12 ஜனவரி 2006

எனக்குப் பிடித்த மாமனிதர்கள் - 3 (2)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் – குறள் 314

தனக்குத் துன்பம் செய்தவர்களைத் தண்டிப்பதாவது அவர்கள் வெட்கமுறும்படி நல்ல உதவியை அவர்களுக்கு செய்து விடுவதாகும்.

காளி கோவில் அருகே இறக்கும் தருவாயில் இருப்பவர்களைக் கொண்டு சென்று சிகிச்சை செய்வதால் கோவிலின் புனிதம் கெட்டுவிடுகிறதென மறியல் செய்த காளி கோவில் பூசாரிக்கே நோய் முற்றி கவனிப்பார் யாருமில்லாததால் அவரையும் இதே இல்லத்தில் கொண்டு வந்து சேர்த்தனர். இவர் தங்களுடைய இல்லத்தையே மூடச் செய்தவர்களுள் ஒருவராயிற்றே என்று பாராமல் அவரை இல்லத்தில் சேர்த்து பணிவிடை செய்தனர் அன்னை திரேசா இல்லத்து சகோதரிகள்.

இத்தனை அன்பு படைத்தவர்களிடம் அறியாமையுடன் நடந்து கொண்டதை எண்ணி வருந்திய பூசாரி அவரை நலம் விசாரிக்க வந்த அன்னையின் கரம் பற்றி, ‘நான் முப்பது ஆண்டுகளாக கருமை நிறம் கொண்ட தேவதைக்குப் பணிபுரிந்தேன். அத்தேவதை இதோ உயிர் பெற்று வெண்ணிறத் தேவதையாக வந்து என் உயிரைக் காப்பாற்றி விட்டாள்.’ என்று கூறி கண்ணீர் உகுத்தார்.

ஆரம்ப காலங்களில் அன்னை திரேசா ஒரு துணிப்பையைக் கரங்களில் எடுத்துக்கொண்டு கொல்கொத்தா நகரவாசிகளிடம், கடைகளிலும் பண உதவி வேண்டி செல்வது வழக்கம். ஒரு நாள் ஒரு பெரிய கடையின் உரிமையாளர் அன்னையின் கைகளில் காறி உமிழ்ந்தார். இதை முற்றிலும் எதிர்பாராத அன்னை பதட்டப்படாமல் தன் கைகளை துடைத்துக்கொண்டு அவரைப் பார்த்து புன்னகையுடன் இது நீங்கள் உங்கள் உயிரையே எனக்கு தானமாக கொடுத்ததற்கு சமம் என்றார். அதைக் கேட்ட கடை முதலாளி உடனே எழுந்து ஒடி வந்து அன்னையின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் அன்னை அப்போது எழுப்பிக்கொண்டிருந்த குழந்தைகள் காப்பக கட்டிடத்தின் முழு செலவையும் ஏற்றுக்கொண்டார். (இச்சம்பவம் மூலப் புத்தகத்திலிருந்து எடுக்கப் பட்டது அல்ல. நான் சென்னை லொயோலா கல்லூரியில் அன்னக்கு நடந்த பாராட்டு விழாவில் கேட்டது)

தொழு நோயாளர்களுக்கு ஓர் இல்லம்

1959ம் ஆண்டு அன்னை அவர்கள் மேற்கு வங்காள அரசின் உதவியுடன் ஒரு தொழு நோய் மருத்துவமனையை திறந்தார்.

கண்கவர் தோட்டங்களின் மத்தியில் இரு நூறு குடியிருப்புகளைக் கொண்ட சாந்தி நகரில் தொழு நோயாளிகள் நிம்மதியுடன் சிகிச்சை பெற்றனர். அந்த சாந்தி நகர் இப்போதும் ‘காந்திஜி பிரேம் நிவாஸ்’ என்ற பெயருடன் தொழு நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை செய்துவருகிறது.

இங்கு தொழு நோயாளிகளுக்கு சிகிச்சை மட்டுமின்றி செங்கல் சூளை, பால் பண்ணை, அச்சுக் கூடம் என பல தொழில்வசதிகளை செய்து தந்ததன் மூலம் அவர்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கும் வழி வகுத்துக் கொடுக்கப்பட்டது.

குழந்தைகள் காப்பகம் - சிசுபவன்

குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். ஏனெனில் மோட்ச ராச்சியம் இத்தகையோருடையதே என்ற யேசு பிரானின் அறிவுரைக்கேற்ப அன்னை அவர்கள் ‘அழிக்கப்படப் பிறந்தோர் குழந்தைகள் அல்ல. அவர்கள் இவ்வுலகத்தை ஆளப் பிறந்தவர்கள். ஆகவே வளர்க்க முடியாவிட்டால் என்னிடம் கொடுங்கள்’ என்று இருகரம் நீட்டி அனாதையாய் தெருக்களில் விடப்பட்ட குழந்தைகளை எடுத்து வளர்க்க அவர் 1953ம் ஆண்டு துவக்கிய இல்லத்தின் பெயர்தான் நிர்மல் சிசுபவன்.

அனாதைத் தாய்மார்களுக்கும் உதவி

அனாதையாய் விடப்பட்ட தாய்மார்களுக்கும் இவ்வில்லத்திலேயே அன்னை அவர்கள் புகலிடம் அளித்தார். வஞ்சகர்களால் ஆசைக் காட்டி மோசம் செய்யப்பட்ட அனாதை இளம் பெண்களுக்கு வாழ்வளிக்கும் அற்புத இல்லமாக அமைந்தது இவ்வில்லம்.

ஏழை எளியவர்களுக்கு கல்வி வசதி

1957ம் வருடம் ஐந்தே ஐந்து அனாதை மாணவர்களைக் கொண்டு துவக்கப்பட்ட இலவச கல்வியளிக்கும் பள்ளி 1958ம் ஆண்டு முடிவடையும் தருவாயில் சுமார் 200 மாணவர்களைக் கொண்ட பள்ளியாக உருவெடுத்தது.

நூறு மாணவ மாணவியரைக் கொண்டு திகழ்ந்த எந்த ஒரு பள்ளிக்கும் கட்டிடம் கட்டித் தருகின்ற கொல்கொத்தா மாநகராட்சியின் கவனத்தை அன்னையின் பள்ளியும் கவர்ந்தது. அவர்களுடைய முழு ஒத்துழைப்புடன் அன்னையின் கல்விப் பணி முழு வீச்சில் தொடர்ந்தது. அடுத்த ஐந்தே ஆண்டுகளில் கொல்கொத்தா நகரெங்கும் விரிவடைந்து பதினான்கு பள்ளிகளானது.

மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியளிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தன் சபை கன்னியர்களை ஆசிரியர் பயிற்சிக்கு அனுப்பினார்.

அத்துடன் திருப்தியடையாத அன்னை தன் தொழு நோயாளிகளின் இல்லத்தில் வசித்துவந்தவர்களின் குழந்தைகளுக்கென பதினைந்தாவது பள்ளியைத் துவக்கி அவர்களுடைய குழந்தைகளின் அறிவு கண்களையும் திறந்து வைத்தார்.

எல்லாம் இறைவன் சித்தம்

மரம் வைத்தவன் கண்டிப்பாய் தண்ணீரையும் ஊற்றுவான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டவர் அன்னை தெரேசா.

அவர்கள் துவக்கிய அன்பின் பணியாளர்கள் சபை உலகெங்கும் ஒரு ஆலமரத்தைப் போல் கிளைவிட்டு வளர்ந்து நின்றபோது ஏற்பட்ட சகலவிதமான பிரச்சினைகளையும் இறைவனின் மேல் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையின் துணையுடன் எதிர்கொண்டார்.

மேலை நாடுகளிலும் அன்னையின் பணி பரவுதல்

1960ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து வந்த அழைப்பை ஏற்ற அன்னை லாஸ்வேகஸ் நகரில் நடந்த மகளிர் தேசிய மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் இந்திய மண்ணில் தனக்கிருக்கும் கடமைகளை எடுத்துரைத்ததைக் கேட்ட பெண்களும், தாய்மார்களும் மனமுவந்து நன்கொடைகளை வாரி வழங்கினர்.

அங்கிருந்து ஸ்விட்சர்லாந்து, உரோமாபுரி, ஜெர்மன் போன்ற பல மேலை நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து தன் இல்லங்களின் பணிகளுக்கு உதவுங்கள் என்று இருகரம் நீட்டி யாசித்தார்.

மேலை நாடுகளில் அவருடைய சேவைக்கு பெருத்த ஆதரவு கிடைக்கவே அவருடைய இல்ல கிளைகள் ஆஸ்திரேலியா, ஜெர்மன்,ஆப்பிரிக்கா உட்பட உலகிலுள்ள ஏறத்தாழ ஐம்பது நாடுகளில் தன்னுடைய சபையை விரிவு படுத்தினார். இன்றும் கொல்கொத்தாவிலும் இந்தியா முழுவதும் அன்னையின் சபையைச் சார்ந்த கன்னியர்கள் நடத்திவந்த இல்லங்கள் ஆற்றும் சேவைக்கு தேவையான பண வசதி இதுபோன்ற நாடுகளிலிருந்தே வருகின்றது.

அன்னையின் சேவையால் ஈர்க்கப்பட்டு அவருடைய சீடரான எட்வர்டு கென்னடி ஒருமுறை கொல்கொத்தாவுக்கு அன்னையைக் காண வந்திருந்தார். அச்சமயம் அன்னை ஒரு நோயாளியைத் தொட்டு மருத்துவம் செய்துக் கொண்டிருந்தார். எட்வர்ட் கென்னடி அன்னையின் கரங்களைப் பற்றி குலுக்க ஆசைப் பட்டார்.

அன்னை, ‘ என் கை அழுக்காக இருக்கிறது. இதோ வருகிறேன்.’ என்று கைகளைக் கழுவச் சென்றார். உடனே கென்னடி அவர்கள் ‘யார் சொன்னது? உங்கள் கைதான் புனிதமான கை. இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கும் கை’ என்று அன்னையின் கரங்களைப் பற்றி குலுக்கி தன் பாராட்டைத் தெரிவித்துக் கொண்டார்.

இவர் பெற்ற விருதுகளும் பரிசுகளும்

1964. மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துக் கொள்ள வந்திருந்த போப்பாண்டவர் தாம் பயன் படுத்திய வெண்ணிறக் காரை அன்னைக்கு பரிசாக அளித்தார். அன்னை அதை ஏலத்தில் விட்டு கிடைத்த பணத்தில் கொல்கொத்தா சாந்தி நகரில் தொழுநோயாளிகளுக்கென மருத்துவ மனை ஒன்றைக் கட்டினார்.

1971 அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ‘Good Samaritan’ விருதும், ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் மனிதாபிமானத்திற்கான டாக்டர் விருதும்

1972 - அமைதி விருதான நேரு விருது

1976 விசுவ பாரதி பல்கலைக் கழகத்தின் ‘தேசி கோத்தமா’ விருது

1978 இங்கிலாந்து அரசின் ‘தலை சிறந்த குடிமகன்’ விருது

1979 - நோபல் பரிசு

1980 இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா

1983 BART MARANCH THE ORDER OF MERIT என்ற பிரிட்டிஷ் அரசி எலிசபெத்திடம் இருந்து பெற்ற விருது

1991 குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனிடம் இருந்து பெற்ற பாரதிய வித்யா பவன் உறுப்பினர் விருது

1992 பாரதத்தின் தவப் புதல்வி விருது மற்றும் பாரத சிரோமணி விருது

1993 ரஷ்ய அரசின் உலகப் புகழ் பெற்ற ‘லியோ டால்ஸ்டாய்’ விருது

1995 கொல்கொத்தாவின் நேதாஜி விருது மற்றும் தயாவதி மோடி அறக்கட்டளை விருது

1996 ‘அனைத்துலக நம்பிக்கை ஒற்றுமை’ விருது

என உலகில் இவருக்கு அளிக்கப்படாத விருதுகளே இல்லை எனப்படும் அளவுக்கு அன்னை திரேசா அவர்கள் உலகெங்கும் உள்ள மக்களால் கவுரவிக்கப்பட்டார்.

இதில் போப்பாண்டவரும் உலகெங்கும் உள்ள கிறீத்துவ சபைகளும், அவர்கள் நடத்துகின்ற பல்கலைக் கழகங்களும் அளித்த விருதுகள் சேர்க்கப்படவில்லை!

இத்தனை விருதுகளும், பாராட்டுகளும் பெற்ற அன்னை தன்னை புகழ்வோரிடமெல்லாமல் எப்போதும் சொல்லும் வார்த்தை, ‘I am nothing. I am just a tool in the hands of God!’ என்பதுதான்.

முதுமைக் காலம்

முதுமைப் பருவத்தில் அடிக்கடி நோய்வாய் பட்ட அன்னை அவர்கள் இனி தன்னால் இத்தனைப் பெரிய பொறுப்பை ஏற்று நடத்த முடியாது என்பதை உணர்ந்தார்.

இளம் வயதில் அன்னையின் அன்பால் கவரப்பட்டு மதம் மாறி அவருடைய கன்னியர் சபையில் சேர்ந்த நேபாளத்தைச் சார்ந்த சகோதரி நிர்மலா அவர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்து சபையின் பொறுப்புகள் முழுவதையும் அவரிடம் அதிகாரபூர்வ அறிக்கை ஒன்றின் வழியாக ஒப்படைத்தார்.

1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் நாள் வெள்ளிக் கிழமை என்றும் போல் காலையில் எந்தவித அறிகுறியும் இன்றி கண்விழித்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் நெஞ்சு வலி வந்தது. அவருடைய சிறப்பு மருத்துவரான அஸீம் பர்தன் பரிசோதனைக்குப் பிறகு வழக்கம்போல் தன்னுடைய அன்றாட பணிகளில் ஈடுபட்டார்.

அன்று மாதத்தின் முதல் வெள்ளியாதலால் வழக்கம்போல் காலை உணவைத் தவிர்த்து தியானத்தில் ஈடுபட்டார். கன்னியர்களின் கட்டாயத்தின் பேரில் மதிய உணவை உண்டு ஓய்வெடுத்தார்.

இரவு உணவையும் முடித்துக் கொண்டு உறங்க செல்லும் நேரத்தில் மீண்டும் நெஞ்சு வலி அதிகரிக்கவே மருத்துவர்கள் வரவழைக்கப் பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் ‘இயேசுவே, இயேசுவே’ என்ற வார்த்தைகளுடன் அன்னையின் உயிர் பிரிந்தது.

அவருடைய இறுதிச் சடங்கில் பங்குகொள்ளாத உலகத் தலைவர்களே இல்லை எனும் அளவுக்கு கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளம் கூடி அன்னைக்கு கண்ணீர் அஞ்சலி செய்தது.

கொல்கொத்தா நகரில் மட்டுமல்ல, இந்தியாவின் மூலை முடுக்களிலும் உலகெங்கும் பரவி கிடக்கும் அன்னையின் சபை கன்னியர்கள் நடத்தும் இல்லங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் எல்லாவற்றின் வழியாக பலன் பெறும் கோடானு கோடி மக்களின் இதயங்களில் இன்றும் வாழ்கிறார் அன்னை திரேசா என்னும் ஆக்னஸ்.

இவரும் நான் பெருமையுடன் வணங்கும் மாமனிதர்களில் ஒருவர்.

*****

மூலம்:அருளாளர் அன்னை தெரேசா - ஆசிரியர் பட்டத்தி மைந்தன் - 156 பக்கங்கள் -

5 கருத்துகள்:

  1. இவ்வளவு பெருமையும் புகழும் வாய்ந்த இவுங்க 'மறைவு'தான் சரியான கவனம் பெறாமப் போயிருச்சுன்னு என் மனசுக்குள்ளே ஒரு சங்கடம்.
    அப்பத்தான் டயானா வோட விபத்து நடந்து உலகச் செய்திகளில் முதலிடம் பிடிச்சுக்கிட்டு இருந்துச்சு.

    பதிலளிநீக்கு
  2. அது மட்டுமல்ல துளசி மேடம். அப்ப அவங்களை புனிதராக்குறதுக்காக செஞ்ச ஏற்பாடுன்னு ஒரு பிரச்சனை வேற. எது எப்படியோ.....அவர் நிறுவிய சாலைகள் இன்னும் நின்று நிலைத்து தமது பணியைச் செய்து கொண்டிருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. வாங்க துளசி,

    நீங்க சொல்றது சரிதான். அது ஒரு தர்மசங்கடமாத்தான் இருந்தது.

    பதிலளிநீக்கு
  4. வாங்க ராகவன்,

    நீங்க சொல்றது வேற பிரச்சினை..

    அன்னைக்கிருந்த போப்பாண்டவர் அன்னை மேலருந்த பாசத்துல நேரடியா புனிதர்னு அறிவிக்க ஆசைப்பட்டதுனால ஒரு சின்ன குழப்பம் இருந்தது.. அதுமட்டுமில்லாம மே.வங்காளத்துல மருத்துவர்கள் உண்டாக்குனது மூளைக்கும் மனசுக்கும் உள்ள போராட்டத்தின் விளைவு. அதாவது கடவுளின் மேல் இருக்கற விசுவாசத்துக்கும் மூளை சொல்ற ப்ராக்டிக்காலிட்டிக்கும் உள்ள போராட்டம்.

    அற்புதங்கள், அது எந்த மதத்தினருடையதாக இருப்பினும், மனுஷ மூளைக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.

    பதிலளிநீக்கு
  5. அன்னை தெரசா அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமா சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா

    பதிலளிநீக்கு