27 ஜூலை 2007

அழகு தமிழும் இன்றைய தலைமுறையும்

என்னுடைய தலைமுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆங்கிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த முக்கியத்துவம் தமிழுக்கு தரப்படவில்லையென்றே கருதுகிறேன்.

தமிழ்வழி கல்வியே ஏதோ பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே என்கிற கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டிருந்த காலம். அதாவது பணம் செலவழித்து கல்வி கற்க வசதியில்லாதவர்களுக்கு என்பதுபோன்றதொரு மாயை..

கிறிஸ்துவ குடும்பங்களில் வீட்டிலும் கூட ஆங்கிலத்தில் பேசுவது என்பது ஒருவித கட்டாயமாக கருதப்பட்டு வந்த காலம். 'இங்க்லீஷ்ல எழுதுறதும் பேசுறதும் நமக்கு ஒரு தனி அந்தஸ்த்தை ஏற்படுத்தி கொடுக்கும்' என்பார் என்னுடைய தாத்தா. நம் வீட்டு பிள்ளைகள் எல்லாருமே மெட்றிகுலேஷன் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று நிர்பந்திப்பார்.

'நம்ம வீட்லருந்து ஒருத்தனாவது கடவுள் சேவைக்கு போகணும். அதனாலதான் ஒன்னெ குருமடத்துல சேக்கறேன்' என்று என்னுடைய விருப்பம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளாமலே கொண்டு சேர்த்தவர். குருமடத்திலோ தப்பித்தவறியும் கூட தமிழில் பேசிவிடக்கூடாது என்கிற நிர்பந்தம். ஆனால் நாளடைவில் என்னுடைய கோபமும், பிடிவாதமும் என்னை அங்கிருந்து விரட்டியடித்தது.

இந்த காலக்கட்டத்தில்தான் தமிழகத்தில் மாணவர்கள் தலைமையில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. தாய்மொழியில் பயிலுவது எங்களுடைய பிறப்புரிமை. யாரும் எம்மீது அந்நிய மொழியை திணிக்க அனுமதியோம் என்ற குரல் ஓங்கி ஒலித்தது.

தமிழை இரண்டாவது பாடமாக எடுக்கவும் தயங்கி வந்த காலம் மறைந்து தமிழ்வழி கல்வி மற்ற வழி கல்விக்கு எந்த வகையிலும் தாழ்ந்தது இல்லை என்கிற நிலை பரவலாக குறிப்பாக தென் மாவட்டங்களில் ஏற்படத் துவங்கியது. நாளடைவில் அதுவே நிலைப்பெற தாய்தமிழ்க்கு அதற்குரிய முக்கியத்துவம் உருவாக ஆரம்பித்தது.

தமிழில் பிழையின்றி பேசுவது, எழுதுவது என துவங்கி தூய தமிழில் பேசுவதையும் ஒருவித கவர்ச்சிக் கலையாகவே மாற்றினர் திராவிட கட்சி பேச்சாளர்கள். பாமர மக்களையும் தங்களுடைய எழுத்து மற்றும் பேச்சாற்றலால் கவர்ந்து அரசியல் கூட்டங்களை இலக்கிய கூட்டங்களாக மாற்றிய பெருமை அண்ணா, மு.க, நாஞ்சிலார், நெடுஞ்செழியன் ஆகியோரைச் சாரும். அதன் பிறகு திரைப்படப் பாடல்கள் வழியாக தூய தமிழை பட்டித் தொட்டிகளிலெல்லாம் பரப்பியவர் கவிஞர் கண்ணதாசன்.

இத்தகைய சூழலில் பிறந்து வளர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு தூய தமிழில் பேச, எழுத வெகு இலகுவாக வருகிறது என்றால் அதிசயமல்ல என்றாலும் இது ஒரு வரவேற்கத்த மாற்றம் என்பதில் மாற்று கருத்து இல்லை.

வலைப்பதிவுகளில் இன்றைய தலைமுறையினர் எழுதும் அழகைப் பார்த்து பலமுறை வியந்து போயிருக்கிறேன். நாளுக்கு நாள் வலைப்பதிவுகள் மற்றும் இணையதளங்களில் தங்களுடைய எழுத்தாற்றலை வெளிப்படுத்தும் இளைஞர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவதற்கு இப்போதெல்லாம் கணினியில் தமிழை நேரடியாக எழுத முடிகிறது என்பதும் ஒரு காரணம் என்றாலும் இதுவும் ஒரு சந்தோஷமான விஷயம்.

எழுதும் விஷயம் எதுவாக இருந்தாலும் அதை படைக்கும் நேர்த்தி, எந்த விதத்திலும் ஒத்துப்போக முடியாத கருத்தானாலும் அதையும் இறுதிவரை பிடித்து வாதிடும் அழகு, உண்மையிலேயே பாராட்டக் கூடிய விஷயம்தான்.

வலையுலகத்தில் மட்டுமல்லாமல் இன்றைய வார, மாத இதழ்களில் வெளிவரும் கதையல்லாத கட்டுரைகளிலும்தான் எத்தனை நேர்த்தியாக இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மனதிலுள்ளவற்றை எடுத்துரைக்கின்றனர்.

இந்த வாரத்து விகடனில் வெளியாகியுள்ள இரண்டு கட்டுரைகளில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் இவை:

தற்போது படப்பிடிப்பில் உள்ள ஜெயம் ரவியின் 'தேடிவந்த காதலி' திரைப்படத்தின் இயக்குனர், ரவியின் மூத்த சகோதரர் ஓரிரு வரிகளில் கதையின் கருத்தை இப்படி கூறுகிறார்:

'ரெண்டு வயசுல உன் விரலைப் பிடிச்சு நடந்தேதான். ஆனா இருபது வயசுலயும் நீ என் கைய விடாம பிடிச்சு வச்சிருக்கியே, இது நியாயமா?'

'ஆயிரம் ருபாய்ல 'ஆலன்ஷோலி ஷர்ட்' எடுத்து கொடுத்து 'ஜம்முனு எக்ஸிக்யூடிவ மாதிரி போடா'ன்னு பெருமையா சொல்றார் அப்பா. ஆனா மகனுக்கோ 150 ரூபாய்ல பாண்டிபஜார்ல 'போக்கிரி சட்டை' வாங்கி போட்டுக்கணும்னு ஆசை.'

இது இன்றைய சூழலில் ஒவ்வொரு குடும்பங்களிலும் நடைபெறக்கூடிய தலைமுறை போராட்டம்தான்.. ஆனால் எத்தனை அழகாக, சுருக்கமாக நினைவில் நிற்பதுபோல் சொல்லப்பட்டுள்ளது!!

அதே இதழில் வேறொரு கட்டுரையில் இன்று பிரபலமாகவுள்ள ஓவியர் ஷ்யாம் தன்னுடைய இளைய பருவ சிரமங்களை நினைவு கூற்கிறார். தான் பெற்றுள்ள வெற்றிக்கு இறைவன்தான் காரணம் என்பதை மிக அழகாக கூறுகிறார்:

'என்னுடைய வளர்ச்சிக்குக் காரணம் கடவுள்தான் என்பது என் நம்பிக்கை. எனக்கான வாய்ப்புகளை அவர் என் வாழ்க்கைப் பாதையில் விதைத்துக்கொண்டே செல்ல, நான் அவற்றை சரியாகப் பயன்படுத்திக்கொண்டேன். கஷ்டப்படத் தயாராக இருந்தேன். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் என்னைக் கைவிடவில்லை.'

வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவத்தை இத்தனை எளிமையாக, அழகாக, சுருக்கமாக சொல்லிவிட முடியுமா என்ன?

இன்றைய தலைமுறையின் கைகளில் தமிழ் மேலும் அழகு பெறுகிறது என்பதில் எள்ளளவும் பொய்யில்லை...

********

10 கருத்துகள்:

  1. Hello TBR
    I dont have a doubt about the beauty of written tamil by the young generation. However after watching Sun TV serials I seriously doubt whether we are talking tamil as it is supposed to be. Especially after seeing people killing words like vaalkai, instead of vazhkai and kastam (for kashtam). Not sure it is just because that characters needs to speak like that or generally people speak like that these days in TN.

    Too bad to see almost all the MCs speak in English in Sun TV in most of the tamil programs.

    Just my opinion. Many people may not agree.

    Murali

    பதிலளிநீக்கு
  2. வாங்க முரளி,

    நீங்கள் கூறுவது உண்மைதான். இந்த தலைமுறை என்ன முந்தைய தலைமுறையினரில் பலருக்கும் இந்த லகர, ழகர உச்சரிப்பில் பிரச்சினைதான். ஆலயங்களில் வேதாகம வாசகங்களை இத்தகையோர் வாசிக்கும்போது அவர்களுடைய குரல்வளையை நெரித்தால் என்ன என்று தோன்றும்.

    மேலும் நீங்கள் கூறுவதுபோன்று இப்போதெல்லாம் தொலைக்காட்சிகளில் தமிழ் நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவோர் மட்டுமல்லாமல் நிகழ்ச்சியை நடத்துபவர்களும் ஆங்கிலத்தில் பேசுவதும் அல்லது ஆங்கில நடையில் தமிழை பேசுவதும் ஒருவித fashion ஆகிவிட்டது.

    ஆனால் நான் குறிப்பிட்டது எழுத்துநடையைப் பற்றியே. அந்த வகையில் இன்றைய தலைமுறையினரை குறை சொல்ல முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  3. ஜோசப் சார். தலைமுறைக்குத் தலைமுறை சிந்தனை மாறும். அந்த மாத்தத்துக்கு ஏத்த மாதிரி எழுத்து மாறும். அந்த மாத்தத்துக்கு எதுவுமே உட்படும். தமிழ்ல என்னன்னா..எழுத்துப் பழக்கம் உள்ளவங்க அதுக்குள்ள ரொம்ப போறாங்க. இல்லாதவங்க தள்ளித் தள்ளிப் போறாங்க. மொழி எப்பவுமே பண்டிதர்கள் கையிலேயே இருக்கும் போல...இல்ல மொழியாளுமை உள்ளவங்கள நம்ம பண்டிதர்னு சொல்லீர்ரோமா? தெரியலையே.

    பதிலளிநீக்கு
  4. தொலைக் காட்சி நிகழ்ச்சி நடத்தும் சிலர், மற்றும் எவ் எம் வானொலி தவிர்த்துப் பார்க்கும் போது , இன்றைய இளைஞர்கள்..தூய தமிழில் ஆர்வலராகவிருக்கிறார்கள் எனும் தங்கள் கணிப்பின் உண்மையை நானும் உணர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க ராகவன்,

    தமிழ்ல என்னன்னா..எழுத்துப் பழக்கம் உள்ளவங்க அதுக்குள்ள ரொம்ப போறாங்க. இல்லாதவங்க தள்ளித் தள்ளிப் போறாங்க. //

    உண்மைதான். ஆனா பேச, பேச; எழுத, எழுதத்தான் சரளமான பேச்சும் நடையும் வருகிறது இல்லையா?

    மொழி எப்பவுமே பண்டிதர்கள் கையிலேயே இருக்கும் போல...இல்ல மொழியாளுமை உள்ளவங்கள நம்ம பண்டிதர்னு சொல்லீர்ரோமா? தெரியலையே. //

    பண்டிதர்னு சொல்லமுடியலைன்னாலும் தேர்ந்தவர்கள் என்று நிச்சயம் சொல்ல முடியும்னு நினைக்கிறேன்.

    இன்றைய இளைஞர்கள் தொழிலுக்கு வேண்டி உலகம் முழுவதும் சென்றாலும் தாய்மொழியில் எழுதுவதை தங்களுடைய பொழுதுபோக்காக வைத்துக்கொண்டிருப்பது நிச்சயம் பெருமைப்பட வேண்டிய விஷயம். அவர்களை ஒரு சிறிய குழுமமாக ஒன்றிணைப்பதும் தமிழ்தானே.

    பதிலளிநீக்கு
  6. வாங்க யோகன்,

    தூய தமிழில் ஆர்வலராகவிருக்கிறார்கள் எனும் தங்கள் கணிப்பின் உண்மையை நானும் உணர்கிறேன். //

    அதை காணும்போது உள்ளத்தில் எழும் மகிழ்ச்சிக்கு அளவில்லை.

    பதிலளிநீக்கு
  7. Hello TBR

    I havent seen any new postings for a week. Hope you are doing fine.

    Let me know if you have opened a new blog by any chance, so that I dont miss your writings.

    Keep in touch.

    Murali

    பதிலளிநீக்கு
  8. ஜோசப் ஐயா,

    சிறப்பான தகவல்கள், உங்கள் பின்னோக்கிய நினைவு பயணமும் ( தி.பா வை சொல்லவில்லை) இங்கே சுறுக்கமாக தந்துள்ளீர்கள்.

    பன்முகத்தன்மை உங்கள் எழுத்துக்களில் மிளிர்கிறது.

    பதிலளிநீக்கு
  9. என் கருத்து

    பொதுவாக (பொதுவாகத்தான், அனைத்தும் அல்ல) வானொலி, தொலைக்காட்சிகளில் பேசும் இளைஞர்கள், இளைஞிகள் சென்னையை சேர்ந்தவர்கள். அல்லது சென்னையில் வளர்ந்தவர்கள். எனவே அவர்களால் நல்ல தமிழில் பேச முடிவதில்லை (இது என் கருத்து தான். யாரும் சண்டைக்கு வர வேண்டாம்). ஏனென்றால் இவர்கள் ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழில் பேச / எழுத முயல்கிறார்கள்

    ஆனால் எழுத்துலகில் (கவிதை, கதை, திரைப்படம்) வளர்ந்து வரும் இளைஞர்கள், இளைஞிகள் பிற ஊர்களில் வளர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தமிழிலேயே சிந்திக்கிறார்கள். தமிழில் பேசுகிறார்கள் / எழுதுகிறார்கள்.
    --
    எழுத்து தமிழ் பேச்சு தமிழை விட ஆரோக்கியமாக இருப்பதற்கு இதுய்ம் ஒரு காரனம் என்பது என் கருத்து
    --
    மாற்று கருத்து இருந்தாலும் எனக்கு உடன்பாடே

    பதிலளிநீக்கு