09 ஜனவரி 2006

எனக்குப் பிடித்த மாமனிதர்கள் - 1

நான் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்களுக்கு அறிவியல் ஆசிரியராக கோவையைச் சேர்ந்த ஒருவர் புதிதாக எங்கள் பள்ளியில் சேர்ந்தார்.

அவர் பாடங்களுக்கிடையில் சுவாரசியமான அறிவியல் தகவல்களை சொல்வது வழக்கம். ஆகவே நாங்கள் எல்லோரும் அவருடைய வகுப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்போம்.

அறிவியல் உலகில் அவருக்கு மிகவும் பிடித்த மனிதர் கோவை இவ்வுலகுக்கு அளித்த, விந்தை மனிதர், படிக்காத மேதை, ஒப்பற்ற அறிவியல் நிபுணர், காலம் சென்ற ஜி.டி. நாயுடு அவர்கள்.

என்னுடைய ஆசிரியர், இவரைப் பற்றியும் அறிவியல் துறையில் இவர் சாதித்த இமாலய சாதனைகளைப் பற்றியும் எடுத்துரைக்காத நாளே இருந்ததில்லை என கூறலாம்.

என்றைக்காவது ஒரு நாள் அவர் மறந்துவிட்டாலும், ‘சார் ஜி.டி. நாயுடுவைப் பத்தி ஒன்னும் சொல்லலையே சார்’ என்போம் கோரசாக.

மாணவ பருவத்திலிருந்த எங்களுக்கு ஜி.டி. நாயுடுவின் கண்டுபிடிப்புகளை எங்களுடைய ஆசிரியர் கூறும்போது ஒருவேளை சார் ரீல் விடுகிறாரோ என்றும் தோன்றும்.

நட்சத்திர வாரத்தில் நான் கடந்த சில மாதங்களாக எழுதி வரும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ தொடருடன் கூடுதல் பதிப்பாக எனக்குப் பிடித்த தலைவர்கள், அறிவியல் நிபுணர்கள் என எழுதலாமே என்று நினைத்து சென்னையிலுள்ள பிரபல புத்தக கடைகளில் ஏறி இறங்கினேன்.

‘வாழ்க்கை வரலாறு’ என்ற பிரிவில் நான் கண்ட புத்தகங்களுள் ஒன்று திரு.மெர்வின் எழுதிய ‘உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு’ என்ற புத்தகம்.

சட்டென்று எனக்கு பழைய நினைவுகள் திரும்பி வர இவரைப் பற்றி எழுதினாலென்ன என்று தோன்றியதன் விளைவுதான் இந்த நட்சத்திர இடுகை.

ஜி.டி. நாயுடு அவர்கள் தன் இளம் வயதில் படிப்பில் அதிக நாட்டம் இல்லாதவராய் இருந்தார். ஒரு நாள் பள்ளிப் படிப்பிற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கத்துடன் எழுதுவதற்காக தரையில் பரப்பி வைத்திருந்த மணலை அள்ளி சிரியர் கண்ணில் வீசிவிட்டு சிட்டாய் பறந்துவிட்டார். அவருடைய தந்தை எத்தனை முயன்றும் நம் எதிர்கால விஞ்ஞானிக்கு படிப்பில் நாட்டம் இல்லாததால் போய்த்தொலை என்று தன்னுடைய விவசாய தோட்டத்திற்கு காவலனாக இருக்கச் செய்தார்.

எழுதப் படிக்க தெரிந்திருந்த இவர் தனக்குத் தானே ஆசிரியராக இருந்து தனக்கு விருப்பமான நூல்களையெல்லாம் வாங்கி படித்து தன் அறிவுத்திறனை வளர்த்துக்கொண்டார்.

எதைச் செய்தாலும் அதில் தன்னுடைய தனித்தன்மை வெளிப்படவேண்டும் என்று நினைத்தவரை அவருடன் இருந்தவர்கள் விநோதமாய் பார்த்தனர்.

வாலிப வயதில் ஒரு புரட்சிக்காரனாக இருந்தவர் ஒருமுறை தன் கிராமத் தலைவர்களுக்கு எதிராக குடியானத் தொழிலாளர்களைத் திரட்டி அதிகக் கூலி கேட்டு வேலை நிறுத்தம் செய்தார். வேலை நிறுத்த நேரத்தில் கூலியின்றி சிரமப்பட்ட தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த சேமிப்பு முழுவதையும் கொடுத்தார்.

இளம் வயதிலிருந்தே சிந்திக்கும் ஆற்றல், அயரா உழைப்பு, சுய முயற்சி என்பவற்றில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த ஜி.டி.நாயுடு கோவையிலிருந்த ஒரு மோட்டார் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்தார். பணியிலிருந்தபோதே அத்தொழிலின் நுட்பங்களை கருத்தூன்றி படித்து அறிந்துக்கொண்டார்.

சிறிது காலத்திலேயே அவருக்கு பிறரிடம் தொழிலாளியாக இருப்பது வெறுத்துப் போனது. வேலையை விட்டுவிட்டு தன்னுடைய ஊதியத்திலிருந்து சேமித்து வைத்திருந்த பணத்துடன் நண்பர்களிடம் கடன் பெற்று திருப்பூரில் ஒரு பருத்தி தொழிற்சாலையை நிறுவினார்.

அப்போது முதல் உலகப்போர் துவங்கிய காலமாயிருந்ததால் அவருடைய பருத்தி தொழில் சூடு பிடித்தது. அவருடைய அபிரிதமான வர்த்தகத் திறமை குறுகிய காலத்திலேயே லட்சத்து ஐம்பதினாயிரம் சேர்த்து திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார்.

அவரையும் பேராசைப் பேய் பிடித்துக்கொள்ளவே அதிகப் பணம் சம்பாதிக்கும் எண்ணத்துடன் பம்பாய் சென்று பருத்தி வியாபாரத்தை தொடர்ந்தார். பம்பாய் பருத்தித் தரகர்களின் தில்லுமுல்லுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கையிருப்பை முழுவதும் இழந்து வெறுங்கையுடன் ஊர் திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால் மனந்தளராத நாயுடு அப்போது மோட்டார், லாரி, பஸ் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த ஸ்டேன்ஸ் துரையிடம் பணிக்கு சேர்ந்தார். அவர் நாயுடுவின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவரை ஒரு சாதாரண தொழிலாளராக அமர்த்திக்கொள்ள விரும்பவில்லை.

தாமாகவே முன்வந்து ஒரு பேருந்தைக் கடனாக கொடுத்து தவணை முறையில் கடனைத் திருப்பி அடைத்தால் போதும். ஆனால், அதுவரை தினமும் வசூலாகும் தொகையில் ஒரு பகுதியை தனக்கு அளிக்க வேண்டும் என்றார்.

முதலாளியும் தொழிலாளியுமாக இருந்து முதன் முதலில் பொள்ளாச்சிக்கும் பழனிக்கும் பேருந்தை இயக்கியவர் நாயுடுதான்.

தனி முதலாளியாக இருக்க விரும்பாத நாயுடு வேறு சிலரையும் கூட்டு சேர்த்துக்கொண்டு யுனைடெட் மோட்டார் சர்வீஸ் என்ற நிறுவனத்தை துவக்கினார். அந்நாளிலேயே பிரயாணிகளுக்கான வசதிகள், ஓட்டுனர்களுக்கு தங்கும் இடம் போன்று இன்றிருக்கும் வசதிகளை செய்து காட்டியவர் நாயுடு!

முதன் முதலாக அவருடைய நிறுவனத்தைச் சேர்ந்த பேருந்துகள் வந்து, புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டுபிடித்து பேருந்து நிலையங்களில் வைத்து சாதனைப் படைத்தார். பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்த காலத்திலேயே ஒரு இயந்திரத்தை தன்னுடைய சிறிய தொழிற்சாலையிலேயே தயாரித்து பயன்படுத்தினார்!

இத்தகைய கண்டுபிடிப்புகள் நாயுடுவிற்கு கைவந்த கலையாகும். பல்கலைக் கழக படிப்பில்லாதிருந்தும் அறிவியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் பல.

மோட்டார் ரேடியேட்டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்தன் மூலம் ரேடியேட்டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.

எஞ்சின் ஓடிக்கொண்டிருக்கும்போதே அதன் அதிர்வு விகிதம் அதிகமா, குறைவா என்பதைக் கண்டுபிடிக்க Vibrator Tester என்ற இயந்திரத்தையும் கண்டுபிடித்து அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக நம் நாட்டிலும் அறிவியல் துறையில் சாதனைப் புரிய இயலும் என்று உலகுக்கு நிரூபித்தவர் நாயுடு.

அவர் செய்து வந்த மோட்டார் வாகனத் துறைக்கு முற்றிலும் மாறுபட்ட துறைகளிலும் அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

புகைப்படத் துறையில் பிற்காலத்தில் மிகவும் உதவியாயிருந்த டிஸ்டன்ஸ் அட்ஜஸ்டர் என்ற கருவி, பழச்சாறு பிழிந்தெடுக்க ஒரு கருவி, எந்தவித வெட்டுக்காயமுமின்றி முகச்சவரம் செய்துக்கொள்ள பிளேடு என அவருடைய கண்டுபிடிப்புகள் தொடர்ந்தன.

நாயுடு தயாரித்த பிளேடுகளைத் தானே தயாரித்துக்கொள்ள ஒரு அமெரிக்க நிறுவனம் விருப்பம் தெரிவித்து அதன் பேடண்ட் உரிமையை ஒரு லட்சம் டாலருக்கு விற்கும்படி கேட்டும் அவர் சம்மதிக்கவில்லை. தமிழகத்திலேயே அவற்றைத் தயாரிக்கும் எண்ணத்தில் அதற்குத் தேவையான எஃகை நார்வே நாட்டிலிருந்து தருவிக்க பெரும் முயற்சியெடுத்தார். ஆனால் அந்நாட்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் அவருடைய வேண்டுகோளை மறுத்துவிட்டன. அன்று நாட்டை ஆண்டு வந்த ஆங்கிலேயர்களின் தூண்டுதலே இதற்கு காரணமாயிருந்தது. அதனால் நாயுடுவின் அரும்பெரும் கண்டுபிடிப்புகள் பேடண்ட் செய்ய முடியாமலே போய்விட்டன.

ஜெர்மன் நகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் அவருடைய கண்டுபிடிப்புகளில் ஒன்றான சவரக் கத்தி, பிளேடு ஆகியவற்றிற்கு முறையே முதல் பரிசும், மூன்றாவது பரிசும் கிடைத்தன. பல நிறுவனங்கள் இவருடைய கண்டுபிடிப்புகளுக்கு உரிமையைக் கேட்டும் வழங்க மறுத்து அவற்றை நம் நாட்டிலேயே தயாரிக்க இந்திய அரசிடம் நிதியைக் கோரினார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய கோரிக்கைக்கு செவிமடுக்காததால் அதுவும் செயல்படுத்தப்படாமல் போனது. இதனால் மனம் உடைந்துப்போன நாயுடு ஒரு அமெரிக்க நிறுவனம் அவருடைய கண்டுபிடிப்பிற்கு பத்துலட்சம் கொடுக்க முன்வந்தும் அதன் உரிமையை இலவசமாகவே வழங்கிவிட்டார்.

அதற்கு அவர் கூரிய காரணம்: ‘ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து பத்து லட்சம் ரூபாயை வாங்கி இந்திய அரசுக்கு ஒன்பது லட்சம் வரி செலுத்துவதைவிட இலவசமாக கொடுப்பதே மேல்.’

இவ்வாதம் இக்காலத்திற்கு ஒவ்வாததாக தோன்றினாலும் அன்று நாட்டை ஆண்டுவந்தவர் ஆங்கிலேயர் என்பதைக் கருத்தில் கொண்டால் அவருடைய முடிவில் தவறேதுமில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

மேலும், தன்னால் கண்டுபிடிக்கப்பட்டவைகள் எல்லாம் தம் தேசத்திற்கு முழுவதும் சொந்தமாக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் அவற்றை தன் பெயரில் பதிவு செய்துக்கொள்ளாமல் வைத்திருக்கிறேன் என்றும் இந்தியர்கள் யாராயிருந்தாலும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்றும் பகிரங்க அறிக்கை விட்டார்.

நாயுடுவின் கண்டுபிடிப்புகள் பலவும் அதிக அளவில் நாட்டுக்கு பயன்படாமல் போனதற்கு வேறொரு காரணம் அன்றைய அரசு அவர்மேல் திணித்த அதிகபட்ச வரி. அன்றைய சூழலில் நாட்டிலேயே அதிக வரி செலுத்தியவர்களில் ஒருவராயிருந்தும் அவர்மேல் வரி ஏய்ப்பு செய்பவர் என்ற அவப்பெயரும் சுமத்தப்பட்டது.

எனவே, மனம் உடைந்துப் போன நாயுடு அரசாங்கத்துக்கு கொடுப்பதைக் காட்டிலும் வெறுமனே இருந்துவிட்டு போய்விடுவேன். இனி ஒரு பைசா கூட வருமான வரியென்ற பெயரால் செலுத்த மாட்டேன், என்று சபதமெடுத்தார்.

அதே சமயம் நன்கொடை அளிப்பதில் இணையற்றவராக தோன்றினார். 1938ம் வருடம் பதினெட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன்னுடைய போக்குவரத்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளை கோவை வட்டார கழகத்தாரிடம் இலவசமாக ஒப்படைத்தார்.

தாய்நாட்டின் இளைஞர்கள் தொழில் நிபுணர்களாக உருவெடுத்து நாட்டுக்கு பயன் பெற வேண்டுமென்று விரும்பிய நாயுடு அவர்கள் படிப்பதற்கு தன்னால் இயன்ற அளவுக்கு பொருளுதவி செய்தார். தொழிற்கல்வி மட்டுமே இன்றைய இந்தியாவிற்குத் தேவை என்பதை தன் உதவியை நாடி வந்த இளைஞர்களை அறிவுறுத்தினார்.

அத்துடன் நின்றுவிடாமல் தன்னுடைய சுயமுயற்சியினால் பாலி டெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளை துவக்கினார். இவர்தான் தமிழகத்தின் தொழிற்கல்வி நிறுவனங்களின் தந்தை என்றால் மிகையாகாது.

இவருடைய மகன் ஜி.டி. கோபாலையும் கலைக்கல்லூரிக்கு அனுப்பாமல் தொழிற் கல்வி படிக்கச் செய்தார். அவர் இப்போது தன் தந்தை உருவாக்கிய தொழில் ஸ்தாபனங்களைக் கவனித்துக் கொள்கிறார். அமைதியும் அடக்கமும் தன் தந்தையிடமிருந்து படித்தவர் இவர்.

நாயுடுவின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின்போது பல ஸ்தாபனங்களும் நிறுவனங்களும் பயிற்சி அளிக்கும் சாதனங்களையும், கருவிகளையும் இவருடைய கல்லூரிக்கு இலவசமாக அளித்தன.

இந்தியாவிலேயே முதன் முதலாக மின்சார மோட்டார் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கோவையிலேயே துவக்கப்பட்டது என்ற பெருமை அவரையே சாரும்.

அவருடைய கண்டுபிடிப்புகள் இயந்திர, மோட்டார் தொழிலில் மட்டுமல்லாமல் விவசாயத்திலும் பல வியக்கத்தக்க சாதனைகளைப் புரிந்தார்.

விதைகளில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு பழம் ஆகியவை இவருடைய கண்டுபிடிப்புகளில் சில. அடுத்து, சோளச்செடிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தி நட்ட சிறிது காலத்திலேயே 26 கிளைகளுடன் 18 1/2 அடி உயரத்திற்கு வளரச் செய்தார்! சாதாரண சோளச்செடியில் மூன்று அல்லது நான்கு கதிர்கள்தான் இருந்தன. ஆனால் நாயுடுவின் அதிசய செடிகளில் 39 கதிர்கள்வரை இருந்தன!

அதன் பிறகு பருத்திச் செடி, துவரைச் செடி என அவருடைய ஆராய்ச்சி தொடர்ந்தது.

அவர் கண்டுபிடித்த தாவர ஆராய்ச்சி முடிவுகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள அவருடைய அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்ற பெயர் சூட்டி கவுரவித்தனர். ஆயினும் இந்திய அரசாங்கம் அவரை கண்டுகொள்ளவேயில்லை.

நாயுடுவின் அறிவுத்திறன், அவருடைய தாராள மனப்பான்மை, எளியவர்க்கு உதவும் நற்குணம் ஆகியவற்றை பாராட்டாத தலைவர்களே இல்லையெனலாம்.

‘இவர் தமிழகத்திற்கு ஒரு நிதி. இவரது புகழ் உலகெங்கும் பரவ வேண்டும்’ என்றார் பெரியார்.

‘நாயுடுவின் அறிவை நம் சமுதாயம் முழு அளவில் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவருடைய கண்டுபிடிப்புகள் ஒரு அளப்பரியா மதிப்புடைய கருவூலங்கள்’ என்றார் அண்ணா.

'கோவை வாசிகள் தங்களுடைய கல்வியிலும், முன்னேற்றத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் நாயுடுவை கண்டு பெருமை கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட மனிதருடன் வசிக்க நாம் எவ்வளவு பெருமை கொள்ள வேண்டும்’ என்று மனம் திறந்து பாராட்டினார் சர்.சி.வி.ராமன்.

ஜி.டி. நாயுடு கற்றவருக்கு மேதை. கல்லாதவருக்கு புதிர். ஆற்றல் மிக்க அவர் அறிவியலையே தன் வாழ்க்கை என்று கருதினார்.

உழைப்பையே நம்பி ஊக்கத்தை உதறிவிடாமல் சுய முயற்சி, அயாரா உழைப்பு என்பவற்றை மட்டுமே நம்பி கோவை மக்கள் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே புகழ்ந்து பாராட்டும் வகையில் தன் வாழ்க்கையில் பிரகாசித்தவர் நம் ஜி.டி. நாயுடு.

அவினாசி சாலையில் அமைந்துள்ள கோபால் பாக்கில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர பொருட்காட்சி இன்றும் அவருடைய அறிவுத்திரனை இன்றும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன!

*******

மூலம்: உழைப்பால் உயர்ந்த ஜி.டி.நாயுடு: ஆசிரியர்:மெர்வின்.

9 கருத்துகள்:

  1. கோவையில் நான் படிக்கும் போது திரு. ஜி.டி. நாயுடு அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவரைப் பற்றி இங்கு எழுதியதற்கு மிக்க நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. ஜி.டி. நாயுடு அவர்களைப்பற்றி இதுவரை ரொம்ப மேலோட்டமாத்தான் தெரிஞ்சுக்கிட்டு இருந்தேன்.

    உங்க பதிவுமூலம் மேலதிக விவரங்கள் கிடைச்சது.

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  3. நட்சத்திர வாரத்தின் முதல் பதிவே கலக்கலாய் ஆரம்பிச்சிருக்கீங்க.

    சிவசங்கரி அம்மா கூட ஜி.டி.நாயுடு அய்யா பத்தி "அப்பா" அப்படிங்கற தலைப்பில ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக்காங்க.
    ஜி.டி.நாயுடு அய்யாவுக்கும் தந்தை பெரியாருக்கும் இருந்த நட்பைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருப்பாங்க அதில.

    மார்கழி நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாங்க குமரன்,

    ஜி.டி.நாயுடு அவர்களைப் பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. அதனால்தான் எழுதினேன். நம் எல்லோருக்கும் பயனுள்ளதாயிருக்கும் என்று நம்புகிறேன்.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வாங்க துளசி,

    ஜி.டி. நாயுடு அவர்கள் மட்டும் இந்த காலத்தில் இருந்திருந்தால்..

    கற்பனை செய்துபார்க்க முடியாத அளவுக்கு அவருடைய ஆற்றல் வெளிபட்டிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

    மிக்க நன்றி துளசி.

    பதிலளிநீக்கு
  6. வாங்க சுதர்சன்,

    சிவசங்கரி அம்மா கூட ஜி.டி.நாயுடு அய்யா பத்தி "அப்பா" அப்படிங்கற தலைப்பில ஒரு அருமையான புத்தகம் எழுதியிருக்காங்க.
    ஜி.டி.நாயுடு அய்யாவுக்கும் தந்தை பெரியாருக்கும் இருந்த நட்பைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருப்பாங்க அதில.//

    அப்படீங்களா? தேடிப்பிடிச்சி படிச்சிற வேண்டியதுதான்.

    உங்க தகவலுக்கு நன்றி சுதர்சன்.

    பதிலளிநீக்கு
  7. ஜி.டீ.நாயுடு பற்றிக் கேள்விப் பட்டுள்ளேன். ஆனால் இவ்வளவு விவரம் தெரியாது. தன்மானமும் திறமையும் தாய்நாட்டுப் பற்றும் ஒருங்கே கலந்த மாமணியாக இருந்திருக்கின்றார் அவர். அவருடைய வாழ்க்கையை நாமெல்லாம் பாடமாக எடுத்துக் கொள்ள முடியாது. அதற்கெல்லாம் அவரளவிற்கு அறிவு வேண்டும். ஆனால் முடிந்த வரையில் அவர் சொல்ல வந்ததைப் புரிந்து கொண்டு நாமும் செயலில் காட்ட முயற்சித்தாலே போதும்.

    ஜோசப் சார். நட்சத்திர வாரத்தில் நமது நாட்டின் உண்மையான நட்சத்திரங்களுக்கு வாரம் கொண்டாடுகின்றீர்கள். மிகவும் நல்ல செய்கை.

    என்னுடைய வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. வாங்க ராகவன்,

    ஜி.டி.நாயுடு போன்றவர்கள்தான் நம் நாட்டின் உண்மையான நட்சத்திரங்கள். மற்றவர்களெல்லாம் போலி.

    நம் துரதிர்ஷ்டம் அவர் சுதந்திரத்திற்கு முன்னாலிருந்த இந்தியாவில் வாழ்ந்தது.

    பதிலளிநீக்கு
  9. GD Naidu was harassed and over taxed by our "socialisitic" govt of
    free India. When he wanted to manufacture and sell transitor radios cheaply for the masses, the govt slapped a massive luxury tax that killed the industry. Transitors were considered luxury then.

    Then he was so upset that he destroyed all the tranistors himself (Construction for Destruction was the motto written in his factory).

    Highest taxation and other regulations of a 'scoialistic' India had destroyed a great inventors contributions. The British were far better in this matter. (for e.g the highest income tax rate was 10 % in 1910,
    while it became 98 % in 1971).

    athiyaman.blogspot.com

    பதிலளிநீக்கு