10 டிசம்பர் 2007

வங்கிகளில் கணினி 5

எந்த ஒரு நிறுவனத்தின், குறிப்பாக வங்கிகளின்,  சிறப்பான செயல்பாடு மற்றும் அதன் வளர்ச்சிக்கு அதன் வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்கள் (Information) மிகவும் அத்தியாவசியம். இதற்கு அடிப்படை தேவையாக இருந்தது கணினிமயமாக்கல் என்றால் மிகையாகாது.

ஒரே இடத்தில் தங்களுடைய வர்த்தகத்தை செய்து வரும் நிறுவனங்களே தங்களுடைய வாடிக்கையாளர்களைப் பற்றிய தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன என்றால் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவியுள்ள வங்கிகளைப் பற்றி கேட்க வேண்டுமா?

அதே சமயம் தங்கள் வசம் வந்து சேரும் தகவல்கள் எல்லாமே தங்களுடைய வர்த்தக வளர்ச்சிக்கு பயன்படக்கூடிய தகவல்களாக இருக்கமுடியாது என்பதும் உண்மை! More information more confusion என்பார்கள். இன்றைய கணினி யுகத்தில் நிறுவனங்களின் தகவள்களத்தில் (Database) குவிந்துக்கிடக்கும் தகவல்களை அலசி ஆய்வு செய்வதையே (Business Intelligence and Data Mining) ஒரு டிப்ளமோ கோர்சாக பல நிறுவனங்கள் நடத்தி வருகின்றன.

ஆனால் ஒரு வர்த்தக அல்லது தொழில் நிறுவனங்களைப் போன்றதல்ல வங்கிகளின் செயல்பாடுகள். வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களையே வாடிக்கையாளர்களாகக் கொண்டு செயல்படுபவை வங்கிகள். ஆகவே வங்கிகளைப் பொறுத்தவரை இத்தகைய நேரடி வாடிக்கையாளர்களுடைய (Direct Customers) தேவைகளுடன் அவர்களுடைய வாடிக்கையாளர்களான மறைமுக வாடிகையாளர்களுடைய (customer's customers or indirect customers) தேவைகளையும் அறிந்திருப்பது மிகவும் அவசியம். இதிலிருந்தே வங்கிகளுடைய தகவல்களத்தின் (Database) முக்கியத்துவத்தை உணரமுடிகிறதல்லவா?

இத்தகைய முழுமையான தகவல்களத்தை (Comprehensive Database) வடிவமைப்பது அத்தனை எளிதல்ல என்பது இப்போதும் இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற பல மென்பொருள் நிறுவன கணினியாளர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அதாவது வங்கிகள் கணினிமயமாக்கப்பட்டு சுமார் பதினைந்தாண்டுகளுக்கு பின்னரும் இதுதான் நிதர்சனம்.

அப்படியிருக்க அன்று இத்துறையில் தாங்களாகவே கற்று தேர்ந்த ஒருசில அதிகாரிகளால் என்ன செய்திருக்க முடியும்? அதுவும் ஒரு சில மென்பொருள் மொழிகளே கைவசம் இருந்த நிலையில்!

இன்று அபிரிதமான தகவல் (abundant information) ஒரு தீர்வு காணமுடியாத பிரச்சினையாக உருவெடுத்திருக்க அன்று தகவல் இன்மையும் (lack of information or scarce information) ஒரு பிரச்சினையாக இருந்தது என்பது உண்மை.

ஒரு வாடிக்கையாளர் சம்பந்தப்பட்ட சகலவித தகவல்களையும் சேகரிக்க மென்பொருளில் வசதிகள் தேவை. இப்போதெல்லாம் ஒரு வாடிக்கையாளர் சேமிப்பு கணக்கு துவங்க வங்கிகள் வடிவமைத்திருக்கும் விண்ணப்ப படிவத்தின் நீளத்தை பார்த்தாலே தெரிய வரும். நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்கு குறைந்த படிவங்களே இல்லை. ஒவ்வொரு பக்கத்திலும் குறைந்த பட்சம் பத்து, பதினைந்து கட்டங்கள் (Data Boxes). வாடிக்கையாளரின் பெயர், விலாசம் மட்டும் இருந்தால் போதும் என்கிற காலம் போய்  'உங்களுடைய பெட் விலங்கு நாயா, பூனையா இல்லை எலியா?' என்பதுவரை விசாரித்து சேகரிக்கும் சூழல்!'

இத்தகைய தகவல்களை சேகரிக்க வேண்டுமென்றால் வங்கிகள் பயன்படுத்தும் மென்பொருளில் அதற்கு வசதிகள் (Data capturing capacity) அவசியம். அதற்கு அன்றைய காலத்தில் பரவலாக புழக்கத்தில் இருந்த Dos based மென்பொருள் எந்தவிதத்திலும் பயன்படவில்லை.

DOS based மென்பொருளின் அடிப்படை பலவீனமே அது இயங்கும் கணினியின் Base Memoryதான் என்றனர் அன்றைய மென்பொருள் வடிவமைப்பாளர்கள். 640 kb அளவே உள்ள இந்த தளத்தில் இயங்க வேண்டிய அதே சமயம் சகல வசதிகளையும் கொண்ட ஒரு மென்பொருளை உருவாக்குவதிலிருந்த சிரமம் எங்களுடைய கணினி இலாக்கா அதிகாரிகளுடன் நெருங்கி பழகியபோதுதான் எனக்கு முழுமையாக தெரிய வந்தது. 'நீங்க நினைக்கிறா மாதிரி எல்லா வேலிடேஷனையும் பண்ணா .exe பெரிசாயிரும் சார். அடிக்கடி சிஸ்டம் ஹேங் ஆயிரும்.' என்பார்கள். இன்று இத்தகைய மென்பொருட்களை பயன்படுத்த Dos Extenders உள்பட பல வசதிகள் உள்ளன என்றாலும் அதனால் பெரிய மாற்றங்கள் ஏதும் வந்துவிடவில்லை என்பதுதான் நிதர்சனம்.

மேலும் ஒரு வங்கியின் ஆயிரக்கணக்கான கிளைகளில் சேகரிக்கப்படும் தகவல்கள் சம்பந்தப்பட்ட கிளைகளிலேயே சேமிக்கப்பட்டு வைக்கப்படுகிற நிலையில் அதன் முழுமையான பலன் அந்த வங்கிகளுக்கு கிடைத்ததில்லை. இதைத்தான் distributed database என்றார்கள்.

இத்தகைய Distributed software systeத்தில் ஒரு நிறுவனத்தின் (வங்கியின்) அனைத்து கிளைகளும் ஒரே மென்பொருளைத்தான் பயன்படுத்துகின்றனவா (Same version of the package) என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள முடிவதில்லை. இன்று பல வங்கிகளும் Centralised Solution என்கிற மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளன என்றாலும் ஒரு சில வங்கிகளே அதை தங்களுடைய அனைத்து கிளைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளன. அடுத்து வரும் சில வருடங்களில் கூட இத்தகைய நிலையே நீடிக்க வாய்ப்புள்ளது என்பதும் உண்மை. குறிப்பாக பதினாயிரம் கிளைகளுக்கு மேலுள்ள பல பெரிய வங்கிகளில் குறைந்தபட்சம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் இதுதான் நிலைமை.

இன்றைய  Centralised சூழலில் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளும் பயன்படுத்த தேவையான மென்பொருளை மத்திய தகவல் மையத்தில் (Data Centre) உள்ள ஒரு சக்திவாய்ந்த வழங்கியில் (Server) இட்டு வைத்தால் போதும். அதாவது ஒரு வங்கியின் அனைத்து கிளைகளுக்கும் சென்று மென்பொருளை நிறுவும் அவசியம் இதில் இல்லை. Browser based மென்பொருள் (உ.ம். Internet Explorer) என்பதால் அதை பயன்படுத்த கிளைகளில் Browser வசதியுள்ள கணினிகள் மட்டுமே தேவை. மத்திய வழங்கியில் உள்ள மென்பொருளை (Application) பயன்படுத்த மட்டுமே இந்த கிளை கணினிகளால் முடியும். அதாவது மத்திய வழங்கியிலுள்ள தகவல்களை பயன்படுத்த மட்டுமே உரிமை வழங்கப்பட்டிருக்கும். அதை தறவிறக்கம் (Download) செய்யவோ அல்லது களையவோ (Delete) அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் அன்று இதுவே ஒரு பெரிய அலுவலாக இருந்தது. மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் என்பதால் ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய version தயாரிக்கப்பட்டு கிளைகளில் நிறுவ வேண்டிய சூழல். மென்பொருளை தயாரிக்க ஒரு குழு என்றால் அவற்றை floppyகளில் சேமித்து கிளைகளுக்கு அனுப்ப என்றே வேறொரு குழு அமர்ந்து இடைவிடா பணியில் ஈடுபட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் கிளைகளுக்கு அனுப்ப தேவையான floppyகளை புதிதாக வாங்குவதென்றால் முடியாத காரியம் அல்லவா? ஆகவே கடந்த மாதம் பயன்படுத்திய floppyகளை கிளைகளில் திரும்பப் பெற்று அவற்றை format செய்வதற்கெனவும் இருவர், மூவர் கொண்ட குழு ஒன்று தனியாக இயங்கிக்கொண்டிருக்கும்.

A:Ins என்ற ஒரு கடைநிலை கட்டளையைக் கூட (Basic DOS command) சரிவர புரிந்துக்கொண்டு மென்பொருளை தங்களுடைய கணினிகளில் நிறுவ (Install) தெரியாத கிளை அலுவலர்களை மென்பொருளை முழுமையாக பயன்படுத்த பயிற்றுவிக்க கணினி இலாக்காவினர் எத்தனை பாடுபட வேண்டியிருந்தது?

தொடரும்...

6 கருத்துகள்:

  1. இந்த துறையில் இருக்கும் எனக்கு மிக சுவாரசியமாக இருக்கிறது. விரிவாக எழுதுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. உஙக எழுத்த படிக்கிறப்ப ஆச்சரியமா இருக்கு.ஏதோ நேற்று நடந்ததுபோல இருக்கு.நானெல்லாம், மாக்னெடிக் டேப்ப கேட்பாஸ் வாங்கிட்டு ஒரு அலுவலகத்திலிருந்து அதே நிறுவனத்தின் அடுத்த அலுவலகத்துக்கு எடுத்துட்டுப்போவேன்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க கொத்தனார்,

    எனக்கு மிக சுவாரசியமாக இருக்கிறது. //

    நிச்சயம் இருக்கும். அதுவும் இப்போதைய சூழலில் பணிபுரிபவர்களுக்கு நான் எழுதுவது ஏதோ கற்காலத்தில் நடந்ததுபோன்று தோன்றும் இல்லையா?

    பதிலளிநீக்கு
  4. வாங்க சிவா,

    நானெல்லாம், மாக்னெடிக் டேப்ப கேட்பாஸ் வாங்கிட்டு ஒரு அலுவலகத்திலிருந்து அதே நிறுவனத்தின் அடுத்த அலுவலகத்துக்கு எடுத்துட்டுப்போவேன்.//

    ஆஹா எத்தனை ஈசியா இருக்கும்! ஆனா ஒரு அலுவலகத்திலிருந்து அடுத்த அலுவலகத்திற்கு தூரம் சுமார்1000 கிமீ இருந்தால்?

    பதிலளிநீக்கு
  5. <==
    அலுவலகத்திற்கு தூரம் சுமார்1000 கிமீ ==>
    கூரியர் சேவைதான்!

    பதிலளிநீக்கு
  6. வாங்க சிவா,

    கூரியர் சேவைதான்!//

    அப்போ இந்த வசதி இல்லையே. இப்போ இருக்கு... ஆனா தேவைப்படவில்லை. இப்பல்லாம் புது versionசை எங்க Intranet siteலயே போட்டுடறோம்.

    பதிலளிநீக்கு