10 அக்டோபர் 2005

என் மும்பை புறநகர் ரயில்பயணம் - அனுபவம் 3

என்னுடைய முந்தைய இரண்டு பதிவுகளுக்கு நீங்கள் கொடுத்த வரவேற்பு என்னுடைய மும்பை ரயில்பயண அனுபவங்களைத் தொடர்ந்து எழுத ஊக்குவிக்கிறது.

ஓடும் ரயிலிலிருந்து ஏறி/இறங்கும் வித்தையைப் பற்றி எழுதியிருந்தேன். அதுதொடர்பாக நடந்த வேறொரு வேடிக்கையான சம்பவத்தை இன்று எழுதுகிறேன்.

என்னுடைய மும்பை வாசம் ஒருவருடத்தை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் என்னுடைய வங்கியில் பணிபுரியும் உயர் அதிகாரிகளுக்கென இரண்டு குடியிருப்புகள் (Flats) மும்பையில் வாங்குவதென தீர்மானிக்கப்பட்டது.

ஆனால் வங்கி குறிப்பிட்டிருந்த தொகையான Rs.15 - 20 lakhsக்குள் மும்பையில் மட்டுமல்ல அதன் புறநகர் பகுதிகளிலும் 1BHK ( ஒரு Bedroom+Hall+Kitchen - இப்படித்தான் மும்பையில் குடியிருப்புகளின் விசாலத்தை (Extent) குறிப்பிடுகிறார்கள்) கூட கிடைக்காததால் புதுமும்பை (Navi Mumbai) பகுதியில் ‘வாஷி’ நிலையத்துக்கு அடுத்தபடியான் ‘சான்பாடாவில்’ ஒரே Block ல் அமைந்திருந்த இரண்டு 2BHK (சுமார் 950 சதுரம்) குடியிருப்புகளை - எனக்காக ஒன்றும் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த கேரளத்தைச் சார்ந்த வேறொரு Chief Manager க்கு ஒன்றும் - விலைக்கு வாங்கி குடியேறினோம்.

புதுமும்பை மும்பை ஹார்பர் தடத்தில் வருகிறது. மத்திய மற்றும் மேற்கு ரயில் தடங்களுடன் ஒப்பிடும்போது ஹார்பர் தளத்தில் அவ்வளவாக பயணிகள்கூட்டம் இருக்காது, முக்கியமாக முதல் வகுப்பில்.

நான் வசித்த 94 to 96 வருடங்களில் ‘சான்பாடா’ நிலையத்திலிருந்து முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களில் என்னையும் என் சக ஊழியரையும் சேர்த்து பத்தோ, பதினைந்து பயணிகள் மட்டுமே இருந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் ‘பேலாப்பூர்’ - அன்றைய Starting Point for the Harbour Route Trains - ‘சான்பாடா’விலுருந்து மூன்றாவது Station னதால் என்னுடன் ஏறும் எல்லோருக்கும் இருக்கைகள் கிடைப்பதுண்டு. அத்துடன் ‘சான்பாடா’வுக்கு முந்தைய நிலையமான ‘வாஷி’ புதுமும்பையின் முதல் மற்றும் முக்கியமான நிலையமாயிருந்தது. அங்கிருந்து காலை நேரத்தில் மும்பை வி.டி நிலையத்திற்கு பத்து நிமிடத்திற்கு ஒரு வண்டி புறப்படுவதால் பலரும் ‘பேலாப்பூ’ரிலிருந்து வரும் வண்டிகளுக்காகக் காத்திருக்கமாட்டார்கள்.

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முதல் வகுப்பு மட்டுமல்ல இரண்டாம் வகுப்பு பெட்டிகளும் பெரும்பாலும் காலியாயிருக்கும். ஆனால் கடந்த மாதம் அலுவலக பணியாய் மும்பை சென்றிருந்தபோது ‘சான்பாடா’வில் இருந்த நண்பரின் வீட்டுக்குச் சென்று இரவு பத்து மணியளவில் இறங்கிய போதும் சரி, அவருடன் இரவு தங்கிவிட்டு அடுத்த நாள் காலை 8.30 மணியளவில் ஏறும்போதும் சரி, பயணிகளின் கூட்டம் பிதுங்கி வழிந்தது! சுமார் பத்துவருடங்களின் புதுமும்பையிலும் குடியிருப்புகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துவிட்டது என்றார் என் நண்பர்.

சரி, இப்போது ஓடும் வண்டியிலிருந்து ஏறி/இறங்கும் வித்தைக்கு வருவோம்.

மத்திய தடத்தில் பயணம் செய்துக் கொண்டிருந்த சமயம் இத்த வித்தையை என்னால் கற்றுக்கொள்ளவே முடியவில்லை. மிக அதிக அளவிலான கூட்டமும், விரைவு வண்டியின் வேகமும் அதற்குக் காரணம்.

ஹார்பர் தடத்திலும் வண்டி ‘சான்பாடா’வை அடையும்போது முதல் வகுப்பில் பெரும்பாலான நாட்களில் அங்கு ஏறும் எல்லா பயணிகளுக்கும் இருக்கை இருந்தாலும் வசதியான இருக்கைகளுக்காக வண்டி நிலையத்தினுள் நுழையும்போதே அதில் பயணிகள் (ஒருவேளை பழக்கதோஷமும் காரணமாயிருக்கலாம்) ஓடி ஏறுவது வழக்கம்.

எனக்கு அப்போதும் ஏறுவதற்கு துணிவு வரவில்லை. ஆனால் என்னுடன் பயணம் செய்த நண்பரின் ஏளன பார்வையில் இருந்து தப்பிக்க நான் அந்த வித்தையைக் கற்பது என துணிந்து செயலில் இறங்கினேன்.

அதற்கு முதல் முயற்சியாக கையில் கைப்பெட்டியை எடுத்துச் செல்வதை நிறுத்தினேன். இரண்டு கைகளும் Free இருந்தால் ஒரு கை கைப்பிடியை விட்டு தளர்ந்தாலும் அடுத்த கையை வைத்துப் பிடித்துக்கொள்ளலாமே என்ற எண்ணம்.

முதல் இரண்டு நாட்களில் ஒரு கால் ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலும் மறுகால் ரயில்மேடையிலுமாகவும் தத்தளித்திருக்கிறேன். வாயிலிலிருந்த நடுக்கம்பியைப் பிடித்திருக்கும் கைகள் பயங்கரமாய் தந்தியடிக்கும். இருந்தாலும் சக நண்பரின் பார்வையில் நான் Adventurist க தென்படவேண்டும் என்ற ஆர்வத்தில் என்னுடைய Dangerous முயற்சிகளைத் தொடர நாளடைவில் ஓடும் வண்டியில் ஏறும் வித்தையில் Expert னேன். இறங்கும் வித்தையைக் கற்றுக்கொள்ளும் முயற்சியில் குறைந்தது மூன்று முறையாவது கீழே விழுந்து காலில் அடிபட்டுக்கொண்டிருக்கிறேன். நல்ல வேளையாக Serious க ஒன்றும் காமல் தப்பித்தேன்.

ஆக, ஒரு வழியாக நான் சரியானதொரு மும்பை ரயில் பயணியாக மாறினேன், இரண்டு, மூன்று மாத பயிற்சிக்குப்பிறகு.

இப்போது வேடிக்கைக்கு வருகிறேன்.

ஒருநாள் மும்பையிலிருந்த ‘செம்பூர்’ கிளையில் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த என்னுடைய நண்பரை (அவரும் தமிழர்தான். திருநெல்வேலி பக்கம்) என்னுடைய ‘சான்பாடா’ வீட்டிற்கு அழைத்திருந்தேன். நாங்கள் எல்லோரும் மனைவி, பிள்ளைகளை ஊரில் விட்டுவிட்டு Married Bachelors ஆக இருந்ததால் எங்களுடைய குடியிருப்புகளில் Apna, Apna Party (மொத்த சிலவைப் பகிர்ந்துகொள்ளுதல். அல்லது அவரவருக்கு விருப்பமானவற்றை அவரவரே கொண்டுவருதல்) அடிக்கடி நடைபெறுவது வழக்கம்.

நான் வி.டி. நிலையத்திலிருந்து புறப்படும் வண்டியின் நேரத்தை அவருக்கு Pager செய்வது என்றும் (அப்போதெல்லாம் கைத்தொலைப்பேசி எல்லோரிடம் இருக்கவில்லை) அவர் ‘செம்பூர்’ நிலையத்தை அடையும் நேரத்தைக் கணக்கிட்டுக்கொண்டு (சுமார் 40 நிமிடங்கள்) செம்பூர் நிலையத்தில் அதே முதல் வகுப்பில் ஏறிக்கொள்ள வேண்டும் என்றும் தீர்மானித்தோம் (அவர் அன்றுதான் முதல் முறையாக என் வீட்டுக்கு வருகிறார் என்பதால் அவர் என்னோடு சேர்ந்து வந்தால்தான் அவரால் என் வீட்டை அடையாளம் கண்டுகொள்ள இயலும். அவருக்கு இந்தியும் சரளமாய் அப்போது வராது).

அதற்கு முன் ஒரு முக்கியமான Information.

மும்பை புறநகர் வண்டிகளில் முதல் வகுப்பு பெட்டிகள் வண்டியின் முன்புறம் ஒன்றும் பின்புறம் ஒன்றும் இருக்கும். நான் சாதாரணமாக பின்புறமிருக்கும் பெட்டியில்தான் ஏறுவது வழக்கம். அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று வி.டி நிலையத்தில் ஏறும்போது அதிக தூரம் நடக்கவேண்டியதில்லை. இரண்டாவது நான் இறங்கும் நிலையமான ‘சான்பாடாவில்’ நிலையத்தைவிட்டு வெளியேறும் வழி பின்புறமிருக்கும் முதல் வகுப்பு பெட்டியின் மிக அருகிலேயே இருந்ததால் வண்டி நிலையத்திற்குள் நுழையும்போதே இறங்க முடிந்தவர்கள் (நானும் அவர்களில் ஒன்றாயிற்றே!) இரண்டாம் வகுப்பு பயணிகள் இறங்கி நடைபாதையை அடைத்துக்கொள்ளுமுன் நாம் எளிதாய் வெளியேறிவிடமுடியும் (அப்படியென்ன வெளியேறுவதில் அவசரம்? அதை அடுத்துவரும் பதிவுகளில் எழுதுகிறேன்.)

அன்று வழக்கத்திற்கு மாறாக முன்புறமுள்ள பெட்டியில் ஏறியதற்கும் காரணமிருந்தது. முன்புறம் பெட்டியில் இருந்தால் என் பெட்டி நிலையத்தை கடப்பதற்குள் என் நண்பர் நடைமேடையில் எங்கு நின்றுக்கொண்டிருந்தாலும் என்னால் கண்டுபிடித்துவிடமுடியுமல்லவா. ஆனால் அதுவே வினையாகிப்போனது. என் பெட்டி நிலையத்தினுள் புகுந்து நடைமேடை முழுவதையும் கடக்கும் வரை என் நண்பரை என்னால் காணமுடியவில்லை.

எப்போதும் இரண்டு, மூன்று நிமிடங்கள் தாமதமாய் வந்தடையும் வண்டி அன்று மிகச்சரியாய் வந்ததுதான் முக்கியமான காரணம். என் நண்பர் நிலையத்தை அடைந்த சமயம் என்னுடைய முதல் வகுப்பு பெட்டி நுழைவு வாயிலைக் கடந்து சென்று விடவே நானும் அவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள முடியவில்லை.

இரண்டு பெட்டிகளுக்கும் இடையே சுமார் பத்து பெட்டிகள் இருந்ததால் நான் பெட்டியிலிருந்து இறங்கியும் அவரைக் காணமுடியவில்லை. அவரை விட்டுவிட்டு போகவும் முடியாது. எனவே வண்டி புறப்படும்வரைக் காத்திருந்துவிட்டு வண்டியை விட்டு இறங்கி அவருடைய பேஜரில் மெசேஜ் கொடுத்தேன். வண்டி நகர ஆரம்பித்துவிட்டது.

என் பெயரை யாரோ கூப்பிடுவதைக் கேட்ட நான் சட்டென்று திரும்பிப் பார்க்க என்னைக் கடந்துக்கொண்டிருந்த பின்புறமிருந்த முதல் வகுப்பு பெட்டியிலிருந்த என் நண்பரைப் பார்த்தேன். உடனே பேஜரை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு முதல் வகுப்பு பெட்டியை அடுத்த இரண்டாம் வகுப்பு பெட்டியில் தாவி ஏறினேன். ஆனால் அதைக்கவனியாத என் நண்பர் ஓடும் வண்டியிலிருந்து இறங்கிப் பழக்கமில்லாதிருந்தும் ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் இறங்கி தாக்குப்பிடிக்கமுடியாமல் தடுமாற நல்லவேளையாய் அருகிலிருந்தவர்கள் பிடித்துக்கொள்ள கீழே விழாமல் தப்பித்துக்கொண்டார்.

அவர் கீழே விழாமல் தப்பித்துக் கொண்டதையே பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருந்த நான் இறங்க மறந்துபோய் சுயநினைவு பெற்று இறங்க முயற்சிப்பதற்குள் நான் பயணித்த பெட்டி நடைமேடையைக் கடந்திருந்தது.

‘கவலைப் படாதீர்கள். நான் அடுத்த வண்டியில் திரும்பி வருகிறேன்’ என்று சைகைக் காண்பித்தேன். ஆனால் அவருக்கு என்ன புரிந்ததோ அவர் பதினைந்து நிமிடம் கழித்து ‘செம்பூரை’ வந்தடைந்த ‘பேலாப்பூரை’ நோக்கிச் செல்லும் வண்டியில் ஏறிக் கொள்ள நான் என் வண்டி அடுத்த நிலையமான ‘கோவண்டியில்’ நின்றதும் இறங்கி அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்ற ‘செம்பூரை’ நோக்கிச் செல்லும் வண்டியிலேறி செம்பூரை நோக்கிப் பயணமானேன். எதிரும் புதிருமாக சென்றுக்கொண்டிருந்த இரண்டு வண்டிகளும் ‘கோவண்டிக்கும்’ ‘செம்பூருக்கும்’ இடையில் கடந்துசெல்ல இரண்டு வண்டிகளிலும் இருந்த நானும் என் நண்பரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் ஒரு சில நொடிகள் பார்த்துவிட்டு பிறகு சிரிப்பை அடக்க முடியாமல் இருவரும் உரக்கக்குரலில் சிரிக்க என் பெட்டியிலிருந்த பலரும் ‘இஸ்கோ க்யா ஹோகயா’ (இவனுக்கு என்னவாயிற்று) என்ற தோரணையில் விநோதமாய் பார்த்தனர்.

பின்னர் அவர் ‘கோவண்டியில்’ இறங்கி அங்கேயே எனக்காக காத்திருக்க நான் ‘செம்பூரில்’ இறங்கி அடுத்த பத்து நிமிடத்தில் வந்த வண்டியிலேறி கோவண்டியில் காத்திருந்தவரை அழைத்துக்கொண்டு ‘சான்பாடாவில்’ வந்து இறங்கினோம்.

ஒருமணி நேரத்தில் முடிந்திருக்கவேண்டிய எங்களுடைய பயணம் இந்த குளறுபடி காரணமாக இரண்டு மணிநேரம் எடுத்தது!

மற்றவை அடுத்த பதிவில்!

5 கருத்துகள்:

  1. பெயரில்லா1:41 PM

    உண்மையிலேய நகைச்சுவையாய் எழுதுகிறீர்கள். இவ்வளவு நாள் எங்கே ஒளிந்திருந்தீர்கள்?

    நம் தமிழ்மண்ற வலையில் நகைச்சுவையாய் எழுதுவதற்கு வெகு சிலரே உள்ளனர்.

    எல்லாரும் கார, சாரமாய் அல்லது காதல் வசப்பட்டு எழுதுவதில்தான் (கவிஞர்களைச் சொல்கிறேன்) குறியாயிருக்கிறார்கள்.

    உங்கள் அநாமதேய நண்பன்.

    பதிலளிநீக்கு
  2. கலக்கியிருக்கீங்க ஜோஸப், நான் கூட வாஷி பக்கத்தில்தான் தங்கியிருக்கேன்.. உங்க டிரெயின் அனுபவம் சூப்பர்.. நிறைய எழுதுங்க...

    பதிலளிநீக்கு
  3. நன்றி (ஐயோ உங்களை எப்படி சோம்பேறி என்று அழைப்பது?)

    சான்பாடா இப்போது எப்படி இருக்கிறது?

    நீங்களும் எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. நான் இது வரை மும்பை நகரை வலம் வந்தது இல்லை, இருப்பினும் உங்கள் பதிவிம் மூலம் நகர்வலம் வந்த திருப்தி ஏற்ப்பட்டுவிட்டது.

    பதிலளிநீக்கு