12 ஜனவரி 2006

கா..கா..கா - 2 (நகைச்சுவை)

வடி: நீ என்னய்யா சொல்ற? உனக்கு மட்டும் எப்படீய்யா இப்படியெல்லாம் மாத்தி மாத்தி பேச வருது.. ஜெமினி கனேசங்கற, கொட்டா டாக்கீசுங்கற.. நீ என்ன சொல்ல வரேன்னே தெரியலையேய்யா.. கொஞ்சம் தெளிவாத்தான் பேசேன்.. (டீக்கடையிலிருந்தவர்களைப் பார்க்கிறார்) ஏன்யா பாத்துக்கிட்டே இருக்கீகளே.. யாராச்சும் கேக்கப் படாதா.. இவரு சொல்றது உங்களுக்கு யார்க்காச்சும் புரியுதா? (இல்லை என்று தலையசைத்துவிட்டு பார்த்திபன் முறைத்ததும் ஆமாம் என்று தலையசைக்கிறார்கள். பிறகு ஒவ்வொருவராய் தலையைக் குனிந்துக் கொண்டு தப்பித்தால் போதும் என்று எழுந்து போகின்றனர்)

வடி: யோவ் என்னய்யா இது.. நா கேட்டப்ப இல்லைன்னவனெல்லாம் உன் மூஞ்ச பார்த்ததும் ஆமாங்கறானுங்க.. யார்யா நீ?

பார்: டேய்.. என்ன நடிச்சே தப்பிச்சிரலாம்னு பாக்கறீயா.. உனக்கு ஜெமினி கணேசன் யாருன்னு தெரியாது?

வடி: யோவ் எதிர்ல நிக்கற உன்னையே யாருன்னு தெரியல.. அது யாருய்யா ஜெமினி கணேசன்? அந்தாள எனக்கு எதுக்கு தெரியணுங்கற?

பார்: (திரும்பி டீக்கடைக்காரரைப் பார்க்கிறார்) ஏங்க, உங்களுக்கு ஜெமினி கணேசன தெரியுமா?

டீ.க: என்ன தம்பி நீங்க கிண்டல் பண்ணிக்கிட்டு.. காதல் மன்னன தெரியாதாக்கும். அந்த தம்பிதான் சும்மா கிண்டல் பண்ணுதுன்னா.. நீங்களும் என்ன கேக்கறீங்களே..

பார்: (வடிவேலுவிடம்) பாத்தியாடா.. நாள் முழுசும் டம்ளர் டம்ளரா டீ, காப்பிங்கற பேர்ல சுடுதண்ணிய வித்துக்கிட்டிருக்கறவருக்குக்கூட (டீக்கடைக்காரர் முகத்தை தொங்கப்போடுகிறார்) ஜெமினி கணேசன்னவுடனே காதல் மன்னன்னு தெரியுது.. நீ தெரியலேன்னு டிராம பண்றியா?

வடி: யோவ் யாரைய்யா சொல்ற? உண்மைலையே தெரியாதுய்யா..

பார்: சரி.. உனக்கு என்ன வயாசாச்சி..

வடி: (சந்தேகத்துடன்) எதுக்கு?

பார்: (முட்டியை வைத்து முகத்தில் லேசாக குத்துகிறார்) ஊம்.. ஒன்ன கல்யாணம் பண்ணிக்கறதுக்கு.. சொல்றா.. என்ன வயசாச்சி.. அம்பது, இல்ல அது ஜாஸ்தி.. ஒரு நாப்பத்தஞ்சி..

வடி:(அழுகிறார்) யோவ்.. முழுசா இருபது கூட ஆவலய்யா. என்ன போயி.. ஏன்யா இந்த அழும்பு பண்ற.. எனக்கின்னும் கல்யாணம் கூட ஆவலைய்யா?

பார்: ஐ! எனக்குக்கூடத்தான் முப்பத்தஞ்சி வயசாயும் இன்னும் கல்யாணம் ஆவலே.. அதுக்காக நீ சின்னப் பையன்னு ஆயிருமா? சரி.. என்னை தெரியலை ஒத்துக்கறேன்.. ஜெமினி கணேசன்னு யாருன்னு சொல்லு விட்டுடறேன்.. சொல்லு..

வடி: (அழுகை கூடி குரல் உச்சத்துக்கு போகிறது) யோவ்.. நெசமாலுமே நீ சொல்ற ஆள எனக்கு தெரியாதுய்யா..

பார்: டேய், வேணாம். இந்த ஜிம்கானா வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்.. சரி.. நீ சினிமால்லாம் பாப்பேல்ல?

வடி: (அழுகையை நிறுத்திவிட்டு.. தலையை ஒரு உலுக்கு உலுக்கிக் கொண்டு உறுமுகிறார்.) என்னா நீ அப்படி கேட்டுட்டே.. வாரம் ரெண்டு சினிமான்னாச்சும் பாக்கலேன்னா ஐயாவுக்கு சாப்பாடு எறங்காதுல்லே..

பார்: அதுசரி.. சினிமால்லாம் பாக்கற ஆளுதானா நீ.. பார்த்தா தெரியலையே..

வடி: யோவ்.. சினிமா பாக்கற ஆளுன்னு பாத்தவுடனேயே சொல்லிருவியா நீ? போய்யா.. எவனாச்சும் காதுல பூ வச்சிருப்பான் அவங்கிட்ட போயி சொல்லு.. சரி.. இப்ப ஒனக்கு என்ன வேணும்? எதுக்கு இப்ப சினிமா பாக்கறியான்னு கேக்கறே.. அதச் சொல்லு..

பார்: (டீக்காரரை திரும்பி பார்க்கிறார்) பாத்தியாய்யா.. என்னையே மடக்கிட்டான்.. (வடிவேலுவைப் பார்த்து) சரி.. அவ்வை சண்முகி படம் பாத்திருக்கியா..

வடி: (சந்தோஷத்துடன்) என்னா நீ அப்படி கேட்டுட்டே.. நம்ம கமல் காசன்னா நமக்கு உசுருல்லே..

பார்: என்னது கமல் காசனா? உன் நாக்குல இடி விழ! கமல் காசன் இல்லடா கமல் ஹாசன்.. எங்க சொல்லு.. கமல் ஹாசன்..

வடி: (தனக்குள்) நமக்கு 'ஹா' வராதுன்னு தெரிஞ்சிருப்பான் போலருக்குதே.. இத வச்சே நம்மள ராவிருவானே.. பேசாம ஜெமினி கணேசன தெரியும்னே சொல்லிட்டு போயிருக்கலாம்.. எல்லாம் இன்னைக்கி முளிச்ச நேரம்.. (பார்த்திபனை ஓரக்கண்ணால் பார்க்கிறார்)இப்ப என்ன வேணும் ஒனக்கு? அவர் பேரை இன்னொருத்தரம் சொல்லணும்.. அதானே..

பார்: (நெற்றியில் அடிக்கிறார்) அதாண்டா வேணும், வெண்ண.. சொல்லு.. க..ம..ல் ஹா..ச..ன்.. அழுத்தமா கரெக்டா சொல்லு.. விட்டுர்றேன்.. ஜெமினி யார்னு கூட சொல்ல வேணாம்.. இத்த மட்டும் கரெக்டா சொல்லு.. சொல்றா டேய்..

வடி: (அழுகிறார்) அதுக்கேன்யா சும்மா சும்மா அடிக்கறே.. வலிக்குதில்லே..

பார்: டேய் பேச்ச மாத்தாத.. சொல்லு..

வடி: கமல் காசன்.. சொல்லிட்டேன்.. போட்டுமாய்யா.. சந்தைய மூடிரப்போறான்யா.. ஆத்தா வையும்.. விட்டுறுய்யா..

பார்: (டீக்காரரைப் பார்த்து) ஏங்க.. இவன் கரெக்டா சொன்னானா? உங்களுக்கு எப்படி
கேட்டிச்சி..

டீ.கா: (தனக்குள்) சரியாச் சொன்னான்னு சொன்னா புது தம்பி கோச்சிக்கும். தப்புன்னு சொன்னா வீணா அந்த தம்பியோட விரோதமாயிரும். அந்த தம்பியோட ஆத்தா வேற ஊர்ல பெரிய மனுஷி.. எனக்கு இது தேவை தானா? இருந்தாலும் இந்த புது தம்பி படா பேஜார் புடிச்சவந்தான்.. என்ன சொல்றது?

பார்: யோவ் என்ன உனக்கும் காதுல ஏதாச்சும் ப்ராப்ளமா?

டீ.கா: (பதறிக்கொண்டு) இல்லீங்களே தம்பி..

பார்: அப்புறம் என்ன? இவர் சொன்னது சரியா தப்பான்னு கேட்டனே? பதிலையே காணோம்..

(டீ.கா.. பார்த்திபனின் பின்னால் நின்றுக்கொண்டிருந்த வடிவேலுவின் கைகளில் இருந்த நூறு ரூபாய் நோட்டைப் பார்க்கிறார். அவரையுமறியாமல் புன்னகை விரிய.. பார்த்திபன் அவருடைய பார்வை சென்ற பாதையில் பார்க்கிறார். வடிவேலு சட்டென்று ரூபாய் நோட்டை தனக்கு பின்னால் மறைத்துக்கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்கிறார்.)

பார்: (வடிவேலுவை அப்படியே திருப்பி அவருடைய கையிலிருந்த நூறு ரூபா நோட்டை பிடுங்கிக் கொள்கிறார்) டேய் என்ன லஞ்சமா? சரி.. அதுவும் நல்லதுக்குத்தான்.. காலைலருந்து எந்த லூசு மாட்டுவான் இன்னைக்கி சாப்பாட்டுக்கு புடுங்கலாம்னு பார்த்துக்கிட்டிருந்தேன்.. நீ மாட்டிக்கிட்டே.. ரொம்ப தாங்க்ஸ்.. (பாக்கெட்டில் வைத்துக்கொள்கிறார்) ஆமா, நான் அம்பது ரூபா எடுத்ததுக்கு ஜாமான் வாங்கணும், ஆத்தா வையும்னு ஒப்பாரி வச்சியே.. இப்ப சொளையா நூறு ரூபா நோட்ட எடுத்த நீட்டுற? (டீக்கடை நோக்கி நடக்க வடிவேலு அவர் பின்னாலேயே ஓடுகிறார்)

வடி: (கெஞ்சுகிறார்) யோவ், யோவ், வேணாம்யா.. நா முட்டாத்தனமா காச எடுத்து நீட்டிட்டேன்யா.. அத குடுத்துறுய்யா.. அது ஆத்தா காசுய்யா.. நா ஓன் கால்ல வேணும்னாலும் விழறேன்.. குடுத்துறுய்யா.. (காலில் விழ குனிகிறார்)

பார்: (வலது கரத்தை உயர்த்து ஆசீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. கல்யாணம் பண்ணிக்கிட்டு வீணா போ. எழுந்திரு. இன்னொரு தரம் கமல் ஹாசன்னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம ஓடு..

வடி: (தரையில் கைகளை ஊன்றி தடுமாறி எழுந்து அழுக்கான கைகளை மறந்து போய் தன் சட்டையில் தேய்க்க.. சட்டை முழுவதும் அழுக்காகிறது. அதைப் பார்த்துவிட்டு மீண்டும் அழுகிறார்) யோவ் இது ஒனக்கே நல்லாருக்கா.. வெள்ளையும் சொள்ளையுமா சந்தைக்கு போயிட்டிருந்தவன கூட்டி வச்சி வம்பு பண்ணி.. ஒன் கால்ல விழ வச்சி இப்படி அலங்கோலமாக்கிட்டியே.. நியாயமாய்யா.. சொல்லுய்யா.. நியாயமா?

பார்: (டீக்கடை பெஞ்சில் சென்று அமர்ந்தவர் கால் மேல் கால் போட்டுக்கொண்டு வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார். திரும்பி டீக்காரரை பார்க்கிறார்) ஏங்க, ஐயா இப்பத்தான் அம்சமா இருக்காருல்லே.. (வடிவேலுவிடம்) இப்படியே போ.. கரெக்டா கூலிக்காரன் மாதிரியிருக்கே.. சந்தையில எல்லாம் சீப்பா தருவான்.. உங்கையிலயும் நூத்தம்பது ரூபா கம்மியா இருக்கில்லே.. இந்த வேஷம் கரெக்டா இருக்கு.. போ.. டாடா.. (டீக்காரரிடம்) யோவ்.. சூடா ஒரு டீ போடு.. தண்ணி கலக்காத பால்ல போடு.. அதான் சார் நூறு ரூபா குடுத்துருக்காரே.. அப்படியே ரெண்டு பப்ஸ எடு..

வடி: (இரண்டு பேரையும் மாறி மாறி பார்க்கிறார்) யோவ் நீங்க ரெண்டு பேருமே நல்லாருக்க மாட்டீங்க.. சொல்லிட்டேன்.. (அழுக்கான சட்டையை தட்டிவிட்டுக்கொண்டே சைக்கிளை நோக்கி செல்கிறார்)

பார்: (கைதட்டி) டேய் நில்றா.

வடி: (திடுக்கிட்டு நின்று திரும்பி பார்க்கிறார்) இன்னுமென்னய்யா? அதான் கைலருந்ததெல்லாத்தையும் பிடுங்கிட்டே இல்ல.. பொறவென்ன?

பார்: பயந்துராத.. காசெல்லாம் வேணாம்.. ஹா ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரியேன்.. சிரிச்சிக்கிட்டே போனா காசு போனதெல்லாம் மறந்துருமில்லே அதான் கேட்டேன்.. எங்க கொஞ்சம் சிரி..

(வடிவேலு அவர் சொன்னதன் சூட்சுமம் புரியாமல் அழுதுக்கொண்டே ஹா.. ஹா.. ஹா.. என்று சிரிக்க அது கா, கா, கா என்று ஒலிக்கிறது. பார்த்திபனும், டீக்காரரும்.. சற்று முன் பெஞ்சிலிருந்து எழுந்து சென்று ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் கொல்லென்று சிரிக்க வடிவேலு தன் தவறைப் புரிந்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு சைக்கிளில் ஏறிக்கொண்டு ஒரே ஓட்டமாய் சென்று மறைகிறார்.)

பார்: அவன் கலருக்கு இப்ப அவன் கத்துனத பார்த்துட்டு ஊர்லருக்கற காக்காங்கல்லாம் வராம இருக்கணும்..


முற்றும்.

6 கருத்துகள்:

  1. பேசாம...இதையே சினிமாவா எடுத்துரலாம் போல இருக்கே.........யய்யா...யாரவது சினிமாக்காரவுக இதப் பாக்கலையா?

    வடிவேலு நெம்பரு இருந்தாக்க...அவருக்குப் போனப் போட்டுச் சொல்லுங்கய்யா...சொல்லுங்க...

    பதிலளிநீக்கு
  2. பேசாம சினிமாவுக்கு 'காமெடி ட்ராக்' எழுதப்போங்க.

    நான் வேணுமுன்னா அசிஸ்டெண்ட்டாச் சேர்ந்துக்கறேன்:-)

    பதிலளிநீக்கு
  3. வாங்க ராகவன்,

    போனப் போட்டுச் சொல்லுங்கய்யா...சொல்லுங்க... //

    சொல்லிர கில்லிர போறாங்க.. செய்யற வேலைக்கு பாதகமாயிரும்..
    ஹி, ஹி!

    பதிலளிநீக்கு
  4. வாங்க துளசி,

    பேசாம சினிமாவுக்கு 'காமெடி ட்ராக்' எழுதப்போங்க.//

    போயிரலாம்தான். வீட்ல விடணுமே.

    பதிலளிநீக்கு
  5. சார் இந்த பின்னூட்டம் நேற்று மாலை கொடுத்தேன்...வரவில்லை....
    இப்போது மீண்டும் இடுகிறேன்....

    காமெடி சீன்களை என்னை மாதிரி நீங்களும் அனுபவித்து பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன்..இல்லாட்டி உங்களுக்கு இந்த மாதிரி பாடி லாங்குவேஜும் சொல்ல வராது.....பார்த்திபனை விட வடிவேலு சூப்பர்....

    பதிலளிநீக்கு
  6. கடைசியில் வந்த ஹாஹாஹா காகாகா சூப்பரோ சுப்பர். படித்து ரசித்தேன். ரசித்துப் படித்தேன். :-)

    பதிலளிநீக்கு