11 ஜனவரி 2006

கா..கா..கா! (நகைச்சுவை)

நடிகர்கள்: பார்த்திபன், வடிவேலு, மற்றும் பலர்.

சாலையோரத்திலிருந்த டீக்கடை ஒன்றில் பார்த்திபன் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருக்கிறார்.

தெருமுனையில் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த வடிவேல் தூரத்திலிருந்தே அவரைப் பார்த்துவிடுகிறார். அவர் பார்ப்பதை பார்த்திபனும் பார்த்துவிடுகிறார். உடனே ஒரு விஷமப் புன்னகை அவர் உதடுகளில் தவழ்கிறது. இருப்பினும் பார்த்தும் பார்க்காததுபோல் தன் அருகில் பெஞ்சில் கிடந்த தினத்தந்தி நாளிதழை எடுத்து தன் முகத்தை மூடிக்கொண்டு படிக்கிறார்.

வடிவேலு சைக்கிளிலிருந்து இறங்கி வந்த வழியே செல்ல முயன்றவர் பார்த்திபன் பேப்பரில் ஆழ்ந்திருப்பதைப் பார்க்கிறார். நின்று யோசிக்கிறார்.

வடி: அட கன்றாவியே.. இன்னைக்கி பொறப்பட்ட நேரமே சரியில்லை போலருக்குதேடா.. இவன் எங்க இங்க வந்தான்? கேள்வி கேட்டே கொன்னுருவானே.. இப்ப என்ன பண்ணித் தொலையறது? (பார்த்திபனை ஓரக் கண்ணால் பார்க்கிறார்) நம்மள பார்த்திருப்பானோ.. இருக்காது.. அவன்தான் பேப்பர்ல முங்கிட்டான்லே.. நம்மள பார்த்துருக்க மாட்டான்.. நாம வந்த வழியே போனோம்னு வச்சிக்க.. நோட் பண்ணாலும் பண்ணுவான்.. அதனால.. சைலண்ட்டா வண்டிய உருட்டிட்டே போயி.. அந்த பயல தாண்டுனதும் ஏறிக்குவம்.. அதான் கரெக்ட். அப்படியே பார்த்துட்டாலும் அவன் யாருன்னு தெரியாத மாதிரி நடிச்சிருவோம். நடிக்கறதுக்கு நமக்கு சொல்லியா தரணும்.. நடிப்புல நம்ம யாரு? கிங்குல்ல? (தன் பாணியில் கழுத்தை உலுக்கிக் கொண்டு உறுமுகிறார். பிறகு சைக்கிளை உருட்டிக் கொண்டே பார்த்திபன் இருந்த திசைக்கு நேரெதிர் திசையில் பார்த்துக்கொண்டு ‘நான் பார்த்ததிலே இவன் ஒருத்தனைத்தான் அசிங்கம் என்பேன் ரொம்ப அசிங்கம் என்பேன்.’ என்று பார்த்திபனை மனதில் நினைத்துக் கொண்டு வாய்க்குள் பாடியவாறே செல்கிறார். இதை ஆரம்பமுதலே கவனித்துக்கொண்டிருந்த பார்த்திபன் அவர் கடையைக் கடக்கும்வரை பொறுத்திருந்து பேப்பரை கக்கத்தில் வைத்துக்கொண்டு தன் இரண்டு கைகளையும் தட்டுகிறார். பிறகு பேப்பரை மீண்டும் எடுத்து முகத்தை மூடிக்கொள்கிறார்.)

(கைதட்டல் சப்தம் கேட்டு ஷாக் அடித்தாற்போல் நின்ற வடிவேலு தன்னையுமறியாமல் திரும்பிப் பார்க்கிறார். பார்த்திபன் பேப்பரைப் படித்தவாறே ஓரக்கண்ணால் வடிவேலுவைக் கவனிக்கிறார். வடிவேலு பார்த்திபன் பேப்பரில் மூழ்கியிருப்பதை பார்த்து நிம்மதியடைகிறார்.)

வடி: யார்ராவன்? கைதட்டல் சத்தம் மட்டும் கேக்குது திரும்பிப் பார்த்தா ஒரு பய மவனையும் காணோம்.. காலங்கார்த்தால வம்பு பண்றதுக்குன்னே அலையறானுவப்பா.. நிம்மதியா எளுந்திரிச்சமா.. ஒரு வேல சோலிய பாத்தமான்னு இருக்க முடியுதா.. ரோட்டுல நிம்மதியா நடமாடக் கூட முடியாம.. என்ன பொளப்புறா சாமி... பேசாம துபாய்ல கக்கூஸ்... (வாயைப் பொத்திக்கொண்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார்) வாணாம்.. வாய குடுத்து மாட்டிக்கிறாத.. வாய்க்குள்ள பேசினாக் கூட கண்டுபிடிச்சிருவான்.. எமகாதக பய.. உக்காந்துருக்கான் பார், ஒன்னுமே தெரியாதமாதிரி.. அவன் மூஞ்சும், மொவறையும்.. சரி நமக்கெதுக்கு ஊர் வம்பு.. இப்பிடியே போயி சந்தைல ஆத்தா குடுத்த லிஸ்ட்டு பிரகாரம் ஜாமான வாங்கிக்கிட்டு ஊர் போய் சேர்வோம்.. சைக்கிளை உருட்ட ஆரம்பித்தவர் சட்டென்று நினைவுக்கு வந்தவர்போல்..) சரிஈஈஈஈ.. அதான் கடை போயிருச்சில்ல.. பொறவெதுக்கு உருட்டறது? சும்மா சல்லுன்னு ஏறிக்கிற வேண்டியதுதான.. (சைக்கிளை நிறுத்தி வலது காலை தூக்கி சீட்டின் மேல் வைக்கிறார்.. மீண்டும் கைதட்டல் சப்தம் கேட்கிறது. பதறியடித்துக் கொண்டு காலை இறக்கிக் கொண்டு திரும்பிப் பார்க்கிறார். யாரும் காணாமல் மீண்டும் காலை சீட்டுக்கு உயர்த்துகிறார். அவருக்கு பின்னால் இருந்து குரல் மட்டும் கேட்கிறது. ‘டேய் கேன, உன்னைத்தாண்டா. காது கேக்கல?)

வடி: (திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்க்கிறார். யாரையும் காணோம். பார்த்திபனைப் பார்க்கிறார். அவர் பேப்பரால் முகத்தை மூடிக்கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு நிம்மதியடைகிறார்.) சை.. குரல் மட்டுந்தேன் கேக்குது.. மூஞ்ச காணோமே.. அசரீரிம்பாங்களே அதா இருக்குமோ.. (தலையை ட்டிக்கொண்டு) இருக்கும், இருக்கும்.. நமக்கெதுக்கு வம்பு.. திரும்பிப் பாக்காம.. மிதிச்சிக்கிட்டு.. வாணாம்.. கால தூக்கிப் போடறப்பதான குரல் கேக்குது.. உருட்டிக்கிட்டே போய்ட்டா.. ஆமா.. இப்படியே இன்னும் கொஞ்ச தூரம் உருட்டிக்கிட்டே போயி..

(அவர் போவதைப் பார்த்த பார்த்திபன் பேப்பரை மடித்து தன் அருகில் வைத்துவிட்டு மீண்டும் கைகளை தட்டுகிறார்.)

வடி: என்னடாயிது காலங்கார்த்தால ரோதனை.. (சடாரென் திரும்பி) எவண்டா அவன்.. என்ன நக்.. (பார்த்திபன் தன்னையே பார்ப்பதைப் பார்த்துவிட்டு தனக்குள்) பார்த்திட்டாண்டா.. பார்த்திட்டாண்டா.. இன்னைக்கி போனாப்பலதான்... சரி, சரி.. அவன யாருன்னு தெரியாதமாதிரி நடிக்கத்தான போறோம்.. முட்டாப் பய மவன்.. கண்டுபிடிக்கிறானான்னு பாப்பம்..

(பார்த்திபன் பெஞ்சிலிருந்து எழுந்திருக்காமலேயே வடிவேலுவை நோக்கி ‘இங்க வா’ என்று சைகை செய்கிறார்.

வடி:(தனக்கு பின்னால் திரும்பி பார்க்கிறார். அங்கே யாரையும் காணாமல் பார்த்திபனைப் பார்க்கிறார்) யாரு, என்னையா?

பார்: ஆமாண்டா.. உன்னையேத்தான்.. நீ என்ன டமார செவிடா? ரெண்டுதரம் கைதட்டியும் திரும்பிப் பாக்காம போற?

வடி: (வேண்டா வெறுப்போடு வந்து அவன் முன்னே நிற்கிறார். ஆனால் அவர் முகத்தைப் பார்க்காமல் மேலே பார்த்துக்கொண்டு நிற்கிறார்) யோவ் யாருய்யா நீ? ரோட்ல பேசாம போய்ட்டிருக்கற ஆள இளுத்து வச்சி வம்பு பண்ற?

பார்: டேய் வெண்ணெ.. என்ன பார்த்து பேசுறா.. அங்க எங்கயோ சூன்யத்த பாத்த்துக்கிட்டு யார்யா நீன்னா? அங்கருந்து யாரு.. செத்துப்போன உங்க பாட்டனா பதில் குடுப்பான்..

வடி: (கோபத்துடன் பார்த்திபனை முறைக்கிறார்) யோவ்.. எதுக்குய்யா எங்க தாத்தனையெல்லாம் இளுக்கற? வேணாம்.. மரியாத கெட்டுரும்...சொல்லிட்டன்.. ஆளம் தெரியாம கால விட்டுட்டு.. (சட்டென்று நினைவுக்கு வந்தவராய் வாயை மூடிக்கொள்கிறார்)

பார்: (நெருங்கி வடிவேலு முகத்தை உற்று பார்க்கிறார்) டேய் என்ன நிறுத்திட்டே.. சொல்லு.. ஆழம் தெரியாம என்னத்த விட்டேன்.. சொல்றா?

வடி: ஒன்னுமில்லப்பா.. ஆள விடு.. சந்தைக்கு போணும்.. ஆத்தா வையும்..ஆள விடு..

பார்: டேய், டேய் நிறுத்துறா... நீ என்ன பதினாறு வயதினில கமல்ஹாசனா.. சொன்னதையே சொல்லிக்கிட்டு.. சரி.. என்னை தெரியல? பார்த்தும் பாக்காத மாதிரி போற...?

வடி: (பார்த்திபனை பார்க்கிறார்) தெரியலயே.. நீ யாருன்னே தெரியலையே (அழுகிறார்) எதுக்குய்யா சும்மா போய்ட்டிருந்த என்ன இளுத்து வச்சி வம்பு பண்றே.. விடுய்யா.. சந்தைக்கு போணும்.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. என்ன விட்டுறு..

பார்: (டீ கடை பெஞ்சில் அமர்ந்திருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏங்க உங்க யாருக்காவது என்ன அடையாளம் தெரியுதா?

எல்லோரும் கோரசாக: ஓ தெரியுதே.. புதுசா ஊருக்கு வந்துருக்கற தம்பிதானே.. நல்லாத் தெரியுது..

பார்: (சலிப்புடன்) என்னங்க நீங்க.. நா இந்த ஊருக்கு வந்துதான் ஆறு மாசத்துக்கு மேல ஆயிருச்சில்ல.. இன்னும் புதுசா ஊருக்கு வந்த தம்பிங்கறீங்க? சரி அது போட்டும்.. அப்ப என்ன உங்க எல்லாருக்கும் அடையாளம் தெரியுது.. (டீக்கடைக்காரரை பார்க்கிறார்) ஏங்க டீ.. உங்களுக்கு?

டீக்கடைக்காரர்: (தனக்குள்) களவாணிப்பய.. எம்பேரு தெரிஞ்சிருந்தும் நக்கலா டீங்கறாம் பாரு.. பேசாம தெரியலேன்னு சொல்லிரலாமா? ஆனா இவன் குடுக்க வேண்டிய அம்பது ரூவா காசு அம்பேலாயிருமே.. (பார்த்திபனையும் வடிவேலுவையும் மாறி மாறி பார்க்கிறார்) அட என்ன தம்பி கிண்டல் பண்ணிக்கிட்டு... உங்கள் தெரியாம இருக்குமா? நீங்க வேற நமக்கு அம்பது ரூவா பாக்கி வச்சிருக்கீக, உங்கள தெரியாம போயிருமா?

பார்: யோவ்? என்ன சந்துல சிந்து பாடறியா.. பிச்சாத்து அம்பது ரூபா.. (சட்டென்று திரும்பி வடிவேலுவைப் பார்க்கிறார்) சார் ஒரு அம்பது ரூபா இருந்தா குடுங்க சார்.. இந்த டீக்கடைக் காரன் மூஞ்சில விட்டெறியறேன்.. (வடிவேலு இல்லையென்று மறுக்க அதை பொருட்படுத்தாமல் அவருடைய சட்டைப் பையில் கைவிட்டு கொத்தாய் கிடைத்த பணத்திலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டொன்றை எடுத்து கடைக்காரரை நோக்கி எறிகிறார்) இந்தாய்யா ஒம் பிச்சாத்து அம்பது ரூபா.. சார் யாருன்னு நினைக்கறே? துபாய்ல லச்ச லச்சமா சம்பாதிச்சவரு.. அதையெல்லாம் விட்டுட்டு இந்த ஊர்ல.. நம்மள மாதிரி ஆளுங்களுக்கு சேவை செய்யணும்னு இங்கயே தங்கிட்டார்.. (வடிவேலுவை பார்த்து) என்ன கக்கூ.. சாரி.. உங்க பேரே இதுவரைக்கும் சொல்லலையா.. அதான்.. கொஞ்சம் கன்ஃப்யூசாயிட்டேன்.. இப்ப சொல்லுங்க.. ஏன் பாத்தும் பாக்காத மாதிரி போனீங்க..ங்க என்ன ங்க.. டேய் சொல்லுறா.. எதுக்கு... பார்த்தும்... பாக்காம... போன?

வடி: யோவ் யார்யா நீ? லூசா.. நாந்தான் தெரியாதுங்கறேன்ல.. சொன்னதையே திருப்பி திருப்பி சொல்ற? கைலருந்த காசையும் எடுத்துக்கிட்டு.. யோவ் வேணாம்.. எடுத்த காச திருப்பி குடுத்துறு.. அப்புறம் சந்தைலருந்து ஜாமான் வாங்காம வீட்டுக்கு போனா.. ஆத்தா நிசத்துக்குமே வையும்யா.. காச குடுய்யா.. (அழுகிறார். கடையிலிருந்த எல்லோரும் சிரிக்கின்றனர்)

பார்: டேய்.. (விரல்களை மடக்கிக்கொண்டு முஷ்டியை உயர்த்தி முகத்துக்கு முன்னால் குத்துவதைப் போல் வருகிறார்) டேய் யாரப் பாத்து லூசுங்கற? இப்ப சொல்லு.. நீ அன்னைக்கி பஸ்சுல டிக்கட் வாங்காம.. செக்கிங் இன்ஸ்பெக்டர்கிட்ட லஞ்சம் குடுத்து அடிவாங்குன பார்ட்டி தான?

வடி: (தனக்குள்) படுபாவிப் பய.. நாம முட்டாத்தனமா செஞ்ச காரியத்தையெல்லாம் ஒன்னு விடாம ஞாபகத்துல வச்சிருக்கானே.. இப்ப என்ன பண்றது? சரி.. நாம போட்ட வேஷத்தையே தொடர்ந்து போட வேண்டியதுதான்.. (அசடு வழிகிறார்) யோவ் நெசமாவ நான் அவனில்லைய்யா.. என்ன விட்டுறு..

பார்: (கோபத்துடன்) டேய் என்ன ஜெமினி கனேசன்னு நினைப்பா.. கொட்டா டாக்கீஸ்ல நான் அவனில்லை படத்த பாத்துட்டு.. என்ன.. நக்கலா? நீ நான் அவனில்லைன்னு சொன்னா நான் நீ அவனில்லைன்னு நம்பிரணுமா? சொல்றா நீ அவந்தானே...

வடி: நீ என்னய்யா சொல்ற? உனக்கு மட்டும் எப்படீய்யா இப்படியெல்லாம் மாத்தி மாத்தி பேச வருது.. ஜெமினி கனேசங்கற, கொட்டா டாக்கீசுங்கற.. நீ என்ன சொல்ல வரேன்னே தெரியலையேய்யா.. கொஞ்சம் தெளிவாத்தான் பேசேன்.. (டீக்கடையிலிருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏன்யா பாத்துக்கிட்டே இருக்கீகளே.. யாராச்சும் கேக்கப் படாதா.. இவரு சொல்றது உங்களுக்கு யார்க்காச்சும் புரியுதா? (இல்லை என்று தலையசைத்துவிட்டு பார்த்திபன் முறைத்ததும் ஆமாம் என்று தலையசைத்துவிட்டு ஒவ்வொருவராய் எழுந்து போகின்றனர்)

இதன் அடுத்த இறுதி பகுதி நாளை..

16 கருத்துகள்:

 1. சூப்பரோ சூப்பருங்கோ. :-)

  பதிலளிநீக்கு
 2. அய்யா சும்மா கலக்கியிருக்கீங்க. நாளையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். நம்ம பதிவுல உங்க பேரையும் இழுத்து விட்டுட்டேன். ரொம்ப திட்டாதீங்க.

  பதிலளிநீக்கு
 3. அடடா! விருந்து வெச்சுட்டு தயிர்ச்சோறும் முடிஞ்சப்புறமா குலாப் ஜாமூன் மாதிரி....நடக்கட்டும். நடக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 4. vadivelu dialogues romba nalla vanthirukku. Basic plot konjam weak.

  பதிலளிநீக்கு
 5. எழுத்துல விஷ¥வலா பார்க்க வெச்சிட்டீங்க. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அட்டகாசமா வந்திருக்கு.

  ஜமாய்ங்க.

  பதிலளிநீக்கு
 7. Dear Sri Joseph,

  Really enjoyed this comedy. It is like watching a movie. You have written an excellent script that makes everyone laugh.

  Gopal ( Tulsi's )

  பதிலளிநீக்கு
 8. வாங்க கார்த்திகேயன், நன்றி

  பதிலளிநீக்கு
 9. வாருங்கள் ஈ.கொத்தனார் (!),

  உங்க வாழ்த்துக்கு நன்றி. நான் உங்க பதிவைப் பார்த்தேன். நான் என்ன கணினி வல்லுனர்னு நினைச்சீங்களா. நான் வெறும் காமர்ச் படிச்ச Banking Officer Rankல இருந்தவர்தான். ஆலை இல்லாத ஊர்ல இலுப்பைப் பூ சக்கரைன்னு கேள்விப் பட்டிருக்கீங்களா? அது மாதிரி சீனியர் ராங்குல IT படிச்ச ஆளுங்க இல்லங்கறதுனால IT Headனு ஒரு பேருக்கு வச்சிருக்காங்க. கொஞ்சம் கொஞ்சம் தெரியும். எனக்கு கீழ இருக்கற ஆளுங்க சொல்றது புரிஞ்சிக்க முடியும். அவ்வளவுதான். ஏதோ சமாளிச்சிக்கிட்டிருக்கேன்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க ராகவன்.

  என்ன குலோப் ஜாமுனை ஞாபகப் படுத்தறீங்க. எனக்கு ஸ்வீட்டுன்னால அலர்ஜிங்க.. என்னால இனிப்புகள விண்டோ ஷாப்பிங் மட்டும்தான் பண்ண முடியும்.

  பதிலளிநீக்கு
 11. வாங்க நிலா..

  என்ன பண்ண சொல்றீங்க.. இன்னைக்கி விஷயத்த யார் பாக்கறா. ரெண்டு நிமிஷம் வாய் விட்டு சிரிக்கணும். அவ்வளவுதான். சிரிச்சி முடிச்சக்கப்புறம் இதுல என்ன இருந்ததுன்னுட்டு இப்படி சிரிச்சீங்கன்னு கேட்டா.. அதுக்கு பதில் இல்லை..

  பதிலளிநீக்கு
 12. வாங்க கோபி,

  உங்க சைலண்ட் ஸ்மைலுக்கு நன்றி :-))

  பதிலளிநீக்கு
 13. வாங்க ரா. உஷா,

  உங்க வாழ்த்துக்கு நன்றி, உஷா.

  பதிலளிநீக்கு
 14. வாங்க துளசி,

  உங்க ரசனைக்கு நன்றி.. என்ன சாரும் வந்துருக்கார் போலருக்குது. அவருக்கு தனியா பதில் போடறேன்.

  பதிலளிநீக்கு
 15. Welcome Gopal Sir,

  Thank you so much for your comments. It is a pleasure to make everyone laugh for a while.

  tbrjoseph

  பதிலளிநீக்கு