20 மே 2008

பணவீக்கம் - காரணிகள்

பணவீக்கம் என்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதற்கும் பொதுவான ஒன்று. வளர்ந்த நாடுகள் எனப்படும் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி போன்ற மேலை நாடுகளிலும் பணவீக்கம் மிக சகஜமாகிவரும் காலம் இது.

ஒரு குறிப்பிட்ட அளவு பணவீக்கம் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதார சந்தையில் தவிர்க்க முடியாத ஒன்று என்பது மட்டுமல்ல தேவையான ஒன்றும் கூட. ஆங்கிலத்தில் இதை necessary evil என்பார்கள்.

ஆனால் அது ‘குறிப்பிட்ட’ அளவைத் தாண்டும்போதுதான் ஒரு சர்ச்சைக்குரிய பொருளாதார பிரச்சினையாக நின்றுவிடாமல் சமுதாய பிரச்சினையாகவும் உருவாகிவிடுகிறது. குறிப்பாக முதிர்ச்சியடையாத அரசியல் சூழலைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் பணவீக்கம் ஒரு சிக்கலான மற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினையாகவே மாறிவிடுகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிவிரைவு பார்வையில் பயணிக்கும்போது அதன் விளைவாக ஏற்படும் பணவீக்கம் தவிர்க்க முடியாத ஒன்று. நாட்டில் உற்பத்தி திறன் அதிகரிக்க, உற்பத்தி அதிகரிக்கிறது. அதிகரிக்கப்பட்ட பொருட்களுக்கு உள்நாட்டில் தேவை (Demand) இருக்கும் பட்சத்தில் அவை அனைத்தும் விலை போகின்றன. அதன் விளைவு உற்பத்தியாளர்களுடைய வருமானம் மற்றும் லாபம் (Revenue Income and Profit) உயர்கிறது. உற்பத்தியாளர்களின் வருமானத்தில் ஒரு பங்கு பணியாளர்களின் வருமானமாக செல்கிறது. உற்பத்தியாளர்களின் வருமானம் அதிகரிக்க, அதிகரிக்க அவர்களுடைய பணியாளர்களின் வருமானமும் உயர்கிறது. தனிநபர் வருமானம் உயர, உயர அவர்களுடைய வாங்கும் திறனும் அதிகரிக்கிறது. விளைவு? அவர்களுடைய தேவையும் அதிகரிக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அலங்கார அல்லது தேவையற்றதாக கருதப்பட்டு வந்த கைப்பேசி, கணினி போன்ற பல பொருட்கள் இன்று ஒருவகையில் அத்தியாவசிய பொருட்களாக உருவெடுத்துள்ளனவென்றால் அதற்கு முக்கிய காரணியாக கருதப்படுவது தனிநபர் வருமான உயர்வு.

சந்தையிலுள்ள நுகர்வோரின் ஒட்டுமொத்த தேவைக்கு (Collective demand of the consumers) நிகராக அவை சந்தையில் கிடைக்கும் அளவும் (Supply) சூழலில் சம்பந்தப்பட்ட பொருளின் விலை உயரத்தானே செய்யும்?


இதை பொருளாதார நிபுணர்கள் பல கோணங்களிலிருந்து ஆய்வு செய்து பல விளக்கங்களை அளித்துள்ளனர்.

1. தேவைகள் (Demand) அதிகரிப்பதால் ஏற்படும் உயர்வு.

ஒரு பொருளின் விலை அதன் நுகர்வோரால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது! அதாவது சந்தையிலுள்ள ஒட்டுமொத்த நுகர்வோரின் தேவை (Demand) மற்றும் அது சந்தையில் கிடைக்கும் அளவு (Supply or Availablity) ஆகியவற்றைப் பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

பொருளாதார வல்லுனர்களின் கூற்றுப்படி ஒரு பொருளின் விலை சந்தையிலுள்ள நுகர்வோரின் தேவையையும் (Demand) அது கிடைக்கும் அளவையும் (supply) பொருத்தே நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால் இந்தியா போன்ற வளரும் சந்தைகளில் ஒரு சில பொருட்கள் தவிர (அன்றாட உணவுப் பொருட்களான முட்டை, காய் கறி, மாமிசம்) பல அத்தியாவசிய பொருட்களின் விலையை அரசே நிர்ணயித்துவிடுவதால் அவற்றின் தேவை மற்றும் கிடைக்கும் அளவைப் பொருத்து அமைவதில்லை.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறியின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுவதை காண்கிறோம். காலை நேரத்தில் கட்டு ஒன்று ரூ.3.00 வீதம் விற்கப்படும் கொத்தமல்லி/புதினா மாலையில் ரூ.1க்கும் கிடைப்பதுண்டு. சில நாட்களில் கட்டு ஒன்று ரூ.5க்கும் கிடைப்பது அரிதாகிவிடும். வேறு சில நாட்களில் எதிர்பாராத விதமாக அதிக அளவிலான சரக்கு வந்து இறங்க கட்டு ஒன்று 50 காசுக்கும் வாங்க ஆளிருக்காது. தக்காளியும் அதேபோல்தான். சந்தையில் வந்திறங்கும் சரக்கின் அளவைப் பொருத்தே அன்றைய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமென்றால் when the supply of a commodity does not keep pace with the demand the prices will rise.

இதைத்தான் தேவைகள் அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வு என்கிறார்கள் (demand pull inflation).

நுகர்வோரின் தேவைகள் அதிகரிப்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. வாங்கும் திறன் அதிகரிப்பு
2. நுகர்வோரின் ரசனையில் ஏற்படும் மாறுதல்கள்
3. விலைவாசி உயரக் கூடும் என்ற எண்ணம்
4. விலை வீழ்ச்சி

இத்துடன் கால மாற்றத்தால் ஏற்படும் குறுகிய கால தேவைகளில் ஏற்படும் மாற்றங்கள் (Seasonal demand).

கடந்த சில மாதங்களில் உலக உணவுப் பொருட்கள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம் இந்தியா மற்றும் சீன நடுத்தர மக்களின் தேவைகளின் அதிகரிப்பு என்று அமெரிக்க அதிபரும் உலக வங்கி தலைவரும் கூறியதைக் கண்டு நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் கொதித்துப் போனார்கள் என்றாலும் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

இன்று சென்னையில் பல் அங்காடிகளை மொய்த்துக்கொண்டு நிற்பது கூப்பன் வாசிகள் எனப்படும் கணினித்துறை ஊழியர்கள்தான். இவர்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியாக வழங்கப்படும் கூப்பன்களை எப்படியாவது செலவழிக்க வேண்டும். மேலும் இதை பணத்திற்குப் பதிலாக ஏற்றுக்கொள்வது பல்பொருள் அங்காடிகள்தான். ஆகவே தேவை உள்ளதோ இல்லையோ இத்தகைய அங்காடிகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கிக் குவிப்பது இவர்களுக்கு வாடிக்கை.

கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் முளைத்துள்ள Mall கள் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், eateriers எனப்படும் உணவுப்பண்டம், பானங்கள் விற்பனைக் கூடங்கள் ஆகியவற்றை முற்றுகையிட்டு தங்களுடைய உபரி வருமானத்தை செலவிடும் இந்திய நடுத்தர மக்களின் வாங்கும் திறன் இன்றைய விலைவாசி உயர்வின் மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை மறுக்க முடியாது.

2. நுகர்வோரின் ரசனையில் ஏற்படும் மாற்றங்கள்.

காலப் போக்கில் ஏற்படும் ரசனை மாற்றங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை விளைவிப்பதில்லை. நம் நாட்டில் தொலைக்காட்சி அறிமுகமாகி சுமார் முப்பது ஆண்டுகளுக்கு மேலாகின்றன. துவக்கத்தில் மேல் தட்டு மக்களிடம் மட்டுமே புழக்கத்தில் இருந்த தொலைக்காட்சி நடுத்தர மக்களிடம் பரவி பிறகு அடித்தட்டு மக்களை வந்தடைய இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இதை காலப் போக்கில் ஏற்பட்ட ஒரு சாதாரண மாற்றம் எனலாம். ஆகவே தொலைக்காட்சி பெட்டியின் விலையில் மிகப்பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

ஆனால் கைத்தொலைபேசி நாட்டில் அறிமுகமாகி முழுமையாக பத்தாண்டுகள் நிறைவாறாத நிலையில் இன்று நாட்டிலுள்ள சுமார் முப்பது கோடி கைத்தொலைபேசி வாடிக்கையாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் USD 250மில்லியன் இந்த சேவைக்கென செலவழித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

இத்தகைய ரசனை மாற்றத்தை எந்த வகையில் சேர்ப்பது?

3. விலைவாசி உயரக்கூடும் என்ற அச்சம்

இதற்கு முக்கிய உதாரணம் பெட்ரோல் விலை. இன்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடப்போகிறது என்ற ஊகம் மட்டுமே நுகர்வோரின் தேவையை பன்மடங்கு உயர்த்திவிடுகிறதே?

4. விலை வீழ்ச்சி

இது நம்முடைய நாட்டைப் போன்ற முதிர்ச்சியடையாத பொருளாதார சந்தையில் ஏற்படும் விசித்திரம். Reduction Sale அல்லது கழிவு விற்பனை. பண்டிகை வந்தால் பண்டிகை கழிவு. ஆடி மாதம் வந்தால் ஆடிக்கழிவு. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். தேவையோ இல்லையோ கழிவு விலையில் வாங்கிக் குவிக்கும் அறியாமை!

இத்தகைய நுகர்வோரின் தேவை அதிகரிப்பதால் ஏற்படும் விலைவாசி உயர்வைக் (Demand Pull Inflation) கட்டுப்படுத்த மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உதவியுடன் பல நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.


தொடரும்...

10 கருத்துகள்:

  1. ஜோசப் சார் - நல்ல கட்டுரை. தொடரவும்.

    புஷ் சொன்னார், காண்டலீஸா ரைஸ் சொன்னார் என நமது அரசியல்வாதிகள் குதித்தாலும் உண்மை என்னவோ நீங்கள் சொன்னதுதான். கடந்த 10 அல்லது 5 ஆண்டுகளில் எத்தனை எத்தனை மால் மற்றும் பல்பொருள் அங்காடிகள். எத்தனை விதவித உணவகங்கள். வீட்டில் மட்டுமே சாதாரண சாப்பாடு சாப்பிட்டு வந்த பலரும் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக தினமும் அல்லது வாரத்திற்கு 2 நாளாவது வெளியில் உண்பதும் அதுவும் விதவித உணவு வகைகள். திருமணங்களையே எடுத்துக் கொள்ளுங்கள். எத்தனை வித டிபன் வகைகள். சாப்பாட்டு விதங்கள். தேவையோ இல்லையோ மக்கள் உணவு உண்பதில் ஒரு வித பகட்டை காண்பிப்பதாகவே தெரிகிறது.

    இன்னோரு விஷயத்தைப் பற்றியும் உங்கள் கட்டுரையை எதிர்பார்க்கிறேன். ஏ.டி.எம். பற்றியது.

    * ஒரு வங்கிக்கு ஒரு ஏ.டி.எம். நிறுவ எத்தனை செலவு ஆகிறது.

    * பின்னர் அதனை பராமரிக்க எவ்வளவு செலவு ?

    * இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளுக்கும் தற்போது எத்தனை ஏடிஎம்கள் உள்ளன.

    * இந்த 1 ஏப்ரலிலிருந்து எந்த ஏடிஎம்மிலும் வங்கிக் கணக்கைப் பார்ப்பது இலவசம் எனவும், ஏப்ரல் 1 2009லிருந்து பணம் எடுத்தாலும் இலவசம் என்கிற நிலை வரும்போது இத்தனை ஏடிஎம்களும் என்ன ஆகும்.

    இப்போது ஒரு சதுர கி.மீக்குள் சுமார் 10 ஏடிஎம்களாவது (நகரங்களில்) உள்ளன. அவற்றில் எத்தனை அடுத்த வருடத்திற்குப் பிறகு தொடர்ந்து செயல்படும் ?

    புதிதாக ஏடிஎம் ஒரு இடத்தில் துவக்கவேண்டும் என்றால் எந்த வங்கி முயற்சி எடுக்கும் அல்லது மத்திய ரிசர்வ் வங்கி அதனை முடிவு செய்யுமா ?

    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வாங்க சாம்பார் வடை,

    எதற்கெடுத்தாலும் கோஷம், மறியல் என்பதிலேயே குறியாயிருக்கும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் தொல்லையால் அரசும் பல தவறான நடவடிக்கைகளை எடுத்து சிக்கலை மேலும் சிக்கலாக வேண்டிய சூழல் இப்போது. இந்த சிக்கலில் இருந்து மீள எப்படியும் ஐந்தாறு மாதங்களாவது ஆகும்.

    உங்களுடைய வங்கி ATM கள் குறித்து கேள்விகளுக்கு என்னுடைய பதில்களை ஒரு பதிவாகவே எழுதுகிறேன். வேலைப்பளு காரணமாக சற்று தாமதமாகலாம்.

    பதிலளிநீக்கு
  3. தோழரே ,

    நீங்கள் கூறிய கருத்து உண்மைதான், அதற்காக நம் நிதித்துறை அமைச்சரும், அவரது அமைச்சகமும் திறமையாக செயல் படுகிறது என்று கூறுகிறீர்களா....? பண வீகதுக்கு முழு காரணமும் உலக பொருளாதாரமே காரணம் அல்ல . நம் இந்திய அரசின் திறனற்ற செயலாக்கம்தான் ........

    பதிலளிநீக்கு
  4. டிபிஆர் சார்,
    ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. துறை வல்லுனருடைய கட்டுரை அப்படின்னு சொல்லும்படியா இருக்கும். இதன் தொடர்ச்சியை கண்டிப்பா எழுதுங்க.

    //கடந்த சில மாதங்களில் உலக உணவுப் பொருட்கள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம் இந்தியா மற்றும் சீன நடுத்தர மக்களின் தேவைகளின் அதிகரிப்பு என்று அமெரிக்க அதிபரும் உலக வங்கி தலைவரும் கூறியதைக் கண்டு நாட்டிலுள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் கொதித்துப் போனார்கள் என்றாலும் அதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. //

    ஆமாம் இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது. அதே போல் கச்ச எண்ணெய் விலை உயர்விலும் நாம் மிகப்பெரிய பங்கை ஆற்றிக்கொண்டு இருக்கிறோம்.. வழக்கம் போல வோட்டுப்பொறுக்கிகள் ஏதோ எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று உளரிக்கொட்டி இருக்கின்றனர். அதுவும் அந்த சப்பைகட்டையான அமெரிக்கர்கள் இந்தியர்களை விட 5 மடங்கு அதிகமாக உண்பதை காட்டியது செம காமெடி..

    பதிலளிநீக்கு
  5. வாங்க madyy,

    அவரது அமைச்சகமும் திறமையாக செயல் படுகிறது என்று கூறுகிறீர்களா....? //

    நான் அவ்வாறு கூற வரவில்லை.

    பண வீகதுக்கு முழு காரணமும் உலக பொருளாதாரமே காரணம் அல்ல . //

    உண்மைதான்.

    நம் இந்திய அரசின் திறனற்ற செயலாக்கம்தான் ........//

    இப்படியும் கூறிவிடலாகாது. இப்போது நிலவிவரும் பணவீக்கத்தை இந்திய அரசு மட்டுமே கட்டுப்படுத்திவிட முடியாது. அரசின் சமீபத்திய சில நடவடிக்கைகள் அரசியல் சூழ்நிலையை வேண்டுமானால் சமாளிக்க உதவும். ஆனால் அது நிரந்தர தீர்வாகாது. தொடர்ந்து படித்துவிட்டு உங்களுடைய கருத்தை கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க சந்தோஷ்,

    வழக்கம் போல வோட்டுப்பொறுக்கிகள் ஏதோ எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று உளறிக்கொட்டி இருக்கின்றனர். //

    எதிர்க்கட்சிகளின் வேலையே அதுதானே.

    பதிலளிநீக்கு
  7. TBR Sir,

    What about the 22 % increae in money supply (M3) year over year ?

    http://rbidocs.rbi.org.in/rdocs/Bulletin/DOCs/84412.xls

    http://rbidocs.rbi.org.in/rdocs/Bulletin/DOCs/84411.xls

    Too much money chasing too few goods. and esp goods in demand and in short supply like foodgrains, oil and real estate ?

    Also my old article :

    http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html

    பதிலளிநீக்கு
  8. வாங்க அதியமான்,

    Increase in money supply is one of the reasons for sudden spurt in inflation. But that is not the only reason. Similarly containing the inflation should not be the sole aim of RBI or any monetary authorities worldwide. All the monetary and administrative measures should be simultaneously initiated by the Govt in consultation with RBI to contain the inflation.

    I'll discuss that in the coming posts.

    For the next few days I am tied up with meetings. I'll continue after that.

    பதிலளிநீக்கு
  9. // நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறியின் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலைக்கு விற்கப்படுவதை காண்கிறோம். காலை நேரத்தில் கட்டு ஒன்று ரூ.3.00 வீதம் விற்கப்படும் கொத்தமல்லி/புதினா மாலையில் ரூ.1க்கும் கிடைப்பதுண்டு. சில நாட்களில் கட்டு ஒன்று ரூ.5க்கும் கிடைப்பது அரிதாகிவிடும். வேறு சில நாட்களில் எதிர்பாராத விதமாக அதிக அளவிலான சரக்கு வந்து இறங்க கட்டு ஒன்று 50 காசுக்கும் வாங்க ஆளிருக்காது. தக்காளியும் அதேபோல்தான். சந்தையில் வந்திறங்கும் சரக்கின் அளவைப் பொருத்தே அன்றைய விலை நிர்ணயிக்கப்படுகிறது. //


    சில சமயம் சில விஷமிகள் உணவு பண்ண்டங்களை பதுகுதன் முலம் கூட விலை ஏற்றம் கானுமல்லவா?


    // உலக உணவுப் பொருட்கள் சந்தையில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வுக்கு ஒரு காரணம் இந்தியா மற்றும் சீன நடுத்தர மக்களின் தேவைகளின் அதிகரிப்பு என்று அமெரிக்க அதிபரும் உலக வங்கி தலைவரும் கூறியதைக் //

    // இன்று சென்னையில் பல் அங்காடிகளை மொய்த்துக்கொண்டு நிற்பது கூப்பன் வாசிகள் எனப்படும் கணினித்துறை ஊழியர்கள்தான். இவர்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியாக வழங்கப்படும் கூப்பன்களை எப்படியாவது செலவழிக்க வேண்டும். மேலும் இதை பணத்திற்குப் பதிலாக ஏற்றுக்கொள்வது பல்பொருள் அங்காடிகள்தான். ஆகவே தேவை உள்ளதோ இல்லையோ இத்தகைய அங்காடிகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கிக் குவிப்பது இவர்களுக்கு வாடிக்கை. //

    இதில் ஒரு அழகு என்னவென்றால் பெரும்பாலான மென்பொருள் தொழிற்சாலைகள் அமெரிக்காவை சார்ந்ததுதான் ... " குழந்தையைம் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்கள் " ...

    பதிலளிநீக்கு
  10. வாங்க Madyy,

    சில சமயம் சில விஷமிகள் உணவு பண்ண்டங்களை பதுகுதன் முலம் கூட விலை ஏற்றம் கானுமல்லவா? /

    உண்மைதான். இதைத்தான் supply side management என்கிறார்கள். வருகின்ற பதிவுகளில் இதை எழுதுகிறேன். அலுவலக பளு காரணமாக தொடர்ந்து எழுத தாமதமாகிறது.

    பதிலளிநீக்கு