24 ஜூலை 2007

வாழ்க்கை - 2

நேற்றைய பதிவின் துவக்கத்தில் ராகவேந்தரின் தூக்கமின்மையைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

அது கற்பகத்தின் புகாரில் துவங்கி திசைமாறி சென்றுவிட்டது.

இந்த தூக்கமின்மை (insomnia) சாதாரணமாக நாற்பது வயதைக் கடந்துவிட்டாலே வந்து தொற்றிக்கொள்ளக் கூடிய - இதை நோய் என்று சொல்ல முடியாவிட்டாலும் பல நோய்களுக்கு இட்டுச் செல்லக் கூடிய வழி என்று நிச்சயம் கூறலாம்.

இது ராகவேந்தரைப் போன்றவர்களுக்கு அதாவது உடல் உழைப்பு பெரிதாக ஏதும் இல்லாதவர்களுக்கு, சர்வசாதாரணமாக வருவதுண்டு.

ராகவேந்தர் தன்னுடைய வேலையை ராஜிநாமா செய்துவிட்டு பல பெரிய நிறுவனங்களுக்கு எச்.ஆர். கன்சல்டண்டாக இருந்து வருகிறார் - கடந்த ஐந்து வருடங்களாக. அவருக்கு வயது 56. பெரும் நிறுவனங்களுக்கு தேவையான ஊழியர்களை - உயர் அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை - எப்படி தெரிவு செய்வது, அவர்களுடைய உற்பத்தித் திறனை பெருக்குவது, அவர்களை கையாளும் விதம் என்பது போன்ற உத்திகளை அளிப்பது, தேவைப்பட்டால் அவர்களுக்கென்று பயிற்சி அளிப்பது... இத்யாதி, இத்யாதிகள்.

அவ்வப்போது - அதாவது மாதம் ஐந்தாறு முறை - பயணம் செய்வது என்பதை தவிர அவருடைய அலுவலில் உடல் உழைப்பிற்கு வாய்ப்பில்லை. அத்துடன் பெரும்பாலும் மூளையை அதாவது தங்களுடைய அறிவுத் திறனை பயன்படுத்தி உழைக்கும் பலராலும் (whitel collar job) அலுவலக நேரம் முடிந்தபிறகும் தங்களுடைய சிந்தனைகளை முடித்துக்கொள்ள முடிவதில்லை.

ராகவேந்தர் தன்னுடைய வாடிக்கையாளர்களுடன் உரையாடும்போது 'you should know when to switch on and switch off your thoughts' என்பார் சர்வசாதாரணமாக. ஆனால் அவராலேயே அப்படி செய்ய முடிவதில்லை.

இத்தகைய active mind உள்ளவர்களால் இரவிலும் தங்களுடைய சிந்தனைகளை நிலைப்படுத்த முடிவதில்லை. இரவு படுக்கச் செல்லும்போது அன்றைய தினம் அலுவலகத்தில் நடந்த விஷயங்களிலோ அல்லது நாளை நடக்கவிருக்கும் விஷயங்களையோ நினைத்து மனம் உழன்றுக்கொண்டே இருக்கும். இப்படி செய்திருக்கலாமோ, அப்படி செய்திருக்கலாமோ என்ற தன் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நிகழ்வுகளைக் குறித்த ஆற்றாமையிலும் அல்லது இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்ற நாளைய தினத்துக்கான திட்டங்களிலும் இரவு நெடுநேரம் வரையிலும் விழித்திருப்பார்கள். அதே சிந்தனையுடன் உறங்கச் செல்லும் இவர்களுக்கு எளிதில் உறக்கம் வருவதில்லை.

ஐந்து வருடங்களாக பலமுறை முயன்றும் ராகவேந்தரால் தீர்க்க முடியாத பிரச்சினைகளில் இதுவும் ஒன்று.

இந்த தொல்லையிலிருந்து விடுபட ராகவேந்தர் காணாத மருத்துவர்கள் இல்லை. ஒவ்வொருத்தரும் அளித்த ஓவ்வொரு விதமான யோசனைகளில் அவரும் மேலும் குழம்பிப்போனதுதான் விளைவு.

அவருக்கு அளிக்கப்பட்ட அறிவுரைகளை பட்டியலிடுகிறார்.

1. வடக்கு பக்கம் தலைய வச்சி படுத்துப் பாக்கலாம் - ஆனா பெரிசா ஏதும் பலன் தெரியவில்லை.
2. தலையணை இல்லாமல் படுக்கணும். - கழுத்து வலி வந்ததுதான் மிச்சம்
3. படுக்க செல்வதற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன் மிதமான சுடுநீரில் குளிக்கணும் - ஆரம்பத்தில் சில நாட்கள் பலனளித்தது. அதற்குப் பிறகு? ஊஹும்.
4. படுக்க போறதுக்கு முன்னால சூடா ஒரு கப் பால் குடிக்கலாம் - பலனில்லை.
5. நல்ல ஸ்திரமான கட்டிலில் படுக்க வேண்டும், அதாவது மெத்தை இல்லாமல் - முதுகு வலி வந்ததுதான் மிச்சம்.
6. படுக்க போறதுக்கு முன்னால ஏதாச்சும் புத்தகம் வாசிக்கலாம் - படித்ததையே நினைத்துக்கொண்டு தூக்கத்தை களைந்ததுதான் மிச்சம்.
7. மிதமான சுடுநீரில் பாதங்களை வைத்து மசாஜ் செய்யலாம் - ஆரம்பத்தில் பலன் இருந்தது... ஆனால் இது முழுமையான தீர்வாக இல்லை.

இதையெல்லாவற்றிற்குப் பிறகும் படுத்ததும் உறங்கிப் போவது பிரச்சினையாகத்தான் இருந்தது.

யோகா முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோன்றவே நண்பர்களிடம் விசாரித்து ஒரு யோகா பயிற்சியாளரை சென்று சந்தித்தார்:

அவரோ சார் நீங்க யோகா செஞ்சி பழகிட்டீங்கன்னா தூங்கறதையே குறைச்சிக்க முடியும் என்றார்!

அதாவது நாம் ஒரு நிமிடம் யோகா செய்தால் ஒரு நிமிடம் குறைவாக உறங்கினால் போதுமாம். மேலும் யோகா படுத்தவுடனே உறங்கிப்போவதற்கும் துணை செய்யுமாம்! அத்துடன் மன அழுத்தம், களைப்பு இவை எல்லாவற்றையுமே குறைத்து நாளடைவில் இல்லாமலும் செய்துவிடும் என்றபோது அதை முயற்சித்து பார்த்தால் என்ன என்று நினைத்தார்.

பயிற்சியாளர் சொல்லிக்கொடுத்த ஒரு சில எளிய யோகாசன முறைகளை செய்து பார்த்தார். நல்ல பலனை அளிக்கவே அதை தொடர்ந்து செய்வதென முடிவெடுத்தார்.

அதில் சில:

1. படுக்கையில் நேராக நீட்டி, இரண்டு கால்களையும் அருகருகில் ஒன்று சேர்த்து (ஒருகால் மீது ஒரு கால் அல்ல) மல்லாக்க, கூரையைப் பார்த்து படுக்க வேண்டும். தலையணை வேண்டாம் என்று இல்லை. ஆனால் மெலிதானதாக இருக்க வேண்டும்.
2. கைகள் இரண்டையும் உடலை ஒட்டி (இருப்பக்கமும்) வைத்துக்கொள்ள வேண்டும் (உள்ளங்கை (palm) மேலே பார்த்தபடி).
3. அவசரப்படாமல் மூச்சை உள்ளே இழுத்து (அதாவது கைக்குழந்தைகளைப் போன்று மூச்சு உள்வாங்கும்போது வயிற்றுப்பகுதி உப்பவேண்டும். வெளிவிடும்போது வயிற்றுப்பகுதி உள்வாங்க வேண்டும்) விடவேண்டும். இத்தனை முறை என்ற கணக்கு ஏதும் இல்லை. துவக்கத்தில் ஐந்து முறை உள்ளே-வெளியே என்று ஆரம்பிக்கலாம். இதன் முடிவிலும் உறக்கம் வரவில்லையென்றால் நீங்கள் சற்று முற்றிய கேஸ்தான் என்றார் யோகா பயிற்சியாளர்.

ஏற்கனவே யோகாவில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வேறு சில வழிகளும் உண்டு.

அவற்றில் ஒன்று படுத்ததும் உள்ளங்காலில் இருந்து உச்சி வரை ஒவ்வொரு அங்கத்தையும் உணர்வது (feel). பிறகு அந்த அங்கத்தை ரிலாக்ஸ் செய்வது. இதற்கு மிகவும் பொறுமை தேவை. பயிற்சியும் தேவை. அது நம்மில் எத்தனை பேருக்கு வரும் என்பது தெரியவில்லை.

மனதை ஒருநிலைப் படுத்தும் தியானத்தில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே இது எளிதில் முடியும். ஏனெனில் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் நேரத்திலும் மனம் அலைபாய்ந்துக்கொண்டிருந்தால் நேரம்தான் வீணாகும். வேண்டுமென்றால் நமக்குப் பிடித்த இசையை மெலிதாக வைத்துக் கேட்பதும் பலன் தரும்.

ஆரம்பத்தில் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடும்போது அலைபாயும் மனதை அதன் போக்கிலேயே விட்டுவிடுங்கள். இழுத்து பிடித்து நிறுத்துவதில் பயனில்லை. தொடர்ந்து செய்யுங்கள்.. நாளடைவில் பலனளிக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக அலுவலகத்திற்கு உள் அலுவலகத்திற்கு வெளியில் என்ற இருவகை வாழ்க்கைகளை வாழ பழகிக்கொள்ள வேண்டும். முக்கியமாக உடலுழைப்பு அதிகம் இல்லாத அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள்.

தொடரும்..

8 கருத்துகள்:

 1. ///எளிய யோகாசன முறைகளை...//

  நீங்கள் குறிப்பிட்ட 3ம் genuin தானே?
  பயப்படாமல் முயன்று பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
 2. வாங்க சிஜி!

  நீங்கள் குறிப்பிட்ட 3ம் genuin தானே?
  பயப்படாமல் முயன்று பார்க்கலாமா? /

  நிச்சயமாக. நானே செய்துவருவதுதான் இந்த முறைகள்.

  பதிலளிநீக்கு
 3. எனக்கெல்லாம் தூக்கம் வராவிட்டாலும் தலைவலிக்கு ஒன்றும் குறைவில்லை.அதனால் தலைவலித்தைலம் உபயோகப்படுத்தி எப்படியோ தூங்க முயற்ச்சிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. வாங்க சிவா,

  எனக்கெல்லாம் தூக்கம் வராவிட்டாலும் தலைவலிக்கு ஒன்றும் குறைவில்லை.அதனால் தலைவலித்தைலம் உபயோகப்படுத்தி எப்படியோ தூங்க முயற்ச்சிக்கிறேன்//

  இது நல்லதில்லைங்க... யோகா ட்ரை பண்ணி பாருங்க...

  பதிலளிநீக்கு
 5. தூக்கம் வராமை...இது எனக்கு வரும்...எப்பவாச்சுந்தான். அப்படித் தூக்கம் வரலைன்னா...அன்னைக்கு நடுநிசில ஏதோ எழுதப் போறேன்னு பொருள். ஆமா...தூக்கம் வராத இரவுகள்ள ஓரளவுக்கு எனக்கே திருப்தியாகுற எழுத்துகள எழுதீருக்கேன். மத்தபடி...நல்ல சினிமா, நல்ல புத்தகம், நல்ல கூட்டணி கெடைச்சா....காப்பியக் குடிச்சு தூக்கத்தத் தூங்க வெச்சிருவேன். ஆனா அது அடுத்த நாள் என்னைய நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா தூங்க வெச்சிரும். ஆனா இது அடிக்கடி நடக்க்குறதில்லைங்குறதால No Problem.

  பதிலளிநீக்கு
 6. வாங்க ராகவன்,

  சாதாரணமா ஒங்க வயசுல தூக்கமில்லாத பிரச்சினை வரக்கூடாது.

  நாற்பது வயசுக்கப்புறம் வீட்டுலயும் வெளியிலயும் மன அழுத்தம் தரக்கூடிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கறப்பத்தான் இந்த ப்ராப்ளம் வரும்.

  சோ... நீங்க கவலைப்பட தேவையில்லை ;-)

  பதிலளிநீக்கு
 7. what a coincidence, i am reading this since i couldn't able to sleep..
  btw the latest book is good though highly theoratical.j
  --Jagan

  பதிலளிநீக்கு
 8. வாங்க குட்டி,

  btw the latest book is good though highly theoratical.j//

  நீங்க எந்த புத்தகத்தை சொல்றீங்கன்னு புரியலை.

  பதிலளிநீக்கு