26 டிசம்பர் 2007

மலேஷியாவில் இருந்து.... 2

இரண்டு தினங்களுக்கு முன்பு மலேசிய இந்தியர் காங்கிரசின் (ம.இ.கா) தலைவரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ ச.சாமிவேலு மலேசிய தொலைக்காட்சி ஆர்.டி.எம்முக்கு அளித்த பேட்டியில் கூறியதை முதலில் பார்ப்போம்.

கேள்வி: மலேசியாவில் இந்திய வம்சாவழியினர்களை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளதா?

'இன ஒழிப்பு என்பது ஒரு கொடுமையான செயல். பல ஆண்டுகளாக போஸ்னியாவில் நடைபெற்று வந்துள்ளதைப் போல மலேசியாவில் நிகழவில்லை. மலேசிய தமிழர்களுக்கு அவர் எதிர்பார்ப்பதையும் விட மேலாகவே அரசாங்கம் இதுவரை செய்து வந்துள்ளது. ஆனால் ஒன்றுமே செய்யாதது போன்ற பிரமையை உண்டுபண்ணி மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன் சிலர் விஷமப் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

மேலும் சாலை ஆர்ப்பாட்டங்களால் எந்த நன்மையில் கிட்டப் போவதில்லை. நமக்கு வேண்டியதை முறையாக அரசாங்கத்திடம் வழங்கினால் மட்டுமே அதற்கான தீர்வுகள் கிட்ட வாய்ப்புள்ளது. அண்மையில் நடந்த சட்ட விரோத பேரணியால் மலேசியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.'

இத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. அவர் தொடர்ந்து கூறுகிறார். 'அத்துடன் இந்தியர்கள் மத்தியில் ம.இ.கா. மற்றும் ஆட்சியிலுள்ள தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீதும் சற்று ஏற்படுத்திவிட்டனர். இந்த அதிருப்தியை போக்க நாங்கள் அவர்களை சந்தித்து உண்மை நிலவரங்களை விளக்கி அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடிவு செய்துள்ளோம்.'

அதாவது அடிப்படை வசதிகளைக் கூட இதுவரை செய்து தரவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறார் எனலாமா? சரி. உண்மை நிலவரங்கள் என்பதன் பொருள் என்ன? நீங்கள் நினைப்பதுபோல் நீங்கள் விரும்புவற்றை பெற்றுத்தருவது அத்தனை எளிதல்ல என்று பொருளா? இன்னும் ஒன்று. HINDRAF தலைவர்களின் செயலுக்கு மலேசிய அரசுக்கு அதிருப்தி ஏற்படுத்திவிட்டதாகவும் ஆகவே அதை விலக்க முயல்வோம் என்றும் அவர் கூறியிருக்கும் பாணி ஏதோ மலேசிய தமிழர்களுக்கு கிடைக்க வேண்டியதை அரசிலுள்ளவர்களை 'தாஜா' செய்துதான் பெறவேண்டியிருக்கிறது என்பதுபோல் இல்லை? அதுவும் அரசில் ஒரு முக்கிய அமைச்சராக இருக்கும் ஒருவரே இப்படி கூறுகிறார். 'இத்தனை விழுக்காடு மக்கள் நாங்கள் உள்ளோம். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தே நாங்கள் அரசுக்கு ஆதரவாகவே இருந்து வருகிறோம். ஆகவே எங்களுக்கு உரிய மதிப்பு நீங்கள் வழங்கியே ஆகவேண்டும்' என்று வாதிடுவதை விட்டுவிட்டு இது என்ன அடிமைத்தனம் என்று கேட்க தோன்றுகிறதல்லவா?

இதைத்தான் டத்தோஸ்ரீ சாமிவேலுவின் அதிருப்தியாளர்கள் கூறுகின்றனர். மலேசிய தமிழர்களின் மற்றொரு பிரபல அரசியல் கட்சியான ஐ.செ.க.தலைவர் இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படியொரு கேள்வியை முன் வைத்துள்ளார். 'ஹிண்ட்ராப் பேரணியில் இந்தியர்கள் (மலேசிய வாழ் தமிழர்களும் மலேசியர்கள்தான் என்பதை இவர்களே மறந்துபோகிறார்கள் பாருங்கள்!) திரண்டு வந்து கலந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று எதிர்கட்சி சட்டசபையில் வினா எழுப்பியதும் அதற்கு பதிலளிக்காமல் ம.இ.காவை சார்ந்த அமைச்சர்கள் மவுனமாக அமர்ந்திருந்தது ஏன்?'

அரசுக்கு எதிராக ஏதேனும் சொல்லப் போக தங்களுடைய பதவிகள் பறிபோய்விடக்கூடும் என்று இன்று பதவியிலுள்ள மலேசிய தமிழ் அமைச்சர்கள் கருதுகிறார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேற்கூறிய பேட்டியில் அமைச்சர் சாமிவேலு அவர்கள் வேறொரு கேள்விக்கு இவ்வாறு  கூறுகிறார். 'நாட்டின் 12ஆவது பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் வேளையில் ம.இ.கா சார்பில் பல புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்'  ஏன்?  'ம.இ.கா சார்பில் கடந்த தேர்தலில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் சிலர் தொய்வு நிலையை அடைந்துவிட்டதால் அவர்களுக்கு பதிலாக புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவர்.'

ஏதோ ஒரு சில வேட்பாளர்களுடைய தொய்வினால்தான் மலேசிய தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த சலுகைகள் கிடைக்காமல் போய்விட்டன என்பதுபோல் இருக்கிறது அவருடைய வாதம்.

ஆக, மலேசிய தமிழர்களுக்கு சலுகைகள், அதாவது முன்பு வழங்கப்பட்டிருந்த சலுகைகள், இப்போது மறுக்கப்படுகின்றன என்பது தெளிவாகிறது.

ஏன், எதனால் அரசாங்கத்தின் போக்கில் இந்த திடீர் மாற்றம்?

இதற்கு முக்கிய காரணம் மலேசிய அரசின் Ketuanan Melayu அதாவது 'மலேசியர்களுக்கு முக்கியத்துவம்' என்கிற கொள்கைதான். அரசின் இத்தகைய நிலைப்பாடு 2000ம் வருடத்திலிருந்து முன்னிலைப்படுத்தப்பட்டு வருவதுதான் இன்றைய போராட்டத்தின் முக்கிய பின்னணி என்கின்றனர் இன்றைய தலைமுறை மலேசிய தமிழர்கள்.

நம்முடைய நாட்டிலும் 'மண்ணின் மைந்தர்' அல்லது 'Son of the Soil' எனப்படுவதை கண்டிருக்கிறோம். இது தமிழகத்திலும் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றது என்பதை மறுக்க முடியாது. கர்நாடகா போன்ற மாநிலங்களில் இது வெளிப்படையாகவே கூறப்பட்டு வருகின்றது. அந்த மாநிலத்தில் அரசு கல்லூரிகளில் கர்நாடகத்தைச் சாராதவர்களுக்கு (கன்னடியர்கள் அல்லாதோர்) முன்னுரிமை வழங்கப்படுவதில்லை என்பது வெளிப்படை. நாம் எல்லோரும் இந்தியர்கள் என்ற உணர்வு மறைந்து கடந்த சில வருடங்களாக மொழியின் அடிப்படையில் இந்தியர்கள் பிரிக்கப்பட்டு நிற்பதை கண்கூடாகவே பார்க்கிறோம்.

இதையே மலேசிய அரசாங்கம் செயல்படுத்த முனைகிறபோது அதுவும் அரசாங்கத்தின் இந்த செயல் தமிழர்களை பாதிக்கும்போது அது தமிழகம் வரை எதிரொலிக்கிறது.

சரி மலேசிய அரசில் சிறுபான்மையினர் எனப்படும் சீன, தமிழ் மக்களுக்கு பங்கு அளிக்கப்பட்டுள்ளதே? அவர்களால் இதை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை என்கிற கேள்வி எழுகிறதல்லவா?

நியாயமான கேள்விதான். மலேசிய அரசின் நிரந்தர ஆளுங்கட்சியான பெரும்பான்மை மலாய் மக்கள் கட்சியுடன் சிறுபான்மையினரின் கட்சிகளான சீன மற்றும் தமிழர் கட்சிகள் கூட்டு சேர்ந்து அமைத்திருக்கும் அரசாங்கம்தான் நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே நாட்டை ஆண்டு வருகிறது.

அரசின் 'மலேசியர்களுக்கு முக்கியத்துவம்' என்கிற நிலைப்பாட்டை எதிர்கட்சியான டிஏபியே மும்முரமாக தொடர்ந்து எதிர்த்து வரும்போது அரசில் அங்கம் வகிக்கும் ம.இ.காவால் ஏன் அரசின் இந்த போக்கை மாற்ற முடியவில்லை?

இதற்கு முக்கிய காரணம் ம.இ.காவின் இன்றைய தலைவரும் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலுதான் காரணம் என்கின்றனர் எதிர்கட்சியினருடன் கூட்டு சேர்ந்திருக்கும் தமிழர் கட்சிகள்.

இந்த குற்றச்சாட்டு உண்மைதானா?

தொடரும்...

2 கருத்துகள்:

 1. //ம.இ.காவின் இன்றைய தலைவரும் நாட்டின் பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலுதான் காரணம் என்கின்றனர் எதிர்கட்சியினருடன் கூட்டு சேர்ந்திருக்கும் தமிழர் கட்சிகள். இந்த குற்றச்சாட்டு உண்மைதானா? //

  ஐயா,

  சாமுவேல் பற்றி மக்கள் பல்வேறு விதமாக கூறினாலும், அங்குள்ள தமிழ் வார இதழ்களில் (தென்றல், நயனம், மன்னன்) ஆகியவற்றில் தமிழர்களுக்கு பயன்களைப் பெற்றுத்தருவதில் அவர் முனைப்புடன் செயல்படவில்லை என்று குற்றம் சுமத்தி தலையங்கங்கம் எழுதி இருக்கிறார்கள். அவர் ஒரு அமைச்சர் என்ற அளவில் அவர் செயல்படுகிறார், ஆனால் தமிழர் என்ற முறையில் நன்மைகளைப் பெற்றுத்தருவதில் அரசாங்கத்திடம் போராடவில்லை என்று தான் எழுதி இருக்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 2. வாங்க கண்ணன்,

  அமைச்சர் டத்தோஸ்ரீ சாமிவேலு மீது சரமாரியாக புகார் சொல்கின்றனர் இன்றைய தலைமுறையினர். ஆனால் அவருக்கு மாற்றாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வேறொரு தமிழின தலைவர் இல்லை என்பதும் உண்மை.

  பதிலளிநீக்கு