இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'கடந்து வந்த பாதை' என்ற தொடரில் என்னுடைய நெடுநாள் நண்பர் ராஜ் என்பவரைப் பற்றி எழுதியிருந்தேன்.
அதை படிக்காதவர்கள் இங்கு செல்லலாம்
பகுதி I
பகுதி II
கடந்த வாரம் சென்னையிலுள்ள ஒரு பிரபல கண் மருத்துவமனைக்கு செல்ல நேர்ந்தது. (Conjectivitis என்கிற கண் நோயால் இரு வாரங்களுக்கு மேலாக அவதிப்பட்டு இந்த மருத்துவமனைக்கு சென்றபிறகுதான் அதிலிருந்து விடுபட்டேன்.)
நான் மருத்துவரைக் காண வரவேற்பறையில் காத்திருந்தபோது எனக்கு எதிரிலிருந்த லிஃப்ட்டிலிருந்து ஒரு சக்கர நாற்காலியில் வய்தான ஒருவரை வைத்து ஒரு பெண் (அவரும் வயதானவர்தான்) தள்ளிக்கொண்டு வருவதைக் கண்டேன். அவர் கருப்பு கண்ணாடி அணிந்திருந்தார். காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்திருப்பார் போலிருக்கிறது என்று நினைத்தேன். அவரை எங்கோ பார்த்ததுபோன்று தோன்றியது. ஆனால் எப்படி கேட்பது என்று தயக்கத்துடன் அவரையே பார்த்தேன்.
அவரும் என்னை பார்த்தவாறே அருகில் வந்ததும், 'Don't mistake me....நீங்க ஜோசஃப்தானே' என்றார். நான் தயக்கத்துடன் 'ஆமாம்.' என்றேன்.. 'தப்பா நினைக்காதீங்க...அடையாளம் தெரியல...'
அவர் புன்னகையுடன். 'எத்தன வருசமாச்சி பாத்து... எப்படி ஞாபகம் இருக்கும்? ராஜ்.... FCI...' என்றார்.
ராஜ்! சட்டென்று நினைவுக்கு வர அவருடைய கரங்களைப் பற்றியவாறே அவருக்கருகில் நின்றிருந்த பெண்ணை நோக்கினேன்...'நீங்க இவருக்கு....' என்று இழுத்தேன் தயக்கத்துடன். ஏனெனில் அவருடைய தோற்றமே - நல்ல சிவந்த நிறம் - என்னுடைய நண்பருக்கு உறவினராய் இருக்க முடியாது என்று கூறியது.
அவர் பதிலளிக்காமல் என்னுடைய நண்பரைப் பார்த்தார். அவர் ஒரு பெருமூச்சுடன் 'அது ஒரு பெரிய கதை ஜோசஃப்' என்றார். தொடர்ந்து, 'நீங்க எதுக்கு வந்திருக்கீங்க? கண்ணுல ஏதாச்சும் பிரச்சினையா?' என்றார்.
'ஆமா சார். ரெண்டு வாரமா கண்ணுல கொஞ்சம் ப்ராப்ளம். போன வாரம் வந்து டாக்டரை பார்த்தேன். இப்ப பரவாயில்லை.. இன்னும் மருந்த கண்டினியூ பண்ணணுமான்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.'
'நா வேணும்னா வெய்ட் பண்றேன். ரொம்ப நாள் கழிச்சி பாத்துட்டு இப்படியே போயிர முடியாது. உங்ககிட்ட பேசறதுக்கு நிறைய இருக்கு.' என்றார்.
'இன்னும் ஒரு பேஷண்ட்தான் அடுத்தது நாந்தான்னு சிஸ்டர் சொல்லியிருக்காங்க. மேக்சிமம் பத்து நிமிஷம் ஆகலாம்.'
ஆனால் அடுத்த நிமிடமே என்னுடைய பெயர் அழைக்கப்பட 'இருங்க இதோ வந்துடறேன்.' என்று மருத்துவர் அறையை நோக்கிச் சென்றேன். அவர் என்னுடைய கண்களைப் பார்த்துவிட்டு, 'இன்னும் ஒரு நாலஞ்சி நாளைக்கி கண்டினியூ பண்ணுங்க. அப்புறம் ஸ்டாப் பண்ணிறலாம்.' என்று விடைகொடுக்க வெளியில் வந்து என்னுடைய நண்பரை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வாசலை அடைந்தேன்.
'என் கார்லயே போயிரலாம். பேசிக்கிட்டே போகலாம்.' என்றேன்.
அவர் சரியென்றாலும் அவருடன் வந்திருந்த பெண் சற்று தயங்குவதுபோல் தெரிந்தது. ராஜ் புன்னகையுடன். 'பரவால்ல பார்வதி. ஜோசப்புக்கு உன்னைப் பத்தியும் தெரியும்.' என்றார் என்னை பார்த்தவாறு.
நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ஏதோ புரிந்ததுபோல் இருந்தது. ஆயினும் தயக்கத்துடன், 'இவங்க... உங்க பழைய பிராமின் ஃப்ரெண்ட்....' என்றேன்..
ஆமாம் என்றவாறு அவர் சக்கர நாற்காலியிலிருந்து இறங்கி நிற்க நான் அவரை பின்னிருக்கையில் அமர்த்திவிட்டு எதிர்ப்புற கதவை திறந்து அந்த பெண்ணை அமரச்செய்தேன்.
என்னுடைய வாகனத்தை ஸ்டார்ட் செய்து பிரதான சாலையில் கலக்கும் வரை காத்திருந்த அவர் மெள்ள பேச ஆரம்பித்தார். என்னுடைய கவனம் சாலையில் இருந்தாலும் அவர் கூறியதைக் கேட்டு மனம் நைந்துப் போனது. இப்படிப்பட்ட உறவுகள் தேவைதானா என்று தோன்றியது.
****
அவரைப் பற்றிய முந்தைய பதிவில் சென்னை சைதாப்பேட்டையில் ஒரு ஒண்டுக் குடித்தனத்தில் தனியாக வசித்துவந்ததாக குறிப்பிட்டிருந்தேன்.
நான் அவரை சந்தித்த அடுத்த சில மாதங்களில் அவருடைய உடல் நலம் பாதிக்கப்படவே அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவருடைய இளைய சகோதரருக்கு தெரிவித்துள்ளனர். அவரும் வந்து பார்த்துவிட்டு என்னுடைய நண்பரின் நிலையைப் பார்த்துவிட்டு, 'என் கூடவே வந்துருங்கண்ணே.' என்று அழைத்துச் சென்றிருக்கிறார்.
'ஆனா என் கொழுந்தியாளுக்கு என்னெ வீட்ல வச்சிக்க விருப்பமேயில்ல ஜோசஃப். ரெண்டு மாசம் பல்ல கடிச்சிக்கிட்டு இருந்தேன். அதுக்கப்புறம் நம்ம பழைய காலனிக்கே போயிரலமான்னு யோசிச்சிக்கிட்டிருந்தப்பத்தான் பார்வதி வீட்டுக்கு வந்தா.' என்றார் ராஜ்.
பார்வதிதான் என்னுடைய நண்பர் திருமணம் செய்துக்கொள்ள விரும்பிய பிராமண வகுப்பைச் சார்ந்த பெண். ஆனால் அவருடைய வீட்டில் சம்மதிக்காமல் போகவே வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டவர். அவருக்கு ஒரு மகனும் மகளும். இருவருக்கும் திருமணம் முடிந்து சென்னையில்தான் வாசம். பார்வதியின் கணவர் இறந்தபிறகு அவரால் மருமகளுடன் ஒத்துப்போக முடியவில்லை. மகனே ஒரு தனிவீட்டில் தன் தாயை குடி வைத்துவிட தனியாளாய் போனார் பார்வதி.
'மக கூட போய் இருந்திருக்கலாம். ஆனா அவ அவங்க மாமனார், மாமியாரோட இருக்கா. எப்பவாச்சும் ஒருதரம் போய் வந்தாலே அவங்க மாமியார் ஒரு மாதிரி பேசுவாங்க. அதனால அங்கயும் போய் இருக்க முடியலை. ஊருக்குள்ளயே இருந்தும் பேரப் பிள்ளைங்களக் கூட இருக்க முடியலையேன்னு தோனும். அதுவும் ரிட்டையர் ஆனதுக்கப்புறம் எதுக்குடா இந்த வாழ்க்கைன்னுல்லாம் கூட தோனும். அப்பத்தான் இவர் நினைப்பு வந்துது. இவர் என் நினைப்பாவே கல்யாணம் பண்ணிக்காம இருக்கார்னு தெரியும். இவர் ஆஃபீஸ்ல போய் கேட்டு இவர் விலாசத்த தேடிக்கிட்டு போய் பார்த்தேன். ஆனா நா அங்க போனதே இவருக்கு பெரிய பிரச்சினையா போயிருச்சி....' என்ற பார்வதி கண்கள் கலங்கிப் போய் மேலே தொடர முடியாமல்....
சிறிது நேரம் மவுனமாய் மூவரும் அமர்ந்திருந்தோம். பிறகு அவரே சுதாரித்துக்கொண்டு தொடர்ந்தார். 'இவர பாத்துட்டு வந்ததுலருந்தே எனக்கு மனசே சரியில்லைங்க. என்னாலதான் இவருக்கு இந்த நிலைமைன்னு நினைச்சி, நினைச்சி ஒரு வாரமா அவஸ்த்தைப்பட்டேன். சரி, வர்றது வரட்டும்னு மறுபடியும் இவர் தம்பி வீட்டுக்கு போனேன். இவர் அங்க இல்லை. ஆனா இவரோட தம்பி வய்ஃப் என்னெ ரொம்ப மரியாதையில்லாம பேசி அவர் எங்கருக்கார்னு எங்களுக்கு தெரியாது இங்க வந்து மானத்த வாங்காதீங்கன்னு சொல்லி அசிங்கப்படுத்திருச்சி. ஆனா பக்கத்து ஃப்ளாட்டுக்காரங்க இவரோட அட்றச குடுத்து 'நீங்களாச்சும் போய் அவருக்கு ஹெல்ப் பண்ணுங்கம்மா. உடம்பு சரியில்லாத மனுசன்னு சொன்னாங்க. நா அங்க போயி இவர் குடியிருந்த போர்ஷன பாத்தப்ப மனசு பதறிப்போச்சி. கட்டாயப்படுத்தி வீட்ட காலி பண்ண வச்சி எங்கூடவே கூட்டிக்கிட்டு போயிட்டேன். அதுவும் பிரச்சினையாத்தான் முடிஞ்சிது.' என்றவர் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு சிறிது நேரம் மவுனமாகிப் போனார்.
'பார்வதி என்னெ பாக்க வந்தது என் தம்பி குடும்பத்துக்கு புடிக்கல... நா இவளோட போய் இருந்தது இவளோட சன்னுக்கு புடிக்கல. 'இந்தாளூ இங்க இருக்கறதாருந்தா நா இந்த பக்கமே வரமாட்டேன்னு சொல்லிட்டான்.' என்று தொடர்ந்தார் ராஜ் சோகத்துடன். 'நா மட்டும் பட்டுக்கிட்டுருந்த கஷ்டம் பாவம், இவளையும்.....'
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒன்றும் சொல்ல முடியாமல் மனம் கணத்துப் போக பாதையில் கவனத்தை செலுத்தினேன்.
'அத்தோட நிக்கல அந்த பாவி.. நா அவன் சொன்னத கேக்கலேன்னுட்டு நா குடியிருந்த வீட்டுக்காரர உசுப்பேத்தி என்னை அங்கிருந்தே காலி பண்ண வச்சிட்டான். எங்கயும் வீடு கிடைக்காம இவர் தன்னோட ஆஃபீஸ்ல போயி கேக்க அவரோட ஃப்ரெண்ட் ஒருத்தர் இப்ப நாங்க இருக்கற வீட்டை குடுத்தார். வாடகைன்னு பெருசா இல்லை. இப்ப ரெண்டு வருசமா அங்கதான் இருக்கோம்.' என்றவாறு பார்வதி விலாசத்தை கூற அடுத்த அரை மணியில் அங்கு சென்றடைந்தோம்.
தனி வீடு. சிறியதாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது. நடுத்தரத்துக்கும் சற்று உயர்ந்தவர்கள் குடியிருந்த சூழல் என்பதால் இவர்களுடைய விஷயத்தில் தலையிட யாரும் இருக்கவில்லை.
'நாங்க ரெண்டுபேருமே எங்க குடும்பத்துக்காகன்னு சொல்லி ஒருத்தர் மேல் ஒருத்தருக்கிருந்த அன்பைக் கூட சாக்ரிஃபைஸ் பண்ணோம். ஆனா ரெண்டு குடும்பங்களுக்குமே நாங்க இப்ப வேண்டாதவங்களா போய்ட்டோம். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எங்கள புரிஞ்சிக்கிட்ட அளவுக்குக் கூட எங்க குடும்பத்துலருக்கறவங்க எங்கள புரிஞ்சிக்கலையேங்கறத தவிர எங்களுக்கு எந்த வருத்தம் இல்லை ஜோசஃப்.' என்று நான் விடைபெற்றபோது ராஜ் கூறினாலும் அவருடைய குரலில் இருந்த சோகம் என்னை கஷ்டப்படுத்தியது.
உறவுகள் வேண்டாம் என்று ஒதுக்க அலுவலக நட்பு இவருக்கு துணை சென்றதை நினைத்துப் பார்க்கிறேன். உறவுகளைவிட நட்புதான் சிறந்தது என்றே எண்ணத் தோன்றுகிறது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தோன்றும் நட்புக்கு இணை எந்த உறவும் இல்லை.
ராஜும் பார்வதியும் இப்போதும் நல்ல நண்பர்களாகவே இருக்கின்றனர். இளம் வயதில் அவர்களைப் பிரித்து வைத்த விதி முதிய வயதில் அவர்களை இணைத்திருக்கிறது, நல்ல நண்பர்களாக... தள்ளாத வயதில் ஒருவருக்கொருவர் துணையாக...
*********
நம்ம பக்கங்களில் உறவுகள்ன்னு சொல்லற கூட்டம் இருக்கு பாருங்க. அது நம்மை முன்னாலே போகவும் விடாது பின்னாலே போகவும் விடாது.
பதிலளிநீக்குமனசுக்குப் பிடிக்கலையா..;.ஒதுங்கி இருந்துக்கலாமுன்னாலும் விடமாட்டாங்க.
எல்லாத்துலேயும் ஒரு வேண்டாத பொஸஸிவ்னஸ்.
இவ எப்படி வாழ்ந்துறடாள்னு பார்ப்போம் என்ற வீம்புதான்.
மனசு கஷ்டமா இருக்குதுங்க. நட்புகளே மேல். அதுவும் நம்மைப் புரிஞ்சுக்கிட்ட நட்புகள் கிடைச்சா நமக்கு அதிர்ஷ்டம்.
வெளிநாடுகளில் இது போன்ற நிகழ்வுகளை வாரிசுகள் ஏற்றுக் கொள்வார்கள், நம்ம இந்தியர்களுக்கு அந்த பக்குவன் இன்னும் வரலை, தன் அப்பா இருந்த இடத்தில் இன்னொருவரா ? என்று தான் பார்பார்கள், மனதையெல்லாம் புரிந்து கொள்ள மாட்டார்கள். இவை தனிமனித தவறுகளல்ல, சமூகத் தவறுகள்.
பதிலளிநீக்குராஜ் மற்றும் பார்வதி அவர்கள் அமைதியான வாழ்க்கையைத் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஉதவின்னு செய்யலைன்னாலும் போகட்டும். ஒவத்தரவம் செய்றதுல நம்மாளுகள மிஞ்ச முடியாது போல.
நட்பைப் புரிஞ்சிக்கிறதுல ஏன் இத்தனை கஷ்டமோ தெரியலை ஜோசப் சார்.
வாங்க துளசி,
பதிலளிநீக்குஎல்லாத்துலேயும் ஒரு வேண்டாத பொஸஸிவ்னஸ்.//
உறவுகளுக்கிடையில பிரச்சினை வர்றதுக்கு இதுதாங்க முக்கிய காரணம். இத ஒரு வீக்னசுன்னு கூட சொல்லலாம்.
தாய்க்கு மகன் மட்டும்தான் வேணும், மருமகள் வேண்டாம் என நினைக்கிறதுக்கும் இந்த பொசஸிவ்னஸ்தான்.. எனக்கே எனக்குன்னு இருக்கற ஒரு உறவ பிரிக்க வந்துட்டாளேங்கற மனப்பாவம்.
வாங்க கண்ணன்,
பதிலளிநீக்குஇவை தனிமனித தவறுகளல்ல, சமூகத் தவறுகள்.//
இதுவும் சரிதான். ஆனா சமூகம்ங்கறதே தனிமனிதர்களின் கூட்டம்தானே.
வாங்க ராகவன்,
பதிலளிநீக்குநட்பைப் புரிஞ்சிக்கிறதுல ஏன் இத்தனை கஷ்டமோ தெரியலை..//
அதுவும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் - தள்ளாத வயதிலும் - வெறும் நட்பு என்பதை எந்த நூற்றாண்டிலும் நம் சமூகம் ஒத்துக்கொள்ளாது போல...
கே. பாலசந்தரின் “ஜன்னல்” சீரியல் பார்ப்பதுபோல இருந்தது. எஸ்.பி.பி. மற்றும் லட்சுமி நடித்தது.
பதிலளிநீக்குஇதே தீமில் ஜெமினி வாணிஸ்ரீ நடித்த “வெள்ளி விழா” என்னும் படமும் நினைவுக்கு வருகிறது. (படம் நான் பார்க்கவில்லை).
அன்புடன்,
டோண்டு ராகவன்
வாங்க ராகவன் சார்,
பதிலளிநீக்குகே. பாலசந்தரின் “ஜன்னல்” சீரியல் பார்ப்பதுபோல இருந்தது. எஸ்.பி.பி. மற்றும் லட்சுமி நடித்தது.//
நிஜ வாழ்க்கையின் நிழல்தானே திரைப்படங்களும் தொலைக்காட்சி தொடர்களும். வருகைக்கு நன்றி சார்.
கண்களில் நீர் தளும்ப
பதிலளிநீக்குகதையா அது ! மனித நேய காவியம் அல்லவா !
படித்து முடித்தேன்.
அஞ்சி அஞ்சி சாவார் மத்தியிலே
அஞ்சாது அறவழி செல்பவரும் நிற்பாரும் உளர்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://vazhvuneri.blogspot.com
முந்தைய பதிவுகளை படித்த பொது இந்த மனிதன் இப்படி தனியா கஷ்ட படுறாரே என்று வருத்தமாய் இருந்தது..இந்த பதிவை படித்த போது உண்மையில் எனக்கு சந்தோசம்.. ராஜ் க்கு அவர் விரும்பிய தோழி இப்போது துணையாக கிடைத்ததில்...உங்களோட நண்பர் ராஜ் இனிமேலாவது சந்தோசமா இருக்க பிராத்திக்கிறேன் !
பதிலளிநீக்கு