09 ஜனவரி 2006

என்னைப் பற்றி...

கடந்த மாதம், தமிழ்மணம் நிர்வாகிகளுள் ஒருவர் என்னை தொடர்பு கொண்டு இவ்வார நட்சத்திரமாக இருக்க விருப்பமா என்று கேட்டபோது நானா, நட்சத்திரமா என்று நினைத்தேன்.

ஏனென்றால் நான் என்னுடைய வலைப்பதிவை ஆரம்பித்தே சுமார் நான்கு மாதங்களே ஆகிறது. இதுவரை பெரிதாக ஒன்றும் எழுதிவிடவில்லையே என்றும் நினைத்தேன்.

எதிர்வரும் வாரத்தில் அதுவும் நட்சத்திரமாக, நம் தமிழ்மண நண்பர்களின் பார்வைக்கு என்னுடைய இடுகைகள் முன்வைக்கப்படும்போது அவர்கள் அனைவருடைய கவனத்தையும் கவரும் வகையில் என்னால் எழுதமுடியுமா என்றெல்லாம் ஒரு சில நிமிடங்கள் என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

பிறகு, கடந்த சில வாரங்களில் நட்சத்திரங்களாக தேர்வு செய்யப்பட்ட என்னுடைய நண்பர்களின் நட்சத்திரப் பதிவுகளை மீண்டும் ஒருமுறை வாசித்தேன். அதில் உள்ள இடுகைகள் சிலவற்றை, முக்கியமாக என்னை மிகவும் கவர்ந்த இளம் எழுத்தாளர்களான ஜோ, கோ. ராகவன் போன்றோருடைய பதிவுகளையும் அவர்களைப் பாராட்டி வந்த பின்னூட்டங்களையும் வாசித்தபோது மலைப்பாயிருந்தது.

அவர்களைத் தொடர்ந்து துளசி மற்றும் தருமி அவர்களுடைய பதிவுகளையும் வாசித்தேன். அவர்களுடைய எழுத்துத் திறமைக்கு ஈடுகொடுக்க முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

‘உன்னால் முடியாது’ என்று பதில் வந்தாலும் முயன்றுதான் பார்ப்போமே என்ற தீர்மானத்துடன் என்னை தொடர்பு கொண்ட தமிழ்மணம் நிர்வாகிக்கு சரியென்று பதில் எழுதினேன்.

இதோ, உங்கள் முன்னிலையில் இவ்வார நட்சத்திரமாக....

என்னுடைய முதல் இடுகையில், என்னைப் பற்றி நான் சுருக்கமாக கூற வேண்டுமானால்...

நான் சென்னையில் ஒரு தனியார் வங்கியின் கணினி இலாக்காவின் தலைவராக பணி புரிகிறேன். என் கீழ் சுமார் முப்பது பொறியாளர்கள் சென்னையிலும் கொச்சியில் சுமார் இருபது பேரும் பணிபுரிகிறார்கள்.

எனக்கு ஒரு(!) மனைவியும் இரு மகள்களும்.

மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து அவர் கணவருடன் கோலாலம்பூரில் வாசம். கடந்த இரு வாரங்களாக சென்னையிலிருந்துவிட்டு நேற்றுதான் திரும்பிச் சென்றார்கள்.

இளையவள் கணினி பொறியாளர் படிப்பில் இறுதியாண்டு.

திருமணம் முடிந்த இந்த இருபத்தைந்து வருடங்களில் என் குடும்பத்தாருடன் அதிக பட்சம் ஐந்தாண்டுகள் தொடர்ந்து இருந்திருப்பேன். மற்ற நேரங்களில் எல்லாம் வெவ்வேறு நகரங்களில் நானும் சென்னையிலேயே தொடர்ந்து அவர்களும். ரிமோட் கண்ட்ரோலே தேவையில்லாமல் திறம்பட என் குடும்பத்தை நடத்திச் சென்றவர் என் மனைவி.

என் வங்கி அலுவலில் சாதாரணமாக மூன்றாண்டுகளுக்கு ஒருமுறைதான் மாற்றலாகும். ஆனால் எனக்கு தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு மேல் ஒரு ஊரில் இருக்க வாய்ப்பு கிடைத்ததில்லை.

ஏன்?

முன்கோபம். அதன் விளைவாக யாருடனும் ஒத்துப்போக முடியாத நிலை. சிறிய சிறிய விஷயங்களுக்கெல்லாம் கூட அதீத உணர்ச்சிவசப்படும் குணம்.

திருமணம் ஆன புதிதில் கேட்கவே வேண்டாம்.

ஆயினும் என்னுடைய சிறுபிள்ளைத்தனத்திற்கெல்லாம் பொறுமையுடன் ஈடு கொடுத்து என்னை மெள்ள, மெள்ள ஒரு சராசரி மனிதனாக மாற்றியமைத்த பெருமையும் என் மனைவியையே சாரும்.

இதோ, கடந்த ஐந்தாண்டுகளாக யார் வம்புக்கும் செல்லாமல் நல்ல பிள்ளையாக இருப்பதற்கு என் இரு பிள்ளைகளும் ஒரு பெரிய காரணம்.

என் பிள்ளைகள் இருவரையுமே முழுச்சுதந்திரம் கொடுத்து எந்த ஒரு நொடிப்பொழுதும் ‘நான் ஒரு பெண். என்னால் இவ்வளவுதான் முடியும்.’ என்று நினைக்கலாகாது என்று சொல்லி, சொல்லி வளர்த்தேன்.

‘தந்தை சொல் மிக்க மந்திரமில்லை’ என்பதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை. யார், யாருடைய பேச்சுக்கும் எதிர் பேச்சு பேசலாம் என்ற கருத்துச் சுதந்திரமும் பேச்சு சுதந்திரமும் என் குடும்பத்தில் ஆரம்ப முதலே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாயிருந்தேன். இளமையில் எனக்குக் கிடைக்காத அரிய சுதந்திரங்கள் அவை!

இன்னொன்றிலும் படு உறுதியாயிருந்தேன். அதான் என்னுடைய குலம் என்ன என்பது என் பிள்ளைகளின் மனதில் ஊன்றிவிடக் கூடாதென்பதில். அது அவர்களுடைய பள்ளி சான்றிதழ்களில் காணப்படும் வெறும் குறிப்பாக மட்டுமே இருந்தது.

என் குலம், மொழி போன்றவை என்னை மற்றவரிடமிருந்து பிரித்துப் பார்க்கும் ஒரு முள்வேலியாகவே நான் கருதுகிறேன். அது என்மேல், என் பெற்றோரால் திணிக்கப்பட்ட ஒன்று. அதில் எனக்கு எந்தவித உடன்பாடும் இல்லை. ஆனால் என்னுடைய திருமணம்? அது நடந்து முடிந்துபோன விஷயம். காலம் கடந்து விசனப்படுவதில் எந்த பலனும் இல்லை.

என் மூத்த மகளுடைய திருமணத்தை நான் அவளுடைய விருப்பத்திற்கே விட்டுவிட்டேன். என்னுடைய கருத்தும் என் பிள்ளைகளுடைய கருத்தும் ஒத்துப் போனது வசதியாய் போனது. அதனால் என் குடும்பத்திற்குள் பூசல் வந்தபோதும் என் மகளுடைய உறுதி எனக்கும் தொற்றிக்கொள்ள மலேசியவாழ் இந்திய வம்சத்தைச் சார்ந்த மலேசியர் ஒருவரை மணம் புரிந்து பதினைந்து மாதங்கள்...

இதுதான் என்னைப் பற்றிய சுருக்கம்.

சரி, இவ்வாரத்தில் என்ன செய்வதாய் உத்தேசம்..

நான் என்னுடைய ‘என்னுலகம்’ பதிவில் எழுதிவரும் ‘திரும்பிப் பார்க்கிறேன்’ என்ற தொடருடன் எனக்குப் பிடித்த சில மாமனிதர்களைப் பற்றி எழுதலாம் என்றிருக்கிறேன்.

ஒரு அறிவியல் வல்லுனர், ஒரு ஆராய்ச்சியாளர், ஒரு சமூக சேவகி, ஒரு அரசியல் தலைவர் என வரும் வாரம் முழுவதும் எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

என்னுடைய இரண்டாவது வலைப்பதிவான ‘என் கதையுலகம்’ பதிவில் இன்று ஒரு புதிய நாவலைத் துவக்குகிறேன். என்னுடைய வங்கி அலுவலைப் பின்னணியாக வைத்து எழுதுகிறேன்.

இப்பதிவைக் குறித்து தினமலரில் எழுதியலிருந்து எனக்கு தமிழ்மணத்திற்கு வெளியிலும் பல நண்பர்கள் கிடைத்துள்ளனர்.

எனக்கு தளம் அமைக்க வாய்ப்பளித்த ப்ளாகருக்கும் என் இடுகைகளைத் திரட்டி அங்கத்தினர்களின் பார்வைக்கு வைத்த தமிழ்மணம் நிர்வாகி காசி அவர்களுக்கும் அவருக்கு பக்கபலமாக இருந்து இத்திரட்டியைத் திறம்பட நடத்திவரும் மற்ற எல்லா நண்பர்களுக்கும் நன்றி..

தொடர்ந்து படியுங்கள். உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்..

நன்றியுடன்,
டிபிர். ஜோசஃப்

33 கருத்துகள்:

  1. வாங்க நட்சத்திரமே!

    ஆரம்பத்துலேயே போட்டீங்களே ஒரு போடு

    //எனக்கு ஒரு(!) மனைவியும்...//


    யாரங்கே?... ( கை தட்டும் ஒலி)

    நடக்கட்டும் கச்சேரி.

    பதிலளிநீக்கு
  2. வாங்க வாங்க நட்சத்திரம் சார். நாலு மாசமாவே நட்சத்திரமாத் தானே இருக்கீங்க. என்னமோ இந்த வாரம் மட்டும் நட்சத்திரமா இருக்கப் போற மாதிரி எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள் வணக்கங்களுடன்.

    பதிலளிநீக்கு
  3. உங்க வழக்கமான நகைச்சுவைப் பதிவுகள் இந்த வாரத்திலும் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஏமாத்திடாதீங்க.

    பதிலளிநீக்கு
  4. ஜோசப் சார்,
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .வலைப்பதிவுகளில் இப்போது அதிக அளவில் ,அதே நேரத்தில் மிக சுவாரஸ்யமாக எழுதுவது நீங்கள் தான்.உங்களுக்கு நட்சத்திர வாய்ப்பெல்லாம் ஜுஜுபி.பின்னி எடுப்பீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    ரசிகர்களில் ஒருவன்,
    ஜோ

    பதிலளிநீக்கு
  5. நன்றி கல்ஃப் தமிழன்.

    நான் பதிஞ்ச அடுத்த நிமிஷமே உங்களுடைய வாழ்த்துகளை இட்டுவிட்டீர்கள் போலிருக்கிறது.

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வாங்க துளசி,

    //எனக்கு ஒரு(!) மனைவியும்...//

    இப்பல்லாம் இது ஒரு ஆச்சரியமான விஷயம் தானே.. என்ன சொல்றீங்க?

    கோபால் சார் கோச்சுக்க மாட்டார் இல்ல?

    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி துளசி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க சத்தீஷ்,

    It looks much longer.

    போர் அடிக்கலை இல்லே? இப்படியே கொண்டு போகணும்தான் ஆசை..

    உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வாங்க குமரன்,

    நாலு மாசமாவே நட்சத்திரமாத் தானே இருக்கீங்க. //

    நீங்க சொன்னா சரிதான். ஆனா இந்த வாரம் Officialஆ ஸ்டார். அதான் வித்தியாசம்.

    உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  9. உங்க வழக்கமான நகைச்சுவைப் பதிவுகள் இந்த வாரத்திலும் இருக்கும்ன்னு நினைக்கிறேன். //

    இந்த வாரம் கொஞ்சம் சீரியசான விஷயங்கள எழுதணும்னு நினைக்கிறேன் குமரன். பார்ப்போம். இன்னும் ஆறு நாள் இருக்கில்ல?

    பதிலளிநீக்கு
  10. வாங்க டிராஜ்.

    மறக்கறதுக்கு முன்னால ஒரு விஷயம். உங்க gmail addressல ஏதும் ப்ராப்ளமா? ரெண்டு நேரம் ஈ காலண்டர அனுப்பிச்சேன். 'Could not be delivered'னு மெசேஜ் வருதே. இன்னைக்கி மறுபடியும் அனுப்பியிருக்கேன். வந்தா சொல்லுங்க.

    Parenting பத்தியா? இக்கால தலைமுறை இதில் சூரர்களாச்சே.. அதுவுமில்லாம உங்களுக்கு அப்புறம் வர்ற தலைமுறைய வளக்கறது ரொம்பவும் டெலிகேட்டான விஷயம்.. I will try.

    பதிலளிநீக்கு
  11. வாங்க ஜோ,

    உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    பின்னி எடுப்பீர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.//

    ஏதோ என்னால முடிஞ்சது. பார்ப்போம். வார கடைசியில என்ன சொல்றாங்கன்னு.

    பதிலளிநீக்கு
  12. அன்பு நண்பரே!

    காணச் சிறிது காலதாமதமாகி விட்டது.
    இருப்பினும் என் இதயங்கனிந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  13. வாங்க ராஜ்,

    உங்க புது அட்ரசுக்கு அனுப்பியிருக்கேன். வந்ததும் சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  14. வாங்க ஞான வெட்டியான்.

    நீங்க அன்பு நண்பரேன்னு கூப்டறது எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா.

    உங்க வாழ்த்துக்கு என் இதயங்கனிந்த நன்றி.

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துக்கள் நண்பரே..
    மேலும் பல நல்ல பதிவுகளை தர வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. ஜோசப் சார். முதல்ல வாழ்த்துகள். நட்சத்திரமாகி ஜொலிச்சவங்க உண்டு. ஆனா ஜொலிச்சதனால நட்சத்திரமானதுல நீங்களும் ஒருத்தர்னு நெனைக்கிறேன். இந்த வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.

    லேட்டா வாழ்த்துச் சொல்றேனேன்னு கோவிச்சுக்கிராதீங்க. இப்பத்தான் பாக்க முடிஞ்சது. திங்கக் கெழம பாருங்க.

    பதிலளிநீக்கு
  17. ஜோசஃப் சார்,
    வாழ்த்துக்கள். குமரன் கூறியதைப் போல நீங்க எப்போதும் ஒளிரும் நட்சத்திரம், இந்த வாரம் தூள் கிளப்பிடுங்க !

    வாழ்த்து சொல்ல நேரம் காலம் உண்டா என்ன, என்னால் முதலில் ஓடி வர முடியவில்லை :(

    பதிலளிநீக்கு
  18. வாங்க நிலவு நண்பன்,

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி..

    நல்ல பதிவுகளை விரும்பும் உங்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்ய முயலுவேன்.

    பதிலளிநீக்கு
  19. வாங்க ராகவன்,

    லேட்டா வாழ்த்துச் சொல்றேனேன்னு கோவிச்சுக்கிராதீங்க//

    என்ன நீங்க, இதுக்கெல்லாமா கோச்சிப்பாங்க. அதுவும் உங்கள போயி. ஒரே ஊர்க்காரங்கள கோச்சிக்க முடியுமா?

    வேலைதான் முக்கியம். இதெல்லாம் எப்ப வேணும்னாலும் பாத்துக்கலாம்.

    உங்க வாழ்த்துக்கு நன்றி ராகவன்.

    சரி, என்னுடைய ஈகாலண்டர் கிடைச்சுதா? Feedback கேட்டிருந்தேனே.

    பதிலளிநீக்கு
  20. வாங்க மணியன்,

    வாழ்த்து சொல்ல நேரம் காலம் உண்டா என்ன, என்னால் முதலில் ஓடி வர முடியவில்லை :( //

    நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட்.. உங்க கவலையான ஸ்மைலிய பார்த்துட்டு சோகமாயிட்டேன் :-))

    அதான் ரெண்டு ஸ்மைல்..

    உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி மணியன்.

    பதிலளிநீக்கு
  21. vaangka, vaangka!

    //என்னுடைய திருமணம்? அது நடந்து முடிந்துபோன விஷயம். காலம் கடந்து விசனப்படுவதில் எந்த பலனும் இல்லை//
    ThuLasi, ithaiyum paarungka :-))

    பதிலளிநீக்கு
  22. வாங்க ரா.உஷா,

    வரும்போதே கலகமா?

    நான் சொல்ல வந்தது கலப்புத் திருமணம் பண்ணிக்க முடியலையேன்னு.. நீங்க வேற ஏதோ சொல்ல வரா மாதிரி தெரியுதே..

    துளசி கண்டுக்காதீங்க.

    பதிலளிநீக்கு
  23. நட்சத்திர வாரமெல்லாம் உங்கலுக்கு ஒரு விஷயமா.. வழக்கம் போல கலக்குங்க!

    பதிலளிநீக்கு
  24. வாங்க சுதர்சன்,

    நட்சத்திரம் ஒரு கணிப்பு அல்ல.. நம்முடைய படைப்புகளை தனியாய் எடுத்து காட்ட தமிழ்மணம் அளிக்கும் வாய்ப்பு என்றுதான் நான் நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  25. நட்சத்திர வாரத்தில் ஒரு வால் நட்சத்திரமா வித்தியாசம் காட்டப்போறீங்கன்னு தெரியுது .... ஜமாய்ங்க .... ஜொசfப் சார்....

    -அன்புடன் இளந்திரையன்

    பதிலளிநீக்கு
  26. Hello TBR

    Heartiest congratulations for your
    "Weekly Star" recognition.

    "வலைப்பதிவுகளில் இப்போது அதிக அளவில் ,அதே நேரத்தில் மிக சுவாரஸ்யமாக எழுதுவது நீங்கள் தான"
    My feelings exactly.

    வாழ்த்துக்கள

    Murali

    பதிலளிநீக்கு
  27. வாங்க சத்தீஷ்,

    நீங்க சொன்னதுக்கப்புறம்தான் செக் பண்ணிப் பார்த்தேன். போலின்னு தெரிஞ்சதும் எடுத்துட்டேன்.

    மிக்க நன்றி சத்தீஷ்.

    பதிலளிநீக்கு
  28. வாங்க இளந்திரையன்,

    உங்க நம்பிக்கை வீண் போகாம பார்த்துக்கணும். நன்றி.

    பதிலளிநீக்கு
  29. வாங்க முரளி,

    உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  30. சார்,

    நான் உங்களை சென்னையில் வலைவீசி தேடினால் நீங்க இங்க நட்சத்திரமா உட்கார்ந்திருக்கீங்க..

    கலக்குங்க....

    ஒரு சிறுகதை, ஒரு நகைச்சுவை பதிவு கண்டிப்பாக போடவும்....இது சீடனின் கட்டளை..

    today only i rejoined duty in mangalore..yet to read the posts

    பதிலளிநீக்கு
  31. என்ன முத்து நீங்க, ஒரு மெய்ல் குடுத்திருந்தா சந்திச்சிருக்கலாமே. சனிக்கிழமை மாலை டோண்டு சார் ஃபோன்ல கூப்டு நீங்க கண்காட்சிக்கு வந்தா வலைப்பதிவாளர்களை சந்திக்கலாமே என்றார். ஆனால் அன்று மாலை ஃப்ளைட்டில்தான் என் மூத்த மகளும் மருமகனும் மலேசியா திரும்பி செல்வதாய் இருந்தது. ஆகவே என்னால் வரமுடியவில்லை. அதன் பிறகுதான் தெரிந்தது நீங்கள் ஞாயிறும் சென்னையிலிருந்த விஷயம்.

    அடுத்த முறை சென்னை வரும்போது ஒரு மெய்ல் கொடுத்துவிட்டு வாருங்கள்.

    உங்கள் வாழ்த்துக்கு நன்றி. காமெடி ட்ராக்குக்கு நிறைய யோசிக்கணும். சிறுகதையும் அப்படித்தான்.

    என்கதையுலகம் ப்ளாக்குல ஒரு புது தொடர்கதை ஆரம்பிச்சிருக்கேன். இப்போதைக்கு அந்த எபிசோட்சை எழுதறதுக்கே ராத்திரி 12 மணி வரை முழிச்சிக்கிட்டிருக்கேன். வீட்ல உங்களுக்கு என்ன கிறுக்கா பிடிச்சிருக்குன்னு ஏச்சு வேற.. என்ன பண்ண சொல்றீங்க. கிறுக்குத்தான் பிடிச்சிருச்சின்னு நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  32. கதாநாயகியை வில்லன் கற்பழிக்க துரத்திக் கொண்டு ஓடுவான். ஆனால் கதாநாயகி மாட்ட மாட்டாள். கடைசியில் கதாநாயகன் காப்பாற்றி விடுவான். ஆனாலும் வில்லன் என்ன செய்ய நினைத்தானோ அதைத்தானே கதாநாயகனும் கடைசியில் செய்யப் போகிறான்?

    பதிலளிநீக்கு