26 ஜூலை 2007

வாழ்க்கை 3

உறங்கச் செல்வது எத்தனை முக்கியமோ அதுபோலவேதான் காலையில் எழுவதும்.

'நாம எந்த மூடுல எழுந்திருக்கறமோ அந்த மூடோடவேதான் நாள் முழுக்க இருக்கப் போறோம்கறத ஞாபகத்துல வச்சிக்கறது நல்லது.' என்பார் ராகவேந்தர் தன்னுடைய எச்.ஆர் பயிற்சி வகுப்புகளில்.

'அதெப்படி சார் நம்ம மூடு எப்பவுமே ஒரே போலயா இருக்கு?' இந்த கேள்வி ஏறக்குறைய அவருடைய எல்லா வகுப்புகளிலும் எழக்கூடியதுதான்.

'முடியும். சொல்றேன்.' என்று துவங்கி பொறுமையுடன் விளக்குவார் ராகவேந்தர்.

'நாம ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி படுக்கையிலருந்து எழுந்திருப்போம். சிலர் அலாரம் அடிச்சதும் பதறியடிச்சி எழுந்து அலாரத்தை அணைச்சிட்டு மறுபடியும் ஒரு குட்டி தூக்கம் போடுவாங்க. சிலர் அலாரம் அடிக்காமயே சட்டுன்னு சொல்லி வச்சா மாதிரி எழுந்திரிப்பாங்க.'

'அலாரம் வைக்காமயா?'

'ஆமாம். நம்ம பாடிக்குள்ளவே ஒரு பயலாஜிக்கல் க்ளாக் இருக்கு. அத நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வந்துட்டா இந்த அலாரம் எல்லாம் தேவையே இருக்காது.'

'பயலாஜிக்கல் க்ளாக்கா? அப்படீன்னா?'

'உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன்... நம்மள்ல நிறைய பேர் ராத்திரியில பாத்ரூம் போறதுக்கு ஒரு தடவையாவது எழுந்திரிப்போம்... கரெக்ட்.'

'ஆமா சார். ஆனா தூக்கம் கலைஞ்சிருமேன்னு கண்ணெ மூடிக்கிட்டே போய்ட்டு வந்து படுத்துக்குவேன்.'

'நீங்க மட்டுமில்ல நம்மள்ல நிறைய பேர் இப்படித்தான். ஆனா இன்னைக்கி ராத்திரி அப்படி எழுந்திருக்கறப்போ ஒங்க ரிஸ்ட் வாட்ச பாத்துட்டு பாத்ரூம் போங்க. நீங்க பாக்கற டைம் ஒங்க பயலாஜிக் க்ளாக்ல பதிவாயிரும். நாளைலருந்து அட்லீஸ்ட் ஒரு வாரத்துக்கு கரெக்டா அதே டைம்ல முழிப்பு வந்துரும்...'

'அட! அப்படியா?'

'இன்னைக்கி ராத்திரி டெஸ்ட் பண்ணி பாருங்க... நாளைக்கு வந்து சொல்லுங்க..'

உண்மைதான்... நாம் ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த காரியத்தை இந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று மீண்டும் நமக்குள்ளேயே ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் சொல்லிப் பார்த்துக்கொண்டால் போதும், நமக்குள் இருக்கும் பயலாஜிக்கல் கடிகாரம் அதை பதிவு செய்துக்கொள்ளும். நான் சொல்ல வருவது நம்முடைய பயலாஜிக்கல் தேவைகள் சம்பந்தப்பட்ட தண்ணீர் குடிப்பது, உணவு அருந்துவது, மலம், ஜலம் கழிப்பதுபோன்ற உடல் ரீதியான செய்கைகள்... சிலருக்கு பகல் ஒரு மணியடித்தால் போதும் அவர்களையும் அறியாமல் பசிக்க ஆரம்பித்துவிடும்... அதே போல் இரவு மணி பத்தடித்தால் போதும் உறங்கியே ஆகவேண்டும்.

இதை பரீட்சித்து பார்க்க விரும்பும் முதல் நாள் அல்லது அடுத்த சில நாட்களுக்கு அலாரம் வைத்துக்கொள்ளலாம். தவறில்லை. ஆனால் ஒவ்வொரு நாளும் எழுந்ததும் உங்களுடைய கைக்கடிகாரத்தையோ அல்லது சுவர் கடிகாரத்தையோ ஒரு நிமிடம் பார்த்து மனதில் பதிய வையுங்கள். அதன் பிறகு சில நாட்கள் அலாரம் வைக்காமல் எழ முடிகிறதா என்று பரீட்சித்து பாருங்கள்... அதன் பிறகு அலாரம் வைக்காமலேயே எழ முடியும். உங்களுக்கே அதிசயமாக இருக்கும்.

சரி... காலையில் படுக்கையில் இருந்து எழும்போது என்ன செய்ய வேண்டும்.

அலாரம் அடித்தாலும் அடிக்காவிட்டாலும் நம்முடைய முறையிலிருந்து ஒருபோதும் மாறலாகாது.

கண் விழித்ததும் உடனே எழுந்துவிடாதீர்கள். படுக்கையில் படுத்தவாறே இரவில் உறக்கம் வருவதற்கு நீங்கள் கிடந்த அதே போசில்... அதாவது கால்களை நீட்டி ஒன்று சேர வைத்துக்கொள்ளுங்கள். ஒன்றின் மீது ஒன்றை வைத்தல் ஆகாது.

கைகள் இரண்டையும் தலைக்கு மீது நீட்டுங்கள். அதாவது படுத்தவாறே தலைக்கு மேலே அதே பாதையில் நீட்ட வேண்டும். கூரையை (ceiling) நோக்கி அல்ல.

ஒரு கையால் அடுத்த கையை பிடித்துக்கொள்ளூங்கள். Clasp செய்துக்கொண்டாலும் சரி. பிறகு உடம்பு முழுவதையும் சோம்பல் முறிப்பதுபோல முறுக்குங்கள். கூடுதல் டென்ஷன் கொடுக்க வேண்டாம். நேச்சுரலாக செய்ய வேண்டும். கைகளை மேலே உயர்த்தும் அதே நேரத்தில் மூச்சை நன்றாக உள்ளிழுக்க வேண்டும், முடிந்தவரை..

பிறகு உயர்த்திப் பிடித்துள்ள கைகள் இரண்டையும் சட்டென்று தளர்த்தியவாறு 'ஹா' என்ற ஒசையுடன் வாய் வழியாக மூச்சை விடவேண்டும். அதாவது ஒரு நொடிப் பொழுது நேரத்தில் சடக்கென்று கைகள் இரண்டையும் தலைக்கு மேலிருந்து இறக்கி உடம்புக்கு இருபக்கங்களிலும் கொண்டு செல்ல வேண்டும். இதுபோல் குறைந்த பட்சம் மூன்று முறை...

இதன் மூலம் நம் உடலிலும் உள்ளத்திலும் உள்ள அசதி, டென்ஷன் போய்விடும் என்கின்றனர் யோகா பயிற்சியாளர்கள்.

பிறகு இடதுபுறம் ஒருக்கழித்து படுத்து வலது கையை ஊன்றி மெதுவாக எழுந்திருக்க வேண்டும். பிறகு கைகள் இரண்டையும் மூடிய கண்களின் மீது வைத்து சுழற்றி தேய்க்க வேண்டும்.

பிறகு யார் முகத்தில் இன்று விழித்தேனோ தெரியலையே என்று புலம்ப வாய்ப்பளிக்காமல் உங்களுடைய உள்ளங்கைகளையே பார்த்துக் கொள்ளலாம்.

இப்படி தினமும் காலையில் எழுந்ததும் செய்வது ராகவேந்தரின் பழக்கம்...

இன்று முதல் அது நம்முடைய பழக்கமாகவும் இருக்கட்டுமே...

தொடரும்...

5 கருத்துகள்:

 1. வழக்கமா எழு அல்லது ஏழேகாலுக்கு அலாரம் வெப்பேன். இன்னைக்கு அதே நேரத்துக்கு எந்திருச்சேன். ஆனா அலாரம் அடிக்கல. நாந்தான் சீக்கிரமா எந்திரிச்சிட்டேனோன்னு திரும்பவும் படுத்துத் தூங்கீட்டேன். அப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சி (நடுவுல அடிக்கடி முழிப்பு வந்துச்சு) மொபைல எடுத்து மணி பாத்தா எட்டு. அலாரம் செட் ஆகவே இல்லை. :)

  பதிலளிநீக்கு
 2. வாங்க ராகவன்,

  மொபைல எடுத்து மணி பாத்தா எட்டு. அலாரம் செட் ஆகவே இல்லை. :)//

  எனக்கும் இப்படி நடந்துருக்கு. முக்கியமான மீட்டிங்குக்கு போற நாளாருக்கும். அன்னைக்கின்னு பார்த்து இப்படி ஆயிரும்.

  அதனாலதான் அலாரம் வைக்காமலேயே எழுந்திருக்கற டெக்னிக்க பத்தி எழுதினேன்.

  முயற்சி பண்ணி பாருங்க.

  பதிலளிநீக்கு
 3. வாழ்க்கைக்குத் தேவையான
  வழிகாட்டுதல்கள்..........
  இடுவரையில் வித்தியாசமான
  'ட்ரீட்மெண்ட்'

  பதிலளிநீக்கு
 4. வாங்க சிஜி,

  வாழ்க்கைக்குத் தேவையான
  வழிகாட்டுதல்கள்..........
  இடுவரையில் வித்தியாசமான
  'ட்ரீட்மெண்ட்' //

  மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 5. நீங்க சொன்னது ரொம்ப சரி. பயனுள்ள தகவல்.

  பதிலளிநீக்கு