03 அக்டோபர் 2005

குழந்தைகளாய் மாறுங்கள், குதூகலியுங்கள்!

நான் எங்கள் வங்கியின் பயிற்சிக் கல்லூரியில் பணிபுரிந்த நான்காண்டு காலத்தில் எனக்குக் கிடைத்த அனுபவங்களில் நான் கற்றுக்கொண்டது ஏராளம்.

நான் அப்பதவியில் அமர்த்தப்படுவதற்கு முன் இந்தியாவிலுள்ள எங்களுடைய பல வங்கிக் கிளைகளில் மேலாளராகப் பணியாற்றியுள்ளேன். அப்போதெல்லாம் அலுவலகத்தில் நான் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு சிறிய பிரச்சினைக்கும் என்னால் மட்டுமே தீர்வு காணமுடியும் என்ற நினைப்பில் என் கீழ் பணிபுரிந்த அதிகாரிகளால் சுலபமாய் தீர்க்க முடிகிற விஷயங்களில் எல்லாம் தலையிட்டு தீர்வுகாணுகிறேன் பேர்வழி என்று எளிதாய் தீர்க்கக் கூடிய விஷயங்களையும் சிக்கலாகிவிடுவதுண்டு.

பயிற்ச்சிக் கல்லூரியில் முதல்வராய் சேர்ந்தபோது இதுவரை சந்தித்திராத பல அனுபவங்கள் என அகக்கண்களைத் திறந்துவிட்டது.

கல்லூரியில் முக்கியமான பணி எங்கள் வங்கியிலுள்ள இடைநிலை அதிகாரிகளுக்கு (Middle Management Officers) பயிற்சி வகுப்புகளை நடத்துவதுதான்.

ஒரு வருடத்தில் பயிற்ச்சி வகுப்புகள் சுமார் 30லிருந்து 40 வகுப்புகள் நடத்தப்படுவதுண்டு. ஒவ்வொரு பயிற்ச்சி வகுப்புக்கும் 30 இடைநிலை அதிகாரிகள் அழைக்கப்படுவார்கள்.

இடைநிலை அதிகாரி என்ற பதவியை அடைந்தவர்கள் குறைந்த பட்சம் 35 வயதைக் கடந்தவராக இருப்பர்.

இவ்வயதில் இருப்பவர்களுக்கு பயிற்சி அளிப்பதென்பது மிகவும் கடினமான காரியம். வங்கிக் கிளைகளில் மேலாளராக சுமார் 25 ஊழியர்களை அதிகாரம் செய்துப் பழகிப்போனவர்களை ஒருவார காலம் மாணவர்களாய் அமரச்செய்து பயிற்புவிப்பது சாதாரண விஷயமல்ல!

அதுவும் முதல்நாள் முதல் வகுப்பை நடத்தி முடிப்பதற்குள் போதும், போதும் என்றாகிவிடும். அதற்கெனவே பிரத்தியேகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தும் பெரும்பாலும் அவர்கள் பயிற்சிப் பெற வந்தவர்களுடைய வயதை ஒட்டியே இருப்பர். சிலர் பயிற்சி பெற வந்தவர்களிடமே முன்பு பணிபுரிந்தவர்களாயிருப்பர்.

அந்நேரங்களில் கல்லூரியின் முதல்வர் என்ற நிலையில் அவர்களுக்கு வகுப்புகளை நடத்தும் பணி என் தலைமேல் வந்து விழும்..

அந்நேரங்களில் கல்லூரி நூலகத்தில் இருந்த உளவியல் புத்தகங்களிலிருந்து படித்த சில குறிப்புகள எனக்கு மிகவும் உதவியுள்ளன!

முதல் வகுப்பிலேயே அவர்களை மாணவர் நிலைக்குக் கொண்டுவரும் உத்திகளில் ஒன்று அவர்களுக்குள்ளே இருக்கும் குழந்தைநிலையை (Child Level) வெளிக் கொண்டு வருவது..

நம் எல்லோரிலும் இத்தகைய குழந்தை மன நிலை மறைந்திருக்கிறது. இருப்பினும் நம்முடைய அன்றாட பணிகளுக்கிடையில் நம்மில் பலருக்கும் அதை வெளிக்ககொண்டு வர வாய்ப்பே கிடைப்பதில்லை.

நம்முடைய குழந்தைகளைப் பார்த்திருப்பீர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்யமுடியும். தொலைக்காட்சியில் ஒரு கண் வைத்துக்கொண்டே தங்களுடைய ஹோம் வொர்க்கை செய்வார்கள், அதே சமயம் வீட்டில் பெரியவர்கள் யாராவது பேசிக்கொண்டிருந்தால் அதையும் ஒட்டுக் கேட்பார்கள். சமையலறையில் சமைப்பதையும் மோப்பம் பிடித்து, அவர்களுக்கு பிடித்த சமையலாயிருந்தால் ' அம்மா எனக்கு' என்று சமையலறையை நோக்கி ஓடுவார்கள்..

இதை நம்மாலும் செய்யமுடியும் என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.

என் அனுபவத்தில், அலுவலகத்தில் என்னால் தீர்க்க இயலாத பல பிரச்சினைகளை பணிக்கு சேர்ந்து சில வருடங்களே ஆன ஊழியர்கள் மிக எளிதாய் தீர்த்துவிடுவதை நான் கண்கூடாய் கண்டிருக்கிறேன்.

அதாவது, பிரச்சினையை ஒரே கோணத்தில் காணாமால் முற்றிலும் மாறுபட்ட புதுக்கோணத்தில் காணும்போது அந்த பிரச்சினைக்கு மிக எளிதில் தீர்வுகாண இயலும். அதைத்தான் உளவியல் வல்லுனர்கள் ஆங்கிலத்தில் Out of Box Thinking என்பர்.

எங்களிடம் பயிற்சி பெற வரும் நடுத்தர வயதுடைய அதிகாரிகளை மாணவர் நிலைக்குக் கொண்டு செல்ல பலவிதமான Problem Solving Gamesஐ கொடுத்து தீர்வுகாண வாய்ப்பு கொடுப்பதுண்டு. சில நேரங்களில் அவர்கள் முன் வைக்கப்படும் பிரச்சினைகள் மிக மிக மடத்தனமாக (Silly) இருக்கும். இருப்பினும் Puzzles முறையில் அளிக்கப்படும் இப்பிரச்சினைகளுக்கு சிறு சிறு குழுக்களாக அமர்ந்து தீர்வு காண்கையில் அவர்களுக்கு கிடைக்கும் அனுபவம் அவர்களைப் பள்ளிப்பருவத்திற்கு இட்டுச் செல்வதை நான் நேரில் கண்டு அனுபவித்திருக்கிறேன்.


நீங்கள் குழந்தையாய் மாறாவிட்டால் மோட்ச ராச்சியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்கிறது பைபிள்.

ஆம்! குழந்தையாய் (சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம்) மாறுங்கள்! குதூகலியுங்கள்!!

கீழே அளிக்கப்பட்டுள்ள இணையத்தளங்கள் நாங்கள் உபயோகப்படுத்திய பல விளையாட்டுகளை கொண்டுள்ளன.

www.gamequarium.com/problemsolving.html
www.theproblemsite.com/games.asp
www.playkidsgames.com/problem_solveGames.htm


அன்புடன்
டி.பி.ஆர். ஜோசப்

6 கருத்துகள்:

 1. அட., நானும் எடுத்திருக்கின்றேனே., வங்கி மேலாளர்களுக்கு, ஜீ.எம் களுக்கு கம்பியூட்டர் வகுப்புக்கள். நிறைய எழுதுங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப சரி. என்னைக்கவது மனசு டல்லடிக்கும்போது என் பொண்ணுகூட உக்காந்து பிராப்ளம் போடும்போது சின்ன வெற்றிகூட பயங்கர த்ரில்லா இருக்கும்

  பதிலளிநீக்கு
 3. நன்றி அப்டிப்போடு!

  முதலில் உங்கள் புனைப்பெயர் அருமையாயிருக்கிறது என்பதை சொல்லிவிடுகிறேன். உங்களுக்குள் இருக்கும் கற்பனைக் குழந்தைதான் உங்கள் புனைப்பெயரை தேர்ந்தெடுத்திருக்கவேண்டும்.

  கடைநிலை, இடைநிலை அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்துவதே பெரிய கஷ்டம். ஜிஎம் போன்ற உயர் அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்துவதென்றால்.. அதுவும் கணினி வகுப்பு! எலியோடு சேர்ந்து ஜிஎம் மும் வளைந்திருப்பாரே!
  என் வகுப்புகளில் அது போன்ற நிறைய வேடிக்கைகள் நடந்திருக்கின்றன. நேரம் கிடைக்கும்போது அதைப்பற்றி தனி பதிவாக எழுதுகிறேன்.

  நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 4. நன்றி தாணு.
  என்னதான் அலுவலகத்தில் கிழி கிழி என்று கிழித்தாலும் வீட்டிற்கு வந்து குழந்தைகளோடு அமர்ந்து அவர்களுடைய வீட்டுப் பாடங்களை (முக்கியமாய் கணக்கு) செய்ய உதவி செய்கிறேன் பேர்வழி என்று தப்பான விடை வரும்போது அசடு வழிவதும் எப்போதாவது ஒரு முறை அத்தி பூர்த்தாற்போல் சரியான விடை வந்ததும் பார்த்தியா அப்பாவ! என்று நெஞ்சை நிமிர்த்துவதும்..

  அதை அனுபவித்தால்தான் தெரியும்..

  பதிலளிநீக்கு
 5. //சமையலறையில் சமைப்பதையும் மோப்பம் பிடித்துஇ அவர்களுக்கு பிடித்த சமையலாயிருந்தால் ' அம்மா எனக்கு' என்று சமையலறையை நோக்கி ஓடுவார்கள்..//

  இப்பவெல்லாம் தமிழ் குழந்தைகள்'அம்மா எனக்கு' என்பதற்குப் பதில்:'மம்மி...'என்றெல்லோ உரையாடுகிறார்கள்!சன் தொ(ல்)லைக்காட்சியில் தமிழர்கள் வெள்ளைத் தோலும்,நீலக் கண்களும் பெற்றுவிட்டார்கள்!இயற்கை அவர்களை மிக விரைவாக மேற்குலகத்தவர்களைப்போலவே தகவமைத்திருக்கு.ரொம்பத்தாம் நம்ம மக்கள் இவ்வளவு உலகப் பொதுமையான வெண்ணிறுத்துக்கு மாறிவருகிறார்கள்.அதனால் மொழிகூட'மம்மி','டாடி'யெனவும் ப்பெஸ்ற்-செக்கன் என்ற தானங்கள் உச்சரிக்காவிட்டால் தமிழ் அழிந்திடும்.அதையிந்தக் குழந்தைகளும் புரிந்துள்ளார்கள்!'அம்மா எனக்கு'... அற்புதமாக ஒலிக்கிறது.ஆனால் மம்மிமார்களுக்கு இது புளிப்பாய்த் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 6. நீங்க சொல்றது சரிதான் ஸ்ரீரங்கன்.

  இப்பல்லாம் மம்மி, டாடிதான். பட்டணத்தில் மட்டுமல்ல பட்டிக்காட்டிலும்தான் (அதாவது கிராமங்களிலும்).
  என் வீட்டிலும் எப்போதும் அம்மா, அப்பாதான். அதனால்தான் என்னையுமறியாமல் 'அம்மா எனக்கு' என்று எழுத வந்தது.

  நன்றி

  பதிலளிநீக்கு