10 ஜனவரி 2006

எனக்குப் பிடித்த மாமனிதர் - 2

டாக்டர் விஞ்ஞானி iஇந்திய ஜனாதிபதி மேதகு ஆவுல்பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம்.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்தவர்.

பிறந்த ஊர்: இயற்கை எழில் கொஞ்சம் ராமேஸ்வரம்.

இங்கு அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பழைமையான புண்ணியஸ்தலங்களில் ஒன்றான இராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் சுற்றுலாவினரை படகில் ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தார் அவருடைய தாத்தா.

பள்ளிப் பருவம்

ஒரு முறை இராமநாத சுவாமி கோயில் தெப்பத் திருவிழாவின் போது உற்சவ மூர்த்திகளான சுவாமியும், அம்பாளும் ஆழமான தெப்பக்குளத்தில் சரிந்து விழுந்துவிடவே, ஊர்மக்கள் அனைவரும் அதைக்கண்டு வேதனையுற்று என்ன செய்வதென தெரியாமல் தவித்த வேளையில் தமது உயிரையும் பொருட்படுத்தாமல் குளத்தினுள் குதித்து சுவாமியையும் அம்பாளையும் வெளிக்கொண்டு விழா சிறப்புற உதவியவர் நம் அப்துல் கலாம்!

ராமேஸ்வரத்தில் ஆரம்ப பள்ளியில் அவர் பயின்றுக் கொண்டிருந்த சமயத்தில் ராமேஸ்வரம் கோயிலின் தலைமைக் குருக்களான பட்சி இலட்சுமண சாஸ்திரிகளின் மகனான பட்சி ராமநாத சாஸ்திரி அவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர். அவர்கள் இருவரும் வகுப்பறையில் ஒரே இருக்கையில் அருகருகே அமர்வது வழக்கம்.

இதைக் கண்ட சாதி உணர்வு கொண்ட ஆசிரியர் ஒருவர் கலாம் அவர்களை கடைசி இருக்கையில் அமரச்செய்தார். இதைக் கண்டு வெகுண்ட பட்சி ராமநாத சாஸ்திரி தன்னுடைய தந்தையிடம் சென்று முறையிட்டார்.

தன் மகனின் கோபத்தில் இருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட அவருடைய தந்தையும் அடுத்த நாளே பள்ளிக்குச் சென்று அந்த ஆசிரியரைக் கடிந்து திரு. கலாம் அவர்களை தன் மகனுக்கு அருகில் அமரவைத்தார்.

இந்த பட்சி ராமநாத சாஸ்திரிகள்தான் திரு. கலாம் அவர்கள் ஜனாதிபதியாக பதவியேற்றபோது இராமேசுவரம் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன் டில்லி சென்று அவருக்கு சாமி பிரசாதத்தை வழங்கியவர்.

கல்லூரி படிப்பு

திரு. கலாம் அவர்கள் பொறியியல் பட்டதாரி என்று நம் எல்லோருக்கும் தெரியும். அவர் தன்னுடைய பாடத்திட்டம் முடிந்ததும் ஏரோடைனமிக் வடிவமைக்கும் பொறுப்பை தாமாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டார். அது தாழ்வாகப் பறந்து தாக்கும் ஒரு போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டப் பணியாகும். அச்சமயத்தில் எம்.ஐ.டியின் இயக்குனராக இருந்தவர் பேராசிரியர் திரு.சீனிவாசன் அவர்கள். இவர் திரு.கலாமின் திட்டம் தமக்கு நம்பிக்கையளிக்கவில்லை என்ற தம் முடிவை அவரிடம் தெரிவித்தார்.

அத்துடன், ‘உனக்கு நான் மூன்று நாள் அவகாசம் தருகிறேன். அதற்குள் விமானத்தின் எல்லா அம்சங்களையும் விவரித்து காட்டும் வரைபடத்தை அளிக்காவிட்டால் உன்னுடைய உதவித் தொகையை தடுத்து நிறுத்தி விடுவேன்’ என்றும் எச்சரித்தார்.

ஏழ்மை நிலையிலிருந்த திரு. கலாம் அவர்கள் உதவித் தொகையை நம்பித்தான் தன் படிப்பைத் தொடர வேண்டிய சூழ்நிலை. ஆயினும் மனந்தளராமல் ஊண் உறக்கமின்றி பேராசிரியர் குறிப்பிட்ட கெடுவுக்குள் வரைபடத்தை முடித்துவிட அதைப் பார்த்து வியந்து பாராட்டினார் அவருடைய பேராசிரியர்!

சைவ உணவில் ஆர்வம்

திரு. கலாம் அவர்கள் இஸ்லாமியர் விரும்பி உண்ணும் புலாலைத் தவிர்த்து சைவ உணவையே விரும்பி உண்டு மகிழ்ந்தார். புலால் உணவில் கிடைக்காத அரிய பல சத்துக்களும், புரதங்களும் சைவ உணவில் அதிகம் கிடைப்பதுடன் மூளை வளர்ச்சிக்கும், இரத்தத்தை சுத்திகரித்து எப்போதும் சுத்தமாக வைக்கவும் உதவுவதாக கருதினார். அத்துடன் ஓர் உயிரை வதை செய்து அதை உண்டு மகிழும் கொடுமையை விரும்பாததால் திரு.கலாம் அவர்கள் அசைவ உணவுவகைகளைப் புறக்கணித்தார்.

ஏழ்மை

ஏழ்மையின் சிரமங்களை நன்குணர்ந்த கலாம் அவர்கள் ‘சாதாரண பின்னணியில் வளர்ந்த என் போன்றோருக்கு பத்துகள் எப்போதுமே காத்திருக்கும். ஆனால் அதன் பின்னணியில் சோர்ந்துபோய் மூலையில் அமர்ந்திருக்கலாகாது. நமக்கான வாய்ப்புகளை நாமேதான் உருவாக்கி கொள்ள வேண்டும்.’ என்று தன்னை சந்தித்த எல்லோரிடமும் வலியுறுத்தி கூறுவது வழக்கம்.

தாய்மொழிப் பற்று

தாய் மொழிக் கல்வியின் முக்கியத்துவத்தை பல அரங்குகளிலும் வலியுறுத்திய கலாம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கையிலும் அதைக் கடைப்பிடித்தார். தன்னுடைய கல்லூரி வாழ்க்கையில் தமிழ்சங்கம் நடத்திய பல கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு தமிழில் எழுதி முதல் பரிசை வென்றுள்ளார்.

அவர் எம்.ஐ.டியில் படித்த காலத்தில் ‘நமது விமானத்தை நாமே தயாரிப்பது எப்படி’ என்ற கட்டுரையை தமிழிலேயே எழுதினார். அதற்காக அறிவியல் அறிஞர்கள் மற்றும் அவருடைய ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்றார்.

செயற்கரிய செயல்கள்

வல்லரசு நாடுகள் கோடிக்கணக்கான டாலர்களை செலவழித்து அணுகுண்டுகளையும், ஏவுகணைகளையும் தயாரித்து மார்தட்டிக் கொண்டிருக்க நமது கலாம் அவர்கள் குறைந்த செலவில் ‘பொக்ரானில்’ வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்து மேலை நாடுகளிடையே நமது நாட்டின் மதிப்பை உயர்த்திக் காட்டினார்.

அத்துடன் நின்றுவிடாமல் செயற்கை ஏவுகலனான S.L.V3இன் உதவியுடன் முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவி சாதனை படைத்தார்.

‘கார்பன்’ என்ற ஒரு புதிய பொருளை கண்டுபிடித்து முடக்குவாத நோயால் அவதியுறுவோர்க்கு புனர் வாழ்வு தரும் அமைப்பிற்கு உதவ உருவாக்கினார்.

முட நீக்கியல் துறையில் திரு. கலாம் அவர்கள் புரிந்த சாதனை இன்றளவும் பெருமையுடன் பேசப்படுகிறது. அந்நோயால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் அதிக எடை கொண்ட உலோகத்தால் ஆன கருவிகளை அணிந்து எடை பளுவின் காரணத்தால் நடக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் கலாம் அவர்களின் லேசான கார்பன்-கார்பன் என்ற எடை குறைந்த உலோகத்தால் செய்யப்பட்ட நடை சாதனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளவிட முடியாத வரப்பிரசாதமாக அமைந்தது.

எம்மதமும் சம்மதம்

கலாம் அவர்கள் ஜனாதிபதியாக வேட்பு மனு தாக்கல் செய்ததும் பத்திரிகை நிருபர்கள் சூழ்ந்துகொண்டு தாங்கள் நாட்டு மக்களுக்கு விடுக்கும் செய்தி என்ன என்று கேட்டபோது

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது

என்ற கீதை வரிகளை மேற்கோள் காட்டி தமக்கு எல்லா மதமும் சம்மதம் என்றும் தாம் ஒரு மதத்திற்கு மட்டும் உரியவர் இல்லை என்பதையும் சொல்லாமல் சொல்லி காட்டினார்.

நாடும் வீடும்

திரு.கலாம் அவர்கள் போரை விரும்புபவர் என்ற குற்றச்சாட்டு பொதுவாகவே இருந்து வந்தது. அவர் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிட்டபோது கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டி வேட்பாளரை நிறுத்தி மக்களின் முன் வைத்த குற்றச்சாட்டும் இதுதான். அதற்கு அவர், ‘ஒரு மனிதன் என்னதான் பணம் படைத்தவனாயிருந்தாலும் உடல் வலுவிழந்து காணப்பட்டால் அவனால் சேர்த்த பணத்தை கட்டிக் காக்க முடியாமல் வாழ்க்கையின் பாதியிலேயே அவனது வாழ்க்கை அஸ்தமித்து விடுகிறது. அதே சமயம் பலம் படைத்தவனாயிருந்தாலும், பணமின்றி அவனது வாழ்க்கை வறுமையின் பிடியில் சிக்கி சிதைந்து விடுவதும் இயற்கையே. அதுபோல் ஒரு நாட்டின் வளர்ச்சியில் பொருளாதாரமும், இராணுவமும் கை கோர்த்து ஒரு சேர நடந்தால்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியும் நன்றாக அமையும். நம் நாட்டின் ராணுவத்தை பலப்படுத்தி நம்மை சுற்றியுள்ள நாடுகளை பயமுறுத்த வேண்டும் என்பதல்ல நம் நோக்கம். பலம் பொருந்திய நம் ராணுவம் நம்மை எளிதில் வெற்றி கொண்டு விடலாம் என்ற எண்ணத்தை நம் எதிரிகளின் மனதிலிருந்து நீக்க உதவும். அதுதான் நம் நோக்கம்’ என்று விளக்கினார்.

கலாமும் மாணவர்களும்

ஒரு முறை திரு. கலாம் அவர்கள் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடும் சமயத்தில் ஒரு மாணவன் எழுந்து, ‘தாங்கள் இந்நாட்டிற்காக என்ன சாதிக்க போகிறீர்கள்?’ என்று வினவினான்.

கலாம் அவர்கள் பட்டென்று, ‘இந்த தேசமே உங்கள் கையில் இருக்கும்போது உங்களை நம்பித்தான் நான் எதையும் சாதிக்க இயலும் என்றார்.’

வேறொரு சமயத்தில் பள்ளிச் சிறிமி ஒருத்தி கலாம் அவர்களிடம் ஆட்டோகிராஃப் புத்தகத்தில் கையெழுத்து பெற அணுகியபோது அச்சிறுமியிடம் ‘உன் எதிர்கால ஆசை என்ன?’ என்று வினவினார். அதற்கு அச்சிறுமி, ‘ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவில் நான் வாழ விரும்புகிறேன்.’ என்று பதிலளித்தாள்.

இதுபோன்ற மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் கனவை நனவாக்குதே தம்முடைய லட்சியம் என்று உறுதி பூண்டார் திரு. கலாம்.

ஜனாதிபதியாக ஒரு விஞ்ஞானி

திரு. கலாம் அவர்கள் இந்திய ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி இருந்த நேரம். நிருபர்கள் அவரிடம், ‘ஒரு விஞ்ஞானியாக செயல்பட்டது இந்த பெரும் பொறுப்பிற்கு தயார் செய்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?’ என்று கேட்டனர்.

அதற்கு அவர், ‘தலைமைப் பண்புகள்தான் எந்த ஒரு பெரிய பொறுப்புக்கும் அடிப்படை தேவை. இந்த பண்புகள் பெறுவதற்கு விஞ்ஞானப் பணியில் நன்றாகவே பயிற்சி அளித்திருக்கிறார்கள்.’ என்று பதிலளித்தார்.

நடுநிலை ஜனாதிபதி

இந்திய ஜனாதிபதியாக பதவியேற்றபின் நிருபர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு பதிலளித்தார் திரு.கலாம், ‘நான் நானாகவே இருப்பேன். ஜனாதிபதி ஜனாதிபதியாகவே இருப்பார்.’ இதன் மூலம் நடுநிலை ஜனாதிபதி என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை நாசூக்காக தெரிவித்தார்.

இவர் பெற்ற விருதுகள்

1. 1997 – பாரத் ரத்னா.
2. 1981 – பத்மபூஷன்.
3. 1990 – பத்மவூபுஷன் மற்றும் ஓம்பிரகாஸ் பாசின் விருது

அத்துடன் டாக்டர் பிரன்ராம் விண்வெளி விருது, தேசீய வடிவமைப்பு விருது போன்ற இந்தியாவின் பல உயரிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

மற்ற அரசியல் தலைவர்கள் போலல்லாமல் கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க பல பல்கலைக்கழகங்கள் முன் வந்தபோது அதனை நாசூக்காக மறுத்தவர்தான் நம் கலாம் அவர்கள்!

அவர் கடைப்பிடித்த வாழ்க்கை நெறிமுறைகள்:

1. தன்னிலை உணர்ந்த எளிய வாழ்க்கை.
2. எம்மதமும் சம்மதம் என்ற நிலை.
3. உழைப்பு, உழைப்பு, அயரா உழைப்பு.
4. அதுவும் குறிக்கோள் சார்ந்த நேர்மையான உழைப்பு.
5. ஆசிரியர்களை மதிக்கும் நேர்மையுடன் கூடிய பண்பு.

ஆதர்ஷ புருஷன்

சமுதாயத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த கலாம் அவர்கள்,ஆறு வயதில் தினசரி பத்திரிகைகளை வீடு வீடாக விநியோகித்த கலாம் அவர்கள் இன்று உலகம் போற்றும் விஞ்ஞானியாக, விஞ்ஞானிகளை உருவாக்குபவராக, இன்றைய இளைய உலகம் தமது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டுள்ள ஆதர்ஷ புருஷனாக திகழும் கலாம் அவர்கள்தான் நான் மிகவும் மதிக்கும் மாமனிதர்களுள் ஒருவர்.

******

மூலம்:எங்கள் அப்துல் கலாம் - ஆசிரியர்:விஷ்ணு

7 கருத்துகள்:

  1. ஜோசஃப் சார். நேத்து தான் நம்ம குடியரசுத் தலைவரைப் பத்தி 'வாராது வந்த மாமணி'ன்னு ஒரு பதிவு போட்டேன். இன்னைக்கு நீங்க அவரைப் பத்தி ரொம்ப விளக்கமா எழுதியிருக்கீங்க. நன்றி.

    http://abtdreamindia2020.blogspot.com/2006/01/107.html

    பதிலளிநீக்கு
  2. வாங்க குமரன்,

    உங்க பின்னூட்டத்த படிச்சதும் உங்க ப்ளாகுக்கு போயி படிச்சேன்.

    சின்னதா இருந்தாலும் ரொம்பவும் அழகா இருந்துது.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. ஆகா! மாமேதை அப்துல் கலாம் பற்றி இவ்வளவு விரிவாகவும் விளக்கமாகவும் எழுதியதிற்கு மிக்க நன்றி ஜோசப் சார். அப்துல் கலாம் ஒரு எடுத்துக்காட்டு. நாமெல்லாம் அவரைப் பின்பற்ற நினைக்கவாவது வேண்டும். அவருடைய புகழும் ஓங்கி, அதனால் நாட்டுக்குப் பயனும் ஓங்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான மனிதரைப் பற்றி அருமையாக எழுதியிருக்கீங்க.

    ஆமாம் இது பாருங்க,

    //‘சாதாரண பின்னணியில் வளர்ந்த என் போன்றோருக்கு பத்துகள் எப்போதுமே...??//

    'ஆ' விட்டுப்போச்சா?

    பதிலளிநீக்கு
  5. வாங்க ராகவன்,

    அவருடைய புகழும் ஓங்கி, அதனால் நாட்டுக்குப் பயனும் ஓங்க வேண்டும்.//

    நிச்சயமா. அவருடைய 2020 வருட கனவும் நனவாகணும்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க துளசி,

    ஆமாங்க மிஸ்சிங்க 'ஆ' கன்வர்ட்டருடைய சில்மிஷம். என்ன பண்றது கண்ணுல விளக்கெண்ணைய விட்டுக்கிட்டு பார்த்தும் இப்படி சில சமயங்கள்ல 'ஆ'ரம்பத்துல 'ஆ'போயி ரம்பமாயிடும். இல்லன்னா 'ஆ'பத்து 'பத்து' ஆயிரும்.

    ஏன் கேக்கறீங்க?

    பதிலளிநீக்கு
  7. நமது தளத்தில் இருந்து அவருக்கு வாழ்த்தும் மற்றும் தொடற்பு கொண்டதற்பு பதில் ஒன்றும் வரவில்ல என மன்றத்தில் படித்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு