரை.
இன்றைய தலைமுறையினர்: 20லிருந்து நாற்பது வரை
நாளைய தலைமுறையினர்: 20க்கும் கீழே
கமலன், கமலி முறைய இன்றைய மற்றும் நாளைய தலைமுறையினர்.
ராகவேந்தருக்கு 56 வயது. கற்பகம் 50 வயது. ஆகவே அவர்கள் இருவரும் நேற்றைய தலைமுறையினர். அதாவது என் தலைமுறையைச் சார்ந்தவர்கள்.
அவருடைய பெற்றோர் முந்தைய தலைமுறையினர்.
இந்த நான்கு தலைமுறையினரும் ஒரே குடும்பமாய் வாழும்போது ஏற்படும் பிரச்சினைகளுடன் சில தேவையான குறிப்புகளுமே இத் தொடரின் மையக் கருத்துகளாக இருக்கும்.
தி.பா-வை சடாரென்று நிறுத்திக்கிட்டேங்களேன்னு நினைத்தேன்.இதுவும் அத மாதிரி நல்லத்தான் ஆரம்பிசிருக்கு
பதிலளிநீக்கு<---
அன்னைக்கும் நாங்கதான் பெரியவங்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு போனோம்... -->
அப்படியே வளர்த்துட்டாங்களா-அவங்க ராசா மாதிரியும் நாம அவங்க அடிமை மாதிரியும் அதுதான்.அவங்கள நம்பியே இருந்தோமா.அதுவும்தான்.இப்போ மாதிரி அப்ப வெளிப் பழக்கமெல்லாம் கிடையாது.தனியாக வாழ முடியும்னு நம்பிக்கை இருந்ததுன்னா 15 வயதிலேயே(வேலை கிடைத்து) இப்பொவெல்லாம் வீட்டை விட்டு வெளியிலே போயிடுவாங்கன்னு நினைக்கிரேன்.
வாங்க சிவா,
பதிலளிநீக்குதனியாக வாழ முடியும்னு நம்பிக்கை இருந்ததுன்னா 15 வயதிலேயே(வேலை கிடைத்து) இப்பொவெல்லாம் வீட்டை விட்டு வெளியிலே போயிடுவாங்கன்னு நினைக்கிறேன்.