23 September 2006

கடந்து வந்த பாதை - 4

நான் என்னுடைய வங்கியில் குமாஸ்தாவாக பணிக்கு சேர்ந்திருந்த காலம்.

என்னுடைய வங்கியில் வாடிக்கையாளராகவிருந்த சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவருடன் பழக்கமாகி அது நாளடைவில் நட்பாக மாறியது.

அவருடைய பெயர் ராஜா (புனைப்பெயர்).

எனக்கும் அவருக்கும் சுமார் பதினைந்து வருட வயது வித்தியாசமிருந்தும் எங்களிடையே ஏற்பட்ட நட்பு ஒரு அலாதியான நட்பாக அமைந்தது என்றால் மிகையாகாது. வயதில் மூத்தவராயிருந்தும் தன்னைப் பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும் என்று நிர்ப்பந்தித்து சம்மதிக்க வைத்தார். ‘நீங்க என்ன அண்ணன்னு கூப்ட்டா நம்ம நட்புல ஒரு நெருக்கம் இருக்காது ஜோசப். You are so matured to your age.. அதனால சும்மா ராஜான்னு பேர் சொல்லியே கூப்டுங்க..’ என்பார்.

அவர் நான் குடியிருந்த வீட்டுக்கு அருகிலேயே இருந்ததால் நானும் அவரும் தினமும் காலையில் எங்களுடைய வீட்டுக்கருகிலிருந்த பஸ் நிறுத்தத்திற்கு நடந்து செல்லும் அந்த பத்து நிமிடத்தில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் நெருக்கமானது.

ராஜா அப்போது இந்திய உணவுக் கழகத்தில் (இ.உ.க) இடை நிலை அதிகாரியாக இருந்தார். துணை மேலாளருக்கு கீழுள்ள பதவி.

ராஜா படித்து முடித்து இளநிலை அதிகாரியாக பணியில் சேரவும் அவருடைய தந்தை ஓய்வு பெறவும் சரியாக இருந்தது. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த சகோதரர், பள்ளி இறுதியாண்டிலும் எட்டாவது வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்த இரண்டு தங்கைகள்.. ஓய்வு பெற்ற தந்தை, தாயார் என ஆறு பேர் கொண்ட குடும்பம் இவருடைய சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய சூழல்.

‘அப்பா ரிட்டையர் ஆயி வந்து நின்னதுமே எனக்கு ஒன்னும் புரியல ஜோசப். அப்பாவுக்கு அவங்களோட கையாலாகாத்தனத்த நினைச்சி நினைச்சே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்திருச்சின்னு நினைக்கேன். எப்பவும் எரிஞ்சி விழுந்து குடும்பத்துல அமைதியே போயிருது. அப்ப இருந்த மாதிரியே எல்லா வசதியும் வேணுங்கறார். சில சமயங்கள்ல என்ன பண்றதுன்னே தெரிய மாட்டேங்குது ஜோசப். நீ யார்கிட்டயாவது சொல்லி எனக்கு ஈவ்னிங் நேரத்துல ஒரு பார்ட் டைம் ஜாப் வாங்கித் தாயேன்.’ என்றார் ஒரு நாள்.

நான் வங்கியில் புதிதாய் சேர்ந்திருந்ததால் எனக்கு யாரையும் உதவியென்று கேட்க கூச்சமாக இருந்தது. ஆயினும் ராஜாவின் குடும்ப சூழலை நினைத்து ஒரு நாள் புரசைவாக்கத்தில் சிறியதாய் ஒரு ஜவுளிக் கடை வைத்திருந்தவரிடம் அவரைப் பற்றி சுருக்கமாய் கூறி ‘உங்களால் உதவி செய்ய முடியுமா’ என்று கேட்டேன். அவருக்கு என்ன தோன்றியதோ, ‘சரி நாளைக்கு சாயந்தரமா வரச் சொல்லுங்க பார்ப்போம்.’ என அடுத்த நாள் அவருடன் பஸ் நிறுத்தத்திற்குச் செல்லும் வழியில், ‘அவர பார்த்தா நல்லவரா தெரியுது ராஜ், நீங்க போய் பாருங்களேன்’ என்றேன்.

அவருக்கும் ஜவுளிக் கடை முதலாளிக்கும் பரஸ்பரம் பிடித்துப்போக அவர் எதிர்பார்த்ததுக்கும் மேலாகவே ஊதியமும் அமைந்தது. ராஜா பி.காம் பட்டதாரியானதால் கணக்கு எழுத வந்தது. மாலை நேரங்களில் அலுவலக நேரம் முடிந்ததும் வீட்டிற்குக் கூட செல்லாமல் ஜவுளிக்கடைக்கு பின்பக்கம் இருந்த முதலாளியின் வீட்டில் கை கால் அலம்பிக்கொண்டு கடையில் கல்லா பெட்டிக்கு அருகில் அமர்ந்து அன்றைய கணக்கை எழுதி முடித்துவிட்டு கடையை பூட்டும் நேரத்தில் வீடு திரும்புவார்.

ஆயினும் காலையில் அவரை சந்திக்கும்போது பளிச்சென்று இருப்பார். வாரத்தில் ஆறு நாட்களும் ஒரே மாதிரியான வெள்ளை பேண்டும் வெள்ளை சட்டையும்தான். முழுக்கை சட்டையை மடித்து அரைக்கையாய் ஆக்கியிருப்பார்.

அப்போதெல்லாம் காட்டன் துணிகள்தான். பாலிஸ்டர் புதிதாக அறிமுகமாகியிருந்த காலம் அது. ஆனால் அதன் அபிரிதமான விலை எங்களைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரின் எல்லைக்கப்பாலிருந்தது.

‘எதுக்கு ராஜ் வெள்ளை சட்டையவே போடறீங்க? சாமியார் மாதிரி இருக்கீங்க?’ என்பேன் கேலியுடன்.

அதற்கு அவர் அளித்த விளக்கம் இப்போதும் மனதில் கிடந்து நெருடுகிறது. ‘அதுக்கு ஒரு காரணம் இருக்கு ஜோசப். எனக்கு இருக்கற குடும்ப கடமைகள்லாம் முடியறவரைக்கும் காதல், கத்தரிக்காய்னு எந்த பந்தத்துலயும் மாட்டிக்கற எண்ணம் இல்லை. இந்த உடுப்பைப் பார்த்தா எந்த பொண்ணுக்காவது என் மேல காதல் வருமா, சொல்லு. இந்த காலத்து பசங்களுக்கு பகட்டா இருக்கற ஆம்பளைங்களத்தான பிடிக்குது? அதான்.. மெய்ட்டெய்ன் பண்ண கொஞ்சம் கஷ்டமாருந்தாலும்.. இது நானே தேர்ந்தெடுக்கிட்ட கோலம்..’

ஆயினும் அவர் நினைத்தது போல் நடக்கவில்லை. ராஜா என்னதான் வெள்ளை நிற ஆடையை உடுத்தினாலும் அவருடைய நிறமும், களையான முகமும், மெலிந்த அளவான தேகமும், சுருட்டை முடியும் அக்காலப் பெண்களைக் கவராமல் இல்லை. நாங்கள் இருவரும்
செல்லும் அதே பேருந்து நிறுத்தத்திற்கு தினமும் வரும் ஒரு பிராமணக் குலத்தைச் சார்ந்த அழகான பெண் ஒருவருக்கு இந்த கோலம் மிகவும் பிடித்திருந்தது.

ஆரம்பத்தில் அவருடைய கொள்கையில் பிடிவாதமாக இருந்து அந்த பெண்ணின் முயற்சியை மறுதலித்த ராஜா நாளடைவில் காதல் வசப்பட்டுப் போனார். என் கண் முன்னரே சாதாரணமாக ஆரம்பித்த அவர்களுடைய நட்பு காதலாய் மலர்ந்து ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லையென்ற நிலையை அடைந்தபோது திடீரென்று அப்பெண் சுமார் ஒரு மாத காலம் காணாமல் போனார். நான் பதறிப் போனேன். ஆனால் ராஜாவின் நடத்தையில் பெரிதாய் எந்த மாறுதலும் இல்லை.

‘என்ன ராஜ்.. அவங்கள கொஞ்ச நாளா பஸ் ஸ்டாப்புல காணமேன்னு நான் தவிச்சி போறேன்.. நீங்க ஒன்னுமே நடக்காத மாதிரி இருக்கீங்க?’ என்றேன் ஒரு நாள்.

அவர் மெலிதாக சிரித்த வண்ணம் என்னைப் பார்த்தார். ‘அவங்களுக்கு போன வாரம்தான் கல்யாணம் நடந்தது ஜோசப்.’

நான் பதறிப்போய், ‘என்ன ராஜ் சொல்றீங்க? அதெப்படி ஒங்களுக்கு தெரியும்?’ என்றேன்.

அவர் சிறிது நேரம் மவுனமாக இருந்தார். பிறகு எந்தவித உணர்ச்சியும் இல்லாத குரலில் தொடர்ந்தார். ‘அவங்க வீட்ல அதுக்கு ஒத்துக்கல ஜோசப். ஆனா அவங்க (அந்த பெண்ணை மரியாதையுடன் அழைப்பார்) வீட்டை மீறி எங்கூட வந்துடறேன்னு ஒத்தக் கால்ல நின்னாங்க. எனக்கு அது சரின்னு படலை. எனக்கும் ரெண்டு தங்கைங்க இருக்காங்களே.. அவங்கள சமாதானம் செஞ்சி கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சேன். நானும் கல்யாணத்துக்கு போய் வந்தேன். உன்கிட்ட சொன்னா நீ ஏதாச்சும் பிரச்சினை செஞ்சிருவியோன்னுதான் நான் சொல்லல.. அவங்க எடுத்த முடிவு தப்பானது ஜோசப். அதுமட்டும் நடந்திருந்தா என் குடும்பத்தோட கதி என்னாயிருக்கும்? அத்தோட அவங்க குடும்பத்தையும் நினைச்சிப் பாக்கணுமில்லே.. அதையெல்லாம் நினைச்சித்தான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். இனிமே நீ வேலைக்கு போவேணாம்னு சொல்லிட்டாராம்.. அவங்களோட ரிசிக்னேஷன் லெட்டரக் கூட நாந்தான் அவங்க ஆபீஸ்ல கொண்டு குடுத்துட்டு வந்தேன்.. எனக்கென்னவோ ஒரு தங்கையோட கல்யாணத்த நடத்தி முடிச்ச திருப்தி இருக்கு இப்ப..’

எப்படியொரு உயர்ந்த குணம்?

எங்களுடைய வங்கியின் புதிய கிளையொன்று சென்னை மிண்ட் தெருவில் திறக்கப்பட அங்கு மாற்றலாகிப் போனேன். என்னுடைய கிளையின் அலுவல் நேரமும் அவருடைய அலுவல் நேரமும் மாறிப்போனதால் அவருடனான என்னுடைய காலை நடை சற்று தடைபட்டுப் போனது. அவருடைய வீடு அருகாமையில் இருந்தும் அவருடைய வீட்டுக்கு நான் சென்றதே இல்லை. அப்போதெல்லாம் வயதுக்கு வந்த பெண்கள் இருக்கும் வீட்டிற்குள் அன்னியரை அழைக்கலாகாது என்ற ஒரு கொள்கை இருந்தது, முக்கியமாக நடுத்தர குடும்பங்களில்..

சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிறு காலை அதே பஸ் நிறுத்தத்தில் நான் காத்திருந்தபோது அவரும் அங்கே வந்தார். அதே வெள்ளை நிற ஆடை. ஆனால் இன்னும் சற்று மெலிந்திருந்தார். என்னைக் கண்டதும் புன்சிரிப்புடன் நெருங்கி, ‘என்ன ஜோசப் எப்படியிருக்கே? பாக்கவே முடியல?’ என்றார் பாசத்துடன்.

நான் அவருடைய கரங்களைப் பற்றிக்கொண்டு ‘எப்படி இருக்கீங்க ராஜ்? உங்கள நினைக்காத நாளே இல்லை.. வீட்ல எல்லாரும் சவுக்கியமா? அப்பா எப்படியிருக்கார்?’ என்றேன் சரமாரியான கேள்விகளுடன்.

‘அப்பா காலமாயிட்டார் ஜோசப். ஒன்பது மாசமாச்சி. ஒனக்கு சொல்லணும்னு வீட்டுக்கு வந்திருந்தேன். நீ ஏதோ ட்ரெய்னிங்குக்கு போயிருக்கேன்னு அம்மா சொன்னாங்க. உங்கிட்ட சொல்லிரச் சொல்லிட்டு வந்தேன். சொல்லாம மறந்துருப்பாங்க. தம்பி காலேஜ் முடிச்சி திருச்சியில பெல்லுல இருக்கான். பெரிய தங்கைய டீச்சர் ட்ரெய்னிங் சேர்த்திருக்கேன். சின்னவ ஸ்கூல் ஃபைனல்.. இதான் இந்த ரெண்டு வருசத்துல நடந்தது.. அப்பா இறந்ததும் நாங்களும் வீட்ட ஷிஃப்ட் பண்ணிட்டோம் ஜோசப். இப்ப பெரம்பூர்ல இருக்கோம். அதான் ஒங்கள சந்திக்கவே முடியல. இன்னைக்கி எங்க ஆஃபீஸ் கொல்லீக் ஒருத்தருக்கு பக்கத்துல கல்யாணம்.. அதுக்காக வந்ததும் நல்லதாபோச்சி.. ஒன்னெ சந்திக்க முடிஞ்சதே’ என்றார் மென்மையான குரலில். அதான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது. அவருடைய குரலை அருகில் எனக்குக் கூட கேட்காதவண்ணம் பேசுவார். சிரமப்பட்டுத்தான் கேட்க வேண்டும். பேச்சில் மட்டுமல்ல குணத்திலும் அப்படித்தான் பூவைப் போன்று மென்மையானவர். பெண்ணாய் பிறந்திருக்க வேண்டும் என்று பலமுறை நினைத்திருக்கிறேன்.

சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவரவர் பேருந்தில் ஏறி பிரிந்தோம். பிறகு அடுத்த சில மாதங்களில் நான் இளநிலை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று மும்பைக்கு மாற்றலாகிப் போனேன்.

அங்கு பதினெட்டு மாத காலம் இருந்துவிட்டு சென்னையில் முன்பு மிண்ட் சாலையில் இருந்து கடற்கரைச் சாலைக்கு மாற்றலாகியிருந்த கிளைக்கு உதவி மேலாளரக வந்தேன். அங்கிருந்து மிக அருகாமையில்தான் அவருடைய அலுவலகம் இருந்தது. ஒருநாள் என்னுடைய அலுவலகத்திலிருந்து இரவு கடைசி பேருந்துக்காக சென்னை பாரீஸ் கார்னர் பேருந்து நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்தபோது வெள்ளை வெளேர் நிற உடையில் தூரத்தில் நின்றிருந்த ஒரு உருவத்தைப் பார்த்ததும் என்னுடைய நண்பரின் நினைவு வர அவரை நோக்கி விரைந்தேன்.

அவரேதான்..

நாளை நிறைவு பெரும்..

3 comments:

துளசி கோபால் said...

நிஜத்துக்கும் ரொம்பவே 'உயர்ந்த மனிதர்'.

இந்தமாதிரி நட்பு கிடைக்கக் கொடுத்துவச்சிருக்கணும்.

நீங்க அதிர்ஷ்டக்காரர்தான் ஜோ.

முகு said...

மீதி கதையை படிக்க ஆவலாக உள்ளேன்.
சுவாரசியமான நடை.,

நன்றி,ஜோசப்.
-முகு,கடலூர்

[ 'b u s p a s s' ] said...

ஜோசப் சார்,

உங்க எழுத்து நிறைய தாக்கத்தை ஏற்படுத்துது. எனக்கு ஒரு பத்து நிமிஷம் அந்த வெள்ளை உடை நண்பரை கண் முன்னே நிறுத்திட்டீங்க...

// The best way to pay for a lovely moment is to enjoy it. //

so did I.